குரோதி – சித்திரை – ஆசாரஅனுஷ்டானம்


தான்தோன்றிமலை பெருமாள், அடியேனுடைய க்ருஹத்துப் பெருமாள் ஆவார். அதனால் அடியேன் திருமலைக்குச் செல்லலாமா , கூடாதா?

Vidwan’s reply:

திருமலைக்குச் செல்லலாம். செல்வது மிகவும் நல்லது.


1.பஞ்சாங்கத்தில் ஒரு நக்ஷத்திரம் அல்லது திதி ஒரு நாளில் சில நாழிகைகள் இருக்கிறது. (உ.தா: ஸ்வாதி 28.01 அல்லது துவாதசி 15.00) சூரிய உதயத்திலிருந்து அந்த நக்ஷத்திரம் அல்லது திதி எல்லா இடத்திலும் அதே நாழிகை இருப்பதாகக் கொள்ளலாமா? உதாரணமாக”A” என்ற இடத்தில் சூரிய உதயம் காலை 6:30 மணி, “B” என்ற இடத்தில் 7:00 மணி. துவாதசி பத்து நாழிகை என்றால்,”A” என்ற இடத்தில் 10:30 மணி வரையிலும்”B” என்ற இடத்தில் 11 மணி வரையிலும் துவாதசி இருப்பதாகக் கொள்ளலாமா?
2. மார்ச் 21 அன்று பஞ்சாங்கத்தின் படி ஏகாதசி திதியே இல்லை. அன்று துவாதசி 60 நாழிகை இருந்தும், நாம் ஏன் முதல் நாள் ஏகாதசி அன்வயிக்காமல் அன்றைய தினம் ஏகாதசி அன்வயித்தோம்?

Vidwan’s reply:

1. வாக்ய பஞ்சாங்கம் பின்பற்றும் போது சூரிய உதயத்திலிருந்து அந்த நக்ஷத்திரம் அல்லது திதி எல்லா இடத்திலும் அதே நாழிகை இருப்பதாகக் கொள்ளலாம். சிலர் த்ருக் பஞ்சாங்கம் பின்பற்றுவர். அவர்களுக்கு வித்தியாசம் வரலாம்.

2. மார்ச் 21க்கு மறுநாள் துவாதசி கொஞ்சம் இருந்தது. அப்படி வந்தால், துவாதசி புச்சம் இருக்கும் தினம் பாரணை. முன் நாள் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும்.


கோவில் கைங்கர்யங்களில் ஈடுபடும் பொழுது, அனுஷ்டானங்களைத் தாமதமாகவோ அல்லது குறைத்தோ செய்யலாம் என்று நம் ஶாஸ்த்ரங்களில் ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா ? உதாரணம்:- காலாதீதமாக அர்க்யம் விடுதல், சீக்கிரமாக உபஸ்தானம் செய்தல்.

Vidwan’s reply:

கோவில் கைங்கர்யங்களில் ஈடுபடும்போது அனுஷ்டானங்களைத் தாமதமாகச் செய்யலாம். அதற்கான பிராயஶ்சித்தமும் செய்ய வேண்டும். குறைத்து செய்ய வேண்டாம். மேலும், சக்திக்கு ஏற்ப செய்யலாம். காலத்துக்கு முன்பு உபஸ்தானம் செய்யக்கூடாது.


ப்ரபத்திக்குப் பிறகு ப்ரபந்நன் நித்ய, நைமித்திக கர்மாக்களைச் செய்யாவிட்டால் மோக்ஷம் கிட்டாதா?

Vidwan’s reply:

ப்ரபத்திக்கும் மோக்ஷத்துக்கும் சம்பந்தம் உண்டு. நித்ய கர்மத்திற்கும் மோக்ஷத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், அது பொது விதி. நித்ய கர்மா செய்யாவிட்டால் பாபம் உண்டு. அதன் பலனை அனுபவித்த பின்னரே மோக்ஷம் கிட்டும். பொய் சொல்லுதல், திருட்டு போன்றவை பொது பாபங்கள். அதேபோல் நித்ய கர்மா செய்யாமை என்பதும் பொது பாபம். ப்ரபத்தி செய்தவன் பொய் சொல்லலாமா? திருடலாமா? வேறு பாபம் செய்யலாமா? என்றால் அது கூடாது, அதேபோலதான் இதுவும் கூடாது. மோக்ஷத்திற்கான ப்ரபத்தி செய்தல் விசேஷ தர்மம். அதற்காக, பொது தர்மங்களை மீறக் கூடாது.


துவாதசி அன்று மாமியார் ஶ்ராத்தம் வந்தால், பாரணை பண்ணலாமா? பாரணை காலம் காலையில் மற்றும் ஶ்ரார்த்தம் காலை 11மணிக்கு மேல் வருவதால் எப்படி அனுஷ்டிப்பது?

Vidwan’s reply:

கர்த்தா, நிமந்த்ரண ஸ்வாமிகள் ஆகியவர் காலை பாரணை பண்ணக் கூடாது. மற்றவர் பாரணை பண்ணலாம். தகப்பனார் உயிருடன் இல்லை என்றால், பகலில் இரு தடவை போஜனம் கூடாது என்பதால் இஷ்ட பங்க்தி சாப்பிட முடியாமல் போகும். இஷ்ட பங்க்தி சாப்பிட வேண்டுமானால், காலை ஜல பாரணம் செய்யலாம்.


சித்திரை மாதத்தில் புது இல்லம் வாடகைக்குக் குடி போகலாமா? பால் காய்ச்சலாமா ?

Vidwan’s reply:

சித்திரை மாதத்தில் புது இல்லத்திற்குக் குடி போகலாம்.


குடும்பத்தில் யாரேனும் ஒருவர் ஒரு வருடத்திற்குள் பரமபதித்திருந்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் மலைமேல் இருக்கும் பெருமாளைச் சேவிக்கக்கூடாதா? அடியேன் உடைய பிதா வழி பாட்டி மற்றும் தாத்தா பரம பதித்து விட்டார்கள் (90+வயது). இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. அடியேன் வெளிநாடு செல்ல இருப்பதால், அத்திகிரி வரதனைச் சென்று சேவிக்கலாமா?

Vidwan’s reply:

அந்தக் கர்தா, அவருடைய மனைவி இருவரும் ஒரு வருடத்திற்கு மலைமேல் இருக்கும் கோவில்களுக்குச் செல்வதில்லை என்கிற வழக்கம் இன்றும் உள்ளது. பாக்கி குடும்பத்தினர் போகலாம் என்றே தோன்றுகிறது.


அடியனுக்கு 57 வயது, என்னுடைய கணவருக்கு 60 வயது. எங்கள் இருவருக்கும் ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது. பரந்யாஸம் செய்து கொள்ளப் போகிறோம். எங்களுக்கு ஒரே மகள். அவள் விஷ்வகர்மா வகுப்பில் ஒருவரை மணந்து கொண்டு அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். வேறு குலத்தில் மணம் முடித்த ஒரே பெண்ணை பெற்ற எங்களைப் போன்ற பெற்றோர்களின் சரம கைங்கர்யங்களை யார் செய்வார்கள்? அதற்கு என்ன விதிமுறைகள்? Vidwan’s reply:

.ப்ரபத்தியை முதலில் செய்துகொள்ளுங்கள். இந்தக் காலத்தில் விஷ்வகர்மா என்பதில் பல ஜாதிகள் கலந்து உள்ளன விஷ்வகர்மா என்பது வைச்யராக இருப்பின் (உபநயனம் முதலான ஸம்ஸ்காரம் உடையவராக இருப்பின்) அந்தப் பேரன் செய்யலாம். அது இல்லாத பக்ஷத்தில் உங்கள் இருவரில் முதலில் மனைவி மரணித்தால் கணவர் செய்யலாம். கணவர் மரணித்தால் மனைவியின் கைப்புல் வாங்கி வேறு நெருங்கிய ஆண் உறவினரோ வேறு எவரேனும் அந்தணரோ செய்யலாம். இருவரில் பின்னால் மரணிப்பவர்க்கு அந்தப் பெண்ணின் கைப்புல் வாங்கி வேறு ஒரு நெருங்கிய அந்தண உறவினர் அல்லது வேறு ஒரு அந்தணர் செய்யலாம்.


கோவில்களில் பெருமாளுக்குத் தளிகை ஸமர்ப்பிக்கும் பொழுது வைச்வதேவ ஆராதனை செய்யப்படுகிறதா?

Vidwan’s reply:

வைச்வதேவம் என்பது க்ருஹஸ்தர் செய்ய வேண்டிய நித்ய கர்மா. அதற்கும் கோவிலுக்கும் சம்பந்தமே இல்லை.


கோவில்களுக்கு உள்ளே மற்றும் வெளியே நடக்கும் கோஷ்டிகளில் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களும் பங்கு பெறலாமா ? யாரெல்லாம் பங்கு பெறலாம்?

Vidwan’s reply:

அந்தந்தக் கோவில்களில் இருக்கும் ஸம்ப்ரதாயத்தை அனுசரித்து கலந்து கொள்ளலாம்.


ஜ்யோதிஷ ஶாஸ்த்ரப்படி ரோகிணி நக்ஷத்திரம் மற்றும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி சேரும் நாளை ஜயந்தி என்கிறார்கள். அதனால் ஜயந்தி என்றால் அது ஸ்ரீ ஜயந்தியையே குறிக்கும். அப்படியானால், வராகர், நரசிம்மர் முதலான மற்ற பெருமாள்களின் அவதார தினத்திற்கு வேறு பெயர்கள் உள்ளதா? நாம் அந்த நாட்களையும் ஜயந்தி என்று கூறுகிறோமே?

Vidwan’s reply:

எள்ளில் இருந்து கிடைக்கக்கூடிய நெய்தான் எண்ணெய். எண்ணெய் என்பது தற்காலத்தில் நாம் சொல்லக்கூடிய எள்ளெண்ணெய் மட்டும்தான் சொல்ல வேண்டும். இன்று எண்ணெய் போல் இருக்கும் மற்ற பதார்த்தங்களுக்கு, எண்ணெய் என்பது பொதுப்பெயராக ஆகிவிட்டதால் தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வேப்பெண்ணெய் என்று அடைமொழியிட்டுச் சொல்கிறோம். வேறு எதுவும் சேர்க்காமல் நல்ல எண்ணெய் என்று எள்ளெண்ணெயைக் குறிப்பிடுகிறோம்.

அதேபோல்தான் ஸ்ரீஜயந்தி என்பது பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனுடைய அவதார தினம்தான். ஆனால் ஸ்ரீ ஜயந்தி என்பது பொதுவாக எம்பெருமானின் அவதார தினம் என்று வந்ததினால் மற்ற அவதார தினங்களை மத்ஸ்ய ஜயந்தி, வராஹ ஜயந்தி, ந்ருஸிம்ஹ ஜயந்தி என்றும் இதை (ஸ்ரீ க்ருஷ்ண ஜன்ம தினத்தை) ஸ்ரீ ஜயந்தி என்றும் கூறுகிறோம்.


நம்முடைய யக்ஞோபவீதம் தரையில் படக்கூடாது என்பதனால் நாம் வெறும் தரையில் படுத்து உறங்க கூடாது என்று ஒரு உபந்யாசத்தில் கேள்விப்பட்டேன். ஆனால் நாம் பெருமாளையோ, பெரியவர்களையோ தரையில் விழுந்து நமஸ்கரிக்கும்பொழுது யக்ஞோபவீதம் தரையில் படுகிறதே, அப்பொழுது என்ன செய்வது?

Vidwan’s reply:

பெருமாளோ பெரியவர்களோ இருக்கும் போது அந்த இடம் புனிதமானதால் அங்கு பூணூல் தரையில் படுவது (வேறு விலக்கத்தக்க ஒன்றும் இல்லை என்றால் உ.ம் எச்சில் அசுத்தம் முதலானவை) தோஷமில்லை.


உபநயனம் ஆகாத சிறுவர்களுக்கு ஸ்வரத்துடன் ஸந்த்யாவந்தனம் கற்றுக் கொடுக்கலாமா? ஸந்த்யாவந்தனம் செய்வதற்கு ஸங்கல்பம் ஏதேனும் உள்ளதா ?

Vidwan’s reply:

உபநயனம் ஆகாத சிறுவர்களுக்கு ஸந்த்யாவந்தன மந்த்ரங்களைச் சொல்லித் தரக்கூடாது. ஸந்த்யாவந்தனத்திற்கு ஸங்கல்பம் உண்டு.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top