சுபகிருது – ஆனி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்


கொடியில் உலர்த்திய மடி வஸ்த்ரத்தை ப்ளாஸ்டிக்கவர் கொண்டு எடுக்கலாமா அல்லது மரக்குச்சியில் தான் எடுக்கவேண்டுமா? ப்ளாஸ்டிக்கவர் கொண்டு எடுத்தால் அது விழுப்பாகிவிடுமா? அறியாமல் கேட்கிறேன் தவறாக இருந்தால் க்ஷமிக்கவும்.

Vidwan’s reply:

கொடியில் உலர்த்தியிருக்கும் மடி வஸ்த்ரத்தை ஒரு கோல் அல்லது மரக்குச்சியினால் தான் எடுக்கும் வழக்கமுள்ளது. ப்ளாஸ்டிக் என்பது நவீன வஸ்து, ஶ்ரார்த்தம் போன்ற சுத்தமாக இருக்கும் சமயங்களில் ப்ளாஸ்டிக்கை தொடுவதில்லை.

கம்பளி கொண்டு கூட வஸ்த்ரம் எடுப்பதுண்டு, ப்ளாஸ்டிக்கவர் கொண்டு வஸ்த்ரம் எடுப்பதென்பது பெரியவர்களின் ஆசாரத்திலும் இல்லை வழக்கத்திலும் இல்லை. அதனால் அது விழுப்பா என்ற கேள்விக்குமிடமில்லை.


அடியேனின் தந்தை அமாவாஸ்யை தர்ப்பணம் செய்கிறார், அன்றைய தினம் தலைக்கு தீர்த்தமாட கூடாதென்று என் அம்மா கூறுகிறார். அடியேன் லகுவாக பாதுகா திருவாராதனம் நித்யமும் செய்து வருகிறேன். அமாவாஸ்யை போன்ற தினங்களில் தலைக்கு தீர்த்தமாடாமல் எப்படிச் செய்வது என்று தெளியப்படுத்தவும்.

Vidwan’s reply:

அமாவாஸை அன்று, அப்பா இருக்கிறவர்கள் தலைக்கு தீர்த்தமாடக்கூடாது என்று சிலரின் ஆசாரத்தில் உண்டு, குறிப்பாகத் தெற்கு பக்கத்தில் அவ்வாசாரம் இருக்கிறது.

நித்யபடி திருவாராதனம் பண்ணுபவர்கள், நித்யபடியே தலைக்கு தீர்த்தமாடுபவர்கள் அன்றும் தீர்த்தமாடுவதில் தப்பில்லை. மேலும், திருவாராதனம் பண்ணுவதாக இருந்தால் தீர்த்தமாடி பண்ணுவதுதான் நியாயம்.


சென்ற சுதர்சனம் இதழில் அடியேன் ப்ரபத்தி செய்யும்போது மடி ஆசாரம் கடைபிடிக்க வேண்டுமா என்ற அடியேனின் சந்தேகத்திற்கு ஸ்வாமியின் மூலம் பதிலை அறிந்துகொண்டேன். மேலும் அதில் நம்மால் இயன்றளவு மடியோடு இருக்கவேண்டுமென்றும் வேறுவழியில்லை என்றபோது விழுப்புடன் செய்வது பரவாயில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அடியேனுக்கு ப்ரக்ருதம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் மூலம் பரந்யாஸம் ஆனது. அன்றைய தினம் அடியேன் உடுத்திய கச்சம் மடியில்லை. இக்கேள்வியின் பதிலைக்கண்டு அன்று மடியின்றி பரஸ்மர்ப்பணம் செய்துகொண்டோம் என மிகவும் வருத்தமாகவுள்ளது. மேலும் இதனால் ஏதேனும் பாபம் உண்டாகுமா என்று தெளிவிக்க வேண்டுகிறேன்.

Vidwan’s reply:

பரஸமர்ப்பணம் பண்ணிய சமயம் மடியில்லாத வஸ்த்ரத்தை தெரிந்தே உடுத்திக்கொண்டு போயிருந்தால் தவறுதான், தெரியாமல் செய்திருந்தால் தவறில்லை. இதற்கும் பண்ண பரஸமர்ப்பணத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

பொதுவாகவே பெரியவர்கள், முக்கியமாக ஆசார்யர்களைச் சேவிக்க போகும்போது சுத்தமாகதான் போக வேண்டும்.

தெரிந்தே பண்ணியிருந்தால் பாபந்தான். அதற்குப் பெருமாளிடமே மன்னிக்கும்படி ப்ரார்த்திப்பதுதான் ஒரே வழி.


அடியேனின் பரந்யாஸ ஆசார்யன் திருக்குடந்தை ஆண்டவன். நீண்டகாலமாக கிராமத்து கோவிலில் ப்ரதோஷம் உபயம் எங்கள் ஆத்து பெரியோர் செய்து வந்தனர். இப்போது சென்னைக்கு வந்துவிட்டோம். இப்போது அதைத் தொடரலாமா, பணம் அனுப்புவது தவறாகுமா. இல்லை ப்ரதோஷத்தன்று அந்தக் கோயிலில் நேரே போய்தான் செய்யவேண்டுமா?

Vidwan’s reply:

ப்ரதோஷத்திற்கு ந்ருஸிம்ஹ உபயம் என்றால் அதை நிச்சயம் பண்ணலாம். நேரே போகமுடிந்தால் நல்லது இல்லையென்றால் ந்ருஸிம்ஹ திருமஞ்சனத்திற்குத் தேவையான த்ரவ்யத்தை ஸமர்பிக்கவும் செய்யலாம், இயன்ற ப்ரதோஷத்தின்போது நேரே சேவித்துவிட்டு வரலாம்.

வேறு இதர கோயில் உபயமாக இருந்தால் பண்ணவேண்டிய அவசியமில்லை, பண்ணாவிட்டால் தப்பில்லை.


வெளிநாட்டில் வாழும் எங்களால், ஸ்ரீரங்கம் போன்ற பஞ்சாகங்களைப் பின்பற்ற முடியவில்லை நாங்கள் இணையதளத்திலுள்ள பஞ்சாங்கத்தைத் தான் பின்பற்றி வருகிறோம் ஆகையால் எங்களைப் போன்றோருக்காக ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி நிர்ணயம் அருள ப்ராத்திக்கிறேன்.

a. ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி வைகாசி ஸுக்ல பக்ஷ – த்ரயோதசியா அல்லது சதுர்தசியா?

b. அவதார கால திருவாரதனைக்கு சூர்யோதயம் அல்லது சூர்ய அஸ்தமன திதி பின்பற்ற வேண்டுமா?

c. குறைந்த பக்ஷம் 6 நாழிகையாவது திதி (சூர்ய உதயமோ/அஸ்தமனமோ) இருக்க வேண்டும் என்று இருக்கிறது அப்படியில்லாவிட்டால் அடுத்த நாளில் செய்ய வேதை/தோஷத்தின் விவரங்கள் அளிக்க வேண்டுகிறேன்.

Vidwan’s reply:

ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி என்பது வைசாக மாதத்தில் வரும். வைசாக மாதம் என்பது சித்திரை அமாவாஸைக்குப் பிறகு வைகாசி அமாவாஸை வரை 30 நாட்கள். ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி திதி என்பது சுக்ல பக்ஷ சதுர்தசி திதி ஆகும்.

அதில் த்ரயோதசியோடு வேதை(சம்பந்தம்) கூடாது. அதாவது 6 நாழிகை காலம் த்ரயோதசி சம்பந்தம் இருந்தால் அன்று ஆறு நாழிக்கு பின் சதுர்தசி இருந்தால்கூட அன்று ந்ருஸிம்ஹ ஜெயந்தி கொண்டாடக்கூடாது. மறுநாள் தான் ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி பண்ண வேண்டும். 6 நாழிகை த்ரயோதசி சம்பந்தமில்லாத சதுர்தசி என்பது ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்திக்கு காலம்.

மறுநாள் சதுர்தசி சூரியோதய காலத்திலாவது இருக்க வேண்டும், அப்படி இருந்தால்தான் அன்று ந்ருஸிம்ஹ ஜயந்தி. அப்படி சூரியோதய காலத்தில் சதுர்தசி இல்லாவிட்டால், முன்னாள் (முதல் நாளே) அந்த த்ரயோதசி சம்பந்தம் இருந்தால் கூட வேறு வழியே இல்லாமல் அன்றே ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் என்பதாக ஒரு நிர்ணயம்.


நாங்கள் எங்கள் வீட்டை (flat) விற்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அது நல்லபடியாக நடந்துமுடிய வேண்டும் என்று ப்ரார்திக்க ஏதேனும் ஶ்லோகம் உண்டா? அடியேனுக்கு தெரியப்படுத்தவும் ஸ்வாமி. தன்யோஸ்மி.

Vidwan’s reply:

மிகவும் கடினமான கார்யத்தையும் சாதித்துதருவது ஸுதர்ஶனாஷ்டகம் என்று அதன் பல ஶ்ருதியில் கூறப்பட்டுள்ளது.அதனால் ஸுதர்ஶனாஷ்டகம் பாராயணம் செய்து வாருங்கள்.


அடியேனுக்கு கேட்கும்திறன் குறைபாடு சரியாக, எம்பெருமாளிடம் ப்ரார்த்திக்க என்ன ஶ்லோகம் சேவிக்க வேண்டும்.

Vidwan’s reply:

கேட்கும்திறன் குறைவாக இருந்தால் ஹயக்ரீவ ஸ்தோத்ரம் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் “வாக3ர்த2ஸித்3தி4ஹேதோ:” என்று வாக்கும் வாக்கைக்கேட்டு அதனுடைய அர்த்தமும் புரிய வேண்டுமானால் ஹயக்ரீவ ஸ்தோத்ரம் என்று ஸ்வாமி தேஶிகனே சொல்லியிருக்கின்றார்.


அடியேன் பணியில் இருக்கும் நேரம் அலுவலகத்தின் உணவகத்தில் தினசரி வெங்காயம் பூண்டு சேர்த்த உணவை உட்கொள்ள வேண்டி உள்ளது. அலுவலகம் சென்று திரும்ப மிகுதியான நேரம் ஆகிறது. மாலை ப்ரயாணத்தில் (வெங்காயம் பூண்டு சாப்பிட்ட பின்) கிடைக்கும் நேரத்தில் ஸஹஸ்ரநாமம் சொல்லலாமா? வீடு திரும்பியவுடன் கைகால் வாய் மட்டும் சுத்தம் செய்து சந்தியாவந்தனம் செய்யலாமா?

Vidwan’s reply:

வெங்காயமும் பூண்டும் ஒருகாலும் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அவை நிஷித்தமான வஸ்துக்கள். எந்தக் காரணமோ சாக்கோ சொல்லி, அவற்றை சேர்த்துக்கொள்ளக் கூடாது. இவை இரண்டுமே மோசமான வஸ்துக்கள். அதனால் அவை இரண்டையும் தவிர்க்க வேண்டும் என்பதே இதனுடைய நேரான பதில்.


அடியேனின் வபனம் சம்பந்தமான கேள்விக்கான (Q28CHIT21006) விளக்கத்திற்கு நன்றி. அடியேனின் குழப்பம்: முதலில் ஆடி, மார்கழி, மாசியில் கூடாது என்றும் பிறகு ஆடி முன்பாதி மார்கழி, மாசியில் பின்பாதியில் செய்யலாம் என்றும் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை. அடியேன் குழப்பத்தை தெளிவிக்கவும்.

Vidwan’s reply:

ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி, இந்த மாதங்களில் வபனம் கூடாது.

ஒரு வசனத்தில் என்ன இருக்கிறது என்றால், தனுஷ் கும்பௌ , அப்படியென்றால் மார்கழியிலும் மாசியிலும் பின் பாதியிலும் ஆடி மாதத்தில் முன்பாதியிலும் செய்துகொள்ளலாம் என்று இருக்கிறது.

புரட்டாசி மாதம் முழுவதும் செய்யக்கூடாது என்ற வசனமும் இருக்கின்றது.

வேறு வழி இல்லாவிட்டால் மேற்கூறிய வசனத்தை அனுஷ்டானம் செய்வது என்பது பெரியோர்கள் வழக்கத்தில் இருந்துகொண்டிருக்கிறது. எதுவும் குழப்பம் வேண்டாம். எப்பொழுதுமே ஶாஸ்த்ரம் என்பது இரண்டு கல்பம் சொல்லும். முதல் கல்பம் முடியாவிட்டால் அடுத்தது என்ற ரீதியில் வரும். இது எல்லா இடத்திலேயும் உண்டு.

ஞாயிற்றுக்கிழமையில் செய்துகொள்கின்ற வழக்கம் இருக்கின்றது. திதி மற்றும் நக்ஷத்ர தோஷங்கள் இல்லாவிட்டால் பண்ணிக்கொள்ளலாம்.

குறிப்புகள்:

அதனால் உங்களால் முடியுமானால் ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி இந்த மாதங்களில் வபனம் செய்துகொள்ளக்கூடாது என்பது முதல் பக்ஷம்.

சிலரால் அது முடியாமல் போகலாம். அப்படி முடியாமல் போனால் மார்கழி மாசி மாதங்களில் முன் பாதியிலும் ஆடி மாதத்தில் பின் பாதியிலும் வபனம் செய்துகொள்ளலாம். இது இரண்டாவது பக்ஷம்.


திருவாரதனம், தர்ப்பணம் அல்லது சந்தியாவந்தனம் செய்யும் சமயங்களில் அற்பசங்கை போன்றவை வந்தால் என்ன செய்யவேண்டும், மீண்டும் ஸ்நானம் செய்ய வேண்டுமா? எப்படித் தொடர வேண்டும். தெளிவுபடுத்தவும் அடியேன்.

Vidwan’s reply:

திருவாரதனம், தர்ப்பணம் அல்லது சந்தியாவந்தனம் செய்யும் சமயங்களில் அற்பசங்கை வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று நமக்கே தெரியும் . முன்பே சங்காநிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். ரொம்ப வயதான பிறகு வந்துவிடும், அந்தச் சமயம் வேறு வழியில்லாமல் ஸ்நானம் பண்ணனும். அப்படிப் பண்ண முடியாவிட்டால் மந்த்ர ஸ்நானமாவது பண்ணவேண்டும், அதன் பின் சந்தியாவந்தனாதிகள் முதலிலிருந்து ஆரம்பித்துச் செய்ய வேண்டும்.

திருவாராதனம் செய்யும் பொழுது ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பார்கள். அற்பசங்கை போகும்படி நேர்ந்தால் மறுபடியும் ஸ்நானம் செய்து ஆரம்பத்திலிருந்து செய்வது உண்டு. இல்லாவிட்டால் வேறு ஒரு ரீதியில் அதாவது புத்திரனை வைத்து பண்ணுவதும் உண்டு. அதாவது முக்கியமான ஸ்நானம் பண்ண முடியாவிட்டால் மந்த்ர ஸ்நானம் பண்ணலாம்.

இதெல்லாம் ரொம்ப வயதானவர்கள் விஷயத்தில்தானே தவிர சக்தி உள்ளவர்கள் எல்லாம் சங்காநிவர்த்தி எல்லாம் செய்துவிட்டு தான், சந்தியாவந்தனம் திருவாராதனம் எல்லாம் ஆரம்பிக்க வேண்டும். அதில் எந்த விதமான தளர்வும் கூடாது.


திருவாரதன சமயம் ஸ்லோகங்கள், ராமாயணம், பாகவதம் சேவிக்கும் போது அலங்காரஸ்நானம் அல்லது பர்யங்கஸ்நானம் எது செய்யவேண்டும்? மேலும் பாகவதம் மூலம் பாராயணம் திருவாராதனத்திற்கு பின் செய்ய வேண்டுமா? தெரிவிக்க வேண்டுகிறேன்.

Vidwan’s reply:

ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் சேவிக்கும் போது அலங்கார ஆசனமா அல்லது பர்யங்க ஆசனமா என்றால் அவரவர் சௌகர்யம்படிச் செய்யலாம்.

அலங்கார ஆசனத்தில் பெருமாளுக்குத் தூபதீபாதிகள் எல்லாம் சமர்ப்பித்து முடித்தபின் ஸ்தோத்ரங்கள் சொல்ல வேண்டிய சமயம் இருக்கிறது. இல்லையென்றால் பர்யங்க ஆசனத்தில் பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி செய்துவிட்டு பின் ஸ்தோத்ரங்கள் சொல்ல வேண்டிய சமயம் இருக்கிறது. இந்த இரண்டில் எது சௌகர்யமோ அதற்கேற்றார் போல் சேவிக்கலாம்.

அகத்தில் தளிகை எல்லாம் ஆகிவிட்டது என்றால், தளிகை ஸமர்ப்பித்துவிட்டு பர்யங்க ஆசனத்தில் கூட நாம் சேவிக்கலாம்.

பாகவதம் மூலம் பாராயணம் ஆராதனை திருவாராதனத்திற்குப் பிறகு கட்டாயம் செய்யவேண்டும் என்பது கிடையாது. அது நமது சௌகர்யத்தைப் பொறுத்தது.

குறிப்புகள்:

எந்தத் தாத்பர்யத்தில் கேட்கிறார் என்பது தெரியவில்லை. திருவாராதனத்திற்குப் பிறகு பாகவதம் மூலம் பாராயணம் செய்யலாம்.


அனுஷ்டானத்தின் படி ஸ்நானம் செய்யும் முன் ஸ்நானஸாடி உடுத்திக்கொண்டு ஸ்நான சங்கல்பம் செய்யவேண்டுமென்று இருக்கிறது. லௌகீக கார்யங்களை கருத்தில் கொண்டால் நித்யமும் விஸ்தாரமாக செய்ய சம்யமில்லை, ஆகையால் லகுவாக ஸ்நான சங்கல்ப முறையை தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன். மேலும், எந்த வஸ்திரத்தை ஸ்நானஸாடியாக உபயோகிக்கலாம் என்றும் தெரிவிக்க வேண்டுகிறேன். உ.தா ஒரு கிழிந்த வேஷ்டியின் அங்கவஸ்திரம் உபயோகிக்கும்படியிருந்தால் அதை ஸ்நானஸாடி உடுத்திக்கொள்ளலாமா?

Vidwan’s reply:

லகுவாக ஸ்நான சங்கல்பம் அதாவது சுருக்கமாக என்று கேட்டால் “கர்மண்யதா சித்4யர்தம் ப்ராதஸ்நானம் அஹம் கரிஷ்யே” என்று சுருக்கமாக சொன்னால் போதும். ஆனால் பொதுவாக ஸ்நானத்தில் மஹா சங்கல்பம் சொல்வது வழக்கம். அன்றைய திதி , வாரங்கள் எல்லாம் சொல்லி, எந்த வருடம் , எந்த மாதம், “விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்3ய ப்4ரஹ்மண:” என்று ஆரம்பித்து , ஸ்நானம் பண்ண வேண்டும். சந்தியாவந்தனம் , திருவாராதனம், இவற்றுக்கெல்லாம் மஹா சங்கல்பம் கிடையாது. அதனால் நாளினுடைய தொடக்கத்தில் ஸ்நானத்தில் மஹாஸங்கல்பம் செய்து ஸ்நானம் செய்யலாம்.

நாம் குளிப்பதற்காக உபயோகப்படுத்துகிற வஸ்திரம் ஸ்நானஸாடி என்று பெயர். ஸ்நானஸாடி வஸ்திரம் என்று கடைகளில் விற்கப்படுகிறது. அதை வாங்கி உபயோகிக்கலாம். இல்லாவிட்டால், பழைய வேஷ்டி, அங்கவஸ்திரம் இவற்றை உபயோகிப்பதால் ஒன்றும் தப்புகிடையாது. ஆனால் ஸ்நானஸாடியாக உபயோகித்தபின் அது உத்திரியமாக உபயோகிக்க கூடாது. ஸ்நானஸாடி என்பது கீழ் துணி, உத்திரியம் என்பது ஜபத்திற்காக உபயோகிக்கப்படும் மேல் துணி. அதனால் பழைய உத்திரியத்தை ஸ்நானஸாடியாக உபயேகிக்கலாம். ஆனால், அதை மறுபடியும் உத்திரியமாக உபயோகிக்கக் கூடாது என்பதே பதில்.


அடியேன் அஷ்டாக்ஷர ஜபம், காயத்ரிஜபம் போல் தினமும் மூன்று வேளையும் பண்ணவேண்டும் என்கிற விதி புரிகிறது. காயத்ரிஜபம் போல் எத்தனை எண்ணிக்கை வேண்டுமானாலும் பண்ணலாமா? ஸ்ரீ ஸ்ந்நிதி சிஷ்யர்கள் நித்யமும் ஆசார்ய தனியன், த்வயம், சரம ஶ்லோகம் அஷ்டாக்ஷ்ரம் சேவிக்கும் வழக்கமுள்ளது. சுதர்சனத்தின் சென்ற இதழில் அளிக்கப்பட்ட பதிலை அடியேன் சந்தியாவந்தனம் பண்ணும் சமயம் மட்டும் அஷ்டாக்ஷரம் செய்தால் போதும் என்று புரிந்துகொண்டேன் இது சரியா? அஷ்டாக்ஷரம் மற்ற நேரங்களில் பண்ணக்கூடாதா? ஆசார்யர்கள் வித்வான்கள் அஷ்டாக்ஷர ஜபம் பற்றி நிரம்ப பேசியிருக்கிறார்கள் மேலும் 45ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் பத்ரிநாத் எழுந்தருளியிருந்த போது அங்கே அஷ்டாக்ஷர ஜபம் செய்ததாக எப்போதோ ந்ருஸிம்ஹ ப்ரியாவில் படித்த ஞாபகம். ஸ்த்ரீகளுக்கு சந்தியாவந்தனம் செய்யும் விதியில்லை. அஷ்டாக்ஷரம் சந்தியாவந்தன காலத்தில் மட்டும் செய்தால் போதும் என்றால், ஸ்த்ரீகள் எப்படி பண்ணமுடியும்? ரிஷிகள் தபஸோ அல்லது ஜபமோ எந்த மந்திரம் கொண்டு செய்திருப்பார்கள் அஷ்டாக்ஷரம் தவிர. அடியேனின் புரிதலில் பிழையிருந்தால் க்ஷமிக்கவும்.

Vidwan’s reply:

திருவஷ்டாக்ஷர ஜபம் என்பது சந்தியாவந்தனத்துடன் சேர்த்து பண்ணுவது தான் அதிகமாகவும் பண்ணலாம். அதனால் தான் பல இடங்களில் குறிப்பாக விசேஷமான சமயங்களில் திருவஷ்டாக்ஷர ஜபம் பண்ணும் வழக்கமுண்டு. ஸ்த்ரீகள் சந்தியாவந்தனத்திற்கு பதிலாகத்தான் திருவஷ்டாக்ஷர ஜபம் பண்ணுகிறார்கள். எப்படி என்பதை முன் சுதர்சன இதழ்களில் இருக்கிறது.

ரிஷிகள் தபஸ் ஜபம் போன்றவை பண்ண திருவஷ்டாக்ஷரம் தவிர வேறு பல மந்திரங்கள் உள்ளது வேத மந்திரங்களே இருக்கிறது. வேத பாராயணத்திற்கே ஜபம் என்று பெயர் உண்டு அதற்கு வேதவாக்யமே இருக்கிறது. ரிஷிகள் எல்லோரும் ஓயாமல் வேத பாராயணம் செய்து செய்து தான் நமக்கு வேதத்தைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். வேதத்திற்கென்று புத்தகம் கிடையாது அவர்களின் ஜபத்தின் மூலமாகதான் ரிக், யஜூர், சாம வேதங்கள் நமக்கு கிட்டியிருக்கிறது. அதாவது காட்டில் அவர்கள் சொல்லிக்கொண்டே போவார்களாம். அப்படிப் பாராயணம் மூலமாகதான் நமக்கு அவர்கள் காப்பாற்றி கொடுத்திருக்கிறார்கள்.


கைவல்யார்த்திகளுக்கும் முமுக்ஷூக்களுக்கும் என்ன வேற்றுமை? கைவல்யார்த்திகள் எங்கே செல்வார்கள் என்று விரிவாக சாதித்தருள ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

கைவல்யார்த்திகள் என்றால் இந்த ஜன்மம் முடிந்தபிறகு ஜீவாத்மா அனுபவம் வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள். அதற்கென்று தனி லோகம் இருக்கிறது அந்த லோகத்திற்குச் சென்று ஜீவாத்மா அனுபவம் பெறுவார்கள். ஆனால் அந்த லோகத்திற்கும் ப்ரளயகாலத்தில் முடிவு வந்துவிடும்.

முமுக்ஷூகள் என்றால் பரமாத்மா அனுபவத்திற்கு ஆசைப்படுபவர்கள்.மோக்ஷம் பெற்றவர்கள் ஸ்ரீ வைகுண்ட லோகத்திற்குச் செல்வார்கள். அங்கே பகவத் அனுபவத்தைப் பெற்று ஆனந்தமாக இருப்பார்கள்.


சாதாரணமாக சாளக்கிராம கல் கருப்பு நிறத்தில் இருக்கும். நான் அதற்கு தினமும் திருமஞ்சனம் செய்து வருகிறேன். என் அம்மா சில வருடங்கள் முன்பு வெள்ளைக் கல்லில் சாளக்கிராம கல் என்று சொல்லி, அது தன் தாயாருடைய கல் என்னும் சொல்லிக்கொடுத்தார். அதற்கு திருமஞ்சனம் செய்யக்கூடாது என்றும் கூறியிருந்தார். (இப்பொழுது என் அம்மா உயிருடன் இல்லை.)அதைப்பற்றி எனக்கு அதிகமாக தெரியவில்லை. விளக்கவும்.

Vidwan’s reply:

வெள்ளைக் கல்லில் சாளக்கிராம மூர்த்தி என்று சொல்லுவதுண்டு சில க்ருஹங்களில் ஏளியிருக்கிறார். திருமஞ்சனம் பண்ணக்கூடாது என்பதற்கு என்ன காரணம் என்று அடியேனுக்கும் தெரியவில்லை. பொதுவாக அவருக்கும் திருமஞ்சனம் செய்யலாம் என்றே தோன்றுகிறது.


உபநயனம் மற்றும் சீமந்தோந்நயனத்தில் முஹூர்த்த காலம் முடியும்வரை போஜனம் கூடாதென்று இருக்கிறது இதன் தாத்பர்யம் என்ன என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

நாந்தி ஶ்ரார்த்தம் என்று உபநயனம் மற்றும் சீமந்தோந்நயனத்திற்கு உள் அங்கமாக ஒன்று உண்டு. அது ஒரு மங்கள கார்யம். நம் பித்ரு பிதாமஹர்களைக் குறித்து தக்ஷிணையாக சில ப்ராமணர்களுக்கு கொடுக்கும் வழக்கம். ஆத்து வாத்யார் பண்ணி வைப்பார்.

இப்படி விசேஷமான நாந்தி ஶ்ரார்த்தம் பண்ணுவதால் அதுவரை போஜனம் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம்.

இன்று இதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் போஜனம் கூடாது என்பதற்கு நிச்சயம் ஒரு அர்த்தமும் காரணமும் உண்டு என்பதை புரிந்துகொள்ளவும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top