சுபகிருது – ஆனி(2) – ஸ்த்ரீ தர்மம்


நமஸ்காரம், சூரிய உதயத்திற்கு முன் சிரோஸ்நானம் பண்ணக்கூடாதா? அப்போ வேலைக்குச் சீக்கிரம் போகும் ஸ்த்ரீகள் என்ன செய்வது.

Vidwan’s reply:

தீபாவளியைத் தவிர மற்றைய தினங்களில் சூர்யோதயத்திற்கு முன் சிரோஸ்நானம் செய்தல் (எண்ணெய் தேய்த்து குளிக்க) கூடாது.

வேலைக்குப்போகும் ஸ்த்ரீகள், என்று விடுமுறை தினம் இருக்கின்றதோ அன்று சூர்யோதயத்திற்குப் பின் சிரோஸ்நானம் பண்ணலாம்.


வேறுவழியில்லாத சமயம் ஏதேனும் விசேஷ தினம் அல்லது வெள்ளிக்கிழமையாக இருக்கின்றது என்றால், சூர்யமண்டலத்தில் இருக்கும் எம்பெருமானை த்யானித்து “பெருமாள் திருமொழி 2.2 பாசுரத்தை”, இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பாசுரத்தைச் சொல்லி, புண்டரீகாக்ஷன் என்ற திருநாமத்தையும் சொல்லி, எம்பெருமான் சூர்யனில் இருக்கிறார் என்று நினைத்து ஸ்நானம் பண்ணலாம். ஆனால் இது இரண்டாம் பக்ஷம்தான்.


அடியேன் ஆத்தில் ப்ரத்யாப்திக ஶ்ராத்தத்திற்குத் தளிகை கைங்கர்யம் செய்கிறேன். அதற்கு ஸ்த்ரீகள் முதல்நாள் மற்றும் ஶராத்த நாளன்று கடைபிடிக்கவேண்டிய ஆசாரங்களை விளக்கவும்.

Vidwan’s reply:

ஶ்ராத்தத்திற்குத் தளிகை பண்ண முதல்நாளிலிருந்தே சுத்தமாக இருத்தல் வேண்டும். முதல்நாளுக்கு ஒருபொழுது என்று பெயர். அன்று கொடியிலிருந்து மடி வஸ்த்ரம் உடுத்திக்கொண்டு, எம்பெருமானுக்கு பலவித போஜ்ய பதார்த்தங்களோடு தளிகை ஸமர்ப்பணம் செய்யவேண்டும்.

அதன்பின் அந்த ஸ்த்ரீயானவள் தான் சாப்பிடும் முன், மறுநாளுக்கு வேண்டிய பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, புளி-சாணம் போன்றவையின் கரைசலில் அப்பாத்திரங்களை எம்பெருமானின் த்வாதச திருநாமங்கள் சொல்லிக்கொண்டுச் சுத்தப்படுத்த வேண்டும். பின் அவற்றைச் சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும்.

பின்னர் வேண்டிய மளிகை சாமான்களைத் தனியாக வைத்தல் வேண்டும். மேலும் அவற்றைக் கொட்டாங்குச்சி அல்லது தொன்னையில் வைத்தல் நலம். ப்ளாஸ்டிக் போன்றவற்றைத் தவிர்த்தல் வேண்டும். எண்ணெய் போன்றவற்றைத் தனியாக பாத்திரங்களில் எடுத்து வைத்தலும் நலம். ஶ்ராத்தத்திற்கென்று அனுமதிக்கப்பட்ட காய்கறிகளை முதல்நாளே வாங்கி வைக்கவேண்டும் ஆனால் நறுக்கி வைத்தல் கூடாது. முக்கியமாக பாகற்காய், சேப்பங்கிழங்கு, வாழைக்காய் இருக்கவேண்டும். பலாமுசு, விளாம்பழம் இருந்தால் விசேஷம். சர்க்கரைவள்ளிக்கிழங்கு, புடலங்காய், கொத்தவரங்காய் என அனுமதிக்கப்பட்ட காய்கள் எத்தனை முடியுமோ அத்தனை சேர்த்துக்கொள்ளலாம். பலாமுசு ஒன்று செய்தால் 16 காய்கள் சேர்த்துக்கொண்டதிற்குச் சமம் என்பார்கள். இப்படியாக காய்கறிகளை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாலை சூர்ய அஸ்தமனத்திற்குப் பின் மறுநாள் உடுத்திக்கவேண்டிய வஸ்த்ரத்தை ஆசாரமாகத் துவைத்துக் கொடியில் சுத்தமாக தனக்கும் பர்தாவிற்கும் சேர்த்து உலர்த்த வேண்டும். அதேபோல் போக்தாக்களுக்கும் ஆசாரமாகத் துவைத்து சுத்தமாக உலர்த்தி வைத்தல் வேண்டும்.

மறுநாள் ஶ்ராத்தத்தன்று சூர்யோதயத்திற்குப் பின் தலைக்குத் தீர்த்தமாடிய பின் ஶ்ராத்த கார்யங்கள் ஆரம்பிக்க வேண்டும். மிகவும் சுத்தியோடு, பட்டினியாகத் தீர்த்தம் கூட அருந்தாமல் செய்தல் வேண்டும். கறிகாய்களைச் சுத்தமாக புது ஜலத்தில் அலம்பி, தேங்காய் போன்றவற்றைத் துருவி, காய்கறிகளை நறுக்கி சுத்தமான இடத்தில் வைக்கவேண்டும்.

முதல்நாள் சுத்திசெய்த பாத்திரங்களை மீண்டும் புது ஜலத்தில் அலம்பிவிட்டு அப்பாத்திரங்களை உபயோகப்படுத்தலாம். ஶ்ராத்தத் தளிகையைப்பற்றி ஆத்துப் பெரியவர்கள் பொதுவாக சொல்லிக்கொடுப்பார்கள். பயத்தம்பருப்பை தான் உபயோகிக்க வேண்டும். பாகற்காய் குழம்பு அல்லது சுண்டைக்காய் குழம்பு, பிரண்டை துவையல் (மிகவும் முக்கியம்), ஐந்து அல்லது ஏழு வகை காய்கறிகள் பண்ணலாம். அப்பம், வடை, எள்ளுப்பொடியோ/எள்ளுருண்டையோ அவசியம் இருத்தல் வேண்டும். இதைத்தவிர அவரவர் க்ருஹ வழக்கப்படி தேங்குழல், சீயம், சொஜ்ஜியப்பம் என பல போஜ்யபதார்த்தங்கள் பண்ணலாம். திருக்கண்ணமுது அவசியம் இருத்தல் வேண்டும். பச்சடிகளும் சேர்க்கும் வழக்கம் உண்டு.

இப்படியாக ஶ்ரத்தையுடன் தளிகைபண்ணி முடித்தபின் பர்தாவிற்கும் ஒத்தாசையாக இருக்க வேண்டும். அக்னி சேர்க்கவும், ஔபாசனத்திற்கும் கூப்பிடும்போது போகவேண்டும். பெருமாள் திருவாராதன பாத்திரங்கள் எல்லாம் சுத்திசெய்து வைத்தல் வேண்டும். பெருமாளுக்கு அம்சை பண்ண பதார்த்தங்களை, பாத்திரங்களை மாற்றி வைத்தல்வேண்டும். அதற்குப்பின் ஶ்ராத்தத்தின் போது என்ன கேட்கிறார்களோ அதைக் கொடுத்தல் வேண்டும்.

போக்தாக்களுக்குச் சாப்பிட சாதிப்பதென்பது மிகவும் பாக்யமான மற்றும் அவசியமான கார்யம். சாப்பிட சாதிக்கும்போது போக்தாக்களுக்கு இரண்டு இலைகளாகச் சேர்க்க வேண்டும், பக்கத்தில் தொன்னை வைக்கவேண்டும். எப்படிப் பரிமாறுவது என்பதை ஆத்துப் பெரியவர்கள் சொல்லிக்கொடுப்பார்கள். முதலில் இலையின் குறுக்கே நெய் சாதிக்க வேண்டும். பின் அன்னத்தை ஒரு பிடியாக உடையாமல் சாதிக்க வேண்டும். அன்னம், பாயசம், பக்ஷ்யம் என்ற வரிசையில் சாதிக்க வேண்டும். அதன் பின் நெய், பின் பருப்பு (ஶுபம்) அதன் பின் மேலே சில கார்யங்களுக்குப் பின் மற்ற பதார்த்தங்களை ஒவ்வொன்றாக சாதிக்க வேண்டும். போக்தாகளுக்கு சாற்றமுது, திருக்கண்ணமுது போன்ற இரண்டும் அவசியம் சூடாக சாதிக்க வேண்டும். வெந்நீர் பதப்படுத்தி வைத்து அதைப் பருக கொடுத்தல் ரொம்ப உசத்தி (உஷ்ணோதகம்). வேண்டுமா வேண்டுமா என்று கேட்டு கவனித்து சாதிக்க வேண்டும், போக்தாக்கள் சாப்பிடும்போது பேச மாட்டார்கள்.

போக்தாக்கள் அமுதுசெய்து முடித்தபின் சில ப்ரக்ரியைகள் இருக்கும். அதன் பின் அந்த இலையை பத்திரமாக எடுத்து மண்ணில் புதைக்கவேண்டும். நாய்போன்ற எந்தவிதமான ஜந்துக்களும் தீண்டாமல் இருக்க இலையை புதைக்க வேண்டியது மிகவும் முக்கியம் அப்போதுதான் ஶ்ராத்தம் பூர்த்தியாகும். எப்போது பெரியவர்கள் சொல்கிறார்களோ அப்போதுதான் எச்சல்பிரட்ட வேண்டும்.

அதேபோல் அவர்கள் சேவிக்கச் சொல்லும்போது சேவிக்க வேண்டும்.

பாயச பிண்டம், ஷட்பிண்டம் என அதாவது பெரிய உருண்டை, ஆறு உருண்டைகள் என சிலது கேட்பார்கள். அவற்றைச் சாதத்தால் பிடிக்கவேண்டும் அதையும் பெரியவர்கள் சொல்லிக்கொடுப்பார்கள்.

இப்படியாக எந்த கார்யம் சொன்னாலும் முகம் சுழிக்காமல்,மிகவும் ஆசையுடன் செய்தல் வேண்டும். ஶ்ராத்த கார்யம் என்பது கஷ்டமான கார்யம்தான் இருப்பினும் மிகவும் ஶ்ரத்தையுடன், ஆசையுடன் செய்தல் வேண்டும் , அதில் நமக்கும் ஒரு மனநிறைவு ஏற்படும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top