அடியேன் சில தினங்களாக எதிர்மறை எண்ணங்கள் (negative thoughts) மற்றும் பழைய மிகவும் கசப்பான நினைவுகள் தோன்றி என்னை பகவான் நாமா சொல்லவோ அல்லது சந்தை பாடம் கற்கவோ, ஸ்தோத்ரம் சேவிக்கவோ மற்றும் நித்யானுஸந்தானம் செய்யவோ விடாமல் மிகவும் வருத்துகிறது. அடியேனும் எம்பெருமான் திருநாமங்களை உச்சரித்து அவ்வெதிர்மறை எண்ணத்திலிருந்து விடுபட முயற்சிக்கிறேன் ஆனால் என்ன செய்தாலும் அதிலிருந்து வெளியே வர இயலவில்லை. எதிலும் புத்தியை செலுத்தவும் முடியவில்லை. இவற்றிலிருந்து மீண்டு எம்பெருமான் ஸ்மரணையில் புத்தியைச் செலுத்த என்ன வழி என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.
Vidwan’s reply:
பெரியதொரு ஆபத்து நேரிட்டசமயம் எம்பெருமான் திருவாழியாழ்வானைக் கொண்டு கர்பத்தில் புகுந்து ப்ரஹ்மாஸ்திரத்தையே ஓட்டி பரிக்ஷித்தைக் காப்பாற்றினார். இதிலிருந்து நாம் அறிவது எவ்வித ஆபத்தாகிலும் சக்ரத்தாழ்வாரால் அதைப் போக்கடிக்க முடியும். அது மானசீக தீங்காகயிருந்தாலும் சரி.
ஆகையால், ஸுதர்ஶநாஷ்டகம் சேவிக்கலாம். பூர்த்தியாகச் சொல்லமுடியாவிட்டால் “ஜய ஜய ஸ்ரீ ஸுதர்ஶந” என்றாவது சொல்ல பழகவேண்டும். 32 முறை சொல்வது நலம். எத்தனை தடவை முடிகின்றதோ அத்தனை முறை சொல்லலாம்
द्विचतुष्कमिदं प्रभूतसारं पठतां वेङ्कटनायकप्रणीतम् ।
विषमेऽपि मनोरथ: प्रधावन् न विहन्येत रथाङ्गधुर्यगुप्त: ॥
இந்த பலஶ்ருதியில் ஸ்வாமி ஸாதித்திருப்பது, அடையவதற்கு அரிதாக இருக்கும் பலனைக்கூட அடைவிப்பான் சக்ரத்தாழ்வான்.
அந்த வகையில் ஒரு கார்யத்தை தேகத்தால் கூட செய்துவிடலாம், ஆனால் மிகவும் அரிதான செயல் என்பது மனதைச்செலுத்தி ஒரு கார்யத்தை வெல்வதே. அப்படி மனதைச்செலுத்தும் அரிதான பலனை நமக்கு கிட்டச்செய்வது சக்ரத்தாழ்வார்தான்.
ஆகவே மனதை ஒழுங்குபடுத்த சக்ரத்தாழ்வாரை நாடுவது தான் நல்வழியாகும்.
ஸம்ஸ்கிருதத்தை வடமொழி என்று பரவலாக சொல்கிறார்கள்.அது மனதிற்கு நெருடலாக உள்ளது. அது தெய்வமொழி அல்லவா. தெய்வம் அனைத்து திசையிலும் வியாபித்திருக்கும் அல்லவா .வடமொழி என்பது வடநாட்டு மொழி என்று அரத்தமா அல்லது வேறு ஏதாவது அர்த்தம் உள்ளதா.
Vidwan’s reply:
ஸம்ஸ்கிருதத்திற்கு வடமொழி என்று பொதுவாகவே பெயர்.
தமிழ்மொழி தெற்கே உண்டாகி வளர்ந்த மொழி. பொதிகை மலையில் அகஸ்தியரினால் உண்டாதனால் தென்மொழி என்கின்ற பெயர்.
ப்ராசீனமாகயிருந்த ஸமஸ்கிருதத்தை வடமொழி என்று சொல்கிறார்கள் எனத் தோன்றுகிறது. இது எல்லார்க்கும் சேர்ந்த மொழி. தேவர்கள் வடக்கே இருப்பதாகவும் ஒரு ஐதீஹ்யம். அதனால் தேவர்களுடைய பாஷையை வடமொழி என்றும் சொல்லலாம்.
யாக்ஞவல்க்யர் மிதிலா பற்றி எரிவது போல் ஒரு மாயையை உண்டாக்கியபோது ஜனகர் கலங்காமல் இருந்தார். தன் மக்களைக் காப்பது ஒரு அரசனின் கடமையல்லவா, கலங்காது இருத்தல் சரியா?
Vidwan’s reply:
ஜனகர் கலங்காமல் இருந்ததற்கு காரணம்,எம்பெருமான் மீது அவருக்கு இருந்த மஹாவிஶ்வாஸம். அவர் கர்மயோகியாய் தன் கடைமைகளைச் செய்து கொண்டிருந்தார். எம்பெருமானின் சங்கல்பம் இந்த மிதிலாபுரியை ரக்ஷிக்க வேண்டுமென்றிருந்தால் அவசியம் எம்பெருமானே ரக்ஷிப்பார் என்கின்ற மனப்பான்மையுடனும் மஹாவிஶ்வாஸத்துடனும் இருந்தமையால் கலங்கவில்லை.