சுபகிருது – ஆவணி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்


கோயிலில் கொடுக்கும் பவித்ர மாலைகளை என்ன செய்ய வேண்டும்? பழைய பவித்ரமாலைகள் இருந்தால் அதை என்ன செய்தல் வேண்டும்?

Vidwan’s reply:

கோயிலில் கொடுக்கும் பவித்ர மாலைகளை அவற்றைத் தரித்துக்கொண்டு அனுஷ்டானம், திருவாராதனம், ஜபம் போன்றவற்றைச் செய்யலாம். சுத்தமாக இருக்கும் சமயங்களில் நாம் அதைத் தரித்துக்கொள்ளலாம்.

அந்தப் பவித்ர மாலைகள் பழையதாக ஆகிவிட்டால், அதைக் களையும்போது அசுத்தமான இடத்தில் சேர்க்காமல் சுத்தாமன இடத்தில் சேர்க்கலாம். அதாவது கால் படாத இடங்களில், அல்லது நதியில் சேர்த்து விடலாம்.


சென்ற சுதர்சன இதழில் அகத்திலிருப்பவர்களுக்குப் பெருமாள் தீர்த்தம் மூன்று முறை கொடுக்கலாம் என்று பதில் அளித்திருந்தீர்கள். அகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் மூன்று முறையா அல்லது ஸமாஶ்ரயணம் ஆனவர்களுக்குத்தான் மூன்று முறையா என்பதை தெளியப்படுத்தவும்.

Vidwan’s reply:

பெருமாள் தீர்த்தம் மூன்று முறை கொடுக்கலாம் என்பதில் சில அகத்தில் ஸமாஶ்ரயணம் ஆனவர்களுக்கு மட்டும் மூன்று முறை, ஆகாதவர்களுக்கு ஒரு தடவை என்பதாக ஒரு வழக்கம் இருக்கிறது.

அவரவர்கள் அகத்து வழக்கப்படி பின்பற்றவும்.


இத்தனை மணிக்காலத்திற்குள் என்ற நேர நிர்ணயம் சந்தியாவந்தனம் செய்ய இருக்கின்றதா? உதா: இரவு 10மணிக்குள் என்பது போல். சில நேரம் பயணங்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பண்ண இயலாது, அந்தச் சமயம் என்ன செய்வது ஏதேனும் ப்ராயஶ்சித்தம் இருக்கிறதா?

Vidwan’s reply:

சந்தியாவந்தனம் அதனுடைய காலத்திலே செய்யவேண்டும். அப்படிச் செய்யத் தவறிவிட்டால், அதாவது ஒரு ஒன்றரை மணிக்காலத்திற்குள் செய்யவேண்டும். சமயம் ஆக ஆக அதற்கு ப்ராணாயமம் முதலிய ப்ராயஶ்சித்தங்கள் எல்லாம் உண்டு.

இப்போதெல்லாம் இரவு 8, 9 மணிக்கெல்லாம் சந்தியாவந்தனம் செய்கிறார்கள். அதில் ஒன்றும் பெரிய வித்யாசம் இல்லை.

ஆனால் சில சமயம் ப்ராயணத்தின் போது குறிப்ப்பாக தூரமான ப்ரயாணம் செல்லும்போது, அன்றைய சந்தியாவந்தனம் மறுநாள் பிம்மாலையோ அல்லது காலையிலோ பண்ணும்படி ஆகிவிடுகிறது. அந்தச் சமயம் அதிகப்படி ப்ராணயாமம் செய்வது ப்ராயஶ்சித்தமாகுகிறது . அதாவது 3 தடவை அதிகப்படி ப்ராணயாமம் முதலியவை பண்ணவேண்டும்.


நமஸ்காரம், அடியேனுக்கு வேலை காரணமாக நிறைய ஶ்லோகங்கள் சேவிக்க முடியவில்லை, எளிமையான நித்தியபடி என்ன சேவிக்கலாம்

Vidwan’s reply:

ஸ்தோத்ர பாடங்களில் “ந்யாஸ தஶகம்” சேவித்தால் நலம் 2-3 நிமிடங்களில் சேவித்துவிடலாம். அதேபோல், அவகாசம் இருக்கிறதோ இல்லையோ, திருப்பாவையின் சாற்றுமுறை பாசுரங்களை மட்டும் சேவிக்க வேண்டும். அவகாசம் இருக்கும் நேரம் திருப்பாவையைப் பூர்த்தியாகச் சேவித்தால் நலம்.


சமீபத்தில் அடியேன் கேட்டறிந்து கொண்டது பஞ்ச ஸம்ஸ்காரம் அல்லது பரந்யாஸம் ஆனவர்கள்தான் ரஹஸ்ய த்ரயத்தை அனுசந்திக்க வேண்டும் என்று. அடியேனுக்கு இவை இரண்டும் இன்னும் ஆகவில்லை.ஆனால் அடியேன் வேதமும், ஸ்ரீமத் பகவத் கீதையும் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதன் மூலம் அஷ்டாக்ஷரம் மற்றும் சரம ஶ்லோகம் கேட்டறிந்தேன். மேலும், அடியேன் புரிந்துகொண்டது த்வயம் ஸ்ரீமத் இராமாயணத்தில் ஒரு பகுதியாக வருகிறது என்று. அடியேன் கேள்வி பரந்யாஸம் அல்லது ஸமாஶ்ரயணம் ஆகாதவர்கள் ஸ்ரீமத் இராமாயணம், ஸ்ரீமத் பகவத் கீதா மற்றும் உபநிஷத்கள் சேவிக்கக்கூடாதா?

Vidwan’s reply:

வேதம், உபநிஷத் ஆகியவற்றை உபநயனம் ஆனவுடனே ஆரம்பிக்கலாம்.

ஸ்ரீமத் இராமாயணம், ஸ்ரீமத் பகவத்கீதை, மந்த்ரார்த்த உபதேசங்கள் ஆகியவற்றை ஸமாஶ்ரயணம் ஆனவுடனே (புருஷர்கள்) ஆகலாம்.

எதையும் பரந்யாஸத்திற்குப் பின் என காத்துக்கொண்டிருக்க வேண்டாம்.

ஆனால் இன்றைய காலத்தில் ஸ்ரீமத் இராமாயணம், ஸ்ரீமத் பகவத்கீதை போன்றவையெல்லாம் சிறு வயதிலேயே சொல்லிக்கொடுக்கும் வழக்கம் வந்திருக்கிறது. ஆகையால் மஹான்கள்/ஆசார்யர்கள் சொல்லும்படிச் செய்யவும்.

குறிப்புகள்:

ஸ்ரீமத் இராமாயணம், பகவத்கீதை முதலியவற்றைக் கதையாகக் கேட்பது, சிறு குழந்தை வயதிலிருந்தே ஆரம்பிக்கலாம். ஆனால் மூலம் உபதேசம் பெறுவதற்குச் சில நியமங்கள் இருக்கின்றன.


பெருமாளுக்குத் தீர்த்தவாரி கண்டருளிய சமயம் எம்பெருமாள் உடுத்திக் களைந்த வஸ்த்ரத்தை அப்படியே உலர்த்தி மீண்டும் உபயோகிக்கலாமா அல்லது நன்கு சலவை செய்து தான் உபயோகிக்கவேண்டுமா?

Vidwan’s reply:

பெருமாளுக்குத் தீர்த்தவாரி கண்டருளிய சமயம் எம்பெருமான் உடுத்திக் களைந்த வஸ்த்ரத்தை வெளியே சலவைக்குப் போடவேண்டுமென்ற அவசியமில்லை. தீர்த்தவாரி (திருமஞ்சனம்) வஸ்த்ரத்தை பால், தயிர் பட்டிருக்கும் என்றபடியால் நாமே நன்றாகக் கசக்கி உலர்த்தி உபயோகிக்கலாம்.


அடியேன் உக்தி நிஷ்டையில் பரந்யாஸம் செய்துகொண்டேன். சில சமயங்கள் நம் பரந்யாஸம் சரியாக நடந்ததா என்று பயத்தினாலும், அறியாமையினாலும் யோசித்திருக்கிறேன். பரந்யாஸத்திற்கு, ஆசார்யன் மற்றும் எம்பெருமான் மீது மஹாவிஶ்வாஸம் வேண்டும் என்று புரிந்துகொண்டேன். தவறுதலாக நினைத்ததை எண்ணி இன்று வருந்துகிறேன். அகத்தில் இருக்கும் சாளக்கிராம் எம்பெருமானிடமும் ஆசார்யன் பாதுகையிடமும் பலமுறை மன்னிப்பு கேட்டிருக்கிறேன். என் பயமே என்னை இவ்வாறு தவறுதலாக நினைக்கச் செய்ததென்று. இதற்கு ஏதேனும் ப்ராயஶ்சித்தம் உண்டா?

Vidwan’s reply:

நீங்கள் எதுவும் செய்யவேண்டாம், பெருமாளிடமும் ஆசார்யனிடமும் மஹாவிஶ்வாஸத்தைக் குறைக்காமல் இப்போது இருந்தால் போதும். அதையும் ஸ்வாமி தேஶிகன் சொல்லியிருக்கிறார், பரந்யாஸ சமயத்தில் மஹாவிஶ்வாஸம் குறைந்திருந்தால் அதையும் பெருமாள் உண்டாக்கிவிடுவான்.

ஆகையால் இப்போது எதையும் நினைத்துக் குழம்பிக்கொள்ள வேண்டாம், கவலைப்பட வேண்டாம், ப்ராயாஶ்சித்தம் பயம் என்று எதுவும் வேண்டாம். ஆசார்யனிடமும் பெருமாளிடமும் உள்ள மஹாவிஶ்வாஸம் குறையாமல் பார்த்துக்கொண்டால் போதும்.


நாம் வெளிநாடு செல்லும் போது எத்தனை சாளக்கிராம மூர்த்திகள் எடுத்துச் செல்ல வேண்டும்? ஏதேனும் கணக்கு உண்டா?

Vidwan’s reply:

நாம் வெளிநாடு செல்லும் போது இத்தனை சாளக்கிராம மூர்த்திகள் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கணக்கெல்லாம் இல்லை எத்தனை முடியுமோ அத்தனை எடுத்துச்செல்லலாம்.

ஒரு பெருமாள் மாத்திரம் ஏளப்பண்ணிக்கொண்டு சென்றால் சௌகர்யமாக இருக்குமென்றால் ஒரு பெருமாள் மட்டும் ஏளப்பண்ணிக்கொண்டு போகலாம்.


பெரிய திருமலை நம்பிகளின் திருநக்ஷத்ரம், புரட்டாசி அனுஷமா? அல்லது வைகாசி ஸ்வாதியா? இந்தக் கட்டுரையில் ஸ்ரீமத் பஞ்சமத பஞ்ஜநம் தாததேஶிகன் அவர்கள் திருமலைநம்பிகளின் திருநக்ஷத்ரத்தில் அவதரித்தார் என்று உள்ளது. மேலும் திருமலை திருப்பதியில் புரட்டாசி அனுஷத்தில்தான் திருமலை நம்பிகளின் திருநக்ஷத்ரம் கொண்டாடப்படுகிறது என்று கேள்விப்பட்டுள்ளேன்.

Vidwan’s reply:

பெரிய திருமலை நம்பிகளின் திருநக்ஷத்ரம், புரட்டாசி அனுஷம் என்று நம் பெரியோர்கள் சொல்கிறார்கள்.


திருமஞ்சன கட்டியம் சேவிப்பதின் விசேஷம் என்ன?

Vidwan’s reply:

திருமஞ்சன கட்டியம் சேவிப்பது எம்பெருமானுக்கு ஒரு உபசாரமும், பக்தர்களுக்கு ஒரு அனுபவமும் ஆகும்.


ஶாஸ்த்ரத்தின் படி ஒருவர் தானே க்ஷௌரம், முடிதிருத்தம் போன்றவை கூடாதென்று சொல்லுகிறது. ஆனால் இக்காலத்தில் வேலை இருக்கும் இடம் காரணமாக, அப்படிக் கடைபிடிக்க முடியவில்லை. இதற்கு ப்ராயஶ்சித்தம் உள்ளதா?

Vidwan’s reply:

ஶாஸ்த்ரத்தின்படி ஒருவர் தானே க்ஷௌரம் (self shaving), முடிதிருத்தம் போன்றவை கூடாதென்று சொல்லுகிறது என்ற விடை கேள்வியிலே இருக்கிறது.

அப்படிக் கடைபிடிக்க முடியாதுபோனால் ப்ராயஶ்சித்தம் என்ற ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை.


எகல் முடிந்தபின் (13ஆம் நாள்) பரிவட்டங்களை என்ன செய்ய வேண்டும்? Vidwan’s reply:

அப்பரிவட்டங்கள் பெருமாளின் மரியாதையானபடியால் அகத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளலாம். பெருமாள் வஸ்திரமானபடியால் உத்திரயமாக அல்லது வேறு மரியாதையான ரீதியில் உபயோகிக்கலாம். இடுப்புக்குக் கீழ் கட்டாயம் உபயோகப்படுத்தக் கூடாது.


அடியேன் தஞ்சாவூரில் இருக்கும் ராஜ மடம் சந்தான ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் கைங்கர்யத்திற்காக இயன்றளவு பணம் அனுப்பிவந்தேன். அங்கே பிள்ளையார் இருப்பது சமீபமாகதான் அடியேனுக்குத் தெரியவந்தது அதன்பின் பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டேன். மேலும் அடியேனின் பணம் அப்பிள்ளையார் சந்நிதி கைங்கர்யத்திற்கும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். இதனால் அடியேனுக்குத் தேவதாந்தர சம்பந்தம் என்ற தோஷம் ஏற்பட்டிருக்குமா ஸ்வாமி?

Vidwan’s reply:

தேவதாந்தர சம்பந்தம் என்ற தோஷம் இந்த இடத்தில் வராது. ஏனென்றால் மனசறிந்து தேவதாந்தரத்திற்கென்று கொடுக்கப்படவில்லை.

சென்ற சுதர்சன இதழ்களில் தேவதாந்தரங்களுக்கு என்று கோவில்கட்டுறோம் அதற்கு பண உதவி வேண்டும் என கேட்கும்போது, எத்தனையோ செலவுகள் நாம் செய்கிறோம் அது போல் பொது தர்ம காரியம் என்ற நினைப்போடு கொடுத்தால் தவறில்லை என்று.

இவ்விடத்தில் மனமறிந்து தேவதாந்தரத்திற்கு என்று, அவருடைய ப்ரீத்திக்கு, அவருடைய கைங்கர்யத்திற்கு எனக் கொடுக்கப்படாததால் எவ்வித தோஷத்தையும் தேவதாந்தர ஸம்பநதத்தையும் ஏற்படுத்தாது.


ப்ரஹ்ம யக்ஞத்தின்போது செய்யப்படும் ஆசமனம், மந்த்ரம் இல்லாமல் செய்யப்பட வேண்டுமா?

Vidwan’s reply:

ப்ரஹ்ம யக்ஞத்தின்போது ஆரம்பத்திலும், கடைசியிலும் செய்யும் ஆசமனம் எப்போதும் செய்யும் ஆசமனம் போல்தான் ஆனால் ப்ரஹ்ம யக்ஞத்தின் நடுவில் ஒரு ஆசமனம் ஒன்றுள்ளது “ஶ்ரௌதாசமனம்” என்பது. அது மந்திரமில்லாமல் தான் இருக்கும். அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதை பெரியவர்களிடம் கேட்டு கற்றுக்கொள்ளவும்.


அடியேன் அகத்தில் சாளக்கிராம பெருமாளுடன், சிறிய க்ருஷ்ணர் போன்ற விக்ரஹ எம்பெருமான்கள் எழுந்தருளியிருக்கின்றனர். அவர்கள் பக்கத்தில் வேறுஒரு சிறிய விக்ரஹம் இருந்தது மிகச்சிறியளவில் இருந்ததால் என்ன விக்ரஹமென்று தெரியாமல் எம்பெருமானுக்குச் சமர்ப்பிப்பதுபோல் புஷ்பாதிகள் சமர்ப்பித்து சேவித்தும் வந்தேன். இப்போதுதான் அது சரஸ்வதி விக்ரஹம் என்று தெரிய வந்தது இதனால் பரந்யாஸம் ஆன அடியேனுக்குத் தேவதந்தர தோஷம் ஏற்பட்டிருக்குமா ஸ்வாமி? ஏதேனும் ப்ராயஶ்சித்தம் உண்டா?

Vidwan’s reply:

இதுவரை தெரியாமல் புஷ்பார்ச்சனை செய்துவிட்டபடியால் ஒரு தோஷமும் கிடையாது.

அபுத்திபூர்வக உத்ராகங்கள் என்ற ஒன்று உண்டு, அதாவது பரந்யாஸத்திற்குப் பின், புத்திக்குத் தெரியாமல் நாம் செய்யக்கூடிய பாபங்கள் – அபுத்திபூர்வமான அகங்கள் – அகங்கள் என்றால் பாபங்கள். அப்படி அபுத்திபூர்வக உத்ராகங்களுக்கு தோஷங்கள் ஒட்டாது. இதுவரை தெரியாமல் செய்ததினால் தோஷம் ஒட்டாது, இனிமேல் தெரிந்தபின் அக்காரியத்தைச் செய்யாமல் இருக்கவும்.


கோயிலில் இருக்கும் த்வாரபாலகர்கள்,ஆஞ்சநேயர் போன்றவர்களை எப்படிச் சேவிக்க வேண்டும்.

Vidwan’s reply:

கோயிலில் இருக்கும் த்வாரபாலகர்களை, கைக்கூப்பி வணங்கலாம்.

தனியாக இருக்கும் ஆஞ்சநேயரை சன்னதியை பெரியவர்கள் சென்று சேவிக்கும் வழக்கமில்லை. இருப்பினும் அஞ்சலி செலுத்துவதால் பாதகமில்லை.

இராமருடன் இருக்கும் ஆஞ்சநேயரை எப்படி இராமரைச் சேவிக்கின்றோமோ அப்படி சேவிக்கும் வழக்கும் உள்ளது.


சாளக்கிராம திருவாராதனை எப்படிச் செய்ய வேண்டும்? அடியேனின் ஆத்துக்காரர் தினமும் சாளக்கிராம மூர்த்திக்கு பால் தயிர் கொண்டு திருமஞ்சனம் மட்டும் செய்வார். முறையாக எப்படிச் செய்வது?

Vidwan’s reply:

சாளக்கிராம திருவாராதனைக்கு நித்யம் பால் தயிர் இல்லாவிட்டால், வெறும் பால் மட்டும் வைத்துச் செய்யலாம் அல்லது வெறும் தீர்த்தத்தினால் மட்டும் நித்யம் திருவாராதனைச் செய்து, விசேஷ நாட்களில் மட்டும் பால் வைத்து திருமஞ்சனம் பண்ணுவது என்பது வழக்கம்.

பெரியவர்கள் வழக்கப்படி, நித்யமும் தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்து, வெள்ளிக்கிழமை போன்ற மற்ற விசேஷ நாட்களில் பாலால் திருமஞ்சனம் செய்வார்கள்.

மற்றபடி தயிர், தேன் இதெல்லாம் விசேஷமாக உபயோகிப்பது என்பது வழக்கத்தில் இல்லை.


“விருத்தி தீட்டு உள்ள நாட்களில் காலக்ஷேபங்களில் அன்வயிக்கக் கூடாது என்று கேள்வி பட்டிருக்கிறேன். உபந்யாஸங்கள் கேட்கலாமா? தெரிவிக்க பிரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

“விருத்தி தீட்டு” உள்ள நாட்களில் காலக்ஷேபங்களில் அன்வயிக்கக் கூடாது, உபந்யாஸங்கள் கேட்கலாம்.


இங்கு USAல், தென்னாசார்யர் ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றும் கோயில்தான் அகத்துப் பக்கத்தில் உள்ளது. சாற்றுமுறை சமயம் நம் ஸம்ப்ரதாயத் தனியனைச் சேவிக்கலாமா? மேலும் தென்னாசார்யர்கள் சொல்லும் அவர்கள் ஆசார்யன் (ஸ்ரீபாஷ்யகார ஸம்ப்ரதாயத்தைப் பின் பற்றுபவர்கள் என்பதால் அவர்களின்) தனியனையும் சேவிக்கலாமா?

Vidwan’s reply:

இராமானுஜ அடியார்கள் பற்றிய ஶ்லோகத்தைச் சேவிப்பதில் எந்த ஐயமுமில்லை. அவர்களுடைய சாற்றுமுறை க்ரமம் அங்கே சேவிக்கும்படி நிர்பந்தம் வந்தால் அதைச் சேவிப்பதில் எந்தத் தவறுமில்லை.

நம் தனியனை, அவர்கள் அனுமதித்தால் அக்கோயிலில் சேவிப்பது உசிதமாகும்.


அடியேன் USAல் இருப்பதால் ஸ்ரீரங்கம், காஞ்சி போன்ற திவ்யதேசங்களுக்கு போகமுடியாமல் இருக்கின்றோம். இங்கே இருக்கும் எம்பெருமானின் திவ்யமங்கள ரூபத்தில் ஈடுபட்டால், எங்கே திவ்யதேச எம்பெருமானைப் போய்ச் சேவிக்கும் பாக்கியம் கிட்டாதோ என்ற ஒரு ஐயம் எழுகிறது. இப்படி எம்பெருமானின் அர்ச்சாமூர்த்தியில் பேதம் பார்ப்பது சரியா ஸ்வாமி? ஏதேனும் தேஷமாகுமா?

Vidwan’s reply:

எம்பெருமான் ஆங்காங்கே அர்ச்சாமூர்த்தியாய் சேவை சாதிப்பது எல்லாராலும் திவ்ய தேசங்கள் போய்ச் சேவிக்க முடியாது என்ற காரணத்தினால்தான். அப்படியிருக்க அவனே க்ருபையுடன் எங்கு இறங்கிவந்திருகிறானோ அவ்விடத்தில் ஈடுபடுவதென்பது நமக்கு ஏற்பட்ட பாக்கியமாகும்.

எங்கே இங்கிருக்கும் எம்பெருமானிடத்தில் ஈடுபாடு ஏற்பட்டால் திவ்யதேச எம்பெருமானைச் சேவிக்கும் ஆசை மாறிவிடுமோ என்று நினைக்கவேண்டிய அவசியமில்லை. திவ்ய தேசம் சேவிக்கும் ஆசையும் அவன் ஏற்படுத்தி வைப்பான், நமக்கென்று அவன் வந்திருக்கும் இடத்தில் அவன் மேல் ஈடுபாடு கொள்ளும்படி செய்ததும் அவனுடைய பரமானுக்ரஹம்தான்.

எல்லா அர்ச்சாமூர்த்தி எம்பெருமானித்திடலும் ஈடுபாடு கொள்வதென்பது ஸ்ரீவைஷ்ணவர்களின் ஸ்வரூபம்தான்.


வரப்போகும் சூர்ய க்ரஹணம் பற்றிய கேள்வி:

– க்ரஹண காலத்தில் பொதுவாக அடியேன் மடியாய் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம், அஷ்டாக்ஷர ஜபம் பின் க்ரஹணகால முடிவில் தர்ப்பணம் பண்ணுவது வழக்கம்

a. இந்தக் காலத்தில் சாளக்கிராம மூர்த்திக்கு (நித்யபடிச் செய்யும்) திருவாராதனை பண்ணலாம் என்று கேள்விபட்டேன். இது சரியா?

b. க்ரஹணகால திருவாராதனை என்று ஏதேனும் விசேஷ திருவாராதனை இருக்கிறதா?

c. க்ரஹணகால திருவாராதனையின் போது பால், பழம், கற்கண்டு மட்டும் பெருமாளுக்கு அம்சைபண்ணலாமா?

Vidwan’s reply:

க்ரஹண காலத்தில் சாளக்கிராம மூர்த்திக்குத் (நித்யபடிச் செய்யும்) திருவாராதனை பண்ணலாம்.

ஆமாம் க்ரஹண கால திருவாராதனை என்று விசேஷ திருவாராதனை இருக்கிறது. எப்படி நித்யபடி திருவாராதனை சமயத்தில் “இஜ்யாக்னேன” என சங்கல்பிக்கிறோமோ அதேபோல் க்ரஹணகால திருவாராதனை சங்கல்பத்தில், “ஸோமோபராக புண்ய கால அல்லது ஸூர்யோபராக புண்ய கால ஆராதனா” என்று சொல்லிக்கொள்ள வேண்டும். மற்றபடி வேறொரு வித்யாசமும் இல்லை.

தளிகை பண்ணாமுடியாத காரணத்தினால், க்ரஹணகால திருவாராதனை போது பால், பழம், கற்கண்டு மட்டும்தான் அம்சைபண்ணமுடியும். குறிப்பாக பழம், கற்கண்டு இவை இரண்டும் தான் முக்கியமாக அம்சை பண்ணுவார்கள்.


நித்யபடி திருவாராதனை சமயம் பலா, அன்னாசி போன்ற பழங்கள் முழுவதாக இல்லாமல் உரித்த (சிறு துண்டுகளாக அரிந்து) பழங்களை வாங்கி ஸமர்ப்பிக்கலாமா? அதே போல் முழுப்பாக்குதான் வெற்றிலையோடு ஸமர்ப்பிக்க வேண்டுமா? அடியேன் உடைத்த பாக்குதான் வாங்கிக்கொண்டு இருக்கிறேன்.

Vidwan’s reply:

நித்யபடி திருவாராதனைச் சமயம் பலா, அன்னாசி போன்ற பழங்களை பக்குவப்படுத்தி எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பது என்பது சிறந்த உபசாரமாகும். பழங்களையெல்லாம் நாம் முழுதுமாக (முழுப்பழமாக) வாங்கி, நம் அகத்திலே அரிந்துதான் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும். கடையில் பாதியாக அரிந்து வைத்துள்ள பழங்களை நாம் வாங்கி பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கும் வழக்கம் கிடையாது.

முழுப்பாக்கு உபயோகிப்பதுதான் வழக்கத்தில் இருக்கிறது. கொட்டைப்பாக்கு என்று ஒன்று கடைகளில் கிடைக்கும், அதை வாங்கி ஸமர்ப்பிப்பார்கள். அதுவே தூள் பாக்கு என்று ஒன்று கிடைக்கிறது அதை ஸமர்ப்பிக்கக்கூடாது.

முழுப்பாக்கு என கேரளா போன்ற இடங்களில் கிடைக்கும், நம்மூரில் அது கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஆகையால் அது ப்ரஸக்தியிருக்காது எனத் தோன்றுகிறது.


அடியேன் வ்ராத்ய வர்ணத்தைச் சேர்ந்தவன்.

a. எனக்கு இருக்கும் உபநயனம் மற்றும் வேதம் ஓதும் அதிகாரத்தை எப்படிப் பெறுவது? அவைகளைப் பெற ஏதேனும் ப்ராயஶ்சித்தம் செய்ய வேண்டுமா?

b. மோக்ஷம் பெற ப்ரந்யாஸம் கட்டாயமா? தென்னாசார்யர் ஸம்ப்ரதாயகாரரகள் அது அவசியம் இல்லை என்கிறார்கள். ஆனால் எனக்கு வடகலை ஸம்ப்ரதாயப்படி செய்ய வேண்டும் என்ற ஆசை. அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏன் இந்த வேறுபாடு?

Vidwan’s reply:

இக்கேள்வியின் உத்தேசம் புரியவில்லை.


யாரேனும் க்ருஹத்தில் தவறிவிட்டால் ஒரு வருடம் கோலம் போட கூடாது என்கிறார்கள் அதனுடைய வைதிக ரீதியான சமாதானம் என்னவென்று தெரியபடுத்த ப்ரார்த்திகிறேன்

Vidwan’s reply:

கோலம் போடுவது என்பது மங்களகரமான காரியம்.

யாரேனும் க்ருஹத்தில் தவறிவிட்டால் ஒரு வருடம் நாம் துக்கம் அனுஷ்டிக்கிறோம்.அதனால் பண்டிகைகள் எல்லாம் எதுவும் கிடையாது, சுபமான சிலவற்றை நாம் தவிர்க்கிறோம் என்கிற ரீதியில் கோலம் போடக்கூடாது என்று வரும். வைதிக ரீதியான சமாதானம் இதுதான் என்று தோன்றுகிறது.


தசாகத்திற்கு (10ம் நாள்) போய் விட்டு வந்தால் பூணூல் மாற்றிக் கொள்ள வேண்டுமா? (தீட்டு இல்லாதவர்கள்)

Vidwan’s reply:

தீட்டு இல்லாதவர்கள், தசாகத்திற்கு (10ம் நாள்) போய் விட்டு வந்தால் பூணூல் மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.


கயா ஶ்ராத்தம் செய்யும்போது நம் வைகுண்டவாசியான ஆசார்யனுக்கும் சேர்த்து ஶ்ராத்தம் செய்ய வேண்டுமா?

Vidwan’s reply:

கயா ஶ்ராத்தம் பொதுவாக நமக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் செய்யலாம் என்று கேள்விபட்டிருக்கிறேன். எனவே அந்த ரீதியில் ஆசார்யனுக்கும் செய்யலாம் எனத் தோன்றுகிறது.

இந்த விஷயம் தெரிந்தவர்கள், அங்கே செய்துவைப்பவர்களிடன் கேட்டால் அவர்கள் செய்து வைப்பார்கள்.


அகத்தில் பள்ளிக்குச் செல்லும் பேரன் இருக்கிறான் அடியேனுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டத்து. விநாயகசதுர்த்தி கொண்டாடலாமா?

Vidwan’s reply:

ஸ்ரீவைஷ்ணவர்கள் விநாயகர்சதுர்த்தி எப்பொழுதுமே கொண்டாடக்கூடாது. பரந்யாஸம் ஆனபடியினால் கட்டாயம் கொண்டாடக்கூடாது.


a. புக்ககத்தில் எல்லோரும் வயதில் மூத்தவர்கள்.அடியோங்கள் இளயவர்களாக இருக்கும் பக்ஷத்தில், அவர்களைச் சேவிக்கும் சந்தர்ப்பம் வருகிறது.அவர்கள் ப்ரபத்தி பண்ணிக்கல.இதர தேவதா சம்பந்தம் இருக்கு.என்ன பண்ணலாம்?

b. நவராத்திரி கொலு நாட்களில் இதர ஜாதியினர். வீட்டுக்கு வந்தால் வெற்றிலை பாக்கு கொடுக்கலாமா?கொலுவிற்கு அய்யர் வீட்டில் அடியேன் போய் வெற்றிலை பாக்கு எடுத்துக் கொள்ளலாமா?

c. இதர ஜாதியினர் வீட்டு நல்லது கெட்டதுக்கு தலை காமிக்க போலாமா?

d. ப்ரபத்தி ஆனவர்கள் (ஆத்து வழக்கம் ) சுமங்கலி ப்ரார்த்தனை செய்யலாமா?

e. அடியேனுடைய தோழி குடியானவன்.ஆனால் ஸமாஶ்ரயணம் பண்ணிக் கொண்டு பெருமாள் கோயிலில் கிளார்க் வேலை பார்க்கிறாள்.அவளிடம் நம் சம்பிரதாய முறைப்படி பழகுவதா ? இல்லை எப்படினு தெரியவில்லை சுவாமின்?
Vidwan’s reply:

புக்ககத்தில் இருக்கும் வயது முதிந்தவர்கள், மற்றும் மாமனார், மாமியாரை பரந்யாஸம் ஆகவில்லை என்றாலும் சேவிக்கலாம். தேவதாந்தர சம்பந்தம் இருப்பது வருத்தமான விஷயம், அது சீக்கிரம் நீங்க எம்பெருமானை ஶ்ரத்தையுடன் ப்ரார்த்திக்கலாம். மாமனார், மாமியாரின் ஸ்தானத்திற்கு வைத்து சேவிக்க வேண்டியது அவசியம் ஆகையால் சேவிக்கனும்.

நவராத்திரி கொலுவிற்கு இதர ஜாதியினர் வந்தால் வெற்றிலை பாக்கு கொடுக்கலாம். அய்யர் அகத்துக்கும் போய் தாம்பூலம் எடுத்துக்கொள்ளலாம்.

இதர ஜாதியினர் வீட்டின் கல்யாணம், சீமந்தம் போன்ற விசேஷங்களுக்குப் போகலாம். வேறு மாதிரி காரியங்களுக்குப் போவதைத் தவிர்க்கலாம்.

ப்ரபத்தி ஆனவர்கள் அகத்து வழக்கப்படி சுமங்கலி ப்ரார்த்தனையிருந்தால் பண்ணலாம். லக்ஷ்மீதேவியை மனதில் நினைத்துக்கொண்டு பண்ணலாம்.

இதர ஜாதியினர் ஸமாஶ்ரயணம் ஆகியிருந்தால் அவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் என்பதை மனதில் கொண்டு அபசாரம் படாமல், மரியாதையுடன் பழக வேண்டும். சமபந்தியில் அமர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அந்த ஜாதிக்குரிய வரம்புகளை எங்கு மீறக்கூடாதோ அங்கே மீறக்கூடாது, அதே போல் நம் க்ருஹங்களில் சில இடங்களை அவர்கள் பார்க்கக்கூடாது என்று இருக்கு, அவ்விடத்தைப் பார்க்காமல் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அவர்களை எவ்விதத்திலும் குறைத்து நினைக்காமல், மிகவும் மரியாதையுடன் பழக வேண்டும். அவர்களிடம் அபச்சாரம் படாமல் இருக்கவேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.


35.a. என் மாமனார் ஆகஸ்ட் 5 அன்று காலமானார்.எனது புத்திரனின் உபநயனம் ஜூலை மாதம் 6 அன்று நடந்தது.அவனுக்கு எப்பொழுது ஆவணி அவிட்டம் நடத்த வேண்டும்.கணவருக்கு அமாவாசை தர்ப்பணம் உண்டா ஒரு வருடத்திற்கு.

b. எனது மாமனார் ஆகஸ்ட் 5 அன்று காலமானார்.கணவருக்கு மஹாளயபக்ஷம் உண்டா

Vidwan’s reply:

ஆவணி அவிட்டம் இந்த வருடம் ஆடி மாதம் வந்தது, அன்று பண்ண முடியாதவர்கள், ஆவணி மாதம் பௌர்ணமி அன்று அதைப் பண்ணவேண்டும். மேலும் அமாவாஸை தர்ப்பணம் ருக்மமாக பண்ணத்தான் வேண்டும்.

மஹாளய தர்ப்பணம் மாதா பிதாக்களின் மரண வருஷத்தில்கூட கட்டாயம் செய்ய வேண்டும் என்று ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது.

மஹாளயத்தை சிலர் தர்ப்பணமாகச் செய்யாமல் அன்ன ஶ்ராத்தமாக செய்வார்கள், அவர்களால் இதைப் பண்ண முடியாது.

ஆனால் நம் ஸம்ப்ரதாயத்தில் தர்ப்பணமாகத்தான் இதை செய்துகொண்டிருக்கிறோம். ஆகையால் மஹாளய தர்ப்பணம் அவசியம் செய்ய வேண்டியது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top