அடியேன் நவராத்ரி என்பது துர்கா தேவியை 9 நாளும் பூஜிக்கும் வழக்கம் என்றும் சிவன் உரைத்ததோ அல்லது ஶாகேத்ய சம்ப்ரதாயத்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டுள்ளேன். நம் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இருக்கும் பாசுரங்களிலோ, இதிஹாச புராணங்களிலோ நவராத்ரியின் குறிப்பு எங்கேயும் உள்ளதா என அறிய ஆவலாக இருக்கிறது? நம் பூர்வாசார்யர்கள் கொண்டாடியிருக்கின்றனரா? என்று தெளிவிக்கவும்.
Vidwan’s reply:
நவராத்ரி வழிபாடு பற்றி ஸ்ரீ லக்ஷ்மீதந்திரத்தில் சொல்லப்பட்டிருகிறது. மேலும் இது பூர்த்தியாக ஸ்ரீவைஷ்ணவ வழிபாடு என்று நிர்தாரணம் பண்ணி நம் GSPKவில் நவராத்ரியின் சிறப்பு என்ற ஒரு உபந்யாஸத்தின் விளக்கப்பட்டிருக்கிறது அதை கேட்கவும்.
நவராத்ரி என்பது லக்ஷ்மீதேவி விஷயமான வழிபாடுதான். லக்ஷ்மீதேவியின் எந்தெந்த ஸ்தோத்ரங்கள், ப்ரபந்தங்கள், ரூபங்கள் எந்தெந்த நாள் என்பதை விஸ்தாரமாக ஒரு pdf தொகுப்பாய் கீழேயுள்ள பக்கத்தில் காணலாம்.
வேதம் பற்றிய சந்தேகம்.
1. வேதங்கள் ஏன் மறைந்து எம்பெருமானைப் பற்றி கூறுகின்றன? ஏன் வெளிப்படையாகவே எல்லா இடங்களிலும் கூறவில்லை?
2. எம்பெருமான் ஏன் பல சிறு தெய்வங்களையும், பல ஸம்ப்ரதாயங்களையும் படைத்து மக்களை அவரவர் அறிவிற்கேற்ப பின்பற்ற வைத்திருக்கிறார்? தான் ஒருவனே பர தெய்வம் என்று ஶரணாகதி மார்க்கத்தை அனைவரும் பின்பற்றும்படி செய்திருக்கலாமே?
Vidwan’s reply:
எப்படி ஒரு அபூர்வமான ரத்தினத்தை நாம் காண்ட இடங்களில் வைக்காது பெட்டிக்குள்ளே பத்திரமாய் பூட்டி வைக்கின்றோமோ, அதுபோலே எம்பெருமானின் தத்துவ ஞானமானது மிகவும் அபூர்வமான விஷயம். ஆகையால் அதை வேதங்கள் மறைத்தே சொல்லுகின்றன. ஏனெனில் அவ்விஷயங்களை ஒரு குருமுகமாய் மட்டுமே அறியவேண்டும் என்பதற்காகவும் மறைத்துக் கூறப்பட்டுள்ளது.
எம்பெருமான் லீலையாக பல தெய்வங்களைப் படைக்கிறான். இவையெல்லாம் எம்பெருமானின் “லோகவத்து லீலா கைவல்யம்” என்பதாக ப்ரம்ம சூத்ரம் சொல்லுகிறது. இந்த லோகத்தை லீலையாக பகவான் படைத்திருக்கிறான், அவனுடைய லீலைகளில் இதெல்லாம் காரணம். மேலும் அந்தந்த ஜீவராசிகளின் கர்மவினையை அனுசரித்து லோகத்தை நடத்துகிறான், அக்காரணத்திற்காகவும் பகவான் இதர தேவதைகளைப் படைத்திருக்கிறான்.
மனிதர்களில் பலருக்கு பல தேவர்களைப் பிடித்திருக்கும். அவர்களும் பலன் பெறட்டுமே என்ற நல்ல எண்ணமும் காரணமாகும்.
வேத மஹிமை உபந்யாஸத் தொடரின் முதல் பாகத்தில் ப்ரதான ஶதகம் மற்றும் காஞ்சி பேரருளாளன் பத்திரிகையில் ஸ்வாமி எழுதிய விளக்கவுரைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இவ்விரண்டும் எங்கு கிடைக்கும் என்று தெரிவிக்கவும். ebook ஆக இருந்தாலும் பரவாயில்லை. அடியேன்.
Vidwan’s reply:
ப்ரதான ஶதகம் என்பது ரஹஸ்யங்களில் ஒன்று. “சில்லரை ரஹஸ்யங்கள்” என்ற புத்தகத்தில் இந்த ரஹஸ்யமிருக்கும். அந்தப் புத்தகம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் பௌண்டரீகபுரம் ஆஶ்ரமத்தில் கிடைக்கும்.
காஞ்சி பேரருளாளப் புத்தகம், தரமணியில் உள்ள பேரருளாள அலுவலகத்தில் (“ஹயக்ரீவ வித்யாபீடம்”, தரமணி) கிடைக்கும்.
நமஸ்காரம் ஸ்வாமின் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அர்ச்சா மூர்த்தியின் பின் புறம் நரசிம்ம பெருமாள் எழுந்தருளியிருக்கும் தாத்பரியம் என்ன ?
Vidwan’s reply:
சக்ரத்தாழ்வார் என்பவர் நித்யஸூரி. அவருக்கு அந்தர்யாமியாக இருந்துகொண்டு எம்பெருமானே எல்லாப் பலன்களையும் அளிக்கிறான் என்பதைக் குறிக்கவும், மேலும் சக்ரத்தாழ்வார் உக்ரமூர்த்தியானபடியால் உக்ரமூர்த்தியான ந்ருஸிம்ஹரை பின்புறம் ஏளப்பண்ணுகிறார்கள்.
பொதுவாக உபநிஷத் பாராயணம் சூர்யாஸ்தமனத்திற்குப் பின் செய்வதில்லை. திருவாய்மொழி என்பது உபநிஷத்தின் ஸாரம் என்கிறோம், ஆனால் உபநிஷத் பாராயணம் போல் திருவாய்மொழி பாராயணத்திற்கு ஏன் அந்தக் கட்டுப்பாடு இல்லை?
Vidwan’s reply:
உபநிஷத் பாராயணம் இராத்திரியில் செய்வதில்லை. உபநிஷத்தின் ஸாரமான திருவாய்மொழியை இராத்திரியில் சொல்லலாமா என்றால் பெரியவர்களின் ஆசாரத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதாவது இரவில் தயிர் சாப்பிடக்கூடாது என்றிருக்கிறது, ஆனால் தயிரின் ஸாரமான நெய்யைச் சாப்பிடுகிறோம் அல்லவா! அதுபோலேதான் இதுவும்