ஸ்த்ரீகள் பொதுவாக நெற்றியிலும் பின்கழுத்திலும் திருமண்காப்பு தரிக்கும்போது துவாதச மந்திரம் கூறி இடவேண்டுமா? அல்லது கேசவாய நம:/ஸ்ரீயை நம: என்றும் தாமோதராய நம:/சுரசுந்தர்யை நம: என்று மட்டும் கூறி இட்டுக்கொள்ளலாமா?
Vidwan’s reply:
ஸ்த்ரீகள் நெற்றியிலும் பின் கழுத்திலும் மட்டும் திருமணம்காப்பு இட்டுக்கொண்டாலும், 12 திருநாமங்களையும் அவசியம் சொல்லவேண்டும். பெருமாள் திருநாமங்கள், தாயார் திருநாமங்கள் எல்லாவற்றையும் நித்யப்படி அவசியம் சொல்லவாவது செய்யணும்.
பொதுவாக ஸ்த்ரீகள் பின்பற்ற வேண்டிய தினசர்யாவைம் மாசப்பிறப்பு போன்ற நாட்களில் என்ன தளிகை செய்யவேண்டும் என்பதையும் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
பொதுவான ஸ்த்ரீ அநுஷ்டானங்கள் பற்றி சுதர்சனம் YouTube Channelல் “ஸ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீயின் நித்யகர்மானுஷ்டானம்” என்று ஒரு வீடியோஇருக்கின்றது. அதைப் பார்த்துக்கொள்ளலாம்.
மாசப்பிறப்பு தளிகைக்கு, ஶ்ராத்தத்திற்கு என்னென்ன பதார்த்தங்கள் உபயோகிப்போமோ அதைக் கொண்டே மாசப்பிறப்பு தளிகை செய்யவேண்டும். அதாவது முக்கியமாக தவிர்க்க வேண்டியது என்பது துவரம் பருப்பு, மஞ்சள் பொடி இவயெல்லாம் உபயோகிக்கக்கூடாது என்று சில குடும்பத்து வழக்கம்.
இன்னும் சில குடும்பங்களில் மாசப்பிறப்பு என்பது கல்யாணதினம் போல் இருப்பதினால் நல்ல மங்களகராமாகத் தளிகைப் பண்ணுவது என்று வழக்கமாக உள்ளது. ஆகையால் அவரவர் அகத்து வழக்கப்படி கேட்டுச்செய்யவும்.
குறிப்புகள்:
மாசப்பிறப்பன்று நிஷித்தமான காய்கறிகள் எதையுமே பயன்படுத்தக்கூடாது. பொதுவாகவே பயன்படுத்தக்கூடாது, கட்டாயமாக மாசப்பிறப்பு அன்று பயன்படுத்தக் கூடாது.
மாசப்பிறப்பன்று ஶ்ராத்தத் தளிகைப்போல் பண்ணும் வழக்கம் இருந்தால், என்னென்ன சேர்த்துக் கொள்ளலாம் என்று கேட்டால் பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை, இஞ்சி, தேங்காய், வெல்லம். இதெல்லாம் பயன்படுத்தலாம். இதைக் கொண்டு தளிகை பண்ணவேண்டும் என்றால், பயத்தம்பருப்பை தனி பருப்பாக வைத்து விட்டு, பொரித்த குழம்பு பண்ணுவது வழக்கம். பொரித்த குழம்பு என்பது, உளுத்தம்பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, இதெல்லாம் வறுத்து அரைத்து வாழைக்காயோ, சேப்பங்கிழங்கோ, சுண்டைக்காயோதான் போட்டுப்பண்ணும். அரைக்கும் பொது தேங்காயும் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் இதே பதார்த்தங்களை வறுத்து அரைத்து சாற்றமுது பண்ணலாம். கறியமுது என்பது பொதுவாக ஶ்ராத்தத்திற்கு எது உசிதமோ அதெல்லாம் மாசப்பிறப்பிற்குச் சேர்த்துக்கொள்ளலாம். வாழைக்காய், சேப்பங்கிழங்கு, பாகற்காய், இவை எல்லாம் மிகவும் உசிதமானவை. மஞ்சள் பொடி சேர்க்காமல் பண்ணுவது முக்கியம். திருக்கண்ணமுது அவசியம் பண்ணவேண்டும். வெல்லம் சேர்த்து திருக்கண்ணமுது செய்து எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கலாம்.
a. கல்யாணம் ஆகாத ஸ்ரீவைஷ்ணவ பெண்பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய தினசர்யா என்ன என்று தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன். ஒருவேளை அந்தப் பெண்பிள்ளை ஸ்மாஶ்ரயணம் ஆகவில்லை என்றால் அவள் பின்பற்ற வேண்டிய நித்யகர்மா அனுஷ்டானம் (காலையும் மாலையும்) என்ன என்றும் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
b. அடியேன் திருமணமாகாத ஒரு ஸ்ரீவைஷ்ணவ பெண்பிள்ளை எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்வி அடியேன் கேட்டதின் காரணம் அடியேன் ஸ்ரீவைஷ்ணவர் அல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவள், மேலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் வெளிநாட்டில்தான். சில காரணங்களால் தற்போது இந்தியா வந்து ஸமாஶ்ரயணம் செய்துக்கொள்ள முடியாத சூழலில் உள்ளேன். அதுவரை ஒரு ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட விதிகளுக்குட்பட்டு ஸ்ரீவைஷ்ணவ நெறிகளைப் பின்பற்ற ஆசையாக உள்ளது என்று தெரிவிக்க வேண்டுகிறேன். மேலும், எங்கள் அகத்து புருஷர்கள் பூஜை போன்றவை செய்வதில்லை. அடியேன் மட்டும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ஈர்க்கப்பட்டு இயன்றளவு கடைபிடிக்கவேண்டும் என்ற ஆசையால் இக்கேள்வியை பதிவிட்டுள்ளேன்.
Vidwan’s reply:
கல்யாணம் ஆகாத ஸ்ரீவைஷ்ணவ பெண்கள் காலையில் எழுந்தவுடன் ஹரிநாம ஸ்மரணை செய்யவேண்டும். அதன்பின் ஶரீர சுத்தி செய்துவிட்டு, தலைவாரிப்பின்னி, நெற்றியிட்டு, வளையெல்லாம் போட்டுக்கொண்டு, பெருமாள் சந்நிதியில் சேவித்துவிட்டு ஆசார்யன் தனியன்களைச் சொல்லி, தெரிந்த ஸ்தோத்ர பாடங்கள், ப்ரபந்தங்கள் முதலியவற்றைச் சேவிக்கலாம். இதே போல் சாயங்காலம் விளக்கேற்றிய பின்னரும் செய்யலாம்
புதியதாக இயன்றளவு ஸ்தோத்ர பாடங்கள் கற்றுக்கொள்வது, உபந்யாஸங்கள் கேட்பது என்று சத்விஷ்யங்களில் ருசியை வளர்த்துக்கொள்ளலாம்.
பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதென்பது கல்யாணமாகாத பெண்கள் கட்டாயம் கடைபிடிக்கவேண்டிய ஒன்று. அகத்து பெரியவர்கள் என்ன ஒத்தாசை கேட்டாலும் அதை அவர்களுக்கு அனுகுணமாகச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமான குணம். இக்குணத்தை வளர்த்துக் கொண்டால்தான் கல்யாணமான பிறகு புக்கத்திலும் அனுசரனையாக நடந்து, க்ருஹஸ்த தர்மங்களையெல்லாம் பரிபாலித்துக் கொண்டும், ஸம்ப்ரதாயத்தை வளர்ப்பதற்கும் உபயுக்தமாக இருக்கும்.
கல்யாணம் ஆன பிறகு ஆசார்யன் மாறக்கூடும் என்பதால், திருமணத்திற்கு முன்னர் ஸமாஶ்ரயணம் செய்யும் வழக்கமில்லை என்று சிலர் வைத்துக்கொண்டுள்ளனர்.
ஒருகால் ஸமாஶ்ரயணம் ஆகியிருந்தால் ஆசார்யன் உபதேசித்த மந்திரத்தை தினமும் ஜபிக்கவேண்டும்.
ஸ்ரீவைஷ்ணவராக ஆகவேண்டும் என்ற எண்ணம் வந்ததே எம்பெருமானின் பேரனுக்ரஹம். ஒரு சதாசார்யன் கிடைக்கும்வரை, பொதுவாக எம்பெருமானின் திருநாமங்களையே அண்டி வாழலாம். எழும்போது ஹரி நாமம், குளிக்கும்போது புண்டரிகாக்ஷ திருநாமம், உண்ணும்போது கோவிந்த திருநாமம், வெளியில் செல்லும்போது கேசவ திருநாமம், உறங்கும்போது மாதவ திருநாமம் என்று ஸ்மரித்துக்கொண்டு இருந்தாலே எம்பெருமான் மேல் ஈடுபாடு குறையாமல் இருக்கும். பாடத்தெரிந்தால் எம்பெருமானின் பாடல்களைக் கற்றுக்கொண்டு பாடலாம். ஸ்தோத்ர பாடங்கள், ப்ரபந்தங்கள் போன்றவற்றைக் கற்கலாம். எம்பெருமானின் படத்தின் கீழ் கோலமிட்டு, விளக்கேற்றி, புஷ்பம் சாற்றி எம்பெருமானை நினைத்து வழிபடலாம். எம்பெருமான் விஷயமான உபந்யாஸங்கள் கேட்கலாம். விரைவில் சதாசார்யன் ஸம்பந்தம் கிட்டவேண்டும் என்ற ப்ரார்த்தனையை ஶ்ரத்தையாக எம்பெருமான் திருவடிகளில் வைத்து வழிபட அவன் வழிகாட்டுவான்.
பெண்கள் ஆசமனம் செய்வது பற்றி வேதத்திலோ, அல்லது இதிஹாஸ புராணங்களிலோ ஏதேனும் குறிப்புள்ளதா?
Vidwan’s reply:
பெண்கள் ஆசமனம் செய்வது பற்றி பெரியோர்கள் அனுஷ்டானத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். அதற்கு ப்ரமானம் வேதத்தில், இதிஹாஸ புராணங்களில் இருக்கிறதா என்பதை நினைத்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. சிஷ்டாசாரமே ப்ரமாணம். மேலும் எப்படிச் செய்யவேண்டும் என்பதை Q36KAR22029 கேள்வியின் பதில்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள காணொளியை மூலம் அறியலாம்.
மஞ்சள்காப்பை சுமங்கலி ஸ்த்ரீகள் நெற்றியில் இட்டுக்கொள்ளலாமா? முக்கியமாக திருமண் ஸ்ரீசூர்ணத்தின் மேல் குங்குமம் மற்றும் மஞசள் காப்பை இட்டுக்கொள்ளலாம? ப்ரணாமஙகள்
Vidwan’s reply:
மஞ்சள்காப்பை சுமங்கலி ஸ்த்ரீகள் அவசியம் நெற்றியில் இட்டுக்கொள்ளலாம். திருமண் ஸ்ரீசூர்ணத்தின் மேல் மஞ்சள் காப்பையோ, குங்குமத்தையோ நிச்சயம் இட்டுக்கொள்ளலாம்.
ஸ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீ ஹனுமான் சாலிசா சேவிக்கலாமா?
Vidwan’s reply:
ஸ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீ ஹனுமான் சாலிசா சேவிப்பதில் நிஷித்தமில்லை. நம் ஆசார்யர்கள் அருளிய பல விசேஷமான ஸ்தோத்ரங்கள் இருக்கிறது அதைச் சேவித்தால் மிகவும் உசிதமாகும்.
ஆண்டாள் கோஷ்டி மட்டும் கத்ய த்ரயம் கோயிலில் சேவிக்கலாமா?
Vidwan’s reply:
ஆண்டாள் கோஷ்டி மட்டுமே தனியாகச் சேவாகாலம் செய்வதோ, அவர்கள் சேவாகாலம் செய்வதென்பதே எந்தக் கோவிலிலும் வழக்கத்தில் இல்லை. பிற்காலத்தில் நூதனமாக ஏற்பட்டக் கோவில்களில் அவர்களும் சேர்ந்து ஸ்தோத்ர பாடங்களை சேவாகாலம் செய்வதென்பது ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் மட்டுமே கத்ய த்ரயம், ஸ்தோத்ரபாடங்கள், ப்ரபந்தங்கள் சேவிப்பதென்பது வழக்கத்தில் இல்லை.