ஸ்திரீகள் சாளக்கிராமத்தைத் தொடக்கூடாது என்கிறார்கள். அடியேனின் தாயார் கூறியதாவது, என் பாட்டி பெருமாள் ஏளியிருக்கும் பெட்டியைச் சுத்தம் செய்யும் சமயம் பெருமாளைத் தொடுவார் என்றார். பாட்டி அப்படிச் செய்ததால் பெருமாளின் சாநித்யம் குறைந்து போய்விடுமா? என்பது அடியேனின் சந்தேகம். மேலும் அடியேன் தொடர்ந்து அந்தப் பெருமாளுக்கு திருவாராதனை செய்யலாமா?
Vidwan’s reply:
ஸ்த்ரீகள் சாளக்கிராமத்தைத் தொடக்கூடாது. கேள்வி கேட்டிருப்பவருடைய பாட்டி சாளக்கிராமத்தைத் தொடநேர்ந்ததாகச் சொல்கிறார், அதனால் சாளக்கிராமத்திற்கு சாநித்யம் குறையாது. ஆனால் ஸ்த்ரீகள் தொடும் வழக்கமில்லை. மேலும் பெரியோர்கள் சாளக்கிராமத்திற்குத் திருவாராதனை பண்ணுவதற்காக கையில் ஏளப்பண்ணிக்கொள்ளும் பொழுது ஸம்ஸ்காரங்களைச் செய்துவிட்டு எடுத்துக்கொள்வார்கள். பாலால் திருமஞ்சனம், மற்றும் என்னென்ன செய்ய வேண்டுமோ அதைப் பண்ணி விட்டு எடுத்துக்கொள்வார்கள்.
அன்று பாட்டி பண்ணினாளே என்று, அதை ஒரு முன்னோடியா வைத்துக்கொண்டு அதே மாதிரி தொட்டுத் திருவாராதனை பண்ணுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளக் கூடாது. சாளக்ராமத்தை ஸ்த்ரீகள் மானசீகமாக அம்சை பண்ணி பூஜை பண்ணலாம். சாளக்கிராம மூர்த்தி இருக்கக்கூடிய பெட்டியைச் சுற்றி துடைத்து, கோலம் போட்டு, சுற்றிவர புஷ்பத்தால் அலங்காரம் பண்ணி , விளக்கு ஏற்றி வைக்கலாம். மற்றபடி அதைத் தொட்டு திருவாராதனம் பண்னுவது என்பது ஸ்த்ரீகள் பண்ணக்கூடாது.
ரஜஸ்வலை காலங்களில் உபன்யாசங்கள், நாமசங்கீர்த்தனங்கள் கேட்கலாமா? டிஜிட்டல் க்ரந்தங்களை வாசிக்கலாமா?
Vidwan’s reply:
ரஜஸ்வலை காலங்களில் உபன்யாசங்கள், நாமசங்கீர்த்தனங்கள், டிஜிட்டல் க்ரந்தங்கள் இவற்றை எல்லாம் பார்க்கவோ, கேட்கவோ, வாசிக்கவோ கூடாது. அது வழக்கத்தில் இல்லை. பாக்கி எல்லாக் காலங்களும் இருக்கும் பொழுது அந்தச் சமயங்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த மூன்று நாட்களில்தான் அதை வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற அவசியமில்லை. அதனால் அந்தச் சமயத்தை தவிர்த்து மற்றச் சமயங்களில் எல்லா விஷயங்களிலும் ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.
ஸ்த்ரீகள் ரஜஸ்வலை காலத்தில் ஸ்லோகங்களைச் சொல்லலாமா? அப்படிச் சொல்வதாக இருப்பின் எந்தெந்த ஸ்லோகங்களை சேவிக்கலாம்? நன்றி தாஸன்
Vidwan’s reply:
ரஜஸ்வலை காலத்தில் ஸ்லோகங்கள் சொல்லக்கூடாது. அது வழக்கத்தில் இல்லை. த்வய மந்த்ரத்தை எப்பொழுது வேண்டுமானாலும் அனுஸந்தானம் பண்ணலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது நிஷித்தம் இல்லையே தவிர அதற்காக அதை உட்கார்ந்து கொண்டு அனுஸந்தானம் பண்ணுவது என்பது உத்தம கல்பம் இல்லை.
ஆபத்து காலத்தில் சொல்லலாம் , அதைப் பற்றி ஒன்றும் இல்லை. அதற்காக அந்தச் சமயத்தில் தான் த்வயம் சொல்ல வேண்டும் என்பது கிடையாது. அந்தச் சமயத்தில் நிஷேதிக்கப்படவில்லை என்றாலும் சொல்வது உத்தமகல்பம் இல்லை.
நமது ஸம்ப்ரதாயத்தில் பெண்கள் கேசத்தை மற்றும் புருவங்களைத் திருத்திக் கொள்வது அனுமதிக்கப்படுகிறதா என்று அடியேன் புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
Vidwan’s reply:
நமது ஸம்ப்ரதாயத்தில் பெண்கள் கேசத்தை மற்றும் புருவங்களைத் திருத்திக் கொள்ளக்கூடாது. அதற்கு மேல் இந்தக் கால வழக்கத்தில் அப்படி எல்லாம் பண்ணிக்கொண்டிருக்கிறார்களே என்று கேள்விகேட்டால் அவரவருடைய கர்மவினைப்பயன் என்றுதான் சொல்லணும்.