ஸ்ருஷ்டியின் போது 5 ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்கள் என அனைத்தும் படைக்கப்பட்டது என பாகவதத்தில் உள்ளது. ஸ்ருஷ்டிக்கு முன் இந்திரன் என்பவன் இருந்தாரா? அல்லது அவரின் கர்மாவால் இந்திரன் என்று வேறுபடுகிறாரா? இதை எப்படிப் புரிந்துக்கொள்வது.
Vidwan’s reply:
இந்தக் கேள்வியில் இரண்டு விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திரியங்கள் என்றால் என்ன, இந்திரன் என்பவர் யார் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திரியங்கள் என்பது அசேதனங்கள். எம்பெருமான் ஸ்ருஷ்டி பண்ணும்பொழுது இந்த மூலப்ரக்ருதி என்பது, பல விதமான விகாசங்களை அடைகின்றது. அதிலிருந்து உண்டாவதுதான் இந்திரியங்கள். அதில் 5 ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள் என்று உண்டு.
கர்மேந்திரியங்கள் நமக்கு கர்மாக்களைச் செய்ய உதவக்கூடியவைகள். பாத, பாணி, பாயு, வாக், உபஸ்தம் என்று 5 கர்மேந்திரியங்கள்.
அதே போலே ஞானேந்திரியங்கள் நமக்கு உணர்த்தக்கூடிய இந்திரியங்கள். எதனால் நாம் ஒருவிதமான ஞானத்தை அறிகின்றோமோ அவைகள் ஞானேந்திரியங்கள். கண், காது, மூக்கு, நாக்கு, த்வக்கு என்று 5 ஞானேந்திரியங்கள். இந்த இந்திரியங்கள் எல்லாம் அசேதன கோஷ்டியை சேர்ந்தவைகள்.
இவற்றை எல்லாம் ஸ்ருஷ்டி பண்ணி முடித்தபின் எம்பெருமான் ஜீவர்களுக்கு ஶரீரத்தை கொடுக்க ஆரம்பிக்கின்றான். ஒரு ஜீவனுடைய ஶரீரமானது அசேதனத்தால் செய்யப்படுகிறது. அந்த ஜீவகோடியை சேர்ந்த ஒருவன் தான் இந்திரன். அவன் பிற்காலத்தில் ப்ரம்மாவால் ஸ்ருஷ்டிக்கப்படுகிறான். எம்பெருமான் அசேதனாதி ஸ்ருஷ்டிகளை ஓரளவுக்குச் செய்த பின் ப்ரம்மதேவனை ஸ்ருஷ்டித்து அதற்குமேல் ஸ்ருஷ்டியைத் தொடர்ந்து பண்ணச் சொல்கிறார். அந்த ஸ்ருஷ்டியில் வரும் ஒருவன் தான் இந்திரனாக ஆகின்றான். இந்திரப்பதவிக்கு ஒருவன் வருவதற்கு அவன் செய்த புண்ணியங்கள் என்பனபோல் பல காரணங்கள் இருக்கின்றன என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்திரியங்கள் என்பது அசேதனம், இந்திரன் என்பவன் ஒரு ஜீவன்.
பெருமாள் சகல விஷயங்களையும் தன் ஆத்ம ஸ்வரூபத்தால் க்ரஹிக்கின்றாரா அல்லது நம் போன்றே தர்ம்பூதஞானத்தால் க்ரஹிக்கின்றாரா?
Vidwan’s reply:
பெருமாள் சகல விஷயங்களையும் தன் ஸ்வரூபத்தாலேயும் தரிக்கிறான், சங்கல்பத்தாலேயும் தரிக்கிறான். சில விஷயங்களை நேரடியாக ஸ்வரூபத்தால் தரிப்பான். சில விஷயங்களை சங்கல்பத்தால் தரிப்பான்.
உதாஹரணத்திற்கு நக்ஷத்ரங்கள், க்ரஹங்கள் எல்லாம் அவ்வவ்விடத்திலே இருக்க வேண்டும், கடல் எல்லையை மீறாமல் இருக்க வேண்டும் . இவை எல்லாம் சங்கல்பேண தாரகத்வம். சங்கல்பத்தினால் தரிக்கிறான் எம்பெருமான். அதனால் இரண்டு விதமான தாரகங்களும் உண்டு என்று ஸ்வாமி தேஶிகன் ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயசாரத்தில் சொல்லியிருக்கிறார்.