காம க்ரோதங்களை வென்று எப்போதும் எம்பெருமான் சிந்தனையோடே இருக்க வழி என்ன?
Vidwan’s reply:
காம க்ரோதங்ளை வெல்வதற்கு மனதை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும். மனதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாயிற்று என்று அர்ஜுனன் கேள்வி கேட்டதற்கு கிருஷ்ணன் கஷ்டமே, அப்யாசத்தினாலும் வைராக்கியத்தினாலும் அதைச் சாதிக்க முடியும் என்ற பதில் கூறியிருக்கிறார். அதனால் முயற்சித்துக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.
பெருமாளிடத்தில் நாம் ஈடுபாட்டை அதிகரித்து கொள்ளவேண்டும். அதாவது பெருமாள் கைங்கர்யம், காலக்ஷேபம், அனுஷ்டானம் போன்றவற்றில் ஈடுபடவேண்டும். இப்படி இது அதிகரிக்க அதிகரிக்க வெளி விஷயங்களில் உள்ள காம க்ரோதங்கள் குறையும். இதை ஸ்ரீமத் பகவத்கீதையில் கண்ணனே சொல்லியிருக்கிறான்.
அடியேனின் தாயார் 44ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் மூலம் பரஸமர்ப்பணம் செய்தவர். அவர் சில நாட்கள் முன்பு ஆசார்யன் திருவடி அடைந்துவிட்டார். அடியேன் ப்ரக்ருதம் ஸ்ரீமத் அழகியசிங்கரிடம் பரந்யாஸம் பெற்றுள்ளேன். அடியேனின் வருத்தம் மற்றும் கேள்வியானது, என் தாயாரிடம் தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த அபசாரங்களுக்கு என்ன ப்ராயஶ்சித்தம் செய்ய வேண்டும்? அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிவிக்க வேண்டுகிறேன். அவர்களுக்குக் கட்டாயம் பித்ரு கார்யங்களைச் சரியாக செய்வேன்.
Vidwan’s reply:
எந்த ஒரு தாயாரும் என்ன ஒரு அபசாரப்பட்டாலும் கூட தன்னுடைய குழந்தை கஷ்டப்படட்டும், கெட்டுப் போக வேண்டும் என்று நினைக்கவே மாட்டாள். அதனால் பண்ணிய அபச்சாரங்களுக்கு அவர் இருக்கும் பொழுதே ப்ரார்த்தனை பண்ணிக் கொண்டிருக்கலாம். இப்பொழுது பண்ணவேண்டும் என்றால் சர்வ லோக மாதாவான தாயாருடைய சன்னதிக்குச் சென்று தான் பண்ணிய அபசாரங்களை ஸ்வயமே விஞ்ஞாபித்துக் கொண்டு சேவித்து அபராத க்ஷமாபணம் பண்ணிக் கொள்ளலாம்.
பெண்ணின் கல்யாணத்திற்கு எத்தனை நாள்களுக்கு முன்பு வரை பெண்ணின் தகப்பனார் ஶ்ராத்ததிற்குச் சுவாமிகள் ஆக இருக்கலாம்.
Vidwan’s reply:
பொதுவாக எந்தச் சுபகார்யம் நடக்கும் பொழுதும் அந்தப் பத்திரிக்கை எழுதப்பட்டு விட்டால் அதன்பின் இதர நிமந்த்ரத்திற்கு இருக்கின்ற வழக்கம் இல்லை. பத்திரிக்கை எழுதுவதே கணக்கு என்று வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தர்ப்பண நாட்களில் பொங்கல் (பலகாரமாக) சாப்பிடலாமா?
Vidwan’s reply:
பொங்கல் என்பது அன்னத்தினாலே செய்யப்படுவதால் அதைப் பலகாரமாக ஸ்வீகரிக்கும் வழக்கமில்லை.
ஏகாதசி விரதம் இருக்கும் தினம் பெருமாளின் திருத்துழாயை உட்கொள்ளலாமா?
Vidwan’s reply:
ஏகாதசி விரத தினத்தில் திருத்துழாயை உட்கொள்ளும் வழக்கமில்லை.
பத்து நாள் பங்காளிகள் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்? அதேபோல் 3 பங்காளிகள் யார் , தாயாதிகள் யார்? என்று விளக்கப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
தாயாதிகள் என்றால் சொத்தைப் பங்குகொள்பவர்கள் என்று அர்த்தம். அதாவது ஒரு அப்பாவிற்கு 2 அல்லது 4 புத்திரர்கள் இருந்தால், தந்தையாரின் சொத்தை புத்திரர்கள் அனைவரும் பங்கிட்டுக்கொள்வார்கள். தாயத்தை அதாவது சொத்தை பங்குப்பொட்டுக்கொள்வதால் பங்காளிகள் என்று தமிழில் சொல்கிறோம்.
இப்படியாக ஒரு அப்பா அவருக்கு இரண்டு புத்திரர்கள், இவர்கள் இரண்டாம் தலைமுறை. பின் இந்தப் புத்திரர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு இரண்டு புத்திரர்கள் என்றால், அவர்கள் மூன்றாம் தலைமுறை. இப்படியாக ஏழு தலைமுறை வரை உள்ளவர்கள் 10 நாள் பங்காளிகள், எட்டாம் தலைமுறையிலிருந்து 14 தலைமுறை வரை உள்ளவர்கள் 3 நாள் தாயாதிகள்.
சில க்ருஹங்களில் 12 மாதங்களும் தர்ப்பணம் செய்கிறார்கள்.அஷ்டகா.அன்வஷ்டகா தர்ப்பணமும் செய்கிறார்கள்.சில க்ரஹங்களில் 4மாத தர்ப்பணம் மட்டுமே கடைபிடிக்கிறார்கள்.கேட்டால் எங்காத்துப் பெரியவா அனுஷ்டித்து வந்தது என்கிறார்கள். குழப்பத்தைத் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
12 மாத ஸங்க்ரமணங்களிலும் தர்ப்பணம் அனுஷ்டிப்பது உத்தம கல்பம். நான்கு மாதங்களையாவது அனுஷ்டிப்பது மத்யம கல்பம். அவரவர் சௌகர்யப்படி அனுஷ்டிக்கிறார்கள் தவறொன்றுமில்லை.
தனுர் மாதம் தவிர மற்ற எந்த மாதத்தில் சூர்யோதயத்திற்கு முன் திருவாராதனைச் செய்யலாம்? சில சமயம் பிம்மாலையே கோவிலுக்கோ அல்லது வெளியூருக்கோ செல்ல நேர்ந்தால் எப்போது திருவாராதனம் செய்யவேண்டும்? அதேபோல் அந்தச் சந்தர்ப்பங்களில் எப்போது சந்தியாவந்தனம் செய்யவேண்டும்?
Vidwan’s reply:
தனுர் மாதத்தில் மாத்திரமே சூர்யோதயத்திற்கு முன்பு திருவாராதனம் செய்ய வேண்டும். மற்ற மாதங்களில் க்ரஹண காலமாகயிருந்தால் திருவாராதனம் செய்யலாம். ஏனைய சமயங்களில் சூர்யோதயம் ஆகும் நேரம் சந்தியாவந்தனங்களைச் செய்துவிட்டுதான் திருவாராதனம் செய்யும் வழக்கம். ஒருவேளை வெளியே செல்லவேண்டுமானால் சூர்யோதயத்திற்கு முன் அர்க்யம் விட்டு உதயத்திற்கு உபஸ்தானம் பண்ணி, அதற்குப்பின் வேண்டுமானால் மாத்யானிகம் பண்ணி உடனே திருவாராதனம் பண்ணலாம். ரொம்ப அல்ப துவாதசியாக இருந்ததானால் சூர்யோதயத்திற்கு முன் திருவாராதனம் பண்ணலாம்.
“1.சாளக்கிராம திருவாராதனத்தின் பொழுது திதி,வாரம், நட்ச்சத்திரம் சொல்லி சங்கல்பம் செய்ய வேண்டுமா.?
2.தனுர் மாத ஆராதனத்திற்கு முன்பே ப்ராத சந்தியாவந்தனம் எப்போது செய்ய வேண்டும்?”
Vidwan’s reply:
1.சாளக்கிராம திருவாராதனத்தின் பொழுது திதி,வாரம்,நக்ஷத்திரங்கள் சொல்லி சங்கல்பித்துக்கொள்ளும் வழக்கம் உண்டு.
2. சூர்யோதயத்திற்கு முன்பு தனுர்மாத ஆராதனம் செய்தபின் சந்த்யாவந்தனம் செய்யவேண்டும். சூர்யோதயம் ஆகிவிட்டால் சந்த்யாவந்தனம் செய்தபிறகு தனுர்மாத ஆராதனம் செய்யவேண்டும்.
ஏகாதசி அன்று 2 விரதங்கள் அனுஷ்டிக்குமாறு ப்ரமாணங்கள் கூறுகின்றன. ஒன்று, நிர்ஜலமாக இருப்பது. மற்றொன்று, ஜாகரண விரதம். ஜாக்ரண விரதம் நம் ஸம்பிரதாயத்தில் அனுஷ்டிப்பது உண்டா? இதைப் பற்றி நம் ஆசாரியார்கள் வித்வான்கள் கருத்து என்ன என்று சாதிக்குமாறு பிரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
ஜாகரண விரதம் நம்முடைய ஸம்ப்ரதாயத்தில் அவசியம் வேண்டியதுதான், அனுஷ்டிப்பது உத்தமம். சக்தியிருந்தால் அவசியம் அனுஷ்டிக்கலாம்.