மாத்யாஹ்நிக ஸ்நானம் பற்றிய சில சந்தேகங்கள்:
1. பெருமாள் சேவிக்க கோவிலுக்குச் சென்று வந்தபின் மாத்யாஹ்நிக ஸ்நானம் பண்ணலாமா? (உ.தா தனுர் மாத காலத்தில் பிம்மாலையே பெருமாள் சேவிக்க போகும்படி இருக்கும்)
2. மார்கழி மாதத்தில் சாப மாச திருவாராதனம் பிம்மாலையே செய்கிறோம். அந்தத் திருவாராதனம் செய்தபின் மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்துவிட்டு இஜ்யாராதனம் பண்ணி பெருமாளுக்குத் தளிகை அம்சை பண்ணலாமா?
3. ஸங்க்ரமண புண்யகாலத்தில் பிம்மாலை தர்ப்பணம் பண்ணும்படி வந்தால், மாத்யாஹ்நிக ஸ்நானம் மற்றும் இஜ்யாராதனத்தை மத்யானம் பண்ணலாமா?
4. அப்யங்க ஸ்நானம் (எண்ணெய் தேய்த்து தீர்த்தமாடுதல்) என்பது ப்ராத ஸ்நானம் செய்தபிறகுதான் செய்யவேண்டும் என்று தர்மஶாஸ்த்ரம் சொல்கிறது. அப்படியென்றால், தீபாவளி பண்டிகையன்று ப்ராத ஸ்நானம் மற்றும் ப்ராத ஸந்தியாவந்தனம் (பிம்மாலையே)செய்துவிட்ட பின்னர்தான் தலைக்குத் தீர்த்தமாட வேண்டுமா?
5. தர்பபணம் மற்றும் மாத்யாஹ்நிகம்,பெருமாள் திருவாராதனம் செய்த பிறகுதான் செய்ய வேண்டுமா?
Vidwan’s reply:
பெருமாள் சேவிக்க கோவிலுக்குச் சென்று வந்தபின் மாத்யாஹ்நிக ஸ்நானம் பண்ணலாம். பொதுவாக கோவிலுக்குச் சென்று வந்தபின் மேலே பட்டுவிட்டது என்று ஸ்நானம் பண்ணக்கூடாது அது அபசாரம். ஆனால் மாத்யாஹ்நிக ஸ்நானம் என்பது நித்யகர்மா என்பதாலும், அதற்கென்று தனியாகச் சங்கல்பம் (கர்மன்யதா சித்யர்த்தம் மாத்யாஹ்நிக ஸ்நானம் அஹம் கரிஷ்யே – என்ற சங்கல்பம்) உண்டு என்பதாலும், நித்யபடி மாத்யாஹ்நிகம் பண்ணுபவர்களாக இருந்தால் கோவிலுக்குச் சென்று வந்தபின் மாத்யாஹ்நிக ஸ்நானம் பண்ணலாம்.
மார்கழி மாதத்திலும் மேல் சொன்னதுபோல் தனுர்மாத திருவாராதனம் செய்துவிட்ட பின் மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்துவிட்டு அதன்பின் இஜ்யாராதனம் பண்ணி பெருமாளுக்குத் தளிகை அம்சை பண்ணலாம்.
ஸங்க்ரமண புண்யகாலத்தில் பிம்மாலை தர்ப்பணம் பண்ணும்படி வந்தால், தர்ப்பணம் பிம்மாலை பண்ணியபின் மத்யானம் மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்து மாத்யாஹ்நிகமும் இஜ்யாராதனமும் பண்ணலாம்.
அப்யங்க ஸ்நானம் என்பது ப்ராதஸ்நானம் செய்தபிறகு சந்தியாவந்தனமெல்லாம் பண்ணிவிட்டு 6 நாழிகைக்குப் பிறகுதான் பண்ணவேண்டும் என்று இருக்கிறது. அதற்கு முன் பண்ணக்கூடாது. ஆனால் தீபாவளியன்று விசேஷ விதி உண்டு, சூர்யோதயத்திற்கு முன்னர் அப்யங்க ஸ்நானம் பண்ணவேண்டும் என்றும், அப்படிச் செய்வது மிகவும் விசேஷம் என்று தர்மஸாஸ்திரங்களிலும் சொல்லியிருக்கிறது. மேலும் அது பகவான் க்ருஷ்ணனின் நியமனப்படி நடக்கக்கூடியது என்று யாதாவாப்யுதயத்தில் ஸ்வாமி சாதித்திருக்கிறார். ஆகையால் தீபாவளியன்று காலையிலே அப்யங்க ஸ்நானம் பண்ணிவிடனும் அதற்குப் பிறகுதான் சந்தியாவந்தனம் எல்லாம் பண்ணவேண்டும்.
தர்பபணம் மற்றும் மாத்யாஹ்நிகம்,பெருமாள் திருவாராதனம் செய்த பிறகுதான் செய்ய வேண்டுமா என்றால் இல்லை. முதலில் மாத்யாஹ்நிகம், பெருமாள் திருவாராதனம் அதன்பின் தர்ப்பணம் என்பதாக ஸம்ப்ரதாயம்.
குறிப்புகள்:
க்ருஹஸ்தர்களுக்கும், ஸந்யாசிகளுக்கும் நித்யபடி மாத்யாஹ்நிக சங்கல்ப ஸ்நானம் செய்து மாத்யாஹ்நிகம் பண்ணுவதென்பது விசேஷமாகும்.
பெருமாள் திருவாராதனம் செய்ய, தளிகை தயாராக இருக்க வேண்டுமா? தளிகை இன்னும் ஆகவில்லையென்றால் ஆராதனத்தை நடுவில் எங்கு நிறுத்திவிட்டு பின்னர் தொடர் வேண்டும் என்று விளக்கவும்.
Vidwan’s reply:
தளிகை ஆகிக்கொண்டிருக்கிறது என்றால், அலங்கார ஆசனம் அதாவது தூப தீபங்கலெல்லாம் சமர்பித்துவிட்டபின் மந்திர புஷ்பம் சொல்லும் வழக்கம். மந்திர புஷ்பம் ஆனபின் நமக்குத் தெரிந்த ஶ்லோகங்கள்/பாசுரங்கள் எல்லாம் தளிகை ஆகும்வரை சொல்லிக்கொண்டிருக்கலாம். அதாவது வேறு கார்யங்களுக்குப் போகாமல் பெருமாளுக்குச் சம்பந்தப்பட்ட கார்யங்கள், கைங்கர்யங்கள் நாம் பண்ணிக்கொண்டு இருக்கலாம். தளிகை ஆனபின் தொடர்ந்து திருவாராதனம் பண்ணலாம்.
சங்கோஷ்டீ 2022, T20 யில் பழவேரி ஸ்ரீ உ வே லக்ஷ்மீந்ருஸிம்ஹாசார்யார் (பாலாஜி) ஸ்வாமி, ஸ்ரீ கோழியாலம் ஸ்வாமியால் 8 நிமிடத்தில் திருவாராதனம் செய்வது எப்படி என்று குறிப்பு வெளியிட்டுள்ளார் என்று சாதித்தார். அதைப் பற்றி விரிவாக/அந்த நூல் எங்கு கிடைக்கும் எனத் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
லகு திருவாராதனம் பற்றிய நூல் எங்கே கிடைக்கும் என்று பார்த்து தெரியப்படுத்துகிறோம்.
ஏகாதசி அன்று ஒரு ப்ரபன்னன் ப்ரசாத உபயம் பண்ணலாமா?
Vidwan’s reply:
ஏகாதசி அன்று ஒரு ப்ரபன்னன் ப்ரசாத உபயம் தாராளமாகப் பண்ணலாம் ஆனால் அதை நாம் சாப்பிடக்கூடாது. பெருமாளுக்கு ஏகாதசியானாலும் சரி எதுவானாலும் சரி தினமுமே ப்ரசாதம் இருந்தால்தான் விசேஷம். ஏகாதசி அன்று நாம் ஏதாவது உத்ஸவம் பண்ணுகிறோம் என்றால், அந்த உத்ஸவத்திற்காக விசேஷமான தளிகை பண்ணாலும் நித்யபடி தளிகையை விடக்கூடாது அதுவும் சேர்த்துதான் பண்ணவேண்டும். அதனால்தான் அதற்கு உபயம் என்று பெயர், நித்யபடி ப்ரசாதத்துடன் கூட விசேஷ ப்ரசாதம். இரண்டும் கலந்திருக்கின்றபடியால்தான் அதற்கு உபயம் என்று பெயர். இரண்டையும் தளிகை பண்ணலாம். ஆனால் ஏகாதசியன்று ப்ரசாதத்தை நாம் உட்கொள்ளக்கூடாது.
பர்த்தாவை இழந்த பத்னி வருஷாப்திகம் முடியும் வரை அந்த ஒரு வருஷ காலத்தில் ஸ்ரீரங்கம் முதலான திவ்ய தேசங்கள் சென்று பெருமாளையும் உத்ஸவங்களையும் சேவிக்கலாமா? ஆசார்யனனை நேரில் சென்று சேவிக்கலாமா என்ன வழக்கம் என்று சொல்ல ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
பர்தாவை இழந்தவர் பொதுவாக அந்த ஒரு வருஷ காலத்திற்கு தீர்த்தயாத்திரை போகக்கூடாது என்றிருக்கிறது. ஆகையால் அந்தச் சமயம் திவ்யதேசங்கள் போய் உத்ஸவங்கள் சேவிக்கவேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது. அதேபோல் ஆசார்யனை நேரில் சென்று சேவிக்கவேண்டிய அவசியமில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு ஏதாவது ப்ரமேயம் வந்தால் அவரைச் சேவித்ததனால் தவறொன்றுமில்லை.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ரத ஸப்தமியன்று, ஸப்த அர்க ஸ்நானம் மற்றும் பீஷ்ம தர்ப்பணம் செய்ய வேண்டுமா? ஸ்த்ரீகள் தர்பைப்புல், பவித்ரம் மற்றும் பூணூலைத் தொடலாமா?
Vidwan’s reply:
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ரத ஸப்தமியன்று, பீஷ்ம தர்ப்பணம் முதலான தர்ப்பணங்கள் எதுவும் பண்ணவேண்டிய அவசியமில்லை. ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் பெற்றுக்கொண்டவர்கள் காம்யகர்மாக்கள் எதுவும் பண்ணவேண்டிடாம்.
ஸ்த்ரீகள் தர்பைப்புல், பவித்ரம் மற்றும் பூணூலைத் தொடக்கூடாது.
இந்தக் கேள்வி ஜோதிடம் சம்பந்தமானது இல்லை என நினைக்கிறேன். நைத்ருவ காஶ்யப கோத்ரமும் காஶ்யப கோத்திரமும் ஒரே பிரிவா அல்லது வேறு வேறா. இரண்டு பேரும் சம்மந்தம் செய்து கொள்ளளாமா?
Vidwan’s reply:
நைத்ருவ காஶ்யப கோத்ரம், காஷ்யப கோத்ரம் இவையிரண்டும் பெயரால் மட்டுமே வேறுபட்டவை. இவையிரண்டிற்கும் ப்ரவரம் ஒன்றுதான். காஶ்யப, ஆவத்ஸார, நைத்ருவ த்ரயார்ஷேய என்பதாகவே ப்ரவரம். காஶ்யபர், ஆவத்ஸாரர், நைத்ருவர் இந்த மூன்று ரிஷிகள். அதனால் இந்த இரண்டு கோக்த்ரத்தில் இருப்பவர்கள் பரஸ்பரம் விவாஹம் செய்வது கூடாதுதான்.
ஒருவர் எந்தெந்த மாதத்திலும், எந்தெந்த நாட்களிலும் வபனம் (க்ஷௌரம்) செய்துகொள்ளலாம் மற்றும் செய்துகொள்ளக்கூடாது என்று தெரியப்படுத்தவும். மேலும் க்ஷௌரம் செய்யும் நாளில் என்ன கர்மங்கள் செய்யவேண்டும் என்று விளக்க வேண்டுகிறேன்.
Vidwan’s reply:
இக்கேள்வியின் முதல் பகுதிக்கான விடை “சுபக்ருது – சித்திரை மாத வெளியீட்டில்” காணவும் (கேள்வி எண்: Q28CHIT21006).
க்ஷௌரம் செய்யப்போகும் தினத்தில், காலையில் தீர்த்தமாடி சந்தியாவந்தனம் பண்ணிவிட்டு அதன்பின் க்ஷௌரம் பண்ணிவிட்டு. “க்ஷௌர சுத்யர்த்தம்” என்று சங்கல்பம் செய்து மீண்டும் ஸ்நானம் பண்ணவேண்டும். ஷௌரம் பண்ணும்சமயம் பூணூல் அசுத்தமாகியிருக்கும், ஆகையால் யக்ஞோபவீதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆஹாரத்திற்கு முன்னாடியே க்ஷௌரம் செய்யவேண்டும் என்பது நாம் அறிந்த ஒன்றே.
திருக்கோவிலின் வெளியில் இருக்கும் கடைகளிலிருந்து திருத்துழாய் வாங்கி பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கின்றோம். அந்தப் பெருமாளின் திருத்துழாயை ஆத்துப் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா? குறிப்பாக என்றெல்லாம் திருத்துழாய் பறிக்கக்கூடாது என்றிருக்கிறதோ அன்றைய தினத்தில் அவற்றைச் சாற்றலாமா?
Vidwan’s reply:
திருத்துழாய் பறிக்கக்கூடாத நாட்களில்கூட நாம் கடைகளில் வாங்கி ஸமர்ப்பிப்பது என்பது அத்தனை ஸ்வாரஸ்யமில்லை. என்றைக்கெல்லாம் நாம் திருத்துழாயை க்ரஹிக்கலாமோ அன்றே க்ரஹித்து வைத்துக்கொண்டு இரண்டு மூன்று நாட்கள் உபயோகப்படுத்தலாம் என்றும், வாடிவிட்டாலும் பரவாயில்லை திருத்துழாய்க்கு வாசம் போகாது என்றும் சொல்லியிருக்கு. மேலும் கடையில் வாங்கி சமர்பிப்பது உத்தம கல்பமில்லை.
அந்தப் பெருமாளுக்குச் சமர்பித்ததை மீண்டும் அவருக்கே சமர்பிக்கலாம் ஆனால் வேறு பெருமாளுக்குச் சமர்பிப்பதைப் பற்றி தெளிவாகக் கூறப்படவில்லை. ஆகையால் கோவிலில் கொடுத்தது, கடையில் வாங்குவது என்பதைவிட முன்னமே நாம் க்ரஹித்துவைத்ததை சில நாட்கள் தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
துவாதசியன்று அகத்தில் இருக்கும் ஆசார்யன் பாதுகைக்கு என்ன செய்யவேண்டும்?
Vidwan’s reply:
துவாதசியன்று அகத்தில் இருக்கும் ஆசார்யன் பாதுகைக்கு பாதுகாராதனம் பண்ணவேண்டும். அதாவது ப்ராணாயாமம் பண்ணி, இந்த ஆசார்யனுக்குப் பாதுகாராதனம் பண்ணுகிறேன் என்று சங்கல்பம் செய்துகொண்டு பாதுகைக்குத் திருமஞ்சனம் பண்ணவேண்டும். அந்த ஸ்ரீபாத தீர்த்தம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த ஸ்ரீபாதுகைக்கு அர்க்ய பாத்யங்கள் எல்லாம் சமர்பிக்கவேண்டும். புஷ்பம், சந்தனம், பழம் எல்லாம் சமர்பிக்கவேண்டும், தனியனைச் சேவிக்கவேண்டும். ஸ்ரீபாத தீர்த்தம் வாங்கிக்கொள்ள வேண்டும்.
பாகவத அபசாரம் என்பது ஸ்ரீ வைஷ்ணவரல்லாத பிற சந்யாசிகளுக்கும் பொருந்துமா? Vidwan’s reply:
பாகவத அபசாரம் என்றால் பகவத் பக்தர்களிடத்தில், பகவானுக்கு பக்தர்காளாக இருப்பவர்களிடத்தில் நாம் படும் அபசாரம்தான் பாகவத அபசாரமாகும். ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லாதவர்களிடத்தில் நாம் படும் அபசாரத்திற்கு பாகவத அபசாரம் என்ற பெயர் வராது. இருப்பினும் பொதுவாகவே நாம் எந்த மனிதர்களிடத்திலும் தோஷத்தையும் பண்ணக்கூடாது என்றிருக்கிறது. அந்த ரீதியில் யாரிடத்திலும் நாம் தவறிழைக்கக்கூடாது, யாருக்கும் கெடுதல் செய்யக்கூடாது ஒதுங்கி வருத்திக்கவேண்டும் என்று சொல்லுவதுண்டு.
மேலும் நமக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லாத படியினால் த்ருண காஷ்டாதிகளைக் கண்டதுபோலே இருக்கவேண்டும். அதாவது மரம், புல் போன்றவற்றைக் கண்டால் இருப்பதுபோல் ஒதுங்கி இருத்தல் வேண்டும்.
பித்ரு சேஷம் (தேவச சாப்பாடு) மீதியிருந்தால் என்ன செய்யவேண்டும்? பசுமாட்டிற்குக் கொடுக்கலாமா? அல்லது அடுத்தநாள் சாப்பிடலாமா?
Vidwan’s reply:
பித்ரு சேஷம் மீதியிருந்தால், பக்ஷணங்கள் எல்லாம் மறுநாள் சாப்பிடலாம். சாதமெல்லாம் பசுமாட்டிற்கு கொடுக்கலாம்.
ஶ்ராத்தத்திற்கு முதல் நாள் பெருமாள் கோயில் பிரசாதம் ஸ்வீகரிகலமா?
Vidwan’s reply:
ஶ்ராத்தத்திற்கு முதல் நாள் ஒருபொழுது ஆனபடியினாலே ஒருவேளை மட்டும்தான் சாப்பிடவேண்டும். மேலும் அகத்திலுள்ள பெருமாளுக்குத் திருவாராதனம் பண்ணி பரிசேஷணம் பண்ணி அந்த ப்ரசாதத்தை மட்டும்தான் சாப்பிடவேண்டும். அன்றைய தினம் தனியாக பெருமாள்ப்ரசாதம் வாங்கி சாப்பிடக்கூடாது. அகத்துப் பெருமாள் ப்ரசாதம் உட்கொள்ளும்போது அந்தச் சாதத்துடன் சேர்த்து சாபிட்டால் அதில் பெரிய தோஷமில்லை.
அன்றைய தினம் பரஅன்னம் கூடாது என்றிருக்கிற படியால், முடிந்த அளவு அகத்துப் பெருமாள் சாதம் சாப்பிட்டால் நல்லதென்று தோன்றுகிறது.
ப்ராஹ்மணர்கள் ஏன் ஆஹாரத்தில் பூண்டு வெங்காயம் சேர்த்து கொள்வதில்லை?
Vidwan’s reply:
ப்ராஹ்மணர்கள் ஸாத்வீகமான ஆஹாரம்தான் சாப்பிடவேண்டும் என்ற நியமம் இருக்கிறது. இந்த நியமங்கள் எல்லாம் ஸ்ரீமத் பகவத் கீதையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. எவையெல்லாம் ஸாத்வீக ஆஹாரம் என்று, எது சாப்பிடவேண்டும் எவை நிஷேதிக்கவேண்டும் என்று ஶாஸ்த்ரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நம் மனதிற்கும், நம் ஆத்மாவிற்கும் பக்தியை, ஞானத்தை வளர்க்கக்கூடியதாகவும், பெருமாளுக்கு நிவேதனம் பண்ண உகந்ததாகவும், தோஷமில்லாததாகவும், அதிகமான கஷ்டம், அதிகமான மணம் (துர்நாற்றம்) இல்லாததாகவும் இருக்கவேண்டும் என்ற நியமங்கள் கூறப்பட்டுள்ளது. அந்த நியமங்களுக்கு உட்பட்டு பல வஸ்துக்கள் நிஷித்தமானவையாக இருக்கிறது அதில்தான் இவை இரண்டும் இருக்கிறது. குறிப்பாக வெங்காயம் சாப்பிடக்கூடாதென்று ஸ்பஷ்டமாகவே இருக்கிறது.
ஆசார்யன் அனுக்ரஹித்த மந்திராக்ஷதை ஒரு பை அளவு சேர்ந்துள்ளது. அவ்வக்ஷதையை கல்யாணம் போன்ற விசேஷத்திற்குப் பயன்படுத்தலாமா? பெருமாள் ப்ரசாதம் பண்ண உபயோகிக்கலாமா? என்று தெளிவிக்கவும்.
Vidwan’s reply:
ஆசார்யன் கொடுத்த மந்த்ராக்ஷதையை தலையில் நித்யமே ஒருமுறை நாம் சேர்த்துக்கொள்ளலாம். மந்த்ராக்ஷதையில் சில மந்திரங்களெல்லாம் சேர்த்திருப்பார்கள் அதனுடன் ஆசார்யன் அனுக்ரஹமும் இருக்கும். ஆகையால் நித்யமே ஒருமுறை சிரசில் சேர்த்துக்கொள்ளலாம். கல்யாணம் போன்ற விசேஷத்தில் சிரசில் சேர்க்கலாம், ஆனால் அது காலில் படக்கூடாது, கால் படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். கல்யாணத்தில் பொதுவாக எல்லாரும் அக்ஷதை இரைப்பது போல் மந்த்ராக்ஷதையை இரைப்பது உசிதமாக இருக்காது. ஆகையால் கல்யாணம் போன்ற விசேஷத்தில் சிறிதளவு எடுத்து நம் சிரசில் சேர்த்துக்கொள்ளலாமே தவிர பெரிய தட்டில் வைத்து இரைப்பது உசிதமில்லை.
அதேபோல் மந்த்ராக்ஷதையைக் கொண்டு பெருமாள் ப்ரசாதம் பண்ணுவதும் உசிதமாக இருக்காது. வேறுவழியே இல்லையென்றால் மட்டும் கால்படாத இடத்தில் சேர்த்துவிடலாம்.
எங்கள் உறவினர் ஒருவர் அகத்தில் நம் பூர்வாசார்யர் (ஸ்ரீ ரங்கநாத யதி – தேம்பரை ஆண்டவன் என்று நினைக்கிறோம்) பாதுகை கிடைக்கப் பெற்றார்கள். வெகுநாட்கள் உபயோகிக்காமல் இருப்பதாகத் தெரிகிறது. அப்பாதுகையை என்ன செய்வது என்று வழிகாட்டவும்.
Vidwan’s reply:
அப்பாதுகை சுத்தமாக இருப்பது மிகவும் முக்கியம். ஆகையால் அந்தப் பாதுகையை நன்றாக அலம்பி திருமஞ்சனம் செய்து, தொடர்ந்து உபயோகப்படுத்தலாம். அதற்கு மேல் மிகவும் சுத்தியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு மடத்தைச் சேர்ந்த சிஷ்யர் வேறொரு மடாதிபதியிடமிருந்து தீர்த்த ப்ரசாதம் ஸ்வீகரிக்கலாமா?
Vidwan’s reply:
ஒரு மடத்தைச் சேர்ந்த சிஷ்யர் வேறொரு மடாதிபதியிடமிருந்து, அதாவது ஸ்ரீவைஷ்ணவ மடாதிபதியாக இருந்தால் தாராளமாக தீர்த்த ப்ரசாதம் ஸ்வீகரிக்கலாம்.
நம் பூர்வர்கள் வழிகாட்டியபடி ஸ்வதர்மானுஷ்டானம் மிகவும் முக்கியம் என்று புரிகிறது. ஒரு அத்வைதீ அல்லது மத்வ ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய ஸம்பந்தம் பெற்றபின் எப்படி அனுஷ்டிக்க வேண்டும்?
Vidwan’s reply:
அவருக்கு ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்யனிடம் ஸமாஶ்ரயணம் ஆகியிருந்தால் அவர் ஸ்ரீவைஷ்ணவர் ஆகிவிடுகிறார் என்று அர்த்தம். அதன்பின் அவர் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்ற வேண்டும். ஸமாஶ்ரயணம் ஆகவில்லை என்றால் தன்னுடைய ஸம்ப்ரதாயப்படி அனைத்தையும் அனுஷ்டானம் பண்ண வேண்டும். ஒரு மரியாதைக்காகவும், ஆசார்யன் என்கின்ற முறையிலேயும் இவரைச் சேவிக்கலாம்.
நாம் ஏன் 4 முறை சேவிக்கின்றோம்? மற்றவர் ஏன் ஒரே ஒருமுறை சேவிக்கின்றனர்?
Vidwan’s reply:
ஸம்ப்ரதாயத்தில் பேதம் இருப்பது நமக்கே தெரிந்த விஷயம். ஸ்வாமி தேஶிகன் சாதித்திருக்கிறார், ஆகமங்களில் நான்கு முறை சேவிக்க வேண்டும் என்று ஸ்பஷ்டமாக சொல்லப்பட்டிருக்கிறது. பெருமாளுக்கு எதுவானாலும் இரட்டைப்படையில் இருக்கவேண்டும். பழம், வெற்றிலை சமர்ப்பித்தால் இரண்டாகச் சமர்ப்பிக்கவேண்டும். அதனால் ப்ரதக்ஷிணம், ப்ரணாமம் இவையெல்லாம் கூட இரண்டு தடவையாகப் பண்ணவேண்டும்.
ஆகமங்களில் பெருமாளுக்கு சமத்வம் என்று ஒன்று இருக்கின்றது. அந்த ரீதியில் அவருக்கு வைஷம்யம் கூடாது, அவர் எல்லோரையும் சமமாக பார்க்கின்றபடியினாலே, எண்களில் சமம் என்றால் இரட்டைப்படை, வைஷம்யம் என்றால் ஒற்றைப்படை. ஆகவே அந்த ரீதியில்தான் நாம் இரட்டைப்படையில் சேவிக்க வேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்லியிருப்பது முதல் காரணம்.
ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் முதலான ஆசார்யர்கள் எல்லாம் அப்படி அனுஷ்டானம் பண்ணி இருப்பதினால் அந்த ரீதியில் நாம் அந்த ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றி பண்ணிக் கொண்டிருக்கிறோம்.
ஏகாதசியன்று ஏகாதசி விரதம் இல்லாதவர்களுக்கு உணவு பரிமாறுவது தவறாகுமா? உ.தா நம் அகத்திற்கு வரும் விருந்தினர்கள் ஏகாதசி விரதம் கடைபிக்கவில்லை என்றால் அவர்களுக்கு அன்னமிடலாமா?
Vidwan’s reply:
ஏகாதசியன்று நாம் ஆஹாரம் சாப்பிடக்கூடாது என்பது மட்டுமில்லை. யாருக்கும் ஆஹாரம் போடவும் கூடாது. ஆஹாரம் போட்டாலே பாவம் என்று சொல்லி இருக்கிறது. அதனால் நமது அகத்திற்கு அதிதிகள் வந்தால்கூட அவர்களுக்குச் சாதம் ப்ரசாதம் போடக்கூடாது.
இன்றைய காலத்தில் மிக குறைந்த அளவே நித்ய ஔபாசனம் செய்கிறார்கள். இருப்பினும் அகத்தில் நடக்கும் உபநயனம், சீமந்தோன்னயனம் முதலிய மங்களகரமான விசேஷங்களுக்கு முன் ஔபாசனம் செய்கின்றார்கள். அந்தச் சமயம் இத்தனை நாட்கள் பண்ணாததற்கு ஏதேனும் ப்ராயஶ்சித்தம் செய்யவேண்டுமா?
Vidwan’s reply:
ஆமாம் கண்டிப்பாக ப்ராயஶ்சித்தம் செய்யவேண்டும். ஔபாசனத்திற்கு முன் அக்னி சந்தானம் பண்ணும்பொழுது அதில் அந்த ப்ராயஶ்சித்தங்கள் எல்லாம் அடங்கி இருக்கின்றன. தக்ஷிணா தானம், அரிசி தானம், முதலான ப்ராயஶ்சித்தங்கள், அதற்கான ஹோமங்கள் எல்லாமே இருக்கின்றன. வாத்யார்கள் அதைப் பண்ணி வைப்பார்கள்.
ஸ்ரீ உ வே கண்ணன் ஸ்வாமி அவரது வேத வைபவம் உபந்யாஸத் தொடரில் ஒருவர் பேருந்து போன்ற போக்குவரத்தில் பயனித்துவிட்டுவந்தால் தீர்த்தமாடிவிட்டுதான் வேத கோஷ்டீக்குப் போகவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இன்றைய காலத்தில் வேத பாரயணத்திற்குச் செலவதற்கே பொது போக்குவரத்துகளில் பயணிக்கவேண்டியிருக்கிறது. அப்படியிருக்கும் சமயத்தில் என்ன செய்வது?
Vidwan’s reply:
வேத கோஷ்டிக்கோ, பாராயண கோஷ்டிக்கோ, பெருமாள் சேவிக்கவோ ஆசார்யனை சேவிக்கவோ என எதற்கானாலும் சுத்தமாகதான் போகவேண்டும். தீட்டுடன் வந்து கலந்து கொள்ளக்கூடாது என்று இருக்கிறது. அதனால் அந்த ரீதியில் சொல்லியிருக்கிறார்.
பொது போக்குவரத்துகளில் பயணித்துவிட்டு செல்வதென்பது சரியில்லைதான். ஆனால் வேறு வழியில்லாதபோது, தீர்த்தமாடி விட்டாவது அல்லது மந்த்ர ஸ்நானம் அந்த மாதிரி ஏதாவது பண்ணி விட்டாவது போகலாம்.
1. ஸ்மார்த்த வைஷ்ணவ சம்பிரதாயம் எப்போது துவங்கின? ஆதிசங்கரர் தான் பிராமணர்களை இப்படி வகுத்தாரா?
2. அவரவர் கர்மாபடிதான் அனைத்தும் என்றால் அவன் சம்பிராதயம் விட்டு விலகி மணம் முடிப்பதும் அவனது விதியா? இதனை நம்மால் மாற்ற முடியுமா?
Vidwan’s reply:
ஆதிசங்கரர் வகுத்தார் என்பது கிடையாது. ஏனென்றால் அவருக்கு முன்பே அத்வைத ஸம்ப்ரதாயம் என்று ஒன்று இருந்திருக்கிறது. அதேபோல் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயமும் முன்பே இருந்திருக்கிறது என்று தெரிகிறது. யுகாந்தரங்களில் கலியுகத்திற்கு முன்கூட இந்த ஸம்ப்ரதாயங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் ஆதிசங்கரர் இதை மிகப்பெரிய அளவில் பரப்பி, ஆங்காங்கே மடங்கள் ஸ்தாபனம் செய்து சாதாரண ஜனங்கள் கூட அந்த ஸம்ப்ரதாயத்தை ஆஶ்ரயிக்கும் படியாக பண்ணி இருக்கிறார்.
அதே போல் நமது பகவத் இராமானுஜரும் முன்பே ஸ்ரீ வைஷ்ணவம் இருந்தால்கூட பெரிய அளவில் நிறைய பேர் ஸ்ரீ வைஷ்ணவர்களாக வாழும் படியாக அனுக்ரஹம் பண்ணி உள்ளார்.
எல்லாமே ஒரு விதிப்படி நடக்கிறது என்கின்ற படியினாலே, அவரவர் தலை எழுத்தின்படி நடக்கிறது. இதை மாற்றமுடியும். ஆசார்ய அனுக்ரஹம், பகவத் சங்கல்பம் இதெல்லாம் இருந்தால் மாறும். மாற முடியாது என்பது கிடையாது. அதைப் பற்றி ஶாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. அப்படி மாறிப்போனால்கூட இது அக்ஞாதசுக்ருதம் என்று சிலதெல்லாம் சொல்கிறார்கள். பகவான் ஏதோ ஒரு வழியில் திருத்துவதற்கு ரீதி இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார். உதாஹரணமாக ஆசார்ய கடாக்ஷம் வந்தாலே திருந்துவதற்கான வழி எல்லாம் கிடைக்கலாம்.
தினமும் அகத்தில் குளிப்பதற்கு முன் செய்ய வேண்டிய சங்கல்பம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன். அது போல குளங்களிலும், காவிரி போன்ற ஆறுகளிலும் குளிக்கும் சமயம் செய்யவேண்டிய சங்கல்பம் எது என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன். மேலும் ஸ்த்ரீகளுக்கு உண்டான சங்கல்பம் எது. என்பதையும் தெரிவிக்க பிரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
அன்றைய திதி வார நக்ஷத்ரங்கள் எல்லாம் மஹா சங்கல்பப்படி எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு அன்றைய தினத்தில் அந்த க்ஷேத்திரத்தில் அந்தத் தீர்த்தத்தில் “கர்மண்ய கா சித்தர்த்தம் ப்ராத: ஸ்நானம் அஹம் கரிஷ்யே” என்று சங்கல்பம் பண்ணி ஸ்நானம் பண்ண வேண்டும். அதே மாதிரியாக காவிரி முதலான நதிகளில் குளிக்கும் போது அந்தந்த க்ஷேத்ரத்தின் பெயரைச் சொல்லி அந்தந்த நதி பெயரையும் சொல்லி “கர்மண்ய கா சித்யர்த்தம் ப்ராத: ஸ்நானம் அஹம் கரிஷ்யே” என்று சொல்லாம்.
சிலர் தீர்த்த ஸ்நானம் விசேஷமாக பண்ணவேண்டும் என்று இருக்கிறபடியினால் காவேரி முதலான நதிகளில் தீர்த்த ஸ்தானம் பண்ணும் பொழுது முதலில் “கர்மண்ய கா சித்யர்த்தம் ப்ராத: ஸ்நானம் அஹம் கரிஷ்யே” என்று சொல்லி தீர்த்தமாடி விட்டு, அதற்குப் பின் காவேரி மகாநதியில் நான் ஸ்நானம் பண்ணுகிறேன் என்று தனியாக சங்கல்பம் பண்ணி தீர்த்தமாடுவார்கள்.
ஸ்த்ரீகள் தனியாகச் சங்கல்பம் பண்ணிக்கவேண்டுமென்று அவசியம் இல்லை. ஆனால் விசேஷ தினங்களில் அவர்களுக்கும் இதே மாதிரிதான் சங்கல்பம்.
எங்கள் அகத்துப் பெரியவர்காள் சாளக்கிராம பெருமாள் வைத்து திருவாராதனம் பண்ணியதில்லை. இன்று அடியேன் பண்ண ஆசைப்படுகிறேன். எங்கு சென்று சாளக்கிராம பெருமாளை பெறுவது? எப்படிப் பெருமாளை அகத்திற்கு ஏளப்பண்ணவேண்டும்?
Vidwan’s reply:
சாளக்கிராம பெருமாள் வைத்து திருவாராதனம் பண்ணுவது ரொம்ப விசேஷமானதுதான். சாளக்கிராம க்ஷேத்ரத்தில் பெருமாள் நிறைய கிடைக்கிறார் என்று சொல்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால் பெரியவா யார்கிட்டேயாவது கேளுங்கோ. யாராவது அனுக்ரஹம் பண்ணால் நல்லது. கடைகளில் கிடைப்பதை வாங்கலாமா என்பதை பற்றி யோசித்து சொல்கிறேன்.
அடியேனுக்குத் திருமணமாகியவுடனே ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது. எங்கள் அகத்தில் அன்றெல்லாம் பெரிதாக ஸம்ப்ரதாய அனுஷ்டானங்கள் பின்பற்றியதில்லை. இன்று அடியேன் பரந்யாஸம் செய்ய ஆசைப்படுகிறேன். அச்சமயம் ஆசார்யன் மந்திரோபதேசம் செய்யமாட்டார் என்று கூறுகிறார்கள். அடியேன் எப்படி மந்திரோபதேசம் பெற்றுக்கொள்வது? எப்படி ஜபம் செய்யவேண்டும் என்பதை அறிய என்ன வழி?
Vidwan’s reply:
ஸமாஶ்ரயண காலத்திலேயே மந்த்ர உபதேசம் எல்லாம் ஆகி இருக்கும். அதனால் வேறு யாராவது மகான்கள், நம் அகத்திலோ அல்லது பக்கத்து அகத்திலோ இருக்கும் பெரியவர்களிடம் கேட்டு அந்த மந்த்ரங்களை ஜபம் பண்ணலாம். அதற்குப் பின் ஆசார்யன் பரந்யாஸம் பண்ணி வைப்பார். அதுவே போதும்.
பரந்யாஸ காலத்தில் ஆசார்யன் மந்த்ர உபதேசம் பண்ணி வைக்க மாட்டார். ஆசார்யனிடமே இப்படி விஷயத்தை சொல்லி மந்த்ர உபதேசம் பண்ணி வைக்க விண்ணப்பிக்கலாம். அதில் ஒன்றும் தவறு கிடையாது. அவர் பண்ணி வைப்பார். அதனால் ஆசார்யனிடமோ, அல்லது யாராவது பெரியவாளிடமோ நீங்கள் மந்த்ரோபதேசம் பெற்றுக் கொள்ளலாம்.
ஜபம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் உபதேசம் பண்ணுவார்கள்.
அடியேனுக்கு அஶௌசம் 10 நாட்கள். பாராயண வகுப்பு மற்றும் பிற வகுப்புகளில் பிரபந்தம், பிற ஸ்லோகங்கள் ஸந்தை ஸேவிக்கலாமா?
Vidwan’s reply:
அஶௌசம் காலத்தில் வேண்டும் என்றால் நமக்குள் சில ஶ்லோகங்களை அனுசந்தானம் பண்ணலாம். பாராயணம், சந்தை மற்றும் கோஷ்டியில் சேவிக்கக்கூடாது.
எனக்கு மூத்த தாயாதி பரமபதித்துவிட்டார். தசம தினம் வெள்ளிக்கிழமை வரும் பக்ஷத்தில் வியாழன் அல்லது வெள்ளி என்று ஸர்வாங்க வபனம் செய்யவேண்டும்?
Vidwan’s reply:
தசம தினம் வெள்ளிக்கிழமையன்று வரும் பக்ஷத்தில் அதற்கு முன்தினமே அதாவது வியாழக்கிழமையே க்ஷௌரம் பண்ணிக்க கொள்ள வேண்டும்.
பிறந்தநாள் என்பதை நக்ஷத்திரப்படியும். ஒருவர் பரம்பதித்த தினத்தைத் திதிப்படியும் ஏன் அனுஷ்டிக்கின்றோம்?
Vidwan’s reply:
பிறந்தநாள் என்பதை நக்ஷத்திரப்படி கொண்டாடவேண்டும் என்றும், ஶ்ராத்த தினத்தை ஒருவர் திதி வைத்து கொண்டாட வேண்டும் என்றும் தர்ம ஶாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கின்றது. யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி முதலானவைகளில் ஸ்பஷ்டமாகவே சொல்லி இருக்கிறது . அதனால் அந்த ரீதியில் கொண்டாடுகிறோம். நக்ஷத்திரம் என்பது குறையில்லாதது ந க்ஷரதி என்பதினால் நக்ஷத்திரம் என்கின்ற பெயர். குறை இல்லாமல் நாம் மேன்மேலும் வளரவேண்டும் என்பதற்காக வைத்திருக்கிறார்கள்.
மாதத்தில் திதி ஒன்றுதான். நக்ஷத்திரம் நிறைய குழப்பமாகலாம் என்கின்றதினாலும் இருக்கலாம். ஶ்ராத்த திதியை வைத்து பண்ணவேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்லி இருக்கிறது. அதனால் அனுஷ்டிக்கின்றோம்.
திருவாராதனத்தில் பண்ணும் ஶோஷனம், தாஹனம், ப்லாவனம் என்பதின் முக்கியத்துவம் என்ன?
Vidwan’s reply:
திருவாராதனத்தில் எந்த வஸ்துவை சமர்ப்பித்தாலும் ஶோஷனம், தாஹனம், ப்லாவனம் பண்ணவேண்டும் என்று இருக்கின்றது. அந்த வஸ்துவிற்கு சுத்தி வரவேண்டும் என்பதற்காக அதை நாம் செய்கின்றோம். எந்த ஒரு வஸ்துவிற்கும் சுத்தி என்பது, வாயுவினால் அது உலர்கின்ற படியினால் சுத்தி, அக்னியில் அதை காய்ச்சுகின்ற படியினால் சுத்தி, ஜலத்தில் நனைக்கின்ற படியினால் சுத்தி, என்று மூன்று விதம் உண்டு. பொதுவாக பாத்திரங்கள், பழங்களை நாம் அலம்புகின்றோம் அல்லவா அது போலதான் இதுவும்.
அதனால் நாம் என்ன சமர்ப்பித்தாலுமே இந்த மந்த்ரங்களை கொண்டு, வாயுவைக் கொண்டு உலர்த்துகிறபடியாகவும், அக்னியை கொண்டு தஹிக்கிற படியாகவும், ஜலத்தை கொண்டு நனைக்கிற படியாகவும், எல்லாவற்றிற்கும் அந்தந்த மந்த்ரங்களைச் சொல்லியோ அல்லது திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தைச் சொல்லியோ பண்ணினால் அது சுத்தியாகி பெருமாளுக்குச் சமர்ப்பிப்பதற்கு யோக்யமாக ஆகும்.
ப்ரபத்திக்குப் பின் கடல் தாண்டி போகலாமா?
Vidwan’s reply:
தர்ம ஶாஸ்த்ரத்தின் படி பார்த்தோமேயானால் ப்ரபத்திக்கு முன்பின் என்றெல்லாம் கணக்கு கிடையாது, பொதுவாகவே கடல் தாண்டி போகக்கூடாது என்று ஶாஸ்த்ரம் இருக்கின்றது.
அடியேன் அகத்தில் ஸ்ரீ சுந்தர காண்டம் பாராயணம் செய்து வருகிறேன். இஷ்டகாம்யமான பலன்களை பெற (எ.கா. வேலை கிடைக்க, ரோக நிவர்த்தி பெற, திருமணம் நடக்க) என்ன விதமாக ஸங்கல்பம் செய்துக் கொள்ள வேண்டும்?
Vidwan’s reply:
சுந்தரகாண்டம் பாராயணம் ஆரம்பிக்கும் முன் விஷ்வக்ஸேன ஆராதனம் எல்லாம் பண்ணிவிட்டு மஹாசங்கல்பம் ஒன்று பண்ணிக்கொள்ள வேண்டும்.
பெருமாளுக்குத் திருவாராதனம் எல்லாம் பண்ணி, புஸ்தகத்திற்கு பூஜையெல்லாம் பண்ண வேண்டும். பின் மஹாசங்கல்பம் பண்ணிக்கொள்ள வேண்டும். அதில் எந்தப் பலனை உத்தேசிக்கிறோமோ அதைக் குறிப்பிட்டுச் சொல்லி, அதாவது இந்தப் பலனுக்காக இந்தச் சுந்தரகாண்ட பாராயணம் செய்கிறேன் என்று சங்கல்பம் பண்ணலாம். இதை அந்தந்த வாத்யார்கள் பண்ணி வைப்பார்கள். இவை எல்லாவற்றிற்குமே பகவத் ப்ரீத்யர்தம் அல்லது ஸ்ரீமன் நாராயண ப்ரீத்யர்தம் என்று முக்கியமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அப்படி இல்லாவிட்டால் எந்தப் பலனுக்கு என்பதை பெருமாளிடம் மனதுக்குள் ப்ரார்தித்துக் கொண்டு, வாக்கினால் சங்கல்பம் பண்ணும் பொழுது பகவத் ப்ரீத்யர்தம் அல்லது ஸ்ரீமன் நாராயண ப்ரீத்யர்தம் என்று சொல்லி பண்ணால்கூட போதும் என்று சில பெரியோர்கள் சொல்கிறார்கள்.
1. “சகோதரர்கள் வெவ்வேறு இடங்களில் வசித்தால் ஶ்ராத்தம் ஒன்றாக செய்வது உசிதமா? தனியாகச் செய்வது சரியா?
2. ஒரு முறை தனியாகவோ அல்லது ஹிரண்ய ஶ்ராத்தம் (வெளிநாட்டில் இருக்கிறோம். கொரோனா சமயத்தில் இந்தியா வர முடியவில்லை) செய்தாலோ மறுமுறை ஒன்றாக செய்யலாமா?
Vidwan’s reply:
ஒரே ஊரில் வெவ்வேறு இடத்தில் வசித்து வந்தால் சேர்த்துப் பண்ணலாம். ஆனால் வேறு ஊரில் வெவ்வேறு இடத்தில் இருந்தால் குடும்பம் பிரிந்துவிட்டதாக அர்த்தமாகும். அந்தச் சமயம் தனித்தனியாகப் பண்ணவேண்டும். தகப்பனாருடைய சொத்து விபாகம் ஆகி விட்டால் தனித்தனியாகத்தான் பண்ண வேண்டும்.
சேர்ந்தே பண்ணிக்கொண்டிருக்கும் போது ஒருமுறை தனியாகப் பண்ணும்படி நேர்ந்துவிட்டால் அதற்குப் பிறகு மீண்டும் சேர்ந்து பண்ணக்கூடாது தனியாகத்தான் பண்ணவேண்டும்.
குறிப்புகள்:
தனித்தனியாக பண்ணுவதில் இரண்டு விதம் உள்ளது. ஹோமம் தனித்தனியாகத்தான் பண்ணவேண்டும். ஆனால் தளிகை பண்ணும் பொழுது எல்லா தளிகையும் ஒன்றாகப் பண்ணிவிட்டு ப்ரசாதம், பாயாசம், பருப்பு மாத்திரம் தனித்தனியாகப் பண்ணவேண்டும். மற்றபடி கரியமுதுகள், பக்ஷணங்கள் எல்லாம் ஒன்றாகப் பண்ணலாம். மேல் சொன்ன மூன்றை மாத்திரம் தனியாகப் பண்ணி அந்தந்த ஸ்வாமிகளுக்குத் தனித்தனியாக அமுதுசெய்விக்க வேண்டும் என்று ஒரு வழக்கம்.அவரவர் அகத்து வாத்யார்களை கேட்டால் மேலும் விரிவாகச் சொல்லுவார்கள்.
திருக்கோயில்களில் அங்கப்ரதக்ஷிணம் செய்ய ஸம்ப்ரதாயப்படி அனுமதி உண்டா? ஈரத்துடன் கோவிலுக்குள் சென்று அங்கப்ரதக்ஷிணம் செய்யலாமா (திருமலை போன்ற கோவிலில்)?
Vidwan’s reply:
ஈரத்துடன் கோவிலுக்குள் சென்று அங்கப்ரதக்ஷிணம் செய்வது ப்ரார்த்தனை என்கின்ற ரீதியில் திருமலை முதலான கோயில்களில் வழக்கம் உண்டு. ஆகையால் அதைப் பண்ணலாம்.
ஸ்வாமி தேஶிகனின் ஸ்ரீ ஸூக்தியான ஸ்ரீ ந்யாஸ விம்ஶதி சரணாகதியைப் பற்றி மிக உயர்வாக கூறுகிறது. தென்கலை ஸம்ப்ரதாயத்தில் ஸமாஶ்ரயணம் மட்டும்தானே உள்ளது. பரந்யாஸம் வழக்கத்தில் இல்லையே. ஏன் இந்த வேறுபாடு? தென்கலை ஸம்ப்ரதாயத்தை சேர்ந்தவர்கள் பரந்யாஸம் வாங்கிக் கொள்ளலாமா? அடியேனின் சந்தேகத்தை தீர்க்குமாறு பிரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
தென்னாசார்யர் ஸம்ப்ரதாயத்தில் அடியேனுக்குத் தெரிந்தவரை ஸமாஶ்ரயணம் நடக்கும் பொழுதே கூடவே பரந்யாஸமும் நடக்கிறது. அவர்கள் த்வய மந்த்ரத்தை உபதேசம் பண்ணுகிறார்கள். அதை உச்சாரணம் பண்ணச் சொல்லி சொல்லுகிறார்கள். எம்பெருமானே உபாயம் என்பதாகச் சொல்லுகிறார்கள். த்வய மந்த்ரம் என்பது ஶரணாகதி மந்திரம். ஸமாஶ்ரயணத்தில் முக்கியமாக அஷ்டாக்ஷர உபதேசமும், ஶரணாகதியில் த்வய மந்த்ர உபதேசம் என்பதாக ஒரு வழக்கம் முற்காலத்தில் இருந்திருப்பதாகத் தெரிகிறது. நாம் ஸமாஶ்ரயணத்தின் பொழுது எல்லாவற்றையும் பண்ணுகிறோம்.
அடியேன்கூட சில தென்னாசார்ய பெரியோர்களிடம் கேட்டபோது அவர்களும் அப்படியே சொன்னார்கள். அதாவது ஸமாஶ்ரயண காலத்திலேயே த்வய மந்த்ரத்தை உச்சாரணம் பண்ணுகின்ற படியினால் அது பரந்யாஸம் ஆகிவிட்டதாகத் தான் கணக்கு. ஆகையால் மீண்டும் பரந்யாஸம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்பதைச் சொல்வதற்காகதான் பரந்யாஸம் பண்ணவேண்டாம் என்று சொல்கிறார்கள். முதலியே ஆகிவிடுகிறப்படியால் அப்படிச் சொல்கிறார்கள் என்று அடியேன் புரிந்து கொண்டிருக்கிறேன்.