மஹாப்ரதோஷம் ப்ரதான காலம் – சூர்ய அஸ்தமனத்திற்கு
1.1) முன்பா அல்லது பின்னரா – ப்ரதானம் எது ?
1.2) எத்தனை நாழிகைகள் – முன்பும் பின்பும் (குறைந்த பக்ஷம், கட்டாயம்)
Vidwan’s reply:
மஹாப்ரதோஷ காலம் சூர்ய அஸ்தமனத்திற்கு முன்பா பின்பா என்றால் இரண்டுமே உண்டு.
சூர்ய அஸ்தமனத்திற்கு முன் ஒன்றரை மணி காலம், பின் ஒன்றரை மணி காலம், ஆக மூன்றுமணி நேரம் மஹாப்ரதோஷ காலமாகும்.
மஹாப்ரதோஷ சமயம் விஷ்ணு ஆராதனம் கூடாது – சரியா?
Vidwan’s reply:
மஹாப்ரதோஷ சமயம் விஷ்ணு ஆராதனம் கூடாது.
3) மஹாப்ரதோஷம் சமயம் ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஆராதனம் விதி இருக்க & பொதுவாக மற்ற எல்லாம் (ஶ்லோகம்) நிஷேதமாய் இருக்க
விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லலாமா – இது விஷ்ணுபரமா? ந்ருஸிம்ஹபரமா?(முக்கூர் லக்ஷ்மீ நரஸிம்ஹாச்சார் சுவாமி வ்யாஸம்) ந்ருஸிம்ஹ பர அனுஸந்தாந்தனத்துடன் என்று கொண்டு, சொல்லலாமா ?
ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஸந்நிதியில் / ப்ரதோஷ ஆராதனம் போது ப்ரதோஷ கால விலக்கு என்றில்லாமல் (ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஶ்லோகம், பாசுரம் மட்டும் என்ற) எந்த அநுவாகம், ஶ்லோகம், பாசுரம் வேண்டுமானாலும் ஸேவிக்கலாமா ?
Vidwan’s reply:
ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஆராதனம் விதி இருக்க விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லக்கூடாது. ந்ருஸிம்ஹபர அனுஸந்தாந்தனத்துடன் என்று கொண்டு, சொல்லலாமா என்றால் நாமாக க்ருஹத்திலிருந்து அப்படி அனுசந்தானம் பண்ணிக்கொண்டு சொல்லுவதுதென்பது பெரியோர்கள் வழக்கம் இல்லை. மாறாக ந்ருஸிம்ஹன் பெருமாள் சந்நிதியில் சில சமயம் திருமஞ்சனம், விசேஷ ஆராதனம், பாராயணம் இவையெல்லாம் நடக்கும். அதில் நாம் கலந்துகொள்ளலாம்.
ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஸந்நிதியில் ப்ரதோஷ ஆராதனம் போது பெருமாள் சந்நிதியில் அதற்கென்று வழக்கம் ஒன்றுயிருக்கும். அந்த வழக்கத்தில் என்னென்ன சொல்கிறார்களோ அவற்றையெல்லாம் நாம் அனுசந்தானம் பண்ணலாம் என்று ஆகமத்திலேயே இருக்கின்றது.
மஹாப்ரதோஷம் சமயம், மாஸிக ஶ்ரவண/ திருவோண நக்ஷத்ர ஸேவா காலம் கோஷ்டி
ஸாயம் கால வேளையில் அனுஷ்டிக்கலாமா ?
பாரணை/ ததீயாராதனை குறைந்தது எத்தனை நாழிகைக்கு மேல் (அஸ்தமன பின்பு) செய்யலாம் ?
Vidwan`s reply
மஹாப்ரதோஷ சமயம் நாம் இவையெல்லாம் சொல்லக்கூடாது. அதே சமயம் கோயில்களில் ஶ்ரவணம், விசேஷ ஆஸ்தானம், ஸேவா காலம், சாற்றுமுறை, இவையெல்லாம் இருந்தால், அப்போது பிரதோஷ சமயமாக இருந்தாலும் நாம் அதில் கலந்துகொள்ளலாம்.
அஸ்தமனத்திற்குப் பின் ஒன்றரை மணி மஹாப்ரதோஷ காலம் எப்படிப் பாராயணமெல்லாம் கூடாதோ, அதேபோல் சாப்பிடவும் கூடாது என்று இருக்கின்றது. அதனால் அதற்குப் பின் சாப்பிடலாம் என்பதாகத் தோன்றுகிறது.
பெருமாளுக்குக் கண்ணாடி பாத்திரத்தில் தயிர் தோய்த்து அம்சை பண்ணலாமா?
Vidwan’s reply:
தயிரைக் கண்ணாடி பாத்திரத்தில் தோய்த்தாலும், அம்சை பண்ணும்போது வெள்ளிப் பாத்திரத்தில் பண்ணினால் நல்லது.
புரட்டாசி ஶ்ரவணத்தையொட்டி தேசிக உத்சவம் பத்து நாட்கள் நடைபெறும்.அந்தச் சமயம் அத்யாபக கோஷ்டி பாகவதர்களுக்குத் தினமும் மதியம் ததீயாராதனை பிரசாதம் ஸாதிக்க 1-30-3-30 சென்று விடுவேன். காலையும் மாலையும் கோவிலில் ஆராதனை நடக்கும். தற்போது என்ன குழப்பம் என்றால் அந்த மதிய வேளையில் காலக்ஷேபம் , ஸ்தோத்ரம், திவ்ய ப்ரபந்தம் வகுப்பு இருக்கிறது.அடியேன் என்ன செய்வது?
Vidwan’s reply:
இந்தச் சந்தர்ப்பத்தில் என்ன தோன்றுகிறது என்றால் காலக்ஷேபம், ஸ்தோத்ரம் திவ்ய ப்ரபந்த வகுப்புக்கள், எல்லாம் எப்பொழுதும் நடந்து கொண்டிருக்க கூடியவையாக இருக்கும். புரட்டாசி ஶ்ரவணோத்சவம் என்பது வருடத்தில் பத்து நாட்கள் ஏற்படுவது. அதில் பிரசாதம் சாதிக்கும் கைங்கர்யம் என்பது அந்தப் பத்து நாட்களுக்கே உரியதாக இருக்கின்றபடியால், அதை ஒரு விசேஷ கைங்கர்யமாக நினைத்துக் கொண்டு, அந்தச் சமயத்தில் அதற்கு ப்ராதான்யம் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.
குறிப்புகள்
இந்தக் கேள்வியில் சொல்லப்பட்ட கைங்கர்யங்கள் அதாவது பாகவதர்களுக்குத் ததீயாராதனை பிரசாதம் சாதிப்பதோ அல்லது காலக்ஷேபம், ஸ்தோத்ரம், திவ்யப்ரபந்தம் வகுப்புகளில் போய் கலந்து கொள்வதோ எல்லாமே அனுஞ்யா கைங்கர்யம் தான். விதிக்கப்பட்ட கைங்கர்யங்கள் இல்லை. அதனால் ஒரு கைங்கர்யம் உசத்தி ஒரு கைங்கர்யம் தாழ்த்தி என்பது கிடையாது.
இதுதான் செய்யவேண்டும், இது செய்யக்கூடாது என்கின்ற விதி எதுவுமே கிடையாது. ஏனென்றால் எல்லாமே நாமே விரும்பி ஏற்றுக்கொள்ளும் கைங்கர்யங்கள் தான். எதுவும் விதித்த கைங்கர்யங்கள் இல்லை. பண்ணுவது உசத்தி, பண்ணாமல் இருந்தால் தோஷம் எதுவும் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் அந்தப் பத்து நாட்கள் பிரசாதம் சாதிக்கப்போவது இன்னும் உசிதமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
அடியேன் தாஸன் , என் பையன் USAவில் இருக்கான் அவன் பெண் குழந்தைக்கு 2 வயதாகுகிறது, அவர்கள் இந்தியாவிற்கு வர மேலும் 2 வருடமாகும். அக்குழந்தைக்குக் காதுகுத்தி முடிஇறக்கனும். பெண் குழந்தையென்பதால் 5 வயதிற்கு மேல் செய்தால் சரியாக இருக்குமா எனத்தெரியவில்லை. ஆகையால் அங்கேயே முடியிறக்க, சிறிய முடியை எடுத்து மஞ்சள் துணியில் முடித்து எங்கள் குலதெய்வமான சோளிங்கர் நரசிம்மனுக்கு இங்கு வரும் சமயம் சேர்க்கலாமா? திருப்பதி மற்றும் திருவள்ளூர் எம்பெருமானுக்கும் முடியிறக்கும் வழக்கம் உண்டு. என்ன செய்யலாம் என்று ஆலோசனை வழங்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
இக்கேள்விக்கான விடையை பின்னர் கூறுகிறோம்.
அடியேனுக்கு அவ்வப்போது துர்ஸ்வப்னம் வருகிறது, அவ்வாறு வந்தால் அதைத் தொடர்ந்து ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்கிறது, இதைத் தவிர்க்க என்ன செய்வது..
Vidwan’s reply:
துர்ஸ்வப்னங்களைத் தவிர்க்க குலசேகராழ்வார் அருளிச்செய்த முகுந்த3மாலையின் 39 ஆவது ஸ்லோகத்தை, இரவு படுப்பதற்கு முன் நித்யமும் அனுசந்தானம் பண்ணலாம்.
க்ஷீரஸாக3ர தரங்க3க்ஷீகரா
ஸாரதாராகித சாருமூர்தயே ।
போ4கி3போ4க3 க ஶயநீயஶாயிநே
மாத4வாய மது4வித்3விஷே நம: ॥
அதே போல் அவசியம் மூன்று தடவை மாதவ திருநாமத்தை ஜபிக்க வேண்டும். படுப்பதற்கு முன் மாதவா,மாதவா, மாதவா என்று சொல்லிவிட்டுப் படுத்துக்க கொண்டால் எந்த விதமான துர்ஸ்வப்னமும் ஏற்படாமல் இருக்கும்.
ஶ்ரவண துவாதசி எப்படி அனுஷ்டிக்க வேண்டும்.
Vidwan’s reply:
ஶ்ரவண துவாதசி என்பது ஏகாதசி விரதம் போல். ஏகாதசியன்று என்ன நியமமோ அதேபோல் ஶ்ரவண துவாதசியன்று அனுஷ்டித்து மறுநாள் பாரணை பண்ண வேண்டும்.
சில vitamin குறைபாடுகளுக்காக நம் ஸம்ப்ரதாயத்தவர் சிலர் மஷ்ரூம், பூண்டு போன்ற நிஷித்த வஸ்துக்களை எடுத்துக்கொள்ள நேர்கிறது. இக்காய்களைத் தவிர்த்து நம் vitamin குறைபாடுகளை நீக்க வழி இருக்கிறதா?
Vidwan’s reply:
இந்த நிஷித்தமான பதார்த்தங்களைக் கொண்டுதான் ஆரோக்யத்தை வளர்க்க வேண்டும் என்று இல்லை. புராதன காலத்தில், நம் பெரியோர்கள் எல்லாம் எந்த ஒரு நிஷித்த பதார்த்தங்களையும் சாப்பிடாமல் தீர்காயுஸாக, ஆரோக்யமாக இருந்திருக்கின்றனர். அதனால் அதெல்லாம் தேவை, அது இருந்தால்தான் இந்த வைட்டமின் குறைபாடெல்லாம் இல்லாமல் இருக்கும் என்பது கிடையாது. இதை முதலில் நம்பவேண்டும்.
ஶாஸ்த்ரத்தில் விதித்த காய்கறிகளை, விதித்த முறையில் எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்திவிட்டு சாப்பிட்டாலே எந்த விதமான குறைபாடும் ஏற்படாது. ஆகார நியமத்தில் சொல்லப்பட்ட காய்கறிகளைச் சேர்த்துக்கொண்டாலேயே எந்த விதமான வைட்டமின் பற்றாக்குறையும் இல்லாமல் வாழலாம். இது நிச்சயம். இதை சேர்த்துக் கொண்டால்தான் இந்தக் குறைபாடு நீங்கும் என்பதெல்லாம் புதிது புதிதாக தற்காலத்தில் அவரவர்கள் ஏற்படுத்தியதுதான். அதனால் அது உண்மை என்று நம்ப வேண்டாம்.
எந்த ஹோமமோ, பூஜையோ ஆரம்பிக்கும் முன் இதர ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் கணபதியை ஆவாஹணம் செய்கிறார்கள். அவ்வாறு நம் ஸம்ப்ரதாயத்தில் யாரை த்யானம்/ஆவாஹணம் செய்ய வேண்டும்?
Vidwan’s reply:
நம் ஸம்ப்ரதாயத்தில் பொதுவாக ஹோமங்கள், உற்சவங்கள் செய்வதற்கு முன் விஷ்வக்சேன ஆராதனம் பண்ணுவதை வழக்கமாக வைத்து கொண்டுள்ளார்கள்.
ஶ்ரவண வ்ரதம் நிர்ணயம்
ஶ்ரவண நக்ஷத்ர தினமும், ஶ்ரவண வ்ரத தினமும் வேறுபடுவது சாத்தியமா? ஶ்ரவண நக்ஷத்ரம் சூர்யோதயத்தில் இருந்து 12 நாழிகை இருக்கும் தினம் போதுமானதா ?
அப்படியில்லாவிட்டால் முந்தைய தினத்தில் விரதம் அனுஷ்டிக்கலாமா ?
Vidwan’s reply:
ஶ்ரவண விரதத்தில் இராண்டுவிதம் இருக்கிறது. ப்ரதானமாக ஒப்பிலியப்பனைக் குறித்து ஶ்ரவண விரதம் இருக்கிறவர்கள் அந்த ஸன்னிதி அனுஷ்டானத்தின்படி சூர்யோத்திலிருந்து 12 நாழிகை என்று திருவோண நக்ஷத்ரம் இருக்கிறதோ அன்று ஶ்ரவண விரதம்.
அப்படியில்லையென்றால் அதாவது 12 இல்லை 111/2 நாழிகைதான் இருக்கிறது என்றால் முன்னாள் ஶ்ரவண விரதம்.
சில பஞ்சாங்கங்களில் ஸாயங்காலம் ஶ்ரவண விரதம் என்று போட்டிருப்பார்கள். ஆகையால் அவரவர் வழக்கப்படி செய்யவேண்டும். நம் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த பலர் ஒப்பிலியப்பன் சன்னிதி வழக்கத்தைதான் பின்பற்றுகிறார்கள்.
ஶ்ரவண-துவாதசி வ்ரதம் ( ஸ்ரீஸந்நிதி நிர்வாஹம்)
வேதை – நக்ஷத்திரம், திதி – விலக்கப் பட வேண்டியது என்ன ?
நக்ஷத்திரம்-திதி (ஶ்ரவண-த்வாதஶி) ஸம்பந்தம் குறைந்தது எவ்வளவு நாழிகைகள் இருக்க வேண்டும்?
Vidwan’s reply:
ஶ்ரவண துவாதசி வ்ரதத்தில் முனித்ரயம், அஹோபிலம் என்று இரண்டு ஸம்ப்ரதாயம் இருக்கிறது. இதில் முனித்ரய ஸம்ப்ரதாயத்தில் ஶ்ரவணமும், துவாதசியில் சிறிதளவு சேர்ந்திருந்தாலே போதும் அன்றையதினம் ஶ்ரவண துவாதசி வ்ரதம். அதாவது என்றாவது ஒருநாள் பகலிலேயோ, இல்லை சாயங்காலத்திலோ கொஞ்சம் சேர்ந்திருந்தாலே அன்று ஶ்ரவண துவாதசி.
ஸ்ரீஸந்நிதி ஸம்ப்ரதாயத்தில் ஸாயங்கால வ்யாப்தி வரை ஶ்ரவணமும் துவாதசியும் சேர்ந்திருந்தால்தான் ஶ்ரவண வ்ரதம். அதை அவர்கள் அறிவிப்பார்கள் அதன்படி செய்யலாம்.
17) ஶ்ரவண-துவாதசி அன்று
1) ஶ்ரவண வ்ரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் இல்லாதவர்கள், த்வாதஶி பாரணை பண்ணலாமா ?
2) அல்லது த்ரயோதசியில் தான் பாரணை என்று இருக்கும் போது, ஏகாதசியில் கௌணமாகவும் துவாதசி ப்ரதானமாகவும் கொண்டு உபவாஸ வ்ரத அனுஷ்டானம் செய்யலாமா ?
Vidwan’s reply:
ஶ்ரவாண துவாதசிக்கும், ஶ்ரவண வ்ரதத்திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஶ்ரவண வ்ரதம் என்பது காம்ய வ்ரதம் வேண்டுமென்றால், ஒரு பலனுக்காகவோ, எம்பெருமானுக்காகவோ இருக்கலாம். வ்ரதம் இருக்க வேண்டிய கட்டாயமில்லை.
ஶ்ரவண துவாதசிக்கு நித்யம் என்று பெயர் அதாவது கட்டாயமாக வ்ரதம் இருக்கவேண்டும்.ஶ்ரவண வ்ரதத்திற்கும், ஶ்ரவண துவாதசிக்கும் எந்தவிதமான ஸம்பந்தமும் இல்லை.
ஏகாதசி, ஶ்ரவண துவாதசி இரண்டு தினமும் உபவாஸம் இருக்கவேண்டும். த்ரயோதசியில்தான் பாரணை. ஶரீர காரணமாக ஒருநாள் தான் இருக்க முடியும் என்றிருந்தால், ஏகாதசியன்று பலகாரம் போல பண்ணிவிட்டு. ஶ்ரவண துவாதசியில் உபவாஸத்தை ப்ரதானமாக வைத்துக்கொள்வது என்று பெரியோரகளின் வழக்கத்தில் உள்ளது.
ஆவணி (ஸிம்ஹ மாஸம்) ஶ்ரவணம் நக்ஷத்ரம் தினத்தில் தான் ஸ்ரீ ஹயக்ரீவ ஜயந்தியும் ஸ்ரீ வாமன ஜயந்தியும் கொண்டாடப் படுகிறதா ?
Vidwan’s reply:
ஆவணி ஶ்ரவணம், திருவோணத்தில்தான் ஸ்ரீ ஹயக்ரீவ ஜயந்தியும், ஸ்ரீ வாமன ஜயந்தியும் கொண்டாடப்படுகிறது.
சிலர் ஹயக்ரீவ ஜயந்தியை பௌர்ணமி திதி ப்ரதானமாக வைத்துக்கொண்டாடுகிறார்கள். சந்த்ரமான கணக்கில், ஶ்ராவணத்தில் என்ற கணக்கின்படி கொண்டாடுகிறார்கள். சில நேரம் ஆடி மாதத்திலும் இது வரும்.
ஸ்ரீஜயந்தி, ஸ்ரீராம நவமி, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி போல் இதில் பெரியளவு வ்ரதங்கள் என்றெல்லாம் இல்லாதபடியினால், கோவிலுக்குச் சென்று பெருமாள் சேவிப்பது, விசேஷமாக திருவாராதனை என்பது மட்டும் என்கிறபடியாலும், மேலும் அகத்திலும் விசேஷ திருவாரதனை என்று சொல்லாதபடியினாலும் அந்தந்தக் கோவிலின்படி அவ்வழக்கத்தை நாம் பின்பற்றலாம்.
அடியேன் ஸ்வாமி வரப்போகும் சூரிய க்ரஹணம் பற்றிய சந்தேகம், மாலை 5 மணியளவில் ஸ்பர்ஸம் என்றும் அன்றைய தினம் போஜனம் இல்லை என்றும் பஞ்சாங்கத்தில் இருக்கிறது.
அப்படியென்றால் 25ஆம் தேதி அன்றைய நாள் முழுவதும் போஜனம் உட்கொள்ளக் கூடாதா அல்லது காலையில் போஜனம் செய்து பின்னர் மறுநாள் சூர்யோதயத்திற்குப் பின் போஜனம் செய்ய வேண்டுமோ. விளக்கப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
சூர்ய க்ரஹணத்திற்கு, க்ரஹணம் பிடிக்கின்ற ஜாமத்தைத் த்விர்த்துவிட்டு முன் நான்கு ஜாமம் சாப்பிடக்கூடாதென்று இருக்கிறது. இந்த க்ரஹணம் பிடிப்பது பகல் நான்காவது ஜாமம், ஆக முன்னாடி நான்கு ஜாமம் என்பது முதல் நாள் இரவு மூன்று மணிக்குப்பின் சாப்பிடக்கூடாது. க்ரஹணம் விட்ட பின்னர் சூர்யனை பார்த்துவிட்டுதான் சாப்பிட வேண்டும்.
இந்த முறை க்ரஹணகாலம் சாயங்காலமானபடியால், க்ரஹணகாலத்திலேயே சூர்யன் அஸ்தமனமாகுகிறது. க்ரஹணம் விட்டு சூர்யனைப் பார்க்க முடியாது, மேலும் சூர்யனைப் பார்த்துவிட்டுதான் சாப்பிடவேண்டும் என்றபடியால் மறுநாள் காலைதான் சாப்பிடவேண்டும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஶாஸ்த்ரப்படி அன்றையதினம் முழுவதும் சாப்பிடக்கூடாது.
க்ருஹத்தில் ஒரு நாள் முழுவதும் பெருமாள் சன்னதியில் தீபம் எரிந்துகொண்டு இருக்கலாமா?
Vidwan’s reply:
க்ருஹத்தில் ஒரு நாள் முழுவதும் பெருமாள் சன்னதியில் விளக்கு எரிந்து கொண்டு இருக்கலாம்.
நான் தென்கலையார். எங்களுக்கு ஸமாஶ்ரயணம் உண்டா? பரந்யாஸம் உண்டா? இவை உண்டு என்றால் நம் ஊரில் பக்கத்தில் உள்ள ஆசார்யன் இடம் ஸமாஶ்ரயணம் செய்து கொள்ளலாமா? அல்லது ஸ்ரீரங்கத்துக்குத்தான் செல்ல வேண்டுமா?”
Vidwan’s reply:
உங்களுடைய ஆசார்யன் யாரோ அவரை அணுகி அவரிடத்தில் ஸமாஶ்ரயணம் செய்து கொள்ளலாம். பரந்யாஸம் நேரடியாக பண்ணுவதாகத் தெரியவில்லை. ஆனால் பரந்யாஸம் பண்ணிக்கொள்வது நல்லது. உங்கள் குல ஆசார்யான்னு யார் இருக்கிறார்களோ அவரிடத்தில் சென்று விண்ணப்பித்து கேட்டுக்கொள்ளலாம். ஸ்ரீரங்கத்தில்தான் பண்ணிக்கொள்ள வேண்டும் என்கின்ற அவசியமெல்லாம் கிடையாது.
திருவாராதனை சமயங்களில் நாம் எத்தனை பில் பவித்ரம் அணிந்து கொள்ளணும், எத்தனை பில் வரை அணிந்துக் கொள்ளலாம்.
Vidwan’s reply:
திருவாராதனை சமயங்களில் இரண்டு தர்பம் கொண்டு நாம் பவித்ரம் அணிந்து கொள்வதுதான் வழக்கம்.
ப்ரந்யாஸம் செய்யாதவர்களை ஒரு ப்ரபன்னன் சேவிக்கலாமா?
Vidwan’s reply:
ப்ரந்யாஸம் செய்யாதவர்களைச் சேவிக்க வேண்டியது எப்போ அநிவார்யமாக ஆகிறது என்றால், அவர்கள் நமக்கு உறவுமுறையில் பெரியவர்களாக இருந்தால். இப்போது ஏதாவது ஒரு காரணத்தினால் க்ருஹத்தில் இருக்கும் பெரியோர்கள், உதாரணத்திற்கு அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி இவர்கள் எல்லாம் பரந்யாஸம் பண்ணிக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களைச் சேவிக்க வேண்டியது அவசியம்.
முன்பெல்லாம் டிவி போன்ற கேளிக்கை விஷயங்களில் ஈடுப்பட்டு வந்தேன் ஆனால் ப்ரந்யாஸம் செய்தபின் காலத்தைக் கழிக்க சரியான வழி என்ற புரிதலால் அவையெல்லாவற்றையும் அறவே தவிர்த்து விட்டேன். ஆனால் அகத்தில் இருக்கும் பெரியவர்களோ, சொந்தங்களோ கேளிக்கைப் பற்றியே பேசுகிறார்கள். அவர்கள் அப்படிப் பேச நேரும்போது ஏதோ ஒரு பொய்ச்சொல்லி தவிர்க்கின்றேன்.இப்படிச் செய்வதால் பாகவத அபசாரம் ஏற்படுமா? அவர்களிடம் அபசாரப் படாமல் இக்கேளிக்கைப் பேச்சிலிருந்து மெல்ல விலகுவது எப்படி? அகத்தின் வேலைகளை முடித்துவிட்டு எம்பெருமான் விஷயமான உபந்யாஸங்கள், 108 திவ்ய தேச வைபவம், காலக்ஷேபம் போன்றவற்றில் ஈடுபடுவதையும், பேசுவதையுமே மிகவும் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் இச்சிறிய வயதில் இவ்விஷயங்களில் அடியேன் ஈடுபடுவதை விரும்பவில்லை. அவர்களிடம் எப்படி எடுத்துரைப்பது? சில நேரம் அவர்கள் இப்படிச் சொல்வது எனக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.
Vidwan’s reply:
டிவி போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதைத் தவிர்த்திருக்க்கிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்வதில் ஐயம் வேண்டாம். அதை பெருமையாகவே கருதலாம். ஏனென்றால் ஆதுனிக காலத்தில் சத்விஷயத்தில் பொழுதைப் போக்க நினைக்காதவர்கள் கூட அனாவசியமாக காலைப்பொழுது போக்கை இந்த மீடியாவில் செலவழிக்க வேண்டாம் என்று நினைக்கின்ற ஒரு மனப்பான்மை இருக்குகின்றது. அதனால் எனக்கு இது பிடிக்கவில்லை , இதில் நான் நேரத்தை செலவழித்து வீணாக்க விரும்பவில்லை என்று சொன்னால் தப்பாக எடுத்துக்கொள்வார்கள் என்று நினைக்க வேண்டாம். அப்படி அவர்கள் தப்பாக எடுத்துக் கொண்டாலும் அதை பற்றி கவலைப் படவேண்டாம்.அவரிடத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதை நான் தவிர்க்கிறேன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். இது நல்லதல்ல. நல்லதல்லாததை தவிர்ப்பதை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லலாம், பாதகமில்லை. அவர்களுக்கு சத்புத்தி ஏற்பட்டு அவர்களும் சம்பிரதாயத்தில் ஈடுபடவேண்டும் என்று எம்பெருமானிடத்தில் ஶ்ரத்தையாக ப்ரார்த்தித்துக்கொள்ளலாம். எம்பெருமான் சீக்ரம் அந்த மனோரதத்தையும் நிறைவேற்றுவான்.
அடியேனுக்கு அவ்வப்போது துர்ஸ்வபாவம் ஏற்படுகிறது, இதைத் தவிர்க்க என்ன செய்வது?
Text, timeline
Description automatically generatedVidwan’s reply:
அவ்வப்போது துர்ஸ்வபாவம் ஏற்படுவது இயல்பு அது நீங்க நம்முள் உள்ள எதிரியை விரட்டவேண்டும். அதற்கு பிராட்டியை நாம் பற்ற வேண்டும். ஸ்ரீஸ்துதியின் 18ஆவது ஶ்லோகத்தை பலமுறை அனுசந்தானம் செய்தோமேயானால், மனது ஶாந்தியடையும் துர்ஸ்வபாவம் நீங்கும்.