சுபகிருது – மாசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்


சிலர் திருத்துழாயைக் காதில் சூடிக்கொள்வார்கள். அதன் காரணம் என்ன? அப்படிச் சூடிக்கொள்ளலாம் என்றால் காது மடலின் உட்பகுதியிலா அல்லது வெளிப்பகுதியிலா எங்கு சூடிக்கொள்ளவேண்டும்?

Vidwan’s reply:

திருத்துழாயைக் காதில் சூடிக்கொள்ள வேண்டும் என்று ஶாஸ்தரம் கூறியுள்ளது. “கர்ணமூலே து தாம் த்ருத்வா” என்ற வரிகளின்படி புஷ்பத்தைத் தலையிலும், திருத்துழாயைக் காதிலும் சூடிக்கொள்ளவேண்டும் என்று இருக்கிறது.

“கர்ண மூலே” என்றிருப்பதினால் திருத்துழாயைக் காது மடலின் மேல் பகுதியில் சூடிக்கொள்ளவேண்டும் எனத் தெரிகிறது மேலும், நம் பெரியவர்கள் மடலின் உள்பகுதியில் வைத்துக்கொள்வதை அடியேன் பார்த்திருக்கிறேன். ஆகையால் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின்படி காதின் உள்மடலில் திருத்துழாயைச் சூடிக்கொள்ளவேண்டும் என்பதாகத் தெரிகிறது. காதின் வெளிப்பகுதியில் வைத்து அடியேன் பார்த்ததில்லை.


ஏன் தென்னிந்திய திருக்கோயில்களின் உள்ளே சங்க நாதம் எழுப்பக்கூடாது என்கிறார்கள்? சங்க நாதம் ஒலிப்பதுப்பற்றி ஆகமத்தில் ஏதேனும் குறிப்பிருக்கிறதா?

Vidwan’s reply:

சங்கநாதம் என்பது விசேஷமான நாதம்தான். தென்னிந்திய திருக்கோயில்களில் ஒலிக்கக்கூடாது என்பதெல்லாம் இல்லை, சில கோயில்களில் இன்றும் சங்கநாதம் எழுப்புவது என்பது இருக்கிறது. குறிப்பாக கேரள திருக்கோயில்களில், பெருமாள் ஏளும்போதோ அல்லது பெருமாள் திருக்கோயில் திருக்கதவு திறக்கும்போதோ சங்கநாதம் எழுப்புவதுண்டு.

திருப்பாவையில் “தங்கள் திருக்கோவில் சங்கிடுவான் போதந்தார்”, “வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ” என்ற வரிகளுக்குச் சங்கநாதம் என்று ஓர் அர்த்தம் உண்டு. “சங்கிடுவான்” என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் கூறுகிறார்கள். அதில் சங்கம் என்று ஒரு அர்த்தமுண்டு, “புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ” என்பதன் மூலம் கோயில்களில் சங்கநாதம் எழுப்பலாம் தவறொன்றுமில்லை.

ஆனால் சில கோயில்களில் ஏன் எழுப்பக்கூடாது என்றால், ஒவ்வொரு கோயில்களுக்கும் ஒவ்வொரு ஸம்ப்ரதாயம் உண்டு. அப்படியிருக்க நாமாக சப்தங்கள் எல்லாம் எழுப்பக்கூடாது. சில கோயில்களில் சங்கநாதம் கூடாது என்று வைத்திருப்பார்கள். இப்படியாக அந்தந்தக் கோயில்களுக்கென்று ஒரு வழக்கமும் அதை செய்வதற்கேன்று சிலரும் இருப்பார்கள். ஆகையால் அந்தக் கோயில்களின் பழக்கவழக்கத்தை நாம் பின்பற்றி நடக்கவேண்டும்.


கல்யாணம் ஆகாத ஒருவர் பரமபதித்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. அவருடைய தாயார் கைப்புல் வாங்கி மாஸ்யம் முதலியன நடைபெறுகிறது . ஒரு வருடம் முடிவதற்கு முன் அவருக்காக கயா ஶ்ராத்தம் பண்ணலாமா? தாயார் போகவில்லை. கயா போகும் ஒரு பந்துவைக் கொண்டு செய்யலாமா?

Vidwan’s reply:

பொதுவாக ஆப்தீகம் நடந்துமுடியும்வரை கயாஶ்ராத்தம் பண்ணும் வழக்கமில்லை. ஆப்தீகம் முடிந்தபின்புதான் கயாஶ்ராத்தம் பண்ணப் போகவேண்டும் என்று இருக்கிறது. ஒரு வருடம் ஆனபின் கயாவிற்குப் போகும்போது ஒரு பந்துவைக்கொண்டு அங்குச் செய்யலாம்.


கயா ஶ்ராத்தம் செய்யும்போது சில காய்கறிகள், பழங்களை நாம் விடுகிறோம். நாம் அங்கே விட்டுவிட்ட காய்கறியோ, பழமோ மடம் அல்லது கோவில்களில் ப்ரசாதமாகக் கொடுக்கும்போது நாம் அதை உட்கொள்ளலாமா? அல்லது ஏற்காமல் இருக்கலாமா? ஒருகால் அறியாமல் நாம் சாப்பிட்டிருந்தால் அதற்கு ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா?

Vidwan’s reply:

கயா ஶ்ராத்தம் செய்யும்போது நாம் அங்கு விட்ட காய்கறிகளை, பழங்களை ப்ரசாதமாகக் கொடுத்தால்கூட அதை நாம் உட்கொள்ளக்கூடாது. தெரியாமல் உட்கொண்தடற்குத் தனியாக ப்ராயஶ்சித்தம் என்றெல்லாம் கிடையாது. தெரியாமல் உட்கொண்டுவிட்டோம் என்று புரிந்துகொண்டு நம்மனதளவில் அபராதக்ஷாபனம் பண்ணிக்கொண்டு இனிமேல் அவ்வாறு நடக்காமல் கவனமாக இருக்கவேண்டும்.


ஹனுமத் ஜெயந்தி என்று கொண்டாடப் படுகிறது. எந்த நாளில் என்ற குறிப்பு இருக்கிறதா? வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில், மாதத்தில் கொண்டாடுகிறார்கள். அதனால் எது சரியான தினம் என்ற குழப்பம் வருகிறது.

Vidwan’s reply:

ஹனுமத் ஜயந்தி பற்றி கேள்வியில் கேட்டதுபோலேப் பல குறிப்புகள் இருக்கிறது. அதேபோல்தான் கருடஜயந்தியும் ஆடியில் என்று சொல்வதுபோல் தை/மாசியில் என்றும் சொல்லுவார்கள். ஆகையால் அந்தந்த இடங்களில் எப்படிக் கொண்டாடுகிறார்களோ அப்படியாக வைத்துக்கொள்வது. மேலும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின்படி பல ஊர்களில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆகையால் நாமும் அதையே பின்பற்றலாம். நம் பூர்வர்கள் இந்தத் தினம்தான் என்று ஒரு அனுஷ்டானத்தில் வைத்துக்கொள்ளாததினால் நம்மால் இதுதான் சரி என்று சொல்லமுடியவில்லை. பஞ்சாங்கத்தில் எப்படிப் போட்டிருக்கிறார்களோ வழக்கத்தில் எப்படியிருக்கோ அவ்வழக்கப்படி அதில் நம்பிக்கை வைத்து நாம் கட்டாயமாகச் செய்யலாம்.

ஹனுமத் ஜயந்திக்கோ, கருட ஜயந்திக்கோ வ்ரதம் என்றோ, விசேஷ திருவாராதனம் செய்வதென்று ஸம்ப்ரதாயத்தில் வரவில்லை. ஆனால் விசேஷ திருவாராதனம் செய்வதினால் தவறொன்றுமில்லை. மேலும் வ்ரதம் என்று கிடையாது அந்தந்த இடங்களில் எப்படிச் சொல்கிறார்களோ அதன்படி போய்ச் சேவிப்பதே விசேஷம்.


திருவோண விரதம் அனுஷ்டிக்கும்போது கோயில் பிரசாதம் (உப்பு போட்ட தயிர் சாதம், புளியோதரை போன்றவை ) ஸ்வீகரிக்கலாமா?

Vidwan’s reply:

திருவோண விரதம் அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் உப்பு போட்ட கோயில் ப்ரசாதத்தை ஸ்வீகரிக்கும் வழக்கமில்லை.


மார்கழி மற்றும் தை மாதத்தில் ஶ்ரீ நம்மாழ்வார் பிறந்த ஊரிலிருந்து புறப்பட்ட பிறகு நாலாயிர திவ்ய பிரபந்தம் கோவில் மற்றும் நம் அகத்தில் சேவிக்க கூடாது என்ற நியதி பற்றி விளக்கவும்.

Vidwan’s reply:

அனத்யயன காலத்தில் ஏன் க்ருஹங்களில் ப்ரபந்தங்கள் சேவிப்பதில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லாம்.

ஒரு சமயம் கலியன் ஆழ்வார்திருநகரியிலிருந்து திருவரங்கத்திற்கு எழுந்தருளப்பண்ணி ஆழ்வார் ஸ்ரீஸூக்திகளை எம்பெருமான் முன்னர் சேவித்து அனுபவிக்கும்படியாக அத்யயன உத்ஸவம் என்று ஏற்படுத்தினார். அதை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். மேலும் அத்யயன உத்ஸவ காலத்தில் ஆழ்வார் அத்யக்ஷத்தில் ஆழ்வார் ஸ்ரீஸூக்திகளை எம்பெருமான் முன்னர் விண்ணப்பிப்பது என்பது ஒரு உயர்ந்த அனுபவமாகும். எல்லாரும் ஏகாக்ரசித்தமாய் அந்த அனுபவத்தைப் பெற ஒரு வாய்ப்பாக இருக்கவேண்டி, க்ருஹங்களில் சேவிக்காமல் கோஷ்டியாக கோயில்களில் அனுபவிக்க ஏற்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

திருக்கோயில்கள் மட்டுமல்லாது, சில விக்ரஹ ஆராதனம் நடந்த க்ருஹங்களிலும் அத்யயன உத்ஸவாதிகளைப் பெரியோர்கள் நடத்தி வைத்ததாகத் தெரிகிறது.

மற்றொரு காரணமானது, அனத்யயன காலத்தில் திவ்யப்ரபந்தம் சேவிக்க முடியாதது என்பதினால் நம் பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸூக்திகளைக் கற்றுக்கொள்ளவும் அனுசந்திக்கவும் இது ஒரு உபயுக்த்தக் காலமாக இருக்கிறது என்று தோன்றுகிறது.


பூஸ்துதி மற்றும் கருடபஞ்சாஶத் சந்தை காணொளியை SampradayaManjari Youtube channelல் பதிவேற்றம் செய்வீர்களா?

Vidwan’s reply:

SampradayaManjari Youtube channelல் தற்போது கருடபஞ்சாஶத் மற்றும் பூஸ்துதி சந்தை ஒவ்வொரு பகுதியாக upload செய்யப்பட்டுவருகிறது. விரைவில் பூர்த்தியாக அனைத்து தேஶிக ஸ்தோத்ரங்களும், ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்தகள் மற்றும் தேஶிக ப்ரபந்தங்கள் சந்தை வடிவில் பதிவேற்ற முயற்சிகளைச் செய்துவருகிறோம்.

இதுவரை பதிவேற்றம் (upload) செய்த அனைத்து சந்தை பாடங்களை கீழே உள்ள linkல் கொடுக்கப்பட்டுள்ளது.

Learn Desika Stotra Patam Santhai

Learn Divya Prabandham Santhai

Learn Desika Prabandham Santhai


மடி வஸ்த்ரம் பற்றிய கேள்விகள்

ஈர வஸ்த்ரம் என்பது மடியாகுமா? அல்லது நன்கு உலர்ந்திருக்க வேண்டுமா? அப்படி உலரவில்லையென்றால் 7 முறை வஸ்த்ரத்தை உதறிவிட்டு உடுத்திக்கொள்ளலாமா?

மடி வஸ்த்ரத்தைக் கொடியிலிருந்து ஒரு குச்சி கொண்டுதான் எடுக்கவேண்டுமா அல்லது கையால் எடுக்கலாமா? வஸ்த்ரங்களை ப்ளாஸ்டிக் கயிறு அல்லது கொடியில் உலர்த்தலாமா?

மரக்குச்சியினால் வஸ்த்ரத்தை எடுக்கும்போது ஒருகால் தவறி கீழே விழுந்த்து விட்டால் மடி போய்விடுமா?

மடி வஸ்த்ரம் இரண்டு சூரியன் சமயம் வரை கொடியில் உலர்ந்தால், அது மடி என்றாகுமா? அதை உடுத்திக்கொண்டு திருவாராதனம் செய்யலாமா?

காலை சந்தியாவந்தனம் மற்றும் திருவாராதனம் செய்யும்போது மடி வஸ்த்ரம் உடுத்திக்கொள்கிறோம். வேலைக்குச் செல்லும்போது வேறு ஆடை உடுத்திக்கொள்கிறோம். மீண்டும் அகத்திற்கு வந்தபின் தீர்த்தமாடி சாயம் சந்தியாவந்தனம் செய்யும்போது காலை உடுத்திக்களைந்த மடி வஸ்த்ரத்தையே உடுத்திக்கொள்ளலாமா?

Vidwan’s reply:

1. ஈர வஸ்த்ரம் என்பது சில அபரகாரியங்களுக்கு மட்டும் மடியாகும். அதாவது சில அபர காரியங்கள் செய்யும்போது மட்டும்தான் ஈர வஸ்த்ரம் உடுத்திக்கொள்வது வழக்கமாகும். பொதுவாக நன்றாக உலர்ந்த வஸ்த்ரம்தான் மடியானது. அப்படி உலரவில்லை என்றால் ஏழு முறை உதறிவிட்டு உடுத்திக் கொள்வது என்பது ஆபத்தில் சிலர் செய்யும் வழக்கமாக இருக்கிறது.

2. மடிவஸ்த்ரத்தைக் கொடியிலிருந்து ஒரு குச்சியைக் கொண்டு எடுப்பதுதான் சரியாக இருக்கும். ப்ளாஸ்டிக் கொடியில் உலர்த்துவது என்பது உத்தமகல்பமில்லை. மரக் கொடியிலோ அல்லது மூங்கில் கொடியிலோ உலர்த்துவதே உத்தமகல்பம். அது கிடைக்காத பக்ஷத்தில் மேலே உலர்த்த வேண்டும் என்கின்ற எண்ணம் முக்கியம். அதனால் ப்ளாஸ்டிக் கொடி பரவாயில்லை என்று வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

3. கொடியிலிருந்து மரக்குச்சியினால் எடுக்கும்பொழுது வஸ்த்ரம் கீழே விழுந்து விட்டால் கீழே விழுந்த இடம் சுத்தமாக இருந்தால் அந்த வஸ்த்ரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

4. பொதுவாக இரண்டு சூரியன் பார்த்த வஸ்த்ரத்தை உடுத்திக்கொள்வது அத்தனை ஶ்லாக்யமில்லை. ஒரு சூர்யன் பார்த்த வஸ்த்ரம் உத்திக்கொள்வதுதான் வேண்டியது மிகவும் உத்தம கல்பமான ஆசாரம் என்று சொல்லலாம். குறிப்பாக ஶ்ராத்தம் முதலிய விசேஷதினங்களில் இரண்டு சூரியன் பார்க்காமல்தான் வைத்துக் கொள்ளவேண்டும் ஆகையால்தான் பெரியவர்கள் முதல்நாள் சூர்ய அஸ்தமனமான பின்னர் ஶ்ராத்ததிற்கான மடி வஸ்த்ரத்தை உலர்த்துவார்கள். ஒரு சூரியன் பார்த்த வஸ்த்ரத்தைதான் அன்று உடுத்திக்கொள்ள வேண்டும்.

அனுதினமும் ஒரு சூர்யன்பார்த்த வஸ்த்ரம் உடுத்திக்கொள்வது உத்தம கல்பம். தினமும் அப்படிச் செய்ய முடியவில்லை எனில் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

5. காலை சந்தியாவந்தனம் மற்றும் திருவாராதனம் எல்லாம் செய்யும் பொழுது உடுத்திக் கொண்ட வஸ்த்ரத்தை மீண்டும் வெளியில் போய்விட்டு வந்து தீர்த்தமாடி விட்டு உடுத்திக் கொள்ளலாமா என்று கேட்டால் அது உடுத்தி விழுத்த வஸ்த்ரமானதினால் உடுத்திக் கொள்வது அவ்வளவு ஶ்லாக்யம் அல்ல.


ப்ரசாதம்/உணவு உட்கொள்ளும்போது அங்க வஸ்த்ரத்தை எப்படி உடுத்திக்கொள்ளவேண்டும்?

Vidwan’s reply:

ப்ரஸாதம் அல்லது உணவு உட்கொள்ளும் பொழுது அங்க வஸ்த்ரத்தை இடுப்பில் தான் தரித்துக் கொள்ள வேண்டும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top