“1. தேசிகப் ப்ரபந்தத்தில் (மும்மணி கோவையிலும், நவமணி மாலையிலும் உள்ள தசாவதார பாசுரங்கள் தவிர) நரசிம்மருக்கென்று வேறு பாசுரம் உண்டா?
2. தன்வந்த்ரியின் மேல் ஸ்வாமி தேசிகன் ஏதேனும் பாசுரம்/ஸ்லோகம் இயற்றி உள்ளாரா? ஆம் எனில் என்ன பாசுரம்/ஸ்லோகம் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
3. பெருமாள் கோவிலில் தூப்புல் தேசிகன் மங்களாசாசனத்தின் போது “பரிணாத பலக்ராசா” என்று தொடங்கும் ஆஞ்சநேயர் பற்றிய ஸ்லோகத்தை ஸ்வாமி தேசிகன் பாராயணம் செய்தார். ஸ்வாமி தேசிகனின் எந்தப் படைப்பு இது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
நரசிம்மருக்கென்று ஸ்வாமி தேசிக ப்ரபந்தங்களில் தனிப் பாசுரம் இருப்பதாகத் தெரியவில்லை.
தன்வந்த்ரி மேல் ஸ்வாமி தேஶிகன் பாசுரம்/ஶ்லோகம் இயற்றியிருப்பதாகத் தெரியவில்லை.
“பரிணாத பலக்ராசா” என்ற ஆஞ்சநேயர் ஶ்லோகம் சங்கல்ப ஸூர்யோதயத்தில் இருக்கிறது.
கோவில்களில் வேங்கடாத்வரி கவியின் லக்ஷ்மி சஹஸ்ரம் சேவிக்கலாமா?
Vidwan’s reply:
கோவில்களில் வேங்கடாத்வரி கவியின் லக்ஷ்மி சஹஸ்ரம் அவசியம் சேவிக்கலாம்.
நாச்சியார் திருமொழி பாசுரம் பாராயண நாளுக்குப் பதிலாக கூடாரை வெல்லும் நாளில் பல கோவில்களில் நூறு தடா உற்சவம் ஏன் கொண்டாடப்படுகிறது? மேலும் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளபடி அக்காரவடிசில் மற்றும் வெண்ணெய்க்குப் பதிலாக அன்றைய தினம் சர்க்கரைப் பொங்கல் ஏன் அம்சை பண்ணப்படுகிறது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
நூறு தடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன் என்று நாச்சியார் ஆசைப்பட்டார். கூடாரவல்லி பாசுரத்திலும் “பால்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார கூடியிருந்து குளிர்ந்து” என்று இருப்பதினால் பால்சோறு அதாவது அக்காரவடிசில் சமர்ப்பித்ததாக இருக்கின்றது. அதனால் நாச்சியார் ஆசைப்பட்டபடிதான் நாம் சமர்ப்பிக்கிறோம். ஸ்ரீ பாஷ்யக்காரர் திருமாலிருஞ்சோலையில் சமர்ப்பித்ததாக ஐதிஹ்யம் இருக்கிறது. அதனால் அந்த ஒரு பாவத்தில் நாமும் சமர்ப்பிக்கிறோம்.
அக்கார வடிசலும் சர்க்கரைப் பொங்கலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். நாம் செய்யும் விதத்தில் தான் வித்யாசம் இருக்கிறது. அக்காரம் என்றால் கரும்பிலிருந்து வரக்கூடிய சர்க்கரை அல்லது வெல்லம், வெல்லத்திற்குதான் முன்காலத்தில் சர்க்கரை என்று பெயர். அடிசில் என்றால் சாதம் என்று அர்த்தம். இதனால் வெல்லம் சேர்த்து செய்யும் சாதம், அக்காரவடிசில், அதுவே சர்க்கரைப் பொங்கல். இரண்டும் ஒன்றுதான்.