ஐந்து நாள் விவாஹம் மற்றும் ஐந்து நாள் உபநயனம் பற்றிய விளக்கம்
Vidwan’s reply:
ஐந்து நாள் விவாஹம்
ஐந்து நாள் விவாஹம் என்பது அந்த விவாஹ தினத்திலிருந்து கணக்கிடப்படுகிறது. விவாஹத் திருநாள் முதல் நாள். அன்று முக்கியமாக வரனும் வதூவும் மங்களஸ்நானம் ( எண்ணெய் தேய்த்துக் கொள்வது) பண்ண வேண்டும். அன்று முதல் கார்யக்ரமமாக காசி யாத்திரை செல்வது என்பது நடைபெறும். அந்த வரனானவன் வேத அத்யயனங்களை எல்லாம் பூர்த்தி செய்துவிட்டு ஸ்னாதகனாக ஆகி தனக்கு உரிய வதூவை தேடி செல்வதான ஒரு ஐதீஹ்யம் அது. அந்தச் சமயத்தில் விசிறி, குடை, செருப்பு எல்லாம் எடுத்துக்கொண்டு மாப்பிள்ளை வரும்பொழுது எதிரில் வதூவினுடைய தகப்பனார் தன்னுடைய பெண்ணைக் கொடுப்பதாகச் சொல்லி அவரை அழைத்து வருவார். அதன்பின் ஊஞ்சல் கார்யக்ரமங்கள் நடைபெறும். அதற்கு மேல் சம்ரதாயப்படி பிடி சுற்றுவது என்கின்ற நிகழ்ச்சிகள் நடக்கும். இதற்கு மேல் வைதீகமான காரியம் கன்யாதானம் என்பது. மந்த்ரபூர்வமாக பெண்ணினுடைய தகப்பனார் வரனுக்கு தன்னுடைய கன்னிகையை தானம் பண்ணிக்கொடுப்பார். அந்த வரனும் பெண்ணை பெற்றுக் கொள்வார். பாணிக்ரஹணம் பண்ணிக்கொள்வர். அதற்கு மேல் மந்த்ரபூதமான கூரப்புடவையை வரன் வதூவிற்கு அளிக்க, வதூ அந்தப் புடவையை உடுத்திக்கொண்டு வந்த பின் திருமாங்கல்ய தாரணமானது நடக்கும். அதன் பின் ப்ரதான ஹோமம் என்பது செய்வார்கள் வரனும் வதூவும் சேர்ந்து. சப்தபதி நடக்கிறது, அம்மி மிதிப்பது, இந்தக் கார்யக்ரமங்கள் எல்லாம் நடக்கும். அதற்கு மேல் லாஜ ஹோமம் என்பது நடைபெறும். அதாவது பொரியிடுதல் என்று சொல்வார்கள். ப்ரதான மற்றும் லாஜ ஹோமம் பர்யந்தம் இவையெல்லாம் கல்யாண தினத்தன்று காலையிலே நடக்கக் கூடிய காரியங்கள் .
சாயங்காலம் அந்த வரனும் வதூவும் சேர்ந்து ஔபாசனம் செய்ய வேண்டும். அதற்கு மேலே ஸ்தாலி பாகம் செய்யவேண்டும். அதாவது முதல்முதலில் ப்ரசாதத்தை ஹோமத்தில் தளிகை பண்ணி பெருமாளுக்கு அம்சை பண்ணி அதைத்தான் அந்த வரனும் வதூவும் அன்றைய தினம் ஸ்வீகரிக்க வேண்டும்.
இதற்கு மேல் அருந்ததி பார்ப்பது என்கின்ற கார்யக்ரமும் சரியான முறையில் இரவில் தான் பண்ண வேண்டும். அதாவது இருட்டிய பின் வானத்தில் அருந்ததி தெரியும். அதை போய் பார்க்கணும். அந்தச்
சமயத்தில் பண்ணினால் உசிதம். முதல் நாள் கார்யக்ரமம் இத்தோடு முடிகிறது.
2, 3, 4ஆவது நாள், எல்லா நாள்களிலும் கார்த்தாலேயும் சாயங்காலமும் இந்த வரனும் வதூவும் சேர்ந்து ஔபாசனம் செய்ய வேண்டும்.
விவாஹத்தன்று பாலிகைக்குரிய சாமான்களை(சில தானியங்கள்) எல்லாம் ஊற வைத்திருப்பார்கள். இந்த 2, 3, 4 ஆவது நாட்களிலே பாலிகை ஆராதனம் முக்கியமாக பண்ணவேண்டிய காரியம் .
5 ஆவது நாள் பிம்மாலை சூர்யோதயத்திற்கு முன்னால் சேஷ ஹோமம் என்பது நடக்கும். அதற்குப் பிறகு அந்த வதூவிற்கு க்ருஹப்ரவேசம் நடக்கும். புக்ககத்தில் அந்தப் பெண்ணை முறையாக அழைத்து பெண்ணையும் பிள்ளையையும் வைத்து ஊஞ்சல் ஆட்டி, பிடி சுற்றி வரவழைப்பர்கள். அதன் பின்னரே பாலிகை கரைத்தல் என்கின்ற கார்யக்ரமம் நடக்கும். நான்கு நாட்களாக ஆராதனம் பண்ணி வளர்த்த பாலிகையை நல்ல ஒரு குளத்திலோ ஆற்றிலோ மங்களகரமாகக் கரைக்க வேண்டும்.
இவை 5 நாள் விவாஹத்தில் நடக்கின்ற முக்கியமான கார்யக்ரமங்கள்.
இதைத் தவிர ஆசைக்காகவும் ஒரு சம்ப்ரதாயமாகவும் தினமும் அதாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது நாள்களெல்லாம் அந்த வரனையும் வதூவையும் உட்கார வைத்து நலங்கிட்டு, ஊஞ்சலாட்டி கூடேயிருக்கும் உறவினர்கள் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். இதுவும் விவாஹங்களில் பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி.
ஐந்து நாள் உபநயனம்:
ஐந்து நாள் உபநயனம் என்பது உபநயனத்திற்கு முன்தினம் உதகசாந்தியை வைத்துக் கொண்டால் அன்று முதல் நாள் என்று கணக்கு செய்து ஐந்து நாள் என்று சொல்லலாம். சிலர் உபநயனத்தின் அன்றே உதகசாந்தியும் வைத்துக் கொள்வார்கள். அப்படியிருந்தால் நான்கு நாட்களே கணக்கு வரும். உபநயனத்திற்கு முதல் நாள் ததீயாராதனை செய்யும் வழக்கும் உண்டு. அதையும் சேர்த்து ஐந்துநாள் என்று சொல்வதும் உண்டு.
முதல் நாள் உதகசாந்தி என்று வைத்துக் கொண்டால், அன்று முக்கியமாக நடக்கின்ற கார்யக்ரமம் உதகசாந்தி மந்திரத்தை எல்லாம் ஜபித்து, அந்த மந்த்ரபூர்வகமான ஜலத்தை உபநயனம் ஆகின்ற குழந்தையினுடைய ஶிரசில் சேர்க்க வேண்டும். அதற்குப்பின் அன்றைய தினம் பாலிகை சாமான்களை எல்லாம் ஊறவைத்து அன்றிலிருந்து அந்த உபநயனம் ஆகப்போகும் குழந்தை பாலிகை ஆராதனம் செய்ய வேண்டும்.
அடுத்த நாள் அதாவது உபநயனத்தின் அன்று அந்தக் குழந்தைக்கு முன்னாள் சௌள சம்ஸ்காரம் ஆகவில்லை என்றால் முதலில் சௌளத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். சௌளம் பண்ணிவிட்டு ஸ்நானம் செய்து அதன்பின் யக்ஞோபவீததாரணம் என்கின்ற கார்யக்ரமம் நடக்கும். சௌளம் முன்பே ஆகி இருந்தால் நேரடியாக யக்ஞோபவீததாரணத்திற்கு வந்துவிடலாம்.
அதற்கு மேல் உபநயனத்திற்கு அங்கமாக ஒரு சௌளம் பண்ண வேண்டும். அந்தச் சௌளம் முடிந்தபிறகு குழந்தையை மறுபடியும் தீர்த்தமாட்டி ப்ரஹ்மோபதேசத்திற்கு அழைத்துக்கொண்டு வரவேண்டும். ப்ரஹ்மோபதேசத்திற்கு முன்னால் குழந்தைக்கு புது வஸ்த்ரம், மௌஞ்சி, மான்தோல் இதையெல்லாம் மந்திர பூர்வமாக தரித்துக் கொள்ளவேண்டும். அதற்கு மேல் ப்ரஹ்மோபதேசம் ஆகும். பின்னர் அந்தக் குழந்தை பலாச தண்டம் தரிக்கவேண்டும். இதற்கு மேல் குழந்தை ஸமிதாதானம் செய்யவேண்டும். பின்னர் பிக்ஷை வாங்கிக் கொள்ளவேண்டும். சுமங்கலி ஸ்த்ரீகள் எல்லாம் பிக்ஷை இடுவார்கள். அதை அந்தக் குழந்தை வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு மேலே மாத்யாஹ்நிகம் செய்ய வேண்டும். இத்தோடு முக்கியமான கார்யக்ரமங்கள் எல்லாம் பூர்த்தியாகின்றது.
பின்னர் சாயங்காலம் சாயம் சந்த்யா பண்ணவேண்டும். அன்று தொடங்கி நித்யம் சந்த்யாவந்தனம் மூன்று வேளையும் அந்தக் குழந்தை செய்யவேண்டும்.
காலையிலும் மாலையிலும் சந்தியா வந்தனம் செய்தபிறகு இரண்டு வேளையும் பாலிகாராதனம் செய்யவேண்டும்.
இப்படிப் பூணூல் தொடங்கி அடுத்த இரண்டு நாட்கள் அதாவது மூன்றாவது நான்காவது நாள் என்று வைத்துக் கொள்ளலாம், அதில் ப்ராத: சந்த்யை, மாத்யான்ஹிகம், சாயம் சந்த்யா இவைகளை தவறாமல் செய்யவேண்டும்.
5 ஆவது நாளன்று அதாவது பூணூலிலிருந்து கணக்குப் பண்ணிணால் நாலாவது நாள், உதகசாந்தி முதல் நாள் இருந்து அன்றிலிருந்து கணக்கு செய்தால் ஐந்தாவது நாள், அன்றைய தினம் தண்டு நீர் என்று ஒரு கார்யக்ரமம் உண்டு. இந்தத் தினத்தன்று கார்த்தால குழந்தைக்கு மங்கள ஸ்நானம் செய்து வைக்கவேண்டும். இந்த மங்கள ஸ்நானத்தை உபநயனத்தின் அன்றும் செய்வது வழக்கம். இந்தத் தினத்தன்று ப்ராத: சந்தியா மற்றும் சந்தியாவந்தனம் முடித்தபிறகு குழந்தை புது வஸ்திரம், மௌஞ்சி, மான்தோல், தண்டு எல்லாவற்றையும் தரிக்கவேண்டும். அதற்கு மேலே புது யக்ஞோபவீதத்தையும் அந்தக் குழந்தை தானே தரித்துக் கொள்ளலாம். முதல் தடவை அப்பா போட்டு வைப்பார். பின் எப்பொழுது மாற்றிக் கொண்டாலும் தானே மாற்றிக் கொள்ள முடியும். தண்டு நீர் அன்று அதை மாற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு மேலே அந்தப் பழைய பலாச தண்டம் அதாவது உபநயனத்தன்று ஸ்வீகரித்துக் கொண்டது, அதற்கு ஒரு அபிஷேகம் செய்து தண்டு நீர் என்று சொல்லி அதற்குப்பிறகு அந்தத் தண்டத்தை ஒரு பலாச மரத்தின் கீழே போய் விசர்ஜனம் செய்யவேண்டும். இதற்கு மேல் தினம் வளர்த்து கொண்டு வந்த அந்தப் பாலிகையை ஒரு குளத்திலோ அல்லது புஷ்கரணியிலோ மங்களகரமாய் விசர்ஜனம் செய்ய வேண்டும். இதுவே தண்டு நீர் என்கின்ற கார்யக்ரமம் ஆகும்.