சோபகிருது – ஆடி – ஆசாரஅனுஷ்டானம்


ப்ரபத்திக்குப் பின், ஒரு ப்ரபன்னன் திருடுவது, ஏமாற்றுவது, துரோகம் செய்வது, பொய் சொல்வது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபடும்போது, அதன் விளைவுகளால் அவருக்குப் பாதிப்பு ஏற்படுமா ? அவர் செய்து கொண்ட ஶரணாகதிக்குப் பலன் இருக்குமா?

Vidwan’s reply:

அதன் விளைவுகளால் அவருக்கு கட்டாயம் பாதிப்பு ஏற்படும். ஶரணாகதி செய்து கொண்டவர்களாக, பெருமாளிடம் பக்தி உள்ளவர்களாக, பெருமாளுக்குக் கைங்கரியம் செய்பவர்களாக யாராக இருந்தாலும் சரி அவரவர்கள் செய்த தவற்றிற்குத் தண்டனையைக் கட்டாயம் அனுபவித்தே ஆகவேண்டும். அதிலிருந்து யாரும் மீள முடியாது. தெரிந்து தவறு செய்தால் கட்டாயம் தண்டனை உண்டு. அவருக்கு பாதிப்பும் ஏற்படும்.

அவர் செய்து கொண்ட ஶரணாகதிக்குப் பலன் இருக்குமா என்று கேட்டால் இருக்கும். ஏனென்றால் பாபம் செய்தால் பாபத்திற்கு தண்டனை, நல்ல காரியங்கள் செய்யும் பொழுது அதற்குப் பலன் என்று எப்படி இருக்கின்றதோ, அதேபோல் அவர் மோக்ஷத்திற்காக ஶரணாகதி செய்து கொண்டிருந்தால் அப்பொழுது அவருக்கு மோக்ஷ பலன் கிடைக்கும்.

மோக்ஷ பலன்களுக்குத் தடையாக இந்தப் பாபங்கள் ஆகாது. ஏனென்றால் இந்தப் பாபங்களுடைய பலனை இங்கேயே அனுபவித்து விடுவோம். அதை நன்றாக அனுபவித்த பிறகே மோக்ஷம் கிடைக்கும்.


உடல் உறுப்பு தானம் பற்றி ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் கண்ணோட்டத்தைப் பற்றி தெளிவிக்க பிரார்த்திக்கின்றேன்.

Vidwan’s reply:

உடல் உறுப்பு தானம் பற்றி ஶாஸ்திரத்தில் எதுவும் பெரிதாகச் சொல்லவில்லை. ஏனென்றால் அந்தக் காலத்தில் அது கிடையாது. இப்பொழுதுதான் இப்படி ஒரு விஷயம் வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தெரியாதானபடியினால் ஶாஸ்திரம் அதை ஆதரிக்கிறது என்று சொல்ல முடியாது. ஶாஸ்திரம் ஆதரிக்காத விஷயத்தை செய்வதற்கு பெரியோர்கள் தயங்குவார்கள். ஶாஸ்திரத்தில் சொல்லியிருந்தால்தான் செய்வார்கள். சொல்லாத விஷயத்தை ஏற்றுக் கொள்வதற்கு மகான்கள் தயங்குவார்கள். அந்த ரீதியில் வருகின்ற தயக்கம் நமக்கும் வேண்டும், இருக்க வேண்டியதும்தான். ஏனென்றால் பகவான் நமக்கு கொடுத்த உடல் உறுப்புகளை இன்னொருவருக்கு கொடுப்பதற்கு எந்த அளவிற்கு நமக்கு உரிமை இருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

கடைசியில் ஶரீரத்தைத் தானம் பண்ணும்போது அது ஒரு ஹோமம் போல் கணக்கு. அதற்கும் மந்திரங்களெல்லாம் உண்டு. மந்திரங்கள் சொல்லி அக்னியில் ஸமர்பிப்பதாகத்தான் கணக்கு. ஆகையால் அதற்கு எந்தக் குறைவுமில்லாமல் முழு த்ரவ்யமாக அதை ஸமர்பிப்பது நல்லது என்கிற ரீதியில் ஶாஸ்த்ரம் கூறியிருக்கிறது.


பெருமாள் திருவாராதனத்திற்குப் பூக்களைத் தேர்ந்தெடுக்க என்னென்ன நியமங்கள் உள்ளன. நறுமணம் மட்டுமே முக்கியம் என்றால் கனகாம்பர பூவிற்கு நறுமணம் உண்டு. அதனால் கனகாம்பரத்தை நாம் எம்பெருமானுக்குச் சாற்றலாமா?

Vidwan’s reply:

பெருமாள் திருவாராதனத்திற்கு என்னென்ன பூக்கள் என்று நியமங்கள் இருக்கின்றது.

கனகாம்பரத்தைப் பெருமாளுக்குச் சாற்றலாமா என்றால் அதில் கோவில் பெருமாள் அகத்துப் பெருமாள் என்றெல்லாம் கணக்கு உண்டு. கனகாம்பர புஷ்பம் எல்லாம் கோவில் பெருமாளுக்குத் தாராளமாகச் சாற்றலாம். அகத்து பெருமாளுக்குக் கூடியவரை வாசனையுடன் கூடிய வெள்ளைப் புஷ்பங்கள் சாற்றினால் நல்லது என்று சொல்லி இருக்கிறார்கள். இதற்கான ஒரு PDFஐ விரைவில் பகிர்கிறோம்.


கோயிலில் பெருமாள் திருமஞ்சனத்தின் போது சீக்ஷாவல்லி, ஆனந்தவல்லி, பிருகுவல்லி மட்டும்தான் சேவிக்க வேண்டுமா? நாராயண வல்லியும் சேவிக்கலமா கூடாதா? விளக்கவும்.

Vidwan’s reply:

கோயிலில் பெருமாள் திருமஞ்சனத்தின் போது சீக்ஷாவல்லி, ஆனந்தவல்லி, பிருகுவல்லி உபநிஷத் போல் அதற்கு அடுத்து நாராயண உபநிஷத்தில் இருக்கின்ற அம்பஸ்யபாரே என்று ஆரம்பித்து அதுவும் சொல்லலாம். நேரமின்மை காரணமாக சொல்ல மாட்டார்களே தவிர மற்றபடி நேரமிருந்தால் தாராளமாகச் சொல்லலாம்.


ஜப மந்திரங்களை பொதுவாக எத்தனை முறை ஜபிக்க வேண்டும். தீர்த்தங்கள் ஜபிக்கும் போது எத்தனை முறை சேவிக்கவெண்டும்.விளக்கவும்.

Vidwan’s reply:

பொதுவாக 108 முறை. 108 முடியவில்லை என்றால் 28 இல்லையென்றால் பத்து தடவையாவது ஜபிக்க வேண்டும். 108க்கு மேல் 1008 வரை ஜபிக்கலாம். 147,156 என்று இஷ்டப்படி சொல்ல முடியாது. அதில் ஏதாவது கணக்கு வைத்துக் கொண்டு ஜபிக்கலாம்.

தீர்த்தங்கள் ஜபிக்கும் பொழுது எத்தனை முறை சேவிக்க வேண்டும் என்று அந்தந்த விதிகளில் இருக்கின்றது. சிலவற்றில் நான்கு தடவை சிலவற்றில் ஏழு தடவை என்று நாம் எதற்காக ஜபிக்கிறோமோ அதைப் பொறுத்து இருக்கின்றது. அதில் அவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்களோ, இந்த விதியில் எப்படி இருக்கிறதோ 108 தடவை என்றால் 108 தடவை அதன்படி ஜபிக்க வேண்டும்.


மாமனார் பரமபதித்த பின் முதல் ஒரு வருடம் மனைவியோ, நாட்டுப் பெண்ணோ எண்ணெய் தேய்த்து தீர்த்தமாடலாமா? மாமனாரின் மாஸிகம், மற்றும் ஶ்ராத்தத்தன்று சாயந்திரம் சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் கொடுப்பது சரியா? முறை உண்டா? கொடுக்கலாமா?

Vidwan’s reply:

பொதுவாக பரமபதித்தவருடைய பார்யாள் எண்ணெய் தேய்த்து தீர்த்தமாடுவது வழக்கமில்லை. நாட்டுப் பெண்ணாக இருக்கிறவர் சுபஸ்வீகாரம் ஆனபிறகு எண்ணெய் தேய்த்து தீர்த்தமடலாம்.

பொதுவாகச் சுமங்கலி ஸ்த்ரீகளை குறித்து ஶ்ராத்தம் பண்ணும் பொழுதுதான் இந்த மாதிரி வெற்றிலைபாக்கு கொடுப்பார்கள் என்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மாமனார் பரமபதித்ததற்கு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை.

சிலர் மிகவும் வயதானவர்கள், ரொம்ப பெரியவா பரமபதித்து விட்டால் சுப மரணம் என்று சொல்லுவார்கள். அதாவது திருப்தியாக இருந்து வயதாகி அவர் பரமபதித்தது கூட சுபம் என்கின்ற ரீதியில் இருந்தால் அப்பொழுது இந்த மாதிரி தாம்பூலம் கொடுப்பார்களாக இருக்கும்.


ஆசார்யன் திருவடியில் ப்ரபத்தி பண்ணிக் கொண்ட ஒரு கன்யா ஸ்திரீக்கும் மற்றும் ப்ரபத்தி பண்ணிக் கொண்ட ஒரு வைஷ்ணவ ஸ்த்ரீ ஒரு சைவ குடும்பத்தில் வாக்கப்பட்டாலும் அவளுக்கும் மோக்ஷம் கட்டாயம் கிட்டுமா என்பதை விளக்க பிரார்த்திக்கின்றேன்

Vidwan’s reply:

ஆசார்யன் திருவடியில் ப்ரபத்தி பண்ணி கொண்ட கன்யா ஸ்த்ரீக்கு மோக்ஷம் உண்டா என்றால் உண்டு. ப்ரபத்தி என்பது சின்னக் குழந்தைக்குக்கூட பணணலாம்.

இப்படியாக ஶாஸ்திரம் தனித்தனியாகச் சொல்லாது. இது பண்ணினால்தான் கிடைக்கும் ஶரணாகதி பண்ணிக்கொண்டு என்ன பண்ணினாலும் மோக்ஷம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லாது.

ஶரணாகதி பண்ணிக்கொண்டவர்கள் அதற்கு ஏற்ற மாதிரி நடந்துகொள்ள வேண்டும். சைவ குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாலும்கூட, அவர் வைஷ்ணவ தர்மங்களைப் பின்பற்றி இருக்கலாம். அதாவது பரமைகாந்தியம், ஒரு வைஷ்ணவ ஸ்த்ரீயாக இருக்க முடிந்தால் நல்லது. அப்படி இருக்க முடியவில்லை, தேவதாந்திர சம்பந்தங்களை விட முடியவில்லை என்றால், கடைசியில் கூட திருந்துவதற்கான வாய்ப்பு கிடைத்தால் திருந்தி மாறலாம். அப்படியும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் பகவத் சங்கல்பம் என்னவோ அதைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

இவை அனைத்தையும் காட்டிலும் ஶரணாகதி செய்தவர்கள் மற்ற குடும்பங்களில் வாழ்க்கைப்படாமல் இருப்பதுதான் நல்லது, பாதுகாப்பும் கூட. வாழ்க்கைப்பட்டபின்பு என்ன செய்வது என்ற கேள்வி வருவது சரியாக இல்லை என்றே தெரிகிறது.


கல்யாணங்களில் ஸ்தாலிபாகம் சேஷஹோமம் எதற்காக பண்ணுகிறார்கள் என்பதை விவரமாக ஸாதிக்க ப்ராத்திக்கிறேன்.

Vidwan’s reply:

விவாஹ ப்ரயோகத்தில் ஸ்தாலிபாகம் சேஷ ஹோமம் இவையெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. விவாஹத்தில் எப்படியானால், முதலில் லாஜ ஹோமம், அதற்கு முன் சப்தபதி அப்படியெல்லாம் சொல்லி இருக்கிறதோ அது மாதிரியாக ஸ்தாலிபாகம் சேஷ ஹோமம் சொல்லப்பட்டிருக்கிறது. விவாஹத்தினுடைய ஒரு ப்ரக்ரியையில் இது உள்ளடங்கியது. அதனால் எதற்காக பண்ணுகிறார்கள் என்றால் ஶாஸ்திரம் சொல்வதனால் பண்ணுகிறார்கள். இதில் வரும் இந்த ஸ்தாலிபாகம் என்பது பின்னால் வரப்போகும் ஸ்தாலிபகங்களுக்கு எல்லாம் ஒரு ஆரம்பம். அதாவது க்ருஹஸ்தனாக இருக்கின்றவன் நித்யம் ஔபாசனம் பண்ண வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஸ்தாலிபாகம் பண்ண வேண்டும். அதை ஆரம்பிக்கும் ஸ்தாலிபாகம் இது. அதனால் இது மிகவும் விசேஷம்.

கல்யாணம் என்பது ஐந்து நாட்கள் நடக்கும் பொழுது அதில் நான்கு நாட்கள் நித்ய ஔபாசனம் எல்லாம் விடாமல் பண்ணிக்கொண்டிர்ப்பார்கள். அதன்பின் கடைசியாக ஒரு ஹோமம் பண்ணுவது பாக்கி இருக்கும். அதற்குத்தான் சேஷ ஹோமம் என்று பெயர். அது அந்த விவாஹ ப்ரக்ரியாவை, சடங்கை முடிப்பதற்காக, ப்ராயஶ்சித்தங்கள் எல்லாம் பண்ணி அது முடிப்பதாக வரும். அதற்கு சேஷ ஹோமம் என்று பெயர். மீதி இருப்பதை செய்து விவாஹ ப்ரக்ரியயை முடித்துக் கொள்கிறோம் என்று அர்த்தம்.


1. ஸ்வாமி, நான் பிறப்பால் சைவம் , தற்போது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றி வருகிறேன். நான் சமீபத்தில் எனது நகரத்தில் உள்ள ISCKON கோவிலிலிருந்து ஸ்ரீமத் பாகவதம் 1வது ஸ்கந்தத்தை வாங்கினேன். இதுபற்றி நான் சில இளம் ஸ்ரீவைஷ்ணவர்களிடம் கேட்டபொழுது , அவர்கள் இஸ்கான் பாகவதத்தில் தவறான மொழிபெயர்ப்புகளும், விளக்கங்களும் உள்ளன என்றும், ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அவர்களின் க்ரந்தங்களைப் படிக்கக் கூடாது என்றும் சொன்னார்கள்.மேலும், ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ISCKON புத்தகங்களை அவர்களும் வைஷ்ணவர்கள் என்பதால் படிக்க முடியுமா ? நான் தற்போது விதேசத்தில் வசிக்கிறேன், இங்கு ஸ்ரீ ராமானுஜ ஸம்ப்ரதாய படைப்புகள் பற்றிய புத்தகங்கள் பெற முடிவதில்லை. எனவே, அவர்களின் சித்தாந்தம் நமது வேதாந்தத்தில் இருந்து சற்று வேறு பட்டிருந்தாலும் அவர்களின் க்ரந்தங்களைப் படிப்பது தவறா என்பதை தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

2. வடகலை திருமண் ஸ்ரீசூரணத்தை u வடிவு முத்திரையில் பதித்து வைத்துக் கொள்ளலாமா?

3.நான் தற்போது திருமண்ணை ஆரஞ்சு வர்ண ஸ்ரீசூர்ணத்துடன் தரித்துக் கொண்டிருக்கிறேன்.நான் அவற்றை தரித்துக் கொள்வது சரியா, அல்லது நான் மஞ்சள் அல்லது சிவப்பு நிற ஸ்ரீசூர்ணம் தரித்துக் கொள்ள வேண்டுமா?

4. திருமண் காப்பிற்கும் கோபிசந்தனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க ப்ரார்த்திக்கின்றேன்

5.சில ஸ்ரீவைஷ்ணவ உபன்யாசகர்கள் விஷ்ணுவின் புண்ய ஸ்தலங்களான ஸ்ரீரங்கம், மேல்கோட்டை போன்ற இடங்களிலிருந்து வரும் திருமண்ணைதான் தரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் என் திருமண் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. ஊர்த்வபுண்ட்ரத்தின் மூலம் தெரியாமல் தரித்துக் கொள்ள முடியுமா?அவை கிடைக்குமிடம்(மூலம்) வேறாக இருந்தால் தொடர்ந்து தரித்துக் கொள்ளலாமா அல்லது தவிர்க்க வேண்டுமா?

Vidwan’s reply:

1. ISKCON ஸம்ப்ரதாயத்தைக்கூட பாகவத ஸம்ப்ரதாயம் என்று சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் பகவானைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்களின் நூல்களைப் படிப்பதினால் தவறு ஒன்றும் வந்து விடாது. அதே சமயம் நமது ஸம்ப்ரதாயத்தைப் பற்றி நன்றாக தெரிந்துகொண்டு அதைப் பின்பற்ற வேண்டும். அதனால் இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைச் சரியாக தெரிந்து கொண்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயம்,பகவத் ராமானுஜருடைய ஸம்ப்ரதாயத்தை நாம் பின்பற்ற வேண்டும்.

2. திருமண் ஸ்ரீசூரணத்தை U வடிவு முத்திரையில் பதித்து வைத்துக் கொள்ளக்கூடாது. நித்யமும் திருமண் இட்டுக்கொள்ளவேண்டும் என்று இருக்கிறது. பகவானின் திருநாமத்தைச் சொல்லி இடுவதால்தான் அதற்கு நாமம் என்று பெயர். எம்பெருமானின் திருநாமத்தைச் சொல்லி திருமண்ணைக் குழைத்து இடவேண்டும். முக்கியமாக அதில் மண் இருக்கவேண்டும் அதனால்தான் அதற்குத் திருமண் என்று பெயர். இவ்வாறு இட்டுக்கொண்டால்தான் அது நமக்கு ரக்ஷையாக இருக்கும் ஆகையால் திருமண்காப்பு என்று பெயர். இப்படியாக இட்டுக்கொள்ளுதல்தான் நலம் வேறு ரீதியில் பதித்துவைத்துக்கொண்டு இடுதல் கூடாது.

3. பொதுவாக மஞ்சள்தான் விசேஷம் என்பதாகச் சொல்லியிருக்கிறது. மஞ்சள் தூளிலிருந்துதான் தாயாரித்த ஸ்ரீசூர்ணம்தான் விசேஷம். ஒருவேளை மஞ்சள் கிடைக்கவில்லை என்றால், சிறு மஞ்சள்தூள் சேர்த்துவைத்து வேறு வர்ணத்துடன் கலந்து இட்டுக்கொள்ளலாம். ஆரஞ்சு போன்றவையெல்லாம் நவீன காலத்தில் வந்தது. ப்ராசீனத்தைப் பின்பற்றவேண்டுமானால் மஞ்சள் இடுவதுதான் சிறந்தது.

பல திருக்கோயில்களில் மஞ்சள்பொடி, மஞ்சள்காப்பு என்பவையெல்லாம் கிடைக்கும். அவற்றை சேகரித்துக்கொண்டு என்ன ஸ்ரீசூர்ணம் இருக்கிறதோ அத்துடன் சேர்த்து இட்டுக்கொள்ளலாம். இவ்வாறு சில மஹான்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன்

4. கோபிசந்தனம் என்பது ஸ்ரீக்ருஷ்ணருடைய திருமேனிச் சம்பந்தம்பட்ட ஒரு த்ரவ்யம் என்பதாகச் சொல்கிறார்கள். திருமண்காப்பை பற்றி மண் எடுத்து இட்டுக்கொள்ளவேண்டும் என்று ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமத்தில் சொல்லியிருக்கிறது. திருமண் கிடைக்காதபோது கோபி சந்தனம் இட்டுக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறது. திருமண் கிடைக்கின்றபோது கோபி சந்தனத்தைக் காட்டிலும் திருமண்காப்புதான் விசேஷம். ஏனென்றால் அது வெள்ளை நிறத்தில் இருக்கவேண்டுமென்பதும், மண் இருத்தல் வேண்டுமென்பதும் சொல்லியிருக்கு. அதுவே சம்ப்ரதாயமாகவும் இருப்பதினால் திருமண்காப்பே விசேஷமாகும்.

5. திவ்ய தேசத்திலோ அல்லது கங்காநதி முதலான இடங்களில் இருக்கின்ற திருமண்ணைதான் இடவேண்டும் என்று ஆகமங்களில் சொல்லியிருக்கு ஆகையால் அதைத்தான் தரிக்கவேண்டும். அயோத்யா, திருவஹீந்திரபுரம், புஷ்கரம், திருநாராயணபுரம் இவ்விடங்களில் திவ்யதேச திருமண் கிடைக்கின்றன. கடைகளில் இந்த க்ஷேத்ர திருமண் என்று கேட்டாலும் கொடுப்பார்கள். பொதுவிலே திருமண் என்று வெளியில் வைத்திருப்பார்கள் அவையல்லாது அயோத்யா அல்லது திருநாராயணபுரம் திருமண் என்று குறிப்பாக கேட்டால் தருவார்கள். அவையே விசேஷமானது.


நமது ஸம்ப்ரதாயத்தின்படி சுதர்சன ஹோமத்தில் பக்தர்கள் எந்த நாணயங்களைச் சேர்க்க வேண்டும்? (நாம் இப்போது ரூபாய் நாணயங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்)

Vidwan’s reply:

சுதர்சன ஹோமத்தில் coins என்று சொல்லப்படும் 10, 20 ரூபாய் coins சேர்க்கலாம். Currency note என்பது ஒரு Pronote போல் (I Promise to pay என்பது போல்) அவைகள் நாணயமாக ஆகாது ஆகையால் coins ஐ சேர்க்கலாம் ரூபாய் நோட் உபயோகிப்பது இரண்டாம் பக்ஷம்தான்.


சில சந்தேகங்கள்:

1. ஒரு ப்ரபன்னனின் கடைசி மூச்சு வரை தேவதாந்திர சம்பந்தம் இருந்தால் ப்ரபத்தி பலன் தருமா?

2. ஒரு ப்ரபன்னன் கடைசி நேரத்தில் தேவதாந்திர சம்பந்தத்தை விட்டுவிட்டு எம்பெருமானிடம் சரணடைந்தால் , ப்ராயஶ்சித்தப் ப்ரபத்தி செய்யாவிட்டாலும் பெருமாள் அவரை ஏற்று மோக்ஷம் அருள்வாரா? அல்லது அந்த ப்ரபன்னர் அதற்கு உண்டான தண்டனையை அனுபவித்த பின்னர் பெருமாள் அவருக்கு மோக்ஷத்தை வழங்குவாரா?.

3. ப்ராயஶ்சித்த ப்ரபத்தி எத்தனை முறை செய்யலாம். ப்ரபத்தி போல் ஒரே ஒரு முறை தான் செய்ய வேண்டுமா?ப்ராயஶ்சித்த ப்ரபத்தியும் த்வய மந்திரத்தை உட்கொண்டிருக்குமா?

Vidwan’s reply:

ஒரு ப்ரபன்னனின் கடைசி மூச்சு வரை தேவதாந்திர சம்பந்தம் இருந்தால் ப்ரபத்தி பலன் தருவது சந்தேகம்தான் என்று ஸ்வாமி தேஶிகன் சொல்லியிருக்கிறார்.

ஒரு ப்ரபன்னன் கடைசி நேரத்தில் தேவதாந்திர சம்பந்தத்தை விட்டுவிட்டு எம்பெருமானிடம் ஶரணாகதி பண்ணால் சந்தேகமில்லாமல் எம்பெருமான் ஏற்றிக்கொள்வான் என்று ஸ்வாமி நம்மாழ்வார் சொல்லியிருக்கிறார் – “மாளுமோர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வளமே” என்பதாக.

தான் செய்தது தப்பு என்று தெரிந்துவிட்டால், உடனே ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்துவிடலாம் அதில் தவறில்லை. மறுபடியும் தப்பு செய்தால் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணலாம். ஆனால் மறுபடியும் தப்பு பண்ணாமல் இருக்கவேண்டும் என்பதுதான் இதில் முக்கியமான ஒன்று. பெரியவர்கள் எல்லாரும் த்வய மந்திரம் வைத்துக்கொண்டு அனைத்திற்கும் சேர்த்து ஒருமுறைதான் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணுவார்கள்.


எப்பொழுதாவது தவறோ அல்லது ஏதாவது அபாரதம் செய்தாலோ ப்ரபத்தி பலனில்லாததாகி அடியேனுக்கு ப்ரபத்தி கிட்டாது என்ற எண்ணம் எப்போதும் உண்டு. அப்படி இல்லை ப்ரபத்தி நிச்சயம் பலனைத் தரும் என்று பல மகான்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அடியேன் புரிந்து கொண்டிருப்பது சரியா என்று விளக்க ப்ரார்த்திக்கின்றேன். அறியாமல் செய்யும் அபராதங்கள் ஒரு ப்ரபன்னனின் பாபக் கணக்கில் சேராது என்றும் , ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்தால் அறிந்தே செய்கின்ற பாபங்களும் கழிந்து விடும் என்றும், இல்லை லகு சிக்ஷைக்கு பிறகு மோக்ஷம் கிட்டும் என்பது அடியேனுக்குத் தெரிந்திரிந்தும் அடியேன் ஏதாவது அபராதம் செய்தால் ப்ரபத்தி பலனில்லாமல் போய்விடும் என்கின்ற பயம் இருந்து கொண்டே இருக்கின்றது. ப்ராரப்த கர்மாவினால் அடியேனுக்கு இந்தப் பயம் ஏற்படுகின்றதா ? இந்தப் பயத்தை நீக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

Vidwan’s reply:

எப்பொழுதாவது தவறோ அல்லது ஏதாவது அபாரதம் செய்தாலோ ப்ரபத்தி பலனில்லாததாகி அடியேனுக்கு ப்ரபத்தி கிட்டாது என்ற பயம் இருப்பது நல்லதுதான் அப்படியிருந்தால்தான் தப்புசெய்யாமல் இருக்க முடியும். மேலும் என்ன ஆனாலும் ப்ரபத்தி பண்ணியாகிவிட்டது அதன் பலன் கிடைத்துவிடும் என்ற பயமில்லாமல் இருத்தல்கூடாது. இவ்விஷயத்தில் பயத்தோடுதான் இருத்தல்வேண்டும். தப்பு பண்ணினால் கட்டாயம் தண்டனை கிடைக்கும் என்ற பயம்வேண்டும்.

ஆனால் ஶரணாகதி பலன் கொடுக்குமா என்ற பயம்வேண்டாம். அதை “நிர்பரோ நிர்பயோஸ்மி” ஸ்வாமி தேஶிகன் சொல்கிறார்.

நீங்கள் எதற்கு பயப்படவேண்டுமோ அதற்கு பயப்படாமல் எதற்கு வேண்டாமோ அதற்கு பயப்படுகிறீர்கள். ஶரணாகதி பற்றி கவலையேவேண்டாம். ஏனென்றால் ஶரணாகதி பண்ணிவிட்டால் பகவானிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டீர்கள் அதற்குப் பிறகு அது பலன் அளிக்குமா, பலன் அளிகாதா என்று பலர் கேட்கும் கேள்வியே தவறாகும்.

ஶரணாகதி என்றாலே நம்மையும் நம் ரக்ஷணப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டோம். ஒப்படைத்துவிட்டதற்கு அடையாளமே அதைப் பற்றி நாம் கவலையின்றி இருப்பதுதான். மீறி கவலைப்பட்டால் நாம் சரியாக ஒப்படைக்கவில்லை என்றே அர்த்தம்.

ஶரணாகதி பண்ணியவர்கள் அது இப்படியிருந்தால் பலன் கொடுக்குமா போன்ற சந்தேகத்துடன் கூடிய கேள்விகளைத் தவிர்த்தல் வேண்டும். ஶரணாகதி பண்ணிவிட்டால் நாம் நம்மை ஒப்படைத்து விட்டோம் அதற்கு மேல் பகவான் பார்த்துக்கொள்வான் என்று கவலையில்லாமல் இருத்தல்வேண்டும். நாம் எதை நினைத்து கவலைக்கொள்ளவேண்டும் என்றால், நாம் செய்யும் தவறுகள் பற்றி ஏனெனில் தப்பு செய்தால் கட்டாயம் தண்டனை உண்டு.

ஆகையால் ஶரணாகதி பண்ணியவர்கள் பலன் கொடுக்காமல் போய்விடுமோ என்று எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள், அது என்ன வேண்டுமானாலும் ஆகிவிட்டுப்போட்டும். நாம் மற்றொருவருடையது நினைத்து கவலைப்படமாட்டோம் அல்லவா அதுபோல்தான் இந்த ஆத்மா பகவானுடையது அதைப்பற்றி கவலைப்படாமல், தப்பு பண்ணினால் தண்டனை என்ற பயத்தோடு இருத்தல்வேண்டும்.


ஆனி சுதர்சனத்தில் ஆசார்யன் பரமபதித்து விட்டால் சிஷ்யனுக்கு ஒரு நாள் தீட்டு என்று உள்ளது. இது நம் ஸம்ப்ரதாய ஆசார்யனுக்கு மட்டுமா அல்லது நாம் ஶ்லோகங்கள் மற்றும் ப்ரபந்தங்கள் கற்றுக் கொள்ளும் ஆசார்யனுக்கும் உண்டா?

Vidwan’s reply:

பதிலில் குறிப்பிட்ட ஆசார்யன் என்பவர் வேத அத்யயனம் சொல்லி வைத்தவர், அல்லது ப்ரதானமான் மந்திரோபதேசம் பண்ணிவைத்தவர். ஸ்தோத்ர பாடம் சொல்லிக்கொடுத்தவர்களுக்கு இந்த தீட்டு நியமம் கிடையாது. மேலும் வேதாத்யயனம் சொல்லி வைத்தவர் என்றால் யார் ப்ரம்மோபதேசம் செய்து வேதாத்யயனம் சொல்லிக்கொடுத்தாரோ அவருக்குதான் இந்த தீட்டு நியமம்.


.ப்ரஹ்மச்சாரிகள் ஆயுஷ்ய ஹோமம் (தங்களுக்கே), ஶ்ராத்தத்தில் அல்லது ஸமாஶ்ரயணத்திற்கான ஹோமம் செய்யலாமா?

Vidwan’s reply:

எந்தெந்த ஹோமம் பண்ணலாம் என்று விரிவாக அடுத்த இதழில் பதிவிடுகிறோம்.


அடியேனுடைய தகப்பனார் 13.08.2011 சுக்ல பக்ஷ திதியில் ஆசார்யன் திருவடி அடைந்தார். இந்த வருடம் அவருடைய ஶ்ராத்த கார்யங்களை என்று பண்ண வேண்டும் அன்று தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

சுக்லபக்ஷம் என்ன திதி என்று தெரிவித்தால் பார்த்துக்கூறுகிறோம்.


பொதுவாக நாம் ஶாஸ்த்ரம் என்று சொல்லும்போது நாம் எதை அடிப்படையாக வைத்துக்கொள்கிறோம்? மனு ஸ்ம்ருதியா அல்லது ஆபஸ்தம்ப சூத்ரமா?

Vidwan’s reply:

தர்ம ஶாஸ்திரத்திற்கு ஒரு புஸ்தகம் என்பது கிடையாது பல புஸ்தகங்கள் இருக்கிறது அனைத்தையும் வைத்துக்கொண்டுதான் சொல்கிறோம். ஆபஸ்தம்ப சூத்ரம், கௌதம தர்ம சூத்ரம், மனு ஸ்ம்ருதி என்று பல இருக்கிறது. இவை அனைத்தையும் வைத்து நம் பெரியவர்கள் நிர்ணயம் பண்ணியிருக்கிறார்கள்.


சாளக்கிராம திருமஞ்சனத்தில் தேன் சேர்கலாமா மதுபர்கம் அமுது செய்யலாமா?

Vidwan’s reply:

சாளக்கிராம திருமஞ்சனத்தில் தேன் சேர்கலாம் மற்றும் மதுபர்கம் அமுது செய்யலாம்.


அடியேன் நமஸ்காரம். ஆவணி அவிட்டம் குறிப்பிட்ட நாளில் ஏதோ ஒரு அசந்தர்ப்பத்தினால் பண்ண முடியாது போனால் பின்னால் வேறொரு நாளில் பண்ண முடியுமா?

Vidwan’s reply:

என்ன அசந்தர்பம் என்று தெரியவேண்டும். நம்முடைய காரணத்திற்காக இல்லாமல் அதுவாக நடந்ததானால், தீட்டு வந்துவிட்டாலோ, உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தாலோ ஆவணி அவிட்டம் பண்ணமுடியாமல் போனால் அடுத்த மாதம் பௌர்ணமியில் பண்ணலாம். ஆனால் நாமாக காரணத்தை ஏற்படுத்துக்கொண்டு, உ.தா: நாங்கள் வேறு ஒரு இடத்திற்குப் போகவேண்டும் என்றோ, கல்யாணத்திற்கு போகவேண்டும் என்ற காரணங்களுக்காகத் தள்ளிப்போடுவது நியாயமில்லை.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top