சோபகிருது – ஆனி – ஆசாரஅனுஷ்டானம்


ஸ்ரீவைஷ்ணவர்கள் கைகளில் கல் இழைத்த மோதிரம் அணிந்து கொள்ளலாமா?

Vidwan’s reply:

ஸ்ரீவைஷ்ணவர்கள் கைகளில் கல் இழைத்த மோதிரம் அணிந்து கொள்ளலாம். பெரியோர்களும் செய்வது வழக்கம்தான்.


அடியேன் தெலுங்கு ப்ராஹ்மணர் ஆவேன். பகவத் இராமானுஜாசார்ய சம்ப்ரதாயத்தில் சமீபத்தில்தான் பயணிக்கத் தொடங்கியுள்ளேன். அடியேன் ஸ்ரீவைஷ்ணவனாக வாழ ஆசைப்படுகிறேன். ஸ்ரீவைஷ்ணவ அஹாரநியமம்படி இயன்றளவு கடைப்பிடிக்கின்றேன். ஆனால் வரும் நாட்களில் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணிக்கும்படி உள்ளது. அங்கு சைவ உணவு கிடைக்கும் ஆனால் நிஷித்தமான வஸ்துக்களான வெங்காயம் பூண்டு போன்ற வஸ்துக்கள் இல்லாமல் உணவு கிடைக்குமா என்று தெரியவில்லை. இது போன்ற சமயங்களில் என்ன செய்யவேண்டும்? வழிகாட்டவும்.

Vidwan’s reply:

வெளி நாட்டுக்குச் செல்லும் பொழுது அங்கே நமக்கு ஏற்ற ஆஹாரம் கிடைக்காது என்று தெரியும் பொழுது முடிந்த வரையில் தானே செய்து சாப்பிட்டால் உசிதம். ஸ்வயம்பாகமாக தானே தளிகை செய்து சாப்பிட்டால் தவிர்க்க வேண்டியவைகளைத் தவிர்க்கலாம். அதற்கு வசதி இல்லையென்றால் சில பதார்த்தங்கள் வெங்காயம் பூண்டு இல்லாமல் கிடைக்கின்றது என்று தெரிகிறது, அதை எல்லாம் பார்த்து, எந்த உணவாக இருந்தாலும் அதில் எல்லாம் எழுதி இருக்கும், அதைப் பார்த்து இதெல்லாம் இல்லாதவைகளாக வாங்கி அதை மட்டும் உட்கொண்டு தரிப்பதற்கு முயற்சிக்கலாம். தானே செய்து சாப்பிட்டால் எங்கேயாக இருந்தாலும் உசத்தி. அப்பொழுதுதான் நம்மால் ஆஹாரநியமத்தில் எப்படி இருக்கோ அதன்படி கடைபிடிக்க முடியும்.


அடியேன் USல் வசித்துவருகிறேன். எப்போதும் திருமண்காப்பு இட்டுக்கொண்டுதான் வெளியில் செல்வேன். சிலர் திருமண்காப்பு என்றால் என்ன என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு புரியும்படி எப்படி பதில் சொல்வது?

சிலர் இதைக்கண்டு ISCKON அமைப்பை சேர்ந்தவரா என்று கேட்கின்றனர். அடியேன் ஸ்ரீவைஷ்ணவன் என்பதையும் அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் வித்யாசத்தை எப்படி தெரிவிப்பது?

Vidwan’s reply:

திருமண்காப்பு என்பது பெருமாளுடைய திருவடிச் சின்னம். அந்தத் திருவடிச்சின்னத்தை தரித்துக் கொள்வதற்கு நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம் பெருமைப்படுகிறோம்.அது எங்களுடைய ப்ரீத்தியான பெருமாளுக்கு உகந்தது என்று சொல்லலாம்.

பொதுவாக மேற்கத்திய கலாச்சாரங்களில்(westernculture) Tatoo (பச்சை)போட்டுக் கொள்வது எல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமான நிச்சயமாக இருக்கின்றது. ஏன் Tatoo போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஒருவரை ஒருவர் கேட்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படிக் கேட்டால் பொதுவாக சொல்கின்ற பதில் இந்த Tatoo எனக்கு மிகவும் நன்றாக இருக்கிறது அதனால் போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று மிகவும் பெருமிதமாக சொல்லுவார்கள். அதேபோல் நாம் திருமண்காப்பு தரித்துக் கொள்வதென்பது நமக்குப் பிடித்த எம்பெருமானுக்கு உகந்த ஒரு கைங்கர்யம். அதனால் தரித்துக் கொண்டிருக்கிறேன் என்று பெருமையாக பதில் சொல்லலாம் எனத் தோன்றுகிறது.

ISKCON அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாம் என்று நினைத்துக் கொண்டு விட்டால் அப்படியில்லை என்பதை தெளிவித்து விட்டு, அவர்களுக்கும் நமக்கும் சில சம்ப்ரதாயக வேறுபாடுகள் இருக்கின்றன, சில philosophical differences இருக்கின்றன என்பதை சொல்லலாம். Philosophical differences என்ன என்பதை புரிந்து கொள்ளும் அளவிற்கு சக்தி இருந்தால் இந்த மாதிரி கேள்விகள் கேட்க மாட்டார்கள். அதனால் விளக்கமாக philosophical differences என்ன என்பதை செல்லும்படியான அவசியம் இருக்காது என்று தோன்றுகிறது. ஆகவே philosophical differences இருக்கு என்பதோடு முடித்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.


முனித்ரய ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீஜயந்தி, ஸ்ரீராமநவமி, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி போன்ற பண்டிகைகளை, ஏகாதசி போல் அனுஷ்டித்து மறுநாள் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் சேர்த்து, புளி சேர்க்காமல் துவாதசி தளிகை போல் பாரணை செய்யவேண்டுமா?

Vidwan’s reply:

ஸ்ரீ ஜெயந்தி ஸ்ரீராமநவமி ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜெயந்தி போன்ற பண்டிகை நாட்களில் முனித்ரய சம்ப்ரதாயக்காரர்கள் ஏகாதசியை போல் வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும். மறுநாள் எப்படி துவாதசி பாரணை செய்கிறோமோ, அதேபோல் அகத்திக்கீரை நெல்லிக்காய் சுண்டைக்காய் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். புளி இல்லாமல் துவாதசிக்கு எப்படித் தளிகை செய்கின்றோமோ அதேபோல் பண்ண வேண்டும்.


ஏகாதசியன்று அரிசி உப்புமாவிற்கு பதில், சிறுதான்ய உப்புமா சேர்த்துக் கொள்ளலாமா?

Vidwan’s reply:

ஏகாதசி அன்று அரிசி உப்புமா இல்லாமல் எந்தச் சிறு தானியங்கள் எல்லாம் உட்கொள்ளலாமோ அந்தத் தானியங்களை கொண்டு உப்புமா செய்யலாம்.


ஆசார்யன் பரமபதம் அடைந்தால் (திருநாட்டை அலங்கரித்தால்), சிஷயனுக்கு தீட்டு எவ்வளவு நாள்??

Vidwan’s reply:

ஆசார்யன் பரமபதித்தால் அந்தச் சிஷ்யனுக்கு, ஆசார்யன் ஶரீர பந்துவாக இருந்தால் அந்த ஶரீர பாந்துவத்திற்கு என்ன தீட்டோ அந்தத் தீட்டு காத்தல் வேண்டும்.

ஶரீர பந்துவாக இல்லாவிட்டாலும் ஆசார்யன் க்ருஹஸ்தராக இருந்தால், சிஷ்யனுக்கு ஒரு நாள் தீட்டுகாத்தல் என்பது வழக்கமாக இருக்கு.

ஆசார்யன் ஒரு யதியாக இருந்தால் அதாவது சன்யஸ்தராக இருந்தால், அப்போது சிஷ்யனுக்கு எவ்வித தீட்டும் கிடையாது.


“சில சந்தேகங்கள்.

1. பையன் இல்லாதவர்களுக்கு மூத்த மாப்பிள்ளை காரியங்கள் செய்தார். பேரனும் இருக்கிறான். ஸ்கூல் படிக்கும் காரணத்தினால் மாப்பிளையே முன்னின்று எல்லாம் செய்தார். தவறு ஏதேனும் உள்ளதா என்பதை தெரியப்படுத்தவும். அகத்து வாத்தியாரிடம் கேட்ட பிறகே செய்யப்பட்டது.

2. இப்படிப் பெண் பிள்ளை இருக்கும் வீட்டில் அப்பா அம்மாவிற்கு வருடா வருடம் ஶ்ராத்தம் உண்டா? அப்பா சென்றபிறகு அம்மாவிடம் கைப்புல் வாங்கி செய்கிறோம். அம்மாவிற்கு பிறகு என்ன முறை?

3. தாத்தா செய்த பாவம் புண்ணியம் தலைமுறைக்கே என்பர். ஆனால் தவறு செய்த தாத்தா உயிருடன் இல்லாமல் இருக்க அவருக்கு தண்டனை எப்படிக் கிடைக்கும்? அதைப் பையனோ பேரனோ அனுபவிப்பது கஷ்டம்தானே?

4. இன்னாருக்கு இன்னார்தான் பிறக்க வேண்டும் என்பது விதிதான். அப்படியிருக்க கணவன் மனைவி என்பதும் போன ஜென்ம தொடர்பா? அல்லது விதியா?

Vidwan’s reply:

பையன் இல்லாதவர்களுக்கு, ஶாஸ்த்ரத்தில் இவரில்லை என்றால் இவர், அவரில்லை என்றால் இவர் எனப் பட்டியலிட்டு சொல்லியிருக்கிறது. அவ்வகையில் பிள்ளை இல்லையென்றால் பேரன் (தௌஹித்ரன்) இருந்தால், அவனே கைங்கர்யங்கள் செய்வது உத்தம கல்பம். அவரில்லை எனில் இறந்தவரின் பெண்ணின் கைப்புல்லை வாங்கி மாப்பிள்ளை காரியங்கள் செய்யலாம் ஏனெனில் பெண்தான் கர்தா ஆவார்.

அப்பா அம்மாவிற்கு பெண் பிள்ளைதான் இருக்கிறார் என்றால், முன்னர் குறிப்பிட்டது போல் பேரனிருந்தால் அவனே செய்யலாம் இல்லையென்றால் மாப்பிள்ளை வார்ஷிக ஶ்ராத்தம் செய்யலாம். இப்படி ஒவ்வொரு கைங்கர்யத்தை அவர் ஏற்கும்போது வருடாவருடம் செய்யவேண்டும் என்பது அவரின் கர்தவ்யமாக ஆகுகிறது.

தாத்தா செய்த பாவம் புண்ணியம் நேரடியாக தலைமுறைக்கே என்பது கிடையாது. அவரவர்கள் கர்மவினைப் பயனை அவரவர்கள்தான் அனுபவிக்க வேண்டும். ஆனால் ஒரு கர்ம விசேஷத்தினால் ஒருவருடன் சம்பந்தப்பட்ட இந்தப் பிறவி நமக்கு கிடைக்கின்றது. தாத்தா என்பவர் நிறைய பாவங்கள் செய்துவிட்டு பரமபதித்து விட்டால் அந்தப் பாவம் எல்லாம் அவர் பிள்ளைக்கோ பேரனுக்கும் வந்த விடும் என்பது கிடையாது. தாத்தா பண்ணிய கர்மாவிற்கு அடுத்த ஜன்மாவில் என்ன தண்டனையோ அல்லது நல்லதோ அனுபவிக்க வேண்டுமோ அதை அவர் அனுபவிப்பார். அது அவருக்கு ஏற்படும். இந்தப் பிள்ளையோ பேரனோ அந்தப் பாவம் பண்ணவரோடு சம்பந்தப்பட்டு ஒரு இடத்தில் வந்து பிறந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுடைய கர்ம வினைப்பயன் இந்தச் சம்பந்தத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. அதனால் அவரவர்கள் கர்ம வினைப் பயன் என்பதுதான் உண்மையே தவிர இவரால் நமக்கு கஷ்டம் என்று நினைக்கவேண்டாம். நாம் பண்ணிய கர்மா நம்மை ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்க்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

எந்த ஒரு ஶரீர பந்தம் ஏற்பட்டாலும் அது அவரவர்கள் கர்மாவிற்கு ஏற்றார்போல் ஏற்பட்டதுதான். கணவன் மனைவி என்ற பந்துத்வமும் அப்படி ஏற்பட்டதுதான். இவருக்கு இவர் என்று எம்பெருமான் விதித்துக் கொண்டு சேர்க்கின்றான். அவரவர்களுடைய கர்மாவிற்குப் பலனளிக்க எந்த இடத்திற்குப் போய் சேர்ந்தால் அந்தப் பலன்கள் கிடைக்குமோ அதன்படி எம்பெருமான் சேர்க்கின்றான்.


1A. பஞ்ச ஸம்ஸ்காரம் என்பதை எளிய வகையில் என்னவென்று சொல்லி விளக்கலாம்? இது ஒரு ஸ்ரீவைஷ்ணவர்களுக்கான சடங்கு என்று கூறலாமா?

B. அடியேனின் சம்பந்தி தென்கலை ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஸ்வயமாசார்யர்கள். ஆனால் அவர்கள் பஞ்சஸம்ஸ்காரம் ஏதும் செய்து கொள்ளவில்லை. அடியேனின் பெண், மாப்பிள்ளை மற்றும் பேரக்குழந்தைகள் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துக்கொள்ள ஆசை ஆனால் அவர்கள் அகத்துப் பெரியவர்கள் அதைத் தடுக்கின்றனர். அவர்களுக்கு என்னவென்று சொல்லி புரியவைப்பது? தெளிவிக்கவும்.

C. ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராகமல் மற்றொருவர் தடுப்பது சரியா?

D. மேலும் எம்பெருமானின் ப்ரீதியைப் பெற்று மோக்ஷம் அடைய பக்தி/ப்ரபத்தி தான் உபாயம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அடியேனின் ஆசார்யனிடம் ப்ரார்தித்து எனது பெண், மாப்பிள்ளை, பேரக்குழந்தைகளுக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் ஆகாமலே ப்ரபத்தி செய்ய முடியுமா?

E. தென்கலை ஸம்ப்ரதாயத்தில் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யும்போதே ப்ரபத்தியும் செய்வார்களா?

Vidwan’s reply:

பஞ்ச ஸமஸ்காரம் என்பதை ஒரு சடங்கு என்று சொல்லலாம். ஸம்ஸ்காரம் என்றாலே Refinement என்று அர்த்தம். அதாவது ஒரு கார்யத்தை நாம் பண்ணுவதற்கான தகுதியை அளிக்கக்கூடிய செயல். இப்பஞ்சஸம்ஸ்காரமானது எம்பெருமானுக்கு நாம் கைங்கர்யம் செய்யக்கூடிய தகுதியை அளிக்கிறது என்று சொல்லலாம்.

இப்பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துகொண்டால்தான் பகவத் கைங்கர்யம் செய்ய தகுதியுடையவர்களாக ஆகிறோம். ஏன் பகவத் கைங்கர்யம் செய்யவேண்டுமென்றால், அவர்தான் நமக்கு உத்தேஶ்யம். ஒரு பத்னி பதிக்கு சிஸ்ருஷை செய்வதுபோல் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யவேண்டும். ஆசையாக செய்தல்வேண்டும். அதற்காகவே நாம் ஏற்பட்டுள்ளோம் என்ற நினைப்போடு பண்ணவேண்டும். அப்படியாக நாம் செய்யும்போது அவருக்குப் பிடித்தாற்போல் பண்ணவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அதற்காக நாம் செய்துகொள்ளும் ஸம்ஸ்காரமே பஞ்சஸம்ஸ்காரம்.

இதை லௌகீக ரீதியில் சொல்லவேண்டுமென்றால் நமக்குப் பிடித்தவர் நம் அகத்திற்கு வருகிறார் என்றால் அவருக்குப் பிடித்த உணவை பண்ணவோம். மேலும் அவ்வுணவிற்குத் தேவையானவற்றைச் சம்பாதித்து கருத்துடன் தளிகை பண்ணி, அக்கறையுடன் அவருக்கு பரிமாறுவோம் அல்லவா. அதேபோல்தான் பகவான் என்பவர் நமக்கு மிகவும் பிரியமானவர், அவருக்கு ப்ரீதியோடு கைங்கர்யம் பண்ண வேண்டுமென்றால், ஸமர்பிக்க வேண்டுமென்றால் என்ன ஏற்பாடு செய்யவேண்டுமோ அந்த ஏற்பாட்டில் (இங்கு தகுதியில்) ஒன்றுதான் இந்தப் பஞ்சஸம்ஸ்காரம் என்று சொல்லி புரியவைக்கலாம் எனத் தோன்றுகிறது.

ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக ஆகாமல் மற்றொருவர் தடுப்பது நிச்சயம் தவறுதான்.

பஞ்ச ஸம்ஸ்காரம் ஆகாமலேயே ஆசார்யர்களுடைய அனுமதி இருந்தால் ப்ரபத்தி செய்யமுடியும். சின்னக்குழந்தைக்குக்கூட பண்ணலாம். ஆனால்கூட ஆசார்யன் என்ன சொல்கிறாரோ அதன்படிச் செய்யவும்.

தென்னாசார்யர் ஸம்ப்ரதாயத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்யும் போதே ப்ரபத்தியும் நடக்கிறது என்று சொல்லுவர்கள்தான். அது நடக்கிறதா, அது சரியா தவறா என்ற கேள்விகளுக்கு நாம் போகவேண்டிய அவசியமில்லை.


துவாதசி அன்று ஶ்ராத்தம் வந்தால் என்ன செய்யவேண்டும் என்கிற விவரிக்கவும்.

Vidwan’s reply:

துவாதசி அன்று ஶ்ராத்தம் வந்தால் ஶ்ராத்தத் தளிகைதான் செய்யவேண்டும்.

சில க்ருஹங்களில் துவாதசிக்குரிய பாரணை ஸாமான்களை மட்டும் தயாரித்து வைக்கிறார்கள். அதையே போக்தாக்களுக்கும் ஸமர்பிக்கிறார்கள். அதன்பின் போக்தா அனுமதிக்க அந்தக் கர்த்தாவும் பாரணையை உட்கொள்ளலாம்.

இன்னும் சில க்ருஹங்களில் வெறும் ஶ்ராத்தத் தளிகை மட்டும் செய்வதுதான் வழக்கம்.

அவரவர் அகத்து வழக்கப்படி பின்பற்றவும்.


முந்தைய நாளோ அல்லது குளிப்பதற்கு முன் நாம் நறுக்கிய காய்கறிகளை தளிகைக்கு உபயோகப்படுத்தி அதனை எம்பெருமாளுக்கு கண்டருளப் பண்ணலாமா?

Vidwan’s reply:

சாதாரண நாட்களில் முந்தைய நாளோ அல்லது அன்றைய தினம் தீர்த்தமாடுவதற்கு முன் நறுக்கிய காய்கறிகளை தீர்த்தமாடிவிட்டு நல்ல ஜலத்தில் அலம்பிவிட்டு உபயோகப்படுத்தினால் பரவாயில்லை. ஆனால் அமாவாஸை, மாசப்பிறப்பு, ஶ்ராத்தம் போன்ற விசேஷ நாட்களில் கண்டிப்பாக அப்படி உபயோகப்படுத்தக்கூடாது.

துவாதசி அன்று மட்டும் முதல்நாள் நறுக்கிய காய்கறிகளை நன்றாக அலம்பிவிட்டு உபயோகப்படுத்தலாம்.


பொதுவாக சாப்பிட்ட பின் இலையில் துளி அன்னம் மீதி வைக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் ஶ்ராத்தத்தில் சாப்பிட்ட பிறகு இலையில் கொஞ்சம் அன்னம் மீதி வைக்கலாமா? ( போக்தாக்கள் அல்லாதவர்கள்).

Vidwan’s reply:

ஶ்ராத்தத்தின் பிறகு சாப்பிட்ட பின் இலையில் துளி அன்னம் மீதி வைத்தாலும் தவறில்லை. அது அவரவர் அகத்து வழக்கப்படி கேட்டுச் செய்யவும்.


நித்யபடி ஸ்நானம் செய்யும்போது நாம் என்னென்ன கடைபிடிக்கவேண்டும். என்ன சங்கல்பம் பண்ணவேண்டும்? ஸ்நானம் என்றால் தலைக்குத் தீர்த்தாமடுதல் என்று அர்த்தமா?

Vidwan’s reply:

நித்யபடி ஸ்நானம் செய்யும்போது ஆசமனம், ப்ராணாயாமம் பண்ணி, திதி வார நக்ஷத்ரங்களெல்லாம் சொல்லி ம்ஹா சங்கல்பம் பண்ணவேண்டும். அதன் பின் “கர்மந்யதா ஸித்யர்த்தம் ப்ராத: ஸ்நானம் அஹம் கரிஷ்யே” என்று சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்யவேண்டும்.

ஸ்நானம் என்றால் பொதுவாக தலைக்குத் தீர்த்தமாடுவது என்றுதான் அர்த்தம்.

ப்ரஹ்ம்மசாரிகள் நித்யம் தலைக்குத் தீர்த்தமாட அவசியமில்லை என்று சொல்லுவர்கள்.

ஸ்நானம் என்றால் தலைக்குத் தீர்த்தமாடுதல்தான் அது முடியாதபோது ஸ்நானத்தில் ப்ரபேதங்கள் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.

அதாவது ஸ்நானங்களில் பலவிதமான் ஸ்நானம் உண்டு. உதாஹரணத்திற்கு எப்போதாவது உடம்பு சரியில்லையென்றால் கண்ட ஸ்நானம் முதலானவ சொல்லியிருக்கிறது.


அமாவாஸை தினத்தில் பெருமாள் திருவாராதனத்தின் போது தளிகை தயாராக இல்லை என்றால் பித்ரு தர்ப்பணம் செய்தபிறகு திருவாராதனத்தை பூர்த்திச் செய்யலாமா?

Vidwan’s reply:

அமாவாஸை தினத்தில் பெருமாள் திருவாராதனதின் போது தளிகை ஆனவரை பெருமாளுக்கு நிவேதனம் செய்து திருவாராதனத்தை முடித்துவிட்டு, பிறகு வைஸ்வதேவம், தர்ப்பணங்கள் எல்லாம் பண்ணிவிட்டு மீதியை நிவேதனம் செய்யலாம்.


கோவிலில் கொடுத்த சுதர்சன யந்திரத்தை அகத்துப் பெருமாள் சன்னிதியில் வைத்துக்கொள்ளலாமா?

Vidwan’s reply:

கோவிலில் கொடுத்த சுதர்சன யந்திரத்தை அகத்துப் பெருமாள் சன்னிதியில் வைத்துக்கொள்ளலாம்.


புருஷர்கள் அன்றைய தினம் ஸ்நானம் மற்றும் ப்ராத: சந்தியா பண்ணும்வரை விழுப்பா (தீட்டு) ?

Vidwan’s reply:

ஆமாம் ஸ்நானம் பண்ணும்வரை விழுப்புதான். ஸ்நானம் பண்ணியவுடன் விழுப்பு போய்விடுகிறது. விழுப்பு போவதென்பதற்கு ப்ராத: சந்தியா வரை கணக்கில்லை. ஸ்நானம்தான் கணக்கு.

குறிப்புகள்:

விழுப்பு என்பதற்கும், தீட்டு என்பதற்கும் சிறிது வித்யாசம் உண்டு.

விழுப்பு என்றால் நாம் யார் மேலேயும் படாமல், எந்தத் தீட்டும் படாமல் தூங்கியெழுந்தவுடனே அந்த வஸ்த்ரத்தை நாம் களைந்துவிட வேண்டும். முதல்நாள் அணிந்த வஸ்த்ரத்திற்கு விழுப்பு என்று பெயர்.

தீட்டு என்பது விழுப்பைக் காட்டிலும் அதிகபடியானது. எங்கேயாவது மேலே பட்டுவிட்டது என்பதுபோல் வரும்.


ஒரு 10 நாள் பங்காளியின் இறப்புத் தீட்டு காக்கும் சமயம் நெற்றியில் திருமண் ஸ்ரீசூர்ணம் தரிக்கலாமா?

சந்தியாவந்தனம்/காயத்ரி ஜபம் செய்யலாமா?

பத்துநாள் தீட்டு காக்கும்போது ஏன் நாம் உள்பாத்திரங்கள், வஸ்த்ரங்களைத் தொடக்கூடாது என்கிறோம்?

Vidwan’s reply:

10 நாள் பங்காளியின் இறப்புத் தீட்டு காக்கும் சமயம் நெற்றியில் திருமண் ஸ்ரீசூர்ணம் தரிக்கலாம். ஆனால் ஸ்ரீசூர்ணத்தில் ப்ரதிஷ்டை ஆகாத ஸ்ரீசூர்ணத்தை அதாவது கடையில் வாங்கின ஸ்ரீசூர்ணத்தைதான் தரிக்க வேண்டும். ஸ்ரீ சூர்ண ப்ரதிஷ்டை என்று ஒன்று பண்ணுவார்கள் அந்த ப்ரதிஷ்டையான ஸ்ரீசூர்ணத்தைத் தீட்டுச் சமயத்தில் தரிக்கக்கூடாது.

சந்தியாவந்தனம், காயத்ரி ஜபம் கட்டாயம் செய்யவேண்டும். அங்கந்யாஸம், கரந்யாஸம் இல்லாமல் செய்யவேண்டும்.

தீட்டு என்றாலே அசுத்தி என்று அர்த்தம். சுத்தமில்லை என்று அர்த்தமாகும். பெருமாள் உள்பாத்திரங்கள் எப்போதுமே சுத்தமாக இருத்தல்வேண்டும். அதில் அசுத்தி கலக்கக்கூடாது. கை அலம்பாமல் எடுத்தல் என்று பலவிதத்தில் அசுத்தி அதில் கலக்கக்கூடும். தீட்டுக்கு ஆஶௌசம் என்றுதான் ஸமஸ்க்ருதத்தில் பெயர். அந்தச் சமயத்தில் நாமே ஆஶௌசமாக இருக்கின்றபடியால் அப்பாத்திரங்களைத் தொட்டால் அதற்கும் அசுத்தி ஏற்பட்டுவிடும் என்கிறபடியாலே அதைத் தொடக்கூடாது.


ஒரு ப்ரஹ்மச்சாரி உபநயனம் ஆனவுடன் வேதாத்யயனம் செய்யவேண்டும் என்றிருக்கிறது. அவன் ந்யாயம், மீமாம்ஸா, வ்யாகரணாதிகள், விஶிஷ்டாத்வைத்த சித்தாந்தங்கள் எல்லாம் படிக்கவேண்டும் என்பதின் முக்கியத்துவம் பற்றி தெளிவிக்கவும். மேலும் ஒருவன் ஏன் ஶாஸ்த்ரம் படிக்கவேண்டும் என்பதையும் விளக்கவும். நம் ஸம்ப்ரதாயத்தில் பெண்குழந்தை ஶாஸ்த்ரம் வாசிக்கலாமா?

Vidwan’s reply:

ஒரு ப்ரஹ்மச்சாரி உபநயனமானவுடன் வேதாத்யயனம் ஆரம்பித்தால் ஒரு 15 வயதிற்குள் வேதாத்யயனம் பூர்த்தியாகிவிடும். வேதாத்யயனம் செய்யும்போதே அடிப்படை ஸம்ஸ்க்ருதமும் சேர்த்து கற்கவேண்டும். அதில் வ்யாகரணம் முதலான வேதத்தின் அங்கங்களெல்லாம் படிக்கவேண்டும் என்றிருக்கிறது. மேலும் வேதாத்யயனம் என்றாலே சாங்கவேதாத்யயனம்தான் அங்கத்தோடு கூடிய வேதாத்யயனம்தான். அதில் வ்யாகரணம் என்ற அங்கத்தையும் சேர்த்துதான் வேதாத்யயனம் படிக்கவேண்டும் என்ற கணக்கு.

இதையெல்லாம் படித்து முடித்த பிறகு ந்யாய ஶாஸ்த்ரம், விஶிஷ்டாத்வைத்த ஶாஸ்த்ரம் முதலானது, காலக்ஷேபம் போன்றவையெல்லாம் பண்ணமுடியும்.

7 வயதில் உபநயனம் பண்ணி ஆரம்பித்தால் இதையெல்லாம் படிக்க நன்றாகச் சமயம் கிடைக்கும் மேலும் தாராளமாகப் படிக்கலாம்.

இதனுடைய முக்கியத்துவம் என்னவென்றால், வேதாத்யயனம் பண்ணவேண்டும் என்று ஶாஸ்த்ரம் இருக்கிறது. மேலும் ந்யாயம், மீமாம்ஸா, வ்யாகரணம் எல்லாம் படித்தால்தான் விஶிஷ்டாத்வைத்த அதாவது நம் ஸித்தாந்தம் நம் மதம், நம்முடைய தரிசனம், நம்முடைய அனுஷ்டான வ்யவஸ்தைகள், ஆசார்ய அனுஷ்டானங்கள் இவையெல்லாம் இந்த ஶாஸ்த்ரங்கள் படித்தால்தான் புரியும் இல்லாவிட்டால் பூர்த்தியாக புரியாது. நாம் படித்தால்தான் இது புரியும், அப்படியிருந்தால்தானே அதை அனுஷ்டிக்க முடியும் ஆகையால் அவை படிக்கவேண்டும்.

பொதுவாக நம் ஸம்ப்ரதாயத்தில் பெண் குழந்தைகள் ஸ்தோத்ரங்கள், திவ்ய ப்ரப்ந்தங்கள் எல்லாம் சொல்லலாம். ஶாஸ்த்ரம் வாசிப்பது வழக்கத்தில் கிடையாது. இந்தக் காலத்தில் ந்யாயம் போன்ற சாமான்ய ஶாஸ்த்ரம் சொல்லிக்கொடுக்கிறார்கள். அப்படியாக ஸாஹித்யம், அலங்கார ஶாஸ்த்ரம் அவர்கள் படிப்பது தவறில்லை.


ஸ்வாமி தேஶிகன் திருமணியின் அம்சம் என கொள்ளப்படும்போது பிந்தைய ஆசார்யர்களின் பாதுகாராதனத்திற்குத் திருமணி சாதிக்கலாமா?”

Vidwan’s reply:

திருமணி என்பவர் நித்யஸூரி ஆவார், ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர். ஸ்வாமி தேஶிகனுக்கெல்லாம் முன்பிலிருந்தே இருப்பவர். அவர் பெருமாள் திருவாராதனத்திற்கு உபயோகப்படுபவர். ஆசார்யர்கள் திருவாராதனத்திற்குக்கூட கண்டை சேவிப்பது என்ற வழக்கம் சொல்லியிருக்கிறது. ஆகையால் கண்டை சேவிக்கலாம்.

பாதுகாரதனத்திற்குக் கண்டை சேவிப்பது சில இடங்களில் வழக்கத்தில் கிடையாது. ஆகையால் அதன்படி கேட்டுச் செய்யவும்.


1. சந்தியாவந்தனம் செய்யும்போது ஸ்ரீ ஸந்நிதி சிஷ்யர்கள் காயத்ரி ஆவாஹண மந்திரம் சொல்லமாட்டார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் ஏதேனும் குறிப்பிட்ட காரணம் இருக்கிறதா?

2. ப்ரபன்னர்கள் ஸ்ரீராம சரிதமானஸ் சேவிக்கலாமா?

Vidwan’s reply:

சந்தியாவந்தனம் செய்யும்போது ஸ்ரீ ஸந்நிதி சிஷ்யர்கள் காயத்ரி ஆவாஹண மந்திரம் சொல்லமாட்டார்கள் என்று இருப்பதாகத் தெரியவில்லை. “ஆயாது வரதா தேவி” என்று ஆரம்பிக்கும் காயத்ரி ஆவாஹண மந்திரம் அனைவரும் சொல்வார்கள்.

ஸ்ரீராம சரிதமானஸ் பக்தி காவ்யமாக இருப்பதினால், ப்ரபன்னர்கள் சேவிக்கலாம். தவறில்லை.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top