கோயில்களில் கொடுக்கப்படும் பலிஹரணத்தைப் பலிக்குப் பின் கோயிலை பராமரிக்கும் ஸ்த்ரீகள் சுத்தம் செய்யலாமா?
Vidwan’s reply:
கோயில்களில் கொடுக்கப்படும் பலிஹரணத்தைப் பலிக்குப் பின் கோயிலை பராமரிக்கும் ஸ்த்ரீகள் சுத்தம் செய்யலாம்.
கோயில்களில் கோதா கோஷ்டியினர் கருவறைக்கு வெளியே ப்ரம்மோற்சவம் சமயம் உத்ஸவ எம்பெருமானுக்குப் புறப்பாடு ஆகும்போது ஆரத்தி காட்டலாமா?
Vidwan’s reply:
பொதுவாக அர்ச்கர்களே ஆரத்தி காட்டும்போது அவர்களிடமே கொடுட்து ஆரத்தி காட்டுவதுதான் நல்லவழக்கம். அவர்களிடம் கொடுத்து எடுப்பதே சிறந்தாகும்.
கயா ஶ்ராத்தம் செய்தபிறகு அக்ஷய வடத்தில் கொத்தவரங்காயை விட்ட பிறகு அந்தக் காயை மடத்திலோ ஆஸ்ரமத்திலோ வழங்கும் கதம்ப ப்ரசாரத்தில் கலந்திருக்கும் பக்ஷத்தில் அந்தப் பிரசாதத்தை ஸ்வீகரிக்கலாமா ? தெரியாமல் ஸ்வீகரித்து விட்டால் என்ன செய்வது?தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
கொத்தவரங்காயைப் புளியோடு சேர்க்கக்கூடாது என்றிருப்பதால் கதம்பத்தில் சேர்க்கமாட்டார்கள். ஆகையால் கேள்வியின் முதல் பகுதி ப்ரஸக்தியில்லை. பகவத் ப்ரசாதமாக இருந்து அதில் வேறு ஏதாவது விட்டகாய் வந்தால் அதை எடுத்துவைத்துவிட்டு சாப்பிடலாம். அங்கே அந்த வஸ்துகலந்ததைச் சாப்பிடாமல் கூட இருக்கலாம் அது அவரவர் மனதைப் பொருத்தது. தெரியாமல் சாப்பிட்டால் ப்ராயஶ்சித்தம் க்ருஷ்ணானுஸ்மரணமே ஆகும்.
இரண்டு வருடத்திற்கு முன்பு பரஸமர்ப்பணம் செய்துகொண்டேன். ஆனால் இன்றுவரை என்னால் தெரிந்தோ தெரியாமலோ நிஷித்தமான வஸ்துக்கள் உண்பது, சந்தியாவந்தனம் முதலிய நித்யகர்மாக்கள் செய்யாமல் இருத்தல் என்று பாபங்கள் செய்கிறேன். இதனால் மோக்ஷத்திற்குத் தடை ஏற்படுமா? ஏதேனும் ப்ராயஶ்சித்தம் இருக்கிறதா?
Vidwan’s reply:
பரஸமர்ப்பணத்திற்குப் பிறகு நிஷித்தமான வஸ்து என்று தெரிந்தபின் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நியாயம். அதேமாதிரி சந்தியாவந்தனத்தைத் தெரியாமல் விடுவதென்பது இல்லை. தெரிந்தேதான் விடுகிறோம். இப்படிப்பட்ட தவறுகளைத் திருத்திக்கொள்ளவேண்டும், அவைகளை மீண்டும் செய்யாமல் இருத்தல்வேண்டும். செய்த தவறுக்கு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்துகொள்ளலாம். இவை மோக்ஷத்திற்குத் தடையாக இருக்காது.
நாம் தெரிந்தே செய்யும் பாபங்களுக்கு ப்ராயஶ்சித்தம் புன: ப்ரபதனம். ஒருவேளை ப்ராயஶ்சித்தம் செய்யாமல் போனால் பகவானே லகு சிக்ஷை (தண்டனை) கொடுத்து மோக்ஷம் தருவான்.
ஶரணாகதி கண்டிப்பாக பலன் தரும்.எந்தப் பலனுக்காகவும் ஶரணாகதி பண்ணலாம்.இப்படி இருக்க ஒரு லௌகீக பலனுக்காக ஒரு ஆகிஞ்சன்யனால் மஹா விஶ்வாஸத்தோடு செய்யப்பட்ட ஶரணாகதி பலிக்காமல் போவதற்கு அவரவர் கர்மாதான் காரணமா? தெளிவிக்க பிரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
ஶரணாகதி கண்டிப்பாக பலன் தரும். ஆனால் ஒரு லௌகீக பலனுக்காக செய்து பலனில்லாமல் போயிற்று என்றால், செய்த அங்கங்களில் குறைவு இருந்திருக்கலாம். மேலும் பெருமாள் நமக்கு எப்போதும் ஹிதத்தைதான் செய்வான். நாம் எதோ ஒன்று எண்ணிக்கொண்டு செய்திருக்கலாம்.ஆனால் அது நமக்கு ஹிதமில்லை என்றால் அதை செய்யாமலே இருப்பான்.
ஆகையால் செய்த ஶரணாகதி பலிக்கவில்லை என்றால், அது நமக்கு ஹிதமில்லை என்பதால் பகவான் நமக்கு தரவில்லை என்று புரிந்துகொள்ளவேண்டும்.
ஒருவரின் சிறியதகப்பனார் (தந்தை வழி) பரமபதித்துவிட்டால் பண்டிகைகள் கொண்டாடுவது, கோலம் போடுவது முதலியவற்றை ஒருவருட காலம் தவிர்க்க வேண்டுமா?
Vidwan’s reply:
பொதுவாக தீட்டுக்காலத்தில் போடுவதில்லை. சிலர் 40 நாட்களோ அல்லது முதல் மாஸ்யம் வரையோ அல்லது 6 மாத காலம் வரை கோலம்போடாமல் இருப்பது என்பதாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். பண்டிகைகள் பொருத்தவரை பெருமாளுக்குச் செய்யவேண்டிய சில கார்யங்கள் சில பண்டிகைகள் இருக்கின்றன. அவையெல்லாம் அவசியம் கொண்டாட வேண்டியது. உ.தா: ஸ்ரீஜயந்தி வந்தால் பெருமாள் திருவாராதனம் நிற்காது. பெருமாளுக்காக ஏதோ ஓரிரண்டு பக்ஷணங்கள் செய்து அம்சை பண்ணலாம். திருக்கார்த்திகையன்று பெருமாளுக்கு விளக்கேற்றுவது நிற்காது. மகரசங்க்ரமண தர்ப்பணம் பண்ணுபவர்கள் தர்ப்பணம் செய்துதான் ஆகவேண்டும். ஆகையால் பெரியளவில் கொண்டாடாமல் சிறியளவில் கொண்டாடலாம்.
அதேபோல் கோலம் போடுவதும் ஒருவருடம்வரை போடாமல் இருத்தல் என்பது அவரவர் மனதைப் பொருத்தது. சிலர் நல்லநாள் தீட்டு காலத்திற்குப் பிறகு பார்த்து ஆரம்பித்து விடுவார்கள். துக்கத்தை அனுசரிப்பதென்பது அந்தப் போன வ்யக்திக்கும் அவர்களுக்கும் உள்ள அந்யோந்யத்தைப் பொருத்தது.
பத்து என்றால் என்ன? எவையெல்லாம் பத்து கணக்கில் சேரும்.பக்ஷணங்கள், புளிக்காய்ச்சல் மற்றும் ஊறுகாய் பத்தில் சேருமா?
Vidwan’s reply:
கேள்வியின் முதல் பகுதியின் பதிலை – ப்லவ வருடம் ஆடி சுதர்சனம் – Q13JUL21010 கேள்வியை கீழே கொடுத்துள்ள linkல் காணவும்.
தைலபக்குவம் (எண்ணெயில் செய்யப்பட்ட பதார்த்தங்கள்), புளிக்காய்ச்சல் எல்லாம் பத்தை அதாவதுச் சாதத்தை தொட்டக்கையோடு தொடாமல் இருந்தால் அவையெல்லாம் பத்து கிடையாது. ஊறுகாயெல்லாம் பத்தில் சேராது, இருந்தாலும் உப்பு கலந்த பதார்த்தம் என்பதால் அதைத் தனியாகத்தான் எடுத்து வைப்பார்கள்.
கடவன் முடவன் முழுக்கு என்பதன் தாத்பர்யம் என்ன? இதையொட்டி ஏதேனும் கதை இருக்கிறதா?
Vidwan’s reply:
ஐப்பசி துலாமாச காலத்தில் காவேரி ஸ்நானம் மிகவும் விசேஷம். இதில் கடைசி ஸ்நானம் என்பது ஒரு பெரிய விசேஷமில்லை இதற்குப் பின் அடுத்தவருடம்தான் துலா ஸ்நானம் வரும் என்பதால் கடைசி பக்ஷம் கடைசிநாளாவது பண்ணவேண்டும் என்பதுதான்.
யாரோ ஒரு முடவன் (காலால் நடக்க முடியாதவன்) ஸ்நானம் பண்ணவேண்டும் என்று வந்தபோது மாசக்கடைசியாயிற்று ஐப்பசி மாசம் முடிந்து கார்த்திகை மாதம் பிறந்தாயிற்று அவன் வரமுடியாமல் கஷ்டப்பட்டதாகவும், அப்படி கஷ்டப்பட்டு வந்து அடுத்த மாதம் பிறந்தாலும் அவனுக்காக துலா காவேரி ஸ்நானம் பலனைத் தந்ததாகவும் கதை சொல்கிறார். அதனால் கடைசிநாளானாலும் அடுத்தமாதத்தின் முதல்நாளானாலும் துலா ஸ்நான பலன் உண்டு என்பதுதான் இதன் தாத்பர்யம்.
ஒருவர் அகத்து மாஸ்யத்திலோ,ஶ்ராத்தத்திலோ நிமந்த்ரணம் இருப்பவர் அன்று காலை திருவாராதனத்திற்குப் பின் அவர்களுடைய அகத்திலோ, அருகிலுள்ள கோவிலிலோ பெருமாள் தீர்த்தம், மற்றும் பாதுகா தீர்த்தம் ஸ்வீகரிக்கலாமா?
Vidwan’s reply:
நிமந்த்ரணம் இருப்பவர் அவர்கள் அகத்தில் திருவாராதனம் பண்ணி பெருமாள் தீர்த்தம் (நித்யபடி மூன்றுமுறை எடுத்துக்கொள்வார்கள்) அன்று ஒரே ஒருமுறை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அன்று ஸ்ரீபாத தீர்த்தம் ஸ்வீகரிக்கும் வழக்கமில்லை.
போஜ்யாசனத்தில் கண்டருளப்பண்ணுதலுக்கும் அம்சை பண்ணுவதற்கும் உள்ள வித்யாசம் என்ன? எப்படி இரண்டையும் செய்தல் வேண்டும் என்று விளக்கவும்.
Vidwan’s reply:
கண்டருளப்பண்ணுவதும் அம்சைபண்ணுவதும் இரண்டும் ஒன்றுதான். எம்பெருமான் அமுதுசெய்வதாக நாம் நினைத்துக்கொண்டு அவனுக்கு அமுதுசெய்விக்க வேண்டும். ஒரு தாயார் எப்படி தன் குழந்தைக்கு ஊட்டி விடுவாளோ அதே போல் எம்பெருமானுக்கு நாம் ஊட்டிவிடும் பாவத்தில் அமுதுசெய்விக்கணும். அதை எம்பெருமான் கண்டு அருளப்பண்ணுகிறான் (அருள்கிறான்) ஆகையால் இரண்டும் ஒன்றே.
எங்கள் பந்துக்களில் ஒருவர் அவர் நடைபயிற்சி செய்யும்போது காயாத்ரி ஜபம் செய்துகொண்டு நடக்கிறார். இது சரியா?
Vidwan’s reply:
நடைபயிற்சி செய்யும்போது காயாத்ரி ஜபம் செய்வது சரியில்லை. அப்படிச் செய்தல் கூடாது.
என் கணவர் சமீபத்தில் பரமபதித்து விட்டார்.அவரின் வருஷாப்திகத்தில் ஶ்ராத்தத்தில் என் நாத்தனார் கணவர் அதாவது என் கணவரை விடப் பெரியவர் ஆகாரம் ஸ்வீகரிக்கலாமா? இது போன்றே என் அண்ணா,மன்னி மற்றும் அத்திம்பேரும் பெரியவர்களே.அவர்களுக்கான விதி என்ன?
Vidwan’s reply:
வருஷாப்தீக ஶ்ராத்தத்தில் நாத்தனார் கணவர் நிமந்த்ரணம் இருக்கலாம் தவறில்லை. ஆனால் பித்ரு சேஷம் போல் அதைச் சாப்பிடும் வழக்கமில்லை. அதேபோல்தான் அண்ணா, மன்னிக்கும் பித்ருசேஷம் சாப்பிடும் வழக்கம் கிடையாது
அடியேனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஓரு குழந்தைக்கு 7 வயது ஆகிறது. இன்னும் ஓரு குழந்தைக்கு 4 வயது ஆகிறது. என் இரு குழந்தைகளை சாளக்கிராமத்துக்கு பூஜை செய்ய அனுமதிக்கலாமா?”
Vidwan’s reply:
சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு சாளக்கிராம பூஜை செய்வது சரியல்ல.
அமாவாஸை அன்று ஶ்ரார்த்தம் வந்தால், தர்ப்பணம் ஶ்ரார்த்தம் முடிந்த பிறகா அல்லது தர்ப்பணத்திற்குப் பிறகு ஶ்ரார்த்தமா?
Vidwan’s reply:
அமாவாஸை அன்று ஶ்ரத்தம் வந்தால் ஶ்ராத்தத்திற்குப் பிறகு அமாவாஸை தர்ப்பணம் என்பதுதான் வழக்கம். இதுதான் ஶாஸ்த்ரமும்.
பரேஹனி தர்ப்பணம் –மறுநாள் காலை சூர்ய உதயத்திற்கு முன்பு செய்ய வேண்டுமா??பலர் ஶ்ரார்த்தம் முடிந்தவுடன் செய்கிறார்கள்…எது சரி??
Vidwan’s reply:
பரேஹனி தர்ப்பணம் மறுநாள் சூர்ய உதயத்திற்கு பிறகு சந்தியாவந்தனம் செய்யதவுடனேயே செய்யவேண்டியது. இதுதான் பல பெரியோர்களின் வழக்கம்.
அம்மா அப்பா ஶ்ராத்தம் தவிர மற்றவர்களுக்கு ஶ்ராத்தம் பண்ணுவதாயிருந்தால், அந்தத் தர்ப்பணம் ஶ்ராத்தம் முடிந்தவுடனேயே ஶ்ராத்தாங்கமாகப் பண்ணுவதுதான் ஶாஸ்த்ரம். மாதா பிதா ஶ்ராத்தங்களுக்குத்தான் பரேஹனி தர்ப்பணம் இதர ஶ்ராத்தங்களுக்கு அன்றே பண்ணுவதுதான் ஶாஸ்த்ரம்.
சீமந்தோந்நயனம் என்பது முக்கியமான ஸம்ஸ்காரம் என்றால், அந்த ஸம்ஸ்காரத்தை ஏன் முதல் கர்பத்திற்கு மட்டும் செய்கிறார்கள்?
Vidwan’s reply:
சீமந்தோந்நயனம் முக்கிய ஸம்ஸ்காரம்தான் ஆனால் இன்று அதை முதல் கர்ப்பத்திற்கு மட்டும் பண்ணுவது என்பதுதான் இப்போது வழக்கமாகவுள்ளது.
.எம்பெருமானுக்கு நாம் ஏற்றும் தீபங்களில் சில சந்தேகங்கள்:
1. திருமலையப்பனுக்குப் புரட்டாசி சனிக்கிழமை மாவிளக்கு ஏற்றுகிறோம். இதை என் இஷ்ட எம்பெருமானான ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்றாலாமா? அல்லது ஸ்ரீரங்கநாதனுக்கு உரித்தான பங்குனி ரேவதி அன்றோ அல்லது வைகுண்ட ஏகாதசி அன்று ஏற்றலாமா? தாயாருக்கு ஆடி/தை வெள்ளிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றலாமா?
2. கும்ப/கட தீபத்தின் ஏற்றம் என்ன? விசேஷ நாட்களில் நாம் நித்யம் ஏற்றும் அகல் விளக்கிற்கு பதில் கும்பத்தில் நீர் நிரப்பி அதில் விளக்கு ஏற்றலாமா?
3. புருஷர்கள் அடுக்கு தீபத்தை எம்பெருமானுக்கு காட்டிய பின் தீபத்திரி கருகாமல் இருக்க அணைக்கலாமா?
4. வடதேசம் போல் நம் ஸம்ப்ரதாயத்தில் விசேஷ நாட்களில் அகண்ட தீபம் ஏற்றும் வழக்கம் உண்டா? உண்டு என்றால் எப்படி ஏற்றவேண்டும்?
Vidwan’s reply:
திருமலையப்பனுக்கு புரட்டாசி சனிக்கிழமை மாவிளக்கேற்றுவது, ஸம்ப்ரதாயத்தில் இருக்கிறது விசேஷமாக பலபேர் செய்துகொண்டிருக்கிறார்கள். அதை ரங்கநாதனுக்கு ஏற்றாலாமா என்றால் அப்படி ஒரு வழக்கம் இருந்தால் செய்யலாம். அப்படியிருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. திருவேங்கடமுடையானுக்கு ஸம்ப்ரதாயத்தில் பண்ணிக்கொண்டிருக்கிறோம். ஸம்ப்ரதாயத்தில் இல்லாததைப் புதிதாகப் பண்ணவேண்டுமா? ஆரம்பிக்க அவசியமா என்றும் அந்த ரீதியில்தான் பக்தியை வெளிப்படுத்தணுமா என்றெல்லாம் இருக்கிறது.
இவையெல்லாம் அந்தந்த குலத்தில், அந்தந்த க்ருஹத்தில் பல வழக்கங்களெல்லாம் உள்ளது. ஆகையால் உங்க அகத்தில் இதுபோன்று வைகுண்டயேகாதசி தினங்களில், ரங்கநாதனுக்கென்று விளக்கேற்றும் வழக்கமிருந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் புதிதாக ஆரம்பிக்கவேண்டாம். அவரவர் வழக்கத்தில் இருப்பதைச் செய்தால் போதும்.
பலவிதமான தீபங்களில் கடதீபம் என்று ஒன்றிருக்கிறது. கடத்தில் தீபம் ஏற்றி அதைப் பெருமாளுக்கு கட ஆரத்தியாக ஸமர்பிப்பது. கோயில்களில் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகமத்தில் சொல்லியிருக்கிறபடியால் அந்த கடதீபம் விசேஷம். கடம் என்பதும் தீபம் என்பதும் மங்களகரமான ஒன்று இரண்டும் சேரும்போது மிகவும் மங்களகரமாக இருக்கும் என்பதுதான் தாத்பர்யம்.
விசேஷ நாட்களில் நாம் நித்யம் ஏற்றும் அகல் விளக்கிற்குப் பதில் கும்பத்தில் நீர் நிரப்பி அதில் விளக்கு ஏற்றவேண்டும் என்ற அவசியமில்லை. நம் வழக்கம் என்ன இருக்கிறதோ அதைச் செய்தால் போதுமானதாகும். புதிதாக எதையும் செய்யவேண்டியதில்லை.
பொதுவாகத் தீபத்திரியை அணைத்தல் கூடாது. ஆனால் அடுக்குதீபத்தில் முழுவதும் கருப்பாகும் ஒரு கஷ்டமிருக்கிறது. பொதுவாக அடுக்குதீபம் ஏற்றி பெருமாளுக்கு ஸமர்ப்பித்தவுடன் தீபத்தை வெளியே எடுத்துக்கொண்டு போய் அணைக்கிறார்கள் ஏனென்றால் பெருமாளுக்கு நேரே மற்றும் நாலுபேருக்கு முன்னர் தீபத்தை அணைக்கக்கூடாது. அதைப் பக்குவமாகச் செய்தல்வேண்டும்.
அகண்டதீபம் என்பது இப்போதும் பல கோயில்களில் இருக்கிறது. கண்டம் என்றால் விட்டுபோதல்/அணைதல் என்று அர்த்தம். விட்டுப்போகாமல் எப்போதும் எரிந்துகொண்டிருத்தல் என்பது அகண்டதீபமாகும். சில க்ருஹங்களில் கூட அகண்டதீபம் வைத்துக்கொண்டிருப்பார்கள். அது விசேஷம்தான் அதைச் செய்யலாம். அகண்ட தீபமென்றால் தமிழில் அணையாவிளக்கு என்றாகும். தனியாக பெரியவிளக்கு என்றெல்லாம் இல்லை. எப்போதும் ஏற்றும் விளக்கு அணையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
ஶரணாகதி என்பது நாம் நம்மை அவனிடம் ஒப்படைத்துவிடுதல் என்பதும் அதன் பின் நம் பரத்தைப்பற்றி கவலைக்கொள்ளாமல் இருத்தல் வேண்டும் என்பது சென்ற சுதர்சனம் மூலம் புரிந்துகொண்டேன். ஒருவருக்கு செய்த ஶரணாகதி கவலைதரும்படி இருந்தால்
அவர் தன் ஆத்மாவைச் சரியாக ஸமர்ப்பிக்கவில்லை என்று அர்த்தமா? அவர் மீண்டும் அதை ஸமர்ப்பிக்கவேண்டுமா?
அல்லது நாம் நம் பரத்தைச் சரியாகச் ஸமர்ப்பிக்கவில்லை என்றாலும் நம் ஆசார்யன் தானே நமக்காக ஸமர்ப்பிக்கிறார். அவர் அதைச் சரியாகதானே செய்திருப்பார். அதனால் செய்த ஶரணாகதி குறையில்லாமல் தானே இருக்கும். இதை எப்படிப் புரிந்துகொள்வது?
Vidwan’s reply:
ஶரணாகதி நடந்து முடிந்தபிறகு ஒருவருக்கு விஶ்வாஸத்தில் குறைவேற்பட்டால், அந்த மந்த விஶ்வாஸத்தை மஹாவிஶ்வாஸமாக எம்பெருமானே ஆக்கி அவனைக் கரைச்சேர்க்கிறான் என்று ஸ்வாமி தேஶிகன் சாதிக்கிறார்.
ஆசார்யன் நமக்காக ஶரணாகதி செய்திருக்கிறார் என்பதில் விஶ்வாஸம் இருத்தல்வேண்டும்.நாமாகச் செய்தால் சரியாக செய்திருக்க மாட்டோம் எனலாம், ஆனால் அது உக்தி நிஷ்டையோ, ஆசார்ய நிஷ்டையோ அது ஆசார்யன் மூலமாகத்தான் ஶரணாகதி நடக்கிறது என்கிறபோது நிச்சயமாக ஆசார்யன் நமக்காக விஶ்வாஸத்தோடு, சரியாகப் பண்ணியிருப்பார் என்று நம்பணும். ஆசார்யன் மேல் விஶ்வாஸம் குறையாமல் இருத்தல்வேண்டும் அவர்மேல் நம்பிக்கையிருந்தாலே ஶரணாகதி பலித்து மோக்ஷம் கிட்டும்.