ஏகாதசி விரதம் இருக்கும் ஒருவர் கோயிலில் புளியோதரை, தயிர் சாதம் பிரசாதம் தரும்போது சாப்பிடலாமா?
Vidwan’s reply:
ஏகாதசி விரதம் இருக்கும் ஒருவர், எந்த விதத்திலும் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது.
சில ஜைன மத நண்பர்கள் திருமலை என்பது ஜைன கோயில் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு எம்பெருமானின் திவ்யதேசம் என்று புரிய வைக்க புராணச் சான்றுகள் அல்லது மேற்கோள்களைத் தெரியப்படுத்த ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
13 புராணங்களில் திரு வேங்கடமலை மாஹாத்மியம் சொல்லப்பட்டு உள்ளது. (ஒன்றல்ல, இரண்டல்ல) ஆழ்வார் ஆசார்யர்கள், பல மகான்கள், பல ஶ்லோகங்கள், பல கீர்த்தனங்கள் என ஆயிரக் கணக்கில் சான்றுகள் உள்ளன. ஜைன மதம் திருமலையில் இருந்ததற்கு சான்று ஒன்றும் கிடையாது. அப்படிக் கூறுவது வெற்று வாதம்.
அடியேனின் மாமியார் இதுவரை புரட்டாசி மாவிளக்கு ஏற்றியதில்லை ஆனால் எங்கள் பெரிய மாமனார் அகத்தில் மாவிளக்கு ஏற்றும் வழக்கமுண்டு. எங்கள் மாமனார் தற்போது இல்லை. நாட்டுப்பெண்கள் நால்வரும் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் இருக்கின்றோம்.நாங்கள் புதியதாக மாவிளக்கு ஏற்ற ஆரம்பிக்கலாமா?
Vidwan’s reply:
பெருமாளுக்கு புரட்டாசி மாதம் புதியதாக மாவிளக்கு ஏற்ற ஆரம்பிக்கலாம்.
அடியேன் அகத்தில் அடியேன் ஆசார்யனான ப்ரக்ருதம் ஸ்ரீமதழகிய சிங்கரின் படம் உள்ளது. அவருக்கும் எபெருமாள் படங்களுக்கு பூ வைப்பது போல் வைக்கலாமா?
Vidwan’s reply:
ஸ்ரீமதழகிய சிங்கரின் படத்திற்கு புஷ்பம் வைக்கலாம்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் காசி மற்றும் கேதாரிநாத் போகலாமா?
Vidwan’s reply:
காசி முக்திக்ஷேத்ரங்களில் ஒன்று. அங்கு பிந்துமாதவப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அங்கே கங்கையில் தீர்த்தமாடலாம். மேலும் அங்கே ஆதிகேசவப் பெருமாளும் எழுந்தருளியிருக்கிறார். மணிகர்ணிகா காட்-இல் எம்பெருமாள் கோயில் ஒன்று இருக்கிறது. அங்கும் சென்று எம்பெருமானைச் சேவித்துவிட்டு வரலாம். ஆகையால் காசி போவதில் தவறொன்றுமில்லை. கேதாரிநாத்தில் சிவன் கோவில் மட்டும்தான் உள்ளது ஆகையால் அங்குச் செல்லவேண்டிய அவசியமில்லை.
சாயம் சந்த்யாவந்தனம் எந்த்த திசையை நோக்கிச் செய்ய வேண்டும்? முழுவதுமே வடக்கு முகமாகச் செய்ய வேண்டுமா அல்லது அதில் அர்க்யப்ரதானம் மட்டும் மேற்கு முகமாகச் செய்ய வேண்டுமா?
Vidwan’s reply:
சாயம் சந்த்யாவந்தனத்தில் அர்க்யம் ஜபம் உபஸ்தானம் ஆகியவை மேற்கு நோக்கியும்; ஆசமனம் முதலியவை கிழக்கு/வடக்கு நோக்கிச் செய்யவேண்டும்.
அடியேன் லௌகீகத்தில் Biotechnology ஆராய்ச்சியில் மாணவனாக பணிபுரிகிறேன். அதனால் இக்கேள்வி. நாம் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவும் ஆசாரம் வழிவகுக்கிறது அல்லவா? ஆனால் பசு சாணத்தில் நிறைய கிருமிகள் இருக்கிற பட்சத்தில் நாம் ஏன் அதை சுத்தி செய்ய பயன்படுத்துகிறோம். என்றுமே நம் ஶாஸ்திரங்கள் மீது அடியேனுக்கு முழு நம்பிக்கை உண்டு. இருப்பினும் அறிவியல் கண்ணோட்டத்தில் காண்பதால் இந்தச் சந்தேகம். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
Vidwan’s reply:
பசுஞ்சாணத்தில் கிருமி இருந்தால் அது அசுத்தம். மூன்று நாட்களுக்கு மேல் சுத்தம் ஆகாது என்று ஶாஸ்திரம்.
பழைய காலத்து மண்தரைக்கு பூச்சி வராமல் இருக்க சாணி உபயோகப் பட்டது. தரையைச் சுத்தம் செய்ய, சில பாத்திரங்களைச் சுத்தம் செய்ய மட்டுமே இது பயன்படும். வேறு விதத்தில் பயன் படுத்தக்கூடாது. கை, கால் அல்லது பண்டங்கள் சுத்தம் செய்யவோ சாணி கூடாது. அதனால் அதன் மூலம் கிருமி அணுக வாய்ப்பே இல்லை.
மேலும், அகத்தில் தரையைச் சாணியால் சுத்தம் செய்தபின், நல்ல ஜலம் தெளித்து, துணியால் நன்கு துடைக்க வேண்டும். சாணத்தின் நாற்றம் அடையாளம் என எதுவும் இருக்கக் கூடாது. அப்போதுதான் ஶாஸ்த்ரப்படி அது சுத்தமாகும்.
அகத்தில் இருக்கும் புருஷாளுக்கு சைனஸ் தொந்தரவு இருப்பதால் தினமும் தலைக்குத் தீர்த்தமாட முடியவில்லை. அந்த நாட்களில் அவர்கள் பெருமாளுக்குத் திருவாராதனம் பண்ணலாமா?
Vidwan’s reply:
தலைக்குத் தீர்த்தமாட முடியாத சமயங்களில் பெருமாளைத் தொடாமல் அமுது செய்வித்தல் முதலான திருவாராதனம் மட்டும் செய்யலாம். மானசீகமாக ஆராதனம் செய்து அர்க்ய பாதியங்களெல்லாம் ஸமர்ப்பிக்கலாம். ஆனால் பெருமாளைத் தொட்டு திருமஞ்சனம் செய்வித்தல் முடியாது. மற்றவைகளை ஓரளவு ஆசாரமாக இருந்து செய்ய முடிந்தால் செய்யலாம்.
நம் ஸம்ப்ரதாயப்படி அகத்தில் செல்லப்ராணிகள் வளர்க்கலாமா? அவை உள்ளே வரலாமா?
Vidwan’s reply:
இதற்கு ஸம்ப்ரதாயம் என்று கிடையாது. நாய் முதலான ப்ராணிகள் நம் மேல் பட்டால் தீட்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் அவற்றை வளர்க்கக்கூடாது. பூனை முதலானவை இருந்தால் பாதகமில்லை.
1. செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு, துவாதசி மற்றும் அமாவாஸை அன்று துளசி க்ரஹிக்கூடாது என்றுள்ளது, மன்வாதி யுகதினம் என்று ஒரு வார்த்தை உள்ளது அப்படியென்றால் என்ன என்று தெரிவிக்கவும் ஸ்வாமி.
2. ஒரு வருடத்தில் என்றைக்கெல்லாம் நாம் துளசியைச் செடியிலிருந்து க்ரஹிக்கக்கூடாது?
Vidwan’s reply:
மன்வாதி, யுகாதி தினங்களில் துளசி க்ரஹிக்கக்கூடாது என்றிருக்கிறது. பஞ்சாங்கத்தில் மன்வாதி, யுகாதி தினங்கள் குறிப்பிட்டிருப்பார்கள். ஒவ்வொரு யுகம் ஆரம்பிக்கக்கூடிய நாள் அதற்கு யுகாதி என்று பெயர் அதாவது கலியுகம் ஆரம்பிக்கக்கூடிய நாள். அதே போல் யுகம் என்பது எப்படிக் காலத்தைக் குறிக்கிறதோ, அதேபோல் மன்வந்த்ரம் என்பதும் ஒரு காலமாகும். அந்த காலம் ஆரம்பிக்கக்கூடிய நாள் மன்வாதி என்று பெயர். அந்த நாட்களில் க்ரஹிக்கக்கூடாது என்று கணக்கு. அதை அவ்வளவு தீவிரமாகப் பார்ப்பதில்லை. அப்படித் தெரிந்தால் துளசி க்ரஹிக்காமல் இருப்பது நல்லது.
கேள்வியில் கூறியிருப்பது போல் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை முதலான கிழமைகளிலும், அமாவாஸை, மாதப்பிறப்பு போன்ற தர்ப்பண தினங்களிலும், துவாதசி அன்றைக்கெல்லாம் துளசி க்ரஹிக்கக்கூடாது.
அடியேனுக்கு போதுமான இடமில்லாததால், ஆசார்யன் பாதுகைகளை சாளக்கிராம மூர்த்தி எழுந்தருளியிருக்கும் பெட்டிக்கு முன் வைத்துதான் பாதுகாராதனம் செய்கிறேன். இப்படிச் செய்யலாமா?
Vidwan’s reply:
ஆசார்யன் பாதுகைகளை சாளக்கிராம மூர்த்தியோடு சேர்க்கக்கூடாது. பெருமாள் எழுந்தருளியிருக்கும் இடம் (அந்த மேடை), பெருமாள் பாத்திரங்கள் அவையெல்லாம் ஆசார்யன் பாதுகைகளோடு சேரக்கூடாது. அதனால் பாதுகைகளைத் தனியாகத்தான் ஏளப்பண்ணவேண்டும்.
மேலும் விரிவான விளக்கத்திற்கு சுதர்சனம் சோபக்ருது புரட்டாசி இதழில் Q47PUR23002 கேள்வியின் விடையை காணவும்.
கர்ம் விபாகா என்ற ஶாஸ்த்ர க்ரந்தத்தில் நாம் செய்யும் அபசாரங்களுக்கு எந்த மாதிரி ரோகம் வரும் என்ற குறிப்புள்ளது என்று கேள்விப்பட்டுள்ளேன். அதில் ஒன்று எம்பெருமானும் சிவனும் ஒன்று என்று நினைத்தால் உதர சம்பந்தமான ரோகம் வரும் என்று இருப்பதாக சொல்கிறார்கள். இதை ஸ்ரீவைஷ்ணவர்கள் எப்படிப் புரிந்துகொள்வது? நம் பெரியவர்களில் இவ்வார்த்தைக்கு என்ன சமாதானம் சொல்லியிருக்கிறார்கள்?
Vidwan’s reply:
நாம் எல்லா க்ரந்தங்களையும் பார்க்கவேண்டிய அவசியமில்லை. நம் பூர்வாசார்யர்கள் எந்த க்ரந்தங்களை ப்ரமாணமாகச் சொல்லியிருக்கிறார்களோ அதைப் பார்க்கவேண்டும். மனுஸ்ம்ருதி போன்ற பொதுவான, உயர்ந்ததான க்ரந்தங்களைத்தான் பார்க்கவேண்டும். மற்றவையெல்லாம் சிவ பக்தர்கள், சைவர்களுக்காகச் சொன்னவை. அதை நாம் பார்க்கவேண்டிய அவசியமில்லை.
மேலும், எம்பெருமானையும் சிவனையும் ஒன்றாக நினைத்தல் கூடாது என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். நாமும் அவ்வாறு நினைக்கவில்லையே. எம்பெருமான் மேம்பட்டவன். ஒன்றாக நினைப்பது தவறு என்ற விஷயம் சரிதான். யார் பெரியவர் என்பதற்கு ஸ்ரீமத் இராமாயணம், மஹாபாரதம், மனுஸ்ம்ருதி, யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி போன்றவைகளை அருளிய மஹாமஹா மஹரிஷிகளின் க்ரந்தங்களைத்தான் ப்ரமாணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மற்றைவையெல்லாம் அந்தந்த பக்தர்களுக்காகச் சொன்னவை. அவை பொதுவாகவோ, நமக்காகவோ சொன்னவையல்ல.
எந்த வயதில் பரந்யாஸம் செய்துகொள்ளலாம்? சிறு வயதிலேயே பரந்யாஸம் செய்துகொள்ளலாமா? அது சரியா?
Vidwan’s reply:
எந்த வயதில் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். சிறு வயதிலும் செய்துகொள்ளலாம்.
வேலைக்காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளிநாடு செல்லலாமா? பொதுவாக வெளிநாடு செல்வது கூடாது என்றிருக்கும் காரணம் என்ன? பாரத பூமி கர்மபூமி என்பதால் மட்டுமா அல்லது வேறு காரணங்களும் இருக்கிறதா? ஜம்பு த்வீபம் என்று நாம் சொல்வது போல் வெளிநாடுகளைக் குறிக்க என்ன பெயர் இருக்கிறது?
Vidwan’s reply:
பொதுவாக ஶாஸ்த்ரபடி பாரதபூமி கர்ம பூமி என்றும் வெளிநாடு போகக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறபடியால் அதை பெரியோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
துலா ஸ்நானம் எப்போது செய்யவேண்டும்? சந்தியாவந்தனம் செய்யும் முன் பண்ணும் ப்ராத ஸ்நானம் போதா? அல்லது மாத்யாஹ்நிக ஸ்நானம் முன்னரா? அல்லது இரண்டுவேளையில் எப்போது வேண்டுமானாலும் செய்யலாமா?
Vidwan’s reply:
துலா ஸ்நானம் ப்ராத ஸ்நானம் பண்ணும்போதே சந்த்யாவந்தனம் செய்வதற்கு முன்னரே சேர்த்து செய்துவிடலாம். இரண்டு வேளையும் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை.
மாத்யாஹ்நிக ஸ்நானத்திற்கு முன்னர் செய்யலாம், ஆனால் அதற்கு முன்னர் சாப்பிடாமல் இருத்தல் வேண்டும். மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்பவராக இருந்தால் அதற்கு முன்னர் துலா ஸ்நானம் செய்யலாம்.
எனது மாமனார் சமீபத்தில் ஆசார்யன் திருவடி அடைந்தார். எனது கணவர் அவர்களுக்கு ஒரே புத்திரன் ஆவார், நாங்கள் ஒரு வருடத்திற்கு கோவில்களுக்கோ, திவ்ய தேசத்திற்கோ, மலைமேல் இருக்கும் க்ஷேத்ரங்களுக்கோ போகலாமா?
Vidwan’s reply:
அவரவர் சொந்த ஊரில் உள்ள கோவில்களுக்குச் செல்லலாம். திவய் தேச உற்சவத்தில் கலந்து கொள்ளலாம். தீர்த்தயாத்திரையாக வடக்கே திவ்ய தேசத்திற்கெல்லாம் போகக்கூடாது. மலைமேல் இருக்கும் க்ஷேத்ரங்களுக்குப் போகக்கூடாது.
தர்ப்பணம் காவேரியில் செய்துவிட்டு வந்த பிறகு பெருமாள் திருவாரதனம் செய்யலாமா? பெருமாள் ஆராதனதிற்குப் பிறகுதான் பித்ரு தர்ப்பணம் என்று நியதியா? விளக்கவும்.
Vidwan’s reply:
பெருமாள் திருவாராதனத்திற்குப் பின் பித்ரு தர்ப்பணம் செய்வது நல்லது. அதேசமயம் காவிரியில் தீர்த்தமாடி பித்ரு தர்ப்பணம் செய்துவிட்டு, அகத்திற்கு வந்து பெருமாள் திருவாராதனம் செய்வது என்பதும் சில பேருடைய ஸம்ப்ரதாயத்தில் இருக்கிறது.
பெருமாள் திருவாராதனத்திற்கு உபயோக்கிக்கும் மணியைப் பாதுகாராதனத்திற்கு உபயோகிக்கலாமா?
Vidwan’s reply:
பாதுகா திருவாராதனத்திற்கு மணி சேர்க்கலாம் ஆனால் பெருமாளுடைய மணியைச் சேர்க்கக்கூடாது. தனியாக ஒன்று இருக்கவேண்டும்.
நாங்கள் Gated Communityல் இருக்கின்றோம். அடியேனுக்கு மட்டும் ப்ரஸமர்ப்பணம் ஆகியிருக்கிறது. அடியேனின் பார்யாளுக்கு நவராத்திரி சமயம் ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லாதவர்கள் கொடுக்கும் வெற்றிலை பாக்கு குங்குமம் தேங்காய் பழம் போன்றவற்றை நாங்கள் உபயோகிக்கலாமா? அது தேவதாந்தர சம்பந்தம் ஏற்படுத்துமா?
Vidwan’s reply:
தேவதாந்தர சம்பந்தம் இருப்பவர்கள் அகத்தில் கொடுத்த வெற்றிலை பாக்கு, குங்குமம், பழம் ஆகியவற்றை உபயோகிக்கக்கூடாது. உடைக்காத தேங்காயாக இருந்தால் அதை ஸமர்ப்பித்திருக்க முடியாது ஆகையால் அதை உபயோகிக்கலாம்.
அகத்து பெருமாளுக்கோ கோவிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கோ கண்டருளப்பண்ணிய தேங்காயைத் தளிகைக்கு உபயோகிக்கலாமா? அந்தத் தளிகையை எம்பெருமானுக்கு அமுது செய்விக்கலாமா?
Vidwan’s reply:
பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணிய தேங்காயை, தளிகைக்கு உபயோகிக்கலாம். அந்தத் தளிகையை பெருமாளுக்கு அமுது செய்விக்கலாம் என்பதாக சிலர் பண்ணுவதுண்டு. பெரியவர்கள் பண்ணுவதுண்டு.
அதேசமயம் அந்தத் தேங்காயைத் துருவி பெருமாளுக்கு அமுது செய்வித்து நாம் சாப்பிட்டுவிட்டோமேயானால், அதன் மீதி தேங்காயை மறுநாள் உபயோகித்தால் அந்தத் தளிகையை அமுது செய்விக்கக்கூடாது.
குறிப்புகள்:
பொதுவாக தேங்காய் சேர்க்காமல் ஒன்று சேர்த்து ஒன்று எனத் தனித்தனியாக எடுத்துவைத்து விடுவார்கள். தேங்காய் சேர்க்காமல் பெருமாளுக்கு அமுது செய்வித்த பிறகு இரண்டையும் ஒன்று சேர்த்துவிடுவார்கள். இது ஒரு ஸுக்ஷ்மம்.
மாதப் பிறப்பு தர்ப்பணம் மாதம் பிறப்பதற்கு முன்பே பண்ண வேண்டுமா? அல்லது மாதம் பிறந்த பின்னால் பண்ண வேண்டுமா?
Vidwan’s reply:
மாதப்பிறப்பு தர்ப்பணம் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு கணக்கு உண்டு. எல்லாம் ஒரே மாதிரி வராது. ஷடசீதியாக இருந்தால் மாதம் பிறந்த பின் பண்ணவேண்டும். அதிலும் எத்தனையோ கணக்கு இருக்கிறது. பின் நாளில் விரிவாகப் பார்க்கலாம்.
அடியேன் கணவர் சமீபத்தில் பரமபதித்து விட்டார்.எனக்கு இரண்டு பெண்கள்.என் மச்சினர் பிள்ளைதான் இப்போது கணவருக்கு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்கிறான். வருஷாப்திகம் முடிந்ததும் பின்னர் வரும் ஶ்ராத்தம் யார் செய்ய வேண்டும். மச்சினர் மகனே செய்யலாமா அல்லது அவனால் முடியாவிட்டால் என்ன செய்வது என்று சொல்லுங்கள்.
Vidwan’s reply:
உங்களுக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அந்தப் பெண்களுக்குப் பிள்ளைக் குழந்தைகள் இருக்கிறார்களா? அதாவது பேரன் இருக்கிறார்களா என்று தெரியப்படுத்தவும்.
கயா ஶ்ராத்தம் ஸமாஶ்ரயம் ஆகாதவர் செய்யலாமா? பலன் கிடைக்குமா? தம்பதியாகத்தான் செய்யவேண்டுமா?
Vidwan’s reply:
பஞ்ச ஸம்ஸ்காரத்திற்கும் (ஸமாஶ்ரயணத்திற்கும்) கயா ஶ்ராத்தத்திற்கும் சம்பந்தமில்லை. ஆயினும் கயாஶ்ராத்தம் ஸாவகாச ஶ்ராத்தம். நமக்கு விருப்பமான சமயத்தில் செய்யலாம். ஸமாஶ்ரயணம் உபநயநத்திற்குப் பின் காலதாமதம் செய்யாமல் முடிந்தவரை சீக்கிரமாகவே செய்ய வேண்டியது. ஆகையால் ஸமாஶ்ரயணத்திற்குப் பின் செய்வது உசிதம்.
கயா ஶ்ராத்தத்தில் பிண்டதானம் முக்கியம். நம் ஸம்ப்ரதாயத்தில் பார்வண ஶ்ராத்தத்திலே பிண்டதானம் செய்யப்படுகிறது. க்ருஹஸ்தன் பார்வண ஶ்ராத்தத்தை தன் அக்னியில் செய்ய வேண்டும். ஆகையால் ஔபாஸனம் செய்யவேண்டி இருப்பதால் விவாஹமானவர் தம்பதியாக செல்வதே உசிதம்