பங்குனி மாதத்தில் வீடு மாறலாமா?
Vidwan’s reply:
பங்குனி மாதத்தில் க்ருஹப்ரவேசம் செய்யும் வழக்கமில்லை. வீடும் மாறக்கூடாது.
ஒரு ஸ்த்ரீ கர்பமாக இருக்கும்போது ஏன் அவளது பர்தா க்ஷௌரம் செய்துகொள்ளக்கூடாது?
Vidwan’s reply:
பொதுவாக தீக்ஷா காலங்களில் சில நியமங்கள் சொல்லப்பட்டுள்ளது. தீக்ஷா என்பது ஒரு வ்ரதகாலம் போல். பலவிதமான தீக்ஷைகள் உண்டு, பல காலங்களில் தீக்ஷை சொல்லப்பட்டுள்ளது, உ.தா யாகதீக்ஷா, உபநயனம் சமயம், விவாஹத்திற்கு என்று தீக்ஷைகள் உண்டு. அந்தத் தீக்ஷா காலத்தில் அவர்கள் வபனம் செய்துகொள்ளக் கூடாது என்றிருக்கிறது.
அந்த ரீதியில் மனைவி கர்பமாக இருக்கும்போது அவளின் பர்தாவிற்கு தீக்ஷா காலம் சொல்லியிருக்கிறது. அதாவது, அவர் வ்ரதத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். பொதுவாகவே வ்ரததினங்களில் வபனம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்றிருக்கிறது. இது வ்ரதகாலமானபடியாலே வபனம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்பதாகும்.
நம் தூரத்து உறவினர் அல்லது தெரிந்தவர்கள் இல்லங்களில் அசந்தர்ப்பம் நிகழ்ந்தால் (வெளியூரில் நாம் நேரே செல்லமுடியாத சூழ்நிலையில்) அவர்களை விசாரிக்க குறிப்பிட்ட நாட்களில்/கிழமைகளில் மட்டும்தான் செய்ய வேண்டுமென வழக்கம் உள்ளதா? அப்படியெனில் எந்த நாட்கள் உகந்தது.
Vidwan’s reply:
இதைப்பற்றி பலவிதமான அபிப்ராயமுண்டு. ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு விதமான ஆசாரம், அதாவது ஸ்ரீரங்கத்தில் ஒருவிதமாக, காஞ்சியில் ஒருவிதமாக என்று பலவித ஆசாரம் இருக்கிறது. சிலபேர் ஒற்றைப்படை நாளில் (1,5,7..) துக்கம் விசாரிக்கவேண்டும் என்கிறார்கள். சிலர் இரட்டைப்படை நாள் என்றும், வேறு சிலர் 10 நாட்களுக்குள் எந்த நாளானாலும் பரவாயில்லை என்றும் சொல்கிறார்கள். நிறையபேர் திங்கட்கிழமை விசாரிக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் பொதுவாகவே திங்கட்கிழமை விசாரிப்பதைத் தவிர்ப்பார்கள்.
திங்கள் தவிர மற்ற எந்த நாளானாலும் பரவாயில்லை என்பது பொதுவாக நிறையபேரிடம் இருக்கும் கருத்து. அந்தந்தத் தேசத்தில் என்ன ஆசாரமோ அதன்படி செய்யவேண்டியது.
வைர நகை அணிவது பற்றி ஶாஸ்த்ரம் என்ன சொல்லுகிறது? ஒருவர் கட்டாயம் வைரக்கல் நகை அணியவேண்டுமா அல்லது அது வேறும் ஆடம்பர ஆணிகலனாகுமா?
Vidwan’s reply:
தங்கம் அணிவது எப்படி விசேஷமோ அதேபோல் வைரம் அணிவதும் விசேஷம்தான். அதனால் நம் உடம்பிற்கு சில க்ஷேமங்களெல்லாம் வரலாம். கட்டாயம் வைரநகை அணிந்துதான் ஆகவேண்டும் என்றெல்லாம் கிடையாது.
உ.தா சில புருஷர்கள் வைரக்கல் கடுக்கன் போட்டுக்கொள்வார்கள். அதை ஆடம்பரம் என்று சொல்லமுடியாது, ஆடம்பரமில்லாமலும் போட்டுக்கொள்ள முடியும். ஆனால் வைரத்தை மட்டும் நன்கு விசாரித்து செய்யணும். சில வைரத்திற்குச் சில தோஷங்கள் என்றெல்லாமுண்டு. அந்த வைரம் அவரை பாதிக்கும், அவர் குடும்பத்தை பாதிக்கும் என்றெல்லாமுண்டு. அதனால் இதைப்பற்றி நன்றாகத் தெரிந்தவர்களிடம் அந்த வைரக்கல்லுக்குத் தோஷம் இருக்கா இல்லையா என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதை அணியவேண்டும்.
கட்டாயம் வைரக்கல் இருக்கவேண்டும் என்றில்லை. ஆனால் சுபமான ரீதியில் ஸ்த்ரீகள், புருஷர்கள் வைரத்தில் போட்டுக்கொள்வார்கள், அது நல்லது. ஆடம்பரமாக நம்மவர்கள் யாரும் போட்டுக்கொள்ள மாட்டார்கள்.
துக்கம் திங்கள் விசாரித்து விட்டு வந்ததற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா?
Vidwan’s reply:
திங்கட்கிழமை விசாரித்துவிட்டு வந்தால் பரிகாரம் என்று ஒன்றும் கிடையாது. வழக்கத்தில் இல்லையே தவிர ஶாஸ்த்ரப்படி அப்படியில்லை. ஒருகால் மனதிற்குக் கஷ்டமாகயிருந்தால் பெருமாளை ப்ரார்த்தித்து ஸ்ரீஸ்துதியைச் சேவிக்கலாம். வேறு பரிகாரம் கிடையாது.
நாட்டுப்பெண் கர்ப்பவதியாய் இருக்கும் பக்ஷத்தில் மாமனார் தர்ச/ஸங்க்ரமண ஶ்ரார்த்தம் பண்ணலாமா?
Vidwan’s reply:
நாட்டுப்பெண் கர்ப்பவதியாய் இருக்கும் பக்ஷத்தில் மாமனார் தர்ச/ஸங்க்ரமண ஶ்ரார்த்தம் கட்டாயம் பண்ணவேண்டும். ஏனென்றால் அததெல்லாம் நித்யகர்மா,அதைப் பண்ணாமல் இருக்கக்கூடாது.
கர்பாதான ஸம்ஸ்காரம் என்றால் என்ன? அந்த ஸம்ஸ்காரத்தின் முக்கியத்துவம் என்ன என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.
Vidwan’s reply:
சாந்தி மூஹூர்த்தம் என்று சொல்வதுதான் கர்பாதான ஸம்ஸ்காரம். அது ஒரு குடும்பத்தினுடைய அபிவ்ருத்தி அதாவது அடுத்த சந்ததி வரவேண்டும் என்பதற்காக சில மந்திரங்களைச் சொல்லி செய்யக்கூடிய ஒரு சாந்திமூஹூர்த்தமாக இருக்கின்றபடியால் கர்ப ஆதான ஸம்ஸ்காரம், அதாவது கர்பத்தை உண்டாக்குதல் என்ற ரீதியில் கர்பாதான ஸம்ஸ்காரம் என்பதாகப் பெயர். அது நம் குடும்பத்தினுடைய க்ஷேமத்திற்கும், அபிவ்ருத்திக்கும், சகலவிதத்திற்கும் மங்கலங்களுக்கும் அது காரணமாக இருக்கின்றபடியால் விசேஷமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சிலர் மஞ்சள் ஶ்ரீசூர்ணமும், சிலர் சிகப்பு சூர்ணமும் இட்டுகொள்கிரார்களே? இதில் எது உகந்தது? தாத்பரியம் என்ன?
Vidwan’s reply:
இக்கேள்வியின் பதில் சுதர்சனம் ப்லவ வருடம் ஆடிமாத இதழில் (Q07JUL21001) கூறப்பட்டுள்ளது.
மஞ்சள் ஸ்ரீசூர்ணம் என்பது இயற்கையானது. சிகப்பு என்பது சிலது கலந்துவந்திருப்பது. வைதீகமாக இருப்பவர்கள் மஞ்சள் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்வார்கள். சிலர் சிகப்பை இட்டுக்கொள்வார்கள்.
ஏகாதசி அன்று துளசி ஸ்வீகரிக்கலாமா? விரததத்திற்குப் பங்கம் உண்டாகுமா?
Vidwan’s reply:
ஏகாதசி அன்று பூர்ண உபவாசம் இருப்பவர்கள் துளசியைச் சாப்பிடமாட்டார்கள். பெருமாள் தீர்த்தம் மட்டும் உட்கொண்டு பூர்ண உபவாசம் இருக்கவேண்டும். சிலர் அதாவது ஒரளவு பலகாரங்கள் எல்லாம் சாப்பிடலாம் என்பவர்கள் துளசியைச் சாப்பிட்டால் தவறொன்றுமில்லை.
அடியேனுக்கு ஆசார்ய ஸம்பந்தம் இன்னும் ஏற்படவில்லை சில சந்தேகங்கள்:
. மாத்வ ஸம்ப்ரதாயம் மற்றும் பகவத் இராமானுஜ ஸம்ப்ரதாயத்திற்கும் என்ன வித்யாசம்? இருவரும் ஸ்ரீவைஷ்ணவர்காள்தானே? விஷிஷ்டாத்வைதம் த்வைதம் இரண்டிற்கும் என்ன வித்யாசம்?
. ப்ரபத்தி செய்தாலே மோக்ஷம் கிடைக்குமா? பக்தி செய்தால் நமக்கு மோக்ஷம் கிட்டாதா? ஏன் ஸ்ரீவைஷ்ணவர்கள் ப்ரபத்தி மட்டுமே மோக்ஷத்திற்கு உபாயம் என்று கூறுகிறார்கள்?
. பக்தியோகம் மற்றும் பக்திக்கும் என்ன வித்தியாசம்?
. ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் பண்ண உபநயனம் ஆகியிருக்கவேண்டுமா? ஸ்ரீவைஷ்ணவ தீக்ஷை பெற பூணூல் அணிந்திருக்கவேண்டுமா?
. மஹாலக்ஷ்மீ தாயாரும் ஸ்ரீமன் நாராயணனும் ஒருவரா? பெருமாளின் அனுக்ரஹம் இல்லாமல் தாயார் மட்டும் தனித்து மோக்ஷம் அளிக்கமுடியுமா?
Vidwan’s reply:
Q1. மாத்வ ஸம்பரதாயம் மற்றும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பரதாயத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே விஷ்ணு பக்தர்கள் என்கின்ற ரீதியில் ஸ்ரீவைஷ்ணவர்கள்தான். ஆனால்கூட அவரவர்களுடைய கொள்கையில் வித்தியாசம் உண்டு. அதுதான் விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்பது.
விசிஷ்டாத்வைதம் என்றால் எல்லோருக்குள்ளும் அந்தர்யாமியாக பகவான் இருக்கின்றான். அந்தர்யாமி என்றால் உள்ளுக்குள்ளேயிருந்து நியமனம் பண்ணுபவராக பகவான் இருக்கிறான். பகவான் இல்லாத இடமே கிடையாது. இதை மாத்வ ஸம்பரதாயத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு ராஜா நியமனம் பண்ணுவதுபோல் பகவான் லோகத்தை ரக்ஷிக்கின்றான் என்று சொல்லுவார்கள். ராஜா வெளியில்யிருந்து கொண்டுதானே நியமனம் பண்ணிக்க கொண்டிருக்கிறான். ஆனால் இது அப்படிக்கிடையாது. எல்லா வஸ்துக்குள்ளும் அதாவது சேதனா/அசேதனா என அனைத்தின் உள்ளும் பகவான் ஆத்மாவாக இருக்கின்றான். அதனால்தான் அவனுக்குப் பரமாத்மா என்று பெயர். இந்த மாதிரியான ரீதியில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. இதைக் காலக்ஷேபம் பண்ணிக் கேட்டுக்கொள்ளலாம்.
அதனால்தான் விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்று பெயர். விசிஷ்ட அத்வைதம் என்றால் எல்லாத்தையும் சேர்த்து பகவான் இருக்கின்றபடியால் அதாவது சகல ஜகத் கூடவும் சேர்த்து இருக்கக்கூடிய பகவான் என்பவர் விசிஷ்டம், அவர் ஒருவர் தான் இருக்கின்றார்.
த்வைதம் என்றால் பகவான் வேறு ப்ரபஞ்சம் வேறு என்று பிரித்துச்சொல்வது த்வைதம்.
இரண்டு பேர் இருக்கிறார்கள் என்பது வாஸ்தவம். ஆனால் சேதனா/அசேதனா இவை இரண்டும் பகவானுக்கு விசேஷணமாக இருக்கின்றார்கள். எல்லாவற்றுக்குள்ளும் பகவான் இருக்கின்றார், மேலும் அவரை விட்டுப்பிரிந்து இருக்க முடியாது. எப்பொழுதுமே விசிஷ்டமாக கூடவே இருக்கின்றான். அதுவே விசிஷ்டாத்வைதம்.
——
Q2. ப்ரபத்தி செய்தால் மோக்ஷம் என்று ஶாஸ்த்ரம் சொல்லுகிறது. பக்தி செய்தால் மோக்ஷம் கிடைக்காது என்று சொல்லவில்லை. பக்தி செய்தால் மோக்ஷம் கிடைக்காதா என்ற கேள்வியே சரியான புரிதல் இல்லாததினால் வந்திருக்கிறது என்று நினைக்கின்றேன். மோக்ஷத்திற்கு நேர்காரணமாக இந்த ப்ரபத்தி என்பது வருகின்றது. பக்தி என்பது ப்ரபத்தியை மூட்டி அந்த மோக்ஷத்திற்குக் காரணமாக அமையும். உதாஹரணத்திற்கு, பத்து படிக்கட்டு ஏறி 11ஆவது படிக்கட்டில் மாடிக்குப் போகமுடியும் என்கின்ற போது, பத்தாவது படிக்கட்டு ஏறினால்தான் மாடிக்குப் போக முடியுமா? 1,2 படிக்கட்டு ஏறினால் போகமுடியாதா என்று கேட்பது போல் இருக்கிறது. அந்த ரீதியில் பக்தி என்பது கட்டாயம் வேண்டும். அதில் ஒரு சந்தேகமும் இல்லை.
——-
Q3. பக்தியில் பல நிலைகள் உண்டு. சாதாரணமான பக்தி என்பது ஒரு மனிதனுக்கு யாராக இருந்தாலும் எப்போதுமே தேவை. ப்ரபத்திக்குக்கூட அந்தச் சாதாரணமான பக்தி தேவை. அது இல்லாமல் இருக்க முடியாது. ப்ரபத்தி என்று சொன்னால் அவன் பக்தி இல்லாதவன் என்று அர்த்தம் கிடையாது. பக்தியோகம் என்பது பகவத் கீதையில் சொல்லப்பட்டிருப்பது போல் தியானம் அது. அது நம்மால் பண்ணமுடியாது என்ற ரீதியில் இருக்கின்றது. ப்ரபத்தி பண்ணுபவனுக்கும் அடிப்படையான பக்தி கட்டாயம் இருக்கும். அதனால் அவன் பக்தி இல்லாதவன் என்று சொல்ல முடியாது.
——
Q4. ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் பண்ண உபநயனம் ஆகியிருக்கவேண்டும் என்கின்ற நிர்பந்தம் கிடையாது.
ஸ்ரீவைஷ்ணவ தீக்ஷைப் பெற பூணூல் அணிந்திருக்கவேண்டும் என்கின்ற நிர்பந்தம் கிடையாது.
——
Q5. மஹாலக்ஷ்மீ தாயாரும் ஸ்ரீமன் நாராயணனும் கட்டாயம் ஒருவர் கிடையாது. இரண்டு பேர்.
பெருமாளின் அனுக்ரஹம் இல்லாமல் தாயார் மட்டும் தனித்து மோக்ஷம் அளிக்கமுடியுமா என்று கேட்டால், ஶாஸ்த்ரங்களில் அப்படிச் சொல்லவில்லை. ஶாஸ்த்ரம், வேதம், இதிஹாச-புராணம் எல்லாவற்றிலும் பெருமாள்-தாயார் திவ்யதம்பதிகளாக இருந்து மோக்ஷம் கொடுக்கிறார்கள் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் இதைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமேதவிர தனியாக முடியுமா முடியாதா என்றெல்லாம் ஆலோசனையெல்லாம் பண்ணவேண்டாம். பொதுவாக க்ரந்தங்களில் என்ன சொல்லியிருக்கிறது, ஆழவார் ஆசார்யார்கள் என்ன சொல்லியிருகிறார்கள் என்றால், திவ்யதம்பதிகள் இரண்டுபேருமாக மோக்ஷம் கொடுக்கிறார்கள்.
Q1. ஸ்ரீவைஷ்ணவராக மாற ஆசைப்படும் ஒருவர், பூண்டு வெங்காயம் சாப்பிட்டால் ஸ்ரீவைஷ்ணவராகும் தகுதியை இழக்கின்றாரா? குடும்பச்சூழல் காரணமாய் சாப்பிட நேர்ந்தால் அது பாபமாகுமா?”
Vidwan’s reply:
ஸ்ரீவைஷ்ணவர் என்றால் விஷ்ணு பக்தர் என்று அர்த்தம். பகவானுடைய திருவுள்ளம் உகக்கும்படியாக நடந்தால் அவருக்கு ஸ்ரீவைஷ்ணவத்தில் பூர்த்தி இருக்கு அன்று அர்த்தம். அப்படியில்லையென்றால் பூர்த்தி இல்லாமல் அவரும் வைஷ்ணவர் என்கின்ற ரீதியில் நிறைவான ஒரு வைஷ்ணவராக ஆகமுடியாது என்கின்ற நிலை வரும்.
பூண்டு வெங்காயம் சாப்பிடுவதில் வைஷ்ணவர், ஸ்மார்த்தர் என்றெல்லாம் கிடையாது. அது ஒரு ஸாத்வீகமான ஆகாரம் கிடையாது. பகவான் என்ன சொல்லி இருக்கிறார் என்றால், என்னுடைய பக்தனாக இருக்கின்றவன் ஶாஸ்த்ரத்தில் என்னுடைய அபிப்ராயமாக என்னென்ன இருக்கின்றதோ அதை மதித்து நடக்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அந்த ரீதியில் இதைச் சாப்பிடக் கூடாது என்றிருக்கிறது. அதனால் அதைச் சாப்பிடாமல் இருந்தால் வைஷ்ணவத்வம் பூர்த்தியாக இருக்கும் . இல்லாவிட்டால் அது நிறைவு பெறாமல் இருக்கும்.
குடும்பச்சூழல் காரணமாய் சாப்பிட நேர்ந்தாலும் அது பாபமாகும். ஏனென்றால் அதைச் சாப்பிடக்கூடாது என்று ஶாஸ்த்ரம் சொல்லி இருக்கிறது. அதனால் அது பாபமாகும். அது ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் பொதுவானது.
Q2. ஸ்ரீவைஷணவர் துளசிமாலையை நித்யமாகவே கழுத்தில் தரிக்கலாமா?”
Vidwan’s reply:
ஸ்ரீவைஷ்ணவர் துளசிமாலையை தரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. துளசி மாலையில் பலவகை உண்டு. ப்ரதிஷ்டை பண்ணாத துளசி மாலையை பெரியோர்கள் ரொம்ப தரிப்பதில்லை. சில ஸம்ப்ரதாயத்தில் தரித்திருக்கிறார்கள். நம் ஆழவார் ஆசார்ய ஸம்ப்ரதாயத்தில் ப்ரதிஷ்டை பண்ண துளசி மாலையை பலபேர் தரித்துக்கொண்டிருக்கிறார்கள். ப்ரதிஷ்டை பண்ணால் அதில் சில நியமனங்கள் எல்லாம் உண்டு. தீட்டு காலத்தில் தரிக்கக்கூடாது. பெரியோர்களிடம் கேட்டுக்கொண்டு தரிக்கலாம்.
மந்த்ராலயம் (ஜீவ சாமாதிக்கு) ப்ரபன்னர்கள் போகலாமா? போய்ச் சேவிக்கலாமா?
Vidwan’s reply:
ப்ரபன்னர்கள் மந்த்ராலயத்திற்குப் போய்ச்சேவிக்க வேண்டிய அவசியமில்லை. நம் ஆழ்வார்கள், ஆசார்யர்கள் அவர்களை நாம் சேவித்தால் போதும்.
மாஹாளயபக்ஷத்தில் மாவிளக்கு ஏற்றலாமா?
Vidwan’s reply:
இதற்குப் பதிலை பிறகு தெரிவிக்கின்றோம்.
அடியேனின் மாமனார் பரமபதித்து சிலநாட்களே ஆனதால், த்வஜஸ்தம்பம் இருக்கும் கோவில்களுக்கு போகக்கூடாது என்று கூறினார்கள். அதன் காரணம் என்ன என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
நாம் துக்கத்தில் இருக்கிறோம் என்பதுதான் காரணம். நாம் துக்கத்தை அனுஷ்டானம் பண்ணவேண்டும். அந்த ரீதியில் கொண்டாட்டங்கள், உத்ஸவங்கள், நாலுபேர் சேர்ந்து இருக்கக்கூடிய இடங்கள், அங்கெல்லாம் சிலநாட்கள் போகக்கூடாது என்று சொல்வார்கள். அதில் சில சங்கடங்கள் இருக்கும். வெளியில் இருப்பவர்கள், புதிதாகப் பார்ப்பவர்கள் எல்லாம் விசாரிக்க நேரிடும். இதெல்லாம் கோவிலில் நடக்கலாம். இதைத் தவிர்ப்பதற்காகத்தான் கோவில்களுக்குப் போக வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அகத்தில் இருக்கும் புருஷர் ஸம்ப்ரதாய முறையைப் பின்பற்ற விருப்பமில்லையென்றால், அவ்வகத்து ஸ்த்ரீ சாளக்கிராம பெருமாளுக்கு ப்ரசாதம் அமுதுசெய்யலாமா? வேறு என்னவெல்லாம் பண்ணலாம்?
Vidwan’s reply:
அகத்தில் இருக்கும் புருஷர் ஸம்ப்ரதாய முறையைப் பின்பற்ற விருப்பமில்லையென்றால், அவ்வகத்து ஸ்த்ரீ சாளக்கிராம பெருமாளுக்குத் தாராளமாக ப்ரசாதம் அமுதுசெய்யலாம். மேலும் பெருமாளுக்குத் திருவிளக்கு ஏற்றி, கோலம் போட்டு, பெருமாளுக்கு ஸ்தோத்ர பாடங்களெல்லாம் சேவிக்கலாம்.
அடியேனின் திருத்தகப்பனார் டிசம்பர் மாதம் பரமபதித்துவிட்டார். அடியேன் நதி ஸ்நானம் செய்யலாமா?
Vidwan’s reply:
நதி ஸ்நானம் பண்ணலாம். அதாவது தீர்த்த யாத்ரையாகப் பண்ணி புண்ய நதி (கங்காநதி) ஸ்நானம் வேண்டாம். வேறு ஏதாவது ஒரு காரணத்தினால் ஸ்ரீரங்கம் போகவேண்டி வந்தால் அப்பொழுது காவேரி ஸ்நானமெல்லாம் பண்ணலாம்.
அபர காரியத்தில் சபீண்டிகரணத்தில் விஷ்வே தேவர், விஷ்ணு மற்றும் பித்ரு ஸ்தானங்களில் இருந்தால், ஒவ்வொரு ஸ்தானத்துக்கும் எத்தனை நாட்கள் எந்த மாதிரி தீட்டு உண்டு? பிராயச்சித்தம் எத்தனை காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்ற விவரங்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்
Vidwan’s reply:
இதற்கு PDF இருக்கிறது. அதை விரைவில் பகிர்கின்றோம்.