சோபகிருது – பங்குனி – ஆசாரஅனுஷ்டானம்


அஷ்டகா மற்றும் அன்வஷ்டகா என்றால் என்ன? ஏன் அந்த நாட்களில் நாம் தர்ப்பணம் செய்கிறோம்?

Vidwan’s reply:

மாக மாசம், பௌர்ணமி திதிக்குப் பிறகு வரக்கூடிய க்ருஷ்ணபக்ஷ அஷ்டமி திதிக்கு அஷ்டகா என்று பெயர். அடுத்த நாள் அன்வஷ்டகா, அதாவது அஷ்டமியைத் தொடர்ந்து வரக்கூடியதால் அன்வஷ்டகா என்று பெயர்.

மாக மாசம் என்பது பித்ரு மாசமாகும். மக நக்ஷத்திரத்திற்கு, பித்ருகள்தான் தேவதை. அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருகிறபடியால் மாக மாசம் என்று பெயர். நம் கணக்குப்படி மாசி மாசம் என்று வரும். ஆக பித்ரு மாசம், அதில் வரும் அஷ்டமி திதியும் பித்ரு திதி ஆகையால் அது விசேஷமாகிறது. மேலும் ஏகாஷ்டக ஶ்ராத்தம் பண்ணவேண்டும் என்றும் ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ளது. அதற்கு ப்ரதிநிதியாகதான் நாம் தர்ப்பணம் பண்ணுகிறோம். பித்ருகளுக்கு விசேஷமாகும்.

அனு என்றால் தொடர்ந்து வரக்கூடியது என்பதாகும். அடுத்த நாள் அன்வஷ்டகா பண்ணவேண்டும் என்பதும் ஶாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.


வாடகை வீட்டில் புகுதற்குப் பங்குனி மாத நன்னாளில் பால் காய்ச்சலாமா?

Vidwan’s reply:

பங்குனி மாதத்தில் பால் காய்ச்சும் வழக்கம் கிடையாது.


துவாதசி நாளில் வாழை சம்பந்தமான காயோ, பழமோ ஏன் சாப்பிடக்கூடாது?

Vidwan’s reply:

துவாதசி நாளில் வாழை சம்பந்தமான காயோ, பழமோ சாப்பிடக்கூடாது என்று ஶாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு விஞ்ஞான ரீதியாக என்ன காரணமென்றால், முதல் நாள் ஏகாதசி அன்று உபவாசம் இருப்பதினால், நம் உடம்பில் வாய்வு ஏற்பட்டிருக்கும் (gastric). வாழை என்பது அந்த வாயுவை கூடுதலாக்குமே தவிர குறைக்காது ஆகையால் அதைச் சாப்பிடக்கூடாது என்று வைத்திருக்கலாம். ஆசாரமும் ஆரோக்யமும் கலந்ததே நம் சம்ப்ரதாயம் என்று இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.


அடியேன் மாதப்பிறப்பு, அமாவாசை மற்றும் தகப்பனாரின் ஶ்ராத்தம் ஆகியவற்றை வருடந்தோறும் செய்து வருகிறேன். அஷ்டகா, அன்வஷ்டகா ஆகியவற்றையும் செய்து வருகிறேன். இந்தச் சோபக்ருது வருடம் மாசி மாதம் அஷ்டகா, அன்வஷ்டகா தர்ப்பணங்கள் செய்யத் தவறிவிட்டேன். இப்பொழுது என்ன செய்வது?

Vidwan’s reply:

இந்த வருடம் அஷ்டகா, அன்வஷ்டகா தவறினால் தவறினதுதான். அதைத் திரும்பிச் செய்ய வாய்ப்பில்லை.


பெருமாளை ஏன் அக்ஷதை சேர்த்து வழிபடக் கூடாது? இந்தத் தடை சாளக்கிராம பெருமாளுக்கு மட்டுமா அல்லது விக்ரஹ, த்வாரகா சிலா பெருமாள்களுக்குமா?

Vidwan’s reply:

சாளக்கிராமம், விக்ரஹ ரூபமான பெருமாளுக்கு நித்யப்படி திருவாராதனம் ஜலம் மூலமாகப் பண்ணவேண்டும் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அக்ஷதை மூலமாகப் பெருமாள் திருவாராதனம் என்பது ஒரு ப்ரகாரம். ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமத்தில் ப்ரதானமாகப் பெருமாள் ஏளியிருக்கும்போது தீர்த்தம் முதலியவற்றால் திருவாராதனம் பண்ணச்சொல்லியிருப்பதால் நாம் பண்ணுகிறோம். சில சமயம் கும்பத்தில் ஆவாஹனம் பண்ணும்போது அக்ஷதை சேர்ப்பார்கள். அதில்லாமல் ஶௌநக பகவான் சொல்லியிருக்கும் சில ப்ரக்ரியைகள் இருக்கிறது. அவற்றைக் காட்டிலும் ஸ்ரீ பாஞ்ச்சராத்ர ஆகம ப்ரக்ரியை ப்ரதானம் என்பதால் அதைப் பண்ணிக்கொண்டிருக்கிறோம். அதுவே விசேஷமானதாகும்.


ந்ருஸிம்ஹ அவதாரம் ஒரு சதுர்த்தசி மாலைப் பொழுதில் நிகழ்ந்தது. மஹாப்ரதோஷ காலம் என்பது த்ரயோதசியின் மாலைப்பொழுது ஆகும். அப்படியிருக்க, நாம் மஹாப்ரதோஷ காலத்தில் சிறப்பாக லக்ஷ்மீ ந்ருஸிம்ஹரை ஏன் வழிபடுகிறோம்? மேலும் மஹாப்ரதோஷ காலத்தில் ந்ருஸிம்ஹரையும், ஸ்ரீராமரையும் தவிர ரங்கநாதன் போன்ற பிற பெருமாள்களை வழிபடலாகாது என்கிறார்களே?

ஸ்ரீராமருக்கும் மஹாப்ரதோஷ காலத்திற்கும் என்ன தொடர்பு என்று விளக்கவும்.

ந்ருஸிம்ஹருக்குப் பானக நைவேத்யம் ஏன் செய்கிறோம்?

Vidwan’s reply:

ஸ்ரீ ந்ருஸிம்ஹ அவதாரம் என்பது மஹாப்ரதோஷம் தினத்தில் அல்ல சதுர்தசியில்தான் அவதாரம். பொதுவாகவே சாயங்காலம் அஸ்தமன காலத்திற்கு ப்ரதோஷ காலம் என்று பெயர். அந்த ரீதியில் அவருக்கு அது விசேஷம் என்றிருக்கிறது. மேலும் ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஆராதனம் மஹாப்ரதோஷ காலத்தில் விசேஷம் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கிறது அதனால் நாம் அதைப்பண்ணுகிறோம்.

“ந்ருஸிம்ஹம் ராகவம் விநா” என்று ப்ரதோஷ காலத்தில் ராகவனையும் சேவிக்கலாம் என்று ஆகமங்களில் சொல்லப்படிருக்கிறது. தனிப்பட்டதாக என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளதால் சிலர் அனுஷ்டானத்தில் ப்ரதோஷ காலத்தில் ராகவனையும் சேவிப்பது என்று கொண்டுள்ளனர். வேறு சிலர் ந்ருஸிம்ஹனைத் தவிர யாரையும் சேவிப்பதில்லை என்றும் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ ந்ருஸிம்மருக்கு பானக நைவேத்யம் விசேஷம் என்று சொல்லியிருக்கிறபடியினாலேயும், ஸம்ப்ரதாயத்தில் இருக்கின்ற படியினாலேயும் நாம் செய்கின்றோம்.


ஸ்ரீவராஹந்ருஸிம்ஹனாக அஹோபிலத்திலும், சிம்மாசலத்திலும் மட்டும் வழிபடக் காரணம் என்ன?

Vidwan’s reply:

ஸ்ரீ வராஹந்ருஸிம்ஹ மூர்த்தி அஹோபிலத்திலும், சிம்மாசலத்திலும் ஏளி இருக்கிறார். அதாவது வராஹப் பெருமாளும் நரசிம்ம பெருமாளும் சம்பந்தம் உள்ளவர்கள். ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, இவர்கள் இருவரும் இரட்டையர்கள். அவர்களை வதம் செய்வதற்காக வராஹப் பெருமாளாகவும் ந்ருசிம்ஹ பெருமாளாகவும் ரூபம் எடுத்தார் எம்பெருமான். பெரிய ஆபத்தை போக்கியவர்கள். ந்ருஸிம்ஹ மூர்த்தி என்று வரும்பொழுது ஆகமங்களில் பலவிதமான மூர்த்திகளை ப்ரதிஷ்டை பண்ணுவதற்குச் சொல்லி இருக்கிறார்கள். அதில் வராஹ ந்ருஸிம்ஹ மூர்த்தி என்பவரும் ஒருவர். அதை அந்தத் திவ்யதேசங்களில் ப்ரதிஷ்டை செய்திருக்கிறார்கள் அவரைதான் நாம் சேவிக்கின்றோம்.


அகத்தில் உள்ள சாளக்கிராம பெருமாளைப் புகைவண்டியில் ஏளப் பண்ணி கொண்டு போகலாமா? ஆம் எனில், அதற்கு உரியமுறை யாது? மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் யாவை?

Vidwan’s reply:

வேறு வழியில்லை என்றால் சாளக்கிராம பெருமாளைப் புகைவண்டியில் ஏளப் பண்ணிக் கொண்டுப் போகலாம். அந்தப் பெருமாளைப் பத்திரமாக ஒரு பெட்டியில் ஏளப் பண்ணி, மேலே சால்வை, பட்டு முதலான வஸ்திரங்களால் அவரைச் சுற்றி, சுத்தமாக அவருக்கு எந்தவிதமான அசுத்தமும் படாதபடி அவரை அப்படியே ஒரு பையில் வைத்து ஏளப் பண்ணவேண்டும். அந்தப் பையை கீழே வைக்கக்கூடாது. அசுத்தம் படுகின்ற இடத்தில் வைக்கக்கூடாது. முடிந்தவரை தன்னிடத்திலேயே அந்தப் பையை வைத்துக்கொண்டு மரியாதையுடன் அவரை ஏளப் பண்ண வேண்டும்.


தர்ம ஶாஸ்த்ரத்தில் கூறப்பட்டுள்ள சத்ரய, ப்ராஜாபத்ய, க்ருச்ரங்களைச் தற்போது எவ்வாறு கடைபிடிப்பது? இவையெல்லாம் தற்காலத்திய நடைமுறையில் சாத்தியமா?

Vidwan’s reply:

இந்தக் காலத்தில் இந்த க்ருச்ரங்களை எல்லாம் செய்ய முடிவதில்லை. இதற்குப் பதிலாக “க்ரிச்ர ப்ரதிநிதி யத் கிஞ்சித் ஹிரண்ய தானம்” என்று சொல்லி பைசா தானம் பண்ணச் சொல்லியிருக்கிறார்கள். அதை வாத்தியார்கள் சொல்லிக் கொடுத்து எல்லாரும் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த ரீதியில் செய்வது போதுமானதாகும்.


நெருங்கிய உறவினரை இழந்தவர்க்கு ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷையில் இரங்கல் தெரிவிப்பது எப்படி?

Vidwan’s reply:

பொதுவாக எல்லோரும் தெரிவிப்பது போல் நாமும் தெரிவித்துக் கொள்ளலாம். உங்கள் துக்கத்தில் நான் பங்கு கொள்கிறேன், நம்மால் என்ன செய்ய முடியும், பகவத் சங்கல்பம் என்று ஒன்று உள்ளது, நாம் எல்லோரும் அதற்குக் கட்டுப்பட்டவர்கள், முதலானவைகளைதான் சொல்ல முடியும். நாமும் தெரிவித்துக் கொள்ளலாம். அவ்வாறு சொல்லும் பொழுது பகவத் சங்கல்பத்தை விடாமல் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

யாராவது பெரியோர்கள் (அம்மா/அப்பா) பரமபதித்து விட்டால் மாத்ரு கைங்கர்யம்/பித்ரு கைங்கர்யம் ப்ராப்தம் ஆயிற்று போல் இருக்கிறது என்று பரிபாஷையாக விசாரிக்கலாம்.

மிகவும் பெரியவர்களாக இருந்தால் பரமபதத்தில் கைங்கர்யத்திற்குப் பெருமாள் அவர்களை அழைத்துக் கொண்டு விட்டார் என்று விசாரிக்கலாம்.

இளையவர்களாக இருந்தால் பகவத் சங்கல்பம். ஏதோ இப்படி ஆகிவிட்டது என்ன செய்வது என்று விசாரிக்கலாம்.

இவை துக்கம் விசாரிக்க ஸ்ரீ வைஷ்ணவ பரிபாஷைகள்.

திரு நக்ஷத்திரமாக இருந்தால், அடியேன் சேவித்துக் கொள்கிறேன். ஸ்வாமி தண்டம் ஸமர்ப்பித்துக் கொள்கிறேன், அநுக்ரஹிக்க வேண்டும் என்று வைஷ்ணவ பரிபாஷையில் ப்ரார்த்தித்துக் கொள்ளலாம். வேண்டுமானால் திருப்பல்லாண்டு பாடலாம்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top