சோபகிருது – புரட்டாசி – ஆசாரஅனுஷ்டானம்


லக்ஷ்மீ ந்ருஸிம்ஹருக்கு நீராஜனதீபம் தேங்காய் மூடியில் ஏற்றலாமா?

Vidwan’s reply:

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹருக்கு நீராஜன தீபம் தேங்காய் மூடியில் சில ஊர்களில் சில ஸம்ப்ரதாயத்தில் வழக்கத்தில் உண்டு. தாங்கள் அவ்வழக்கத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தால் தாராளமாக ஏற்றாலாம்.


பாதுகா ஆராதனம் தொடர்பான பின்வரும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்

a. நான் ஒவ்வொரு துவாதசியிலும் பாரணைக்கு முன் பாதுகா ஆராதனை செய்கிறேன். மற்றும் ஆசார்ய திருநக்ஷத்திரத்தில் நைவேத்யமாக பழங்கள் அல்லது கல்கண்டு மட்டுமே அம்ஸிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லி இருக்கிறார்கள். கேசரி, பாயசம் போன்ற சமைத்த உணவுகளை ஏன் பாதுகைகளுக்கு அம்ஸிக்கக் கூடாது என்று விளக்க ப்ரார்த்திக்கின்றேன்.

b.எனது ஆசார்யன் ப்ரக்ருதம் 46வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர். ஆனால் நான் 45வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கரின் பாதுகைகளை ஆராதனை செய்து கொண்டு வருகின்றேன். ப்ரக்ருதம் ஸ்ரீமத் அழகியசிங்கரின் பாதுகைகளையும் நான் பெற வேண்டுமா என்று பதில் அளிக்க ப்ரார்த்திக்கின்றேன் ?

c.பாதுகா ஆராதனைக்கு என்று தனியாக தட்டுகள், வட்டில்கள் மற்றும் விளக்குகளை பயன்படுத்துகின்றேன். இவற்றை நான் பெருமாள் திருவாராதனத்திற்கு உபயோகப்படுத்துவதில்லை.

[என்னிடம் ஒற்றைத் திருமணி மட்டுமே உள்ளது. அதை நான் பெருமாள் மற்றும் பாதுகா ஆராதனத்திற்கு உபயோகப்படுத்துகின்றேன். இது சரியா? இல்லை நான் பாதுகா ஆராதனத்திற்கு மற்றொரு திருமணி வாங்கி உபயோகப் படுத்த வேண்டுமா என்று தெளிவிக்க ப்ராத்திக்கின்றேன்.

d.ஏன் நாம் பாதுகா தீர்த்தத்தை முதலில் தெளித்துக்கொண்டு பின் ஸ்வீகரிக்கின்றோம்? மற்றும் பெருமாள் தீர்த்தத்தை முதலில் ஸ்வீகரித்து விட்டு பின் தலையில் தெளித்துக் கொள்கின்றோம்?

e.பாதுகா ஆராதனம் பெருமாள் சந்நிதியில் இருந்து கொஞ்சம் தள்ளி பண்ணும் படி எனக்கு சொல்லி இருக்கிறார்கள் . ஆனால் பெருமாளை விட ஒருவனுடைய ஆசார்யனே அவனுக்கு மேல் என்று சொல்லி இருக்கும்போது ஏன் பாதுகா ஆராதனம் பெருமாள் ஆராதனத்துடன் சேர்ந்து பண்ணப் படுவதில்லை . மேலும் பாதுகாவிற்கு ஏன் துளசி சேர்க்கக் கூடாது?

f. வரும் அக்டோபரில் அமெரிக்காவில் சூர்ய க்ரஹணம் ஏற்படுகிறது. சூர்ய கிரகணத்தின் போது பெருமாள் ஆராதனை (ஜபம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் தர்ப்பணம் ஆகியவற்றுடன்) செய்யப் போகின்றேன். பாதுகைகளுக்குத் திருமஞ்சனம் க்ரஹணத்தின் போது செய்ய வேண்டுமா அல்லது கிரகணத்திற்குப் பிறகு செய்ய வேண்டுமா என்பதை தெளிவிக்கப் ப்ரார்த்திக்கின்றேன் ?

Vidwan’s reply:

a. பாதுகைக்கு அம்சை பண்ண பதார்தத்தை உள் பாத்திரங்களோடு சேர்க்கக்கூடாது. அதாவது தளிகை பண்ணும் பாத்திரங்கள் உட்பட பெருமாள் பாத்திரங்கள் என்று சில பாத்திரங்கள், நாம் உபயோகிக்கும் பாத்திரங்கள் என்று தனித்தனியாக வைத்திருப்போம். அதே போல் பாதுகா பாத்திரங்கள் தனி. அந்தப் பாதுகைக்கு உபயோகப்படுத்திய பாத்திரங்கள், அவற்றிற்கு ஸமர்ப்பித்த புஷ்பம், பழங்கள் என எதுவுமே பெருமாளுக்கு இருக்கும் பாத்திரங்களில் சேர்க்கக்கூடாது. ஆகையால் கேசரி முதலியவற்றை ஸமர்ப்பித்தால் அவைகளை உள்ளே சேர்க்க முடியாது என்பதாலும், பாதுகாராதனம் சுலபமாகப் பண்ணவேண்டியது என்பதாக ஸம்ப்ரதாயத்தில் வசனங்கள் இருக்கிறதாலும் இருப்பதைச் செய்தால் போதுமானதாகும். கேசரி முதலியவை பண்ணால்தான் விசேஷம் என்பதல்ல, நம் ஸம்ப்ரதாயத்தில் கூறியிருக்கும்படிச் செய்வதே விசேஷமாகும்.

b. முடியுமானால் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கரின் பாதுகைகளை ஏளப்பண்ணி ஆராதிக்கலாம். கட்டாயம் செய்தே ஆகவேண்டும் என்ற நிர்பந்தமில்லை. பக்தியோடு செய்தாலே விசேஷமாகும்.

c. பெருமாளுடைய திருமணியை பாதுகைக்கு உபயோகப்படுத்துவது சரியில்லை. பாதுகாராதனத்திற்குத் தனியாக ப்ரதிஷ்டை ஆகாத திருமணியாக இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பாதுகைக்குத் திருமணி ஸமர்ப்பிக்கவேண்டும் என்ற நிரபந்தம் கிடையாது. ஸமர்ப்பித்தால் விசேஷம்.

d. நாம் ஏன் பாதுகா தீர்த்தத்தை முதலில் தெளித்துக்கொண்டு பின் ஸ்வீகரிக்கின்றோம் மற்றும் பெருமாள் தீர்த்தத்தை முதலில் ஸ்வீகரித்து விட்டு பின் தலையில் தெளித்துக் கொள்கின்றோம் என்றால் இரண்டும் வெவ்வேறு அதன் வித்யாசத்தைக் காட்டுவதற்காக இப்படி ஒரு வழக்கம். இரண்டு தீர்த்தமும் விசேஷம் தான்.

e. பெருமாளை நமக்குச் சேர்த்து வைக்கிறபடியினாலே ஆசார்யன் உயர்ந்தவர் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் பெருமாளைக் காட்டிலும் உயர்ந்தவர் என்ற அர்த்தமில்லை ஏனென்றால் அவர் பெருமாளுக்கு தாசர், மேலும் எம்பெருமான்தான் ஸர்வ பேருக்கும் ஸ்வாமி, அவரைக் காட்டிலும் உயர்ந்தவர் யாரும் கிடையாது. ஆசார்யன் பெருமாளுக்கு ஸ்வாமி என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. நமக்கு அவர் பெருமாளையே சேர்த்து வைப்பதால் உயர்ந்தவர் என்று சொல்கிறோம். ஆசார்யன் எப்போதுமே எம்பெருமானுக்கு தாசர் ஆகையால் அவர் திருப்பாதுகைகளை பெருமாளுக்குக் கீழ்தான் ஏளப்பண்ணவேண்டும்.

துளசி என்பது பெருமாளுக்கு மட்டுமே உரியது அதை வேறு யாருக்கும் ஸமர்ப்பிக்கக்கூடாது. கால்களில் படக்கூடாது ஆகையால் பாதுகைக்கு ஸமர்ப்பிக்கக்கூடாது. அவர் நித்யஸூரி, பெருமாளுக்குச் சேவகம் பண்ணுபவர். நாம் அந்த நித்யஸூரிகளுக்கும் தாசர்களாவோம். ஆகையால் ஆசார்யனே ஆனாலும் அவருடைய திருவடிகளில் துளசி படக்கூடாது.

f. சூர்ய க்ரஹணத்தின்போது பாதுகைக்குத் திருமஞ்சனம் செய்யவேண்டிய அவசியமில்லை. க்ரஹணத்திற்குப் பிறகு செய்யலாம்.


நாம் நித்யமும் தேவரிஷி, காண்டரிஷி தர்ப்பணம் செய்து வந்தால்(உபாகர்மா நாளில் செய்வது போல்) மாலையில் பலகாரம் மட்டுமே உட்கொள்ள வேண்டுமா?

Vidwan’s reply:

நித்யம் செய்யும் தேவரிஷி, காண்டரிஷி தர்ப்பணத்திற்கு மாலையில் பலகாரம் உண்டா என்றால் கிடையாது. செய்யவேண்டிய அவசியமும் இல்லை. மேலும் உபாகர்மா நாளில் தேவரிஷி பித்ருரிஷி தர்ப்பணத்திற்காக பலகாரம் என்று சொல்லப்படவில்லை. அது காயத்ரி ஜபத்திற்குக்காக சொல்லப்பட்டவை. அதாவது முதல்நாள் சாப்பிடாமல் இருந்து அடுத்தநாள் காயத்ரிஜபம் செய்யவேண்டும் என்றிருக்கிறது. முழுபட்னியிருக்க முடியாதவர்களுக்கு முதல்நாள் பலகாரம் என்று சொல்லியிருக்கிறது.


மகாலக்ஷ்மி நமது தாயாராக இருக்கும் போது நாம் ஏன் நமது வடகலை சம்ப்ரதாயத்தில் வரலக்ஷ்மி நோன்பு கொண்டாடுவதில்லை?

Vidwan’s reply:

மகாலக்ஷ்மித் தாயார் பற்றியதுதான் வரலக்ஷ்மி நோன்பு என்று இருக்கும் பொழுதும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அதை கொண்டாடுவதில்லை என்றால் வரலக்ஷ்மி விரதம் ஏற்பட்ட வரலாறாக இருக்கக்கூடும். ஒரு காம்யார்த்தமான விஷயம், அதாவது ஒரு பெண்மணி மகாலக்ஷ்மியை குறித்து ஐஶ்வர்யத்தை வேண்டி இந்த விரதத்தை இருந்தாள். அதைப் பின்பற்றி வழக்கம் ஏற்பட்டது என்று கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாகவே ஸ்ரீ வைஷ்ணவர்கள் காம்யார்த்தமாக எந்த ஒரு வழிபாட்டையும் செய்வதில்லை. எம்பெருமானுடைய வழிபாடாகவே அவருக்கே கைங்கரியம் செய்வதுதான் ஸ்ரீ வைஷ்ணவருடைய லக்ஷ்ணமாக இருக்கின்றது. இந்தப் பண்டிகை ஆரம்பித்த வரலாறு அப்படி இல்லாததனால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இதை கொண்டாடுவதில்லை என்று தோன்றுகிறது. இப்படி இருக்கின்ற பொழுதிலும் இந்த வரலக்ஷ்மி விரதம் பண்ணி சில க்ருஹங்களில் வெற்றிலை பாக்கிற்கு அழைப்பார்கள். அப்படி அழைத்தால் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்த்ரீகள் போய் தாம்பூலம் வாங்கிக் கொள்வது என்பதும் இருக்கின்றது.


ப்ராயஶ்சித்த ப்ரபத்தியும் மோக்ஷப்ரபத்தி போல் ஆசார்யனிடம் பண்ணிக்கொள்ள வேண்டுமா அல்லது நம் அகத்தில் பெருமாள் சந்நிதியில் பண்ணிக் கொள்ளலாமா ? அப்படிப் பண்ணிக் கொள்ளலாம் என்றால், நம் மனத்தாலும், நினைவாலும் ஏற்படும் எண்ணிலடங்கா பகவத மற்றும் பாகவத அபசாரங்களுக்கு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி எப்படிப் பண்ண வேண்டும் என்பதை விளக்க ப்ரார்த்திக்கின்றேன். மேலும் வார்த்தைகளாலும் மற்றும் செயல்களாலும் ஏற்படும் பாகவத அபசாரங்களுக்கு பாதிக்கப்பட்ட பாகவதரிடம் க்ஷமாபணம் கேட்டு ப்ராயஶ்சித்தம் செய்யலாம் என்று நான் புரிந்து கொண்டிருப்பது சரியாய் என்றும் விளக்க வேண்டுகிறேன்?

Vidwan’s reply:

ப்ராயஶ்சித்த ப்ரபத்தியும் மோக்ஷ ப்ரபத்தி போல் ஆசார்யனிடம் சென்று செய்து கொள்வது மிகவும் உசிதம். பொதுவாகவே ப்ரபத்தி செய்வதற்கு நான்கு விதங்கள் உண்டு. என்று ஆசார்யார்கள் எல்லாம் ரஹஸ்ய க்ரந்தங்களில் எடுத்துரைத்துள்ளார்கள்.

ஆசார்யநிஷ்டை, உக்திநிஷ்டை, ஸ்வநிஷ்டை, பாகவதநிஷ்டை என்றெல்லாம் இருக்கிறது. ஸ்வநிஷ்டை என்கின்ற ரீதியில், தானே செய்துகொள்வது என்று இருக்கின்றது. ஆனால் அது இப்பொழுது வழக்கத்தில் இருக்கிற மாதிரி தெரியவில்லை. காரணம் இது ஒரு முக்கியமான காரியம் இந்தக் காரியத்திலே எந்த ஒரு குறைபாடும் ஏற்படக்கூடாது, அதனால் ஆசார்யன் ஆஶ்ரயித்து செய்தோமானால் கவலையில்லாமல் அந்தக் காரியம் நன்கு பலித்துவிடும் என்கின்ற நிஶ்சிந்தையுடன் நாம் இருக்கலாம். ஆனால் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்துகொள்ள வேண்டும் என்று தோன்றினால் ஆசார்யனிடத்தில் விண்ணப்பிக்கலாம். அவர் செய்து வைப்பார். அபசாரப்பட்ட பாகவதரிடத்தில் போய் அவசியம் க்ஷமாபணம் பண்ணிக் கொள்வது என்பது செய்ய வேண்டிய காரியம். அந்தத் தவறை நாம் உணர்ந்து விட்டோம், பாகவத அபசாரம் ஆகிவிட்டது என்று நமக்குத் தெரிந்து விட்டது என்றால் முதல் காரியமாக அவரிடத்தில் போய் சொல்லி அபராத க்ஷமாபணம் அவசியம் செய்துகொள்ள வேண்டும்.


“அத2 புருஷோ ஹ வை நாராயணோ” என்று ஆரம்பிக்கும் நாராயணோபநிஷத் ஒரு தனி ப்ரஶ்னமாக கருதப்படுகிறதா இல்லை வேதத்தின் ஒரு ப்ரஶ்னத்தினுடைய ஒரு பாகமாக கருதப்படுகிறதா?

Vidwan’s reply:

நாராயண உபநிஷத் என்று தனியாக இருக்கிறது. அதிலே ஒரு அனுவாகமாக ஒரு பகுதியாக “அத2 புருஷோ ஹ வை நாராயணோ” என்பதாக இருக்கிறது. நாராயண உபநிஷத் என்பது மிகவும் சிறியது. மற்ற உபநிடதுகள் மாதிரி ப்ரஶ்னங்கள் எல்லாம் இல்லை. மொத்தம் இருப்பதே 4/5 கண்டங்கள்தான் ஆகையால் இந்த ப்ரஶ்னம் அதன் பாகம் என்று வராது அதில் ஒரு கண்டம் “அத2 புருஷோ ஹ வை நாராயணோ” என்று ஆரம்பிக்கிறது.


நாம் சுலபமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக வேதங்கள் வியாசரால் பிரிக்கப்பட்டிருந்தால், உபாகர்மாவின் வெவ்வேறு தேதிகள் எப்போது தோன்றின? ஒவ்வொரு வேதத்திற்கும் அவை ஏன் வேறுபடுகின்றன? உத்ஸர்ஜனம் அனைவருக்கும் பொதுவான தேதியா இல்லை நாட்கள் வேறுபட்டுள்ளதா?

Vidwan’s reply:

இக்கேள்வி முழுவதாக புரியவில்லை. அதாவது ஏன் வேறுபடுகிறது என்ற கேள்வியின் அபிப்ராயம் தெளிவாக இல்லை. தங்கள் சந்தேகத்தை விரிவாகப் பதிவிடவும்.

வேதங்கள் வ்யாசரால் பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த வேதத்திற்கு ஏற்றாற் போல் உபாகர்மாக்களை ஶ்ருதிகள் ஸ்மிருதிகள் விதித்து இருக்கிறது. ஒருவரால் அனைத்து வேதங்களையும் அத்யயனம் பண்ணமுடியாது. அதனால் மனிதர்களில் சௌகர்யத்திற்காக வ்யாசபகவான் பிரித்துக்கொடுத்திருக்கிறார். அந்தந்த வேதத்தின் ரிஷிகளைக் குறித்து சொலப்பட்ட அந்தந்தக் காலத்தில் உபாகர்மா பண்ணுகிறோம் என்பதுதான்.


பட்டுப் பூச்சியிலிருந்து பட்டு எடுக்கப்படும்பொழுது ஸ்த்ரீகள் பட்டுப் புடவை உடுத்திக் கொள்வது மடி என்று சாஸ்திரத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா?

Vidwan’s reply:

பட்டுப் பூச்சியில் இருந்து பட்டு எடுப்பதினால் அதை உபயோகப் படுத்தலாமா கூடாதா என்பதில் சர்ச்சைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. அப்படி இருந்த பொழுதிலும் பெரியோர்கள் வழக்கத்தில் பார்த்ததில் அடியேன் இவ்விடத்தில் விண்ணப்பிக்கிறேன். பெரியோர்கள் க்ருஹங்களில் ஸ்த்ரீகள் பட்டுப் புடவை தரித்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. சில க்ருஹங்களில் பட்டுப் புடவை தரித்துக்கொண்டு வைதீக காரியங்கள் செய்வதும் வழக்கத்தில் இருக்கின்றது. அவரவர்கள் க்ருஹத்தில் எப்படி வழக்கமோ அப்படிச் செய்யலாம். சில க்ருஹங்களில் பட்டு மடிதான் என்று ஏற்றுக்கொண்டுள்ளதை இன்றைக்கும் காணலாம். சிலர் அதை ஒப்புக் கொள்வதில்லை. அவரவர் க்ருஹங்களில் பெரியோர்கள் எப்படிச் செய்கிறார்களோ அப்படிச் செய்வது உசிதம்.


ஆவணி அவிட்டத்தின் போது முதலில் உபாகர்மாவை முடித்து ஊர்த்வபுண்ட்ரம் தரித்த பின் பெருமாள் திருவாராதனம் பண்ண வேண்டுமா? முறையான செயல்முறையை விளக்க ப்ரார்த்திக்கின்றேன்?

Vidwan’s reply:

பெருமாள் திருவாராதனம் வைஶ்வதேவம் வரை பண்ணிவிட்டுதான் உபாகர்மா பண்ணவேண்டும்.


ஸ்வாமி, அடியேனுடைய பெரிய மச்சினர் ( சின்ன மாமனார் புத்ரன் ) இரண்டு நாட்களுக்கு முன் ஆசார்யன் திருவடி அடைந்து விட்டார். அஶௌசத்தினால் ஆவணி அவிட்டம் பண்ணவில்லை. அஶௌசம் முடிந்த பின் ஆவணி அவிட்டம் பண்ண வேண்டுமா என்பதை தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

Vidwan’s reply:

ஆவணி அவிட்டம் அஶௌசத்தினால் பண்ணமுடியாமல் போய்விட்டால். அதை யஜுர்வேதமாக இருந்தால் அடுத்தமாதம் அதாவது புரட்டாசி பௌர்ணமியன்று பண்ணவேண்டும்.


முனித்ரய மற்றும் கோபாலார்ய தேசிக சம்ப்ரதாயத்தைப் பின்பற்றுபவர்கள் ஸ்ரீஜயந்திக்குப் பின் எப்பொழுது பாரணை பண்ண வேண்டும்.

Vidwan’s reply:

ஸ்ரீஜயந்தி வ்ரதம் இருப்பவர்கள் மறுநாள் காலையில் பாரணை செய்யவேண்டும். ஆனால் அந்தப் பாரணை செய்யும் காலத்தில் அஷ்டமி, ரோஹிணி இந்த இரண்டில் ஏதாவது ஒன்று போயிருக்கவேண்டும். அஷ்டமி ரோஹிணி யோகம் என்று சொல்வார்கள். இரண்டும் சேர்ந்து இருந்தால் அது சேர்ந்து இருக்கும்வரை வ்ரதம் இருக்கவேண்டும். அதில் ஏதாவது ஒன்று பிரிந்தவுடன் பாரணை செய்யவேண்டும். இந்த வருடம் அப்படிதான் வந்தது மறுநாள் சாயங்காலம் 4 மணிவரை சேர்ந்து இருந்தது. அதற்குப் பிறகுதான் பாரணை என்பதாக ஆயிற்று.

ஒருவேளை அஷ்டமி ரோஹிணி யோகம் மறுநாள் இல்லை என்றால் காலையிலே வழக்கம்போல் 6நாழிகைக்குள் பாரணை பண்ணவேண்டும்.


ஏகாதசி/துவாதசி அல்லாத ஞாயிறு /திங்கள் /புதன்/வியாழக் கிழமைகளில் க்ஷௌரம் செய்துகொள்ளலாமா?

Vidwan’s reply:

ஏகாதசி/துவாதசி அல்லாத ஞாயிறு /திங்கள் /புதன்/வியாழக் கிழமைகளில் க்ஷௌரம் செய்துகொள்ளலாம். ஆனால் மற்றவைகளும் இல்லாமல் இருக்கவேண்டும். அதாவது சதுர்தசி, அமாவாஸை, பௌர்ணமி போன்றவையும், நக்ஷத்ரங்களில் பரணி, க்ருத்திகை போன்றவையும், அவரவரின் ஜன்ம நக்ஷத்ரமும் இல்லாமல் இருக்கவேண்டும். இவை தவிர மற்ற நாட்களில் செய்துகொள்ளலாம்.


பிச்சம் ஏகாதசி (நாம் கொண்டாடும் ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி ) மற்றும் ஹரிவாசரம் (அதாவது துவாதசிக்கு முந்தைய நேரம்) இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எவ்வாறு தெரிந்து கொள்வது ?

Vidwan’s reply:

பிச்சம் ஏகாதசி என்றால் மறுநாள் ஏகாதசி பிச்சம் இருந்தால் அன்றும் ஏகாதசி வ்ரதம் இருக்கவேண்டும்.

ஹரிவாசரம் என்பது துவாதசி திதியினுடைய முதல் கால் பாகத்திற்கு ஹரிவாசரம் என்று பெயர். துவாதசி எத்தனை நாழிகை இருக்கிறது என்று பார்க்கவேண்டும். உ.தா: துவாதசி 60 நாழிகை இருந்தால் முதல் 15 நாழிகைக்கு ஹரிவாசரம் என்று பெயர் அது ஏகாதசிக்குத் துல்யம் அப்போது ஆஹாரம் சாப்பிடக்கூடாது.

சில சமயம் துவாதசி முன்னாளே ஆரம்பித்தால் கூட மறுநாள் முதல் கால்பாகம் முடியும்வரை ஹரிவாசரம் என்றிருக்கும். அன்று துவாதசி எத்தனை நாழிகை இருக்கு என்பதைப் பொறுத்து இந்தக் கால்பாகம் மாறும். பஞ்சாங்கத்திலே எத்தனை நாழிகை ஹரிவாசரம் என்று குறிப்பிட்டிருப்பார்கள்.


வ்ருத்தி தீட்டும் இறப்பு தீட்டுபோல் காக்க வேண்டுமா அல்லது தளர்வுகளுடன் காக்கலாமா? அதாவது குழந்தை பிறந்த சந்தோஷத்தை கொண்டாட உறவினர் வீட்டுக்குச் செல்வது , இனிப்புப் பண்டங்கள் சாப்பிடுவது , குங்குமம் இட்டுக்கொள்வது, வெற்றிலை பாக்கு பெற்றுக்கொள்வது போன்றவைகளை செய்யலாமா?

Vidwan’s reply:

வ்ருத்தி தீட்டின் பொழுது சில தளர்வுகள் வைத்துக் கொள்வது என்பது வழக்கத்தில் உள்ளது. பிறர் க்ருஹங்களுக்குப் போகவேண்டும் என்கின்ற அவசியமில்லை. ஏனென்றால் பொதுவாகத் தீட்டு என்பது எதற்காக வைத்திருந்தார்கள் என்றால் அந்தச் சமயத்தில் அந்தக் காரியத்தில் குறி இருக்கணும் என்பதற்காக. அதனால் பொதுவாக வெளியே செல்வது என்பது கிடையாது. ரொம்ப முக்கியமாக தவிர்க்க முடியாத ஒரு இடத்திற்குப் போக வேண்டும் என்றால் அந்த இடத்திற்குப் போய், தள்ளி நின்று இருந்து விட்டு வரலாம். குங்குமம் இட்டுக் கொள்ளலாம். இனிப்புப் பண்டங்கள் சாப்பிடுவதிலும் ஒரு தவறும் இல்லை. அதுவும் வழக்கத்தில் உள்ளது. வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்வதாகத் தெரியவில்லை.


யஜ்ஞம் ஸ்வாமி தனது வேத வைபவம் தொடரில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

1. புத்தகங்களைப் பார்க்காமல் வேதங்கள் பாராயணம் பண்ண வேண்டும்

2. வேதங்களைக் கற்று, தினமும் பாராயணம் செய்யாமல், அதற்குப் பதிலாக ஸ்தோத்ரபாடம் போன்ற வேறு ஏதாவது பாராயணம் செய்வது பாவம்.

இவற்றிற்கான ப்ரமாணங்களை மேற்கோடிட்டுக் காட்டுமாறு ப்ரார்த்திக்கின்றேன்.

Vidwan’s reply:

1. அதாவது லிகிதபாடம் கூடாது என்று பாணினியின் சிக்ஷையில் இருக்கிறது. சிக்ஷா என்ற க்ரந்தமானது வேதங்களை எப்படிக் கற்றுக்கொள்ளவேண்டும் எப்படி உச்சாடனம் பண்ண்வேண்டும் என்பதற்காக வந்தது. அதில் லிகித பாடங்கள் கூடாது என்றிருப்பதால் ஓரளவு புத்தகங்களைப் பார்க்காமல் சொல்லவேண்டும். அதுமட்டுமல்ல தாரணம் என்ற ஒன்று இருக்கு. வேதாத்யயனம் போல் மனத்திற்குள் தரித்து வைத்தாலே அதுவே ஒரு தர்மம்.

குரு முகமாய் அத்யயனம் பண்ணாமல் இவனே புத்தகம் பார்த்து சொல்வது கூடாது என்பதுதான் முக்கியமான விஷயம். மனப்பாடம் முடியாவிட்டால் புத்தகம் பார்த்துச் சொல்லலாம் தவறில்லை ஆனால் முன்னமே குருமுகமாய் அத்யயனம் பண்ணியிருக்கவேண்டும்.

2. ஸ்வாமி தேஶிகன் ஸ்ரீ பாஞ்சராந்த்ர ரக்ஷையில் இதைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். ஸ்வாத்யாய காலத்தில் மற்றவையெல்லாம் சொல்வதைக் காட்டிலும் வேத ஜபம் செய்வது உசிதம் என்றுள்ளது. ஸ்வாத்யாய காலம் என்றால் ஆஹாரம் எல்லாம் முடித்துவிட்டு ஓய்வு எடுக்கும் காலமாகும். அந்தச் சமயத்தில் ஸ்ரீமத் இராமாயணம், ஸ்தோத்ர பாட பாராயணம், திவ்ய ப்ரபந்தம் முதலியவற்றை பண்ணிக் காலத்தைக் கழிக்கலாம். அந்தச் சமயத்தில் வேத பாராயணம் பண்ணுவது விசேஷம் என்று ஸ்வாமி தேஶிகன் ஸாதித்துள்ளார். மற்றவைகளைப் பாராயணம் செய்வது பாபம் என்ற அர்த்தத்தில் இல்லை. வேதத்தை உபேக்ஷை பண்ணிவிட்டு அப்படிப் பண்ணக்கூடாது என்ற அர்த்தமாகும். ஏனென்றால் வேதம் உயர்ந்தது ஆகவே அதைப் பாராயணம் செய்வது உசிதமாகும். மேலும் எந்த பாகத்தைப் பாராயணம் செய்வது என்பதையும் ஸ்வாமி தேஶிகனே ஸாதித்துள்ளார்.


அஹோபில மடத்தின் சிஷ்யர்கள் ஆசார்ய பாதுகா ஆராதனம் நித்யமும் பண்ண வேண்டுமா அல்லது துவாதசி அன்று மட்டுமே பண்ண வேண்டுமா? மடத்தில் துவாதசி அன்று மட்டும் பண்ணுவதால் இந்தக் கேள்வியை கேட்கிறேன்.

Vidwan’s reply:

பொதுவாக அஹோபில மடத்து சிஷ்யர்கள் துவாதசியிலும் எந்த ஆசார்யனின் பாதுகையை அகத்தில் ஏளப்பண்ணி வைத்திருக்கிறார்களோ அவ்வாசார்யனின் திருநக்ஷத்ரத்திலும் பாதுகா தீர்த்தம் சேர்த்துக்கொள்வார்கள். அந்த மாதிரி பண்ணலாம். சிலர் தங்களுடைய திருநக்ஷத்ர தினத்திலும் பாதுகா தீர்த்தம் சேர்த்துக்கொள்வார்கள்.


அடியேன் அமாவாஸை தினத்தன்று தர்ப்பணம் பண்ணுபவர்கள் மட்டுமே இரவில் பலகாரம் எடுத்துக் கொள்ள வேண்டுமா? க்ருஹத்தில் தர்ப்பணம் செய்யாதவர்களும் இரவில் பலகாரம் எடுத்துக் கொள்ளலாமா அல்லது சாதத்துடன் சேர்த்து உணவு உட்கொள்ள வேண்டுமா?

Vidwan’s reply:

அமாவாஸை அன்று எல்லோருமே இராத்திரி பலகாரம் பண்ணவேண்டும் என்று ஒரு வசனம் இருக்கிறது. அது தர்ப்பணத்திற்காக (தர்ப்பணா ப்ரயுக்தமில்லை) இல்லை.

தர்ப்பணம் பண்ணுபவர்கள் தர்ப்பணத்திற்காக பலகாரம் பண்ணுவது என்பது வேறு. எல்லோருமே அமாவாஸை திதியன்று இரவு போஜனம் செய்யக்கூடாது என்ற வசனத்தைப் பின்பற்றி இரவு சாதம் சேர்த்துக்கொள்வதில்லை.

சில சமயம் முதல் நாள் இராத்திரி காலத்திலே அமாவாஸை வந்துவிடும் மறுநாள் காலை மற்றும் சாயங்காலம் வரை அமாவாஸை இருக்கும் பக்ஷத்தில் தர்ப்பணம் மறுநாள்தான் வரும், அமாவாஸைகாரர்கள் (திதிப்படி பலகாரம் பண்ணுபவர்கள்) முதல் நாள் இராத்திரி சாப்பிடக்கூடாது என்று வரும்.

இதை இரண்டாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். தர்ப்பணத்திற்காக பலகாரம் என்பது தர்ப்பணக்காரர்கள் மட்டும்தான் பண்ணவேண்டும் மற்றவ்கள் பண்ணக்கூடாது. அமாவாஸைக்கான பலகாரம் சின்னக்குழந்தையில் ஆரம்பித்து எல்லோருமே கடைப்பிடிப்பது என்று சில வைதீகக்கார்கள் பின்பற்றி வருகின்றனர். ஆனால் இது திதி எப்போது என்பதை பொறுத்தது.

குறிப்புகள்:

பல க்ருஹங்களில் அமாவாஸை தினத்தன்று தர்ப்பணம் மட்டுமே இரவில் பலகாரம் பண்ண வேண்டும். க்ருஹத்தில் இருக்கும் மற்றவர்கள் எல்லோரும் அதாவது முக்கியமாக ஸ்த்ரீகள் குழந்தைகள் எல்லோரும் ஒரு பருக்கையாவது சாதம் சாப்பிட வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.

அதனால் இரண்டு விதமான கருத்துக்களும் உண்டு. அவரவர்கள் பெரியோர்கள் எந்த வழியை காண்பிக்கிறார்களோ அதே வழியில் செல்லலாம்.


அடியேனுடைய அப்பாவிற்கு பங்காளி(பெரியப்பா/சித்தப்பா வினுடைய பார்யாள்) தீட்டு. பத்து நாள் தீட்டு காக்கப் பட்டது. அவர் வரும் நாட்களில் பண்டிகைகள் கொண்டாடலாமா

Vidwan’s reply:

இந்தக் கேள்வியில், வரும் நாட்களில் பண்டிகை கொண்டாடலாமா என்று கேட்கப்பட்டிருக்கிறது. ஒரு வருடத்திற்குள் இவ்வளவு நெருக்கமான உறவுக்காரர்கள் போனால் பண்டிகை கொண்டாடுவதா கொண்டாடுவது இல்லையா என்பதே ஒரு ஒரு க்ருஹத்தின் வழக்கத்தின் படி மாறுபட்டு இருக்கும்.

சில க்ருஹங்களில் வருஷம் முழுதும் சித்தி பெரியம்மா போனால் பண்டிகைகள் கொண்டாடாமல் இருப்பார்கள். சில க்ருஹங்களில் கொஞ்சம் குறைத்துக் கொண்டாடுவது என்று வைத்திருப்பார்கள். ஆனால் பண்டிகை அன்று மாசியம் வருகிறது என்றால் கொண்டாடாமல் இருப்பது உசிதம். ஒரு வருடம் முடிந்த பிறகு பண்டிகை அன்று அவருடைய ஶ்ராத்தம் வருகிறது என்றால் அன்று பண்டிகை கொண்டாடாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. உதாஹரணத்திற்கு ஜயந்தி அன்று ஒருவர் பரம பதித்து விட்டார் என்றால் அந்த ஸ்ரீ ஜயந்தி அன்று பண்ணும் கர்த்தா மட்டும்தான் பண்டிகை கொண்டாட முடியாது (ஒரு வருடத்திற்குப் பின் வரும் ஶ்ராத்தம்) மற்றபடி அவாளுடைய உறவினர்கள் எல்லோரும் பண்டிகை கொண்டாடுவது என்பது உண்டு.

Loading

2 thoughts on “சோபகிருது – புரட்டாசி – ஆசாரஅனுஷ்டானம்”

  1. தாயாதி (பெரியம்மா) 22/12/2023 இறந்தார். ஒருவருடம் வீட்டில் சுப காரியம் செய்யவேண்டாம் என சொல்லப்படுகிறது. வரும் 19/08/2024 உபாகர்மா வீட்டில் செய்யலாமா?.

    1. Global Stotra Parayana Kainkaryam

      All vaideeka karmas of Avani Avittam has to be done.
      However vada thirukkanamudhu such grand pandigai thaligai can be avoided

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top