ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்து கொள்ளாவிட்டால் ஒருவருக்குத் திருவாராதனம் செய்யும் தகுதி இல்லை என்று உள்ளது. இந்நிலையில் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொள்ளும்வரை, ஒருவர் எவ்வாறு தோஷம் இன்றி பெருமாளுக்கு ஆராதனம் செய்யலாம்?
Vidwan’s reply:
பஞ்சஸம்ஸ்காரம் செய்து கொள்ளாவிட்டால் திருவாராதனம் செய்யக்கூடாது. பஞ்சஸம்ஸ்காரம் செய்யும்வரை பெருமாளுக்கு ஆராதனம் செய்யமுடியாது. பெருமாளுக்கு நிவேதனம் செய்யலாம். அதுவும் பஞ்சஸம்ஸ்காரம் பண்ணியிருந்தால்தான் செய்யமுடியும் ஏனென்றால் நிவேதனத்தில் வரும் மந்த்ரங்கள் திருவஷ்டாக்ஷர மந்த்ரம் வரும். அது பஞ்சஸம்ஸ்காரம் செய்யும் சமயம்தான் உபதேசமாகும். தோஷமில்லாமல் பெருமாளுக்குத் திருவாராதனம் செய்வது என்பது பஞ்சஸம்ஸ்காரம் ஆகும்வரை சற்று கடினம்தான்.
க்ருஹத்தில் எவ்வாறு சுதர்சன பூஜை செய்ய வேண்டும்? சுதர்சன யந்த்ரத்தை வீட்டில் வைத்துக் கொள்வது நல்லது என்று ஒரு உபன்யாசத்தில் கேட்க நேர்ந்தது. அவ்வாறெனில் எந்த உலோகத்தால் அதைச் செய்ய வேண்டும்? மேலும் யந்த்ரத்தை முறையாக எவ்வாறு ப்ரதிஷ்டை செய்ய வேண்டும்?
சக்கரத்தாழ்வாரை ஜபிக்க வேண்டிய மந்திரம் எது? சுதர்சன யந்த்ரத்தை க்ருஹத்தில் ப்ரதிஷ்டை செய்வதால், ஏதேனும் அதிகப்படியான நியமங்கள் கடைபிடிக்கப்பட வேண்டுமா?
Vidwan’s reply:
க்ருஹத்தில் சுதர்சன யந்த்ரத்தை வைத்துக்கொள்வது நல்லதுதான். அதை எந்த உலோகத்தில் செய்வது என்பதையும் எப்படிப் ப்ரதிஷ்டை செய்வது என்பதையும், சுதர்சன ஹோமம் செய்விப்பவர்கள், பெரியவர்களைக் கேட்டால் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.
சக்கரத்தாழ்வரை ஜபிக்க இரண்டு மூன்று சுதர்சன மந்த்ரங்கள் இருக்கிறது. ஆசார்யனிடம் விண்ணப்பம் செய்து உபதேசம் பெற்றுக்கொள்ளவும்.
ஆம், சுதர்சன யந்த்ரம் ப்ரதிஷ்டையாகி இருந்தால் அதிகப்படியான நியமங்கள் கடைபிடிக்கவேண்டும். அந்த யந்த்ரத்தைத் தொடும்போது மிகவும் சுத்தியோடு தொடவேண்டும். அனாசாரங்கள் கலந்து அந்த யந்த்ரத்தைத் தொடக்கூடாது.
அடியேனின் க்ருஹத்திற்கு அருகில் உள்ள (குரோம்பேட்டை) கோவிலின் ப்ரஸாதம் பற்றிய கேள்வி. அடியேன் ஜிஎஸ்பிகேவில் உபன்யாசம், காலக்ஷேபங்கள் (குறிப்பாக ஸ்ரீவாசுதேவாசார் ஸ்வாமி) கேட்கும் வழக்கமுடையவன். அதனால் நிறைய பயன் பெற்றுள்ளேன். அடியேன் காலை மாலை இருவேளையும் கோவிலுக்கு செல்லும் வழக்கமுடையவன். கோவிலில் மீதமுள்ள ப்ரஸாதங்களை (பெரும்பாலும் சாதத்தை) அந்தந்த தளிகை மற்றும் நைவேத்தியம் செய்த பாத்திரங்களிலேயே வைத்து கோவிலுக்கு வெளியே வைத்து விடுகிறார்கள். இதை அந்தப் பகுதியில் உள்ள மாடுகள் நேரடியாக அந்த பாத்திரத்தில் இருந்து எடுத்து உண்கின்றன. இது சரியான பழக்கமா? அந்தப் பகுதியில் உள்ள நாய்களும் சில சமயம் இந்த பாத்திரங்களைத் தீண்டுவதற்கும், அந்த ப்ரசாதங்களை உண்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இது சரியான செயலா அல்லது இதனால் அனாசாரம் ஏதும் ஏற்படுகிறதா? இதைப் பற்றி நான் ஏற்கனவே கோவிலில் சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துக் கூறியும் எந்தப் பயனும் இல்லை. இதனால் எனக்கு அந்த ப்ரசாதத்தை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்ற குழப்பம் நிலவுகிறது. கோவில் ப்ரசாதத்தை ஏற்றுக் கொண்டால் அது அனாச்சாரம் ஆயிற்றே என்ற பயமும், அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது பாபம் என்றும் அடியேனுக்குத் தோன்றுகிறது. தயவுசெய்து இந்த விஷயத்தில் ஸ்வாமிகளைக் கேட்டு அடியேனுக்குத் தெளிவு ஏற்படுத்த வேண்டுகிறேன்.
Vidwan’s reply:
அந்தப் பாத்திரத்தை அப்படி வைப்பது சரியில்லைதான். குறிப்பாக நாய் தீண்டும்படி வைப்பது சரியில்லை. அவர்கள் அதை நல்ல ரீதியில் சுத்தம்செய்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
கோயில் பாத்திரம் அல்லாது வேறு ஒரு பாத்திரத்திலோ, வாளியிலோ ப்ரசாத்தத்தைப் போடலாம் என்று தோன்றுகிறது.
என்னுடைய தாத்தாவின், தம்பியின் பேரனுடைய பார்யா பரமபதித்துவிட்டார்கள். எனக்கு எத்தனை நாள் தீட்டு? குழி தர்ப்பணம் பண்ண வேண்டுமா? இறந்தவர்களை நான் பார்த்து சுமார் 20 வருடங்கள் ஆகின்றது. தீட்டு விஷயம் தெரியப்படுத்தவும்.
Vidwan’s reply:
10 நாள் தீட்டு உண்டு. குழி தர்ப்பணம் பண்ணவேண்டும். அவர்களைப் பார்க்கவேயில்லை என்றாலும், சம்பந்தமேயில்லை யாரென்று தெரியவில்லை என்றாலும் உறவு என்று தெரியவந்தவுடன் தீட்டு உண்டு.
விஶ்வாமித்ர கோத்ரத்தைச் சேர்ந்த ஆண், கௌசிக கோத்ரத்தைச் சேர்ந்த பெண்ணை விவாஹம் செய்து கொள்ளலாமா?
Vidwan’s reply:
விஶ்வாமித்ர கோத்ரத்தைச் சேர்ந்த ஆண், கௌசிக கோத்ரத்தைச் சேர்ந்த பெண்ணை விவாஹம் செய்து கொள்ளும் வழக்கமில்லை.
ஆத்தில் கார்த்திகை தீபம் அன்று முதலில் சிறியதாக சொக்கப்பானை ஏற்றி அதன் பிறகு மற்ற விளக்குகள் ஏற்ற வேண்டும் என்று கேள்விப்பட்டேன். அந்தச் சொக்கப்பானை என்பது அகல் விளக்கில் எண்ணெய் விட்டு எள் முடிந்து வைத்த காடாத்துணியைத் திரியாக பயன்படுத்தலாமா?
Vidwan’s reply:
அகத்தில் வைக்கும் சொக்கப்பனையில் நெய் சேர்த்து, பஞ்சுக்குள் நெல் வைத்து (அதை ஒரு உருண்டைப்போல் வைத்து) அதற்கு மேல் திரி வைத்து பண்ணுவது சொக்கப்பானை என்று பெயர்.
அடியேனின் சம்பந்தி மனைவி 4 நாட்கள் முன்பு ஆசார்யன் திருவடி அடைந்து விட்டார். என்னுடைய மகன் சபிண்டீகரணத்தில் ஸ்வாமிகள் ஸ்தானம் ஸ்வீகரிக்கலாமா?
Vidwan’s reply:
உங்களுடைய மகன் சபிண்டீகரணத்தில் ஸ்வாமிகள் ஸ்தானம் ஸ்வீகரிக்கலாம்.
பரந்யாஸத்திற்குப் பிறகு வெளிநாடு போகலாமா?
Vidwan’s reply:
பொதுவாகவே வெளிநாட்டிற்குப் போகக்கூடாது என்பது ஶாஸ்த்ரம். ஆகையால் பரந்யாஸம் செய்யும் முன்னும் பின்னரும் போகக்கூடாது
அடியேன் ஆத்துக்காரர்க்கு பூர்வீகம் எந்த ஊர்னு தெரியாது, பூர்வீக பெருமாள் யாருன்னு தெரியலை, குலதெய்வம் என்று சேவிக்க ஏதேனும் உபாயம் இருக்கா? (அடியேனுக்கு ஆசார்ய அனுக்ரஹத்தில் பரந்யாஸம் ஆயிடுத்து)
Vidwan’s reply:
எம்பெருமான் நாராயணன் தான் குலதெய்வம்.
ஸ்தோஷ்யாமி ந: குலத4நம் குலதை3வதம் தத்
பாதார3விந்த3மரவிந்த3விலோசநஸ்ய||
என்று ஆளவந்தார் ஸாதித்துள்ளார். உங்களுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டது ஆகையால் எம்பெருமானே குலதெய்வம் என்று நிச்சயமாகிவிட்டது.
இறந்தவர் உடலின் முன்பு தரையில் விழுந்து சேவித்தல் அல்லது கைக்கூப்பி நமஸ்கரித்தல் சரியா, தவறா? இறந்தவருக்கு வேறு எவ்வாறு மரியாதையை செலுத்தலாம்.
Vidwan’s reply:
இறந்தவர் ஸ்ரீவைஷ்ணவராக இருந்தால், நன்றாக கீழே விழுந்து சேவிக்கலாம்.
ஆந்தை தாயாரின் வாகனம் என்று சொல்லப்படுகிறதே. இதைப்பற்றிய ப்ரமாணம் உண்டா என்பதை அடியேனுக்குத் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
இது அடியேன் கேள்விபட்டதில்லை.
1) திருவாராதனத்தின் போது பெருமாளுக்குச் சமர்ப்பிக்கும் திருத்துழாய் முழுவதையும் கோயிலாழ்வாரில்/பெருமாள் பெட்டியில் விடவேண்டுமா? அல்லது அவற்றில் சிலவற்றை நாமும் நமது குடும்பத்தினரும் ப்ரஸாதமாக ஸ்வீகரிக்கலாமா?
2) பழைய/கிழிந்த பெருமாள் வஸ்த்ரங்கள், கிழிந்த/உடைந்த பெருமாள் படங்கள்/பொம்மைகள், பெருமாள் படம் போட்ட நாள்காட்டிகள் இவற்றை எப்படி அப்புறப்படுத்துவது? எனக்கு இவற்றைக் குப்பையில் ஏறிய மனமில்லை.
3) அமாவாசை தர்ப்பணம் செய்து முடித்த தர்ப்பங்களை/கூர்ச்சங்களை எப்படி அப்புறப்படுத்துவது?
Vidwan’s reply:
திருத்துழாய் முழுவதையும் கோவிலாழ்வாருக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய அவசியமில்லை. மேலும் ப்ரசாதமாக நாம் எடுத்துக்கொள்ளலாம், அகத்தில் எல்லோருக்கும் கொடுக்கலாம்.
பெருமாள் வஸ்த்ரங்கள், படங்கள் போன்றவற்றைக் குப்பையில் போடாமல், கால்படாத உசிதமான இடத்தில் சேர்த்துவிடலாம்.
அமாவாசை தர்ப்பணம் செய்து முடித்த தர்ப்பங்களை/கூர்ச்சங்களைக் கால்படாத இடத்தில் மரத்தடியிலோ அல்லது புதரிலோ சேர்த்துவிடலாம்.
1) பொதுவாக பெருமாள் மற்றும் தாயாரின் உற்சவ மூர்த்திகளின் கண்கள் ஏன் மூடியே உள்ளன?
2) பெருமாளின் உற்சவ மூர்த்திகளுக்கு (உதாரணம்: நம்பெருமாள், வரதர், சாரங்கபாணி, பார்த்தசாரதி) திருமண் அணிவிக்காமல் ஏன் திலகம் அணிவிக்கப்படுகிறது?
3) பெருமாள் மற்றும் தாயாரின் மூல மற்றும் உற்சவ மூர்த்திகளில் உள்ள திருச்சிவிகையில் பூதம் போன்ற ஒரு உருவம் உள்ளதே. இதன் பின்னே ஏதாவது காரணம் உள்ளதா?
Vidwan’s reply:
அவர்களின் கண்களுக்கு நேத்ரோந்மீலநம் என்று ஒன்று பண்ணியிருப்பார்கள் அந்த ரீதியில் கண் திறந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். மூடின மாதிரி என்று இருந்தால் அவருக்கு அப்படி அமைப்பு என்று மாத்திரம்தான். முக்கால்வாசி நேத்ர உந்மீலநம்தான் கண் திறந்திருப்பதாகதான் அமைப்பிருக்கும்.
திருமண் என்பது பகவானின் தாஸன் நாம் என்பதற்கான அடையாளமாகும். அந்த ரீதியில் அவருக்கு அதை ஸமர்ப்பிக்கமுடியாது அவருக்குத் தாஸனாக அவரே ஆகமுடியாது. அதனால் அவருக்கு அலங்காரமாக திருமண் ஸாத்துப்படி பண்ணுகிறார்கள் என்பதுதான் அர்த்தமாகும்.
திருச்சிவிகையில் பூதம் இருப்பதாகப் பார்த்ததில்லை. பொதுவாகச் சிங்கத்தின் தலைதான் பார்த்ததுண்டு. சிம்மாஸனத்தில் பெருமாள் இருப்பதுபோலாகும். சிம்மம் என்பது ஶ்ரேஷ்டமானது என்பதையும் மிகவும் உயர்ந்தது என்பதையும் காட்டும் அடையாளம்.
ஸ்ரீசூர்ண ப்ரதிஷ்டை மற்றும் துளசி மாலை ப்ரதிஷ்டை எவ்வாறு செய்ய வேண்டும்?
Vidwan’s reply:
ஸ்ரீசூர்ண ப்ரதிஷ்டை மற்றும் துளசி மாலை ப்ரதிஷ்டை எப்படிப் பண்ணவேண்டும் என்பதை “கோபால தேஶிக ஆஹ்நிக க்ரந்தத்தில்” பின்னாடி போட்டுயிருக்கிறார்கள். புஸ்தகம் உத்தமூர் ஸ்வாமி trust அவர்களிடம் கிடைக்கும். ப்ரயோகம் இருக்கு. ஸ்ரீசூர்ண ப்ரதிஷ்டைக்கு முக்கியமாக ஶ்ரீஸுக்தம் முதலானவைகள் எல்லாம் உண்டு. அதைப் பார்த்து பண்ணலாம்.
அடியேனுக்குச் சில ஸ்ரீவைஷ்ணவ நண்பர்கள் உண்டு. அவர்கள் விநாயகரை வழிபடுவது, விநாயக சதுர்த்தி கொண்டாடுவது என்று வழக்கத்தில் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விநாயகரை விஷ்வக்ஸேனராக வழிபடுவதில்லை. நம் ஸம்ப்ரதாயத்தில் கௌரிதனயனான விநாயகரை வழிபடுவது சரியா?
Vidwan’s reply:
விநாயகர் விஷ்வக்ஸேனர் இல்லை. விஷ்வக்ஸேனரும் விநாயகரும் வேறு வேறுதான். விநாயகரை விஷ்வக்ஸேனராக யாரும் வழிபடுவதில்லை. விஷ்வக்ஸேனரின் பரிஜனங்களில் ஒருவருக்கு யானை முகம் உண்டு, அவருக்கு கஜானனன் என்று பெயர். ஆகையால் ஸ்ரீவைஷ்ணவர்கள் விநாயக சதுர்த்தி கொண்டாடவேண்டிய அவசியமில்லை. நம் ஸம்ப்ரதாயத்தில் விநாயகரை வழிபடுவது சரியில்லை.
பரந்யாஸம் ஆன ஒரு ப்ரபந்நன் ப்ராயஶ்சித்த பரந்யாஸம் எப்போது எவ்வகையில் எங்ஙனம் செய்து கொள்ள வேண்டும்? இங்ஙனம் செய்து கொள்வது அவசியமா?
Vidwan’s reply:
ஒருவர் தவறு செய்துவிட்டு அது தெரிந்துவிட்டால் அதற்கு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி என்று ஒன்று பண்ணலாம். இது வயதான காலத்தில், முடியாத காலத்தில் அவர்களுக்கு நிறைய பாபங்கள் இருப்பதால்தான் ரொம்ப கஷ்டமாக இருக்கு என்றும் அந்தப் பாபங்கள் போக, அதாவது உடல் வலிகள் நிறைய இருக்கு என்றும் அவர்களின் பாபங்கள் நிறைய போகிவிட்டது உணர்ந்துகொண்டு ப்ராயாஶ்சித்த ப்ரபத்தி என்று ஒன்று பண்ணிக்கொள்வார்கள்.
இது தேவையென்றால் செய்துகொள்ளலாம். அதாவது நாம் பாபங்கள் நிறைய பண்ணிவிட்டோம் என்று உணர்ந்து அதன் பலனாகத்தான் நிறைய தண்டனை அனுபவிக்கிறோம் என்று உணர்ந்து ப்ராயாஶ்சித்த ப்ரபத்தி செய்யலாம்.