1A. ஸ்ரீவல்லபாசார்யாரை பற்றிய ஒரு நூலில், அவர் விசிஷ்டாத்வைதத்தின் பெரும்பாலான கொள்கைகளை (சிலவற்றைத் தவிர) ஒப்புக்கொண்டதாக உள்ளது. ஸ்ரீவல்லபாசார்யாரின் சுத்த அத்வைதத்திற்கும், ஸ்வாமி ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
1B. ஆதிசங்கரர் இந்த உலகம் பொய் என்றும், ஸ்வாமி ராமானுஜர் இந்த உலகம் நிஜம் ஆனால் நிரந்தரம் இல்லை என்றும் கூறியுள்ளனர். இந்த உலகம் நிஜம் என்பதற்கான வேதத்தில் உள்ள ப்ரமாணங்களை அடியேனுக்குத் தெளிவுபடுத்த முடியுமா?
1C. விசிஷ்டாத்வைதத்தில் சித்தும் அசித்தும் எம்பெருமானுக்கு ஶரீரம் என்றும் எம்பெருமான் சரீரி என்றும் உள்ளது. அப்படி நாம் எம்பெருமானுடன் ஒன்றிணைந்து இருந்தால் நமக்கு ஏன் அவனைப் போல் எங்கும் வியாபித்திருக்கும் தன்மை இல்லை?
1D. பகவத் ராமானுஜர் தன்னுடைய கீதாபாஷ்யத்தில் கர்மயோகம் ஞான யோகத்தை விட சிறந்தது. ஏனெனில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதை விட ஏதேனும் வேலை செய்வது மனிதர்களின் ஸ்வபாவம். மேலும் அது இளைய தலைமுறைக்கு எந்த தவறான வழிகாட்டுதலும் செய்யாது என்று கூறியுள்ளார்.
1E. ப்ரபத்தி மற்றும் எம்பெருமான்தான் உபாயம் மற்றும் உபேயம் என்ற போதிலும், கர்ம யோகத்தை எவ்வாறு செய்வது என்று அடியேனுக்குத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
Vidwan’s reply:
1A. வல்லபாசார்யார் சுத்த அத்வைதம். ஶங்கரரின் அத்வைதத்தில் ப்ரம்மத்திற்கு அவித்யா என்ற தோஷம் இருக்கிறது என்கிறார். அத்வைதம் என்றால் ஒன்று என்று அர்த்தம்.ப்ரம்மம் ஒன்றுதான் இருக்கிறது ஆனால் அதற்கு அவித்யா என்ற தோஷம் உண்டு என்கிறார்கள். ப்ரம்மத்திற்குத் தோஷமே கிடையாது என்றும் சுத்தமான ப்ரம்மம் ஒன்றுதான் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக வந்தது சுத்த அத்வைதம். விசிஷ்டாத்வைதம் என்றால், ப்ரம்மம், சேதனாசேதன விசிஷ்டமாக இருக்கிறது. சேதன அசேதனம்கூட இருக்கிறது என்பதாகும். ப்ரம்மம், சேதன, அசேதனம் என எல்லாம் வெவ்வேறு. ஆனால், ப்ரம்மமான பகவான், சேதன அசேதனத்திற்குள் அந்தர்யாமியாக இருக்கிறான். இதைச் சுத்த அத்வைதத்தில் ஒற்றுக்கொள்ளவில்லை. அத்வைதம் என்றால் ப்ரம்மம் ஒன்றுதான் இருக்கிறது. மற்றவையெல்லாம் ப்ரம்மத்தின் தோற்றம்தான். ஜீவனோ, அசேதனமோ, உலகமோ எல்லாமே ப்ரம்மம் என்கிறார்கள். நாம் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமி ப்ரம்மம் என்கிறோம். பக்தி மார்கம் என்பது சுத்த அத்வைதத்திலும் ஒன்றாகத்தான் சொல்லுகிறார்கள்.
1B. இந்த லோகத்தையெல்லாம் பகவான் சிருஷ்டித்தான் என்றும், லோகத்திற்குள்ளே அந்தர்யாமியாக இருக்கிறான் என்று, இந்த லோகதை ஆள்கிறான் என்றும் வேதங்களில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. உலகங்கள் முழுவதும் பகவானுடைய செல்வங்கள். அதாவது நமக்கு வீடு வாசற்கள் இருப்பது போல் இந்த பூலோகம், மேல்லோகங்கள், ஸ்ரீவைகுண்டம் உட்பட எல்லாம் பகவானுடைய செல்வங்கள், விபூதிகள் என்று வேதத்தில் சொல்லப்பட்டுக்கிறது. சிருஷ்டிக்கிறான், ரக்ஷிக்கிறான் என அனைத்தும் சொல்லப்பட்டிருக்கிறது. இதுவேதான் லோகம் சத்யம் என்பதற்கு முக்கியமான ப்ரமாணமாகும்.
1C. சித்தும் அசித்தும் எம்பெருமானுக்கு ஶரீரம் என்றிருக்கிறது. பகவான் இந்த ஶரீரத்தின் உள்ளேயும் வெளியேயும் இருக்கிறான். இந்த மாதிரி ஶரீரம் இருக்குமிடமெல்லாம் பகவான் இருப்பான் என்று அர்த்தமே தவிர மாற்றி இல்லை அதாவது பகவான் இருக்குமிடமெல்லாம் ஶரீரம் இருக்கும் என்று இல்லை.
உ.தா: ஆகாஶம் எல்லா இடத்திலும் பரவி இருக்கிறது. நாம் ஆகாஶத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறோம்.இதற்கு ஆகாஶம் இருக்குமிடமெல்லாம் நாம் இருக்கிறோம் என்ற அர்த்தம் அன்று. நாம் இருக்குமிடமெல்லாம் ஆகாஶம் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதாகும்.
விபுவாகப் பரவியிருக்கும்போது, ஒன்று வ்யாபித்திருக்கும் மற்றொன்று ஒட்டிக்கொண்டிருக்கும். இதுதான் விபுவின் நியமமாகும்.
1D. இதில் கேள்வியே இல்லை. தங்கள் கேள்வி என்ன என்பதைத் தெரிவிக்கவும்.
1E. கர்மயோகத்தை உபாயமாகச் செய்யாமல், நம்மளுடைய கர்மாகங்களை பகவத் அர்ப்பணமாகச் செய்தால் அது கர்மயோகமாகும். உபாயமாக இல்லையென்றால் கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்ற மார்கத்தில் நாம் போகவில்லை. கர்மயோகம் என்பது நல்ல ஒரு கருத்தாகும். அதனால் நாம் செய்யக்கூடிய கடமைகளை பகவத் அர்ப்பண புத்தியோடும் நான்தான் செய்கிறேன் என்கிற அகம்பாவத்தைத் தவிர்த்தால் கர்மயோகம் போல் ஆகிவிடும். ஸாத்விக தயாகம், பலத்யாகத்தோடு செய்யவேண்டும்.
ஸ்ரீ. உ. வே. வாசுதேவாசார்யார் ஸ்வாமி கைசிக புராண படனம் ஸாதிக்கும்பொழுது, ராமாயணத்தில் ஸ்ரீராமபிரான் விபீஷணஶரணாகதியை உடனே ஏற்றுக் கொண்டது போல் நம்பாடுவான் ப்ரம்ஹராக்ஷஸ் ஶரணாகதியை உடனே ஏற்றுக் கொண்டார் என்று ஸாதித்தார். ஆனால் ஸ்வாமி தேஶிகன் அபய ப்ரதான ஸாரத்தில் இந்த ஶரணாகதியைப் பற்றி குறிப்பிடவில்லையே? இதற்கு ஏதேனும் காரணம் உண்டா?
Vidwan’s reply:
அபயப்ரதான ஸாரத்தில் என்னென்ன ஶரணாகதி இருக்கிறதோ அதையெல்லாம் குறிப்பிடுவதாக ஒரு நிர்ணயம் ஸ்வாமி தேஶிகன் செய்துகொள்ளவில்லை. உதாஹரணத்திற்குச் சில ஶரணாகதியெல்லாம் சாதித்திருக்கிறார். அவர் குறிப்பிடாததால் அது இல்லை என்றாகிவிடாது.
பெருமாள் ஶரணாகதி ப்ரதானமாகக் காட்டிருக்கிறார். மேலும் இதிஹாஸங்களில் பூர்வர்கள் எடுத்திருக்கக்கூடிய ஶரணாகதியெல்லாம் காட்டிருக்கிறார்.
நம்பாடுவான் ப்ரம்மராக்ஷஸ் பற்றிய ஶரணாகதியும் உண்டு. இவையும் ஒன்று என்று சொன்னால் மற்றவை எல்லாம் ஒரு உபலக்ஷணமாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
வெளி இடங்களில் சுலபமாக ஜபிக்க பெருமாள் தாயார் தனியன், ஸ்லோகம் ஏதேனும் இருக்கிறதா?
Vidwan’s reply:
ஶ்ரீஸ்துதி போன்ற ஶ்லோகங்கள் தாராளமாகச் சொல்லலாம். முழுவதாகச் சொல்ல முடியாவிட்டாலும் ஆத்யந்தமாகச் சொல்லலாம், அதாவது முதல் ஶ்லோகம் மற்றும் கடைசி ஶ்லோகம் மட்டும் சொல்லலாம்.