அடியேனின் சிறியதகப்பனார் சென்ற மாதம் ஆசார்யன் திருவடி அடைந்தார். நான் செய்ய வேண்டிய கர்மங்கள் என்ன? எனக்கும் க்ஷேத்ர தரிசனம் மலை தரிசனம் கிடையாதா அல்லது மேலும் பண்டிகை, அகத்துப் பெருமாள் கைங்கர்யங்ககள் பண்ணலாமா?
Vidwan’s reply:
சிறியதகப்பனார் ஆசார்யன் திருவடி அடைந்தபிறகு அவருக்காக நீங்கள் செய்யவேண்டிய குழித்தர்ப்பணம், தீட்டுக்காத்தல் முதலியவையை செய்திருப்பீர்கள். அதற்குப்பிறகு நீங்கள் செய்யவேண்டியவை ஒன்றுமில்லை.
ஒருவருட காலம் மலையேறி பெருமாள் சேவிக்கக்கூடாது, ஸமுத்ர ஸ்நானம், தீர்த்தஸ்நானம் செய்யக்கூடாது என்பதெல்லாம் சாக்ஷாத் கர்த்தாவிற்கு மட்டும்தான் மற்றவர்களுக்கில்லை.
பண்டிகை விஷயத்தில் மிகவும் ஆடம்பரமாகச் செய்யாமல் செய்யவேண்டியவதை மட்டும் செய்யலாம். காரணம் நம் பண்டிகைகள் எல்லாம் பெருமாளுக்கு ஆராதனம் செய்வதானபடியினாலே பெரியளவில் இல்லாமல் லகுவாகச் செய்யலாம்.
நம் ஸம்ப்ரதாயத்தில் ஜபம் செய்யும்போது துளசி, வேப்பம் அல்லது தாமரை மாலைகளை ஸ்த்ரீகள் மற்றும் புருஷர்கள் ஏன் உபயோகிப்பதில்லை? ஸ்த்ரீகள் ஜபம் செய்ய என்ன மாலையை பயன்படுத்தவேண்டும்?
Vidwan’s reply:
ஜபம் செய்யும்போது கை விரல்களின் கணுக்களாலேயே எண்ணிக்கொள்வது ஶ்ரேஷ்டம் என்று நம் பெரியோர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். மேலும் நம் பெரியவர்கள் யாரும் ஜபமாலையை உபயோகித்ததாகத் தெரியவில்லை. ஆகையால் புருஷர்களானாலும், ஸ்த்ரீகளானாலும் கை விரலினாலேயே செய்வது உசிதம் எனத் தோன்றுகிறது. அப்போதுதான் நம் செறிவாற்றலும் (Concerntration) நன்றாகயிருக்கும்.
வர்ணாஶ்ரமம் என்பது பிறப்பினாலா அல்லது கர்மாவினாலா (நாம் இந்த பிறவியில் செய்யும் கர்மா) ஏற்படுகிறது? கர்மா என்றால் ஒருவன் ப்ராஹ்மணன் செய்யும் செயலை செய்தால் அவனும் ப்ராஹ்மணன் ஆகிவிடலாம் அல்லவா? இதற்கு ஏதும் ப்ரமாணம் இருக்கிறதா தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
வர்ணாஶ்ரமம் என்பது பிறப்பினாலேயேதான் ஏற்படுகிறது, இதற்கு ப்ரமாணம் சத்வாரோ வர்ணா: ப்ராஹ்மணக்ஷத்திரியவைஶ்யசூத்ரா தேஷாம்பூர்வஸ்பூர்வ: என்பது ஆபஸ்தம்பருடைய வார்த்தை.
ஒருவர் யக்ஞோபவீதம் மாற்றிக்கொள்ள கால நிர்ணயம் உள்ளதா? உதா: உணவு உட்கொள்ளும் முன் அல்லது மாத்யாஹ்னிகம் முன் என்று.
Vidwan’s reply:
யக்ஞோபவீதம் சாதாரணமாக பூர்வாஹ்னத்தில் மற்றிக்கொள்வதும் அது செய்தபிறகு ஏதாவது நித்யானுஷ்டானம் செய்வதும் வழக்கம். அதை மாற்றிக்கொண்டு மாத்யாஹ்நிகம் செய்வது உசிதம்
புதிய த்வாரகா சிலாவை ஆராதன சாளக்கிராமங்களுடன் சேர்த்து வைத்து ஆராதனம் பண்ணலாமா? வழிமுறைகள் உண்டா (ப்ரதிஷ்டை போன்ற நியமங்கள்)
Vidwan’s reply:
புதிய த்வாரகா சிலாவை சாளக்கிராமப் பெருமாளுடன் சேர்த்து ஆராதனம் செய்யலாம். அப்படி முதல்நாள் செய்யும்போது பாலினாலே திருமஞ்சனம் செய்தாலே போதுமானதாகும்.
அகத்தில் த்வாதசி சமயத்தில் ஆசார்யன் பாதுகை ஆராதனத்தில், சாளக்கிராம ஆராதனத்தில் சாதிக்கும் அதே திருமணியை சாதிக்கலாமா?, அல்லது வேறு திருமணிதான் சாதிக்க வேண்டுமா?
Vidwan’s reply:
பாதுகாரதனத்திற்கு பெருமாளுக்கு உபயோகப்படுத்திய எந்த வஸ்துவையும் உபயோகிப்பதில்லை, தனியாகத்தான் செய்யவேண்டும்.
அகத்தில் 2 திருமணிகள் பயன்படுத்தலாமா?
Vidwan’s reply:
பொதுவாக நம் பெரியவர்கள் எல்லோரும் ஒரு திருமணிதான் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அகத்தில் இரண்டு திருமணிகள் வைத்துப் பண்ணுவதாயிருந்தால் கண்டை சேவிப்பதற்கென்று ஒருவர் வேண்டும். அதை உதேசித்துதான் நம் பெரியவர்கள் ஒரு திருமணியாழ்வர் மட்டும் வைத்து திருவாராதனம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
இரண்டு வைத்துப் பண்ணுவதனால் பெரிய பாபமொன்றுமில்லை ஆனால் கண்டை சேவிப்பதற்கென்று ஒருவர் வேண்டும்.
பிதாவின் ப்ரத்யாப்தீக ஶ்ராத்தத்தை ஜேஷ்டனும், கனிஷ்டனும் தனித்தனியே செய்ய நேர்ந்தால் மாதா எங்கிருக்கவேண்டும்? பின்பற்றவேண்டிய முறைகளிருப்பின் தயை கூர்ந்து விளக்கவும்.
Vidwan’s reply:
பிதாவின் ப்ரத்யாப்தீகத்தை ஜேஷ்டனும், கனிஷ்டனும் தனித்தனியே செய்ய நேர்ந்தால், மாதா ஏதாவது ஒரு பிள்ளையினிடத்தில் அவசியம் இருக்கவேண்டும். அப்படி அவர்கள் எந்தப் பிள்ளையுடன் இல்லாமல் இருந்தால் அவர் தனியே ஶ்ராத்தம் பண்ணவேண்டி வரும்.
“தாயார் ஜீவித்திருக்க தகப்பனாரின் வருஷாப்தீகம் முடிந்தபின் கயா ஶ்ராத்தம் பண்ணலாமா?,பிரயாண சௌகர்யத்தால் கனிஷ்டன் ஜேஷ்டனுக்கு முன்னால் கயா ஶ்ராத்தம் பண்ணலாமா?”
Vidwan’s reply:
தகப்பனாரின் வருஷாப்தீகம் முடிந்தபிறகு தகப்பனாரை உத்தேசித்து கயா ஶ்ராத்தம் பண்ணலாம் தவறொன்றுமில்லை. ஆனால் பிற்காலத்தில் தாயார் பரமபதித்த பின்னர் தனியாக அவருக்கென்று பிண்டம் வைக்க போகவேண்டிவரும்.
ஜேஷ்டனுக்கு முன்னர் கனிஷ்டன் பண்ணுவதில் தவறொன்றுமில்லை எனத் தோன்றுகிறது.
நாங்கள் இருந்த வீட்டை இடித்து விட்டு Flat கட்டுகிறோம். வீடு முடிந்ததும் க்ருஹப்ரவேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை,ஏனெனில் ஏற்கனவே முதலில் க்ருஹப்ரவேசம் பண்ணியிருப்பதால் சாந்தி ஹோமம் பண்ணிபால் காய்ச்சி சாப்பிட்டால் போதும் என்கிறார்கள்.எது செய்வது உசிதம் என்று சொல்ல வேண்டுகிறேன்.
Vidwan’s reply:
இருக்கிற வீட்டை இடித்துவிட்டு flatஆக மாற்றி கட்டும்போது, அந்த வாஸ்துவே புதிதாக மாற்றிக் கட்டுகின்றபடியினாலே க்ருஹப்ரவேசம் செய்வதுதான் உசிதம். பால்காய்ச்சுவது என்பது மட்டும் போதாது. க்ருஹப்ரவேசம் செய்வதைதான் பெரியவர்களின் ஆசாரத்தில் பார்த்திருக்கிறேன்.
அகத்திக்கீரையை துவாதசி அன்றுமட்டும்தான் உட்கொள்ளவேண்டுமா அல்லது இதர நாட்களிலும் எடுத்துக்கொள்ளலாமா?
Vidwan’s reply:
அகத்திக்கீரையை துவாதசி தினத்தில் அவசியம் உட்கொள்ள வேண்டும். அமாவாஸை ஶ்ராத்த தினம் முதலிய தினங்களிலும் உபயோகப்படுத்தலாம். அது இல்லாமல் வேறு தினங்களில் மருந்துக்காக வேண்டும் என்றால் உபயோகப்படுத்தலாம்.
முனித்ரய ஸம்பரதாயம் பற்றிய சந்தேகம்: நாம் பல சந்தர்ப்பங்களில் விரதம் இருக்கின்றோம் (ஏகாதசி, ஶ்ரவண துவாதசி, ஸ்ரீ இராம நவமி, ந்ருஸிம்ஹ ஜயந்தி, க்ரஹண காலம் ஒருவேளை மோக்ஷம் சூர்ய அஸ்தமனம் பின் சம்பவித்தால்), இப்படி இருக்கும் சமயங்களில் அடுத்தநாள் பாரணை தளிகைதான் பண்ணவேண்டுமா அல்லது எப்போதும் போல் தளிகை பண்ணலாமா?
Vidwan’s reply:
ஏகாதசி, ஶ்ரவண துவாதசி, ஸ்ரீ இராம நவமி, ந்ருஸிம்ஹ ஜயந்தி ஸ்ரீ ஜெயந்தி முதலிய வ்ரதங்களுக்கு மறுநாள் பாரணை தளிகைதான் செய்வது வழக்கம். புளி சேர்க்கும் வழக்கமில்லை. க்ரஹணத்திற்குப் பிறகு சாப்பிடக்கூடாது என்பது நிஷித்தம்தான், அது வ்ரதமில்லை. அதனால் க்ரஹண காலத்தில் க்ரஸ்தாஸ்தமனமாக இருந்ததானால் அதற்குப் பிறகு பாரணை செய்யும் வழக்கமில்லை.
அடியேனுடைய மாமியார் பெருமாள் திருவடி அடைந்து 15 நாட்கள் ஆகிறது. அடியேனும் அடியேன் ஆத்துக்காரரும் இனி என்ன என்ன அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.
Vidwan’s reply:
மாஸ்யம், ஊனம் முதலானவையெல்லாம் விடாமல் பண்ணவேண்டும்.
முடிந்தவரைக்கும் ஆஹாரத்தில் சுத்தமாக இருத்தல்வேண்டும். வெளியே சாப்பிடுவதை இயன்றளவு தவிர்த்தல்வேண்டும். நன்றாகச் சுத்தமாக நம் பந்துக்களும் இருந்தால் அவர்கள் அகத்தில் சாப்பிடலாம். ரொம்ப நியமத்துடன் இருப்பவர்கள், பரான்ன நியமம் என்று சொல்வார்கள் அதாவது நாமே சம்பாதித்து, நாமே தயாரித்துச் சாப்பிடும் ஆஹாரம் என்று சொல்வார்கள். இதன் நோக்கமாவது ஆஹாரத்தில் அசுத்தம் கலக்கக்கூடாது என்பதாகும்.
அதன் பின் இந்த ஒருவருட நியமங்கள் என்பது, தீர்த்தயாத்திரை போகக்கூடாது, மலையேற கூடாது, ஸமுத்ர ஸ்நானம் கூடாது போன்றவையாகும். ஏன்னெறால், தீர்த்தயாத்திரைக்குப் போகிறேன் என்று பண்ணவேண்டிய மாஸ்யங்களெல்லாம் விட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்நியமங்களெல்லாம் வைத்துள்ளார்கள்.
மாஸ்யங்களும் சுத்தியும்தான் மிகவும் முக்கியமான ஒன்று. மற்றபடி நித்யகர்மானுஷ்டானங்களைப் பண்ணிக்கொண்டு பெருமாளைச் சேவித்துக் கொண்டிருந்தாலே போதுமானதாகும்.
பின்குறிப்பு: மாசிகம், ஊனம் பற்றிய அனுஷ்டாங்கங்கள் அனைத்தும் கேள்வி கேட்டவர் மூத்தவராக இருந்தால் அனைத்தும் பண்ணவேண்டும். அவர் இளையவர் என்றால், அவரின் மூத்த சகோதரர் செய்யும் கைங்கர்யங்களுக்கு உறுதுணையாக இருந்தாலே போதுமானதாகும்.
எனது பெண்ணும் வரப்போகும் மாப்பிள்ளையும் பஞ்ச சம்ஸ்காரம் மற்றும் பரந்யாஸம் பெற்றுக்கொண்டவர்கள். அவர்களின் விவாஹத்தை ஜெய்ன/அல்லது இதர திருமண மண்டபத்தில் நடத்தலாமா?
Vidwan’s reply:
பொதுவாகவே சம்ஸ்காரங்களை நல்ல இடத்தில், நல்ல க்ஷேத்ரத்தில் செய்வதே உசிதம்.
இன்றைய காலகட்டத்தில் எல்லாருக்கும் அதை அமைவதில்லை.வேறிடத்தில் செய்யும்போது அவர்களுக்கு தரும் வாடகையினால் க்ரய சுத்தி என்ற ஒன்று ஏற்படுகிறதாக நினைத்துக்கொள்ளலாம்.
அந்த இடத்தில் புண்யாஹவாசனம் பண்ணிவிட்டு பின்னர் ஸம்ஸ்காரங்கள் பண்ணலாம்