பகவதி என்றால் நம் தாயாரைக் குறிக்குமா அல்லது பார்வதி தேவியையா ? கேரளாவில் உள்ள பகவதி தெய்வம் பற்றிய கேள்வி.
Vidwan’s reply:
பகவதி என்கிற பதம் தாயாரை நிச்சயமாகக் குறிக்கும். “பகவதி ஶ்ரீயம் தேவி” என்று ஸ்வாமி பாஷ்யகாரர் கத்யத்தில் ஆரம்பிக்கும்போதே சாதித்துள்ளார்.
பகவதி என்றால் ஆறு குணங்களை உடையவள். அதாவது ஞான, பல, ஐஶ்வர்ய, வீர்ய, சக்தி, தேஜஸ் என்ற ஆறு குணங்களை உடையவள் என்று பொருள். எம்பெருமானுக்கும் இதே காரணத்தினால்தான் பகவான் என்று பெயர். அந்தப் பகவானுடைய மகிஷி பகவதி. அவளுக்கும் அதே ஆறு குணங்கள் உடையவள் என்று அர்த்தம்.
கேரளாவில் பகவதி என்பது பார்வதி தேவியைக் குறிக்கும். ஒரு அபிமானத்தில் அவர்கள் வைத்துக்கொண்டுள்ள பெயர். நாம் எப்படி எம்பெருமான் மீதுள்ள அபிமானத்தினால் பெயர் வைத்துக்கொண்டுள்ளோமோ அதேபோல்தான். மேலும் ஈஶ்வரன் என்றால் சர்வேஶ்வரனான எம்பெருமானைத்தான் குறிக்கும் ஆனால் ஈஶ்வரன் என்ற பெயர் சிவனுக்கு ஏற்பட்டதாக கருதப்படுகிறது அதேபோல்தான் பகவதி என்ற பெயரும். பகவதி என்றால் தாயார்தான் ஆனால் ப்ரசித்தமாக பார்வதிதேவிக்கு அமைந்துவிட்டது.
உபநயனம் செய்யுமுன் சுமங்கலி ப்ரார்த்தனை புதிதாகச் செய்ய ஆரம்பிக்கவேண்டுமா? இதுவரை செய்ததில்லை. போன வருடம் மாமியார் சுமங்கலியாக பரமபதித்தார்.அதனால் இந்தச் சந்தேகம்.” ஆம் எனில் ஸ்ரீவைஷ்ணவ க்ருஹங்களில் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்?”
Vidwan’s reply:
சுமங்கலி ப்ரார்த்தனை என்பது வேதோக்தமாகவோ, சம்ஸ்காரமாகவோ சொல்லப்பட்டதில்லை. ஆகையால் அவரவர் அகத்து வழக்கத்தில் இருந்தால் மட்டும் செய்யலாம். செய்யாமல்போனால் ஒரு தோஷமும் கிடையாது. புதிதாக ஏற்படுத்திச் செய்யவேண்டிய அவசியமும் கிடையாது.
பரந்யாஸம் ஆகும்முன் மற்றும் ஆனபின்னர் ஒருவர் நுட்பமாக அனுஷ்டிக்க வேண்டியவற்றை விவரிக்க வேண்டுகிறேன். உ.தா உணவுப்பழக்கம்,சஞ்சாரம் முதலியவை.
Vidwan’s reply:
பரந்யாஸம் ஆகும்முன் பரந்யாஸம் ஆகவேண்டும் என்ற த்வரை மற்றும் சதாசார்யன் அனுக்ரஹத்தினால் பரந்யாஸம் ப்ராப்தமாக வேண்டும் என்ற ஆசை இருக்கவேண்டும். இவ்வெண்ணங்களே பரந்யாஸம் ஆகும்முன்னர் இருத்தல்வேண்டும்.
பரந்யாஸம் ஆனபிறகு பல விஷயங்கள் பின்பற்றவேண்டும். அதிலும் முக்கியமாக இவ்விரண்டு விஷயங்கள் தவிர்க்கவேண்டும். தேவதாந்திர சம்பந்தமும், பாகவத அபசாரமும் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். இப்படிக் கைக்கொள்ளவேண்டிய மற்றும் கைவிட வேண்டிய விஷயங்கள் நாம் செய்வதன் நோக்கம் பவகத் ப்ரீத்தியாகும். எம்பெருமான் ஶாஸ்த்ரம் சொல்லியபடி நடந்தால் ப்ரீத்தியாவான். ஆகையால் ஶாஸ்த்ரம் சொன்ன ஆஹார நியமம்படி, அதாவது நிஷித்தமான பொருட்களையெல்லாம் தவிர்த்து ஶாஸ்த்ரம் சொன்ன வழியில் நாம் ஆஹாரம் உட்கொள்ளவேண்டும். இயன்றளவு வெளியே சாப்பிடுவதைத் தவிர்த்தல்வேண்டும். தேவதாந்தர சம்பந்தம் கூடாது. திவ்யதேசங்களுக்குப் போகலாம். அபிமான ஸ்தலம், புராண ஸ்தலம் போன்றவற்றிற்குச் செல்லலாம். வேறுகோயில்களுக்கு போவதைத் தவிர்த்தல் வேண்டும்.
விருத்தி தீட்டில் தளிகை பண்ணலாமா. அடுப்பு தொடலாமா?
Vidwan’s reply:
விருத்தி தீட்டோ அல்லது வேறு எந்த மாதிரியான தீட்டாக இருந்தாலும் தளிகை பண்ணி சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அவசியம் தளிகை செய்து சாப்பிடலாம். ஆனால் அந்தச் சமயத்தில் எந்தப் பாத்திரங்களை உபயோகப்படுத்துகிறோமோ அவைகளை எல்லாம் தீட்டு முடிந்தபிறகு நன்கு சுத்தி செய்து உபயோகிக்க எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாமனார் பரமபதமடைந்து வருஷாப்தீகம் முடியும்வரை நாட்டுப் பெண் எண்ணெய் ஸ்நானம் செய்யலாமா?
Vidwan’s reply:
பொதுவாக வருஷாப்தீக கைங்கர்யம் முடியும் வரையில் கர்த்தாவும் கர்த்தாவுடைய பார்யாளுமாவது (பிள்ளையும் நாட்டுப்பெண்ணும்) மங்கள ஸ்நானம் செய்வது வழக்கமில்லை.