ப்லவ – ஆடி – ஆசாரம் அனுஷ்டானம்


அடியேன், பொதுவாக சிகப்பு மஞ்சள் என இரு வர்ண ஸ்ரீசூர்ணம் இருக்கிறது. இதில் புருஷர்கள் பரந்யாஸம் ஆன பின் சிகப்பு ஸ்ரீசூர்ணம் தரிக்கலாமா?

Vidwan’s reply:

ஸ்ரீசூர்ணம் தரிப்பதற்கும் பரந்யாஸத்திற்கும் ஸம்பந்தமில்லை. மஞ்சள் (ஹரித்ரா) கலந்த ஸ்ரீ சூர்ணம் தரிப்பதே ஸ்ரேஷ்டம்(உயர்ந்தது). சிகப்பு தரிப்பதிலும் தோஷமில்லை.

குறிப்புகள்:

பொதுவாக ஹரித்ரா(மஞ்சள்) கலந்தது இட்டுக்கொள்ள வேண்டும் என உள்ளது.

மஞ்சள் ஸ்ரீ சூர்ணத்தினுடன் ஒரு கலவை கலப்பதால்தான் அது சிகப்பாகிறது.

ஆகையால் மஞ்சள் ஸ்ரீ சூர்ணம் தரிப்பது விசேஷம்.

ஸ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்கொள்ளலாமா?

திருமணுடன் ஸ்ரீ சூர்ணம் சேர்ந்து தரிப்பதே விசேஷம் அதுவே சிறந்தது.


பெருமாளுக்கு எந்த வகை புஷ்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்? எவையெல்லாம் உகந்தது எனத் தனிக்குறிப்புள்ளதா?

Vidwan’s reply:

பெருமாளுக்கு எந்த வகை புஷ்பங்கள் சமர்ப்பிக்கலாம் என்று ஆஹ்நிக கிரந்தங்களில் உள்ளது. குறிப்பாக, திருக்குடந்தை தேசிகன் அருளிய நிக்ஷேப சிந்தாமணியில் விசேஷமாகவும் விஸ்தாரமாகவும் விளக்கப்பட்டுள்ளது. சமீப காலத்தில் ஸ்ரீவேதாந்த தேசிகனின் வைஷ்ணவ நெறிகள் என்னும் புத்தகத்தில் சுருக்கமாக விளக்கப்பட்டிருக்கிறது.

பெருமாளுக்கு உகந்தவை விலக்க வேண்டிய பூக்கள்


இலவம் பஞ்சு கொண்டு விளக்கேற்றலாமா?

Vidwan’s reply:

இலவம் பஞ்சு கொண்டு விளக்கு ஏற்ற கூடாது.

குறிப்புகள்:

இலவம் பஞ்சானது பட்டு நூல் போல் இருக்கும், திரிக்குச் சரியாக வராது! அதை வைத்து ஏற்ற முடியாது அதனால் பொதுவாக இலவம் பஞ்சு திரி ஏற்றுவதில்லை.


அமாவாஸை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் தர்ப்பணம் திருவாராதனம் முன் செய்ய வேண்டுமா அல்லது பின்னர் செய்ய வேண்டுமா?

Vidwan’s reply:

தர்ப்பண நாட்களில் திருவாராதனம் செய்து முடித்தப்பின் தர்ப்பணம் பண்ணுவது உசிதம். ஏனென்றால் முதலில் தேவ கார்யம்; பின்பு பித்ரு கார்யம்.

குறிப்புகள்:

ஆனால் சில நாட்களில், மாதம் சீக்கிரம் பிறக்கலாம் அப்போது அதிகாலையில் எழுந்தவுடன் தர்ப்பணம் பண்ண வேண்டும் என்பதால் அந்நேரத்தில் திருவாராதனம் பண்ண முடியாது. மேல் குறிப்பிட்ட நாட்களில், மாதப்பிறப்பு தர்ப்பணம் முதலில் செய்துவிட்டுப் பிறகு திருவாராதன காலத்தில் திருவாராதனம் செய்வது உசிதமாக இருக்கும். பெரியோர்களுடைய அனுஷ்டானமும் இப்படி இருக்கின்றது.


ஆஶௌச காலத்தில் சந்தியாவந்தனம் செய்யலாமா?

Vidwan’s reply:

ஆஶௌச காலத்திலும் கண்டிப்பாக சந்தியாவந்தனம் செய்தே ஆக வேண்டும்.

குறிப்புகள்:

ஆஶௌச காலத்திற்குச் சில குறைகள் (விதிகள்) உள்ளன;

1.வாயால் மந்திரங்களை உச்சரிக்கக் கூடாது

2.அங்கந்யாச/கரந்யாசங்கள் பண்ணக்கூடாது. சுருக்கமாகப் பண்ண வேண்டும்


அடியேனுக்குச் சிறு வயதிலே பரந்யாஸம் ஆகி விட்டது, மீண்டும் ஒரு முறை செய்யலாமா?

Vidwan’s reply:

சிறு வயதிலே பரந்யாஸம் ஆகி விட்டது என்றால் மீண்டும் செய்யக்கூடாது. ஏனென்றால் பரந்யாஸம் ஒரு தடவைதான் பண்ண வேண்டும்.


ஸ்ரீபாத தீர்த்தம் வாங்கி அருந்தின பிறகு கை எச்சிலா? அலம்ப வேண்டுமா?

Vidwan’s reply:

ஸ்ரீபாத தீர்த்தம் சாப்பிட்ட பிறகு கை எச்சில் ஆகாது. பெருமாள் தீர்த்தம், ஸ்ரீபாத தீர்த்தம் இவை இரண்டிற்கும் கை எச்சில் கிடையாது.

குறிப்புகள்:

ஆனால் ஸ்ரீபாத தீர்த்தம் சாப்பிட்டப்பிறகு பெருமாள் பாத்திரங்களையோ மற்றும் உள் பாத்திரங்களையோ தொடக்கூடாது. மேலும் வைதீகமான கர்ம (பெருமாளுக்கோ (அ) தேவர்களுக்கோ) அனுஷ்டானங்கள் உடனே செய்யவேண்டி வந்தால் கை அலம்பிவிட்டுத்தான் செய்ய வேண்டும்.


ஆசாரம் என்றால் என்ன? அனுஷ்டானம் என்றால் என்ன? என்பதைத் தெளியப்படுத்த ப்ரார்திக்கின்றேன்.

Vidwan’s reply:

அனுஷ்டானம் என்றால் வைதீக கர்மங்கள். அதாவது நாம் செய்யக்கூடிய ப்ரம்ம யக்ஞம், திருவாராதனம் முதலான கர்மங்கள்.

ஆசாரம் என்பது அனுஷ்டானம் செய்வதற்கு, வேண்டிய தகுதியைக் கொடுப்பது.

குறிப்புகள்:

சுத்தியுடன் தான் அனுஷ்டானம் பண்ண வேண்டும்.

அதாகப்பட்டது, ஒருவர் மிகவும் ஆசாரமாக திருவாராதனம் பண்ணுகின்றார் என்றால் அவர் நன்கு தீர்த்தமாடி விட்டும், யார் மேலே படாமலும் சந்தியாவந்தனம் பண்ணிவிட்டும், கைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டும் பண்ணுகின்றார் என்று அர்த்தம். இவையே ஆசாரமாகும்.

அனுஷ்டானத்திற்குத் தேவையான ஒரு சுத்தியைக் கொடுப்பதுதான் ஆசாரம்.

ஆசாரத்துடன் கூடிய அனுஷ்டானம் தான் விசேஷம்.

வெறும் ஆசாரமாக மட்டுமே இருப்பது ப்ரயோஜனம் கிடையாது (உபயோகமில்லை) என்று ஸ்ரீபாஷ்யக்காரர் சாதித்திருக்கிறார்.


நாம் காலை மற்றும் இரவு செய்யும் பாபங்கள் சாயம் மற்றும் காலை சந்தியாவந்தனத்தில் போகிறது. ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் உள்ள அபராத பரிஹாரம் என்னும் அதிகாரத்தில், ப்ராயச்சித்தமானது நாம் அறிந்து செய்த பாபங்களுக்கு என்று ஸ்வாமி சாதித்துள்ளார் அதன் தாத்பர்யம் யாது? தயை கூர்ந்து விளக்கவும்.

Vidwan’s reply:

சந்தியாவந்தனத்தில் பாபங்கள் போக சில மந்திரங்கள் இருக்கின்றன. நாம் தெரியாமல் செய்த பாபங்கள் மட்டுமே அதில் போகும்.

தெரிந்தே செய்த பாபங்களுக்குக் கண்டிப்பாக ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும். அதுவே உசிதம்.

குறிப்புகள்:

சந்தியாவந்தனம் பண்ணுவது, ஒரு பெரிய பலனைக் கொடுக்காது என்றாலும் சந்தியாவந்தனம் பண்ணாதிருந்தால் பாபம் வரும் என்று பெரியவர்கள் கூறியிருக்கின்றனர்.

ஆக சந்தியாவந்தனம் செய்ய, நம்மை அறியாமல் செய்த பாபங்கள் போகலாமே தவிர, தெரிந்தே செய்த பாபங்களுக்கு ப்ராயச்சித்தம் செய்தாக ப்ராயச்சித்தம் செய்தாக வேண்டும்.


பகவத் அனுக்ரகத்தினால் மட்டுமே எக்காரியமும் செய்ய இயலும். அப்படியென்றால் நாம் செய்யும் தர்ம அதர்மாதிச் செயல்களுக்கு, பகவான் மறைமுகக் காரணமாக இருக்கின்றாரா? தெளியப்படுத்தவும் அடியேன்.

Vidwan’s reply:

ஆமாம். கட்டாயம் பெருமாள்தான் காரணமாக இருக்கின்றார். பகவான் காரணமாக இல்லையென்றால் நம்மால் எந்த காரியமும் செய்ய முடியாது. பகவத் அனுக்ரஹத்தால் மட்டுமே எல்லாக் காரியங்களும் நடைபெறுகின்றன.

அவர் மறைமுகமான காரணமாக இருக்கிறார் என்பதுதான் சரி. ஏனென்றால் நேரடியாக நாம்தான் காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கிறோம். ஆனால் பகவான் இல்லையென்றால் நம்மால் அந்தக் காரியத்தைச் செய்ய முடியாது.

குறிப்புகள்:

உதாஹரணத்திற்கு, நமக்கு முன் ஒரு பெரிய பாறாங்கல் இருக்கின்றது. அதை நம்மால் தனியாக நகர்த்த முடியாது. மற்றொருவர் சகாயம் செய்தால்தான் அந்தக் கல்லை நகர்த்த முடியும். அதேபோல் பெருமாள் மறைமுகக் காரணமாக இருக்கின்றார்.

நாம் செய்யும் காரியங்களுக்கு அனுமந்தாவாக அதாவது அக்காரியங்களை அனுமதிப்பவனாகவும் மேன்மேலும் தொடரவும் பகவான் இருக்கிறார்.


ப்ரபந்நனின் மீதமுள்ள புண்ணிய பாபத்தினை, விரஜை கடக்கும் முன் பெருமாள் வேறு சிலருக்குப் பிரித்துக் கொடுக்கிறார் என்கிறார்கள். அப்படியிருக்க அவரை அறியாமல் சேர்கின்ற அந்த பாபத்தினை எப்படிக் கழிப்பார்? அதே போல் நம் புண்ணியம், வேறு ஒரு சேதனனுக்குச் சேர்கிறது என்றால், அது அவர் பெருமாளிடம் சேரும் நாளைத் தாமதிக்குமா?

Vidwan’s reply:

புண்ணியமோ பாபமோ யாரிடம் சேர்கிறதோ இரண்டையுமே அவரவர் அனுபவித்துதான் கழிக்க வேண்டும்.

குறிப்புகள்:

ஒரு ப்ரபந்நன் செய்த புண்ணிய பாப காரியங்கள் பின்னால் வேறு ஒருவருக்கு போய்ச் சேரும், அவரிடம் அபசாரப்பட்டவரிடம் அந்தப் பாபங்கள் போய்ச் சேரும், அவரிடம் அனுகூலமானவரிடம் அந்தப் புண்ணியங்கள் வந்து சேரும்.

இவை இரண்டையுமே அவரவர் அனுபவித்துதான் கழிக்க வேண்டும். ஒருகால் யாருக்குச் சேர்கிறதோ அவரும் ப்ரபந்நராக இருந்தால் நிர்திஷ்டமான காலம் அதாவது “एतत् देहावसाने” காலத்திற்குள்ளேயே அந்தப் பலனை அனுபவித்து விடுவார் இதனால் மோக்ஷத்திற்கு விளம்பம் வராது.


எல்லாம் விதி/கர்மாவின் படி நடக்கிறது என்றால் புத்திசாலித்தனம் தேவையா?

Vidwan’s reply:

புத்திசாலித்தனம் கண்டிப்பாகத் தேவை.

குறிப்புகள்:

விதியை மதியால் வெல்லலாம் என்று ஒரு சொற்றொடர். விதியை வெல்வதற்கு மதி தேவைதான். அந்தவகையில் தனக்கு ப்ரதிகூலமான விஷயங்களையும், பகவானுடைய அனுக்ரஹத்தினால், பிரார்த்தனையின் மூலம் நமக்கு அனுகூலமாக மாற்றிக் கொள்ள முடியும்.


நான் என்னும் அகங்காரத்திற்கும் சுயமரியாதைக்கும் இடையிலுள்ள வேறுபாடு காண்பது எப்படி?

Vidwan’s reply:

மரியாதையை உடையவர், தான் செய்த தவற்றைப் பிறர் எடுத்துக் காட்டும் போது, தன் தவற்றை உணர்ந்து திருத்திக் கொள்ள முயல்வர்.

நான் என்ற அகங்காரம் உடையவர் தான் செய்த தவற்றைப் பிறர் எடுத்துக் காட்டும்போது தன் தவற்றைச் சமர்த்திக்க முயல்வர். இதனால் வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளலாம்.


அடியேன் ஸ்ரீமந் நாராயணா! நம் ஸம்ப்ரதாயத்தில் இதர தேவதாந்தரங்கள் குலதெய்வம் ஆகுமா? க்ரஹத்து குலதெய்வம் துக்கச்சி, ஐயப்பன் அப்படி சொல்றா. தயவுசெய்து சந்தேகத்தைத் தீர்த்து வைக்கவும். ஸ்ரீமந் நாராயணா.

Vidwan’s reply:

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு குலதெய்வம் ஸ்ரீமந்நாராயணனே. ஆகையால் அவரையே கொண்டாட வேண்டும் . இதர தேவதாந்தரங்களைக் கொண்டாடுவது கூடாது.


ஸ்ரீவைகுண்டத்திற்கும் கோலோகத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? அடியேன்

Vidwan’s reply:

ஸ்ரீவைகுண்டம் என்பது வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற ஒரு அப்ராக்ருதமான லோகம். அதுவே ஸாக்ஷாத் ஸம்ஸார மோக்ஷ ஸ்தானமாக இருக்கின்றது.

கோலோகத்தைப் பற்றி புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நம் ஸம்ஸார மண்டலத்தினுள் இருக்கக்கூடிய ஒரு உத்தமமான லோகம். நம் ஸம்ஸார மண்டலத்தினுள் விஷ்ணுலோகம் கூட உண்டு.


சங்க்ரமணம்(சித்திரை விஷு போன்றவை) மற்றும் அமாவாஸை நாட்களில் பண்டிகையும் வரும்போது (தீபாவளி போன்றவை) நாம் பண்டிகை கொண்டாடலாமா? பண்டிகை உணவு தயாரிக்கலாமா? இந்தக் கேள்விக்கு, தர்ப்பணம் பண்ணுபவர் பார்வையிலிருந்தும் மற்றும் மீதமுள்ள குடும்ப உறுப்பினர்கள் பார்வையிலிருந்தும் பதில் அளிக்கப் பிரார்த்திக்கிறேன்?

Vidwan’s reply:

தர்ப்பண நாட்களில் பண்டிகை கலந்து வந்தால், பண்டிகை தளிகை செய்து எம்பெருமானுக்குச் சமர்பிக்க வேண்டும்.

குறிப்புகள்:

சங்க்ரமணத்தைப் பற்றி கூறும்போது சாதாரண சங்க்ரமணத்தைக் கூட ஒரு பண்டிகை போல் ப்ரதானமாக கொண்டாடுவது வழக்கம். தர்ப்பணம் செய்து மாதப்பிறப்பு நாட்களில் சாதாரணமாகப் பண்ணுவதே வழக்கம். அதனால் சங்க்ரமணத்துக்கு இந்தக் கேள்வி அவசியமில்லை.

பண்டிகை நாட்களும் அமாவாஸையும் சேர்ந்து வருகின்றபோது, பண்டிகை கொண்டாட வேண்டும். குறிப்பாக அமாவாஸை மற்றும் தீபாவளி சேர்ந்து வரும்போது இக்கேள்வி தோன்றும்.

தர்ப்பண நாட்களில் பிறந்தநாள் அல்லது வேறு பண்டிகை வரலாம். அப்படி அமையும்போது தர்ப்பணம் செய்தப்பின்பு, பண்டிகை ரீதியில் அதற்கான தளிகையைச் செய்து, பெருமாளுக்குத் திருவாராதனை செய்த பின் கொண்டாட வேண்டும்.


ஸ்ரீவைஷ்ணவர்கள் நாராயணீயம் ஸேவிக்கலாமா?

Vidwan’s reply:

ஸ்ரீவைஷ்ணவர்கள் நாராயணீயம் ஸேவிக்கலாம்.

குறிப்புகள்:

பாகவதத்தின் விஷயங்களைச் சுருக்கி ஶ்லோக ரூபமாக சொல்வது நாராயண பட்டத்திரி இயற்றிய நாராயணீயம் என்ற காவியம். அது பகவத் விஷயம் தான். அதை ஸ்த்ரீகளோ புருஷர்களோ படிப்பதினால் ஒருவிதமான குற்றமுமில்லை.


நமது அனுஷ்டானத்தை விஞ்ஞானத்துடன் எப்படி ஒப்பிடுவது. உதாஹரணத்திற்கு சாஸ்த்ரங்களின் படி, க்ரஹண காலத்தில் சாப்பிடக்கூடாது. இந்த முறை மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்று பல நடைமுறைப் பழக்கங்களைக் குழந்தைகளுக்கு விளக்க முடியவில்லை. இப்படி சரியான விளக்கம் தர முடியாததால் நம் ஸம்ப்ரதாயத்தில் இருந்து நம் குழந்தைகளை இழக்க நேரிடும். தந்யோஸ்மி

Vidwan’s reply:

சாஸ்த்ரமே ப்ரதானம். சாஸ்த்ரத்தை, விஞ்ஞானம் கொண்டு புரிந்துகொள்ள முயற்சிக்கக் கூடாது. விஞ்ஞான ரீதியாக அதற்கு விளக்கம் தேட நினைக்கவே கூடாது.

ப்ரமாதாக்கள் செய்யக்கூடிய ஹிதமே சாஸ்த்ரம்.

குறிப்புகள்:

சாஸ்த்ரம் சொல்வதை முழுமையாக நம்புவதே சர்வோசிதம் அதையே குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும்.

விஞ்ஞானமே சாஸ்த்ரத்தில் இருந்துதான் வந்திருக்கிறது என்று நாம் உணர்ந்து கொண்டு அதை இக்காலக் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

உதாஹரணமாக, க்ரஹண காலத்தில் உணவருந்தக் கூடாது என்பதை சாஸ்த்ரம் மட்டுமல்லாமல் விஞ்ஞானமும் ஒத்துக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் புறவூதா கதிர்கள்(ultraviolet rays) மற்றும் காந்தப்புலம்(magnetic field) இவையெல்லாம் மிகவும் தீவிரமாக இருக்கின்றபடியால் நமது ஜீரண சக்தி பாதிக்கப்படும், ஆகையால் உணவு உட்கொள்ளக்கூடாது என்று விஞ்ஞானமும் கூறுகின்றது.

புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிற புஷ்பக விமானத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் ஆகாச விமானமே உருவானது என்பர். ஆகையால் எல்லாவற்றிற்குமே சாஸ்த்ரம்தான் அடிப்படை.


கோவில் திருவாராதனம் என்றால் என்ன என்பதை விளக்க ப்ரார்த்திக்கிறேன்

Vidwan’s reply:

கோவில் திருவாராதனம் ஆகம சாஸ்த்ரங்களுக்கு உட்பட்டவை. வைகானஸ, பாஞ்சராத்ர என்று இரு ஆகமங்களைக் கொண்டது கோவில் திருவாராதனம்.


வெளிநாடு செல்லும் போது சாளக்கிராம மூர்த்தியை என்ன செய்வது, நித்யாராதனத்தை எப்படித் தொடர்வது?

Vidwan’s reply:

வெளிநாடு செல்லும் போது நித்யாராதனை தொடர வேண்டுமென்றால், சாளக்கிராம மூர்த்தியை ஏளப்பண்ணிக்கொண்டு தான் செல்ல வேண்டும்.

குறிப்புகள்:

சாளக்கிராம மூர்த்திக்கு ஏதாவது அசுத்தம் ஆகிவிட்டது என்று நினைத்தோமேயானால் அப்போது அங்கே எழுந்தருளப்பண்ணியவுடன் முதலில் பாலால் சாளக்கிராம மூர்த்திக்குத் திருமஞ்சனம் செய்ய வேண்டும். அதுவே அவருக்குச் செய்யும் சுத்தி. அதன் பிறகு, அங்கே தொடர்ந்து திருவாராதனம் செய்யலாம்.


விஶிஷ்டாத்வைதம் தத்வத்தின் அடிப்படைகள் என்ன என்பதை தெளியப்படுத்தவும்

Vidwan’s reply:

விஶிஷ்டம் – எல்லா உலகங்களுக்கும் ஆத்மாவானவன் (ஜகத்துடன் கூடியவன்); அத்வைதம் – ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே.

குறிப்புகள்:

உலகம் முழுவதையும் படைப்பவன், காப்பவன், அழிப்பவன், அந்தர்யாமி, பர்மாத்மா, மோஷம் அளிப்பவன் எல்லாம் ஸ்ரீமந்நாராயணனே இது தான் விஶிஷ்டாத்வைத தத்வம்.

மேலும் க்ரந்தங்களில் இருக்கும் விஷயங்களைக் காலக்ஷேபம் மூலம் விஸ்தாரமாக அறிந்து கொள்ளலாம்.


ஸ்வாமி, அடியேன் ப்ராமண குடும்பத்திலிருந்து வரவில்லை. நான் என்ன ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்ற வேண்டும் என்று தயவுசெய்து விளக்கவும்.

Vidwan’s reply:

திவ்ய ப்ரபந்தம், ஸ்தோத்ரம் முதலியவைகளைக் கற்றுக்கொண்டு, கோவிலில் உசிதமான கைங்கர்யம் செய்தும், திருமண் இட்டுக்கொள்ளுதல் முதலான ஸ்ரீ வைஷ்ணவ தர்மங்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கவும்.

குறிப்புகள்

சமாஶ்ரயணம், பரந்யாஸம் செய்து கொள்ள வேண்டும்.

அதாவது, எல்லோரிடத்திலும் சகஜ காரணத்தை உடையவர்களாய், நல்ல ஒழுக்கவழக்கம் உடையவர்களாய் மற்றும் தெய்வபக்தி உடையவர்களாய் ஸ்ரீவைஷணவர்களை மதிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.


ஸம்ப்ரதாயத்தின் முக்கியத்துவமும் அதன் அர்த்தமும் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கு வழியை தெளியப்படுத்தவும்.

Vidwan’s reply:

ஸம்ப்ரதாயம் என்பது கொடுத்து வருவது, அதாவது ஆசார்யர் நமக்குக் கொடுத்து வரக்கூடிய மத சித்தாந்த கருத்துக்கள். நாமாக ஒன்றைக் கல்பித்து/கண்டுபிடித்துச் சொன்னால் அது ஸம்ப்ரதாயமாகாது.

குறிப்புகள்:

நம் ஆசார்யர்கள் நமக்குச் சொல்லும் தத்வம் ஹிதம் புருஷார்த்தம் வேதத்தின் அர்த்தங்கள் என்ற எதுவுமே இவர்களாகக் கண்டுபிடித்துச் சொல்லவில்லை அவரவர்களுடைய ஆசார்யர்கள் சொன்னதைச் சொல்கிறார்கள்; அவை ஸம்ப்ரதாயமாக இருக்கிறது.

நாதமுனிகள், பகவத் இராமனுஜர், ஸ்வாமி தேசிகன் என அனைவரும் அவரவர் ஆசார்யர் சொல்லியதைத்தான் சொல்லுகிறார்கள். இப்படியாக இவை மொத்தமும் ஸம்ப்ரதாயத்தில் வந்த்திருக்கிறது, அதாவது தானே எதுவுமே சொல்லாது, ஒருவர் சொல்லிக்கொடுத்துச் சொன்னதாக வந்திருக்கிறது.

வேதம், தர்ம சாஸ்த்ரம், போன்றவற்றின் அர்த்தம் மிகவும் குழப்பமாக இருக்கும். தானாக அறிய முயன்றால் குழப்பம் ஏற்படும், விபரீதமான அர்த்தம் தோன்றக்கூட வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஸம்ப்ரதாய வழியில் இதை அறிய வேண்டும். அதாவது முன் இருந்த மஹாஞானிகள் அவர்கள் என்ன ரீதியில் அர்த்தம் சொல்லியிருக்கிறார்களோ அதை அந்த ரீதியில், ஸம்ப்ரதாய வழியில் கற்றுப் புரிந்துகொள்ள வேண்டும்.


106 திவ்யதேசங்களில் நாம் திருப்பிருதியை பார்க்க முடியுமா? அது எங்கே அமைந்துள்ளது? ஜோஷிமட்டும் திருப்பிருதியும் வேறு என்று நினைக்கிறேன். தயவு செய்து விளக்கவும்?

Vidwan’s reply:

ஜோஷிமட்தான் திருப்பிருதி என்று பலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்

குறிப்புகள்:

அது இல்லை என்ற வாதம் சிலர் வைக்கிறார்கள். ஆனால் சரியான காரணத்தைக் காட்டி எது திருப்பிருதி என்று சொல்ல முடியவில்லை. ஆகையால், இதை பெரிதாக ஆராயாமல் ஜோஷிமட்தான் திருப்பிருதி என்றும் வைத்துக்கொள்ளலாம், அது இல்லை என்றும் வைத்துக்கொள்ளலாம்.


பாவ கர்மங்களினால் ஒரு ஜீவன் விலங்கு, தாவரம் போன்ற கீழான நிலையை அடைந்து விட்டால் அந்த ஆத்மா எப்படி புண்ணியம் செய்து ஒரு மேலான நிலை அடையும்? தாவரமானது தன்னைப் புசிக்கத்தந்ததை அடையலாம் எனக் கொண்டால், விலங்குகள்?

Vidwan’s reply:

பாவ கர்மாக்களினால் ஒரு ஜீவன் விலங்கு, தாவரம் போன்ற கீழான நிலையை அடைந்து விட்டால் அந்த ஜீவன் புண்ணியம் செய்வது கஷ்டம்.

குறிப்புகள்:

புண்ணிய பாபம் செய்வது என்பது மனித ஜன்மாவில் தான் முடியும். மிருக, ஸ்தாவர ஜன்மத்தில் செய்ய முடியாது (தானாக அவைகளுக்குப் புண்ணிய பாபம் சம்பவித்தால் அந்த விஷயம் வேறு).

பக்ஷி மிருக ஸ்தாவர ஜன்மம் எடுக்க நேர்ந்தால் பாபம் கழியும் என்பது மட்டும் தான். அந்த ஜன்மமெடுத்து புண்ணிய பாபம் கழிந்தப்பின் நாம் மனித ஜன்மம் எடுப்போம். அதில் புண்ணியம் செய்ய, உயர் கதிக்குப்போகலாம். அப்போதும் பாபம் செய்தால் புழு, பூச்சி முதலிய ஜன்மம் எடுக்க நேரிடும். ஆக இந்த ஜன்மங்கள் புண்ணிய பாபம் கழிக்க வந்தவையே தவிர அதைச் செய்ய வந்தவை அல்ல.


பாரதத்தைக் கர்ம பூமி என்றும், கர்மத்தைத் தொலைக்க ஜீவன்கள் இங்கு உள்ள புண்ணிய க்ஷேத்ரங்களில் உள்ள நதிக்கரையில் நீராடி, தானம், தவம் செய்து முக்தி அடையவேண்டும் என்ற பக்ஷத்தில், போக பூமி எனப்படும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களின் நிலை என்ன?

Vidwan’s reply:

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களும் ஆசார, அனுஷ்டானங்களையும், தர்மங்களையும் விடாமல் செய்ய வேண்டும். ஆனால் பாரத பூமியில் செய்வது ஶ்ரேஷ்டம் என சாஸ்த்ரம் சொல்கிறது.

குறிப்புகள்

சமாஶ்ரயணம், பரந்யாஸம், ஸ்ரீவைஷ்ணவ தர்மங்கள், கைங்கர்யம், பகவத் அனுக்ரஹம் மோக்ஷம் முதலியவை எந்த தேசத்தில், எந்த மூலையில் இருந்தாலும் எல்லாருக்கும் பொதுவானவை.


நமது ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில், நித்ய கர்மானுஷ்டானம் என்பது யாது? எவையெல்லாம் நித்ய கர்மானுஷ்டானம் என்று தெரியப்படுத்த ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

தினமும் காலை எழுவது முதல் இரவு படுத்துக்கொள்வது வரை, தினமும் செய்ய வேண்டிய சந்தியாவந்தனம் முதலியவை நித்ய கர்மானுஷ்டானங்கள். இவற்றைப் பற்றி ஆஹ்நிக நூல்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

குறிப்புகள்

ஒரு நாளில் செய்ய வேண்டியதாகச் சொல்லப்பட்ட கர்மாக்கள் சுருக்கமாக:

விடியற்காலையில் ஹரி ஹரி என்று, ஹரி சிந்தனையுடனே எழுந்து, தேகசுத்தி, சரீரசுத்தி (ஸ்நானம்) செய்துவிட்டு, ஊர்த்வபுண்ட்ரங்கள் தரித்துக்கொண்டு சந்தியாவந்தனாதி கர்மாக்கள் செய்வது,

மேலும் உபநயனம் ஆன ப்ரம்மச்சாரியாக இருந்தால் ஸமிதாதானம், விவாஹிதராக இருந்தால் ஔபாசனம், அதேபோல் தேவரிஷி, காண்ட ரிஷி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். உபதேசம் ஆகியிருந்தால் ஆதாரசக்தி தர்பணம், பிரம்மயக்ஞம் , மாத்யானிகம், நித்யாராதனம், பின்பு அனுயாகம் (பகவத் ப்ரசாதத்தை ஸ்வீகரித்தல்) போன்றவையும்,

ஸ்வாத்யாய காலத்தில் பகவத் சிந்தனையுள்ள புத்தகங்களை வாசிப்பது. பகவானுடைய திருவாராதன கைங்கர்யத்திற்குத் தேவையான பொருட்களை ஈட்டுவது பகவத் சிந்தனையுடன் உறங்குவது இவை அனைத்துமே நித்யகர்மானுஷ்டானங்கள்.


அடியேன், எனது தந்தை கொரோனாவால் பரம்பதித்தபடியாலும், அதே சமயம் அடியேனும் அந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதனால் எந்த ஈமக்ரியைகளும் என்னால் செய்ய இயலவில்லை.எனது மூத்த சகோதரன் 13 நாள் காரியம் வரை அனைத்தும் செய்தார். சுமார் ஒரு மாதம் கழித்து ஆத்து வாத்யாரின் வழிகாட்டுதலின் படி, 10 நாள் தர்ப்பணம் மட்டுமே செய்தேன். தந்தையின் அந்திம காரியம் செய்ய முடியாமல் போனது வருத்தமளிக்கிறது, இதற்கு ஏதேனும் ப்ராயச்சித்தம் உண்டா?

Vidwan’s reply:

பெரிய தமையனார் எல்லாம் செய்திருக்கிறார். அதற்குப் பிறகு ஆத்து வாத்தியாரின் வழிகாட்டுதல்படி செய்யவேண்டிய எல்லாக் கர்மாக்களையும் செய்தாகிவிட்டது. இதற்கு மேல் எந்த ஒரு ப்ராயச்சித்தமும் செய்யத் தேவையில்லை.

குறிப்புகள்

நம்மால் செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தியதே ஒரு ப்ராயச்சித்தம் தான். இளைய சகோதரராக இருக்கும் பக்ஷத்தில் உதகதானம் மட்டுமே செய்ய வேண்டும். அதுவும் செய்தாகிவிட்டபடியால் இனிச்செய்வதற்கு ஒன்றுமில்லை.


ஶ்ராத்தம் நாள் தவிர, அமாவாஸை போன்று நாம் தர்ப்பணம் செய்யும் இதர நாட்களில், காக்கைக்கு உணவு அளிக்கலாமா/அளிக்க வேண்டுமா?

Vidwan’s reply:

தினமும் காக்கைக்கு உணவு அளிக்கலாம். சாஸ்த்ர நிர்பந்தம் கிடையாது.

குறிப்புகள்:

அன்ன வைஶ்வதேவம் செய்பவர்கள் அதில் ஒரு அம்சமாக காக்கைக்குச் சாதம் வைப்பார்கள்.

ஶ்ராத்தத்தில் அன்ன பிண்டத்தை வைக்க வேண்டும் என்று சாஸ்த்ரம் கூறுகிறது.


அடியேன், அஹோபில மடம் வெளியிட்ட திருவாராதனம் சம்பந்தமான புத்தகத்தில், சந்தியாவந்தனாதிகள் முடித்த பின் தான் திருவாராதனம் செய்ய வேண்டும் என்ற குறிப்பு உள்ளது. இது ப்ராதஸ் மற்றும் மாத்யாநிகமும் சேர்த்தா? இல்லை ப்ராதஸ் சந்தியாவந்தனம் மட்டுமா என்பதை தெளியப்படுத்த ப்ரார்திக்கிறேன்.

Vidwan’s reply:

சந்தியாவந்தனாதிகள் மாத்யானம் வரை முடித்துக்கொண்டு இஜ்யாராதனம் செய்ய வேண்டும் என்று அர்த்தம்.


குறைந்தபக்ஷம் திருவாராதனம் மற்றும் காலக்ஷேப சமயங்களிலாவது கட்டாயம் ஸ்வரூபத்தில் இருக்க வேண்டும் என்பதின் பொருள் என்ன? அதன் முக்கியத்துவத்தைத் தெரியப்படுத்த ப்ரார்திக்கிறேன். அடியேன்.

Vidwan’s reply:

பகவானுக்கு தாஸன் என்பது நமது ஸ்வரூபம். அதற்கேற்றால் போல் சாஸ்த்ரம் சொன்ன ரீதியில் 12 திருமண் இட்டுக்கொள்ளுதல், வஸ்த்ரம் உடுத்திக் கொள்ளுதல், முதலியவை தேவை.

இவைதான் ஸ்வரூபத்துடன் இருத்தல் என்று சொல்கிறார்கள்.

பகவானுக்கு தாஸன் என்கிற நம் ஸ்வரூபத்திற்கேற்ற வேஷம் தரிக்க வேண்டும் அது இல்லாவிட்டால் நாம், நம் ஸ்வரூபத்தை உணரவில்லை என்று அர்த்தமாகிவிடும்.

குறிப்புகள்:

ஒருகாலத்தில் அனைவருமே சிகையுடன் இருந்தார்கள் இன்று காலதேச அர்த்தபாரங்களை அனுசரித்து பலபேர் அதை வைத்துக்கொள்வது இல்லை.

குறைந்தபக்ஷம் கச்சம் உடுத்திக்கொண்டு 12 திருமண் இட்டு கொண்டு ஸ்வரூபத்துடன் தான் திருவாராதனம், பித்ரு கர்மாக்கள், காலக்ஷேபம்கேட்பது போன்றவற்றைச் செய்ய வேண்டும்.


பொதுவாக தர்ப்பணம் செய்யும் போது இரண்டு வர்கங்களுக்கும் தர்ப்பணம் செய்கிறோம். சந்தேகம் என்னவென்றால், சுமங்கலியாக பரமபதித்த பார்யாளுக்கு மகன் ப்ரத்யாப்திக ஶ்ராத்தம் மட்டும் செய்கிறான். மற்ற தர்ப்பணாதிகள் செய்வதில்லை. பரமபதித்த மனைவியாகிற அந்த ஜீவனுக்குப் பிதா இருக்கும்போது அமாவாஸை தர்ப்பணாதிகள் அந்த ஜீவனுக்குச் செய்வதில்லை. பிதா தன்னுடைய பித்ரு மற்றும் மாத்ரு வர்கத்தக்கு மட்டும் தர்ப்பணம் செய்கிறான். சுமங்கலியாகப் பரமபதித்த அந்த ஜீவன் தன்னுடைய வர்கத்துடன் சபிண்டிகரணத்தில் சேர்ந்தாலும் அந்த ஜீவன் தர்ப்பணாதிகள் செய்யும்போது தனித்து விடப்படுகிறதா தன்னுடைய கணவன் பரமபதம் அடையும் வரை அதன் நிலை என்ன? பெரியோர்கள் விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் எந்தெந்த சமயத்தில் எந்தெந்த ஆகாரம் என்று சாஸ்த்ரம் வகுத்துக்கொடுத்திருக்கிறது. அதில் அவர்களுக்கு எந்த குறைவும் வராது நாம் சாஸ்த்ரத்தில் கூறியிருப்பதைச் செய்தால் போதும்.

குறிப்புகள்:

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ப்ரபத்தி ஆகி சுமங்கலியாகப் போயிருந்தால் சாக்ஷாத் மோக்ஷத்திற்குப் போய் விடுவாள். அதன் பின் அவளுக்குப் பசி தாகம் எதுவும் கிடையாது. நாம் செய்யும் தர்ப்பணத்தை எதிர்பார்த்து அந்த ஜீவன் இல்லை. நாம் தர்ப்பணம் பண்ணுவது அந்த ஜீவனுக்குள் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மாவைக் குறித்து.

நாம் செய்யும் தர்ப்பணாதிகளில் நம் தகப்பனாரையோ பாட்டனாரையோ உத்தேசித்துச் செய்கிறோம். ஆனால் அது அவர்களுக்குச் செய்வது இல்லை அவர்களுக்குள் அந்தர்யாமியாகிய இருக்கும் பரமாத்மாவிற்குச் செய்கிறோம்.


திருவாராதனத்தில், சாளக்கிராம பெருமாளுடன் வெள்ளிச் சடாரிக்கும் சேர்த்து திருமஞ்சனம் செய்யலாமா?

Vidwan’s reply:

வெள்ளிச் சடாரி என்பவருக்கு ப்ரதிஷ்டை செய்திருந்தால் சாளக்கிராமத்துடன் சேர்த்து வைத்து திருமஞ்சனம் செய்யலாம்.

குறிப்புகள்

நாமே ஏளப்பண்ணியிருந்த சடாரியாக இருந்தால், தனியாகத் திருமஞ்சனம் செய்ய வேண்டும்.


ஸ்ரீவைஷ்ணவர்கள் குறிப்பாக, கடைபிடிக்க வேண்டிய ஆசார அனுஷ்டானங்கள் யாவை?

Vidwan’s reply:

ஸ்ரீவைஷ்ணவர்கள் குறிப்பாக, திருமண் இட்டுக்கொள்ள வேண்டும் என்பதும், பெருமாள் திருவாராதனம் செய்ய வேண்டும் என்பதும் முக்கியம்.

பெருமாளைத் தவிர மற்ற தேவதாந்தரங்களைச் ஸேவிக்க கூடாது என்று ஸ்ரீவைஷ்ணவ சாஸ்த்ரங்கள் மற்றும் மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

குறிப்புகள்

பொதுவாக ஆசார அனுஷ்டானம் என்பது ஸ்நானம் முதலான ஆசாரங்களும் சந்தியாவந்தனம் முதலான அனுஷ்டானங்களுமாகும். அவற்றை ஸ்ரீவைஷ்ணவர்களும் செய்கிறார்கள்.


பரேஹனி தர்ப்பணம் அடுத்த நாள் தான் செய்ய வேண்டுமா? அப்படியென்றால் ஸ்நானம் செய்த பின்னா? அல்லது செய்யும் முன்பா? தர்ப்பணம் செய்யும் அந்த நாள் இரவு சாதம் தவிர்க்கப்பட வேண்டுமா?வேறு கடைபிடிக்க வேண்டிய நியமனங்கள் யாது? தெளியப் படுத்த ப்ரார்திக்கிறேன்.

Vidwan’s reply:

ஶ்ராத்தத்திற்கு மறுநாள், அதற்கு அங்கமாக ஒரு தர்ப்பணம் செய்ய வேண்டும், அதற்குப் பெயர் பரேஹனி தர்ப்பணம்.

பரே அஹனி என்றால் அடுத்த நாளில் என்று அர்த்தம். அமாவாஸையாதிகள் தர்ப்பணத்திற்குச் செய்யும் அதே சுத்தியுடன் செய்ய வேண்டும்.

குறிப்புகள்

மறுநாள் சூர்யோதயம் முன் செய்யக்கூடாது. ஸ்நானம் செய்து திருமண் இட்டுக்கொண்டு சூர்யோதயம் சமயம் சந்தியாவந்தனம் செய்த பின்புதான் பரேஹனி தர்ப்பணம் செய்ய வேண்டும்.

அன்று இரவு வ்ரதம் இருக்க வேண்டும் சாதம் சாப்பிடக்கூடாது, இயலாதவர்கள் பலகாரம் செய்யலாம். பரேஹனி தர்ப்பணத்திற்கு வேறு தனிப்பட்ட நியமம் எதுவுமில்லை.


நாம் செய்யும் எந்த கைங்கர்யமெல்லாம் எம்பெருமானுக்கு ப்ரீதியை உண்டாக்கும்?

Vidwan’s reply:

எந்த கைங்கர்யமானாலும், அதைக் கைங்கர்யமாக பண்ணோமேயானால் பெருமாளுக்குக் கட்டாயம் அது ப்ரீதியைக் கொடுக்கும்.

குறிப்புகள்

நித்ய கர்மானுஷ்டானத்திலிருந்து ஆரம்பித்து, தானமோ, தர்ம கார்யமோ என அனைத்து காரியங்களையுமே, ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் என்று சொல்லிச் செய்தோமேயானால் கட்டாயமாக எம்பெருமானுக்கு ப்ரீதியைக் கொடுக்கும்.

தர்மகார்யம் என்றாலே எம்பெருமானுக்கு ப்ரீதியைக் கொடுக்கும், அதுவும் அந்த எண்ணத்தில் செய்ய மேலும் மேலும் அவனுக்கு ப்ரீதி அதிகமாகும்.


நம் பூர்வாசார்யர்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்கும்படி காட்டிய அனுஷ்டானம் என்னென்ன?

Vidwan’s reply:

நித்யகர்மானுஷ்டானங்கள் (சந்தியாவந்தனங்கள் பெருமாள் திருவாராதனம்) எல்லாவற்றையுமே கடைபிடிக்க வேண்டும் என பூர்வாசார்யர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

குறிப்புகள்

பெருமாள் திருவாராதனம் பொதுவாக யாராவது ஒருவர் செய்வார்கள், மற்றவர்கள் ஸேவிப்பார்கள். சந்தியாவந்தனம் கண்டிப்பாக எல்லாரும் பண்ண வேண்டும். அது மட்டுமல்லாமல் முடிந்தவரை கோயில் கைங்கர்யத்தில் கலந்து கொள்ள வேண்டும்.


பயத்தைப் போக்கவும், உணர்ச்சி வசப்படுதலைக் கட்டுப்படுத்தவும் ஏதேனும் ஶ்லோகம் உண்டா?

Vidwan’s reply:

அபீதிஸ்தவம் பயத்தைப் போக்கடிக்கவே சொல்லப்பட்ட ஸ்தோத்ரம், அது போல் ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம் மற்றும் பல உள்ளன.

குறிப்புகள்

பயத்தைப் போக்க நிறைய ஶ்லோகங்கள் உள்ளன. ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் கட்டாயம் பயத்தைப் போக்கும் என்று பலனில் சொல்லப்பட்டிருக்கிறது. நமது கோபம், உணர்ச்சிக்கு அது ஒரு பரிஹாரமாய் இருக்கும்.

ஏதாவது ஒரு ஶ்லோகம் சொல்ல வேண்டுமென்றால்,

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்

லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

आपदामपहर्तारं दातारां सर्वसम्पदाम्।

लोकाभिरामं श्रीरामं भूयो-भूयो नामाम्यहम्॥

என்று சொல்லலாம்.


ஶ்ரவண விரதத்தின் மகிமை என்ன? எப்படிக் கடைபிடிக்க வேண்டும் (வ்ரத அனுஷ்டானம் யாது)?

Vidwan’s reply:

திருவோணம் என்பது எம்பெருமானுடைய திருநக்ஷத்ரம். அவருக்கான வ்ரதம் என்று புராணங்களிலே சொல்லப்பட்டிருக்கிறது.

எம்பெருமானுக்காக இருக்கக்கூடிய வ்ரதமாகியபடியாலும், எம்பெருமானுடைய அனுக்ரஹத்தினால் சகல காரியங்களையும் சாதித்துக்கொடுக்க கூடியதனாலும், விசேஷமாக கருதப்படுகிறது.

எப்படி அனுஷ்டிப்பது:

அந்தத் தினத்தில், சுத்தியாக இருந்து எம்பெருமானுடைய ஸ்தோத்ரங்கள் தயா ஶதகம் பாராயணம், நாம கீர்த்தனைகள் பண்ண வேண்டும்.

வ்ரத தினத்தில் கேளிக்கைகள் மற்றும் போக்ய விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.

திருவேங்கடமுடையான் ஒப்பிலியப்பனுகாக இருப்பார்கள். ஒப்பிலியப்பனுக்காக அனுஷ்டிக்கும்போது ஆகாரத்தில் உப்பு சேர்க்கக்கூடாது.

வ்ரத தினத்தன்று ஒரு வேளை மட்டுமே ஆகாரம் உண்ண வேண்டும். சாயங்கால வேளையில் வேண்டுமென்றால் பலகாரம் செய்யலாம்.

ஏகாதசி வ்ரதம் போல் நிர்பந்தமாக கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை.


சூர்யோதயம் ஆகும் சமயம்தான் எண்ணெய்க்குளியல் செய்ய வேண்டும் என்கிறார்கள், ஸ்தீரிகளுக்கும் இது பொருந்துமா?

Vidwan’s reply:

சூர்யோதயம் ஆன பின்புதான், எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும் என்பது ஸ்தீரிகளுக்கும் பொருந்தும்.


வெள்ளிக்கிழமை நாளில் த்வாதசி வந்தால் நெல்லிக்காய் உட்கொள்ளலாமா? நெல்லிக்காய் என்றெல்லாம் உட்கொள்ளக்கூடாது என்ற நியமம் இருக்கின்றதா?

Vidwan’s reply:

வெள்ளிக்கிழமை நாளில் த்வாதசி வந்தால் நெல்லிக்காய் உட்கொள்ளலாம்.

குறிப்புகள்

பொதுவாக நெல்லிக்காயை இரவு வேளையில் சாப்பிடுவதில்லை, அதே போல் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லிக்காய் சாப்பிடுவதில்லை.

மேல் கூறிய நாட்களில் த்வாதசி வந்துவிட்டால் அவசியம் நெல்லிக்காய் உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் த்வாதசி என்பது இந்தக் கிழமைகளைவிட பலியஸானது (அதிகம் மகிமைவுடையது), மேலும் அன்று நெல்லிக்காய் விசேஷம் என்பதால் அவசியம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.


ஒரு உபன்யாஸத்தில் சீதை சந்தியாவந்தனம் செய்ததாகவும் வேதம் கற்றதாகவும் கேட்டேன். மற்ற யுகங்களில் பெண்கள் இவ்வாறு செய்தார்கள் என்றால், ஏன் கலியுகத்தில் அது தொடராது மாறுபட்டுள்ளது? எதனால் இந்த தடை வந்தது? தெளியப்படுத்த ப்ரார்திக்கிறேன்

Vidwan’s reply:

பிற யுகங்களை விட, பொதுவாக கலியுகத்தில் ஞானமும் சக்தியும் ஆசாரமும் ஶ்ரத்தையும் குறைவுபடும் என்பதால் சிலவற்றைக் குறைத்து சாஸ்த்ரம் சொல்லியிருக்கிறது.

உதாஹரணமாக தபஸ், யாகம் முதலியவை, கலியுகத்தில் குறையலாம். அதே போல், ஸ்த்ரீகளும் சந்தியாவந்தனம் முதலியவற்றைக் குறைத்து, ஜபம், ஸ்தோத்ரம் முதலியவற்றைச் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறது.


ஏன் ஸ்ரீ வைஷ்ணவத்தில் வடகலை, தென்கலை என ஸம்ப்ரதாய பேதம்? ஜகதாசாரியரான ஸ்ரீ இராமானுஜர் காலம் தொட்டே இந்த பேதம் இருந்ததா?

Vidwan’s reply:

இந்த பேதம் ஸ்ரீ பாஷ்யகாரர் காலத்தில் இருந்ததில்லை.

குறிப்புகள்

முதல் விஷயம், சித்தாந்தத்தில் பேதம். ஆசார்யன் சொல்லும் அர்த்தங்களை ஒவ்வொருவரும் வேவ்வேறு விதத்தில் புரிந்து கொள்கிறார்கள். சித்தாந்த பேதம், காலக்ரமத்தில் அனுஷ்டான பேதம் வரை வந்துவிட்டது.


ஹிரண்ய ஶ்ராத்தம் என்பதில் ஹிரண்யம் என்பதின் அர்த்தம் என்ன?

Vidwan’s reply:

ஹிரண்யம் என்றால் – வெள்ளி, தங்கம், அர்த்தம், பொருள், நாணயம் என்ற பொருள்.

குறிப்புகள்

அக்காலத்தில் ,கொடுக்கல் வாங்கல்களுக்கு நோட்டு (பைசா) கிடையாது, எல்லாம் நாணயமாக தான் இருந்திருக்கும்.

அந்த வெள்ளி/தங்க நாணயம் கொடுத்து ஶ்ராத்தம் செய்வதை ஹிரண்ய ஶ்ராத்தம் என்பர்.

எப்படியானால் ஶ்ராத்ததின் சமயம் அன்ன ஆஹாரம் தராமல், வெறும் ஹிரண்யம் மட்டும் (பைசா/தக்ஷிணை மாத்ரம்) தந்து ஶ்ராத்தம் பண்ணுவது என்பதைத்தான் ஹிரண்ய ஶ்ராத்தம் என்பர்.


பித்ரு காரியம் செய்யும் போது கொடுக்கும் தானத்தின் உயர்வு என்ன? பொதுவாக தானம் செய்வதற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதைச் சாதித்தருள வேண்டும்.

Vidwan’s reply:

பித்ரு கைங்கர்யம் செய்யும் காலமே புண்யகாலம் தான். அதனால் அந்தக் காலத்தில் செய்யும் தானத்திற்கு விசேஷம் உண்டு.

குறிப்புகள்:

புண்யகாலத்தில் செய்யும் தானங்கள் எல்லாவற்றிற்கும் விசேஷம் உண்டு. கர்மப்படி நாம் அந்தக் காலத்தில் பித்ருகளுடன் சேர்த்து வைக்கிறோம், அவர்களுக்கு ஸத்கதி கிடைத்திருக்கிறது, அந்தப் புண்யகாலத்தில் செய்வதால் அந்தத் தானம் விசேஷம்.


க்ரஹண காலத்தில் செய்ய வேண்டியவை யாவை?

Vidwan’s reply:

க்ரஹண காலத்தில் ஆறு காரியங்கள் செய்ய வேண்டும். இதில்,

உபவாஸம்

ஸ்நானம்

புண்ய கர்மம்

என்ற மேல் கூறிய மூன்றும் ஸ்த்ரீகள், பாலகர்களுட்பட எல்லாருக்குமானவை.

தர்ப்பணம் (ஆஶௌசம் வந்திருந்தால் கூட இந்த தர்ப்பணம் செய்தே ஆக வேண்டும்)

தானம்

ஆராதனம்

ஆகிய மூன்றும் யாருக்கெல்லாம் ப்ராப்தம் உண்டோ அவர்களுக்கானவை.

குறிப்புகள்:

சூர்ய/சந்திர என இரு க்ரஹணங்களுமே நமக்கு கிடைக்கும் அரிய புண்ணிய காலம். இதை நழுவ விடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உபவாஸம்

சூர்ய க்ரஹணமென்றால், க்ரஹண காலம் ஆரம்பிக்கும் 12 மணி நேரம் முன்பும், சந்திர க்ரஹணமென்றால், க்ரஹண காலம் ஆரம்பிக்கும் 9 மணி நேரம் முன்பு பட்டினி இருக்க வேண்டும். க்ரஹண காலத்திற்கு முன் பண்ணிய அன்னம் முதலியவற்றை க்ரஹண காலம் பின்பு சாப்பிடக்கூடாது, ஊறுகாய், அப்பளம் போன்ற ஸ்திரகாலஸ்தாயியான வஸ்துக்கள் க்ரஹண காலத்திற்கு முன் தர்ப்பையிட்டால் அன்றி ஏற்க உகந்தவை அல்ல.

ஸ்நானம்

க்ரஹண புண்யகால ஸ்நானம் க்ரஹணம் ஆரம்பித்தவுடன் செய்யும் ஸ்னானம், இந்த ஸ்நானதிற்கு புண்ணியமதிகம், கங்கா ஸ்நான பலன் கிட்டும்.

க்ரஹணம் பின்பு பீடா நிவ்ருத்திக்காக இந்த ஸ்நானம் செய்ய வேண்டும்.

புண்ய கர்மம்

சாஸ்த்ரம் கூறுகிறது, இக்காலத்தில் செய்யும் ஜபங்களுக்குப் புண்ணியமதிகம், மந்திரோபதேசம் பெற்ற மந்திரங்களை ஜபித்து, சிறார்கள் ஸ்தோத்ர பாடம் முதலியவற்றை அனுஸந்தித்து அதிக பலன் பெறலாம்.

இப்படியாக என்னவெல்லாம் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதை முழுமையாக அறியவும், சாஸ்த்ரம் கூறும் எண்ணற்ற க்ரஹணகால பலன்களை மேலும் தெரிந்துக்கொள்ளவும் கீழே உள்ள காணொளியைப் பார்க்கவும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top