அபய ப்ரதாந சாரத்தில் – விபீஷண ஶரணாகதியில் ஶரணாகதியின் 6 அங்கங்கள் உள்ளது அதே போல் த்ரிஜடை தன்னைக் காக்கச் செய்த ஶரணாகதியை மோக்ஷார்த்தமாக செய்த ஶரணாகதி எனக் கொள்ளலாமா?
Vidwan’s reply
த்ரிஜடை செய்த ஶரணாகதி மோக்ஷார்த்தமல்ல. அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பலனுக்காகச் செய்ததே அன்றி மோக்ஷார்த்தமாக அல்ல.
குறிப்புகள்:
அவளுடைய ஶரணாகதியில் அங்கங்கள் எல்லாம் ரொம்ப சரியாக இருந்தது என்று சுவாமி தேசிகன் ரஹஸ்ய த்ரய சாரத்தின் பரிகர விபாக அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார். ஆனால் அவள் பண்ணியது மோக்ஷார்த்தமாக அல்ல.
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் வ்யாக்யானத்தில் ஸ்ரீ பராசர பட்டர் “ஏக பாத” என்ற ஶ்லோகத்திற்க்கு க்ருஷ்ணன் ஸ்ரீமந்நாராயணனின் பாதி அம்சம் என்கிறார். அதற்கு முந்தைய ஶ்லோகத்தில் நான்கு திருக்கைகளுடன் பர வாஸுதேவரே கண்ணனாக திருவவதாரம் செய்தார் என்கிறார். கீதையில் கண்ணன், தான் பரப்ரம்மம் என்பதையும் இந்த முழு உலகமும் தன் படைப்பு என்று கூறியதையும் வ்யாக்யானத்தில் சாதிக்கிறார். கண்ணன் யாரின் திருவவதாரம்?
Vidwan’s reply
கண்ணன் பரப்ரம்மமான ஸ்ரீமந் நாராயணனுடைய திருவவதாரம். அவர் பரவாசுதேவர்; மற்றும் அவரின் அவதாரம்தான்.
குறிப்புகள்:
அவதாரங்களைச் சொல்லும்போது ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் எல்லாம் பெருமாளுடைய அம்சம் என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் இருக்கின்றது.
அதற்கு வ்யாக்யானத்தில் அழகாக ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது, அதாவது அம்சம் என்றால் அவரின் எண்ணற்ற அம்சங்களில் ஒரு பகுதி மட்டுமே (ஒரு சக்தி தான்) வெளிப்படுகிறது எனும் அர்த்தமில்லை.
அவதாரத்தின் போது எம்பெருமான், சில சக்திகளை மட்டுமே ப்ரகாசப்படுத்துகிறார் (வெளிப்படுத்துகிறார்) அதைத்தான் அம்சம் என்கிறோமே தவிர மற்றபடி பெருமாள் எப்பொதும், தன் குணங்கள் மற்றும் சக்திகளுடன் பூரணத்துவமாக இருக்கிறார்.
மமதா த்யாகம் மற்றும் கர்த்ருத்வ த்யாகம் விரிவான விளக்கம் வேண்டுகிறேன். தன்யோஸ்மி அடியேன்.
Vidwan’s reply
மமதா என்றால் என்னுடையது என்கின்ற எண்ணம். மமதா த்யாகம் என்றால் என்னுடையது என்கின்ற எண்ணத்தை விடுதல்.
கர்த்ருத்வ த்யாகம் என்றால் நான் செய்கிறேன் என்கின்ற எண்ணத்தை விடுதல்.
குறிப்புகள்:
சில க்ரியைகளுக்கெல்லாம் என்னுடையது என்கின்ற எண்ணம் இருக்கும்.
நானே என் காரியத்தை செய்து கொள்கிறேன் என்றோ அல்லது மற்றவர்கள் என் காரியத்தைச் செய்து கொடுக்கிறார்கள் என்றோ இருக்கும் எண்ணம், தான் மமதா.
இதில் என்னுடைய காரியம் என்பதும், நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற இரண்டு எண்ணமுமே தவறு. ஏனென்றால், பகவானுடைய காரியத்தை, பகவான் தான் நம்மைக் கொண்டு பார்த்துக் கொள்கிறார் இதுவே மமதா த்யாகம் மற்றும் கர்த்ருத்வ த்யாகம்.
ஸ்ரீரங்கத்தில் மூலவர் சுதர்சன ஆழ்வாருடன் 32மூர்த்திகள் (சங்கர்ஷண அனிருத்தாதிகள்…) இருப்பர். இவர்கள் யார்?
ஸ்வாமி தேசிகன் 32 என்ற எண் கணக்கின் படியே ஜய ஜய ஸ்ரீ ஸுதர்ஶந என்ற கோஷத்தை ஸ்ரீ சுதர்சன அஷ்டகத்தில் அமைத்திருக்கிறார். இந்த 32 என்ற எண்ணிற்கும் சுதர்சன ஆழ்வாரும் தனித் தொடர்பு உண்டா? தெளியப்படுத்த ப்ரார்திக்கிறேன்.
Vidwan’s reply
சுதர்சனாழ்வார் – ஹேதீஶ்வரர் – எல்லா அயுதங்களுக்கும் ராஜா அவர். 8,16,32 என்ற எண் வரிசையில் காட்சி அளிக்கிறார்.
சில ஆகமங்களில் 8,16,32 ஆயுதங்களுடன் சக்க்ரத்தாழ்வாரை ப்ரதிஷ்டை செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரங்கத்தில் 32 என்ற எண் கணக்கில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கலாம்.
அங்கு இருக்கும் 32 பேர் சக்கரத்தாழ்வாரின் 32 ஆயுத மூர்த்திகளாக இருக்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் நித்ய ஸூரிகள், அவர்கள் சுதர்சனாழ்வார் போல் ஆயுத ரூபம் தரித்துப் பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணுகிறார்கள்.
ஆக, ஸ்ரீரங்கத்தில் உள்ள சுதர்சனாழ்வார் மூலவரைச் சுற்றி ஆயுத மூர்த்திகள் உள்ளனர் எனத் தெரிகிறது.
குறிப்புகள்:
சுதர்சன ஆழ்வார் 8 பூஜங்களுடனும் 8 ஆயுதங்களுடனும் இருக்கின்றார். எல்லா ஆயுதங்களுக்கும் ராஜாவாக இருக்கிறார். அதை காண்பிக்கும் படியாக 8 பூஜங்களில் 8 ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றார். 8 என்பது உபலக்ஷணம் தான்.
32 என்பது ஸம்ப்ரதாயத்தில் விசேஷமானது. வேதம், இதிஹாச புராணங்களில் இதன் சிறப்புக் காணப்படுகிறது.
நடாதூர் அம்மாள் இயற்றிய ஹேதி புங்கவஸ்தவத்தில் 32 வரிகள். ஒவ்வொரு வரியும் ஜய என்கின்ற சப்தத்தில் ஆரம்பமாகின்றது.
இதைப் பின்பற்றி ஸ்வாமி தேசிகனும் சுதர்ஶனாஷ்டகத்தில் 32 முறை உபயோகப்படுத்தி இருக்கின்றார். ஒரு ஶ்லோகத்தின் உடைய கடைசியில் நான்கு முறை ஜய வருகின்றது. 8 ஶ்லோகம் என்பதால் 32 கணக்காகின்றது என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.
பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகள் என்றால் எதை குறிப்பிடுகின்றது?
Vidwan’s reply
ஆசார்யர்கள் அருளிய க்ரந்தங்கள் அதில் இருக்கக்கூடிய வசனங்கள் இவற்றிற்கு ஸ்ரீஸூக்தி என்று பெயர்.
உதாரணம் : தேசிகன் அருளிய ஸ்தோத்ர பாடங்கள், அதிலுள்ள வசனங்கள்
குறிப்புகள்:
பூர்வாசார்யர்கள் என்றால், இப்பொழுது இருக்கும் ஆசார்யர்கள் அல்லாது இதற்கு முன் இருந்த ஆசார்யர்களைக் குறிக்கின்றது.
அந்த ரீதியில் ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த க்ரந்தங்கள் அதிலுள்ள வசனங்கள் இவற்றிற்கெல்லாம் பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகள் என்று பெயர்.
உக்தி என்றால் வார்த்தை, ஸூக்தி என்றாள் நல்ல வார்த்தை. அதை ஆசார்யர்கள் அருளியபடியினால் ஸ்ரீஸூக்தி என்று சொல்லுகிறோம்.
ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில், விஷ்ணு மற்றும் வாஸுதேவர் போன்ற வ்யாபக மந்திரங்களில் நாராயணனின் ஏகாதச விஷயார்த்தம் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது. அப்படியிருக்க, ஸஹஸ்ரநாமத்தை ஏன் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்று சொல்கின்றோம்?
Vidwan’s reply:
ஸஹஸ்ரநாமத்தை அருளிச்செய்தவர் ஸ்ரீபீஷ்மர். அவர் விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் என்று பெயர் வைத்திருந்ததால் அதைப் பின்பற்றி எல்லோரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்று சொல்லுகிறோம்.
குறிப்புகள்:
விஷ்ணு என்கிற திருநாமம் பெருமாளுக்கு வேதத்தில் மிகவும் ப்ரசித்தம். குறிப்பாக வேதத்தின் பூர்வ பாகத்தில் யாகங்களைப் பற்றி சொல்லும் பொழுது எம்பெருமானுடைய திருநாமங்களில் விஷ்ணு என்கின்ற நாமம் தான் மிகவும் உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது மற்றத் திருநாமங்கள் குறைவாகவே வருகின்றது. வேத ரீதியில் ப்ரசித்தமான திருநாமம் அதனால் அதைச் சொல்லுகின்றோம்.
“நாமம் ஆயிரமேத்த நின்ற நாராயணா” என்று ஆண்டாள் சாதித்திருக்கின்றபடியால் மற்ற திருநாமங்களைச் சொல்வதில் ஒன்றும் தவறில்லை.
ஏன் பீஷ்மர், த்ரோனர், க்ருபாசாரியர் போன்ற பெரியவர்கள் சூழ்ச்சியாய் சொக்கட்டான் விளையாடுவதை கண்டு அமைதியாய் இருந்தனர். மேலும் த்ரௌபதி அவமானப்பட்ட போதும் மௌனம் காத்தனர். அவர்களே, அதர்மம் என்று அறிந்தே இரண்டாம் முறை பகடையாட அனுமதித்தனர், அதோடு அல்லாது அதர்மம் பக்கம் நின்று போர் புரிந்தனர்? இதன் காரணம் யாது?
Vidwan’s reply:
இதற்கு பெயர் தான் தர்ம சங்கடம்.
குறிப்புகள்:
அதாவது, பீஷ்மர் துரோணர் முதலானோர்கள் ஒரு பெரிய அளவு தர்மசங்கடத்தில் சிக்கிக் கொண்டு இருந்தார்கள். ஒரு பக்கம் அவர்களுக்கு அதர்மம் நடக்கின்றது என்று ஒரு ரீதியில் தெரிகின்றது. ஆனால் அதே சமயம் அதைத் தடுக்க முடியாத ஒருநிலை அவர்களுக்கு இருந்தது. அந்தத் தேசத்து ராஜாவாக இருந்த த்ருதராஷ்டிரர்க்குக் கட்டுப்பட்டு, அந்த மந்திரி சபையில் இருந்தவர்கள். மந்திரி சபையில் இருப்பவர்கள் ராஜாவுக்குத் தக்க சந்தர்ப்பத்தில் தங்கள் அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்வார்கள்.
சபையின் நடுவில் ராஜாவை அவமதித்துப் பேசி சபை காரியங்களைத் தடுத்து நிறுத்துவது அந்தக் காலத்தில் நடந்ததில்லை. தர்மபுத்திரர் பீஷ்மரிடம், அவர் அமைதியாக இருந்ததன் காரணத்தைக் கேட்கும்பொழுது பீஷ்மர் கூறுவதாவது, தர்மபுத்திரர் தர்மம் தெரிந்தவர் அவன் ஒருநாளும் தப்புக் காரியம் செய்ய மாட்டான் அவன் எது செய்தாலும் அதற்குப் பின்னால் ஒரு நியாயமான அர்த்தம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் என்கிறார்.
தர்மபுத்திரர் ஏன் ஒத்துக் கொண்டார் என்பதுதான் ப்ரதானமான கேள்வி. தர்மபுத்திரர், தவறு செய்ய மாட்டார் என்று எல்லோருக்கும் அவரிடம் ஒரு விஶ்வாசம். ஒரு காலக்கட்டத்தில் குடும்பத்திற்குள் பிரச்சனை சண்டை அதிகமாக ஆன பக்ஷத்தில் தர்மபுத்திரர், த்ருதராஷ்டிரன் (பெரியப்பா) எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் அதைச்செய்யும் முடிவிற்கு வந்துவிட்டார். ஏனென்றால் பெரியப்பாவிடம் அவருக்கு மிகுந்த கௌரவம், மரியாதை.
பீஷ்மர் போன்றவர்க்குச், செஞ்சோற்று கடன், தேசப்பற்று, க்ருதக்ஞதா, இப்படி பலவிதமான தர்மங்கள் இருக்கின்றன இதை நாம் புரிந்து கொள்வதுக் கஷ்டம். மகாபராதத்தை ஆராய்ந்து பார்த்து மெதுவாகத்தான் புரிந்துக்கொள்ள முடியும்.
ஸ்வாமி தேசிகனின் ஸ்தோத்ர பாடம் மற்றும் ப்ரபந்தம் கற்க ஆசையாக உள்ளது. இணையவழியில், கற்க முடியுமா ஏதேனும் குழுமம் உள்ளதா?
Vidwan’s reply:
சந்தையாக தேசிக ஸ்தோத்ர பாடம் கற்பது தான் சிறந்தது, இணையதளத்தில் பல வழி இருக்கின்றது.
குறிப்புகள்:
குறிப்பாக ஸ்வாமி தேசிகரின் ஸ்தோத்ர பாடம் தான் GSPK என்கிற இந்த குழுமத்தில் சந்தை முறையில் கற்றுத்தருகிறார்கள்.
இக்குழுமத்தில் நடக்கும் வகுப்பில் சேர்ந்து கற்கTelegram app install செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த linkஐ click செய்து இணைய, அவற்றின் விவரங்களை அறியலாம்.
https://t.me/dgspk – Link for main group
https://t.me/gspkstotras – Stotras Group
https://t.me/sampradayamanjari – Sampradaya Manjari group
மேலும் சந்தை முறையில் தங்கள் சௌகர்யம் போல் கற்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள் இக்குழுமத்தின் YouTube மூலமும் கற்கலாம்.
https://www.youtube.com/c/SampradayaManjari/playlists
பெரியாழ்வார் திருமொழி 4-6-8ல் “நம்பி பிம்பியென்று” என்ற சொல் யாரைக் குறிப்பிட்டு ஆழ்வார் பாடியுள்ளார்? நம்பி என்பது இங்கே பெருமாளின் திருநாமத்தைக் குறிக்கிறதா? அடியேன்
Vidwan’s reply:
இங்கே, நம்பி என்பது பெருமாளைக் குறிப்பதில்லை.
குறிப்புகள்:
நம்பி என்ற சொல்லுக்குப் பரிபூர்ணன் என்றப் பொருளும், திருக்குடந்தை என்பெருமானுக்கும் இந்தப் பெயர் என்பது ப்ரசித்தம்.
நம்பி என்று ஒருவர் இருந்தார், குறைவற்றவராக இருந்தார் அவருடைய பெயரை என் பிள்ளைக்கிட்டால், இவனும் குறைவற்றவனாக என்று நினைத்து அவனுடைய பெயரை இவனுக்கிட்டால் அது சரியில்லை என்பது ஆழ்வாரின் திருவுள்ளமாக இருக்கிறது என்று தெரிகிறது.
பிம்பி என்ற சொல் நம்பிக்கு எதிர்தட்டுச் சொல் தானே தவிர அதற்கு அர்த்தமில்லை. பிம்பி என்பதற்கு எப்படி அர்த்தமில்லையோ அதேப் போல் நம்பிக்கும் அர்த்தமில்லை, அதாவது யாரோ நம்பி என்ற மனிதனின் பெயரை என பிள்ளைக்கு வைத்தால் அதற்கு அர்த்தமில்லை,அது ப்ரயோஜனப்படாது என்பது தான் ஆழ்வாரின் திருவுள்ளமாக இருக்க வேண்டும்.
ராமானுஜாய நம: அடியேன். அடைக்கலம் நான் புகுந்தேனே என்பதையும் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே என்பதையும் எப்படிப் புரிந்து கொள்வது ஸ்வாமி. நீயே கதி வேறு புகல் இல்லை என்றும் ப்ரத்யக்ஷமாய் கச்சியிலும் திருமலையிலும் பெருமாள் சேவை சாதிக்கிறார் என புரிந்து கொள்வது சரியா? தந்யவாதங்கள் ஸ்வாமி 🙏🙏🙇♀️🙇♀️அடியேன்.
Vidwan’s reply:
“அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே”, “அடைக்கலம் நான் புகுந்தேனே” – இவ்வரிகள் குறிப்பது யாதெனில்: எம்பெருமானே ஶரண்யன், அந்த ஶரண்யனை வேறு புகல் இல்லாமல் அகிஞ்சனனாக நான் சரண் புகுந்தேன்.
குறிப்புகள்:
மேலும் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே: அந்தத் திருமலையப்பனிடம் நம்மாழ்வாரும், அடைக்கலம் நான் புகுந்தேனே : என்று வேழமலையில் இருக்கும் தேவாதிராஜனிடம் ஸ்வாமி தேசிகனும் ஶரணாகதி செய்கின்றனர் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.