இக்கால சூழலில், அதாவது இன்றைய லௌகீக வாழ்வில் குடும்பம் மற்றும் சக ஊழியர்கள் போன்றோரின் அழுத்தங்களையும் தாண்டி நம் சாஸ்திரம் சம்ப்ரதாயம் காட்டிய வழிக்கும் பங்கம் வாராது நடுநிலையாக வாழ வழி காட்டவும்.
Vidwan’s reply
சந்தியாவந்தனம் போன்ற அனுஷ்டானகளைத் தவாறமல் செய்யவும்.
ஓய்வு நேரங்களில் முடிந்த வரை ஸ்தோத்ர பாடமோ, ப்ரபந்தமோ வாசித்தலும், உபன்யாசங்கள் கேட்டல் போன்றவற்றைச் செய்யலாம்.
மன அழுத்தத்தை குறைப்பதற்கு நம் ஸ்வாமி தேசிகனே குறிப்பிட்ட நல் வழி தினமும் யோகா செய்தல் என்பதாகும்.
கோயிலில் நிர்பந்தமில்லாது முடிந்தபோது, இயன்றளவு சிறிய உதவிகள்/ கைங்கர்யங்களைச் செய்யலாம்.
எவையெல்லாம் முடியுமோ அதை முடிந்த வரைச் செய்யவும்.
குறிப்புகள்:
GSPK வழங்கும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் உபன்யாசங்களில் நேரமிருப்பின் கலந்து நல்வழியில் நேரத்தை செலவிடலாம்.
சமயமில்லை என்றால் GSPKயில் பல மஹான்கள் சாதித்தருளிய உபன்யாசங்களின் தொகுப்பு கீழேயுள்ள YouTube Channelலில் இருக்கின்றது சௌகர்யம் போல் அதையும் கேட்டு மகிழலாம்.
https://www.youtube.com/c/GlobalStotraParayanaKainkaryamGSPK/playlists
https://www.youtube.com/c/SampradayaManjari/playlists
ஸ்தோத்ர பாட மற்றும் ப்ரபந்த சந்தை வகுப்புகள் பற்றியும், அவ்வகுப்புகளின் recorded சந்தைப்பற்றி விவரமறிய கீழே உள்ளTelegram groupல் சேரவும்.
https://t.me/gspkstotras
சுதர்சனம் என்பது இணையவழி வகுப்பா? என்ன என்பதை தெளியப்படுத்தவும்?
Vidwan’s reply:
“சுதர்சனம்” என்பது ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நல்வழி காட்டும் ஓர் கையேடு. ஆசாரம் அனுஷ்டானம், ஸ்த்ரீ தர்மம் மற்றும் பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸூக்திகளில் எழும் சந்தேகங்களுக்கு GSPKயின் மஹாவித்வான்கள் பதிலப்பார்கள். மேலும் விவரங்களுக்கு முன்னுரையை பார்க்கவும், இந்த https://t.me/GSPKSudarsanam linkஐ click செய்து “Sudarsanam” என்ற இந்தTelegram Channelல் இணையவும்.
ஹனுமனுக்கு வெற்றிலை மாலை ஏன் சாற்றுகின்றோம்? இதற்கு (வால்மிகீ/கம்ப) இராமாயாணத்தில் அல்லது ஆழ்வார் பாசுரங்களில் ஏதேனும் குறிப்புள்ளதா?
Vidwan’s reply
இதைப்பற்றி இராமாயணத்திலோ, ஆழ்வார் பாசுரங்களிலோ குறிப்புக் கிடையாது. நம் ஆசார்யர்களும் இதை விசேஷமாகச் சொல்வதும் இல்லை.
குறிப்புகள்:
இவ்வழக்கத்தை கொண்டுள்ளோர் கருத்து என்பது : வெற்றியை கொடுப்பது வெற்றிலை மாலை என்பது ஐதீகம் என்றும், மேலும் அனுமனுக்கு, சீதா பிராட்டி தான் அசோகவனத்தில் இருந்த சமயம் வெற்றிலை மாலை ஸமர்பித்து “வெற்றியுடன் இரு” என்று ஆசி வழங்கியதாக கூறுகின்றனர், இதற்கு இது தான் சரியான ப்ரமாணமா என்று தெரியவில்லை, ஏதேனும் புராணங்களில் எங்காவது இருக்கக்கூடும்.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றால் என்ன? யார்?
Vidwan’s reply
ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றால் விஷ்ணு பக்தர்கள்.
குறிப்புகள்:
நான் வேறு ஒருவருக்கு உரியனல்லேன், விஷ்ணுவுக்கே உரியவன் எனக்கொண்டு அவனிடத்திலேயே ஆட்பட்டு, அவனுடைய திருவடியையே உரைப்பதான திருமண் காப்பை இட்டுக்கொண்டு, ஆசார்யரிடத்திலிருந்து பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸமாஶ்ரயணம்) சேவிக்கப் பெற்று, பகவானுடைய தாசனாக வாழ்பவனே ஸ்ரீவைஷ்ணவன்.
ந்ருஸிம்ஹ ஆவரண புஜை என்றால் என்ன?
Vidwan’s reply
ஆவரண பூஜை என்பது தற்காலத்தில் பல இடங்களில் செய்கிறார்கள், இதைப் பற்றிய தகவல்கள் பின்பு காணலாம்
நம் சம்ப்ரதாயத்தில், திருவாராதனம் முடித்த பின் நாம் உட்கொள்ளும் முன் காக்கைக்கு உணவளிப்பதை ஒற்றுக்கொள்கிறதா?
Vidwan’s reply
இக்கேள்வியின் விடைக்கு ஆடி மாத சுதர்சனத்தை பார்க்கவும்.
எந்தெந்த பழங்கள், காய்கறிகள் ஸாத்வீக ஆகாரத்தில் தவ்ரிக்கப்பட வேண்டியவை?
Vidwan’s reply
வெங்காயம், முருங்கை, முட்டைக்கோஸ், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, சிறுகீரை முதலிய காய்களும், பழங்களில் குறிப்பிட்டு ஒன்றுமில்லை எனினும் நவீன காலப்பழங்களான கீவி முதலிய பழங்களைப் பெரியவர்கள் ஏற்பதில்லை
குறிப்புகள்:
பகவானுக்குக் கண்டருளப் பண்ணாத பழங்கள், காய்கள் என எதுவாக இருந்தாலும் ஸாத்வீகமான பழமாக இருந்தாலும் தவிர்க்கப்பட வேண்டியவையே.
ஒரு பெண்ணின் தகப்பனார் அவளுடைய குழந்தையை மானசீக புத்ரனாக ஏற்று ஸ்தானத்தில் இருந்து உபநயனம் செய்தார். அவருக்கு (அவருடைய புத்ரர்கள் பித்ரு கார்யம் செய்யாத நிலையில்) அந்த பெண்ணோ அல்லது உபநயனம் செய்து வைத்த பேரனோ அவருக்கு பித்ரு கார்யம் செய்யலாமா? தன்யாஸ்மி ஸ்வாமி. அடியேன் தாஸன்
Vidwan’s reply
புத்திரர்கள்தான் பித்ரு காரியம் செய்ய வேண்டும்.
குறிப்புகள்:
புத்ரனுக்குப் பதிலாக பெண்ணோ, பேரனோ அதை செய்ய வேண்டிய அவசியமில்லை. தேவையானால் கோவிலில் தளிகை உபயம் போன்ற ஏதாவது கைங்கரியம் செய்யலாம்.
பெருமாள் திருவாராதனை சமயம் ஶ்லோகங்களை மனதிற்குள் (சத்தமாக சொல்லாமல்) சொல்ல வேண்டுமா அல்லது உரக்கச் சொல்லலாமா?
Vidwan’s reply
பெருமாள் திருவாராதனை சமயத்தில் ஸ்லோகங்களை மட்டும் மனதிற்குள்ளும் சொல்லலாம் அல்லது உரக்கவும் சொல்லலாம். அச்சூழ்நிலைக்கு ஏற்றபடி சொல்லலாம்.
வடகலை மற்றும் தென்கலை என இரு பிரிவனருமே விஶிஷ்டாத்வைத சித்தாந்தம் தான் பின்பற்றுகிறார்கள் அப்படியிருக்க இவ்விருபிரிவுகளில் உள்ள மிகப்பெரிய வித்யாசம் என்ன? ஸ்வாமி இராமானுஜர் எந்த ஸம்ப்ரதாய உட்பிரிவை பின்பற்றினார்?
Vidwan’s reply
பகவத் இராமனுஜர் காலத்தில் ஒரே சம்ப்ரதாயம் தான் இருந்தது, உட்பிரிவு என்ற ஒன்று கிடையாது. ஆகையால் அவர் எந்த உட்பிரிவை பின்பற்றினார் என்ற கேள்விக்கு ப்ரஸக்தி இல்லை.
அஹோபில மடத்தை அலங்கரித்த முதல் ஜீயரான ஆதிவண் சடகோப யதீந்த்ர மஹா தேசிகன் ஸ்வாமி, ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றினாரா? அப்படியென்றால் ஸ்வாமி தேசிகன் அனுசந்தித்த ஸம்ப்ரதாயத்தை தாமும் தம் பூர்வாஸ்ரமத்திலிருந்தே அனுசந்தித்து வந்தாரா இல்லை தாம் பட்டத்தை அலங்கரித்த பின் அனுசந்தித்தாரா? ஏதேனும் தவறாக கேட்டிருந்தால் க்ஷமிக்கப்ரார்திக்கிறேன்.
Vidwan’s reply
ஆதிவண் ஶடகோப யதீந்திர மஹா தேசிகன் ஸ்வாமி சந்தேகமில்லாமல் பின்பற்றியது ஸ்வாமி தேசிகனை தான்.
குறிப்புகள்:
ஏனென்றால் ஆதிவண் ஶடகோப யதீந்திர மஹா தேசிகன் ஸ்வாமியின் ஆசார்யன் அப்பொழுது எழுந்தருளியிருந்த சின்ன அம்மாள் ஸ்வாமி, அவர் ஆச்ரயித்து வந்தது ஸ்வாமி தேசிகன் ஸம்பிரதாயத்தைதான்.
அஹோபில மடத்தை சில அழகிய சிங்கர்களுக்கு “ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ திவ்ய பாதுகா ஸேவகா” என்ற திருப்பட்டத்துடன் அழைக்கின்றோம். ஆனால் நம் குரு பரம்பரை ஆசாரியர்களை ஸ்ரீமதே, ஸ்ரீமான், ஸ்ரீ என்ற திருப்பட்டத்துடன் அழைக்கின்றோம், இதன் வித்யாசம் என்ன? இதற்கு ஏதேனும் தாத்பர்யம் உள்ளதா? தெளியப்படுத்த ப்ரார்திக்கிறேன்
Vidwan’s reply
ஸ்ரீ மடத்தில் வரும் ஆசார்யர்களுக்கு ஸ்ரீமதே என்ற திருபட்டமும் சேர்த்து “ஸ்ரீமதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ” என்று அழைப்பர். ஸ்ரீமான், ஸ்ரீ போன்ற திருப்பட்டங்கள் எல்லா ஆசார்யர்களுக்கும் உண்டு.
அந்தந்த அழகியசிங்கர்களின் திருவுள்ளப்படி இதைக் கட்டியத்தில் சொல்லுவதும் இல்லாததும் வழக்கில் இருக்கின்றது.
குறிப்புகள்:
வேத, வேதாந்தங்களுக்கும் அதன் அர்த்தங்களுக்கும் ஸ்ரீ என்ற பெயர் உண்டு. வேதமே, வேதத்திற்கு ஸ்ரீ என்கிற பெயருண்டு என்பதை ஸாஹிஷ்ஸ்ரீ: போன்ற ஶப்தங்களினால் கூறுகிறது.
ஸ்ரீமத் என்ற சப்தத்திற்கு, வேதங்களையும், வேதாந்தங்களையும், அதன் அர்த்தங்களையும் உபதேசம் செய்பவர் என்றும், அதை தன் மனசிலே (ஹ்ருதயத்திலே) தரித்து வைப்பவர் என்றும் பொருள். ஆகையால் ஸ்ரீமதே, ஸ்ரீமான், ஸ்ரீ போன்ற திருப்பட்டங்கள் எல்லா ஆசார்யர்களுக்கும் உண்டு. இதில் எந்த வேறுபாடும் இல்லை.
அடியேனின் பாட்டியின் ஶ்ராத்த திதி ஏகாதசி திதியன்று வருகிறது. அடியேன் விடாது ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்கின்றேன், அப்படியிருக்க வ்ரதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதா அல்லது பித்ருக்களின் ஶ்ரார்த்த ப்ரசாதத்தை ஏற்பதா? தெளியப்படுத்த ப்ரார்திக்கிறேன்.
Vidwan’s reply
ஶ்ராத்த திதியன்று ஏகாதசி வந்தால் , ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிப்பவர்கள் ஶ்ரார்த்தம் செய்த பிறகு கட்டாயம் ஏதும் சாப்பிடக்கூடாது.
குறிப்புகள்:
ஶ்ராத்ததின் கடைசியில் ப்ராசனம் செய்வதற்கு பதிலாக வ்ரதம் இருப்பவர்களுக்கு அவக்ரானம் என்ற ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது பிண்ட ப்ரதானம் முடிந்தவுடன், சிறிது ப்ரசாதம் கையில் எடுத்து வ்ரதமிருப்பவர்களோ அல்லது அன்று பலகாரம் மட்டும் உட்கொள்பவர்களோ அதை முகர்ந்து பார்த்துவிட்டு தூக்கி எறிய வேண்டும். ஏனென்றால் அது அரிசியால் செய்யப்பட்டது.
அன்று உபவாசம் இருப்பவர்கள் முழு உபவாசமிருக்கலாம். முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், ஶ்ராத்த சேஷம் தவிர வேறு தனியாக பலகாரம் செய்து உட்கொள்ளக்கூடாது, அவர்கள் பலகாரம் என்ற ஸ்தானத்தில் ஶ்ராத்த ப்ராசாதம் தவிர இருக்கும் காய்கள், பக்ஷணங்கள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
பூஜை அறையில், மஹான்களின் படத்தை தனியே அல்லாது, அவர்களுடைய தேவிமார்களுடன் சேர்ந்து இருக்கும் படத்தை வைத்து பூஜிக்கலாமா?
Vidwan’s reply
ஆசார்ய பத்தினியும் ஆசார்யருக்கு சமமானபடியால் பூஜிக்கலாம்.
குறிப்புகள்:
ஆகமப்படி நடக்கும், நித்யகர்மானுஷ்டானமான திருவாராதனப் பெருமாளுடன் சேர்த்துப் படத்தை வைப்பது வழக்கமில்லை.
மஹான்களின் படத்திற்குச் செய்யும் பூஜையை தனியாக செய்தல் வேண்டும்.
திருவாராதனைக்குப்பின் வழங்கும் ஆத்துப் பெருமாளின் தீர்த்தத்தை எப்படி ஸ்வீகரிக்க வேண்டும், ஏதேனும் நியமம் உள்ளதா? அடியேன்
Vidwan’s reply
பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிக்கும் முன், இரண்டு கைகளையும் நன்றாகச் சுத்தம் செய்துக்கொண்டு இடதுகையைக் கீழே வைத்துக்கொண்டு அதற்கு மேல் வஸ்திரத்தை வைத்து அதன்மேல் வலதுகையைக் குழிவாக வைத்துக்கொண்டு, பெருமாள் தீர்த்தத்தை நின்று கொண்டு வாங்கிக் கொள்ள வேண்டும். பெருமாள் தீர்த்தம் கீழே சிந்தக்கூடாது.
மாசப்பிறப்பு தர்ப்பணம் செய்யும் நாட்களில், எந்த பருப்பு தளிகைக்கு ஏற்புடையது? பாசிப்பருப்பா அல்லது துவரம் பருப்பா? தெளியப்படுத்த ப்ரார்திக்கிறேன்.
Vidwan’s reply
மாசப்பிறப்புடன் பண்டிகை நாட்களும் சேர்ந்து வந்தால்(தை, ஆடி மாதப் பிறப்பு போன்றவை), துவரம் பருப்பை மட்டுமே உபயோகப்படுத்துவது என்ற வழக்கமுண்டு. அப்படி பண்டிகை அல்லாத மற்ற நாட்களில் பயத்தம் பருப்பைச் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்புகள்:
சில க்ருஹங்களில் இரண்டையும் சேர்த்துக்கொள்ளும் வழக்கமும் இருக்கின்றது. அவரவர் ஆத்து வழக்கத்தை பின்பற்றும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
அடியேனுக்கு திருமணம் சமயம் வெள்ளி நாகருடன் ஸ்ரீ சந்தான க்ருஷ்ணன் மற்றும் மாஹாலக்ஷ்மீ தாயார் விக்ரஹம் ஸ்ரீதனமாக கொடுத்தனர். அடியேனுடைய ஆத்துக்காரர் வாரநாட்களில் பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் மற்றும் போஜ்யாசனம் மட்டுமே செய்வார் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவாராதனை பூர்த்தியாக செய்வார். இப்படிச் செய்யலாமா இது சரியா இல்லை அடியோங்கள் பாபம் இழைக்கின்றோமா? மேலும் ஸ்ரீ தனமாக கொடுத்த அவ்வெள்ளி விக்ரஹங்கள் பழுப்பாகாமல் காக்க அடியேன் ஸ்தீரிகளுக்குரிய ஆசார அனுஷ்டானத்துடன் அவற்றைச் சுத்தம் செய்யலாமா?
Vidwan’s reply
தாயார் விக்ரஹம் ப்ரதிஷ்டை ஆகியிருந்தால் கட்டாயமாக நித்யதிருவாராதனை செய்ய வேண்டும், ஸ்த்ரீகள் ஸ்பர்சிக்கக்கூடாது. ப்ரதிஷ்டையாகவில்லை என்றால் ஸ்த்ரீகளுக்குரிய ஆசாரத்துடன் கைங்கர்யம் செய்யலாம். சாளக்கிராம பெருமாளுடன் ஏளியாகிவிட்டாலும், ஸ்த்ரீகள் ஸ்பர்சிக்கக்கூடாது.
குறிப்புகள்:
ஆராதனம் செய்ய வசதி இருந்தும் ஆராதனம் செய்யாது போனால் அது ஒரு சிறிய அபசாரமாகும் ஆகையால் அதை மாற்றிக்கொள்வது நல்லது.
ஶரணாகதியின் ஒரு அங்கமாக மஹாவிஶ்வாஸம் கூறப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க பெருமாளின் பூர்வ பராயணத்தை விட்டு அவனின் நிர்ஹேதுக க்ருபையின் மீது மட்டுமே விஶ்வாஸம் கொண்டு ஶரணாகதி செய்யலாமா?
Vidwan’s reply
இக்கேள்வி சரியாக புரியவில்லை.
துவாதசி செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் வந்தால் சுண்டைக்காய் நெல்லிக்காய் போன்றவற்றை உட்கொள்ளலாமா?
Vidwan’s reply
ஆம் உட்கொள்ளலாம். எந்த கிழமையில் துவாதசி வந்தாலும் நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை போன்றவற்றைச் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும், அதைச் சேர்த்தால்தான் துவாதசி பாரணை பூர்த்தியாகும்.
எந்தத் திசை நோக்கி தர்ப்பணம் செய்ய வேண்டும்? கிழக்கா அல்லது தெற்கா? சில புத்தகங்களில் தெற்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தெளியப் படுத்த ப்ரார்திக்கிறேன்.
Vidwan’s reply
பொதுவாக ஶ்ராத்தாதிகள் கிழக்கு நோக்கிச்செய்வது போலே தர்ப்பணமும் கிழக்கு திசை நோக்கிச்செய்வது உசிதம்.
குறிப்புகள்:
சங்கல்பம் கிழக்கை நோக்கிச் செய்துவிட்டு, பின் தர்ப்பணம் தெற்கு நோக்கிச் செய்ய வேண்டும் என்றும் ஒரு சம்ப்ரதாயம் இருக்கிறது. ஆகையால் அவரவர் சம்ப்ரதாயத்தின்படி செய்துக்கொள்ளவும்.
ஸுதர்ஶன யந்த்ரம் ஆத்திலோ அல்லது ஆலயங்களிலோ ப்ரதிஷ்டை செய்யலாமா? எப்படிச் செய்வது? அதன் நியமங்களை விளக்க ப்ரார்திக்கிறேன்.
Vidwan’s reply
ஸுதர்ஶன யந்த்ரம் அகத்திலும்/ஆலயத்திலும் ப்ரதிஷ்டைப் பண்ணலாம். அதற்கு, பாஞ்சராத்ர ஆக வித்வான்களை அணுகவும்.
அனுஷ்டாங்கள் பற்றி விரிவாக ஒரு காணொளி மூலம் பதிவிடும் படி தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.
Vidwan’s reply
கண்டிப்பாக இது குறித்து GSPKயின் வித்வான்களுடன் ஆலோசித்து அவர்களின் ஆலோசனைகேற்ப ஒரு காணொளி பதிவிடுகிறோம்.
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சந்தியாவந்தனம் என்பது நித்யகர்மானுஷ்டானகளில் ஒன்றா? மேலும் சம்ப்ரதாயம் பற்றி அறிய ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் காலக்ஷேபம், உபன்யாசங்கள்த் தவிர, வேறென்னென்ன ஸ்தோத்ரப்பாடங்கள் / ஸ்ரீகோசங்களைப் படிக்கலாம்? தெரியப்படுத்த ப்ரார்திக்கிறேன். அடியேன்
Vidwan’s reply
ஆமாம் . ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சந்தியாவந்தனம் என்பது நித்யகர்மானுஷ்டானகளில் அவசியமான ஒன்றாகும்.
நம் சம்ப்ரதாயம் பற்றி மேன்மேலும் அறிய காலக்ஷேபம், உபன்யாசம் கேட்பது அவசியம் என்றாலும், அதற்கு முன் உபயுக்தமான நித்யானுசந்தானத்திற்கான திவ்யப்ரபந்தங்களையும் ,ஸ்வாமி தேசிகன் ஸ்தோத்ர பாடங்களையும் முதலில் கற்றுக்கொண்டு, அதன்பின் மேலே உபன்யாசங்கள் கேட்பதும், ஆசார்யரிடம் ப்ரார்தித்து அவர் நியமிக்கும் காலக்ஷேபம் செய்வது இவை அனைத்தும், நமக்கு சம்ப்ரதாய வழியை நன்கு காட்டும்.
ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்தால் 3 நாள் மற்றும் 10 நாள் தீட்டு யார் யாருக்கு?அந்த ஆத்தில் விளக்கு (தீட்டுக்காரர்) ஏற்றலாமா? ஏற்றலாம் என்று ஒரு வாத்தியார் சொன்னதால் கேட்கிறேன்.
Vidwan’s reply
பெண் குழந்தை பிறந்தால் 10 நாள் வ்ருத்தி
பிறந்த குழந்தையின்
1. தகப்பனார்
2 தகப்பனாரின் புத்ரர்
3 தகப்பனாரின் சகோதரர்
4. தகப்பனாரின் சகோதரரின் புத்திரர்
5. தகப்பனாரின் தகப்பனார் (பிதாமகர்)
6. தகப்பனாரின் தகப்பனார்க்கு சகோதரர்
3 நாள் தீட்டு
7. குழந்தையின் மாதாமகன், அம்மான் (மாமா)
குறிப்புகள்
பிரஹ்மசாரிகளுக்குத் தீட்டு இல்லை.
கணவனுக்கு உள்ள தீட்டு மனைவிக்கும் உண்டு
சகோதரர் போலே பின்ன உதரர்களுக்கும்(ஒரே தகப்பனாருக்கு வேறு மனைவியின் மூலம் பிறந்தவர்) தீட்டு உண்டு
ஆண் குழந்தையாக இருந்தால்: 10 நாள் தீட்டு ஏழு தலைமுறை பங்காளிகளுக்கும் சேர்த்து உண்டு.
மேலும், பெண் குழந்தையாக இருந்தால் அந்தச் சமயத்தில் பெருமாள் சன்னிதியில் உள்ள விளக்கை ஏற்றாமல் வெளியில் இருக்கும் சாதாரண விளக்கை ஏற்றி வைக்கலாம். வாசலில் கோலம் போடலாம்.
அடியேன் மாமனாரின் (இப்போது இல்லை) ஒன்று விட்ட தம்பி பரமபதித்துவிட்டார் நாங்கள் பண்டிகைகள் கொண்டாடலாமா தந்யோஸ்மி ஸ்வாமி 🙏🌺
Vidwan’s reply
பண்டிகை கொண்டாடலாம்.
குறிப்புகள்
ஒருவரின் (அதாவது அவர் தர்மபத்னியின் தாய்-தந்தையர்) மாமனார் மாமியார் பரம பதித்துவிட்டாலே ஆத்தில் பண்டிகை கொண்டாடலாம். பார்யாளுக்கு தாய் தகப்பனார் என்பதால் வருத்தம் இருக்கும் . ஆனால் அவள் புக்ககத்தில் பண்டிகை கொண்டாடாமல் இருக்க முடியாது.
அவர்கள் மட்டும் அன்று இனிப்பு பண்டங்களை உட்கொள்ளாமல் மறுநாள் எடுத்துக்கொள்ளும் வழக்கு இன்றளவும் இருக்கின்றது.
மாமனார் மாமியாருக்கே கணக்கில்லாதபோது, மாமனார் தம்பிக்கு உண்டா இல்லையா என்ற கேள்விக்கே ப்ரஸக்தி கிடையாது. பண்டிகை கொண்டாடலாம்.
சங்க்ரமண புண்ய காலத்தின் சமயம் தர்ப்பணம் எப்போது செய்ய வேண்டும்?அதாவது அமாவாஸை தர்ப்பணம் போல் அபராண காலத்திலா? அல்லது சூர்யன் குறிப்பிட்ட ராசியில் ப்ரவேசிக்கும் சமயத்திலா?
உ.தா: இந்த வருடம் ஸ்ரீரங்கம் வாக்ய பஞ்சாங்கத்தில் கடகரவி 45-13, தக்ஷிணாயன புண்யகாலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (அப்படியென்றால் 17ஜூலை 12am மணி என்ற கணக்கு வருகிறது அல்லவா?)
Vidwan’s reply
பகலில் மாசப்பிறப்பு வந்தால், சங்க்ரமண புண்யகால தர்ப்பணம் மாசம் எப்பொழுது பிறக்கின்றதோ அந்தச் சமயத்தில் பண்ணவேண்டும். ஒருவேளை புண்ய காலம் காலை 7 மணியளவில் பிறக்கின்றதென்றால், சூர்யோதயம் ஆன பின் சந்தியாவந்தனம் செய்துவிட்டு தர்ப்பணம் செய்யவேண்டும்.
இரவில் மாசப்பிறப்பு வந்தால் அதில் பல கணக்குண்டு. உதா: ஆடி மாசத்தை எடுத்துக் கொண்டால், தக்ஷிணாயந புண்யகால தர்ப்பணத்தை உத்தராயணத்தில் பண்ண வேண்டும் என்று சாஸ்த்ரம் கூறுகிறது. அதனால் அன்று இரவு/நள்ளிரவில் மாதம் பிறந்தாலும், சாயம் சூரிய அஸ்தமனம் முன்வரை தர்ப்பணம் செய்ய அவகாசம் உள்ளதால், தர்ப்பணம் செய்யலாம்.
ஒரு ப்ரபந்நன், பஞ்சமுக ஆஞ்சநேயரை சேவித்து, அவரின் ப்ரசாதத்தையும் ஸ்வீகரிக்கலாமா? ஸ்ரீமத் பாகவதம் அனுமன் அடுத்த ப்ரம்மா என்று கூறிப்பிடுகிறதே? இது சரியா, விளக்க ப்ரார்த்திக்கின்றேன்.
Vidwan’s reply
கோவில் சந்நிதியில் பெருமாளுக்குப் பரிவாரமாக இருக்கும் ஆஞ்சநேயரைச் சேவித்து ப்ரசாதம் ஸ்வீகரிக்கலாம். தனிப்பட்ட ஆஞ்சநேயரின் ப்ரசாதத்தை பரமைகாந்திகள் ஸ்வீகரிப்பதில்லை, ஸ்வீகரித்தால் தோஷம் என்பதுமில்லை.
எம்பெருமானின் திருக்கையில் ஆழியாழ்வான் வந்தது எப்படி?
Vidwan’s reply
எம்பெருமானின் திருக்கையில் ஆழியாழ்வான் எப்போதுமே இருக்கிறார்.
குறிப்புகள்
எம்பெருமான் சதுர்புஜன். அவன் சதுர்புஜங்களில் ஏளியிருக்கும் ஆயுதங்கள் அனைத்தும் நிரந்தரமாக இருப்பவை.
ஸ்வாமி தேசிகன், ஹம்ச ஸந்தேஷத்தில் பூரி க்ஷேத்ரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.பூரி அபிமான ஸ்தலமா? அந்த க்ஷேத்ரத்திற்கும் நம் சம்ப்ரதாயத்திற்கும் ஏதேனும் குறிப்பிட்ட தொடர்ப்பு உண்டா?
Vidwan’s reply
பூரி க்ஷேத்ரம், ஸ்ரீ பாஷ்யகாரர் போன்ற ஆசார்யர்களால் மங்களாஸாஸனம் செய்யப்பட்ட க்ஷேத்ரமானதாலும், மேலும் புராணங்களிலும் இந்த க்ஷேத்ரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாலும் அபிமான ஸ்தலங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ள்ப்படுகிறது.
ஆண்டாள் “சென்று நாம் சேவித்தால்” என்கிறாள், இப்போதுள்ள சூழலினால் எங்கள் கோயிலில் பாராயணம் நின்று போய் விட்டது, ஆத்தில் இருந்தே மானசீக ஆராதனமும், பாராயணமும் செய்தால் நேரில் சென்று செய்யும் கைங்கர்ய பலன் கிட்டுமா?
Vidwan’s reply
பெருமாளை நேரே “சென்று நாம் சேவித்தால்” என்பது, இந்திரியங்கள் படைத்தப் பயனாகச் செய்யவேண்டிய நம் கர்தவ்யங்களில் ஒன்று என்பதைக் காட்ட ஆண்டாள் குறிப்பிட்டுள்ளார். நேரே போகமுடியாத சூழலில், அகத்திலேயே இருந்து கொண்டு அவனை த்யானித்து, அவன் ஸ்தோத்ரங்களையோ பாராயணத்தையோ அனுசந்திக்க ஒருகுறைவும் ஏற்படாது.
அடியேனின் உறவினர்கள் சிலருக்குப் பஞ்ச சம்ஸ்காரம், பரந்யாஸம் போன்றவற்றின் உயர்வையோ முக்கியத்வத்தையோ அறியும் ஆர்வமில்லாதவர்கள். அவர்களுக்கு மானசீக அனுக்ரஹம் கிட்ட அடியேனின் ஆசார்யர்ரிடம் ப்ரார்த்திக்கலாமா?
Vidwan’s reply
நன்றாக ஆசார்யரிடம் அவர்களுக்காக ப்ரார்த்திக்கலாம். அவரின் அனுக்ரஹம் மூலம் அவர்களுக்கு உயர்வு ஏற்படும்.
பகவத் இராமானுஜர் பரந்யாஸம் பற்றி கூறியுள்ளாரா? பர ஸமர்ப்பணம் என்பது வடகலை சம்ப்ரதாயத்தவர்களுக்கு மட்டும் தானா?
Vidwan’s reply
பகவத் இராமானுஜர் பரந்யாஸம் பெருமை பற்றி கீதாபாஷ்யம், கத்ய த்ரயம் போன்றவற்றில் பரக்க ஸாதித்துள்ளார்.
குறிப்புகள்
தென்னாச்சார்ய சம்ப்ரதாயத்தவர், பெருமாள் தன் நிர்ஹேதுக க்ருபையால் நம்மை ரக்ஷிப்பான் என்ற சித்தாந்தத்தைக் கொண்டு ஶரணாகதி செய்வதில்லை.
வடகலை சம்ப்ரதாயத்தவர் ஶரணாகதியைத் தம் அனுஷ்டானத்தில் ஒன்றாக கொண்டுள்ளனர்.
ப்ரம்மதந்த்ர ஜீயர் அருளிய 3000 படி குரு பரம்பரா ப்ரபாவம் வடகலை சம்ப்ரதாயத்தவர்கள் அநுசந்திக்கலாமா? 6000 படி குரு பரம்பரா ப்ரபாவத்திற்கும் இதற்கும் என்ன வித்யாசம் என அருள ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply
3000 படி குரு பரம்பரா ப்ரபாவத்திற்கும் 6000 படி குரு பரம்பரா ப்ரபாவத்திற்கும் மிகக் குறைவாகச் சில வித்யாசங்களே உள்ளன. நம் தேசிக சம்ப்ரதாயத்திற்கு அனுகூலமாக இருக்கும் அனைத்து விஷயத்தையும் நன்றாக அநுசந்தானம் செய்யலாம்.
அடியேன் நமஸ்காரம் ப்ரபந்நர்கள் மோக்ஷத்திற்காக எம்பெருமானிடத்தில் சரணாகதி செய்திருந்தாலும், ஸ்த்ரீ சாபம், பித்ரு தோஷம், நாக தோஷம், ஆகிய பரிகாரத்திற்க்காக பிற தேவதாந்தரங்களைக் கொண்டாடக்கூடாத பக்ஷத்தில், இந்த தோஷங்களுக்கு வேதாந்த தேசிகன் அருளிய பரிஹார ஸ்லோகம் ஏதேனும் உள்ளதா என்று தெளியப்படுத்த ப்ரார்திக்கின்றேன். அடியேன் பித்ரு தோஷத்திற்காக தயாசதகம் உபன்யாசம் கேட்டிருக்கின்றேன்.
Vidwan’s reply
ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்தோத்ரங்கள் கட்டாயம் பரிகாரமாகும்.
உதாஹரணமாக கருட தண்டகம், கருட பஞ்சாசத், ஸ்ரீ காமாஸிகாஷ்டகம், ஸ்ரீ ஸுதர்ஶநாஷ்டகம், ஷோடஷாயுத ஸ்தோத்ரம் முதலிய ஸ்தோத்ரங்கள் விசேஷமாகப் பல தோஷங்களுக்குப் பரிகாரமானவை என்று தேசிகனே திருவுள்ளம் பற்றியிருக்கிறார்.
அந்த ஸ்தோத்ரங்களில் எத்தனையோ மந்திர சக்திகளுண்டு. அதனால் அவற்றைச் சொல்லலாம்
குறிப்புகள்
பித்ரு சாபத்திற்கு தயாஶதக உபன்யாசம் கேட்பது மிகவும் உசிதமான காரியம்.
நாக தோஷம் நிவர்த்திக்கு, கருடபஞ்சாஶத் கற்றுக்கொண்டு சேவிக்கலாம்.
ஸ்த்ரீ சாப விமோசனத்திற்கு, ஸ்துதி த்ரயம் அதாவது ஸ்ரீ ஸ்துதி, பூ ஸ்துதி, கோதா ஸ்துதி, ஆகிய மூன்றையும் சேவிக்கலாம்.
நவக்ரஹ தோஷ நிவர்த்திக்கு, பாதுகா ஸஹஸ்ரம் சேவிக்கலாம்.
நம் சம்ப்ரதாயத்தில், ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்ரீ ஸூக்திகளைச் சேவித்தாலேயே அனைத்துவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும்.
இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆசாரம் பற்றிப் புரியவைப்பது மிகவும் கடினமாக உள்ளது. முன்காலத்தில் நாம் எந்த கேள்வியும் கேட்காமல் நம் பெரியவர்களைப் பின்பற்றுவோம். ஆனால் இப்போது ஏன், எதற்கு, எப்போது என அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கமுடியவில்லை. நமது சனாதன தர்மம் மேன்மேலும் தழைக்க, இக்காலக்குழந்தைகளை ஸத்சப்ரதாயத்தின் ஆசார அனுஷ்டானத்தினை பின்பற்ற வைப்பது எப்படி என்று வழிகாட்ட ப்ரார்த்திக்கின்றேன்.
Vidwan’s reply
குழந்தைகள் கேட்கும் கேள்விகளைக் குறித்துக்கொள்ளவும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பெரியோர்கள் மூலம் பதில் சொல்வதற்காக நம் GSPK யின் சம்ப்ரதாய மஞ்சரி ePatashala (SampradayaManjari ePatashala), Sudarsanam போன்ற குழுக்கள் இருக்கின்றன.
குறிப்புகள்
முதலில் குழந்தைகளுக்கு ஸ்தோத்ர பாடங்கள் மற்றும் ப்ரபந்தங்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும். அவற்றைச் சொல்லச்சொல்ல அவர்களுடைய மனம் மெருகேறி, நல்ல விஷயங்களில் மனதை ஈடுபடுத்தக்கூடிய பக்குவத்தை அடையும்.
அதே போன்று அவர்களுக்கு நல்ல கதைகள், கருத்துக்கள், புராணங்களில் இருக்கக்கூடிய வ்ருதாந்தங்கள், எம்பெருமானுடைய லீலைகள் என அனைத்தும் உள்ளடக்கிய ஒரு வகுப்பாக நடத்திக்கொண்டுயிருக்கின்றோம். அவர்களுடைய அனைத்துவிதமானக் கேள்விகளுக்கும் இக்கதைகளிலேயே பதில்கள் கிடைக்கும். அதனால் அவர்களுக்கு ருசியும் ஈடுபாடும் கூடும்.
அடியேன் புத்திரன் ஒரு ப்ரபந்நன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவேங்கடவனின் திவ்ய தரிசனத்திற்கு பின் திருமலையிலுள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் மூழ்கி ஆசார்யன் திருவடிகளை அடைந்தார். நான் ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை ஸனாதன தர்ம விஷயங்களில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிறேன். இருப்பினும் புத்ரசோகத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. என்னுடைய இந்த உணர்வு முக்தாத்மாவை தொந்தரவு செய்யும் என்றும், நான் அந்த முக்தாத்மாவை பற்றி நினைக்கவே கூடாது என்றும் பெரியவர்கள் எனக்கு அறிவுரை கூறினர். ஸ்வாமியின் தயாசதகம் உபந்யாசம் மற்றும் நீர்வீழ்ச்சியை பற்றி கேட்கும் போது என்னால் என் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என் உணர்வுகள் அந்த முக்தாத்மாவை எந்த வகையிலாவது பாதிக்குமா என்பதை தயவுசெய்து எனக்கு தெளிவுபடுத்தவும்.
Vidwan’s reply
பரமபதம் அடைந்தவர்கள் அங்கு எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடிக்கொண்டு சுகமாக இருக்கிறார்கள். அதனால் நம்முடைய உணர்வுகள், அந்த முக்தாத்மாவிற்கு ஒரு நாளும் கஷ்டத்தை அளிக்காது. புத்ர சோகம் மிகவும் கடினமானதுதான். ஸத்விஷயங்களில் ஈடுபட்டுத்தான் நமது மனத்தைத் திசைதிருப்ப வேண்டும்.
இப்போது கொரோனா தொற்றின் காரணத்தால் ஶ்ராத்ததின் சமயம், பித்ரு முதலிய ஸ்தானத்திற்கு மிகவும் பரிச்சயம் உள்ள சொந்த பந்தங்களை நிமந்த்ரணம் செய்வது வழக்கம் ஆகி உள்ளது (பரிச்சயமில்லாத நபரை அழைப்பதனால் வரும் அபாயத்தைக் குறைக்க). நாமும் அதை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். என்னுடைய கேள்வி – இப்படி நிமந்த்ரணம் செய்யப்பட்டவர்களுக்கு உண்டான பிராயச்சித்தம் என்ன என்பது. எந்த ஸ்தானத்துக்கு எத்தனை காயத்ரி ஜபம் ஜெபிக்க வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்.
Vidwan’s reply
ஶ்ராத்தத்திற்கு எப்பொழுதுமே பந்துக்களை வரிப்பது தான் ஸ்ரேஷ்டம். ப்ரத்யாப்திக ஶ்ராத்தத்தில் எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் அஷ்டோத்ரஸதம், அதாவது நூற்றியெட்டு காயத்ரி ஜபம் செய்ய வேண்டும். ஶ்ராத்தம் சாப்பிட்ட மறு நாள் நிமந்த்ரணம் இருக்கக்கூடாது.
தினமும் தீபத்தின் திரியை மாற்றுவது அவசியமா? காலையில் உபயோகித்த அதே திரியை வைத்து மாலையும் விளக்கேற்றலாமா? தெளியப்படுத்த ப்ரார்த்திக்கின்றேன்.
Vidwan’s reply
தினமும் திரியை மாற்றுவது என்பது வழக்கத்தில் இல்லை. காலை போட்ட திரியைக் கொண்டே மாலையும் விளக்கேற்றலாம்.
குறிப்புகள்
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புதிதாக விளக்கை ஏற்றவேண்டி திங்கள் மற்றும் வியாழனன்று விளக்கைச் சுத்திச்செய்வர்கள்.
அதாவது விளக்கைச் சுத்தி செய்து ஏற்றுமன்றும், நாள் கிழமைகளன்றும் புதிய திரியிட்டு ஏற்றுவது வழக்கில் இருக்கின்றது.
சில க்ருஹங்களில் பழைய திரியைத் தொடக்கூடாது என்ற வழக்கைக் கொண்டுள்ளனர், இது பெண்களுக்குக் கணக்கில்லை என நம் சம்ப்ரதாயத்துப் பெரியவர்கள் கூறுவர்.
வேறு சிலர் பழைய திரியைத் தொட்டால் ஸ்நானம் செய்ய வேண்டுமென்றுமோ என்ற ஐயமும் கொண்டுள்ளனர், இதுவும் பெண்களுக்குக் கணக்கில்லை. அப்படி ஐயமிருக்குமாயின் அவர்கள் ஏதாவது சாதனம் கொண்டு திரியின் நுணியை மட்டும் சரி செய்யலாம், புதிய திரி போடவேண்டுமென்ற அவசியமில்லை.
இவையெல்லாம் பொதுவழக்கு, அவரவர் தங்கள் ஆத்துப்பெரியவர்களிடம் கேட்டு அவரின் வழக்கத்தைப் பின்பற்றும்படிக் கேட்டுக்கொள்கின்றோம்.
அமாவாஸை மற்றும் ப்ரதமை நாட்களில் பெரும்பாலான காலக்ஷேபம் மற்றும் சந்தை வகுப்புகள் நடத்தப்படுவதில்லை, அந்த நாட்களில் ஆத்திலே எந்த பூஜை செய்யலாம்? பிரபந்தம் சேவிக்கலாமா? எந்தெந்த ஸ்லோங்கள் படிக்கலாம் என்று தெளிவு படுத்தும்படி ப்ரார்த்திக்கிறேன். அடியேன் “.
Vidwan’s reply
அமாவாஸை ப்ரதமை நாட்களில் நம் சம்ப்ரதாயத்தில் விசேஷமாக விதிக்கபட்ட பூஜையென்று ஒன்றுமில்லை. அன்றைக்குக் காலக்ஷேபாதிகள், சந்தைகள் சொல்வதில்லை.
நாம் ஏற்கனவே கற்றுக்கொண்ட ஸ்தோத்ரம் மற்றும் ப்ரபந்தங்களை ஆவ்ருத்தி சொல்லலாம், இதில் ஏதும் தவறில்லை.
வேதத்தைப் பொறுத்தவரை சந்தை, ஆவ்ருத்தி என இரண்டும் சொல்லக்கூடாது. பாராயணம் மற்றும் ப்ரம்ம யக்ஞம் பண்ணலாம்.
குழந்தைகள் வெளிநாடுகளில் குடியேறிவிட்டப்படியால் நம்மில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் நிர்பந்தத்தில் இருக்கின்றோம். திரும்பி வந்து புண்ணிய நதி ஸ்நானம், பஞ்சகவ்யம் உட்கொள்வது போன்ற ப்ராயச்சித்தங்கள் செய்கிறோம். நமக்குத் தெரிந்தே நம் சாஸ்திரங்களுக்கு விரோதமாக நாம் மீண்டும் மீண்டும் இக்காரியங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்க, இந்த ப்ராயச்சித்தங்கள் நம் பாவங்களைக் கழித்து விடுமா? மேலும், அடிப்படையில், ஏன் வெளிநாடு செல்வது தவறு?” என்பதை விளக்க ப்ரார்த்திக்கின்றேன்.
Vidwan’s reply
இந்த ப்ராயாச்சித்தங்கள் நம்மளவில் ஓரளவு சுத்தியைக் கொடுக்கும் என்று சாஸ்த்ரங்கள் சொல்கின்றன.
ஸ்ம்ருதிகளில் வெளிநாட்டிற்குச் செல்லக்கூடாது என்று இருக்கின்றது.
சாஸ்த்ரத்தில் சொல்லுவதை அனுசரிப்பதே தர்மம்.
முன் காலத்தில் வெளிநாட்டிற்குச் சென்றால் நம் வைதீகசம்ப்ரதாயத்தின் தொடர்பு முற்றிலுமாக அறுந்துவிடும் என்பதால் தான் போகக்கூடாது என்று எழுதியுள்ளார்கள்.
குறிப்புகள்
“பண்ணிய நல் வ்ரதமெல்லாம் பலிக்குமென்று,
பாரதத்தை பங்கயத்தோன் படிந்திட்டானே”
என்று தேவாதிகளும் கர்ம பூமியான இந்த பாரத பூமியில் வந்தே நற்பலன்களைப் பெறுகிறார்கள். இங்கு செய்யும் கார்யங்களுக்கே நற்பலன்கள் கிட்டும்.
தங்கள் குழந்தைகளுக்கான திருமணம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காம்யார்த்த பலன்களுக்காக ஸ்வாமி தேசிகனின் காரியசித்தி ஸ்தோத்திரங்களை ஒரு ப்ரபந்நன் சொல்லலாமா?
Vidwan’s reply
தாராளமாச் சொல்லலாம். பகவத் அனுக்ரஹத்தை ப்ரார்தித்து அந்தந்தப் பலன்களுக்காகச் சொல்லலாம், ஸ்வாமி தேசிகனே பலஸ்ருதியில் சாதித்திருக்கிறார்.
பலஸ்ருதிகளின் விவரமறிய கீழே உள்ள linkஐ click செய்யவும்
https://www.youtube.com/c/GlobalStotraParayanaKainkaryamGSPK
பெருமாள் பெட்டியில் எத்தனை சாளக்கிராம மூர்த்திகள் ஏள பண்ணலாம் ? ஒற்றைப்படை எண்ணிக்கையிலா இல்லை இரட்டைப்படை எண்ணிக்கையிலா? அடியேன்.
Vidwan’s reply
ஓர் அகத்தில் ஒரு சாளக்கிராமம் வைத்து ஆராதனை செய்யலாம். 2 அல்லது 3 சாளக்கிராமங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது.
நான்குக்கு மேல் இரட்டைப்படையில் தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒற்றைப்படை கூடாது என்று சொல்லுவார்கள். நிறைய சாளக்கிராம் மூர்த்தி ஏள்ளியிருந்தால் இந்தக்கணக்கு பார்ப்பதில்லை
ஒற்றைத்திரி கொண்டு விளக்கேற்றலாமா? அடியேன்.
Vidwan’s reply
இரட்டைத்திரியிட்டு தான் விளக்கேற்ற வேண்டும். இருப்பினும் அவரவர் ஆத்து பெரியவர்கள் வழக்கத்தைப் பின்பற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வைஶ்வதேவம் என்றால் என்ன? அனுயாகம் என்றால் என்ன? யார் அதைச்செய்ய வேண்டும்? அதன் முக்கியத்துவத்தை விளக்க ப்ரார்த்திக்கின்றேன்.
Vidwan’s reply
வைஶ்வதேவம் என்பது ஒரு க்ருஹஸ்தனுக்குரிய அவசியமான அனுஷ்டானமாகும்.
ஒரு க்ருஹஸ்தனுக்கு தன்னை அறியாமலேயே 5 இடங்களில் ப்ராணிவதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது, அப்பாபத்தினை போக் கொள்ள வைஶ்வதேவமாதைக் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டும்.
இதை க்ருஹஸ்தரைத் தவிர ஏனையவர்கள் செய்யக்கூடாதென்றும், அத்தனை தேவதைகளைக்கொண்டு பகல் இரவு என இரண்டு வேளைகளிலும் விதிமுறைப்படி செய்யபட வேண்டியது இந்த வைஶ்வதேவம். இதை ஆசார உபதேசம் பெற்றுச் செய்ய வேண்டும்.
அனுயாகமென்பது நாம் செய்யும் போஜனமாகும். பெருமாள் திருவாரதனத்திற்கு யாகமென்று பெயர். இதுவும் திருவாராதனத்தைத் தொடர்ந்து வரும் அந்தர்யாமி ஆராதனமானப் படியால் இதற்கு அனுயாகம் என்று பெயர்.
எவையெல்லாம் 5 விதமான பாபம், எதைக்கொண்டு இதை அனுஷ்டிக்க வேண்டும், எந்த காலத்தில் அனுஷ்டிக்க வேண்டும் என்பதையும், போஜனத்தை ஏன் அனுயாகம் என்கின்றோம் அதன் மகத்துவத்தையும் எப்படிச்செய்ய வேண்டும் என்பதை பற்றியும் விவரமாக அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்யவும்.
https://youtu.be/qkTkX2R276s – Sri Desikan Anushtanam – Vaisvadevam & Bhojanam | Vande Vedantha Desikam
சாப்பிட மிக நிஷித்தமான அதாவது அறவே தவிர்க்க வேண்டிய வஸ்துக்கள் யாவை? அடியேன்.
Vidwan’s reply
நூற்றுக்கணக்கான நிஷித்தமான வஸ்துக்களை சாஸ்திரங்கள் கூறியிருந்தாலும் அவற்றிர்க்கு தாரதம்யங்கள் பல உள்ளன. அதில் ஏகண்டமாக பல முனிவர்கள் கூறுவது போதைப்பொருளான கள்ளு போன்றவை பருக மகாபாதகமுண்டாகும்.
இதற்கடுத்தப்படியாக அறவே தவிர்க்க வேண்டிய வஸ்துவானது வெங்காயமும், பூண்டும். இவ்விரண்டையும் குறிப்பாக நிஷேதிக்க வேண்டுமென ஏராளமான தர்ம சாஸ்த்ரங்கள் காட்டுகிறது. மேலும் ப்ராமணர்கள் தவிர்க்கப்பட வேண்டியக் காய்கணிகளின் பட்டியல் பல உண்டு.
இதற்கு தக்க ப்ரமாணமும், சாப்பிட்டால் என்ன கேடு வருமென்றும், சாப்பிட்டவன் திருந்த விரும்பினால் எப்படி ப்ராயச்சித்தம் செய்ய வேண்டுமென்ற இம்மூன்று கேள்விகளுக்குப் பதில் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்யவும்.
https://youtu.be/XAGaZQgqj48 Sri Desikan Upadesam – Saappidave koodaadha vasthukkal | Vande Vedantha Desikam