அடியேனின் தாயார் கடந்த மாதம் மதுரை திருமோகூர் கோயில்களுக்குச் சென்று சேவித்து விட்டு திரும்ப வரும்பொழுது விபத்தில் இறந்து விட்டார். காரியங்களைத் தம்பி செய்தான். பெண் என்ற முறையில் அடியேன் அம்மாவின் ஆத்ம சாந்திக்கு என்னச் செய்ய வேண்டும்? தயவு செய்து பதில் அளிக்கவும்.
Vidwan’s reply:
தாயார் தகப்பனார் பரமபதித்து விட்டால் ஸ்த்ரீகளுக்கு மூன்று நாட்கள் மட்டுமே தீட்டு. அதற்கு மேல் ஸ்த்ரீகளால் நேரடியாக எதுவும் பண்ண முடியாது. ஆனால், கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருக்கின்ற தன்னுடைய ப்ராதாவிற்கு அதாவது அவர் பெரியவர்களுக்குச் செய்யும் மாசியம், ஶ்ராத்த நாட்களில் அன்றைய தளிகையில், சாமான்கள் வாங்கி கொடுப்பதிலும், சுற்று காரியங்கள் செய்து கொடுப்பதிலும் ஒத்தாசையாக இருப்பதே ஸ்த்ரீகள் செய்யக்கூடிய கார்யம்.
அடியேன், ஜன்மாஷ்டமி மற்றும் திருவாடிப்பூரம் போன்ற பண்டிகை நாட்களில் பெருமாள் மற்றும் தாயார் சித்திரத்தை கோலமாக இடலாமா?
Vidwan’s reply:
பெருமாள் திருவுருவங்களைக் கோலமாகயிட்டால், அதைக் கலைக்கும்போது போது சங்கடமாக இருக்கும். மேலும், தரையில் நம் கால் படும் இடங்களில் இட்டாலோ அல்லது அதில் தவறாக நம் கால் பட்டாலோ சங்கடமாக இருக்கும். ஆகையால், அதைத் தவிர்ப்பதே நலம்.
என் மகள் இப்போது கல்லூரியில் இருக்கிறாள். ரஜஸ்வலா காலத்தில் பெருமாள் சந்நிதியை சேவிக்கவோ அல்லது கோவிலுக்குச் செல்லவோ கூடாது என்று சொன்னால் ஏற்க மறுக்கிறாள். ஏன் என்று விளக்கம் கேட்க்கிறாள். எங்களால் விளக்கம் கூற முடியவில்லை. இது சம்பந்தமாக நாங்கள் எதைச் சொன்னாலும் அவள் காதில் வாங்காமல் இருக்கிறாள். அவள் ஈடுபாடு இல்லாமல் எங்கள் வற்புறுத்தலின் பேரில் ஆத்து பெருமாளைச் நித்யமும் சேவித்து மாதம் ஒரு முறை கோவிலுக்கு வருகின்றாள்.தங்களின் விளக்கம் அவளை த்ருப்த்திப்படுத்தும் என்கின்ற நம்பிக்கையில் இதற்கான காரணத்தை விளக்க ப்ரார்த்திக்கிறேன்.ஆசார்யன் திருவடிகளே சரணம்”
Vidwan’s reply:
நமக்கு உடம்பு சரியில்லாத காலத்திலோ அல்லது நாம் சோர்வாக இருந்தாலோ, நமது ஆற்றல் நிலை(energy level) மிகவும் குறைவாக இருக்கும், சில சமயம் எதிர்மறைச் சிந்தனைகள் (Negative thoughts) கூட இருக்கும். அப்படி இருக்கின்ற பக்ஷத்தில் நாம் நமது எதிர்மறை ஆற்றலை மற்றவர்களுக்கு பரப்பாமல் இருப்பது நல்லது.
உடல் ரீதியாக மிகப்பெரிய பாதகம் இருந்து, மனதில் எதிர்மறை எண்ணங்கள் இருக்கும் சமயம் கோயிலுக்குப் போவது சரியில்லை, அதாவது பெருமாளைச் சேவிக்க கூடாது என்றும், திருவாராதனம் செய்வது சரியில்லை என்றும் அது அபச்சாரத்தில் போய் முடியும் என ஆகமங்கள் சொல்லியிருக்கின்றன.ஆண் ஆனாலும் பெணானாலும் இது பொருந்தும்.
விஞ்ஞான ரீதியாக ரஜஸ்வலை காலம் என்பது எதிர்மறை ஆற்றல்(negative energy) நிறைந்து இருக்கக்கூடிய காலம். உடலும் மனதும் தளர்ந்து இருக்கும் சமயத்தில் தேவையான ஓய்வை கொடுக்க வேண்டி இப்படிச் செய்திருக்கிறார்கள். ஓய்வெடுத்தாலே போதுமானது, சிரமப்பட வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் சொல்லியிருக்கிறார்கள்.தற்காலத்தில் பல சௌகர்யங்கள் வந்தாலும், ஶாஸ்த்ரம் நமக்கு கொடுத்திருக்கும் சலுகையை ஏற்று, பெருமாளைச் சேவிப்பது உசிதமாகும்.
முதலில் தற்கால ரீதியாக அணுகி, பின்பு மெதுவாக நமது சம்ப்ரதாயத்தைப் பற்றி விளக்கலாம். அதாவது, கோவிலுக்கு வரமாட்டேன் என்று சொல்பவளிடம் பொதுவாகவே வரமாட்டாய் என்பாய், நாங்கள் ஒரு சில சமயம் மட்டும் நீ வரவேண்டாம் என்று சொன்னால் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாய் எனத் தர்க்க ரிதீயாகப் பேசி பார்க்கலாம்.
அதுவும் நேர்மறை ஆற்றல்(positive energy) நிரம்பி இருக்கக்கூடிய இடங்களுக்கு நாம் சென்று, நம்மால் அந்த இடங்களுக்கு ஹானி ஏற்படுத்தக்கூடாது (In their words We must not pollute/litter the environment, we have to save our environment. These are socially/morally accepted claims by kids of today.) எனச்சொல்லி புரிய வைக்கலாம்.
எல்லாவற்றிற்கும் மேல் பெற்றோர்கள் குழந்தையை நல்வழிப்படுத்த வேண்டும் என்று பெருமாளிடம் ஶ்ரத்தையுடன் எப்படி முடியுமோ அப்படி ப்ரார்த்திக்கலாம்.குழந்தைக்கு ஸத்புத்தி வரவேண்டும் என்பதற்காக தகப்பனார் நித்யம் ஸஹஸ்ரநாமம் சேவிக்கலாம்.
தாயாரானவள் தாயாருக்குரிய ஸ்தோத்ரங்களான ஸ்ரீஸ்துதி, பூஸ்துதி, கோதாஸ்துதி சேவித்து குழந்தைக்கு அனுக்ரஹம் பண்ணி நல்வழியில் கொண்டு வரவேண்டும் என்று ப்ரார்த்திக்கலாம். பெற்றோர்கள் ஶ்ரத்தையாக ப்ரார்த்திப்பதே எல்லாவற்றையும் விட பயன் கொடுக்கக்கூடியதாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
ஸ்த்ரீகள் ப்ரபந்தம் சேவிக்கலாமா?
Vidwan’s reply:
ஸ்த்ரீகள் நன்றாக ப்ரபந்தம் சேவிக்கலாம்