என் பேரனுக்கு 9 வயது முடிந்து 10-ஆவது வயது நடந்துகொண்டிருக்கிறது. உபநயனத்திற்கான சரியான வயதை அறிய விரும்புகிறேன். குறிப்பாக உபநயனம் எந்த வயதில் பண்ண வேண்டும்? ஒற்றைப்படை வயதிலா அல்லது இரட்டைப்படை வயதிலா? எந்த வயதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்? முடிந்த வயதையா அல்லது நடந்துகொண்டிருக்கும் வயதையா? ஒற்றைப்படை வயதில் உபநயனம் செய்யக் கூடாது, இரட்டைப்படை வயதில் தான் செய்ய வேண்டும் என்கிறார்களே அது சரியா தவறா. தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
“உபநயனம் ப்ராம்ணஸ்ய அஷ்டமே” என்று சொல்லப்பட்டிருக்கிறது, எட்டாவது வயதில். அதில் கர்பாஷ்டமம் என்று கணக்கெடுத்து ஏழாவது வயதில் செய்வதும் உண்டு.
ஆனால் ஒற்றைப்படை வயதில் செய்யக்கூடாது என்பது இல்லை. பதினாறு வயதிற்குள் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. அதற்கு பிறகு காயத்ரி பலனை கொடுக்காது. 7 வயது முதல் 16 வயதிற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் உபநயனம் செய்யலாம். ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை வயதுகளில் குறிப்பிட்டுச் செய்வதற்கான ப்ரமாணங்கள் என்னவென்று தெரியவில்லை.
a.ஐயங்கார்களின் முக்கிய பண்டிகைகள் என்னென்ன?
b. தீபாவளி அமாவாஸை அன்று சிலர் க்ருஹங்களில் லட்சுமி பூஜை செய்கிறனர். ஆனால் அன்றைய தினத்தன்று பெரியவர்கள் தர்ப்பணம் செய்வதனால் பண்டிகை கொண்டாடுவதில்லை.
c.நம் பெரியவர்கள் என்னென்ன பண்டிகைகள் கொண்டாடினர் என்று பட்டியலிட்டு அதை பற்றிச் சிறிது விளக்கம் அளிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
ஐயங்கார்களின் முக்கிய பண்டிகைகள்:
சித்திரை மாதத்தில் விஷு
தக்ஷிணாயன புண்ணிய காலம்
உபாகர்மா
திருவாடிப்பூரம்
சில க்ருஹங்களில் ஆடி18
ஸ்ரீ ஜெயந்தி
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி அதிலும் முக்கியமாக மகா நவமி விஜயதசமி
துலா விஷு
தீபாவளி
சங்கராந்தி
சில க்ருஹங்களில் ஆடி மற்றும் தை அமாவாஸை
சிலர் மட்டும் செய்யும் காரடையான் நோன்பு
ஸ்ரீராம நவமி
ந்ருஸிம்ஹ ஜெயந்தி
ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களுடைய திருநக்ஷத்ர தினங்கள்
b. இவையெல்லாம் பண்டிகையாக கொண்டாடுவது வழக்கம். இதில் சில தினங்களில் விரதங்களும் உண்டு. ஸ்ரீஜெயந்தி, ஸ்ரீ ராமநவமி, ந்ருஸிம்ஹ ஜெயந்தி இந்தத் தினங்களில் வ்ரதமும் பாரணையும் உண்டு.
தீபாவளியை உத்தேசித்து பண்டிகையும் அமாவாஸையை உத்தேசித்து தர்ப்பணமும் இரண்டும் செய்யும் வழக்கம் உண்டு. லக்ஷ்மீபூஜை என்பது சில க்ருஹங்களில் மாத்திரம் செய்வது வழக்கம்.
c. எல்லா பண்டிகைகளிலும் பெருமாளை ப்ரார்த்திப்பதே வழக்கம். பண்டிகைகள் அன்று பண்டிகைத் தளிகைகளைச் செய்வது, கோவில்களுக்குச் சென்று பெருமாளைச் சேவிப்பது, அந்தப் பண்டிகைக்குள்ள விசேஷமான காரியங்களைச் செய்வது, ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களின் திருநக்ஷத்ரத்தன்று அந்தந்த ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களைச் சேவிப்பது, என்பதே வழக்கம்.
நீரிழிவு நோய் காரணமாக சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த அடியேன் பழுப்பு அரிசியை (கைக்குத்தல் அரிசி) மட்டுமே பயன்படுத்தி வருகின்றேன். பெருமாளுக்கு திருவாராதனம் செய்தபின் அம்சை பண்ண இந்த அரிசியை உபயோகப்படுத்தலாமா?
Vidwan’s reply:
நாம் சாப்பிடக்கூடிய எல்லா வஸ்துக்களையும் பெருமாளுக்கு அமுதுசெய்த பிறகே சாப்பிட வேண்டும். கைக்குத்தல் அரிசியை பெருமாளுக்கு அமுது செய்வதில் தோஷம் இல்லை.
முந்தைய மாத வெளியீட்டின் இணைப்பை தெரிவிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
முந்தைய இதழ்களைப் படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ளா Telegram groupல் சேரவும்
https://t.me/GSPKSudarsanam
எங்கள் வலைத்தளத்திலும் படிக்கலாம்
https://www.sampradayamanjari.org/sudarsanam/
ஆஶௌச காலத்தில் வலைஒளியில்(YouTube) வெளியிடப்பட்டிருக்கும் உபன்யாசங்களை கேட்கலாமா? அஶௌச காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
ஆஶௌச காலத்தில் ஸ்தோத்ர பாடம் மற்றும் அது ஸம்பந்தமான உபன்யாசங்களைக் YouTubeல் கேட்பதில் தவறில்லை.
நித்யகர்மாக்களான சந்தியாவந்தனங்களை விடாமல் ஆஶௌச காலத்தில் இருக்க வேண்டும்.
ஆஶௌச காலத்தில் கோவிலுக்கு போவது, ஆத்துப்பெருமாளைச் சேவிப்பது, ஆத்துப்பெரியவர்களைச் சேவிப்பது போன்றவை செய்வதில்லை.
அடியேன் எனக்கு ஸமாஶ்ரயணமும் சரணாகதியும் செய்துகொள்ள வேண்டும். நான் தனியாக செய்துகொள்ளலாமா அல்லது ஆத்துக்காரருடன் தான் செய்துகொள்ள வேண்டுமா?
Vidwan’s reply:
ஸமாஶ்ரயணமும் சரணாகதியும் பர்தாவுடன் சேர்ந்து செய்துக்கொள்வது உசிதம்.
நாம் ஸந்யாஸிகளை ஸேவிக்கும் பொழுது ஏன் அபிவாதனம் சொல்லுவதில்லை.
Vidwan’s reply:
ஸந்யாஸிகளைச் சேவித்து அபிவாதனம் செய்தால், ப்ரத்யபிவாதனம் (ஆசிர்வாதம்) செய்ய வேண்டும். ஸந்யாஸிகள் முற்றும் துறந்தவர்களானபடியினாலே அவர்களுக்கு ஒருவரிடத்திலும் அனுக்ரஹ/நிக்ரஹ விதியில்லை. அதனால் அவர்கள் ப்ரத்யபிவாதனம் செய்வதில்லை. ஆகையால் அவர்களுக்கு அபிவாதனம் செய்வதில்லை.
மாத்யானிஹம் பண்ணிய பிறகுதான் ஆத்துப்பெருமாளுக்கு திருவாராதனம் பண்ண வேண்டும் என்று சொல்லப்படடிருக்கின்றது. ஆனால் குழந்தைகள் வேலைக்குப் போவதற்கு முன் சாப்பிட்டுவிட்டு கையிலும் எடுத்துக்கொண்டு போகவேண்டும். இது காலை 8.00 மணிக்கு முன் தயாராக வேண்டும். திருவாராதனம் பண்ணித்தளிகை இதற்கு முன் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்தச்சூழலில் காலை 7.30 மணிக்கு முன் மாத்யானிஹம் பண்ணித் திருவாராதனம் முடித்து தளிகை பெருமாளுக்கு சமர்ப்பிக்கின்றேன். இது சரியா அல்லது திருவாராதனம் பண்ணிவிட்ட பிறகு அதற்கு உரிய சமயத்தில் மாத்யானிஹம் பண்ணலாமா? தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
நமக்கு திருவாராதனம் செய்ய அவகாசம் இருக்கும் பக்ஷத்தில் அபிகமனத்தை மானசீகமாக செய்து, தளிகைகளை கண்டருளப்பண்ணி குழந்தைகளுக்குப் பரிமாறிவிட்டு,மாத்யானிக காலத்தில் மாத்யானிஹம் செய்தபிறகு முடிந்தால் வேறு ஒரு ப்ரசாதம் பண்ணியோ அல்லது பாலோ, பழமோ கண்டருளப்பண்ணி திருவாராதனம் செய்யலாம்.
சொந்த மைத்துனர் பரமபதித்தால் அந்த வருடப்பண்டிகைகளை கொண்டாடலாமா? இல்லை ஒரு வருடம் தீட்டு காக்க வேண்டுமா?
Vidwan’s reply:
சொந்த மைத்துனர் பரமபதித்தால் ஒரு வருடத்திற்கு பண்டிகைகள் கொண்டாடுவது வழக்கமில்லை. அதற்குத் தீட்டு என்று அர்த்தம் கிடையாது. தீட்டு 13ஆம் நாளன்று முடிந்து விடும்.
பரஸமர்ப்பணம் செய்துகொண்டபின் ஆடி, தை வெள்ளிக்கிழமை புற்றுக்கு பால் தெளிப்பது, கொலுவைப்பது போன்றவை இதர தேவதாந்திரங்களுடன் சம்பந்தப்பட்டதாகுமா?
Vidwan’s reply:
பரஸமர்ப்பணம் செய்துகொண்டபின் கொலுவைப்பதைப் பொருத்தவரை அது பகவத் ஆராதனம் தான். இதை நம் GSPKயில் நவராத்திரியின் சிறப்பு என்ற கீழேயுள்ள காணொளியில் விவரமாக சொல்லப்பட்டுள்ளது.
புற்றுக்குப்பால் தெளிப்பதென்பது, சில க்ருஹங்களில் வழக்கில் இருக்கின்றது, பெரியவர்கள் வழக்கத்தை மாற்ற வேண்டாம் என்று நினைப்பதும் உண்டு. அப்படிச் செய்யும் போது அதையும் பகவத் ஆராதனமாகவே நினைத்தல் வேண்டும், தேவதாந்த்ராதனமாக நினைத்தல் கூடாது. ஆதிசேஷனுக்குச் செய்யும் கைங்கர்யமாக நினைத்து செய்தால் அதில் தவறில்லை என்று சில ஆசார்யர்கள் நிர்ணயிக்கிறார்கள். இதில் மிக முக்கியமானது நாம் புற்றுக்குப் பால் தெளிக்கும் போது மானசீகமாக பகவத் ஆராதனம் என்று நினைக்க வேண்டும்.
தீட்டு சமயங்களில் ராம நாமத்தை மனதுக்குள் ஜபிக்கலாமா?
Vidwan’s reply:
தீட்டு சமயத்தில் ராமநாமத்தை மனதிற்குள் ஜபிக்கலாம்.
காலக்ஷேபம் என்றால் என்ன? காலக்ஷேபம் கேட்பதற்கான தகுதிகள் என்ன?
Vidwan’s reply:
காலக்ஷேபம் என்பது நன்கு பொழுதைக் கழித்தல். நன்றாக கழிக்க உயர்ந்த வழி நம் பூர்வாசார்யர்கள் காட்டிய ஸ்ரீஸுக்திகளை புரிந்துகொள்வது அவைகளின் அர்த்தங்களை அறிவது. அதனால் க்ரந்தங்களின் அர்த்தங்களை அறிவது காலக்ஷேபம் என்று பெயர்.
காலக்ஷேபம் பண்ண ஸமாஶ்ரயணம் மிக முக்கியமான தகுதியாகும்.
ஸமாஶ்ரயண பரந்யாஸாதிகள் செய்துக்கொண்டு ஒரு ஆசார்யனிடமிருந்து க்ரமேன காலக்ஷேபங்கள் செய்வது உசிதம்
10 வருடங்களுக்கும் மேலாக எனது மாமனாரின் உடன்பிறந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், அவர்களது சந்ததியினரை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாவிட்டாலும், அக்குடும்பங்களில் ஏற்படும் தீட்டிற்கு 10 நாட்கள் மற்றும் 1 வருடம் அஶௌசம் அனுசரிக்க வேண்டுமா?
Vidwan’s reply:
பத்து வருடங்களாக பார்த்து கொள்ளாவிட்டாலும் அவர்களுக்கு தீட்டு காக்க வேண்டும்.
22. a. அடியேன், எனது தகப்பனார் குடும்பத்தை விட்டு பிரிந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் இறந்து விட்டார் என்று 2018ல் தெரிய வந்தது. என் தாயார், அவருக்கு எந்த வித காரியமும் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது குடும்பத்தில் ஏற்படும் சில விஷயங்கள் பித்ரு தோஷத்தாலோ என்று நினைக்க வைக்கிறது. நான் 6 வருடத்திற்கு முன்பு அவருடன் தொலைபேசி மூலம் பேசியும் இருக்கிறேன். பரமபதித்த திதி தெரியாமல் எப்படி காரியம் செய்வது என்பதற்கு வழிகாட்ட ப்ரார்த்திக்கிறேன்.
b. மேலும் இச்சமயத்தில் கோவிலுக்கு போவதோ ஸமாஶ்ரயனம் செய்து கொள்வதோ சரியாகுமா என்பதையும் விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
குறிப்பு: நான் எனது மாமாவிற்காக இந்த வருடம் ஐப்பசி மாதம் நிமித்திக ஸ்தானத்தில் அமர்ந்தேன்.
Vidwan’s reply:
பின்னாளில் இதற்கு பதிலைக் காண்போம்.
அடியேன் எங்களுக்கு ஒப்பிலியப்பன் தான் குல தெய்வம். அதனால் க்ருஹத்திலும் உப்பு இல்லாமல் தான் தளிகை எல்லாம் சமர்ப்பிக்க வேண்டுமா? 24. பாஞ்சராத்ரத்திற்கும் வைகானஸத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளை விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
ஒப்பிலியப்பன் தான் குலதெய்வம் என்றிருப்பவர்கள் க்ருஹத்தில் உப்பில்லாமல் தளிகை பண்ண அவசியமில்லை.
பாஞ்சராத்ரத்திற்கும் வைகானஸத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளை விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
பாஞ்சராத்ரம், வைகானஸம் இரண்டும் பெருமாளின் திருவாராதனத்திற்காக வந்த இரண்டு ஆகமங்கள். வைகானஸ ஆகமம் என்பது விகனஸ மஹரிஷி எழுதியது. பாஞ்சராத்ரம் என்பது பெருமாளே ப்ரவர்த்தணம் பண்ணியது. இரண்டுமே சரியானது தான். இரண்டையுமே பெரியவர்கள் ஏற்றுக்கொண் டது தான்.
வைகானஸத்தில், வேத மந்திரங்கள் நிறைந்தும், பாஞ்சராத்ரத்தில் தாந்த்ரீக மந்திரங்கள் நிறைந்தும் இருக்கும்.
வைகானஸ ஆகமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் மட்டுமே திருவாராதனம் செய்ய முடியும், மற்றவர்களுக்கு தீக்ஷை கொடுத்து என்பது இதில் செய்ய முடியாது. பாஞ்சராத்ர ஆகமத்தில் தீக்ஷை பெற்றுக்கொண்டவர்கள் பண்ணலாம். இது தான் ப்ரதான வித்யாசம்.
மற்றப்படி மந்திரங்கள் வேறுபடும்.
அஷ்டாக்ஷர ஜபம் செய்யும் முறையை தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன். த்வயம் மற்றும் ஶரம ஸ்லோகத்தையும் சேரத்தே ஜபிக்கலாம., நின்று கொண்டு செய்யலாமா அல்லது அமர்ந்துகொண்டு தான் செய்ய வேண்டுமா, எத்தனை வேளைகள் செய்ய வேண்டும் என்பதையும் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
அஷ்டாக்ஷரம் மற்றும் த்வயம் இவையெல்லாம் ஜபம் செய்யக்கூடிய முறையை ஆஹ்நீக க்ரந்தங்களில் சேவிக்கலாம்.
அஷ்டாக்ஷர ஜபத்தில் நின்று ஜபிப்பது, அமர்ந்துகொண்டு ஜபிப்பது போன்ற ஸம்ப்ரதாய பேதங்கள் உள்ளன.
த்வயம் ஶரம ஶ்லோகம் பொறுத்தவரை உட்கார்ந்துக் கொண்டுதான் ஜபிக்க வேண்டும், நின்று கொண்டு பண்ணமுடியாது என்று நினைக்கின்றேன்.
திருவஷ்டாக்ஷர ஜபத்தை அந்தந்த ஸம்ப்ரதாயத்தை அனுசரித்துச் செய்யவும்.
ஸ்த்ரீகளைப் பொறுத்தவரை அஷ்டாக்ஷரம் மற்றும் த்வயம் இவையெல்லாம் சாதாரனமாக அமர்ந்துகொண்டு ஜபிப்பது தான் வழக்கம். ஆசார்யன் கற்றுக்கொடுத்த த்யான ஶ்லோகத்தை முதலில் சேவித்துவிட்டு, அதன் பிறகு கண்ணைமூடி வஸ்த்ரத்தினுள் கைவைத்து எண்ணிகை எப்படிச் செய்யவது என்ற முறையையும் ஆசார்யன் கற்றுக்கொடுத்திருப்பார்,அந்த முறைப்படி திருவஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஶ்லோகத்தை குறைந்தபக்ஷம் ஒவ்வொன்றையும் பத்துதடவையாவது அமர்ந்துகொண்டு ஜபிக்க வேண்டும்.
தினமும் காகத்திற்கு சாதம் வைக்க வேண்டுமா?
Vidwan’s reply:
தினமும் காகத்திற்குச் சாதம் வைப்பது அவரவர்கள் க்ருஹ வழக்கம்.
அனுஷ்டானங்கள் என்றால் என்ன என்று காணொளி மூலம் விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
வித்வான்களின் சௌகர்யம் அனுசரித்து பின்னாளில் காணொளி விளக்கமாக பதிவிட முயற்ச்சி செய்kiறோம்.
பரந்யாஸம் பண்ணிக்கொண்ட பின்பு எனக்கு உடல்நலம் சரியில்லை, அதனால் என்னால் ஆசார்யன் தனியன்களைச் சேவிக்க முடியவில்லை. இது ஆசார்யனுக்கு செய்யும் தவறாகுமா?
Vidwan’s reply:
பரந்யாஸம் பண்ணிக்கொண்ட பின்பு எனக்கு உடல்நலம் சரியில்லை எனும் போது முடியாத சமயத்தில் சேவிக்கவில்லை என்றால் அது தப்பாகாது, முடிந்தும் சேவிக்காது போனால் தான் தவறாகும்.
உதாஹரணமாக, தனியனை ஶரீரத்தினால் சேவித்து சேவிக்கமுடியாவிடில் வாயால் சொல்லலாம், மனசினால் நினைக்கலாம். மனசால் நினைக்கமுடியவில்லை என்று யாரும் சொல்ல முடியாது மனதிற்கு வலி என்பது கிடையாது.
மனசினாலோ,ஶரீரத்தினாலோ, வாக்கினாலோ எந்த முறையினால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யனும அது தான் முக்கியம்.
ஶரீரத்தினால் முடியாவிட்டால் கீழே விழுந்து சேவிக்கனும் என்று எந்த ஶாஸ்த்ரமும் சொல்லவில்லை.ஆனால் முடிந்த சமயத்திலும் செய்யாமல் போனால் அது ஒரு குறையாகும்.
எந்த வயது முதல் ஏகாதசி வ்ரதம் அநுஷ்டிக்க வேண்டும்.
Vidwan’s reply:
ஏகாதசி வ்ரதம் எப்பவுமே அநுஷ்டிக்க வேண்டிய ஒன்று. குழந்தைக்கு அன்னப்ராஶனம் ஆன பிறகு ஏகாதசியன்று அன்னத்தை கொடுக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. பின்னப்படுத்தப்பட்ட அன்னத்தை கொடுக்கலாம். சிறு வயதிலிருந்தே சாதம் ஊட்டும் மாதக்கணக்கு குழந்தையாய் இருந்தால் கூட ஏகாதசி அன்று ஸொஜ்ஜி பண்ணிக்கொடுக்கலாம். அந்த வயதிலிருந்தே ஏகாதசி வ்ரதத்தின் அனுஷ்டானத்தை ஏற்படுத்தினோமேயானால் கூடிய சீக்கிரமே நிர்ஜலமாக வ்ரதம் இருக்கும் முறை வரை முன்னேற முடியும்.
தர்ப்பண காலத்தில் புருஷர்கள் போல் ஸ்திரீகளும் பலகாரம் பண்ண வேண்டுமா?
Vidwan’s reply:
தர்ப்பண காலத்தில் சுமங்கலி ஸ்திரீகள் பலகாரம் பண்ணுவது கிடையாது.
ஏகாதசி நாளன்று பெரிய பெருமாள் அமுது செய்த (குறிப்பாக அரவணை/க்ஷீரான்னம்) ப்ரசாதம் கிடைக்கும் பாக்கியம் பெறும் போது அந்த ப்ரசாதத்தை என்ன செய்ய வேண்டும். அப்படியே வைத்து மறுநாள் உட்கொள்ளலாமா?
Vidwan’s reply:
ஏகாதசி நாளன்று பெரிய பெருமாள் அமுது செய்த (குறிப்பாக அரவணை/க்ஷீரான்னம்) ப்ரசாதம் கிடைக்கும் பாக்கியம் பெறும் போது அந்த ப்ரசாதத்தை அன்று சாப்பிடாமல், அதை வைத்துகொண்டு மறுநாள் துவாதசி பாரணை செய்து முடித்தப்பிறகு சாப்பிடுவதில் ஒன்றும் தவறில்லை.
13/01/2022 அன்று போகி பண்டிகை வைகுண்ட ஏகாதசி இரண்டும் சேர்ந்து வந்தது. அப்படி வந்தால் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டுமா அல்லது பண்டிகைத் தளிகை செய்து பெருமாளுக்கு அமுது செய்தபின் அதை உட்கொள்ளலாமா?
Vidwan’s reply:
வ்ரதங்கள் எல்லாம் பெருமாளுக்கு கிடையாது. மனுஷ்யாளுக்கு மட்டும் தான். அதனால் பண்டிகை நாட்களில் ஏகாதசியும் சேர்ந்து வந்தால் பண்டிகைத் தளிகை செய்து பெருமாளுக்கு சமர்ப்பித்து அம்சை பண்ணுவதில் எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. பண்டிகைத் தளிகையை ஏகாதசி அன்று சாப்பிடலாமா வேண்டாமா என்பது அவரவர்களைப் பொருத்தது. வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று நினைப்பது முக்கியமாக தோன்றினால் வ்ரதம் அனுஷ்டிக்கலாம் அல்லது பண்டிகைக்குப் பெருமாளுக்கு அம்சை பண்ணதை சாப்பிடுது முக்கியம் என்று தோன்றினால் அதை சாப்பிடலாம். ஆனால் கண்டிப்பாக அன்று அரிசி சாதம் சாப்பிடக்கூடாது வேண்டுமென்றால் சொஜ்ஜி செய்துப் பண்டிகை தளிகையுடன் சாப்பிடலாம்.
பண்டிகைத் தளிகை சாப்பிடுவதைவிட ஏகாதசி வ்ரதம் இருப்பதே மிகவும் ஶ்ரேஷ்டம். அன்று வ்ரதத்தை அனுஷ்டிப்பது ஒரு தவறும் கிடையாது.
ஶரணாகதி செய்தபின் நம் சகோதரர்களுக்காக கணு பண்டிகை கொண்டாடலாமா? ரஜஸ்வலை காலத்தில் கணுப்பிடி வைக்கலாமா?
Vidwan’s reply:
ஶரணாகதி செய்தபின் நம் சகோதரர்களுக்காக கணுபண்டிகை கொண்டாடலாம்.
ரஜஸ்வலை காலத்திலும் கணுப்பிடி வைக்கலாம். ஆனால் எல்லோருடனும் சேர்ந்து வைக்காமல் தனியாக வைக்க வேண்டும்.
மாஸிகம் ஒரு மாதத்தில் தடங்கல் ஆனால், அதை அடுத்த மாஸிகத்தோடு சேர்த்து பண்ணாலாமா? அப்படிப் பண்ணும் போது என்ன விதிமுறைகளை அனுஷ்டிக்க வேண்டும்.
Vidwan’s reply:
ஒரு மாஸிகம் நின்று போய் அடுத்த மாஸிகம் சேர்ந்து பண்ணும்போது, பித்ரு ஸ்தானத்தில் இரண்டு பேர் வேண்டும். சங்கல்பத்தில் இரண்டு மாஸிகத்தையும் சொல்லிவிட்டு “தந்த்ரேந கரிஷ்யே” என்று சங்கல்பத்தில் சொல்லவேண்டும். விஷ்ணு வர்ணத்தில் விஶ்வே தேவர் வர்ணத்தில் இரண்டையும் சொல்லி, உ.தா 4,5 என்றால் துரீய பஞ்சமான மாஸிகே தந்த்ரேன கரிஷ்யே! துரீய பஞ்சமான மாஸிகே ஶ்ரார்த்தே விஶ்வே தேவார்த்தம் பவதாக்ஷணா கர்தவ்ய: விஷ்ணு தேவார்த்தம் பவதாக்ஷணா கர்தவ்ய: பித்ரு ஸ்தானத்தில் மட்டும் இரண்டு பேர் தனித்தனியாக தூரீய மாஸிகார்த்தே பவதாக்ஷணா கர்தவ்ய: என்று ஒருத்தரும் பஞ்சமா மாஸிகார்த்தே பவதாக்ஷணா கர்தவ்ய: என்று மற்றொருத்தர் உட்கார வைக்கவேண்டும்.
அதே போல் தத்தம் கொடுக்கும்போதும் பித்ரு ஸ்தானத்தில் மாத்ரம் பிரித்துச் சொல்லவேண்டும் பாக்கியெல்லாம் சேர்ந்து வரும்.
நம் ஸம்ப்ரதாய முறைப்படி ஒரே கோத்ரத்தைச் சார்ந்த பெண்ணும் பிள்ளையும் திருமணம் செய்துக்கொள்ளலாமா?
Vidwan’s reply:
நம் ஸம்ப்ரதாய முறைப்படி ஒரே கோத்ரத்தைச் சார்ந்த பெண்ணும் பிள்ளையும் திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது.
பொதுவாக சமூகத்தில் கணவனை இழந்த பெண்களைச் சுபகாரியங்களில் பங்கேற்க அனுமதிப்பதில்லையே. அவர்கள் ஏன் ஒடுக்கப்படுகிறார்கள்? நம் ஸம்ப்ரதாய ஆசார்யர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்களா? இது ஶாஸ்த்ரரீதியான விஷயமா?அல்லது காலப்போக்கில் மனிதர்கள் கொண்டு வந்ததா? இந்தச் சமூக நிலைபாடு ப்ரபத்தி செய்த ஶ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீகளுக்குத் தகுமா? ப்ரபத்தி செய்தவரகள் நித்ய சுமங்கலிகளானபடியினால் கணவனை இழந்தவர்களாயினும் அவர்களைச் சுபகாரியங்களில் சேர்த்துக்கொள்வது தவறா? தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன். கேள்வியில் தோஷம் இருந்தால் அடியேனை க்ஷமிக்கவும்.
Vidwan’s reply:
இதை ஸம்ப்ரதாய பரமாக புரிந்துகொள்ள வேண்டும். க்ருஹ்தாஶ்ரமத்தில் தம்பதிகளுக்கு தான் முக்கியத்வம், அவர்களுக்குதான் வைசிஶ்டியம். தம்பதியாக இருந்துதான் அனைத்து கைங்கர்யங்களும் பண்ணவேண்டும என ஶாஸ்த்ரமும் ஸம்ப்ரதாயமும் விதித்திருக்கிறது.அப்படி ஒருத்தராக இருந்தால், ஸ்த்ரீயோ புருஷரோ அவர்களுக்கு முக்கியத்வம் தரப்படவில்லை.
புருஷர்களுக்கும் மனைவியில்லாவிடில் பல வைதீக கர்மாக்கள் பண்ண தகுதியில்லாதவர்களாகிறார்கள். அதே போல் தான் ஸ்த்ரீகளும் மங்கலகார்யங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள்.
ஸம்ப்ரதாயபரமாக தம்பதிகளாக இருக்கிற வழிபாடு தான் மிகவும் சிறந்தது என வழக்கமாக வந்திருக்கிறது.
இதற்கு மேல் ப்ரபத்தி விஷயம் பொறுத்தவரை எம்பெருமான் தான் பரம்புருஷன் நாம் எல்லோரும் ஸ்த்ரீ ப்ராயர்கள் எல்லாம் சரியே. அப்படி ஸ்த்ரீ ப்ராயர்களாக இருந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதில் எவ்வித தடையுமில்லை. ப்ரபத்தியானவர்கள் ஒரு க்ருதக்ருத்யானாக இருந்து, காலக்ஷேபங்கள் பண்ணுவதோ, ப்ரபந்த/ஸ்தோத்ராதிகள் சேவிப்பதோ, கோவிலுக்குச் செல்வதோ, அங்கு கைங்கர்யங்கள் செய்வதில் எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.
ஸம்ப்ரதாயிகமாக சில கார்யங்கள் இருக்கு, ஶாஸ்த்ர விஹிதமாக சில கார்யங்கள் இருக்கு அதற்கு இன்னார் தான் என்ற விதிமுறையை உலகத்தில் பொதுவாகவே பின்பற்றுவதைப் பார்க்கலாம்.
உ.தா: மனைவியை இழந்த புருஷர்கள் யாகம் பண்ணமுடியாதென்று இருப்பது போல், ப்ரம்மச்சாரியாக இருப்பவர்களால் ஔபாஸனாதிகள் பண்ணமுடியாது அவனுக்கு திருமணமாகி இருத்தல் வேண்டும். ஏன் ப்ரம்மச்சாரி பண்ணக்கூடாது என்ற கேள்வி இங்கே வராது அதே போல் தான் சில வர்ணாஶ்ரமங்களுக்கு சில கைங்கர்யங்கள் ஶாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது. அதை ஸம்ப்ரதாயத்தில் இருக்கும் பெரியவர்கள் எல்லாரும் அவர்கள் அனுஷ்டானத்திலும் வைத்திருக்கிறார்கள். அதை அதன்படியே பின்பற்றுவது தான் நலம் மேலும், ஒரு விஷயம் மட்டும் எடுத்துக்கொண்டு இதற்கு மட்டும் இப்படியென்று யோசிக்கவேண்டிய அவசியமில்லை. எப்படித் தனித்திருக்கும் ஸ்த்ரீகளுக்கு சில கார்யங்கள் நிஷிதமாக இருக்கோ அதே போல் தனித்திருக்கும் புருஷர்களுக்கும் இருக்கு.
ஆசார்ய அனுக்ரஹத்தின் படி என்ன தெரிகிறது என்றால் தம்பதிகளாக இருக்கும் வழிபாடு தான் சரியானதாக இருக்கும்.