ஒரு பெண் முதன் முதலில் ருது பருவம் அடையும் போதுச் செய்ய வேண்டிய சம்ஸ்காரங்கள் என்ன?
Vidwan’s reply:
முதன் முதலில் ருது பருவம் ஒரு பெண் அடைந்தவுடன், அந்த பெண்ணை உட்கார வைத்து அவளுக்கு பாலும் பழமும் தரவேண்டும்.
எப்படித் தர வேண்டும் என்றால் , வாழைப்பழத்தை சிறு சிறு துண்டங்களாக நறுக்கி வைத்துக்கொண்டு அந்தத் துண்டங்களை முதலில் வாயில் போட்டு பின்பு பாலை வாயில் விட வேண்டும். இதை க்ருஹத்தில் இருக்கும் சிறுவர்களை விட்டு அவளக்குப் பக்கத்தில் போய் கொடுக்கச் சொல்லலாம். பெரியவர்கள் அவளிடம் போய்க் கொடுத்து விட்டு வந்தால் தீர்த்தாமாடவேண்டும். ஏனென்றால் அந்தப் பெண் மூன்று நாட்கள் தனியாக உட்கார வேண்டும். வேறு யாரும் க்ருஹத்தில் இல்லை அம்மாவும் பெண்ணும் மட்டுமே இருந்தால், அவளுக்குப் பக்கத்தில் அந்த பால் பழத்தை வைத்து விட்டு அவளையே எடுத்துச் சாப்பிட சொல்லலாம்.
அன்று மஞ்சள்பொங்கல் செய்து தருவது வழக்கம். மஞ்சள் பொங்கல் என்பது அரிசியையும் துவரம் பருப்பையும் சேர்த்துப் பண்ணக்கூடிய பொங்கல். அரிசியுடன் பயத்தம்பருப்புக்கு பதிலாக துவரம்பருப்பைச் சேர்த்து மஞ்சள்பொடி சேர்த்து பொங்கல் மாதிரி அதை குழைத்து இஞ்சி, மிளகு சீரகம் கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து செய்து அந்த பெண்ணிற்கு கொடுக்க வேண்டும்.
அடுத்தநாள் உளுந்து வடையோ, உளுந்து சாதமோ அல்லது உளுந்தை வைத்து ஏதாவது ஒரு பதார்த்தமோ பண்ணி கொடுக்கலாம்.
மூன்றாவது நாள் குணுக்கு, மற்றும் அப்பம் குத்தி தருவது வழக்கம். குணுக்கு என்பது அரிசியை ஊறவைத்து அதை அரைத்து அதை எண்ணெயில் போட்டு செய்வது. அப்பம் என்பது சாதாரணமாக ஸ்ரீ ஜெயந்திக்கு செய்வது போல் செய்து கொடுக்கலாம்.
இவையெல்லாம் மூன்று நாட்கள் அந்த பெண்ணிற்கு கொடுக்க வேண்டிய ஆகாரங்கள்.
நான்காவது நாள் அவளே தலையில் எண்ணை வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்து விட்டு வர வேண்டும். அவளுக்கு தானே தீர்த்தமாட தெரியவில்லை என்றால் யார் தீர்த்தாமாடி விடுகிறார்களோ(திருமணமான ஸ்த்ரீகளாக இருந்தால்) அவர்களும் ஸ்நானம் செய்து விட்டு வர வேண்டும். அதன்பிறகு அவளை மணையில் உட்காரவைத்து நலங்கிட்டு, நெற்றியில் பொட்டு வைத்து, தலையில் பூ வைத்து, புதிதாக வாங்கி வைத்திருக்கும் வஸ்திரம் (பாவாடை- தாவணி) நகைகளை கொடுக்கலாம். . பின் அந்த புது வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு வரச்சொல்லி திரும்பவும் மணையில் உட்கார வைக்க வேண்டும். சில க்ருஹங்களில் த்ருஷ்ட்டி கழிப்பதற்காக எத்தி இறக்குவது என்று ஒரு ஸம்ஸ்காரம் உண்டு. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் ஒரு விளக்கை வைத்து அந்த குழந்தையின் தலையிலிருந்து கால் வரை ஏத்தி இறக்க வேண்டும். எல்லா க்ருஹங்களிலும் அது வழக்கமாக இருக்காது. அவரவர் ஆத்து வழக்கப்படி செய்து கொள்ளலாம்.
அதன் பிறகு அம்மான் சீர் கொடுப்பது வழக்கம். அதாவது அந்தக் குழந்தையுடைய அம்மாவினுடைய பிறந்தகத்திலிருந்து என்ன சீர் கொடுக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்களோ அதை முதலில் கொடுத்திவிட்டு பின் வந்திருக்கும் மற்ற உறவினர்கள் ஏதாவது கொடுக்க ஆசைப்பட்டால் அவர்கள் ஓதியிடலாம்.
முக்கியமாக அந்தக் குழந்தைக்குப் புட்டு செய்து சாப்பிட கொடுப்பது வழக்கம். இதிலும் சில வேறுபாடுகள் உண்டு, சில க்ருஹங்களில் ஸ்நானம் செய்வதற்கு முன் அதாவது மூன்றாம் நாளே புட்டு செய்து கொடுத்து விடுவார்கள். சிலர் நான்காம் நாள் ஸ்நானம் செய்த பின் மணையில் உட்கார்த்தி வைத்து புட்டு கொடுப்பது வழக்கம்.
இவை எல்லாம் முடிந்த பின் மஞ்சநீர் சேர்த்து மங்களம் பாடி பூர்த்தி செய்து கொள்ளலாம்.
க்ருஹங்களில் பெருமாளுக்கு ஸ்த்ரீகள் கற்பூரஆரத்தி காண்பிக்கலாமா? பெருமாளுக்கு செய்யும் கற்பூர ஆரத்தியை நாம் கண்களில் ஒற்றிக்கொள்ளலாமா?
Vidwan’s reply:
ஸ்த்ரீகள் பெருமாளுக்கு கற்பூரஆரத்தி காண்பிப்பதோ, கற்பூரஆரத்தியைக் கண்களில் ஒற்றிக்கொள்வதோ ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் வழக்கமில்லை.
பாஞ்சாராத்ர க்ரந்தங்களை ஸ்த்ரீகள் சேவிக்கலாமா?
Vidwan’s reply:
பாஞ்சாராத்ர க்ரந்தங்களை ஸ்த்ரீகள் சேவிக்கும் வழக்கமில்லை.
நமஸ்காரம். திருமணமான ஸ்த்ரீகள் தினமும் துளசி மாடத்தை எப்படி அலங்கரித்து வழிபட வேண்டும்? பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் அதற்கான குறிப்பிட்ட ஏதேனும் ஸ்லோகங்கள் இருக்கின்றதா என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
திருமணமான ஸ்த்ரீகள் தினமும் துளசி மாடத்தை அலங்கரித்து வழிபட வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் இல்லை. துளசி மாடம் இருக்கின்றது என்றால் அதில் சாதாரணமாக ஒரு பொந்துப்போலே மாடம் இருக்கும். அதில் ஒரு மரியாதைக்காக விளக்கேற்றி வைக்கலாம். ஆனால் விதிமுறை என்று ஒன்றும் கிடையாது. மனதிற்குள் மஹாலக்ஷ்மியை த்யானித்துக்கொண்டு லக்ஷ்மி ஸ்லோகங்களைச் சொல்லலாம்.
ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம் சந்தை சேவிக்கலாமா? க்ருஹத்தில் பாராயணம் பண்ணலாமா? தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம் சந்தையாக சொல்வதோ பாராயணம் செய்வதோ ப்ராசீன வழக்கத்தில் இல்லை. சுந்தரகாண்டம் கதைகளைச் சேவிக்கவோ, அர்த்தங்களை நன்கு அறியவோ எந்தவித பாதகமும் இல்லை.
ஆனா ஸ்ரீமத் இராமாயணத்தை பாராயணம் பண்ண ஒரு விதிமுறை இருக்கிறது, அதாவது அந்த ஸ்ரீ கோசத்தில் எம்பெருமானை ஏளப்பண்ணி, ஆவாஹநம் பண்ணி, அம்சை பண்ணி, சிக்கு பலகையில் வைத்து மரியாதையாக சேவிப்பது எனும் வழக்கம் உண்டு. இப்படிப்பட்ட பாராயணம் ப்ராசீன காலத்தில் ஸ்த்ரீகளுக்காக ஏற்பட்ட வழியல்ல. இக்காலத்தில் மாற்றம் இருக்கிறது ஆனால் வழிவழியாக வந்த நடைமுறையில்லை.
ஸ்த்ரீகள் ஸ்ரீ ஸூக்தம் சேவிக்கலாமா?
Vidwan’s reply:
ஸ்த்ரீகள் ஸ்ரீ ஸூக்தம் சேவிக்கும் வழக்கமில்லை.
“தீர்தாமாடியபின் வஸ்த்ரம் உடுத்தி நெற்றியிட்டுண்டு ஆசமனம் பண்ணனுமா அல்லது வஸ்த்ரம் உடுத்தியதும் ஆசமனம் பண்ணிவிட்டு நெற்றிக்கு இட்டுக்கொள்ள வேண்டுமா? (For Sthree)
Vidwan’s reply:
ஸ்த்ரீகள்: தீர்தாமாடியபின் வஸ்த்ரம் உடுத்தி நெற்றியிட்டு கொண்டு தான் ஆசமனம் பண்ண வேண்டும்.
அஷ்டாக்ஷர ஜபம் செய்ய ஆசமனம், சங்கல்பம், பின் ஜபம் இந்த க்ரமம் சரியா? ஸ்திரீகள் ஜபம் செய்ய சங்கல்பம் பண்ண வேண்டுமா? த்வயம் மற்றும் ஶரம ஸ்லோகம் ஜபிக்க ஸ்திரீகள் பின்பற்ற வேண்டிய க்ரமத்தை தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
அஷ்டாக்ஷர ஜபம் செய்வதற்கு முன் கட்டாயம் ஆசமனம் பண்ண வேண்டும். அஷ்டாக்ஷரம் த்வயம் ஶரம ஶ்லோகம் இவையெல்லாம் ஜபம் செய்வதற்கு முன் அதற்கென்று ஒரு த்யான ஶ்லோகம் இருக்கின்றது. அதை ஆசாரியன் உபதேசித்திருப்பார். அந்தந்த த்யான ஶ்லோகங்கள் சொல்லிவிட்டு ஜபம் பண்ணவது ஸ்த்ரீகளுக்கு வழக்கம். அதைத் தவிர சங்கல்பம் எதுவும் தனியாக பண்ணுவது வழக்கம் இல்லை.
ஸ்ரீவைஷ்ணவ வடகலை ஸம்ப்ரதாயத்தின் படி ஒரு ஸ்திரீ எப்படி நெற்றியிட்டுக்கொள்ள வேண்டும். சிலர் ஸ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்கொள்கிறார்கள், சிலர் சிறிய திருமணுடன் (ஆசார்யன் ஸம்பந்தம் கிடைக்கப்பெற்ற பின்) ஆசார்யன் காட்டிய படி இட்டுக்கொள்கிறார்கள், வேறு சிலர் வட்டமாக குங்குமம் இட்டுக்கொள்கிறார்கள் எது சரியான ஸ்வரூபம்.
Vidwan’s reply:
ஸ்ரீவைஷ்ணவ வடகலை ஸம்ப்ரதாயத்தின் படி ஒரு ஸ்திரீ புருவத்திற்கு கொஞ்சம் கீழே திருமண்காப்பை சிறியதாக வலைந்த v இச்சின்னம் போல் இட்டுக்கொள்ள வேண்டும். அதன் பின் சிகப்புஸ்ரீசூர்ணத்தை நெற்றி முழுவது வகுடு வரை நேர் கோடுபோல் இட்டுக்கொள்ள வேண்டும்
அமாவாஸை அன்று தளிகைக்கு மஞ்சள் சேர்க்கக்கூடாது என்கிறார்கள். அப்படியானால், நாம் ஸ்நானம் செய்யும்போது முகத்திற்கோ , சரடிற்கோ மஞ்சள் சேர்க்கக்கூடாதா? மேலும் அன்று எண்ணெய் குளியல் பண்ண வேண்டுமா?
Vidwan’s reply:
அமாவாஸை அன்று தளிகைக்கு மட்டும் தான் மஞ்சள் சேர்க்கக்கூடாது. எப்போதும் சுமங்கலிகள் ஸ்நானம் செய்யும்போது மஞ்சள் சேர்ந்துக்கொண்டு தான் ஸ்நானம் செய்ய வேண்டும்.. அது எந்தநாளாக இருந்தாலும் சரி மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சுமங்கலி ப்ரார்த்தனைக்குத் தவிர்க்க வேண்டிய நாட்கள் எவை?”
Vidwan’s reply:
சுமங்கலி ப்ரார்த்தனை என்பது நிறைய பரமைகாந்திகள் க்ருஹங்களில் பண்ணுவதில்லை. இருந்தாலும் பெரியவர்கள் வழக்கமென்று சில க்ருஹங்களில் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு சுபகார்யத்திற்கு எப்படி நாள் பார்ப்போமோ அது போல் தான் நாள் பார்ப்பா, அஷ்டமி, நவமி , பரணி, க்ருத்திகை இல்லாமல் என்று திதி நக்ஷத்ர யோகம் நன்றாக இருக்கின்றதோ அன்று பண்ணலாம்.
நம் ஸம்ப்ரதாயத்தின் படி ஸ்திரீகள் கண்ணாடி வளையல் அணியலாமா?
Vidwan’s reply:
நம் ஸம்ப்ரதாயத்தின் படி ஸ்திரீகள் கண்ணாடி வளையல் அணியும் வழக்கமில்லை அது ஆசாரம் கிடையாது.
பூச்சூட்டல், ஸீமந்தம் பண்ணும் சமயம் ஆசைக்காக போட்டுவிடறார்கள். ஆசார க்ருஹங்களில் கண்ணாடி வளையல் அணிந்து உள்தொட்டு கார்யங்கள் பண்ணமாட்டார்கள்.
ரஜஸ்வலையின் 4வது நாளில் பண்டிகைகள் வந்தால் எப்படிக் கொண்டாடுவது?
Vidwan’s reply:
ரஜஸ்வலையின் 4வது நாளில் பண்டிகைகள் வந்தால் பெருமாளுக்கு தளிகைசெய்து அம்சை பாண்ணக்கூடாது. பண்டிகைக்கான புத்தாடை உடுத்துதல் தீபாவளியாக இருந்தால் எல்லோருடன் கூடி பட்டாசு வெடித்தல் இனிப்புகள் உண்ணுதல் என அனைத்தும் பண்ணலாம், ஆனால் அன்று தளிகைசெய்து பெருமாளுக்கு அதை அம்சை பண்ணக்கூடாது.
அந்யா தீட்டு ஏகாதசி, துவாதசி, அமாவாசை போன்ற நாட்களில் வந்தால் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா?
Vidwan’s reply:
பொதுவாக அந்யாதீட்டு குளிக்குமன்று எந்நாளாக இருந்தாலும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது.
சில க்ருஹங்களில் அந்யாதீட்டு குளிக்குமன்று எண்ணெய் குளியல் என்று வைத்துக்கொண்டிருக்கிறார்கள், அவரவர் ஆத்து வழக்கத்தை கேட்டு பின்பற்றவும்.