ப்ரளயகாலத்தில் எல்லா ஜீவராசிகளும் பெருமாள் வயிற்றில் ஜடமாக இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஸ்ருஷ்டிக்கு முன் அந்தக் காலத்தில் ப்ரக்ருதியின் நிலை என்ன? ப்ரளயத்தின் பொழுது ஆலிலை கிருஷ்ணணின் வடிவத்தை நாம் நினைத்துப் பார்த்தால், இலையில் பாலகிருஷ்ணர் இருப்பதற்கு இந்தத் தண்ணீரும் ப்ரபஞ்சமும் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், மூல ப்ரக்ருதி இந்த வடிவங்களாக வேறுபடுவது ஸ்ருஷ்டியின் போதுதான் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறன். ப்ரளய காலம் ஆலிலை க்ருஷ்ணர் இதை எப்படி புரிந்துகொள்வது?
Vidwan’s reply:
ப்ரளயகாலத்தில் எல்லாமே அழிந்து போயிருந்தாலும்கூட, பகவான் தான் சயனிப்பதற்காக புதிதாக ஜலத்தையும், மரத்தையும் ஸ்ருஷ்டித்து அதில் இருக்க முடியும் என்கின்ற சமாதானத்தை ஸ்வாமி தேஶிகன் சாதித்திருக்கிறார்.
சிலர் சொல்லுகிறார்கள், ஆலிலைக்கண்ணன் என்பது மொத்த ப்ரளயம் ஆகும்சமயம் நடந்தது இல்லை. இது ஒரு அவாந்த்ர ப்ரளயம். அதாவது உள்ளுக்குள் ஒரு சின்ன ப்ரளயம் இது. அப்போது லோகமெல்லாம் அழிந்து விட்டது. அப்போது சிலர் மட்டும் இருக்கின்றனர். உதாஹரணத்திற்கு மார்க்கண்டேயர் போல் சிலர் இருக்கின்றனர். அப்போது அவர் சேவித்தார் என்று இருக்கின்றது. மகா ப்ரளயம் என்பது மொத்தமும் அழிந்து போகும் சமயம், அப்போது நடந்தது இல்லை இது என்பதாகச் சொல்வதுண்டு.
ஜீவர்கள் மோக்ஷம் அடையும் போது ஸ்ரீவைகுண்டத்தை அடைவதாகக் கூறப்படுகிறது, மேலும் அது ஸுத்த ஸத்வத்தால் ஆன நித்ய லோகத்தைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது. திருப்பாற்கடல் எங்கே இருக்கிறது, அதுவும் நித்யலோகமா? அது எதனால் ஆனது? ஆதிசேஷன் நித்ய சூரியாக இருந்தாலும், பெருமாளை போல் விபுவாக இருக்க முடியாது, அப்படியிருக்க, இரண்டு இடங்களிலும் பெருமாளுக்கு படுக்கையாகவும், இருக்கையாகவும் ஒரே நேரத்தில் எப்படி இருக்கிறார்? தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
முக்தி அடையும் ஜீவர்களே நித்யவிபூதியைச் செல்லும் போது அவர்கள் இச்சையை அனுசரித்து பல விதமான திருமேனியைப் பெறமுடியும் என்றிருக்கும் போது, நித்யர்களுக்குச் அது சாத்யமே. அதனால் ஆதிசேஷன் ஒரே சமயத்தில் பெருமாளுக்கு பல கைங்கர்யங்களைச் செய்ய முடியும், பல இடங்களில் இருக்க முடியும்.
க்ஷீராப்தி என்பது, ஸ்ரீ வைகுண்டத்திற்கு வெளியே இருப்பது, தேவாதிகள், ப்ரம்ம ருத்ராதிகள் சென்று சேவிக்கக்கூடிய இடம். இதுவும் பகவத் ஸங்கல்பத்தினாலே உருவாக்கப்பட்ட இடம், சதுர்முக ப்ரம்மாவால் உருவாக்கப்பட்டது அல்ல.
ஆஞ்சநேயர் ருத்ரனின் அம்சம் என்று நம் பூர்வாசார்யர்கள் ஒப்புக்கொள்கிறார்களா? அக்காரணத்தினால் தான் ஸ்வாமி தேசிகன் சிறிய திருவடி மீது ப்ரத்யேகமாக ஸ்தோத்திரம் ஏதும் இயற்றவில்லையா ? பரந்யாஸம் செய்து கொண்ட ஶ்ரீவைஷ்ணவர்கள் பெரிய திருவடியைப்போல் சிறிய திருவடியையும் உபாசிக்கலாமா ?
Vidwan’s reply:
ஆஞ்சநேயர் ருத்ரனின் அம்சம் என்று நமது பூர்வாசார்யர்கள் எங்கும் எழுதவில்லை. ஸ்வாமி தேஶிகன் ப்ரத்யேகமாக ஏன் ஸ்தோத்ரங்கள் எழுதவில்லை என்பதற்கு இதென்று குறிப்பாக காரணம் சொல்ல முடியாது. ஏன் என்று கேட்டால் ஸ்வாமி இயற்றிய ஶ்லோகங்கள் அனைத்தும், ஒவ்வொரு இடமாக சென்று எல்லாரையும் குறித்துப் பண்ணிக்கொண்டு போகவேண்டும் என்று சங்கல்பித்து எழுதியதில்லை, அவரவர்கள் நியமித்து எழுதியது தான். அந்தந்தப் பெருமாள் தேஶிகன் மூலமாக உண்டாக்கினார் என்பது தான்.
ஸ்வாமி தேஶிகன் ஆஞ்சநேயரைக் குறித்து ஶ்லோகங்கள் சாதித்திருக்கிறார். சங்கல்ப சூர்யோதயத்தில் ஶ்லோகங்கள் இருக்கின்றன. அதேபோல் கந்தமாதன பர்வதத்தில் ஆஞ்சநேயர் இருப்பதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய திருவடியை போலே சிறிய திருவடியையும் தாராளமாகச் சேவிக்கலாம். அதில் ஆஞ்சநேயருக்கு ப்ரதிஷ்டை எப்படி நடந்திருக்கின்றது என்பது தான் முக்கியமான விஷயம். ஆஞ்சநேயரின் த்யானம், ஶ்லோகங்களைச் சொல்வது எல்லாம் இராமாயணத்தின் போது நமக்கு உண்டு. ப்ரதிஷ்டையின் போது பாஞ்சராத்ர ஆகமத்திலோ அல்லது வைகானச ஆகமத்திலோ ப்ரதிஷ்டை பண்ணப்பட்டிருந்தால் அது பக்த ப்ரதிஷ்டை என்கின்ற ரீதியில் வரும். அதாவது ஸ்ரீராமனுடைய பக்தன் என்கின்ற முறையில் ப்ரதிஷ்டை பண்ணியிருந்தால் சேவிக்கலாம். ருத்ரனுடைய அம்சமாக ப்ரதிஷ்டை பண்ணியிருந்தால் அங்கு சேவிக்க முடியாது.
அதனால் பெரியோர்கள் பெருமாள் கோவில்களில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர், ராமருடன் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் இவர்களை தான் சேவிப்பது வழக்கம். மற்றபடி தனியாக இருக்கும் ஆஞ்சநேயர் எந்த ரீதியில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் என்பது தெரியாததனால் சேவிப்பதை அவர்கள் ஆதரிப்பது கிடையாது. மற்றபடி அவரிடம் பக்தியோடு இருந்துகொண்டு அவரின் ஶ்லோகங்களை அவசியம் சேவிக்க வேண்டும்.
நாவலப்பாக்கம் ஸ்ரீ உ வே வாஸுதேவ தாத்தாசார்யர் ஸ்வாமிகள் எழுதிய “வைணவக் கொள்கையில் வேதாந்த தேசிகன்” (Vedanta Desikan on the Principles of Vaishnavism- ஆங்கில மொழிபெயர்ப்பின் பக்கம் 232) என்கின்ற நூலில், அத்வைத தத்துவஞானி வித்யாரண்யர் சததூஷணியை விமர்சித்தபோது, ஸ்வாமி தேசிகன் ஸம்ஸ்க்ருத “ச” என்ற ஒற்றை எழுத்தை வைத்துக் கொண்டு “ச கார ஸமர்த்தணத்தில்” எதிர் விமர்சித்திருக்கிறார். ”வித்யாரண்யரை ஸ்வாமி தேஶிகன் “ச” என்ற ஒற்றை அக்ஷரத்தைப் பயன்படுத்தி எவ்வாறு எதிர் விமர்சித்திருகிறார்? மேலும் சக்கர சமர்த்தனம் இன்றும் இருக்கின்றதா?
விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
ச கார ஸமர்த்தணம் என்ற நூல் உண்டு இப்போது கிடைப்பதில்லை. ச என்றால் – அதுவும் (and என்ற ஆங்கில வார்த்தை போன்றது). ச என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு.
உ.தா: இராமனும் போனான் என்றால், இராமனுடன் மற்றொருவரும் சென்றுள்ளார் என்ற அர்த்தம் கிடைக்கும். அப்படிச் ச என்று சேர்த்தால் வேறு ஒருவரும் சென்றுள்ளார் என்பது போன்ற அர்த்தம் கிடைக்கும். அவ்வர்த்தம் சரியா இல்லையா போன்ற சர்ச்சைகள் உண்டாகும். அவசியமில்லாமல் ச சொல்லக்கூடாது.
இப்படி ச காரத்தில் சர்ச்சை வரும்போது, ச என்பது சரியாக தான் சொல்லப்பட்டிருக்கிறது என்று அந்தப் புத்தகத்தில் சாதித்திருக்கிறார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், திரௌபதி மகா விஶ்வாஸத்துடன் வஸ்த்ராபஹரணத்தின் சமயம் உதவிக்காக கூக்குரலிட்டு அழுதபோது அவளுக்கு வேண்டிய உதவியை தான் செய்யவில்லை என்னும் மன பாரத்துடன் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டதாக உத்தவனிடம் கூறியதை பெரியோர்களிடமும் உபன்யாஸங்களிலும் அடியேன் பலமுறை கேட்டிருக்கிறேன்.
அடியேனின் மிகப்பெரிய மற்றும் அதிருப்தியான சந்தேகம் என்னவென்றால், பெருமாள் அவளுக்குப் போதுமானதைச் செய்யவில்லை என்று மிகவும் அத்ருப்தியாக உணரும்போது, அவள் உதவிக்காக அழும் வரை அவன் ஏன் காத்திருக்க வேண்டும்? ஏன் காத்திருந்தார்?. பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தை பூங்காவில் விளையாடும்பொழுது கீழே விழுந்து அல்லது காயமடைவதைப் பார்க்கும்போது, விழுந்துவிடாமல் அல்லது காயமடையாமல் பாதுகாக்க அவர்களை நோக்கி விரைந்து செல்கிறோம் இல்லையா? “அம்மா, நான் கீழே விழுந்துவிட்டேன் ரத்தம் வருகிறது, தயவு செய்து என்னைக் காப்பாற்று?” என்று குழந்தைகள் கேட்பதற்காக நாம் காத்திருப்பதில்லையே. லௌகீக வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் நாமே நமது குழந்தைகள் மீது எந்த ஒரு எதிர்ப்பார்பும் இல்லாத அளவற்ற பாசம் வைத்திருக்கும்போது, ஜகன்மாதா மற்றும் ஜகத் பிதாவாக தாயாரும் பெருமாளும் ஏன் ஶரணாகதி செய்து கொள்ளவோ அல்லது உதவி கேட்கவோ காத்திருக்கிறார்கள்? பெருமாள் தாயாரையம், பெரியவர்ளையும் அவமதிக்கும்படியாக என்னுடைய இந்தக் கேள்வி இருந்தால் க்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
உலகத்தை சிருஷ்டித்து, ரக்ஷித்து மாதா பிதாக்களாக இருப்பது பெருமாளும், தாயாரும். சாதாரண மாதா பிதாக்கள் போல் அல்ல, அதில் அவர்கள் சில வ்யவஸ்தைகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. உதாஹரணமாக, கர்மாதீனமாக தான் அவரவர்களுக்குப் பிறப்பும், சுகதுக்கங்களைக் கொடுப்பது என்று. ஒரே மாதா பிதாவாக ஆயினும் எல்லாரையும் ஒரே மாதிரி சுகமாகவே பிறக்க வைப்பதில்லை. ஒவ்வொருவரின் பிறப்பில், போகத்தில் எத்தனையோ வித்யாசங்கள் இருக்கின்றன. சிலர் பணக்காரனாக, ஏழையாக, ஆரோக்யமாக, புத்திசாலியாக பிறப்பதென அவரவர் கர்மாவிற்குயேற்றார் போல் பிறப்பு கொடுப்பது என்று ஒரு வ்யவஸ்த்தை வைத்துள்ளார்கள்.
அதே போல் தான் ரக்ஷணத்திலும் ஒரு வ்யவஸ்த்தை உண்டு, அவரவர் கர்மாவிற்கேற்றார் போல் ரக்ஷணம். ஶரணாகதி முதலான ரிதீயில் ப்ரார்தித்தால் ரக்ஷணம் அது இல்லாவிட்டால் ரக்ஷணம் இல்லையென்று “அப்ரார்தித்தோ ந கோபாயேத்” என சொல்கிறார்கள்.
இந்த வ்யவஸ்த்தை இல்லாவிட்டால் ஒரு ஜந்துவிற்கும் ஒரு ஆபத்தும் வரக்கூடாது என்று ஆகிவிடும். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது, அவரவர் கர்மாதீனமாக என்னவெல்லாம் உண்டோ அவையெல்லம் வரத்தான் வரும். அந்தக் கர்மத்தை மீறி பிழைத்துக்கொள்வதற்கு, செயல்படுவதற்கு சில ஶாஸ்த்ரங்கள் உண்டு. நம் அது மூலமாக தெரிந்துக்கொண்டு, கெட்டகார்யங்களைத் த்வரித்து, நல்ல கார்யங்களைச் செய்வது போன்றவை பண்ணலாம், ஶரணாகதி பண்ணலாம்.இவை செய்வதால் பகவான் ரக்ஷிகின்றான். அதை வைத்துக்கொண்டே அவன் ரக்ஷிப்பதினால் அவனை கருணாவான் என்கிறோம்.
இவையெல்லாம் சிருஷ்டி, ரக்ஷணம், மோக்ஷம் போன்றவற்றில் பகவான் செய்துகொண்ட வ்யவஸ்த்தை. இதை ஶாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது, மேலும் விஸ்தாரமாக அறிய தத்வமுக்தாகலாபம் முதலிய கர்ந்தங்களில் ஸேவிக்கலாம்.
யாராவது நமக்கு மருந்து மாயம் வைத்ததாக இருந்தால் அது நமக்கு பாதிக்காமல் இருக்க என்ன தேசிக ஶ்லோகம் பாராயணம் பண்ணணும்”
Vidwan’s reply:
யாராவது நமக்கு மந்திரம் மாயம் வைத்திருந்தால் அது நீங்க கருட பஞ்சாஶத்தைப் பாராயணம் பண்ணலாம்