ப்லவ – மாசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்


வீட்டில் மற்றும் கோவிலில் இருக்கும் சாளக்கிராம மூர்த்திக்குத் திருமஞ்சனம் செய்தபிறகு சந்தனம் சாற்றலாமா? (நிறைய மூர்த்தங்கள் உள்ளன). துளசியும் சாற்றுவேன்.

Vidwan’s reply:
இதில் சந்தேகமே வேண்டாம். வீட்டில் மற்றும் கோவிலில் இருக்கும் சாளக்கிராம மூர்த்திக்குத் திருமஞ்சனம் செய்தபிறகு சந்தனம் தாராளமாக சந்தனம் சாற்றலாம்.

நிறைய மூர்த்தங்கள் இருந்தால் எல்லாருக்குமே சந்தனம் சாற்றுவது விசேஷம் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு. ஒரு மூர்த்திக்கு மட்டும் சாற்றி மற்ற மூர்த்திகளுக்குச் சாற்றாமல் இருப்பது அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை. தூபம் தீபம் என்றால் எல்லா மூர்த்திகளுக்கும் பொதுவாக ஆகிவிடும். ஆனால் சந்தனம் என்பது அப்படியில்லை, அதனால் எல்லா மூர்த்திகளுக்கும் சாற்றுவதே விசேஷம். அதனால் திருமஞ்சனம் ஆனபிறகு அந்த க்ரமத்தில் சந்தனம் ஸ்மர்ப்பிக்கலாம்.


கோவிலில், ஒரே பவித்திரத்தைச் சில நாட்களுக்கு மீண்டும், மீண்டும் பயன்படுத்தலாமா?

Vidwan’s reply:
கோவிலில் ஒரே பவித்ரத்தைச் சில நாட்களுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்று ஆகமங்களில் இருக்கின்றது.

பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கும் வஸ்துக்களில் ஸ்திர வஸ்துகள் என்று சில உள்ளன, அவற்றைப் பெருமாளுக்கு அடுத்தடுத்து ஸமர்ப்பிக்கலாம் என்று இருக்கிறது.


அடியேன் க்ருஹத்தில் ஒரு சாளக்கிராமமும் , ஒரு துவாரகா லக்ஷ்மியும் தனித்தனியாக ஏளியிருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் சேர்ந்தே திருமஞ்சனம் செய்யலாமா? அடியேனுடைய பர்த்தாதான் திருவாராதனை செய்கிறார்.

Vidwan’s reply:
இரண்டுபேருக்கும் சேர்ந்தே திருமஞ்சனம் செய்யலாம். சாளக்கிராம திருமஞ்சனம் போல் துவாரகாமூர்த்தி திருமஞ்சனமும் அவரின் தீர்த்தமும் விசேஷமென்று சொல்லப்பட்டிருக்கிறது.


அடியேனுக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியாது, ஆனால் தேஶிகன் ஸ்லோகங்கள், ஸஹஸ்ரநாமம், பாதுகாஸஹஸ்ரம் ஆகியவற்றைத் தினமும் பாராயணம் செய்வேன். அடியேனுக்கு ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள சம்யுக்தங்களின் பயன்பாடு தெரியாததால் நிறைய தவறுகள் இருக்கும்.அடியேனுக்கு அறுபது வயதுக்கு மேல், ஸம்ஸ்க்ருதம் படிக்க முடியாது. தினப்படி வாழ்க்கையில் பலவற்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாமல் மறந்து போய்விடுகின்றேன். ஆனால் அடியேனுக்கு அனைத்து ஸம்ஸ்க்ருத ஶ்லோகங்களையும் சேவிக்க ஆசை. நான் தவறாக உச்சரித்தால் எனக்கு க்ஷமாபணம் உண்டா?

Vidwan’s reply:
கூடியவரை தவறு இல்லாமல் சொல்வது விசேஷம்.

கொஞ்சம் தவறிருந்தால் அதில் ஒன்றும் தோஷமில்லை. ஆனால் அதைத் திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அதுவே வேதத்திற்கும் , ஸ்தோத்ரத்திற்கும் இருக்கும் வித்தியாசம். வேதத்தில் ஸ்வரம் தப்பினாலோ, அக்ஷரங்கள் தப்பினாலோ, தோஷமாகும். இதில் அப்படிக் கிடையாது. குறிப்பாக ஸஹஸ்ரநாமத்தின் கடைசியில்

“யத3க்ஷர பத3ப்4ரஷ்டம் மாத்ரஹீனம் து யத்3ப4வேத்

தத் சர்வம் க்ஷம்யதாம் தே3வா நாராயண நமோஸ்துதே”

என்று சொல்லி பெருமாளிடம் நமஸ்காரம் பண்ணி ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்க ப்ரார்த்திப்பதற்கு இருக்கின்றது. இப்படிச் சில ஸ்லோகங்களில் இருக்கும். அப்படி இல்லாவிட்டால்கூட நாம் பக்தியுடன் சொல்லும்பொழுது ஒரு குழந்தையினுடைய மழலைச்சொல்லை எப்படிப் பெரியவர்கள் ஏற்றுக்கொள்வார்களோ அதேபோலே பெருமாளும் ஏற்றுக்கொள்வார். அதற்காக அப்படியே சொல்லாமல் ஓரளவு திருத்திக்கொள்ள ப்ரயத்தனம் பண்ண வேண்டும்.


சமீபத்தில் என் சம்பந்தி ஸ்வாமி ஸ்ரீ ஆசார்யன் திருவடி அடைந்தார். மாஸ்யம், அமாவாஸை தர்ப்பணம் இரண்டும் செய்ய வேண்டுமா? மாஸ்யம் செய்வதால் அமாவாஸை தர்ப்பணம் செய்யத்தேவையில்லை என்று சில வாத்தியார் சொல்கிறார்கள். என் ஜாமதாவின் சந்தேகத்தை தயவுசெய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
மாஸ்யம், அமாவாஸை தர்ப்பணம் இரண்டும் செய்ய வேண்டும். மாஸ்யம் செய்வதால் அமாவாஸை தர்ப்பணம் செய்யத்தேவையில்லை என்பதெல்லாம் கிடையாது. மாஸ்யம் முடித்துவிட்டு பின்பு அமாவாஸ்யை தர்ப்பணம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.


எங்கள் வீட்டில் 3 ஹிரண்யகர்ப சாளக்கிராமம் உள்ளது. எனது பர்த்தா நித்யமும் பால் மற்றும் ஜலம் கொண்டு திருவாராதனம் செய்து வருகின்றார். கடந்த சுதர்சனத்தில் 1 அல்லது 4 அல்லது அதற்கு மேல் சாளக்கிராமம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 3 சாளக்கிராமங்களுக்குத் திருவாராதனம் செய்யலாமா தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கின்றேன்.

Vidwan’s reply:
3 ஹிரண்யகர்ப சாளக்கிராமம் இருந்தால் அவற்றில் ஒரு சாளக்கிராம மூர்த்தியை ப்ரதானமாக வைத்துக்கொண்டு , மற்றவர்களை அப்ரதானமாக பக்கத்தில் ஏளப்பண்ணிக்கொள்ள வேண்டும். ப்ரதானமானவருக்கு நாம் விசேஷமான திருவாராதனம் பண்ணலாம். பெருமாள் சங்கல்பத்தில் நான்கு சாளக்கிரமங்கள் ஏளிய பின் அனைவருக்கும் விசேஷமான திருவாராதனம் பண்ணலாம்.


ஓய்வுக்குப் பிறகு பகவத் கீதை, பாகவதம், சுந்தரகாண்டம் போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன். நான் தினமும் ஸ்ரீ விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் செய்வேன். முந்தைய சுதர்சனத்தில், ஸ்த்ரீகள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கக் கூடாது என்று விளக்கப்பட்டுள்ளது . நான் 1000 நாமங்களை பகவத் ப்ரீதியினால் சங்கல்பம் மற்றும் பலஸ்ருதி இல்லாமல் பாராயணம் செய்கிறேன். பகவத் ப்ரீதியினால் பெண்கள் பகவத் கீதை, சுந்தரகாண்டம் மற்றும் பாகவதம் ஆகியவற்றைப் படிக்கலாமா என்பதைத் தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.

Vidwan’s reply:
ஶாஸ்த்ரத்தைக் கட்டுப்பாட்டோடு கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் அப்பொழுது சுந்தரகாண்டம் முதலானவற்றை ஸ்த்ரீகள் பாராயணம் பண்ணக்கூடாது. ஆனால் நாம் எத்தனையோ விஷயங்களில் அந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி கொண்டுதான் இருக்கின்றோம். அதனால் அந்தரீதியில் சிலர் இதையும் தளர்த்திக் கொள்கிறார்கள்.

ஶாஸ்த்ரப்படி பார்த்தால் சுந்தரகாண்டத்தில் கதைகள் இருக்கின்றது அவற்றை நாம் படிக்கலாம். காலக்ஷேபமாக கேட்கலாம். மற்றவரைப் படிக்கச்சொல்லி கேட்கலாம். ஆனால் மூல க்ரந்த பாராயணம் என்பதைதான் ஸ்த்ரீகள் சேவிக்கக்கூடாது என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.


பெருமாளுக்கு அமுது கண்டருளப் பண்ணும் பொழுது, திருத்துழாயை எல்லாவற்றிலும் சேர்க்க வேண்டுமா அல்லது சாதத்தில் மற்றும் சேர்த்தால் போதுமா? உப்பு பதார்த்தங்களில் சேர்க்கலாமா?

Vidwan’s reply:
பெருமாளுக்கு அமுது கண்டருளப் பண்ணும்பொழுது, திருத்துழாயை எல்லாவற்றிலும் சேர்க்க முடிந்தால் சேர்க்கலாம். அல்லது ப்ரசாதத்தில் மட்டும் சேர்த்தாலும் ஒன்றும் தவறு இல்லை. கோவில்களில் திருத்துழாய் மற்றும் புஷ்பங்களை எல்லாவற்றிலும் சேர்ப்பது வழக்கமுண்டு.


மஹா ப்ரதோஷத்தன்று கடை பிடிக்க வேண்டிய விதி முறைகள் என்ன? அச்சமயத்தில் ஸ்தோத்ரப் பாடங்களைச் சேவிக்கலாமா?

Vidwan’s reply:
மஹாப்ரதோஷத்தன்று மௌனமாக இருப்பது முக்கியமானதாகும் என்று சொல்லியிருக்கிறது. ஆசாரியர்கள் மஹாப்ரதோஷத்தன்று மௌனமாக இருப்பார்கள். அதுவே ப்ரதானமாக சொல்லப்பட்டிருக்கிறது.

அன்று மௌனம் தான் கைங்கர்யம் என்பதினால் ஸஹஸ்ரநாமமோ, ஸ்தோத்ர பாடமோ, ப்ரபந்தமோ சேவிக்கக்கூடாது.


.ஒரு ப்ரபன்னன் தன் ஶரீரத்தை விட்டுப்புறப்பட்டவுடன் எப்போது ஸ்ரீவைகுண்டத்தை அடைவான்? இப்படி இவன் அடைகிறான் என்பதை ஆழ்வார் ஆசார்யர்கள் எந்த ஸ்ரீ ஸூக்திகளில் குறிப்பிட்டுள்ளார் என்பதையும் விளக்கப் ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
ஒரு ப்ரபன்னன் தன் ஶரீரத்தை விட்டுப்புறப்பட்டவுடன் ஸ்ரீவைகுண்டத்தை அடைவதற்கான குறிப்பிட்ட நாளோ நேரமோ, தேதியோ கணக்கு கிடையாது. நேரம் ஆனவுடன் அர்ச்சிராதி கதியில் போய் ஸ்ரீ வைகுண்டத்தைச் சீக்கிரமே அடைந்து விடுகிறான். அதற்கு விளம்பம் கிடையாது என்று மாத்திரம் சொல்லியிருக்கிறது.

ஆழவார் ஆசாரியர்கள் ஸ்ரீஸூக்திகளில் ஸ்ரீவைகுண்டம் போவது பற்றி ஸ்ரீபாஷ்யத்தில் இருக்கிறது. மற்றும் ”சூழ்விசும்பணி முகில், முனியே நான்முகனே” முதலான பாசுரங்களிலும் பார்க்கலாம்.


அடியேனுக்கு ஆசார்யன் அனுக்ரஹத்தினால் ப்ரபத்தி ஆகிவிட்டது. ஶரணாகதி செய்தவர்கள் பாகவத அபசாரம் படக்கூடாது என்று நம் பெரியோர்கள் வலியுறுத்துகின்றனர். அடியேனுக்கு இதில் ஒரு சந்தேகம். பாகவத அபசாரம் என்று எவற்றைக் குறிப்பாக ஶாஸ்த்ரம் கூறுகிறது? பிறகு யார் பாகவதர்கள் என்று நம் ஸம்ப்ரதாயம் கூறுகிறது? ப்ரபத்தி ஆகி உண்மையான ஶ்ரீவைஷ்ணவர்களாய் இருப்பவர்கள் மட்டும் தானா? அல்லது எம்பெருமானிடம் போல் பிற தேவதாந்திரங்களிடமும் பக்தி கொண்டவருமா? கேள்வியில் தோஷம் இருந்தால் க்ஷமிக்கவும்.

Vidwan’s reply:
பகவானை சேவிப்பவர்கள் எல்லோருமே பாகவதர்கள்தான். ஸமாஶ்ரயணம் ஆனவர்கள் பாகவதர்கள். பரந்யாஸம் ஆனவர்கள் பாகவதர்கள். நெற்றியில் திருமண்காப்பு இட்டுக்கொள்பவர்கள் பாகவதர்கள். அப்படிப் பார்க்கும்பொழுது பகவானைச் சேர்ந்த பகவத்பக்தர்கள் எல்லோருமே பாகவதர்கள்தான். அதனால் பொதுவாக யாரிடமும் அபசாரம் பண்ணாமல் இருக்கவேண்டும்.

பாகவதர் என்றால் என்ன லக்ஷணம், அவர் சரியாக இருக்கிறார, அவர் ஸ்ரேஷ்டமான பாகவதரா என்றெல்லாம் நாம் பார்க்கத் தேவையில்லை. பாகவத அபசாரம் நாம் படக்கூடாது என்பதுதான் முக்கியமே தவிர இவையெல்லாம் முக்கியமில்லை. அதனால் எப்படிப்பட்ட பாகவதராக இருந்தாலும் சரி அவரிடம் அபசாரப்படாமல் இருக்க வேண்டும் . அதுவே ஸ்ரேஷ்டம் என்று வைத்துக்கொள்ள வேண்டும்.


தலைமுடி க்ஷௌரம் செய்த பின்னர் ஒவ்வொரு முறையும் பூணூல் மாற்றுவது அவசியமா? அடியேன் தினமும் பெருமாள் திருவாராதனம் செய்கின்றேன், அதனால் இச்சந்தேகம்.

Vidwan’s reply:
க்ஷௌரம் செய்துகொள்ளும்பொழுது பண்ணுகிறவருடைய கையோ, ஆயுதமோ, அவர் தெளிக்கக்கூடிய ஜலமோ அல்லது அவர் போர்த்தக்கூடிய வஸ்திரமோ பட்டு பூணூல் அசுத்தம் ஆகிவிடுகிறது. பூணூல் என்பது எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும்.

சுத்தமுடைய யக்ஞோபவீதத்துடன்தான் நாம் அனுஷ்டானங்களைப் பண்ணவேண்டும். அசுத்தியானால் பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்தக்கணக்கில் தான் க்ஷௌரம் செய்துகொண்டால் யக்ஞோபவீதம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்கிறது.


இந்தக் குழுமத்தில் சேர்வது எப்படி?

Vidwan’s reply:
இந்தக் குழுவில் சேர தாங்கள் தங்கள் கைபேசியில் Telegram appஐ பதிவிறக்கம் செய்துவிட்டு, கீழ்க்கண்ட linkஐ click செய்யவும்

https://t.me/GSPKSudarsanam

எங்களின் இன்னும் பிற குழுமங்கள் பற்றி அறிய இங்கே சேரவும்.

https://t.me/dgspk

https://t.me/gspkstotras

https://t.me/sampradayamanjari


ஏன் நாம் 4 முறை நமஸ்காரம் செய்கிறோம்?

Vidwan’s reply:
அதற்கு ஒரேபதில் என்னவென்றால் ஶாஸ்த்ரத்தில் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது பெருமாளுக்கு நாம் செய்யக்கூடிய கைங்கர்யங்கள் என்று பார்க்கும்போது ப்ரதக்ஷிணம், ப்ரணாமம், அஞ்சலி இவையெல்லாம் என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஶாஸ்த்ரத்தில் ஒவ்வொன்றும் எப்படி பண்ணவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ப்ரதக்ஷிணம் என்றால் எத்தனை தடவை பண்ண வேண்டும், எப்படிப் பண்ணக்கூடாது , ஓடிக்கொண்டு பண்ணக்கூடாது என்றெல்லாம் ஶாஸ்த்ரம் சொல்கிறது. அஞ்சலி எப்படி பண்ணவேண்டும், ஏக ஹஸ்தாஞ்சலி பண்ணக்கூடாது என்றும் இருக்கின்றது.

அதேபோல் ப்ரணாமத்தை பற்றி சொல்லும் பொழுது இரட்டைப்படையில் தான் பண்ணவேண்டும், “प्रदक्षिणान् प्रणामान्श्च युग्मानेव समाचरेत्। ப்ரதக்ஷிணான் ப்ரமாணான்ஶ்ச யுக்மானேவ ஸமாசரேத்” என்று சொல்லி, அதற்கு காரணமும் சொல்லுகிறது. பெருமாளுக்கு எல்லாமே இரட்டைப் படையில் தான் இருக்க வேண்டும் ஒற்றைப்படையில் இருப்பது ஸ்ரேஷ்டமில்லை.

பொதுவாக ஒன்று என்பது பித்ருக்களுக்கு. தேவர்களுக்கு வரும்பொழுது இரண்டு தான் வரும். “ஏகாமன்வா: , ஏகாஹிபித்ருனாம், த்ருரன்வா:, த்ருஹிதேவானாம்” என்பது வேதத்தில் மிகவும் ப்ரசித்தம். அதனால் தேவாதிதேவனான பெருமாளுக்கு சுருக்கமாக இரண்டு என்று பண்ணாமல் நான்கு, ஆறு என்று பண்ணலாம். இதில் நிறைய யுக்திகளும் ஸ்வாமி தேஶிகன் சொல்லியிருக்கிறார் .


ஜபம் செய்யும் போது நாம் எப்படி எண்ணிக்கை வைத்துக் கொள்வது? ஒவ்வொரு விரலுக்கும் 3 என்று கணக்கிட்டு கொள்வேன். ஆனால் ஒரு விரலுக்கு 2 எண்ணிக்கை மட்டுமே என்று எங்கோ கேள்விப்பட்டிருக்கிறேன். எது சரி?

Vidwan’s reply:
ஜபம் செய்யும்பொழுது நம் விரல்களில் 10 தடவை எண்ண முடியும்.

சுண்டு விரலில் மூன்று, நாலாவது மோதிர விரல் மேலே, ஐந்தாவது நடுவிரல் மேலே, ஆறாவது ஆள்காட்டி விரல் மேலே, ஏழாவது ஆள் காட்டி விரல் நடுவில், எட்டாவது ஆள்காட்டி விரல் கீழே, ஒன்பதாவது நடுவிரல் கீழே, பத்தாவது மோதிர விரல் கீழே என்று ஒரு ப்ரதக்ஷிணமாக வந்து முடியும். ப்ரதக்ஷிணமாக வரும்பொழுது சுண்டுவிரலிலும் ஆள்காட்டிவிரலிலும் மூன்றும் நடுவிரலும் மோதிரவிரலும் மேலும் கீழும் என இரண்டும் வரும். சொல்லிப் புரிந்துகொள்வதைவிட விஷயம் தெரிந்தவர்களிடம் செய்துகாட்டச் சொல்லியோ அல்லது படத்திலோ பார்த்து புரிந்துகொள்ளலாம்.


சமீபத்தில் எங்களுக்கு 10 சாளக்கிராமங்கள் மற்றும் 2 துவாரகா மூர்த்திகள் கிடைக்கும் பாக்யம் பெற்றோம். மூர்த்திகளுக்கு என்ன செய்ய வேண்டும், அவற்றை எப்படி ஏள பண்ண வேண்டும் என்று விரிவாக வழிகாட்ட ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
சாளக்கிராமங்கள் மற்றும் துவாரகா மூர்த்திகள் என்று நம் ஆத்துக்கு ஏள்கிறார்களோ (ஒரு நல்ல நாள் பார்த்து என்று அவர்கள் ஏள்கிறார்களோ) அன்று பால் திருமஞ்சனம் செய்து, விசேஷமான தளிகை பண்ணி, அன்று விசேஷமான ஆராதனம் பண்ணவேண்டும். அதன் பின்னர் தொடர்ந்து நித்யபடி ஆராதனை பண்ண வேண்டும்.


நம் க்ருஹங்களில் பெருமாள் சன்னதியில் ஆலிலை க்ருஷ்ணர், குழலூதும் க்ருஷ்ணர் விக்ரஹங்களை ஏள பண்ணி வைத்துக்கொள்ளலாமா?

Vidwan’s reply:
நம் க்ருஹங்களில் பெருமள் சன்னதியில் ஆலிலை க்ருஷ்ணர், குழலூதும் க்ருஷ்ணர் விக்ரஹங்களை தாராளமாக ஏளப் பண்ணி வைத்துக்கொள்ளலாம்.


கோஷ்டி நடக்கும்போது சாஷ்டாங்கமாகச் சேவிக்கின்றோம். அப்பொழுது நடுவில் யாராவது நின்று கொண்டு இருந்தால் சேவிப்பது சரியா?

Vidwan’s reply:
கோஷ்டி நடக்கும்போது சாஷ்டாங்கமாகச் சேவிக்கின்றோம். அப்பொழுது நடுவில் யாராவது நின்றுகொண்டு இருந்தால் அவாளே நகர்ந்துக்கொள்ளணும்,முடிந்தால் நாம் அவர்களைத்தாண்டி நகர்ந்துசென்று சேவிக்கலாம். அது முடியவில்லையென்றால் நாம் கோஷ்டியைச் சேவிப்பதாக நினைத்துக்கொண்டு சேவிக்க வேண்டும். அதில் தவறில்லை.

நாம் சேவிக்கும் பொழுது அவர்கள் வேறு கார்யமாக செல்வார்கள், இல்லை கைங்கர்யபரர்களாக இருப்பார்கள், சில நேரங்களில் இதையெல்லாம் ரொம்ப தீவிரமாக பார்க்கவும் முடியாது. ஆகையால் நமக்கு கோஷ்டியைச் சேவிப்பது மட்டும் தான் லட்சியம் என்பதை நினைத்துக்கொண்டு சேவிக்கலாம்.


ஸ்ரீ வைஷ்ணவர்கள் இதர தேவதாந்திரங்களை ஏன் சேவிக்க கூடாது. ஏன் அவர்களுடைய கோவில்களுக்குச் செல்லக்கூடாது? சென்றால் தோஷம் ஏற்படுமா?

Vidwan’s reply:
எம்பெருமான் என்பவன் தேவாதிதேவன், எல்லோரைக் காட்டிலும் உயர்ந்தவன். அப்படி உயர்ந்த எம்பெருமானைச் சேவிக்கும்பொது மற்ற தேவதாந்திரங்களைச் சேவித்தால் இருவரையும் சமமாகபாவித்ததைப் போல் ஆகிவிடும். அப்படிச் செய்தல் கூடாது.

எம்பெருமான் ரொம்ப ரொம்ப உயர்ந்தவன் என்பதை நாம் என்றும் மறக்கக்கூடாது. மேலும் எம்பெருமானுக்குச் சமமாக மற்ற தேவர்களை நினைத்தால் அது மகா பெரியபாபம். அது அந்தத் தேவர்களுக்கே பிடிக்காது, அவர்களும் அப்படி நினைக்கச் சொல்லவில்லை.

எங்களைச் சேவித்தால் என்ன பலன் என்று தான் சொல்லுகிறார்கள், அவரைவிடப் பெரியவர் அவருக்குச் சமமானவர் என்று சொல்லவில்லை. அந்த எண்ணங்கள் நமக்கு வரவேகூடாது என்பதால்தான் அவர்களுடைய கோவிலுக்குச் செல்லக்கூடாது சேவிக்ககூடாது என்று சொன்னதற்கு ப்ரதான காரணம்.

சிலர் அவர்களைச் சேவித்துச் சேவித்து, பெருமாளைச் சேவித்தால் பலன் ஒன்றும் கிடைக்கவில்லை அவர்களைச் சேவித்தால் தான் பலன் கிடைக்கிறது என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு செய்வதெல்லாம் ஸம்ஸார பாபத்தில் போய் முடியும். அதனால் தான் அதை நாம் நினைக்கவேகூடாது. பெருமாள் தான் உயர்ந்தவர் மற்றவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல என்பதாலும், அவரை மட்டும் சேவிப்பது மற்றவர்களை அவருக்குச் சமமாக கூட நினைக்கக்கூடாது , அவர்களிடம் சமமாக நடந்துகொள்ளக்கூடாது என்பதால் தான் இதர தேவதாந்திரங்களைச் சேவிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.


ஸ்ரீ சந்நிதி ஸம்ப்ரதாயத்தின்படி அஷ்டாக்ஷரம், த்வயம் மற்றும் சரம ஶ்லோகங்களுக்கான த்யான ஶ்லோகங்களை அர்த்தத்துடன், அதாவது எந்தத் திருமேனிக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிக்றேன்.

Vidwan’s reply:
ஸ்ரீ சந்நிதி ஸம்ப்ரதாயத்தின்படி அஷ்டாக்ஷரம், த்வயம் மற்றும் சரம ஶ்லோகங்களுக்கான த்யான ஶ்லோகங்கள் அர்த்தத்துடன் ,ஸ்ரீமத் அஹோபில மடத்தினால் வெளியிடப்பட்ட ஆஹ்நீக க்ரந்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது அதை பார்க்கவும்.


அமாவாஸை தர்ப்பணத்துக்கு (வடகலை யஜுர் சம்ப்ரதாயம்) கையில், ஆசனத்தில் எவ்வளவு கட்டைப்புல் வைத்துக் கொள்ள வேண்டும்? தாம்பாளத்தில் இரண்டு வரிசை கிழக்கு மேற்காக எத்தனை பில்கள் வைக்க வேண்டும்?

Vidwan’s reply:
ஆசனத்தில் பொதுவாக இரண்டு கட்டைப்புல் வைத்துக்கொள்வார்கள் அதில் ஒன்று நுனிப்புல் கூட வைத்துக்கொள்வார்கள். “தர்பேஷு தர்பாம்” என்று சொல்லும் படியினால் இரண்டுக்கும் மேல் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இன்னும் நிறைய ஆசனங்கள் 4 என்பதாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

கிழக்கு மேற்கு என்பதாக வைக்கின்றதும் புக்னத்திற்கு ஆசனமாக இரண்டு இரண்டாக கட்டதண்டமாக வைக்கவேண்டும். அது பித்ருக்களுக்கான ஆசனமாகும்.


“திவ்யதேச க்ஷேத்ரங்கள் மற்றும் பிற கோவில்களில் மூலவருக்கும் உற்சவருக்கும் (பெருமாள் உபய நாச்சியார் உட்பட) வஸ்த்ர ஸமர்ப்பணம் செய்வதற்கான நியமங்களைத் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
திவ்யதேச க்ஷேத்ரங்கள் மற்றும் பிற கோவில்களில் மூலவருக்கும் உற்சவருக்கும் (பெருமாள் உபய நாச்சியார் உட்பட) வஸ்த்ர ஸமர்ப்பணம் செய்வதற்கென்றுத் தனி நியமங்கள் கிடையாது. வஸ்த்ரத்தைத் தட்டில் வைத்து அர்ச்சகரிடம் ஸமர்பித்தால் அவ்வூரின் வழக்கத்தின் படி அவர் ஸமர்பிப்பார். அந்தந்த திவ்யதேச வழக்கின் படி வஸ்த்ரங்கள் ஸமர்பிக்க வேண்டும் என்ற நியமம் மட்டும் தான்.


அத்யயனம் மற்றும் அனத்யயன காலங்களைப் பற்றி விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
வேதாத்யயனம் செய்ய கேட்டுள்ளீர் எனக்கொண்டு இப்பதிலை பகிர்கின்றேன். தர்மஶாஸ்த்ரத்தில் இதை விரிவாக சொல்லியுள்ளனர்.

அத்யயன காலம் என்றால் – படிக்கவேண்டிய காலம்

அனத்யயன காலம் பொதுவாக அஷ்டமி, சதுர்தசி, அமாவாஸை/பௌர்ணமி மற்றும் ப்ரதமை. இந்த நான்கு தினங்களும் அனத்யயன தினம்.இந்த நாட்களில் வேதாத்யயனம் பண்ணக்கூடாது, சந்தை சொல்லக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

திவ்ய ப்ரபந்தம்/ஸ்தோத்ர பாடங்கள் பொருத்தவரை, அஷ்டமி, சதுர்தசியில் சொல்வதுண்டு. அமாவாஸை/பௌர்ணமி மற்றும் ப்ரதமை இந்த இரண்டு நாட்களில் சந்தை சொல்லக்கூடாதென்று வைத்துள்ளனர். ஆனால் இந்நாட்களில் பாராயணங்கள் செய்யலாம்.

அனத்யயன காலம் என்று வேறு நிறைய விசேஷமாகவும் இருக்கின்றது.

வேத அனத்யயன காலத்தில் நிறைய கணக்குண்டு. அதாவது எத்தனை நாழிகை அஷ்டமி இருந்தாலோ, பௌர்ணமி இருந்தாலோ அது எப்படி என்பதாக. நேரமிருப்பின் பின் நாட்களில் விஸ்தாரமாக பார்க்கலாம்.


ஸந்த்யாவந்தனத்தில் துரீய அர்க்யம் எந்தக் காலத்தில் ஸம்பவிக்கும்? – அந்தந்த ஸந்த்யாவந்தன காலத்திற்கு முன்பு ஸந்த்யாவந்தனம் செய்வதாக இருந்தாலா (அ) பின்பு செய்வதாக இருந்தாலா? முன்போ (அ) பின்போ, இவ்வளவு மணி நேரத்திற்குள் ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டும் என்ற கணக்குள்ளதா? உதாஹரணமாக காலை ஸந்த்யாவந்தனத்தை விடியற்காலை 4 மணிக்கோ அல்லது 11 மணிக்கோ பண்ணலாமா?.

Vidwan’s reply:
ஸந்த்யாவந்தனத்தில் சூர்யோதயம் முன்னர் மூன்று அர்க்யம் ஸமர்பிக்க வேண்டும். சூர்யோதயமாகி விட்டால் காலம் கடந்ததென்று அர்த்தம், அப்போது ப்ராயச்சித்தமாக நான்காவது அர்க்யம் விட வேண்டும். அது தான் துரீய அர்க்யம் என்று பெயர்.

சூர்யோதயத்திற்கு முன் ஸந்த்யாவந்தனம் செய்வதாயிருந்தால் துரீய அர்க்யம் ஸமர்பிக்க வேண்டியதில்லை.

அதே போல் சூர்யஅஸ்தமனத்திற்கு முன்னர் அர்க்யம் ஸமர்பித்தால் துரீய அர்க்யம் ஸமர்பிக்கவேண்டியதில்லை.

சூர்யோதயமும் அஸ்தமனமும் நாளுக்கு நாள் மற்றும் வெய்யில்காலம், மழைக்காலம் என்று காலத்திற்கேற்றார் போலும் மாறிக்கொண்டே இருப்பதால் இவ்வளவு மணி நேரம் என்று சரியாகச் சொல்லமுடியாது.

ஆகையால் பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு சூர்யோதயம் அஸ்தமனம் எப்போது என்று பார்த்து அதற்கு முன்னர் ஸந்த்யாவந்தனம் செய்து அர்க்யம் விட்டால் துரீய அர்க்யம் ஸமர்பிக்க வேண்டியதில்லை.

அதிகாலை 4 மணிக்கு ஸந்த்யாவந்தனம் பண்ண முடியாது ஏனென்றால் ஸந்த்யாவந்தனத்தை சூர்யோதயத்திற்கு முன் ஆரம்பித்து சூர்யோதமான பின்னர் தான் உபஸ்தானம் முடிக்கவேண்டும் என்றுள்ளது. சூர்யோதயமாகும் முன்னர் அர்க்யம் விடணும் ஆன பின்னர் உபஸ்தானம் பண்ணவேண்டும் என்றுள்ளது.

காலை 4 மணிக்குப் பண்ணால் அது அகாலே க்ரியமாணம் அதற்கு மதிப்புகிடையாது. அதனால் மீண்டும் ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டும்.

வேறு வழியில்லாமல் கார்யாந்தரமாக அல்லது வெளியில் பயணம் போய்விட்டு வர நாழியாகிறது என்றால் 11 மணிக்கு துரீய அர்க்யம் ஸமர்பித்துச் செய்ய வேண்டும்.


த்வாதசி திருவாராதனம் முடிந்து பாரணை செய்த பின் மாத்யாஹ்நிகம் செய்யலாமா?

Vidwan’s reply:
த்வாதசி திருவாராதனம் முடிந்து பாரணை செய்தபின் மாத்யாஹ்நிகம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

பாரணைக்கு முன்னர் மாத்யாஹ்நிகம் பண்ணிவிட்டு தான் திருவாராதனம் செய்யப்போகிறோம். ஸந்த்யாவந்தனம், ப்ரம்மயக்ஞம், மாத்யாஹ்நிகம் பண்ணிவிட்ட பின் திருவாராதனம் செய்து பின்னர் பாரணை செய்வதால் மறுபடியும் மாத்யாஹ்நிகம் செய்யவேண்டிய அவசியமில்லை.

அல்ப த்வாதசியில் சிறு வித்யாசம் உண்டு அதைப்பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம்.


மஹாளய பக்ஷத்தில், ஒரு வேளை மட்டும் சாதம் சாப்பிடவேண்டும் என்கிற நியமம் மஹாளய பக்ஷ ஆரம்ப தினத்திலிருந்து மஹாளய பக்ஷ தர்ப்பணம் தினம் வரையிலா அல்லது பக்ஷம் முழுவதுமா?

Vidwan’s reply:
மஹாளய பக்ஷத்தில் 15 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள், 15 நாட்களும் இரவில் பலகாரம் செய்யவேண்டும்.

அப்படியில்லை ஒரு நாள் தான் தர்ப்பணம் செய்வதென்றால் அதற்கு சக்ருண் மஹாளயம் என்று பெயர், நம்மில் பலர் அதைத்தான் செய்கின்றனர். அப்படி ஒருநாள் தர்ப்பணம் செய்பவர்கள் 15 நாட்களும் பலகாரங்கள் பண்ணவேண்டிய அவசியமில்லை என்பதாக மேல்பாக்கம் ஸ்வாமி சாதித்திருக்கிறார். அதற்கு ஒரு நாள் முன்னர் கூட பலகாரம் என்று அவசியமில்லை எனவும் சாதித்துள்ளார்.

சில பெரியவர்கள் 15 நாட்கள் தர்ப்பணம் பண்ணவில்லையென்றாலும் 15 நாட்களும் பலகாரம் என்று வைத்துள்ளனர். அவரவர் ஆத்து வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

மஹான்களின் அபிப்ராயப்படி 15 தர்ப்பணம் பண்ணாவிட்டால் 15 பலகாரம் தேவையில்லை என்றுத் தெரிகிறது.

தர்ப்பண தினத்தன்று எப்படியும் பலகாரம், அதற்கு முதல் நாள் தேவையில்லை என்று இருக்கிறது.


யஜ்ஞோபவீதம் செய்யும் முறை, ப்ரதிஷ்டை பண்ண, செய்ய வேண்டிய அநுஷ்டானங்களைத் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
முக்கியமாக பார்த்தால் நாமே பூணூல் நூற்க வேண்டும். நூற்கும் பொழுது அவர்களும் சுத்தமாக இருந்து, பூணூலையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். ப்ரதிஷ்டை பண்ணும்பொழுது அதற்கான ப்ரதிஷ்டா விதி என்று க்ரந்தங்களில் இருக்கின்றது. இல்லையென்றால் பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

முக்கியமாக மந்திரங்களைச் சொல்லி தேவதைகளை ப்ரதிஷ்டை செய்து,பெருமாளை ப்ரதிஷ்டை செய்து, ஆவாஹனம் செய்து, காயத்ரி மந்திரத்தைச் சொல்லி ப்ரதிஷ்டை பண்ண வேண்டும்.


மந்த்ரஸாலகட்ட ஶ்ராத்த ப்ரயோகம் என்றால் என்ன என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
மந்த்ரஸாலகட்டம் ஸ்வாமி என்று ஒருவர் இருந்தார்.அந்த ஸ்வாமி தர்ம ஶாஸ்த்ரங்களிலே சில தனிப்பட்ட விசேஷமான அபிப்ராயங்கள் வைத்து நிர்ணயம் பண்ணி இருக்கின்றார். அதற்கே மந்த்ரஸாலகட்ட ஸம்ப்ரதாயம் என்று பெயர். அந்த ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் சில பேர் இப்பவும் இருக்கின்றனர். அவர்கள் அதற்கேற்ற மாதிரியான ஸம்ஸ்காரங்கள், ஶ்ராத்தங்கள் இவையெல்லாம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அதைப் பண்ணுவதாக இருந்தால் அதைப் பற்றி விஸ்தாரமாக தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அப்படி ஒரு ஸம்ப்ரதாயம் இருக்கின்றது என்று தெரிந்து வைத்துக்கொண்டால் போதும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top