அடியேன் விசிஷ்டாத்வைதத்தை உதாரணங்களுடன் மிக எளிமையாக விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
விசிஷ்டம் என்றால் கூடியது, சேர்ந்தது என்று அர்த்தம். அத்வைதம் என்றால் ஒன்று என்று அர்த்தம்.
சகல ப்ரபஞ்சத்தோடும் சகல ஜீவர்களோடும் கூடிய பரமாத்மா நாராயணன் ஒருவனே என்பதே விசிஷ்டாத்வைதத்தின் பொருள்.
பெருமாள் தனியாகவும், ப்ரபஞ்சம் தனியாகவும் இருக்கின்றது என்று அர்த்தம் கிடையாது.
எல்லாப்பொருட்களிலும், எல்லா ஜீவன்களிலும் பெருமாள் இருக்கின்றார். பெருமாள் விசிஷ்டமாக இருக்கின்றார். பெருமாளைத் தனித்து எந்த வஸ்துவும் இருக்கவே முடியாது. அப்படி விசிஷ்டமாக சேர்த்துவைத்து பார்த்தோமேயானால் எல்லாவற்றோடும் சேர்ந்திருக்கக்கூடிய பரமாத்மா ஒருவனே.
லௌகீக உதாஹரணத்திற்கு ஒரு மரத்தை எடுத்துக்கொண்டால் மரத்தில் இலை, பூ, காய், பழம் இருக்கும் . இதைத்தவிர மரத்தின் குணங்களான வாசனை, ரஸம் , பல த்ரவ்யங்கள், எல்லாம் கலந்திருக்கும். இவை அனைத்தையும் சேர்த்தே ஒரு மரம் என்கின்றோம். அதேபோல் சகல சேதனாசேதன ப்ரபஞ்சங்கள் எல்லாவற்றுடனும் சேர்ந்த பரமாத்மா ஸ்ரீமன் நாராயணன் ஒருவன் என்பது தான் விசிஷ்ட அத்வைதம் .
இதைப்பற்றி விஸ்தாரமாக காலக்ஷேபங்களில் கேட்கலாம் அல்லது க்ரந்தங்களில் பார்க்கலாம்.
அடியேனுக்கு சமீபத்தில் ஸமாஶ்ரயணம் கிடைத்தது. அதற்கு முன்னர் நான் தென்கலை ஸம்ப்ரதாய தனியன்களையும், உபதேச ரத்தினமாலை போன்ற க்ரந்தங்களையும் புத்தகம் மற்றும் ஒலி மூலம் கேட்டு சேவித்து வந்தேன்.
1. தற்சமயம் வடகலை ஸம்ப்ரதாய ஸமாஶ்ரயணம் கிடைத்த பின்னர் உபதேச ரத்தினமாலையைச் சேவிக்கலாமா?
2. அது வழக்கமில்லை என்றால் வடகலை ஸம்ப்ரதாய குருபரம்பரையைப் பின்பற்ற தமிழில் உள்ள க்ரந்தங்களை அடியேனுக்கு தெரிவிக்க வேணுமாய் விண்ணப்பிக்கிறேன்.
Vidwan’s reply:
உபதேச ரத்தினமாலை போன்ற க்ரந்தங்களை புத்தகம் மற்றும் ஒலி மூலம் கேட்டு நன்றாக சேவிக்கலாம் . அதில் ஆசாரியர்களைப்பற்றி இருப்பதினால் அதைச் சேவிப்பதில் ஒன்றும் தோஷம் கிடையாது.
வடகலை ஸம்ப்ரதாய க்ரந்தங்கள் என்று எடுத்துக்கொண்டால் தேஶிக ஸ்தோத்ரங்கள், தேஶிக ப்ரபந்தம் குறிப்பாக ப்ரபந்த ஸாரம், பிள்ளையந்தாதி ,தேஶிக மங்களம் போன்றவற்றைச் சேவிக்கலாம்.
www.sadagopan.org இன் e- புத்தகங்களில் ஒன்றான ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தின் உத்திர ஶதகத்தில் உள்ள ஸ்லோகம் 56க்கான தமிழ் மற்றும் ஆங்கில வியாக்கியானம் / விளக்கம குழப்பமாக உள்ளது. கீழ் வரும் ஸ்லோகத்தின் இரண்டாம் பாதியில்
देवीहस्ताम्भुजेभ्यश्चरअणकिसलये समवहद्भयोऽपहृत्य
प्रत्यस्यानन्तभोगं झटिति जलपुटे चक्षुषी विस्तृणानः।
“अक्षिप्योरश्च लक्षम्याः स्तनकलशकनत्कुङ्कुमस्तोमपङ्कात्
देवः श्रीरङ्गधामा गजपतिघुषिते व्याकुलः स्तात् पुरो नः”॥
அதில் “மஹாலக்ஷ்மியின் அழகான திருமார்பில் பூசப்பட்டிருக்கும் குங்குமக் குழம்பிலிருந்து அவர் தனது திருமார்பை விடுவித்துக் கொண்டார்” என்று விளக்கம் இருக்கின்றது. தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
“மஹாலக்ஷ்மியின் அழகான திருமார்பில் பூசப்பட்டிருக்கும் குங்குமக் குழம்பிலிருந்து அவர் தனது திருமார்பை விடுவித்துக் கொண்டார்” என்பதிற்கான தாத்பர்யம் என்னவென்றால் ப்ராட்டியுடன் பெருமாள் ஏகாந்தத்தில் இருக்கும்பொழுதுகூட கஜேந்திரன் ஆதிமூலமே என்று கூக்குரல் இட்டவுடன் எல்லாவற்றையும் மறந்து பக்தர்களை ரக்ஷிப்பதே ப்ரதானமாக கொண்டு, மற்றது எதுவானாலும் அது அப்ரதானம் என்பதை காண்பிப்பதற்கு ரஸமாகச் சொல்லப்பட்ட வார்த்தையாகும்.
ப்ராட்டியுடன் பெருமாள் ஆலிங்கனத்தில் இருக்கும்பொழுதுகூட அதை பட்டென்று உதறிதள்ளிவிட்டு கஜேந்திரனை ரக்ஷிப்பதற்காக உடனே போனார் என்பதாக, அதாவது ரஸமான வார்த்தை என்கின்ற ரீதியில் அந்த அர்த்தத்தை எடுத்துகொள்ள வேண்டும்.
தென்னாசார்ய உபந்யாஸகர் ஒருவர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ‘சுக்லாம் பரதரம்’ என்பதை மேற்கோள் காட்டி விஷ்வக்சேனரும் கணபதியும் ஒருவரே என்று கூறினார். இது சரியா?
Vidwan’s reply:
சுக்லாம் பரதரம் என்பது கணபதியைப்பற்றி என்று ஸ்மார்த்தர்கள் சொல்கின்றனர். விஷ்வக்ஸேனருடைய பரிவாரத்தில் ஒருவர் கஜ முகத்துடன் இருக்கின்றார். கஜானன் என்றே அவருக்கு பெயர். அதனால் அவரை சொல்கிறது என்று சில பேர் சொல்வார்கள்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்பதினால் சாக்ஷாத் எம்பெருமான் விஷ்ணுவைப் பற்றியே சொல்கின்றது என்று நாம் அனைத்து கர்மத்திலும், அனுஷ்டானத்திலும் இதைச் சொல்லி ஆரம்பிக்கின்றோம்.
ஸ்வாமி ஸாதித்த திருக்குருகைப் பிரான் உபன்யாசத்தில் அவர் ஸ்ரீமந் நாதமுனிகள் வம்சம் என்று அறிந்தேன். எனில் இராமானுஜரும் ஸ்ரீமந்நாதமுனிகளின் உறவினரா? பிறகு ஏன் ஆளவந்தார் வரதன் ஆலயத்தில் இராமனுஜரைப் பற்றி திருக்கச்சி நம்பிகளிடம் கேட்டு அறிந்தார்? தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன் ஸ்வாமி.
Vidwan’s reply:
பகவத் இராமானுஜர் ஆளவந்தாருடைய தௌஹித்ரன் ஆகவேண்டும். அதாவது பெண் வயிற்று பிள்ளையாக இருக்க வேண்டும். முதலாவதாக ஆளவந்தார் ஒரு ஸந்யாசியாதலால் அவருக்கு அவருடைய வம்சத்தைப் பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம். இரண்டாவதாக முற்காலத்தில் பெண் வயிற்றுச் சந்ததிகளுக்கு இப்பொழுது நமக்கு இருப்பது போல் நெருக்கமோ, பழக்கமோ,பரிச்சயமோ இருப்பது கொஞ்சம் கடினமான விஷயம்.நமக்கு இப்பொழுது எல்லா வசதிகளும் உண்டு. பெண்ணைத்திருமணம் செய்துகொடுத்த பின் அவர்களை போய் பார்க்கலாம், அவர்களுடன் தொலைபேசியில் உரையாடலாம். மேலும் பகவத் இராமானுஜர் குருகுலத்தில் இருந்து கொண்டு வித்யாப்யாஸம் பண்ணிக்கொண்டு இருந்தார். இது போல் பல காரணங்கள் இருந்ததாக பெரியோர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
துளசி , விஷ்ணுவுக்கு சாபம் அளித்ததால் சாளக்கிராமமாக அவர் ஆனதாகவும், ஜலந்திரன் எனும் அசுரன் மனைவியாக துளசி இருந்தாகவும் கூறப்படும் விஷயங்கள், புராணத்தில் உள்ளதா? இதில் விஷ்ணுவின் பெருமைக்குக் குறை போல் இருக்கின்றது தெளிவிக்க வேண்டுகிறேன்.
Vidwan’s reply:
புராணத்தில் பலவித புராணங்கள் உண்டு. அந்தப் புராணங்களில் இருக்கும் கதைகள் எல்லாம் அப்படியே முழுவதும் சத்தியமாக இருக்க வேண்டும் என்பது கிடையாது. சில வேறுவிதமாக இருந்தாலும், பெருமாளுடைய ஒரு அபிநயம் என்பதாகவும் உண்டு. கிருஷ்ணாவதாரத்தில், சிவனுடைய அனுக்ரஹத்தால் தான் கிருஷ்ணனுக்குக் குழந்தை பிறந்தது என்று இருக்கின்றது. இவையெல்லாம் பெருமாளுடைய அபிநயம் என்று பூர்வாசார்யர்கள் வ்யாக்யானம் பண்ணி இருக்கிறார்கள். அதேபோல் பெருமாள் சிவனுக்குப் பயந்து யக்ஞத்திலிருந்து ஓடினார் என்று இருக்கின்றது. அதுவும் ஒரு அபிநயமே. பெருமாள் அவதாரம் பண்ணும் பொழுது தன் பெருமைகளைச் சுருக்கிக்கொண்டு சில அபிநயங்கள் செய்வதுண்டு. அந்த ரீதியில் பெருமாளுடைய பெருமைக்குக் குறைவு இல்லாமல் நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.