வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் பஞ்ச ஸம்ஸ்காரமும் பரந்யாஸமும் பண்ணிக் கொள்ளலாமா அல்லது தடையேதும் இருக்கிறதா? அவர்கள் பரந்யாஸம் பண்ணின பிறகு அங்கேயே வாழலாமா?
Vidwan’s reply:
பர ஸமர்ப்பணம் செய்து கொள்வதற்கு அனைவருக்கும் அதிகாரம் உண்டு.
“அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகும்” என்பது ஸ்வாமியின் திருவாக்கு. பஞ்ச ஸம்ஸ்காரம் எல்லாரும் பண்ணிக்கொள்ளலாம். ஸ்ரீவைஷ்ணவர்களாக ஆகலாம்.
ஆனால், பஞ்ச ஸம்ஸ்காரம், பரந்யாஸமெல்லாம் செய்து கொண்ட பின்பு, கர்மாநுஷ்டானங்களை நித்யமும் விடாமல் பண்ண வேண்டும். அந்த கர்மாநுஷ்டானங்களைச் செய்வதற்கு கர்ம பூமியான பாரதமே சிறந்த இடம்.
ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவம் என்ன, அதை எப்படி முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பதை விளக்க ப்ரார்த்திக்கிறேன் ?
Vidwan’s reply:
ஏகாதசி என்பது ஒரு நித்ய வ்ரதம், அதனாலேயே அது முக்கியத்வம் பெறுகிறது. ஆபால விருத்தர்கள் எல்லாக் காலங்களிலும் அனுஷ்டிக்க வேண்டியது. அஶௌச காலங்களில் கூட ஏகாதசி விரதத்தை விடும் வழக்கம் இல்லை. ஸ்த்ரீகள், ரஜஸ்வலா காலத்திலும் ஏகாதசி விரதத்தை அவசியம் அனுஷ்டிக்க வேண்டும்.
புருஷர்கள் நிர்ஜலமாக இருப்பது விசேஷம். அதற்குச் சக்தி இல்லை என்றால் தீர்த்தத்தை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அதுவும் முடியாதவர்கள் வெறும் பால் பழங்கள் மட்டுமோ, அல்லது ஒரு வேளை பலகாரம் செய்தோ அனுஷ்டிக்கலாம். இவை எதையும் மேற்கொள்ள முடியாதவர்கள் அன்று அவசியம் அரிசி சாதம் சாப்பிடாமல் அனுஷ்டிக்கலாம்.
சுமங்கலிகள் நிர்ஜலமான உபவாஸம் இருக்கும் வழக்கம் இல்லை. அவர்களுக்கு பர்தர் கைங்கர்யம் முக்கியம். மறுநாள் பர்தாவினுடைய துவாதசி பாரணைக்கான காரியங்களை இவர்கள் செய்ய வேண்டும். அதனால் அதற்கு ஒத்துழைத்தாலே போதுமானது.
ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி, ஸர்வ ஏகாதசி, ஸ்மார்த்த ஏகாதசி இவை மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் எனென்ன ?
Vidwan’s reply:
ஏகாதசி விரதம் ஸ்ரீவைஷ்ணவ, ஸ்மார்த்த மற்றும் மத்வ என மூவருக்கும் வித்தியாசப்படும்.
முதல் நாள் தசமி 56 நாழிகைக்கு மேல் இருந்தால் மறுநாள் ஏகாதசி வித்தம், தோஷம் உள்ளது என்பதாகும். அப்படி 56 நாழிகைக்கு மேல் தசமி சம்பந்தப்பட்டிருந்தால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அன்று ஏகாதசி வ்ரதம் இருக்கும் வழக்கமில்லை. அதற்கு மறுநாள் தான் ஏகாதசி இருக்க வேண்டும்.
உதாஹரணம் : திங்கட்கிழமை அன்று 56 நாழிகைக்கு மேல் தசமி இருந்ததானால் செவ்வாய்க்கிழமை ஏகாதசி கிடையாது அதற்கு மறுநாளே ஏகாதசி. அதாவது செவ்வாய்க்கிழமை வருகின்ற ஏகாதசி திதிக்கு ப்ரம்ம முகூர்த்தத்தில் தசமி சம்பந்தப்பட்டிருப்பதால் அன்று ஏகாதசி கிடையாது.
ஸ்மார்த்தர்கள் துவாதசியை ப்ரதானமாக வைத்துக்கொண்டு அதற்கு முதல் நாள் ஏகாதசி என்று வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது பஞ்சாங்கத்தைப் பார்த்தால் தெரிகின்றது.
பஞ்சாங்கத்தில் முதல்நாள் ஸ்மார்த்த ஏகாதசி என்றும் மறுநாள் ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி என்றும் இருக்கும்.
54 நாழிகைக்கு மேலேயே தசமி சம்பந்தப்பட்டால் அதுவே தோஷம் என்பது மத்வ சம்ப்ரதாயம்.
எப்பொழுதாவது 54 நாழிகைக்கு மேல் 56 நாழிகைக்குள் தசமி சம்பந்தப்பட்டால் அப்பொழுது ஸ்ரீ வைஷ்ணவர்கள் மற்றும் ஸ்மார்த்தர்களுக்கு முதல் நாள் ஏகாதசி என்றும், மத்வர்களுக்கு மறுநாள் ஏகாதசி என்றும் பஞ்சாங்கத்தில் இருக்கும்.
ஏகாதசி அன்று நாம் ஏன் துளசியை(திருத்துழாய்) ஸ்வீகரிக்க கூடாது ?
Vidwan’s reply:
திருத்துழாய் என்பது பகவானுடைய பிரசாதம் ஆகின்றபடியினாலே ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் திருத்துழாயையும் ஸ்வீகரிப்பது வழக்கத்தில் இல்லை.
ஆனி மாசம் ஸுதர்சனத்தில் பித்ரு தோஷம், நாக தோஷம், எல்லாவற்றிற்க்கும் பரிகார ஶ்லோகம் இருக்கின்றது என்ற குறிப்பு இருந்தது. அதே போல் அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தின் மீது வெறுப்பும் பொறாமையும் மச்சினருக்கு இருந்தால் அதைப் போக்க ஏதாவது தேசிக ஶ்லோகம் உண்டா ? அவர்களின் பொறாமை குழந்தைகளைப் பாதிக்காது என்று நம்புகிறேன்.
மேலும், தலைமுறை தலைமுறையாக எங்கள் குடும்பத்தில் ஒருவராது நாக தோஷத்தினால் பாதிக்கப்படுகின்றார்கள். அந்த பக்ஷத்தில் அது நம் குழந்தைகளைப் பாதிக்காது இருக்க கருடபஞ்சாஶத் அல்லது கருடதண்டகம் நாம் சொல்லலாமா அல்லது குழந்தைகள் தான் அவற்றைச் சொல்ல வேண்டுமா?
Vidwan’s reply:
நாக தோஷம் இருந்தால், குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்களும் அவசியம் கருடபஞ்சாஶத் அல்லது கருடதண்டகம் சொல்லலாம். எந்தவிதமான சர்ப்ப தோஷம் இருந்தாலும் கருடபஞ்சமி அன்று கருடதண்டகம் சொன்னால் தோஷம் நீங்கிவிடும். ப்ரபந்நர்களுக்கு எந்த தேவதையிடமிருந்தும் எவ்வித ஆபத்தும் வரும் என்கின்ற பயம் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. எம்பெருமான் கட்டாயம் காப்பாற்றுவார். எம்பெருமானுடைய அடியார் ஆன கருடனுடைய ஸ்தோத்திரங்களைச் சொன்னால் எப்பேர்பட்ட நாகதோஷமும் நீங்கும்.
அதுமட்டுமல்லாமல் போட்டி, பொறாமை போன்றவைகள் நீங்குவதற்கும் கருடபஞ்சாஶத்தே உபயுக்தமாக இருக்கும்.
ஏனென்றால் கருடபஞ்சாஶத்தினுடைய பலஶ்ருதியில் வ்யாதி4தை3வ ஆதி4பீடா3 என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஆதி என்பது மனோவ்யாதி. மனோவ்யாதி தான் இந்த மாதிரி பொறாமை போட்டி போன்ற எண்ணங்களாகும். அதனால் அவை எல்லாம் நீங்குவதற்கும் கருடபஞ்சாஶத்தை சேவிப்பதே உசிதம்.
அடியேனுக்கு சம்ஸ்காரங்கள் எதுவும் தெரியாது, தயவுசெய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
சம்ஸ்காரங்கள் பற்றிய ஒரு வகுப்பு Sampradaya Manjari ePatashala வில் நடந்தது. அதில் விளக்கமாக எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. கீழே உள்ள linkஐ click செய்து அறியவும்.
வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் ஸமாஶ்ரயணமும், பரந்யாஸமும் பண்ணிக் கொள்ளலாமா?ஆன பின் அந்தத் தேசத்தில் தொடர்ந்து வாழும் சூழல் வந்தால் அங்கேயே வாழலாமா இல்லை இந்தியாவிற்கு மீண்டும் வர வேண்டும் என்ற கட்டாயம் இருக்கின்றதா?
Vidwan’s reply:
வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் ஸமாஶ்ரயணமும், பரந்யாஸமும் அவசியம் பண்ணிக்கொள்ளலாம். எங்கு இருந்தாலும் பரந்யாஸம் பண்ணிக்கொண்டால் காப்பாற்றப்பட்டு விடுவோம், அதனால் கட்டாயம் பண்ணிக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் அங்கு வாழ்வது உத்தமகல்பம் என்று சொல்ல முடியாது. ஆனால் அங்குதான் நமக்கு வாழ்வு ஏற்பட்டிருக்கிறது என்றால் அங்கு தொடர்ந்து ஆழ்வார்கள், ஆசார்யர்கள் சொல்லிக் கொடுத்தபடி, எம்பெருமானார் காண்பித்துக் கொடுத்த வழிகளின்படி முடிந்த அளவிற்கு அனுஷ்டானங்களைக் கடைபிடித்து வாழ வேண்டும். எங்கிருந்தாலும் எல்லாரும் பரந்யாஸம் கட்டாயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.