சுபகிருது – தை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்


ஸ்ரீநிவாஸ கத்யம் மற்றும் பத்மாவதி கத்யம் ஆகிய இரண்டும் வேதங்களின் பகுதியா? அவற்றை ஸ்த்ரீகள் சேவிக்கலாமா?

Vidwan’s reply:

ஸ்ரீநிவாஸ கத்யம் மற்றும் பத்மாவதி கத்யம் ஆகிய இரண்டையுமே ஸ்த்ரீகள் சேவிக்கலாம்.


தென்னாச்சாயர் ஸம்ப்ரதாயத்தில் “ஸ்ரீ ஶைலேச தயா பாத்ரம்” என்ற தனியன் நம்பெருமாளால் மாமுனிக்குக் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். இது உண்மை என்றால், நாம் தேஶிகன் மற்றும் மாமுனி ஆகிய இருவரின் தனியன்களையும் தினமும் சேவிக்கலாமா?

Vidwan’s reply:

தென்கலை வடகலை ஸம்ப்ரதாயத்தில் எத்தனையோ அபிப்ராய பேதங்கள் உண்டு. ஆசார அனுஷ்டான பேதங்கள், சித்தாந்த பேதங்கள் என்றெல்லாம் உண்டு, ஆகையாலே அவரவர் அவரவருடைய ஆசார்ய தனியனைச் சொன்னாலே போதும். சில கால விசேஷத்தில் மற்றொரு தனியனைச் சொன்னால் தவறொன்றுமில்லை.

குறிப்புகள்:

எந்த ஒரு தனியனுக்கும் அந்தத் தனியனின் சொல்லப்படுகின்ற ஆசார்யனால் தான் ஏற்றம். யார் அந்தத் தனியனை எழுதினார், சொன்னார் என்பதில் ஏற்றம் இல்லை. அதனால் அவரவர்களுடய ஆசார்யன் தனியனைச் சேவிப்பதுதான் உத்தமமான கார்யம். நாம் தேஶிக ஸம்ப்ரதாயஸ்தர்கள், அதனால் தேஶிகன் தனியனைச் சேவித்தால் மட்டும் போதும்.


தேசிகன் தனியனை, தேசிகனின் ஸ்தோத்ரம் சேவிக்கும்போது மட்டும் சேவிக்கணுமா? மற்ற ஶ்லோகத்திற்கும் சேவிக்கலமா?

Vidwan’s reply:

ஸ்வாமி தேஶிகனுடைய ஸ்தோத்ரங்களை அனுசந்தானம் பண்ணும்பொழுது அவசியம் ஸ்வாமி தேஶிகனுடைய‌ தனியனைச் சேவிக்க வேண்டும். இதர ஆசார்யர்களுடைய ஸ்தோத்திரங்களை அனுசந்திக்கும் பொழுது முதலில் ஸ்வாமி தேஶிகனுடைய தனியனைச் சேவித்துவிட்டு பின் அந்த ஆசார்யருடைய தனியனை சேவித்துவிட்டு அந்த ஸ்தோத்ரத்தைச் சேவிக்கலாம். அதில் தவறொன்றும் இல்லை. ஏனென்றால் ஸம்ப்ரதாயத்தை ஸ்தோத்திரங்கள் மூலமாக நமக்கு கொடுத்ததில் ஸ்வாமி தேஶிகனின் பங்கு மிகவும் அதிகம்.


இராமானுஜ குலத்தைச் சேர்ந்தவர்கள் தேஶிகன் ஸ்தோத்ரங்கள்,பாதுகா ஸஹஸ்ரம் மற்றும் தேஶிக ப்ரபந்தங்களைச் சேவிக்கலாமா?

Vidwan’s reply:

இராமானுஜர் குலம் என்று குறிப்பிடப்படுவது வைஷ்ணவர்கள் என்று தோன்றுகிறது. எல்லா வைஷ்ணவர்களுக்கும் தேஶிகன் ஸ்தோத்ரங்கள், பாதுகா ஸஹஸ்ரம், தேஶிக ப்ரபந்தம் இவைகளை சொல்லலாம். தவறொன்றும் இல்லை.


ஸ்ரீரங்கநாதனே மாமுனிகளை தம் ஆசார்யனாக ஏற்றுக்கொண்டான் என்று கூறுகிறார்கள். அப்படியென்றால் நாம் ஏன் மாமுனியின் திருநக்ஷத்ர தினத்தைக் கொண்டாடுவதில்லை? அடியேன் வடகலை ஐயங்கார், பல வித்வான்களிடம் கேட்டு சரியான பதில் கிடைக்காததாலும்,

மேலும் ஏன் இந்த ஸம்ப்ரதாய பேதங்கள் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டியும் இங்கே கேட்டிருக்கிறேன்.

Vidwan’s reply:

மணவாளமாமுனிகளும் ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்யர் என்கின்ற ரீதியில் அவருடைய திருநக்ஷத்ரத்தைக் கொண்டாடுவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அவரவருடைய ஸம்ப்ரதாயத்தில் அவரவர்களுடைய ஆசார்யன் திருநட்சத்திரத்தை அவசியம் கொண்டாடவேண்டும். அதைச் செய்தாலே போதுமானது.

பெருமாளுக்கு ஆசார்யன் என்று ஒருவர் உண்டா?

பீதகவாடை பிரானால் பிரமகுருவாயிருந்து (பிரமகுரு என்றால் ப்ரதம குரு என்று அர்த்தம்). பெருமாள் தான் ப்ரதமாசார்யார். அதனால் பெருமாளுக்கு ஆசார்யார் ஒருவர் உண்டா என்பதையும் யோசிக்க வேண்டும்.

பெருமாளுக்கு ஆசார்யன் என்று சொல்வது ஒரு உபசார வார்த்தையே ஆகும். நம் குருபரம்பரையில் பெருமாள்தான் முதல் ஆசார்யன். பெருமாளைப் பற்ரி ஆசார்யன் சொல்லும்போது ஸ்வாமி தேஶிகன் “இவர் ஒருவனே ஆசார்யன் இல்லாத ப்ரதமாசார்யன்” என்பதாக ஸாதித்திருக்கிறார். மேலும் ஞானமில்லாத சிஷ்யனுக்கு ஞானத்தைக் கொடுப்பவர்தான் ஆசார்யன். பெருமாளோ ஸர்வக்ஞன், அவன் ஞானமில்லாத சிஷ்யனும் இல்லை அப்படியிருக்கும்போது ஆசார்யன் என்று ஏன் சொல்கிறார்கள் என்றால், பெருமாள் தன் அவதாரங்களில் அபிநயம் செய்வதுண்டு. அதாவது ஸ்ரீராமாவதாரம், ஸ்ரீக்ருஷ்ணாவதாரங்களில் சிஷ்யனாக அபிநயம் செய்வதுபோல்தான் இதுவும். அதை வைத்துக்கொண்டு ஆசார்யன் என்று சொல்லுவதெல்லாம் ஒரு உபசார வழக்கே. மேலும் பெருமாளே இறங்கிவந்து இவர் எனக்கு ஆசார்யன் என்றெல்லாம் சொல்லவில்லை.. நாம் மட்டும் அல்ல ஸம்ப்ரதாயத்தில் எல்லோருமே இது ஒரு உபசார வழக்கு என்றுதான் சொல்லுகிறார்கள்.

இதை வைத்துக்கொண்டுப் பார்த்தால் பெரியபெருமாள் ஸ்வாமி தேஶிகனைத்தான் “ஸ்ரீவேதாந்த ஆசார்யன்” என்று சாதித்தார். ஆகையால் ஸம்ப்ரதாய பேதமில்லாமல் எல்லா மனிதர்களுக்குமே, வேதாந்தத்திற்கு ஆசார்யன் ஸ்வாமி தேஶிகன் என்பது ஸ்ரீரங்கநாதனுடைய திருவுள்ளமாகும்.

வ்யாக்யானங்களில் உள்ள பேதங்களினாலே ஸம்ப்ரதாய பேதங்கள் வருகின்றன. ஒவ்வொரு ஆசார்யரும் ஒவ்வொரு ரீதியில் வ்யாக்யானிக்கின்றார்கள். அவரவர்களுக்கு அவரவருடைய ஆசார்யன் செய்த வ்யாக்யானமே சரி என்று தோன்றுகிறது. அதனால் சித்தாந்த பேதம் காலக்ரமேன ஸம்ப்ரதாய பேதமாக மாறி இருக்கின்றது.

குறிப்புகள்:

பெருமாளுக்கு ஆசார்யன் என்று சொல்லப்படுவதினால் அவருடைய திருநக்ஷத்ரத்தைக் கொண்டாட வேண்டும் என்று சொல்லுவது சரியா என்று தெரியவில்லை. ஏனென்றால் இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் ப்ரசித்தமான அதாவது இராமாயணத்தில் இராமனுக்கு ஆசார்யனான வசிஷ்டருடைய திருநக்ஷத்ரத்தையோ மகாபாரதத்தில் ப்ரமாணபூர்வமாக அறியப்படுகின்ற கிருஷ்ணனுக்கு ஆசார்யனான சாந்திபினினுடைய திருநக்ஷத்திரத்தையோ நாம் கொண்டாடுவதில்லையே. அதனால் பெருமாளுக்கு ஆசார்யன் என்பதனால் கொண்டாடப்பட வேண்டும் என்றில்லை.


திருவாசிரியம் இயற்பாவில் கடைசி ப்ரபந்தமாகவும் இல்லை,மேலும் சேவாகாலத்தில் கடைசியாக சேவிக்கும் ப்ரபந்தமாகவும் இல்லாதபோது, பெரிய சாற்றுமுறையில் ஏன் சேவிக்கின்றார்கள்?

Vidwan’s reply:

திருவாசிரியத்தை, பெரிய சாற்றுமுறையில் சேவிக்கும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.


இல்லத்தில் நாச்சியார் திருமொழி பாசுரங்களைச் சேவிக்கலாமா?

Vidwan’s reply:

இல்லங்களில் நாச்சியார் திருமொழி பாசுரங்களை நன்றாகச் சேவிக்கலாம் தவறொன்றுமில்லை.


ஹனுமான் திருவடி என்று நம் ஸம்ப்ரதாயத்தில் குறிப்பிடப்படுகிறார். ஏன் அப்பயெரிட்டுக் குறிப்பிடுகிறோம்? ப்ரபன்னர்கள் ஹனுமன் சாலிசா சொல்லலாமா? ஏனென்றால் அதில் “और देवता चित्त ना धरई| हनुमत सेई सर्व सुख करई” என்று வருகிறது. இவ்வரி சற்று முரண்பாடாக இருக்கின்றதால் அடியேன் இதைச் சேவிக்கலாமா என்ற சந்தேகம்.

Vidwan’s reply:

நம் ஸம்ப்ரதாயத்தில் சொல்வதற்குப் பல ஸ்தோத்ரங்கள் இருக்கும்போது மனது சங்கடத்துடன் பிற ஸ்தோத்ரங்கள் சொல்லவேண்டிய அவசியமில்லை.


நம்மாழ்வார் திருவடி தொழல் திருவாய்மொழியின் கடைசி இரண்டு பதிகங்களை அடியொற்றி, எப்படி இரு ஜீவாத்மா எம்பெருமானை அடைகின்றது என்பதைக் காட்டும்படி நடக்கின்றது என்று புரிகிறது. திருமங்கையாழ்வாருக்கும் அவ்வாறு திருவடி தொழல் உத்சவம் நடப்பதின் தாத்பர்யம் என்ன?

Vidwan’s reply:

நம்மாழ்வார் திருவடி தொழல் மாதிரியே திருமங்கையாழ்வார் திருவடி தொழலும் அதே பாவத்தில்தான் செய்யப்படுகிறது. அதாவது ஆழ்வார் பரமபதம் அடைந்த வைபவத்தைக் கொண்டாடும் படியான உற்சவம்தான் திருவடி தொழல் என்கின்ற உற்சவம்.

திருமங்கையாழ்வார் திருவடி தொழல் என்பது பெரும்பாலும் அதாவது சில தெற்கத்திய திவ்ய தேசங்களில்தான் காணக்கிடைக்கின்றது. முக்கியமாக திருக்குடந்தையில் நாம் இதைச் சேவிக்கலாம். திருக்குடந்தையில் அது எப்படி ஏற்படுகிறது என்றால், திருவடி தொழல் நடந்து முடிந்து எம்பெருமானுக்கு ஆழ்வார் திருவாராதனம் பண்ணுவது போல் ஒரு சேவையை, பக்தர்கள் சேவிக்கும்படியாக ஏற்பாடு பண்ணி வைத்திருக்கிறார்கள். இதை எந்த ப்ரபந்தத்திற்குப் பின் சேவிக்கிறார்கள் (பண்ணுகிறார்கள்) என்று பார்த்தால் “மாற்றமுளா பதிகத்தை” சேவித்து பின் ஆழ்வார் திருவடித்தொழல் ஆகி, அதன்பின் திருக்குருந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் சேவிப்பது திருக்குடந்தையில் வழக்கமாக இருக்கின்றது. ஆனால், மற்ற சில கோயில்களில் திருநெடுந்தாண்டகம் முடிந்து அதற்குப் பிறகு ஆழ்வார் திருவடி தொழல் என்கின்ற ரீதியும் இருக்கின்றது. ஏனென்றால் திருநெடுந்தாண்டகத்தினுடைய சாற்றுமுறை பாசுரத்தில் “தன்குடந்தை கிடந்த மாலை நெடியானை அடினாயேன் நினைந்திட்டேனே” என்று முடிவதனால், எம்பெருமானை போய் அடைவது போன்ற ஸப்தங்களாக இருப்பதினால், அந்தத் திருவடி தொழலுக்கு அது ஏற்றதாக இருக்கின்றது என்று தெரிகிறது.

மொத்தத்தில் பாவம் என்பது ஒன்றுதான். நம்மாழ்வார் திருவடி தொழலில் எப்படி நம்மாழ்வார் பரமபதம் அடைந்ததை கொண்டாடுகிறோமோ அதேபோல் திருமங்கையாழ்வார் எம்பெருமானைப் பரமபதத்தில் அடைந்ததைக் கொண்டாடுவதே திருமங்கையாழ்வார் திருவடி தொழல். திருக்குடந்தையில் திருமழிசைப்பிரானுக்கும் திருவடி தொழல் உற்சவம் நடக்கிறது என்பது தெரிகிறது. அதனால் ஆழ்வார்களுடைய திருவடி தொழல் உற்சவங்கள் எல்லாம் பக்தாளுக்கு ஆழ்வார் எம்பெருமானுடன் போய் கலந்ததைக் கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது.


“ஸ்வாமி தேஶிகன் பிரபந்த ஸாரத்தில் “”வையகமொண் பொய்கை பூதம் பேயாழ்வார் ..””….என்ற பாசுரத்தில் 12 ஆழ்வார்களையும் பின்னர் “”ஐய்யன் அருள் கலியன் யதிராசர் தம்மோடு”” என்று கடைசியாக யதிராசர் பெயரைச் சேர்த்துள்ளார்.ஆனால் இராமானுச நூற்றந்தாதி திருவரங்கத்தமுதனார் அவரால் இயற்றப்பட்டது. ஸ்வாமி தேஶிகன் எதனால் அமுதனார் பெயரை விட்டுவிட்டு யதிராசர் பெயரைச் சேர்த்தார்.

Vidwan’s reply:

ஆழ்வார்கள் கோஷ்டியில் முதலில் இராமனுசரைச் சேர்த்தது திருக்குருகைப்பிரான் பிள்ளான்.

பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய-பட்டநாத-

ஸ்ரீபக்திஸார-குலஸேகர-யோகிவாஹாந்

பக்தாங்க்ரிரேணு-பரகால-யதீந்த்ர மிஸ்ராந்

என்பதாக இராமானுசரைச் சேர்த்திருக்கிறார். நம் ஸம்ப்ரதாயம் பிள்ளான் வழி வந்த ஸம்ப்ரதாயம் ஆகையால் தேஶிகனும் ஆழ்வார்கோஷ்டியில் இராமானுசரைச் சேர்த்துள்ளார். இராமானுச நூற்றந்தாதியும் 4000 திவ்ய ப்ரதந்தத்தில் சேரும் என்பது பிள்ளான் வழிவந்த ஸம்ப்ரதாயம். ஆகையால் அதையும் சேர்த்துதான் 4000 கணக்கிடவேண்டும் என்பதும் பிள்ளான் வழிவந்த ஸம்ப்ரதாயமாகும். பிள்ளான் வழியில் வராத ஸம்ப்ரதாயத்தில் அவர்கள் 4000த்தில் இராமானுச நூற்றந்தாதியைச் சேர்ப்பதில்லை, சேர்க்காமல்தான் அவர்கள் 4000 என்ற கணக்குச் சொல்வார்கள். ஆகையால் நம் ஸம்ப்ரதாயத்தின்படி இராமானுச திருநாமத்தை ஆழ்வார்களுடன் சேர்க்கவேண்டும்.

மேலும் ப்ரபந்தஸாரத்தில் இராமானுச நூற்றந்தாதியைப் பற்றி சொல்லும்போது “காசினிமேல் வாதியரை வென்று அரங்கர் கதியாக வாழ்தருளும் எதிராசா!* முன் பூசுரர்கோன் திருவரங்கத்தமுதனார் உன் பொன்னடிமேல் அந்தாதியாகப் போற்றிப் பேசிய*” என்று இங்கு திருவரங்கத்தமுதனார் பற்றி சொல்கிறார். மேலும், பட்டியலிட்டு பூர்த்தியாகப் பாசுரக்கணக்கு சொல்லும்போது அங்கும் அமுதர் திருநாமும் வருகிறது, அர்த்தங்களும் வருகிறது. ப்ரபந்த ஸாரத்தில் தனித்த பாசுரத்திலும், கணக்கிட்ட பாசுரத்திலும் அமுதனார் பற்றி வருகிறது.


கருடதண்டகம் போல் ஹனுமனுக்கு நம் பூர்வாசார்யர்கள் அருளிய ஸ்துதி ஏதேனும் இருக்கின்றதா?

Vidwan’s reply:

கருடதண்டகம் போல் ஹனுமனுக்கு நம் பூர்வாசார்யர்கள் அருளிய ஸ்துதிகள் இருப்பதாகத் தெரியவில்லை.


அஷ்டகா ஶ்ராத்தம் பற்றிய குறிப்பு.

Vidwan’s reply:

வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 13 அன்று மாசி மாசப்பிறப்பும் அஷ்டகா ஶ்ராத்தமும் ஒரே நாளில் செய்யும்படி வருகிறது.

முதலில் மாசப்பிறப்பு ஸங்க்ரமண தர்ப்பணத்தைப் பண்ணிவிட்டு பின் அஷ்டகா ஶ்ராத்ததைப் (அஷ்டகா தர்ப்பணத்தை) பண்ணவேண்டும்.

இவ்விரண்டையும் சேர்த்து ஒரே தர்ப்பணமாக பண்ணலாமா?

பொதுவாக இவ்விரண்டு தர்ப்பணத்தையும் சேர்த்து பண்ணமுடியாது. ஏனென்றால் இவ்விரண்டிற்கும் சிறிய வித்தியாசம் உண்டு.

மாசப்பிறப்பு தர்ப்பணம் என்பது அமாவாஸ்யை தர்ப்பணம் போல் பித்ரு வர்கம், மாத்ரு வர்கம் என இரண்டையும் உத்தேசித்து செய்வதுண்டு.

மாசப்பிறப்பு தர்ப்பணத்தில் நம்முடைய மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹி என இவர்களுக்கும் சேர்த்து தர்ப்பணம் செய்வதாக சங்கல்பம் செய்வது கிடையாது.

ஆனால் அஷ்டகா ஶ்ராத்தத்திலே அல்லது அஷ்டகா தர்ப்பணத்திலே அவர்களுடைய பெயரையும் சொல்லிச் சங்கல்பம் செய்யவேண்டும்.

உதாஹரணமாக, கோத்ரானாம் ஷர்மனாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் என்றும், மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் என்றும் கூறி சங்கல்பத்தில் செய்யவேண்டும். அஷ்டகா ஶ்ராத்தத்தில் இப்படி ஒரு அதிகப்படி உண்டு.

மேலும் அவர்களுக்கென்று தனியாக புக்னம் போட்டு, அதாவது மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிக்குத் தனியாக புக்னம் போட்டு தனியாகத் தர்ப்பணம் செய்பவர்கள் உண்டு. சிலர் பித்ருபிதாமஹ ப்ரபிதாமஹர்க்கு இருக்கும் புக்னத்திலேயே இதையும் சேர்த்துப் பண்ணிவிடுவார்கள். இப்படி அதிலேயே பண்ணுவதானால், அமாவாஸ்யை தர்ப்பணத்திற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் வராது ஆனால் சங்கல்பத்தில் வித்தியாசம் இருக்கிறது. அதாவது அவர்கள் பெயரைச் சொல்லி மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் என்று சேர்த்துச்சொல்லி சங்கல்பம் பண்ணவேண்டும்.

ஆகையால் இந்த அஷ்டகா ஶ்ராத்தத்தைத் தனியாகப் பண்ணவேண்டும்.

சிலர் அஷ்டகா ஶ்ராத்தத்தில் ஒரு வர்கத்திற்கு மட்டும்தான் (அதாவது பித்ரு வர்கத்திற்கு மட்டும்) தர்ப்பணம் பண்ணுகிறார்கள் மற்றொரு வர்கத்திற்குப் பண்ணுவதில்லை. அவர்களும் மாசப்பிறப்பு தர்ப்பணம் மற்றும் அஷ்டகா தர்ப்பணத்தைத் தனித்தனியாகத்தான் பண்ணவேண்டும்.

குறிப்பு:

சிறிதும் வித்தியாசமே இல்லாமல் மாசப்பிறப்பு தர்ப்பணத்தைப் போலவே அஷ்டகா தர்ப்பணத்தைச் செய்கிறார்கள் என்றால் அவர்கள் இரண்டு தர்ப்பணத்தில் ஏதாவது ஒன்றை பண்ணால் போதும். ஆனால் அவ்வாறு செய்பவர்கள் இருப்பதாக அடியேனுக்குத் தெரியவில்லை. ஒருவேளை அப்படிச் செய்வார்களேயானால் ஒரே ஒரு தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும்.


அஷ்டகா, அன்வஷ்டகா தர்ப்பணம் பண்ணும் ஒருவர், அந்த நாட்களில் அதே தர்ப்பணம் பண்ணும் மற்றொருவர் அகத்தில் அமுதுசெய்யலாமா?

Vidwan’s reply:

அஷ்டகா, அன்வஷ்டகா தர்ப்பணம் பண்ணும் ஒருவர் அன்றைய தினத்தில் அதே தர்ப்பணம் பண்ணும் மற்றொருவரின் அகத்தில் அமுதுசெய்யலாம்.


அஷ்டகா, அன்வஷ்டகா எல்லா வேதங்களுக்கும் ஒரே நாளில்தான் வருமா இல்லை சாம வேதக்காரர்களுக்கு ஏதாவது வித்தியாசம் உண்டா?

Vidwan’s reply:

அஷ்டகா, அன்வஷ்டகா எல்லா வேதங்களுக்கும் ஒரே நாள்தான். வேதங்களின் அடிப்படையில் வெவ்வேறு நாள் என்றெல்லாம் இதற்குக் கிடையாது

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top