ப்லவ – ஆடி – ஸ்த்ரீ தர்மம்


ஆத்துப் புருஷர்கள் ஊரில் இல்லாத சமயம் ஸ்த்ரீகள் ஆத்து சாளக்கிராம பெருமாளுக்கத் தளிகை சமர்பிக்கலாமா?

Vidwan’s reply

ஸ்த்ரீகள் ஆத்துப் பெருமாளுக்கு தளிகை சமர்பிக்கலாம், கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்புகள்:

புருஷர்கள் போல் மணி ஸேவித்து தளிகை சமர்பிக்ககூடாது.; ஆனால் பெருமாளுக்குத் தளிகை சமர்ப்பிக்காது க்ரஹிக்கவும் கூடாது

ஆகையால் ஸ்த்ரீகள் ஆத்துப் பெருமாள் ஸந்நிதியில் தளிகை ஸமர்ப்பணம் செய்வித்து, ஸேவித்து விட்டு – பெருமாள் அம்சையாவதாக மனதார நினைக்க வேண்டும். இதுவே அனுஷ்டானத்தில் இருக்கும் வழக்கம்.

ஆத்தில் என்ன தளிகைப் பண்ணுகின்றோமோ அதை, ஆண்டாளின் “கூடாரை வெல்லும் சீர்” பாசுரம் சொல்லி மானசீகமாய் பெருமாளுக்கு அம்சை பண்ணிவிட்டு ஸ்வீகரிக்கலாம்.


ஆஶௌசம் மற்றும் ரஜஸ்வலா காலத்தில் ஸ்த்ரீகள் மானஸீக ஆராதனம் செய்யலாமா? அப்படிச் செய்தல் அபசாரமாகுமா?

Vidwan’s reply

மானஸீக ஆராதனம் என்று ஒரு தனிப்பட்ட அனுஷ்டானம் உள்ளது. அது பெருமாள் திருவாரதனத்திற்கு அங்கமாகிறது அதை ஆஶௌசம் மற்றும் ரஜஸ்வலா காலத்தில் மட்டுமல்ல, ஸ்த்ரீகள் ஒரு பொழுதுமே செய்யக்கூடாது. கற்பனையான மானச ஆராதனம் என்பது தவறில்லை.


பெண்கள் ஸ்ரீ காமாஸிகாஷ்டகம் பாராயணம் செய்யலாமா?

Vidwan’s reply

ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்ரீ காமாஸிகாஷ்டகம் ஸ்தோத்ரம், ஸ்த்ரீகள் நன்றாக படிக்கலாம்.


சுமங்கலிகள், ஏகாதசி வ்ரதம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும்?

Vidwan’s reply

ஏகாதசி வ்ரத அனுஷ்டானம் – சுமங்கலி ஸ்த்ரீகள், பர்தாவினுடைய அனுமதியுடன் பூர்ண உபவாசம் இருக்க முடியுமானால் அவற்றைக் கடைப்பிடிக்கலாம்.

குறிப்புகள்:

பூர்ண உபவாசம் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் ஒரு குறைவுமில்லை, மறுநாள் அவர்களுக்குப் பல காரியங்களும் இருக்கும். ஆகையால் அவர்கள் பலகாரம் பண்ணலாம்.


பெண்களின் ரஜஸ்வலா காலத்தில் அவர்களுக்குப் பதில் வேறொருவர் தளிகை செய்து ஆத்து பெருமாளுக்கு அமுது செய்வர். அந்த காலத்தில் பெருமாள் அமுதுண்ட தளிகையை ஸ்த்ரீகள் க்ரஹிக்கலாமா? இல்லை தனியாக அவர்களுக்கென்று தளிகை செய்ய வேண்டுமா?

Vidwan’s reply

பெண்களுடைய ரஜஸ்வலா காலத்தில் ஆத்துப் பெருமாளுக்கு அம்சை பண்ணிய ப்ரசாதத்தை, பெரியவர்கள் எல்லோரும் உட்கொண்ட பின் அவர்களுக்குக் கொடுக்கலாம் அதில் ஒன்றும் தவறில்லை.

குறிப்புகள்:

அவர்கள் உண்ட ப்ரசாதத்தின் மீதியை மறுபடியும் உள்ளே கொண்டு வந்து பரிஷேசனம் பண்ணவோ அல்லது சாப்பிடவோ, கூடாது. அது சேஷம் எனப்படும்.

முடிந்தவர்கள் அவர்களுக்கென்று தனித் தளிகை செய்வது உசிதம்.


பெண்கள் அடியேன், தாஸன் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியா? சம்பந்தப்பட்ட இடங்களில் பயன்படுத்த வேறு ஏதேனும் சொற்றொடர்கள்

உள்ளனவா? நீண்ட காலமாக, இதை யாரிடம் கேட்பது என்று தடுமாறிக் கொண்டிருந்தேன். எனவே எனது சந்தேகத்தைத் தீர்ப்பதற்கு இந்தத் தளத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். தன்யோஸ்மி

Vidwan’s reply:

நான் என்று சொல்வதைப் போல, அடியேனும் இருபாலருக்கும் பொதுவானதாகும்.

ஆண்பால் பெண்பால் இருவருமே அடியேன் என்று சொல்லுவது உசிதமாக இருக்கும். அடியேன், என்பது தன்னைக் குறிக்கக்கூடிய ஒரு வார்த்தை. மற்றவரைக் குறிப்பிடும்போது அடியாள் அல்லது அடியான் என்று சொல்ல வேண்டும்.

குறிப்புகள்:

தாஸன் என்றச் சொல்லுக்குப் பெண்பால் சொல் தாசியாகும். ஆனால் தற்காலத்தில் வேறொரு அர்த்தத்தை குறிப்பதால் அது உபயோகப் படுத்துவதில்லை.

திருமங்கையாழ்வார் அடிச்சி என்றும் சொல்லியிருக்கிறார். அதுவும் தற்காலத்தில் வழக்கில் இல்லை.

ஸம்ஸ்க்ருதத்தில் தாஸ: என்ற சொல் இருபாலரையும் சேர்த்துக் குறிக்கும், அதனால் வைதீக வ்யவஹாரங்களில் இதைப் பயன்படுத்துவதுண்டு.


ஸ்த்ரீகள் பகவத் கீதை இதிஹாச புராணம் ஸேவிக்கலாமா?

Vidwan’s reply:

ஸ்திரீகள் இதிஹாச புராணங்கள் ஸேவிப்பது உசிதம் இல்லை என்று சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பிறர் ஸேவிப்பதை நிறைய கேட்க வேண்டும்.


கோவில்களில் ஆண்டாள் கோஷ்டி மட்டுமே திவ்ய ப்ரபந்தம் மற்றும் பாதுகாஸஹஸ்ரம் ஸேவிக்க முடியுமா?

Vidwan’s reply:

ப்ராசீன பெரிய கோவில்களில் ஆண்டாள் கோஷ்டி மட்டுமே திவ்ய ப்ரபந்தம் மற்றும் பாதுகாஸஹஸ்ரம் ஸேவிப்பது வழக்கத்தில் இல்லை.

குறிப்புகள்:

கோஷ்டியாக பல இடங்களில் ப்ரபந்தங்கள் மற்றும் பாதுகாஸஹஸ்ரம் ஸேவிப்பதற்கான வாய்ப்பை எந்த சாஸ்த்ரமும் தடுப்பதில்லை. கோவில்களில் கோஷ்டி பாராயணங்களில் அந்தந்தக் கோவில் வழக்கப்படியான சில கட்டுப்பாடுகள் உள்ளன, அதைப் பின்பற்றி நடக்க வேண்டும்.


ஸ்த்ரீகள் ஸ்வாமி தேசிகன் அருளிய அதிகரண ஸாராவளீ மற்றும் தத்வமுக்தாவளீ ஸேவிக்கலாமா?

Vidwan’s reply:

ஸ்த்ரீகள் தாத்பர்ய ரத்நாவளீ முதலியவை ஸேவிக்கலாம்.

குறிப்புகள்:

ஸ்வாமி தேசிகன் அருளிய அதிகரண ஸாராவளீ மற்றும் தத்வமுக்தாவளீ இவை இரண்டும் தத்வவிசாரங்கள் பண்ணக் கூடியவை. ஆனால் இவற்றைக்கொண்டு காலக்ஷேபம் செய்வது உசிதம் இல்லை என்பது கருத்து.


அடியேன் நமஸ்காரம். ரஜஸ்வலா காலத்தில் பூர்வாசார்ய ஶ்லோகங்களையும் திவ்ய ப்ரபந்தத்தையும் ஸேவிக்கலாமா? தன்யோஸ்மி ஸ்வாமி. தயவுசெய்து தெளிவுபடுத்தவும். அந்தக் குறிப்பிட்டக்காலத்தில் ஶ்லோகங்களைச் சொல்லமுடியாமல் தவிக்கிறேன்.

Vidwan’s reply:

ரஜஸ்வலா காலத்தில் பூர்வாசார்ய ஶ்லோகங்களையும் திவ்ய ப்ரபந்தத்தையும் ஸேவிக்கக்கூடாது.

குறிப்புகள்:

நாம் பால்ய காலத்திலிருந்தே ஸ்தோத்ரங்களை நித்யாநுஸந்தானம் பண்ணி ஸதா ஸர்வகாலமும் எம்பெருமானையே த்யானித்துக் கொண்டிருந்தால் பகவானுடைய ஸ்தோத்ரங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். அதுவே நமக்கு மனச்சாந்தியைத் தரும். அதை நம்மால் கட்டுப்படுத்துவது கடினம்.

அதற்காக ரஜஸ்வலா காலத்தில், வாயால் முணுமுணுத்துக்கொண்டோ அல்லது சத்தமாகவோ, ஶ்லோகங்களைச் சொல்லக்கூடாது.


ஸ்த்ரீகள் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் பண்ணலாமா?

Vidwan’s reply:

ஸ்த்ரீகள் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் பண்ணக்கூடாது.


அடியேன் விஞ்ஞாபனம் சுவாமின். நித்ய அர்தாநுஸந்தானமாக : திருவஷ்டாக்ஷரம் த்வயம் சரம ஸ்லோகம் க்ரமமாக ஸேவிக்க விருப்பம். எப்படிச் ஸேவிப்பது? தன்யோஸ்மி

Vidwan’s reply:

திருவஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் அர்தாநுஸந்தானமாக சொல்ல விசேஷம் என ஸ்வாமி தேசிகன் முதலிய ஆசார்யர்கள் சாதித்திருக்கிறார்கள்.

குறிப்புகள்:

அதனை ஆசார்யர்களிடமிருந்து, ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயம் முதலான காலக்ஷேபம் மூலமாக அர்த்தம் என்ன என்றுத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

அர்தாநுஸந்தானம் செய்ய ஏற்றதாகத் திருவஷ்டாக்ஷரச் சுருக்கு, த்வயச் சுருக்கு, சரம ஸ்லோக சுருக்கு என மூன்று ப்ரபந்தம் ஸ்வாமி தேசிகன் அருளியிருக்கிறார். அதே போல் அஷ்டஶ்லோகி என்று ஸ்ரீ ப்ராசர பட்டர் சாதித்திருக்கிறார்.

இப்படி ஆங்காங்கே அர்தாநுஸந்தானம் செய்ய ஆசார்யர்கள் அருளியிருக்கின்றனர், ஆனால் அதற்கு முன் காலக்ஷேபம் மூலம் தெரிந்துக் கொள்வது நலம்.


மடி, பத்து என்பது யாது? அதை எவ்வாறு இக்காலத் தலைமுறையினருக்கு விளக்குவது? அடியேன்.

Vidwan’s reply:

மடி என்பது ஆசாரமான வஸ்த்ரங்களைக் குறிக்கும்.

அரிசியில் செய்த சாதத்தின் பெயர் பத்தாகும், கையில் ஒட்டிக்கொண்டு விடுவிதால், பற்றிக்கொள்வது என்ற அர்தத்தில் அது பற்றாகும் அதுவே பத்து என ஆனது. அதனுடன் சேர்த்து எதை வைத்தாலும் அவை எல்லாம் பத்து. அப்படி அல்லாது தனியாக வைத்தால் அது பத்தாகாது, சாதம் மட்டுமே பத்தாகும்.

பலகார சமயத்தில் பத்து, கூடாது என்றுள்ளது, அதனால் எந்த வஸ்துவானாலும் சாதத்துடன் சேர்ந்து வைத்திருந்தால் அதைச் சாப்பிடக்கூடாது.

குறிப்புகள்:

மடி

இரவு வேளையிலே படுக்கையிலே பட்டுக் கொண்டோமேயானால் நாமும் நாம் தரித்திருக்கக்கூடிய வஸ்த்ரங்களும் விழுப்பாக ஆகும்.

அந்த விழுப்புக் கழிய நாம் தீர்த்தமாட வேண்டும். நம் வஸ்த்ரங்களை ஜலத்திலே நனைத்து நன்றாகத் தோய்த்து, கொடியிலே வஸ்த்ரங்களைக் காய வைக்கவேண்டும்.

கொடியில் உலர்த்திய வஸ்த்ரங்களைக் தொடக்கூடாது. நம் கையோ இல்லை சரீரத்தினுடைய எந்த ஒரு பாகமும் அந்த வஸ்த்ரத்தின் மேல் படக்கூடாது. நாம் சுத்தமாய் இருக்கக்கூடிய நிலையில் அதை எடுத்து உடுத்திக் கொண்டோமேயானால் மடியாக, ஆசாரமாக வஸ்த்ரம் உடுத்திக் கொண்டுள்ளோம் என்றாகும்.

பத்து

நெய் பால் தயிர் போன்ற வஸ்துக்களுக்குப் பத்து கிடையாது.

பத்தையும் பத்தில்லாததையும் எப்பொழுதுமே கலக்கக்கூடாது. தனித்தனி இடங்களில் வைத்திருக்க வேண்டும். தனித்தனியாக தான் அவைகளை உபயோகப்படுத்தவும் வேண்டும்.

உதாஹரணத்திற்கு: சாப்பிடும் பொழுது சாதம் சாதித்துவிட்டு மேலே நெய் விடுவதற்கு முன் கையை அலம்பிய பின்புதான் நெய் பாத்திரத்தை தொட வேண்டும்.

அதேபோல உணவைத் தயாரிக்கும் பொழுது பத்தும், பத்தில்லாத இடத்தையும் தனித் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். சாதம் பண்ணக்கூடிய அடுப்பும் பால் காய்ச்சக்கூடிய அடுப்பும் வெவ்வேறாக இருந்தால் உத்தமம். ஒருகால் அந்த மாதிரி ஒரே அடுப்பை பயன்படுத்தும் படியாய் இருக்கும் பக்ஷத்தில் சாதம் பண்ணிய பிறகு அந்த இடத்தையும் அடுப்பையும் சுத்தி செய்துவிட்டு அதன் பின் பால் காய்ச்சலாம்.

சில உணவு வகைகள் நாம் நீண்டகால பயன்படுத்தும் படியாக இருக்கும். உதாஹரணத்திற்கு ஊறுகாய்கள் , இட்லி மாவு தோசை மாவு போன்ற பதார்த்தங்கள். இவைகளையும் பத்து சாமான்களோடு கலக்காமல் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பத்து சாமான்கள் தொட்ட கையை அலம்பிவிட்டு தான் பத்தல்லாதவற்றைத் தொடவேண்டும்.


ஸ்த்ரீகள்/ கைம்பெண்கள் சாளக்கிராம ஆராதனை செய்யலாமா? இன்றைய கால நடைமுறையில் ஶரணாகதி ஆன ஸ்தீரிகள், திருவாராதன சமயத்தில் மனோவாக்காயத்தினால் செய்ய வேண்டிய கர்மங்களை, தயை கூர்ந்து சாதிக்கவேண்டும்.

Vidwan’s reply:

பெண்கள் சாளக்கிராமத்தைத் தொட்டு ஆராதனம் செய்யும் வழக்கமில்லை. ஆனால் திருவாராதன காலத்திற்கு உரிய ஒத்தாசைகள் அனைத்தும் கட்டாயம் செய்யலாம்.

குறிப்புகள்

அதாவது திருவாராதன சந்நிதியை நன்றாகப் பெருக்கி சுத்தம் செய்து கோலமிடுவதும், அதே போல் திருவாராதன மேடையையும் சுத்தம் செய்து கோலமிடுவதும், திருவாராதன பாத்திரங்களைச் சுத்தம் செய்வதும், விளக்கேற்றி வைப்பதும், புஷ்பம் (முடிந்தால் புஷ்பத்தை நாரில் தொடுப்பது) பழம் முதலியவற்றைச் சேகரித்து வைப்பதும், பெருமாள் தீர்த்தத்தில் சேர்க்க வேண்டிய பரிமளங்களைத் தயாரித்து வைப்பதும் (பரிமளங்கள் என்றால் ஏலக்காய் பச்சை கற்பூரம் முதலியவற்றை அரைத்து வைப்பது குங்குமப்பூவை இழைத்து வைப்பது என்பவையே.), தூபங்கள் ஏற்பாடு செய்வதும் போன்ற கைங்கர்யங்கள் செய்யலாம்.

இதை விட மிக முக்கியமானதாக எம்பெருமானுக்கு போஜ்யாசனத்தில் சமர்பிக்கப்பட வேண்டியத் தளிகையை மிகவும் சுத்தமாகவும், சாஸ்த்ரோக்தமாகவும் (சரீர சுத்தி, இட சுத்தியுடன்), ஆழ்வார் பாசுரங்கள், பூர்வாசார்யர்கள் ஶ்லோகங்கள், சொல்லிக்கொண்டு ஶ்ரத்தையாக கைங்கர்ய பாவத்துடன் தயாரித்து, தளிகை சமர்பிக்கும் சமயத்தில் கொடுக்க வேண்டியது ஸ்த்ரீகளின் முக்கிய கடமையாகும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top