ப்ரபத்தி செய்த முன்னோர்களுக்கு ஶ்ராத்தம் சமயம் வ்யாஸ பிண்டம் வைப்பதுண்டா?
வ்யாஸ பிண்டம் பற்றி கேள்விபட்டத்தில்லை.
பையன் ஶ்ரீவைஷ்ணவ அல்லாத பெண்ணை மணந்தால் பெற்றோர்களுக்குக் கைங்கர்யம் செய்யலாமா?
பையன் ஶ்ரீவைஷ்ணவரல்லாத பெண்ணை மணந்தால் பெற்றோர்களுக்குக் கைங்கர்யம் பண்ணலாம்.
முனித்ரய ஸம்ப்ரதாயம் பற்றிய சந்தேகம்: ஶ்ரீ ஜயந்தி, ஶ்ரீ ராம நவமி, ஶ்ரீ ந்ருஸிம்ம ஜயந்தி போன்ற நாட்களில் நாம் வ்ரதம் இருந்து மறுநாள் பாரணை பண்ணவேண்டும் என்றிருக்கிறது, அப்படியானால் அன்றைய நாட்களில் எம்பெருமானுக்கு பண்ணிய பானகம், வடைபருப்பு, கோசம்பரி போன்றவைகளையும் உட்கொள்ளக்கூடாதா? எம்பெருமானுக்குப் பண்ணியதை உட்கொள்ளாதது சரியா? மேலும் இவைகளை அடுத்த நாள் வரை வைத்துக்கொள்ளவும் முடியாதல்லவா?
உபவாஸ தினத்திலே எம்பெருமானுக்குப் பண்ண வடைபருப்பு , பானகம் முதலியவற்றை உபவாஸம் இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது. பலகாரம் பண்ணுபவர்களுக்குக் கொடுக்கலாம். உபவாஸ வ்ரதம் இருக்கிறபடியால் அதைச் சாப்பிடாவிட்டால் தோஷம் கிடையாது.
எம்பெருமானுக்கு அமுது செய்த திருக்கோயில் ப்ரசாதத்தை அகத்திற்கோ அல்லது கோவிலை விட்டு வெளியே எடுத்துவந்தோ உட்கொண்டால் அதன் உயர்வு (புனித தன்மை) குறைந்துவிடுமா?
பெருமாள் ப்ரசாதத்திற்குப் புனிதத் தன்மை குறையாது. ஆனால் ப்ரசாதத்தைக் கொண்டுவரும் மார்கம் (வழி) எப்படிப்பட்ட மார்கம் என்பதுதான் பார்க்கவேண்டும். கொண்டுவரும் மார்கம் சரியில்லையென்றால், ப்ரசாதத்தின் ஆசாரத்தனம் குறைவு படலாம், புனித தன்மை குறையாது. அது ப்ரச்சனையில்லை என்றால் தவறில்லை.
1.ஸந்தியாவந்தன மந்திரங்களை உரக்க சொல்லவேண்டுமா? அல்லது காயத்ரி மந்திரம் போல் மனதிற்குள்ளேயே சொல்லவேண்டுமா?
2.அமாவாசை போன்ற தர்ப்பணங்களை தெற்குப் பார்த்துதான் பண்ணவேண்டுமா? சிலர் கிழக்கு நோக்கி பண்ணுகிறார்களே.
3.ஸந்தியாவந்தனத்தில் அஷ்டாக்ஷர மந்திர ஜபத்தை காயத்ரி உபஸ்தானம் முன்பா அல்லது பின்பா? எப்போது செய்யவேண்டும்?
4.ப்ராத: ஸந்தியாவந்தனம் நின்றுகொண்டு பண்ணவேண்டும் என்றால், சந்தியாவந்தனம் பூர்த்தியாக ப்ராணாயாமம்,காயத்ரி ஜபம் என அனைத்தும் நின்றுகொண்டுதான் பண்ணவேண்டுமா?
1.ஸ்ந்தியாவந்தன மந்திரங்களை உரக்கச் சொல்லவேண்டிய அவசியமில்லை. வாயால் உச்சரித்தாலே போதும்.
2.அமாவாசை தர்ப்பணத்தை கிழக்குப் பார்த்து பண்ணும் வழக்கமுண்டு. சிலர் தெற்குப் பார்த்தும் பண்ணுகிறார்கள். இரண்டு ஸம்ப்ரதாயமும் உண்டு. கேட்டுக்கொண்டு பண்ணவும்.
3.ஸந்தியாவந்தனத்தில் அஷ்டாக்ஷர மந்திர ஜபம் முன்பா பின்பா என்பதற்கு ஸம்ப்ரதாய வித்யாசமுண்டு. அஹோபில மடத்திலே உபஸ்தானம் முன்பு பண்ணுகிறார்கள். முனித்ரயத்திலே பின்பு பண்ணுகிறார்கள். இதிலும் பல வித்யாசங்கள் உண்டு. விஸ்தாரமாக பின்னர் பார்க்கலாம்.
4.ப்ராணாயாமம், காயத்ரி ஜபம் எல்லாம் காலையில் நின்று கொண்டு பண்ணவேண்டும். சாயங்காலத்தில் உட்கார்ந்துகொண்டு பண்ணவேண்டும். அர்க்ய ப்ரதானம் முதலியதெல்லாம் நின்று கொண்டு பண்ணவேண்டும் என்று கணக்கிருக்கிறது.
US போன்ற வெளிநாடுகளில் இருப்பவர்களுக்குத் தர்ப்பண சங்கல்பம் என்ன என்று தெரிவிக்க வேண்டும்? இங்கே சித்திரைத் தர்ப்பணம் ஒருநாள் முன்னதாகவே பண்ணும்படி வருகிறது. ஏன் இப்படி வருகிறது?
US போன்ற வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தர்ப்பணம் நாள் மாறிவரும் என்பது வழக்கம்தானே. அதன் சங்கல்பம் என்ன என்பதைக் கேட்டுதான் சொல்லவேண்டும்.
காலையில் நின்று கொண்டு காலை சற்று உயர்த்தி அர்க்யம் விடுகிறோம். மத்தியானமும், சாயங்காலமும் சாமவேதிகளுக்கு எத்தனை முறை அர்க்யம் விடவேண்டும்? எப்படி விடவேண்டும்? மேலும் எத்தனை வ்யாஹ்ருதி மஹா ந்யாஸம் செய்யவேண்டும்? காயத்ரி மந்திரத்தை எந்தச் சந்தஸ்ஸில் சொல்லவேண்டும்? (தேவி காயத்ரியா/ந்ருசத் காயத்ரியா?)
சாம வேதிகளுக்குக் கேட்டுச் சொல்கிறோம்.
1)திருவாராதனம் நின்றுகொண்டா, அமர்ந்து கொண்டா எப்படிப் பண்ணவேண்டும்? எது சரி?
2) ப்ரபந்நன் செய்த பாபங்கள் ஆசார்யனிடம் போகுமா?
3) திருவாராதனத்தில் எப்போது எந்த ஆசனத்தில் ஶ்லோகங்கள், ப்ரபந்தங்களைச் சேவிக்க வேண்டும்?
4)அனைத்து ஆசனம் போதும் ஷோடஸ உபசாரம் செய்யவேண்டுமா? அல்லது சர்வோபசாரம் ஸமர்ப்பயாமி என்று செய்தால் போதுமா?
5) திருவாராதனம் செய்த பின் சேவிக்கும் போது என்ன சொல்லவேண்டும்?
1.திருவாராதனம், பூத சுத்தி, மானஸ ஆராதனம் வரை உட்கார்ந்து கொண்டும் பிறகு நின்று கொண்டும் பண்ணும் வழக்கம்.
2.“சிஷ்ய பாபம் குரோரபி” என்ற வசனத்திற்கான விஷயம் வேறு. அதாவது சிஷ்யனை திருத்தாமல் இருந்தால் அப்போது அந்த பாபம் போகும். ப்ரபந்நன் செய்த பாபங்கள் ஆசார்யரிடம் போகாது. ஆனால் ஒரு ஆசார்யன் சிஷ்யனை திருத்தவேண்டிய சமயத்தில் திருத்தாமல் விட்டால் அப்போது அவருக்குத் தோஷம் போகும்.
3.திருவாராதனத்தில் அலங்கார ஆசனம், பிறகு சாற்றுமுறை சமயம் ஶ்லோகங்கள், பாசுரங்களைச் சேவிப்பார்கள். அதை மந்திராசனத்தில் சிலர் பண்ணுகிறார்கள், சிலர் பர்யங்காசனத்திலே பண்ணுகிறார்கள். பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.
4.எந்தெந்த ஆசனத்தில் என்னென்ன உபசாரம் என்பது திருவாராதன ப்ரக்ரீயையில் இருக்கிறது. அதன்படி செய்யவும்.
5. இதுவும் ஆராதன ப்ரக்ரீயையில் இருக்கிறது. சேவிக்கும் போது அபராதக்ஷமாபனங்களெல்லாம் பண்ணவேண்டும். மறுபடியும் திருவாராதனத்திற்குப் பெருமாள் ஏளி அனுக்ரஹிக்கணும் என்பதும், விஸ்வக்ஷேனரிடம் அனுமதி வாங்கிக்கொள்ளவேண்டும் என்பதும் அதிலே இருக்கிறது.
நாட்டேரி ஸ்வாமியின் ஶரணாகதி தீபிகா உபந்யாஸம் கேட்டு அடியேன் ஶ்ரீமுஷ்ணம் ஆண்டவனிடத்தில் பரந்யாஸம் பெற்றுக்கொண்டேன். அடியேன் அப்போதே தென்னாசார் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த அகத்தில் மாற்றுப்பெண்ணாக ஆகிவிட்டேன். ஆண்டவன் அடியேனின் பின்புலம் பற்றி ஏதும் கேட்காமல் பரம கருணையோடு பரந்யாஸம் பண்ணிவைத்தார். அடியேனுக்கு முதலியாண்டான் திருமாளிகையில் ஸமாஶ்ரயணம் ஆனது. இன்று சிலர் அந்த பரந்யாஸம் பலிக்காது என்றும், ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்யவேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அடியேனுக்கு பரந்யாஸம் பண்ணிவைத்த ஆசார்யன் மீதும், ஸ்வாமி தேஶிகன் மீதும், எம்பெருமான் மீதும் ஶரணாகதி பலிக்கும் என்று மஹாவிஶ்வாசம் இருக்கிறது. மஹான்கள் இதற்கு வழிகாட்ட வேண்டுகிறேன்.
மறுபடியும் ப்ராயஶ்சித்த ஶரணாகதி பண்ணும் வழக்கம், நம் ஸம்ப்ரதாயத்திலும் சரி, தென்னாசார்யார் ஸம்ப்ரதாயத்திலும் கிடையாது. ஒரு தடவை ஶரணாகதி பண்ணவர்கள் மறுபடியும் ப்ரயாஶ்சித்தமாக கூட ஶரணாகதி பண்ணக்கூடாது என்று பெரியவாச்சான் பிள்ளை சாதித்திருக்கிறார்.
அடியோங்களுக்கு பெண் குழந்தை பிறந்து 15 மாதங்கள் ஆகிறது. வரும் சித்திரைக்குள் முடிகாணிக்கை (மொட்டை போடுவது) பண்ணும்படி அகத்துப் பெரியோர்கள் சொல்கிறார்கள் இல்லையென்றால் குழந்தைக்கு ஆகாது என்றும் சொல்கிறார்கள். சிலர் பெண் குழந்தைக்கு முடி கொடுக்கும் வழக்கமில்லை என்றும் கூறுகிறார்கள். இதில் எது நம் ஸம்ப்ரதாயத்துப் பெரியவர்களின் வழக்கத்தில் உள்ளது என்றும், எது சரி என்றும் தெளிவிக்கவும்.
சில க்ருஹங்களில் பெண்குழந்தைக்கு முடி கொடுக்கும் வழக்கமெல்லாம் உண்டு. அவரவர் வழக்கப்படிச் செய்யலாம்.
சுமங்கலியாகக் காலமானவருக்கு ஏன் திருவத்யயனம் பண்ணுவதில்லை? அந்த ஆத்மாவுக்குச் சாந்தி கிடைக்குமா?
சாந்தி கிடைக்கும்.
நாம் எது பண்ணாலும் பண்ணாவிட்டாலும் எந்த ஆத்மாவாக இருந்தாலும் பரந்யாஸம் செய்திருந்தால் கட்டாயம் சாந்தி கிடைக்கும் அதில் சந்தேகமேயில்லை.
பொதுவாக இங்கே இருக்கும் அமங்கலத்தைக் கழித்து ஶ்ரீவைகுண்டத்தில் மங்கலமாக இருக்கப்போகிறார் என்பதைத் தெரிவிப்பதற்காக திருவத்யயன உத்ஸவம் பண்ணுகிறோம்.
சுமங்கலியானவர் இங்கேயும் மங்கலகமாக இருந்தார், அங்கேயும் மங்கலமாக இருப்பார் என்பதனால் தனிப்பட்டதாக திருவத்யயனம் உத்ஸவம் பண்ணுவதில்லை.
அடியேனும் அடியேனின் பார்யாளும் ப்ரபத்தி ஆனவர்கள், அப்படியிருக்க ப்ரபத்தி பண்ணாத எங்கள் அகத்துப் பெரியவர்களையும், தேவதாந்தர சம்பந்தம் இருக்கும் அகத்துப் பெரியவர்களையும் நமஸ்காரம் செய்யலாமா?
அகத்துப் பெரியவர்கள் என்ற முறையில் சேவிக்கலாம்.
பெருமாளுக்கு ஏற்றும் ஊதுவத்திக் குச்சியால் ஶ்ராத்தத்திற்கான தொன்னையைத் தைக்கலாமா?
ஶ்ராத்தத்திற்கான தொன்னையைத் துடைப்பத்திற்கு உபயோகிக்காத தென்னை ஈர்குச்சியால் தைப்பது வழக்கம். அப்படியில்லையென்றால் அவசரத் தேவைக்கு இப்படிச் செய்யலாம்.
சொந்த பெரிய அக்கா,மதியம் ஆசார்யன் திருவடி அடைந்தால் எத்தனைநாள் தீட்டு காக்கவேண்டும்?
ஒரு ஆணின் அக்காவாக இருந்தால் அந்த ஆணிற்கு 3 நாள் தீட்டு. பெண்ணின் அக்காவாக இருந்தால் அந்தப் பெண்ணிற்கு 1 ½ நாள் தீட்டு. அதாவது மதியம் திருவடி அடைந்தால், அன்று மதியம் , அன்று இரவு, மறுநாள் மதியம் வரை தீட்டு. அஸ்தமனத்திற்குப் பிறகு ஸ்நானம் செய்து தீட்டு கழிக்க வேண்டும்.
“1.கயா ஶ்ராத்தம் –வைஷ்ணவர்களுக்கு எந்த விதத்தில் முக்கியமானது.? பத்ரிநாத் போன்ற இடங்களில் கயா ஶ்ராத்தம் மாதிரி பண்ணவேண்டுமா அல்லது கயா ஶ்ராத்தம் மட்டும் தானா? பித்ருக்களுக்கு வேறு எங்கேயாவது பண்ண வேண்டுமா?
2.கயா க்ஷேத்ரத்தில் பெண்கள் பிண்ட ப்ரதானம் பண்ணுவதற்கு வைஷ்ணவத்தில் அனுமதி உண்டா? அல்லது ஆண்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமா?”
கயா ஶ்ராத்தம் ஶ்ரீவைஷ்ணவர்கள் அவசியம் செய்யவேண்டியது. ஆனால் கயையில் மட்டும்தான் ஶ்ராத்தம் செய்துகொண்டு வருகிறார்கள். சிலர் தீர்த்த க்ஷேத்ர கணக்கில் பத்ரியில் செய்கிறார்கள் என்று பிறர் சொல்லிக்கேட்டுள்ளோம்.
பெண்கள் பிண்டப்ரதானம் செய்வதாகத் தெரியவில்லை.
வடகலை நித்யாநுஷ்டானக்ரமம் (Lifco edition) சந்தியாவந்தனப் பகுதியில் “அச்யுதாய“ என்று தொடங்கும் மூன்று ஆசமன மந்திரங்களை உச்சரித்து இரு முறை நீரைப் பருக வேண்டும் என்றும், அதன் பிறகு “கேசவாய” என்று தொடங்கும் பன்னிரண்டு அங்க வந்தன மந்திரங்களை ஒரு முறை உச்சரிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். ஆனால் Prapatti,com ஸ்ரீ சுந்தர்கிடாம்பி ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ஹத்துடன் வெளியிட்டுள்ள சந்தியாவந்தனம் pdfல் மூன்று ஆசமன மந்திரங்கள் மற்றும் பன்னிரண்டு அங்க வந்தன மந்திரங்களையும் சேர்த்து இருமுறை உச்சரிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். இவற்றில் எதை நாம் பின்பற்ற வேண்டும்?
ஆசமனம் சமயத்தில் மூன்று மந்திரங்கள், மூன்று தடவை நீரைப் பருக வேண்டும் அதுதான் சரி.
“மாசப்பிறப்பு, அமாவாசை தர்ப்பண நாட்களில் திருவாராதன க்ரமம் பற்றி தெளிவு பெற விரும்புகிறேன்.
1. ப்ராத: சந்தியா, திருவாராதனம், மாத்யாஹ்நிகம் பிறகு தர்ப்பணம் என்ற க்ரமத்திலா ? 2. ப்ராத சந்தியா, திருவாராதனம், தர்ப்பணம் பிறகு மாத்யாஹ்நிகம் என்று செய்யலாமா?
(பி.கு: மாத்யாஹ்நிகம் எவ்வளவு காலத்திற்கு முன்பே செய்யலாம்)
பொதுவாக அமாவாசை முதலிய தர்ப்பணங்கள் மாத்யாஹ்நிக காலத்திற்குப் பிறகு குதப காலத்திலோ அல்லது அபரான்ன காலத்திலோ செய்யவேண்டியவை. ஆகையால் அமாவாசை தர்ப்பணத்தை ப்ராத: சந்தியா, மாத்யாஹ்நிகம், திருவாராதனம் செய்துவிட்ட பிறகு செய்வது வழக்கம்.
சில சமயங்களில் அந்தக் காலம் வரை காத்திருக்க முடியாத பக்ஷத்தில் , அலுவலகம் செல்பவர்கள் இதே க்ரமத்தில் முன்னதாகவே செய்கின்றனர்.
மாசப்பிறப்பு பொருத்தவரை, சில சமயம் காலையிலேயே மாசம் பிறக்கும் அந்தச் சமயத்தில் சந்தியாவந்தனம் செய்து, மாசப்பிறப்பு தர்ப்பணம் செய்து பிறகு மாத்யாஹ்நிகம், திருவாராதானம் செய்யலாம். இதே மாசப்பிறப்பே மத்யான வேளையில் புண்ய காலம் பிறப்பதானால், அமாவாசை செய்யும் க்ரமத்திலேயே செய்யலாம்.
மாத்யாஹ்நிகம் என்பது மாத்யாஹ்நிக காலத்தில் செய்யவேண்டியது, சங்கவ காலத்தில் அதாவது சூர்யோதயமாகி ஒரு இரண்டரை மணி காலம் கழிந்த பிறகு செய்யலாம். அதுவும் முடியாத பக்ஷம், செய்யாமலே விடுவதைக் காட்டிலும் சூர்யோதயமான பிறகு, சூர்யனை பார்க்க முடியும் சமயத்தில் செய்யலாம்.
சூர்யோதய காலத்திற்கு முன் வேத வகுப்பு உள்ளதால் எப்போது சந்தியாவந்தனம் செய்யவேண்டும்?
சூர்யோதய காலத்திற்கு முன்பு வேத வகுப்பு இருந்தால், வேத வகுப்பை முடித்துவிட்டு சந்த்யாவந்தனம் செய்யலாம்.சூர்யன் உதிக்கும் சமயத்தில் அரை நாழிகை முதல் ஒரு நாழிகை காலத்தில் வேத வகுப்பு நடத்தும் வழக்கமில்லை.
அடியேனுக்கு ஒரு ஸந்தேகம் , நாம் கோவிலில் இருந்து வந்தபிறகு கால் கை அலம்பிக்கலாமா?
கோவிலிலிருந்து வந்தவுடனே கை கால் அலம்பும் வழக்கமில்லை. சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு, பிறகுதான் கை கால் அலம்புவது வழக்கம்.
அடியேன் சாப்பிட்ட பிறகு இலையை மாட்டுக்குப் போடலாமா?
நாம் சாப்பிட்ட பிறகு அந்த இலை எச்சில். எச்சில் இலையை பசு மாட்டுக்குக் கொடுப்பது மஹாபாபம். ஆகையால் கொடுக்கும் வழக்கமில்லை.
திருவாராதனத்தில் எவ்வாறு மற்றும் எப்போதெல்லாம் கண்டை சேவிக்க வேண்டும்? [எந்தெந்த ஆசனத்திற்கெல்லாம், நைவேத்யம் (நிவேதனம்), ஹாரத்தி சமயம் அதுபோல, ஒரு தடவையா, தொடர்ந்தா?எப்படிச் சேவிக்கவேண்டும்]
பெருமாள் திருக்காப்பை நீக்கும்போதும், ஆராதனத்தின் ஆரம்பத்திலும், பகவானை ஆவாஹனம் செய்யும்போதும், ஸ்நான காலத்திலும், தூபம், தீபம், அர்க்ய ப்ரதானம், கற்பூர நீராஜனம், நைவேத்யம், திருவாராதனத்தைக் கடைசியில் முடிக்கும் சமயத்திலெல்லாம் கண்டை சேவிக்க வேண்டும்.
வெளியிலிருந்து நாம் ப்ரசாதம் கொண்டுவந்து எம்பெருமானுக்கு அம்சை பண்ணினால் திருக்கோயிலின் சாந்நித்யம் குறைந்துவிடுமா?
வெளியிலிருந்து ப்ரசாதம் சொண்டுவந்து எம்பெருமானுக்கு அம்சை பண்ணுவதென்பது கோவிலில் வழக்கமில்லை. ஏனென்றால், கோவில் ப்ரசாதம் என்பது அனைத்து மக்களாலும் ஸ்வீகரிக்கக்கூடிய ஒன்றாகும். வெளியிலிருந்து என்றால் அது எல்லோராலும் ஸ்வீகரிக்க முடியுமா என்பது சந்தேகமே. அதனால் கோவிலில் உள்ளேயே திருமடைப்பள்ளியிலேயே ப்ரசாதங்களைத் தயார் செய்து அம்சை பண்ணவேண்டும்.
ஒரு ப்ரபந்நன் தெரிந்தே செய்த பாபத்திற்கும், ப்ரபந்நன் அல்லாதவன் செய்த பாபத்திற்கும் கிடைக்கும் பலன் ஒன்றாகுமா? வேறுபடுமா?
எல்லோரும் செய்யும் பாபத்திற்குப் பலன் ஒன்றுதான். ஆனால் ப்ரபந்நன் விஷயத்தில், ஒரு ப்ரபந்நன் தான் தெரிந்தே செய்த பாபத்திற்கு ப்ராயஶ்சித்தம் செய்தானானால் பெருமாள் அவனை க்ஷமிப்பான், பொறுத்துக்கொள்வான். இல்லையென்றால் அந்தப் பாபத்திற்கான பலனைச் சிறிதளவாவது காட்டி, துக்கப்படுத்தி, தன் திருவடியில் சேர்த்துக்கொள்வான்.
நதி ஸ்நானம் செய்தால் பாபங்கள் போகும் என்கிறார்கள். ஒருவருக்குப் பாபங்கள் போனால் அவருக்கு மோக்ஷம் சித்திகுமா? [நதி ஸ்நானமே பாபமற்றவனாக ஆக்கி மோக்ஷம் கொடுக்குமா?]
நதி ஸ்நானம் பாபமற்றவனாக ஆக்கும். பாபங்கள்தான் நம்மை நல்லவழியில் செல்வதைத் தடுக்கிறது. நதி ஸ்நானம் பாபங்களைப் போக்குகிறது, அதன்பிறகு நல் வழியில் நாம் சென்று மோக்ஷத்திற்குரிய உபாயங்களைச் செய்தால் நமக்கு மோக்ஷம் கிட்டும்.
எனது 9 வயது பெண் குழந்தை ஒரு ஸ்மார்த்தர் நடத்தும் கல்வி நிறுவனத்தில் படித்து வருகிறார். சாதுர்மாஸ்யம் சமயம் அவர்கள் அங்கு படிக்கும் குழந்தைகளை அவர்களின் ஸ்மார்த்த ஆசார்யனிடத்தில் சேவித்து ஆசிர்வாதம் வாங்க அழைத்துச் சென்றனர். அடியேனின் மகளுக்கு ஶ்ரீமதழகிய சிங்கரிடத்தில் பரந்யாஸம் ஆகிவிட்டது.
எங்கள் குழந்தை அங்குப் படிக்கக்காரணம் அவர்கள் மாநில் மொழியுடன் சேர்த்து ஸம்ஸ்க்ருத மொழியும் சொல்லிக்கொக்கிறார்கள். மேலும் இதர நிறுவனங்கள் மேலைநாட்டுக் கலாச்சாரத்தை நோக்கி செல்லும் நிலையில், இவர்கள் நம் சனாதன தர்மம்படி கலாச்சாரம் சொல்லிக்கொடுக்கிறார்கள். பகவத் கீதை மற்றும் அமரகோஷமும் சொல்லிக்கொடுக்கிறார்கள். என் மகளுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டதால் பள்ளியில் மற்ற குழந்தைகளொடு இவளும் சென்று அவர்களின் ஆசார்யனைச் சேவித்தால் ஏதேனும் குற்றமாகுமா?
ஶாஸ்த்ரப்படி போகக்கூடாது. ஆனால் அவள் சிறு குழந்தை ஏன் சேவிக்கக்கூடாது என்று சொன்னால் அவளுக்கும் புரியாது, பிறர் கேட்டாலும் சொல்லத் தெரியாது.அதனால் இப்போது போவதனால் பெரிய குற்றமில்லை. சற்று பெரியவளான பிறகு ஏன் என்று சொல்லிக்கொடுக்கலாம் எனத் தோன்றுகிறது.
ஸந்த்யாவந்தனத்தில் இருமுறை அபிவாதனம் யாரைக் குறித்துச் செய்கிறோம் ? பெரியவர்கள் குறித்தா?
ஸந்த்யாவந்தனத்தில் முதலில் அபிவாதனம் வேத ஶரீரகனான எம்பெருமானுக்கும், இரண்டாவது அபிவாதனம் ஶயஶ்சாய: புருஷே என்று அந்தர்யாமியாக இருக்கிற எம்பெருமானுக்கும் செய்கிறோம்.
ஏன் பெருமாள் ஆச்சார்யனைச் சேவிக்கும்போது அபிவாதனம் கிடையாது?
நாம் எல்லோரும் எம்பெருமானையே சேர்ந்த படியாலும், அவர் ஸர்வக்ஞனான படியாலும் அவனிடத்தில் சென்று நான் இந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன் , இதைச் செய்பவன் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது.
க்ருஹஸ்தாஶ்ரம ஆசார்யர்களைச் சேவித்தால் அபிவாதனம் சொல்லவேண்டும்.
சன்யாஸிகளைச் சேவிக்கும்போது அபிவாதனம் சொல்லும் வழக்கமில்லை. ஏனென்றால் அவர்களுக்கு நிக்ரஹமும் இல்லை, அனுக்ரஹமும் இல்லை. அவர்கள் முற்றும் துறந்தவர்கள்.
அடியேனுக்கு ஒரு சந்தேகம் க்ருஹத்தில் அமாவாசை அன்றைக்கு வாசலில்கோலம் போடலமா?
அமாவாசை அன்றைக்கு வாசலில் கோலம் போடலாம்.
தினமும் ப்ரதோஷ காலம் என்பது எது? ப்ரதோஷ காலத்தில் ஜபம், பாராயணம், ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் போன்றவைகள் சேவிக்கக் கூடாது என்கிறார்களே. அப்படியென்றால் நித்யமும் சந்தியாவந்தனத்தில் அஷ்டாக்ஷர ஜபமும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணமும் எப்படிச் செய்வது?
ப்ரதோஷ காலத்தில் என்றால் அது மஹாப்ரதோஷ காலத்தில் இவையெல்லாம் கூடாது. நித்யமிருக்கும் ப்ரதோஷ காலத்தில், வேதாத்யயனம் பண்ணக்கூடாது என்பார்கள். அது சந்தியாவந்தனம் பண்ணவேண்டிய காலம். சந்தியாவந்தனம் பண்ணி, அஷ்டாக்ஷர ஜபமெல்லாம் அந்தக் காலத்தில் பண்ணவேண்டும்.
சந்தியாவந்தனத்தை விட்டுவிட்டு மற்றதெல்லாம் பண்ணக்கூடாது என்பதற்காகச் சொல்லப்பட்டதாக இருக்கலாம். உதாஹரணத்திற்கு சிலர் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரபாராயணம் செய்துவிட்டு சந்தியாவந்தனம் பண்ணலாம் என்றிருப்பார்கள். அப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்பதற்காகச் சொல்லியிருக்கலாம்.
அடியேனின் அருளிச்செயல் ஆசார்யன் அகத்திற்கு ஏளுகிறார். அவருக்கு எவ்வாறு தண்டம் ஸமர்பிக்கவேண்டும் என்று தெரிவிக்கவும்.
அவரைச் சேவித்து அனுக்ரஹம் பெற்றுக் கொள்ளலாம். சம்பாவனை செய்யலாம். அவருக்கு சுஸ்ரூஷை தேவைப்பட்டால் செய்யலாம். வேறு உபகாரம் செய்யலாம்.
விவாஹ தினத்தை நாம் கொண்டாடலாமா? ஆம் என்றால், எதன் அடிப்படையில் கொண்டாட வேண்டும் (திதி/நக்ஷத்திரமா)? அகத்தில் அன்றைய தினம் என்னென்ன பண்ணவேண்டும்?
விவாஹ தினம் கொண்டாட வேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்கிறது. நக்ஷத்திர தினம் கணக்கு. ஒளபாசனம் முதலியது செய்யலாம். பெருமாள் பெரியவர்களைச் சேவிக்கலாம். அகத்துப் பெருமாளுக்கு விசேஷ மதுரம் சமர்ப்பிக்கலாம்.
ஆசார்யன் பாதுகையைப் பெருமாள் சன்னதியில் வைக்கலாமா?
இக்கேள்விக்கான பதிலைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள linkல் படிக்கவும்.
https://sudarsanam.sampradayamanjari.org/சோப-ஐப்-ஆசாரஅனுஷ்டானம்/#Q48AIP23012
அடியேனுடைய மாமனாரின் சந்தேகம், மஹாப்ரதோஷ காலத்தில் அஷ்டாக்ஷர மந்த்ர ஜபம் செய்யலாமா?
மஹாப்ரதோஷ காலத்தில் அஷ்டாக்ஷர மந்த்ர ஜபம் செய்யக்கூடாது
உபநயனம் செய்து வைக்க நினைக்கும் பெற்றோர்களுக்கு முதலில் ஸமாஶ்ரயணம் ஆகி இருக்க வேண்டுமா?
ஶ்ரீவஷ்ணவ ஸம்ப்ரதாயப் படி ஆகியிருக்கவேண்டும். தர்ம ஶாஸ்த்ரம் என்பது ஒரு பக்கம். நம் ஸம்ப்ரதாயப்படி ஸமாஶ்ரயணம் ஆகியிருந்தால் நல்லது.
குரோதி தை ஸுதர்ஶநம் இதழில் ஸ்நானஶாடி ஸ்நான வஸ்திரத்தைப் பற்றிய ஒரு பதில் உள்ளது (கேள்வி Q62THAI25014). கடைகளில் இந்த ஸ்நானஶாடி வஸ்திரத்தை என்ன பெயர் சொல்லி கேட்டு வாங்க வேண்டும்?
ஸ்நானஶாடி எங்குக் கிடைக்கும் என்று கேட்டுத் தெரிவிக்கிறோம்.
திருப்புல்லாணி ஆதி ஜகன்னாதர் திவ்ய தேசத்தின் சிறப்பும், ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸேது ஸ்நானத்தின் முக்கியத்துவத்தையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
திருப்புல்லாணி ஆதி ஜகன்னாதர் திவ்ய தேசம் சேதுக்கரையில் இருப்பதென்பதே அதன் சிறப்பாகும். ஸேது ஸ்நானம் என்பது ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமே முக்கியமானது. தர்ம ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பல பாபங்களுக்கு ப்ராயஶ்சித்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஶ்ரீவைஷ்ணவர்களுக்குக் குறிப்பாக நம் எம்பெருமான் ஶ்ரீராமபிரான் எழுந்தருளியிருப்பதாலே கூடுதல் விசேஷமாகுகிறது.
பரமாத்மா என்பவன் சித் அசித் என எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக உள்ளான் என்று புரிகிறது. எம்பெருமான் எவ்வாறு அந்தர்யாமியாக ஏளியிருக்கிறான் என்பதில் வடகலை தென்கலை ஸம்ப்ரதாய பேதங்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். நம் பூர்வர்கள் அந்தர்யாமி எம்பெருமானை எப்படிச் சாதித்துள்ளார்கள் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
பரமாத்மா என்பவன் சித் அசித் என எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருக்கிறான் என்பதில் வடகலை தெங்கலை ஸம்ப்ரதாய பேதமில்லை. ஒரேயொரு சின்ன பேதம் மட்டும்தான், ஜீவாத்மாவிற்குள் எம்பெருமான் எப்படி எழுந்தருளியிருக்கிறான் என்பதில்தான். ஜீவாத்மா அணு அளவிலானது, மிகச்சிறியது. அதற்கு உள் பாகம் என்றொன்று கிடையாது. அவற்றுக்குள் எம்பெருமான் எப்படி ஏளியிருக்கிறான் என்ற கேள்விக்கு, நம் பூர்வர்கள் விளக்கியிருக்கிறார்கள் என்றால், ஜீவாத்மாவிற்குப் பரமாத்மாவுடன் சம்பந்தப்படாத பாகம் என்ற ஒன்று கிடையாது. உள் பாகம் என்றொன்று கிடையாது;வெளிபாகத்தில் எம்பெருமான் ஏளியிருக்கிறார். உள்ளே என்ற ஒரு அம்சமே இல்லாததால், ஜீவாத்மாவிற்குள்ளே பரமாத்மா கிடையாது என்று சொல்ல முடியாதென நம் பூர்வர்கள் விளக்கியிருக்கிறார்கள்.
மற்றபடி அனைத்து வஸ்துவிற்குள்ளும் எம்பெருமான் அந்தர்யாமியாக இருக்கிறான்.
தாயாதிக்காரர்களின் பெண், ஆசார்யன் திருவடி அடைந்து விட்டால் எத்தனை நாள் தீட்டு காக்க வேண்டும். தீட்டு முடிந்ததும் பெருமாள் சேவித்தல், ஶ்லோகம் சொல்லித்தருதல், உபந்யாஸம் அந்வயித்தல் எல்லாம் பண்ணலாமா? அல்லது சுபம் முடிந்த பிறகுதான் ஆரம்பிக்க வேண்டுமா? தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது அடியேன்.
கேள்வியில் தெளிவு இல்லை. இருந்தாலும் நாங்கள் கேள்வியை புரிந்துகொண்டளவு பதிலைத் தெரிவிக்கிறோம்.
உறவாக இல்லையென்றால் தீட்டு கிடையாது.
மாத்யாஹ்நிகம் வடக்கு திசை நோக்கி பண்ண வேண்டும். இது ஒரு சாரார் கடைபிடிக்கிறார்கள். வடகலை திரிகால சந்தியா வந்தனம் (lifco edition) இதை கூறுகிறது. “Prapatti,com” ஸ்ரீ சுந்தர்கிடாம்பி ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹத்துடன் வெளியிட்டுள்ள சந்தியாவந்தனம் pdf ல் மாத்யாஹ்நிகம் கிழக்கு நோக்கி பண்ண வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ்மார்த்தர்களில் ஒரு சிலர் கிழக்கு நோக்கி தான் மாத்யாஹ்நிகம் பண்ணுகிறார்கள்.நான் பார்த்து வளர்ந்ததில் சூரியன் தலைக்கு நேராக வரும் வரை கிழக்கு பார்த்தும், பிறகு வடக்கு பார்த்தும் பண்ணணும். மேலும் அனுஷ்டானங்களில் வேறுபாடுகள் இருப்பதால், அவர் அவர் குடும்ப வழக்கப்படி / ஆத்து பிருஹஸ்பதி கூறுகிறபடி செய்யவும்னும் கேள்விப் பட்டிருக்கிறேன்.
சரியா? ஏன் இந்த முரண்பாடு? இதற்கு காரணம் என்ன? விளக்கம் தர வேண்டுகிறேன்
மாத்யாஹ்நிகம் கிழக்குப் பார்த்தும் பண்ணலாம், வடக்குப் பார்த்தும் பண்ணலாம். நீங்களே சொல்லியிருக்கிறமாதிரி முற்பகலில் பண்ணுவதாக இருந்தால் கிழக்குப் பார்த்தும், மத்யாஹ்னம் பண்ணுவதாக இருந்தால் வடக்குப் பார்த்தும் பண்ணுவார்கள். இதில் முரண்பாடு என்றொன்று கிடையாது.தங்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்களோ அப்படிப் பண்ணுங்கள்.
நம் சம்பிரதாயத்தில் பாகவதோத்தமர் என்றால் யாரைக் குறிப்பிடுகிறது ?
பாகவதர்கள் என்றால் பகவானைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிறந்தவர்கள் பாகவதோத்தமர்கள். யாரை வேண்டுமானாலும் அவ்வாறு சொல்லிக்கொள்ளலாம். நல்ல கைங்கர்யபரர்கள், நல்ல ஆசாரத்தோடு இருப்பவர்கள், நல்ல ஞானமுடையவர்கள், பகவானிடத்தில் ப்ரதிபத்தியோடு இருப்பவர்கள், நல்ல பக்தி, நல்ல வைராக்யத்துடன் இருப்பவர்கள் என இவர்களில் யாரை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். நம் மனதில் இவர்களைப் பாகவதோத்தமர்கள் என்று, கொண்டாடலாம்.
கும்பமேளா ஶ்ரீவைஷ்ணவர்களுக்கும் முக்கியப்பட்ட நிகழ்வா? ஏன் நம் ஸம்ப்ரதாய ஆசார்யர்கள் பெரியோர்கள் இதைப் பற்றி கூறவில்லை?
கும்பமேளாவில் கங்கா ஸ்நானம் விசேஷமாக இருக்கு. அது எல்லாருக்கும் முக்கியம் என்கிற ரீதியில் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கும் முக்கியம் என்பதைத் தவிர வேறொன்றும் கிடையாது. ஆசார்யர்கள் இதைவிட முக்கியமாக ஸம்ப்ரதாய விஷயத்தைச் சொல்லவே அவதரித்தவர்கள்.
ஆண்கள் எத்தனை காயத்ரி ஜபிக்கிறார்களோ அத்தனை அஷ்டாக்ஷரஜபமும் பண்ணவேண்டும் என்று காலக்ஷேபத்தில் அடியேன் தெரிந்துகொண்டேன்.
1. அந்த அஷ்டாக்ஷரஜபத்தை அவர்கள் காயத்ரீஜபத்தைத் தொடர்ந்தே பண்ணவேணுமா அல்லது ஸந்த்யாவந்தனம் பண்ணிவிட்டு பண்ணவேண்டுமா?
2. காயத்ரீ ஜபத்தைத் தொடர்ந்தே பண்ணவேண்டும் என்றால் த்வயஜபமும் சரமஸ்லோகமும் சேர்த்தே பண்ணவேண்டுமா? அல்லது தனியாகவா?
3. ப்ராதஸ்ஸந்த்யையில் மட்டும் அஷ்டாக்ஷரஜபமா மூன்றுவேளையுமா?
4. சரமஶ்லோகம் ஒருதரம் சொன்னால் போதுமா அல்லது அஷ்டாக்ஷரம் ஜபித்த எண்ணிக்கை சொல்லணுமா?
இதில் ஸம்ப்ரதாய பேதம் உண்டு, அதனால் அவரவர் ஆசார்யர்களையோ அகத்து வாத்யார்களையோ கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.
தனியாக என்று நினைக்கிறேன். இதிலும் ஸம்ப்ரதாய பேதம் உண்டு, ஏனென்றால் ஒவ்வொரு ஸம்ப்ரதாயத்திலும் ஒவ்வொரு மாதிரி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆகையால் ஆசார்யர்களையோ, மஹான்களையோ கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.
அஷ்டாக்ஷர ஜபம் மூன்று வேளையும் உண்டு.
சரமஶ்லோகம், அஷ்டாக்ஷரம் ஜபித்த எண்ணிக்கை என்று கிடையாது ஆனால் குறைந்தது 10 தடவையாவது சொல்லவேண்டும்.
ஒரு ப்ரபந்நனும் ஒரு முறையாவது கயா ஶ்ராத்தம் பண்ணவேண்டுமா?
கயா ஶ்ராத்தம் செய்யமுடிந்தால் அவசியம் செய்யலாம். ப்ரபந்நனாக இருந்தாலும் பெரியவர்கள் எல்லோரும் செய்திருக்கிறார்கள்.
பெற்றோர்கள் தங்களுக்கு ஸமாஶ்ரயணம் ஆனபின், தங்கள் குழந்தைக்கு உபநயனம் செய்வது நல்லது என்று ஒரு உபந்யாஸத்தில் கேட்டேன். ஏன் என்று தயவு செய்து விளக்கவும்.
பொதுவாக உபநயனத்திற்குப் பிறகுதான் ஸமாஶ்ரயணம் பண்ணுவது வழக்கம்.
ப்ராஹ்மணர் அல்லாத ஒரு வரை மணந்தால், அந்தப் பெண் அவர் பெற்றோர் வழி ஆசார்யனிடம் ஸமாஶ்ரயண, பரந்யாஸங்கள் செய்துகொள்ளலாமா?
அப்பெண் ஸமாஶ்ரயணம் மற்றும் பரந்யாஸம் செய்துகொள்ளலாம்.
வடகலையார் 4 முறையும், தெங்கலையார் ஒருமுறையும் சேவிப்பதன் காரணம் என்ன? மேலும் திருமண் தரிக்கும் முறையின் பேதத்தின் காரணமும் என்ன? என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
ஸ்வாமி தேஶிகன் பாஞ்சராத்ர ஆகம ப்ரமாணங்களையெல்லாம் எடுத்து 4 தடவை சேவிக்கவேண்டும் என்பதாக நிரூபணம் பண்ணியிருக்கிறார். அதேபோல் திருமண்ணும் இவ்வாறு இட்டுக்கொள்ள வேண்டும் என்றும், அது எத்தனை நீளம், அகலம் என்பதையும் பாஞ்சராத்ர ஶாஸ்த்ரபடி ஸச்சரித்ர ரக்ஷா என்ற க்ரந்தத்தில் எழுதியுள்ளார். அந்த ரீதியில் ஆகமப்படி ஸ்வாமி தேஶிகன் எடுத்துக்காட்டியதை வடகலையார் பின்பற்றிவருகின்றனர்.
தெங்கலையாருடைய ஸம்ப்ரதாயத்தின் மூலத்தை அந்த ஆசார்யர்களிடம்தான் கேட்கவேண்டும்
“சட்ட ரீதியாக மனைவியை விவாஹரத்து செய்த ஒருவரின் மனைவி பரமபதித்து விட்டால் (விவாஹரத்து செய்தவர் ஏற்கெனவே பரமபதித்து விட்டார்) பங்காளிகள் தீட்டு காக்க வேண்டுமா? [சாஸ்த்திரத்தில் விவாஹரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.]
ஆமாம் ஶாஸ்த்ரபடியாகச் செய்வதானால் தீட்டுகாக்க வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது.
எந்தத் திசையில் ஆசமனம், அர்க்ய ப்ரதானம்,ஜபம் .ஸ்ந்த்யாதி ,திக் வந்தனங்கள் எம்பெருமானை மட்டும் நோக்கி அனுஷ்டிக்க வேண்டுமா”
சென்ற இதழ்களில் தெரிவித்ததுபோல் கோயிலுக்குள்ளே பண்ணுவதாக இருந்தால், பெருமாள் இருக்கும் திசை நோக்கிச் செய்தல் வழக்கம். வெளியில் அவ்வாறு கிடையாது.
1. குளிக்கும் போது கச்சத்துடன் குளிக்கும் போது சிறு துண்டைக் கச்சமாக கட்டிக் கொள்ளலாமா.. அல்லது 9+5(10+6) தானா??சோப்பு போட்டுக் குளிக்கும் போது சங்கடமாக இருக்குமே??
2.பஞ்ச கச்சத்துடன் மூன்றாவது துண்டு கட்டிக்கொள்ள ஏதாவது நியமம் உண்டா?.
எல்லாரும் மூன்றாவது துண்டைக் கட்டிக்கொள்ளலாமா?
ஸ்நானத்திற்கென்று ஒரு வஸ்த்ரம் வைத்துக்கொள்வார்கள். ஸ்நானஶாடி என்று பெயர். அது சின்னதாக இருக்கும், குளிப்பதற்கென்று வைத்துக்கொள்வார்கள். அதில் அசௌகர்யங்களெல்லாம் வராது. அதை உடுத்திக்கொண்டால் தாராளமாக குளிக்க முடியும்.
மூன்றாவது துண்டு என்ற ஒன்று கிடையாது. வேஷ்டி உத்திரியம்தான்.
அடியேனின் அகத்துக்காரர் , அவரின் தந்தையுடன் கோவில் உத்ஸவ கைங்கர்யத்திற்குச் சென்றிருக்கிறார். அடியேன் பந்து ஒருவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி நடக்கவிருக்கிறது. அவர்களின் ஆசி பெற அகத்துக்காரருடன்தான் செல்லவேண்டுமா? அவர் கோவில் கைங்கர்யத்திற்கு சென்றிருக்கும் பக்ஷத்தில் குழந்தைகளுடன் சென்று ஆசி பெறலாமா? எது உத்தமம்?
முடிந்தால் இருவரும் சேர்ந்துபோய் சேவிக்கலாம். முடியாவிட்டால் தாங்கள் மட்டும்போய் சேவிப்பதில் தோஷமில்லை.
நித்யம் ஒவ்வொரு செயல் பண்ணும்போதும் சொல்ல ஏதேனும் ஶ்லோகம் உள்ளதா?
நித்யம் ஒவ்வொரு அனுஷ்டானத்தின் போது சொல்லவேண்டிய ஶ்லோகங்களெல்லாம், அதாவது சந்தியாவந்தனத்திற்கு முன் சொல்லும் ஶ்லோகம் அதன் ப்ரயோகத்திலேயே இருக்கிறது. ஒவ்வொரு சங்கல்பத்திலும் “ஶுக்லாம் பரதரம்” சொல்லவேண்டும் என்பதெல்லாம் அந்தந்த அனுஷ்டானத்திலேயே வரும்.
வேறு லௌகீக செயல்கள் என்றால், தூங்கி எழும்போது “ஹரி” நாமம் சொல்லவேண்டும் என்றும், உண்பதற்கு முன் “கோவிந்த” நாமம் சொல்லவேண்டும். மற்றபடி அந்தந்த அனுஷ்டானத்தின்போது அந்தந்த அனுஷ்டானத்தில் வரும் ஶ்லோகங்களைச் சொல்லவேண்டும்.
ப்ரயாக்ராஜ் (த்ரிவேணி சங்கமம்) தீர்த்த ஸ்நானம் மேற்கொள்ளும் முன் நாம் தங்கியிருக்கும் இடத்தில் தீர்த்தமாடிவிட்டுதான் செல்லவேண்டுமா? மேலும் த்ரிவேணி சங்கம நதிக்கரையில் ஶ்ராத்த திதி இல்லாவிட்டாலும் தர்ப்பணாதிகள் பண்ணலாமா?
ப்ரயாக்ராஜ்ஜில் தீர்த்தமாடும் முன் வெளியில் தீர்த்தமாடிவிட்டு அங்கு தீர்த்தமாடலாம். அப்படியில்லையென்றால் அங்கேயே தீர்த்தமாடிவிட்டு பின் சங்கல்பம் செய்து மீண்டும் தீர்த்தமாடலாம். ஶ்ராத்த திதி இல்லாவிட்டாலும் தர்ப்பணாதிகள் செய்வது அவ்வூரின் வழக்கமாக இருக்கிறது. அதற்கு சில வசனங்களும் இருக்கிறது. நம் பெரியவர்கள் அவ்வாறு செய்ததாக இல்லை. ஆகையால் தீர்த்தமாடிவிட்டு வரலாம் என்று தோன்றுகிறது.
1. ப்ரதோஷ கால அனுஷ்டானம் பற்றி விளக்கவும். 2. ஞானம், விக்ஞானம், பரக்ஞானம் என்றால் என்ன? 3. ஸ்வாமி தேஶிகன் திருவடி மேல் ஸ்தோத்ரம் பாடாததற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் உள்ளதா?
ப்ரதோஷ காலத்தில், அஸ்தமனகாலம் முன் ஒன்றரை மணி காலத்திற்கும், பின் ஒன்றரை மணி காலத்திற்கும் (3 மணி காலம்) மௌன வ்ரதம் சொல்லப்பட்டிருக்கிறது. பெரியவர்கள், ஆசார்யர்கள் இருந்திருக்கிறார்கள். அதேபோல் அக்காலத்தில் சாப்பிடக்கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. முடிந்தால் இவற்றை செய்யலாம். பாடங்கள், காலக்ஷேபங்கள், ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம், வேதாத்யயனங்கள் இவையெல்லாம் கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதுதான் நியமம்
ஞானம், விக்ஞானம், பரக்ஞானம் என்ற மூன்றும் ஒவ்வொரு இடத்திலும் அதாவது ஶ்ரீமத் பகவத் கீதை, வேதம் என ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் எந்த இடத்தில் குறிப்பிட்டு கேட்கிறீர்கள் என்று தெரிவிக்கவும்.
ஸ்வாமி தேஶிகன், திருவடி பற்றி தேவநாயக பஞ்சாஶத், பகவத் த்யான ஸோபானம் என்று பல இடங்களில் ஶ்லோகங்கள் பாடியுள்ளார். பாதுகா ஸஹஸ்ரம் மாதிரி தனியாகப் பண்ணவில்லையென்றால், திருவடி அந்த மாதிரி பண்ணிவைக்கவில்லை. ஒவ்வொரு ஸ்தோத்ரமும் அந்தந்தப் பெருமாள் தானே தேஶிகனைக் கொண்டு பண்ணிவைக்கிறார்.
1. யாரெல்லாம் ஸ்வேத தீப வாசிகள் ?
2. ப்ரபத்தி ஆன ஒருவர் பரமபதித்த பின்னர் நேரே ஶ்ரீவைகுண்ட லோகத்திற்குச் செல்கிறார். அப்படியிருக்க எதற்காக அவர்களுக்கு ஶ்ராத்தம்/தர்ப்பணாதிகள் பண்ண வேண்டும்?
ஸ்வேத தீபத்தில் நிறைய யோகிகள் இருந்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சனக-சனந்தனாதிகள் எல்லோரும் இருக்கிறார்கள் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒருவர் ஶ்ரீவைகுண்ட லோகம் போனாலும் அவருக்குள்ளே அந்தர்யாமியாக இருக்கும் பகவானைக் குறித்து ஶ்ராத்தாதிகள் பண்ணுகிறோம்.
நாம் ஒரு திவ்யதேசம் அல்லது அபிமான ஸ்தலம் அருகில் வசித்தால், பண்டிகைகளை அக்கோயிலை அனுசரித்தே நாம் கொண்டாட வேண்டும் என்ற ஒரு வழக்கம் உள்ளதா? விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
கோவிலை அனுசரித்துக் கொண்டாட வேண்டுமென்ற அவசியமில்லை. அவரவர் அகத்துப் பெரியவர்கள், ஆசார்யர் வழியை அனுசரித்துக் கொண்டாட வேண்டும்.
1. ப்ரஹ்மசாரிகள் அங்கவஸ்திரம் உடுத்திக்கொள்ள வேண்டுமா? ஆம் என்றால் எப்போதெல்லாம்?
2. அகத்துப் பெரியவர்கள் வெளியூர் சென்றிருந்தால், ப்ரஹ்மசாரி எம்பெருமானுக்குத் திருவாராதனம் பண்ணலாமா?
ப்ரஹ்மசாரிகள் அங்கவஸ்திரம் உடுத்திக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.
ஸமாஶ்ரயணம் ஆகி ஆஹ்நிக காலக்ஷேபம் ஆகி, திருவாராதனம் உபதேசமாகியிருந்தால் திருவாராதனம் பண்ணலாம்.
தாய்மாமா பரமபதித்து விட்டால் எத்தனை நாட்கள் தீட்டு? அவ்வருடம் பண்டிகைகள் கொண்டாடலாமா?
தாய்மாமா என்றால் சொந்த மாமா என்று புரிந்துகொண்டு பதிலளிக்கிறோம். புருஷனுக்காக இருந்தால் 3 நாள் தீட்டு. திருமணமான ஸ்த்ரீயாக இருந்தால் அவளுக்கு ஒன்றரை நாள் தீட்டு.
“1) எங்கள் வீட்டில் வளரும் துளசிச் செடியில் இருந்து கிடைக்கும் இலைகளை நான் பெருமாளின் திருவாராதனத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். ஜலதோஷத்திற்கு மருந்தாகத் துளசி கஷாயம் போட பயன்படுத்துவதில்லை. இதனால் என் குடும்பத்தினருக்கு என் மீது சற்று வருத்தம். நான் செய்வது சரியா, அல்லது சிறிது துளசி இலைகளைக் கஷாயம் போட பயன்படுத்தலாமா?
2) ஒரு உறவினர் அல்லது தெரிந்தவரின் இறப்பிற்குப் போகும்போது, நம் திருமண் அழியாமல் இருக்கும் பட்சத்தில் நாமே நம் திருமண்ணை அழிக்க வேண்டுமா?.
1. துளசியைப் பறிப்பதற்கென்று இருக்கும் காலத்தில் பறித்துவைத்துக்கொண்டு, எம்பெருமான் திருவாராதனத்திற்கு உபயோகப்படுத்தப்பட்ட அதே துளசியை கொண்டே கஷாயாமாகப் போடலாம், தவறில்லை. இல்லையென்றால் ஒரு செடியை எம்பெருமான் திருவாராதனத்திற்கும் மற்றொரு செடியை மருந்திற்கும் உபயோகிக்கலாம். ஆனால் துளசியை அந்தக் காலத்தில்தான் பறிக்கவேண்டும்.
2. துக்கம் விசாரிக்க திருமண்ணை அழிக்கவேண்டுமென்றில்லை. திருமண்ணோடே போகலாம், தவறில்லை.
மாத ஸங்க்ரமணத்திற்குப் புண்யகால சமயங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. விஷுவிற்கு 20 நாழிகை மற்றும் 10 நாழிகை என்றும், விஷ்ணு பதிக்கு 16 நாழிகை என்றும் ஷடசீதிக்கு 60 நாழிகை என்றும். இரவில் ஸங்க்ரமணம் ஏற்பட்டால் முன் இரவானால் முன் தினமும் பின் இரவானால் மறு தினம் தர்ப்பண காலம் என்று. இவை அனைத்தும் விஷு மற்றும் விஷ்ணுபதிகளில் புரிந்து கொள்ள முடிகிறது. ஷடசீதிக்கு வரும் போது மாதம் பிறந்த பிறகு 60 நாழிகையை எப்படிப் புரிந்து கொள்வது? பகல் 30 பொழுது நாழிகையே, இரவென்றால் அதற்கு வேறு நியமம். சற்று தெளிவிக்க ப்ரார்த்தனை.
பூர்வ இராத்தியில் ஸங்க்ரமணமாக இருந்தால் அன்றே புண்யகாலம், தர்ப்பணாதிகள் அன்றே பண்ணவேண்டும். அபர இராத்திரியில் ஸங்க்ரணமாக இருந்தால் தர்ப்பணாதிகள் மறுநாள் பண்ணவேண்டும். மத்திய இராத்திரியில் இருந்தால் இரண்டு நாளும் பண்ணலாம் என்று ஒரு வசனம் இருக்கு. அதிலும் மத்திய இராத்திரியாக இருந்து, ஷடசீதியாக இருந்தால் தர்ப்பணம் மறுநாள்தான் பண்ணவேண்டும். இந்த நியமத்திற்கு அபவாதமாக இரண்டு அயனம்தான் வரும். தஷிணாயனமாக இருந்தாலும், உத்தராயணமாக இருந்தாலும் தர்ப்பணம் உத்தராயணத்தில்தான் பண்ணவேண்டும்.
பாக்கி மாதங்களிலெல்லாம் ஷடசீதியாக இருந்தாலும், பூர்வ இராத்திரியாக இருந்தாலும் – பூர்வ இராத்திரியில் ஸங்க்ரமணம் இருந்தால் மத்யானத்தில் தர்ப்பணம் பண்ணவேண்டும் [மத்யானாந் உபரி க்ரியா என்ற வசனத்தின்படி].
நாம் பொதுவாக அஷ்டமி, நவமி நாட்களில் எந்தச் சுப கார்யமும் ஏன் செய்வதில்லை? எம்பெருமான் அவ்விரண்டு நாட்களைத் தேர்ந்தெடுத்துதானே இராம க்ருஷ்ணாதி அவதாரங்களை எடுத்தார். அப்படியிருக்க அனைத்து நாட்களுமே நல்ல நாட்கள்தானே. குறிப்பாக இவ்விரண்டு நாட்களைத் தவிர்ப்பதன் காரணம் என்ன என்று விள்ளக்கவும்.
அஷ்டமி, நவமியில் சில காரியங்கள் பண்ணலாம், சில காரியங்கள் பண்ணுவதில்லை என்பதெல்லாம் ஜோதிஷ ஶாஸ்த்ரம். எம்பெருமானின் திருவவதாரம் என்பது வேறு. அவன் திருவவதாரம் பண்ணியதால் அனைத்து அஷ்டமியும் நவமியும் நல்லது என்றில்லை. அஷ்டமி நவமி தினத்தில் ஜோதிஷ ஶாஸ்த்ரத்தை அனுசரித்து நல்ல காரியங்களைப் பண்ணுவதில்லை.
ப்ரபத்தி ஆன ஒருவர் தன் மகளின் சலங்கைப் பூஜைக்குச் செல்லலாமா? அங்கு அவர்கள் நடராஜருக்குதான் பூஜை செய்து சலங்கை கொடுக்கிறார்கள். இதனால் தேவதாந்த்ர ஸம்பந்தம் ஏற்படுமா?
சலங்கைப் பூஜை என்பது அந்த நாட்டியத்திற்கு அதிபதியான தேவதையைக் குறித்து செய்வது. போகாமல் இருக்கமுடியுமானால் நல்லது. போனாலும் குழந்தையைதானே கூப்பிட்டுச் செய்யப்போகிறார்கள் ஆகையால் நாம் அங்கு நின்று சேவிப்பது போன்றவையெல்லாம் செய்யாமல் இருக்கலாம். நாம் சேவிக்கவேண்டிய அவசியமில்லையே.
A. பட்டு வஸ்த்ரம் உடுத்திக்கொண்டு தர்ப்பணம் பண்ணலாமா?
B. தர்ப்பணம் அமர்ந்துகொண்டுதான் பண்ணவேண்டுமா? அல்லது நின்றும் பண்ணலாமா? சில ஶரீர உபாதை காரணமாக நீண்ட நேரம் கீழே அமர இயலாது ஆகையால் இக்கேள்வி.
சிலர் பட்டு வஸ்த்ரம் உடுத்திக் கொண்டு செய்வார்கள். அது பெரியோர்கள் வழக்கத்தில் இல்லை. முடிந்த வரை தவிர்ப்பது உசிதம். ஆனால், சுத்தமான வஸ்த்ரம் உடுத்திக்கொண்டுதான் பண்ண வேண்டும்.
தர்ப்பணம் உட்கார்ந்து கொண்டுதான் பண்ணவேண்டும். முடியாத பக்ஷத்தில், ஏதாவது பலகை அல்லது நாற்காலியில் அமர்ந்துகொண்டு மேடை மேல் நாம் சேர்க்கும் ஜலம் கீழே நம் காலில் படாதபடி பண்ணவேண்டும்.
சிறுதான்ய வகைகளை உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஏகாதசி அன்று உட்கொள்ளலாமா? இது அரிசி சாதம் சாப்பிட்டதற்குச் சமம்மாகுமா?
ஶாஸ்த்ர ரீதியில் இருக்கும் சில சிறுதான்ய வகைகளை உட்கொள்ளலாம்.
அடியேனுக்கும் , என் பாரியாளுக்கும் சமீபத்தில் ஆசார்யன் திருவடியில் ஸமாஶ்ரயணமும், பரந்யாஸமும் ஆயிற்று. அடியேன் ஒரு பஜனை குழுமத்தில் கடந்த 6 வருடங்களாக பாடகராக இருக்கின்றேன். பல கோயில்களுக்குச் சென்று தாயார்,பெருமாள், சிவன்,பிள்ளையார், அம்பாள் என அனைவரையும் பற்றி பாடுவேன் இருப்பினும் தேவதாந்தரங்களிடம் ப்ரார்த்தனை ஏதும் செய்யமாட்டேன். பரந்யாஸம் ஆனபின் அதைத் தொடராலாமா?
பரந்யாஸம் ஆனபின் தேவதாந்த்ரங்களைப் பாடக்கூடாது, ப்ரார்த்தனை பண்ணக்கூடாது.
நித்யபடி ப்ரதோஷ காலம் என்பது எவ்வளவு நேரம்? அப்போது செய்ய வேண்டியவை/கூடாதவை எவை? அந்தச் சமயத்திலும் அனத்யயன நாட்களிலும் திருக்கோயில்களில் வேத பாராயணம் செய்யலாமா? மஹாப்ரதோஷம் விசேஷ விதிகள் உள்ளனவா? அன்று கோயில் பாராயணம் செய்யலாமா?
நித்யபடி அஸ்தமனகாலம்தான் ப்ரதோஷ காலம். அந்தச் சமயத்தில் செய்யவேண்டியது சந்தியாவந்தனம் முதலானவை, செய்யக்கூடாது வேதாத்யயனம், உறங்குதல் முதலானவை.
கோயில்களில் வேத பாராயணம் அந்தச் சமயத்தில் ப்ரசக்தமாக இருந்தால் பண்ணலாம்.
மஹாப்ரதோஷத்திற்கு விசேஷ விதிகள் உள்ளது. ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்யக்கூடாது போன்றவை.கோயில் பாராயணம் உத்சவாதி சமயங்களில் செய்யலாம். மஹாப்ரதோஷத்தில் மௌனம் சொல்லியிருக்கு ஆனால் அந்தச் சமயத்தில் கோயில் பாராயணம் இருந்தால் செய்யலாம்.
அனத்யயன நாளில்கூட கோயிலில் வேத பாராயணம், நித்யபடி பாராயணம் என எல்லாம் பண்ணலாம். அகத்தில் சொல்லக்கூடாது என்பது மட்டும்தான்.
நித்யபடி ப்ரதோஷம் என்று குறிப்பிட்டு ஏதும் இல்லை.
சிலர் காசி/கயாவில் ஆத்ம பிண்டம் கொடுக்கிறார்கள் என்று கேள்விபட்டுள்ளேன். ஒருவர் உயிரோடு இருக்கும்போதே ஆத்மபிண்டம் கொடுத்தால், அவர்கள் பரமபதித்த பின் ஶ்ராத்தம் தேவையில்லையா? தெளிவுபடுத்தவும்.
ஆத்மபிண்டம் கொடுத்தபின் ஶ்ராத்தம் தேவையில்லை என்று கேள்விப்பட்டதே இல்லை. ஏனென்றால் எல்லோரும் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறார்கள். விவரமாக பின்பு சொல்கிறோம்.
1. நதிகளில் ஸ்நானாதி ஸங்கல்பம் தத்தாங்க தர்ப்பணம் கிழக்கு முகமாக மட்டுமே செய்ய வேண்டுமா அல்லது நதி ப்ரவாக திசையில் செய்யலாமா? (நம் பக்கம் பொதுவாக மேற்கிலிருந்து வருகிறது)
2. கோயிலுக்கு வெளியே பின்புறம் அல்லது முன்புறம் உள்ள புஷ்கரிணியில் அனுஷ்டானம் செய்யும் போது எந்தத் திசையில் செய்ய வேண்டும்?. பெருமாள் இருக்கும் திக்கை நோக்கியா?
3. தற்போதைய நிலையில் மாத்யாஹ்நிகம் காலை வேளையில் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படிச் செய்தால் மீண்டும் மாத்யாஹ்நிக வேளையில் செய்ய வேண்டுமா?
4 அமாவாசை மற்றும் இதர தர்ப்பண நாட்களில் கீரை வகைகள், பூசனி, பரங்கி சேர்த்துக் கொள்ளலாமா அல்லது ஶ்ரார்த்தங்களுக்கு உகந்தவைகளை மட்டுமே செய்ய வேண்டுமா?
நதிகளில் சங்கல்பம், ஸ்நானாங்க தர்ப்பணம் இவையெல்லாம் கிழக்குப் பார்த்துதான் பண்ணவேண்டும். நதி ப்ரவாகம் பார்த்து பண்ணவேண்டாம். ஸ்நானம் மட்டும்தான் ப்ரவாகம் பார்த்து பண்ணனும்.
கோயிலில் பெருமாள் இருக்கும் திசைப் பார்த்து அனுஷ்டானம் பண்ணலாம். அதில் அசௌகர்யம் இருந்தால் கிழக்கு, மேற்கு என்று அந்தந்த அனுஷ்டான சமயத்திற்கு ஏற்றவாரு ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டுள்ள திக்கை நோக்கிப் பண்ணலாம்.
மாத்யாஹ்நிகம் காலை செய்துவிட்டால் மறுபடியும் மத்தியானம் செய்யவேண்டாம்.
தர்ப்பண நாட்களில் பூசனி, பரங்கி பண்ணும் வழக்கமில்லை.
அடியேனின் பெருமாள் சந்நிதி கிழக்குப் பார்த்திருக்கிறது. அங்கு எம்பெருமான் படங்கள் அனைத்து திசைகளிலும் (தெற்கு உட்பட) வைக்கலாமா?
பெருமாள் கிழக்கு பார்த்து எழுந்தருளியிருக்கிறார். படங்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும்தான் இருக்கும், அப்படித்தான் வரும். அதனால் பெரிய பாதகமில்லை என்று சொல்லுவர்கள். சில அகங்களில் தெற்கு பார்த்து படம் வைக்கவேண்டாம் என்று பெரியவர்கள் சொல்லியிருந்தால் வைக்கவேண்டாம். ஆகையால் உங்கள் அகத்துப் பெரியவர்களின் சொல்படி கேட்டுச் செய்யவும்.
எனது அகத்துக்காரர் தென்கலை சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை 2 வாரத்திற்கு முன் பரமபதித்துவிட்டார். இவர் இரண்டாவது புத்திரன். எங்கள் அகத்தில் 2 சாளக்கிராம மூர்த்திகள் ஏளியிருக்கிறார்கள். என் கணவர் பெருமாளுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
சாளக்கிராம மூர்த்திக்கு திருவாராதனம் பண்ணலாம்.
நம் ஸம்ப்ரதாயத்தில் உத்தான துவாதசி மற்றும் துளசி பூஜை (விவாஹம்) கொண்டாடும் வழக்கம் உண்டா? உண்டு என்றால் எப்படிக் கொண்டாட வேண்டும்?
துளசி பூஜை என்பதெல்லாம் அவரவர்கள் அகத்தில் பண்ணும் வழக்கமிருந்தால் அவர்கள் சொல்வதுபடி பண்ணலாம். ஸம்ப்ரதாயத்தில் நம் குருபரம்பரையில் இதைப் பற்றி எடுத்துச் சொல்லவில்லை. ஆகையால் அகத்தில் வழக்கமிருந்தால் பண்ணலாம்.
ஶ்ரீமத் ரஹஸ்ய த்ரய காலக்ஷேபத்தில் எம்பார் வ்ருத்தாந்தம் பற்றி ஸ்வாமி சாதித்தார். அடியேனின் அகத்துக்காரர் ஆக்ஞா கைங்கர்யங்களைச் செய்வதில்லை. அதற்கான அபராத க்ஷமாபனம் யாரிடம் ப்ரார்த்திக்க வேண்டும்? என்னுடைய ஆசார்யனிடமா அல்லது என் அகத்துக்காரரின் ஆசார்யனிடத்திலா?
ஆக்ஞா கைங்கர்யங்களைச் செய்யவில்லை என்றால், யார் செய்யவில்லையோ அவர்தான் அபராத க்ஷமாபனம் செய்யவேண்டும். அதைப் பண்ணுவதைக் காட்டிலும் தொடர்ந்து ஆக்ஞா கைங்கர்யகளைப் பண்ணவேண்டும் ஏனென்றால் அது நித்யம் பண்ணவேண்டிய கைங்கர்யம். அதைச் செய்யாமல் இருந்துவிட்டு நித்யம் அபராத க்ஷமாபனம் பண்ணுவதை ஶாஸ்த்ரம் அனுமதிக்கவில்லை. ஆகையால் அதை ஆரம்பித்து தொடர்ந்து பண்ணுவதே முக்கியம்.
13 நாள் அபர கார்ய கைங்கர்யம் என்றால் என்ன? ஒரு ப்ரபந்நன் விஷயத்திலும் ப்ரபந்நன் அல்லாதவர் விஷயத்திலும் எவ்வாறு வேறுபடும்? ப்ரபந்நன் அல்லாதவர் பரமபதித்தாலும் நாம் ஏன் “ஆசார்யன் திருவடியை அடைந்தார்” என்றே சொல்கிறோம்?
பொதுவாக நம் அகங்களில் ஶரணாகதி பண்ணவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால் பெரியளவில் பேதங்களெல்லாம் நமக்குத் தெரியாது. எல்லோரும் ஶராணாகதி பண்ணியிருக்கிறார்கள், எல்லோருக்கும் ஆசார்யன் திருவடியை அடைந்தார் என்று சொல்கிறோம். 13 நாள் கார்யங்கள் விசேஷமாகச் செய்கிறோம்.
ப்ரபந்நன் அல்லாதவர்களுக்கும் சுபம் முதலியவைகளெல்லாம் உண்டு. ப்ரபந்நர்களுக்குப் பண்ணுவதுபோல் சேவாகாலம் என எல்லாம் அவர்களுக்கும் பண்ணலாம் அதனால் தோஷம் கிடையாது. நம் வழக்கத்தை விடாமல் இருக்க ஆசார்யன் திருவடியை அடைந்தார் என்று போடுகிறோம். அவர் ஶரணாகதி பண்ணிக்கொள்ளவில்லையென்றால் அந்த ஆத்மாவிற்கு புனர்ஜன்மங்கள் எல்லாம் உண்டு.
1) திவ்யப் பிரபந்தங்களுக்கு அனத்யயன காலம் என்பது எது? அக்காலத்தில் நாம் திருப்பல்லாண்டு, திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி முதலியவைகளைக்கூட சேவிக்கக்கூடாதா? அனத்யயன காலத்தில் திருவாராதனத்தின்போதுகூட எந்த ஆழ்வார் பாசுரங்களையுமே சேவிக்கக்கூடாதா?
2) சாளக்கிராம மூர்த்திகளின் பெயர்கள், மற்றும் அம்மூர்த்திகளை அடையாளம் கண்டுபிடிக்கும் வழிகள் எந்தக் கிரந்தங்களில் உள்ளன?”
திவ்ய ப்ரந்த அனத்யயன காலத்தில் பொதுவாகவே நாலாயிர திவ்யப்ரபந்தம் சேவிக்கக்கூடாது என்பார்கள் ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி சேவிக்கும் வழக்கமுண்டு.
இதைப் பற்றி பார்த்து பின்னர் சொல்கிறோம்.
அடியேனின் மகன் ஶ்ரீவைஷ்ணவர் ஒருவரை தண்டம் சமர்ப்பித்து அபிவாதனம் சொல்லிய பின் அவர் அபிவாதனத்திற்கு பதில், “ராமானுஜ தாசன்” என்று சொன்னாலே போதுமானது என்றார். இதில் எது சரி?
அபிவாதனம் பண்ணும் போது “இராமானுஜ தாசன்” என்று சொல்வது நல்லதுதான். ஆனால் கோத்ரம், சூத்ரம், வேதம், சாகை அதை அனுசரித்துதான் எல்லா அனுஷ்டானங்களும் வரும். அதாவது, சந்தியாவந்தனம், விவாகம், உபநயனம், சீமந்தம் என அனைத்தும் வரும். ஏனென்றால் சூத்ரத்திற்கு சூத்ரம் ஆவணி அவிட்டம் உட்பட எல்லோமே மாறுபடும். அவர்வர்களின் கோத்ரம், சூத்ரம் அனைவரும் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும் அதை மறக்கக்கூடாது. அதனால்தான் அந்தக் கோத்ரம், சூத்ரத்தைச் சேர்ந்தவன், ரிஷிகள் (இந்த ரிஷிகள் அனைவருமே மஹான்களான வைஷ்ணவர்கள்தான்) பெயர்கள் என சொல்லணும். இராமானுஜ தாசன் என்று இத்துடன்தான் சொல்லவேண்டும். இவைகளை விட்டால் நமக்கு சந்தியாவந்தனம், யக்ஞோபவீதத்திலிருந்து ஆரம்பித்து எந்த அனுஷ்டானமமே நிக்காது.
இராமானுஜதாசன் என்பது ஸாம்ப்ரதாயிகமானது. அபிவாதனம் வைதீகமானது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படாது இது போதும் அது வேண்டாம் என்று இல்லை. இரண்டுமே தேவை.
ஶ்ரீ உ வே கண்ணன் ஸ்வாமி, உண்பதில் எண்பது என்ற உபந்யாஸத் தொடரில் ஸமாஶ்ரயணம் ஆகாதவர்கள் பண்ணிய தளிகையை (கன்யா பெண்கள், உபந்யாஸம் ஆகாத புருஷர்கள்) சாப்பிடக்கூடாது என்றார். ஸமாஶ்ரயணம் ஆனபின்னும் போதுமான ஆசாரம் கடைபிடிக்க முடியாமல் சம்சாரத்தில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும் என்றார். ஸமாஶ்ரயணம் ஆனபின் நாம் கடைபிடிக்க வேண்டியவை என்ன என்று தெளிவிக்கவும்.
ஸமாஶ்ரயணம் ஆனபின்
ரொம்ப முக்கியமானது பகவானின் ப்ரசாதம் தவிர வேறு ப்ரசாதம் சாப்பிடக்கூடாது என்பது. வைஷ்ணவர்களின் க்ருஹத்தில் பகவானுக்கு ஆராதனம் பண்ண ப்ரசாதம்தான் சாப்பிடவேண்டும்.
எச்சில் தீட்டு கலந்த அஹாரங்கள் சாப்பிடக்கூடாது.
முடிந்தவரை சந்தியாவந்தனத்துடன், மந்த்ர ஜபங்களெல்லாம் பண்ணிக்கொண்டு இருக்கணும்.
இது போன்றவையெல்லாம் கடைபிடிக்க வேண்டியது.
பெண்களைப் பொறுத்தவரை கல்யாணம் என்பதுதான் உபநயன ஸம்ஸ்காரம் போன்றது. புருஷர்களுக்கு உபநயனமும், பெண்களுக்கு திருமணமும் ஆனபின்தான் தளிகைப் பண்ண ஆசார ரீதியான தகுதி உண்டாகும். அதற்கு முன் ஆசார ரீதியாக தளிகைப் பண்ணும் தகுதி வராது.
அடியேனின் அகத்துக்காரர் திருமண்காப்பு நாள் முழுவதும் தரித்துக்கொள்வார், சில நேரம் உறங்கும் முன் முகம் அலபும் வழக்கம் உண்டு. உறங்கும் போதும் தரித்திருக்க வேண்டுமா?எது சரி?
உறங்கும் முன் திருமண்காப்பை அலம்புவது சரியிலை. உறங்கும்போதும் திருமண்காப்புடன் உறங்கவேண்டும் என்று ஸ்வாமி தேஶிகன் சாதித்துள்ளார். காலை ஸ்நானத்தின் போதுதான் நாம் மறுபடியும் இட்டுக்கொள்வதற்காக அலம்புகிறோம்.
பக்ஷம்,நக்ஷத்திரம்,நாழிகை கொண்டு ஒரு பண்டிகையை எப்படிக் கண்டுபிடிப்பது? சூர்யோதயத்திலிருந்து எப்படி நாழிகையை கணக்கு பண்ணவேண்டும்? பஞ்சாங்கத்தில் இருக்கிறது என்றாலும், USA போன்ற தேசங்களில் இருக்கும் எங்களுக்கு எப்படிப் பார்க்கவேண்டும் என்று சொன்னால் நாங்களே பண்டிகை நாட்களை பார்க்கச் சௌகர்யமாக இருக்கும்.
நாழிகையை சூர்யோதயத்திலிருந்து கணக்கு பண்ணவேண்டும். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்.
1. புரட்டாசி மாத சுதர்சனம் கேள்வி பதில் பகுதியில் குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு முன் கோவிலுக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறி உள்ளது. அப்படிச் சென்றால், குழந்தைக்குச் சடாரி சாதித்துக் கொள்ளலாமா?
2. அவரவர் பிறந்த நக்ஷத்திர தினத்தன்று அவரவர் பெயரில் கோயிலில் அர்ச்சனை செய்வது வழக்கத்தில் உள்ளதே. பரந்யாஸாம் ஆன பிறகு நம் பெயரில் அர்ச்சனை செய்யலாமா ?”
அவர்கள் சடாரி சாதித்தால் சாதித்துக்கொள்ளலாம்.
ஆத்மாவை பெருமாளிடம் ஸம்ர்ப்பித்த பின் நமக்கு என்று எதுவும் வேண்டாம் என்ற ரீதியில் பெருமாள் பெயரிலேயே அர்ச்சனை செய்வது வழக்கம். நம் பெயரில் செய்யும் வழக்கமில்லை. செய்தாலும் பாதகமில்லை.
பரந்யாஸத்திற்குப் பிறகு ஒரு ப்ரபந்நன் 1.ஆஞ்சநேயரைச் சேவிக்கலாமா? 2.கைங்கர்யம் பண்ணலாமா? 3.ப்ரார்த்தனை பண்ணலாமா?
ப்ரந்யாஸத்திற்குப் பிறகு ப்ரபந்நன் ஆஞ்சநேயரைச் சேவிக்கலாம். அவருக்கு கைங்கர்யமும் பண்ணலாம், அவரிடம் ப்ரார்த்தனையும் பண்ணலாம்.
கோவிலோடு ஒட்டி இருக்கும் திருவடி கோயிலிலோ அல்லது பெருமாள் சந்நிதியிலோ இருக்கும் திருவடிக்கு எல்லாம் செய்யலாம்.
ஒருவர், வைதீகர், வைதீகர் அல்லாதவர்,புருஷர்,ஸ்த்ரீ பரமபதித்த பிறகு சுப தினத்தில் யாருக்கு வேண்டுமானாலும் வேத பாராயணம் செய்யலாமா? இல்லை வைதீகருக்கு மட்டும்தான் வேத பாராயணம் செய்ய வேண்டுமா?முந்தைய கேள்வியில் சிறிய தவறு உள்ளதால் மறுபடியும் இந்தக் கேள்வியை முன்வைத்து உள்ளேன்.
வைதீகர் என்று யாரைக் குறிப்பிடுகிறார், ப்ராஹ்மணரையா அல்லது வேதாத்யயனம் செய்தவரையா என்பது கேள்வியில் புரியவில்லை அதனால் பதில் சொல்வது சிரமமாக இருக்கிறது.
1. ஜனன, மரண ஆஶௌச காலங்களில் சந்தியாவந்தனம் அனுஷ்டிக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி அறிய ஆவல்.
2. மேலும் இரவு, பகல் என்று தொலை தூர பிரயாணங்கள் போது ஸ்நானம் செய்யாமல் ஜலம் இல்லாமல் மந்திரார்த்தமாகச் செய்யலாமா?
3. ஆஶௌச காலங்களில் சங்க்ரஹமாகச் செய்யவேண்டும் என்றும் காயத்ரி ஜபமும் பத்து எண்ணிக்கை செய்யலாம் என்றும் கூறுகிறார்கள். ஜனன, மரண என இரண்டு ஆஶௌசங்களுக்கும் ஒரே மாதிரி நியமங்களா அல்லது வெவ்வேறா? ஶாஸ்த்திரத்தில் இதைப் பற்றிய குறிப்பு இருக்கிறதா? விவரம் அறிந்து அனுக்ஷ்டிக்கத் திருவுள்ளம் பற்றி இருக்கிறேன்.
1. நீங்களே மூன்றாவது கேள்வியில் குறிப்பிட்டுள்ளீர்கள் சங்க்ரஹமாகச் செய்யவேண்டும், 10 எண்ணிக்கை செய்யவேண்டும் என்பதெல்லாம் ஜனன, மரண என இரண்டு ஆஶௌச காலத்திலும்தான். மேலும், அங்கந்யாஸ கரந்யாஸங்கள் செய்யும் வழக்கமில்லை. ஜபம், ப்ராணாயாம மந்திரங்களை வாயால் சொல்லக்கூடாது, மனதில் சொல்லிக்கொள்ள வேண்டும் என்பவைதான் நியமம்.
2. தூர பிரயாணங்கள் போது மந்திரார்த்தமாக சந்தியாவந்தனம் செய்யலாம். இருப்பினும் மறுநாள் ஜலமுள்ள இடத்திற்குச் சென்றபின் முதல்நாளுடைய சந்தியாவந்தனமும் சேர்த்து பண்ணவேண்டும்.
3. ஜனன மரண ஆஶௌசத்திற்கு ஒரே மாதிரியான சந்தியாவந்தன நியமம்தான். குறிப்பு என்று எதைக் கேட்கிறீர்கள் என்பது புரியவில்லை.
வ்ருத்தி தீட்டில் ஸ்தோத்ர பாடம் சேவிக்கலாமா?
வ்ருத்தி தீட்டில் ஸ்தோத்ர பாடம் சேவிக்கலாம்.
ஸ்நானம் செய்யும் போது வஸ்த்ரம் கச்சத்துடன் இருக்க வேண்டுமா? வெறும் துண்டு மட்டும் போதுமா?
ஆமாம் கச்சத்துடன் தான் ஸ்நானம் பண்ணவேண்டும். கச்சமில்லாமல் வஸ்த்ரத்துடன் ஸ்நானம் செய்யக்கூடாது.
த்ரிகால சந்தியாவந்தனத்தில் காயத்ரி மஹாமந்திர ஜப சங்கல்பத்தில் எண்ணிக்கையை (10, 28, 108 என்று) சொல்லாமல் ..… ப்ராதஸ் சந்த்யா காயத்ரி மஹாமந்த்ரம் கரிக்ஷ்யே என்று சங்கல்பம் செய்யலாமா ? (சங்கல்பத்தில் செய்த எண்ணிக்கைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஜபிக்க கூடாது என்று கூறப்படுவதால் இந்தச் சந்தேகம்).
காயத்ரி ஜபத்தை எண்ணிக்கையோடு செய்வதுதான் விசேஷம். எண்ணாமல் செய்வதைவிட எண்ணிக்கையோடு செய்வதுதான் விசேஷம் என்று ஶாஸ்த்ரம் சொல்லியிருக்கிறது.
புஷ்கரிணி அல்லது நதி ஸ்நானம் செய்யும் போது ஆசமனம், அர்க்ய ப்ரதானம் போன்ற அனுஷ்டானங்களை நீரில் நின்ற நிலையில் அல்லது எப்படிச் செய்யவேண்டும்?
புஷ்கரிணி அல்லது நதி ஸ்நானம் செய்யும்போது கரையில் இருந்து ஜலத்தில் பண்ணக்கூடாது. ஜலத்தில் விடுவதாய் இருந்தால், ஜலத்தில் நின்றுதான் செய்தல் வேண்டும். இடதுகையால் ஜலத்தைத் தொட்டுக்கொண்டு வலதுகையால் ஆசமனம் பண்ணவேண்டும்.
பப்பாளி, அன்னாசி, சீதாபழம், Dragon, pear போன்ற பழங்களை ஆசார்யனுக்கும், எம்பெருமானுக்கும் ஸமர்ப்பிக்கலாமா?
அன்னாசி, சீதாபழம் எல்லாம் ஸமர்ப்பிப்பார்கள். பப்பாளி, Dragon போன்ற பழங்கள் ஸமர்ப்பிப்பதாகத் தெரியவில்லை
நாம் யாருக்கு ஶ்ராத்தம் செய்கிறோமோ அவரின் படத்தை ஶ்ராத்தம் செய்யும் இடத்தில் வைக்கலாமா?
நாம் யாருக்கு ஶ்ராத்தம் செய்கிறோமோ அவர்களின் படத்தை வைக்கும்முறை நம் ஸம்ப்ரதாயத்தில் வழக்கமில்லை.
கோவில்களில் சந்தியாவந்தனம் பண்ணும் முறை எப்படி ? கிழக்கு , வடக்கு திக்குகளை நோக்கியா ? அல்லது மூலமூர்த்தியான ஸ்வாமியை நோக்கியா ? ( குறிப்பு :எண்திசைகளும் ஸ்வாமிக்கு ஆடையாக இருப்பதால் திக்குகளை நோக்கிப் பண்ணாமல், ஸ்வாமியை நோக்கிப் பண்ணினால் போதும் – என்று எங்கோ படித்ததாக நினைவு)
கோவில்களில் சந்தியாவந்தனம் பண்ணும்போது பெருமாள் இருக்கும் திக்கு நோக்கி பண்ணலாம். வேறு இடத்தில் கிழக்கு, வடக்கு, மேற்கு என்று எப்படியிருக்கிறாதோ அப்படிப் பண்ணவேண்டும்.
கோவிலில் பெருமாள் இருக்கிறபடியாலே அவரையே குறித்து சாக்ஷாத்தாகப் பண்ணுவதாய் வைத்துக்கொண்டு பெருமாள் இருக்கும் பக்கம்பார்த்து சந்தியாவந்தனம் செய்யும் வழக்கமுண்டு. பெரியோர்கள் அவ்வாறு செய்யும் வழக்கமும் உண்டு.
வேலை காராணமாக நாங்கள் வேறு நகரத்திலும் என் மாமியார் மாமனார் வேறு நகரத்திலும் இருக்கின்றோம். எனது கணவரும் எனது தந்தையும் நித்யமும் சாளக்கிராம திருவாராதனம் செய்வார்கள். என் புக்கத்திலோ அல்லது பிறந்தகத்திலோ நாங்கள் மாவிளக்கு போடுவோம். ஆனால் இம்முறை வேறு நகரத்தில் இருப்பதால் என்ன செய்வது? நாங்கள் இருக்கும் அகத்திலும் ஏற்றாலாமா? அதாவது இரண்டு அகத்திலும் (புக்ககம் மற்றும் நாங்கள் இருக்கும் நகரம்) மாவிளக்கு ஏற்றலாமா?
இக்கேள்வி கேட்டவர்களின் மாமனார் மாமியார் நீங்களும் தனியாக ஏற்றலாம் என்று சொன்னால்,தனியாக ஏற்றலாம். இல்லை பெரியவர்கள் நாங்கள் ஏற்றுகிறோம் அதுவே போதும் என்று சொல்லிவிட்டால் அப்படியே பின்பற்றுவது. அகத்துப் பெரியவர்கள் சொல்படி நடந்துகொள்வது.
ஒருவர் ஆசார்யன் திருவடியை அடைந்த பிறகு சுபம் தினத்தில் வைதீகர் மற்றும் வைதீகர் அல்லாதவர்,புருஷர் மற்றும் ஸ்த்ரீ இவர்களுள் யார் வேத பாராயணம் செய்ய தகுதி உள்ளவர்கள்? சுபத்தில் வேத பரயணத்தில் என்ன பாராயணம் செய்ய வேண்டும்? வேத சாற்றுமுறையில் நமது ஆசார்யன் உரைத்துள்ள வேத பஞ்சாதிகள் மட்டும் தான் சேவிக்கணுமா?
ஸ்த்ரீகள் வேதபாராயணம் செய்யமுடியாது. புருஷர்கள் யார் வேதாத்யயனம் செய்துள்ளார்களோ அவர்கள் பண்ணலாம். சுபத்தன்று பொதுவாக உபநிஷத் பண்ணலாம். முடிந்தால் ஸம்ஹிதையில் சிறிதுபாகம் பண்ணலாம்.
வேத சாற்றுமுறைக்கென்று சில பஞ்சாதிகள் (கடைசி பஞ்சாதி) இருக்கின்றன, அதற்குப் புத்தகங்கள் இருக்கின்றன. அதைச் சேவிக்கலாம்.
கோயில்களில் இருந்து வெளியே வருவதற்கு முன் சிறிது நேரம் உட்கார வேண்டும் என்ற விதி நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் உள்ளதா?
கோயிலில் இருந்து வெளியே வருவதற்கு முன் சிறிது நேரம் உட்கார வேண்டுமென்று ஆகமங்களில் சொல்லியிருக்கிறது. ஸ்வாமி தேஶிகனும் சொல்லியிருக்கிறார். அதனால் உட்கார்ந்து ஸ்தோத்ர பாடங்கள் சொல்லி பகவானை த்யானம் பண்ணிவிட்டு வரலாம்.
மாத்யாஹ்னிகம் எந்தத் திசையை நோக்கிச் செய்ய வேண்டும்?
கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி மாத்யாஹ்னிகம் செய்யவேண்டும்.
குழந்தை பிறந்து ஒரு வயது ஆகும் வரை கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போகலமா?
கட்டாயம் ஒரு வயதிற்குள் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துக்கொண்டு போகலாம்.
அக்ஷதை ஆசீர்வாதத்தில் ஒருவரை சேவிக்கும் போது அபிவாதனம் செய்யலாமா?
கோஷ்டி அக்ஷதை ஆசீர்வாதத்தில் சேவிக்கும்போது அபிவாதனம் செய்யவேண்டிய அவசியமில்லை.
அமாவாஸை அன்று வாசலில் கோலமிடும் வழக்கம் உண்டா?
அமாவாஸை அன்று வாசலில் சாதாரனமாக கோலம்போடும் வழக்கமுண்டு. மஹாளய அமாவாஸை அன்று போடும் வழக்கமில்லை. சில க்ருஹங்களில் பெரியவர்கள் வேண்டாம் என்று சொன்னால் அதைத் தவிர்க்கலாம்.
அமாவாஸை, அதுவும் முக்கியமாக ஆடி, தை அமாவாஸை அன்று வாசலில் பண்டிகை தினம் போல் பெரிய படிக்கோலங்கள் காலையிலேயே போடலாமா?
ஆடி மற்றும் தை அமாவாஸை அன்று எம்பெருமானுக்கு மாவிளக்கேற்றுவதானால், சிலர் திருஎவ்வுள் வீர்ராகவனுக்கு அன்றைய தினம் மாவிளக்கேற்றுவார்கள். அப்படியேற்றுவதானால் நிச்சயம் வாசலில் படிக்கோலம் போட்டு, எம்பெருமானுக்கு பண்டிகைத் தளிகை போல் பண்ணி அம்சை பண்ணலாம். சாதாரன அமாவாஸை அன்று படிக்கோலம் போடும் வழக்கமில்லை.
குறிப்புகள்:
சில க்ருஹங்களில் விளக்கேற்றும் வழக்கமில்லையென்றாலும், பண்டிகை போல் கொண்டாடும் வழக்கமிருக்கிறது. ஆகையால் அவரவர்கள் அகத்து வழக்கப்படி பின்பற்றவும்.
அமாவாஸை அன்று மடி வேஷ்டி ஸந்தர்ப சூழலில் விழுப்பாகி விட்டால், புது வேஷ்டியோ, பட்டு வேஷ்டியோ தரித்துக்கொண்டு தர்பணம் பண்ணலாமா? வேறு உபாயங்கள் உண்டா? விக்ஞாபித்து அருள பிரார்த்திக்கிறேன்.
தர்ப்பண தினத்தன்று புது வேஷ்டி உடுத்திக்கொண்டு பண்ணமாட்டார்கள். வேறுவழியில்லையென்றால் சிலர் பட்டுவேஷ்டி உடுத்திக்கொள்வதுண்டு. அதையும் தவிர்க்கவேண்டுமாயின் தாவளி என்ற ஒன்று கிடைக்கும். அதை உடுத்திக்கொண்டு செய்வதுண்டு. பெரியவர்கள் அதை உடுத்திக்கொண்டு பழக்கமுண்டு.
பட்டுவேஷ்டி பரவாயில்லை ஆனால் புது வேஷ்டி வேண்டாம்.
அடியேன் பகவத் ப்ரீத்யார்த்தமாய் திருவேங்கடத்தானைக் குறித்து சனிக்கிழமை விரதம் (பழம், பால்,அல்லது தேஹ பாங்கிற்கேற்ப கோதுமை பதார்த்தம் மட்டுமே) அனுஷ்டித்து வருகிறேன். எந்தக் குறிப்பிட்ட வேண்டுதலும் இல்லை.
1. பரந்யாஸம் ஆனவர்கள் இதைத் தொடரலாமா?
2. சனிக்கிழமை துவாதசி வந்துவிட்டால், ஏகாதசி விரதத்தை எப்படி முடித்துக் கொள்வது?
பரந்யாஸம் ஆனவர்கள் தனியாக எந்தவித விரதமும் இருக்கவேண்டிய நியமமில்லை, ஏகாதசி, ஶ்ரீஜயந்தி, ஶ்ரவண துவாதசி முதலான நித்யமான விரதங்கள் தவிர. இவ்விரதமானது எம்பெருமான் திருவேங்கடத்தானைக் குறித்திருப்பதால் தவறொன்றுமில்லை.
பொதுவாக சனிக்கிழமையில் விரதமிருப்பவர்கள் துவாதசிக்கு பாதகமில்லாமல் காலையில் ஆஹாரம் சாப்பிட்டுவிட்டு சாயங்காலத்தில்தான் விரதமிருப்பார்கள். நீங்கள் சொல்லும்படி முழுமையாக விரதமிருப்பதாக இருந்தால் அன்று துவாதசி வந்துவிட்டால், துவாதசிதான் ப்ரதானம் என்று தோன்றுகிறது.
சில சமயங்களில் கோவிலில் பெருமாள் சேவிக்கும் பொழுதோ, அல்லது உற்சவத்தில் பெருமாள் சேவிக்கும் பொழுதோ, அல்லது நம் க்ருஹத்தில் விசேஷ நாட்களில் த்ருப்தியாக திருவாராதனம் ஆகும் பொழுதோ, நம்மையும் அறியாமல் அவனுடைய கல்யாண குணங்களை நினைக்கும் பொழுது, நம் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது, இது அழுகை என்று கருதப்படுமா, கோவிலில் அல்லது பெருமாள் முன்னால் அழக் கூடாது என்று ஸாஸ்திரங்கள் சொல்கின்றன, இது அபசாரம் ஆகி விடுமா? அதே போல் ஆழ்ந்து நம் பிரார்த்தனையை அவன் ஸன்னதியில் அவனிடம் விண்ணப்பம் செய்யும்போது நம்மையும் அறியாமல் நம் கண்கள் முடிகிறது, இதுவும் அபசாரமா?
பெருமாள் சந்நிதி முன் பகவத் குணங்களில் ஈடுபட்டு, கண்களில் ஜலம் வந்தால், அது ஒரு விசேஷமான பக்தியின் வெளிப்பாடு என்று சொல்லியிருக்கிறது. மற்ற காரணத்திற்காக அழுவதுபோல் கிடையாது, இது ஒரு பக்தியின் வெளிப்பாடு ஆகையால் அது தோஷமாகாது.
மஞ்சள் ஶ்ரீசூர்ணத்திற்கும், சிகப்பு ஶ்ரீசூர்ணத்திற்கும் உள்ள வித்யாசம் என்ன? யாரெல்லாம் மஞ்சள் இட்டுக்கொள்ளவேண்டும்? நாம் ஆசாரமாக இல்லையென்றால் சிகப்பு இட்டுக்கொள்ளவேண்டுமா?
மஞ்சள் ஶ்ரீசூர்ணம் பற்றி பலமுறை இதில் கூறியிருக்கிறோம். மஞ்சள்தான் கலப்படமில்லாதது. சிகப்பு அதிலிருந்து தயாரிப்பது. மேலும் மஞ்சளில், ஹரித்ராசூர்ணத்தில் ஶ்ரீஸூக்தம் சொல்லி ஆவாஹனம் செய்வதென்பதெல்லாம் உண்டு. ஆகையால் மஞ்சள் இட்டுக்கொள்வதுதான் விசேஷமானது.
78 வயது நிரம்பிய கைம்பெண்ணான (widower) எனது மாமியார் இதுவரை ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் செய்துக்கொள்ளவில்லை. இப்போது பண்ணிக்கொள்ளலாமா? ஆம் என்றால் எப்படிப் பண்ணிக்கொள்ளவேண்டும்?
ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் அவசியம் பண்ணிக்கொள்ளலாம். எல்லோருக்கும் என்ன ரீதியோ அதே ரீதியில் ஆசார்யனிடம் ஸமாஶ்ரயணம், பரந்யாஸத்திற்கு ப்ரார்த்தித்துக்கொண்டால் அவர் அதற்கு வழிகாட்டுவார். கட்டாயம் பண்ணிவைப்பார்.
மஹாளய பக்ஷத்தில் தர்ப்பணத்திற்குப் பின் பெருமாள் ப்ரசாதம் ஸ்வீகரிக்கலாமா?
நீங்கள் எந்தப் பெருமாள் ப்ரசாதம் பற்றி கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. மஹாளயபக்ஷம் தர்ப்பணம் முடிந்தபின் அகத்துப் பெருமாளுக்குத் திருவாராதனம் பண்ணிய ப்ரசாதம்தான் ஸ்வீகரிக்க்ப்போகிறோம்.
கோயில் பெருமாள் ப்ரசாதம் என்றால், தர்ப்பணத்திற்குப் பின் பலகாரம் என்றிருக்கிறது. அது பலகாரமாக இருந்தால், சாப்பிடலாம். அதல்லாது புளியோதரை, தத்யோன்னம் போன்ற ப்ரசாதமாக இருந்தால் அதை ஸ்வீகரிக்கும் வழக்கமில்லை. இதுவும் பகலில் கூடாது. பகலில் ஒருவேளை சாப்பாடு என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. இரவு வேளையில் விரதம் சொல்லப்பட்டிருக்கிறது. இயலாதவர்களுக்குப் பலகாரம், ப்ரசாதமாக இருந்தால் (சாதம்) அதை ஸ்வீகரிக்கக்கூடாது.
திருவாராதன சமயத்தில் அர்ச்சனைக்குப் பின் பித்ரு தர்ப்பணம் செய்துவிட்டு அதன்பிற்கு மீண்டும் திருவாராதனத்தைத் தொடரலாமா?
திருவாராதனத்தை நடுவில் விட்டுவிட்டுப்போய் தர்ப்பணம் பண்ணக்கூடாது. தளிகை ஆகவில்லையென்றால், ஏதாவது பழம் போன்றவைகள் ஸமர்ப்பித்துவிட்டு திருவாரதனத்தை முடித்துக்கொண்டு தர்ப்பணம் பண்ணலாம். தளிகை ஆனபின் நாம் நிவேதனம் பண்ணலாம்.
என் ஓர்படி பரமபதித்து ஒருவருடம்கூட ஆகவில்லை, இந்நிலையில் நாங்கள் ஆசார்யனையும் திவ்யதேசங்களுக்கும் போய் சேவிக்கலாமா? என் கணவர் கயா ஶ்ராத்தம் செய்யலாமா?
தாங்கள் ஆசார்யனையும் சேவிக்கலாம், திவ்யதேசங்களுக்கும் போகலாம். மேலும் கயாஶ்ராத்தமும் செய்யலாம்.
தேங்காய் மூடியைத் துருவி எடுக்காமல், பத்தையாக எடுத்து பெருமாள் திருவாராதன தளிகைக்கு உபயோகித்து விட்டு மீதமுள்ள பத்தையை வேறு ஒரு நாள் பெருமாள் திருவாராதன தளிகைக்கு உபயோகப்படுத்தலாமா? அல்லது மொத்த தேங்காயையும் துருவி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பெருமாள் திருவாராதன தளிகைக்கு உபயோகப்படுத்தலாமா?
தேங்காய் முடியை ஒரு தடவை உடைத்துவிட்டால் அன்றைய தினம் பெருமாள் தளிகைக்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம். அதில் மீதமிருந்தால் (துருவியதோ, பத்தையாக எடுத்ததோ) அவற்றை மீண்டும் திருவாராதன தளிகைக்குச் சேர்க்கும் வழக்கமில்லை.
குறிப்புகள்:
இதை உபயோகிக்க வழியென்ன என்றால், இரவு வேளையில் திருவாரதனத் தளிகை என்ற ஒன்று பண்ணுவதில்லை, பெருமாளுக்கு அம்சை பண்ணுவது மட்டும்தான். ஆகையால் இரவு பண்ணும் தளிகையில் மீதமிருக்கும் தேங்காயை உபயோகப்படுத்தலாம், பாதகமில்லை.
அடியேனுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டதால் தேவதாந்தரங்களை வழி படுவதில்லை, பரந்யாஸத்திற்கு முன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதுண்டு, சின்ன வயதில் இருந்து வந்த அகத்து வழக்கத்தால். இப்போது நான் நிறுத்தியதை அறிந்து, பரந்யாஸம் ஆன என் பெற்றோர்களே பிள்ளையாரை விஷ்வக்ஸேனராக பாவித்து பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடலாம் என்கிறார்கள். நான் என்னால் இயன்ற வரை பிள்ளையார் விஷ்வக்ஸேனர் இல்லை என்று எடுத்துக் காட்டி விட்டேன், ஆனாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. படிக்கும் குழந்தைகள் இருந்தால் விநாயகர் சதுர்த்தி கொண்டலாம் என்கிறார்கள். அத்துடன் அம்மாவுக்கு ஒரு ஜோஸியர் அவருடைய சின்ன வயதில் (இப்பொழுது அவருக்கு 87 ஆவது திருநக்ஷத்திரம் நடந்து வருகிறது) கேது தோஷம் உள்ளதால் அவர் பிள்ளையை பாதிக்கும் என்று கூறியுள்ளார், ஆகையால் கடந்த 50 வருட காலமாக பிள்ளையார் வழிபாடு செய்து வருகிறார். பரந்யாஸம் ஆகியும் இதை தொடர்ந்து வருகிறார், பாதுகா ஸஹஸ்ரம், மற்றும் தேஶிகர் ஸ்லோகங்கள், தேஶிகர் பிரபந்தம், நித்யம் ஶ்ரத்தையுடன் கடந்த 15 வருட காலமாக பரந்யாஸம் ஆனது முதல் ஆசாரியர் தனியன்களுடன் நித்யம் அனுஸந்தானம் செய்கிறார். அப்பாவும் தனது 92வது வயதிலும் ஒரு நாள் தப்பாமல் பெருமாள் திருவாராதனம் மற்ற அனுஷ்டானங்கள் செய்து வருகிறார். ஏன் இந்தத் தேவதாந்தர மோகம் என்று புரியவில்லை, எப்படி இவ்வளவு பெரியவர்களுக்கு அடியேன் புரிய வைப்பது என்று கவலையாக உள்ளது, தேவரீர் வழி காட்டும் படி விண்ணப்பிக்கிறேன்.
பிள்ளையாரும், விஷ்வக்ஸேனரும் ஒருவர் இல்லை என்பதை மேலும் சில விஷயங்களைச் சொல்லித் தெளிவாக விளக்க முயலலாம். விஷ்வக்ஸேனர் நம் ஆசார்ய கோஷ்டியில் சேர்ந்தவர் எம்பெருமானின் ஸேனைமுதலியார். அவருடைய பரிஜனங்களில் ஒருவர் கஜவக்த்ரராவார், அவர் யானைமுகமும், இரண்டு தந்தங்களும், சங்க-சக்ரமும் உடையவர்.பிள்ளையாருக்கு இவ்வடையாளங்கள் கிடையாது. அவருக்கு சங்கு-சக்ரங்கள் கிடையாது, மேலும் அவர் ஏக தந்தராவார். பிள்ளையார் தேவதாந்தரம். கஜவக்த்ரரோ விஷ்வக்ஸேனரின் பரிஜனராவார் போன்ற விளக்கங்களை விஸ்தாரமாக விளக்கலாம். ப்ரந்யாஸம் ஆனவர்கள் தேவதாந்தரங்களைச் சேவிக்கக் கூடாது.
இப்படிச் சேவிக்காமல் விட்டால் எவ்விதமான தோஷமும் பாதிக்காது. “நாவலிட்டு உழிதருகின்றோம் நமன்-தமர் தலைகள் மீதே” என்று ஆழ்வார் பாடுகிறார். எந்தத் தேவதையானாலும் எம்பெருமானுக்கு அடிபணிந்தவர்கள்தான். எம்பெருமானின் அடியார்களுக்கு எவ்வித கேடும் விளைவிக்க முடியாது என்பதை உறுதியாக நம்பவேண்டும்.
ஒருகால் கேது தோஷம் ஏற்படுமோ என்ற பயமிருந்தால், கருட பஞ்சாஶத்தைச் சேவித்தால் சர்ப சம்பந்தமான எல்லாவிதமான தோஷங்களும் நீங்கும். நீங்கள் சொல்லியிருப்பது போல் தேஶிக ஸ்தோத்ரங்கள் எல்லாம் சேவித்துக்கொண்டிருக்கலாம். இத்தோஷம் ஏற்படுமோ என்ற பயம் நீங்க வேண்டும் என்பதை நினைத்து கருடபஞ்சாஶத் சேவிக்கலாம்.
பரந்யாஸம் ஆகும்வரை தெரியாமல் இத்தனை வருடங்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதில் தவறில்லை. அதன் பாபங்கள் பரந்யாஸம் ஆகும் சமயம் நீங்கிவிடும். ஆனால் பரந்யாஸம் ஆனபின் தெரிந்து கொண்டாடினால் அது பாபமாகும். நிச்சயமாக பண்ணக்கூடாது. மேலும் அது நேரக்கூடாது என்று சிறியவர்கள் நினைப்பே பெரியவர்களுக்கு நேராமல் காக்கும்.
அவர்களுக்கு புரிய வைக்க என்ன செய்யலாம் என்றால், அவர்களை ஶ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம் ஶ்ரீ உ வே நாவல்பாக்கம் வாஸுதேவாசார்யார் ஸ்வாமி சாதிக்கயிருக்கிறார், அதன் விவரங்கள் கீழேயுள்ள linkல் இருக்கிறது.
https://www.sampradayamanjari.org/kalakshepams/
“ஹிரண்யகர்ப சாளக்கிராமம்” என்பது சாளக்கிராமமாக கருதலாமா?
ஆம் ஹிரண்யகர்ப சாளக்கிராமம் என்பது ஒரு சாளக்கிராம மூர்த்தி தான்.
பரிசேஷனம் செய்ய ஏன் மற்றவர்களுடன் ஜலத்தைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது?
பொதுவாகவே எந்த வைதிக அனுஷ்டானத்திற்கும் அவரவரின் தீர்த்தப் பார்த்திரத்தை அவரவர் உபயோகிப்பதுதான் ஆசாரம் மற்றவர் உபயோகப்படுத்திய தீர்த்த மீதியை வேறோருவர் உபயோகிக்கக் கூடாது.
புருஷர்களுக்கு (அதாவது அம்மா அப்பா என்று இருவரும் இருப்பவர்களுக்கு, இருவரும் அல்லது ஒருவரோ பரமபதித்து விட்டால்) தலைக்குத் தீர்த்தமாட என்ன நியமங்கள். என்றைக்கெல்லாம் அனைவரும் எண்ணெய் ஸ்நானம் செய்யவேண்டும்? என்று விளக்கவும்
பொதுவாகவே புருஷர்கள் நித்யப்படி தலைக்குத் தீர்த்தமாட வேண்டும். அதுவும் பிதா இல்லாவிட்டால் கட்டாயமாகத் தீர்த்தாமாட வேண்டும். சிறு குழந்தைகள் அதாவது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வேத அத்யயனத்திற்குச் செல்லும் குழந்தைகள், இவர்களை எல்லாம் ப்ரஹ்மசாரியாக இருக்கும் பொழுது நித்தியம் தலைக்குத் தீர்த்தமாட வேண்டாம் என்று சொல்வார்கள். இது பொதுவானது. அம்மா பரமபதித்தது என்கின்ற நியமங்கள் எல்லாம் இதில் வராது.
அபயங்க ஸ்நானம், எண்ணெய் ஸ்நானம் சனிக்கிழமை விசேஷம். ஸ்த்ரீகளுக்கு வெள்ளிக்கிழமை விசேஷம். விரத நாட்களில், அமாவாஸ்யை, ஏகாதசி, பௌர்ணமி நாட்களில் எண்ணெய் ஸ்நானம் செய்யக் கூடாது. எண்ணெய் ஸ்நானத்தில் ஒரு முக்கியமான விஷயம், காலையில் சந்தியாவந்தனம் செய்த பிறகு எட்டு மணிக்கு மேல்தான் எண்ணெய் ஸ்நானம் பண்ண வேண்டும். அதற்கு முன் பண்ணக்கூடாது என்று இருக்கின்றது.
திருமண் இட்டுக் கொள்ளும் போது எந்த விரலை உபயோகப்படுத்தலாம்.
திருமண் இட்டுக் கொள்ளும் பொழுது எந்த விரலை உபயோகப்படுத்தலாம் என்பதை ஸ்வாமி தேஶிகன் தெளிவாக சாதித்துள்ளார். சுண்டு விரலுக்குப் பக்கத்தில் உள்ள மோதிர விரலை உபயோகப்படுத்தலாம்.
1. அடியேனுக்கு நான்கு/ஐந்து தலைமுறைக்கு முன்னான தஸராத்ர ஞாதியின் விவாகமான பெண் பரமபதித்தால் ஆஶௌசம் உண்டா? எவ்வளவு நாட்கள்?
2. உடன் பிறந்த ஒருவருக்கு ஆஶௌசம் என்று தெரிந்து அந்தச் சமயத்தில் அவர் ஒரு ப்ரார்த்தனைக்காக கல்யாண உற்சவம் செய்யப் போவதாக தெரிந்தாலும் அவருக்கு தெரிவிக்காமல் இருப்பது தர்மமா?
தஸராத்ர ஞாதியின் விவாகமான பெண் பரமபதித்தால் ஆஶௌசம் கிடையாது.
சில சந்தர்பங்களில் தேச-காலத்தை வைத்து தெரிவிக்காமல் இருப்பது நல்லது. ஒரு முக்கியமான ப்ரார்த்தனைக்காக செல்லுபோது நாம் சொல்லக்கூடாது, அவ்விடத்தில் இல்லாமல் நாம் ஒதுங்கிக்கொள்ளவேண்டும். அருகில் இருந்தால் சொல்லாமல் இருக்கக்கூடாது அதனால் ஒதுங்கிவிடுதல் நல்லது. தீட்டு என்பது தெரிந்தால்தான் தீட்டு, தெரியாவிட்டால் தீட்டு இல்லை. சொல்லவில்லை என்றால் தீட்டு வராது அக்காரணத்தால் சொல்லாமல் விலகிக்கொள்ளலாம்.
காலை மற்றும் மாலை நேர சந்தியாவந்தனங்களை ப்ராயஶ்சித்தம் இல்லாமல் செய்ய வேண்டும் என்றால் எத்தனை மணிக்குள் செய்ய வேண்டும்?
காலை சூர்யோதயம் முன்னரும், மாலை சூர்யாஸ்தமனம் முன்னரும் செய்ய ஆரம்பித்தால் ப்ராயஶ்சித்தம் இல்லாமல் செய்யலாம்.
1) ஸமாஶ்ரயணம் (பஞ்ச சமஸ்காரம்) செய்து கொண்டவர்களைக் காட்டிலும் பரந்யாஸம் செய்து கொண்டவர்கள் வேறு ஏதாவது சில கர்மங்களை/நியதிகளைச் செய்ய அதிகாரி ஆகிறார்களா? வித்தியாசங்களை விளக்க வேண்டுகிறேன்.
2) ஸ்ரீசூர்ணம் என்பது தாயாரைக் குறிக்க, அதன் நிறத்தில் வடகலை மற்றும் தென்கலை ஸம்பிரதாயத்தினருக்கு ஏன் வித்தியாசம் உள்ளது? வடகலை சம்பிராதாயதைச் சேர்ந்தவர்கள் சிலர் சிவப்பு நிறத்தில் ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்கிறார்கள். இதில் தவறேதும் உள்ளதா?
3) ஆசமனம் செய்ய உத்தரணி பயன்படுத்தலாமா?
ஸமாஶ்ரயணம் என்பது பஞ்ச சம்ஸ்காரம். அதைச் செய்துக்கொண்டால்தான் வேறு சில கார்யங்கள் செய்ய யோக்யதை வரும். ஆனால் பரந்யாஸம் என்பது அப்படியில்லை. அதைச் செய்தால் தான் யோக்யதை என்பதெல்லாம் இல்லை. பரந்யாஸம் செய்தால்தான் மோக்ஷம், இல்லையென்றால் இல்லை என்பது மட்டும்தான்.
ஸ்ரீசூர்ணம் பற்றி சென்ற வெளியீடுகளில் நிறைய குறிப்பிட்டிருக்கிறோம் (ப்லவ-புரட்டாசி வெளியீட்டை இந்த linkல் சென்று பார்க்கவும்: https://sudarsanam.sampradayamanjari.org/sudarsanam-monthly-releases/) மஞ்சள்தான் சுத்தமானது சிவப்பு என்பது மஞ்சளில் இருந்து தயாரிக்கப்படுவது. அவ்வளவே வித்தியாசம்
ஆசமனம் செய்ய உத்தரணி பயன்படுத்தினால் அந்தப் பாத்திரத்தைக் கால் அருகே வைக்கவேண்டி வரும் அவ்வாறு செய்வது சரியில்லை. மனையில் அமர்ந்து செய்யமுடியாது. இடது கையில் பாத்திரம் வைத்துக்கொண்டு செய்வதென்பதுதான் நம் சம்ப்ரதாயம். அதனால் உத்தரணிக்கு ப்ரஸக்தியில்லை.
யக்நோபவீதம் மாற்ற வேண்டிய காரணங்கள் குறித்த சம்சயம்
1. 10 / 3 / 11/2 நாட்கள் தீட்டு முடிந்தபின் மாற்ற வேண்டுமா
2. சரம ஶரீரத்தைத் தொட வேண்டிய சந்தர்ப்பத்தில் மட்டும் மாற்ற வேண்டுமா இல்லை துக்கம் விசாரிக்கச் சென்று சரம ஶரீரத்தைப் பார்த்தாலே மாற்ற வேண்டுமா?
தீட்டு முடிந்தபின் கட்டாயம் மாற்றிக்கொள்ளவேண்டும்.
சரம ஶரீரத்தைத் தொடவேண்டி வந்தால், மாற்றிக்கொள்ளவேண்டும். துக்கம் விசாரிக்கச் சென்று சரம் ஶரீரத்தைப் பார்த்தால் மாற்றிக்கொள்ள வேண்டாம்.
ஏகாதசி அன்று எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கும் வாழைப்பழத்தை நாம் உட்கொள்ளலாமா?
உபவாச விரதம் இல்லாவிட்டால் பழம் சாப்பிடலாம். துவாதசி திதி வந்த பிறகு வாழை கூடாது என்று பெரியோர் சொல்வர்.
புரட்டாசி முதல் சனிக்கிழமை மஹாளய பக்ஷத்தில் குல தெய்வ கோயிலில் மாவிளக்கு ஏற்றலாமா? சிலர் மஹாளய தர்ப்பணம் முடிந்ததும்தான் ஏற்றணும் என சொல்கிறார்கள்.? அதற்கான பதில் கூறினால் நல்லது.நன்றி.
அவரவர்கள் க்ருஹ வழக்கப்படிச் செய்யலாம்.
வேதத்தில் (உதகசாந்தியில்) நக்ஷத்திரங்கள் க்ருத்திகையிலிருந்து பரணியில் முடிகிறது. ஆனால் பொது வழக்கில் அஸ்வினியில் தொடங்கி ரேவதி என்றல்லவா சொல்லுகிறோம். இதன் தாத்பர்யம் என்ன? ஸ்வாதி நக்ஷத்திரத்திற்கு வேதத்தில் என்ன பெயர்? தேஶிகரின் ப்ரபந்த ஸாரத்தில் பெரியாழ்வார் பாசுரத்தில் அவரின் நக்ஷத்திரத்தை எப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்?
ஜோதிட ஶாஸ்திரத்தில் சொன்ன க்ரமம் இது. ராசி பார்ப்பதற்கு உதவும். ஸ்வாதிக்கு நிஷ்ட்யா என்று வேதத்தில் பெயர். சோதி என்று ஆழ்வார் பாடுகிறார்.
A. தசமி கலக்காத நாளில் ஏகாதசி வ்ரதம் இருக்கவேண்டும் என்றால், எப்படிப் புரிந்துகொள்வது? சூர்யோதய நாழிகையில் இருந்தா? அல்லது 12am முதலா? ப்ரஹ்மமுஹூர்த்தம் காலத்திலிருந்தா? தெளிவிக்கவும்.
B. மேலும் கர்நாடக தேசத்திற்கும், தமிழ்நாட்டில் பின்பற்றும் பஞ்சாங்கத்தில் பல வேறுபாடுகள் இருக்கின்றன குறிப்பாக ஏகாதசி வ்ரத அனுஷ்டான தினத்தில், அவை என்ன? ஏன் இந்த வேறுபாடுகள்? அடியேன் சித்தாந்த, வாக்கிய பஞ்சாங்கம் என்று இரண்டுவிதம் உள்ளது என கேள்விப்பட்டுள்ளேன் அதனால்தான் இவ்வித்தியாசங்களா? விளக்க வேண்டுகிறேன்.
உதயத்துக்கு முன் நான்கு நாழிகைக்கு தசமி சம்பந்தம் கூடாது. அதாவது முன் நாள் 56 நாழிக்கைக்கு மேல் தசமி இருந்தால் மறுநாள் ஏகாதசி வ்ரதம் கிடையாது.
தர்ம ஶாஸ்திர ஸ்ம்ருதி வசனங்களை அடிப்படையாக வைத்து விசாரம் செய்து பல விதமாக நிர்ணயம் செய்தனர். அதனால் சம்பிரதாய வித்தியாசம்.
எங்களின் மகள் விஶ்வகர்மா பிரிவைச் சேர்ந்த பையனை மணந்துள்ளார்.
a.
அகத்தில் நடக்கும் சுமங்கலி ப்ரார்த்தனைக்கு அவளை மங்கலிப்பொண்டாக அமர வைக்கலாமா? (பொதுவாக 5 சுமங்கலிகள் நம் நாத்தனார், பெண்கள் என்று அழைப்பார்கள்)
b.
எங்கள் பேரனுக்கு எப்படிப் பூணூல் ஸம்ஸ்காரம் செய்வது?
ஶாஸ்திரப்படி பார்த்தால் கலக்கக்கூடாது.
பேரனுக்கு அவர்கள் முறைப்படி செய்யவேண்டி இருக்கும்.
பிறப்புத் தீட்டு 11 நாட்கள் இருக்கும் போது, கோயில் கைங்கர்யம், அகத்தில் திருவாராதனம், ஸ்ரீஸூக்திகளைப் பாரயாணம் செய்தல், காலக்ஷேபம் முதலியவைகளில் அன்வயிக்கக் கூடாது என்பதைப் போல் வேறு என்னென்ன கடைபிக்க/தவிர்க்க வேண்டும்? 12ஆம் நாள் புண்யாகவாசனம் வாத்தியார் செய்துவைப்பாரா அல்லது நானே செய்யவேண்டுமா? தெளிவிக்கவும்.
11 ம் நாள் குழந்தை, தாயார், க்ருஹம் ஆகியவற்றுக்குப் புண்யாஹம் செய்ய வேண்டும். ஆகையால் வாத்தியார் மூலம் செய்வது நல்லது.
என் அகத்துக்காரர் தர்ப்பணம் செய்யும்போது, மனப்பாடமாக தெரியாததனால் புத்தகம் பார்த்துச்சொல்வார், அவருக்கு உதவியாக அடியேன் புத்தகத்தைப் பிடித்துக்கொள்வேன். ஸ்த்ரீகள் இதுபோன்ற உதவி செய்யலாமா?
புத்தகத்தைப் பிடித்துக்கொள்ளலாம் பாதகமில்லை.
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் ஸ்த்ரீகளும், த்விஜர்கள் அல்லாதவர்களும் சேவிக்கலாமா? அல்லது அதற்கும் த்வீஜர்கள்தான் சேவிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதா?
ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமாவளியை ஸ்த்ரீகளும், த்வீஜர்கள் அல்லாதவர்களும் ப்ரணவத்துடனும், நமஸ்ஸுடனும் சேவிக்கும் வழக்கம் நிச்சயமாக இல்லை. பெரியோர்கள் வழக்கத்தில் அவர்கள் (ஸ்த்ரீகளும், த்விஜர்கள் அல்லாதவர்களும்) பாராயணம் செய்யும் வழக்கமும் இல்லை.
துவாதசி மற்றும் பாரணை நாட்களில் புளி சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதால் எலுமிச்சம் பழம் உபயோகிக்கலாமா? குறிப்பாக சாற்றமுதில்.
துவாதசி மற்றும் பாரணை நாட்களில் பல பெரியோர்கள் க்ருஹத்தில் எலும்மிச்சைப்பழம் சேர்த்துக்கொள்ளும் வழக்கமில்லை. சிலர் சேர்த்துக்கொள்கிறார்கள்.
சில 3 பூணூல் தரிப்பதன் காரணம் என்ன?
வஸ்த்ர யக்ஞோபவீதம், அதாவது உத்திரியத்தையே பூணூலாக தரிக்க வேண்டும் என்று ஒரு சம்ப்ரதாயம். அப்படிச் செய்ய முடியாமல் போகும் போது அதற்குப் பதிலாக ஒரு பூணூலை சிலர் தரிப்பார்கள். அது அவர்கள் சம்ப்ரதாயப்படி செய்ய வேண்டியது.
எங்கள் அகத்து வாத்தியார் , மஹாளயபக்ஷம் நம் கோத்ரத்தைச் சேர்ந்த நம் உறவினர்களுக்கும் செய்யலாம் என்று சொன்னார்? அவ்வாறு செய்யலாமா? தெளிவிக்கவும்.
மஹாளயபக்ஷம் நம் கோத்திரத்தைச் சேர்ந்த நம் உறவினர்களுக்கும் பொதுவாகச் செய்யலாம். காருண்ய பித்ருக்கள் என்கின்ற கணக்கில் செய்யலாம் என்னும் கணக்கு உண்டு.
விளக்கேற்ற ஒரு திரியின் இரண்டு முனைகளை இணைத்தல் சரியான முறையா? எப்படி ஏற்ற வேண்டும் என்பதை விளக்கவும்.
மூன்று முறை பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிக்கும் பொழுது என்ன சொல்லி ஸ்வீகரிப்பது ? (அகால ம்ருத்யு ஹரணம் தவிர்த்து வேறு ஏதாவது சொல்லும் வழக்கம் உண்டா? )
எந்தெந்த திதி, வார, நக்ஷத்ரங்களில் ப்ரஹ்மசாரி க்ஷௌரம் செய்து கொள்ளலாம் ?
க்ஷௌரம் செய்யும் ஒவ்வொரு முறையும் புது யக்ஞோபவீதம் போடுவது உசிதமா ?
வஸ்த்ரம் இல்லாமல் ஸ்வாமிக்குத் திருமஞ்சனம் செய்வது நம் ஸம்ப்ரதாயத்தில் உண்டா ? (பெருமானின் திவ்யமங்கள விக்ரஹத்திலே வஸ்த்ரம் இருப்பதால் நாம் வஸ்த்ரம் சாற்றி திருமஞ்சனம் செய்யவேண்டிய அவசியமில்லை என்பதாகச் சிலபேர் சொல்கிறார்களே ! அது எப்படி என்பதை சற்று விளக்கவும்
விளக்கை ஏற்றும் பொழுது இரண்டு தனித்தனி திரிகளை முறுக்கி ஏற்றினால் மிகவும் உசிதம். அப்படி முடியவில்லை ஒரு திரிதான் இருக்கிறது என்றால் அதை மடக்கி இரண்டு நுனிகளையும் சேர்த்து ஏற்றலாம். ஆனால் இரண்டு திரி போட்டது சிறிதாகிக்கொண்டே வருகிறது என்றால் அதைப் பிரித்து ஒரே திரியாக ஏற்றக்கூடாது.
ஒரு திரியை மடக்கி வைத்து விட்டோமேயானால் அது எப்பொழுது வரை உபயோகப்படுத்த முடிகிறதோ அவ்வளவு உபயோகப்படுத்தி விட்டு, பின் வேறு திரியை மாற்றிக் கொள்ளலாம். உத்தமகல்பமானது இரண்டு தனித்தனி திரிகளை முறுக்கிச் சேர்த்து ஏற்றுவது தான்.
மூன்று முறை பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிக்கும் பொழுது பெருமாளிடம் பக்தியுடன் ஸ்வீகரித்தால் போதும் ஒன்றும் சொல்ல வேண்டியது இல்லை. மூன்று முறை ஸ்வீகரிப்பது விசேஷம் என்று ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
க்ஷௌரம் செய்து கொள்வதற்கு
திங்கள் புதன் இது இரண்டும் விசேஷமானது. செவ்வாய் மற்றும் சனிக்கிழமை கூடவே கூடாது.
திதிகளைப் பார்க்கும் பொழுது ஏகாதசி முதலான விரத தினங்களில் கூடவே கூடாது.
என்னவானாலும் ஷஷ்டி திதி அடியோடு கூடவே கூடாது.
சதுர்த்தி, சதுர்தசி இவையெல்லாம் கூட கொஞ்சம் சாதாரணமானதுதான்.
அஷ்டமி, சதுர்தசி, அமாவாஸ்யை, பௌர்ணமி, ஏகாதசி, துவாதசி இவையெல்லாம் கூடாது.
வெள்ளிக்கிழமை க்ஷௌரம் பண்ணிக் கொண்டால் அம்மாவிற்கு ஆகாது. மாதா இல்லாதவர்கள் சில பேர் பண்ணிக் கொள்வார்கள். இதுபோல ஒவ்வொரு திதிக்கும் உண்டு.
திங்கள் புதன்கிழமையாக இருந்தால், முன் பின் இருந்தாலும் பண்ணிக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். ஆனாலும் ஷஷ்டியாக இருந்தாலோ இல்லை ஏகாதசி போன்ற விரத நாட்களாக இருந்தாலோ அன்று கூடாது.
நட்சத்திரங்களில் பரணி க்ருத்திகையில் பண்ணிக்கொள்ளக்கூடாது.
க்ஷௌரம் பண்ணிக்கும் போது ஸ்பர்ஷங்கள் பட்டு அசுத்தமாகும் வாய்ப்புகள் நிறையவுள்ளது.அதனால்தான் மாற்றிக்கொள்கிறார்கள்.
வஸ்த்ரம் இல்லாமல் ஸ்வாமிக்குத் திருமஞ்சனம் செய்வது நம் ஸம்ப்ரதாயத்தில் கிடையாது. சில தேசங்களில் செய்கிறார்கள் என்பதும் உண்டு.
ஸ்வாமி தேஶிகன் 12 திருமண்காப்பு என்று பன்னிரு நாமத்தில் காட்டியிருக்கிறார். சிலர் 13 திருமண்காப்பு தரிக்க காரணம் என்ன? ஸமாஶ்ரயாணம் ஆனபின் கட்டாயம் 13 திருமண்காப்பு தரிக்கவேண்டுமா?
12 திருமண்காப்பு இட்டபின் மீதி கையில் இருந்தால் அதை தலையில் இட்டுக்கொள்ளவேண்டும் என்று ஸ்வாமி சாதித்திருக்கிறார். அதையும் சேர்த்து 13 என்று சொல்கிறார்களே தவிர தனிப்பட்டதாக ஒன்று என்பதில்லை. அதனால் இவை இரண்டிற்கும் விரோதமில்லை.
மேலும் 12க்கு மேல் கையில் மீதியிருக்கும் திருமண்காப்பை அலம்பக்கூடாது, அதை தலையில் தரிக்க வேண்டும். திருமண் ஸ்ரீசூர்ணம் இரண்டையும் கைஅலம்பி கீழே தள்ளக்கூடாது. தலையில் தரிக்க மந்திரமும் இருக்கிறது.
1. வாழைப்பழத்தைத் தோலுரிக்காமலேயே பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா? பொதுவாகப் பழங்களை எப்படி ஸமர்ப்பிக்கவேண்டும்?
2.
அகத்திற்கு வருவோருக்குத் தாம்பூலம் கொடுக்கும்போது பெருமாளுக்கு ஸமர்ப்பித்த பழத்தை வைத்து கொடுக்கலாமா?
1. வாழைப்பழத்தைத் தோலுரிக்காமலேயே ஸமர்ப்பிப்பது ந்யாயமாக இருக்காது. பொதுவாகவே நாம் எப்படிச் சாப்பிடுகிறோமோ அப்படி ஸமர்ப்பிப்பதுதான் நல்லது. முழு தோலையும் உரிக்கவில்லையென்றால் சிலர் அதன் தோலை லேசாக உரித்துவிட்டு ஸமர்ப்பிப்பார்கள். கோயில் முதலான இடங்களில் மொத்தமாக எல்லா பழங்களின் தோலை உரிப்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கும். பக்தர்களும் அதை விரும்ப மாட்டார்கள், முழுத் தோலை உரித்த வாழைப்பழத்தை எடுத்துச் செல்வதில் சில கஷ்டங்கள் இருக்கிறது. அதனால் அப்படியே கண்டருளப்பண்ணுவார்கள் எம்பெருமான் ஏற்றுக்கொள்வான் என்கிற ரீதியில். க்ருஹங்களில் பண்ணும்போது முழுத்தோலையும் உரித்து ஸமர்ப்பிப்பதுதான் நல்லது. நிறைய பழங்கள் இருக்கும் பக்ஷத்தில் உசித்தமானதைச் செய்யவும், 12 பழங்கள் இருந்தால் முழுவதையும் அவ்வாறு செய்து ஈ போன்றவை மொய்க்க வாய்ப்பிருக்கிறது அதனால் பார்த்து உசிதமானதைச் செய்யவும்.
2. அகத்திற்கு வருவோருக்கு பெருமாளுக்கு ஸமர்ப்பித்த பழத்தைத் தாம்பூலத்தில் வைத்து தாராளமாகக் கொடுக்கலாம்.
இந்த வருடம் காயத்ரி ஜபம் தினத்தில் ப்ரயாணம் செய்யும் நிர்ப்பந்தம் வந்துள்ளது, ஆவணி அவிட்டம் அன்றோ அல்லது 2 நாட்களுக்கு பின்னர் பண்ணலாமா? இதற்கு ஏதாவது பிராயச்சித்தம் உள்ளதானால், அடியோங்களுக்கு உபதேசிக்கும் படி ப்ரார்த்திக்கிறேன்.
காயத்ரி ஜபத்திற்கு வேறொரு நாள் சொல்லவில்லை. ஆகையால் என்று காயத்ரி ஜபமோ அன்றைக்குதான் பண்ணி ஆக வேண்டும், வேற வழி கிடையாது. ப்ரயாணத்தை அதற்கு தகுந்தாற்போல் முன்னையோ அல்லது பின்னையோ மாற்றிக்கொண்டு கார்த்தாலே ஜபம் பண்ணிவிட்டு போவதோ இல்லையென்றால் நாம் ப்ரயாணத்தில் போகின்ற இடத்தில் எங்கேயாவது உட்கார்ந்து கொண்டு ஜபம் பண்ணுவதோ, இப்படி ஏதாவது ஒரு வழி பண்ணிக் கொண்டால் நல்லது. இதற்கு என்று இன்னொரு நாள் சொல்லப்படவில்லை.
பண்டிகை நாட்களில் ஏகாதசி விரதம் வந்தால் எப்படி அனுஷ்டிப்பது என்று விவரித்ததமைக்கு தன்யவாதங்கள். ஆனால் க்ரஹத்தில் இருவர் மட்டுமே இருக்கும் பக்ஷத்தில் நிர் ஜல உபவாசம் இருக்கும் போது, பெருமாள் திருவாரதனத்துக்குப் பழங்கள் மட்டும் ஸமர்ப்பிக்கலாமா? அது ஏகாதசி கூடிய பண்டிகை நாட்களுக்கும் பொருந்துமா?
பண்டிகை நாட்களில் ஏகாதசி விரதம் வந்தால், க்ருஹத்தில் பெருமாளுக்கு அன்னம் ஸமர்ப்பித்து அதற்கு உபயோகம் இல்லை என்னும் பொழுது பழங்களை ஸமர்ப்பிக்கலாம். “
பத்ரம், புஷ்பம் ப2லம் தோயம்” (पत्रं पुष्पं फलं तोयं) என்று பெருமாளே சொல்லியிருப்பது போல் பழங்களை ஸமர்ப்பிக்கலாம்.
பண்டிகை நாட்களில் ஏகாதசி உபவாசம் இருந்தோமானால் வேறு அன்னம் ஸமர்பிப்பதற்கு உபயோகங்கள் இல்லையென்றால் பழங்கள் ஸமர்ப்பிக்கலாம். அனால் விசேஷமான பண்டிகை நாட்களில் விசேஷமாகப் பண்ணியாக வேண்டும். உதாஹரணமாக ஸ்ரீஜெயந்தி எடுத்துக் கொண்டால், அன்று உபவாசம் இருக்கக் கூடியவர்கள் , நமக்கு உபவாசமாயிற்றே என்று பெருமாளுக்கு ஒன்றும் பண்ணாமல் இருக்க முடியாது. ஸமர்ப்பித்துதான் ஆக வேண்டும். அதனால் அந்தப் பண்டிகைக்கான பக்ஷியாதிகளை ஸமர்ப்பித்து விட்டு அதற்கு மறுநாள் உபயோகப் படுத்துவது போன்று ஏதாவது பண்ணலாம். இல்லை வேறேதற்காவது உபயோகம் பண்ண முடியும் என்றாலும் பண்ணலாம்.
ஸர்வாத்மமாக முடியவில்லை. விட்டு போய்டுத்து என்று சொன்னால் அதற்குப் பிறகு கேட்கவும். அப்பொழுது என்ன பண்ண வேண்டும் என்று சொல்கிறோம். வேறு ப்ராயஶ்சித்தம் எதுவும் தனியாகச் சொல்லவில்லை. அதனால் அது விட்டு போய்விடும். அதற்கு வேறு நாள் கிடையாது. அதனால் காயத்ரி ஜபம் அன்றேதான் பண்ண வேண்டும்.
பாதுகா தீர்த்தம் ஸ்வீகரிப்பது பஞ்சகவ்யம் ஸ்வீகரிப்பதற்குச் சமம் என்று கேள்விப்பட்டுள்ளேன். இதை விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
பாதுகா தீர்த்தம் ஸ்வீகரிப்பது பஞ்சகவ்யம் ஸ்வீகரிப்பதற்கு சமானம். பஞ்சகவ்யம் என்ன என்று கேட்டால் அது ப்ராயஶ்சித்தம். நாம் கண்டதைச் சாப்பிட்டு விட்டால் அதற்கு ப்ராயஶ்சித்தம். அதேபோல் ஸ்ரீ பாத தீர்த்தம் பாதுகாத் தீர்த்தமும் ப்ராயஶ்சித்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. பஞ்சகவ்யத்திற்கு ஒரு சுலோகம் இருப்பது போல் பாதுகா தீர்த்தம் ப்ராயஶ்சித்தமாக ஸ்வீகரிப்பதற்கு ஒரு ஸ்லோகம் இருக்கின்றது. சங்கல்பம் எல்லாம் பண்ணிக்கொண்டு நான் இதற்குப் ப்ராயஶ்சித்தமாக இந்த ஸ்ரீபாத தீர்த்தத்தைச் சேர்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி அந்தப் ஸ்ரீபாத தீர்த்தத்தை ஸ்வீகரித்தோமேயானால் அது ப்ராயஶ்சித்தமாகும். அதனால் அந்த அசுத்தி போய் சுத்தி வரும் என்று உண்டு. இது பெரியோர்கள் வழக்கத்திலும் உண்டு. ஸ்ரீபாத தீர்த்தம் ஸ்வீகரிப்பதற்கான ஶ்லோகத்தைப் பெரியோர்களிடம் உபதேசமாகப் பெற வேண்டும்.
அடியேனுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டது, ஆனால் என் அகத்துகாரருக்கு இன்னும் ஆகவில்லை, முக்கூர் அழகியசிங்கரிடம் ஸமாஶ்ரயணம் மட்டுமே ப்ராப்தம் ஆகியுள்ளது, அவருக்கு 60வது திருநக்ஷத்திரம் அடுத்த ஆண்டு சித்திரை மாதத்தில் வருகிறது. அந்தத் தினத்தில், அல்லது அந்த வாரத்தில், சாஸ்திர ரீதியாக சொல்லப்பட்டுள்ளவை மட்டுமே செய்ய வேண்டும் என்றால், அதுவும் பெருமாள் கைங்கர்யமாக செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக விவரிக்க விண்ணப்பிக்கிறேன்.
சஷ்டியப்தபூர்த்தி 60 முடிந்து 61 ஆரம்பிக்கும் பொழுது விசேஷமாக கொண்டாட வேண்டும் என்று இருக்கின்றது. பொதுவாகவே எல்லா ஜன்ம தினமுமே விஷேசம் தான். அதனால் அந்த ரீதியில் அறுபதாவது திருநக்ஷத்திரத்தன்று கோவிலுக்கு சென்று பெருமாள் சேவித்து அர்ச்சனாதிகள் எல்லாம் செய்து, பெருமாளுக்கு விசேஷ திருவாராதனங்கள் எல்லாம் செய்து, நான்கு பெரியவர்களை அழைத்து ததீயாராதனம் பண்ணலாம். முடிந்தால் ஸ்ரீமத் ராமாயணம் எல்லாம் சேவிக்கலாம். 61 ஆகும்பொழுது சஷ்டியப்த பூர்த்தி , தமிழ் வருடம் அதே வருடமே வரும். அப்பொழுது திருமாங்கல்ய தாரணம் முதலானவைகளைச் செய்யலாம் என்று இருக்கின்றது.
ஒரு நக்ஷத்திரம் ஒரு மாதத்தில் இரண்டுமுறை வருமென்றால் ஏன் இரண்டாவது முறை வருவதைதான் ஜன்ம நக்ஷத்திரமாக கருதுகிறோம்? ஜன்ம நக்ஷத்திரம் கொண்டாட அன்றைய நாளில் எத்தனை நாழிகை அந்நக்ஷத்திரம் இருத்தல் வேண்டும்?
ஒரு மாசத்தில் இரண்டு முறை நக்ஷத்திரம் வந்தால் இராண்டாவது முறை வரும் நக்ஷத்திரத்தைதான் ஜன்ம நக்ஷத்திரமாகக் கொண்டாடவேண்டும் என்பதாக ஶாஸ்திரம் சொல்லியிருக்கிறது. ஜன்ம நக்ஷத்திரம், ஶ்ரார்த்த திதி போன்றவற்றிற்கு ஶாஸ்திரம் சொல்லுவதைதான் நாம் ப்ரமாணமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஜன்ம நக்ஷத்திரம் என்பது அன்றைய தினத்து சூர்யோதயத்திலிருந்து 12 நாழிகை இருக்கவேண்டும். அப்படியில்லையென்றால் அதற்கு முதல்நாள் கொண்டாடவேண்டும்.
உதா: புதன் அன்று ரேவதி நக்ஷத்திரம் சூர்யோதயத்திலிருந்து 12 நாழிகை இருந்ததென்றால், புதன் கிழமை ரேவதி ஜன்ம நக்ஷத்திர தினமாகும். ஒருவேளை 111/2 நாழிகை இருந்தால் முதல்நாளே, அதாவது செவ்வாக்கிழமையே ஜன்ம நக்ஷத்திரம் கொண்டாட வேண்டும்.
எங்களுக்கு இரண்டு புத்திரர்கள் இருக்கிறார்கள்.இருவரையும் உபநயன ஸம்ஸ்காரம் ஆனபின் வேத அத்யயனத்தில் சேர்க்க ஆசைகொண்டுள்ளோம். 12 வயதுக்கு மேல் இருவரின் ஒருவரை ஶாஸ்த்ர அத்யயனத்திற்கு அனுப்பலாமா? (ஆதாவது ந்யாயம், தர்க்கம், வ்யாகரணம் போன்ற ஶாஸ்த்ரங்கள் வாசிக்க) நம் ஸம்ப்ரதாய முறைப்படி இவையெல்லாம் கற்க எங்கு சேர்க்கவேண்டும? மேலும் யாரேனும் தெனாலி மஹாபரிக்ஷைக்குக் குழந்தைகளைத் தயார் செய்து அனுப்புகிறார்களா? யாரை அணுக வேண்டும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன். எங்களுக்குப் புத்திரர்களை ஸம்ப்ரதாயம் கற்க அனுபிக்கவேண்டும் என்றும், NIOS முறையில் அவர்களை Secondary and Senior Secondary பரிக்ஷைகளுக்கு அனுப்பவும் ஆசைப்படுகிறோம். எங்களின் எண்ணம் சரியானதா?
12 வயதிற்கு மேல் ஶாஸ்த்ர அத்யயனத்திற்கு அனுப்பலாமா என்றால், தாராளமாக எவ்வித சந்தேகமின்றி அனுப்பலாம்.
நீங்கள் யதா க்ரமம் உபநயன ஸம்ஸ்காரம் ஆனபின் கேளுங்கள், நம் ஸம்ப்ரதாய முறைப்படி கற்க நல்ல பாடசாலைகள், நல்ல ஶாஸ்த்ர பரிக்ஷைகள் எல்லாம் இருக்கிறது. தெனாளி பரிக்ஷைக்கு அனுப்ப திருப்பதி முதலான ஊர்களில் இருக்கிறார்கள். ஆகையால் நீங்கள் துணிந்து தாராளமாக அவர்களை ஸம்ப்ரதாய முறைப்படி கற்க அனுப்பலாம்.
ஸமாஶ்ரயணம் ஆகாமல் பாஞ்சராத்ர ஆகமங்களை வாசிக்கலாமா? இதற்கும் வேதம் போல் உபநயன ஸம்ஸ்காரம் ஆகியிருக்க வேண்டுமா? முறையாகப் பயில கேட்கவில்லை ஒரு புத்தகம் போல் படிக்கலாம என்று கேட்கிறேன்.
ஸமாஶ்ரயணம் ஆகாமல் பாஞ்சராத்ர ஆகமங்களை வாசிக்கக்கூடாது. வேதம் போல் இது கற்கவும் உபநயன ஸம்ஸ்காரம் ஆகியிருக்க வேண்டும்.
உண்பதில் எண்பது என்ற உபந்யாஸத் தொடரில் நாம் எம்பெருமானுக்கு ஸமர்பிக்காமல் எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது என்றார். அப்படியானால் ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை எவ்வாறு எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பது?
எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்காமல் எதையும் உட்கொள்ளக்கூடாது. ஊறுகாய் முதலியவைகளை மொத்தமாகப் பண்ண அன்றைக்கே ப்ரசாதத்துடன் பெருமாளுக்கு ஸமர்ப்பித்து விடுவார்கள். அதேபோல் அப்பளம் போன்றவற்றை, அப்பள மாவு செய்தவுடனேயே இரண்டு மூன்று உருண்டைகளை எடுத்து வைத்துவிட்டு முதல்நாளே எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்து விடுவார்கள்.
மேலும் அப்பளமே அன்றன்றைக்கு பண்ணி அப்படியே ஸமர்ப்பிக்கலாம் என்றும் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் அப்பளத்திற்கு தோஷமில்லை. மேலும் புதிதாக அப்பளம் எடுத்து அன்றைக்குப் பொரித்த அப்பளமும் விசேஷ நாட்களில் ஸமர்ப்பிப்பது உண்டு பெரியவர்களின் வழக்கத்திலும் உண்டு.
ஏன் சில திருக்கோயில்களில் த்வஜஸ்தம்பம் இருப்பதில்லை? திருநாகூர் போன்ற சில திவ்ய தேசங்களில் கூட ஏன் இல்லை? த்வஜஸ்தம்பம் இருக்கும் திருக்கோயில்களுக்கும் இல்லாத திருக்கோயில்களுக்கும் என்ன வித்யாசம்?
சில கோயில்களில் த்வஜஸ்தம்பம் வைக்க வசதியில்லை இல்லை அனாதியாகவே அவ்வழக்கமில்லை என்பன போல் பல காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும், அது இல்லாத கோயில்களில் த்வஜஸ்தம்பம் இல்லை என்பதினால் ஒரு குறையும் இல்லை. த்வஜஸ்தம்பம் இல்லாத கோயில்களிலும் ப்ரம்மோத்ஸவம் நடக்கும், நித்யபடி பலி ஸமர்ப்பணம் போன்றவைகள் நடக்கும்.
திருக்குறுங்குடி, திருக்கரம்பனூர் போன்ற திவ்ய தேசங்களிலும்,அல்லது வெளியில் செல்லும்போது தேவதாந்த்ர ஸந்நிதிகளையோ, புறப்பாடு அல்லது கோயில்களைக் கடக்கும்போது ஒரு ப்ரபந்நன் கைக்கூப்பி நமஸ்கரிக்கலாமா?
தேவதாந்த்ர ஸந்நிதிகளைக் கடக்கும்போது கைக்கூப்பி நமஸ்கரிக்க வேண்டியதில்லை.திருக்குறுக்குடியில் எப்படி என்று தெரியவில்லை. திருக்கரம்பனூரில் அடியேன் பார்த்திருக்கிறேன், பெரிய்வர்கள் தேவதாந்த்ர ஸந்நிதி இருக்கும் பக்கமே போகமாட்டார்கள்.
ஒருமுறை உடுத்திக் களைந்த வஸ்திரத்தை துவைத்துவிட்டுதான் அடுத்தமுறை உபயோகப்படுத்த வேண்டுமா? உதா காலையில் அனுஷ்டானங்களை முடித்துவிட்டு அலுவலகத்திற்குச் செல்லும் முன் வேறு வஸ்த்திரம் மாற்றி, சாயங்காலம் அனுஷ்டானத்திற்கு காலை உடுத்திய அதே வஸ்திரத்தை உபயோகிக்கலாமா?
காலையில் உடுத்திய வஸ்திரத்தை மாலை உடுத்தலாம் என்பதில் பெரிய தோஷமில்லை என்று தோன்றினாலும் அது இரண்டாம் பக்ஷம்தான். விழுத்து போட்டுவிட்டால் அது மறுநாளைக்கு விழுப்பாகிவிடுகிறது. சிறிய குழந்தைகள் என்றால் பரவாயில்லை ஆனால் பெரியவர்கள் அனுஷ்டானம் என்று வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அனுஷ்டானம் சமயம் களைந்த வஸ்த்ரத்தை மீண்டும் உடுத்திக்கொள்ளும்போது ஒரு சிறிய குறை வருகிறது அதனால் முடிந்தால் வேறு வஸ்திரத்தை உடுத்திக்கொண்டு செய்வது சிறப்பானது. மற்றபடி விழுப்பு, தீட்டு அல்லது அதைத் தொடக்கூடாது என்றெல்லாம் கிடையாது. அதே மறுநாள் ஆகிவிட்டால் அந்த வஸ்திரம் விழுப்பாகிவிடும்.
அடியேன் ஜபம் பண்ணும்போது வெளிச்சிந்தனைகள் வருகிறதே தடுப்பதற்கு உபாயம் உள்ளதா?
இதற்காகதான் த்யான ஶ்லோகம் என்று வைத்திருக்கிறார்கள். ஜபம் பண்ணும் முன் த்யான ஶ்லோகம் என்று ஒன்றிருக்கும். அதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அதில் அந்த மூர்த்தியின் ரூபத்தைச் சொல்லி அவரை எப்படி த்யானம் பண்ணவேண்டும் என்பதிருக்கும். அப்படியாக அந்த மூர்த்தியை த்யானித்து ஜபம் பண்ணவேண்டியது.
ஜபம் பாண்ணும்போது நமக்கு பகவன் ரூபத்தை த்யானம் பண்ணாதபோதுதான் வெளிச்சிந்தனைகள் வருகிறது. முடிந்தளவு இப்படி ஒரு மூர்த்தியை த்யானம் பண்ண நாம் கற்றுக்கொண்டால் நமக்கு வெளிச்சிந்தனை வருவது குறையும்.
அனுஷ்டானத்திற்கு உபயோகிக்கும் சொம்பு, குளபாத்திரம் (குளவாத்திரம்) முதலியவை எந்த உலோகத்தில் (material)இருக்கவேண்டும்? எதனால் ஆனது உத்தமம் என்றும் எதனால் ஆனது சர்வதா கூடாது என்றும் ஏதேனும் விதி இருக்கிறதா?
பொதுவாக இரும்பு, எவர்சில்வர்(இரும்பு கலந்திருப்பதால்) போன்றவற்றில் இருக்கக்கூடாது. மற்றபடி வெள்ளி, செம்பு, பித்தளை போன்றவற்றில் இருக்கலாம் பெரியவர்களும் உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் உத்தமம், இது மத்யமம் என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எது இருக்கிறதோ அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் செம்பு பாத்திரங்களெல்லாம் அந்த ஜலமானது விஞ்ஞான ரீதியாக நல்லது என்று சொல்லுவார்கள்.
சாதுர்மாஸ்ய சங்கல்பம் என்பதை ஸ்ரீவைஷ்ணவ யதிகள் மட்டுமே இன்றளவும் அனுஷ்டிக்கிறார்கள். மற்ற சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த யதிகள் ஏன் அனுஷ்டிப்பதில்லை?
சாதுர்மாஸ்ய சங்கல்பத்தை அனைத்து சம்ப்ரதாய யதிகளும் அனுஷ்டித்துக்கொண்டிருக்கிறார்கள்.
உறவினர்களில் நெருங்கிய உறவினர்கள் சிலரைத் தவிர மற்றவர்கள் பற்றி அதிகம் தெரியாத போது அவர்கள் பரமபதித்தால் ஆஶௌசம் எப்படி அனுஷ்டிப்பது. பங்காளிகள் என்று தாத்தா காலத்தில் சொன்னவர்கள் வம்சத்தில் வந்தவர்கள் என்று தெரிந்தாலும் எத்தனைத் தலைமுறை என்று சரியாக தெரியாத போது 10 நாட்கள் அனுஷ்டிக்க வேண்டுமா. அல்லது 3 நாட்கள் அனுஷ்டித்தால் போதுமா. பொதுவாக உறவு என்று தெரிந்தாலும் துல்லியமாக அவர்கள் இன்னவகையில் உறவு என்று தெரியாவிட்டால் அந்தச் சமயத்தில் ஆஶௌசம் எப்படி அனுஷ்டிப்பது? இந்த மாதிரியான குழப்பமான சூழ்நிலைக்கு என்று உபாயம் ஏதும் உள்ளதா?
அவர்கள் எத்தனை நாள் பங்காளிகள் என்று தெரிந்துகொண்டு ஆஶௌசம் அனுஷ்டிப்பதுதான் உத்தமமான கல்பம், தெரியாமல் எப்படித் தீட்டை அனுஷ்டிப்பது?. அகத்தில் பெரியவர்கள் யாரேனும் இருந்தாலோ, அவர்கள் எழுதிவைத்திருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தாலோ, கூடியிருந்து பேசிப்பார்த்தாலோ தெரியும். அதற்காகதான் தலைமுறைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று சொல்வது. இவர்கள் பங்காளிகள் என்று தெரியவில்லை என்றால் அது வேறு , எத்தனை நாள் பங்காளித்வம் என்பதை அவசியம் தெரிநதுகொண்டு அனுஷ்டிப்பதே சரி.
அடியேன் சின்ன ஜீயர் USA ஏளியிருந்தபோது அவரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துகொண்டேன். அடியேனின் அகத்துக்காரரின் குடும்பத்தவர்களின் கொடியாலம் தாதாசார்யாரை ஆசார்யனாகக் கொண்டவர்கள். எனது பெற்றோர்கள் ஸ்ரீமதாண்டவன் சிஷ்யர்கள். எப்போது பாரதம் வருவோம் என்று தெரியாததனால் சின்ன ஜீயர் இங்கே ஏளியிருந்தபோது அவரிடம் ஸமாஶ்ரயணம் செய்துகொண்டேன். மேலும் என் அகத்துக்காரருக்கு இன்னும் ஸமாஶ்ரயணம் ஆகவில்லை. நான் பரந்யாஸமும் செய்யவேண்டுமா?
நீங்கள் வடகலையார் அகத்து நாட்டுப்பெண் என்று தெரிகிறது. ஆகையால் பரஸமர்ப்பணம் அவசியம் பண்ணிக்கொள்ளவேண்டும். இன்னொருமுறை அவர்களின் சொந்த ஆசார்யரிடம் ஸமாஶ்ரயணம் பண்ணிக்கொள்வதில் தவறில்லை. பாரதம் வந்து நீங்களும் உங்கள் அகத்துக்காரரும் அவர்களின் ஆசார்யரிடம் இரண்டும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்ணிக்கொள்வதுதான் உத்தமம்.
பரஸமர்ப்பணம் செய்துகொண்டால் மோக்ஷம் நிச்சயம் என்றிருக்க , பித்ருக்களுக்கு வ்யாச பிண்டம் ஏன் கொடுக்கவேண்டும?
பரஸமர்ப்பணம் செய்தால் மோக்ஷம் நிச்சயம். ஆனால் நாம் செய்யவேண்டிய கர்மாக்கள் செய்யவில்லையென்றால், பாபம் நேரிடும். வ்யாச பிண்டம் என்பது பற்றி பின்னர் தெரிவிக்கிறோம். மோக்ஷத்திற்குச் சென்ற பித்ருக்களுக்குப் பகவானைக் குறித்து ஶ்ரார்த்தம் செய்கிறோம்.
சிகை வைத்து கொண்டிருப்பவர்கள் தினமும் ஸ்நானம் செய்யும் போது தலையில் தண்ணீர் சேர்த்துக் கொள்வார்களா? ஶாஸ்திரம் என்ன சொல்கிறது?
தீர்த்தமாடுதல் என்றால் தலைக்குக் குளிப்பது என்றுதான் அர்த்தம். நித்யபடியே தலைக்குத் தீர்த்தம் சேர்த்துக்கொள்வதுதான் சரியான வழி. என்றைக்காவது முடியவில்லை என்றால் உடம்புமட்டும் குளித்துக்கொள்ளலாம். ஆனால் அது ஒருகுறைதான். நித்யபடி தீர்த்தமாடி பெருமாளுக்குத் திருவாராதனம் செய்வதுதான் உத்தமம்.
குறிப்புகள்:
படிக்கும் ப்ரஹ்மச்சாரி மாணவர்கள் தலைக்குத் தீர்த்தமாட அவசியமில்லை.
இக்காலத்தில் பல ஸ்ரீ வைஷ்ணவர்கள் சிவன், அம்மன் போன்ற மற்ற தேவதைகளின் கோவில்களுக்குச் சென்று வணங்குகிறார்கள். மற்ற தேவதாந்தரங்களைக் குலதெய்வமாகக் கொள்கிறார்கள். ஸ்ரீ வைஷ்ணவர்களான நாம் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே வணங்க வேண்டும் என்று நாம் சொன்னால், மற்ற தெய்வங்களை வணங்காவிட்டால் பாவம் வந்து சேரும் என்று கூறுகிறார்கள். இதில் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே வணங்க வேண்டும் என்று கூறும் நம்மையும் கேலி செய்கிறார்கள். இவர்களை எப்படித் திருத்துவது?
ஸ்ரீமன் நாராயணனை வணங்கினால் போதும், மற்றவர்கள் கேலிசெய்தால் செய்துவிட்டுப்போகட்டும். அவர்களுக்கு லௌகீக ரீதியாக சொல்லவேண்டுமென்றால் ப்ரதானமந்திரியாக இருக்கிறவர்களுக்கு அனைத்துத்துறைகளையும் பார்க்க/மாற்ற அதிகாரம் உள்ளது, இருந்தாலும் கல்வித்துறை, பாதுகாப்புத்துறை என்று வேவ்வேறு நபர்களை நியமித்து நடத்துகிறார்கள். மேலும் இவை அனைத்தும் பிரதமரின் மேற்பார்வையில்தான் நடக்கிறது. அதுபோல் ஸ்ரீமன் நாராயணன் இதர தேவதைகளை அந்தந்த ஸ்தானத்தில் வைத்து லோக காரியங்களை நடத்துகிறான். நமக்குப் பிரதமர் மிகவும் வேண்டிய நபராக இருக்கும்போது அவர் நமக்குச் செய்யத்தயாராக இருக்கும் பக்ஷத்தில் நாம் எதற்கு வேறு அமைச்சர்களிடம் போவோம் அதேபோல் எம்பெருமான் நமக்கு வேண்டப்பட்டவனாக இருந்து அவனை வேண்ட நமக்கு அனைத்தும் நடத்திக்கொடுப்பான். ஏனென்றால் அனைத்து தேவதைகளின் அந்தர்யாமியாக இருப்பது ஸ்ரீமன் நாராயணன்தான், அவனையே ஶரணடைந்தால் வேறு எந்தத் தெய்வத்திடமும் போகவேண்டிய அவசியமில்லை நமக்குப் பாபமும் வராது. இப்படிப்பட்ட மஹாவிஶ்வாசம் தேவை.
கிணற்று ஜலம், குமுட்டி அடுப்பு இன்று அரிதாக இருக்கிறது அதிலிருந்து மாறியது போல், நாங்கள் வெளியில் சாப்பிடுவதும், வெங்காயம் சாப்பிடுவதும் இக்காலத்திற்கேற்ற மாற்றம் என்று ஏன் ஏற்க மறுக்கின்றீர்கள் என்று பிள்ளைகள் கேட்கும் கேள்விக்கு எப்படிப் பதிலளிப்பது?
கிணற்று ஜலம், குமுட்டி அடுப்பு முதலியது ஆசாரம் ஸம்பந்தப்பட்டது. முடிந்தளவு கடைப்பிடிக்கலாம். ஆனால் வெங்காயம் சாப்பிடக்கூடாது என்பது ஶாஸ்திரம், அதைக் கடைப்பிடிக்காவிட்டால் பாபம் உண்டு, கள்ளு கூடிப்பது போல் இது.
குறிப்புகள்:
ஆகார சுத்தியிருந்தால்தான் மனசு சுத்தமாக இருக்கும். ஆஹார ஶுத்தௌ ஸத்வ-ஸுத்தி: ஸத்வ-ஶுத்தௌ த்ருவா ஸ்ம்ருதி: என்பது வாக்கியம். நம் ஆஹாரம்தான் நம் எண்ணங்களை உருவாக்குகிறது ஆகையால் வெளியில் சாப்பிடுவதைக் கட்டாயம் நிறுத்தவேண்டும்.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் வீடு வாங்கும் முன்/கட்டும்போது வாஸ்து ஶாஸ்திரம் பார்க்கவேண்டுமா? குறையிருந்தால் அதற்கு பரிகாரம் செய்யவேண்டுமா?
பொதுவாக வாஸ்து ஶாஸ்திரப்படிதான் எல்லாருமே வீடுகட்டுவார்கள். மடைப்பள்ளி, கிணறு முதலானது எந்தப் பக்கம் இருக்கவேண்டும் என்பதில் கணக்கு உண்டு. அதைத்தவிர விசேஷமாகப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. க்ருஹப்ரவேசத்தில் வாஸ்துஹோமம் செய்வார்கள் அதுவே பொதுமானது.
குறிப்புகள்:
இக்காலத்தில் வாஸ்து பார்க்கிறார்கள். வாஸ்துஹோமத்தில் எல்லாத் தேவதைகளும் இருக்கிறார்கள். ஆனால் இவை அனைத்திலும் எம்பெருமான் அந்தர்யாமியாக இருக்கிறான் என்ற புத்தியுடனே செய்தல்வேண்டும்.
பொதுவாக சாயம் சந்தியாவில் சூர்யோதயம் ஆகும்முன் அர்க்யமும், நக்ஷத்ர ஆரோஹனம் ஆனபின் உபஸ்தானம் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ப்ரதோஷ தினத்தன்று எப்போது அர்க்யம் மற்றும் உபாஸ்தானம் கொடுக்க வேண்டும்? மேலும், அன்றைய தினத்தில் ஜபத்தின் எண்ணிக்கை குறைக்கவேண்டுமா?
சாயம் சந்தியாவில் சூர்யன் கொஞ்சம் இருக்கும்போதே அர்க்யமும் நக்ஷத்ரம் உதித்தபின் உபஸ்தானம் என்பது வழக்கம். மற்ற நாட்களில் 108 காயத்ரி செய்வதென்றால் ப்ரதோஷத்தன்று 10 காயத்ரி தானே பண்ணமுடியும் அதுவரை காத்துக்கொண்டிருக்கணுமா என்று கேட்பதுபோல் தெரிகிறது. பெரியவர்கள் காலத்தில் அர்க்யத்தைக் கொடுத்துவிட்டு 10 காயத்ரி செய்துவிட்டு உபஸ்தானம் வரை காத்திருப்பார்கள். இல்லையென்றால் அர்க்ய ஸமர்ப்பணமும், உபஸ்தானமும் முன்னபின்ன நேரமானாலும் தவறில்லை. ப்ரதோஷமன்றும் காலத்தில் சந்தியாவந்தனம் செய்வது வேண்டும்.
நதிகளில் ஸ்நானம், அனுஷ்டானம் செய்ய என்ன விதி என்று தெரிவிக்கவும். வேறொரு இடத்திற்குச் (ஊருக்கு) சென்று நதிகளில் நீராட வேண்டுமென்றால் அகத்திலிருந்து குளித்துவிட்டுதான் செல்லவேண்டுமா? ஸமுத்திர ஸ்நானத்திற்கும் இது பொருந்துமா?
மஹாநதிகளில் ஸ்நானம் செய்வது விசேஷம். அதற்காக வேறு ஒரு இடத்தில் ஸ்நானம் செய்யவேண்டுமென்ற நிர்பந்தமில்லை. அந்த நதியிலேயே முதலில் குளித்துவிட்டு அதனால் தீட்டு போய்விடும், அதன்பின் மீண்டும் சங்கல்பம் செய்து மறுபடியும் குளிக்கலாம், நதியில் ஜலம் ஒடிக்கொண்டுதானே இருக்கும் அதனால் அது புது ஜலமாகிவிடும்.
ஸமுத்திர ஸ்நானம் செய்யும்முன் வேறு ஒரு இடத்தில் தீர்த்தமாடிவிட்டு ப்ரவேசிப்பதுதான் வழக்கம். தீட்டோடு ஸமுத்திர ஜலத்தைத் தொடக்கூடாது என்றிருக்கிறது.
பவித்ரத்தைத் காதில் வைத்துக்கொண்டு ஆசமனம் செய்கிறோம். அப்படிக்காதில் வைத்துக்கொள்ளும்போது கையில் தலைமுடியின் ஸபர்ஶம் ஏற்படுகிறது. அது தோஷமா? இதைத் தவிர்க்க தட்டில் வைக்கலாமா?
பவித்ரத்தை வலதுகாதில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ப்ராஹ்மணரின் வலதுகாதில் கங்கை இருக்கிறாள் என்பதினால். அது சுத்தமான இடமானபடியினாலும், நதியிருப்பதாலும் அங்கே வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது கீழே விழக்கூடும் என்பதினால் தட்டில் வைத்து ஆசமனாதிகள் செய்து மீண்டும் போட்டுக்கொள்ளலாம்.
அடியேனின் அகத்தில் 8 சாளக்கிராம பெருமாள் ஏளியிருக்கிறார். எங்கள் நண்பர் மற்றுமொரு சாளக்கிராம பெருமாள் அளிக்க விரும்புகிறார்.அவரை நாங்கள் ஏளப்பண்ணிக்கொள்ளலாமா? சிலர் ஒற்றைப்படையில் கூடாது என்கிறார்கள். வேறு சிலர் அவரைத் தனியாக வேறு பெட்டியில் ஏளப்பண்ணவேண்டும் என்கிறார்கள். எது சரி ஒற்றைப்படையில் சாளக்கிராம மூர்த்தியை அகத்தில் வைத்துக்கொள்ளக்கூடாதா? தெளிவிக்கவும்.
ஒரு சாளக்கிராம மூர்த்தி வைத்துக்கொள்ளலாம். 2 , 3 மூர்த்திகள் வைத்துக்கொள்ளக் கூடாது. நான்கில் ஆரம்பித்து எத்தனை வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். நாலுக்கு மேல் ஒற்றைப்படை இரட்டைப்படை என்ற கணக்குக்கிடையாது. 9 ஒற்றைப்படை என்று தோன்றினால் கூடியச் சீக்கிரம் மற்றொரு மூர்த்தியையும் ஏளப் பண்ணிக்கொள்ளலாம். வேறு பெட்டியில் வைப்பதென்பதெல்லாம் நிர்பந்தமில்லை.
ஆடிப் பண்டிகை அன்று ஏகாதசி அன்று வந்தால், திருவாராதனத்துக்குப் பண்டிகைத் தளிகை ஸமர்ப்பிக்கலாமா? ஏகாதசி விரதம் தடைப்பட்டு விடுமா?
ஆடிப்பண்டிகையன்றோ அல்லது எந்தப் பண்டிகையன்றோ ஏகாதசி வந்தால், . ஏகாதசி விரதத்தை விட்டுவிடக்கூடாது. அரிசியை உடைத்து ப்ரசாதமாகச் செய்து பாக்கி தளிகை, திருக்கண்ணமுதெல்லாம் செய்து பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணி சாப்பிடலாம். நியமேன உபவாசம் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் சாப்பிடலாம்.
ஸ்த்ரீ தர்மம்
(கேள்விகளும் – பதில்களும்)
1) துளஸீ இலைகள் காய்ந்து போனாலும் திருவாராதனத்திற்குப் பயன்படுத்தலாம், என்று உபன்யாசங்களில் கேட்டிருக்கிறேன். அதே போல், நம் வீட்டில் வளரும் துளஸீச் செடிகளில் இருந்து சற்றே மஞ்சள் ஆன இலைகளைத் திருவாராதனத்திற்குப் பயன்படுத்தலாமா?
2) ஆண் பிள்ளைகள் மற்றும் பேரன்களே இல்லாதவர்களின் இறுதி காரியங்களையும் மற்ற சடங்குகளையும் யார் செய்யலாம்?
3) ஆரண்ய காண்டத்தில் (3.48.8) ராவணன் சீதாப்பிராட்டியிடம், “”எனக்குப் பயந்தே சூரியன் தன் கடமைகளைச் செய்கிறான்”” என்று கூறுகிறான். அப்படிபட்ட சூரியனை, சர்வேஸ்வரனான ஸ்ரீ ராமபிரான் ஆதித்ய ஹ்ருதயத்தால் துதித்து, அதே ராவணனை அழித்தார் என்று யுத்த காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு நம் ஆசார்யர்கள் ஏதேனும் விளக்கம் அளித்துள்ளார்களா?
காய்ந்த துளஸீ இலையைப் பெருமாளுக்கு உபயோகிக்கலாம். ஆனால் செடியிலிருந்து காய்ந்த/பழுப்பு நிற துளஸீயை எடுத்துச் சேர்ப்பிக்கக்கூடாது.
கணவன்–மனைவி பரஸ்பரம் செய்யலாம். அதற்கு பிறகு நெருங்கிய உறவினர், சகோதரர் முதலியவர்கள் செய்யலாம்.
இதற்கு யார் யார் கர்தா என்ற க்ரமம் இருக்கிறது. ப்ராசீன ஆசார ஸங்க்ரஹம் முதலான் தீட்டு விவரங்களைச் சொல்லும் புத்தகங்களில் இவரில்லை என்றால் இவர் என்று க்ரமம் கொடுக்கப்பட்டிருக்கும். ஸ்த்ரீகள் இருந்தால் அவர்களின் கைப்புல் வாங்கி செய்யவேண்டும்.
ஆதித்யனுக்கு சக்தி ஒன்னும் இராவணன் கொடுத்து வரவில்லை, பெருமாள் கொடுத்ததுதான், எம்பெருமான் அந்தச் சக்தியை வைத்தே அவனை அழிக்கிறார், குரங்குகள் வைத்து ராக்ஷஸப் படையை அழித்தது போலே.
குறிப்புகள்:
பெருமாள் திருவவதாரத்தில் ஆதித்ய ஹ்ருதயத்தால் சூர்யனை ஸ்தோத்ரம் செய்தார் என்றால், அதில் தான் அந்தர்யாமியாக இருக்கக்கூடிய நாராயணனை ஸ்தோத்ரம் செய்தார் என்றர்த்தம்.
ப்ரஹ்மயஜ்ஞம் என்றால் என்ன?
க்ருஹஸ்தர்களும் சமிதா தானம் செய்ய வேண்டுமா?
க்ருஹஸ்தர்கள் சந்தியா வந்தனம் , ப்ரஹ்மயஜ்ஞம், திருவாராதனம் தவிர கட்டாயம் செய்ய வேண்டிய கர்மா/ஹோமம்/யஜ்ஞம் என்னென்ன?
ப்ரஹ்மயஜ்ஞம் என்பது பஞ்சமஹா யஜ்ஞங்களில் ஒன்று. அதில் ப்ரஹ்மயஜ்ஞம் என்பது நாம் கற்றுக்கொண்ட வேதபாடங்களை மறவாமல் இருக்க நித்யபடி எவ்வளவு முடியுமோ அதை அவசியம் சொல்லவேண்டும். இது ஒரு நித்யகர்மா. இதை விடக்கூடாது,
கடைசி பக்ஷம் புருஷஸூக்தம் கற்றுக்கொண்டு அதையாவது சொல்லவேண்டும்.வேதாத்யயனம் செய்தவர்கள் நித்யபடி ஒரு ப்ரஶ்னம் ப்ரஹ்மயஜ்ஞம் சொல்வர்கள். இதை உபநயனமானவர்கள் அத்யயனம் ஆரம்பித்தவுடனே பண்ணுவார்கள். மேலும் இந்த நித்யகர்மா பாரியாள் உயிரோடு இருக்கும்வரைதான் பண்ணமுடியும். இது யஜ்ஞமானபடியினால் அவர் பரமபதித்தபின் இக்கர்மா விட்டுப்போகும்.
க்ருஹஸ்தர்கள் செய்யவேண்டாம். சமிதா தானம் – சமித்+ஆதானம் -> சமித்தைப் பகவானுக்கு அக்னியில் ஸமர்ப்பிப்பது. இது ப்ரஹ்மச்சாரிகளுக்குக் கர்தவ்யமாகும்.
க்ருஹஸ்தர்களுக்கு சந்தியாவந்தனம், ப்ரஹ்மயஜ்ஞம், திருவாராதனத்துடன் கட்டாயம் செய்யவேண்டிய நித்யபடிகர்மாகள்- வைஶ்வதேவம், தேவரிஷி, காண்டரிஷி, பித்ரு தர்ப்பணம், ஆதார சக்த்யாதி தர்ப்பணங்கள். ஔபாஸனமும் நித்யபடி செய்யவேண்டிய கர்மா ஆகும்.
ப்ராஹ்மணர் அல்லாதோர் ஶ்ரீவைஷ்ணவர்களாக மாறிவிட்டால் அவர்களுக்கு உபநயன ஸம்ஸ்காரம் செய்து வேதம் ஓதலாமா?
கூடாது. ப்ராஹ்மணர் அல்லாதவர் ஸ்ரீவைஷ்ணவராக மாறுவது என்பது வேறு. ப்ராஹ்மணர் என்பது ஜாதி, ஸ்ரீவைஷ்ணவம் என்பது குலம். அவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்களாக மாறிவிட்டதால் பூணூல் போட்டு இதர ஸம்ஸ்காரங்கள் செய்வது சரியில்லை.
துளஸீச் செடிகள் வளர்க்காத வீடுகளில் துளஸீக்குப் பதிலாக வேறு ஏதாவது ஒன்றை வைத்துத் திருவாராதனம் செய்யலாமா?
ப்ராஹ்மணர்கள் துளஸீச் செடி அகத்தில் அவசியம் வளர்க்கவேண்டும். துளஸீ கிடைக்காவிட்டால் பெருமாளுக்கு உகந்த புஷ்பம்கொண்டு திருவாராதனம் செய்யலாம்.
இஜ்யா காலத்தில் திருவாராதனம் செய்ய வேண்டும் என்று ஆஹ்நிகம் தெரிவிக்கிறது. இஜ்யா காலம் என்பது மாத்யாஹ்நிகத்திற்குப் பிறகு வருகிறது. திருவாராதனம் செய்த பிறகே சாப்பிடலாம் என்றால் காலையில் எழுந்தது முதற்கொண்டு மதியம் வரை சாப்பிடக் கூடாதா. இடையில் அன்னமாக புஜிக்கக்கூடாது என்றால் பழம் பால் மற்றும் வேறு என்ன மாதிரியான பதார்த்தங்களை அல்லது தளிகையைச் சாப்பிடலாம். தற்காலத்தில் காலை உணவைச் சாப்பிடாமல் விடுவது மிகவும் தவறு என்று மருத்துவர்கள் தெரிவிப்பதால் தான் இந்தக் கேள்வி. மேலும் மாலை/இரவு வேளையில் தளிகை செய்யும்போது நடைமுறையில் அதை அப்படியே தான் சாப்பிடுகிறோம். பகவானுக்கு நிவேதனம் செய்யாமல் உண்ட குற்றம் அதற்கு ஏற்படுமா. மேலும், தொலைதூரப் பயணம் செய்யும் போது கையில் உணவோ அல்லது ரொட்டி முதலானவைகளையோ கொண்டு செல்ல அனுமதி உள்ளதா?
திருவாராதனத்திற்கு முன் எதையும் சாப்பிடக்கூடாது.
மாத்யாஹ்நிக காலமென்பது காலை 10.30மணிகெல்லாம் வந்துவிடும். அந்த மாத்யாஹ்நிக காலத்தில் மாத்யாஹ்நிகம் பண்ணிவிட்டு இஜ்யாராதனம் பண்ணிவிடலாம். இவையெல்லாம் காலை சுமார் 11, 11.30 மணிக்குள் பண்ணிவிடலாம். இது முடியாதவர்கள் சற்றுமுன்னரே இஜ்யாராதனம் செய்துவிடலாம். சாப்பிட்டுவிட்டு இஜ்யை பண்ணுவதைக் காட்டிலும் ரொம்ப முடியவில்லை என்றால், காலை 7.30-8.00 மணிக்குள் எம்பெருமானுக்குப் பாலோ ,தயிரோ, பழமோ வைத்து இஜ்யை பண்ணிவிட்ட பிறகு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். அசக்தர்கள் முன்னமே பண்ணலாம், சக்தர்கள் காத்திருந்து காலை உணவை 11 மணிக்குள் சாப்பிட்டுவிடலாம்.
மாலை, இரவு வேளையிலும் பெருமாளுக்கு அமுது செய்வித்து உட்கொள்ளவேண்டும்.
தொலைதூரப் பயணம் போகுபவர்கள் கையில் எடுத்துக்கொண்டு போவதில் சில சங்கடங்கள் இருக்கின்றன அதனால் பொதுவாக அதற்கு அனுமதியில்லை. வேறுவழியில்லாவிட்டால் அசுத்தம் படாமல் ரொட்டி முதலாவைகளை மறைத்து (பாத்திரத்தில் இட்டு , சால்வையால் சுத்தி) எடுத்துக்கொண்டு போகலாம்.
வபனம் செய்து கொண்ட பின் கண்டிப்பாக பூணூல் மாற்றிக் கொள்ள வேண்டுமா ஸ்வாமி? நகரங்களில் சர்வாங்க க்ஷௌரம் செய்துகொள்ள கடினம் என்பதால் முகத்தில் மட்டும் செய்துகொள்வது சரியாகுமா. சில முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு முன்பு மட்டும் சர்வாங்கம்(இடுப்பு அளவு மட்டுமே) செய்து கொள்ள முடிகிறது. இது சரியானதா ஸ்வாமி.
வபனத்திற்குப் பிறகு பூணூல் மாற்றிக்கொள்வதென்பது இன்றளவும் சிஷ்டாசாரத்தில் இருக்கிறது. எப்படியும் வபனம் செய்யும்போது இதர ஸ்பர்ஶம் பூணூலில் படுவதால் அதை மாற்றிக்கொள்ளும் வழக்கமிருக்கிறது. நகரங்களில் சர்வாங்கம் பண்ணுமளவு வசதிகள் இல்லையென்றாலும், பல பெரியவர்கள் எங்கே சர்வாங்கம் பண்ணும் மனுஷ்யர்கள் இருக்கிறார்களோ அங்கே சென்று பண்ணிக்கொள்கிறார்கள். இப்பவும் சில ஊர்களில் அதற்கான மனுஷ்யர்களுக்கு நிரவதிகமாக அவர்கள் கேட்கும் பைசாவைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தர்மானுஷ்டானத்திற்காக பைசா செலவு செய்வதில் தவறில்லை.
இடுப்பு மட்டும் பண்ணிக்கொள்வதென்பது ஶாஸ்திரங்களில் இல்லை.
தற்காலத்தில் அபார்ட்மெண்ட் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு கிணற்று தீர்த்தத்திற்கு வழியில்லை. ஆனால் அனுஷ்டாங்களுக்கும் திருவாராதனத்திற்கும் தொட்டியில் இருந்து வரும் தீர்த்தத்தை எடுக்கக் கூடாது என்று பல பெரியோர்களும் சொல்லக் கேட்கிறோம். அப்படியானால் நகரத்தில் வசிக்கும் அடியோங்கள் மாதிரி பல பேருக்கு பகவத் ஆராதனம் செய்ய வழியே இல்லையா ஸ்வாமி?
திருவாராதனம் பண்ணாமல் இருக்கக்கூடாது, முடிந்தளவு ஆசாரத்துடன் ஆராதனம் பண்ணவேண்டும். கிணற்று ஜலம் இல்லாவிட்டல் தனியான Direct Borewell ஜலம் அல்லது அதுவும் முடியாவிட்டல், முடிந்தவரை அசுத்தம் கலக்காத ஜலத்தை வைத்துப் பண்ணவேண்டியது.
குறிப்புகள்:
அபார்ட்மெண்டுகளில் வசிப்பவர்கள் திருவாராதனத்திற்கு முடிந்தளவு சுத்தமான தீர்த்தத்தைக் கொண்டுவந்து செய்தல் வேண்டும். நம்மகத்தில் இல்லையென்றால் பக்கத்தில் எங்கேயாவது கிணறுயிருந்தால் அங்கே சென்று ஒரு குடம் எடுத்துவந்து செய்யலாம். கிணறு இருக்கும் அபார்ட்மெண்டிற்கு மாறலாம். அல்லது Borewellல்லிருந்து tankக்குப் போகாமல் ஒரு Pipe இருக்குமாகில் அதிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இவையெல்லாம் நாம் எந்தளவு சுத்தமாகச் செய்ய நினைக்கின்றோமோ அந்தளவு எம்பெருமான் நமக்கு வழிவகுப்பான். மனமிருந்தால் மார்கம் உண்டு என்பது போல். திருவாராதனம் விடாமல் பண்ணவேண்டும். சுத்தமான தீர்த்தமெடுத்து பண்ணுவதுதான் மிகவும் நியாயமானது,
கோவில்களில் கைங்கர்யத்திற்குச் செல்லும் போது முடிந்தவரை மடியாக செல்கிறோம். எனினும் இடையில் யார் மீதாவது பட நேர்ந்தால் கோவிலில் சென்று தீர்த்தமாட முடியவில்லை. இந்தச் சமயத்தில் லகுவாக மந்த்ர ஸ்நானம் (ஆபோஹிஷ்டா மந்திரங்களைச் சொல்லி ப்ரோக்ஷணம்) மட்டும் செய்யலாமா? மந்த்ர ஸ்நானத்திற்குச் சங்கல்பம் உண்டா? அல்லது ரிஷி சந்தஸ் தேவதைக்குப் பிறகு மந்திரத்தை மட்டும் சொல்லி ப்ரோக்ஷித்துக் கொண்டால் போதுமா ஸ்வாமி?
கோவிலில் கைங்கர்யத்திற்குப் போகும்போது சுத்தமாகச் செல்லவேண்டும். சேவார்த்திகளின் மேலே பட்டால் தோஷமில்லை. மற்றவர்காள் மேலே பட்டால் பாதிவழியில் தீர்த்தமாடுவதெல்லாம் கிடையாது. யார் மேலையும் படாமல் செல்லவேண்டும். மந்திர ஸ்நானம் பண்ணிக்கொள்வதென்பதெல்லாம் ரிஷி சந்தஸ் சொல்லி செய்வதில்லை. சங்கலபம் உண்டு. மந்திரம் சொல்லிதான் ஸ்நானம் செய்யவேண்டும்.
குறிப்புகள்:
நாம் சுத்தமாகப் போகவேண்டுமென்றால் அதற்குத் தகுந்தாற்போல் ஜாக்கிரதையாகச் செல்லவேண்டும். கோவில் வாசலில், உள்ளே சென்றபின் கூட்டமாக இருந்தால் என்ன செய்வது , மேலே படும்படி நேர்ந்தால் பரவாயில்லை என்றும் சொல்கிறார்கள்.
மடி என்பது வஸ்திரம் விழுப்பில்லாமல் இருப்பது என்று புரிகிறது. அதாவது முந்தைய நாள் இரவு நனைத்து உலர்த்தி மறுநாள் காலை ஸ்நானத்திற்குப் பிறகு எடுத்து உடுத்திக் கொள்வது. பகலில் துவைத்து உலர்த்திய வஸ்திரங்களை விழுப்பில்லாமல்(படுக்கையில் படுக்காமல்) மடியாகவே இருந்து எடுத்து வைத்தால் அது சரியாகுமா ஸ்வாமி. இடையில் கால் மிதியடி/திரைச்சீலை ஆகியவற்றைத் தொடுவதால் மடி குறைந்துவிடுமா? குடும்பத்தில் மற்றவர்கள் (குளித்திருந்தாலும்) மீது படுவதாலும் மடி குறைந்துவிடுமா. சணலில் செய்த கோணியை மிதியடியாக பயன்படுத்தினால் விழுப்பு இல்லை என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டேன். அது வாஸ்தவம் தானா ஸ்வாமி.
பெரியவர்கள் வழக்கமென்பது நித்யபடி நாட்களில் (ஶ்ரார்த்தாதி நாட்களைத் தவிர) சாப்பிடுவதற்குமுன் ஒரு கம்பளியில் மடித்துவைத்துவிட்டால் அது மடிவஸ்திரமாகும். அமாவாஸ்யை, தர்ப்பணங்கள் போன்ற நாட்களில் இரண்டு சூர்யன் படக்கூடாது என்பதால் ஒன்று அஸ்தமனம் ஆனபின் உலர்த்துவார்கள். அமாவாஸ்யை போன்ற நாட்களில் மதியம் 12 மணிக்கு மேல் தர்ப்பணம் பண்ணுவதால் காலையில் எழுந்து உலர்த்துவார்கள். கீழேயிருக்கும் மிதியடி, திரைச்சீலையெல்லாம் துணியில்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். துணியாக இருந்தால் அதன் மேல் படாமல் இருப்பதுதான் சரியானது. சாக்குக்குக் கிடையாது என்றாலும் சணல், சாக்கு போன்றவற்றிற்கு ஒருவிதமான தீட்டு இருப்பதால் அதைத் தொட்டுவிட்டு பெரியவர்கள் திருவாராதனம் பண்ணும்வழக்கமில்லை.
நாம் ஊருக்குச் செல்ல வேண்டும் என்கிற போது நடுநிசி நேரம் இரண்டு மணி காலை தீர்த்தமாடலாமா?
தீர்த்தமாடலாம். ஒன்றரை மணிக்கு மேல் மறுநாள் கணக்கு. வேறு கதியில்லாத வேளையில் அப்படிச் செய்யலாம்.
முன் காலத்தில் அகத்தில் நெல் புழுக்கி காயவைத்து புழுங்கல் அரிசி கிடைக்கும். தற்போது அந்த வசதிகள் இல்லை. கடையில் புழுங்கல் அரிசி வாங்கிச் செய்யும் பதார்த்தங்களைப் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா?. (பெருமாளுக்குக் கூடாது என்றால் நாமும் உபயோகிக்க முடியாது)
அகத்திலே புழுக்கி வைத்த நெல்லிருந்து புழுங்கலரிசி தயாரிப்பது என்பதுதான் உத்தம கல்பம். அதுதான் சிஷ்டர்களின் க்ருஹங்களில் வழக்கமாக இருந்திருக்கிறது. இன்றும் சில க்ருஹங்களில் அவ்வழக்கம் இருக்கிறது. ஆனால் அது மிகவும் ஶ்ரமமான கார்யமாக இருப்பதினால் இன்று பெரும்பாலான க்ருஹங்களில் இவ்வழக்கமில்லை என்பது உண்மை.
உத்தமமான கல்பம் என்பது அகத்திலே தயாரித்து அதன் மூலம் செய்த பதார்த்தங்களை உபயோகிப்பதுதான். அது இயலாதவர்களுக்கு அவர்களால் இயன்றதைச் செய்வது என்பதும் வழங்கத்தில் இருக்கிறது.
ஒரு ப்ரபந்நன் ஐயர் அகத்துப் பூணூல், கல்யாணம், சீமந்தோந்நயனம் போன்ற விசேஷங்களுக்குப் போகலாமா? தாம்பூலம் வாங்கிக் கொள்ளலாமா?
ஐயர் அகத்துப் பூணூல், கல்யாணங்களுக்குப் போகலாம், தாம்பூலங்களும் வாங்கிக்கொள்ளலாம். அதில் எந்தத் தோஷமும் இல்லை.
அடியேனின் புக்ககத்துக் குலதெய்வம் யாரென்று தெரியவில்லை. அகத்துப் பெரியவர்களிடமும் விசாரித்து விட்டோம்.என் கணவருக்கு பரந்யாஸம் ஆகிவிட்டது .குலதெய்வ வழிபாடு என்பது ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்கு எந்த அளவு முக்கியம் என்பதையும் எப்படி அறிவது என்பதையும் தெரிவிக்கவும். நாங்கள் தேம்பாறை தட்டை ஸ்வாமி வழி வந்தவர்கள். இக்குடும்பப் பெயர் வைத்துக் கண்டுபிடிக்க முடியுமா?
குலதெய்வ வழிபாடு விசேஷம் என்றும் சேவித்தால் நல்லது என்னுமளவு சொல்லலாம். இங்கே குலதெய்வம் யாரென்று தெரியவில்லையென்றால், பொதுவாகத் திருவேங்கடமுடையானைக் குலதெய்வமாக வைத்துக்கொள்வது என்பது பெரியவர்களின் நிர்ணயம்.
நாம் பொதுவாக தாயார் உயிருடன் இருக்கும்போது, பிதா பரம்பதித்த பின்னர் அவருக்கு ஶ்ராத்தாதிகள் எல்லாம் பண்ணுகிறோம். ஆனால் பிதா இருக்கும்போது , தாயார் பரமபதித்து விட்டால் அவருக்கு ஶ்ராத்தம், தர்ப்பணம் போன்றவைகளை ஏன் செய்வதில்லை. அவர்கள் பித்ரு லோகம் அடைந்தபின் அவருக்கு எள் மற்றும் ஜலம் தேவைப்படாதா? அடியேனுக்கு இக்கேள்வி பல காலமாக மனதில் உறுத்திக்கொண்டிருந்தது, அவர்தான் நமக்கு ஜனனம் தந்து பல த்யாகங்கள் செய்தவள்.
தாயார் பரமபதித்த பின் நாம் அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஶ்ராத்தம் பண்ணுகிறோம். ஆனால் ஶ்ராத்தாங்க தர்ப்பணம்தான் பண்ணுவதில்லை ஏனென்றால், அந்தத் தர்ப்பணம் செய்யும் யோக்யதை (தகுதி) பிதா பரமபதித்த பிற்குதான் நமக்குக் கிடைக்கிறது. அதுவரை அந்த ஜீவனுக்கு தகுதியுடைய ஜ்ஞாதாகள் தர்ப்பணம் செய்வார்கள். “ஜ்ஞாதா அஜ்ஞாதா பித்ருப்ய:”
துளஸீ பறிக்கக்கூடாத நாட்களில் துவாதசி, அமாவாசை மற்றும் சில நாட்களோடு சேர்த்து சஷ்டியும் ஒரு நாளாக ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சஷ்டி அன்று நாம் துளசி பறிக்கக்கூடாதா?
ஷஷ்டியும் பித்ரு திதி எனக் கூறுவதுண்டு. பித்ரு திதிகளில் துளஸீ க்ரஹணம் கூடாதாகையால் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
ஏன் அமாவாஸை, ப்ரதமை, அஷ்டமியன்று புதிய சந்தை வகுப்புகள் (ப்ரபந்தம், ஸ்தோத்ரபாடம்) நடத்தப்படுவதில்லை?
இது சாஸ்திரம் வகுத்த விதி. ஒரு விடுமுறை தினம் போல.
கோயில்களில் அர்ச்சனை செய்யும்போது பெயர், கோத்ரம் சொல்லிச் செய்கிறோம். ஒரு ப்ரபந்நன் இவ்வாறு அர்ச்சனை செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். மேலும் சிலர் இப்படிச் செய்வது நம் ஸம்ப்ரதாயத்தில் இல்லை என்கிறார்கள். இதில் எது சரி, நம் ஸம்ப்ரதாயத்தில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யலாமா? ஒரு ப்ரப்ந்நன் செய்யலாமா?
பகவத் பிரீத்யர்த்தம் என்று அர்ச்சனை செய்யலாம். நம் பெயர் கோத்ரம் சொல்வது ஸம்ப்ரதாய வழக்கம் இல்லை. அது காம்யம் ஆகிவிடும்.
பஞ்ச ஸம்ஸ்காரம் ஆகாமலே ஒருவர் ஸ்தோத்ர பாடங்கள் மற்றும் ப்ரப்ந்தங்கள் சேவிக்கலாமா? அடியேனுக்கு இன்னும் ஆகவில்லை ஆனால் விடாமல் தேஶிக ஸ்தோத்ரங்கள், பரப்ந்தங்கள் சேவித்துக் கொண்டிருக்கிறேன். அதைத் தொடரலாமா?
தேஶிக ஸ்தோத்ரங்கள், ப்ரபந்தங்களை தொடர்ந்து சேவிக்கலாம்.
அடியேனுக்கு, என் 2 வயது ப்ராயத்தில் பரந்யாஸம் ஸ்ரீமதழகிய சிங்கரால் பண்ணப்பட்டது என்பது சமீபத்தில்தான் அறிந்துகொண்டேன். அதன் பின்னரே நித்யானுசந்தானம், ஆசார்யன் தனியன் சேவிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுநாள் வரை பின்பற்றாததற்கு ஏதேனும் ப்ராயஶ்சித்தம் செய்யவேண்டுமா? மேலும் என் அகத்துக்காரர் பரகால மடத்தைச் சேர்ந்தவர்கள். அடியேனுக்கு இன்னும் ஸமாஶ்ரயணம் ஆகவில்லை. ஆன பின் ஸ்ரீஸந்நிதி மற்றும் பரகால மடம் என இரண்டு தனியங்களையும் அனுசந்திக்க வேண்டுமா?
ப்ராயஶ்சித்தம் தேவையில்லை. இனிமேல் ஸ்ரீமதழகிய சிங்கரின் தனியன் சொல்லலாம். மேலும் இரண்டு ஆசார்ய தனியனும் சொல்லலாம்.
கைவல்யத்தைப் பற்றியது. சாங்கிய மதத்தை மற்றும் பகவான் கபிலர் சித்தாந்ந்ததைப் பின்பற்றுபவர்கள் இந்த கைவல்ய மார்கத்தில் ஈடுபடுவார்கள் என பகவத் விஷய காலஷேபத்தின் மூலம் அறியப்பட்டது. யுக யகமாக அதே அனுபவத்தில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் தான் சித்தர்களா? சித்தபுருஷர்களா?
சாங்கிய மதம் தவறானது. கீதையில் சொன்ன மதப்படி கர்ம யோகம் செய்து ஞான யோக நிலையில் கைவல்ய பலனை விரும்பிச் செய்தால் பெறலாம்.
யோகம் செய்து சித்தி கை வந்தவர்கள் சித்தர்கள். சித்தி என்பது எட்டு விதம். கைவல்ய பலன் வேறு, சித்தி என்பது வேறு.
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம் 9வது ஸ்கந்தத்தில் அம்பரீஷ வயாக்யானம் மற்றும் த்வாதசி பாரணை துர்வாச முனிவர் மற்றும் ஜலபாரணை குறித்தம் வருகிறது. ஜலபாரணை செய்ததால் முனிவர் கோபம் கொண்டு சபிக்க சக்ராயுதம் அவரைத் துரத்த எல்லோரும் ப்ரம்ம ருத்ராதிகளும் கூட அவரைக் கைவிட்டதால் எம்பெருமானின் கட்டளைப்படி பக்தனிடமே வந்து சரண்டைந்து அம்பரீஷன் சகராயுதத்தை வேண்ட முனிவர் காப்பாற்றப்பட்டார். அடியேனுடைய இதில் ஒரு சம்சயம், ஒரு ஆண்டிற்குப்பிறகுதான் துர்வாசர் அம்பரீஷனிடம் திரும்பி வந்து கேட்டார் என்றும், மன்னனும் பாரணை செய்ததாக கூறப்பட்டள்ளது. ஒரு வருடகாலம் பல ஏகாதசி துவாதசி வந்திருக்குமே.
ஆமாம் ஒரு வருட காலத்திற்கு பல ஏகாதசி, துவாதசி வந்திருக்கும். ஆனால் அம்பரீஷனைப் பொறுத்த வரை ஒரு வருடம் வரை துவாதசி பாரணை ஆகவில்லை. இது வைபவ விசேஷம். சாதாரண கேள்விகளுக்கு அப்பாற்பட்டது.
மாத்யாநிகத்தில் நாம் சூர்யனைக் கைகளால் “பஶ்யேம” எனும் மந்திரம் சொல்லிக்காணுகிறோம்.இப்போது அடியேன் வசிக்கும் க்ருஹத்திலிருந்து ஒருவேளை சூரயனைக் காணமுடியாவிடில், மேலே ஆகாசத்தைப் பார்த்து இந்த மந்திரத்தைச் சொல்லலாமா?
உத்தேசமாக வானத்தில் சூரியன் இருக்கும் பிரகாசத்தைப் பார்க்கலாம்.
ஆசார்யாள் திருநக்ஷத்ர நாட்களில்(மாதம் மற்றும் வருடாந்திர) கட்டாயம் செய்ய வேண்டியது ஏதாவது உண்டா?
திருவாராதனம், ஆசார்ய சம்பாவனை, ஶ்ரீ பாத தீர்த்தம், ததீயாராதனம் செய்யலாம். செய்வது நல்லது மேலும் விசேஷமாகும். ஆசார்யனை மறக்கக் கூடாது. வேறு நிர்பந்தம் இல்லை. வருஷ திருநக்ஷத்ரம் விசேஷம். மாத திருநக்ஷத்ரம் அன்று முடிந்தால் செய்யலாம்.
அடியேனுக்கு ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் இன்னும் ஆகவில்லை அதனால் எனக்கு ஸ்ரீமத் இரஹஸ்யத்ரயம் சேவிக்கத் தகுதியில்லையா? இவை ஆகாமல் எப்போதும் ஜபிக்க ஏதேனும் நம் இராமானுஜ ஸம்ப்ரதாயத்தில் மந்திரம் இருக்கிறதா (இதர க்ருஷ்ண ஸம்ப்ரதாயங்கள் போல்)
ஸமாஶ்ரயணம் செய்துகொண்ட பின்னர்தான் காலக்ஷேபம் கேட்கவேண்டும்.
திருவாராதனத்தின் சமயம் பெருமாளுக்குப் பழம் ஸமர்ப்பிக்க மிகக் குறைந்த அளவே இருந்தால் (1 அல்லது 2 பழம் மட்டும்) பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா? மேலும் எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்த பின் அப்பழங்களை என்ன செய்வது?
வாழைப்பழமாக இருந்தால் இரண்டாக ஸமர்ப்பணம் செய்ய வேண்டும். நாம் சாப்பிட ஏற்றதாக பழம் இல்லையானால் அதை அர்ப்பணம் செய்வதில்லை. ஆப்பிள் முதலிய பழங்களை ஒன்று அல்லது இரண்டு இருந்தால் ஸமர்ப்பிக்கலாம்.
குறிப்புகள்
ஏற்கனவே ஸமர்ப்பித்த பழத்தின் மீதியை ஸமர்ப்பிக்கக் கூடாது. நாம் சாப்பிட்ட மீதி, எலி சாப்பிட்ட மீதி முதலியவை கூடாது. இந்தத் தோஷங்கள் இல்லாமல் அரை பழம் இருந்தால், அதை துண்டுகளாக நறுக்கி சமர்ப்பிக்கலாம். அதை பிறகு நாம் சாப்பிடலாம்.
பட்டு வேஷ்டிக்கு மடி உண்டா? அதை நனைக்காமலே எத்தனை தடவை உடுத்திக்கொண்டாலும் மடி என்று கொள்ளலாமா? ஒருவேளை மற்ற வேஷ்டியைப் போல் நனைத்து விட்டால் மடி போய்விடுமா?
ஆம் பட்டு வேஷ்டிக்கு மடி உண்டு.
பட்டு என்பது மடி ஆகும். அதை நனைக்கத் தேவையில்லை. அப்படி நனைத்து விட்டால் மடி குறையலாம். ஆனாலும் அதை மடியாக வைத்துக் கொள்ளலாம்.
ப்ரபந்நன் சூர்ய நமஸ்காரம் (என்ற யோகா முறை) செய்யலாமா? அந்த யோகா செய்வதனால் தேவதாந்திர சம்பந்தம் ஏற்பட்டுவிடுமா?
உடல் ஆரோக்கியத்துக்கு யோகா செய்யலாம். சூர்ய நமஸ்காரம் எனும் யோகாவில் ஸங்கல்பம் உண்டா? மந்திரம் உண்டா? அதெல்லாம் இல்லையென்றால் தேவதாந்தரம் இல்லை. அல்லது சூர்ய நாராயண பெருமாளை நினைத்துக்கொள்ளவும்.
ஒரு பிள்ளைக்கு அப்பா அம்மா இருவரும் இல்லை அவர் உறவினர் ஒருவர் பூணூல் போட்டு வைக்கிறார், அவர் பரமபதித்து விட்டால் அந்தப் பிள்ளைக்கு ஏதனும் நியமம் உண்டா என்று தெரிவிக்கவும்.
பூணூல் போட்டு வைத்த உறவினர் பரமபதித்து விட்டால் ஸ்நானம் உண்டு. அவரே வேதம் சொல்லிக் கொடுத்த ஆசார்யனுமாக இருந்தால் ஒருநாள் தீட்டு காக்கலாம்.
அடியேன் பகவத் ஸங்கல்பம் என்றால் என்ன? நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் பகவத் ஸங்கல்பமா? முடிவு நாம் எடுக்கிறோம் அது எப்படி பகவத் ஸங்கல்பத்தினால் நடக்கிறது என்று சொல்கிறோம்.அப்படியென்றால் நடப்பது எல்லாமே பகவத் ஸங்கலபமா?
பகவத் ஸங்கல்பத்துக்கு அதீனமாக நம் ஸங்கல்பம் வரும். பகவத் ஸங்கல்பம் என்பது ப்ரதானமான கருவி (Main Switch) போல. நம் ஸங்கல்பம் என்பது உள்ளே அதற்கு இருக்கும் தனி இணைப்பு (Individual Switch) போல.
கோவில்களில் பெருமாளுக்குத் தளிகை ஸமர்ப்பிக்கும் பொழுது வைச்வதேவ ஆராதனை செய்யப்படுகிறதா?
வைச்வதேவம் என்பது க்ருஹஸ்தர் செய்ய வேண்டிய நித்ய கர்மா. அதற்கும் கோவிலுக்கும் சம்பந்தமே இல்லை.
கோவில்களுக்கு உள்ளே மற்றும் வெளியே நடக்கும் கோஷ்டிகளில் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களும் பங்கு பெறலாமா ? யாரெல்லாம் பங்கு பெறலாம்?
அந்தந்தக் கோவில்களில் இருக்கும் ஸம்ப்ரதாயத்தை அனுசரித்து கலந்து கொள்ளலாம்.
குடும்பத்தில் யாரேனும் ஒருவர் ஒரு வருடத்திற்குள் பரமபதித்திருந்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் மலைமேல் இருக்கும் பெருமாளைச் சேவிக்கக்கூடாதா? அடியேன் உடைய பிதா வழி பாட்டி மற்றும் தாத்தா பரம பதித்து விட்டார்கள் (90+வயது). இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. அடியேன் வெளிநாடு செல்ல இருப்பதால், அத்திகிரி வரதனைச் சென்று சேவிக்கலாமா?
அந்தக் கர்தா, அவருடைய மனைவி இருவரும் ஒரு வருடத்திற்கு மலைமேல் இருக்கும் கோவில்களுக்குச் செல்வதில்லை என்கிற வழக்கம் இன்றும் உள்ளது. பாக்கி குடும்பத்தினர் போகலாம் என்றே தோன்றுகிறது.
அடியனுக்கு 57 வயது, என்னுடைய கணவருக்கு 60 வயது. எங்கள் இருவருக்கும் ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது. பரந்யாஸம் செய்து கொள்ளப் போகிறோம். எங்களுக்கு ஒரே மகள். அவள் விஷ்வகர்மா வகுப்பில் ஒருவரை மணந்து கொண்டு அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். வேறு குலத்தில் மணம் முடித்த ஒரே பெண்ணை பெற்ற எங்களைப் போன்ற பெற்றோர்களின் சரம கைங்கர்யங்களை யார் செய்வார்கள்? அதற்கு என்ன விதிமுறைகள்?
.ப்ரபத்தியை முதலில் செய்துகொள்ளுங்கள். இந்தக் காலத்தில் விஷ்வகர்மா என்பதில் பல ஜாதிகள் கலந்து உள்ளன விஷ்வகர்மா என்பது வைச்யராக இருப்பின் (உபநயனம் முதலான ஸம்ஸ்காரம் உடையவராக இருப்பின்) அந்தப் பேரன் செய்யலாம். அது இல்லாத பக்ஷத்தில் உங்கள் இருவரில் முதலில் மனைவி மரணித்தால் கணவர் செய்யலாம். கணவர் மரணித்தால் மனைவியின் கைப்புல் வாங்கி வேறு நெருங்கிய ஆண் உறவினரோ வேறு எவரேனும் அந்தணரோ செய்யலாம். இருவரில் பின்னால் மரணிப்பவர்க்கு அந்தப் பெண்ணின் கைப்புல் வாங்கி வேறு ஒரு நெருங்கிய அந்தண உறவினர் அல்லது வேறு ஒரு அந்தணர் செய்யலாம்.
ஜ்யோதிஷ ஶாஸ்த்ரப்படி ரோகிணி நக்ஷத்திரம் மற்றும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி சேரும் நாளை ஜயந்தி என்கிறார்கள். அதனால் ஜயந்தி என்றால் அது ஸ்ரீ ஜயந்தியையே குறிக்கும். அப்படியானால், வராகர், நரசிம்மர் முதலான மற்ற பெருமாள்களின் அவதார தினத்திற்கு வேறு பெயர்கள் உள்ளதா? நாம் அந்த நாட்களையும் ஜயந்தி என்று கூறுகிறோமே?
எள்ளில் இருந்து கிடைக்கக்கூடிய நெய்தான் எண்ணெய். எண்ணெய் என்பது தற்காலத்தில் நாம் சொல்லக்கூடிய எள்ளெண்ணெய் மட்டும்தான் சொல்ல வேண்டும். இன்று எண்ணெய் போல் இருக்கும் மற்ற பதார்த்தங்களுக்கு, எண்ணெய் என்பது பொதுப்பெயராக ஆகிவிட்டதால் தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வேப்பெண்ணெய் என்று அடைமொழியிட்டுச் சொல்கிறோம். வேறு எதுவும் சேர்க்காமல் நல்ல எண்ணெய் என்று எள்ளெண்ணெயைக் குறிப்பிடுகிறோம்.
அதேபோல்தான் ஸ்ரீஜயந்தி என்பது பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனுடைய அவதார தினம்தான். ஆனால் ஸ்ரீ ஜயந்தி என்பது பொதுவாக எம்பெருமானின் அவதார தினம் என்று வந்ததினால் மற்ற அவதார தினங்களை மத்ஸ்ய ஜயந்தி, வராஹ ஜயந்தி, ந்ருஸிம்ஹ ஜயந்தி என்றும் இதை (ஸ்ரீ க்ருஷ்ண ஜன்ம தினத்தை) ஸ்ரீ ஜயந்தி என்றும் கூறுகிறோம்.
நம்முடைய யக்ஞோபவீதம் தரையில் படக்கூடாது என்பதனால் நாம் வெறும் தரையில் படுத்து உறங்க கூடாது என்று ஒரு உபந்யாசத்தில் கேள்விப்பட்டேன். ஆனால் நாம் பெருமாளையோ, பெரியவர்களையோ தரையில் விழுந்து நமஸ்கரிக்கும்பொழுது யக்ஞோபவீதம் தரையில் படுகிறதே, அப்பொழுது என்ன செய்வது?
பெருமாளோ பெரியவர்களோ இருக்கும் போது அந்த இடம் புனிதமானதால் அங்கு பூணூல் தரையில் படுவது (வேறு விலக்கத்தக்க ஒன்றும் இல்லை என்றால் உ.ம் எச்சில் அசுத்தம் முதலானவை) தோஷமில்லை.
உபநயனம் ஆகாத சிறுவர்களுக்கு ஸ்வரத்துடன் ஸந்த்யாவந்தனம் கற்றுக் கொடுக்கலாமா? ஸந்த்யாவந்தனம் செய்வதற்கு ஸங்கல்பம் ஏதேனும் உள்ளதா ?
உபநயனம் ஆகாத சிறுவர்களுக்கு ஸந்த்யாவந்தன மந்த்ரங்களைச் சொல்லித் தரக்கூடாது. ஸந்த்யாவந்தனத்திற்கு ஸங்கல்பம் உண்டு.
தான்தோன்றிமலை பெருமாள், அடியேனுடைய க்ருஹத்துப் பெருமாள் ஆவார். அதனால் அடியேன் திருமலைக்குச் செல்லலாமா , கூடாதா?
திருமலைக்குச் செல்லலாம். செல்வது மிகவும் நல்லது.
சித்திரை மாதத்தில் புது இல்லம் வாடகைக்குக் குடி போகலாமா? பால் காய்ச்சலாமா ?
சித்திரை மாதத்தில் புது இல்லத்திற்குக் குடி போகலாம்.
1.பஞ்சாங்கத்தில் ஒரு நக்ஷத்திரம் அல்லது திதி ஒரு நாளில் சில நாழிகைகள் இருக்கிறது. (உ.தா: ஸ்வாதி 28.01 அல்லது துவாதசி 15.00) சூரிய உதயத்திலிருந்து அந்த நக்ஷத்திரம் அல்லது திதி எல்லா இடத்திலும் அதே நாழிகை இருப்பதாகக் கொள்ளலாமா? உதாரணமாக “A” என்ற இடத்தில் சூரிய உதயம் காலை 6:30 மணி, “B” என்ற இடத்தில் 7:00 மணி. துவாதசி பத்து நாழிகை என்றால், “A” என்ற இடத்தில் 10:30 மணி வரையிலும் “B” என்ற இடத்தில் 11 மணி வரையிலும் துவாதசி இருப்பதாகக் கொள்ளலாமா?
2. மார்ச் 21 அன்று பஞ்சாங்கத்தின் படி ஏகாதசி திதியே இல்லை. அன்று துவாதசி 60 நாழிகை இருந்தும், நாம் ஏன் முதல் நாள் ஏகாதசி அன்வயிக்காமல் அன்றைய தினம் ஏகாதசி அன்வயித்தோம்?
1. வாக்ய பஞ்சாங்கம் பின்பற்றும் போது சூரிய உதயத்திலிருந்து அந்த நக்ஷத்திரம் அல்லது திதி எல்லா இடத்திலும் அதே நாழிகை இருப்பதாகக் கொள்ளலாம். சிலர் த்ருக் பஞ்சாங்கம் பின்பற்றுவர். அவர்களுக்கு வித்தியாசம் வரலாம்.
2. மார்ச் 21க்கு மறுநாள் துவாதசி கொஞ்சம் இருந்தது. அப்படி வந்தால், துவாதசி புச்சம் இருக்கும் தினம் பாரணை. முன் நாள் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும்.
கோவில் கைங்கர்யங்களில் ஈடுபடும் பொழுது, அனுஷ்டானங்களைத் தாமதமாகவோ அல்லது குறைத்தோ செய்யலாம் என்று நம் ஶாஸ்த்ரங்களில் ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா ? உதாரணம்:- காலாதீதமாக அர்க்யம் விடுதல், சீக்கிரமாக உபஸ்தானம் செய்தல்.
கோவில் கைங்கர்யங்களில் ஈடுபடும்போது அனுஷ்டானங்களைத் தாமதமாகச் செய்யலாம். அதற்கான பிராயஶ்சித்தமும் செய்ய வேண்டும். குறைத்து செய்ய வேண்டாம். மேலும், சக்திக்கு ஏற்ப செய்யலாம். காலத்துக்கு முன்பு உபஸ்தானம் செய்யக்கூடாது.
ப்ரபத்திக்குப் பிறகு ப்ரபந்நன் நித்ய, நைமித்திக கர்மாக்களைச் செய்யாவிட்டால் மோக்ஷம் கிட்டாதா?
ப்ரபத்திக்கும் மோக்ஷத்துக்கும் சம்பந்தம் உண்டு. நித்ய கர்மத்திற்கும் மோக்ஷத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், அது பொது விதி. நித்ய கர்மா செய்யாவிட்டால் பாபம் உண்டு. அதன் பலனை அனுபவித்த பின்னரே மோக்ஷம் கிட்டும். பொய் சொல்லுதல், திருட்டு போன்றவை பொது பாபங்கள். அதேபோல் நித்ய கர்மா செய்யாமை என்பதும் பொது பாபம். ப்ரபத்தி செய்தவன் பொய் சொல்லலாமா? திருடலாமா? வேறு பாபம் செய்யலாமா? என்றால் அது கூடாது, அதேபோலதான் இதுவும் கூடாது. மோக்ஷத்திற்கான ப்ரபத்தி செய்தல் விசேஷ தர்மம். அதற்காக, பொது தர்மங்களை மீறக் கூடாது.
துவாதசி அன்று மாமியார் ஶ்ராத்தம் வந்தால், பாரணை பண்ணலாமா? பாரணை காலம் காலையில் மற்றும் ஶ்ரார்த்தம் காலை 11மணிக்கு மேல் வருவதால் எப்படி அனுஷ்டிப்பது?
கர்த்தா, நிமந்த்ரண ஸ்வாமிகள் ஆகியவர் காலை பாரணை பண்ணக் கூடாது. மற்றவர் பாரணை பண்ணலாம். தகப்பனார் உயிருடன் இல்லை என்றால், பகலில் இரு தடவை போஜனம் கூடாது என்பதால் இஷ்ட பங்க்தி சாப்பிட முடியாமல் போகும். இஷ்ட பங்க்தி சாப்பிட வேண்டுமானால், காலை ஜல பாரணம் செய்யலாம்.
ஆராதனம் தர்ப்பணம் முதலானவை பற்றிய அடியேனுடைய கீழ்கண்ட கேள்விகளுக்கு விடை அளிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.
ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளியில் உள்ள ஒரு திருநாமம் ஸ்ரீ பில்வ நிலயாய நம: என்பது. வில்வம் (பில்வம்) என்கிற புனித வ்ருக்ஷம் தாயாருடன் தொடர்புடையது. அப்படி இருக்க ஏன் பொதுவாக வில்வத்தைச் சிவபெருமானுக்கே ஸமர்ப்பிக்கிறார்கள். ஏன் பெருமாளுக்கு ஸமர்ப்பிப்பதில்லை? மேலும் திருமலையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு தனுர் மாதத்தில் வில்வ இலையைச் ஸமர்ப்பிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஏன் அவ்வாறு தனுர் மாதத்தில் மட்டும் ஸமர்ப்பிக்கிறார்கள்?
ஆங்கில நாட்காட்டியின் படி நள்ளிரவுக்குப் பிறகு மறுநாள் பிறக்கிறது. அவ்வாறு இருக்க சூர்ய உதயத்திற்கு முன் செய்யப்படும் தனுர் மாத ஆராதனை சங்கல்பத்தின்பொழுது நாளை (உம்- பானு வாஸர) எவ்வாறு குறிப்பிட வேண்டும்? ஆங்கில நாட்காட்டி படியான அன்றைய நாளா அல்லது முதல் நாளா? சூர்ய உதயத்திற்கு முன் தளிகை அமுது செய்யப்படுவதால் நாம் ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி என்று கூற வேண்டுமா அல்லது ருதம் த்வா ஸத்யேந பரிஷிஞ்சாமி என்று கூற வேண்டுமா ?
தன்வந்திரி பெருமாளுடன் தொடர்புடைய நட்சத்திரம் எது? எந்த திதி அல்லது நட்சத்திரத்தில் நாம் தன்வந்திரி பெருமாளுக்கு ஆராதனம் செய்ய வேண்டும்?
27 யோகங்களில் ஒன்றான வ்யதீபாத யோகம் தீங்கானது என்றும் தேவ, பித்ரு காரியங்களுக்கு மட்டும் உகந்தது என்றும் கூறப்படுகிறது. அதனால் அந்த வ்யதீபாத காலத்தில் ஏதேனும் குறிப்பிட்ட பெருமாள் ஆராதனை/ ஜபம்/ தானம் செய்ய வேண்டுமா?
கீழ்வரும் ஸ்லோகத்தின் படி வ்யதீபாத காலத்திற்கும், விஷ்ணு சக்ர ஸ்வரூபாய என்பதற்கும் உள்ள தொடர்பு என்ன?
வ்யதீபாத மஹாஸத்வ
சர்வபாபப்ரணாஶந
ஸஹஸ்ரபாஹோ விஶ்வாத்மந்
க்ருஹாணார்க்யம் நமோஸ்து தே ।
வ்யதீபாத நமஸ்தேஸ்து நமஸ்தே
விஶ்வமங்கள
விஷ்ணுசக்ரஸ்வரூபாய நமஸ்தே
திவ்யதேஜஸே ।।
அமெரிக்காவில் இந்த வருடம் மகர ரவி மாலை 4.15 மணிக்கு பிறந்தது. அடியேனால் அதுவரை பட்டினி இருந்து மாலை 4.15ற்கு தர்ப்பணம் செய்ய இயலவில்லை. அதனால் அடுத்த நாள் காலை தர்ப்பணம் செய்து விட்டு போஜனம் செய்தேன். இவ்வாறு மாலையில் மகர ரவி பிறக்கும் பொழுது தர்ப்பணம் செய்வதற்கு முன்பு போஜனம் செய்யலாமா அல்லது அடுத்த நாள் காலையில் போஜனம் செய்வதற்கு முன் தர்ப்பணம் செய்யலாமா எது சரி?
1. வில்வத்தைப் பெருமாளுக்கும் ஸமர்ப்பிக்கலாம். தப்பில்லை என்பது தெரிந்த விஷயம்தான். ஏனென்றால் தாயாருக்கும் பில்வ நிலயாயை நம: என்று இருக்கின்றது. அதனால் பெருமாளுக்குச் ஸமர்ப்பிக்கலாம். சிவனுக்கு அது விசேஷம் என்கின்றபடியினால் அவருக்குச் ஸமர்ப்பிக்கிறார்கள் அவ்வளவு தான்.
மேலும் திருமலையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு தனுர் மாதத்தில் வில்வ இலையை ஸமர்ப்பிக்கிறார்கள் என்று கேள்வியிலேயே இருக்கின்றது. அதனால் ஸமர்ப்பிக்கலாம் என்று ஏற்படுகிறது. ஏன் தனுர் மாதத்தில் மட்டும் ஸமர்ப்பிக்கிறார்கள் என்பதற்கு விசேஷமான காரணம் என்ன என்று கேட்டுப்பார்க்கவேண்டும். எதுவாக இருந்தாலும் ஸமர்ப்பிக்கலாம் என்று ஆகிறது. அதனால் தனுர் மாதத்தில் ஸமர்ப்பிக்கலாம் என்று இப்போதைக்கு வைத்துக் கொள்ளலாம்.
2. தனுர் மாதத்தில் பொதுவாக பொங்கல் ஸமர்ப்பிப்பதுதான் வழக்கம். அது உப்புச் சேர்த்த பதார்த்தமானதால் அதற்குப் பரிசேஶணம் கிடையாது. பரிசேஶணம் இல்லாமல் சோஶன தாஹன ப்லாவனம் பண்ணி சுத்தி செய்து ஸமர்ப்பிக்க வேண்டும்.
3. ஸ்ரீரங்கம் கோவிலில் மிகவும் ப்ராசீனமான் தன்வந்த்ரி ஸந்நிதி உள்ளது. அந்தச் சந்நிதியில் ஐப்பசி மாதம் ஹஸ்த நக்ஷத்திரத்தில் தன்வந்த்ரி ஜெயந்தி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதையே செய்யலாம்.
4. வ்யதீபாதயோகத்தில் குறிப்பிட்ட ஆராதனை, ஜபம், தானம் போன்றவற்றை ஸ்ரீவைஷ்ணவர்கள் யாரும் செய்யவேண்டியதில்லை. அதில் காம்யமான கர்மம் நிறைய இருக்கிறது. காம்யங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
5. வ்யதீபாத மஹாஸத்வ என்று ஆரம்பிக்கும் ஶ்லோகம் எங்கிருக்கிறது என்று அடியேனுக்குத் தெரியவில்லை. வ்யதீபாத என்பதற்கு பல அர்த்தம் உண்டு. வ்யதீபாத என்றிருந்தால் “எல்லாவாற்றையும் கடந்து நிற்பவன் என்று வரும்”. இவ்வர்த்தத்தில் இது வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. வ்யதீபாத1 அல்லது வய்தீபாத3 எது என்று சொன்னால் ஶ்லோகத்தைப் பற்றி சொல்ல வசதியாக இருக்கும். அடியேனும் பலரிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
6. பொதுவாக தர்ப்பணம் செய்வதற்கு முன் போஜனம் செய்யக்கூடாது. என்றைக்கு மாசப்பிறப்பு வருகிறதோ அன்றைக்குதான் தர்ப்பணம் செய்யவேண்டும் மறுநாள் புண்யகாலம் கிடையாது. அதனாலே மாசப்பிறப்பு வரும் நாளன்று அடியோடு முடியவேயில்லை என்றால், தர்ப்பணத்தைச் சற்று முன்னால் பண்ணிவிட்டு சாப்பிடலாம். இதுவும் மிகவும் முடியாதவர்களுத்தான். மற்றபடி கேள்வியில் கேட்டிருக்கும்படி மறுநாள் பண்ணுவதோ அல்லது சாப்பிட்டுவிட்டுத் தர்ப்பணம் பண்ணுவதோ அடியோடு கூடாது.
கணுப்பிடி குளித்துவிட்டு ஸ்வரூபத்தில்தான் வைக்க வேண்டுமா? சில இடங்களில் குளிக்காமல் வைக்கிறார்களே? தயவு செய்து விளக்கவும்.
கணுப்பிடி குளித்துவிட்டு வைப்பது என்பது சில ஊர்களில் வழக்கம். தெற்குப் பகுதிகளிலே கணுப்பிடி வைத்துவிட்டு குளிப்பது என்று வேறொரு வழக்கமும் வைத்துள்ளனர். குறிப்பாக திருநெல்வேலி போன்ற தென்மாவட்டங்களில் எல்லாம். இது தேசாச்சாரம். அந்தந்த தேசத்திற்கு ஏற்றாற்போல் செய்யவேண்டியது.
ஆகையால் அவரவர் அகத்து வழக்கப்படி செய்யவேண்டியது,
அடியேன் வெளிநாட்டில் இருக்கும் பொழுது, சில நேரங்களில் வெவ்வேறு சமயத்தில் மாசப்பிறப்பு மற்றும் அமாவாசை அனுஷ்டிக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுது எந்தத் தேசம் வைத்து அடியேன் அனுஷ்டிக்க வேண்டும்.?தயவுசெய்து கூறவும்.
இவ்விஷயம் பற்றி தர்ம ஶாஸ்த்ரம் நமக்கு ஒன்றும் சொல்லவில்லை. பெரியவர்கள் எல்லோரும் கூடி இதற்கு இப்படித்தான் பண்ணவேண்டும் என்று தீர்மானம் சொல்லியிருப்பதாகவும் தெரியவில்லை. ஆகையால் அந்தந்தத் தேசத்தை அனுசரித்து செய்யலாம் என்னும்படியாகத் தோன்றுகிறது. சிலர் அவ்வாறாக செய்து வருகின்றனர். இது அடியேனின் அபிப்ராயம் மட்டுமே.
இந்தியாவிற்குள்ளேயே சில ஊர்களில் க்ரஹணம் உண்டு/இல்லை என்பதும், சூர்யோதயம் மற்றும் அஸ்தமன காலம் சில நேரங்களில் பெரியளவில் மாறுபடும். அப்போது அந்தந்த ஊரில் என்னவோ அதை வைத்துக்கொண்டுதான் செய்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவிலேயே சென்ற வருடம் சங்கராந்தி வெவ்வேறு நாளில்தான் வந்தது. முதல் நாள் சில இடங்களிலும், மறுநாள் சில இடங்களில் என்னும் படியாக வந்தது. அந்த ரீதியில் அந்தந்தத் தேசத்தில் இருப்பவர்கள் அந்தந்தத் தேசத்தின்படி செய்வது உசிதமாக இருக்கும் என்னும்படியாகத் தோன்றுகிறது.
கணுப்பிடி வைப்பதன் தாத்பர்யத்தைத் தயவுசெய்து அடியேனுக்கு விளக்கவும். என்னுடைய மாமனார் அவருடைய சகோதரிகளுக்குக் கணுவன்று என் கணவரைப் பணம் அனுப்பச் சொல்கிறார். இந்த வழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டுமா?
பெண்கள், குறிப்பாக திருமணமான பெண்கள் தங்களுடைய சகோதரர்களை அவர்கள் நினைவு வைத்துக்கொள்ளும்படியாகவும், அவர்களின் ஸ்நேகத்திற்காகவும், மேலும் குடும்பத்துடன் எல்லோரும் சௌக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகவும் கணுப்பிடி வைப்பது. அதனால்தான் கணு அன்று சகோதரர்கள் எல்லோரும் சகோதரிகளுக்குக் கணு மரியாதையாக பைசா அனுப்புவார்கள். இது ஒரு வழக்கம். இப்போதும் எல்லோரிடமும் இருக்கிறது.
சகோதர சகோதரி பாவம் என்பது என்றும் விட்டுப் போகாமல், ஸ்நேகத்தோடு தொடரவேண்டும் என்பது கணுவின் தாத்பர்யமாகும்.
பஞ்சகவ்யம் சாப்பிடுவதால் உடலிற்குச் சுத்தி ஏற்படுகிறது, தவிர அறிவியல் ரீதியாக தகவல் இருந்தால் விளக்கமளிக்க ப்ராத்திக்கிறேன்.
பஞ்சகவ்யம் சாப்பிடுவது அறிவியல் ரீதியாக என்பது இல்லை. பஞ்சகவ்யம் சாப்பிடுவதற்கு இரண்டு அம்சம் இருக்கிறது. ஒன்று உடலுக்குச் சுத்தி என்பது. அதாவது கோவுடன் சம்பந்தம்பட்ட சில விஷயம் நமக்குச் சுத்தியைக் கொடுக்கக்கூடியது என்று ஶாஸ்த்ரம் சொல்லியிருக்கிறது, அதனால் ஒரு சுத்தி. இரண்டாவது, இது ஒரு நிஷ்க்ருதி-ப்ராயஶ்சித்தம். இந்த ப்ராயஶ்சித்தமானது இனிமேல் நாம் தப்புப்பண்ணக்கூடாது என்பதற்காக.
பொதுவாக லௌகிக ரீதியில் பஞ்சகவ்யம் என்பது பலரும் வெறுக்கக்கூடிய விஷ்யம். பஞ்சகவ்யம் சாப்பிட பலரும் முகம் சுழிப்பர்.ஆனால் இது ப்ராயஶ்சித்தம், தப்புபண்ணால் அந்தத் தப்புக்கான தண்டனை நாம் அனுபவிக்க வேண்டும். அந்த ரீதியில் இது ப்ராயஶ்சித்தம் என்று வைத்துக்கொள்ளவேண்டும். முக்கியமானது இது ஶரீரத்திற்குச் சுத்தி, இனிமேல் தப்பு பண்ணாமல் இருக்க ப்ராயஶ்சித்தம்.
சந்த்யாவந்தனத்தைச் செய்யாமல் எந்தக் கார்யத்தைச் செய்தாலும் பலன் இல்லை என்றும் எல்லாச் சடங்குகளுக்கு முன்பும் சந்த்யாவந்தனம் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அப்படியிருக்கையில் பிரம்ம முஹூர்த்தத்தில் அல்லது அதிகாலை வேளையில் செய்யப்படும் க்ருஹப்ரவேசம் முதலான சடங்குகளின் போது இது எப்படிச் சாத்தியமாகும்?
சந்த்யாகாலம் என்பது சூர்யோதயகாலம். அந்தக் காலத்தில்தான் சந்த்யாவந்தனம் பண்ணவேண்டும். அதற்கு முன் பண்ண முடியாது. அதனால் சூர்யோதயத்திற்கு முன் க்ருஹப்ரவேசம், முஹூர்த்தம் இருந்தால் அதாவது ப்ரஹ்ம முஹூர்த்தத்தில் அதிகாலை வேளையில் க்ருஹப்ரவேசம் பண்ணினால் அப்ப சந்த்யா காலத்திற்கு முன்தான் பண்ண வேண்டி வரும். சந்த்யா காலம் வந்தபின்தான் சந்த்யா காலத்திற்கு ப்ரஸக்தி வரும். சந்த்யா காலம் வந்தபின் சந்த்யாவந்தனம் பண்ணாமல் எதையும் பண்ணக் கூடாது என்பதுதான் சந்த்யாவந்தனம் பண்ணாமல் எந்தக் காரியம் செய்தாலும் பயனில்லை என்று சொல்வதற்குத் தாத்பர்யம். முன்னாடி க்ருஹப்ரவேசம் முஹூர்த்தம் முதலானது வைத்தால் முன்னாடி செய்யலாம்.
அடியேன் பிராமணன் அல்லன். ப்ரக்ருதம் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் சிஷ்யன். சமாஶ்ரயணம் மற்றும் பரந்யாஸம் ஆகியுள்ளது. தனியாக இருக்கிறேன். முடிந்த வரையில் ஆசார அனுஷ்டானம், ஜபம், பெருமாள் ஆராதனம் முதலானவற்றை ஆசார்யன் மற்றும் பெருமாள் ப்ரீதிக்காக செய்து வருகிறேன். அடியேனுக்கு பரந்யாஸத்தின் பொழுது ஆசார்யன் இந்தத் தேக முடிவில் மோக்ஷம் கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளார். அதில் எனக்கு சிறிதும் நம்பிக்கை குறைவு இல்லை. சரம கைங்கர்யத்தின் முக்கியத்துவத்தை மாறனேரி நம்பி மற்றும் பெரிய நம்பி அவர்கள் வாழ்க்கை மூலம் நன்கு அறிந்து, தர்ப்பணம் முதலானவற்றை செய்து வருகிறேன். எனக்கு குழந்தைகள் இல்லை மற்றும் என்னுடைய குடும்பத்தினருக்கு இந்த சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லை. அதனால் எனக்கு சரம கைங்கர்யங்கள் நடக்க வாய்ப்பு இல்லை. வைகுண்ட ப்ராப்தி மற்றும் எம்பெருமான் திருவடி ப்ராப்தி ஆசார்ய அனுக்ரஹத்தால் உண்டு என்பதில் எனக்கு முழு விசுவாசம் இருந்தாலும் சரம கைங்கர்யத்திற்கு பதிலாக ஏதேனும் ஆசார அனுஷ்டானங்களோ அல்லது பரிஹாரங்களோ கைக்கொள்ளலாமா? அடியேன் இதை வினவுவது பெருமாள் மற்றும் ஆசார்ய ப்ரீதிக்காகவே தவிர மற்றபடி விசுவாசக் குறைவினால் அல்ல.
சரம கைங்கர்யம் பற்றி பெரியளவில் கவலைப்பட வேண்டியதில்லை என்று ஶாஸ்த்ரங்களிலே சொல்லப்பட்டிருக்கிறது. அதேசமயம் சரம கைங்கர்யத்திற்குப் பதிலாக அனுஷ்டானங்களோ, பரிஹாரங்களோ எதுவும் செய்யவேண்டுமா என்றால், அதுவும் செய்யவேண்டிய அவசியமில்லை. மேலும் பரந்யாஸம் செய்தவர்கள் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. பெருமாள் அனுக்ரஹத்தில் நன்றாக நடக்கவேண்டும் என்று தனிப்பட்ட முறையில் அவரிடமே ப்ரார்த்தித்துக்கொள்வோம். அதைப் பெருமாள் நன்றாக நடத்திக்கொள்வார். அப்படி நடந்துள்ளதை நிறைய பார்த்துள்ளோம்.
ஒருவர் முனித்ரய மடத்தில் சமாஸ்ரயணம் செய்து கொண்டு பிறகு ஸ்ரீ மடத்தில் பரந்யாஸம் செய்து கொண்டால், ஸ்ரீ ஜெயந்தி மற்றும் கார்த்திகை தீபம் பண்டிகைகளை எந்த ஸம்ப்ரதாயத்தின் படி கொண்டாட வேண்டும்?
மந்திரோபதேசம் பண்ண ஆசார்யன் ப்ரதான ஆசார்யன் என்று ஸ்வாமி தேஶிகன் சொல்லியிருக்கிறார். அதே போல் ஸமாஶ்ரயணம் நடந்த பரம்பரையை வைத்து கல்யாணம் முதலியவற்றைப் பண்ணவேண்டும் என்றொரு ஸம்ப்ரதாயம் இருக்கிறது. இங்குக் கல்யாணம் என்று குறிப்பிட்டிருப்பது கல்யாணத்தின் ஸம்பாவனை போன்றவை.
ஆகையால் நீங்கள் ஸமாஶ்ரயணம் ஆன முனித்ரய ஸம்ப்ரதாயப்படி செய்வது சரியாக இருக்கலாம். மற்றது தவறு என்று சொல்லமுடியாது. ஒரு கட்டுக்கோப்பில் வருவதற்காக இந்தப் பரம்பரையைப் பின்பற்றுவது என்று சொல்லியிருப்பதாக வைத்துக்கொள்ளெலாம்.
1) திருவாராதனத்தை இரண்டு சாளக்ராமங்களை வைத்து செய்யலாமா? (அதாவது இரண்டு தனித்தனி பெட்டிகளில் வைத்து மற்ற ஆசனங்களைச் செய்வது, ஸ்நானாசனத்தை இரண்டு சாளக்ராமங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாகச் செய்வது).
2) திருவாராதனத்தை (சமஸ்க்ருத ஸ்லோகங்கள் இல்லாமல்) அந்தந்த ஆசனதிற்குப் பொருத்தமான ஆழ்வார்/தேசிக பிரபந்த பாசுரங்களை மட்டும் சொல்லிச் செய்யலாமா?
3) திருவாராதனத்தில் சந்தனம் அரைப்பதற்கு சர்வார்த்த தோய (அல்லது) அர்க்கிய வட்டிலில் இருந்து நீரை எடுக்கலாமா?
பொதுவாக இரண்டு சாளக்கிராமம் வைத்துக்கொள்ளக்கூடாது என்று இருக்கிறது, அப்படி ஒருவேளை இரண்டு சாளக்கிராமம் வைத்திருந்தால், கேள்வியில் குறிப்பிட்டுள்ளது போல் தனித்தனியாக இரண்டு பெட்டியில் வைத்து, ஒன்றன் பின் ஒன்றாக திருவாராதனம் செய்வது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 சாளக்கிராமம் வரும் வரை இதுபோல் செய்யவேண்டும் என்றும், மேலும் இரண்டு சாளக்கிராமத்தை சம்பாதித்துக் கொள்ளவேண்டும் என்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
உங்களுடைய ஆசார்யனிடம் கேட்டு அப்படிச் செய்யலாம் என்று அவர் அனுமதிக் கொடுத்தால் தாராளமாகச் செய்யலாம். தங்களுடைய ஸமாஶ்ரயண ஆசார்யனிடம் கேட்டால் அவர் சொல்லிக்கொடுப்பார். அவரின் அனுமதி பெற்றபின் செய்யலாம்.
சந்தனம் எடுப்பதற்கு சர்வார்த்த தோயத்தில் இருந்து நீரை எடுக்கலாமா என்றால் எடுக்கலாம். அதைக்காட்டிலும் திருக்காவேரியில் ஜலம் இருக்கிறதே அந்த ஜலத்தை எடுத்துக்கொள்ளலாம்.
வாடகை வீட்டில் புகுதற்குப் பங்குனி மாத நன்னாளில் பால் காய்ச்சலாமா?
பங்குனி மாதத்தில் பால் காய்ச்சும் வழக்கம் கிடையாது.
அஷ்டகா மற்றும் அன்வஷ்டகா என்றால் என்ன? ஏன் அந்த நாட்களில் நாம் தர்ப்பணம் செய்கிறோம்?
மாக மாசம், பௌர்ணமி திதிக்குப் பிறகு வரக்கூடிய க்ருஷ்ணபக்ஷ அஷ்டமி திதிக்கு அஷ்டகா என்று பெயர். அடுத்த நாள் அன்வஷ்டகா, அதாவது அஷ்டமியைத் தொடர்ந்து வரக்கூடியதால் அன்வஷ்டகா என்று பெயர்.
மாக மாசம் என்பது பித்ரு மாசமாகும். மக நக்ஷத்திரத்திற்கு, பித்ருகள்தான் தேவதை. அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருகிறபடியால் மாக மாசம் என்று பெயர். நம் கணக்குப்படி மாசி மாசம் என்று வரும். ஆக பித்ரு மாசம், அதில் வரும் அஷ்டமி திதியும் பித்ரு திதி ஆகையால் அது விசேஷமாகிறது. மேலும் ஏகாஷ்டக ஶ்ராத்தம் பண்ணவேண்டும் என்றும் ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ளது. அதற்கு ப்ரதிநிதியாகதான் நாம் தர்ப்பணம் பண்ணுகிறோம். பித்ருகளுக்கு விசேஷமாகும்.
அனு என்றால் தொடர்ந்து வரக்கூடியது என்பதாகும். அடுத்த நாள் அன்வஷ்டகா பண்ணவேண்டும் என்பதும் ஶாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
துவாதசி நாளில் வாழை சம்பந்தமான காயோ, பழமோ ஏன் சாப்பிடக்கூடாது?
துவாதசி நாளில் வாழை சம்பந்தமான காயோ, பழமோ சாப்பிடக்கூடாது என்று ஶாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு விஞ்ஞான ரீதியாக என்ன காரணமென்றால், முதல் நாள் ஏகாதசி அன்று உபவாசம் இருப்பதினால், நம் உடம்பில் வாய்வு ஏற்பட்டிருக்கும் (gastric). வாழை என்பது அந்த வாயுவை கூடுதலாக்குமே தவிர குறைக்காது ஆகையால் அதைச் சாப்பிடக்கூடாது என்று வைத்திருக்கலாம். ஆசாரமும் ஆரோக்யமும் கலந்ததே நம் சம்ப்ரதாயம் என்று இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
அடியேன் மாதப்பிறப்பு, அமாவாசை மற்றும் தகப்பனாரின் ஶ்ராத்தம் ஆகியவற்றை வருடந்தோறும் செய்து வருகிறேன். அஷ்டகா, அன்வஷ்டகா ஆகியவற்றையும் செய்து வருகிறேன். இந்தச் சோபக்ருது வருடம் மாசி மாதம் அஷ்டகா, அன்வஷ்டகா தர்ப்பணங்கள் செய்யத் தவறிவிட்டேன். இப்பொழுது என்ன செய்வது?
இந்த வருடம் அஷ்டகா, அன்வஷ்டகா தவறினால் தவறினதுதான். அதைத் திரும்பிச் செய்ய வாய்ப்பில்லை.
பெருமாளை ஏன் அக்ஷதை சேர்த்து வழிபடக் கூடாது? இந்தத் தடை சாளக்கிராம பெருமாளுக்கு மட்டுமா அல்லது விக்ரஹ, த்வாரகா சிலா பெருமாள்களுக்குமா?
சாளக்கிராமம், விக்ரஹ ரூபமான பெருமாளுக்கு நித்யப்படி திருவாராதனம் ஜலம் மூலமாகப் பண்ணவேண்டும் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அக்ஷதை மூலமாகப் பெருமாள் திருவாராதனம் என்பது ஒரு ப்ரகாரம். ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமத்தில் ப்ரதானமாகப் பெருமாள் ஏளியிருக்கும்போது தீர்த்தம் முதலியவற்றால் திருவாராதனம் பண்ணச்சொல்லியிருப்பதால் நாம் பண்ணுகிறோம். சில சமயம் கும்பத்தில் ஆவாஹனம் பண்ணும்போது அக்ஷதை சேர்ப்பார்கள். அதில்லாமல் ஶௌநக பகவான் சொல்லியிருக்கும் சில ப்ரக்ரியைகள் இருக்கிறது. அவற்றைக் காட்டிலும் ஸ்ரீ பாஞ்ச்சராத்ர ஆகம ப்ரக்ரியை ப்ரதானம் என்பதால் அதைப் பண்ணிக்கொண்டிருக்கிறோம். அதுவே விசேஷமானதாகும்.
ந்ருஸிம்ஹ அவதாரம் ஒரு சதுர்த்தசி மாலைப் பொழுதில் நிகழ்ந்தது. மஹாப்ரதோஷ காலம் என்பது த்ரயோதசியின் மாலைப்பொழுது ஆகும். அப்படியிருக்க, நாம் மஹாப்ரதோஷ காலத்தில் சிறப்பாக லக்ஷ்மீ ந்ருஸிம்ஹரை ஏன் வழிபடுகிறோம்? மேலும் மஹாப்ரதோஷ காலத்தில் ந்ருஸிம்ஹரையும், ஸ்ரீராமரையும் தவிர ரங்கநாதன் போன்ற பிற பெருமாள்களை வழிபடலாகாது என்கிறார்களே?
ஸ்ரீராமருக்கும் மஹாப்ரதோஷ காலத்திற்கும் என்ன தொடர்பு என்று விளக்கவும்.
ந்ருஸிம்ஹருக்குப் பானக நைவேத்யம் ஏன் செய்கிறோம்?
ஸ்ரீ ந்ருஸிம்ஹ அவதாரம் என்பது மஹாப்ரதோஷம் தினத்தில் அல்ல சதுர்தசியில்தான் அவதாரம். பொதுவாகவே சாயங்காலம் அஸ்தமன காலத்திற்கு ப்ரதோஷ காலம் என்று பெயர். அந்த ரீதியில் அவருக்கு அது விசேஷம் என்றிருக்கிறது. மேலும் ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஆராதனம் மஹாப்ரதோஷ காலத்தில் விசேஷம் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கிறது அதனால் நாம் அதைப்பண்ணுகிறோம்.
“ந்ருஸிம்ஹம் ராகவம் விநா” என்று ப்ரதோஷ காலத்தில் ராகவனையும் சேவிக்கலாம் என்று ஆகமங்களில் சொல்லப்படிருக்கிறது. தனிப்பட்டதாக என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளதால் சிலர் அனுஷ்டானத்தில் ப்ரதோஷ காலத்தில் ராகவனையும் சேவிப்பது என்று கொண்டுள்ளனர். வேறு சிலர் ந்ருஸிம்ஹனைத் தவிர யாரையும் சேவிப்பதில்லை என்றும் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ ந்ருஸிம்மருக்கு பானக நைவேத்யம் விசேஷம் என்று சொல்லியிருக்கிறபடியினாலேயும், ஸம்ப்ரதாயத்தில் இருக்கின்ற படியினாலேயும் நாம் செய்கின்றோம்.
ஸ்ரீவராஹந்ருஸிம்ஹனாக அஹோபிலத்திலும், சிம்மாசலத்திலும் மட்டும் வழிபடக் காரணம் என்ன?
ஸ்ரீ வராஹந்ருஸிம்ஹ மூர்த்தி அஹோபிலத்திலும், சிம்மாசலத்திலும் ஏளி இருக்கிறார். அதாவது வராஹப் பெருமாளும் நரசிம்ம பெருமாளும் சம்பந்தம் உள்ளவர்கள். ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, இவர்கள் இருவரும் இரட்டையர்கள். அவர்களை வதம் செய்வதற்காக வராஹப் பெருமாளாகவும் ந்ருசிம்ஹ பெருமாளாகவும் ரூபம் எடுத்தார் எம்பெருமான். பெரிய ஆபத்தை போக்கியவர்கள். ந்ருஸிம்ஹ மூர்த்தி என்று வரும்பொழுது ஆகமங்களில் பலவிதமான மூர்த்திகளை ப்ரதிஷ்டை பண்ணுவதற்குச் சொல்லி இருக்கிறார்கள். அதில் வராஹ ந்ருஸிம்ஹ மூர்த்தி என்பவரும் ஒருவர். அதை அந்தத் திவ்யதேசங்களில் ப்ரதிஷ்டை செய்திருக்கிறார்கள் அவரைதான் நாம் சேவிக்கின்றோம்.
அகத்தில் உள்ள சாளக்கிராம பெருமாளைப் புகைவண்டியில் ஏளப் பண்ணி கொண்டு போகலாமா? ஆம் எனில், அதற்கு உரியமுறை யாது? மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் யாவை?
வேறு வழியில்லை என்றால் சாளக்கிராம பெருமாளைப் புகைவண்டியில் ஏளப் பண்ணிக் கொண்டுப் போகலாம். அந்தப் பெருமாளைப் பத்திரமாக ஒரு பெட்டியில் ஏளப் பண்ணி, மேலே சால்வை, பட்டு முதலான வஸ்திரங்களால் அவரைச் சுற்றி, சுத்தமாக அவருக்கு எந்தவிதமான அசுத்தமும் படாதபடி அவரை அப்படியே ஒரு பையில் வைத்து ஏளப் பண்ணவேண்டும். அந்தப் பையை கீழே வைக்கக்கூடாது. அசுத்தம் படுகின்ற இடத்தில் வைக்கக்கூடாது. முடிந்தவரை தன்னிடத்திலேயே அந்தப் பையை வைத்துக்கொண்டு மரியாதையுடன் அவரை ஏளப் பண்ண வேண்டும்.
தர்ம ஶாஸ்த்ரத்தில் கூறப்பட்டுள்ள சத்ரய, ப்ராஜாபத்ய, க்ருச்ரங்களைச் தற்போது எவ்வாறு கடைபிடிப்பது? இவையெல்லாம் தற்காலத்திய நடைமுறையில் சாத்தியமா?
இந்தக் காலத்தில் இந்த க்ருச்ரங்களை எல்லாம் செய்ய முடிவதில்லை. இதற்குப் பதிலாக “க்ரிச்ர ப்ரதிநிதி யத் கிஞ்சித் ஹிரண்ய தானம்” என்று சொல்லி பைசா தானம் பண்ணச் சொல்லியிருக்கிறார்கள். அதை வாத்தியார்கள் சொல்லிக் கொடுத்து எல்லாரும் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த ரீதியில் செய்வது போதுமானதாகும்.
நெருங்கிய உறவினரை இழந்தவர்க்கு ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷையில் இரங்கல் தெரிவிப்பது எப்படி?
பொதுவாக எல்லோரும் தெரிவிப்பது போல் நாமும் தெரிவித்துக் கொள்ளலாம். உங்கள் துக்கத்தில் நான் பங்கு கொள்கிறேன், நம்மால் என்ன செய்ய முடியும், பகவத் சங்கல்பம் என்று ஒன்று உள்ளது, நாம் எல்லோரும் அதற்குக் கட்டுப்பட்டவர்கள், முதலானவைகளைதான் சொல்ல முடியும். நாமும் தெரிவித்துக் கொள்ளலாம். அவ்வாறு சொல்லும் பொழுது பகவத் சங்கல்பத்தை விடாமல் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
யாராவது பெரியோர்கள் (அம்மா/அப்பா) பரமபதித்து விட்டால் மாத்ரு கைங்கர்யம்/பித்ரு கைங்கர்யம் ப்ராப்தம் ஆயிற்று போல் இருக்கிறது என்று பரிபாஷையாக விசாரிக்கலாம்.
மிகவும் பெரியவர்களாக இருந்தால் பரமபதத்தில் கைங்கர்யத்திற்குப் பெருமாள் அவர்களை அழைத்துக் கொண்டு விட்டார் என்று விசாரிக்கலாம்.
இளையவர்களாக இருந்தால் பகவத் சங்கல்பம். ஏதோ இப்படி ஆகிவிட்டது என்ன செய்வது என்று விசாரிக்கலாம்.
இவை துக்கம் விசாரிக்க ஸ்ரீ வைஷ்ணவ பரிபாஷைகள்.
திரு நக்ஷத்திரமாக இருந்தால், அடியேன் சேவித்துக் கொள்கிறேன். ஸ்வாமி தண்டம் ஸமர்ப்பித்துக் கொள்கிறேன், அநுக்ரஹிக்க வேண்டும் என்று வைஷ்ணவ பரிபாஷையில் ப்ரார்த்தித்துக் கொள்ளலாம். வேண்டுமானால் திருப்பல்லாண்டு பாடலாம்.
ஆழ்வார், ஆசார்யார் உற்சவ திருமேனிகளுக்கு வர்ண வஸ்த்ரங்கள் சாற்றலாமா?
ஆழ்வார், ஆசார்யார் உற்சவ திருமேனிகளுக்குப் பட்டு வஸ்த்ரங்கள் வர்ணத்தில் சாற்றலாம்.
துவாதிசி, சூரிய உதயத்திற்கு முன் முடிந்து விட்டால் பாரணை எப்போது செய்ய வேண்டும்? சூரிய உதயத்திற்கு முன்னதாகவா அல்லது சாதாரண துவாதசி போலா?
சூரிய உதயத்திற்கு முன் என்னவானாலும் எந்த ஒரு ஆகாரத்தையும் பண்ணக்கூடாது. அதனால் சூரிய உதயத்திற்கு முன் துவாதசி முடிந்தால் கூட உதயத்திற்குப் பின்தான் பாரணை என்று வரும். அப்பொழுது அந்தத் துவாதசி திதி இல்லாத படியினால் எல்லா பாரணைகளையும் போல் ஒரு ஆறு நாழிகைக்குள் பண்ணால் போதும். உதயத்திற்கு முன் பாரணை என்பது வரவே வராது.
கோவிலில் பெருமாளுக்குத் திருமஞ்சனம் நடைபெறும் பொழுது, பட்டாச்சார் ஸ்வாமி இளநீரை ஒரு வட்டிலுக்கு மாற்றாமல் அப்படியே பெருமாள் திருமேனியில் சேர்க்கிறாரே? இதற்கு ஏதும் காரணம் உண்டா?
ஆம். காரணம் இருக்கின்றது. இளநீரை ஒரு பாத்திரத்தில் மாற்றினால் அது அசுத்தம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் பெருமாளுக்குப் பாத்திரத்தில் மாற்றாமல் அப்படியே சேர்க்கிறார்கள்.
பெருமாளுக்குத் திருமஞ்சனத்தின் பொழுது ஒரே ஒரு மஞ்சள் அல்லது வெள்ளை வஸ்திரம் மட்டுமே சாற்ற வேண்டும் என்று ஆகம ஶாஸ்திரத்தில் ஏதேனும் உள்ளதா ?
ஆகம ஶாஸ்திரத்தில் ஒரே ஒரு வஸ்த்ரம்தான் சாற்றவேண்டும் என்று இல்லை. ஆனால் இது சௌகர்யத்திற்காக வந்தது. பெருமாள் திருமேனிக்கு நன்றாகத் திருமஞ்சனம் பண்ண வேண்டும் என்றால், ஏகப்பட்ட வஸ்த்ரங்கள் சாற்றி இருந்தால் பெருமாள் திருமேனிக்கு எப்படி நன்றாகத் திருமஞ்சனம் பண்ண முடியும். அதேபோல் ஒரே வஸ்த்ரத்துடன் ஸ்நானம் செய்யக்கூடாது என்கின்ற நியமங்கள் நமக்குத் தான். ஶாஸ்திரங்கள் எல்லாம் நமக்குத்தான். ஶாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டவர் இல்லையே பெருமாள். அதனால் ஏதோ பெயருக்கு ஒரு வஸ்திரம் நனையக்கூடியதாக ஒரு வஸ்திரம் ஒன்று சாத்திவிட்டு திருமஞ்சனம் செய்வார்கள்.
க்ருஹத்தில் நடைபெறும் விழா அல்லது சடங்குகளின் பொழுது அதை நடத்தி வைக்கும் ப்ருஹஸ்பதி கர்த்தாவை விட வயதில் இளையவராக இருந்தாலும் கர்த்தா சம்பாவனையின் பொழுது அவரை தரையில் விழுந்து சேவிக்கலாமா?
ப்ருஹஸ்பதி கர்த்தாவை விட வயதில் இளையவராக இருந்தாலும் கர்த்தா சம்பாவனையின் பொழுது அவரை தரையில் விழுந்து சேவிக்கலாம்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் மற்றொரு ஸ்ரீவைஷ்ணவரை இளையவராக இருந்தால் கூட சேவிக்கலாம். ஆனால் அவர் வயதில் சின்னவராக இருந்தால் அபிவாதனம் பண்ண வேண்டாம். அவரும் ப்ரத்யபிவாதனம் பண்ண மாட்டார். ப்ரத்யபிவாதனம் என்றால் ஆசீர்வாதம். ஆனால் சேவிப்பது நியாயம்.
1) திருவாராதனத்தில் சாளக்கிராம பெருமாளுக்குச் சந்தனத்தோடு சேர்த்து குங்குமத்தையும் ஸமர்ப்பிக்கலாமா?
2) திருவாராதனத்தில் உள்ள ஸேவாகாலம் (திருப்பாவை, திருப்பல்லாண்டு போன்ற ஆழ்வார் பாசுரங்களை அனுசந்தித்தல்) வடகலை ஸம்பிரதாயத்தில் உள்ளதா?
3) திருமலையிலும் திருச்சானூரிலும் உள்ள கோயில் மதில் சுவர்களில் கருடனோடு சேரந்தோ அல்லது தனியாகவோ சிங்கத்தின் சிலைகள் உள்ளன.
1. குங்குமம் ஸமர்ப்பிக்க வேண்டும் என்பதாக எங்கேயும் சொல்லவில்லை. அதனால் அதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சந்தனம் மட்டுமே சொல்லி இருக்கிறது. முன்பே நாம் ஒரு விஷயம் பார்த்து இருக்கிறோம். குங்குமம் என்பது அசல் கிடையாது. அதனால் சந்தனம் ஸமர்ப்பித்தால் போதும். குங்குமம் என்பது நீங்கள் குங்குமப் பூவை சொல்கிறீர்களா என்று ஒரு சந்தேகம் இருக்கிறது. குங்குமப்பூவாக இருந்தால் அதை இழைத்து சந்தனத்துடன் சேர்த்து தாராளமாக ஸமர்ப்பிக்கலாம். இல்லை கடையில் விற்கும் குங்குமமாக இருந்தால் அதைப் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
2. திருவாராதனத்தில் உள்ள ஸேவாகாலம் (திருப்பாவை, திருப்பல்லாண்டு போன்ற ஆழ்வார் பாசுரங்களை அனுசந்தித்தல்) வடகலை ஸம்பிரதாயத்தில் உள்ளது. எல்லா இடத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. எல்லோர் அகத்திலும் திருப்பாவை இல்லாமல் திருவாராதனை கிடையாது.
உங்களுக்கு ஏன் இந்தச் சந்தேகம் வந்தது என்று தெரியவில்லை. ஏனென்று கேட்டால் எல்லா ஸம்ப்ரதாயத்திலும் திருவாராதனத்தின் போது இப்படிதான் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா அகங்களிலும் திருப்பல்லாண்டு திருப்பாவை அதேபோல் சிற்றஞ்சிறுகாலே சாற்றுமுறை இல்லாமல் திருவாராதனமே கிடையாது.
3. சிம்மம் என்பது ஶ்ரேஷ்டம் என்று பொருள் கொடுக்கக்கூடிய சொல். சிம்மாசனம், புருஷசிம்மம் என்றெல்லாம் சொல்லுவது போல். மிருகங்களிலே ஶ்ரேஷ்டமான ஒரு மிருகம், ராஜாவாக இருக்கக்கூடிய ஒரு மிருகம், சிம்மம். பெருமாள் என்பவர் உயர்ந்தவர் ஶ்ரேஷ்டமானவர், ராகவசிம்மம் என்று பெருமாளுக்குத் திருநாமம் இருக்கின்றது. அவருடைய பரிவாரங்கள் எல்லாமே மிக உயர்ந்தது.
கருத்மான் நமக்குத் தெரியும். மிருகங்களை வாகனமாகக் கொண்ட சிம்ம வாகனம் ஶ்ரேஷ்டம். அந்த அர்த்தத்தில்தான் இருக்கின்றதே தவிர வேறு தேவதாந்த்ர பரமாக இல்லை. தேவதாந்த்ரங்களுக்குச் சிம்மம் இருந்தால் அதை இங்கு உபயோகிக்கக் கூடாது என்று கிடையாது. ஶ்ரேஷ்டமான வஸ்து வைக்க வேண்டும் என்ற ரீதியில் வைத்திருக்கிறார்கள். அவ்வளவே. அதேசமயம் கருத்மானை மற்ற கோவில்களில் வைக்கக் கூடாது. ஏனென்றால் கருத்மான் என்பவர் ஒரு நித்யசூரி. வேதத்திலே சொல்லப்பட்டவர். பகவானுக்கு வாகனமாக புராணங்களிலே சொல்லப்பட்டவர். மஹாபாரதம் , அவருடைய திவ்ய சரித்ரம் முதலானவற்றில் அவர் பகவானுக்கு மட்டுமே தாசனாக, வாகனமாக இருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றார் என்றெல்லாம் இருக்கின்றது. அதனால் அதை மற்றவர்கள் வைக்கக் கூடாது. அதேசமயம் சிம்மம் அது ஶ்ரேஷ்டமானது என்கின்ற அர்த்தத்தில் அதை கோவில்களிலே வைக்கலாம்.
அந்தர்யாமி பெருமாளுக்கும், ஆவேச அவதார பெருமாளுக்கும் என்ன வித்தியாசம்? எங்கு, எப்படிப் பெருமாளின் ஆவேசம் நிகழ்கிறது?
அந்தர்யாமி பெருமாள் என்றால் எல்லோருக்கும் உள்ளே அதாவது மனுஷ்யர்கள் என எல்லாவற்றிலும் உள்ளே பகவான் ஒரு திவ்ய ரூபத்தை எடுத்துக்கொண்டுள்ளார். யோகம் பண்ணுவதாக இருந்தால் இந்த அந்தர்யாமி பெருமாளை த்யானம் பண்ணலாம். பொதுவாகவே பெருமாள் எல்லோருக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறான்.
ஆவேச அவதாரம் என்பது பெருமாள் ஒன்றன் உள்ளே தன் சக்தியையோ, ஸ்வரூபத்தையோ விசேஷமாக ஆவேசம் பண்ணுவார் என்பதாகும். அந்தர்யாமி என்பது பொதுவானது. ஆவேசம் என்பது சில விசேஷ வ்யக்திகளிடம் எம்பெருமானானவன் தன் சக்தியை ஆவேசம் பண்ணி அதன்மூலமாக விசேஷமான காரியங்களைச் சாதிப்பார்.உ.தா பரசுராம அவதாரம். எல்லோருக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார் ஆனால் பரசுராமரின் உள்ளே பெருமாள் ஆவேசம் பண்ணப்படியால்தான் இத்தனை அபூர்வமான காரியங்களைச் செய்யமுடிந்தது. அதேபோல் வ்யாஸர் அவதாரம். எல்லோரும் ஞானி ஆனால் வ்யாஸர் வேதங்களைத் தொகுத்து,மஹாபாரதத்தை அமைத்து, வேதாந்த சூத்ரங்களைப் பண்ணி, பூராணங்களைத் தொகுத்து என அநேகங்களைப் பண்ணியிருக்கிறார். இவைகளை மனிதர்களால் பண்ணமுடியாது. இவை சாத்தியப்பட்டது பகவத் ஆவேசத்தினால். அப்படியென்றால் எம்பெருமான் தன் அம்சத்தைக் கொண்டு விசேஷமான சக்திகளையெல்லாம் உபயோகித்து அவர் மூலமாக பல காரியங்களை நடத்துகின்றார் என்று அர்த்தமாகும். இதற்குப் பெயர்தான் ஆவேச அவதாரமாகும்.
12. 1.அப்பா பரமபதித்தபின் பிள்ளை அமாவாசை/மாதப்பிறப்பு தர்ப்பணம் எப்போது தொடங்கவேண்டும்.
2.பெண் மட்டும் இருந்தால் அப்பா அம்மாவுக்கு மாஸுகம், ஶ்ராத்தம் செய்ய வேண்டாம் என்று ஒரு பிரபல உபந்யாஸகர் சொல்கிறார். சரியான விளக்கம் அனுக்ரஹிக்கவும்.
1. ஒருவர் பரமபதித்தபின் சபிண்டிகரணத்திற்குப் பின் மாசப்பிறப்போ, அமாவாசையோ எது வந்தாலும் தொடங்கலாம். மேலும் சபிண்டிகரணம் தர்ப்பண தினத்தில் வந்தால், சபிண்டிகரணம் பண்ணிவிடு, சோதகும்பம் பண்ணிவிட்டு தர்ப்பணமும் அன்றையே தினமே ஆரம்பிக்க வேண்டும்.
2. பெண் மட்டும் இருந்தால் அப்பெண்ணின் பிள்ளை, அதாவது தௌஹித்ரன் (பேரன்) அவன் கட்டாயம் எல்லாக் காரியங்களைச் செய்யவேண்டும்.
பித்ரு தர்ப்பணத்தின்போது முதலில் எள்ளைக் கையில் எடுத்து பிறகு அதில் தீர்த்தம் சேர்த்து விடுவதுதான் சரியான முறையா? அல்லது தீர்த்தத்தோடு எள்ளை முதலிலேயே கலந்து, பிறகு அந்த எள் சேர்த்த தீர்த்தத்தையே புக்னத்தின் மேல் விடலாமா?
தர்ப்பணத்தின் போது முதலில் எள்ளை கையில் எடுத்து, அதில் தீர்த்தம் சேர்த்து, மந்திரத்தைச் சொல்லி அதை அந்தப் புக்னத்தில் ஸமர்ப்பிப்பார்கள்.
திருவேங்கடமுடையான் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு, பாலாஜி என்ற பெயர் உள்ளது. அந்தப் பெயரின் உண்மையான அர்த்தம்/காரணம் என்ன? இந்தப் பெயரை வைத்து இன்னும் சிலர் அவரை முருகன் என்றும் சக்தி என்றும் சொல்வதைக் கேட்பதற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.
க்ருஷ்ணாவதாரத்தில் குழந்தையாக இருந்த கண்ணனே திருமலையிலே திருவேங்கடமுடையானாக வந்திருக்கிறான் என்று சொல்வதுண்டு. அந்தக் கண்ணனுக்கு பாலாஜி என்று பெயர். வடக்கில் பாலா என்றால் சின்னக்குழந்தை என்று அர்த்தம். ஜி என்பது மரியாதைக்கான சொல். இரண்டையும் சேர்த்து க்ருஷ்ணாவதாரத்தில் கண்ணனை பாலாஜி என்று அழைத்தார்கள். அந்தக் கண்ணனே திருவேங்கடவனாக வந்திருக்கிறான் என்பதை "கண்ணன் அடியினை நமக்குக் காட்டும் வெற்பு" என்று ஸ்வாமி தேஶிகனும் அனுசந்தானம் பண்ணியிருக்கிறார்.
மேலும், க்ருஷ்ணாவதாரத்திற்கும் திருவேங்கடமுடையானுக்கும் உள்ள சம்பந்தம் பற்றி வேங்கடாசல மஹாத்ம்யம் கதையிலும் ஸ்பஷ்டமாக இருக்கிறது. அதில் அந்த யசோதையே மீண்டும் அவதாரம் பண்ணினார் என்றெல்லாம் வரும். ஆகையால்தான் அந்தத் திருநாமம்.
இவர் முருகன், சக்தி என்று சொல்வதற்க்கெல்லாம் ப்ரஸக்தியே இல்லை. வேறு யாருக்கும் பாலாஜி என்ற பெயர் கிடையாது.
பரஸமர்ப்பணத்திற்குப் பிறகு க்ருஹ சாந்தி, ஸர்ப்ப சாந்தி போன்ற பரிஹாரங்களைக் குடும்பத்திற்காக செய்யலாமா? தயவு செய்து விளக்கவும்.
பரஸமர்ப்பணம் பண்ணிய பிறகு சாந்தி ஹோமங்கள் பண்ணும் வழக்கமில்லை. பரஸமர்ப்பணம் என்றால் எம்பெருமானுக்கு ஆத்மாவை ஸமர்ப்பணம் பண்ணிவிட்டோம் என்றாகும். அதனால் க்ருஹ சாந்தி, சர்ப சாந்தி, பரிஹாரங்களெல்லாம் செய்யவேண்டாம். பெருமாளைக் குறித்து ஸஹஸ்ரநாம பாராயணம் என்பதெல்லாம் செய்யலாம்.
தாயாருக்குக் குங்கும அர்ச்சனை செய்வது போல, பெருமாளுக்கும் ஸஹஸ்ரநாம அர்ச்சனை குங்குமத்தில் செய்யலாமா? (புஷ்பம் தவிர வேறு எதில் செய்யலாம்?)
பெருமாளுக்குக் குங்கும அர்ச்சனை பண்ணுகிறாரார்களா என்று தெரியாது. பண்ணினால் என்ன என்றும் தெரியாது. குங்குமம் என்பது தாயாருக்கு ஏற்றது என்றும் பெருமாளுக்கு புஷ்பம், துளசி ஏற்றது என்று நாம் அறிந்ததே. ஸ்த்ரீ, புருஷன் என்ற வித்யாசம் என்பதினால் கூட இருக்கும்.
திருவாராதன சமயத்தில் திவ்ய பிரபந்தம், தேசிக ஸ்தோத்ரம் போன்றவற்றை சேவிக்கும் பொழுதும், கோவிலில் பெருமாளை ஸேவிக்கும் பொழுதும் நமக்கு கண்களில் கண்ணீர் வருகிறது. குறிப்பாக திருவாராதனத்தின் பொழுது இவ்வாறு கண்களில் கண்ணீர் வருவது சரியா? ஸ்லோகங்கள் ஸேவிக்கும் பொழுது, வார்த்தைகள் வராமல் கண்ணீர் வருகிறதே. ஏதேனும் தவறு செய்கிறோமா?
பெருமாளிடம் பக்தி பாவத்தோடு இருப்பதினால் கண்ணில் ஜலம் வந்தால் அதுவும் பக்தியின் ஒரு ஸமர்ப்பணம் என்றே சொல்லியிருக்கிறது. "ஸ்வர நேத்ராங்க விக்ரியா" பேசும்போது குரல் தழுதழுத்தல், ஸ்தோத்ரம் சொல்லும்போது குரல் தழுதழுத்துச் சொல்ல முடியாமல் போவது. கண்களில் கண்ணீர் வருவது என்பதெல்லாம் பகவத் பக்தியினால் வருபவை. இவையெல்லாம் தோஷம் கிடையாது. இதற்கெல்லாம் பயந்து கொண்டு சொல்வதை நிறுத்திக் கொள்ளவேண்டாம். அந்த பாவத்தோடு தொடர்ந்து சேவிப்பது பெருமாளுக்கும் திருவுள்ளம் உக்கக்கும். அதைப்பற்றி ஸ்வாமி தேஶிகனே "பிப்ரதோ பாஷ்பபிந்தூந்" முதலான ரீதியில் சொல்லியிருக்கிறார்.
தஸாசு ஏகாதசி அன்று வந்தால், முதலில் உப்புமா சாப்பிட்டுவிட்டு, பலி பார்த்துவிட்டு பின் சொஜ்ஜி சாப்பிடலாமா?
அடியேனின் பெரியம்மா ஆசார்யன் திருவடி அடைந்து விட்டார்கள். சபண்டிகரணத்தன்று பெரியம்மாவின் சகோதர சகோதரிகள் மற்றும் அடுத்த தலைமுறையினர் அங்கு சாப்பிடலாமா?
1. கேள்வியில் சொல்லியப்படிச் செய்யலாம். ஆனால் புருஷர்கள் ஏதேனும் உட்கொண்டுவிட்டுதான் பலி பார்க்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.
2. பொதுவாக சாப்பிடும் வழக்கமில்லை.
அடியேனுக்குச் சில ஸ்ரீவைஷ்ணவ நண்பர்கள் உண்டு. அவர்கள் விநாயகரை வழிபடுவது, விநாயக சதுர்த்தி கொண்டாடுவது என்று வழக்கத்தில் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விநாயகரை விஷ்வக்ஸேனராக வழிபடுவதில்லை. நம் ஸம்ப்ரதாயத்தில் கௌரிதனயனான விநாயகரை வழிபடுவது சரியா?
விநாயகர் விஷ்வக்ஸேனர் இல்லை. விஷ்வக்ஸேனரும் விநாயகரும் வேறு வேறுதான். விநாயகரை விஷ்வக்ஸேனராக யாரும் வழிபடுவதில்லை. விஷ்வக்ஸேனரின் பரிஜனங்களில் ஒருவருக்கு யானை முகம் உண்டு, அவருக்கு கஜானனன் என்று பெயர். ஆகையால் ஸ்ரீவைஷ்ணவர்கள் விநாயக சதுர்த்தி கொண்டாடவேண்டிய அவசியமில்லை. நம் ஸம்ப்ரதாயத்தில் விநாயகரை வழிபடுவது சரியில்லை.
பரந்யாஸம் ஆன ஒரு ப்ரபந்நன் ப்ராயஶ்சித்த பரந்யாஸம் எப்போது எவ்வகையில் எங்ஙனம் செய்து கொள்ள வேண்டும்? இங்ஙனம் செய்து கொள்வது அவசியமா?
ஒருவர் தவறு செய்துவிட்டு அது தெரிந்துவிட்டால் அதற்கு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி என்று ஒன்று பண்ணலாம். இது வயதான காலத்தில், முடியாத காலத்தில் அவர்களுக்கு நிறைய பாபங்கள் இருப்பதால்தான் ரொம்ப கஷ்டமாக இருக்கு என்றும் அந்தப் பாபங்கள் போக, அதாவது உடல் வலிகள் நிறைய இருக்கு என்றும் அவர்களின் பாபங்கள் நிறைய போகிவிட்டது உணர்ந்துகொண்டு ப்ராயாஶ்சித்த ப்ரபத்தி என்று ஒன்று பண்ணிக்கொள்வார்கள்.
இது தேவையென்றால் செய்துகொள்ளலாம். அதாவது நாம் பாபங்கள் நிறைய பண்ணிவிட்டோம் என்று உணர்ந்து அதன் பலனாகத்தான் நிறைய தண்டனை அனுபவிக்கிறோம் என்று உணர்ந்து ப்ராயாஶ்சித்த ப்ரபத்தி செய்யலாம்.
விஶ்வாமித்ர கோத்ரத்தைச் சேர்ந்த ஆண், கௌசிக கோத்ரத்தைச் சேர்ந்த பெண்ணை விவாஹம் செய்து கொள்ளலாமா?
விஶ்வாமித்ர கோத்ரத்தைச் சேர்ந்த ஆண், கௌசிக கோத்ரத்தைச் சேர்ந்த பெண்ணை விவாஹம் செய்து கொள்ளும் வழக்கமில்லை.
அடியேனின் சம்பந்தி மனைவி 4 நாட்கள் முன்பு ஆசார்யன் திருவடி அடைந்து விட்டார். என்னுடைய மகன் சபிண்டீகரணத்தில் ஸ்வாமிகள் ஸ்தானம் ஸ்வீகரிக்கலாமா?
உங்களுடைய மகன் சபிண்டீகரணத்தில் ஸ்வாமிகள் ஸ்தானம் ஸ்வீகரிக்கலாம்.
பரந்யாஸத்திற்குப் பிறகு வெளிநாடு போகலாமா?
பொதுவாகவே வெளிநாட்டிற்குப் போகக்கூடாது என்பது ஶாஸ்த்ரம். ஆகையால் பரந்யாஸம் செய்யும் முன்னும் பின்னரும் போகக்கூடாது
இறந்தவர் உடலின் முன்பு தரையில் விழுந்து சேவித்தல் அல்லது கைக்கூப்பி நமஸ்கரித்தல் சரியா, தவறா? இறந்தவருக்கு வேறு எவ்வாறு மரியாதையை செலுத்தலாம்.
இறந்தவர் ஸ்ரீவைஷ்ணவராக இருந்தால், நன்றாக கீழே விழுந்து சேவிக்கலாம்.
ஆந்தை தாயாரின் வாகனம் என்று சொல்லப்படுகிறதே. இதைப்பற்றிய ப்ரமாணம் உண்டா என்பதை அடியேனுக்குத் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
இது அடியேன் கேள்விபட்டதில்லை.
ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்து கொள்ளாவிட்டால் ஒருவருக்குத் திருவாராதனம் செய்யும் தகுதி இல்லை என்று உள்ளது. இந்நிலையில் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொள்ளும்வரை, ஒருவர் எவ்வாறு தோஷம் இன்றி பெருமாளுக்கு ஆராதனம் செய்யலாம்?
பஞ்சஸம்ஸ்காரம் செய்து கொள்ளாவிட்டால் திருவாராதனம் செய்யக்கூடாது. பஞ்சஸம்ஸ்காரம் செய்யும்வரை பெருமாளுக்கு ஆராதனம் செய்யமுடியாது. பெருமாளுக்கு நிவேதனம் செய்யலாம். அதுவும் பஞ்சஸம்ஸ்காரம் பண்ணியிருந்தால்தான் செய்யமுடியும் ஏனென்றால் நிவேதனத்தில் வரும் மந்த்ரங்கள் திருவஷ்டாக்ஷர மந்த்ரம் வரும். அது பஞ்சஸம்ஸ்காரம் செய்யும் சமயம்தான் உபதேசமாகும். தோஷமில்லாமல் பெருமாளுக்குத் திருவாராதனம் செய்வது என்பது பஞ்சஸம்ஸ்காரம் ஆகும்வரை சற்று கடினம்தான்.
க்ருஹத்தில் எவ்வாறு சுதர்சன பூஜை செய்ய வேண்டும்? சுதர்சன யந்த்ரத்தை வீட்டில் வைத்துக் கொள்வது நல்லது என்று ஒரு உபன்யாசத்தில் கேட்க நேர்ந்தது. அவ்வாறெனில் எந்த உலோகத்தால் அதைச் செய்ய வேண்டும்? மேலும் யந்த்ரத்தை முறையாக எவ்வாறு ப்ரதிஷ்டை செய்ய வேண்டும்?
சக்கரத்தாழ்வாரை ஜபிக்க வேண்டிய மந்திரம் எது? சுதர்சன யந்த்ரத்தை க்ருஹத்தில் ப்ரதிஷ்டை செய்வதால், ஏதேனும் அதிகப்படியான நியமங்கள் கடைபிடிக்கப்பட வேண்டுமா?
க்ருஹத்தில் சுதர்சன யந்த்ரத்தை வைத்துக்கொள்வது நல்லதுதான். அதை எந்த உலோகத்தில் செய்வது என்பதையும் எப்படிப் ப்ரதிஷ்டை செய்வது என்பதையும், சுதர்சன ஹோமம் செய்விப்பவர்கள், பெரியவர்களைக் கேட்டால் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.
சக்கரத்தாழ்வரை ஜபிக்க இரண்டு மூன்று சுதர்சன மந்த்ரங்கள் இருக்கிறது. ஆசார்யனிடம் விண்ணப்பம் செய்து உபதேசம் பெற்றுக்கொள்ளவும்.
ஆம், சுதர்சன யந்த்ரம் ப்ரதிஷ்டையாகி இருந்தால் அதிகப்படியான நியமங்கள் கடைபிடிக்கவேண்டும். அந்த யந்த்ரத்தைத் தொடும்போது மிகவும் சுத்தியோடு தொடவேண்டும். அனாசாரங்கள் கலந்து அந்த யந்த்ரத்தைத் தொடக்கூடாது.
என்னுடைய தாத்தாவின், தம்பியின் பேரனுடைய பார்யா பரமபதித்துவிட்டார்கள். எனக்கு எத்தனை நாள் தீட்டு? குழி தர்ப்பணம் பண்ண வேண்டுமா? இறந்தவர்களை நான் பார்த்து சுமார் 20 வருடங்கள் ஆகின்றது. தீட்டு விஷயம் தெரியப்படுத்தவும்.
10 நாள் தீட்டு உண்டு. குழி தர்ப்பணம் பண்ணவேண்டும். அவர்களைப் பார்க்கவேயில்லை என்றாலும், சம்பந்தமேயில்லை யாரென்று தெரியவில்லை என்றாலும் உறவு என்று தெரியவந்தவுடன் தீட்டு உண்டு.
அடியேனின் க்ருஹத்திற்கு அருகில் உள்ள (குரோம்பேட்டை) கோவிலின் ப்ரஸாதம் பற்றிய கேள்வி. அடியேன் ஜிஎஸ்பிகேவில் உபன்யாசம், காலக்ஷேபங்கள் (குறிப்பாக ஸ்ரீவாசுதேவாசார் ஸ்வாமி) கேட்கும் வழக்கமுடையவன். அதனால் நிறைய பயன் பெற்றுள்ளேன். அடியேன் காலை மாலை இருவேளையும் கோவிலுக்கு செல்லும் வழக்கமுடையவன். கோவிலில் மீதமுள்ள ப்ரஸாதங்களை (பெரும்பாலும் சாதத்தை) அந்தந்த தளிகை மற்றும் நைவேத்தியம் செய்த பாத்திரங்களிலேயே வைத்து கோவிலுக்கு வெளியே வைத்து விடுகிறார்கள். இதை அந்தப் பகுதியில் உள்ள மாடுகள் நேரடியாக அந்த பாத்திரத்தில் இருந்து எடுத்து உண்கின்றன. இது சரியான பழக்கமா? அந்தப் பகுதியில் உள்ள நாய்களும் சில சமயம் இந்த பாத்திரங்களைத் தீண்டுவதற்கும், அந்த ப்ரசாதங்களை உண்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இது சரியான செயலா அல்லது இதனால் அனாசாரம் ஏதும் ஏற்படுகிறதா? இதைப் பற்றி நான் ஏற்கனவே கோவிலில் சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துக் கூறியும் எந்தப் பயனும் இல்லை. இதனால் எனக்கு அந்த ப்ரசாதத்தை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்ற குழப்பம் நிலவுகிறது. கோவில் ப்ரசாதத்தை ஏற்றுக் கொண்டால் அது அனாச்சாரம் ஆயிற்றே என்ற பயமும், அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது பாபம் என்றும் அடியேனுக்குத் தோன்றுகிறது. தயவுசெய்து இந்த விஷயத்தில் ஸ்வாமிகளைக் கேட்டு அடியேனுக்குத் தெளிவு ஏற்படுத்த வேண்டுகிறேன்.
அந்தப் பாத்திரத்தை அப்படி வைப்பது சரியில்லைதான். குறிப்பாக நாய் தீண்டும்படி வைப்பது சரியில்லை. அவர்கள் அதை நல்ல ரீதியில் சுத்தம்செய்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
கோயில் பாத்திரம் அல்லாது வேறு ஒரு பாத்திரத்திலோ, வாளியிலோ ப்ரசாத்தத்தைப் போடலாம் என்று தோன்றுகிறது.
ஆத்தில் கார்த்திகை தீபம் அன்று முதலில் சிறியதாக சொக்கப்பானை ஏற்றி அதன் பிறகு மற்ற விளக்குகள் ஏற்ற வேண்டும் என்று கேள்விப்பட்டேன். அந்தச் சொக்கப்பானை என்பது அகல் விளக்கில் எண்ணெய் விட்டு எள் முடிந்து வைத்த காடாத்துணியைத் திரியாக பயன்படுத்தலாமா?
அகத்தில் வைக்கும் சொக்கப்பனையில் நெய் சேர்த்து, பஞ்சுக்குள் நெல் வைத்து (அதை ஒரு உருண்டைப்போல் வைத்து) அதற்கு மேல் திரி வைத்து பண்ணுவது சொக்கப்பானை என்று பெயர்.
அடியேன் ஆத்துக்காரர்க்கு பூர்வீகம் எந்த ஊர்னு தெரியாது, பூர்வீக பெருமாள் யாருன்னு தெரியலை, குலதெய்வம் என்று சேவிக்க ஏதேனும் உபாயம் இருக்கா? (அடியேனுக்கு ஆசார்ய அனுக்ரஹத்தில் பரந்யாஸம் ஆயிடுத்து)
எம்பெருமான் நாராயணன் தான் குலதெய்வம்.
ஸ்தோஷ்யாமி ந: குலத4நம் குலதை3வதம் தத்
பாதார3விந்த3மரவிந்த3விலோசநஸ்ய||
என்று ஆளவந்தார் ஸாதித்துள்ளார். உங்களுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டது ஆகையால் எம்பெருமானே குலதெய்வம் என்று நிச்சயமாகிவிட்டது.
1) திருவாராதனத்தின் போது பெருமாளுக்குச் சமர்ப்பிக்கும் திருத்துழாய் முழுவதையும் கோயிலாழ்வாரில்/பெருமாள் பெட்டியில் விடவேண்டுமா? அல்லது அவற்றில் சிலவற்றை நாமும் நமது குடும்பத்தினரும் ப்ரஸாதமாக ஸ்வீகரிக்கலாமா?
2) பழைய/கிழிந்த பெருமாள் வஸ்த்ரங்கள், கிழிந்த/உடைந்த பெருமாள் படங்கள்/பொம்மைகள், பெருமாள் படம் போட்ட நாள்காட்டிகள் இவற்றை எப்படி அப்புறப்படுத்துவது? எனக்கு இவற்றைக் குப்பையில் ஏறிய மனமில்லை.
3) அமாவாசை தர்ப்பணம் செய்து முடித்த தர்ப்பங்களை/கூர்ச்சங்களை எப்படி அப்புறப்படுத்துவது?
திருத்துழாய் முழுவதையும் கோவிலாழ்வாருக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய அவசியமில்லை. மேலும் ப்ரசாதமாக நாம் எடுத்துக்கொள்ளலாம், அகத்தில் எல்லோருக்கும் கொடுக்கலாம்.
பெருமாள் வஸ்த்ரங்கள், படங்கள் போன்றவற்றைக் குப்பையில் போடாமல், கால்படாத உசிதமான இடத்தில் சேர்த்துவிடலாம்.
அமாவாசை தர்ப்பணம் செய்து முடித்த தர்ப்பங்களை/கூர்ச்சங்களைக் கால்படாத இடத்தில் மரத்தடியிலோ அல்லது புதரிலோ சேர்த்துவிடலாம்.
1) பொதுவாக பெருமாள் மற்றும் தாயாரின் உற்சவ மூர்த்திகளின் கண்கள் ஏன் மூடியே உள்ளன?
2) பெருமாளின் உற்சவ மூர்த்திகளுக்கு (உதாரணம்: நம்பெருமாள், வரதர், சாரங்கபாணி, பார்த்தசாரதி) திருமண் அணிவிக்காமல் ஏன் திலகம் அணிவிக்கப்படுகிறது?
3) பெருமாள் மற்றும் தாயாரின் மூல மற்றும் உற்சவ மூர்த்திகளில் உள்ள திருச்சிவிகையில் பூதம் போன்ற ஒரு உருவம் உள்ளதே. இதன் பின்னே ஏதாவது காரணம் உள்ளதா?
அவர்களின் கண்களுக்கு நேத்ரோந்மீலநம் என்று ஒன்று பண்ணியிருப்பார்கள் அந்த ரீதியில் கண் திறந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். மூடின மாதிரி என்று இருந்தால் அவருக்கு அப்படி அமைப்பு என்று மாத்திரம்தான். முக்கால்வாசி நேத்ர உந்மீலநம்தான் கண் திறந்திருப்பதாகதான் அமைப்பிருக்கும்.
திருமண் என்பது பகவானின் தாஸன் நாம் என்பதற்கான அடையாளமாகும். அந்த ரீதியில் அவருக்கு அதை ஸமர்ப்பிக்கமுடியாது அவருக்குத் தாஸனாக அவரே ஆகமுடியாது. அதனால் அவருக்கு அலங்காரமாக திருமண் ஸாத்துப்படி பண்ணுகிறார்கள் என்பதுதான் அர்த்தமாகும்.
திருச்சிவிகையில் பூதம் இருப்பதாகப் பார்த்ததில்லை. பொதுவாகச் சிங்கத்தின் தலைதான் பார்த்ததுண்டு. சிம்மாஸனத்தில் பெருமாள் இருப்பதுபோலாகும். சிம்மம் என்பது ஶ்ரேஷ்டமானது என்பதையும் மிகவும் உயர்ந்தது என்பதையும் காட்டும் அடையாளம்.
ஸ்ரீசூர்ண ப்ரதிஷ்டை மற்றும் துளசி மாலை ப்ரதிஷ்டை எவ்வாறு செய்ய வேண்டும்?
ஸ்ரீசூர்ண ப்ரதிஷ்டை மற்றும் துளசி மாலை ப்ரதிஷ்டை எப்படிப் பண்ணவேண்டும் என்பதை “கோபால தேஶிக ஆஹ்நிக க்ரந்தத்தில்” பின்னாடி போட்டுயிருக்கிறார்கள். புஸ்தகம் உத்தமூர் ஸ்வாமி trust அவர்களிடம் கிடைக்கும். ப்ரயோகம் இருக்கு. ஸ்ரீசூர்ண ப்ரதிஷ்டைக்கு முக்கியமாக ஶ்ரீஸுக்தம் முதலானவைகள் எல்லாம் உண்டு. அதைப் பார்த்து பண்ணலாம்.
அகத்துப் பெருமாளுக்கு அகர்பத்தியை ஏற்றலாமா?
அகத்துப் பெருமாளுக்கு அகர்பத்தி ஏற்றி வைக்கலாம்.
அமாவாஸை அன்று கோலம் போடலாமா?
அமாவாஸை அன்று கோலம் போடலாம்.
க்ரஹண காலத்தில் ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும்? முக்யத்வம் விளக்கவும்.
க்ரஹண காலம் புண்யகாலம் ஆனபடியாலும் மேலும் க்ரஹண கால தர்ப்பணம் என்பது நிமித்த காரணமானபடியாலும் சாதாரண காலத்தில் செய்யும் தர்ப்பணத்தை விட க்ரஹண கால தர்ப்பணம் கூடுதல் பலன் தரும் என்கிறபடியால் அவசியம் பண்ணவேண்டும்.
க்ரஹணம் சம்பவிக்கும் நாளில் புண்ய காலத்திற்குப் பிறகு குளித்தபின் தர்ப்பணம் செய்பவர் மற்றும் தர்பணம் செய்யாதவர் முக க்ஷௌரம் (முடி திருத்தம்) செய்து கொள்ளலாமா? தர்ப்பணம் செய்தவர்கள் இரவில் பலகாரம் செய்ய வேண்டுமா? உதாஹரணத்திற்கு சமீபத்தில் முடிந்த சந்திர க்ரஹணம் சம்பவம்.
க்ரஹணம் தர்ப்பணத்திற்கு பலகாரமில்லை ஆகையால் பலகாரம் பண்ணவேண்டிய அவசியமில்லை. க்ரஹணத்திற்குப் பிறகு அன்றைய தினமே தர்ப்பண தினமாக இருக்கின்றபடியாலே சாதாரணமாக புண்யகாலமாக இருக்கிறபடியால் க்ஷௌரம் பண்ணக்கூடாது. மறுநாள் என்றால் ஒருநாள் விட்டு மறுநாள் பண்ணுவதென்றால் பண்ணிக்கொள்ளலாம் அதுவே எப்போதும் பிரதமையாக இருக்கும் பிரதமை நாளில் க்ஷௌரம் பண்ணும் வழக்கமில்லை.
முக க்ஷௌரம் என்று ஶாஸ்த்ரத்தில் இல்லை அப்படி பண்ணிக்கொள்ளகூடாது என்பதுதான் ஶாஸ்த்ரம்.
நான் 43 வயது ப்ரம்ஹச்சாரி. எனக்கு ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது, பரந்யாஸம் ஆகவில்லை. நான் பரமபதித்த பிற்கு அந்திம க்ரியைகள், ஶ்ராத்தம் செய்ய யாருமில்லை. நான் இப்போதே எனக்கு ஶ்ராத்தம் செய்யலாமா? செய்யலாம் என்றால் ஒருமுறை செய்தால் போதுமா அல்லது என் ஆயுட்காலம் வரை செய்யவேண்டுமா?
சீக்கிரம் பரந்யாஸம் பண்ணிக்கொள்ளவேண்டியதுதான். நீங்கள் பரமபதித்தற்குப் பின் அந்திம ஸம்ஸ்காரம் உங்கள் நெருங்கிய பந்துக்கள் இல்லையென்றால் யாராவது தூரபந்துக்கள் பண்ணுவார்கள். தனக்குத்தானே ஶ்ராத்தம் பண்ணும் வழக்கமும் கிடையாது அப்படிச் செய்யவும் கூடாது
அடியேனின் பையனுக்கு சமீபத்தில்தான் உபநயனம் ஆனது. அவனுக்கு அடியேன் சந்தியாவந்தனம் கற்றுக்கொடுத்துள்ளேன். அவனுக்கு ஒரு Reference போல் கொடுக்க சந்தியாவந்தன மந்திரங்கள் எங்கே கிடைக்கும்? எப்படிச் செய்யவேண்டும் எந்த திசை என்ற விளக்கங்களுடன் ஏதேனும் புத்தகம் உள்ளதா? நாங்கள் ஸ்ரீஸந்நிதி சிஷ்யர்கள்.
சந்தியாவந்தனம் விளக்கங்களோடு கூடிய புஸ்தகம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் பௌண்டரீகபுரம் ஆஶ்ரமத்தில் கிடைக்கிறது அதை வாங்கிக்கொடுக்கலாம்.
1. திருவாராதனம் முடித்தபின் கொடுக்கப்படும் பெருமாள் தீர்த்தம் என்பது என்ன? ”
A)
அது தப்ரதிக்ரஹ பத்ரம் என்று ஒவ்வொரு ஆசனத்திலு(அதாவது அர்க்யம், பாத்யம்) நாம் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கும் ஸ்நானாசன தீர்த்தமா? திருமஞ்சன தீர்த்தமல்லாத ஸ்நானாசன தீர்த்தமா? அல்லது இரண்டும் கலந்த தீர்த்தமா? அப்படித் தரும் தீர்த்தத்தை என்ன செய்ய வேண்டும்?
B)
பெருமாளுக்குப் பாலால் திருமஞ்சனம் செய்தால் அந்தப் பாலை என்ன செய்யவேண்டும்?
2. எங்கள் அகத்தில் குழந்தைகள் பள்ளி/கல்லூரிக்குச் செய்வதால் தளிகை சீக்கிரம் பண்ணிவிடுவார்கள். அதனால் நாங்கள் திருவாராதனத்திற்கு என்று தனியாக அமுது தயார்செய்கிறோம். இப்படிப்பட்ட சமயங்களில் போஜ்யாசனத்திற்குத் தளிகை எப்ப்டி ஸமர்ப்பிப்பது என்று தெளிவிக்கவும்.
A. திருவாராதனத்திற்குப் பிறகு கொடுக்கப்படும் தீர்த்தம் ஸ்நானாசன தீர்த்தம்தான். அதாவது பெருமாளுக்குத் திருமஞ்சனம் கண்டருளிய தீர்த்தம்தான். அதில் அர்க்ய, பாத்ய என்று இதர தீர்த்தங்கள் கலந்திருந்தாலும் தவறில்லை. அந்தத் தீர்த்ததை என்ன செய்வது என்று கேட்டால் அதை ஸ்வீகரிக்க வேண்டியதுதான்.
B. பெருமாளுக்குப் பால் திருமஞ்சனம் செய்தால் அந்தப் பாலை நாம் ஸ்வீகரிக்கலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் அது விசேஷமாகும்.
சீக்கிரமாக முதலில் குழந்தைகளுக்காகத் தளிகை செய்துவிட்டால் கூட, இரண்டாவது தளிகைக்கு ப்ரசாதம் மட்டும் செய்து பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணினாலும் தவறில்லை. ப்ரசாதத்துடன் தயிரும் சேர்த்து கண்டருளப்பண்ணலாம். அப்படிச் செய்வது பெரியவர்கள் ஆசாரத்திலும் இருக்கிறது.
அடியேன் கணவர் சமீபத்தில் பரமபதித்து விட்டார்.அவருக்கு வருஷாப்திகம் வரை என் மச்சினர் பிள்ளை காரியம் செய்கிறான் என்றும் அதன்பின் வரும் ஶ்ராத்தம் யார் செய்யலாம் என்ற என் கேள்விக்கு அடியேனுக்கு பேரன் இருக்கிறானா என்று கேட்டிருந்தீர்கள். எனக்கு இரண்டு பெண்கள்.சிறிய பெண் மூலமாக ஒரு பேரன் இருக்கிறான்.அந்த என் பேரனுக்கு வயது 12. உபநயனம் ஆகிவிட்டது.
ஒருவருக்கு (அது ஸ்த்ரீயானாலும், புருஷனானாலும்) அவர்கள் இறந்த பிறகு கைங்கர்யங்கள் பண்ணவேண்டியது அவர்களுக்குப் பிறந்த ஆண் பிள்ளைகள். பிள்ளையில்லை என்றால் பெண்ணின் பிள்ளைகள் முக்கியமாக மூத்த பிள்ளை பண்ணவேண்டும்.
இந்த விஷயத்தில் உங்கள் கணவரின் கைங்கர்யத்தை உங்கள் மச்சினர் பிள்ளை பண்ணுகிறார் என்று சொல்லியிருக்கிறீர்கள் அவர் நேரே செய்திருக்க மாட்டார் உங்களிடம் கைப்புல் வாங்கிதான் செய்திருப்பார். இதை அப்படியே தொடர்ந்து பண்ணுவது தான் ந்யாயம்.
ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் இவை இரண்டும் வேவ்வேறு ஆசார்யர்களிடம்/மடங்களில் பண்ணிக்கொள்ளலாமா? யாரை ஆசார்யனாக கொள்ளவேண்டும்? அப்படிச் செய்தால் பண்டிகை போன்ற காலங்களில் யாருடைய ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்ற வேண்டும்?
ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் இரண்டும் வெவ்வேரிடத்தில் ஏற்பட்டால் இரண்டு ஆசார்யர்களையும் அவசியம் ஆசார்யனாக கொண்டாட வேண்டும். இது ஒரு ஸ்த்ரீக்கு நேர்ந்திருந்தால் அவள் எந்த அகத்தில் கல்யாணம் பண்ணிக் கொண்டு போயிருக்கிறாளோ அங்கு என்ன சம்ப்ரதாயத்தை பின்பற்றுகிறார்களோ அதையே அவளும் பின்பற்ற வேண்டும். உதாரணத்திற்கு ஒரு ஸ்த்ரீக்கு திருமணத்திற்கு முன்பு ஆபத் பரந்யாஸம் ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம், அதற்குப் பின் அவளுக்கு வேறு ஒரு சம்பிரதாயத்தில் இருக்கின்ற குடும்பத்தில் திருமணம் ஆகிறது, அந்தக் குடும்பத்து ஆசார்யனிடம் ஸமாஶ்ரயணம் ஆகிறது என்றால், அந்தக் குடும்பத்தில் அந்த சம்ப்ரதாயத்தில் எந்த மாதிரி ரீதிகள் பண்டிகைகள் இருக்கின்றதோ அப்படித்தான் கொண்டாட வேண்டும்.
1. அகத்தில் பெருமாள் சந்நிதியில் எத்தனை விளக்கு ஏற்றவேண்டும்? 2 விளக்குகளா அல்லது ஒற்றை விளக்கு ஏற்றாலாமா?
2. நம் முன்னோர்களின் படங்களை பெருமாள் சந்நிதியில் வைக்கலாமா?
அகங்களில் பெருமாள் சன்னதியில் ஒரு விளக்கு ஏற்றி வைத்தால் போதும். ஆசையாக இருந்தால் இன்னொரு விளக்கும் ஏற்றி வைக்கலாம் அதில் தப்பு ஒன்றும் கிடையாது. நித்தியம் ஏற்றும் விளக்கு எண்ணெய் குத்தி ஏற்றும் விளக்காகவும் விசேஷ காலங்களில் இன்னொரு நெய் விளக்கை ஏற்றுவதும் சில க்ருஹங்களில் வழக்கத்தில் உள்ளது.
முன்னோர்கள் படங்களைப் பெருமாள் சன்னதியில் வைப்பது என்பது சன்னதி பெரிய இடமாக இருந்தால், பெருமாள் படங்கள் எல்லாம் மாட்டியிருந்தால் அதற்குக் கீழ் இருக்கின்ற இடத்தில் இந்தப் படங்களை மாட்டலாம். முன்னோர்கள் படம் ஆசார்யர்கள் படம் இவையெல்லாம் பெருமாள் படங்களுக்குக் கீழே மாட்டலாம்.
1. கார்த்திகை மாதம் முழுவதுமே இரண்டு விளக்கேற்றி சாயங்காலம் வேளையில் வாசலில் வைக்கவேண்டுமா?
2. பாஞ்சராத்ர தீபத்திற்கு முதல் நாள் நித்யம் ஏற்றும் இரண்டு விளக்குகளைத் தவிர கூடுதலாக விளக்கேற்ற வேண்டுமா? ஶாஸ்த்ரப்படி இது சரியா? அன்றைய தினம் தானே அண்ணாமலையார் தீபமும் வருகிறது? கார்த்திகை தீபத்திற்கு மறுநாளும் திருக்கார்த்திகை போல் நிறைய விளக்கேற்ற வேண்டுமா?
காத்திகை மாதம் முழுவதும் சாயங்கால வேளையில் இரண்டு விளக்கேற்றி வாசலில் வைப்பதென்பது வழக்கத்தில் உள்ள ஒன்றாகும்.
பாஞ்சராத்ர தீபத்திற்கு முதல் நாள் பரணி தீபம் என்று கூறுவர். அன்றைய தினமும், பாஞ்சராத்ர தீபத்தின் அடுத்தநாளும் இரண்டுக்கு மேற்பட்ட தீபங்களை ஏற்றுவர். இவையெல்லாமே வழக்கத்தில் இருப்பதுதான் ஏற்றுவதால் தவறொன்றுமில்லை.
க்ரஹண காலத்தில் சில நக்ஷத்ரங்களுக்கு ஏற்படும் தோஷத்திற்குப் பரிகாரம்/ஶாந்தி ஹோமம் செய்கிறார்கள். நம் ஸம்ப்ரதாயத்தின்படி அவைகளை எவ்வாறு செய்யவேண்டும்? பெரியவர்களின் வழக்கம் என்ன?
க்ரஹண காலத்தில் நம் நக்ஷத்ரங்களுக்குத் தோஷம் என்று பரிகாரம் செய்யவேண்டி வந்தால் நம் ஸம்ப்ரதாயத்தில் பரிகாரம் என்பது அகத்தில் பெருமாள் நித்யம் ஏற்றும் விளக்கு பக்கத்தில் மற்றொரு விளக்கு ஏற்றி பெருமாளைச் சேவிப்பது என்று வைத்துள்ளோம். வேண்டுமென்றால் க்ரஹணம் முடிந்த பிறகு , இரவு நேரமாக இருந்தால் மறுநாள் கோவிலுக்குச் சென்று எம்பெருமானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வரலாம்.
வயதில் சிறியவர்கள் பரமபதித்தால் அந்தப் பித்ருசேஷத்தை பெரியவர்கள் ஸ்வீகரிப்பதில்லை என்று இருக்கிறது.எல்லாமே ஆத்மா எனறிருக்கும்போது சின்னவர்கள் பெரியவர்கள் என்ற பேதம் ஏன் ஏற்படுகிறது. என்னிடம் சிலர் கேட்டார்கள்.அவர்களுக்காக கேட்கிறேன்.
வயதில் சிறியவர்கள் பரமபதித்தால் பெரியவர்கள் பித்ரு சேஷம் ஸ்வீகரிப்பதில்லை. ஆத்மா என்று பார்த்தால் எல்லாம் ஒன்றுதான் இருப்பினும் அப்பா அப்பாதான் பிள்ளை பிள்ளைதான், சிறியவர்கள் சிறியவர்கள்தான் பெரியவர்கள் பெரியவர்கள்தான். ஆகையால் பெரியவர்கள் ஸ்வீகரிக்கும் வழக்க்கமுமில்லை, ஸ்வீகரிக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை.
ஏகாதசி துவாதசி அமாவாஸை ஆகிய நாட்களில் அரிசிக்குப் பதிலாக சிறு தானியங்கள்- Millets (இதில் பலவகை உள்ளது)) சேர்த்துக் கொள்ளலாமா? ஏகாதசியன்று இந்த சிறு தான்யங்களை எப்படி உடைப்பது? மேலும் எந்தெந்தச் சிறு தான்யங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
ஏகாதசி அன்று சிறுதானியங்களை உபயோகப் படுத்தி ஏதாவது பதார்த்தங்கள் செய்தால் அதை உடைக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அதை அப்படியே உபயோகிக்கலாம். அதாவது உடைத்து உபயோகப்படுத்த வேண்டும் என்பது அரிசியைப் பொருத்த மட்டும் தான். பாக்கி சிறுதானியங்களுக்கு உடைக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.
துவாதசி அமாவாசை அன்று சிறு தானியங்கள் சேர்த்துக் கொள்ளலாமா என்றால் , ப்ரதானமான ப்ரசாதமாக சிறுதானியம் பண்ணலாமா என்று கேட்டால் அப்படிப் பண்ண வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. சாதம் என்பதுதான் முக்கியமாக அன்றைக்குப் பண்ண வேண்டும். சிறுதானியம் தான் சாப்பிட முடிகிறது, சர்க்கரை நோய், அன்னம் சாப்பிட முடியவில்லை என்று இருந்தாலும் கொஞ்சமாக பரிசேஷனத்திற்கு தேவைப்படுகிற அளவு துளி அன்னம் சேர்த்துக்கொண்டு அதற்குமேல் சிறுதானியங்களைச் சாப்பிடலாம் என்று தோன்றுகிறது.
சிறுதானியங்களில் கேழ்வரகு திணை, குதிரைவாளி இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
க்ரஹண கால தர்ப்பணத்தில் ஆசமனம் பண்ணவேண்டுமா?
க்ரஹண காலங்களில் தர்ப்பணம் பண்ணுவதற்கு முன் ஆசமனம் பண்ணவேண்டும். அப்படிச் செய்வதால் தீர்த்தம் உட்கொண்டதுபோல் ஆகாது. மேலும் எந்தக் கர்மா செய்தாலும் அதற்கு முன்பும், அக்கர்மா செய்தபின்பும் ஆசமனம் பண்ணவேண்டும். இவையெல்லாம் தீர்த்தம் உட்கொண்டது என்ற கணக்கில் சேராது தோஷமும் ஆகாது. நன்றாக கர்மா செய்வதற்கு முன்னும் பின்னும் ஆசமனம் செய்யவேண்டும்.
மாதப் பிறப்பு தர்ப்பணம் மாதம் பிறப்பதற்கு முன்பே பண்ண வேண்டுமா? அல்லது மாதம் பிறந்த பின்னால் பண்ண வேண்டுமா?
மாதப்பிறப்பு தர்ப்பணம் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு கணக்கு உண்டு. எல்லாம் ஒரே மாதிரி வராது. ஷடசீதியாக இருந்தால் மாதம் பிறந்த பின் பண்ணவேண்டும். அதிலும் எத்தனையோ கணக்கு இருக்கிறது. பின் நாளில் விரிவாகப் பார்க்கலாம்.
அடியேன் கணவர் சமீபத்தில் பரமபதித்து விட்டார்.எனக்கு இரண்டு பெண்கள்.என் மச்சினர் பிள்ளைதான் இப்போது கணவருக்கு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்கிறான். வருஷாப்திகம் முடிந்ததும் பின்னர் வரும் ஶ்ராத்தம் யார் செய்ய வேண்டும். மச்சினர் மகனே செய்யலாமா அல்லது அவனால் முடியாவிட்டால் என்ன செய்வது என்று சொல்லுங்கள்.
உங்களுக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அந்தப் பெண்களுக்குப் பிள்ளைக் குழந்தைகள் இருக்கிறார்களா? அதாவது பேரன் இருக்கிறார்களா என்று தெரியப்படுத்தவும்.
கயா ஶ்ராத்தம் ஸமாஶ்ரயம் ஆகாதவர் செய்யலாமா? பலன் கிடைக்குமா? தம்பதியாகத்தான் செய்யவேண்டுமா?
பஞ்ச ஸம்ஸ்காரத்திற்கும் (ஸமாஶ்ரயணத்திற்கும்) கயா ஶ்ராத்தத்திற்கும் சம்பந்தமில்லை. ஆயினும் கயாஶ்ராத்தம் ஸாவகாச ஶ்ராத்தம். நமக்கு விருப்பமான சமயத்தில் செய்யலாம். ஸமாஶ்ரயணம் உபநயநத்திற்குப் பின் காலதாமதம் செய்யாமல் முடிந்தவரை சீக்கிரமாகவே செய்ய வேண்டியது. ஆகையால் ஸமாஶ்ரயணத்திற்குப் பின் செய்வது உசிதம்.
கயா ஶ்ராத்தத்தில் பிண்டதானம் முக்கியம். நம் ஸம்ப்ரதாயத்தில் பார்வண ஶ்ராத்தத்திலே பிண்டதானம் செய்யப்படுகிறது. க்ருஹஸ்தன் பார்வண ஶ்ராத்தத்தை தன் அக்னியில் செய்ய வேண்டும். ஆகையால் ஔபாஸனம் செய்யவேண்டி இருப்பதால் விவாஹமானவர் தம்பதியாக செல்வதே உசிதம்.
ஏகாதசி விரதம் இருக்கும் ஒருவர் கோயிலில் புளியோதரை, தயிர் சாதம் பிரசாதம் தரும்போது சாப்பிடலாமா?
ஏகாதசி விரதம் இருக்கும் ஒருவர், எந்த விதத்திலும் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது.
அடியேன் அகத்தில் அடியேன் ஆசார்யனான ப்ரக்ருதம் ஸ்ரீமதழகிய சிங்கரின் படம் உள்ளது. அவருக்கும் எபெருமாள் படங்களுக்கு பூ வைப்பது போல் வைக்கலாமா?
ஸ்ரீமதழகிய சிங்கரின் படத்திற்கு புஷ்பம் வைக்கலாம்.
எந்த வயதில் பரந்யாஸம் செய்துகொள்ளலாம்? சிறு வயதிலேயே பரந்யாஸம் செய்துகொள்ளலாமா? அது சரியா?
எந்த வயதில் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். சிறு வயதிலும் செய்துகொள்ளலாம்.
பெருமாள் திருவாராதனத்திற்கு உபயோக்கிக்கும் மணியைப் பாதுகாராதனத்திற்கு உபயோகிக்கலாமா?
பாதுகா திருவாராதனத்திற்கு மணி சேர்க்கலாம் ஆனால் பெருமாளுடைய மணியைச் சேர்க்கக்கூடாது. தனியாக ஒன்று இருக்கவேண்டும்.
சில ஜைன மத நண்பர்கள் திருமலை என்பது ஜைன கோயில் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு எம்பெருமானின் திவ்யதேசம் என்று புரிய வைக்க புராணச் சான்றுகள் அல்லது மேற்கோள்களைத் தெரியப்படுத்த ப்ரார்த்திக்கிறேன்.
13 புராணங்களில் திரு வேங்கடமலை மாஹாத்மியம் சொல்லப்பட்டு உள்ளது. (ஒன்றல்ல, இரண்டல்ல) ஆழ்வார் ஆசார்யர்கள், பல மகான்கள், பல ஶ்லோகங்கள், பல கீர்த்தனங்கள் என ஆயிரக் கணக்கில் சான்றுகள் உள்ளன. ஜைன மதம் திருமலையில் இருந்ததற்கு சான்று ஒன்றும் கிடையாது. அப்படிக் கூறுவது வெற்று வாதம்.
அடியேனின் மாமியார் இதுவரை புரட்டாசி மாவிளக்கு ஏற்றியதில்லை ஆனால் எங்கள் பெரிய மாமனார் அகத்தில் மாவிளக்கு ஏற்றும் வழக்கமுண்டு. எங்கள் மாமனார் தற்போது இல்லை. நாட்டுப்பெண்கள் நால்வரும் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் இருக்கின்றோம்.நாங்கள் புதியதாக மாவிளக்கு ஏற்ற ஆரம்பிக்கலாமா?
பெருமாளுக்கு புரட்டாசி மாதம் புதியதாக மாவிளக்கு ஏற்ற ஆரம்பிக்கலாம்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் காசி மற்றும் கேதாரிநாத் போகலாமா?
காசி முக்திக்ஷேத்ரங்களில் ஒன்று. அங்கு பிந்துமாதவப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அங்கே கங்கையில் தீர்த்தமாடலாம். மேலும் அங்கே ஆதிகேசவப் பெருமாளும் எழுந்தருளியிருக்கிறார். மணிகர்ணிகா காட்-இல் எம்பெருமாள் கோயில் ஒன்று இருக்கிறது. அங்கும் சென்று எம்பெருமானைச் சேவித்துவிட்டு வரலாம். ஆகையால் காசி போவதில் தவறொன்றுமில்லை. கேதாரிநாத்தில் சிவன் கோவில் மட்டும்தான் உள்ளது ஆகையால் அங்குச் செல்லவேண்டிய அவசியமில்லை.
சாயம் சந்த்யாவந்தனம் எந்த்த திசையை நோக்கிச் செய்ய வேண்டும்? முழுவதுமே வடக்கு முகமாகச் செய்ய வேண்டுமா அல்லது அதில் அர்க்யப்ரதானம் மட்டும் மேற்கு முகமாகச் செய்ய வேண்டுமா?
சாயம் சந்த்யாவந்தனத்தில் அர்க்யம் ஜபம் உபஸ்தானம் ஆகியவை மேற்கு நோக்கியும்; ஆசமனம் முதலியவை கிழக்கு/வடக்கு நோக்கிச் செய்யவேண்டும்.
அடியேன் லௌகீகத்தில் Biotechnology ஆராய்ச்சியில் மாணவனாக பணிபுரிகிறேன். அதனால் இக்கேள்வி. நாம் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவும் ஆசாரம் வழிவகுக்கிறது அல்லவா? ஆனால் பசு சாணத்தில் நிறைய கிருமிகள் இருக்கிற பட்சத்தில் நாம் ஏன் அதை சுத்தி செய்ய பயன்படுத்துகிறோம். என்றுமே நம் ஶாஸ்திரங்கள் மீது அடியேனுக்கு முழு நம்பிக்கை உண்டு. இருப்பினும் அறிவியல் கண்ணோட்டத்தில் காண்பதால் இந்தச் சந்தேகம். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
பசுஞ்சாணத்தில் கிருமி இருந்தால் அது அசுத்தம். மூன்று நாட்களுக்கு மேல் சுத்தம் ஆகாது என்று ஶாஸ்திரம்.
பழைய காலத்து மண்தரைக்கு பூச்சி வராமல் இருக்க சாணி உபயோகப் பட்டது. தரையைச் சுத்தம் செய்ய, சில பாத்திரங்களைச் சுத்தம் செய்ய மட்டுமே இது பயன்படும். வேறு விதத்தில் பயன் படுத்தக்கூடாது. கை, கால் அல்லது பண்டங்கள் சுத்தம் செய்யவோ சாணி கூடாது. அதனால் அதன் மூலம் கிருமி அணுக வாய்ப்பே இல்லை.
மேலும், அகத்தில் தரையைச் சாணியால் சுத்தம் செய்தபின், நல்ல ஜலம் தெளித்து, துணியால் நன்கு துடைக்க வேண்டும். சாணத்தின் நாற்றம் அடையாளம் என எதுவும் இருக்கக் கூடாது. அப்போதுதான் ஶாஸ்த்ரப்படி அது சுத்தமாகும்.
அகத்தில் இருக்கும் புருஷாளுக்கு சைனஸ் தொந்தரவு இருப்பதால் தினமும் தலைக்குத் தீர்த்தமாட முடியவில்லை. அந்த நாட்களில் அவர்கள் பெருமாளுக்குத் திருவாராதனம் பண்ணலாமா?
தலைக்குத் தீர்த்தமாட முடியாத சமயங்களில் பெருமாளைத் தொடாமல் அமுது செய்வித்தல் முதலான திருவாராதனம் மட்டும் செய்யலாம். மானசீகமாக ஆராதனம் செய்து அர்க்ய பாதியங்களெல்லாம் ஸமர்ப்பிக்கலாம். ஆனால் பெருமாளைத் தொட்டு திருமஞ்சனம் செய்வித்தல் முடியாது. மற்றவைகளை ஓரளவு ஆசாரமாக இருந்து செய்ய முடிந்தால் செய்யலாம்.
நம் ஸம்ப்ரதாயப்படி அகத்தில் செல்லப்ராணிகள் வளர்க்கலாமா? அவை உள்ளே வரலாமா?
இதற்கு ஸம்ப்ரதாயம் என்று கிடையாது. நாய் முதலான ப்ராணிகள் நம் மேல் பட்டால் தீட்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் அவற்றை வளர்க்கக்கூடாது. பூனை முதலானவை இருந்தால் பாதகமில்லை.
1. செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு, துவாதசி மற்றும் அமாவாஸை அன்று துளசி க்ரஹிக்கூடாது என்றுள்ளது, மன்வாதி யுகதினம் என்று ஒரு வார்த்தை உள்ளது அப்படியென்றால் என்ன என்று தெரிவிக்கவும் ஸ்வாமி.
2. ஒரு வருடத்தில் என்றைக்கெல்லாம் நாம் துளசியைச் செடியிலிருந்து க்ரஹிக்கக்கூடாது?
மன்வாதி, யுகாதி தினங்களில் துளசி க்ரஹிக்கக்கூடாது என்றிருக்கிறது. பஞ்சாங்கத்தில் மன்வாதி, யுகாதி தினங்கள் குறிப்பிட்டிருப்பார்கள். ஒவ்வொரு யுகம் ஆரம்பிக்கக்கூடிய நாள் அதற்கு யுகாதி என்று பெயர் அதாவது கலியுகம் ஆரம்பிக்கக்கூடிய நாள். அதே போல் யுகம் என்பது எப்படிக் காலத்தைக் குறிக்கிறதோ, அதேபோல் மன்வந்த்ரம் என்பதும் ஒரு காலமாகும். அந்த காலம் ஆரம்பிக்கக்கூடிய நாள் மன்வாதி என்று பெயர். அந்த நாட்களில் க்ரஹிக்கக்கூடாது என்று கணக்கு. அதை அவ்வளவு தீவிரமாகப் பார்ப்பதில்லை. அப்படித் தெரிந்தால் துளசி க்ரஹிக்காமல் இருப்பது நல்லது.
கேள்வியில் கூறியிருப்பது போல் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை முதலான கிழமைகளிலும், அமாவாஸை, மாதப்பிறப்பு போன்ற தர்ப்பண தினங்களிலும், துவாதசி அன்றைக்கெல்லாம் துளசி க்ரஹிக்கக்கூடாது.
அடியேனுக்கு போதுமான இடமில்லாததால், ஆசார்யன் பாதுகைகளை சாளக்கிராம மூர்த்தி எழுந்தருளியிருக்கும் பெட்டிக்கு முன் வைத்துதான் பாதுகாராதனம் செய்கிறேன். இப்படிச் செய்யலாமா?
ஆசார்யன் பாதுகைகளை சாளக்கிராம மூர்த்தியோடு சேர்க்கக்கூடாது. பெருமாள் எழுந்தருளியிருக்கும் இடம் (அந்த மேடை), பெருமாள் பாத்திரங்கள் அவையெல்லாம் ஆசார்யன் பாதுகைகளோடு சேரக்கூடாது. அதனால் பாதுகைகளைத் தனியாகத்தான் ஏளப்பண்ணவேண்டும்.
மேலும் விரிவான விளக்கத்திற்கு சுதர்சனம் சோபக்ருது புரட்டாசி இதழில் Q47PUR23002 கேள்வியின் விடையை காணவும்.
வேலைக்காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளிநாடு செல்லலாமா? பொதுவாக வெளிநாடு செல்வது கூடாது என்றிருக்கும் காரணம் என்ன? பாரத பூமி கர்மபூமி என்பதால் மட்டுமா அல்லது வேறு காரணங்களும் இருக்கிறதா? ஜம்பு த்வீபம் என்று நாம் சொல்வது போல் வெளிநாடுகளைக் குறிக்க என்ன பெயர் இருக்கிறது?
பொதுவாக ஶாஸ்த்ரபடி பாரதபூமி கர்ம பூமி என்றும் வெளிநாடு போகக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறபடியால் அதை பெரியோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கர்ம் விபாகா என்ற ஶாஸ்த்ர க்ரந்தத்தில் நாம் செய்யும் அபசாரங்களுக்கு எந்த மாதிரி ரோகம் வரும் என்ற குறிப்புள்ளது என்று கேள்விப்பட்டுள்ளேன். அதில் ஒன்று எம்பெருமானும் சிவனும் ஒன்று என்று நினைத்தால் உதர சம்பந்தமான ரோகம் வரும் என்று இருப்பதாக சொல்கிறார்கள். இதை ஸ்ரீவைஷ்ணவர்கள் எப்படிப் புரிந்துகொள்வது? நம் பெரியவர்களில் இவ்வார்த்தைக்கு என்ன சமாதானம் சொல்லியிருக்கிறார்கள்?
நாம் எல்லா க்ரந்தங்களையும் பார்க்கவேண்டிய அவசியமில்லை. நம் பூர்வாசார்யர்கள் எந்த க்ரந்தங்களை ப்ரமாணமாகச் சொல்லியிருக்கிறார்களோ அதைப் பார்க்கவேண்டும். மனுஸ்ம்ருதி போன்ற பொதுவான, உயர்ந்ததான க்ரந்தங்களைத்தான் பார்க்கவேண்டும். மற்றவையெல்லாம் சிவ பக்தர்கள், சைவர்களுக்காகச் சொன்னவை. அதை நாம் பார்க்கவேண்டிய அவசியமில்லை.
மேலும், எம்பெருமானையும் சிவனையும் ஒன்றாக நினைத்தல் கூடாது என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். நாமும் அவ்வாறு நினைக்கவில்லையே. எம்பெருமான் மேம்பட்டவன். ஒன்றாக நினைப்பது தவறு என்ற விஷயம் சரிதான். யார் பெரியவர் என்பதற்கு ஸ்ரீமத் இராமாயணம், மஹாபாரதம், மனுஸ்ம்ருதி, யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி போன்றவைகளை அருளிய மஹாமஹா மஹரிஷிகளின் க்ரந்தங்களைத்தான் ப்ரமாணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மற்றைவையெல்லாம் அந்தந்த பக்தர்களுக்காகச் சொன்னவை. அவை பொதுவாகவோ, நமக்காகவோ சொன்னவையல்ல.
துலா ஸ்நானம் எப்போது செய்யவேண்டும்? சந்தியாவந்தனம் செய்யும் முன் பண்ணும் ப்ராத ஸ்நானம் போதா? அல்லது மாத்யாஹ்நிக ஸ்நானம் முன்னரா? அல்லது இரண்டுவேளையில் எப்போது வேண்டுமானாலும் செய்யலாமா?
துலா ஸ்நானம் ப்ராத ஸ்நானம் பண்ணும்போதே சந்த்யாவந்தனம் செய்வதற்கு முன்னரே சேர்த்து செய்துவிடலாம். இரண்டு வேளையும் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை.
மாத்யாஹ்நிக ஸ்நானத்திற்கு முன்னர் செய்யலாம், ஆனால் அதற்கு முன்னர் சாப்பிடாமல் இருத்தல் வேண்டும். மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்பவராக இருந்தால் அதற்கு முன்னர் துலா ஸ்நானம் செய்யலாம்.
எனது மாமனார் சமீபத்தில் ஆசார்யன் திருவடி அடைந்தார். எனது கணவர் அவர்களுக்கு ஒரே புத்திரன் ஆவார், நாங்கள் ஒரு வருடத்திற்கு கோவில்களுக்கோ, திவ்ய தேசத்திற்கோ, மலைமேல் இருக்கும் க்ஷேத்ரங்களுக்கோ போகலாமா?
அவரவர் சொந்த ஊரில் உள்ள கோவில்களுக்குச் செல்லலாம். திவய் தேச உற்சவத்தில் கலந்து கொள்ளலாம். தீர்த்தயாத்திரையாக வடக்கே திவ்ய தேசத்திற்கெல்லாம் போகக்கூடாது. மலைமேல் இருக்கும் க்ஷேத்ரங்களுக்குப் போகக்கூடாது.
தர்ப்பணம் காவேரியில் செய்துவிட்டு வந்த பிறகு பெருமாள் திருவாரதனம் செய்யலாமா? பெருமாள் ஆராதனதிற்குப் பிறகுதான் பித்ரு தர்ப்பணம் என்று நியதியா? விளக்கவும்.
பெருமாள் திருவாராதனத்திற்குப் பின் பித்ரு தர்ப்பணம் செய்வது நல்லது. அதேசமயம் காவிரியில் தீர்த்தமாடி பித்ரு தர்ப்பணம் செய்துவிட்டு, அகத்திற்கு வந்து பெருமாள் திருவாராதனம் செய்வது என்பதும் சில பேருடைய ஸம்ப்ரதாயத்தில் இருக்கிறது.
நாங்கள் Gated Communityல் இருக்கின்றோம். அடியேனுக்கு மட்டும் ப்ரஸமர்ப்பணம் ஆகியிருக்கிறது. அடியேனின் பார்யாளுக்கு நவராத்திரி சமயம் ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லாதவர்கள் கொடுக்கும் வெற்றிலை பாக்கு குங்குமம் தேங்காய் பழம் போன்றவற்றை நாங்கள் உபயோகிக்கலாமா? அது தேவதாந்தர சம்பந்தம் ஏற்படுத்துமா?
தேவதாந்தர சம்பந்தம் இருப்பவர்கள் அகத்தில் கொடுத்த வெற்றிலை பாக்கு, குங்குமம், பழம் ஆகியவற்றை உபயோகிக்கக்கூடாது. உடைக்காத தேங்காயாக இருந்தால் அதை ஸமர்ப்பித்திருக்க முடியாது ஆகையால் அதை உபயோகிக்கலாம்.
அகத்து பெருமாளுக்கோ கோவிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கோ கண்டருளப்பண்ணிய தேங்காயைத் தளிகைக்கு உபயோகிக்கலாமா? அந்தத் தளிகையை எம்பெருமானுக்கு அமுது செய்விக்கலாமா?
பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணிய தேங்காயை, தளிகைக்கு உபயோகிக்கலாம். அந்தத் தளிகையை பெருமாளுக்கு அமுது செய்விக்கலாம் என்பதாக சிலர் பண்ணுவதுண்டு. பெரியவர்கள் பண்ணுவதுண்டு.
அதேசமயம் அந்தத் தேங்காயைத் துருவி பெருமாளுக்கு அமுது செய்வித்து நாம் சாப்பிட்டுவிட்டோமேயானால், அதன் மீதி தேங்காயை மறுநாள் உபயோகித்தால் அந்தத் தளிகையை அமுது செய்விக்கக்கூடாது.
குறிப்புகள்:
பொதுவாக தேங்காய் சேர்க்காமல் ஒன்று சேர்த்து ஒன்று எனத் தனித்தனியாக எடுத்துவைத்து விடுவார்கள். தேங்காய் சேர்க்காமல் பெருமாளுக்கு அமுது செய்வித்த பிறகு இரண்டையும் ஒன்று சேர்த்துவிடுவார்கள். இது ஒரு ஸுக்ஷ்மம்.
“அத2 புருஷோ ஹ வை நாராயணோ” என்று ஆரம்பிக்கும் நாராயணோபநிஷத் ஒரு தனி ப்ரஶ்னமாக கருதப்படுகிறதா இல்லை வேதத்தின் ஒரு ப்ரஶ்னத்தினுடைய ஒரு பாகமாக கருதப்படுகிறதா?
நாராயண உபநிஷத் என்று தனியாக இருக்கிறது. அதிலே ஒரு அனுவாகமாக ஒரு பகுதியாக “அத2 புருஷோ ஹ வை நாராயணோ” என்பதாக இருக்கிறது. நாராயண உபநிஷத் என்பது மிகவும் சிறியது. மற்ற உபநிடதுகள் மாதிரி ப்ரஶ்னங்கள் எல்லாம் இல்லை. மொத்தம் இருப்பதே 4/5 கண்டங்கள்தான் ஆகையால் இந்த ப்ரஶ்னம் அதன் பாகம் என்று வராது அதில் ஒரு கண்டம் “அத2 புருஷோ ஹ வை நாராயணோ” என்று ஆரம்பிக்கிறது.
ப்ராயஶ்சித்த ப்ரபத்தியும் மோக்ஷப்ரபத்தி போல் ஆசார்யனிடம் பண்ணிக்கொள்ள வேண்டுமா அல்லது நம் அகத்தில் பெருமாள் சந்நிதியில் பண்ணிக் கொள்ளலாமா ? அப்படிப் பண்ணிக் கொள்ளலாம் என்றால், நம் மனத்தாலும், நினைவாலும் ஏற்படும் எண்ணிலடங்கா பகவத மற்றும் பாகவத அபசாரங்களுக்கு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி எப்படிப் பண்ண வேண்டும் என்பதை விளக்க ப்ரார்த்திக்கின்றேன். மேலும் வார்த்தைகளாலும் மற்றும் செயல்களாலும் ஏற்படும் பாகவத அபசாரங்களுக்கு பாதிக்கப்பட்ட பாகவதரிடம் க்ஷமாபணம் கேட்டு ப்ராயஶ்சித்தம் செய்யலாம் என்று நான் புரிந்து கொண்டிருப்பது சரியாய் என்றும் விளக்க வேண்டுகிறேன்?
ப்ராயஶ்சித்த ப்ரபத்தியும் மோக்ஷ ப்ரபத்தி போல் ஆசார்யனிடம் சென்று செய்து கொள்வது மிகவும் உசிதம். பொதுவாகவே ப்ரபத்தி செய்வதற்கு நான்கு விதங்கள் உண்டு. என்று ஆசார்யார்கள் எல்லாம் ரஹஸ்ய க்ரந்தங்களில் எடுத்துரைத்துள்ளார்கள்.
ஆசார்யநிஷ்டை, உக்திநிஷ்டை, ஸ்வநிஷ்டை, பாகவதநிஷ்டை என்றெல்லாம் இருக்கிறது. ஸ்வநிஷ்டை என்கின்ற ரீதியில், தானே செய்துகொள்வது என்று இருக்கின்றது. ஆனால் அது இப்பொழுது வழக்கத்தில் இருக்கிற மாதிரி தெரியவில்லை. காரணம் இது ஒரு முக்கியமான காரியம் இந்தக் காரியத்திலே எந்த ஒரு குறைபாடும் ஏற்படக்கூடாது, அதனால் ஆசார்யன் ஆஶ்ரயித்து செய்தோமானால் கவலையில்லாமல் அந்தக் காரியம் நன்கு பலித்துவிடும் என்கின்ற நிஶ்சிந்தையுடன் நாம் இருக்கலாம். ஆனால் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்துகொள்ள வேண்டும் என்று தோன்றினால் ஆசார்யனிடத்தில் விண்ணப்பிக்கலாம். அவர் செய்து வைப்பார். அபசாரப்பட்ட பாகவதரிடத்தில் போய் அவசியம் க்ஷமாபணம் பண்ணிக் கொள்வது என்பது செய்ய வேண்டிய காரியம். அந்தத் தவறை நாம் உணர்ந்து விட்டோம், பாகவத அபசாரம் ஆகிவிட்டது என்று நமக்குத் தெரிந்து விட்டது என்றால் முதல் காரியமாக அவரிடத்தில் போய் சொல்லி அபராத க்ஷமாபணம் அவசியம் செய்துகொள்ள வேண்டும்.
நாம் சுலபமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக வேதங்கள் வியாசரால் பிரிக்கப்பட்டிருந்தால், உபாகர்மாவின் வெவ்வேறு தேதிகள் எப்போது தோன்றின? ஒவ்வொரு வேதத்திற்கும் அவை ஏன் வேறுபடுகின்றன? உத்ஸர்ஜனம் அனைவருக்கும் பொதுவான தேதியா இல்லை நாட்கள் வேறுபட்டுள்ளதா?
இக்கேள்வி முழுவதாக புரியவில்லை. அதாவது ஏன் வேறுபடுகிறது என்ற கேள்வியின் அபிப்ராயம் தெளிவாக இல்லை. தங்கள் சந்தேகத்தை விரிவாகப் பதிவிடவும்.
வேதங்கள் வ்யாசரால் பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த வேதத்திற்கு ஏற்றாற் போல் உபாகர்மாக்களை ஶ்ருதிகள் ஸ்மிருதிகள் விதித்து இருக்கிறது. ஒருவரால் அனைத்து வேதங்களையும் அத்யயனம் பண்ணமுடியாது. அதனால் மனிதர்களில் சௌகர்யத்திற்காக வ்யாசபகவான் பிரித்துக்கொடுத்திருக்கிறார். அந்தந்த வேதத்தின் ரிஷிகளைக் குறித்து சொலப்பட்ட அந்தந்தக் காலத்தில் உபாகர்மா பண்ணுகிறோம் என்பதுதான்.
பட்டுப் பூச்சியிலிருந்து பட்டு எடுக்கப்படும்பொழுது ஸ்த்ரீகள் பட்டுப் புடவை உடுத்திக் கொள்வது மடி என்று சாஸ்திரத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா?
பட்டுப் பூச்சியில் இருந்து பட்டு எடுப்பதினால் அதை உபயோகப் படுத்தலாமா கூடாதா என்பதில் சர்ச்சைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. அப்படி இருந்த பொழுதிலும் பெரியோர்கள் வழக்கத்தில் பார்த்ததில் அடியேன் இவ்விடத்தில் விண்ணப்பிக்கிறேன். பெரியோர்கள் க்ருஹங்களில் ஸ்த்ரீகள் பட்டுப் புடவை தரித்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. சில க்ருஹங்களில் பட்டுப் புடவை தரித்துக்கொண்டு வைதீக காரியங்கள் செய்வதும் வழக்கத்தில் இருக்கின்றது. அவரவர்கள் க்ருஹத்தில் எப்படி வழக்கமோ அப்படிச் செய்யலாம். சில க்ருஹங்களில் பட்டு மடிதான் என்று ஏற்றுக்கொண்டுள்ளதை இன்றைக்கும் காணலாம். சிலர் அதை ஒப்புக் கொள்வதில்லை. அவரவர் க்ருஹங்களில் பெரியோர்கள் எப்படிச் செய்கிறார்களோ அப்படிச் செய்வது உசிதம்.
ஆவணி அவிட்டத்தின் போது முதலில் உபாகர்மாவை முடித்து ஊர்த்வபுண்ட்ரம் தரித்த பின் பெருமாள் திருவாராதனம் பண்ண வேண்டுமா? முறையான செயல்முறையை விளக்க ப்ரார்த்திக்கின்றேன்?
பெருமாள் திருவாராதனம் வைஶ்வதேவம் வரை பண்ணிவிட்டுதான் உபாகர்மா பண்ணவேண்டும்.
ஸ்வாமி, அடியேனுடைய பெரிய மச்சினர் ( சின்ன மாமனார் புத்ரன் ) இரண்டு நாட்களுக்கு முன் ஆசார்யன் திருவடி அடைந்து விட்டார். அஶௌசத்தினால் ஆவணி அவிட்டம் பண்ணவில்லை. அஶௌசம் முடிந்த பின் ஆவணி அவிட்டம் பண்ண வேண்டுமா என்பதை தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.
ஆவணி அவிட்டம் அஶௌசத்தினால் பண்ணமுடியாமல் போய்விட்டால். அதை யஜுர்வேதமாக இருந்தால் அடுத்தமாதம் அதாவது புரட்டாசி பௌர்ணமியன்று பண்ணவேண்டும்.
முனித்ரய மற்றும் கோபாலார்ய தேசிக சம்ப்ரதாயத்தைப் பின்பற்றுபவர்கள் ஸ்ரீஜயந்திக்குப் பின் எப்பொழுது பாரணை பண்ண வேண்டும்.
ஸ்ரீஜயந்தி வ்ரதம் இருப்பவர்கள் மறுநாள் காலையில் பாரணை செய்யவேண்டும். ஆனால் அந்தப் பாரணை செய்யும் காலத்தில் அஷ்டமி, ரோஹிணி இந்த இரண்டில் ஏதாவது ஒன்று போயிருக்கவேண்டும். அஷ்டமி ரோஹிணி யோகம் என்று சொல்வார்கள். இரண்டும் சேர்ந்து இருந்தால் அது சேர்ந்து இருக்கும்வரை வ்ரதம் இருக்கவேண்டும். அதில் ஏதாவது ஒன்று பிரிந்தவுடன் பாரணை செய்யவேண்டும். இந்த வருடம் அப்படிதான் வந்தது மறுநாள் சாயங்காலம் 4 மணிவரை சேர்ந்து இருந்தது. அதற்குப் பிறகுதான் பாரணை என்பதாக ஆயிற்று.
ஒருவேளை அஷ்டமி ரோஹிணி யோகம் மறுநாள் இல்லை என்றால் காலையிலே வழக்கம்போல் 6நாழிகைக்குள் பாரணை பண்ணவேண்டும்.
ஏகாதசி/துவாதசி அல்லாத ஞாயிறு /திங்கள் /புதன்/வியாழக் கிழமைகளில் க்ஷௌரம் செய்துகொள்ளலாமா?
ஏகாதசி/துவாதசி அல்லாத ஞாயிறு /திங்கள் /புதன்/வியாழக் கிழமைகளில் க்ஷௌரம் செய்துகொள்ளலாம். ஆனால் மற்றவைகளும் இல்லாமல் இருக்கவேண்டும். அதாவது சதுர்தசி, அமாவாஸை, பௌர்ணமி போன்றவையும், நக்ஷத்ரங்களில் பரணி, க்ருத்திகை போன்றவையும், அவரவரின் ஜன்ம நக்ஷத்ரமும் இல்லாமல் இருக்கவேண்டும். இவை தவிர மற்ற நாட்களில் செய்துகொள்ளலாம்.
பிச்சம் ஏகாதசி (நாம் கொண்டாடும் ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி ) மற்றும் ஹரிவாசரம் (அதாவது துவாதசிக்கு முந்தைய நேரம்) இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எவ்வாறு தெரிந்து கொள்வது ?
பிச்சம் ஏகாதசி என்றால் மறுநாள் ஏகாதசி பிச்சம் இருந்தால் அன்றும் ஏகாதசி வ்ரதம் இருக்கவேண்டும்.
ஹரிவாசரம் என்பது துவாதசி திதியினுடைய முதல் கால் பாகத்திற்கு ஹரிவாசரம் என்று பெயர். துவாதசி எத்தனை நாழிகை இருக்கிறது என்று பார்க்கவேண்டும். உ.தா: துவாதசி 60 நாழிகை இருந்தால் முதல் 15 நாழிகைக்கு ஹரிவாசரம் என்று பெயர் அது ஏகாதசிக்குத் துல்யம் அப்போது ஆஹாரம் சாப்பிடக்கூடாது.
சில சமயம் துவாதசி முன்னாளே ஆரம்பித்தால் கூட மறுநாள் முதல் கால்பாகம் முடியும்வரை ஹரிவாசரம் என்றிருக்கும். அன்று துவாதசி எத்தனை நாழிகை இருக்கு என்பதைப் பொறுத்து இந்தக் கால்பாகம் மாறும். பஞ்சாங்கத்திலே எத்தனை நாழிகை ஹரிவாசரம் என்று குறிப்பிட்டிருப்பார்கள்.
வ்ருத்தி தீட்டும் இறப்பு தீட்டுபோல் காக்க வேண்டுமா அல்லது தளர்வுகளுடன் காக்கலாமா? அதாவது குழந்தை பிறந்த சந்தோஷத்தை கொண்டாட உறவினர் வீட்டுக்குச் செல்வது , இனிப்புப் பண்டங்கள் சாப்பிடுவது , குங்குமம் இட்டுக்கொள்வது, வெற்றிலை பாக்கு பெற்றுக்கொள்வது போன்றவைகளை செய்யலாமா?
வ்ருத்தி தீட்டின் பொழுது சில தளர்வுகள் வைத்துக் கொள்வது என்பது வழக்கத்தில் உள்ளது. பிறர் க்ருஹங்களுக்குப் போகவேண்டும் என்கின்ற அவசியமில்லை. ஏனென்றால் பொதுவாகத் தீட்டு என்பது எதற்காக வைத்திருந்தார்கள் என்றால் அந்தச் சமயத்தில் அந்தக் காரியத்தில் குறி இருக்கணும் என்பதற்காக. அதனால் பொதுவாக வெளியே செல்வது என்பது கிடையாது. ரொம்ப முக்கியமாக தவிர்க்க முடியாத ஒரு இடத்திற்குப் போக வேண்டும் என்றால் அந்த இடத்திற்குப் போய், தள்ளி நின்று இருந்து விட்டு வரலாம். குங்குமம் இட்டுக் கொள்ளலாம். இனிப்புப் பண்டங்கள் சாப்பிடுவதிலும் ஒரு தவறும் இல்லை. அதுவும் வழக்கத்தில் உள்ளது. வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்வதாகத் தெரியவில்லை.
யஜ்ஞம் ஸ்வாமி தனது வேத வைபவம் தொடரில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
1. புத்தகங்களைப் பார்க்காமல் வேதங்கள் பாராயணம் பண்ண வேண்டும்
2. வேதங்களைக் கற்று, தினமும் பாராயணம் செய்யாமல், அதற்குப் பதிலாக ஸ்தோத்ரபாடம் போன்ற வேறு ஏதாவது பாராயணம் செய்வது பாவம்.
இவற்றிற்கான ப்ரமாணங்களை மேற்கோடிட்டுக் காட்டுமாறு ப்ரார்த்திக்கின்றேன்.
1. அதாவது லிகிதபாடம் கூடாது என்று பாணினியின் சிக்ஷையில் இருக்கிறது. சிக்ஷா என்ற க்ரந்தமானது வேதங்களை எப்படிக் கற்றுக்கொள்ளவேண்டும் எப்படி உச்சாடனம் பண்ண்வேண்டும் என்பதற்காக வந்தது. அதில் லிகித பாடங்கள் கூடாது என்றிருப்பதால் ஓரளவு புத்தகங்களைப் பார்க்காமல் சொல்லவேண்டும். அதுமட்டுமல்ல தாரணம் என்ற ஒன்று இருக்கு. வேதாத்யயனம் போல் மனத்திற்குள் தரித்து வைத்தாலே அதுவே ஒரு தர்மம்.
குரு முகமாய் அத்யயனம் பண்ணாமல் இவனே புத்தகம் பார்த்து சொல்வது கூடாது என்பதுதான் முக்கியமான விஷயம். மனப்பாடம் முடியாவிட்டால் புத்தகம் பார்த்துச் சொல்லலாம் தவறில்லை ஆனால் முன்னமே குருமுகமாய் அத்யயனம் பண்ணியிருக்கவேண்டும்.
2. ஸ்வாமி தேஶிகன் ஸ்ரீ பாஞ்சராந்த்ர ரக்ஷையில் இதைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். ஸ்வாத்யாய காலத்தில் மற்றவையெல்லாம் சொல்வதைக் காட்டிலும் வேத ஜபம் செய்வது உசிதம் என்றுள்ளது. ஸ்வாத்யாய காலம் என்றால் ஆஹாரம் எல்லாம் முடித்துவிட்டு ஓய்வு எடுக்கும் காலமாகும். அந்தச் சமயத்தில் ஸ்ரீமத் இராமாயணம், ஸ்தோத்ர பாட பாராயணம், திவ்ய ப்ரபந்தம் முதலியவற்றை பண்ணிக் காலத்தைக் கழிக்கலாம். அந்தச் சமயத்தில் வேத பாராயணம் பண்ணுவது விசேஷம் என்று ஸ்வாமி தேஶிகன் ஸாதித்துள்ளார். மற்றவைகளைப் பாராயணம் செய்வது பாபம் என்ற அர்த்தத்தில் இல்லை. வேதத்தை உபேக்ஷை பண்ணிவிட்டு அப்படிப் பண்ணக்கூடாது என்ற அர்த்தமாகும். ஏனென்றால் வேதம் உயர்ந்தது ஆகவே அதைப் பாராயணம் செய்வது உசிதமாகும். மேலும் எந்த பாகத்தைப் பாராயணம் செய்வது என்பதையும் ஸ்வாமி தேஶிகனே ஸாதித்துள்ளார்.
அஹோபில மடத்தின் சிஷ்யர்கள் ஆசார்ய பாதுகா ஆராதனம் நித்யமும் பண்ண வேண்டுமா அல்லது துவாதசி அன்று மட்டுமே பண்ண வேண்டுமா? மடத்தில் துவாதசி அன்று மட்டும் பண்ணுவதால் இந்தக் கேள்வியை கேட்கிறேன்.
பொதுவாக அஹோபில மடத்து சிஷ்யர்கள் துவாதசியிலும் எந்த ஆசார்யனின் பாதுகையை அகத்தில் ஏளப்பண்ணி வைத்திருக்கிறார்களோ அவ்வாசார்யனின் திருநக்ஷத்ரத்திலும் பாதுகா தீர்த்தம் சேர்த்துக்கொள்வார்கள். அந்த மாதிரி பண்ணலாம். சிலர் தங்களுடைய திருநக்ஷத்ர தினத்திலும் பாதுகா தீர்த்தம் சேர்த்துக்கொள்வார்கள்.
அடியேன் அமாவாஸை தினத்தன்று தர்ப்பணம் பண்ணுபவர்கள் மட்டுமே இரவில் பலகாரம் எடுத்துக் கொள்ள வேண்டுமா? க்ருஹத்தில் தர்ப்பணம் செய்யாதவர்களும் இரவில் பலகாரம் எடுத்துக் கொள்ளலாமா அல்லது சாதத்துடன் சேர்த்து உணவு உட்கொள்ள வேண்டுமா?
அமாவாஸை அன்று எல்லோருமே இராத்திரி பலகாரம் பண்ணவேண்டும் என்று ஒரு வசனம் இருக்கிறது. அது தர்ப்பணத்திற்காக (தர்ப்பணா ப்ரயுக்தமில்லை) இல்லை.
தர்ப்பணம் பண்ணுபவர்கள் தர்ப்பணத்திற்காக பலகாரம் பண்ணுவது என்பது வேறு. எல்லோருமே அமாவாஸை திதியன்று இரவு போஜனம் செய்யக்கூடாது என்ற வசனத்தைப் பின்பற்றி இரவு சாதம் சேர்த்துக்கொள்வதில்லை.
சில சமயம் முதல் நாள் இராத்திரி காலத்திலே அமாவாஸை வந்துவிடும் மறுநாள் காலை மற்றும் சாயங்காலம் வரை அமாவாஸை இருக்கும் பக்ஷத்தில் தர்ப்பணம் மறுநாள்தான் வரும், அமாவாஸைகாரர்கள் (திதிப்படி பலகாரம் பண்ணுபவர்கள்) முதல் நாள் இராத்திரி சாப்பிடக்கூடாது என்று வரும்.
இதை இரண்டாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். தர்ப்பணத்திற்காக பலகாரம் என்பது தர்ப்பணக்காரர்கள் மட்டும்தான் பண்ணவேண்டும் மற்றவ்கள் பண்ணக்கூடாது. அமாவாஸைக்கான பலகாரம் சின்னக்குழந்தையில் ஆரம்பித்து எல்லோருமே கடைப்பிடிப்பது என்று சில வைதீகக்கார்கள் பின்பற்றி வருகின்றனர். ஆனால் இது திதி எப்போது என்பதை பொறுத்தது.
குறிப்புகள்:
பல க்ருஹங்களில் அமாவாஸை தினத்தன்று தர்ப்பணம் மட்டுமே இரவில் பலகாரம் பண்ண வேண்டும். க்ருஹத்தில் இருக்கும் மற்றவர்கள் எல்லோரும் அதாவது முக்கியமாக ஸ்த்ரீகள் குழந்தைகள் எல்லோரும் ஒரு பருக்கையாவது சாதம் சாப்பிட வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.
அதனால் இரண்டு விதமான கருத்துக்களும் உண்டு. அவரவர்கள் பெரியோர்கள் எந்த வழியை காண்பிக்கிறார்களோ அதே வழியில் செல்லலாம்.
அடியேனுடைய அப்பாவிற்கு பங்காளி(பெரியப்பா/சித்தப்பா வினுடைய பார்யாள்) தீட்டு. பத்து நாள் தீட்டு காக்கப் பட்டது. அவர் வரும் நாட்களில் பண்டிகைகள் கொண்டாடலாமா
இந்தக் கேள்வியில், வரும் நாட்களில் பண்டிகை கொண்டாடலாமா என்று கேட்கப்பட்டிருக்கிறது. ஒரு வருடத்திற்குள் இவ்வளவு நெருக்கமான உறவுக்காரர்கள் போனால் பண்டிகை கொண்டாடுவதா கொண்டாடுவது இல்லையா என்பதே ஒரு ஒரு க்ருஹத்தின் வழக்கத்தின் படி மாறுபட்டு இருக்கும்.
சில க்ருஹங்களில் வருஷம் முழுதும் சித்தி பெரியம்மா போனால் பண்டிகைகள் கொண்டாடாமல் இருப்பார்கள். சில க்ருஹங்களில் கொஞ்சம் குறைத்துக் கொண்டாடுவது என்று வைத்திருப்பார்கள். ஆனால் பண்டிகை அன்று மாசியம் வருகிறது என்றால் கொண்டாடாமல் இருப்பது உசிதம். ஒரு வருடம் முடிந்த பிறகு பண்டிகை அன்று அவருடைய ஶ்ராத்தம் வருகிறது என்றால் அன்று பண்டிகை கொண்டாடாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. உதாஹரணத்திற்கு ஜயந்தி அன்று ஒருவர் பரம பதித்து விட்டார் என்றால் அந்த ஸ்ரீ ஜயந்தி அன்று பண்ணும் கர்த்தா மட்டும்தான் பண்டிகை கொண்டாட முடியாது (ஒரு வருடத்திற்குப் பின் வரும் ஶ்ராத்தம்) மற்றபடி அவாளுடைய உறவினர்கள் எல்லோரும் பண்டிகை கொண்டாடுவது என்பது உண்டு.
பாதுகா ஆராதனம் தொடர்பான பின்வரும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்
a. நான் ஒவ்வொரு துவாதசியிலும் பாரணைக்கு முன் பாதுகா ஆராதனை செய்கிறேன். மற்றும் ஆசார்ய திருநக்ஷத்திரத்தில் நைவேத்யமாக பழங்கள் அல்லது கல்கண்டு மட்டுமே அம்ஸிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லி இருக்கிறார்கள். கேசரி, பாயசம் போன்ற சமைத்த உணவுகளை ஏன் பாதுகைகளுக்கு அம்ஸிக்கக் கூடாது என்று விளக்க ப்ரார்த்திக்கின்றேன்.
b.எனது ஆசார்யன் ப்ரக்ருதம் 46வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர். ஆனால் நான் 45வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கரின் பாதுகைகளை ஆராதனை செய்து கொண்டு வருகின்றேன். ப்ரக்ருதம் ஸ்ரீமத் அழகியசிங்கரின் பாதுகைகளையும் நான் பெற வேண்டுமா என்று பதில் அளிக்க ப்ரார்த்திக்கின்றேன் ?
c.பாதுகா ஆராதனைக்கு என்று தனியாக தட்டுகள், வட்டில்கள் மற்றும் விளக்குகளை பயன்படுத்துகின்றேன். இவற்றை நான் பெருமாள் திருவாராதனத்திற்கு உபயோகப்படுத்துவதில்லை.
[என்னிடம் ஒற்றைத் திருமணி மட்டுமே உள்ளது. அதை நான் பெருமாள் மற்றும் பாதுகா ஆராதனத்திற்கு உபயோகப்படுத்துகின்றேன். இது சரியா? இல்லை நான் பாதுகா ஆராதனத்திற்கு மற்றொரு திருமணி வாங்கி உபயோகப் படுத்த வேண்டுமா என்று தெளிவிக்க ப்ராத்திக்கின்றேன்.
d.ஏன் நாம் பாதுகா தீர்த்தத்தை முதலில் தெளித்துக்கொண்டு பின் ஸ்வீகரிக்கின்றோம்? மற்றும் பெருமாள் தீர்த்தத்தை முதலில் ஸ்வீகரித்து விட்டு பின் தலையில் தெளித்துக் கொள்கின்றோம்?
e.பாதுகா ஆராதனம் பெருமாள் சந்நிதியில் இருந்து கொஞ்சம் தள்ளி பண்ணும் படி எனக்கு சொல்லி இருக்கிறார்கள் . ஆனால் பெருமாளை விட ஒருவனுடைய ஆசார்யனே அவனுக்கு மேல் என்று சொல்லி இருக்கும்போது ஏன் பாதுகா ஆராதனம் பெருமாள் ஆராதனத்துடன் சேர்ந்து பண்ணப் படுவதில்லை . மேலும் பாதுகாவிற்கு ஏன் துளசி சேர்க்கக் கூடாது?
f. வரும் அக்டோபரில் அமெரிக்காவில் சூர்ய க்ரஹணம் ஏற்படுகிறது. சூர்ய கிரகணத்தின் போது பெருமாள் ஆராதனை (ஜபம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் தர்ப்பணம் ஆகியவற்றுடன்) செய்யப் போகின்றேன். பாதுகைகளுக்குத் திருமஞ்சனம் க்ரஹணத்தின் போது செய்ய வேண்டுமா அல்லது கிரகணத்திற்குப் பிறகு செய்ய வேண்டுமா என்பதை தெளிவிக்கப் ப்ரார்த்திக்கின்றேன் ?
a. பாதுகைக்கு அம்சை பண்ண பதார்தத்தை உள் பாத்திரங்களோடு சேர்க்கக்கூடாது. அதாவது தளிகை பண்ணும் பாத்திரங்கள் உட்பட பெருமாள் பாத்திரங்கள் என்று சில பாத்திரங்கள், நாம் உபயோகிக்கும் பாத்திரங்கள் என்று தனித்தனியாக வைத்திருப்போம். அதே போல் பாதுகா பாத்திரங்கள் தனி. அந்தப் பாதுகைக்கு உபயோகப்படுத்திய பாத்திரங்கள், அவற்றிற்கு ஸமர்ப்பித்த புஷ்பம், பழங்கள் என எதுவுமே பெருமாளுக்கு இருக்கும் பாத்திரங்களில் சேர்க்கக்கூடாது. ஆகையால் கேசரி முதலியவற்றை ஸமர்ப்பித்தால் அவைகளை உள்ளே சேர்க்க முடியாது என்பதாலும், பாதுகாராதனம் சுலபமாகப் பண்ணவேண்டியது என்பதாக ஸம்ப்ரதாயத்தில் வசனங்கள் இருக்கிறதாலும் இருப்பதைச் செய்தால் போதுமானதாகும். கேசரி முதலியவை பண்ணால்தான் விசேஷம் என்பதல்ல, நம் ஸம்ப்ரதாயத்தில் கூறியிருக்கும்படிச் செய்வதே விசேஷமாகும்.
b. முடியுமானால் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கரின் பாதுகைகளை ஏளப்பண்ணி ஆராதிக்கலாம். கட்டாயம் செய்தே ஆகவேண்டும் என்ற நிர்பந்தமில்லை. பக்தியோடு செய்தாலே விசேஷமாகும்.
c. பெருமாளுடைய திருமணியை பாதுகைக்கு உபயோகப்படுத்துவது சரியில்லை. பாதுகாராதனத்திற்குத் தனியாக ப்ரதிஷ்டை ஆகாத திருமணியாக இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பாதுகைக்குத் திருமணி ஸமர்ப்பிக்கவேண்டும் என்ற நிரபந்தம் கிடையாது. ஸமர்ப்பித்தால் விசேஷம்.
d. நாம் ஏன் பாதுகா தீர்த்தத்தை முதலில் தெளித்துக்கொண்டு பின் ஸ்வீகரிக்கின்றோம் மற்றும் பெருமாள் தீர்த்தத்தை முதலில் ஸ்வீகரித்து விட்டு பின் தலையில் தெளித்துக் கொள்கின்றோம் என்றால் இரண்டும் வெவ்வேறு அதன் வித்யாசத்தைக் காட்டுவதற்காக இப்படி ஒரு வழக்கம். இரண்டு தீர்த்தமும் விசேஷம் தான்.
e. பெருமாளை நமக்குச் சேர்த்து வைக்கிறபடியினாலே ஆசார்யன் உயர்ந்தவர் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் பெருமாளைக் காட்டிலும் உயர்ந்தவர் என்ற அர்த்தமில்லை ஏனென்றால் அவர் பெருமாளுக்கு தாசர், மேலும் எம்பெருமான்தான் ஸர்வ பேருக்கும் ஸ்வாமி, அவரைக் காட்டிலும் உயர்ந்தவர் யாரும் கிடையாது. ஆசார்யன் பெருமாளுக்கு ஸ்வாமி என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. நமக்கு அவர் பெருமாளையே சேர்த்து வைப்பதால் உயர்ந்தவர் என்று சொல்கிறோம். ஆசார்யன் எப்போதுமே எம்பெருமானுக்கு தாசர் ஆகையால் அவர் திருப்பாதுகைகளை பெருமாளுக்குக் கீழ்தான் ஏளப்பண்ணவேண்டும்.
துளசி என்பது பெருமாளுக்கு மட்டுமே உரியது அதை வேறு யாருக்கும் ஸமர்ப்பிக்கக்கூடாது. கால்களில் படக்கூடாது ஆகையால் பாதுகைக்கு ஸமர்ப்பிக்கக்கூடாது. அவர் நித்யஸூரி, பெருமாளுக்குச் சேவகம் பண்ணுபவர். நாம் அந்த நித்யஸூரிகளுக்கும் தாசர்களாவோம். ஆகையால் ஆசார்யனே ஆனாலும் அவருடைய திருவடிகளில் துளசி படக்கூடாது.
f. சூர்ய க்ரஹணத்தின்போது பாதுகைக்குத் திருமஞ்சனம் செய்யவேண்டிய அவசியமில்லை. க்ரஹணத்திற்குப் பிறகு செய்யலாம்.
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹருக்கு நீராஜனதீபம் தேங்காய் மூடியில் ஏற்றலாமா?
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹருக்கு நீராஜன தீபம் தேங்காய் மூடியில் சில ஊர்களில் சில ஸம்ப்ரதாயத்தில் வழக்கத்தில் உண்டு. தாங்கள் அவ்வழக்கத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தால் தாராளமாக ஏற்றாலாம்.
நாம் நித்யமும் தேவரிஷி, காண்டரிஷி தர்ப்பணம் செய்து வந்தால்(உபாகர்மா நாளில் செய்வது போல்) மாலையில் பலகாரம் மட்டுமே உட்கொள்ள வேண்டுமா?
நித்யம் செய்யும் தேவரிஷி, காண்டரிஷி தர்ப்பணத்திற்கு மாலையில் பலகாரம் உண்டா என்றால் கிடையாது. செய்யவேண்டிய அவசியமும் இல்லை. மேலும் உபாகர்மா நாளில் தேவரிஷி பித்ருரிஷி தர்ப்பணத்திற்காக பலகாரம் என்று சொல்லப்படவில்லை. அது காயத்ரி ஜபத்திற்குக்காக சொல்லப்பட்டவை. அதாவது முதல்நாள் சாப்பிடாமல் இருந்து அடுத்தநாள் காயத்ரிஜபம் செய்யவேண்டும் என்றிருக்கிறது. முழுபட்னியிருக்க முடியாதவர்களுக்கு முதல்நாள் பலகாரம் என்று சொல்லியிருக்கிறது.
மகாலக்ஷ்மி நமது தாயாராக இருக்கும் போது நாம் ஏன் நமது வடகலை சம்ப்ரதாயத்தில் வரலக்ஷ்மி நோன்பு கொண்டாடுவதில்லை?
மகாலக்ஷ்மித் தாயார் பற்றியதுதான் வரலக்ஷ்மி நோன்பு என்று இருக்கும் பொழுதும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அதை கொண்டாடுவதில்லை என்றால் வரலக்ஷ்மி விரதம் ஏற்பட்ட வரலாறாக இருக்கக்கூடும். ஒரு காம்யார்த்தமான விஷயம், அதாவது ஒரு பெண்மணி மகாலக்ஷ்மியை குறித்து ஐஶ்வர்யத்தை வேண்டி இந்த விரதத்தை இருந்தாள். அதைப் பின்பற்றி வழக்கம் ஏற்பட்டது என்று கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாகவே ஸ்ரீ வைஷ்ணவர்கள் காம்யார்த்தமாக எந்த ஒரு வழிபாட்டையும் செய்வதில்லை. எம்பெருமானுடைய வழிபாடாகவே அவருக்கே கைங்கரியம் செய்வதுதான் ஸ்ரீ வைஷ்ணவருடைய லக்ஷ்ணமாக இருக்கின்றது. இந்தப் பண்டிகை ஆரம்பித்த வரலாறு அப்படி இல்லாததனால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இதை கொண்டாடுவதில்லை என்று தோன்றுகிறது. இப்படி இருக்கின்ற பொழுதிலும் இந்த வரலக்ஷ்மி விரதம் பண்ணி சில க்ருஹங்களில் வெற்றிலை பாக்கிற்கு அழைப்பார்கள். அப்படி அழைத்தால் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்த்ரீகள் போய் தாம்பூலம் வாங்கிக் கொள்வது என்பதும் இருக்கின்றது.
ஶரணாகதி என்பது நாம் நம்மை அவனிடம் ஒப்படைத்துவிடுதல் என்பதும் அதன் பின் நம் பரத்தைப்பற்றி கவலைக்கொள்ளாமல் இருத்தல் வேண்டும் என்பது சென்ற சுதர்சனம் மூலம் புரிந்துகொண்டேன். ஒருவருக்கு செய்த ஶரணாகதி கவலைதரும்படி இருந்தால்
அவர் தன் ஆத்மாவைச் சரியாக ஸமர்ப்பிக்கவில்லை என்று அர்த்தமா? அவர் மீண்டும் அதை ஸமர்ப்பிக்கவேண்டுமா?
அல்லது நாம் நம் பரத்தைச் சரியாகச் ஸமர்ப்பிக்கவில்லை என்றாலும் நம் ஆசார்யன் தானே நமக்காக ஸமர்ப்பிக்கிறார். அவர் அதைச் சரியாகதானே செய்திருப்பார். அதனால் செய்த ஶரணாகதி குறையில்லாமல் தானே இருக்கும். இதை எப்படிப் புரிந்துகொள்வது?
ஶரணாகதி நடந்து முடிந்தபிறகு ஒருவருக்கு விஶ்வாஸத்தில் குறைவேற்பட்டால், அந்த மந்த விஶ்வாஸத்தை மஹாவிஶ்வாஸமாக எம்பெருமானே ஆக்கி அவனைக் கரைச்சேர்க்கிறான் என்று ஸ்வாமி தேஶிகன் சாதிக்கிறார்.
ஆசார்யன் நமக்காக ஶரணாகதி செய்திருக்கிறார் என்பதில் விஶ்வாஸம் இருத்தல்வேண்டும்.நாமாகச் செய்தால் சரியாக செய்திருக்க மாட்டோம் எனலாம், ஆனால் அது உக்தி நிஷ்டையோ, ஆசார்ய நிஷ்டையோ அது ஆசார்யன் மூலமாகத்தான் ஶரணாகதி நடக்கிறது என்கிறபோது நிச்சயமாக ஆசார்யன் நமக்காக விஶ்வாஸத்தோடு, சரியாகப் பண்ணியிருப்பார் என்று நம்பணும். ஆசார்யன் மேல் விஶ்வாஸம் குறையாமல் இருத்தல்வேண்டும் அவர்மேல் நம்பிக்கையிருந்தாலே ஶரணாகதி பலித்து மோக்ஷம் கிட்டும்.
.எம்பெருமானுக்கு நாம் ஏற்றும் தீபங்களில் சில சந்தேகங்கள்:
1. திருமலையப்பனுக்குப் புரட்டாசி சனிக்கிழமை மாவிளக்கு ஏற்றுகிறோம். இதை என் இஷ்ட எம்பெருமானான ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்றாலாமா? அல்லது ஸ்ரீரங்கநாதனுக்கு உரித்தான பங்குனி ரேவதி அன்றோ அல்லது வைகுண்ட ஏகாதசி அன்று ஏற்றலாமா? தாயாருக்கு ஆடி/தை வெள்ளிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றலாமா?
2. கும்ப/கட தீபத்தின் ஏற்றம் என்ன? விசேஷ நாட்களில் நாம் நித்யம் ஏற்றும் அகல் விளக்கிற்கு பதில் கும்பத்தில் நீர் நிரப்பி அதில் விளக்கு ஏற்றலாமா?
3. புருஷர்கள் அடுக்கு தீபத்தை எம்பெருமானுக்கு காட்டிய பின் தீபத்திரி கருகாமல் இருக்க அணைக்கலாமா?
4. வடதேசம் போல் நம் ஸம்ப்ரதாயத்தில் விசேஷ நாட்களில் அகண்ட தீபம் ஏற்றும் வழக்கம் உண்டா? உண்டு என்றால் எப்படி ஏற்றவேண்டும்?
திருமலையப்பனுக்கு புரட்டாசி சனிக்கிழமை மாவிளக்கேற்றுவது, ஸம்ப்ரதாயத்தில் இருக்கிறது விசேஷமாக பலபேர் செய்துகொண்டிருக்கிறார்கள். அதை ரங்கநாதனுக்கு ஏற்றாலாமா என்றால் அப்படி ஒரு வழக்கம் இருந்தால் செய்யலாம். அப்படியிருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. திருவேங்கடமுடையானுக்கு ஸம்ப்ரதாயத்தில் பண்ணிக்கொண்டிருக்கிறோம். ஸம்ப்ரதாயத்தில் இல்லாததைப் புதிதாகப் பண்ணவேண்டுமா? ஆரம்பிக்க அவசியமா என்றும் அந்த ரீதியில்தான் பக்தியை வெளிப்படுத்தணுமா என்றெல்லாம் இருக்கிறது.
இவையெல்லாம் அந்தந்த குலத்தில், அந்தந்த க்ருஹத்தில் பல வழக்கங்களெல்லாம் உள்ளது. ஆகையால் உங்க அகத்தில் இதுபோன்று வைகுண்டயேகாதசி தினங்களில், ரங்கநாதனுக்கென்று விளக்கேற்றும் வழக்கமிருந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் புதிதாக ஆரம்பிக்கவேண்டாம். அவரவர் வழக்கத்தில் இருப்பதைச் செய்தால் போதும்.
பலவிதமான தீபங்களில் கடதீபம் என்று ஒன்றிருக்கிறது. கடத்தில் தீபம் ஏற்றி அதைப் பெருமாளுக்கு கட ஆரத்தியாக ஸமர்பிப்பது. கோயில்களில் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகமத்தில் சொல்லியிருக்கிறபடியால் அந்த கடதீபம் விசேஷம். கடம் என்பதும் தீபம் என்பதும் மங்களகரமான ஒன்று இரண்டும் சேரும்போது மிகவும் மங்களகரமாக இருக்கும் என்பதுதான் தாத்பர்யம்.
விசேஷ நாட்களில் நாம் நித்யம் ஏற்றும் அகல் விளக்கிற்குப் பதில் கும்பத்தில் நீர் நிரப்பி அதில் விளக்கு ஏற்றவேண்டும் என்ற அவசியமில்லை. நம் வழக்கம் என்ன இருக்கிறதோ அதைச் செய்தால் போதுமானதாகும். புதிதாக எதையும் செய்யவேண்டியதில்லை.
பொதுவாகத் தீபத்திரியை அணைத்தல் கூடாது. ஆனால் அடுக்குதீபத்தில் முழுவதும் கருப்பாகும் ஒரு கஷ்டமிருக்கிறது. பொதுவாக அடுக்குதீபம் ஏற்றி பெருமாளுக்கு ஸமர்ப்பித்தவுடன் தீபத்தை வெளியே எடுத்துக்கொண்டு போய் அணைக்கிறார்கள் ஏனென்றால் பெருமாளுக்கு நேரே மற்றும் நாலுபேருக்கு முன்னர் தீபத்தை அணைக்கக்கூடாது. அதைப் பக்குவமாகச் செய்தல்வேண்டும்.
அகண்டதீபம் என்பது இப்போதும் பல கோயில்களில் இருக்கிறது. கண்டம் என்றால் விட்டுபோதல்/அணைதல் என்று அர்த்தம். விட்டுப்போகாமல் எப்போதும் எரிந்துகொண்டிருத்தல் என்பது அகண்டதீபமாகும். சில க்ருஹங்களில் கூட அகண்டதீபம் வைத்துக்கொண்டிருப்பார்கள். அது விசேஷம்தான் அதைச் செய்யலாம். அகண்ட தீபமென்றால் தமிழில் அணையாவிளக்கு என்றாகும். தனியாக பெரியவிளக்கு என்றெல்லாம் இல்லை. எப்போதும் ஏற்றும் விளக்கு அணையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
கோயில்களில் கொடுக்கப்படும் பலிஹரணத்தைப் பலிக்குப் பின் கோயிலை பராமரிக்கும் ஸ்த்ரீகள் சுத்தம் செய்யலாமா?
கோயில்களில் கொடுக்கப்படும் பலிஹரணத்தைப் பலிக்குப் பின் கோயிலை பராமரிக்கும் ஸ்த்ரீகள் சுத்தம் செய்யலாம்.
எங்கள் பந்துக்களில் ஒருவர் அவர் நடைபயிற்சி செய்யும்போது காயாத்ரி ஜபம் செய்துகொண்டு நடக்கிறார். இது சரியா?
நடைபயிற்சி செய்யும்போது காயாத்ரி ஜபம் செய்வது சரியில்லை. அப்படிச் செய்தல் கூடாது.
கோயில்களில் கோதா கோஷ்டியினர் கருவறைக்கு வெளியே ப்ரம்மோற்சவம் சமயம் உத்ஸவ எம்பெருமானுக்குப் புறப்பாடு ஆகும்போது ஆரத்தி காட்டலாமா?
பொதுவாக அர்ச்கர்களே ஆரத்தி காட்டும்போது அவர்களிடமே கொடுட்து ஆரத்தி காட்டுவதுதான் நல்லவழக்கம். அவர்களிடம் கொடுத்து எடுப்பதே சிறந்தாகும்.
கயா ஶ்ராத்தம் செய்தபிறகு அக்ஷய வடத்தில் கொத்தவரங்காயை விட்ட பிறகு அந்தக் காயை மடத்திலோ ஆஸ்ரமத்திலோ வழங்கும் கதம்ப ப்ரசாரத்தில் கலந்திருக்கும் பக்ஷத்தில் அந்தப் பிரசாதத்தை ஸ்வீகரிக்கலாமா ? தெரியாமல் ஸ்வீகரித்து விட்டால் என்ன செய்வது?தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
கொத்தவரங்காயைப் புளியோடு சேர்க்கக்கூடாது என்றிருப்பதால் கதம்பத்தில் சேர்க்கமாட்டார்கள். ஆகையால் கேள்வியின் முதல் பகுதி ப்ரஸக்தியில்லை. பகவத் ப்ரசாதமாக இருந்து அதில் வேறு ஏதாவது விட்டகாய் வந்தால் அதை எடுத்துவைத்துவிட்டு சாப்பிடலாம். அங்கே அந்த வஸ்துகலந்ததைச் சாப்பிடாமல் கூட இருக்கலாம் அது அவரவர் மனதைப் பொருத்தது. தெரியாமல் சாப்பிட்டால் ப்ராயஶ்சித்தம் க்ருஷ்ணானுஸ்மரணமே ஆகும்.
இரண்டு வருடத்திற்கு முன்பு பரஸமர்ப்பணம் செய்துகொண்டேன். ஆனால் இன்றுவரை என்னால் தெரிந்தோ தெரியாமலோ நிஷித்தமான வஸ்துக்கள் உண்பது, சந்தியாவந்தனம் முதலிய நித்யகர்மாக்கள் செய்யாமல் இருத்தல் என்று பாபங்கள் செய்கிறேன். இதனால் மோக்ஷத்திற்குத் தடை ஏற்படுமா? ஏதேனும் ப்ராயஶ்சித்தம் இருக்கிறதா?
பரஸமர்ப்பணத்திற்குப் பிறகு நிஷித்தமான வஸ்து என்று தெரிந்தபின் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நியாயம். அதேமாதிரி சந்தியாவந்தனத்தைத் தெரியாமல் விடுவதென்பது இல்லை. தெரிந்தேதான் விடுகிறோம். இப்படிப்பட்ட தவறுகளைத் திருத்திக்கொள்ளவேண்டும், அவைகளை மீண்டும் செய்யாமல் இருத்தல்வேண்டும். செய்த தவறுக்கு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்துகொள்ளலாம். இவை மோக்ஷத்திற்குத் தடையாக இருக்காது.
நாம் தெரிந்தே செய்யும் பாபங்களுக்கு ப்ராயஶ்சித்தம் புன: ப்ரபதனம். ஒருவேளை ப்ராயஶ்சித்தம் செய்யாமல் போனால் பகவானே லகு சிக்ஷை (தண்டனை) கொடுத்து மோக்ஷம் தருவான்.
ஶரணாகதி கண்டிப்பாக பலன் தரும்.எந்தப் பலனுக்காகவும் ஶரணாகதி பண்ணலாம்.இப்படி இருக்க ஒரு லௌகீக பலனுக்காக ஒரு ஆகிஞ்சன்யனால் மஹா விஶ்வாஸத்தோடு செய்யப்பட்ட ஶரணாகதி பலிக்காமல் போவதற்கு அவரவர் கர்மாதான் காரணமா? தெளிவிக்க பிரார்த்திக்கிறேன்.
ஶரணாகதி கண்டிப்பாக பலன் தரும். ஆனால் ஒரு லௌகீக பலனுக்காக செய்து பலனில்லாமல் போயிற்று என்றால், செய்த அங்கங்களில் குறைவு இருந்திருக்கலாம். மேலும் பெருமாள் நமக்கு எப்போதும் ஹிதத்தைதான் செய்வான். நாம் எதோ ஒன்று எண்ணிக்கொண்டு செய்திருக்கலாம்.ஆனால் அது நமக்கு ஹிதமில்லை என்றால் அதை செய்யாமலே இருப்பான்.
ஆகையால் செய்த ஶரணாகதி பலிக்கவில்லை என்றால், அது நமக்கு ஹிதமில்லை என்பதால் பகவான் நமக்கு தரவில்லை என்று புரிந்துகொள்ளவேண்டும்.
ஒருவரின் சிறியதகப்பனார் (தந்தை வழி) பரமபதித்துவிட்டால் பண்டிகைகள் கொண்டாடுவது, கோலம் போடுவது முதலியவற்றை ஒருவருட காலம் தவிர்க்க வேண்டுமா?
பொதுவாக தீட்டுக்காலத்தில் போடுவதில்லை. சிலர் 40 நாட்களோ அல்லது முதல் மாஸ்யம் வரையோ அல்லது 6 மாத காலம் வரை கோலம்போடாமல் இருப்பது என்பதாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். பண்டிகைகள் பொருத்தவரை பெருமாளுக்குச் செய்யவேண்டிய சில கார்யங்கள் சில பண்டிகைகள் இருக்கின்றன. அவையெல்லாம் அவசியம் கொண்டாட வேண்டியது. உ.தா: ஸ்ரீஜயந்தி வந்தால் பெருமாள் திருவாராதனம் நிற்காது. பெருமாளுக்காக ஏதோ ஓரிரண்டு பக்ஷணங்கள் செய்து அம்சை பண்ணலாம். திருக்கார்த்திகையன்று பெருமாளுக்கு விளக்கேற்றுவது நிற்காது. மகரசங்க்ரமண தர்ப்பணம் பண்ணுபவர்கள் தர்ப்பணம் செய்துதான் ஆகவேண்டும். ஆகையால் பெரியளவில் கொண்டாடாமல் சிறியளவில் கொண்டாடலாம்.
அதேபோல் கோலம் போடுவதும் ஒருவருடம்வரை போடாமல் இருத்தல் என்பது அவரவர் மனதைப் பொருத்தது. சிலர் நல்லநாள் தீட்டு காலத்திற்குப் பிறகு பார்த்து ஆரம்பித்து விடுவார்கள். துக்கத்தை அனுசரிப்பதென்பது அந்தப் போன வ்யக்திக்கும் அவர்களுக்கும் உள்ள அந்யோந்யத்தைப் பொருத்தது.
பத்து என்றால் என்ன? எவையெல்லாம் பத்து கணக்கில் சேரும்.பக்ஷணங்கள், புளிக்காய்ச்சல் மற்றும் ஊறுகாய் பத்தில் சேருமா?
கேள்வியின் முதல் பகுதியின் பதிலை – ப்லவ வருடம் ஆடி சுதர்சனம் - Q13JUL21010 கேள்வியை கீழே கொடுத்துள்ள linkல் காணவும்.
https://sudarsanam.sampradayamanjari.org/ப்லவ-ஆடி-ஸ்த்ரீ-தர்மம்/#Q13JUL21010T
தைலபக்குவம் (எண்ணெயில் செய்யப்பட்ட பதார்த்தங்கள்), புளிக்காய்ச்சல் எல்லாம் பத்தை அதாவதுச் சாதத்தை தொட்டக்கையோடு தொடாமல் இருந்தால் அவையெல்லாம் பத்து கிடையாது. ஊறுகாயெல்லாம் பத்தில் சேராது, இருந்தாலும் உப்பு கலந்த பதார்த்தம் என்பதால் அதைத் தனியாகத்தான் எடுத்து வைப்பார்கள்.
கடவன் முடவன் முழுக்கு என்பதன் தாத்பர்யம் என்ன? இதையொட்டி ஏதேனும் கதை இருக்கிறதா?
ஐப்பசி துலாமாச காலத்தில் காவேரி ஸ்நானம் மிகவும் விசேஷம். இதில் கடைசி ஸ்நானம் என்பது ஒரு பெரிய விசேஷமில்லை இதற்குப் பின் அடுத்தவருடம்தான் துலா ஸ்நானம் வரும் என்பதால் கடைசி பக்ஷம் கடைசிநாளாவது பண்ணவேண்டும் என்பதுதான்.
யாரோ ஒரு முடவன் (காலால் நடக்க முடியாதவன்) ஸ்நானம் பண்ணவேண்டும் என்று வந்தபோது மாசக்கடைசியாயிற்று ஐப்பசி மாசம் முடிந்து கார்த்திகை மாதம் பிறந்தாயிற்று அவன் வரமுடியாமல் கஷ்டப்பட்டதாகவும், அப்படி கஷ்டப்பட்டு வந்து அடுத்த மாதம் பிறந்தாலும் அவனுக்காக துலா காவேரி ஸ்நானம் பலனைத் தந்ததாகவும் கதை சொல்கிறார். அதனால் கடைசிநாளானாலும் அடுத்தமாதத்தின் முதல்நாளானாலும் துலா ஸ்நான பலன் உண்டு என்பதுதான் இதன் தாத்பர்யம்.
ஒருவர் அகத்து மாஸ்யத்திலோ,ஶ்ராத்தத்திலோ நிமந்த்ரணம் இருப்பவர் அன்று காலை திருவாராதனத்திற்குப் பின் அவர்களுடைய அகத்திலோ, அருகிலுள்ள கோவிலிலோ பெருமாள் தீர்த்தம், மற்றும் பாதுகா தீர்த்தம் ஸ்வீகரிக்கலாமா?
நிமந்த்ரணம் இருப்பவர் அவர்கள் அகத்தில் திருவாராதனம் பண்ணி பெருமாள் தீர்த்தம் (நித்யபடி மூன்றுமுறை எடுத்துக்கொள்வார்கள்) அன்று ஒரே ஒருமுறை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அன்று ஸ்ரீபாத தீர்த்தம் ஸ்வீகரிக்கும் வழக்கமில்லை.
போஜ்யாசனத்தில் கண்டருளப்பண்ணுதலுக்கும் அம்சை பண்ணுவதற்கும் உள்ள வித்யாசம் என்ன? எப்படி இரண்டையும் செய்தல் வேண்டும் என்று விளக்கவும்.
கண்டருளப்பண்ணுவதும் அம்சைபண்ணுவதும் இரண்டும் ஒன்றுதான். எம்பெருமான் அமுதுசெய்வதாக நாம் நினைத்துக்கொண்டு அவனுக்கு அமுதுசெய்விக்க வேண்டும். ஒரு தாயார் எப்படி தன் குழந்தைக்கு ஊட்டி விடுவாளோ அதே போல் எம்பெருமானுக்கு நாம் ஊட்டிவிடும் பாவத்தில் அமுதுசெய்விக்கணும். அதை எம்பெருமான் கண்டு அருளப்பண்ணுகிறான் (அருள்கிறான்) ஆகையால் இரண்டும் ஒன்றே.
என் கணவர் சமீபத்தில் பரமபதித்து விட்டார்.அவரின் வருஷாப்திகத்தில் ஶ்ராத்தத்தில் என் நாத்தனார் கணவர் அதாவது என் கணவரை விடப் பெரியவர் ஆகாரம் ஸ்வீகரிக்கலாமா? இது போன்றே என் அண்ணா,மன்னி மற்றும் அத்திம்பேரும் பெரியவர்களே.அவர்களுக்கான விதி என்ன?
வருஷாப்தீக ஶ்ராத்தத்தில் நாத்தனார் கணவர் நிமந்த்ரணம் இருக்கலாம் தவறில்லை. ஆனால் பித்ரு சேஷம் போல் அதைச் சாப்பிடும் வழக்கமில்லை. அதேபோல்தான் அண்ணா, மன்னிக்கும் பித்ருசேஷம் சாப்பிடும் வழக்கம் கிடையாது
அடியேனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஓரு குழந்தைக்கு 7 வயது ஆகிறது. இன்னும் ஓரு குழந்தைக்கு 4 வயது ஆகிறது. என் இரு குழந்தைகளை சாளக்கிராமத்துக்கு பூஜை செய்ய அனுமதிக்கலாமா?”
சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு சாளக்கிராம பூஜை செய்வது சரியல்ல.
அமாவாஸை அன்று ஶ்ரார்த்தம் வந்தால், தர்ப்பணம் ஶ்ரார்த்தம் முடிந்த பிறகா அல்லது தர்ப்பணத்திற்குப் பிறகு ஶ்ரார்த்தமா?
அமாவாஸை அன்று ஶ்ரத்தம் வந்தால் ஶ்ராத்தத்திற்குப் பிறகு அமாவாஸை தர்ப்பணம் என்பதுதான் வழக்கம். இதுதான் ஶாஸ்த்ரமும்.
பரேஹனி தர்ப்பணம் –மறுநாள் காலை சூர்ய உதயத்திற்கு முன்பு செய்ய வேண்டுமா??பலர் ஶ்ரார்த்தம் முடிந்தவுடன் செய்கிறார்கள்…எது சரி??
பரேஹனி தர்ப்பணம் மறுநாள் சூர்ய உதயத்திற்கு பிறகு சந்தியாவந்தனம் செய்யதவுடனேயே செய்யவேண்டியது. இதுதான் பல பெரியோர்களின் வழக்கம்.
அம்மா அப்பா ஶ்ராத்தம் தவிர மற்றவர்களுக்கு ஶ்ராத்தம் பண்ணுவதாயிருந்தால், அந்தத் தர்ப்பணம் ஶ்ராத்தம் முடிந்தவுடனேயே ஶ்ராத்தாங்கமாகப் பண்ணுவதுதான் ஶாஸ்த்ரம். மாதா பிதா ஶ்ராத்தங்களுக்குத்தான் பரேஹனி தர்ப்பணம் இதர ஶ்ராத்தங்களுக்கு அன்றே பண்ணுவதுதான் ஶாஸ்த்ரம்.
சீமந்தோந்நயனம் என்பது முக்கியமான ஸம்ஸ்காரம் என்றால், அந்த ஸம்ஸ்காரத்தை ஏன் முதல் கர்பத்திற்கு மட்டும் செய்கிறார்கள்?
சீமந்தோந்நயனம் முக்கிய ஸம்ஸ்காரம்தான் ஆனால் இன்று அதை முதல் கர்ப்பத்திற்கு மட்டும் பண்ணுவது என்பதுதான் இப்போது வழக்கமாகவுள்ளது.
1. ஸ்வாமி, நான் பிறப்பால் சைவம் , தற்போது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றி வருகிறேன். நான் சமீபத்தில் எனது நகரத்தில் உள்ள ISCKON கோவிலிலிருந்து ஸ்ரீமத் பாகவதம் 1வது ஸ்கந்தத்தை வாங்கினேன். இதுபற்றி நான் சில இளம் ஸ்ரீவைஷ்ணவர்களிடம் கேட்டபொழுது , அவர்கள் இஸ்கான் பாகவதத்தில் தவறான மொழிபெயர்ப்புகளும், விளக்கங்களும் உள்ளன என்றும், ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அவர்களின் க்ரந்தங்களைப் படிக்கக் கூடாது என்றும் சொன்னார்கள்.மேலும், ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ISCKON புத்தகங்களை அவர்களும் வைஷ்ணவர்கள் என்பதால் படிக்க முடியுமா ? நான் தற்போது விதேசத்தில் வசிக்கிறேன், இங்கு ஸ்ரீ ராமானுஜ ஸம்ப்ரதாய படைப்புகள் பற்றிய புத்தகங்கள் பெற முடிவதில்லை. எனவே, அவர்களின் சித்தாந்தம் நமது வேதாந்தத்தில் இருந்து சற்று வேறு பட்டிருந்தாலும் அவர்களின் க்ரந்தங்களைப் படிப்பது தவறா என்பதை தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.
2. வடகலை திருமண் ஸ்ரீசூரணத்தை u வடிவு முத்திரையில் பதித்து வைத்துக் கொள்ளலாமா?
3.நான் தற்போது திருமண்ணை ஆரஞ்சு வர்ண ஸ்ரீசூர்ணத்துடன் தரித்துக் கொண்டிருக்கிறேன்.நான் அவற்றை தரித்துக் கொள்வது சரியா, அல்லது நான் மஞ்சள் அல்லது சிவப்பு நிற ஸ்ரீசூர்ணம் தரித்துக் கொள்ள வேண்டுமா?
4. திருமண் காப்பிற்கும் கோபிசந்தனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க ப்ரார்த்திக்கின்றேன்
5.சில ஸ்ரீவைஷ்ணவ உபன்யாசகர்கள் விஷ்ணுவின் புண்ய ஸ்தலங்களான ஸ்ரீரங்கம், மேல்கோட்டை போன்ற இடங்களிலிருந்து வரும் திருமண்ணைதான் தரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் என் திருமண் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. ஊர்த்வபுண்ட்ரத்தின் மூலம் தெரியாமல் தரித்துக் கொள்ள முடியுமா?அவை கிடைக்குமிடம்(மூலம்) வேறாக இருந்தால் தொடர்ந்து தரித்துக் கொள்ளலாமா அல்லது தவிர்க்க வேண்டுமா?
1. ISKCON ஸம்ப்ரதாயத்தைக்கூட பாகவத ஸம்ப்ரதாயம் என்று சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் பகவானைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்களின் நூல்களைப் படிப்பதினால் தவறு ஒன்றும் வந்து விடாது. அதே சமயம் நமது ஸம்ப்ரதாயத்தைப் பற்றி நன்றாக தெரிந்துகொண்டு அதைப் பின்பற்ற வேண்டும். அதனால் இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைச் சரியாக தெரிந்து கொண்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயம்,பகவத் ராமானுஜருடைய ஸம்ப்ரதாயத்தை நாம் பின்பற்ற வேண்டும்.
2. திருமண் ஸ்ரீசூரணத்தை U வடிவு முத்திரையில் பதித்து வைத்துக் கொள்ளக்கூடாது. நித்யமும் திருமண் இட்டுக்கொள்ளவேண்டும் என்று இருக்கிறது. பகவானின் திருநாமத்தைச் சொல்லி இடுவதால்தான் அதற்கு நாமம் என்று பெயர். எம்பெருமானின் திருநாமத்தைச் சொல்லி திருமண்ணைக் குழைத்து இடவேண்டும். முக்கியமாக அதில் மண் இருக்கவேண்டும் அதனால்தான் அதற்குத் திருமண் என்று பெயர். இவ்வாறு இட்டுக்கொண்டால்தான் அது நமக்கு ரக்ஷையாக இருக்கும் ஆகையால் திருமண்காப்பு என்று பெயர். இப்படியாக இட்டுக்கொள்ளுதல்தான் நலம் வேறு ரீதியில் பதித்துவைத்துக்கொண்டு இடுதல் கூடாது.
3. பொதுவாக மஞ்சள்தான் விசேஷம் என்பதாகச் சொல்லியிருக்கிறது. மஞ்சள் தூளிலிருந்துதான் தாயாரித்த ஸ்ரீசூர்ணம்தான் விசேஷம். ஒருவேளை மஞ்சள் கிடைக்கவில்லை என்றால், சிறு மஞ்சள்தூள் சேர்த்துவைத்து வேறு வர்ணத்துடன் கலந்து இட்டுக்கொள்ளலாம். ஆரஞ்சு போன்றவையெல்லாம் நவீன காலத்தில் வந்தது. ப்ராசீனத்தைப் பின்பற்றவேண்டுமானால் மஞ்சள் இடுவதுதான் சிறந்தது.
பல திருக்கோயில்களில் மஞ்சள்பொடி, மஞ்சள்காப்பு என்பவையெல்லாம் கிடைக்கும். அவற்றை சேகரித்துக்கொண்டு என்ன ஸ்ரீசூர்ணம் இருக்கிறதோ அத்துடன் சேர்த்து இட்டுக்கொள்ளலாம். இவ்வாறு சில மஹான்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன்
4. கோபிசந்தனம் என்பது ஸ்ரீக்ருஷ்ணருடைய திருமேனிச் சம்பந்தம்பட்ட ஒரு த்ரவ்யம் என்பதாகச் சொல்கிறார்கள். திருமண்காப்பை பற்றி மண் எடுத்து இட்டுக்கொள்ளவேண்டும் என்று ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமத்தில் சொல்லியிருக்கிறது. திருமண் கிடைக்காதபோது கோபி சந்தனம் இட்டுக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறது. திருமண் கிடைக்கின்றபோது கோபி சந்தனத்தைக் காட்டிலும் திருமண்காப்புதான் விசேஷம். ஏனென்றால் அது வெள்ளை நிறத்தில் இருக்கவேண்டுமென்பதும், மண் இருத்தல் வேண்டுமென்பதும் சொல்லியிருக்கு. அதுவே சம்ப்ரதாயமாகவும் இருப்பதினால் திருமண்காப்பே விசேஷமாகும்.
5. திவ்ய தேசத்திலோ அல்லது கங்காநதி முதலான இடங்களில் இருக்கின்ற திருமண்ணைதான் இடவேண்டும் என்று ஆகமங்களில் சொல்லியிருக்கு ஆகையால் அதைத்தான் தரிக்கவேண்டும். அயோத்யா, திருவஹீந்திரபுரம், புஷ்கரம், திருநாராயணபுரம் இவ்விடங்களில் திவ்யதேச திருமண் கிடைக்கின்றன. கடைகளில் இந்த க்ஷேத்ர திருமண் என்று கேட்டாலும் கொடுப்பார்கள். பொதுவிலே திருமண் என்று வெளியில் வைத்திருப்பார்கள் அவையல்லாது அயோத்யா அல்லது திருநாராயணபுரம் திருமண் என்று குறிப்பாக கேட்டால் தருவார்கள். அவையே விசேஷமானது.
.ப்ரஹ்மச்சாரிகள் ஆயுஷ்ய ஹோமம் (தங்களுக்கே), ஶ்ராத்தத்தில் அல்லது ஸமாஶ்ரயணத்திற்கான ஹோமம் செய்யலாமா?
எந்தெந்த ஹோமம் பண்ணலாம் என்று விரிவாக அடுத்த இதழில் பதிவிடுகிறோம்.
சாளக்கிராம திருமஞ்சனத்தில் தேன் சேர்கலாமா மதுபர்கம் அமுது செய்யலாமா?
சாளக்கிராம திருமஞ்சனத்தில் தேன் சேர்கலாம் மற்றும் மதுபர்கம் அமுது செய்யலாம்.
ப்ரபத்திக்குப் பின், ஒரு ப்ரபன்னன் திருடுவது, ஏமாற்றுவது, துரோகம் செய்வது, பொய் சொல்வது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபடும்போது, அதன் விளைவுகளால் அவருக்குப் பாதிப்பு ஏற்படுமா ? அவர் செய்து கொண்ட ஶரணாகதிக்குப் பலன் இருக்குமா?
அதன் விளைவுகளால் அவருக்கு கட்டாயம் பாதிப்பு ஏற்படும். ஶரணாகதி செய்து கொண்டவர்களாக, பெருமாளிடம் பக்தி உள்ளவர்களாக, பெருமாளுக்குக் கைங்கரியம் செய்பவர்களாக யாராக இருந்தாலும் சரி அவரவர்கள் செய்த தவற்றிற்குத் தண்டனையைக் கட்டாயம் அனுபவித்தே ஆகவேண்டும். அதிலிருந்து யாரும் மீள முடியாது. தெரிந்து தவறு செய்தால் கட்டாயம் தண்டனை உண்டு. அவருக்கு பாதிப்பும் ஏற்படும்.
அவர் செய்து கொண்ட ஶரணாகதிக்குப் பலன் இருக்குமா என்று கேட்டால் இருக்கும். ஏனென்றால் பாபம் செய்தால் பாபத்திற்கு தண்டனை, நல்ல காரியங்கள் செய்யும் பொழுது அதற்குப் பலன் என்று எப்படி இருக்கின்றதோ, அதேபோல் அவர் மோக்ஷத்திற்காக ஶரணாகதி செய்து கொண்டிருந்தால் அப்பொழுது அவருக்கு மோக்ஷ பலன் கிடைக்கும்.
மோக்ஷ பலன்களுக்குத் தடையாக இந்தப் பாபங்கள் ஆகாது. ஏனென்றால் இந்தப் பாபங்களுடைய பலனை இங்கேயே அனுபவித்து விடுவோம். அதை நன்றாக அனுபவித்த பிறகே மோக்ஷம் கிடைக்கும்.
உடல் உறுப்பு தானம் பற்றி ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் கண்ணோட்டத்தைப் பற்றி தெளிவிக்க பிரார்த்திக்கின்றேன்.
உடல் உறுப்பு தானம் பற்றி ஶாஸ்திரத்தில் எதுவும் பெரிதாகச் சொல்லவில்லை. ஏனென்றால் அந்தக் காலத்தில் அது கிடையாது. இப்பொழுதுதான் இப்படி ஒரு விஷயம் வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தெரியாதானபடியினால் ஶாஸ்திரம் அதை ஆதரிக்கிறது என்று சொல்ல முடியாது. ஶாஸ்திரம் ஆதரிக்காத விஷயத்தை செய்வதற்கு பெரியோர்கள் தயங்குவார்கள். ஶாஸ்திரத்தில் சொல்லியிருந்தால்தான் செய்வார்கள். சொல்லாத விஷயத்தை ஏற்றுக் கொள்வதற்கு மகான்கள் தயங்குவார்கள். அந்த ரீதியில் வருகின்ற தயக்கம் நமக்கும் வேண்டும், இருக்க வேண்டியதும்தான். ஏனென்றால் பகவான் நமக்கு கொடுத்த உடல் உறுப்புகளை இன்னொருவருக்கு கொடுப்பதற்கு எந்த அளவிற்கு நமக்கு உரிமை இருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
கடைசியில் ஶரீரத்தைத் தானம் பண்ணும்போது அது ஒரு ஹோமம் போல் கணக்கு. அதற்கும் மந்திரங்களெல்லாம் உண்டு. மந்திரங்கள் சொல்லி அக்னியில் ஸமர்பிப்பதாகத்தான் கணக்கு. ஆகையால் அதற்கு எந்தக் குறைவுமில்லாமல் முழு த்ரவ்யமாக அதை ஸமர்பிப்பது நல்லது என்கிற ரீதியில் ஶாஸ்த்ரம் கூறியிருக்கிறது.
பெருமாள் திருவாராதனத்திற்குப் பூக்களைத் தேர்ந்தெடுக்க என்னென்ன நியமங்கள் உள்ளன. நறுமணம் மட்டுமே முக்கியம் என்றால் கனகாம்பர பூவிற்கு நறுமணம் உண்டு. அதனால் கனகாம்பரத்தை நாம் எம்பெருமானுக்குச் சாற்றலாமா?
பெருமாள் திருவாராதனத்திற்கு என்னென்ன பூக்கள் என்று நியமங்கள் இருக்கின்றது.
கனகாம்பரத்தைப் பெருமாளுக்குச் சாற்றலாமா என்றால் அதில் கோவில் பெருமாள் அகத்துப் பெருமாள் என்றெல்லாம் கணக்கு உண்டு. கனகாம்பர புஷ்பம் எல்லாம் கோவில் பெருமாளுக்குத் தாராளமாகச் சாற்றலாம். அகத்து பெருமாளுக்குக் கூடியவரை வாசனையுடன் கூடிய வெள்ளைப் புஷ்பங்கள் சாற்றினால் நல்லது என்று சொல்லி இருக்கிறார்கள். இதற்கான ஒரு PDFஐ விரைவில் பகிர்கிறோம்.
கோயிலில் பெருமாள் திருமஞ்சனத்தின் போது சீக்ஷாவல்லி, ஆனந்தவல்லி, பிருகுவல்லி மட்டும்தான் சேவிக்க வேண்டுமா? நாராயண வல்லியும் சேவிக்கலமா கூடாதா? விளக்கவும்.
கோயிலில் பெருமாள் திருமஞ்சனத்தின் போது சீக்ஷாவல்லி, ஆனந்தவல்லி, பிருகுவல்லி உபநிஷத் போல் அதற்கு அடுத்து நாராயண உபநிஷத்தில் இருக்கின்ற அம்பஸ்யபாரே என்று ஆரம்பித்து அதுவும் சொல்லலாம். நேரமின்மை காரணமாக சொல்ல மாட்டார்களே தவிர மற்றபடி நேரமிருந்தால் தாராளமாகச் சொல்லலாம்.
ஜப மந்திரங்களை பொதுவாக எத்தனை முறை ஜபிக்க வேண்டும். தீர்த்தங்கள் ஜபிக்கும் போது எத்தனை முறை சேவிக்கவெண்டும்.விளக்கவும்.
பொதுவாக 108 முறை. 108 முடியவில்லை என்றால் 28 இல்லையென்றால் பத்து தடவையாவது ஜபிக்க வேண்டும். 108க்கு மேல் 1008 வரை ஜபிக்கலாம். 147,156 என்று இஷ்டப்படி சொல்ல முடியாது. அதில் ஏதாவது கணக்கு வைத்துக் கொண்டு ஜபிக்கலாம்.
தீர்த்தங்கள் ஜபிக்கும் பொழுது எத்தனை முறை சேவிக்க வேண்டும் என்று அந்தந்த விதிகளில் இருக்கின்றது. சிலவற்றில் நான்கு தடவை சிலவற்றில் ஏழு தடவை என்று நாம் எதற்காக ஜபிக்கிறோமோ அதைப் பொறுத்து இருக்கின்றது. அதில் அவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்களோ, இந்த விதியில் எப்படி இருக்கிறதோ 108 தடவை என்றால் 108 தடவை அதன்படி ஜபிக்க வேண்டும்.
மாமனார் பரமபதித்த பின் முதல் ஒரு வருடம் மனைவியோ, நாட்டுப் பெண்ணோ எண்ணெய் தேய்த்து தீர்த்தமாடலாமா? மாமனாரின் மாஸிகம், மற்றும் ஶ்ராத்தத்தன்று சாயந்திரம் சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் கொடுப்பது சரியா? முறை உண்டா? கொடுக்கலாமா?
பொதுவாக பரமபதித்தவருடைய பார்யாள் எண்ணெய் தேய்த்து தீர்த்தமாடுவது வழக்கமில்லை. நாட்டுப் பெண்ணாக இருக்கிறவர் சுபஸ்வீகாரம் ஆனபிறகு எண்ணெய் தேய்த்து தீர்த்தமடலாம்.
பொதுவாகச் சுமங்கலி ஸ்த்ரீகளை குறித்து ஶ்ராத்தம் பண்ணும் பொழுதுதான் இந்த மாதிரி வெற்றிலைபாக்கு கொடுப்பார்கள் என்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மாமனார் பரமபதித்ததற்கு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை.
சிலர் மிகவும் வயதானவர்கள், ரொம்ப பெரியவா பரமபதித்து விட்டால் சுப மரணம் என்று சொல்லுவார்கள். அதாவது திருப்தியாக இருந்து வயதாகி அவர் பரமபதித்தது கூட சுபம் என்கின்ற ரீதியில் இருந்தால் அப்பொழுது இந்த மாதிரி தாம்பூலம் கொடுப்பார்களாக இருக்கும்.
நமது ஸம்ப்ரதாயத்தின்படி சுதர்சன ஹோமத்தில் பக்தர்கள் எந்த நாணயங்களைச் சேர்க்க வேண்டும்? (நாம் இப்போது ரூபாய் நாணயங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்)
சுதர்சன ஹோமத்தில் coins என்று சொல்லப்படும் 10, 20 ரூபாய் coins சேர்க்கலாம். Currency note என்பது ஒரு Pronote போல் (I Promise to pay என்பது போல்) அவைகள் நாணயமாக ஆகாது ஆகையால் coins ஐ சேர்க்கலாம் ரூபாய் நோட் உபயோகிப்பது இரண்டாம் பக்ஷம்தான்.
ஆசார்யன் திருவடியில் ப்ரபத்தி பண்ணிக் கொண்ட ஒரு கன்யா ஸ்திரீக்கும் மற்றும் ப்ரபத்தி பண்ணிக் கொண்ட ஒரு வைஷ்ணவ ஸ்த்ரீ ஒரு சைவ குடும்பத்தில் வாக்கப்பட்டாலும் அவளுக்கும் மோக்ஷம் கட்டாயம் கிட்டுமா என்பதை விளக்க பிரார்த்திக்கின்றேன்
ஆசார்யன் திருவடியில் ப்ரபத்தி பண்ணி கொண்ட கன்யா ஸ்த்ரீக்கு மோக்ஷம் உண்டா என்றால் உண்டு. ப்ரபத்தி என்பது சின்னக் குழந்தைக்குக்கூட பணணலாம்.
இப்படியாக ஶாஸ்திரம் தனித்தனியாகச் சொல்லாது. இது பண்ணினால்தான் கிடைக்கும் ஶரணாகதி பண்ணிக்கொண்டு என்ன பண்ணினாலும் மோக்ஷம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லாது.
ஶரணாகதி பண்ணிக்கொண்டவர்கள் அதற்கு ஏற்ற மாதிரி நடந்துகொள்ள வேண்டும். சைவ குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாலும்கூட, அவர் வைஷ்ணவ தர்மங்களைப் பின்பற்றி இருக்கலாம். அதாவது பரமைகாந்தியம், ஒரு வைஷ்ணவ ஸ்த்ரீயாக இருக்க முடிந்தால் நல்லது. அப்படி இருக்க முடியவில்லை, தேவதாந்திர சம்பந்தங்களை விட முடியவில்லை என்றால், கடைசியில் கூட திருந்துவதற்கான வாய்ப்பு கிடைத்தால் திருந்தி மாறலாம். அப்படியும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் பகவத் சங்கல்பம் என்னவோ அதைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
இவை அனைத்தையும் காட்டிலும் ஶரணாகதி செய்தவர்கள் மற்ற குடும்பங்களில் வாழ்க்கைப்படாமல் இருப்பதுதான் நல்லது, பாதுகாப்பும் கூட. வாழ்க்கைப்பட்டபின்பு என்ன செய்வது என்ற கேள்வி வருவது சரியாக இல்லை என்றே தெரிகிறது.
ஆனி சுதர்சனத்தில் ஆசார்யன் பரமபதித்து விட்டால் சிஷ்யனுக்கு ஒரு நாள் தீட்டு என்று உள்ளது. இது நம் ஸம்ப்ரதாய ஆசார்யனுக்கு மட்டுமா அல்லது நாம் ஶ்லோகங்கள் மற்றும் ப்ரபந்தங்கள் கற்றுக் கொள்ளும் ஆசார்யனுக்கும் உண்டா?
பதிலில் குறிப்பிட்ட ஆசார்யன் என்பவர் வேத அத்யயனம் சொல்லி வைத்தவர், அல்லது ப்ரதானமான் மந்திரோபதேசம் பண்ணிவைத்தவர். ஸ்தோத்ர பாடம் சொல்லிக்கொடுத்தவர்களுக்கு இந்த தீட்டு நியமம் கிடையாது. மேலும் வேதாத்யயனம் சொல்லி வைத்தவர் என்றால் யார் ப்ரம்மோபதேசம் செய்து வேதாத்யயனம் சொல்லிக்கொடுத்தாரோ அவருக்குதான் இந்த தீட்டு நியமம்.
கல்யாணங்களில் ஸ்தாலிபாகம் சேஷஹோமம் எதற்காக பண்ணுகிறார்கள் என்பதை விவரமாக ஸாதிக்க ப்ராத்திக்கிறேன்.
விவாஹ ப்ரயோகத்தில் ஸ்தாலிபாகம் சேஷ ஹோமம் இவையெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. விவாஹத்தில் எப்படியானால், முதலில் லாஜ ஹோமம், அதற்கு முன் சப்தபதி அப்படியெல்லாம் சொல்லி இருக்கிறதோ அது மாதிரியாக ஸ்தாலிபாகம் சேஷ ஹோமம் சொல்லப்பட்டிருக்கிறது. விவாஹத்தினுடைய ஒரு ப்ரக்ரியையில் இது உள்ளடங்கியது. அதனால் எதற்காக பண்ணுகிறார்கள் என்றால் ஶாஸ்திரம் சொல்வதனால் பண்ணுகிறார்கள். இதில் வரும் இந்த ஸ்தாலிபாகம் என்பது பின்னால் வரப்போகும் ஸ்தாலிபகங்களுக்கு எல்லாம் ஒரு ஆரம்பம். அதாவது க்ருஹஸ்தனாக இருக்கின்றவன் நித்யம் ஔபாசனம் பண்ண வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஸ்தாலிபாகம் பண்ண வேண்டும். அதை ஆரம்பிக்கும் ஸ்தாலிபாகம் இது. அதனால் இது மிகவும் விசேஷம்.
கல்யாணம் என்பது ஐந்து நாட்கள் நடக்கும் பொழுது அதில் நான்கு நாட்கள் நித்ய ஔபாசனம் எல்லாம் விடாமல் பண்ணிக்கொண்டிர்ப்பார்கள். அதன்பின் கடைசியாக ஒரு ஹோமம் பண்ணுவது பாக்கி இருக்கும். அதற்குத்தான் சேஷ ஹோமம் என்று பெயர். அது அந்த விவாஹ ப்ரக்ரியாவை, சடங்கை முடிப்பதற்காக, ப்ராயஶ்சித்தங்கள் எல்லாம் பண்ணி அது முடிப்பதாக வரும். அதற்கு சேஷ ஹோமம் என்று பெயர். மீதி இருப்பதை செய்து விவாஹ ப்ரக்ரியயை முடித்துக் கொள்கிறோம் என்று அர்த்தம்.
அடியேனுடைய தகப்பனார் 13.08.2011 சுக்ல பக்ஷ திதியில் ஆசார்யன் திருவடி அடைந்தார். இந்த வருடம் அவருடைய ஶ்ராத்த கார்யங்களை என்று பண்ண வேண்டும் அன்று தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
சுக்லபக்ஷம் என்ன திதி என்று தெரிவித்தால் பார்த்துக்கூறுகிறோம்.
பொதுவாக நாம் ஶாஸ்த்ரம் என்று சொல்லும்போது நாம் எதை அடிப்படையாக வைத்துக்கொள்கிறோம்? மனு ஸ்ம்ருதியா அல்லது ஆபஸ்தம்ப சூத்ரமா?
தர்ம ஶாஸ்திரத்திற்கு ஒரு புஸ்தகம் என்பது கிடையாது பல புஸ்தகங்கள் இருக்கிறது அனைத்தையும் வைத்துக்கொண்டுதான் சொல்கிறோம். ஆபஸ்தம்ப சூத்ரம், கௌதம தர்ம சூத்ரம், மனு ஸ்ம்ருதி என்று பல இருக்கிறது. இவை அனைத்தையும் வைத்து நம் பெரியவர்கள் நிர்ணயம் பண்ணியிருக்கிறார்கள்.
சில சந்தேகங்கள்:
1. ஒரு ப்ரபன்னனின் கடைசி மூச்சு வரை தேவதாந்திர சம்பந்தம் இருந்தால் ப்ரபத்தி பலன் தருமா?
2. ஒரு ப்ரபன்னன் கடைசி நேரத்தில் தேவதாந்திர சம்பந்தத்தை விட்டுவிட்டு எம்பெருமானிடம் சரணடைந்தால் , ப்ராயஶ்சித்தப் ப்ரபத்தி செய்யாவிட்டாலும் பெருமாள் அவரை ஏற்று மோக்ஷம் அருள்வாரா? அல்லது அந்த ப்ரபன்னர் அதற்கு உண்டான தண்டனையை அனுபவித்த பின்னர் பெருமாள் அவருக்கு மோக்ஷத்தை வழங்குவாரா?.
3. ப்ராயஶ்சித்த ப்ரபத்தி எத்தனை முறை செய்யலாம். ப்ரபத்தி போல் ஒரே ஒரு முறை தான் செய்ய வேண்டுமா?ப்ராயஶ்சித்த ப்ரபத்தியும் த்வய மந்திரத்தை உட்கொண்டிருக்குமா?
ஒரு ப்ரபன்னனின் கடைசி மூச்சு வரை தேவதாந்திர சம்பந்தம் இருந்தால் ப்ரபத்தி பலன் தருவது சந்தேகம்தான் என்று ஸ்வாமி தேஶிகன் சொல்லியிருக்கிறார்.
ஒரு ப்ரபன்னன் கடைசி நேரத்தில் தேவதாந்திர சம்பந்தத்தை விட்டுவிட்டு எம்பெருமானிடம் ஶரணாகதி பண்ணால் சந்தேகமில்லாமல் எம்பெருமான் ஏற்றிக்கொள்வான் என்று ஸ்வாமி நம்மாழ்வார் சொல்லியிருக்கிறார் – “மாளுமோர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வளமே” என்பதாக.
தான் செய்தது தப்பு என்று தெரிந்துவிட்டால், உடனே ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்துவிடலாம் அதில் தவறில்லை. மறுபடியும் தப்பு செய்தால் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணலாம். ஆனால் மறுபடியும் தப்பு பண்ணாமல் இருக்கவேண்டும் என்பதுதான் இதில் முக்கியமான ஒன்று. பெரியவர்கள் எல்லாரும் த்வய மந்திரம் வைத்துக்கொண்டு அனைத்திற்கும் சேர்த்து ஒருமுறைதான் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணுவார்கள்.
அடியேன் நமஸ்காரம். ஆவணி அவிட்டம் குறிப்பிட்ட நாளில் ஏதோ ஒரு அசந்தர்ப்பத்தினால் பண்ண முடியாது போனால் பின்னால் வேறொரு நாளில் பண்ண முடியுமா?
என்ன அசந்தர்பம் என்று தெரியவேண்டும். நம்முடைய காரணத்திற்காக இல்லாமல் அதுவாக நடந்ததானால், தீட்டு வந்துவிட்டாலோ, உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தாலோ ஆவணி அவிட்டம் பண்ணமுடியாமல் போனால் அடுத்த மாதம் பௌர்ணமியில் பண்ணலாம். ஆனால் நாமாக காரணத்தை ஏற்படுத்துக்கொண்டு, உ.தா: நாங்கள் வேறு ஒரு இடத்திற்குப் போகவேண்டும் என்றோ, கல்யாணத்திற்கு போகவேண்டும் என்ற காரணங்களுக்காகத் தள்ளிப்போடுவது நியாயமில்லை.
எப்பொழுதாவது தவறோ அல்லது ஏதாவது அபாரதம் செய்தாலோ ப்ரபத்தி பலனில்லாததாகி அடியேனுக்கு ப்ரபத்தி கிட்டாது என்ற எண்ணம் எப்போதும் உண்டு. அப்படி இல்லை ப்ரபத்தி நிச்சயம் பலனைத் தரும் என்று பல மகான்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அடியேன் புரிந்து கொண்டிருப்பது சரியா என்று விளக்க ப்ரார்த்திக்கின்றேன். அறியாமல் செய்யும் அபராதங்கள் ஒரு ப்ரபன்னனின் பாபக் கணக்கில் சேராது என்றும் , ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்தால் அறிந்தே செய்கின்ற பாபங்களும் கழிந்து விடும் என்றும், இல்லை லகு சிக்ஷைக்கு பிறகு மோக்ஷம் கிட்டும் என்பது அடியேனுக்குத் தெரிந்திரிந்தும் அடியேன் ஏதாவது அபராதம் செய்தால் ப்ரபத்தி பலனில்லாமல் போய்விடும் என்கின்ற பயம் இருந்து கொண்டே இருக்கின்றது. ப்ராரப்த கர்மாவினால் அடியேனுக்கு இந்தப் பயம் ஏற்படுகின்றதா ? இந்தப் பயத்தை நீக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.
எப்பொழுதாவது தவறோ அல்லது ஏதாவது அபாரதம் செய்தாலோ ப்ரபத்தி பலனில்லாததாகி அடியேனுக்கு ப்ரபத்தி கிட்டாது என்ற பயம் இருப்பது நல்லதுதான் அப்படியிருந்தால்தான் தப்புசெய்யாமல் இருக்க முடியும். மேலும் என்ன ஆனாலும் ப்ரபத்தி பண்ணியாகிவிட்டது அதன் பலன் கிடைத்துவிடும் என்ற பயமில்லாமல் இருத்தல்கூடாது. இவ்விஷயத்தில் பயத்தோடுதான் இருத்தல்வேண்டும். தப்பு பண்ணினால் கட்டாயம் தண்டனை கிடைக்கும் என்ற பயம்வேண்டும்.
ஆனால் ஶரணாகதி பலன் கொடுக்குமா என்ற பயம்வேண்டாம். அதை “நிர்பரோ நிர்பயோஸ்மி” ஸ்வாமி தேஶிகன் சொல்கிறார்.
நீங்கள் எதற்கு பயப்படவேண்டுமோ அதற்கு பயப்படாமல் எதற்கு வேண்டாமோ அதற்கு பயப்படுகிறீர்கள். ஶரணாகதி பற்றி கவலையேவேண்டாம். ஏனென்றால் ஶரணாகதி பண்ணிவிட்டால் பகவானிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டீர்கள் அதற்குப் பிறகு அது பலன் அளிக்குமா, பலன் அளிகாதா என்று பலர் கேட்கும் கேள்வியே தவறாகும்.
ஶரணாகதி என்றாலே நம்மையும் நம் ரக்ஷணப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டோம். ஒப்படைத்துவிட்டதற்கு அடையாளமே அதைப் பற்றி நாம் கவலையின்றி இருப்பதுதான். மீறி கவலைப்பட்டால் நாம் சரியாக ஒப்படைக்கவில்லை என்றே அர்த்தம்.
ஶரணாகதி பண்ணியவர்கள் அது இப்படியிருந்தால் பலன் கொடுக்குமா போன்ற சந்தேகத்துடன் கூடிய கேள்விகளைத் தவிர்த்தல் வேண்டும். ஶரணாகதி பண்ணிவிட்டால் நாம் நம்மை ஒப்படைத்து விட்டோம் அதற்கு மேல் பகவான் பார்த்துக்கொள்வான் என்று கவலையில்லாமல் இருத்தல்வேண்டும். நாம் எதை நினைத்து கவலைக்கொள்ளவேண்டும் என்றால், நாம் செய்யும் தவறுகள் பற்றி ஏனெனில் தப்பு செய்தால் கட்டாயம் தண்டனை உண்டு.
ஆகையால் ஶரணாகதி பண்ணியவர்கள் பலன் கொடுக்காமல் போய்விடுமோ என்று எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள், அது என்ன வேண்டுமானாலும் ஆகிவிட்டுப்போட்டும். நாம் மற்றொருவருடையது நினைத்து கவலைப்படமாட்டோம் அல்லவா அதுபோல்தான் இந்த ஆத்மா பகவானுடையது அதைப்பற்றி கவலைப்படாமல், தப்பு பண்ணினால் தண்டனை என்ற பயத்தோடு இருத்தல்வேண்டும்.
ஸ்வாமி தேஶிகன் திருமணியின் அம்சம் என கொள்ளப்படும்போது பிந்தைய ஆசார்யர்களின் பாதுகாராதனத்திற்குத் திருமணி சாதிக்கலாமா?”
திருமணி என்பவர் நித்யஸூரி ஆவார், ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர். ஸ்வாமி தேஶிகனுக்கெல்லாம் முன்பிலிருந்தே இருப்பவர். அவர் பெருமாள் திருவாராதனத்திற்கு உபயோகப்படுபவர். ஆசார்யர்கள் திருவாராதனத்திற்குக்கூட கண்டை சேவிப்பது என்ற வழக்கம் சொல்லியிருக்கிறது. ஆகையால் கண்டை சேவிக்கலாம்.
பாதுகாரதனத்திற்குக் கண்டை சேவிப்பது சில இடங்களில் வழக்கத்தில் கிடையாது. ஆகையால் அதன்படி கேட்டுச் செய்யவும்.
1. சந்தியாவந்தனம் செய்யும்போது ஸ்ரீ ஸந்நிதி சிஷ்யர்கள் காயத்ரி ஆவாஹண மந்திரம் சொல்லமாட்டார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் ஏதேனும் குறிப்பிட்ட காரணம் இருக்கிறதா?
2. ப்ரபன்னர்கள் ஸ்ரீராம சரிதமானஸ் சேவிக்கலாமா?
சந்தியாவந்தனம் செய்யும்போது ஸ்ரீ ஸந்நிதி சிஷ்யர்கள் காயத்ரி ஆவாஹண மந்திரம் சொல்லமாட்டார்கள் என்று இருப்பதாகத் தெரியவில்லை. “ஆயாது வரதா தேவி” என்று ஆரம்பிக்கும் காயத்ரி ஆவாஹண மந்திரம் அனைவரும் சொல்வார்கள்.
ஸ்ரீராம சரிதமானஸ் பக்தி காவ்யமாக இருப்பதினால், ப்ரபன்னர்கள் சேவிக்கலாம். தவறில்லை.
ஸ்ரீவைஷ்ணவர்கள் கைகளில் கல் இழைத்த மோதிரம் அணிந்து கொள்ளலாமா?
ஸ்ரீவைஷ்ணவர்கள் கைகளில் கல் இழைத்த மோதிரம் அணிந்து கொள்ளலாம். பெரியோர்களும் செய்வது வழக்கம்தான்.
ஏகாதசியன்று அரிசி உப்புமாவிற்கு பதில், சிறுதான்ய உப்புமா சேர்த்துக் கொள்ளலாமா?
ஏகாதசி அன்று அரிசி உப்புமா இல்லாமல் எந்தச் சிறு தானியங்கள் எல்லாம் உட்கொள்ளலாமோ அந்தத் தானியங்களை கொண்டு உப்புமா செய்யலாம்.
கோவிலில் கொடுத்த சுதர்சன யந்திரத்தை அகத்துப் பெருமாள் சன்னிதியில் வைத்துக்கொள்ளலாமா?
கோவிலில் கொடுத்த சுதர்சன யந்திரத்தை அகத்துப் பெருமாள் சன்னிதியில் வைத்துக்கொள்ளலாம்.
அடியேன் தெலுங்கு ப்ராஹ்மணர் ஆவேன். பகவத் இராமானுஜாசார்ய சம்ப்ரதாயத்தில் சமீபத்தில்தான் பயணிக்கத் தொடங்கியுள்ளேன். அடியேன் ஸ்ரீவைஷ்ணவனாக வாழ ஆசைப்படுகிறேன். ஸ்ரீவைஷ்ணவ அஹாரநியமம்படி இயன்றளவு கடைப்பிடிக்கின்றேன். ஆனால் வரும் நாட்களில் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணிக்கும்படி உள்ளது. அங்கு சைவ உணவு கிடைக்கும் ஆனால் நிஷித்தமான வஸ்துக்களான வெங்காயம் பூண்டு போன்ற வஸ்துக்கள் இல்லாமல் உணவு கிடைக்குமா என்று தெரியவில்லை. இது போன்ற சமயங்களில் என்ன செய்யவேண்டும்? வழிகாட்டவும்.
வெளி நாட்டுக்குச் செல்லும் பொழுது அங்கே நமக்கு ஏற்ற ஆஹாரம் கிடைக்காது என்று தெரியும் பொழுது முடிந்த வரையில் தானே செய்து சாப்பிட்டால் உசிதம். ஸ்வயம்பாகமாக தானே தளிகை செய்து சாப்பிட்டால் தவிர்க்க வேண்டியவைகளைத் தவிர்க்கலாம். அதற்கு வசதி இல்லையென்றால் சில பதார்த்தங்கள் வெங்காயம் பூண்டு இல்லாமல் கிடைக்கின்றது என்று தெரிகிறது, அதை எல்லாம் பார்த்து, எந்த உணவாக இருந்தாலும் அதில் எல்லாம் எழுதி இருக்கும், அதைப் பார்த்து இதெல்லாம் இல்லாதவைகளாக வாங்கி அதை மட்டும் உட்கொண்டு தரிப்பதற்கு முயற்சிக்கலாம். தானே செய்து சாப்பிட்டால் எங்கேயாக இருந்தாலும் உசத்தி. அப்பொழுதுதான் நம்மால் ஆஹாரநியமத்தில் எப்படி இருக்கோ அதன்படி கடைபிடிக்க முடியும்.
முனித்ரய ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீஜயந்தி, ஸ்ரீராமநவமி, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி போன்ற பண்டிகைகளை, ஏகாதசி போல் அனுஷ்டித்து மறுநாள் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் சேர்த்து, புளி சேர்க்காமல் துவாதசி தளிகை போல் பாரணை செய்யவேண்டுமா?
ஸ்ரீ ஜெயந்தி ஸ்ரீராமநவமி ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜெயந்தி போன்ற பண்டிகை நாட்களில் முனித்ரய சம்ப்ரதாயக்காரர்கள் ஏகாதசியை போல் வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும். மறுநாள் எப்படி துவாதசி பாரணை செய்கிறோமோ, அதேபோல் அகத்திக்கீரை நெல்லிக்காய் சுண்டைக்காய் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். புளி இல்லாமல் துவாதசிக்கு எப்படித் தளிகை செய்கின்றோமோ அதேபோல் பண்ண வேண்டும்.
அடியேன் USல் வசித்துவருகிறேன். எப்போதும் திருமண்காப்பு இட்டுக்கொண்டுதான் வெளியில் செல்வேன். சிலர் திருமண்காப்பு என்றால் என்ன என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு புரியும்படி எப்படி பதில் சொல்வது?
சிலர் இதைக்கண்டு ISCKON அமைப்பை சேர்ந்தவரா என்று கேட்கின்றனர். அடியேன் ஸ்ரீவைஷ்ணவன் என்பதையும் அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் வித்யாசத்தை எப்படி தெரிவிப்பது?
திருமண்காப்பு என்பது பெருமாளுடைய திருவடிச் சின்னம். அந்தத் திருவடிச்சின்னத்தை தரித்துக் கொள்வதற்கு நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம் பெருமைப்படுகிறோம்.அது எங்களுடைய ப்ரீத்தியான பெருமாளுக்கு உகந்தது என்று சொல்லலாம்.
பொதுவாக மேற்கத்திய கலாச்சாரங்களில்(westernculture) Tatoo (பச்சை)போட்டுக் கொள்வது எல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமான நிச்சயமாக இருக்கின்றது. ஏன் Tatoo போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஒருவரை ஒருவர் கேட்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படிக் கேட்டால் பொதுவாக சொல்கின்ற பதில் இந்த Tatoo எனக்கு மிகவும் நன்றாக இருக்கிறது அதனால் போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று மிகவும் பெருமிதமாக சொல்லுவார்கள். அதேபோல் நாம் திருமண்காப்பு தரித்துக் கொள்வதென்பது நமக்குப் பிடித்த எம்பெருமானுக்கு உகந்த ஒரு கைங்கர்யம். அதனால் தரித்துக் கொண்டிருக்கிறேன் என்று பெருமையாக பதில் சொல்லலாம் எனத் தோன்றுகிறது.
ISKCON அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாம் என்று நினைத்துக் கொண்டு விட்டால் அப்படியில்லை என்பதை தெளிவித்து விட்டு, அவர்களுக்கும் நமக்கும் சில சம்ப்ரதாயக வேறுபாடுகள் இருக்கின்றன, சில philosophical differences இருக்கின்றன என்பதை சொல்லலாம். Philosophical differences என்ன என்பதை புரிந்து கொள்ளும் அளவிற்கு சக்தி இருந்தால் இந்த மாதிரி கேள்விகள் கேட்க மாட்டார்கள். அதனால் விளக்கமாக philosophical differences என்ன என்பதை செல்லும்படியான அவசியம் இருக்காது என்று தோன்றுகிறது. ஆகவே philosophical differences இருக்கு என்பதோடு முடித்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.
ஆசார்யன் பரமபதம் அடைந்தால் (திருநாட்டை அலங்கரித்தால்), சிஷயனுக்கு தீட்டு எவ்வளவு நாள்??
ஆசார்யன் பரமபதித்தால் அந்தச் சிஷ்யனுக்கு, ஆசார்யன் ஶரீர பந்துவாக இருந்தால் அந்த ஶரீர பாந்துவத்திற்கு என்ன தீட்டோ அந்தத் தீட்டு காத்தல் வேண்டும்.
ஶரீர பந்துவாக இல்லாவிட்டாலும் ஆசார்யன் க்ருஹஸ்தராக இருந்தால், சிஷ்யனுக்கு ஒரு நாள் தீட்டுகாத்தல் என்பது வழக்கமாக இருக்கு.
ஆசார்யன் ஒரு யதியாக இருந்தால் அதாவது சன்யஸ்தராக இருந்தால், அப்போது சிஷ்யனுக்கு எவ்வித தீட்டும் கிடையாது.
“சில சந்தேகங்கள்.
1. பையன் இல்லாதவர்களுக்கு மூத்த மாப்பிள்ளை காரியங்கள் செய்தார். பேரனும் இருக்கிறான். ஸ்கூல் படிக்கும் காரணத்தினால் மாப்பிளையே முன்னின்று எல்லாம் செய்தார். தவறு ஏதேனும் உள்ளதா என்பதை தெரியப்படுத்தவும். அகத்து வாத்தியாரிடம் கேட்ட பிறகே செய்யப்பட்டது.
2. இப்படிப் பெண் பிள்ளை இருக்கும் வீட்டில் அப்பா அம்மாவிற்கு வருடா வருடம் ஶ்ராத்தம் உண்டா? அப்பா சென்றபிறகு அம்மாவிடம் கைப்புல் வாங்கி செய்கிறோம். அம்மாவிற்கு பிறகு என்ன முறை?
3. தாத்தா செய்த பாவம் புண்ணியம் தலைமுறைக்கே என்பர். ஆனால் தவறு செய்த தாத்தா உயிருடன் இல்லாமல் இருக்க அவருக்கு தண்டனை எப்படிக் கிடைக்கும்? அதைப் பையனோ பேரனோ அனுபவிப்பது கஷ்டம்தானே?
4. இன்னாருக்கு இன்னார்தான் பிறக்க வேண்டும் என்பது விதிதான். அப்படியிருக்க கணவன் மனைவி என்பதும் போன ஜென்ம தொடர்பா? அல்லது விதியா?
பையன் இல்லாதவர்களுக்கு, ஶாஸ்த்ரத்தில் இவரில்லை என்றால் இவர், அவரில்லை என்றால் இவர் எனப் பட்டியலிட்டு சொல்லியிருக்கிறது. அவ்வகையில் பிள்ளை இல்லையென்றால் பேரன் (தௌஹித்ரன்) இருந்தால், அவனே கைங்கர்யங்கள் செய்வது உத்தம கல்பம். அவரில்லை எனில் இறந்தவரின் பெண்ணின் கைப்புல்லை வாங்கி மாப்பிள்ளை காரியங்கள் செய்யலாம் ஏனெனில் பெண்தான் கர்தா ஆவார்.
அப்பா அம்மாவிற்கு பெண் பிள்ளைதான் இருக்கிறார் என்றால், முன்னர் குறிப்பிட்டது போல் பேரனிருந்தால் அவனே செய்யலாம் இல்லையென்றால் மாப்பிள்ளை வார்ஷிக ஶ்ராத்தம் செய்யலாம். இப்படி ஒவ்வொரு கைங்கர்யத்தை அவர் ஏற்கும்போது வருடாவருடம் செய்யவேண்டும் என்பது அவரின் கர்தவ்யமாக ஆகுகிறது.
தாத்தா செய்த பாவம் புண்ணியம் நேரடியாக தலைமுறைக்கே என்பது கிடையாது. அவரவர்கள் கர்மவினைப் பயனை அவரவர்கள்தான் அனுபவிக்க வேண்டும். ஆனால் ஒரு கர்ம விசேஷத்தினால் ஒருவருடன் சம்பந்தப்பட்ட இந்தப் பிறவி நமக்கு கிடைக்கின்றது. தாத்தா என்பவர் நிறைய பாவங்கள் செய்துவிட்டு பரமபதித்து விட்டால் அந்தப் பாவம் எல்லாம் அவர் பிள்ளைக்கோ பேரனுக்கும் வந்த விடும் என்பது கிடையாது. தாத்தா பண்ணிய கர்மாவிற்கு அடுத்த ஜன்மாவில் என்ன தண்டனையோ அல்லது நல்லதோ அனுபவிக்க வேண்டுமோ அதை அவர் அனுபவிப்பார். அது அவருக்கு ஏற்படும். இந்தப் பிள்ளையோ பேரனோ அந்தப் பாவம் பண்ணவரோடு சம்பந்தப்பட்டு ஒரு இடத்தில் வந்து பிறந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுடைய கர்ம வினைப்பயன் இந்தச் சம்பந்தத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. அதனால் அவரவர்கள் கர்ம வினைப் பயன் என்பதுதான் உண்மையே தவிர இவரால் நமக்கு கஷ்டம் என்று நினைக்கவேண்டாம். நாம் பண்ணிய கர்மா நம்மை ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்க்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.
எந்த ஒரு ஶரீர பந்தம் ஏற்பட்டாலும் அது அவரவர்கள் கர்மாவிற்கு ஏற்றார்போல் ஏற்பட்டதுதான். கணவன் மனைவி என்ற பந்துத்வமும் அப்படி ஏற்பட்டதுதான். இவருக்கு இவர் என்று எம்பெருமான் விதித்துக் கொண்டு சேர்க்கின்றான். அவரவர்களுடைய கர்மாவிற்குப் பலனளிக்க எந்த இடத்திற்குப் போய் சேர்ந்தால் அந்தப் பலன்கள் கிடைக்குமோ அதன்படி எம்பெருமான் சேர்க்கின்றான்.
1A. பஞ்ச ஸம்ஸ்காரம் என்பதை எளிய வகையில் என்னவென்று சொல்லி விளக்கலாம்? இது ஒரு ஸ்ரீவைஷ்ணவர்களுக்கான சடங்கு என்று கூறலாமா?
B. அடியேனின் சம்பந்தி தென்கலை ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஸ்வயமாசார்யர்கள். ஆனால் அவர்கள் பஞ்சஸம்ஸ்காரம் ஏதும் செய்து கொள்ளவில்லை. அடியேனின் பெண், மாப்பிள்ளை மற்றும் பேரக்குழந்தைகள் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துக்கொள்ள ஆசை ஆனால் அவர்கள் அகத்துப் பெரியவர்கள் அதைத் தடுக்கின்றனர். அவர்களுக்கு என்னவென்று சொல்லி புரியவைப்பது? தெளிவிக்கவும்.
C. ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராகமல் மற்றொருவர் தடுப்பது சரியா?
D. மேலும் எம்பெருமானின் ப்ரீதியைப் பெற்று மோக்ஷம் அடைய பக்தி/ப்ரபத்தி தான் உபாயம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அடியேனின் ஆசார்யனிடம் ப்ரார்தித்து எனது பெண், மாப்பிள்ளை, பேரக்குழந்தைகளுக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் ஆகாமலே ப்ரபத்தி செய்ய முடியுமா?
E. தென்கலை ஸம்ப்ரதாயத்தில் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யும்போதே ப்ரபத்தியும் செய்வார்களா?
பஞ்ச ஸமஸ்காரம் என்பதை ஒரு சடங்கு என்று சொல்லலாம். ஸம்ஸ்காரம் என்றாலே Refinement என்று அர்த்தம். அதாவது ஒரு கார்யத்தை நாம் பண்ணுவதற்கான தகுதியை அளிக்கக்கூடிய செயல். இப்பஞ்சஸம்ஸ்காரமானது எம்பெருமானுக்கு நாம் கைங்கர்யம் செய்யக்கூடிய தகுதியை அளிக்கிறது என்று சொல்லலாம்.
இப்பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துகொண்டால்தான் பகவத் கைங்கர்யம் செய்ய தகுதியுடையவர்களாக ஆகிறோம். ஏன் பகவத் கைங்கர்யம் செய்யவேண்டுமென்றால், அவர்தான் நமக்கு உத்தேஶ்யம். ஒரு பத்னி பதிக்கு சிஸ்ருஷை செய்வதுபோல் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யவேண்டும். ஆசையாக செய்தல்வேண்டும். அதற்காகவே நாம் ஏற்பட்டுள்ளோம் என்ற நினைப்போடு பண்ணவேண்டும். அப்படியாக நாம் செய்யும்போது அவருக்குப் பிடித்தாற்போல் பண்ணவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அதற்காக நாம் செய்துகொள்ளும் ஸம்ஸ்காரமே பஞ்சஸம்ஸ்காரம்.
இதை லௌகீக ரீதியில் சொல்லவேண்டுமென்றால் நமக்குப் பிடித்தவர் நம் அகத்திற்கு வருகிறார் என்றால் அவருக்குப் பிடித்த உணவை பண்ணவோம். மேலும் அவ்வுணவிற்குத் தேவையானவற்றைச் சம்பாதித்து கருத்துடன் தளிகை பண்ணி, அக்கறையுடன் அவருக்கு பரிமாறுவோம் அல்லவா. அதேபோல்தான் பகவான் என்பவர் நமக்கு மிகவும் பிரியமானவர், அவருக்கு ப்ரீதியோடு கைங்கர்யம் பண்ண வேண்டுமென்றால், ஸமர்பிக்க வேண்டுமென்றால் என்ன ஏற்பாடு செய்யவேண்டுமோ அந்த ஏற்பாட்டில் (இங்கு தகுதியில்) ஒன்றுதான் இந்தப் பஞ்சஸம்ஸ்காரம் என்று சொல்லி புரியவைக்கலாம் எனத் தோன்றுகிறது.
ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக ஆகாமல் மற்றொருவர் தடுப்பது நிச்சயம் தவறுதான்.
பஞ்ச ஸம்ஸ்காரம் ஆகாமலேயே ஆசார்யர்களுடைய அனுமதி இருந்தால் ப்ரபத்தி செய்யமுடியும். சின்னக்குழந்தைக்குக்கூட பண்ணலாம். ஆனால்கூட ஆசார்யன் என்ன சொல்கிறாரோ அதன்படிச் செய்யவும்.
தென்னாசார்யர் ஸம்ப்ரதாயத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்யும் போதே ப்ரபத்தியும் நடக்கிறது என்று சொல்லுவர்கள்தான். அது நடக்கிறதா, அது சரியா தவறா என்ற கேள்விகளுக்கு நாம் போகவேண்டிய அவசியமில்லை.
துவாதசி அன்று ஶ்ராத்தம் வந்தால் என்ன செய்யவேண்டும் என்கிற விவரிக்கவும்.
துவாதசி அன்று ஶ்ராத்தம் வந்தால் ஶ்ராத்தத் தளிகைதான் செய்யவேண்டும்.
சில க்ருஹங்களில் துவாதசிக்குரிய பாரணை ஸாமான்களை மட்டும் தயாரித்து வைக்கிறார்கள். அதையே போக்தாக்களுக்கும் ஸமர்பிக்கிறார்கள். அதன்பின் போக்தா அனுமதிக்க அந்தக் கர்த்தாவும் பாரணையை உட்கொள்ளலாம்.
இன்னும் சில க்ருஹங்களில் வெறும் ஶ்ராத்தத் தளிகை மட்டும் செய்வதுதான் வழக்கம்.
அவரவர் அகத்து வழக்கப்படி பின்பற்றவும்.
முந்தைய நாளோ அல்லது குளிப்பதற்கு முன் நாம் நறுக்கிய காய்கறிகளை தளிகைக்கு உபயோகப்படுத்தி அதனை எம்பெருமாளுக்கு கண்டருளப் பண்ணலாமா?
சாதாரண நாட்களில் முந்தைய நாளோ அல்லது அன்றைய தினம் தீர்த்தமாடுவதற்கு முன் நறுக்கிய காய்கறிகளை தீர்த்தமாடிவிட்டு நல்ல ஜலத்தில் அலம்பிவிட்டு உபயோகப்படுத்தினால் பரவாயில்லை. ஆனால் அமாவாஸை, மாசப்பிறப்பு, ஶ்ராத்தம் போன்ற விசேஷ நாட்களில் கண்டிப்பாக அப்படி உபயோகப்படுத்தக்கூடாது.
துவாதசி அன்று மட்டும் முதல்நாள் நறுக்கிய காய்கறிகளை நன்றாக அலம்பிவிட்டு உபயோகப்படுத்தலாம்.
பொதுவாக சாப்பிட்ட பின் இலையில் துளி அன்னம் மீதி வைக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் ஶ்ராத்தத்தில் சாப்பிட்ட பிறகு இலையில் கொஞ்சம் அன்னம் மீதி வைக்கலாமா? ( போக்தாக்கள் அல்லாதவர்கள்).
ஶ்ராத்தத்தின் பிறகு சாப்பிட்ட பின் இலையில் துளி அன்னம் மீதி வைத்தாலும் தவறில்லை. அது அவரவர் அகத்து வழக்கப்படி கேட்டுச் செய்யவும்.
நித்யபடி ஸ்நானம் செய்யும்போது நாம் என்னென்ன கடைபிடிக்கவேண்டும். என்ன சங்கல்பம் பண்ணவேண்டும்? ஸ்நானம் என்றால் தலைக்குத் தீர்த்தாமடுதல் என்று அர்த்தமா?
நித்யபடி ஸ்நானம் செய்யும்போது ஆசமனம், ப்ராணாயாமம் பண்ணி, திதி வார நக்ஷத்ரங்களெல்லாம் சொல்லி ம்ஹா சங்கல்பம் பண்ணவேண்டும். அதன் பின் “கர்மந்யதா ஸித்யர்த்தம் ப்ராத: ஸ்நானம் அஹம் கரிஷ்யே” என்று சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்யவேண்டும்.
ஸ்நானம் என்றால் பொதுவாக தலைக்குத் தீர்த்தமாடுவது என்றுதான் அர்த்தம்.
ப்ரஹ்ம்மசாரிகள் நித்யம் தலைக்குத் தீர்த்தமாட அவசியமில்லை என்று சொல்லுவர்கள்.
ஸ்நானம் என்றால் தலைக்குத் தீர்த்தமாடுதல்தான் அது முடியாதபோது ஸ்நானத்தில் ப்ரபேதங்கள் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.
அதாவது ஸ்நானங்களில் பலவிதமான் ஸ்நானம் உண்டு. உதாஹரணத்திற்கு எப்போதாவது உடம்பு சரியில்லையென்றால் கண்ட ஸ்நானம் முதலானவ சொல்லியிருக்கிறது.
அமாவாஸை தினத்தில் பெருமாள் திருவாராதனத்தின் போது தளிகை தயாராக இல்லை என்றால் பித்ரு தர்ப்பணம் செய்தபிறகு திருவாராதனத்தை பூர்த்திச் செய்யலாமா?
அமாவாஸை தினத்தில் பெருமாள் திருவாராதனதின் போது தளிகை ஆனவரை பெருமாளுக்கு நிவேதனம் செய்து திருவாராதனத்தை முடித்துவிட்டு, பிறகு வைஸ்வதேவம், தர்ப்பணங்கள் எல்லாம் பண்ணிவிட்டு மீதியை நிவேதனம் செய்யலாம்.
புருஷர்கள் அன்றைய தினம் ஸ்நானம் மற்றும் ப்ராத: சந்தியா பண்ணும்வரை விழுப்பா (தீட்டு) ?
ஆமாம் ஸ்நானம் பண்ணும்வரை விழுப்புதான். ஸ்நானம் பண்ணியவுடன் விழுப்பு போய்விடுகிறது. விழுப்பு போவதென்பதற்கு ப்ராத: சந்தியா வரை கணக்கில்லை. ஸ்நானம்தான் கணக்கு.
குறிப்புகள்:
விழுப்பு என்பதற்கும், தீட்டு என்பதற்கும் சிறிது வித்யாசம் உண்டு.
விழுப்பு என்றால் நாம் யார் மேலேயும் படாமல், எந்தத் தீட்டும் படாமல் தூங்கியெழுந்தவுடனே அந்த வஸ்த்ரத்தை நாம் களைந்துவிட வேண்டும். முதல்நாள் அணிந்த வஸ்த்ரத்திற்கு விழுப்பு என்று பெயர்.
தீட்டு என்பது விழுப்பைக் காட்டிலும் அதிகபடியானது. எங்கேயாவது மேலே பட்டுவிட்டது என்பதுபோல் வரும்.
ஒரு 10 நாள் பங்காளியின் இறப்புத் தீட்டு காக்கும் சமயம் நெற்றியில் திருமண் ஸ்ரீசூர்ணம் தரிக்கலாமா?
சந்தியாவந்தனம்/காயத்ரி ஜபம் செய்யலாமா?
பத்துநாள் தீட்டு காக்கும்போது ஏன் நாம் உள்பாத்திரங்கள், வஸ்த்ரங்களைத் தொடக்கூடாது என்கிறோம்?
10 நாள் பங்காளியின் இறப்புத் தீட்டு காக்கும் சமயம் நெற்றியில் திருமண் ஸ்ரீசூர்ணம் தரிக்கலாம். ஆனால் ஸ்ரீசூர்ணத்தில் ப்ரதிஷ்டை ஆகாத ஸ்ரீசூர்ணத்தை அதாவது கடையில் வாங்கின ஸ்ரீசூர்ணத்தைதான் தரிக்க வேண்டும். ஸ்ரீ சூர்ண ப்ரதிஷ்டை என்று ஒன்று பண்ணுவார்கள் அந்த ப்ரதிஷ்டையான ஸ்ரீசூர்ணத்தைத் தீட்டுச் சமயத்தில் தரிக்கக்கூடாது.
சந்தியாவந்தனம், காயத்ரி ஜபம் கட்டாயம் செய்யவேண்டும். அங்கந்யாஸம், கரந்யாஸம் இல்லாமல் செய்யவேண்டும்.
தீட்டு என்றாலே அசுத்தி என்று அர்த்தம். சுத்தமில்லை என்று அர்த்தமாகும். பெருமாள் உள்பாத்திரங்கள் எப்போதுமே சுத்தமாக இருத்தல்வேண்டும். அதில் அசுத்தி கலக்கக்கூடாது. கை அலம்பாமல் எடுத்தல் என்று பலவிதத்தில் அசுத்தி அதில் கலக்கக்கூடும். தீட்டுக்கு ஆஶௌசம் என்றுதான் ஸமஸ்க்ருதத்தில் பெயர். அந்தச் சமயத்தில் நாமே ஆஶௌசமாக இருக்கின்றபடியால் அப்பாத்திரங்களைத் தொட்டால் அதற்கும் அசுத்தி ஏற்பட்டுவிடும் என்கிறபடியாலே அதைத் தொடக்கூடாது.
ஒரு ப்ரஹ்மச்சாரி உபநயனம் ஆனவுடன் வேதாத்யயனம் செய்யவேண்டும் என்றிருக்கிறது. அவன் ந்யாயம், மீமாம்ஸா, வ்யாகரணாதிகள், விஶிஷ்டாத்வைத்த சித்தாந்தங்கள் எல்லாம் படிக்கவேண்டும் என்பதின் முக்கியத்துவம் பற்றி தெளிவிக்கவும். மேலும் ஒருவன் ஏன் ஶாஸ்த்ரம் படிக்கவேண்டும் என்பதையும் விளக்கவும். நம் ஸம்ப்ரதாயத்தில் பெண்குழந்தை ஶாஸ்த்ரம் வாசிக்கலாமா?
ஒரு ப்ரஹ்மச்சாரி உபநயனமானவுடன் வேதாத்யயனம் ஆரம்பித்தால் ஒரு 15 வயதிற்குள் வேதாத்யயனம் பூர்த்தியாகிவிடும். வேதாத்யயனம் செய்யும்போதே அடிப்படை ஸம்ஸ்க்ருதமும் சேர்த்து கற்கவேண்டும். அதில் வ்யாகரணம் முதலான வேதத்தின் அங்கங்களெல்லாம் படிக்கவேண்டும் என்றிருக்கிறது. மேலும் வேதாத்யயனம் என்றாலே சாங்கவேதாத்யயனம்தான் அங்கத்தோடு கூடிய வேதாத்யயனம்தான். அதில் வ்யாகரணம் என்ற அங்கத்தையும் சேர்த்துதான் வேதாத்யயனம் படிக்கவேண்டும் என்ற கணக்கு.
இதையெல்லாம் படித்து முடித்த பிறகு ந்யாய ஶாஸ்த்ரம், விஶிஷ்டாத்வைத்த ஶாஸ்த்ரம் முதலானது, காலக்ஷேபம் போன்றவையெல்லாம் பண்ணமுடியும்.
7 வயதில் உபநயனம் பண்ணி ஆரம்பித்தால் இதையெல்லாம் படிக்க நன்றாகச் சமயம் கிடைக்கும் மேலும் தாராளமாகப் படிக்கலாம்.
இதனுடைய முக்கியத்துவம் என்னவென்றால், வேதாத்யயனம் பண்ணவேண்டும் என்று ஶாஸ்த்ரம் இருக்கிறது. மேலும் ந்யாயம், மீமாம்ஸா, வ்யாகரணம் எல்லாம் படித்தால்தான் விஶிஷ்டாத்வைத்த அதாவது நம் ஸித்தாந்தம் நம் மதம், நம்முடைய தரிசனம், நம்முடைய அனுஷ்டான வ்யவஸ்தைகள், ஆசார்ய அனுஷ்டானங்கள் இவையெல்லாம் இந்த ஶாஸ்த்ரங்கள் படித்தால்தான் புரியும் இல்லாவிட்டால் பூர்த்தியாக புரியாது. நாம் படித்தால்தான் இது புரியும், அப்படியிருந்தால்தானே அதை அனுஷ்டிக்க முடியும் ஆகையால் அவை படிக்கவேண்டும்.
பொதுவாக நம் ஸம்ப்ரதாயத்தில் பெண் குழந்தைகள் ஸ்தோத்ரங்கள், திவ்ய ப்ரப்ந்தங்கள் எல்லாம் சொல்லலாம். ஶாஸ்த்ரம் வாசிப்பது வழக்கத்தில் கிடையாது. இந்தக் காலத்தில் ந்யாயம் போன்ற சாமான்ய ஶாஸ்த்ரம் சொல்லிக்கொடுக்கிறார்கள். அப்படியாக ஸாஹித்யம், அலங்கார ஶாஸ்த்ரம் அவர்கள் படிப்பது தவறில்லை.
அகத்தில் த்வாதசி சமயத்தில் ஆசார்யன் பாதுகை ஆராதனத்தில், சாளக்கிராம ஆராதனத்தில் சாதிக்கும் அதே திருமணியை சாதிக்கலாமா?, அல்லது வேறு திருமணிதான் சாதிக்க வேண்டுமா?
பாதுகாரதனத்திற்கு பெருமாளுக்கு உபயோகப்படுத்திய எந்த வஸ்துவையும் உபயோகிப்பதில்லை, தனியாகத்தான் செய்யவேண்டும்.
அகத்தில் 2 திருமணிகள் பயன்படுத்தலாமா?
பொதுவாக நம் பெரியவர்கள் எல்லோரும் ஒரு திருமணிதான் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அகத்தில் இரண்டு திருமணிகள் வைத்துப் பண்ணுவதாயிருந்தால் கண்டை சேவிப்பதற்கென்று ஒருவர் வேண்டும். அதை உதேசித்துதான் நம் பெரியவர்கள் ஒரு திருமணியாழ்வர் மட்டும் வைத்து திருவாராதனம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
இரண்டு வைத்துப் பண்ணுவதனால் பெரிய பாபமொன்றுமில்லை ஆனால் கண்டை சேவிப்பதற்கென்று ஒருவர் வேண்டும்.
பிதாவின் ப்ரத்யாப்தீக ஶ்ராத்தத்தை ஜேஷ்டனும், கனிஷ்டனும் தனித்தனியே செய்ய நேர்ந்தால் மாதா எங்கிருக்கவேண்டும்? பின்பற்றவேண்டிய முறைகளிருப்பின் தயை கூர்ந்து விளக்கவும்.
பிதாவின் ப்ரத்யாப்தீகத்தை ஜேஷ்டனும், கனிஷ்டனும் தனித்தனியே செய்ய நேர்ந்தால், மாதா ஏதாவது ஒரு பிள்ளையினிடத்தில் அவசியம் இருக்கவேண்டும். அப்படி அவர்கள் எந்தப் பிள்ளையுடன் இல்லாமல் இருந்தால் அவர் தனியே ஶ்ராத்தம் பண்ணவேண்டி வரும்.
“தாயார் ஜீவித்திருக்க தகப்பனாரின் வருஷாப்தீகம் முடிந்தபின் கயா ஶ்ராத்தம் பண்ணலாமா?,பிரயாண சௌகர்யத்தால் கனிஷ்டன் ஜேஷ்டனுக்கு முன்னால் கயா ஶ்ராத்தம் பண்ணலாமா?”
தகப்பனாரின் வருஷாப்தீகம் முடிந்தபிறகு தகப்பனாரை உத்தேசித்து கயா ஶ்ராத்தம் பண்ணலாம் தவறொன்றுமில்லை. ஆனால் பிற்காலத்தில் தாயார் பரமபதித்த பின்னர் தனியாக அவருக்கென்று பிண்டம் வைக்க போகவேண்டிவரும்.
ஜேஷ்டனுக்கு முன்னர் கனிஷ்டன் பண்ணுவதில் தவறொன்றுமில்லை எனத் தோன்றுகிறது.
நாங்கள் இருந்த வீட்டை இடித்து விட்டு Flat கட்டுகிறோம். வீடு முடிந்ததும் க்ருஹப்ரவேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை,ஏனெனில் ஏற்கனவே முதலில் க்ருஹப்ரவேசம் பண்ணியிருப்பதால் சாந்தி ஹோமம் பண்ணிபால் காய்ச்சி சாப்பிட்டால் போதும் என்கிறார்கள்.எது செய்வது உசிதம் என்று சொல்ல வேண்டுகிறேன்.
இருக்கிற வீட்டை இடித்துவிட்டு flatஆக மாற்றி கட்டும்போது, அந்த வாஸ்துவே புதிதாக மாற்றிக் கட்டுகின்றபடியினாலே க்ருஹப்ரவேசம் செய்வதுதான் உசிதம். பால்காய்ச்சுவது என்பது மட்டும் போதாது. க்ருஹப்ரவேசம் செய்வதைதான் பெரியவர்களின் ஆசாரத்தில் பார்த்திருக்கிறேன்.
அகத்திக்கீரையை துவாதசி அன்றுமட்டும்தான் உட்கொள்ளவேண்டுமா அல்லது இதர நாட்களிலும் எடுத்துக்கொள்ளலாமா?
அகத்திக்கீரையை துவாதசி தினத்தில் அவசியம் உட்கொள்ள வேண்டும். அமாவாஸை ஶ்ராத்த தினம் முதலிய தினங்களிலும் உபயோகப்படுத்தலாம். அது இல்லாமல் வேறு தினங்களில் மருந்துக்காக வேண்டும் என்றால் உபயோகப்படுத்தலாம்.
முனித்ரய ஸம்பரதாயம் பற்றிய சந்தேகம்: நாம் பல சந்தர்ப்பங்களில் விரதம் இருக்கின்றோம் (ஏகாதசி, ஶ்ரவண துவாதசி, ஸ்ரீ இராம நவமி, ந்ருஸிம்ஹ ஜயந்தி, க்ரஹண காலம் ஒருவேளை மோக்ஷம் சூர்ய அஸ்தமனம் பின் சம்பவித்தால்), இப்படி இருக்கும் சமயங்களில் அடுத்தநாள் பாரணை தளிகைதான் பண்ணவேண்டுமா அல்லது எப்போதும் போல் தளிகை பண்ணலாமா?
ஏகாதசி, ஶ்ரவண துவாதசி, ஸ்ரீ இராம நவமி, ந்ருஸிம்ஹ ஜயந்தி ஸ்ரீ ஜெயந்தி முதலிய வ்ரதங்களுக்கு மறுநாள் பாரணை தளிகைதான் செய்வது வழக்கம். புளி சேர்க்கும் வழக்கமில்லை. க்ரஹணத்திற்குப் பிறகு சாப்பிடக்கூடாது என்பது நிஷித்தம்தான், அது வ்ரதமில்லை. அதனால் க்ரஹண காலத்தில் க்ரஸ்தாஸ்தமனமாக இருந்ததானால் அதற்குப் பிறகு பாரணை செய்யும் வழக்கமில்லை.
அடியேனுடைய மாமியார் பெருமாள் திருவடி அடைந்து 15 நாட்கள் ஆகிறது. அடியேனும் அடியேன் ஆத்துக்காரரும் இனி என்ன என்ன அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.
மாஸ்யம், ஊனம் முதலானவையெல்லாம் விடாமல் பண்ணவேண்டும்.
முடிந்தவரைக்கும் ஆஹாரத்தில் சுத்தமாக இருத்தல்வேண்டும். வெளியே சாப்பிடுவதை இயன்றளவு தவிர்த்தல்வேண்டும். நன்றாகச் சுத்தமாக நம் பந்துக்களும் இருந்தால் அவர்கள் அகத்தில் சாப்பிடலாம். ரொம்ப நியமத்துடன் இருப்பவர்கள், பரான்ன நியமம் என்று சொல்வார்கள் அதாவது நாமே சம்பாதித்து, நாமே தயாரித்துச் சாப்பிடும் ஆஹாரம் என்று சொல்வார்கள். இதன் நோக்கமாவது ஆஹாரத்தில் அசுத்தம் கலக்கக்கூடாது என்பதாகும்.
அதன் பின் இந்த ஒருவருட நியமங்கள் என்பது, தீர்த்தயாத்திரை போகக்கூடாது, மலையேற கூடாது, ஸமுத்ர ஸ்நானம் கூடாது போன்றவையாகும். ஏன்னெறால், தீர்த்தயாத்திரைக்குப் போகிறேன் என்று பண்ணவேண்டிய மாஸ்யங்களெல்லாம் விட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்நியமங்களெல்லாம் வைத்துள்ளார்கள்.
மாஸ்யங்களும் சுத்தியும்தான் மிகவும் முக்கியமான ஒன்று. மற்றபடி நித்யகர்மானுஷ்டானங்களைப் பண்ணிக்கொண்டு பெருமாளைச் சேவித்துக் கொண்டிருந்தாலே போதுமானதாகும்.
பின்குறிப்பு: மாசிகம், ஊனம் பற்றிய அனுஷ்டாங்கங்கள் அனைத்தும் கேள்வி கேட்டவர் மூத்தவராக இருந்தால் அனைத்தும் பண்ணவேண்டும். அவர் இளையவர் என்றால், அவரின் மூத்த சகோதரர் செய்யும் கைங்கர்யங்களுக்கு உறுதுணையாக இருந்தாலே போதுமானதாகும்.
எனது பெண்ணும் வரப்போகும் மாப்பிள்ளையும் பஞ்ச சம்ஸ்காரம் மற்றும் பரந்யாஸம் பெற்றுக்கொண்டவர்கள். அவர்களின் விவாஹத்தை ஜெய்ன/அல்லது இதர திருமண மண்டபத்தில் நடத்தலாமா?
பொதுவாகவே சம்ஸ்காரங்களை நல்ல இடத்தில், நல்ல க்ஷேத்ரத்தில் செய்வதே உசிதம்.
இன்றைய காலகட்டத்தில் எல்லாருக்கும் அதை அமைவதில்லை.வேறிடத்தில் செய்யும்போது அவர்களுக்கு தரும் வாடகையினால் க்ரய சுத்தி என்ற ஒன்று ஏற்படுகிறதாக நினைத்துக்கொள்ளலாம்.
அந்த இடத்தில் புண்யாஹவாசனம் பண்ணிவிட்டு பின்னர் ஸம்ஸ்காரங்கள் பண்ணலாம்.
அடியேனின் சிறியதகப்பனார் சென்ற மாதம் ஆசார்யன் திருவடி அடைந்தார். நான் செய்ய வேண்டிய கர்மங்கள் என்ன? எனக்கும் க்ஷேத்ர தரிசனம் மலை தரிசனம் கிடையாதா அல்லது மேலும் பண்டிகை, அகத்துப் பெருமாள் கைங்கர்யங்ககள் பண்ணலாமா?
சிறியதகப்பனார் ஆசார்யன் திருவடி அடைந்தபிறகு அவருக்காக நீங்கள் செய்யவேண்டிய குழித்தர்ப்பணம், தீட்டுக்காத்தல் முதலியவையை செய்திருப்பீர்கள். அதற்குப்பிறகு நீங்கள் செய்யவேண்டியவை ஒன்றுமில்லை.
ஒருவருட காலம் மலையேறி பெருமாள் சேவிக்கக்கூடாது, ஸமுத்ர ஸ்நானம், தீர்த்தஸ்நானம் செய்யக்கூடாது என்பதெல்லாம் சாக்ஷாத் கர்த்தாவிற்கு மட்டும்தான் மற்றவர்களுக்கில்லை.
பண்டிகை விஷயத்தில் மிகவும் ஆடம்பரமாகச் செய்யாமல் செய்யவேண்டியவதை மட்டும் செய்யலாம். காரணம் நம் பண்டிகைகள் எல்லாம் பெருமாளுக்கு ஆராதனம் செய்வதானபடியினாலே பெரியளவில் இல்லாமல் லகுவாகச் செய்யலாம்.
நம் ஸம்ப்ரதாயத்தில் ஜபம் செய்யும்போது துளசி, வேப்பம் அல்லது தாமரை மாலைகளை ஸ்த்ரீகள் மற்றும் புருஷர்கள் ஏன் உபயோகிப்பதில்லை? ஸ்த்ரீகள் ஜபம் செய்ய என்ன மாலையை பயன்படுத்தவேண்டும்?
ஜபம் செய்யும்போது கை விரல்களின் கணுக்களாலேயே எண்ணிக்கொள்வது ஶ்ரேஷ்டம் என்று நம் பெரியோர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். மேலும் நம் பெரியவர்கள் யாரும் ஜபமாலையை உபயோகித்ததாகத் தெரியவில்லை. ஆகையால் புருஷர்களானாலும், ஸ்த்ரீகளானாலும் கை விரலினாலேயே செய்வது உசிதம் எனத் தோன்றுகிறது. அப்போதுதான் நம் செறிவாற்றலும் (Concerntration) நன்றாகயிருக்கும்.
வர்ணாஶ்ரமம் என்பது பிறப்பினாலா அல்லது கர்மாவினாலா (நாம் இந்த பிறவியில் செய்யும் கர்மா) ஏற்படுகிறது? கர்மா என்றால் ஒருவன் ப்ராஹ்மணன் செய்யும் செயலை செய்தால் அவனும் ப்ராஹ்மணன் ஆகிவிடலாம் அல்லவா? இதற்கு ஏதும் ப்ரமாணம் இருக்கிறதா தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
வர்ணாஶ்ரமம் என்பது பிறப்பினாலேயேதான் ஏற்படுகிறது, இதற்கு ப்ரமாணம் சத்வாரோ வர்ணா: ப்ராஹ்மணக்ஷத்திரியவைஶ்யசூத்ரா தேஷாம்பூர்வஸ்பூர்வ: என்பது ஆபஸ்தம்பருடைய வார்த்தை.
ஒருவர் யக்ஞோபவீதம் மாற்றிக்கொள்ள கால நிர்ணயம் உள்ளதா? உதா: உணவு உட்கொள்ளும் முன் அல்லது மாத்யாஹ்னிகம் முன் என்று.
யக்ஞோபவீதம் சாதாரணமாக பூர்வாஹ்னத்தில் மற்றிக்கொள்வதும் அது செய்தபிறகு ஏதாவது நித்யானுஷ்டானம் செய்வதும் வழக்கம். அதை மாற்றிக்கொண்டு மாத்யாஹ்நிகம் செய்வது உசிதம்
புதிய த்வாரகா சிலாவை ஆராதன சாளக்கிராமங்களுடன் சேர்த்து வைத்து ஆராதனம் பண்ணலாமா? வழிமுறைகள் உண்டா (ப்ரதிஷ்டை போன்ற நியமங்கள்)
புதிய த்வாரகா சிலாவை சாளக்கிராமப் பெருமாளுடன் சேர்த்து ஆராதனம் செய்யலாம். அப்படி முதல்நாள் செய்யும்போது பாலினாலே திருமஞ்சனம் செய்தாலே போதுமானதாகும்.
பகவதி என்றால் நம் தாயாரைக் குறிக்குமா அல்லது பார்வதி தேவியையா ? கேரளாவில் உள்ள பகவதி தெய்வம் பற்றிய கேள்வி.
பகவதி என்கிற பதம் தாயாரை நிச்சயமாகக் குறிக்கும். “பகவதி ஶ்ரீயம் தேவி” என்று ஸ்வாமி பாஷ்யகாரர் கத்யத்தில் ஆரம்பிக்கும்போதே சாதித்துள்ளார்.
பகவதி என்றால் ஆறு குணங்களை உடையவள். அதாவது ஞான, பல, ஐஶ்வர்ய, வீர்ய, சக்தி, தேஜஸ் என்ற ஆறு குணங்களை உடையவள் என்று பொருள். எம்பெருமானுக்கும் இதே காரணத்தினால்தான் பகவான் என்று பெயர். அந்தப் பகவானுடைய மகிஷி பகவதி. அவளுக்கும் அதே ஆறு குணங்கள் உடையவள் என்று அர்த்தம்.
கேரளாவில் பகவதி என்பது பார்வதி தேவியைக் குறிக்கும். ஒரு அபிமானத்தில் அவர்கள் வைத்துக்கொண்டுள்ள பெயர். நாம் எப்படி எம்பெருமான் மீதுள்ள அபிமானத்தினால் பெயர் வைத்துக்கொண்டுள்ளோமோ அதேபோல்தான். மேலும் ஈஶ்வரன் என்றால் சர்வேஶ்வரனான எம்பெருமானைத்தான் குறிக்கும் ஆனால் ஈஶ்வரன் என்ற பெயர் சிவனுக்கு ஏற்பட்டதாக கருதப்படுகிறது அதேபோல்தான் பகவதி என்ற பெயரும். பகவதி என்றால் தாயார்தான் ஆனால் ப்ரசித்தமாக பார்வதிதேவிக்கு அமைந்துவிட்டது.
உபநயனம் செய்யுமுன் சுமங்கலி ப்ரார்த்தனை புதிதாகச் செய்ய ஆரம்பிக்கவேண்டுமா? இதுவரை செய்ததில்லை. போன வருடம் மாமியார் சுமங்கலியாக பரமபதித்தார்.அதனால் இந்தச் சந்தேகம்.” ஆம் எனில் ஸ்ரீவைஷ்ணவ க்ருஹங்களில் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்?”
சுமங்கலி ப்ரார்த்தனை என்பது வேதோக்தமாகவோ, சம்ஸ்காரமாகவோ சொல்லப்பட்டதில்லை. ஆகையால் அவரவர் அகத்து வழக்கத்தில் இருந்தால் மட்டும் செய்யலாம். செய்யாமல்போனால் ஒரு தோஷமும் கிடையாது. புதிதாக ஏற்படுத்திச் செய்யவேண்டிய அவசியமும் கிடையாது.
பரந்யாஸம் ஆகும்முன் மற்றும் ஆனபின்னர் ஒருவர் நுட்பமாக அனுஷ்டிக்க வேண்டியவற்றை விவரிக்க வேண்டுகிறேன். உ.தா உணவுப்பழக்கம்,சஞ்சாரம் முதலியவை.
பரந்யாஸம் ஆகும்முன் பரந்யாஸம் ஆகவேண்டும் என்ற த்வரை மற்றும் சதாசார்யன் அனுக்ரஹத்தினால் பரந்யாஸம் ப்ராப்தமாக வேண்டும் என்ற ஆசை இருக்கவேண்டும். இவ்வெண்ணங்களே பரந்யாஸம் ஆகும்முன்னர் இருத்தல்வேண்டும்.
பரந்யாஸம் ஆனபிறகு பல விஷயங்கள் பின்பற்றவேண்டும். அதிலும் முக்கியமாக இவ்விரண்டு விஷயங்கள் தவிர்க்கவேண்டும். தேவதாந்திர சம்பந்தமும், பாகவத அபசாரமும் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். இப்படிக் கைக்கொள்ளவேண்டிய மற்றும் கைவிட வேண்டிய விஷயங்கள் நாம் செய்வதன் நோக்கம் பவகத் ப்ரீத்தியாகும். எம்பெருமான் ஶாஸ்த்ரம் சொல்லியபடி நடந்தால் ப்ரீத்தியாவான். ஆகையால் ஶாஸ்த்ரம் சொன்ன ஆஹார நியமம்படி, அதாவது நிஷித்தமான பொருட்களையெல்லாம் தவிர்த்து ஶாஸ்த்ரம் சொன்ன வழியில் நாம் ஆஹாரம் உட்கொள்ளவேண்டும். இயன்றளவு வெளியே சாப்பிடுவதைத் தவிர்த்தல்வேண்டும். தேவதாந்தர சம்பந்தம் கூடாது. திவ்யதேசங்களுக்குப் போகலாம். அபிமான ஸ்தலம், புராண ஸ்தலம் போன்றவற்றிற்குச் செல்லலாம். வேறுகோயில்களுக்கு போவதைத் தவிர்த்தல் வேண்டும்.
விருத்தி தீட்டில் தளிகை பண்ணலாமா. அடுப்பு தொடலாமா?
விருத்தி தீட்டோ அல்லது வேறு எந்த மாதிரியான தீட்டாக இருந்தாலும் தளிகை பண்ணி சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அவசியம் தளிகை செய்து சாப்பிடலாம். ஆனால் அந்தச் சமயத்தில் எந்தப் பாத்திரங்களை உபயோகப்படுத்துகிறோமோ அவைகளை எல்லாம் தீட்டு முடிந்தபிறகு நன்கு சுத்தி செய்து உபயோகிக்க எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாமனார் பரமபதமடைந்து வருஷாப்தீகம் முடியும்வரை நாட்டுப் பெண் எண்ணெய் ஸ்நானம் செய்யலாமா?
பொதுவாக வருஷாப்தீக கைங்கர்யம் முடியும் வரையில் கர்த்தாவும் கர்த்தாவுடைய பார்யாளுமாவது (பிள்ளையும் நாட்டுப்பெண்ணும்) மங்கள ஸ்நானம் செய்வது வழக்கமில்லை.
அடியேனுக்கு ஆசார்ய ஸம்பந்தம் இன்னும் ஏற்படவில்லை சில சந்தேகங்கள்:
Q1. மாத்வ ஸம்பரதாயம் மற்றும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பரதாயத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே விஷ்ணு பக்தர்கள் என்கின்ற ரீதியில் ஸ்ரீவைஷ்ணவர்கள்தான். ஆனால்கூட அவரவர்களுடைய கொள்கையில் வித்தியாசம் உண்டு. அதுதான் விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்பது.
Q2. ப்ரபத்தி செய்தால் மோக்ஷம் என்று ஶாஸ்த்ரம் சொல்லுகிறது. பக்தி செய்தால் மோக்ஷம் கிடைக்காது என்று சொல்லவில்லை. பக்தி செய்தால் மோக்ஷம் கிடைக்காதா என்ற கேள்வியே சரியான புரிதல் இல்லாததினால் வந்திருக்கிறது என்று நினைக்கின்றேன். மோக்ஷத்திற்கு நேர்காரணமாக இந்த ப்ரபத்தி என்பது வருகின்றது. பக்தி என்பது ப்ரபத்தியை மூட்டி அந்த மோக்ஷத்திற்குக் காரணமாக அமையும். உதாஹரணத்திற்கு, பத்து படிக்கட்டு ஏறி 11ஆவது படிக்கட்டில் மாடிக்குப் போகமுடியும் என்கின்ற போது, பத்தாவது படிக்கட்டு ஏறினால்தான் மாடிக்குப் போக முடியுமா? 1,2 படிக்கட்டு ஏறினால் போகமுடியாதா என்று கேட்பது போல் இருக்கிறது. அந்த ரீதியில் பக்தி என்பது கட்டாயம் வேண்டும். அதில் ஒரு சந்தேகமும் இல்லை.
Q3. பக்தியில் பல நிலைகள் உண்டு. சாதாரணமான பக்தி என்பது ஒரு மனிதனுக்கு யாராக இருந்தாலும் எப்போதுமே தேவை. ப்ரபத்திக்குக்கூட அந்தச் சாதாரணமான பக்தி தேவை. அது இல்லாமல் இருக்க முடியாது. ப்ரபத்தி என்று சொன்னால் அவன் பக்தி இல்லாதவன் என்று அர்த்தம் கிடையாது. பக்தியோகம் என்பது பகவத் கீதையில் சொல்லப்பட்டிருப்பது போல் தியானம் அது. அது நம்மால் பண்ணமுடியாது என்ற ரீதியில் இருக்கின்றது. ப்ரபத்தி பண்ணுபவனுக்கும் அடிப்படையான பக்தி கட்டாயம் இருக்கும். அதனால் அவன் பக்தி இல்லாதவன் என்று சொல்ல முடியாது.
Q4. ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் பண்ண உபநயனம் ஆகியிருக்கவேண்டும் என்கின்ற நிர்பந்தம் கிடையாது.
Q5. மஹாலக்ஷ்மீ தாயாரும் ஸ்ரீமன் நாராயணனும் கட்டாயம் ஒருவர் கிடையாது. இரண்டு பேர்.
விசிஷ்டாத்வைதம் என்றால் எல்லோருக்குள்ளும் அந்தர்யாமியாக பகவான் இருக்கின்றான். அந்தர்யாமி என்றால் உள்ளுக்குள்ளேயிருந்து நியமனம் பண்ணுபவராக பகவான் இருக்கிறான். பகவான் இல்லாத இடமே கிடையாது. இதை மாத்வ ஸம்பரதாயத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு ராஜா நியமனம் பண்ணுவதுபோல் பகவான் லோகத்தை ரக்ஷிக்கின்றான் என்று சொல்லுவார்கள். ராஜா வெளியில்யிருந்து கொண்டுதானே நியமனம் பண்ணிக்க கொண்டிருக்கிறான். ஆனால் இது அப்படிக்கிடையாது. எல்லா வஸ்துக்குள்ளும் அதாவது சேதனா/அசேதனா என அனைத்தின் உள்ளும் பகவான் ஆத்மாவாக இருக்கின்றான். அதனால்தான் அவனுக்குப் பரமாத்மா என்று பெயர். இந்த மாதிரியான ரீதியில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. இதைக் காலக்ஷேபம் பண்ணிக் கேட்டுக்கொள்ளலாம்.
அதனால்தான் விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்று பெயர். விசிஷ்ட அத்வைதம் என்றால் எல்லாத்தையும் சேர்த்து பகவான் இருக்கின்றபடியால் அதாவது சகல ஜகத் கூடவும் சேர்த்து இருக்கக்கூடிய பகவான் என்பவர் விசிஷ்டம், அவர் ஒருவர் தான் இருக்கின்றார்.
த்வைதம் என்றால் பகவான் வேறு ப்ரபஞ்சம் வேறு என்று பிரித்துச்சொல்வது த்வைதம்.
இரண்டு பேர் இருக்கிறார்கள் என்பது வாஸ்தவம். ஆனால் சேதனா/அசேதனா இவை இரண்டும் பகவானுக்கு விசேஷணமாக இருக்கின்றார்கள். எல்லாவற்றுக்குள்ளும் பகவான் இருக்கின்றார், மேலும் அவரை விட்டுப்பிரிந்து இருக்க முடியாது. எப்பொழுதுமே விசிஷ்டமாக கூடவே இருக்கின்றான். அதுவே விசிஷ்டாத்வைதம்.
ஸ்ரீவைஷ்ணவ தீக்ஷைப் பெற பூணூல் அணிந்திருக்கவேண்டும் என்கின்ற நிர்பந்தம் கிடையாது
பெருமாளின் அனுக்ரஹம் இல்லாமல் தாயார் மட்டும் தனித்து மோக்ஷம் அளிக்கமுடியுமா என்று கேட்டால், ஶாஸ்த்ரங்களில் அப்படிச் சொல்லவில்லை. ஶாஸ்த்ரம், வேதம், இதிஹாச-புராணம் எல்லாவற்றிலும் பெருமாள்-தாயார் திவ்யதம்பதிகளாக இருந்து மோக்ஷம் கொடுக்கிறார்கள் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் இதைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமேதவிர தனியாக முடியுமா முடியாதா என்றெல்லாம் ஆலோசனையெல்லாம் பண்ணவேண்டாம். பொதுவாக க்ரந்தங்களில் என்ன சொல்லியிருக்கிறது, ஆழவார் ஆசார்யார்கள் என்ன சொல்லியிருகிறார்கள் என்றால், திவ்யதம்பதிகள் இரண்டுபேருமாக மோக்ஷம் கொடுக்கிறார்கள்.
மந்த்ராலயம் (ஜீவ சாமாதிக்கு) ப்ரபன்னர்கள் போகலாமா? போய்ச் சேவிக்கலாமா?
ப்ரபன்னர்கள் மந்த்ராலயத்திற்குப் போய்ச்சேவிக்க வேண்டிய அவசியமில்லை. நம் ஆழ்வார்கள், ஆசார்யர்கள் அவர்களை நாம் சேவித்தால் போதும்.
மாஹாளயபக்ஷத்தில் மாவிளக்கு ஏற்றலாமா?
இதற்குப் பதிலை பிறகு தெரிவிக்கின்றோம்.
நாட்டுப்பெண் கர்ப்பவதியாய் இருக்கும் பக்ஷத்தில் மாமனார் தர்ச/ஸங்க்ரமண ஶ்ரார்த்தம் பண்ணலாமா?
நாட்டுப்பெண் கர்ப்பவதியாய் இருக்கும் பக்ஷத்தில் மாமனார் தர்ச/ஸங்க்ரமண ஶ்ரார்த்தம் கட்டாயம் பண்ணவேண்டும். ஏனென்றால் அததெல்லாம் நித்யகர்மா,அதைப் பண்ணாமல் இருக்கக்கூடாது.
கர்பாதான ஸம்ஸ்காரம் என்றால் என்ன? அந்த ஸம்ஸ்காரத்தின் முக்கியத்துவம் என்ன என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.
சாந்தி மூஹூர்த்தம் என்று சொல்வதுதான் கர்பாதான ஸம்ஸ்காரம். அது ஒரு குடும்பத்தினுடைய அபிவ்ருத்தி அதாவது அடுத்த சந்ததி வரவேண்டும் என்பதற்காக சில மந்திரங்களைச் சொல்லி செய்யக்கூடிய ஒரு சாந்திமூஹூர்த்தமாக இருக்கின்றபடியால் கர்ப ஆதான ஸம்ஸ்காரம், அதாவது கர்பத்தை உண்டாக்குதல் என்ற ரீதியில் கர்பாதான ஸம்ஸ்காரம் என்பதாகப் பெயர். அது நம் குடும்பத்தினுடைய க்ஷேமத்திற்கும், அபிவ்ருத்திக்கும், சகலவிதத்திற்கும் மங்கலங்களுக்கும் அது காரணமாக இருக்கின்றபடியால் விசேஷமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சிலர் மஞ்சள் ஶ்ரீசூர்ணமும், சிலர் சிகப்பு சூர்ணமும் இட்டுகொள்கிரார்களே? இதில் எது உகந்தது? தாத்பரியம் என்ன?
இக்கேள்வியின் பதில் சுதர்சனம் ப்லவ வருடம் ஆடிமாத இதழில் (Q07JUL21001) கூறப்பட்டுள்ளது.
மஞ்சள் ஸ்ரீசூர்ணம் என்பது இயற்கையானது. சிகப்பு என்பது சிலது கலந்துவந்திருப்பது. வைதீகமாக இருப்பவர்கள் மஞ்சள் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்வார்கள். சிலர் சிகப்பை இட்டுக்கொள்வார்கள்.
ஏகாதசி அன்று துளசி ஸ்வீகரிக்கலாமா? விரததத்திற்குப் பங்கம் உண்டாகுமா?
ஏகாதசி அன்று பூர்ண உபவாசம் இருப்பவர்கள் துளசியைச் சாப்பிடமாட்டார்கள். பெருமாள் தீர்த்தம் மட்டும் உட்கொண்டு பூர்ண உபவாசம் இருக்கவேண்டும். சிலர் அதாவது ஒரளவு பலகாரங்கள் எல்லாம் சாப்பிடலாம் என்பவர்கள் துளசியைச் சாப்பிட்டால் தவறொன்றுமில்லை.
Q1. ஸ்ரீவைஷ்ணவராக மாற ஆசைப்படும் ஒருவர், பூண்டு வெங்காயம் சாப்பிட்டால் ஸ்ரீவைஷ்ணவராகும் தகுதியை இழக்கின்றாரா? குடும்பச்சூழல் காரணமாய் சாப்பிட நேர்ந்தால் அது பாபமாகுமா?
Q2. ஸ்ரீவைஷணவர் துளசிமாலையை நித்யமாகவே கழுத்தில் தரிக்கலாமா?
Q1. ஸ்ரீவைஷ்ணவர் என்றால் விஷ்ணு பக்தர் என்று அர்த்தம். பகவானுடைய திருவுள்ளம் உகக்கும்படியாக நடந்தால் அவருக்கு ஸ்ரீவைஷ்ணவத்தில் பூர்த்தி இருக்கு அன்று அர்த்தம். அப்படியில்லையென்றால் பூர்த்தி இல்லாமல் அவரும் வைஷ்ணவர் என்கின்ற ரீதியில் நிறைவான ஒரு வைஷ்ணவராக ஆகமுடியாது என்கின்ற நிலை வரும்.
பூண்டு வெங்காயம் சாப்பிடுவதில் வைஷ்ணவர், ஸ்மார்த்தர் என்றெல்லாம் கிடையாது. அது ஒரு ஸாத்வீகமான ஆகாரம் கிடையாது. பகவான் என்ன சொல்லி இருக்கிறார் என்றால், என்னுடைய பக்தனாக இருக்கின்றவன் ஶாஸ்த்ரத்தில் என்னுடைய அபிப்ராயமாக என்னென்ன இருக்கின்றதோ அதை மதித்து நடக்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அந்த ரீதியில் இதைச் சாப்பிடக் கூடாது என்றிருக்கிறது. அதனால் அதைச் சாப்பிடாமல் இருந்தால் வைஷ்ணவத்வம் பூர்த்தியாக இருக்கும் . இல்லாவிட்டால் அது நிறைவு பெறாமல் இருக்கும்.
குடும்பச்சூழல் காரணமாய் சாப்பிட நேர்ந்தாலும் அது பாபமாகும். ஏனென்றால் அதைச் சாப்பிடக்கூடாது என்று ஶாஸ்த்ரம் சொல்லி இருக்கிறது. அதனால் அது பாபமாகும். அது ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் பொதுவானது.
------
Q2. ஸ்ரீவைஷ்ணவர் துளசிமாலையை தரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. துளசி மாலையில் பலவகை உண்டு. ப்ரதிஷ்டை பண்ணாத துளசி மாலையை பெரியோர்கள் ரொம்ப தரிப்பதில்லை. சில ஸம்ப்ரதாயத்தில் தரித்திருக்கிறார்கள். நம் ஆழவார் ஆசார்ய ஸம்ப்ரதாயத்தில் ப்ரதிஷ்டை பண்ண துளசி மாலையை பலபேர் தரித்துக்கொண்டிருக்கிறார்கள். ப்ரதிஷ்டை பண்ணால் அதில் சில நியமனங்கள் எல்லாம் உண்டு. தீட்டு காலத்தில் தரிக்கக்கூடாது. பெரியோர்களிடம் கேட்டுக்கொண்டு தரிக்கலாம்.
அடியேனின் மாமனார் பரமபதித்து சிலநாட்களே ஆனதால், த்வஜஸ்தம்பம் இருக்கும் கோவில்களுக்கு போகக்கூடாது என்று கூறினார்கள். அதன் காரணம் என்ன என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
நாம் துக்கத்தில் இருக்கிறோம் என்பதுதான் காரணம். நாம் துக்கத்தை அனுஷ்டானம் பண்ணவேண்டும். அந்த ரீதியில் கொண்டாட்டங்கள், உத்ஸவங்கள், நாலுபேர் சேர்ந்து இருக்கக்கூடிய இடங்கள், அங்கெல்லாம் சிலநாட்கள் போகக்கூடாது என்று சொல்வார்கள். அதில் சில சங்கடங்கள் இருக்கும். வெளியில் இருப்பவர்கள், புதிதாகப் பார்ப்பவர்கள் எல்லாம் விசாரிக்க நேரிடும். இதெல்லாம் கோவிலில் நடக்கலாம். இதைத் தவிர்ப்பதற்காகத்தான் கோவில்களுக்குப் போக வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அகத்தில் இருக்கும் புருஷர் ஸம்ப்ரதாய முறையைப் பின்பற்ற விருப்பமில்லையென்றால், அவ்வகத்து ஸ்த்ரீ சாளக்கிராம பெருமாளுக்கு ப்ரசாதம் அமுதுசெய்யலாமா? வேறு என்னவெல்லாம் பண்ணலாம்?
அகத்தில் இருக்கும் புருஷர் ஸம்ப்ரதாய முறையைப் பின்பற்ற விருப்பமில்லையென்றால், அவ்வகத்து ஸ்த்ரீ சாளக்கிராம பெருமாளுக்குத் தாராளமாக ப்ரசாதம் அமுதுசெய்யலாம். மேலும் பெருமாளுக்குத் திருவிளக்கு ஏற்றி, கோலம் போட்டு, பெருமாளுக்கு ஸ்தோத்ர பாடங்களெல்லாம் சேவிக்கலாம்.
அடியேனின் திருத்தகப்பனார் டிசம்பர் மாதம் பரமபதித்துவிட்டார். அடியேன் நதி ஸ்நானம் செய்யலாமா?
நதி ஸ்நானம் பண்ணலாம். அதாவது தீர்த்த யாத்ரையாகப் பண்ணி புண்ய நதி (கங்காநதி) ஸ்நானம் வேண்டாம். வேறு ஏதாவது ஒரு காரணத்தினால் ஸ்ரீரங்கம் போகவேண்டி வந்தால் அப்பொழுது காவேரி ஸ்நானமெல்லாம் பண்ணலாம்.
அபர காரியத்தில் சபீண்டிகரணத்தில் விஷ்வே தேவர், விஷ்ணு மற்றும் பித்ரு ஸ்தானங்களில் இருந்தால், ஒவ்வொரு ஸ்தானத்துக்கும் எத்தனை நாட்கள் எந்த மாதிரி தீட்டு உண்டு? பிராயச்சித்தம் எத்தனை காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்ற விவரங்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்
இதற்கு PDF இருக்கிறது. அதை விரைவில் பகிர்கின்றோம்.
பங்குனி மாதத்தில் வீடு மாறலாமா?
பங்குனி மாதத்தில் க்ருஹப்ரவேசம் செய்யும் வழக்கமில்லை. வீடும் மாறக்கூடாது.
ஒரு ஸ்த்ரீ கர்பமாக இருக்கும்போது ஏன் அவளது பர்தா க்ஷௌரம் செய்துகொள்ளக்கூடாது?
பொதுவாக தீக்ஷா காலங்களில் சில நியமங்கள் சொல்லப்பட்டுள்ளது. தீக்ஷா என்பது ஒரு வ்ரதகாலம் போல். பலவிதமான தீக்ஷைகள் உண்டு, பல காலங்களில் தீக்ஷை சொல்லப்பட்டுள்ளது, உ.தா யாகதீக்ஷா, உபநயனம் சமயம், விவாஹத்திற்கு என்று தீக்ஷைகள் உண்டு. அந்தத் தீக்ஷா காலத்தில் அவர்கள் வபனம் செய்துகொள்ளக் கூடாது என்றிருக்கிறது.
அந்த ரீதியில் மனைவி கர்பமாக இருக்கும்போது அவளின் பர்தாவிற்கு தீக்ஷா காலம் சொல்லியிருக்கிறது. அதாவது, அவர் வ்ரதத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். பொதுவாகவே வ்ரததினங்களில் வபனம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்றிருக்கிறது. இது வ்ரதகாலமானபடியாலே வபனம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்பதாகும்.
நம் தூரத்து உறவினர் அல்லது தெரிந்தவர்கள் இல்லங்களில் அசந்தர்ப்பம் நிகழ்ந்தால் (வெளியூரில் நாம் நேரே செல்லமுடியாத சூழ்நிலையில்) அவர்களை விசாரிக்க குறிப்பிட்ட நாட்களில்/கிழமைகளில் மட்டும்தான் செய்ய வேண்டுமென வழக்கம் உள்ளதா? அப்படியெனில் எந்த நாட்கள் உகந்தது.
இதைப்பற்றி பலவிதமான அபிப்ராயமுண்டு. ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு விதமான ஆசாரம், அதாவது ஸ்ரீரங்கத்தில் ஒருவிதமாக, காஞ்சியில் ஒருவிதமாக என்று பலவித ஆசாரம் இருக்கிறது. சிலபேர் ஒற்றைப்படை நாளில் (1,5,7..) துக்கம் விசாரிக்கவேண்டும் என்கிறார்கள். சிலர் இரட்டைப்படை நாள் என்றும், வேறு சிலர் 10 நாட்களுக்குள் எந்த நாளானாலும் பரவாயில்லை என்றும் சொல்கிறார்கள். நிறையபேர் திங்கட்கிழமை விசாரிக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் பொதுவாகவே திங்கட்கிழமை விசாரிப்பதைத் தவிர்ப்பார்கள்.
திங்கள் தவிர மற்ற எந்த நாளானாலும் பரவாயில்லை என்பது பொதுவாக நிறையபேரிடம் இருக்கும் கருத்து. அந்தந்தத் தேசத்தில் என்ன ஆசாரமோ அதன்படி செய்யவேண்டியது.
வைர நகை அணிவது பற்றி ஶாஸ்த்ரம் என்ன சொல்லுகிறது? ஒருவர் கட்டாயம் வைரக்கல் நகை அணியவேண்டுமா அல்லது அது வேறும் ஆடம்பர ஆணிகலனாகுமா?
தங்கம் அணிவது எப்படி விசேஷமோ அதேபோல் வைரம் அணிவதும் விசேஷம்தான். அதனால் நம் உடம்பிற்கு சில க்ஷேமங்களெல்லாம் வரலாம். கட்டாயம் வைரநகை அணிந்துதான் ஆகவேண்டும் என்றெல்லாம் கிடையாது.
உ.தா சில புருஷர்கள் வைரக்கல் கடுக்கன் போட்டுக்கொள்வார்கள். அதை ஆடம்பரம் என்று சொல்லமுடியாது, ஆடம்பரமில்லாமலும் போட்டுக்கொள்ள முடியும். ஆனால் வைரத்தை மட்டும் நன்கு விசாரித்து செய்யணும். சில வைரத்திற்குச் சில தோஷங்கள் என்றெல்லாமுண்டு. அந்த வைரம் அவரை பாதிக்கும், அவர் குடும்பத்தை பாதிக்கும் என்றெல்லாமுண்டு. அதனால் இதைப்பற்றி நன்றாகத் தெரிந்தவர்களிடம் அந்த வைரக்கல்லுக்குத் தோஷம் இருக்கா இல்லையா என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதை அணியவேண்டும்.
கட்டாயம் வைரக்கல் இருக்கவேண்டும் என்றில்லை. ஆனால் சுபமான ரீதியில் ஸ்த்ரீகள், புருஷர்கள் வைரத்தில் போட்டுக்கொள்வார்கள், அது நல்லது. ஆடம்பரமாக நம்மவர்கள் யாரும் போட்டுக்கொள்ள மாட்டார்கள்.
துக்கம் திங்கள் விசாரித்து விட்டு வந்ததற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா?
திங்கட்கிழமை விசாரித்துவிட்டு வந்தால் பரிகாரம் என்று ஒன்றும் கிடையாது. வழக்கத்தில் இல்லையே தவிர ஶாஸ்த்ரப்படி அப்படியில்லை. ஒருகால் மனதிற்குக் கஷ்டமாகயிருந்தால் பெருமாளை ப்ரார்த்தித்து ஸ்ரீஸ்துதியைச் சேவிக்கலாம். வேறு பரிகாரம் கிடையாது.
நம் ஸம்ப்ரதாய முறைப்படி ஒரே கோத்ரத்தைச் சார்ந்த பெண்ணும் பிள்ளையும் திருமணம் செய்துக்கொள்ளலாமா?
நம் ஸம்ப்ரதாய முறைப்படி ஒரே கோத்ரத்தைச் சார்ந்த பெண்ணும் பிள்ளையும் திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது.
13/01/2022 அன்று போகி பண்டிகை வைகுண்ட ஏகாதசி இரண்டும் சேர்ந்து வந்தது. அப்படி வந்தால் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டுமா அல்லது பண்டிகைத் தளிகை செய்து பெருமாளுக்கு அமுது செய்தபின் அதை உட்கொள்ளலாமா?
வ்ரதங்கள் எல்லாம் பெருமாளுக்கு கிடையாது. மனுஷ்யாளுக்கு மட்டும் தான். அதனால் பண்டிகை நாட்களில் ஏகாதசியும் சேர்ந்து வந்தால் பண்டிகைத் தளிகை செய்து பெருமாளுக்கு சமர்ப்பித்து அம்சை பண்ணுவதில் எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. பண்டிகைத் தளிகையை ஏகாதசி அன்று சாப்பிடலாமா வேண்டாமா என்பது அவரவர்களைப் பொருத்தது. வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று நினைப்பது முக்கியமாக தோன்றினால் வ்ரதம் அனுஷ்டிக்கலாம் அல்லது பண்டிகைக்குப் பெருமாளுக்கு அம்சை பண்ணதை சாப்பிடுது முக்கியம் என்று தோன்றினால் அதை சாப்பிடலாம். ஆனால் கண்டிப்பாக அன்று அரிசி சாதம் சாப்பிடக்கூடாது வேண்டுமென்றால் சொஜ்ஜி செய்துப் பண்டிகை தளிகையுடன் சாப்பிடலாம்.
பண்டிகைத் தளிகை சாப்பிடுவதைவிட ஏகாதசி வ்ரதம் இருப்பதே மிகவும் ஶ்ரேஷ்டம். அன்று வ்ரதத்தை அனுஷ்டிப்பது ஒரு தவறும் கிடையாது.
ஶரணாகதி செய்தபின் நம் சகோதரர்களுக்காக கணு பண்டிகை கொண்டாடலாமா? ரஜஸ்வலை காலத்தில் கணுப்பிடி வைக்கலாமா?
ஶரணாகதி செய்தபின் நம் சகோதரர்களுக்காக கணுபண்டிகை கொண்டாடலாம்.
ரஜஸ்வலை காலத்திலும் கணுப்பிடி வைக்கலாம். ஆனால் எல்லோருடனும் சேர்ந்து வைக்காமல் தனியாக வைக்க வேண்டும்.
மாஸிகம் ஒரு மாதத்தில் தடங்கல் ஆனால், அதை அடுத்த மாஸிகத்தோடு சேர்த்து பண்ணாலாமா? அப்படிப் பண்ணும் போது என்ன விதிமுறைகளை அனுஷ்டிக்க வேண்டும்.
ஒரு மாஸிகம் நின்று போய் அடுத்த மாஸிகம் சேர்ந்து பண்ணும்போது, பித்ரு ஸ்தானத்தில் இரண்டு பேர் வேண்டும். சங்கல்பத்தில் இரண்டு மாஸிகத்தையும் சொல்லிவிட்டு “தந்த்ரேந கரிஷ்யே” என்று சங்கல்பத்தில் சொல்லவேண்டும். விஷ்ணு வர்ணத்தில் விஶ்வே தேவர் வர்ணத்தில் இரண்டையும் சொல்லி, உ.தா 4,5 என்றால் துரீய பஞ்சமான மாஸிகே தந்த்ரேன கரிஷ்யே! துரீய பஞ்சமான மாஸிகே ஶ்ரார்த்தே விஶ்வே தேவார்த்தம் பவதாக்ஷணா கர்தவ்ய: விஷ்ணு தேவார்த்தம் பவதாக்ஷணா கர்தவ்ய: பித்ரு ஸ்தானத்தில் மட்டும் இரண்டு பேர் தனித்தனியாக தூரீய மாஸிகார்த்தே பவதாக்ஷணா கர்தவ்ய: என்று ஒருத்தரும் பஞ்சமா மாஸிகார்த்தே பவதாக்ஷணா கர்தவ்ய: என்று மற்றொருத்தர் உட்கார வைக்கவேண்டும்.
அதே போல் தத்தம் கொடுக்கும்போதும் பித்ரு ஸ்தானத்தில் மாத்ரம் பிரித்துச் சொல்லவேண்டும் பாக்கியெல்லாம் சேர்ந்து வரும்.
பொதுவாக சமூகத்தில் கணவனை இழந்த பெண்களைச் சுபகாரியங்களில் பங்கேற்க அனுமதிப்பதில்லையே. அவர்கள் ஏன் ஒடுக்கப்படுகிறார்கள்? நம் ஸம்ப்ரதாய ஆசார்யர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்களா? இது ஶாஸ்த்ரரீதியான விஷயமா?அல்லது காலப்போக்கில் மனிதர்கள் கொண்டு வந்ததா? இந்தச் சமூக நிலைபாடு ப்ரபத்தி செய்த ஶ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீகளுக்குத் தகுமா? ப்ரபத்தி செய்தவரகள் நித்ய சுமங்கலிகளானபடியினால் கணவனை இழந்தவர்களாயினும் அவர்களைச் சுபகாரியங்களில் சேர்த்துக்கொள்வது தவறா? தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன். கேள்வியில் தோஷம் இருந்தால் அடியேனை க்ஷமிக்கவும்.
இதை ஸம்ப்ரதாய பரமாக புரிந்துகொள்ள வேண்டும். க்ருஹ்தாஶ்ரமத்தில் தம்பதிகளுக்கு தான் முக்கியத்வம், அவர்களுக்குதான் வைசிஶ்டியம். தம்பதியாக இருந்துதான் அனைத்து கைங்கர்யங்களும் பண்ணவேண்டும என ஶாஸ்த்ரமும் ஸம்ப்ரதாயமும் விதித்திருக்கிறது.அப்படி ஒருத்தராக இருந்தால், ஸ்த்ரீயோ புருஷரோ அவர்களுக்கு முக்கியத்வம் தரப்படவில்லை.
புருஷர்களுக்கும் மனைவியில்லாவிடில் பல வைதீக கர்மாக்கள் பண்ண தகுதியில்லாதவர்களாகிறார்கள். அதே போல் தான் ஸ்த்ரீகளும் மங்கலகார்யங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள்.
ஸம்ப்ரதாயபரமாக தம்பதிகளாக இருக்கிற வழிபாடு தான் மிகவும் சிறந்தது என வழக்கமாக வந்திருக்கிறது.
இதற்கு மேல் ப்ரபத்தி விஷயம் பொறுத்தவரை எம்பெருமான் தான் பரம்புருஷன் நாம் எல்லோரும் ஸ்த்ரீ ப்ராயர்கள் எல்லாம் சரியே. அப்படி ஸ்த்ரீ ப்ராயர்களாக இருந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதில் எவ்வித தடையுமில்லை. ப்ரபத்தியானவர்கள் ஒரு க்ருதக்ருத்யானாக இருந்து, காலக்ஷேபங்கள் பண்ணுவதோ, ப்ரபந்த/ஸ்தோத்ராதிகள் சேவிப்பதோ, கோவிலுக்குச் செல்வதோ, அங்கு கைங்கர்யங்கள் செய்வதில் எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.
ஸம்ப்ரதாயிகமாக சில கார்யங்கள் இருக்கு, ஶாஸ்த்ர விஹிதமாக சில கார்யங்கள் இருக்கு அதற்கு இன்னார் தான் என்ற விதிமுறையை உலகத்தில் பொதுவாகவே பின்பற்றுவதைப் பார்க்கலாம்.
உ.தா: மனைவியை இழந்த புருஷர்கள் யாகம் பண்ணமுடியாதென்று இருப்பது போல், ப்ரம்மச்சாரியாக இருப்பவர்களால் ஔபாஸனாதிகள் பண்ணமுடியாது அவனுக்கு திருமணமாகி இருத்தல் வேண்டும். ஏன் ப்ரம்மச்சாரி பண்ணக்கூடாது என்ற கேள்வி இங்கே வராது அதே போல் தான் சில வர்ணாஶ்ரமங்களுக்கு சில கைங்கர்யங்கள் ஶாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது. அதை ஸம்ப்ரதாயத்தில் இருக்கும் பெரியவர்கள் எல்லாரும் அவர்கள் அனுஷ்டானத்திலும் வைத்திருக்கிறார்கள். அதை அதன்படியே பின்பற்றுவது தான் நலம் மேலும், ஒரு விஷயம் மட்டும் எடுத்துக்கொண்டு இதற்கு மட்டும் இப்படியென்று யோசிக்கவேண்டிய அவசியமில்லை. எப்படித் தனித்திருக்கும் ஸ்த்ரீகளுக்கு சில கார்யங்கள் நிஷிதமாக இருக்கோ அதே போல் தனித்திருக்கும் புருஷர்களுக்கும் இருக்கு.
ஆசார்ய அனுக்ரஹத்தின் படி என்ன தெரிகிறது என்றால் தம்பதிகளாக இருக்கும் வழிபாடு தான் சரியானதாக இருக்கும்.
தினமும் காகத்திற்கு சாதம் வைக்க வேண்டுமா?
தினமும் காகத்திற்குச் சாதம் வைப்பது அவரவர்கள் க்ருஹ வழக்கம்.
அனுஷ்டானங்கள் என்றால் என்ன என்று காணொளி மூலம் விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
வித்வான்களின் சௌகர்யம் அனுசரித்து பின்னாளில் காணொளி விளக்கமாக பதிவிட முயற்ச்சி செய்kiறோம்.
தர்ப்பண காலத்தில் புருஷர்கள் போல் ஸ்திரீகளும் பலகாரம் பண்ண வேண்டுமா?
தர்ப்பண காலத்தில் சுமங்கலி ஸ்திரீகள் பலகாரம் பண்ணுவது கிடையாது.
22. a. அடியேன், எனது தகப்பனார் குடும்பத்தை விட்டு பிரிந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் இறந்து விட்டார் என்று 2018ல் தெரிய வந்தது. என் தாயார், அவருக்கு எந்த வித காரியமும் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது குடும்பத்தில் ஏற்படும் சில விஷயங்கள் பித்ரு தோஷத்தாலோ என்று நினைக்க வைக்கிறது. நான் 6 வருடத்திற்கு முன்பு அவருடன் தொலைபேசி மூலம் பேசியும் இருக்கிறேன். பரமபதித்த திதி தெரியாமல் எப்படி காரியம் செய்வது என்பதற்கு வழிகாட்ட ப்ரார்த்திக்கிறேன்.
b. மேலும் இச்சமயத்தில் கோவிலுக்கு போவதோ ஸமாஶ்ரயனம் செய்து கொள்வதோ சரியாகுமா என்பதையும் விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
குறிப்பு: நான் எனது மாமாவிற்காக இந்த வருடம் ஐப்பசி மாதம் நிமித்திக ஸ்தானத்தில் அமர்ந்தேன்.
பின்னாளில் இதற்கு பதிலைக் காண்போம்.
அடியேன் எங்களுக்கு ஒப்பிலியப்பன் தான் குல தெய்வம். அதனால் க்ருஹத்திலும் உப்பு இல்லாமல் தான் தளிகை எல்லாம் சமர்ப்பிக்க வேண்டுமா? 24. பாஞ்சராத்ரத்திற்கும் வைகானஸத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளை விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
ஒப்பிலியப்பன் தான் குலதெய்வம் என்றிருப்பவர்கள் க்ருஹத்தில் உப்பில்லாமல் தளிகை பண்ண அவசியமில்லை.
பாஞ்சராத்ரத்திற்கும் வைகானஸத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளை விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
பாஞ்சராத்ரம், வைகானஸம் இரண்டும் பெருமாளின் திருவாராதனத்திற்காக வந்த இரண்டு ஆகமங்கள். வைகானஸ ஆகமம் என்பது விகனஸ மஹரிஷி எழுதியது. பாஞ்சராத்ரம் என்பது பெருமாளே ப்ரவர்த்தணம் பண்ணியது. இரண்டுமே சரியானது தான். இரண்டையுமே பெரியவர்கள் ஏற்றுக்கொண் டது தான்.
வைகானஸத்தில், வேத மந்திரங்கள் நிறைந்தும், பாஞ்சராத்ரத்தில் தாந்த்ரீக மந்திரங்கள் நிறைந்தும் இருக்கும்.
வைகானஸ ஆகமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் மட்டுமே திருவாராதனம் செய்ய முடியும், மற்றவர்களுக்கு தீக்ஷை கொடுத்து என்பது இதில் செய்ய முடியாது. பாஞ்சராத்ர ஆகமத்தில் தீக்ஷை பெற்றுக்கொண்டவர்கள் பண்ணலாம். இது தான் ப்ரதான வித்யாசம்.
மற்றப்படி மந்திரங்கள் வேறுபடும்.
அஷ்டாக்ஷர ஜபம் செய்யும் முறையை தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன். த்வயம் மற்றும் ஶரம ஸ்லோகத்தையும் சேரத்தே ஜபிக்கலாம., நின்று கொண்டு செய்யலாமா அல்லது அமர்ந்துகொண்டு தான் செய்ய வேண்டுமா, எத்தனை வேளைகள் செய்ய வேண்டும் என்பதையும் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
அஷ்டாக்ஷரம் மற்றும் த்வயம் இவையெல்லாம் ஜபம் செய்யக்கூடிய முறையை ஆஹ்நீக க்ரந்தங்களில் சேவிக்கலாம்.
அஷ்டாக்ஷர ஜபத்தில் நின்று ஜபிப்பது, அமர்ந்துகொண்டு ஜபிப்பது போன்ற ஸம்ப்ரதாய பேதங்கள் உள்ளன.
த்வயம் ஶரம ஶ்லோகம் பொறுத்தவரை உட்கார்ந்துக் கொண்டுதான் ஜபிக்க வேண்டும், நின்று கொண்டு பண்ணமுடியாது என்று நினைக்கின்றேன்.
திருவஷ்டாக்ஷர ஜபத்தை அந்தந்த ஸம்ப்ரதாயத்தை அனுசரித்துச் செய்யவும்.
ஸ்த்ரீகளைப் பொறுத்தவரை அஷ்டாக்ஷரம் மற்றும் த்வயம் இவையெல்லாம் சாதாரனமாக அமர்ந்துகொண்டு ஜபிப்பது தான் வழக்கம். ஆசார்யன் கற்றுக்கொடுத்த த்யான ஶ்லோகத்தை முதலில் சேவித்துவிட்டு, அதன் பிறகு கண்ணைமூடி வஸ்த்ரத்தினுள் கைவைத்து எண்ணிகை எப்படிச் செய்யவது என்ற முறையையும் ஆசார்யன் கற்றுக்கொடுத்திருப்பார்,அந்த முறைப்படி திருவஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஶ்லோகத்தை குறைந்தபக்ஷம் ஒவ்வொன்றையும் பத்துதடவையாவது அமர்ந்துகொண்டு ஜபிக்க வேண்டும்.
பரந்யாஸம் பண்ணிக்கொண்ட பின்பு எனக்கு உடல்நலம் சரியில்லை, அதனால் என்னால் ஆசார்யன் தனியன்களைச் சேவிக்க முடியவில்லை. இது ஆசார்யனுக்கு செய்யும் தவறாகுமா?
பரந்யாஸம் பண்ணிக்கொண்ட பின்பு எனக்கு உடல்நலம் சரியில்லை எனும் போது முடியாத சமயத்தில் சேவிக்கவில்லை என்றால் அது தப்பாகாது, முடிந்தும் சேவிக்காது போனால் தான் தவறாகும்.
உதாஹரணமாக, தனியனை ஶரீரத்தினால் சேவித்து சேவிக்கமுடியாவிடில் வாயால் சொல்லலாம், மனசினால் நினைக்கலாம். மனசால் நினைக்கமுடியவில்லை என்று யாரும் சொல்ல முடியாது மனதிற்கு வலி என்பது கிடையாது.
மனசினாலோ,ஶரீரத்தினாலோ, வாக்கினாலோ எந்த முறையினால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யனும அது தான் முக்கியம்.
ஶரீரத்தினால் முடியாவிட்டால் கீழே விழுந்து சேவிக்கனும் என்று எந்த ஶாஸ்த்ரமும் சொல்லவில்லை.ஆனால் முடிந்த சமயத்திலும் செய்யாமல் போனால் அது ஒரு குறையாகும்.
எந்த வயது முதல் ஏகாதசி வ்ரதம் அநுஷ்டிக்க வேண்டும்.
ஏகாதசி வ்ரதம் எப்பவுமே அநுஷ்டிக்க வேண்டிய ஒன்று. குழந்தைக்கு அன்னப்ராஶனம் ஆன பிறகு ஏகாதசியன்று அன்னத்தை கொடுக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. பின்னப்படுத்தப்பட்ட அன்னத்தை கொடுக்கலாம். சிறு வயதிலிருந்தே சாதம் ஊட்டும் மாதக்கணக்கு குழந்தையாய் இருந்தால் கூட ஏகாதசி அன்று ஸொஜ்ஜி பண்ணிக்கொடுக்கலாம். அந்த வயதிலிருந்தே ஏகாதசி வ்ரதத்தின் அனுஷ்டானத்தை ஏற்படுத்தினோமேயானால் கூடிய சீக்கிரமே நிர்ஜலமாக வ்ரதம் இருக்கும் முறை வரை முன்னேற முடியும்.
ஏகாதசி நாளன்று பெரிய பெருமாள் அமுது செய்த (குறிப்பாக அரவணை/க்ஷீரான்னம்) ப்ரசாதம் கிடைக்கும் பாக்கியம் பெறும் போது அந்த ப்ரசாதத்தை என்ன செய்ய வேண்டும். அப்படியே வைத்து மறுநாள் உட்கொள்ளலாமா?
ஏகாதசி நாளன்று பெரிய பெருமாள் அமுது செய்த (குறிப்பாக அரவணை/க்ஷீரான்னம்) ப்ரசாதம் கிடைக்கும் பாக்கியம் பெறும் போது அந்த ப்ரசாதத்தை அன்று சாப்பிடாமல், அதை வைத்துகொண்டு மறுநாள் துவாதசி பாரணை செய்து முடித்தப்பிறகு சாப்பிடுவதில் ஒன்றும் தவறில்லை.
அடியேன் எனக்கு ஸமாஶ்ரயணமும் சரணாகதியும் செய்துகொள்ள வேண்டும். நான் தனியாக செய்துகொள்ளலாமா அல்லது ஆத்துக்காரருடன் தான் செய்துகொள்ள வேண்டுமா?
ஸமாஶ்ரயணமும் சரணாகதியும் பர்தாவுடன் சேர்ந்து செய்துக்கொள்வது உசிதம்.
தீட்டு சமயங்களில் ராம நாமத்தை மனதுக்குள் ஜபிக்கலாமா?
தீட்டு சமயத்தில் ராமநாமத்தை மனதிற்குள் ஜபிக்கலாம்.
ஆஶௌச காலத்தில் வலைஒளியில்(YouTube) வெளியிடப்பட்டிருக்கும் உபன்யாசங்களை கேட்கலாமா? அஶௌச காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
ஆஶௌச காலத்தில் ஸ்தோத்ர பாடம் மற்றும் அது ஸம்பந்தமான உபன்யாசங்களைக் YouTubeல் கேட்பதில் தவறில்லை.
நித்யகர்மாக்களான சந்தியாவந்தனங்களை விடாமல் ஆஶௌச காலத்தில் இருக்க வேண்டும்.
ஆஶௌச காலத்தில் கோவிலுக்கு போவது, ஆத்துப்பெருமாளைச் சேவிப்பது, ஆத்துப்பெரியவர்களைச் சேவிப்பது போன்றவை செய்வதில்லை.
நாம் ஸந்யாஸிகளை ஸேவிக்கும் பொழுது ஏன் அபிவாதனம் சொல்லுவதில்லை.
ஸந்யாஸிகளைச் சேவித்து அபிவாதனம் செய்தால், ப்ரத்யபிவாதனம் (ஆசிர்வாதம்) செய்ய வேண்டும். ஸந்யாஸிகள் முற்றும் துறந்தவர்களானபடியினாலே அவர்களுக்கு ஒருவரிடத்திலும் அனுக்ரஹ/நிக்ரஹ விதியில்லை. அதனால் அவர்கள் ப்ரத்யபிவாதனம் செய்வதில்லை. ஆகையால் அவர்களுக்கு அபிவாதனம் செய்வதில்லை.
மாத்யானிஹம் பண்ணிய பிறகுதான் ஆத்துப்பெருமாளுக்கு திருவாராதனம் பண்ண வேண்டும் என்று சொல்லப்படடிருக்கின்றது. ஆனால் குழந்தைகள் வேலைக்குப் போவதற்கு முன் சாப்பிட்டுவிட்டு கையிலும் எடுத்துக்கொண்டு போகவேண்டும். இது காலை 8.00 மணிக்கு முன் தயாராக வேண்டும். திருவாராதனம் பண்ணித்தளிகை இதற்கு முன் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்தச்சூழலில் காலை 7.30 மணிக்கு முன் மாத்யானிஹம் பண்ணித் திருவாராதனம் முடித்து தளிகை பெருமாளுக்கு சமர்ப்பிக்கின்றேன். இது சரியா அல்லது திருவாராதனம் பண்ணிவிட்ட பிறகு அதற்கு உரிய சமயத்தில் மாத்யானிஹம் பண்ணலாமா? தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிறேன்.
நமக்கு திருவாராதனம் செய்ய அவகாசம் இருக்கும் பக்ஷத்தில் அபிகமனத்தை மானசீகமாக செய்து, தளிகைகளை கண்டருளப்பண்ணி குழந்தைகளுக்குப் பரிமாறிவிட்டு,மாத்யானிக காலத்தில் மாத்யானிஹம் செய்தபிறகு முடிந்தால் வேறு ஒரு ப்ரசாதம் பண்ணியோ அல்லது பாலோ, பழமோ கண்டருளப்பண்ணி திருவாராதனம் செய்யலாம்.
சொந்த மைத்துனர் பரமபதித்தால் அந்த வருடப்பண்டிகைகளை கொண்டாடலாமா? இல்லை ஒரு வருடம் தீட்டு காக்க வேண்டுமா?
சொந்த மைத்துனர் பரமபதித்தால் ஒரு வருடத்திற்கு பண்டிகைகள் கொண்டாடுவது வழக்கமில்லை. அதற்குத் தீட்டு என்று அர்த்தம் கிடையாது. தீட்டு 13ஆம் நாளன்று முடிந்து விடும்.
பரஸமர்ப்பணம் செய்துகொண்டபின் ஆடி, தை வெள்ளிக்கிழமை புற்றுக்கு பால் தெளிப்பது, கொலுவைப்பது போன்றவை இதர தேவதாந்திரங்களுடன் சம்பந்தப்பட்டதாகுமா?
பரஸமர்ப்பணம் செய்துகொண்டபின் கொலுவைப்பதைப் பொருத்தவரை அது பகவத் ஆராதனம் தான். இதை நம் GSPKயில் நவராத்திரியின் சிறப்பு என்ற கீழேயுள்ள காணொளியில் விவரமாக சொல்லப்பட்டுள்ளது.
புற்றுக்குப்பால் தெளிப்பதென்பது, சில க்ருஹங்களில் வழக்கில் இருக்கின்றது, பெரியவர்கள் வழக்கத்தை மாற்ற வேண்டாம் என்று நினைப்பதும் உண்டு. அப்படிச் செய்யும் போது அதையும் பகவத் ஆராதனமாகவே நினைத்தல் வேண்டும், தேவதாந்த்ராதனமாக நினைத்தல் கூடாது. ஆதிசேஷனுக்குச் செய்யும் கைங்கர்யமாக நினைத்து செய்தால் அதில் தவறில்லை என்று சில ஆசார்யர்கள் நிர்ணயிக்கிறார்கள். இதில் மிக முக்கியமானது நாம் புற்றுக்குப் பால் தெளிக்கும் போது மானசீகமாக பகவத் ஆராதனம் என்று நினைக்க வேண்டும்.
10 வருடங்களுக்கும் மேலாக எனது மாமனாரின் உடன்பிறந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், அவர்களது சந்ததியினரை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாவிட்டாலும், அக்குடும்பங்களில் ஏற்படும் தீட்டிற்கு 10 நாட்கள் மற்றும் 1 வருடம் அஶௌசம் அனுசரிக்க வேண்டுமா?
பத்து வருடங்களாக பார்த்து கொள்ளாவிட்டாலும் அவர்களுக்கு தீட்டு காக்க வேண்டும்.
முந்தைய மாத வெளியீட்டின் இணைப்பை தெரிவிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.
முந்தைய இதழ்களைப் படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ளா Telegram groupல் சேரவும்
https://t.me/GSPKSudarsanam
எங்கள் வலைத்தளத்திலும் படிக்கலாம்
https://www.sampradayamanjari.org/sudarsanam/
என் பேரனுக்கு 9 வயது முடிந்து 10-ஆவது வயது நடந்துகொண்டிருக்கிறது. உபநயனத்திற்கான சரியான வயதை அறிய விரும்புகிறேன். குறிப்பாக உபநயனம் எந்த வயதில் பண்ண வேண்டும்? ஒற்றைப்படை வயதிலா அல்லது இரட்டைப்படை வயதிலா? எந்த வயதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்? முடிந்த வயதையா அல்லது நடந்துகொண்டிருக்கும் வயதையா? ஒற்றைப்படை வயதில் உபநயனம் செய்யக் கூடாது, இரட்டைப்படை வயதில் தான் செய்ய வேண்டும் என்கிறார்களே அது சரியா தவறா. தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிறேன்.
“உபநயனம் ப்ராம்ணஸ்ய அஷ்டமே” என்று சொல்லப்பட்டிருக்கிறது, எட்டாவது வயதில். அதில் கர்பாஷ்டமம் என்று கணக்கெடுத்து ஏழாவது வயதில் செய்வதும் உண்டு.
ஆனால் ஒற்றைப்படை வயதில் செய்யக்கூடாது என்பது இல்லை. பதினாறு வயதிற்குள் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. அதற்கு பிறகு காயத்ரி பலனை கொடுக்காது. 7 வயது முதல் 16 வயதிற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் உபநயனம் செய்யலாம். ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை வயதுகளில் குறிப்பிட்டுச் செய்வதற்கான ப்ரமாணங்கள் என்னவென்று தெரியவில்லை.
நீரிழிவு நோய் காரணமாக சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த அடியேன் பழுப்பு அரிசியை (கைக்குத்தல் அரிசி) மட்டுமே பயன்படுத்தி வருகின்றேன். பெருமாளுக்கு திருவாராதனம் செய்தபின் அம்சை பண்ண இந்த அரிசியை உபயோகப்படுத்தலாமா?
நாம் சாப்பிடக்கூடிய எல்லா வஸ்துக்களையும் பெருமாளுக்கு அமுதுசெய்த பிறகே சாப்பிட வேண்டும். கைக்குத்தல் அரிசியை பெருமாளுக்கு அமுது செய்வதில் தோஷம் இல்லை.
a.ஐயங்கார்களின் முக்கிய பண்டிகைகள் என்னென்ன?
b. தீபாவளி அமாவாஸை அன்று சிலர் க்ருஹங்களில் லட்சுமி பூஜை செய்கிறனர். ஆனால் அன்றைய தினத்தன்று பெரியவர்கள் தர்ப்பணம் செய்வதனால் பண்டிகை கொண்டாடுவதில்லை.
c.நம் பெரியவர்கள் என்னென்ன பண்டிகைகள் கொண்டாடினர் என்று பட்டியலிட்டு அதை பற்றிச் சிறிது விளக்கம் அளிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.
ஐயங்கார்களின் முக்கிய பண்டிகைகள்:
சித்திரை மாதத்தில் விஷு
தக்ஷிணாயன புண்ணிய காலம்
உபாகர்மா
திருவாடிப்பூரம்
சில க்ருஹங்களில் ஆடி18
ஸ்ரீ ஜெயந்தி
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி அதிலும் முக்கியமாக மகா நவமி விஜயதசமி
துலா விஷு
தீபாவளி
சங்கராந்தி
சில க்ருஹங்களில் ஆடி மற்றும் தை அமாவாஸை
சிலர் மட்டும் செய்யும் காரடையான் நோன்பு
ஸ்ரீராம நவமி
ந்ருஸிம்ஹ ஜெயந்தி
ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களுடைய திருநக்ஷத்ர தினங்கள்
b. இவையெல்லாம் பண்டிகையாக கொண்டாடுவது வழக்கம். இதில் சில தினங்களில் விரதங்களும் உண்டு. ஸ்ரீஜெயந்தி, ஸ்ரீ ராமநவமி, ந்ருஸிம்ஹ ஜெயந்தி இந்தத் தினங்களில் வ்ரதமும் பாரணையும் உண்டு.
தீபாவளியை உத்தேசித்து பண்டிகையும் அமாவாஸையை உத்தேசித்து தர்ப்பணமும் இரண்டும் செய்யும் வழக்கம் உண்டு. லக்ஷ்மீபூஜை என்பது சில க்ருஹங்களில் மாத்திரம் செய்வது வழக்கம்.
c. எல்லா பண்டிகைகளிலும் பெருமாளை ப்ரார்த்திப்பதே வழக்கம். பண்டிகைகள் அன்று பண்டிகைத் தளிகைகளைச் செய்வது, கோவில்களுக்குச் சென்று பெருமாளைச் சேவிப்பது, அந்தப் பண்டிகைக்குள்ள விசேஷமான காரியங்களைச் செய்வது, ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களின் திருநக்ஷத்ரத்தன்று அந்தந்த ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களைச் சேவிப்பது, என்பதே வழக்கம்.
அத்யயனம் மற்றும் அனத்யயன காலங்களைப் பற்றி விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
வேதாத்யயனம் செய்ய கேட்டுள்ளீர் எனக்கொண்டு இப்பதிலை பகிர்கின்றேன். தர்மஶாஸ்த்ரத்தில் இதை விரிவாக சொல்லியுள்ளனர்.
அத்யயன காலம் என்றால் – படிக்கவேண்டிய காலம்
அனத்யயன காலம் பொதுவாக அஷ்டமி, சதுர்தசி, அமாவாஸை/பௌர்ணமி மற்றும் ப்ரதமை. இந்த நான்கு தினங்களும் அனத்யயன தினம்.இந்த நாட்களில் வேதாத்யயனம் பண்ணக்கூடாது, சந்தை சொல்லக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
திவ்ய ப்ரபந்தம்/ஸ்தோத்ர பாடங்கள் பொருத்தவரை, அஷ்டமி, சதுர்தசியில் சொல்வதுண்டு. அமாவாஸை/பௌர்ணமி மற்றும் ப்ரதமை இந்த இரண்டு நாட்களில் சந்தை சொல்லக்கூடாதென்று வைத்துள்ளனர். ஆனால் இந்நாட்களில் பாராயணங்கள் செய்யலாம்.
அனத்யயன காலம் என்று வேறு நிறைய விசேஷமாகவும் இருக்கின்றது.
வேத அனத்யயன காலத்தில் நிறைய கணக்குண்டு. அதாவது எத்தனை நாழிகை அஷ்டமி இருந்தாலோ, பௌர்ணமி இருந்தாலோ அது எப்படி என்பதாக. நேரமிருப்பின் பின் நாட்களில் விஸ்தாரமாக பார்க்கலாம்.
ஸந்த்யாவந்தனத்தில் துரீய அர்க்யம் எந்தக் காலத்தில் ஸம்பவிக்கும்? – அந்தந்த ஸந்த்யாவந்தன காலத்திற்கு முன்பு ஸந்த்யாவந்தனம் செய்வதாக இருந்தாலா (அ) பின்பு செய்வதாக இருந்தாலா? முன்போ (அ) பின்போ, இவ்வளவு மணி நேரத்திற்குள் ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டும் என்ற கணக்குள்ளதா? உதாஹரணமாக காலை ஸந்த்யாவந்தனத்தை விடியற்காலை 4 மணிக்கோ அல்லது 11 மணிக்கோ பண்ணலாமா?.
ஸந்த்யாவந்தனத்தில் சூர்யோதயம் முன்னர் மூன்று அர்க்யம் ஸமர்பிக்க வேண்டும். சூர்யோதயமாகி விட்டால் காலம் கடந்ததென்று அர்த்தம், அப்போது ப்ராயச்சித்தமாக நான்காவது அர்க்யம் விட வேண்டும். அது தான் துரீய அர்க்யம் என்று பெயர்.
சூர்யோதயத்திற்கு முன் ஸந்த்யாவந்தனம் செய்வதாயிருந்தால் துரீய அர்க்யம் ஸமர்பிக்க வேண்டியதில்லை.
அதே போல் சூர்யஅஸ்தமனத்திற்கு முன்னர் அர்க்யம் ஸமர்பித்தால் துரீய அர்க்யம் ஸமர்பிக்கவேண்டியதில்லை.
சூர்யோதயமும் அஸ்தமனமும் நாளுக்கு நாள் மற்றும் வெய்யில்காலம், மழைக்காலம் என்று காலத்திற்கேற்றார் போலும் மாறிக்கொண்டே இருப்பதால் இவ்வளவு மணி நேரம் என்று சரியாகச் சொல்லமுடியாது.
ஆகையால் பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு சூர்யோதயம் அஸ்தமனம் எப்போது என்று பார்த்து அதற்கு முன்னர் ஸந்த்யாவந்தனம் செய்து அர்க்யம் விட்டால் துரீய அர்க்யம் ஸமர்பிக்க வேண்டியதில்லை.
அதிகாலை 4 மணிக்கு ஸந்த்யாவந்தனம் பண்ண முடியாது ஏனென்றால் ஸந்த்யாவந்தனத்தை சூர்யோதயத்திற்கு முன் ஆரம்பித்து சூர்யோதமான பின்னர் தான் உபஸ்தானம் முடிக்கவேண்டும் என்றுள்ளது. சூர்யோதயமாகும் முன்னர் அர்க்யம் விடணும் ஆன பின்னர் உபஸ்தானம் பண்ணவேண்டும் என்றுள்ளது.
காலை 4 மணிக்குப் பண்ணால் அது அகாலே க்ரியமாணம் அதற்கு மதிப்புகிடையாது. அதனால் மீண்டும் ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டும்.
வேறு வழியில்லாமல் கார்யாந்தரமாக அல்லது வெளியில் பயணம் போய்விட்டு வர நாழியாகிறது என்றால் 11 மணிக்கு துரீய அர்க்யம் ஸமர்பித்துச் செய்ய வேண்டும்.
த்வாதசி திருவாராதனம் முடிந்து பாரணை செய்த பின் மாத்யாஹ்நிகம் செய்யலாமா?
த்வாதசி திருவாராதனம் முடிந்து பாரணை செய்தபின் மாத்யாஹ்நிகம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
பாரணைக்கு முன்னர் மாத்யாஹ்நிகம் பண்ணிவிட்டு தான் திருவாராதனம் செய்யப்போகிறோம். ஸந்த்யாவந்தனம், ப்ரம்மயக்ஞம், மாத்யாஹ்நிகம் பண்ணிவிட்ட பின் திருவாராதனம் செய்து பின்னர் பாரணை செய்வதால் மறுபடியும் மாத்யாஹ்நிகம் செய்யவேண்டிய அவசியமில்லை.
அல்ப த்வாதசியில் சிறு வித்யாசம் உண்டு அதைப்பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம்.
மஹாளய பக்ஷத்தில், ஒரு வேளை மட்டும் சாதம் சாப்பிடவேண்டும் என்கிற நியமம் மஹாளய பக்ஷ ஆரம்ப தினத்திலிருந்து மஹாளய பக்ஷ தர்ப்பணம் தினம் வரையிலா அல்லது பக்ஷம் முழுவதுமா?
மஹாளய பக்ஷத்தில் 15 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள், 15 நாட்களும் இரவில் பலகாரம் செய்யவேண்டும்.
அப்படியில்லை ஒரு நாள் தான் தர்ப்பணம் செய்வதென்றால் அதற்கு சக்ருண் மஹாளயம் என்று பெயர், நம்மில் பலர் அதைத்தான் செய்கின்றனர். அப்படி ஒருநாள் தர்ப்பணம் செய்பவர்கள் 15 நாட்களும் பலகாரங்கள் பண்ணவேண்டிய அவசியமில்லை என்பதாக மேல்பாக்கம் ஸ்வாமி சாதித்திருக்கிறார். அதற்கு ஒரு நாள் முன்னர் கூட பலகாரம் என்று அவசியமில்லை எனவும் சாதித்துள்ளார்.
சில பெரியவர்கள் 15 நாட்கள் தர்ப்பணம் பண்ணவில்லையென்றாலும் 15 நாட்களும் பலகாரம் என்று வைத்துள்ளனர். அவரவர் ஆத்து வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
மஹான்களின் அபிப்ராயப்படி 15 தர்ப்பணம் பண்ணாவிட்டால் 15 பலகாரம் தேவையில்லை என்றுத் தெரிகிறது.
தர்ப்பண தினத்தன்று எப்படியும் பலகாரம், அதற்கு முதல் நாள் தேவையில்லை என்று இருக்கிறது.
யஜ்ஞோபவீதம் செய்யும் முறை, ப்ரதிஷ்டை பண்ண, செய்ய வேண்டிய அநுஷ்டானங்களைத் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
முக்கியமாக பார்த்தால் நாமே பூணூல் நூற்க வேண்டும். நூற்கும் பொழுது அவர்களும் சுத்தமாக இருந்து, பூணூலையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். ப்ரதிஷ்டை பண்ணும்பொழுது அதற்கான ப்ரதிஷ்டா விதி என்று க்ரந்தங்களில் இருக்கின்றது. இல்லையென்றால் பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
முக்கியமாக மந்திரங்களைச் சொல்லி தேவதைகளை ப்ரதிஷ்டை செய்து,பெருமாளை ப்ரதிஷ்டை செய்து, ஆவாஹனம் செய்து, காயத்ரி மந்திரத்தைச் சொல்லி ப்ரதிஷ்டை பண்ண வேண்டும்.
மந்த்ரஸாலகட்ட ஶ்ராத்த ப்ரயோகம் என்றால் என்ன என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
மந்த்ரஸாலகட்டம் ஸ்வாமி என்று ஒருவர் இருந்தார்.அந்த ஸ்வாமி தர்ம ஶாஸ்த்ரங்களிலே சில தனிப்பட்ட விசேஷமான அபிப்ராயங்கள் வைத்து நிர்ணயம் பண்ணி இருக்கின்றார். அதற்கே மந்த்ரஸாலகட்ட ஸம்ப்ரதாயம் என்று பெயர். அந்த ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் சில பேர் இப்பவும் இருக்கின்றனர். அவர்கள் அதற்கேற்ற மாதிரியான ஸம்ஸ்காரங்கள், ஶ்ராத்தங்கள் இவையெல்லாம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அதைப் பண்ணுவதாக இருந்தால் அதைப் பற்றி விஸ்தாரமாக தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அப்படி ஒரு ஸம்ப்ரதாயம் இருக்கின்றது என்று தெரிந்து வைத்துக்கொண்டால் போதும்.
ஜபம் செய்யும் போது நாம் எப்படி எண்ணிக்கை வைத்துக் கொள்வது? ஒவ்வொரு விரலுக்கும் 3 என்று கணக்கிட்டு கொள்வேன். ஆனால் ஒரு விரலுக்கு 2 எண்ணிக்கை மட்டுமே என்று எங்கோ கேள்விப்பட்டிருக்கிறேன். எது சரி?
ஜபம் செய்யும்பொழுது நம் விரல்களில் 10 தடவை எண்ண முடியும்.
சுண்டு விரலில் மூன்று, நாலாவது மோதிர விரல் மேலே, ஐந்தாவது நடுவிரல் மேலே, ஆறாவது ஆள்காட்டி விரல் மேலே, ஏழாவது ஆள் காட்டி விரல் நடுவில், எட்டாவது ஆள்காட்டி விரல் கீழே, ஒன்பதாவது நடுவிரல் கீழே, பத்தாவது மோதிர விரல் கீழே என்று ஒரு ப்ரதக்ஷிணமாக வந்து முடியும். ப்ரதக்ஷிணமாக வரும்பொழுது சுண்டுவிரலிலும் ஆள்காட்டிவிரலிலும் மூன்றும் நடுவிரலும் மோதிரவிரலும் மேலும் கீழும் என இரண்டும் வரும். சொல்லிப் புரிந்துகொள்வதைவிட விஷயம் தெரிந்தவர்களிடம் செய்துகாட்டச் சொல்லியோ அல்லது படத்திலோ பார்த்து புரிந்துகொள்ளலாம்.
சமீபத்தில் எங்களுக்கு 10 சாளக்கிராமங்கள் மற்றும் 2 துவாரகா மூர்த்திகள் கிடைக்கும் பாக்யம் பெற்றோம். மூர்த்திகளுக்கு என்ன செய்ய வேண்டும், அவற்றை எப்படி ஏள பண்ண வேண்டும் என்று விரிவாக வழிகாட்ட ப்ரார்த்திக்கிறேன்.
சாளக்கிராமங்கள் மற்றும் துவாரகா மூர்த்திகள் என்று நம் ஆத்துக்கு ஏள்கிறார்களோ (ஒரு நல்ல நாள் பார்த்து என்று அவர்கள் ஏள்கிறார்களோ) அன்று பால் திருமஞ்சனம் செய்து, விசேஷமான தளிகை பண்ணி, அன்று விசேஷமான ஆராதனம் பண்ணவேண்டும். அதன் பின்னர் தொடர்ந்து நித்யபடி ஆராதனை பண்ண வேண்டும்.
ஏன் நாம் 4 முறை நமஸ்காரம் செய்கிறோம்?
அதற்கு ஒரேபதில் என்னவென்றால் ஶாஸ்த்ரத்தில் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது பெருமாளுக்கு நாம் செய்யக்கூடிய கைங்கர்யங்கள் என்று பார்க்கும்போது ப்ரதக்ஷிணம், ப்ரணாமம், அஞ்சலி இவையெல்லாம் என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஶாஸ்த்ரத்தில் ஒவ்வொன்றும் எப்படி பண்ணவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ப்ரதக்ஷிணம் என்றால் எத்தனை தடவை பண்ண வேண்டும், எப்படிப் பண்ணக்கூடாது , ஓடிக்கொண்டு பண்ணக்கூடாது என்றெல்லாம் ஶாஸ்த்ரம் சொல்கிறது. அஞ்சலி எப்படி பண்ணவேண்டும், ஏக ஹஸ்தாஞ்சலி பண்ணக்கூடாது என்றும் இருக்கின்றது.
அதேபோல் ப்ரணாமத்தை பற்றி சொல்லும் பொழுது இரட்டைப்படையில் தான் பண்ணவேண்டும், "प्रदक्षिणान् प्रणामान्श्च युग्मानेव समाचरेत्। ப்ரதக்ஷிணான் ப்ரமாணான்ஶ்ச யுக்மானேவ ஸமாசரேத்" என்று சொல்லி, அதற்கு காரணமும் சொல்லுகிறது. பெருமாளுக்கு எல்லாமே இரட்டைப் படையில் தான் இருக்க வேண்டும் ஒற்றைப்படையில் இருப்பது ஸ்ரேஷ்டமில்லை.
பொதுவாக ஒன்று என்பது பித்ருக்களுக்கு. தேவர்களுக்கு வரும்பொழுது இரண்டு தான் வரும். "ஏகாமன்வா: , ஏகாஹிபித்ருனாம், த்ருரன்வா:, த்ருஹிதேவானாம்" என்பது வேதத்தில் மிகவும் ப்ரசித்தம். அதனால் தேவாதிதேவனான பெருமாளுக்கு சுருக்கமாக இரண்டு என்று பண்ணாமல் நான்கு, ஆறு என்று பண்ணலாம். இதில் நிறைய யுக்திகளும் ஸ்வாமி தேஶிகன் சொல்லியிருக்கிறார் .
நம் க்ருஹங்களில் பெருமாள் சன்னதியில் ஆலிலை க்ருஷ்ணர், குழலூதும் க்ருஷ்ணர் விக்ரஹங்களை ஏள பண்ணி வைத்துக்கொள்ளலாமா?
நம் க்ருஹங்களில் பெருமள் சன்னதியில் ஆலிலை க்ருஷ்ணர், குழலூதும் க்ருஷ்ணர் விக்ரஹங்களை தாராளமாக ஏளப் பண்ணி வைத்துக்கொள்ளலாம்.
கோஷ்டி நடக்கும்போது சாஷ்டாங்கமாகச் சேவிக்கின்றோம். அப்பொழுது நடுவில் யாராவது நின்று கொண்டு இருந்தால் சேவிப்பது சரியா?
கோஷ்டி நடக்கும்போது சாஷ்டாங்கமாகச் சேவிக்கின்றோம். அப்பொழுது நடுவில் யாராவது நின்றுகொண்டு இருந்தால் அவாளே நகர்ந்துக்கொள்ளணும்,முடிந்தால் நாம் அவர்களைத்தாண்டி நகர்ந்துசென்று சேவிக்கலாம். அது முடியவில்லையென்றால் நாம் கோஷ்டியைச் சேவிப்பதாக நினைத்துக்கொண்டு சேவிக்க வேண்டும். அதில் தவறில்லை.
நாம் சேவிக்கும் பொழுது அவர்கள் வேறு கார்யமாக செல்வார்கள், இல்லை கைங்கர்யபரர்களாக இருப்பார்கள், சில நேரங்களில் இதையெல்லாம் ரொம்ப தீவிரமாக பார்க்கவும் முடியாது. ஆகையால் நமக்கு கோஷ்டியைச் சேவிப்பது மட்டும் தான் லட்சியம் என்பதை நினைத்துக்கொண்டு சேவிக்கலாம்.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இதர தேவதாந்திரங்களை ஏன் சேவிக்க கூடாது. ஏன் அவர்களுடைய கோவில்களுக்குச் செல்லக்கூடாது? சென்றால் தோஷம் ஏற்படுமா?
எம்பெருமான் என்பவன் தேவாதிதேவன், எல்லோரைக் காட்டிலும் உயர்ந்தவன். அப்படி உயர்ந்த எம்பெருமானைச் சேவிக்கும்பொது மற்ற தேவதாந்திரங்களைச் சேவித்தால் இருவரையும் சமமாகபாவித்ததைப் போல் ஆகிவிடும். அப்படிச் செய்தல் கூடாது.
எம்பெருமான் ரொம்ப ரொம்ப உயர்ந்தவன் என்பதை நாம் என்றும் மறக்கக்கூடாது. மேலும் எம்பெருமானுக்குச் சமமாக மற்ற தேவர்களை நினைத்தால் அது மகா பெரியபாபம். அது அந்தத் தேவர்களுக்கே பிடிக்காது, அவர்களும் அப்படி நினைக்கச் சொல்லவில்லை.
எங்களைச் சேவித்தால் என்ன பலன் என்று தான் சொல்லுகிறார்கள், அவரைவிடப் பெரியவர் அவருக்குச் சமமானவர் என்று சொல்லவில்லை. அந்த எண்ணங்கள் நமக்கு வரவேகூடாது என்பதால்தான் அவர்களுடைய கோவிலுக்குச் செல்லக்கூடாது சேவிக்ககூடாது என்று சொன்னதற்கு ப்ரதான காரணம்.
சிலர் அவர்களைச் சேவித்துச் சேவித்து, பெருமாளைச் சேவித்தால் பலன் ஒன்றும் கிடைக்கவில்லை அவர்களைச் சேவித்தால் தான் பலன் கிடைக்கிறது என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு செய்வதெல்லாம் ஸம்ஸார பாபத்தில் போய் முடியும். அதனால் தான் அதை நாம் நினைக்கவேகூடாது. பெருமாள் தான் உயர்ந்தவர் மற்றவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல என்பதாலும், அவரை மட்டும் சேவிப்பது மற்றவர்களை அவருக்குச் சமமாக கூட நினைக்கக்கூடாது , அவர்களிடம் சமமாக நடந்துகொள்ளக்கூடாது என்பதால் தான் இதர தேவதாந்திரங்களைச் சேவிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.
ஸ்ரீ சந்நிதி ஸம்ப்ரதாயத்தின்படி அஷ்டாக்ஷரம், த்வயம் மற்றும் சரம ஶ்லோகங்களுக்கான த்யான ஶ்லோகங்களை அர்த்தத்துடன், அதாவது எந்தத் திருமேனிக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிக்றேன்.
ஸ்ரீ சந்நிதி ஸம்ப்ரதாயத்தின்படி அஷ்டாக்ஷரம், த்வயம் மற்றும் சரம ஶ்லோகங்களுக்கான த்யான ஶ்லோகங்கள் அர்த்தத்துடன் ,ஸ்ரீமத் அஹோபில மடத்தினால் வெளியிடப்பட்ட ஆஹ்நீக க்ரந்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது அதை பார்க்கவும்.
அமாவாஸை தர்ப்பணத்துக்கு (வடகலை யஜுர் சம்ப்ரதாயம்) கையில், ஆசனத்தில் எவ்வளவு கட்டைப்புல் வைத்துக் கொள்ள வேண்டும்? தாம்பாளத்தில் இரண்டு வரிசை கிழக்கு மேற்காக எத்தனை பில்கள் வைக்க வேண்டும்?
ஆசனத்தில் பொதுவாக இரண்டு கட்டைப்புல் வைத்துக்கொள்வார்கள் அதில் ஒன்று நுனிப்புல் கூட வைத்துக்கொள்வார்கள். “தர்பேஷு தர்பாம்” என்று சொல்லும் படியினால் இரண்டுக்கும் மேல் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இன்னும் நிறைய ஆசனங்கள் 4 என்பதாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
கிழக்கு மேற்கு என்பதாக வைக்கின்றதும் புக்னத்திற்கு ஆசனமாக இரண்டு இரண்டாக கட்டதண்டமாக வைக்கவேண்டும். அது பித்ருக்களுக்கான ஆசனமாகும்.
“திவ்யதேச க்ஷேத்ரங்கள் மற்றும் பிற கோவில்களில் மூலவருக்கும் உற்சவருக்கும் (பெருமாள் உபய நாச்சியார் உட்பட) வஸ்த்ர ஸமர்ப்பணம் செய்வதற்கான நியமங்களைத் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
திவ்யதேச க்ஷேத்ரங்கள் மற்றும் பிற கோவில்களில் மூலவருக்கும் உற்சவருக்கும் (பெருமாள் உபய நாச்சியார் உட்பட) வஸ்த்ர ஸமர்ப்பணம் செய்வதற்கென்றுத் தனி நியமங்கள் கிடையாது. வஸ்த்ரத்தைத் தட்டில் வைத்து அர்ச்சகரிடம் ஸமர்பித்தால் அவ்வூரின் வழக்கத்தின் படி அவர் ஸமர்பிப்பார். அந்தந்த திவ்யதேச வழக்கின் படி வஸ்த்ரங்கள் ஸமர்பிக்க வேண்டும் என்ற நியமம் மட்டும் தான்.
சமீபத்தில் என் சம்பந்தி ஸ்வாமி ஸ்ரீ ஆசார்யன் திருவடி அடைந்தார். மாஸ்யம், அமாவாஸை தர்ப்பணம் இரண்டும் செய்ய வேண்டுமா? மாஸ்யம் செய்வதால் அமாவாஸை தர்ப்பணம் செய்யத்தேவையில்லை என்று சில வாத்தியார் சொல்கிறார்கள். என் ஜாமதாவின் சந்தேகத்தை தயவுசெய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
மாஸ்யம், அமாவாஸை தர்ப்பணம் இரண்டும் செய்ய வேண்டும். மாஸ்யம் செய்வதால் அமாவாஸை தர்ப்பணம் செய்யத்தேவையில்லை என்பதெல்லாம் கிடையாது. மாஸ்யம் முடித்துவிட்டு பின்பு அமாவாஸ்யை தர்ப்பணம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.
எங்கள் வீட்டில் 3 ஹிரண்யகர்ப சாளக்கிராமம் உள்ளது. எனது பர்த்தா நித்யமும் பால் மற்றும் ஜலம் கொண்டு திருவாராதனம் செய்து வருகின்றார். கடந்த சுதர்சனத்தில் 1 அல்லது 4 அல்லது அதற்கு மேல் சாளக்கிராமம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 3 சாளக்கிராமங்களுக்குத் திருவாராதனம் செய்யலாமா தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கின்றேன்.
3 ஹிரண்யகர்ப சாளக்கிராமம் இருந்தால் அவற்றில் ஒரு சாளக்கிராம மூர்த்தியை ப்ரதானமாக வைத்துக்கொண்டு , மற்றவர்களை அப்ரதானமாக பக்கத்தில் ஏளப்பண்ணிக்கொள்ள வேண்டும். ப்ரதானமானவருக்கு நாம் விசேஷமான திருவாராதனம் பண்ணலாம். பெருமாள் சங்கல்பத்தில் நான்கு சாளக்கிரமங்கள் ஏளிய பின் அனைவருக்கும் விசேஷமான திருவாராதனம் பண்ணலாம்.
ஓய்வுக்குப் பிறகு பகவத் கீதை, பாகவதம், சுந்தரகாண்டம் போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன். நான் தினமும் ஸ்ரீ விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் செய்வேன். முந்தைய சுதர்சனத்தில், ஸ்த்ரீகள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கக் கூடாது என்று விளக்கப்பட்டுள்ளது . நான் 1000 நாமங்களை பகவத் ப்ரீதியினால் சங்கல்பம் மற்றும் பலஸ்ருதி இல்லாமல் பாராயணம் செய்கிறேன். பகவத் ப்ரீதியினால் பெண்கள் பகவத் கீதை, சுந்தரகாண்டம் மற்றும் பாகவதம் ஆகியவற்றைப் படிக்கலாமா என்பதைத் தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.
ஶாஸ்த்ரத்தைக் கட்டுப்பாட்டோடு கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் அப்பொழுது சுந்தரகாண்டம் முதலானவற்றை ஸ்த்ரீகள் பாராயணம் பண்ணக்கூடாது. ஆனால் நாம் எத்தனையோ விஷயங்களில் அந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி கொண்டுதான் இருக்கின்றோம். அதனால் அந்தரீதியில் சிலர் இதையும் தளர்த்திக் கொள்கிறார்கள்.
ஶாஸ்த்ரப்படி பார்த்தால் சுந்தரகாண்டத்தில் கதைகள் இருக்கின்றது அவற்றை நாம் படிக்கலாம். காலக்ஷேபமாக கேட்கலாம். மற்றவரைப் படிக்கச்சொல்லி கேட்கலாம். ஆனால் மூல க்ரந்த பாராயணம் என்பதைதான் ஸ்த்ரீகள் சேவிக்கக்கூடாது என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
பெருமாளுக்கு அமுது கண்டருளப் பண்ணும் பொழுது, திருத்துழாயை எல்லாவற்றிலும் சேர்க்க வேண்டுமா அல்லது சாதத்தில் மற்றும் சேர்த்தால் போதுமா? உப்பு பதார்த்தங்களில் சேர்க்கலாமா?
பெருமாளுக்கு அமுது கண்டருளப் பண்ணும்பொழுது, திருத்துழாயை எல்லாவற்றிலும் சேர்க்க முடிந்தால் சேர்க்கலாம். அல்லது ப்ரசாதத்தில் மட்டும் சேர்த்தாலும் ஒன்றும் தவறு இல்லை. கோவில்களில் திருத்துழாய் மற்றும் புஷ்பங்களை எல்லாவற்றிலும் சேர்ப்பது வழக்கமுண்டு.
மஹா ப்ரதோஷத்தன்று கடை பிடிக்க வேண்டிய விதி முறைகள் என்ன? அச்சமயத்தில் ஸ்தோத்ரப் பாடங்களைச் சேவிக்கலாமா?
மஹாப்ரதோஷத்தன்று மௌனமாக இருப்பது முக்கியமானதாகும் என்று சொல்லியிருக்கிறது. ஆசாரியர்கள் மஹாப்ரதோஷத்தன்று மௌனமாக இருப்பார்கள். அதுவே ப்ரதானமாக சொல்லப்பட்டிருக்கிறது.
அன்று மௌனம் தான் கைங்கர்யம் என்பதினால் ஸஹஸ்ரநாமமோ, ஸ்தோத்ர பாடமோ, ப்ரபந்தமோ சேவிக்கக்கூடாது.
.ஒரு ப்ரபன்னன் தன் ஶரீரத்தை விட்டுப்புறப்பட்டவுடன் எப்போது ஸ்ரீவைகுண்டத்தை அடைவான்? இப்படி இவன் அடைகிறான் என்பதை ஆழ்வார் ஆசார்யர்கள் எந்த ஸ்ரீ ஸூக்திகளில் குறிப்பிட்டுள்ளார் என்பதையும் விளக்கப் ப்ரார்த்திக்கிறேன்.
ஒரு ப்ரபன்னன் தன் ஶரீரத்தை விட்டுப்புறப்பட்டவுடன் ஸ்ரீவைகுண்டத்தை அடைவதற்கான குறிப்பிட்ட நாளோ நேரமோ, தேதியோ கணக்கு கிடையாது. நேரம் ஆனவுடன் அர்ச்சிராதி கதியில் போய் ஸ்ரீ வைகுண்டத்தைச் சீக்கிரமே அடைந்து விடுகிறான். அதற்கு விளம்பம் கிடையாது என்று மாத்திரம் சொல்லியிருக்கிறது.
ஆழவார் ஆசாரியர்கள் ஸ்ரீஸூக்திகளில் ஸ்ரீவைகுண்டம் போவது பற்றி ஸ்ரீபாஷ்யத்தில் இருக்கிறது. மற்றும் ”சூழ்விசும்பணி முகில், முனியே நான்முகனே” முதலான பாசுரங்களிலும் பார்க்கலாம்.
அடியேனுக்கு ஆசார்யன் அனுக்ரஹத்தினால் ப்ரபத்தி ஆகிவிட்டது. ஶரணாகதி செய்தவர்கள் பாகவத அபசாரம் படக்கூடாது என்று நம் பெரியோர்கள் வலியுறுத்துகின்றனர். அடியேனுக்கு இதில் ஒரு சந்தேகம். பாகவத அபசாரம் என்று எவற்றைக் குறிப்பாக ஶாஸ்த்ரம் கூறுகிறது? பிறகு யார் பாகவதர்கள் என்று நம் ஸம்ப்ரதாயம் கூறுகிறது? ப்ரபத்தி ஆகி உண்மையான ஶ்ரீவைஷ்ணவர்களாய் இருப்பவர்கள் மட்டும் தானா? அல்லது எம்பெருமானிடம் போல் பிற தேவதாந்திரங்களிடமும் பக்தி கொண்டவருமா? கேள்வியில் தோஷம் இருந்தால் க்ஷமிக்கவும்.
பகவானை சேவிப்பவர்கள் எல்லோருமே பாகவதர்கள்தான். ஸமாஶ்ரயணம் ஆனவர்கள் பாகவதர்கள். பரந்யாஸம் ஆனவர்கள் பாகவதர்கள். நெற்றியில் திருமண்காப்பு இட்டுக்கொள்பவர்கள் பாகவதர்கள். அப்படிப் பார்க்கும்பொழுது பகவானைச் சேர்ந்த பகவத்பக்தர்கள் எல்லோருமே பாகவதர்கள்தான். அதனால் பொதுவாக யாரிடமும் அபசாரம் பண்ணாமல் இருக்கவேண்டும்.
பாகவதர் என்றால் என்ன லக்ஷணம், அவர் சரியாக இருக்கிறார, அவர் ஸ்ரேஷ்டமான பாகவதரா என்றெல்லாம் நாம் பார்க்கத் தேவையில்லை. பாகவத அபசாரம் நாம் படக்கூடாது என்பதுதான் முக்கியமே தவிர இவையெல்லாம் முக்கியமில்லை. அதனால் எப்படிப்பட்ட பாகவதராக இருந்தாலும் சரி அவரிடம் அபசாரப்படாமல் இருக்க வேண்டும் . அதுவே ஸ்ரேஷ்டம் என்று வைத்துக்கொள்ள வேண்டும்.
தலைமுடி க்ஷௌரம் செய்த பின்னர் ஒவ்வொரு முறையும் பூணூல் மாற்றுவது அவசியமா? அடியேன் தினமும் பெருமாள் திருவாராதனம் செய்கின்றேன், அதனால் இச்சந்தேகம்.
க்ஷௌரம் செய்துகொள்ளும்பொழுது பண்ணுகிறவருடைய கையோ, ஆயுதமோ, அவர் தெளிக்கக்கூடிய ஜலமோ அல்லது அவர் போர்த்தக்கூடிய வஸ்திரமோ பட்டு பூணூல் அசுத்தம் ஆகிவிடுகிறது. பூணூல் என்பது எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும்.
சுத்தமுடைய யக்ஞோபவீதத்துடன்தான் நாம் அனுஷ்டானங்களைப் பண்ணவேண்டும். அசுத்தியானால் பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்தக்கணக்கில் தான் க்ஷௌரம் செய்துகொண்டால் யக்ஞோபவீதம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்கிறது.
இந்தக் குழுமத்தில் சேர்வது எப்படி?
இந்தக் குழுவில் சேர தாங்கள் தங்கள் கைபேசியில் Telegram appஐ பதிவிறக்கம் செய்துவிட்டு, கீழ்க்கண்ட linkஐ click செய்யவும்
https://t.me/GSPKSudarsanam
எங்களின் இன்னும் பிற குழுமங்கள் பற்றி அறிய இங்கே சேரவும்.
https://t.me/dgspk
https://t.me/gspkstotras
https://t.me/sampradayamanjari
வீட்டில் மற்றும் கோவிலில் இருக்கும் சாளக்கிராம மூர்த்திக்குத் திருமஞ்சனம் செய்தபிறகு சந்தனம் சாற்றலாமா? (நிறைய மூர்த்தங்கள் உள்ளன). துளசியும் சாற்றுவேன்.
இதில் சந்தேகமே வேண்டாம். வீட்டில் மற்றும் கோவிலில் இருக்கும் சாளக்கிராம மூர்த்திக்குத் திருமஞ்சனம் செய்தபிறகு சந்தனம் தாராளமாக சந்தனம் சாற்றலாம்.
நிறைய மூர்த்தங்கள் இருந்தால் எல்லாருக்குமே சந்தனம் சாற்றுவது விசேஷம் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு. ஒரு மூர்த்திக்கு மட்டும் சாற்றி மற்ற மூர்த்திகளுக்குச் சாற்றாமல் இருப்பது அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை. தூபம் தீபம் என்றால் எல்லா மூர்த்திகளுக்கும் பொதுவாக ஆகிவிடும். ஆனால் சந்தனம் என்பது அப்படியில்லை, அதனால் எல்லா மூர்த்திகளுக்கும் சாற்றுவதே விசேஷம். அதனால் திருமஞ்சனம் ஆனபிறகு அந்த க்ரமத்தில் சந்தனம் ஸ்மர்ப்பிக்கலாம்.
கோவிலில், ஒரே பவித்திரத்தைச் சில நாட்களுக்கு மீண்டும், மீண்டும் பயன்படுத்தலாமா?
கோவிலில் ஒரே பவித்ரத்தைச் சில நாட்களுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்று ஆகமங்களில் இருக்கின்றது.
பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கும் வஸ்துக்களில் ஸ்திர வஸ்துகள் என்று சில உள்ளன, அவற்றைப் பெருமாளுக்கு அடுத்தடுத்து ஸமர்ப்பிக்கலாம் என்று இருக்கிறது.
அடியேன் க்ருஹத்தில் ஒரு சாளக்கிராமமும் , ஒரு துவாரகா லக்ஷ்மியும் தனித்தனியாக ஏளியிருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் சேர்ந்தே திருமஞ்சனம் செய்யலாமா? அடியேனுடைய பர்த்தாதான் திருவாராதனை செய்கிறார்.
இரண்டுபேருக்கும் சேர்ந்தே திருமஞ்சனம் செய்யலாம். சாளக்கிராம திருமஞ்சனம் போல் துவாரகாமூர்த்தி திருமஞ்சனமும் அவரின் தீர்த்தமும் விசேஷமென்று சொல்லப்பட்டிருக்கிறது.
அடியேனுக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியாது, ஆனால் தேஶிகன் ஸ்லோகங்கள், ஸஹஸ்ரநாமம், பாதுகாஸஹஸ்ரம் ஆகியவற்றைத் தினமும் பாராயணம் செய்வேன். அடியேனுக்கு ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள சம்யுக்தங்களின் பயன்பாடு தெரியாததால் நிறைய தவறுகள் இருக்கும்.அடியேனுக்கு அறுபது வயதுக்கு மேல், ஸம்ஸ்க்ருதம் படிக்க முடியாது. தினப்படி வாழ்க்கையில் பலவற்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாமல் மறந்து போய்விடுகின்றேன். ஆனால் அடியேனுக்கு அனைத்து ஸம்ஸ்க்ருத ஶ்லோகங்களையும் சேவிக்க ஆசை. நான் தவறாக உச்சரித்தால் எனக்கு க்ஷமாபணம் உண்டா?
கூடியவரை தவறு இல்லாமல் சொல்வது விசேஷம்.
கொஞ்சம் தவறிருந்தால் அதில் ஒன்றும் தோஷமில்லை. ஆனால் அதைத் திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அதுவே வேதத்திற்கும் , ஸ்தோத்ரத்திற்கும் இருக்கும் வித்தியாசம். வேதத்தில் ஸ்வரம் தப்பினாலோ, அக்ஷரங்கள் தப்பினாலோ, தோஷமாகும். இதில் அப்படிக் கிடையாது. குறிப்பாக ஸஹஸ்ரநாமத்தின் கடைசியில்
"யத3க்ஷர பத3ப்4ரஷ்டம் மாத்ரஹீனம் து யத்3ப4வேத்
தத் சர்வம் க்ஷம்யதாம் தே3வா நாராயண நமோஸ்துதே"
என்று சொல்லி பெருமாளிடம் நமஸ்காரம் பண்ணி ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்க ப்ரார்த்திப்பதற்கு இருக்கின்றது. இப்படிச் சில ஸ்லோகங்களில் இருக்கும். அப்படி இல்லாவிட்டால்கூட நாம் பக்தியுடன் சொல்லும்பொழுது ஒரு குழந்தையினுடைய மழலைச்சொல்லை எப்படிப் பெரியவர்கள் ஏற்றுக்கொள்வார்களோ அதேபோலே பெருமாளும் ஏற்றுக்கொள்வார். அதற்காக அப்படியே சொல்லாமல் ஓரளவு திருத்திக்கொள்ள ப்ரயத்தனம் பண்ண வேண்டும்.
ஒரு வருடத் தீட்டு இருக்கும் போது புண்ணிய நதிகளில் நீராடலாமா? அடியேனின் ஆத்துக்காரர் தான் கர்த்தா. எல்லா மாசியங்களும் செய்கிறார். நாங்கள் இருவரும் கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடலாமா? தன்யோஸ்மி
ஒரு வருடத் தீட்டு என்று கிடையாது, பத்து நாள் தீட்டு மட்டும் தான். ஒரு வருஷ தீக்ஷா என்று அதற்கு பெயர். அந்த தீக்ஷா காலத்தில் கர்தாவாக இருக்கக்கூடிய தம்பதிகள் இருவருமே தீர்த்தயாத்திரை பண்ணக்கூடாது. அதாவது வெளியில் தீர்த்தயாத்திரை செய்து அங்கங்கு இருக்கும் புண்ய நதிகளில் நீராடக் கூடாது. ஆனா நாம் போகும் இடத்தில் புண்ய நதி இருந்தால் அதில் நீராடலாம்.
உதாஹரணமாக நாம் ஒரு கார்யமாக ஸ்ரீரங்கம் போகின்றோம் என்றால் அப்போது காவேரியில் தீர்த்தாமாடினால் விசேஷம். அதே போல் வடக்கே கங்கையில் தீர்த்தாமாடினால் விசேஷம்.
தீர்த்தயாத்திரை என்றால் புண்ய க்ஷேத்ரங்கள் போகனும், புண்ய ஸ்நானங்கள் பண்ணனும் என்றே சங்கல்பமெல்லாம் செய்துக்கொண்டு பத்ரிகாஶ்ரமம் போன்ற யாத்திரைகள் செய்வார்கள். அது போன்ற யாத்திரைகள் பண்ணக்கூடாது என்று தான் இருக்கிறது.
மற்றப்படி நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது புண்ய நதிகளில் ஸ்நானம் செய்யலாம் அது விசேஷம்.
தர்ப்பணம் மற்றும் ஶ்ராத்த தினங்களில் தாம்பூலம் பெற்றுக் கொள்ளலாமா?
தர்ப்பணம் ஶ்ராத்த தினங்களில் தாம்பூலம் கூடாது என்று சொல்லியிருக்கிறது. அதற்கு அர்த்தமானது வெற்றிலை பாக்கு போட்டு கொள்ளக்கூடாது என்பதாகும். இன்னொருவர் ஆத்தில் வெற்றிலை பாக்கு தாம்பூலம் வாங்கிக் கொள்ளக்கூடாது என்ற அர்த்தம் வராது.
தர்ப்பண தினத்தில் கல்யாண வீட்டிற்கு போகிறோமானால் அங்கு அவர்கள் கொடுக்கும் வெற்றிலை பாக்கு தாம்பூலம் சுபமானதாகும் அதை நாம் வாங்கிக்கொள்ளலாம். அதில் தோஷம் கிடையாது.
ஶ்ராத்த தினத்தை நாம் விசேஷமாக பார்க்க வேண்டும். வெளியில் பொதுவாக போகாத படி இருக்கலாம் போக நேர்ந்தால் தாம்பூலம் வாங்கலாம் தவறில்லை. ஆனால் தானமாக எதையும் அன்றைய தினம் வாங்கக் கூடாது என்று இருக்கிறது. ஆகையால் மங்கலகரமான வெற்றிலை பாக்கு அவர்கள் கொடுத்தால் வாங்கிக்கொள்ளலாம் சிறிது ஜாக்ரதையாக தானங்களை தவிர்த்தல் நலம்.
மன்வந்தரம் என்று எது சொல்லப்படுகிறது. இவர்களுக்கு என்று தனியாக உலகம் இருக்கிறதா. இப்போது இருக்கிற வைவஸ்தவ மனு எங்கிருந்து ஆட்சி செய்கிறார்?
கயா பித்ரு ஶ்ராத்தம் ஸ்ரேஷ்ட புத்திரன் தான் செய்ய வேண்டுமா? ஏனென்றால் அடியேனுடைய கணவர் இளைய மகன். மேலும் அடியேன் உறவினருக்கு ஒரே மகள், ஆகையால் மருமகன் மாமனாருக்கு கயா ஶ்ராத்தம் செய்யலாமா.
க்ருஹங்களில் பெருமாள் சன்னிதியில் அந்தந்த கிழமைக்கான கோலங்களை போடலாமா?
க்ருஹங்களிலே அந்தந்தக் கிழமைக்கான கோலங்களைப் போடலாம் என்றுதான் தோன்றுகிறது.
ஏன் குழந்தைக்கு முதன்முதலில் முடிஇறக்கும்போது அதை பகவானுக்கு ஸமர்பிக்கிறோம்? இதன் தாத்பர்யம் என்ன?
குழந்தைக்கு முதன்முதலில் முடிஇறக்கும்போது அதை பகவானுக்கு ஸமர்பிக்கிறோம் என்பதன் தாத்பர்யமானது, தலையே ஸமர்பிக்கின்றோம் என்பது போலாகும். தலை சிரைத்து என்று தான் அதைக் குறிப்பிடுவார்கள். “காம்பறத் தலை சிரைத்து” என்று ஆழ்வாரும் குறிப்பிடுகின்றார்.
நம் தலையையே அதாவது குழந்தையையே பெருமாளுக்கு ஸமர்பிக்கின்றோம் என்பதற்கு அடையாளமாக முடியை ஸமர்பிக்கிறார்கள். முடி என்பது மீண்டும் வளரக்கூடியது என்பதால் அப்படிச் செய்வது பாதகமில்லை எனத் தெரிகிறது.
அடியேன், சமீபத்தில் எங்கள் மகளும் மருமகனும் 2 வருடங்கள் மேற்படிப்புக்காக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல நேர்ந்தது, சமுத்திரத்தைக் கடந்ததற்கு சாஸ்திர விதிமீறல் ஏதேனும் உள்ளதா? அதற்கு பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா?
பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றால் கடல் தாண்டின தோஷம் கண்டிப்பாக உண்டு. அதற்குரிய ப்ராயச்சித்தங்களை பெரியோர்களைக் கேட்டு தெரிந்து கொண்டு பண்ணலாம்.
பொதுவாக சேது ஸ்நானமோ, கூஷ்மாண்ட ஹோமமோ செய்யும் படி நியமிப்பார்கள். அவரவர் ஆத்து பெரியோர்களைக் கேட்டுச் செய்யவும்.
அடியேன் தாய்வழி அத்தை சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்தில் நியமிக்கப்பட்ட மடத்தின் அதிகாரியிடத்தில் இருந்து பஞ்சசம்ஸ்காரம் பெற்றுள்ளார், ஆனால் எந்த மந்திரமும் நினைவில் இல்லை, அவர் மீண்டும் வேறு ஆசார்யனை அணுகி ஸ்மாஶ்ரயணம் மற்றும் பரந்யாஸம் செய்துக்கொண்டு தான் மந்திரோபதேசம் பெற வேண்டுமா?
மந்திரங்களை ஞாபகப் படுத்திக்கொள்ள சுலபமான உபாயம் உண்டு. ஸமாஶ்ரயணம் திரும்பவும் பண்ணிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம் காலக்ஷேபம் பண்ணலாம். அதைச் செய்தாலேயே மந்திரங்கள் எல்லாம் ஞாபகம் வந்துவிடும். அதனால் ஒரு ஸதாசார்யனை நாடி ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தை காலக்ஷேபம் பண்ணலாம். ஸமாஶ்ரயணத்தில் சங்கு சக்கர லாஞ்சனத்தை மீண்டும் பொருத்திக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. அதில் தோஷம் ஒன்றும் இல்லை.
ஆனால் பரந்யாஸம் கண்டிப்பாக திரும்பவும் பண்ணிக் கொள்ள கூடாது. ப்ரம்மாஸ்த்ர ந்யாயப்படியினால் மீண்டும் பண்ணிக் கொண்டால் பலிக்காமல் போய்விடும்.
அடியேன் ஆசார்யனிடம் ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் செய்துகொண்டுள்ளேன். எனக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் விருப்பமில்லை. ஆனால் வீட்டில் உள்ள அனைவரும் மோதகம் செய்து கொண்டாடி மகிழ வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் பரந்யாஸம் செய்து கொண்டுள்ளனர்.இதை எப்படி அவர்களுக்குச் சொல்லி புரியவைப்பது?
விநாயகர் என்பவர் ப்ரசித்தமாக இப்போது இருந்து வருகிறார். புரியாதவர்களுக்கு நாம் மெதுவாக இப்படி எடுத்துச் சொல்லலாம்.
விநாயகர் என்பவர் வேதத்தில் சொல்லப்பட்ட தெய்வமே கிடையாது. யாகத்தின் தேவதைகள் என பல தேவதைகளைச் சொல்லியிருக்கிறார்கள், அதில் விநாயகர் குறிப்பிடப்படவில்லை. விநாயகர் என்பவர் தெய்வம் என்பதில் சந்தேகமில்லை ஆனால் வைதீகமான தெய்வமில்லை.
விநாயகர் மட்டுமல்ல ஒருகாலத்தில் வைதீகமானவர்கள், ஸ்மார்த்தர்களுட்பட ஐயப்பன் முதலியவர்களைச் சேவிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் வேதத்தில் சொல்லப்பட்ட தெய்வங்கள் அல்ல.
வேதம் பல தேவதைகளைச் சொல்லி “விஷ்ணு பரம:” என்று விஷ்ணு தான் உயர்ந்த தெய்வம் என்றாகச் சொல்லியிருக்கிறது.ஆகையால் எம்பெருமான் விஷ்ணுவை சேவித்து விட்டால் மற்ற தேவதைகளைச் சேவிக்காவிட்டால் கூட அவர்கள் கோபிக்க மாட்டார்கள் ஏனென்றால் மற்ற தேவர்களுக்குத் தெரியும் விஷ்ணு தான் உயர்ந்தவர் என்று.
ஆக விநாயகருக்கும் திருப்த்தி வரவேண்டும் என்றால் விஷ்ணுவை சேவிக்க வேண்டும் என்பதே வேதத்தின் பரம தாத்பர்யம்.
ஒரு கோவிலில் பிரசாதம் ப்ராமணரால் தயாரிக்கப்படுகிறது, ஆனால் அவர் ஸ்ரீவைஷ்ணவர் அல்ல. ஸ்ரீவைஷ்ணவராகிய நாம் அந்த ப்ரசாதத்தை உட்கொள்ளலாமா?
கோவிலில் பொதுவாக ஸ்ரீவைஷ்ணவர்கள் தான் தளிகைச் செய்தல் வேண்டும். ஆகையால் அவரை ஸ்ரீவைஷ்ணவராக்கி விட்டால் பரவாலையாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
இது ஒரு சங்கடமான கேள்வி, பெருமாள் ப்ரசாதம் என்று பார்த்தால் நல்லது, ஆனால் ஸ்ரீவைஷ்ணவரால் செய்யப்படவில்லை எனும் போது என்ன செய்தல் என்று யோசிக்க வேண்டும்.
ஒரு ப்ரபந்நன், பஞ்சசம்ஸ்காரம் செய்துக்கொள்ளாத ஒரு ஸ்ரீவைஷ்ணவருடைய அகத்தில் உணவு உட்கொள்ளலாமா?
ஆசார ரிதீயில் பார்த்தால் ஒரு ப்ரபந்நன், பஞ்சசம்ஸ்காரம் செய்துக்கொள்ளாத ஒரு ஸ்ரீவைஷ்ணவருடைய அகத்தில் உணவு உட்கொள்ளக்கூடாது.
குறிப்புகள்:
சம்ஸ்காரம் என்றால் தகுதியைக் கொடுப்பது என்று அர்த்தம். பஞ்சசம்ஸ்காரம் ஆகவில்லை என்றால் அவருக்கு அந்தத் தகுதி கிடையாது. ஆகையால் ஆசார ரிதீயில் அவருடைய அகத்தில் அவர் கொடுக்கும் உபகாரங்களைச் சாப்பிடாமல் இருப்பதே நலம்.
அடியேன் அடுத்த மாதம் ஆக்லாந்து நாட்டிற்குப் பயணம் செய்ய உள்ளேன். அங்கே 6 மாதங்கள் தங்கபோகின்றேன்.சாளக்கிராம மூர்த்திகளை எவ்வாறு எடுத்துச்செல்ல வேண்டும், மேலும் என்னென்ன ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்ற வேண்டும் என்று தெளிவு படுத்த ப்ராத்திக்கின்றேன்.
சாளக்கிராமங்களை நாம் வெளியில் ஏளச்செய்து செல்லும் போது, ஒரு மரப்பெட்டி என எதில் ஏளியிருக்கிறாரோ அதை ஒரு சால்வையாலோ அல்லது பட்டுத்துணியினாலோ நன்றாக சுத்தி 3, 4, 7 என்று வரும்படியாக சுற்றி ஓலைப்பெட்டியிலோ அல்லது அது போன்ற பெட்டியில் நாம் ஏளப்பண்ணிக்கொண்டு போகலாம்.
பின் அங்கு போய் பெருமாளுக்கு பாலில் திருமஞ்சனம் செய்துவிட்ட பிறகு நித்யபடியான திருவாராதனத்தை தொடரலாம்.
குறிப்புகள்:
சில நேரங்களில் பெட்டியைச்சோதனை செய்யும் போது அந்த நபர் இதனுள் என்ன இருக்கின்றது என்றும் அதை எடுத்துக்காட்டச் சொல்லியும் கேட்பார்கள். அவர்களுக்கு அது என்ன என்று அறியும் உரிமை இருக்கிறது எனவும் கூறுவார்கள் வேறு வழியில்லாமல் நாம் அவர்களிடம் கொடுக்கும் படி நேரலாம், அதன் பின்னர் பெருமாளுக்கு பாலில் திருமஞ்சனம் செய்ய வேண்டியது.
இதற்குச் சிலர் கூறும் சாமாதானம்/வேறு வழி என்னவென்றால், சிலர் checkin luggage ஆக போடுகிறார்கள், ஆனால் அது அவ்வளவு ஸ்வாரஸ்யமாக இல்லை. சிலர் metal ஆக இருந்தால் தெரிகிறது ஆகையால் மரப்பெட்டியில் பெருமாளை ஏளச்செய்து நிறைய துணிகள் கொண்டு சுற்றிவிட்டால் தெரிவதில்லை என்கிறார்கள். முடிந்தவரை பெருமாளைச் சுத்தமாக ஏளப்பண்ணிக்கொண்டுச் செல்ல பார்க்கவேண்டும்.
பித்ரு பக்ஷ காலத்தில் தர்ப்பணம் திருவாராதனத்திற்கு முன் செய்ய வேண்டுமா? மற்றும் அந்தச்சமயத்தில் கோவில் அல்லது மடத்திலோ பெருமாளுக்கு வாச கைங்கர்யம்(பாராயணம்) செய்யலாமா?
ஶாரத்தம் முதலானவை பொருத்தமட்டில், முதலில் திருவாராதனம் பிறகு தர்ப்பணம் என்று வரும். மாச பிறப்பு நாட்களில் மட்டும், மாசம் சீக்கிரம் பிறந்தால் முதலில் தர்ப்பணம், அதன் பின்னர் திருவாராதனம் என்று வரும்.
அடியேனின் தாயார் 2 மாதங்களுக்கு முன்பு திருமோகூர், அழகர் கோயில், பெரியாழ்வார் திருவரசு கோயில்களுக்கு சென்று சேவித்து விட்டு திரும்பும் வழியில் ஒரு கார் விபத்தில் பரமபதித்து விட்டார். அடியேனின் சகோதரன் காரியங்கள் செய்து கொண்டு இருக்கிறார்.பெண் என்ற முறையில் அடியேன் பரமபதித்த அவர்களுக்காக என்னென்ன அனுஷ்டானங்கள் கடைப்பிடிக்க வேண்டும், எந்தெந்த ஸ்தோத்திரங்கள் சேவிக்கலாம்?
ஒரு பெண்ணுக்கு, பெரிதாகச் செய்வதற்கு ஒன்றும் கிடையாது. சகோதரனானவர் அவர் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார். அக்கார்யத்திற்கு போக முடியுமானால், அவர் உடன் இருந்து அவருக்கு சகாயம் பண்ணலாம். தனிப்பட்ட முறையில் பெண்களுக்கென்று எந்த அனுஷ்டானமும் செய்வதற்கு இல்லை.
வருடாந்திர ஶ்ராத்த திதி வரும் நேரத்தில் அங்கு போய் கலந்துக்கொள்ளலாம். அப்படி முடியாமல் போனால் அந்த திதி தினத்தன்று அவரை நினைத்துக் கொண்டிருக்கலாம்.
எல்லா ஸ்தோத்ரங்களையும் சேவிக்கலாம்.
தகப்பனார் ஒரு விபத்தில் பரமபதித்து விட்டபடியால் மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். அந்த கஷ்டம் போவதற்காக தயாஶதகம் முதலான ஸ்தோத்ரங்களைச் சேவிக்கலாம்.
அடியேனுக்கு ஒரு சிறு சந்தேகம். நாம் பஞ்சசம்ஸ்காரம் ஶரணாகதி பற்றிய உண்மையான அர்த்தமும் மகத்துவமும் தெரியாமல், ஸ்ரீவைகுண்ட ப்ராப்த்தியைப் பற்றிய நம்பிக்கையும், ஞானமும் இல்லாமல், நமது ஆசார்யரிடத்தில் பஞ்சசம்ஸ்காரம் சரணாகதி செய்வதை ஒரு சடங்காகச் செய்து வந்தாலும், ஸ்ரீய:பதியான எம்பெருமான் நமக்கு மோக்ஷம் கொடுப்பாரா? எனது கேள்வியில் ஏதேனும் தவறு இருந்தால் க்ஷமிக்கவும்.
பஞ்சசம்ஸ்காரம் ஶரணாகதி இதைப்பற்றி தெரியாமல் நடந்திருந்தாலும், அதை நாமாக செய்து கொள்ளவில்லை. ஆசார்யனே செய்து வைக்கிறார் என்கின்றபடியினால் , அந்த ஆசார்யனுடைய விஶ்வாஸத்தின் பேரில் நமக்கு அதனுடைய பலன் கிட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனாலும் நாம் அதைப் பற்றி தெரிந்துக்கொண்டு அதற்கேற்றார் போல் நடந்துக் கொள்ள வேண்டும். ஆசார்யன் நமக்காக பண்ணியிருந்தாலும் கூட, நாம் எம்பெருமானிடம் ஆத்மாவை ஸமர்ப்பித்தவர்கள் என்கின்ற முறையில் நமது நிலைமையை நாம் புரிந்துக்கொண்டு, அதற்கேற்ற ஆசார அனுஷ்டான நியமங்களைக் கடைபிடிப்பதற்காக அவற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வரும் கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ த்ரியோதசியில் என் அக்கா திருமதி சரோஜாவிற்கு வருஷாப்தீகம் நடக்க இருக்கிறது. இதுவரை அனைத்து மாசியம், ஊனம் நடந்து வருகிறது. ஆனால் கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி பஞ்சாங்கத்தில் இல்லை. எப்படி வருஷாப்தீகம், ஊனாப்தீகம், சோதகும்பம் போன்றவைகளை நடத்துவது? எந்த நாட்களில் நடத்துவது? ஒன்றும் புரியவில்லை. தயவுசெய்து விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.
பொதுவான சாஸ்த்ரம் என்னவென்றால் கார்த்திகை மாதத்தில் ஶ்ராத்த திதி இல்லை என்றால் அதற்கு முன் மாசம் பண்ண வேண்டும். பொதுவாக கார்த்திகை, மார்கழி, மாதங்களில் 29 நாட்களே இருக்கும். அதனால் ஸ்வாபாவிகமாக ஒரு திதி இல்லாமல் விட்டுப் போகும். கார்த்திகை மார்கழி தை இந்த மூன்று மாதங்களில் ஶ்ராத்த திதி இல்லை என்றால் பூர்வ மாதங்களில் அதாவது அதற்குமுன் மாதத்தில் ஶ்ராத்த பண்ணவேண்டும் என்று சாஸ்த்ரப்படி விதி இருக்கிறது.
அதனால் அதை முன்பே பார்த்து தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அடியேனின் மூத்த மைத்துனர் மாமனாருக்கு மஹாளய திதியில் தர்ப்பணம் செய்கிறார். அதே நாளில் என் மகளின் நக்ஷத்ரம் வருகிறது. இதில் ஏதாவது தவறு இருக்கிறதா? அப்படி செய்யலாமா?
ஒருவர் தன்னுடைய தகப்பனார் திதியிலேயே மஹாளய ஶ்ராத்தம் பண்ணுகின்றார் என்றால் அதில் வேறு ஒன்றும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. தாராளமாக பண்ணலாம்.
ஆனால் அப்பொழுது மகளுடைய நக்ஷத்ரம் வருகின்றதே என்று மனதில் உறுத்தலாக இருந்தால் அப்பொழுது வேறு ஒரு நாளில் பண்ணலாம். 15 நாளில் ஏதாவது ஒரு நாளில் பண்ணலாம் என்று இருக்கிறது.
மத்யாஷ்டமி முதலான நல்ல நாட்கள் எல்லாம் இருக்கும். அந்த நாட்களில் தாராளமாகப் பண்ணலாம். தகப்பனாருடைய திதியில் தான் பண்ண வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் இல்லை. அதே சமயம் தகப்பனாருடைய திதியில் பண்ணும்போது இன்னொருவருடைய பிறந்தநாள் வந்தால் பார்க்க வேண்டியதில்லை. இது விசேஷம் என்று வைத்துக் கொண்டால் இது பண்ணலாம், இல்லை என மனதுக்கு உறுத்தலாக இருந்தால் வேறு ஒரு நாளிலும் பண்ணலாம்.
அடியேன் பர்த்தாவினுடைய குடும்பத்தில் தாயாதிகள் (மாமனாரின் 4 சகோதரர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள்) உள்ளனர். மேலும் எங்களில் பெரும்பாலோர் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வசிக்கிறோம். சமீபத்தில் மாமனாரின் மூத்த சகோதரர் மற்றும் மூத்த சகோதரரின் மகன் பரமபதம் அடைந்தனர். நாங்கள் 10 நாட்கள் தாயாதிகள் தீட்டு அனுசரித்தோம். இருப்பினும் நம் தாயாதிகள் திருவடி அடையும் போது சில மரபுகளைக் கடைப்பிடிப்பதில் எனக்கு சில க்லேஷம் இருக்கின்றன. வித்வான்கள் எனது சந்தேகங்களை தீர்த்து வைக்க ப்ரார்த்திக்கிறேன். அது எங்களுக்கும் எங்கள் வருங்கால சந்ததியினருக்கும் முறையான அனுஷ்டானத்தை பின்பற்றி வழிநடக்க உதவும்.
a) எங்கு இருந்தாலும் 10 ஆம் நாள் என் கணவர் குழி தர்ப்பணம் பண்ண வேண்டுமா (என் மாமனார் உயிருடன் இருக்கிறார்)?
b) பெருமாள் கோவில்களுக்கு சென்று கைங்கர்யம் செய்யலாமா?
c) டோலோத்ஸவத்தில் பெருமாளை ஆத்தில் ஏள பண்ணலாமா?
d) புரட்டாசி மாவிளக்கு மற்றும் பிற பெருமாள் மற்றும் ஆசார்யன் திருநக்ஷத்திரம் கொண்டாடலாமா?
e) இதர பண்டிகைகள் – வருஷ பிறப்பு, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, கணு கொண்டாடலாமா?
நீண்ட கேள்விக்கு க்ஷமிக்கணும் .தயவு செய்து விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.
ஒருவருடைய தகப்பனார் ஜீவித்து இருக்கும்பொழுது அவர் குழித்தர்ப்பணம் பண்ண வேண்டிய அவசியமில்லை. தகப்பனார் இல்லாவர்கள் தான் குழித்தர்ப்பணம் பண்ண வேண்டும்.
பத்து நாள் தீட்டு சமயத்தில்
பெருமாள் கோவில்களுக்குச் சென்று கைங்கர்யம் செய்யக்கூடாது.
டோலோத்ஸவத்தில் ஆத்தில் பெருமாளை ஏள பண்ணக்கூடாது.
புரட்டாசி மாவிளக்கு, பெருமாள், ஆசார்யன் திருநக்ஷத்ரம் எதுவும் பண்ணக்கூடாது.
தீட்டு உள்ளவர் அகத்தில் ப்ரதானமவராக இருந்தால் அந்த ஆத்துக்கே தீட்டு என்கின்ற மாதிரி ஆகும். அதனால் பெருமாள் திருநக்ஷத்ரத்தை விடாமல் பண்ண வேண்டும் என்றால் தீட்டு இல்லாத வேறு ஒருத்தரைக் கொண்டு வேறு ஒரு இடத்தில் பண்ணி வைக்கலாம். புத்திரர்கள் இருந்தால் புத்திரர்கள் தனியாகப் பண்ணலாம். வைபவம் எதுவுமே பண்ணாமல் இருப்பதே நல்லது என்று சொல்வார்கள்.
வருடப்பிறப்பு, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, கணு இந்த பண்டிகைகள் எதுவுமே 10 நாள் தீட்டுக்குள் வந்தால் அடிபட்டுப் போய்விடும். எதுவும் கொண்டாட முடியாது.
அடியேனுக்கு ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது. உபந்யாஸங்கள் நிறைய கேட்க கேட்க ப்ரபத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. அடியேனுடைய க்ருஹத்தில் பெரியவர்கள் இதர தேவதாந்திரர்களை வழிபடுவதுடன், பெருமாள் சந்நிதியில் அவர்களின் படங்களை வைத்தும், அவர்களுக்காக சில பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறார்கள். அப்படி இருக்கின்ற பக்ஷத்தில் நான் ப்ரபத்தி செய்து கொள்ளலாமா? ப்ரபத்திக்குப் பிறகு அடியேன் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் என்னவென்று தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
அகத்திலே இருக்கும் பெரியவர்கள் மற்ற தேவதாந்திரங்களைக் கொண்டாடினால் கூட நீங்கள் கொண்டாடாமல் இருக்க முடியும். நாம் ஒன்றும் தேவதாந்திரங்களுக்கு எதிரியில்லை. எம்பெருமானைச் சேவிக்கின்ற படியினால் மற்ற தேவதாந்திரங்களைக் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என்கின்ற நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.
அதனால் நீங்கள் ஶரணாகதி பண்ணிக்கொண்டு ஆசார்யன் சொல்வதுபோல் மற்ற தேவதாந்திரங்களைச் சேவிக்காமல் இருக்க வேண்டும். தேவதாந்திரங்ளுடைய ப்ரசாதங்களைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
தேவதாந்திரங்ளுடைய ப்ரசாதங்களைச் சாப்பிடக்கூடாது என்று அவர்களுடைய ஆகமத்தில் இருக்கின்றது. சைவ ஆகமங்களில் இருக்கின்றது. அவர்கள் இப்போது அதை மாற்றி விட்டார்கள். ரொம்ப விஷயம் தெரிந்த வைதீகரர்கள் சாப்பிட மாட்டார்கள். உண்மையில் நாம் எதுவும் புதியதாகச் சொல்லவில்லை. அவர்களும் நாளடைவில் அதை சரி செய்வார்கள் என்று நினைக்கிறேன். அதனால் மனசாட்சியில் எந்த ஒரு குற்ற போதமும் இல்லாமல் பகவானை மட்டும் சேவித்துக்கொண்டு இருக்கலாம்.
அடியேனுக்கு பத்து நாட்கள் பங்காளி தீட்டு. இதன் நடுவே மறுபடியும் மற்றொரு 10 நாள் தீட்டு வந்துவிட்டது. இப்பொழுது தீட்டு எப்படி அனுஷ்டிக்க வேண்டும்? குழித் தர்ப்பணம் எப்படி பண்ணவேண்டும்? தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்
பத்து நாட்கள் பங்காளி தீட்டின் நடுவே மறுபடியும் மற்றொரு 10 நாள் தீட்டு வந்துவிட்டால் முதல் தீட்டு கழியும் போதே இந்த தீட்டும் போய்விடும்.
இது பற்றி விவராமாக அறிய GSPK`s சுதர்சனம் சார்பாக வெளியிட்ட “தீட்டு கணக்கு” என்ற புத்தகத்தை பார்க்கவும்.
அடியேனுக்கு ஸமாஶ்ரயணமும் பாரண்யாஸமும் ஆகிவிட்டது. சரஸ்வதி பூஜையை எப்படி கொண்டாடுவது? முன்பு சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்வோம். இப்பொழுது ஹயக்ரீவப் பெருமாளை சேவிக்க வேண்டுமா?
ஸமாஶ்ரயணமும் பாரண்யாஸமும் ஆகிவிட்டது சரஸ்வதி பூஜைக்கு பதில் நீங்கள் சொல்லியது போல் ஹயக்ரீவ பெருமாளைச் சேவிக்கலாம். ஹயக்ரீவ பெருமாளைச் சேவித்தாலே சரஸ்வதி தேவியைச் சேவித்ததாக அர்த்தமாகும்.
ஹயக்ரீவ பூஜை தான் சரஸ்வதி பூஜை. சரஸ்வதி பூஜை என்று தனியாக பண்ண வேண்டாம். ஸ்வாமி தேஶிகனும் “தேவி சரோஜா ஸந தர்ம பத்னீ” என்று ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தில் ஸாதித்திருக்கிறார்.
அபராஹ்னம் என்றால் என்ன. அபராஹ்னம் காலத்தில் தான் தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். அடியேன் தர்ப்பணாதிகள் செய்ய மதியம் 1 மணிக்கு மேல் ஆகிறது. அது சரியான சமயமா என்று தெரியவில்லை. தயவு செய்து விளக்க ப்ரார்த்திக்கின்றேன்.
ஒரு நாளின் பகல் பொழுதை 5 ஆக பிரித்துக்கொண்டு, அதில் வரும் 4வது காலம் அபராஹ்ன காலம் என்று பெயர். ஆங்கிலத்தில் Afternoon சொல்லும் காலம்.
பகல் பொழுதென்பது சராசரியாக 30 நழிகை வரும். அதை 5 ஆக பிரித்தால் ஒவ்வொரு காலமும் 6 நாழிகை என வரும், முதல் மூன்று 6 நாழிகை கழிந்த பின். அதாவது 18 நாழிகைக்குப் பின் 24 வரை இருக்கக்கூடிய நாழிகைகள் அபராஹ்னம் என்பதாகும், சுமார் மதியம் 1 மணிக்கு மேல் வரும். ஆகையால் மதியம் 1 மணிக்கு மேல் தர்ப்பணம் செய்வது சரியான சமயம் தான்.
அனைவரும் ஸ்வீகரித்த பின் எஞ்சியிருக்கும், பெருமாள் தீர்த்தம் மற்றும் திருவாராதனத்திற்காக திருக்காவேரியிலிருந்து கொணர்ந்துவந்த தீர்த்தங்களைத் மீண்டும் உபயோகப்படுத்தலாமா அதவாது தளிகைக்கு பயன்படுத்தலாமா? இல்லையெனில் எஞ்சியிருக்கும் அந்தத் தீர்த்தத்தை என்ன செய்ய வேண்டும்?
எஞ்சியிருக்கும் பெருமாள்தீர்தத்தை, தளிகைக்கு உபயோகப்படுத்தும் வழக்கமில்லை. அதை நம் கால்படாத ஒரு நல்ல இடத்தில் சேர்க்க வேண்டும். அதாவது மரத்தடி அல்லது துளசிச்செடி என நல்ல இடமாக பார்த்து பத்ரமாக சேர்த்துவிட வேண்டும்.
நம் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த மணமகன், இச்சம்ப்ரதாயத்தைச் சாராத ஒரு ஸ்த்ரீயை மணக்கும்போது, அவனுக்கு பித்ரு காரியம் செய்யும் தகுதி உண்டா?? மேலும் மணமகள் நமது அனுஷ்டானங்களுக்குத் தகுதி பெறுவதற்கு நாம் ஸமாஶ்ரயணம் செய்து வைக்கலாமா?
நம் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த மணமகன், இச்சம்ப்ரதாயத்தைச் சாராத ஒரு ஸ்த்ரீயை மணக்கும்போது, அவனுக்கு பித்ரு காரியம் செய்யும் தகுதி உண்டு.
மணமகள் நமது அனுஷ்டானங்களைச் செய்யும் தகுதி பெறுவதற்கு ஸமாஶ்ரயணம் தாராளமாகச் செய்து வைக்கலாம்.
அப்படிச் செய்வதினால் அவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்களாகி விடுகிறார்கள், பின் எந்தச் சங்கடமும் இல்லாமல் ஶ்ராத்தம் முதலிய கார்யங்கள் செய்யலாம்.
பொதுவாக ஶ்ரவண வ்ரதம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும்? திருவேங்கடமுடையானுக்கு, ஒப்பிலியப்பனுக்கு சுமங்கலிகள் எவ்வாறு ஶ்ரவண வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும்?
பொதுவாக ஶ்ரவண வ்ரதத்திற்கான நியமங்கனங்கள்
அன்று காலை சுத்தமாக ஸ்நானம் செய்வது
ஒப்பிலியப்பனுக்காக உப்பு சேர்க்காமல் அன்றைய தினம் சாப்பிடுவது
ஒருவேளை தான் சாப்பிடனும், இரண்டாம் வேளை உபவாஸம் அல்லது பலகாரம்
கோவிலுக்குச் சென்று பெருமாள் சேவிப்பது
ஸ்தோத்ரங்கள் சொல்வது
மேலும் வ்ரதத்திற்கான பொது நியமங்களுடன் அதாவது
அன்றைய தினம் கேளிக்கைகளைத் தவிர்ப்பது
புது வஸ்த்ரம் அணிவதைத் தவிர்த்தல்
இப்படி மேற்ச்சொன்ன நியமங்களுடன் வ்ரதம் கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக பெருமாள் நினைவு இருக்க வேண்டும்.
சரும நோய் பிரச்சனைகள் தீர என்ன தேஶிக ஸ்தோத்ரங்கள் சொல்லலாம்?
சரும நோய் பிரச்சனைகள் தீர பல ஸ்தோத்ரங்கள் இருக்கு குறிப்பாக கருட பஞ்சாஶத் சொல்லலாம். அதைச் சொல்வது கஷ்டமாக இருந்தால் கூட யாராவது பெரியவர்கள் சொல்வதைப் போட்டு கேட்டுச் சொல்லலாம்.
ஏகாதசி அன்று நாம் ஏன் துளசியை(திருத்துழாய்) ஸ்வீகரிக்க கூடாது ?
திருத்துழாய் என்பது பகவானுடைய பிரசாதம் ஆகின்றபடியினாலே ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் திருத்துழாயையும் ஸ்வீகரிப்பது வழக்கத்தில் இல்லை.
அடியேனுக்கு சம்ஸ்காரங்கள் எதுவும் தெரியாது, தயவுசெய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
சம்ஸ்காரங்கள் பற்றிய ஒரு வகுப்பு Sampradaya Manjari ePatashala வில் நடந்தது. அதில் விளக்கமாக எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. கீழே உள்ள linkஐ click செய்து அறியவும்.
https://youtu.be/oM9PjywdptQ
வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் ஸமாஶ்ரயணமும், பரந்யாஸமும் பண்ணிக் கொள்ளலாமா?ஆன பின் அந்தத் தேசத்தில் தொடர்ந்து வாழும் சூழல் வந்தால் அங்கேயே வாழலாமா இல்லை இந்தியாவிற்கு மீண்டும் வர வேண்டும் என்ற கட்டாயம் இருக்கின்றதா?
வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் ஸமாஶ்ரயணமும், பரந்யாஸமும் அவசியம் பண்ணிக்கொள்ளலாம். எங்கு இருந்தாலும் பரந்யாஸம் பண்ணிக்கொண்டால் காப்பாற்றப்பட்டு விடுவோம், அதனால் கட்டாயம் பண்ணிக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் அங்கு வாழ்வது உத்தமகல்பம் என்று சொல்ல முடியாது. ஆனால் அங்குதான் நமக்கு வாழ்வு ஏற்பட்டிருக்கிறது என்றால் அங்கு தொடர்ந்து ஆழ்வார்கள், ஆசார்யர்கள் சொல்லிக் கொடுத்தபடி, எம்பெருமானார் காண்பித்துக் கொடுத்த வழிகளின்படி முடிந்த அளவிற்கு அனுஷ்டானங்களைக் கடைபிடித்து வாழ வேண்டும். எங்கிருந்தாலும் எல்லாரும் பரந்யாஸம் கட்டாயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.
ஆனி மாசம் ஸுதர்சனத்தில் பித்ரு தோஷம், நாக தோஷம், எல்லாவற்றிற்க்கும் பரிகார ஶ்லோகம் இருக்கின்றது என்ற குறிப்பு இருந்தது. அதே போல் அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தின் மீது வெறுப்பும் பொறாமையும் மச்சினருக்கு இருந்தால் அதைப் போக்க ஏதாவது தேசிக ஶ்லோகம் உண்டா ? அவர்களின் பொறாமை குழந்தைகளைப் பாதிக்காது என்று நம்புகிறேன்.
மேலும், தலைமுறை தலைமுறையாக எங்கள் குடும்பத்தில் ஒருவராது நாக தோஷத்தினால் பாதிக்கப்படுகின்றார்கள். அந்த பக்ஷத்தில் அது நம் குழந்தைகளைப் பாதிக்காது இருக்க கருடபஞ்சாஶத் அல்லது கருடதண்டகம் நாம் சொல்லலாமா அல்லது குழந்தைகள் தான் அவற்றைச் சொல்ல வேண்டுமா?
நாக தோஷம் இருந்தால், குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்களும் அவசியம் கருடபஞ்சாஶத் அல்லது கருடதண்டகம் சொல்லலாம். எந்தவிதமான சர்ப்ப தோஷம் இருந்தாலும் கருடபஞ்சமி அன்று கருடதண்டகம் சொன்னால் தோஷம் நீங்கிவிடும். ப்ரபந்நர்களுக்கு எந்த தேவதையிடமிருந்தும் எவ்வித ஆபத்தும் வரும் என்கின்ற பயம் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. எம்பெருமான் கட்டாயம் காப்பாற்றுவார். எம்பெருமானுடைய அடியார் ஆன கருடனுடைய ஸ்தோத்திரங்களைச் சொன்னால் எப்பேர்பட்ட நாகதோஷமும் நீங்கும்.
அதுமட்டுமல்லாமல் போட்டி, பொறாமை போன்றவைகள் நீங்குவதற்கும் கருடபஞ்சாஶத்தே உபயுக்தமாக இருக்கும்.
ஏனென்றால் கருடபஞ்சாஶத்தினுடைய பலஶ்ருதியில் வ்யாதி4தை3வ ஆதி4பீடா3 என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஆதி என்பது மனோவ்யாதி. மனோவ்யாதி தான் இந்த மாதிரி பொறாமை போட்டி போன்ற எண்ணங்களாகும். அதனால் அவை எல்லாம் நீங்குவதற்கும் கருடபஞ்சாஶத்தை சேவிப்பதே உசிதம்.
வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் பஞ்ச ஸம்ஸ்காரமும் பரந்யாஸமும் பண்ணிக் கொள்ளலாமா அல்லது தடையேதும் இருக்கிறதா? அவர்கள் பரந்யாஸம் பண்ணின பிறகு அங்கேயே வாழலாமா?
பர ஸமர்ப்பணம் செய்து கொள்வதற்கு அனைவருக்கும் அதிகாரம் உண்டு.
"அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகும்” என்பது ஸ்வாமியின் திருவாக்கு. பஞ்ச ஸம்ஸ்காரம் எல்லாரும் பண்ணிக்கொள்ளலாம். ஸ்ரீவைஷ்ணவர்களாக ஆகலாம்.
ஆனால், பஞ்ச ஸம்ஸ்காரம், பரந்யாஸமெல்லாம் செய்து கொண்ட பின்பு, கர்மாநுஷ்டானங்களை நித்யமும் விடாமல் பண்ண வேண்டும். அந்த கர்மாநுஷ்டானங்களைச் செய்வதற்கு கர்ம பூமியான பாரதமே சிறந்த இடம்.
ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவம் என்ன, அதை எப்படி முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பதை விளக்க ப்ரார்த்திக்கிறேன் ?
ஏகாதசி என்பது ஒரு நித்ய வ்ரதம், அதனாலேயே அது முக்கியத்வம் பெறுகிறது. ஆபால விருத்தர்கள் எல்லாக் காலங்களிலும் அனுஷ்டிக்க வேண்டியது. அஶௌச காலங்களில் கூட ஏகாதசி விரதத்தை விடும் வழக்கம் இல்லை. ஸ்த்ரீகள், ரஜஸ்வலா காலத்திலும் ஏகாதசி விரதத்தை அவசியம் அனுஷ்டிக்க வேண்டும்.
புருஷர்கள் நிர்ஜலமாக இருப்பது விசேஷம். அதற்குச் சக்தி இல்லை என்றால் தீர்த்தத்தை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அதுவும் முடியாதவர்கள் வெறும் பால் பழங்கள் மட்டுமோ, அல்லது ஒரு வேளை பலகாரம் செய்தோ அனுஷ்டிக்கலாம். இவை எதையும் மேற்கொள்ள முடியாதவர்கள் அன்று அவசியம் அரிசி சாதம் சாப்பிடாமல் அனுஷ்டிக்கலாம்.
சுமங்கலிகள் நிர்ஜலமான உபவாஸம் இருக்கும் வழக்கம் இல்லை. அவர்களுக்கு பர்தர் கைங்கர்யம் முக்கியம். மறுநாள் பர்தாவினுடைய துவாதசி பாரணைக்கான காரியங்களை இவர்கள் செய்ய வேண்டும். அதனால் அதற்கு ஒத்துழைத்தாலே போதுமானது.
ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி, ஸர்வ ஏகாதசி, ஸ்மார்த்த ஏகாதசி இவை மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் எனென்ன ?
ஏகாதசி விரதம் ஸ்ரீவைஷ்ணவ, ஸ்மார்த்த மற்றும் மத்வ என மூவருக்கும் வித்தியாசப்படும்.
முதல் நாள் தசமி 56 நாழிகைக்கு மேல் இருந்தால் மறுநாள் ஏகாதசி வித்தம், தோஷம் உள்ளது என்பதாகும். அப்படி 56 நாழிகைக்கு மேல் தசமி சம்பந்தப்பட்டிருந்தால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அன்று ஏகாதசி வ்ரதம் இருக்கும் வழக்கமில்லை. அதற்கு மறுநாள் தான் ஏகாதசி இருக்க வேண்டும்.
உதாஹரணம் : திங்கட்கிழமை அன்று 56 நாழிகைக்கு மேல் தசமி இருந்ததானால் செவ்வாய்க்கிழமை ஏகாதசி கிடையாது அதற்கு மறுநாளே ஏகாதசி. அதாவது செவ்வாய்க்கிழமை வருகின்ற ஏகாதசி திதிக்கு ப்ரம்ம முகூர்த்தத்தில் தசமி சம்பந்தப்பட்டிருப்பதால் அன்று ஏகாதசி கிடையாது.
ஸ்மார்த்தர்கள் துவாதசியை ப்ரதானமாக வைத்துக்கொண்டு அதற்கு முதல் நாள் ஏகாதசி என்று வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது பஞ்சாங்கத்தைப் பார்த்தால் தெரிகின்றது.
பஞ்சாங்கத்தில் முதல்நாள் ஸ்மார்த்த ஏகாதசி என்றும் மறுநாள் ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி என்றும் இருக்கும்.
54 நாழிகைக்கு மேலேயே தசமி சம்பந்தப்பட்டால் அதுவே தோஷம் என்பது மத்வ சம்ப்ரதாயம்.
எப்பொழுதாவது 54 நாழிகைக்கு மேல் 56 நாழிகைக்குள் தசமி சம்பந்தப்பட்டால் அப்பொழுது ஸ்ரீ வைஷ்ணவர்கள் மற்றும் ஸ்மார்த்தர்களுக்கு முதல் நாள் ஏகாதசி என்றும், மத்வர்களுக்கு மறுநாள் ஏகாதசி என்றும் பஞ்சாங்கத்தில் இருக்கும்.
ஆஹார நியமனம் படி, ஸாத்வீக குணமும் பகவத் த்யானமும் வளர, ஒருவர் எந்தெந்த காய்களும் பழங்களும் உட்கொள்ள வேண்டும் என்ற பட்டியலைத் தர வேண்டுகிறேன். அதை ஒரு காணொளியாக போட்டால் மிகவும் சௌகர்யமாக இருக்கும் என்று ப்ரார்த்திக்கிறேன். அடியேன்
விரிவாக விரைவில் வெளியிடவுள்ளோம்.
பெரிய நம்பி அவர்கள் மாறனேரி நம்பிக்கு செய்த அந்திம க்ரியைகள் எதன் அடிப்படையில் ஒற்றுக்கொள்ளப்பட்டது? இது எப்படி அவரின் வர்ணாஶ்ரம தர்மத்திற்கு விரோதமாகாது? தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
பெரிய நம்பிகள் மாறனேரி நம்பிக்கு செய்த கைங்கர்யம் பற்றி நம் குருபரம்பரையில் கிடைக்கவில்லை, ஸ்வாமி தேஶிகனும் எடுத்திருப்பதாக தெரியவில்லை. அப்படி அவர் மாறனேரி நம்பிக்கு கைங்கர்யம் செய்திருந்தால் கூட வர்ணாஶ்ரம தர்மத்திற்குட்பட்டு தான் செய்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர் ஒவ்வொரு நிமிடமும் வர்ணாஶ்ரம தர்மத்திலிருந்து தவறாதவர், பூர்ணமான அநுஷ்டானபரர், யாகம் முதலியவைகள் எல்லாம் செய்தவர் என்று ஸ்வாமி தேஶிகன் ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் சாதித்திருக்கிறார்.
குறிப்பாக மாறனேரி நம்பி, அவரின் உறவினர்கள் யாரும் ஸ்ரீ வைஷ்ணவர்காளாக இல்லாத போதும் அவர் பரம ஸ்ரீ வைஷ்ணவராக இருந்தவர்.ஆகையால் தன் சரீரத்தை தன் உறவினர்களிடத்தே கொடுக்கக்கூடாது எனும் ஆசை இருந்தது அதை ப்ராத்தித்தும் இருந்தாராம். ஆகவே அந்த ரிதீயிலும் , ஶாஸ்த்ரத்திற்குட்பட்டும் சில வித சம்ஸ்காரங்கள் செய்யலாம் என்று இருக்கிறது.
ஆகவே ஶாஸ்த்ரத்திற்குட்பட்டு, வர்ணாஶ்ரம தர்மத்திற்குட்பட்டு பெரிய நம்பிகள் மாறனேரி நம்பிக்கு சம்ஸ்காரம் பண்ணியிருக்கலாம். மேலும் மாறனேரி நம்பியின் வர்ணாஶ்ரம முறையிலே பண்ணலாம், என ஶாஸ்த்ரம் சொல்லியிருக்கிறது. அதாவது கர்த்தாக்கள் யாருமில்லை என்றால் அந்திம சம்ஸ்காரங்கள் பண்ணலாம் என்றும் அப்படிச் செய்தல் விசேஷம் என்றும் ஶாஸ்த்ரம் கூறியிருக்கிறது. அந்த நெறிக்குட்பட்டு பெரிய நம்பிகள் செய்திருக்கலாம்.
ஹரிவாஸரம் என்றால் என்ன?
மொத்த துவாதசி திதியின் முதல் கால் பாகத்துக்கு ஹரி வாஸரம் என்று பெயர். இது ஏகாதசிக்கு சமம். சாதம் சாப்பிடுவது மஹா பாபம். பெரும்பாலும் ஏகாதசி வ்ரத தினத்தன்று த்வாதசி திதி ஆரம்பித்துவிடும். ஆகையால் கால் பாகம் அன்றே கழிந்து விடும். சில சமயம் மறுநாளும் இருக்கும். அப்போது ஹரிவாஸரம் முடிந்தபின் பாரனை செய்தல் வேண்டும். ஹரி பெருமாளுக்கு உகந்த சமயம் என்பதால் ஹரி வாஸரம் என்று பெயர்.
துவாதசி அன்று ஆசார்யன் பாதுகைக்கு திருமஞ்சனம் முதலில் செய்ய வேண்டுமா?. அல்லது பெருமாள் திருவாராதனம் முதலில் செய்ய வேண்டுமா?
துவாதசியன்று, முதலில் பெருமாள் திருவாராதனம் செய்துவிட்டு அதற்கு பின்னரே பாதுகா ஆராதனம் செய்ய வேண்டும்.
கல்யாணம் அன்று மற்றும் பெருமாள் ஆத்துக்கு ஏளும்போதும் எடுக்கும் மஞ்ச நீரில் மூணாவது சேர்க்கலாமா?
பொதுவாகவே மஞ்சநீர் கலக்கும் பொழுது அதில் மூணாவது சேர்ப்பது என்பதைப் பெரியோர்கள் வழக்கத்தில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். மூணாவது என்பது ஒரு சுத்தீகரணப் பொருள். அதனால், கல்யாண அகத்திலும் மற்றும் பெருமாள் ஏளும் சமயங்களிலும் மூணாவதை மங்களகரமாக உபயோகப்படுத்துவது உண்டு.
ஆஶௌசத்தினால் ஒரு வருடத்திற்குப் பண்டிகை இல்லையென்றால், எந்தப் பண்டிகையை கொண்டாட வேண்டும், எதைக் கொண்டாடக்கூடாது? பெருமாளுக்கானப் பண்டிகைகளை நாம் கொண்டாட வேண்டும் என்றும் , நமக்காக கொண்டாடும் பண்டிகைகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும் என்றும் எங்கள் வாத்தியார் கூறினார். உதாரணமாக, திருவாடிப்பூரம் அன்று அது தாயார் திருநக்ஷத்ரம் என்பதால் பெருமாள் தாயாருக்கு ப்ரசாதம் அம்சை பண்ணலாமா? அல்லது எதையும் கொண்டாடக்கூடாது என்பதால் எதையும் செய்யக்கூடாதா? தயவு செய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
பண்டிகை ஒரு வருடத்திற்கில்லை என்றால், பொதுவாக எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடுவதில்லை.
பண்டிகை இருக்கும் காலமோ அல்லது இல்லாத காலமோ நித்யமும் அவசியம் பெருமாளுக்குத் தளிகை பண்ணி அம்சை பண்ணவேண்டும். ஆனால் அந்த ஒரு வருடம் இனிப்பு பதார்த்தங்கள் செய்து எந்த ஒரு பண்டிகையும் கொண்டாடுவது வழக்கமில்லை.ஆழ்வார்கள்,ஆசார்யன் திருக்ஷத்ரங்களுக்கு மட்டும் ஒரு விதி விலக்குண்டு.
குறிப்புகள்
ஆழ்வார் ஆசார்யன் திருநக்ஷத்ர தினத்தன்று எம்பெருமானுக்கு ஒரு திருக்கண்ணமுது அல்லது ஏதாவது இனிப்பு பதார்த்தங்கள் பண்ணி அம்சை பண்ணலாம்.
ஸ்ரீ பாத தீர்த்தத்தின் முக்கியத்வம் யாது?எப்படி ஸ்வீகரித்துக்கொள்ள வேண்டும்? யார் ஸ்வீகரிக்கக்கூடாது? எப்போதெல்லாம் ஸ்வீகரிக்கலாம் விளக்க ப்ரார்த்திக்கின்றேன்.
ஸ்ரீ பாத தீர்த்தம் ஸர்வ பாபா நாசினி ஆகும். ஸ்ரீ பாத தீர்த்தத்தை, ஆசார்யன் திருநக்ஷத்ரத்தன்று அவசியம் ஸ்வீகரிக்க வேண்டும். துவாதசிதோறும் க்ருஹத்திலே அவசியம் பாதுகா ஆராதனம் பண்ணி அந்த தீர்த்தத்தை ஸ்வீகரிக்க வேண்டும்.
அதே போல் பிழைகள் ஏற்பட்டுவிட்டது எனத் தோன்றினாலோ அல்லது எங்காவது சென்று ஆசாரம் குறைவாகி விட்டது எனத் தோன்றினாலோ அப்பொழுதும் ஸ்ரீ பாத தீர்த்தம் சேர்த்து ஸ்வீகரிப்பது வழக்கத்தில் உண்டு.
பொதுவாக ஆசார்யனுடைய சிஷ்யர்கள் எல்லோரும் ஸ்ரீ பாத தீர்த்தத்தை ஸ்வீகரித்து கொள்ளலாம். அவர்கள் மட்டுமலாது அந்த ஆசார்யனிடத்தில் அபிமானம் உள்ளவர்களும் அவரின் ஸ்ரீ பாத தீர்த்தத்தை ஸ்வீகரிக்கலாம்.
குறிப்புகள்:
ஸ்ரீ பாத தீர்த்ததை ஸ்வீகரித்து கொள்ளும் பொழுது ஒரு மந்த்ர ஸ்லோகம் சொல்லுவதுண்டு. அது என்ன என்பதை அவரவர்கள் ஆசார்யனிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீகரிக்கும் பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம் : ஏதத் ஸமஸ்த பாபானாம் ப்ராயஶ்சித்தம் மநீஷிபி4: ।
நிர்ணீதம் ப4க3வத் ப4க்த பாதோ3த3க நிஷேவனம் ।।
துவாதசி நாட்களில் காலையில் பொதுவாக எத்தனை மணிக்குள் பாரணை செய்யத் தொடங்க வேண்டும்? துவாதசி நிறைய நாழிகள் இருந்தால் எத்தனை மணிக்குள் செய்தல் வேண்டும்?
அல்ப துவாதசி இல்லை என்றால் 8:15 மணிக்குள் பாரணை செய்வது உசிதம். அல்ப துவாதசி இருந்தால், எவ்வளவு காலம் துவாதசி இருக்கின்றதென்று பார்த்து, அதற்குள் பாரணை செய்தல் வேண்டும்.
துவாதசி நிறைய நாழிகள் இருந்தால் கால விளம்பம் ஆனாலும் துவாதசிக்குள் பாரணை செய்தால் பரவாயில்லை என்றும் ஒரு சம்ப்ரதாயமுள்ளது.
தற்சமயம் வித்வான்கள் மூலம் சந்த்யாவந்தனம், ஸம்ஹிதா தானம் எனப் பல இணைய வழி வகுப்புகளின் வாயிலாக கற்றுக்கொள்கிறேன்.ஒருவன் இக்கர்ம்மாக்களைச் செய்வதனால் ப்ராமணன் ஆகிறான், மேலும் இதில் தன்னை மேம்படுத்தவும் அதாவது தேஜஸ், அரோக்கியம் வேண்டி ப்ரார்த்திக்கவும் ஸ்லோகம் வருகிறது. அடியேனின் கேள்வி யாதெனில், ப்ராமணர்கள் என்பவர்கள் இந்தச் சமுதாயத்திற்கு எந்த வித்தில் தேவை. சமூகம் அவர்கள் மூலம் பெறும் பயன் யாது? ஸ்வாமி. அடியேன் இதை ப்ராமணனான ஒருவர் அறிந்தால் அருவம் சரி இச்சமூகமும் சரி இத்தனை நல்லது உள்ளதா என்று அறிய முடியும் மேலும் ப்ராமணர்களும் தங்கள் கர்மாக்களை விடாதுச் ஶ்ரத்தையாக செய்வார்கள். மேலும், ஒரு புரிதல் இருந்தால் இவர்கள் மட்டும் ஏன் செய்ய வேண்டும் நாங்கள் ஏன் செய்யக்கூடாது என பல விதண்டாவாதக் கேள்விகள் தவிர்க்கப்படலாமோ என்று ஒரு எண்ணம்.
எப்போதும் வைதீக கார்யங்கள் மூலமும், தேவதா ஆராதனங்கள் மூலமும் லோகக்ஷேமத்தை சிந்திப்பவன் ப்ராமணன்.
நீர் என்பது ஓர் அசித்தாக இருக்கும் பக்ஷத்தில், ஒருவர் தலைக்கு தீர்தாமாடுவதினால் எப்படி சுத்தி அடைவார்கள்? அதனால் தீட்டு எப்படி நீங்கும் என்பதை தெளியப்படுத்த விண்ணப்பிக்கின்றேன். அதே போல் மஞ்சள் குங்குமம் ஏன் மங்களகரமானதாக கருதப்படுகிறது? ஏதனால் அதை மங்களப் பொருட்கள் என்று கூறுகின்றோம்? தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.
ஜலம் என்பது ஶாஸ்த்ர ரீதியிலும் உலக ரிதீயிலும் சுத்தப்படுத்தும் வஸ்து. சரீரத்தை நீர் கொண்டு சுத்தமாக்குவதால் உலக ரிதீயிலும் சரீரத்தில் உள்ள அழுக்கு போகும், ஶாஸ்த்ர ரிதீயிலும் சுத்தமாகும். மேலும் சரீரத்தை சுத்திப்பண்ணால் ஆத்மாவும் சுத்தமாகும் என்று ஶாஸ்த்ரங்கள் சொல்கின்றது.
அதே போல் மஞ்சள், குங்குமம் இவை எல்லாம் மங்களகரமான வஸ்துக்கள் என்று சம்ப்ரதாயத்தில் வழி வழியாக சொல்லப்படுகின்றது. சம்ப்ரதாயம் நமக்கு காண்பித்து கொடுத்தது என்பதனாலேயே ஆசையுடனும், ஶ்ரத்தையுடனும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மஞ்சள் என்பது மனித சரீரத்திற்குத் தேவையான மிக உயர்ந்த வஸ்து. உயர்ந்த வஸ்துக்களில் பகவானின் அம்சம் இருக்கும் என்று சொல்கின்ற படியால் இதிலும் பகவானின் அம்சம் இருக்கும். மேலும் மஞ்சள், தாமரைப்பூ -, ஸ்வர்ணம் போன்ற வற்றில் தாயாரின் அம்சம் இருக்கும்.
ப்ரதோஷகாலத்தின் சமயம் நாம் ஏன் கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகிறார்கள்?
ப்ரதோஷ காலத்தில் மூலஸ்தானத்தில் இருக்கும் பெருமாளைச் சேவிக்க கூடாது என்று ஆகமங்கள் சொல்கின்றன. ஆகமம் சொல்லுவது படி பகவானுக்கு ஆராதனம் நாம் செய்வது தான் கைங்கர்யம். அந்த முறையில் ப்ரதோஷகாலத்தில் மூலஸ்தானத்தில் இருக்கும் பெருமாளைச் சேவிக்காமல் இருப்பது தான் நாம் செய்யும் கைங்கர்யம். ஆனால் ப்ரதோஷகாலம் ஸ்ரீந்ருஸிம்ஹ பெருமாளுக்குரிய காலம் என்பதினால் அவரைச் சென்று சேவிக்கலாம் என ஆகமங்கள் கூறுகிறது.
ஏன்னென்றால், மஹாப்ரதோஷம் என்பது தோஷ காலம், ரௌத்ரகாலம் அது, அதாவது ருத்ர தாண்டவமாடும் காலம். ஆகையால் ஆத்திலிருந்துக் கொண்டு நாம் மௌன வ்ரதம் இருக்க வேண்டும் அது தான் நாம் செய்யும் கைங்கர்யம். பெரியவர்கள் எல்லாரும் சங்கல்பித்துக் கொண்டு மௌன வ்ரதமிருப்பார்கள்.
ப்ரதோஷ காலம் என்பது அஸ்தமனத்திற்கு முன்னும் பின்னும் ஒன்றரை மணி நேரம்.
நித்யமும் நமக்கு யார் ஸமாஶ்ரயணம் செய்வித்தார்களோ அந்த ஆசார்யனின் தனியன் மட்டும் சேவித்தால் போதுமானதா? அல்லது அவரின் ஆசார்யன் தனியனும் சேர்த்து சேவிக்க வேண்டுமா?
நித்யமும் நமக்கு ஸமாஶ்ரயணம் செய்துவித்த ஆசார்யன் தனியனை சேவித்து அவருடைய ஆசார்யன் தனியனையும் சேர்த்துச் சேவிக்க வேண்டும். ஆசார்யன் உபதேசித்திருப்பார்.
பூர்த்தியாக குரு பரம்பரையை வணங்க வேண்டும். குரு பரம்பரையை வணங்கக்கூடிய க்ரமங்களை அவரவர்களுடைய ஆசார்யர்கள் உபதேசித்திருப்பார்கள். அந்த க்ரமத்தில் பூர்த்தியாக அனைத்து தனியன்களையும் சேவிப்பது மிகவும் உசிதம். ஒவ்வொரு ஆசார்யனையும் தனிப்பட்ட முறையில் அவரின் திருநாமமோ, தனியனோ சொல்லி வணங்க வேண்டுமென்று ஶாஸ்த்ரம் சொல்கிறது.
பாகவதர்கள்/சிஷ்யர்கள் தங்கள் ஆசார்யன் அல்லது அவரின் தேவிகளின் திருவத்யயன ப்ரசாதத்தை ஸ்வீகரிக்கலாமா? தெளிவிக்க வேண்டுகிறேன். அடியேன்.
பாகவதர்கள், ஆசார்யன், ஆசார்யனின் தேவிகள் இருவருடைய திருவத்யயண ப்ரசாதத்தை தாராளமாக ஸ்வீகரிக்கலாம்.
ஸுதர்ஶன யந்த்ர ப்ரதிஷ்டா விதிமுறைகளை விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்?
இது பாஞ்சராத்ர ஆகம ரிதீயாக விளக்க வேண்டும், அதற்குரிய பெரியவர்களைத் தான் கேட்க வேண்டும்.
ப்ராத: சந்தியாவந்தனம் செய்ய வேண்டிய நேரம் கடந்துவிட்டால் ஸ்நானம் பண்ணாமல் செய்யலாமா அல்லது ஸ்நானம் செய்துவிட்டு ப்ராயச்சித்தத்துடன் செய்ய வேண்டுமா?
ப்ராத: சந்தியாவந்தனம், நேரத்தில் செய்ய முடியவில்லை என்றால், பின் ஸ்நானம் செய்து அதற்கான ப்ராயச்சித்தம் செய்து பண்ணலாம். துரியார்கியப்ரதானம் என்னும் ப்ராயச்சித்தத்துடன் பண்ண வேண்டும். “காலாதீத்த ப்ராயச்சித்தார்த்தம் துர்யார்க்யப்ரதானம் கரிஷ்யே” என்றுதான் சொல்லிக்கொடுக்கிறார்கள்.
ஸ்நானம் பண்ணாமல் சந்தியாவந்தனம் பண்ணுவது வழக்கமில்லை.
ப்ரபத்திக்குப் பின் , ஸ்மார்த்தர்கள் செய்யும் பஜனைகளைக் கேட்கலாமா? ஸ்ரீமன் நாராயணன் பற்றிய பாடல்களுக்கு மட்டும் பங்கேற்க முடியுமா. பெருமாள் அல்லாது அந்நிய தேவதாந்திரங்களின் கர்நாடக சங்கீத பாடல்களை நம் கலைஞர்கள் கச்சேரிக்காகப் பாட முடியுமா? விளக்கம் கோரி ப்ரார்த்திக்கிறேன்.
ப்ரபத்திக்குப் பின் பெருமாள் சம்பந்தப்பட்ட எந்த பஜனையையும் கேட்கலாம். இதர தேவதாந்தரங்களுடையதைத் தவிர்ப்பது நல்லது.
ஸ்மார்த்த உபந்யாஸ்கர்களுடைய ராமாயணம் பாகவதம் உபந்யாஸங்கள் போன்றவற்றைக் கேட்கலாமா? அவர்களுக்கோ அல்லது அவர்களுடைய அமைப்பிற்கோ நன்கொடை வழங்கலாமா? அது கைங்கர்யத்தில் சேர்த்தி ஆகுமா?.
ஸ்மார்த்த உபந்யாஸகர்களுடைய ராமாயணம் ,பாகவத உபந்யாஸங்களைக் கேட்கலாம். அந்த கைங்கர்யத்திலும் பங்கு கொள்ளலாம்.
பொதுவாக “ஹரி கதா” என்பது தான் அதற்கு பெயர். அவர்களும் அப்படித்தான் சொல்வார்கள். ஒருகால் பகவான் பெருமையைத் தவிர வேறு சொன்னால், அதை உதாசீனப்படுத்துவது நல்லது.
அமாவாஸை தினங்களில், தர்ப்பணம் பண்ணுபவர்கள் அகத்தில், பெருமாள் திருவாதனத்திற்கு பயத்தம்பருப்பு, சுண்டைக்காய் குழம்பு பண்ணுவது உண்டு. ஆனால் சில அமாவாஸை தினங்களில் (ஐப்பசி, தை) துவரம் பருப்பு மற்றும் மோர்க்குழம்பு பண்ணுவது உண்டு. இந்த இரண்டு மாதங்களில் வரும் அமாவாஸை தவிர வேறு மாதங்கள் ஏதேனும் உண்டா என்று தெரிந்து கொள்ள விழைகிறேன்.
ஆடி அமாவாஸை தினத்தை பண்டிகையாக கொண்டாடுவது சிலர் உண்டு, மேலும் ஆசார்யர்கள் திருநக்ஷத்ர தினம் அமாவாஸை அன்று வந்தாலும் திருநக்ஷத்ரமாக கொண்டாடும் போதும், அகத்தில் உள்ளவர்களின் பிறந்தநாள் வந்தாலும் பண்டிகைப் போன்ற தளிகைச் செய்வதுண்டு.
108 திவ்ய தேசங்களின் பட்டியல் எப்பொழுது தொகுக்கப்பட்டது? ப்ருந்தாவனம், வெண்ணாற்றங்கரை போன்ற க்ஷேத்திரங்களுக்குத் தனிப்பட்ட பாசுரங்கள் இருந்தும், அவை திவ்ய தேசங்களாக ஏன் கருதப்படவில்லை?
சுமார் 800 வருடங்களுக்கு முன், பிள்ளைப்பெருமாள் ஐங்கார் என்பவர் முதலில் 108 திருப்பதி அந்தாதி என்று சாதித்தார். அது தொடக்கமாக தான் 108 என்ற கணக்கு ஆரம்பமாயிற்று என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.
அதற்கு முன் இப்படி கணக்கு இட்டோ பட்டியலிட்டோ இருந்ததாக தெரியவில்லை. அவருக்குப் பின் 108 திவ்ய தேசங்கள் பற்றி நிறைய புத்தகங்கள் வந்துவிட்டன. இக்கணக்குகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டும் இருக்கும். அந்த ரிதீயில் ஆழ்வார்கள் பாடல் பெற்ற ஸ்தலம் என நாமும் கணக்கு செய்யலாம். ஒரு கணக்குக்காக சொல்லப்பட்டதேன்றி இப்படித்தான் என்ற நிர்பந்தம் ஏதும் கிடையாது.
உதாஹரணமாக திருநாராயணபுரம், காஞ்சி வரதராஜ பெராள் கோவில் இவைகளை 108ல் சேர்க்கலாமா என்பதாக அக்காலத்தில் சர்ச்சைகளும் எழுந்தன என்பர்.
ஆத்து பெருமாளுக்குத் திருவாராதன காலத்தில் திருமஞ்சனம் செய்யும் பொழுது ஸுக்தம் மட்டும் தான் சேவிக்க வேண்டுமா அல்லது திருமஞ்சன கட்டியம் அதன் பின் ஶீக்ஷாவல்லீ, ஆநந்தவல்லீ, ப்ருகுவல்லீ போன்றவற்றையும் சேவிக்கலாமா ? அமாவாஸை , ஏகாதசி , மற்றும் விசேஷ நாட்களில் விஸ்தார திருவாராதனம் செய்து மற்ற நாட்களில் மானசீக திருவாராதனம் செய்யலாமா?
நித்யம் மடி வேஷ்டி, மற்றும் சுத்தம் செய்வதும் என்னுடைய சோம்பேறித்தனத்தினால் பின்பற்ற முடியாமல் இருக்கின்றது. எனக்கு கஷ்டமாக இருப்பதால் இந்தக் கேள்வியை கேட்கிறேன். நித்யமமும் சாளக்கிராம மற்றும் விக்ரஹங்களுக்கு எல்லா உபசாரங்களை மேற்கொண்டு திருவாராதனம் செய்கின்றேன். அடியேன் மிகவும் லௌகீகமானவன்.
ஆத்துப் பெருமாளுக்குத் திருவாராதன காலத்தில் திருமஞ்சனம் செய்யும் சமயம் புருஷ ஸுக்தம் சொல்ல வேண்டும் என்று ஆஹ்நிக க்ரந்தங்களில் சாதித்திருக்கிறார்கள். மேலும் திருமஞ்சன கட்டியம், ஶீக்ஷாவல்லீ போன்றவை சமயம் இருப்பின் சேவிக்கலாம். ப்ரதானமாக புருஷ ஸுக்தம் சேவிக்க வேண்டும் என்றிருக்கிறது.
ப்ரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹமாக இருந்தால் கட்டாயம் நித்ய திருவாராதனம் செய்தல் வேண்டும். அப்படிச் செய்யாவிடில் விக்ரஹத்தில் சான்நித்யம் குறையும், பெரிய அபச்சாரத்தில் போய் முடியும். ப்ரதிஷ்டை செய்யாத விக்ரஹமாக இருந்தால், பெரிய தோஷமில்லை.
சாளக்கிராமத்தைப் பொறுத்தவரை நித்யபடி செய்தால் தான் அது விசேஷம், மெல்ல செய்ய ஆரம்பித்தால் நலம். அமாவாஸை, ஏகாதசி, வெள்ளிக்கிழமை என விசேஷ நாட்களில் முதலில் ஆரம்பித்து பின் மெல்ல பழக்கத்தில் கொண்டு வர முடியும் என்று தோன்றுகிறது.
திருவாராதனம் பண்ணவே முடியவில்லை எனும் போது, மானசீக ஆராதனம் செய்யலாம். ஆனால் திருவாராதனம் செய்வது பெரிய கஷ்டமில்லை எனத் திருக்குடந்தை ஆண்டவன் சாதிப்பார், பெருமாளை ஏளச்செய்து திருமஞ்சனம் பண்ணி, அம்சை பண்ணாலே போதுமானது அதில் என்ன கஷ்டம் இருக்கின்றது.
பெருமாளைத் தொட்டு ஆராதனம் செய்ய ஓரளவு சுத்தமாக இருக்க வேண்டும்.முதல் நாள் உளர்த்தி அடுத்த நாள் உடுத்துவதற்கு தகுந்த இடம் பார்த்தால் நலம் அல்லது முதல் நாள் சால்வைக்கொண்டு (கம்பளி) அந்த வேஷ்டியை மடித்து வைத்து உடுத்தலாம்.
திருவாராதனம், சந்தியா வந்தனம் போன்ற முக்கியமான அநுஷ்டானங்களில் சோம்பேறித்தனத்தை தவிர்க்க வேண்டும் என்று ஸ்வாமி தேஶிகன் சாதித்துள்ளார்,.
திருமணமான புருஷர்கள் மற்றும் ஸ்த்ரீகளை ஏன் கச்சம்/ மடிசார் அணிந்துக் கொள்ளச் சொல்கின்றார்கள்? அதாவது, அவர்கள் மட்டுமே அதை அணிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் உள்ளதா? விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்?
மடிசார் என்பது ஸ்த்ரீகளின் கச்சம். மேலும், இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அந்தரங்கப் பாதுகாப்புக்காகவும் இப்படி ஒரு அமைப்பை ஶாஸ்த்ரங்கள் வகுத்துள்ளன. கல்யாணமான ஸ்த்ரீகள் மற்றும் புருஷர்களை இனம் கண்டுகொள்ள ஏதுவாகவும் இவ்வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
பந்துக்களில் ஒருவர் ஆசார்யன் திருவடியை அடைந்தால் எத்தனை நாட்கள் அஶௌசம் என்பதை அறிய கணகியல் புத்தகம் அல்லது விளக்கப்படம் ஏதேனும் உள்ளதா? ஒருவருக்கு எத்தனை நாட்கள் என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது ? விளக்க ப்ரார்த்திக்கிறேன்
ஆஶௌசம் எத்தனை நாட்கள் என்பதை அறிய புத்தகங்கள் இருக்கின்றன. “ப்ராசீனாசார ஸங்க்ரஹம்” என்று ஸ்ரீ உ வே மஹாவித்வான் நாவல்பாக்கம் ஸ்ரீ அய்யா தேவநாத தாதயார்ய ஸ்வாமி எழுதிய புத்தகம் உள்ளது. “ஆஶௌச ஶதகம்” என்பதாக ஸ்ரீ உ வே மஹாவித்வான் மேல்பாக்கம் ஸ்வாமியால் திருத்தி அச்சிடப்பட்ட புத்தகமுள்ளது. இது போல் பல் வேறு புத்தகங்களும் இருக்கின்றது.
“1. ஸூன்ய திதி என்றால் என்ன? அன்றைய தினத்தின் திதியாக எதை எடுத்துக் கொள்வது. அன்று ஏகாதசியாக இருந்தால் என்னச் செய்வது.
2. அதே போல், அதிதி என்றால் என்ன. அன்றைய தினத்தின் திதியாக எதை எடுத்துக் கொள்ள வேண்டும்.”
ஒரு மாதத்தில் இரண்டு ஶ்ராத்த திதி வரும் போது, இரண்டாவது திதியில் ஶ்ராத்தம் செய்ய வேண்டும் முதல் திதியை ஸூன்ய திதி என்று குறிப்பிடுவார்கள். பின்பு வரும் திதிக்கு தோஷமிருந்தால், உதாஹராணமாக சங்க்ரமண, க்ரஹன தோஷம் போன்றவை இருந்தால் அப்போது முன்புள்ள திதியை ஶ்ராத்த திதியாக கொள்ள வேண்டும், பின்புள்ள திதியை ஸூன்ய திதி என்பர்.
அதிதி என்பது அபராஹ்ன வ்யாப்தியைக் குறித்துச் சொல்லப்படுவது. அது உதாஹரண பூர்வகமாகச் சொன்னாலே புரியும். ஸ்ரீமத் வில்லிவலம் அழகிய சிங்கர் அருளிய “ஆஹ்நிகத்தின்” அனுபந்தத்தில் உதாஹரணத்தோடு நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது. கண்டு தெளிந்து கொள்ளவும்.
குறிப்புகள்
தற்போது ஸ்ரீமத் வில்லிவலம் அழகிய சிங்கர் அருளிய ஆஹ்நிக க்ரந்த காலக்ஷேபம் (உபனயநம் மற்றும் ஸமாஶ்ரயணம் ஆன புருஷர்களுக்கு மட்டும்) GSPKயில் தொடங்கியிருக்கிறது. விருப்பம் இருப்பின் கீழே உள்ள படிவத்தைப் பூர்த்திச் செய்யவும். மேலும் விவரங்கள் அறிய இந்த Telegram group ல் சேரவும்.
https://forms.gle/ob8JhquSN5BHRGBT6
Telegram group
https://t.me/dgspk
அமாவாஸை மற்றும் ப்ரதமை நாட்களில் திவ்யப்ரபந்த பாசுரங்களைச் சேவிக்கலாமா?
அமாவாஸை மற்றும் ப்ரதமை நாட்களில் திவ்யப்ரபந்த பாசுரங்களை, தாராளமாகச் சேவிக்கலாம்.ஆனால் சந்தை சொல்லக்கூடாது.
ஜீவ இம்சை கூடாது என்கிற பக்ஷத்தில் பட்டு புடவை அணிந்து கொள்வது சரியா? பட்டு வஸ்த்ரம் மடி என்றும் சொல்கிறார்கள். இந்த தலைமுறையினர் கேட்கும் இக்கேள்விக்கு அடியேனால் பதில் கூற முடியவில்லை. விளக்கம் தர ப்ரார்த்திக்கிறேன்.
இதற்கு க்ரய சுத்தி என்று பெயர். நாம் கடைகளில் பணத்தை கொடுத்து பட்டு வஸ்த்ரம் வாங்குவதனால், அந்தத் தோஷம் நமக்கு வராது. ஆகையால் பட்டு வாங்கலாம், வாங்கி பெருமாளுக்கு, பாகவதர்களுக்கு ஸமர்பிக்கலாம்.
இதில் தீவிரமாக அடுத்தவரைக் கொண்டு ஜீவஹிம்சை செய்வது தவறு என்று நினைத்தால் பட்டு வஸ்திரங்களைத் தவிர்க்கலாம்.
குறிப்புகள்
பணம் கொடுத்து பட்டு வாங்குபவர்களுக்கு தோஷம் ஏற்படாது. தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் தோஷத்திற்கு, வ்யாபார முறையில் பரிஹாரம் உள்ளது.
நமக்கு ஒரு நல்லது நடக்கும் பொழுது பகவானுடைய க்ருபை மற்றும் நம் பெரியோர்களின் ஆசீர்வாதம் என்று சொல்கிறோம். ஆனால் அதே நமக்கு ஒரு கஷ்டம் வரும் பொழுது இது நாம் செய்த கர்மா என்று சொல்கிறோம் இது சரியா . இதை எப்படி புரிந்து கொள்வது . அடுத்த தலைமுறையினருக்கு எப்படி புரிய வைப்பது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
நமக்கு நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் அது நம் கர்மாதான். கர்மா என்றால் புண்ணிய பாபங்கள். புண்ணியத்தின் பலனாக நல்லது நடக்கும். பாபத்தின் பலனாக துக்கம் வரும்.
நமக்கு நல்லது நடக்கும்பொழுது, “என்னால்”/“நான்” சாதித்துக்கொண்டது என்று சொல்வது கூடாது. ஏனென்றால், பகவத் கீதையில் கண்ணன் கூறியபடி “மனுஷ்யன் தனிப்பட்ட முறையில் எதையுமே சாதிக்கமுடியாது. பெருமாளுடன் கூட இருந்துதான் அவன் எதையுமே சாதிக்க இயலும். அதனால் நான் சாதித்தேன் என்கின்ற அகம்பாவத்தை ஒழிக்க வேண்டும்”. மேலும் இது கீதையினுடைய அடிப்படை சித்தாந்தம்.
குறிப்புகள்
தேர் இழுப்பது போல் பெருமாளுடன் கூட இருந்துதான் நாம் காரியங்களைச் சாதிக்க முடியும். அதாவது, நான் தேர் இழுத்தேன் என்று சொல்வது எப்படி முட்டாள்தனமோ அது போல் தான், நான் சாதித்தது என்று சொல்வதும்.
சில சமயங்களில் நாம் ஒன்றும் செய்யாமலே பெருமாளினுடைய அனுக்ரஹத்தால் நமக்கு நல்லது நடக்கும்.அதுவும் கர்மாவினுடைய பலன் தான். நமக்கு தெரியாதபடியினால், அது பகவானுடைய அனுக்ரஹம் என்பதாக சொல்கிறோம். இதுவே துக்கம் வரும்போது பெருமாளினுடைய அனுக்ரஹம் என்று கூற முடியாது, ஏனென்றால் அவர் துக்கத்தை அனுக்ரஹம் செய்ய மாட்டார். நாம் பாபம் செய்த பலனை எம்பெருமான் வேறு வழியில்லாமல் நமக்கு கொடுக்கிறார்.
ஶ்ரார்த்த திதி ஏகாதசி அன்று வரும் பக்ஷத்தில்
a. ப்ராமணர்களுக்கு அன்னம் சாதிப்பது பாவத்தில் சேர்த்தி ஆகுமா?
b. கர்த்தா, கர்த்தாவினுடைய அம்மா மற்றும் ப்ராதாக்கள் அன்னம் ஸ்வீகரிக்கலாமா?
c. கைம்பெண்ணாக இருக்கும் ஸ்த்ரீ அம்மா அப்பாவினுடைய ஶ்ரார்த்த உணவை ஸ்வீகரிக்கலாமா?
ஶ்ராத்த திதி ஏகாதசி அன்று வரும் பக்ஷத்தில், ப்ராமணார்த்தகாரர்களுக்கு அன்னம் தான் சாதிக்கவேண்டும். ஏன்னென்றால் அன்று அன்னத்தில் தான் ஹோமம் பண்ண வேண்டும். ஹுத சேஷம் என்பதெல்லாம் அதில் உண்டு. அதனால் அன்னம் தான் அவர்களுக்குச் சேர்க்க வேண்டும்.
ஆனால் கர்த்தாவானவர் அன்றைய தினம் ஏகாதசி என்பதினால், அன்னம் ஸ்வீகரிக்கக்கூடாது.
கைம்பெண்ணாக இருக்கும் ஸ்த்ரீ, அம்மா அப்பாவினுடைய ஶ்ராத்த உணவை தாராளமாக ஸ்வீகரிக்கலாம். ஆனால் ஏகாதசியாக இருந்தால் அன்னம் ஸ்வீகரிக்கக்கூடாது.
குறிப்புகள்
ஏகாதசி அன்று ஶ்ராத்தம் வந்தால் அன்று அன்னத்தை கட்டாயமாக ஸ்வீகரிக்கக்கூடாது. பித்ரு சேஷம் இல்லாமல் வேறு எதுவும் தளிகை செய்து ஸ்வீகரிக்கக்கூடாது. அதனால் உபவாஸம் இருக்கலாம் அல்லது பக்ஷணங்கள் , காய்கறிகள் இவை மட்டுமே ஸ்வீகரிக்கலாம்.
அடியேனுக்கு ஶ்ராத்த விஷயமாக ஒரு சந்தேகம், தெளிவுப்படுத்த ப்ரார்த்திக்கிறேன். 4-5 சகோதரர்கள் இருந்து, மூத்தவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அல்லது பிற காரணங்களால் ஶ்ரார்த்தம் செய்ய முடியவில்லையென்றால், மற்ற சகோதரர்களில் யாரேனும் ஒருவர் அதைச் செய்ய முடியுமா?
அனைவரும் சேர்ந்து ஶ்ராத்தம் பண்ணுகின்றார்களா அல்லது தனித்தனியாக பண்ணுகின்றார்களா என்பது முதல் விஷயம்.
சேர்ந்து செய்கின்றர்கள் என்றால், மூத்தவரிடம் இருந்து கைப்புல் வாங்கி அவருக்கு அடுத்திருப்பவர் பண்ணுவதே வழக்கம்.
தனித்தனியாக செய்பவர்களாக இருந்தால், அவரவர் செய்யும் ஶ்ராத்தத்தை அவரவர் பண்ண வேண்டும். மூத்தவரிடம் இருந்து கைப்புல் வாங்கி வேறு யாராவது ஒருவர் தான் தனியாக பண்ண வேண்டும் என்று இருக்கின்றது.
ஆடி மற்றும் தை அமாவாஸை நாட்களில் மேலும் ஆடி, தை, சித்திரை மற்றும் துலா மாச பிறப்பு நாட்களில் என்ன தளிகை செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்த பிரார்த்திக்கிறேன்.
அமாவாஸைக்கு பயத்தம் பருப்பு, வாழைக்காய், சேப்பங்கிழங்கு , பாகற்காய், வெள்ளரிக்காய் ,அகத்திக்கீரை இவை எல்லாம் உபயோகிப்பது விசேஷம். ஶ்ராத்தத்திற்கு என்னவெல்லாம் விசேஷமோ அவையெல்லாம் இதற்கும் விசேஷம்.
குறிப்புகள்
தை அமாவாஸை அன்று வைத்ய வீரராகவப் பெருமாளுடைய திருவவதார தினம். அதனால் அன்றைய தினம் சிலர் விசேஷ தளிகை செய்து கொண்டாடுவதும் உண்டு. மற்ற தளிகை எப்பவும் போல் குழம்பு, சாற்றமுது என்று செய்து கொள்ளலாம்.
தர்ப்பண தினத்தில் கத்திரிக்காய், பீன்ஸ் போன்றவை சேர்க்கக்கூடாது. மாசப்பிறப்பு அன்று துவரம்பருப்பு சேர்த்துக்கொண்டு கல்யாண ரீதியில் விசேஷமாக தளிகைச் செய்வதென்பது ஒரு வழக்கம். மற்றொரு வழக்கமும் இருக்கின்றது, அதாவது தர்ப்பணம் செய்யும் நாள் என்பதினால் பயத்தம்பருப்பு சேர்த்து பண்ணவதும் சம்ப்ரதாயத்தில் உள்ளது.
ஸ்ரீவைஷ்ணவரல்லாத, சரணாகதி செய்து கொண்ட பாகவதர்கள் கொடுக்கும் ப்ரசாதத்தை ஸ்வீகரிக்கலாமா? நிராகரித்தால் பாகவத அபசாரம் ஏற்படுமா? தன்யாஸ்மி ஸ்வாமி. ஏதேனும் தவறாகக் கேட்டிருந்தால் க்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன். அடியேன் தாஸன் ஸ்வாமி.
அனுஷ்டானத்தை முறையாக பண்ணிக்கொண்டு, ஆசாரங்களை எல்லாம் கடைபிடித்துக் கொண்டிருக்கின்ற ஒரு ஸ்ரீவைஷ்ணவர், அவர்கள் கொடுக்கின்ற ப்ரசாதத்தை ஸ்வீகரிக்க வேண்டும் என்/ற அவசியம் கிடையாது. ஏனென்றால், இவர்கள் செய்யும் ஆசார அனுஷ்டானங்களே பகவத் ஆராதனம் தான். ஆசார அனுஷ்டானங்களுக்கு பங்கம் ஏற்படும்படியாக ஒரு கார்யத்தைப் பண்ண வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அதைப் பண்ணாமல் போனால் அபசாரம் ஏற்படாது.
குறிப்புகள்:
இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று அனுஷ்டானம் மற்றொன்று பக்தி. பக்தியுடன் எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்ததை பாகவதர்கள் ஸ்வீகரிப்பது என்பது மிகவும் உசத்தியான விஷயம்.
உண்மையான பாகவதர்கள், அவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் இல்லையென்றால் தாங்கள் தயாரித்த ப்ரசாதத்தை, ஆசாரமாக இருக்கின்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்வீகரிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள் . இவர்கள் கடைபிடிக்கும் ஆசார அனுஷ்டானங்களை புரிந்து கொண்டு அவர்களே விலகி நிற்பார்கள்.
கடந்த மாத சுதர்சனம் வெளியீட்டில் அபசாரங்களுக்கான ப்ராயச்சித்தம் பற்றி ஸ்வாமின் குறிப்பிட்டிருந்தார். நேரம், இடக்கட்டுப்பாடுகள் மற்றும் தொற்றுநோய் அல்லது பிற காரணங்களால் சில காரியங்களைச் செய்ய இயலாமையால் ஏற்படும் அபசாரங்களுக்கு எப்படி பர்யாச்சித்தம் செய்வது? தயவு செய்து விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
பொதுவாக நாம் செய்யக்கூடிய ப்ராயச்சித்தமென்பது, பெருமாளிடமே க்ஷமாபணம் செய்வது தான். விசேஷமாக, பெருமாளிடம் ப்ராயச்சித்த சரணாகதி பண்ணுவதும் உண்டு.
அந்தந்த அபசாரங்களுக்கான ப்ராயச்சித்தம் என்ன என்பது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. என்ன பாபம் பண்ணியிருக்கோம் என்று தெரிந்தால் அதற்கு என்ன ப்ராயச்சித்தம் என்று தெரிந்துகொண்டு அதை செய்யலாம். அப்படி பண்ண முடியாவிட்டால் ஸ்வாமி தேசிகன் ந்யாஸ தசகத்தில் அருளிய “
அக்ருʼத்யாநாம் ச கரணம் க்ருʼத்யானாம் வர்ஜனம் ச மே I
க்ஷமஸ்வ நிகி2லம் தே3வ ப்ரணதார்தீஹர ப்ரபோ4 II
என்கின்ற இந்த ஸ்லோகத்தைச் சொல்லி பெருமாளிடம் ப்ரார்த்தித்துக் கொண்டால் அதுவே ஒரு ப்ராயச்சித்தம் தான்.
ஸ்ரீவைஷ்ணவனாக இருக்க ஆசைப்படுகிறேன். பின்பற்ற வேண்டிய அனுஷ்டானங்கள் என்ன ஸ்வாமி? அடியேன்.
ஸ்ரீவைஷ்ணவராக இருக்க வேண்டியவர்கள் பின்பற்ற வேண்டிய அனுஷ்டானங்கள் பற்றி பல “ஆஹ்நீக க்ரந்தங்களில்” கூறப்பட்டிருக்கிறது. யாராவது ஒரு பெரியவாளிடம் சம்பந்தப்பட்டு, ஸ்ரீ வைஷ்ணவ தினசர்யா போன்ற ஆஹ்னீக க்ரந்தங்கள் பற்றி கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீ
ஸ்ரீவைஷ்ணவராக இருப்பவர்கள் முக்கியமாக செய்ய வேண்டியது சந்தியாவந்தனம். அதுமட்டுமல்லாது, நெற்றியில் திருமண் இட்டுக் கொள்ளுதல், பெருமாள் திருவாராதனம் செய்தல், கோவிலுக்குச் சென்று பெருமாள் சேவித்தல் போன்றவைகளும் ஸ்ரீவைஷ்ணவர்கள் செய்ய வேண்டிய அனுஷ்டானங்கள். மேலும், அடியேன் என்று சொல்லவேண்டும். இவையெல்லாம் ஒரு வைஷ்ணவனுடைய அடையாளங்கள். இவை எல்லாம் அந்தப் புஸ்தகங்களில் விளக்கமாக இருக்கும்.
தீபாவளி பண்டிகையை சாஸ்த்ரோக்தமாக எப்படி கொண்டாட வேண்டும். மேலும், மத்தாப்பு, பட்டாசு என்பது எல்லாம் காலமாற்றத்தினால் சேர்க்கப்பட்டதாக இருக்கும், என்ற எண்ணம் அடியேனுக்கு வெகு காலமாக இருக்கின்றது. நம் பெரியோர்கள் எப்படி கொண்டாடினார்கள். அடியேன் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
தீபாவளி பண்டிகையில் நாம் முக்கியமாக பண்ண வேண்டியது கங்கா ஸ்நானம். அதாவது, பிம்மாலை சூர்யோதயத்திற்கு முன் எழுந்து நலங்கிட்டு எண்ணெய் தேய்த்து வெந்நீரில் ஸ்நானம் செய்வது முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய அனுஷ்டானமாகும்.
அதற்கு மேல் எம்பெருமானுக்கு சமர்பிக்கப்பட்ட புது வஸ்திரங்களை தரித்துக்கொண்டு, எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்து, பல வித பலகாரங்கள் மற்றும் இனிப்புகள் இவற்றை ஸமர்ப்பித்து பின் உட்கொண்டு கொண்டாட வேண்டும்.
பட்டாசுவெடிப்பது என்பதும் சாஸ்திரத்தில் ஒரு கொண்டாட்டமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பெரியோர்கள் இந்த அனுஷ்டானத்தை, காலங்காலமாக செய்து வருகின்றனர். எம்பெருமானுக்கு பெருமாள் சந்நிதியில் ஒரு மத்தாப்பைக் கொளுத்தி வழிபடுவது என்பது அனுஷ்டானத்தில் உள்ளது. அதனால் அதையும் அவசியம் பண்ணிக் கொண்டாட வேண்டும்.
அடியேன் தாஸன். என்னுடைய கேள்வி அர்த்தமற்றதாக இருக்கலாம். க்ஷமிக்கணும். நாம் விசிஷ்டாத்வைதத்தின் கொள்கைகளைப் பின்பற்றுகிறோம், உஜ்ஜீவனத்திற்காக நாம் ப்ரபத்தி மார்கத்தைப் பின்பற்றி, விடுபட்ட ஆத்மாக்கள் நித்யவிபூதியில் எம்பெருமானுக்கு நித்ய கைங்கர்யம் செய்யும் பிராப்தத்தையும் பெரும் இந்த மேன்மையான சம்ப்ரதாயத்தின் ஒரு அங்கமாக இருப்பதையும் நாங்கள் பாக்யமாக கருதுகிறோம். ஆனால் பெருமாள் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன (தானே தனித் தோன்றல்) மற்றும் இந்த அண்ட சராசரத்தை எதற்காக உருவாக்க வேண்டும் ? அவர் எந்த கர்மாவிற்கும் கட்டுப்படாதபோது இந்த சம்சாரத்தில் இருந்து நம்மை உயர்த்த எம்பெருமான் ஏன் இவ்வளவு முயற்சி எடுக்கின்றார்? அவர் ஏன் இருக்கிறார் மற்றும் இந்த பிரபஞ்சத்தை எதற்காக உருவாக்கினார்? தன்யாஸ்மி.
பெருமாள் ஏன் இருக்கிறார், இந்த பிரபஞ்சம் ஏன் இருக்கிறது என்கின்ற கேள்விகளுக்கு இடமேயில்லை. ஏனெனில், ஏதாவது புதிதாக உண்டானால் தானே இந்தக்கேள்வி வரும். பெருமாள் எப்பவுமே இருக்கின்றார் அதேபோல் இந்த ப்ரபஞ்சமும் அப்படியே இருக்கின்றது!
ஸ்ருஷ்டிக்கு முன், ப்ரளய காலத்தில் சூக்ஷ்ம ரூபத்தில் ப்ரபஞ்சம் இருந்திருக்கிறது. ஜீவராசிகளும் இருந்திருக்கின்றன. ப்ரளய காலத்தில் ஜீவர்கள் அனைத்தையும், அனுபவிப்பதற்காக பெருமாள் ஸ்ருஷ்டிக்கிறார். சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு தாய் நீண்ட நாழிகை தூங்கிக்கொண்டிருக்கும் தன் குழந்தையை எழுப்பி பால் கொடுப்பது போலே, ஜீவர்களுக்கு ஆகாரம் கொடுப்பதற்காக ஸ்ருஷ்டிக்கின்றார்.
இந்த ஸம்சாரத்தில் கஷ்டப்படுவதை காட்டிலும் ஸ்ரீவைகுண்ட லோகத்தைச் சேர்ந்துவிட்டால், பசி தாகமென ஒன்றும் இல்லாமல் இன்னும் நன்றாக ஆனந்தமாக இருக்கலாம். பெற்றோர்களுடன் இருப்பது போல் பெருமாளுடன் கூட இருக்கலாம். இதைப்புரிய வைப்பதற்காகத்தான் பெருமாள் தானே அவதாரமெடுத்து, தன் விஷயத்தைப் புரியவைத்து தன்னிடம் வரவழைத்துக்கொள்கிறார்.
பெற்றோர்கள் தன குழந்தைகளுக்குப் பார்த்துப் பார்த்து செய்வது போலே, பெருமாள் அவருடைய குழந்தைகளாகிய நம்மிடம் இருக்கும் வாத்ஸல்யத்தினால் இவ்வாறு செய்கிறார்.
மதுரை மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாணத்திற்காக அழகர் சீர் கொடுக்க வருகிறார் என்று பார்க்கின்றோம். அப்படியிருக்க ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏன் அம்பாளைச் சேவிக்க கூடாது? அதே போல், நாம் ஏன் வரலக்ஷ்மி நோன்பும் கொண்டாடுவதில்லை.
தேவர்களுக்கெல்லாம் பெருமாள் பலவிதமான கார்யங்களைச் செய்துக்கொடுப்பர். மீனாக்ஷியினுடைய கல்யாணத்திற்குச் சீர் எடுத்து செல்வார், பரமசிவனுடைய அம்பின் நுனியில் அமர்ந்து த்ரிபுர சம்ஹாரம் செய்து கொடுப்பார், தேவேந்திரனுடைய சேனைக்கு உபேந்திரனாக இருந்திருக்கின்றார் . இவை எல்லாம் பெருமாள் தேவர்களுகுக்குப் பண்ணக்கூடிய அனுக்கிரஹம்.
அதே போன்ற அனுக்ரஹங்களை, நமக்கும் நேரடியாக செய்ய எம்பெருமான் காத்துக்கொண்டிருக்கிறார். அதனால் தேவாதி தேவனான எம்பெருமானை, நேரடியாக வழிபட்டாலே போதும். எல்லா நன்மைகளும் நமக்கு கிட்டும்.
அனைத்து தெய்வங்களும் எம்பெருமானையே அடிபணிந்திருப்பதால், தங்களை வழிபடாமல் பெருமாளை வழிபடுகின்றோம் என்று அவர்கள் கோபப்படமாட்டார்கள்.
வேறு தேவதாந்திரங்களைச் சேவிக்காமல் இருப்பது அவசியமும் கூட. ஏனென்றால் அதுவே பதிவ்ரதா தர்மும் ஆகிறது. எம்பெருமான் ஒருவன்தான் நமக்குப் பதி. அவனைக் கைப்பிடித்த பின், வேறு எவரையும் சேவிப்பது வழக்கத்தில் இல்லை .
வரலக்ஷ்மி நோன்பு ஸ்ரீவைஷ்ணவர்கள் கொண்டாடுவதில்லை என்பது மரபு. மஹாலக்ஷ்மி நாம் வழிப்படும் தேவதையாக இருந்தும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அனுஷ்டானத்தில் இல்லாததால் அதைப் பின்பற்றுவதில்லை.
தீபாவளியினைப் பற்றி ஸ்வாமி தேசிகன் எங்காவது குறிப்பிட்டுள்ளாரா? தெளியப்படுத்த ப்ராத்திக்கின்றேன்.
இது சாஸ்திரியமான பண்டிகை. மேலும் ஸ்வாமி தேசிகன் இதைப்பற்றி குறிப்பான ஒரு ஸ்லோகம் சாதித்துள்ளார், இதற்கு அனுபந்தியாக நிறைய விஷயங்களும் சாதித்துள்ளார். விரிவாக அறிய “ஸ்ரீ தேசிகன் காட்டிய தீபாவளி” என்ற உபன்யாசத்தைக் கீழே உள்ள linkஐ click செய்து கேட்கவும்
https://youtu.be/DwjapWcD_Q0
எப்படிச் சாப்பிட வேண்டும்? ஸ்ரீ தேசிகனின் உபதேசம்.
சாப்பிட வேண்டிய முறை பலவற்றில் ஒரு சில – முதலில் சாப்பிடும் முன் செய்ய வேண்டியது
அதிதி ஸத்காரம்
ஆசமனம்
ஆசனம்
இடம் பண்ணுவது
இலை சேர்ப்பது
ஐந்து அவயங்களை ஈரமாக வைத்துக்கொள்வது
உட்கார்ந்து கொள்வது
உத்தரீயம் பற்றியது – மிகவும் முக்கியமானது
சாப்பிட ஆரம்பிக்கும் முன் அன்ன சுத்தி,நீர் சுற்றுதல், வந்தனம் போன்ற கார்யங்கள் யாவை விரிவாக மேல் எட்டையும், என்ன என்ன சுத்தி செய்ய வேண்டும் என்பதையும், பெரியவர்கள் வழியை அறிய கீழே உள்ள YouTube linkஐ click செய்யவும்
https://youtu.be/3s2Ay38e9LU
நவராத்ரியின் தாத்பர்யம் என்ன அடியேன். நம் சம்ப்ரதாய திருக்கோயில்களில் அம்பு போடுதல் என்ற உத்ஸவம் நடக்கின்றது இவ்வுத்ஸவம் இராவண வதத்தைக்குறிக்கின்றதா? மேலும், நவராத்ரி சமயம் குறிப்பாக ஸ்த்ரீகள் பாராயணம் செய்ய ஏதேனும் விசேஷமான ஸ்தோத்ரமோ/ ப்ரபந்தமோ இருக்கின்றதா அடியேன்.
நவராத்திரியின் தாத்பர்யங்கள்:
மங்கள தேவதையான லக்ஷ்மி தேவியின் வழிபாடு.
ஹயக்ரீவ பகவானுடைய ஆராதனம்.
ஸ்ரீராமனுடைய விஜயத்தைக் கொண்டாடுவது .
நவ விதமான பக்தி இப்படி விளங்குகின்றது.
ஸ்த்ரீகள் நவராத்திரியின் போது லக்ஷ்மி ஸ்தோத்திரங்கள் - சது꞉ஶ்லோகீ, ஸ்ரீ ஸ்தவம், ஸ்ரீ குணரத்ன கோசம், ஸ்வாமி தேசிகன் இயற்றிய ஸ்ரீஸ்துதி , பூஸ்துதி , கோதாஸ்துதி , பாதுகாசஹஸ்ரம் இவை அனைத்துமே பாராயணம் பண்ணலாம். அதே போல் ராமாயணம் வாசிக்கணும் என்று ஸ்த்ரீகள் ஆசைப்பட்டால் மஹாவீர வைபவம் பாராயணம் பண்ணலாம். ஒன்பது நாளும் பாராயணம் செய்தால் பூர்த்தியாக ராமாயணம் சேவித்ததற்கு ஈடாகும்.
எம்பெருமான் ராவண சம்ஹாரத்திற்குப்பின் எப்படி விஜயராகவனாக விளங்கினான் என்பதைக் காண்பிப்பதற்காக அம்பு போடும் உற்சவம் விஜயதசமி அன்று கோவில்களில் நடைபெறுகிறது.
மேலும், விஜயதசமி அன்று அம்பு போடுவது என்பது அரசர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கம். அவர்கள் ஊர் எல்லையில் இருக்கும் எத்தனை வண்ணி மரங்களைச் சாய்க்கிறார்க்ளோ அவ்வளவு வருடங்கள் அவர்கள் ஆண்டிருப்பதாக கணக்கு. அந்த ரீதியில் எம்பெருமான் ராஜாதிராஜன் என்கின்றபடியினால் குதிரை வாகனத்தில் அமர்ந்து கொண்டு ஊருக்கு ராஜா என்பதைக் காண்பிப்பதற்காக வன்னி மரம் அறுக்கிறார் என்பதாக அந்த உற்சவம்.
விரிவான காணொளிக்குக் கீழே உள்ள linkஐ click செய்யவும்
https://youtu.be/Ml_HoQAEXdo
ஏகாதசி அன்று ஸ்த்ரீகள் பால், தயிர் மற்றும் வெண்ணெய் உட்கொள்ளலாமா? தயைக்கூர்ந்து தெளிவு படுத்தவும். அடியேன்.
ஏகாதசி அன்று, பூர்ண உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால் தயிர் உட்கொள்ளலாம். அவை தோஷமாகாது.
பரந்யாஸம் செய்துகொண்ட ஒருவர், ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவிலிலோ அல்லது திருவஹீந்திரபுரம் சேஷ கிணற்றிலோ புற்றுக்குப் பால் தெளிக்கலாமா?
ஆதிசேஷனுடைய அம்சமாக நினைத்து சேஷ கிணற்றில் பால் சேர்ப்பது மற்றும் புற்றுக்குப் பால் சேர்ப்பது எல்லாம் செய்யும் வழக்கம் உண்டு.
ப்ரபத்தி செய்து கொண்டப்பிறகு பெயர், கோத்ரம் மற்றும் நட்சத்திரம் சொல்லி கோவிலில் அர்ச்சனை செய்யக்கூடாது என்கிறார்கள், தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிறேன்.
ப்ரபத்தி செய்தவர்கள் என்று இல்லை யாராக இருந்தாலும், தன் பெயர் கோத்ரம், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதென்பது இரண்டாம்பட்சம் தான். “பகவத் ப்ரீத்யர்த்தம்” அதாவது பெருமாளுடைய ப்ரீதிக்காக என்று சொல்லி, பெருமாளின் பெயரில் அர்ச்சனை பண்ணுவதுதான் உத்தமமான கல்பம்.
குறிப்புகள்:
பெருமாளுக்கு ப்ரீத்தி ஏற்பட்டுவிடின், நாம் என்ன கேட்கின்றோமோ எல்லாவற்றையும் அவர் தானே கொடுப்பார். அதுமட்டுமல்ல, நாம் கேட்க வேண்டும் என்கின்ற அவசியமே இல்லை, அவரே பார்த்துப்பார்த்து நமக்கு வேண்டியவற்றைக் கொடுப்பார்.
அதையும் மீறி நமக்கு ஏதாவது கேட்க வேண்டும் எனத் தோன்றினால் அவருடைய ப்ரீத்தியை வேண்டினாலே நமக்கு வேண்டிய ஆரோக்கியம், சுகம், ஐஶ்வர்யம் என எதுவாக இருந்தாலும் தானே கிடைத்துவிடும்.
பெண்கள் தனது பெற்றோர்களின் ஶ்ராத்த தினத்தன்று காலையில் கோயிலுக்குச் செல்லலாமா?
பெண்கள் தனது பெற்றோர்களின் ஶ்ராத்த தினத்தன்று காலையில் கோவிலுக்குப் போகக்கூடாது என்பது கிடையாது, ஆனால் மரியாதை நிமித்தமாக தவிர்ப்பது நல்லது.
மேலும், பெண்கள் தங்கள் பெற்றோர்களுடைய ஶ்ராத்தத்திற்குச் சென்று ஒத்தாசை (தளிகையிலோ அல்லது மற்ற சுத்து கார்யத்திலோ) பண்ண முடிந்தால் கண்டிப்பாக செய்தல் வேண்டும். அதுவே உசிதம். அப்படிச் செய்ய இயலாதவர்கள், இன்றைக்கு ஶ்ராத்தம் நடக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்க வேண்டும்.
ஶ்ராத்த க்ரஹத்திற்குச் சென்று ஒத்தாசை செய்தால், அதுவே நிறைய கோவில்களுக்குச் சென்ற புண்ணியத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் முன்னோர்கள் காஞ்சியிலிருந்து சேலம் வந்தார்கள். எங்கள் ப்ரபிதாமஹ கோடிகன்னிகாதானம் தாதாச்சார்யார் அவர்கள். என்னுடைய பிதா மற்றும் பிதாமஹ இவர்களுக்கு குலதெய்வம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படாததால் எங்கள் குலதெய்வம் யார் என்று தயவுசெய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோருக்கும் குலதெய்வம் என்பது பகவான் ஸ்ரீமன் நாராயணன் தான். “ஸ்தோஷ்யாமி ந: குலத4னம் குலதை3வதம் தத்” என்று ஆளவந்தார் சாதித்திருக்கிறார்.
திருமலை தாதாச்சார்யார் ஸ்வாமிகளுக்கெல்லாம் (அவர் பரம்பரைக்கெல்லாம்) திருமலை வெங்கடாஜலபதி தான் குலதெய்வம்.
இங்கே கேள்வி கேட்டிருப்பவர் கோடிகன்னிகாதானம் தாதாச்சார்யார் ஸ்வாமி பரம்பரை. அந்த ஸ்வாமிக்கு, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தான் குலதெய்வம். அதன் படி, அவர்கள் தங்கள் குலதெய்வம் காஞ்சி வரதராஜப் பெருமாள் என வைத்துக்கொள்ளலாம்.
பரமபதத்தில் யாருக்கும் பசி, தாகம், உறக்கம் கிடையாது என்கின்ற பக்ஷத்தில் பகவானுக்கு ஸமர்ப்பிக்கும் ப்ரசாதத்தின் நிலை என்ன?
பரமபதத்தில் பசி, தாகம் போன்றவைகள் கிடையாது. மேலும், நாம் அவர்கள் பசியைத் தீர்க்க ப்ரசாதம் ஸமர்ப்பிக்கவில்லை, ஒரு உபசாரமாகதான் கண்டருளப்பண்ணுகிறோம்.
அவர்கள், நாம் ஸமர்ப்பிக்கும் ப்ரசாதத்தின் ஸுக்ஷ்மமான பாகத்தை மட்டும் ஸ்வீகரித்துக்கொண்ட பின், நமக்கு அதை நல்ல ப்ரசாதமாக, தெய்வானுக்ரஹத்துடன் கொடுக்கிறார்கள். அதன் பின்னர் இது விசேஷமான ப்ரசாதமாக ஆகிறது. இதையே ஆகமமும் கூறுகிறது.
துவாதசிக்கு என்னென்ன காய்கறிகள் சேர்க்கலாம்?
துவாதசி அன்று,
சேர்க்க வேண்டிய காய்கறிகள்:
பூசணிக்காய்
பரங்கிக்காய்
வெண்டைக்காய்
அவரைக்காய்
சேப்பங்கிழங்கு
கொத்தவரங்காய்
இவையெல்லாம் சேர்த்துக்கொள்ளலாம்.
தவிர்க்கவேண்டிய காய்கறிகள்:
வாழைக்காய்
கத்தரிக்காய்
வாழை சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும், அதை துவாதசிக்கு சேர்க்கக்கூடாது. சில கிரஹங்களில் புடலங்காயும் சேர்த்துக் கொள்வது கிடையாது. அவரவர் க்ரஹ வழக்கத்தைப் பெரியோர்களிடம் கேட்டுக்கொண்டு பின்பற்றலாம்.
அடியேன் GSPK யில் கற்றுக்கொண்ட ஸ்தோத்ர பாடங்களை மீண்டும் இரவு 10 மணிக்கு மேல் திருவை சொல்லி கற்றுக்கொள்ளலாமா? ஸ்தோத்ர பாடங்களை கற்றுத் கொள்ள கால நியமங்கள் உண்டா ஸ்வாமி?
ஸ்தோத்ர பாடங்கள், எல்லாரும் எல்லாச் சமயங்களிலும் சொல்வதற்காகத்தான் ஏற்படுத்த பட்டது.
ஸ்தோத்ர பாடங்களை, கற்றுக்கொள்வதற்கு எந்த ஒரு நியமங்களும் இல்லை. இரவு நேரங்களிலும் அவசியம் சந்தை சொல்லலாம். அதற்காகத்தான் பரம க்ருபையோடு ஸ்தோத்ர பாடங்களை ஸ்வாமி தேசிகன் நமக்கு அருளியிருக்கின்றார்.
புரட்டாசி மாதம், திருமலையில் ப்ரம்மோற்சவம் நடக்கும் சமயம் (த்வஜாவரோஹனம் வரை) மாவிளக்கு ஏற்றக்கூடாது என்கிறார்களே? விளக்க ப்ரார்த்திக்கின்றேன்.
புரட்டாசி சனிக்கிழமை நாம் திருவேங்கடவனுக்கு மாவிளக்கு ஏற்றுகின்றபடியாலே, திருமலையில் நடக்கும் உற்சவத்தில் நாம் அந்வயிக்க வேண்டும் என்பதனால் உற்சவ சமயத்தில் மாவிளக்கு ஏற்ற வேண்டாம் என்பார்கள்.
குறிப்பாக திருமலையில் வசிப்பவர்கள் உற்சவசமயத்தில் பண்ணமாட்டார்கள். பொதுவாக கோவிலில் உற்சவம் நடக்கின்றது என்றால், அந்த நேரம் ஆத்துப்பெருமாள் திருவாராதனையைச் சுருக்கிக்கொள்வார்கள். உபநயனம், கல்யாணம் போன்ற கார்யங்கள்கூட உற்சவம் முடிந்தப்பின்தான் வைத்துக்கொள்வார்கள். ஏனென்றால் கோவில் உற்சவத்தில் அந்வயிப்பது தான் ப்ரதானம்.
இயன்ற அளவு திருமலை உற்சவத்தில் கலந்துக்கொள்ள முயற்சிக்கலாம். மேலும், அச்சமயம் மாவிளக்கு ஏற்றுவதனால் எந்த தோஷமும் இல்லை. ஆத்துப்பெரியவர்கள் வழக்கப்படி செய்யவும்.
அடியேன் சென்ற சுதர்சனத்தில்,Q12Jul21004 என்ற கேள்வியின் பதிலாக ஸ்த்ரீகள் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லக்கூடாது என்று இருக்கின்றது, இதற்குப் பூர்வாசார்ய ப்ரமாணம் அல்லது சாஸ்த்ர ப்ரமாணம் இருக்கின்றதா அடியேன்.
சிஷ்டாச்சாரமே ப்ரமாணம். ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் அவதரித்து சுமார் 5000 வருடங்களாயிற்று, அன்று தொட்டு இன்று வரை நம் பெரியோர்கள், அனுஷ்டிக்கும் வழி ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதை நாமும் பின்பற்றுகின்றோம் என்பது மட்டும் தான்.
அடியேன் ப்ரமாண அல்லாத சமூகத்தை சேர்ந்த ஸ்ரீவைஷ்ணவன், எங்கள் குல தெய்வம் திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள். எங்கள் தாத்தா ஸ்ரீ பெரும்புதூரில் முத்ராதாரணம் செய்துகொள்வார். மேலும் அவர் எங்கள் க்ராமத்தில் விடாது நகர் சங்கீர்தநம் செய்தும் , ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் படியும் வாழ்ந்தார். ஆனால் அவருக்குப்பின் அது நின்று விட்டது. எங்கள் அப்பா நாங்கள் எல்லோரும் திருவிழா காலங்களில் மட்டும் கோவிலுக்குச் செல்வோம். சம்ப்ரதாயமும் அறியாது போனோம். அடியேனுக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயப்படி தாத்தா போல் இருக்க அவா. ஆனால், எங்கள் ஆசார்யன் யார் என்று தெரியாது. எப்படி முத்ராதாரணம் பெறுவது, வேறு ஆசாரியரிடம் சென்று, எப்படி எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று நல் வழி காட்டவும். மேலும் ப்ராமணர்கள் போல் அடியேனும் சந்தியா வந்தன அனுஷ்டாநம் செய்யலாமா? அடியேனுக்குத் தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.
தங்கள் தாத்தா எந்த ஆசார்யரை ஆஶ்ரயித்தார் என்று அறியாத பக்ஷத்தில், தாங்கள், தங்கள் மனதுக்கு உகந்த எந்த ஆசார்யரை வேண்டுமானாலும் ஆஶ்ரயிக்கலாம்.
அதாவது, இவர் நம்மை திருத்திப்பணிகொள்வார் என்று தங்களுக்கு விஶ்வாசம் தோன்றும்படியான ஒரு ஆசார்யனிடத்தில் அந்வயித்து ஸமாஶ்ரயணம், பரந்யாஸாதிகளைச் செய்துக்கொள்ளலாம்.
அஹோபில மடம் தொடங்கி பல ஆசார்யர்கள் உள்ளனர். உங்களுக்கு எந்த ஆசார்யரிடம் பக்தி உள்ளதோ அவரை ஆஶ்ரயிக்கலாம்.
குறிப்புகள்:
ப்ராமணர்கள் போலே, க்ஷத்ரியர்களுக்கும் வைசியர்களுக்கும் சந்தியாவந்தனாதிகள் உண்டு, மற்றவர்களுக்குக் கிடையாது. ஆனால், காலையில் ஸ்நானம் செய்து த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரித்துக்கொண்டு, ஆசார்யன் தனியன் ஸேவித்து, பெருமாளை ஸேவித்து போன்ற காரியங்களைச் செய்யலாம்
க்ரந்த சதுஷ்டய காலக்ஷேபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, ஸ்த்ரீகளும் கேட்கும் அதிகாரமுள்ள காலக்ஷேபம் எவையவை என்று விளக்க ப்ராத்திக்கிறேன். அடியேன்.
க்ரந்த சதுஷ்டயத்தில் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தையும், பகவத் விஷயத்தையும் பங்க்தி ஸேவித்தே காலக்ஷேபம் பண்ணலாம். அதில் இருக்கும் ஸ்ரீ ஸூக்திகளை ஸேவித்து, அறிந்துக்கொண்டு, உத்தராவலோபனம் செய்து நல்ல படியாக காலக்ஷேபங்கள் பண்ணனும்.
ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம் இவ்விரண்டிலும் நிறைய வேத வாக்யங்கள் இருக்கின்ற படியால் ஸ்த்ரீகள் நேரே வாசிக்கின்ற படி இருக்காது. அக்ரந்தம் பற்றி அறியவேண்டுமானால், காலஷேப கோஷ்டியில் பின்னாடி உட்கார்ந்துக்கொண்டு கேட்கலாம். பிறகு, அதன் மூலத்தை உத்தராவலோபனம்/ திருப்பி படிப்பது என்பது ஸ்ரமமாக இருக்கும்.
அதனால் நம் நாவல்பாக்காம் ஸ்ரீ உ வே வாஸுதேவாச்சார்யார் ஸ்வாமி என பல ஆசார்யர்கள் இன்று எளிய தமிழில் நாம் புரிந்துக்கொள்ளும் படியாக பரம க்ருபையோடு அதன் வ்யாக்யாணம் அருளியுள்ளனர். அதைப்படித்து விஷயத்தை தெரிந்துக்கொள்ளலாம்.
“இந்திரன், அகல்யா போன்றவர்களுக்கு இன்னும் மன்னிக்க முடியாத நிறைய குற்றங்கள் செய்தும்
பெருமாள் அவரை தேவேந்திர பதவியில் வைத்து அனுகூலம் செய்வது ஏன்?
அகல்யாவிற்கு தோஷம் கிடையாது. பெருமாள் அவர்களின் தோஷத்தை நிவ்ருத்தி செய்துவிட்டார் என்று இராமாயணத்தில் ஸ்பஷ்டமாக இருக்கின்றது. ஒருகால் அவர்களுக்கு தோஷம் இருக்கு என்று எண்ணிக்கொண்டிருந்தால், அதை மாற்றிக்கொள்ளவும் அவர்கள் பாபம் செய்தவர்கள் என்று நாம் நினைப்பதே நமக்கு பாபத்தை உண்டாக்கும்.
எப்படிப்பட்ட தோஷத்தைப் பெருமாள் நிவ்ருத்தி செய்திருக்கிறார் என்பதை நாம் உதாஹரணமாக வைத்துக்கொண்டு பார்க்க வேண்டும் என ஸ்வாமி தேசிகன் பாதுகா ஸஹஸ்ரத்தில் பல இடங்களில் காட்டியுள்ளார்.
அவர்கள் எல்லாரும் தெய்வ ப்ரக்ருத்திகள். நல்ல விஷயங்களை நமக்கெடுத்துக்காட்ட சில சில சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருக்கும். அதை நல் விஷயத்திற்காக எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.
குறிப்புகள்:
தவறு செய்தவர்கள் உயர்ந்த ஸ்தானத்திலும், தவறு செய்யாதவர்கள் தாழ்ந்த ஸ்தானத்திலும் இப்போதும் இருப்பதைக் காண்கின்றோம். அவரவர்க்குரிய பலனையோ, தண்டணையோ அவரவருக்கு அந்தந்த காலத்தில் பகவான் கொடுப்பான் அதற்கு நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
மேலும், மற்றவர்கள் விஷயத்திலும் ஒருவர் செய்த பாபத்திற்கு அவர்கள் அதற்குரியதான சரியான ப்ராயச்சித்தம் செய்துவிட்ட பின்னரும், அவர்களை பாபம்செய்தவர் என நினைத்தலே நமக்கு பாபம் உண்டாகும். ஆக இது போன்ற விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும்.
ஸ்த்ரீகள் துளசியைப் பறிக்கலாமா? எங்கள் கோவிலில் நம்மாழ்வார் மோக்ஷ வைபவத்திற்காக ஆண்டாள் கோஷ்டியினர்தான் துளசியைப் பறிப்பார்கள், இந்த முறை சரியா? அடியேன்.
ஸ்த்ரீகள் துளசியைப் பறிக்கக்கூடாது. திருத்துழாயை க்ரஹிப்பதற்கு ஒரு விதி இருக்கு, மந்திரம் இருக்கு. அதைக் கடைப்பிடித்து உசிதகாலத்தில் புருஷர்கள் துளசியைப் பறிப்பது என்று வைத்துள்ளார்கள்.
எம்பெருமான் திருவாராதனைக்காக ஸ்த்ரீகள் துளசியைப் பறிக்கும் வழக்கமில்லை.
அடியேன் பௌர்ணமி அன்று தர்ப்பணம் செய்யலாமா? பித்ரு பக்ஷமன்று தர்ப்பணம் முதலில் செய்ய வேண்டுமா? அல்லது திருவாராதனை முதலில் செய்ய வேண்டுமா?
பௌர்ணமி அன்று தர்ப்பணத்திற்கு ப்ரஸக்தி இல்லை.
பௌர்ணமி தினத்தில் க்ரஹணம், மாசப்பிறப்பு வந்தால் செய்ய வேண்டும். ஏனெனில் அது மாசப்பிறப்பை உத்தேசித்து செய்ய வேண்டிய தர்ப்பணம். பௌர்ணமியை உத்தேசித்து தர்ப்பணம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
குறிப்புகள்:
இதில் மாசப்பிறப்பு தர்ப்பணம், மாதம் பிறக்கும் புண்யகாலத்தை ஒட்டிச் செய்ய வேண்டும். காலையிலே மாதம் பிறக்கிறது என்றால், முதலில் தர்ப்பணம் செய்துவிட்டு பின் திருவாராதனை செய்ய வேண்டும். இஜ்யா காலச்சமயத்திற்குப் பின் மாசப்பிறப்பு தர்ப்பண காலம் வந்தால், முதலில் இஜ்யாராதனை செய்துவிட்டு பின்பு தர்ப்பணம் செய்வது தான் வழக்கம்.
தர்ஶ ஶ்ரார்த்தத்தில், அதற்குக் காலம் அபராஹ்ண காலமானபடியினால், மாத்யானிக ஸ்நானம் செய்து மாத்யானிக திருவாராதனை செய்த பிறகே, தர்ஶ ஶ்ரார்த்தை, அமாவாஸை தர்ப்பணத்தைச் செய்வதே பெரியோர்களின் வழக்கம்.
ஏகாதசிக்கும் அரிசிக்கும் உள்ள தொடர்பு யாது? ஏன் முழு அரிசியை கட்டாயம் தவிர்த்து வேண்டுமானால் பின்ன அரிசி எடுத்துக்கொள்ளலாம் என்றுள்ளது? அடியேன் தெரிவிக்க வேண்டுகிறேன்.
அரிசி என்பது மனிதனுடைய பூர்ண ஆஹாரம். பால், பழம் போன்றவையெல்லாம் அரைகுறை ஆஹாரம்.
ஏகாதசி அன்று பூர்ண வ்ரதம் இருக்க வேண்டும். அது இயலாதவர்கள், இந்த பூர்ண ஆஹாரத்தைத் தவிர்க்க வேண்டும் என்றபடியால் அரிசியைத் தவிர்க்க வேண்டும் என்றுள்ளது.
குறிப்புகள்:
புராணத்தில் ருக்மா என்ற சரித்திரத்தில் கூறியதாவது, ஏகாதசி அன்று மோகினி என்ற துர் தேவதா ஒருத்தி, பூர்ண அரிசியில் உட்காருகிறேன் என்றும் யாராவது அதை உட்கொள்ள அவர்களின் உள் சென்று விடுகிறேன் என்றும் அவள் கூறியதால், அவளை விரட்டும் ஒரு வழியாக அரிசியை உடைக்க, அவள் அதில் இருந்து ஓடி விடுகிறாள் என்பதாலும், அது அரைகுறை ஆஹாரமாகிறபடியாலும் பூர்ண அரிசியைத் தவிர்ப்பது என்ற வழக்கம் வைத்துள்ளனர்.
“அடியேனுடைய கேள்விக்கு முந்தைய இதழில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது(009 சுமங்கலியாக பரம்பதித்த ஜீவனின் க்ரமா தர்பணம் தொடர்பாக) அடுயேனுடைய க்ருதக்ஞையைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும் அடியேனுடைய அல்ப ஞானத்திற்குத் தெளிவுபெறவில்லை. அடியேனுடைய ஐயம், எல்லா கர்மாக்களை செய்யும்போது பகவத் ப்ரீதி என்றுதான் செய்கிறோம். எல்லாம் அவனுக்கே சென்றடைகிறது. இதில் ஐயமில்லை. இருந்தாலும் தர்ப்பணம் செய்யும்போது மாதா, மாதாமஹன் மாத்ரு பிதாமஹன் ப்ரபிதாமஹன் என்று சொல்லும் போது அவர்களுடைய பெயரைச் சொல்லி அர்க்யம் விடுகிறோம். ஆனால் சுமங்கலியாக பரம்பதித்த அந்த ஜீவனின் பெயரைச் சொல்லி தர்ப்பணம் செய்ய மகனுக்கு யோக்யதை வரும் வரையில் அந்த ஜீவனின் கதிஎன்ன அடியேனைத் தெளிபெறச்செய்ய ப்ரார்திக்கிறேன்.
பரமபதத்திற்குச் சென்ற ஜீவனின் கதி மிகவும் உத்தமமான கதி. அவர் நம் தர்ப்பணத்தை எதிர்பார்ப்பதே இல்லை. அவர் ப்ரம்மாநுபவத்தைப் பெற்றுக்கொண்டு உத்தமமாக இருக்கிறார். இதை வேதமே “சாந்தோக்ய உபநிஷத்தில்” ஸ்பஷ்டமாக கூறுகிறது.
குறிப்புகள்:
நாம் அவர்களை உத்தேசித்து, தர்ம சாஸ்த்ரங்களிலும், வேதங்களிலும் விதிக்கப்பட்டிருக்கின்றபடியினால் தர்ப்பணாதிகள் செய்கின்றோம். நாம் செய்வதனால் அவர்கள் ஒரு த்ருப்தியும் அடையப்போவதில்லை. வேதம், தர்ம சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்டதை நாம் செய்யாவிடில் நமக்கு பாபமாகும். ஆகையால், அவர்கள் கதியைப்பற்றிக் கவலைபடாது, நம் கதியைப்பற்றி நினைத்து, சாஸ்த்ரம் சொன்னபடி அவர்களுக்கு அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மாவை உத்தேசித்து நாம் செய்தல் வேண்டும்.
சாஸ்த்ரம்தான் பரவ்ருத்தி நிவ்ருத்தி என இரண்டிற்கும் காரணமானபடியால் அது சொல்லும்படி செய்தால் போதும் அவர்களுக்கும் சரி பெருமாளுக்கும் சரி எந்தக் குறைவும் கிடையாது.
உதாஹரணமாக, நம் ஆத்துப்பெருமாளுக்கு நாம் திருவாராதனை செய்கின்றோம். செய்யாவிட்டால் பெருமாளின் கதி என்ன என்றால், அவருக்கு ஒரு குறைவும் ஏற்பட போவதில்லை.
நாம் திருவாராதனை செய்தால் நமக்கு நல்ல கதி கிட்டுமே தவிர, அவர் கதி என்ன என்ற கேள்வியே இல்லை, அவருக்கு ஒரு குறைவும் ஏற்படாது. அதே போல் தான் இந்தக் கேள்வியும் அதன் பதிலும்.
அஷ்டாக்ஷர மந்திரத்தை எப்போது ஜபிக்க வேண்டும்?
சந்தியாவந்தனம் ஆன கையோடு, அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபிப்பது என்பது நம் பெரியோர்களின் வழக்கமாக இருக்கின்றது. இதை ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமரக்ஷையில், மஹாபாரத வசனத்தை ப்ரமாணமாக காட்டிய படியினாலே நம் பெரியோர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இச்சமயத்தில் அவனை பூஜிக்க, ஆத்ம சுத்தி பெறுகிறார்கள் என்று அந்த வசனத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக ஸமாஶ்ரயணம் ஆனவர்கள் மட்டுமே இதை செய்ய முடியும். ஸமாஶ்ரயண பரம்பரையிலே ஆசார்யன், ப்ராசார்யன் அவரின் ஆசார்யன் அவர்களின் தனியன்களை அனுசந்தானம் செய்து, பின் “அஸ்மத் தேஶிகம் அஸ்மதீய பரமாசார்யன்” என்கின்ற ஸ்லோகத்தையும், “என் உயிர் தந்தளித்தவனே” என்ற ஸ்லோகத்தையும் அனுசந்தானம் பண்ணுவது வழக்கில் இருக்கிறது.
மேலும், ப்ராணாயாமம் எப்படிச் செய்து சங்கல்பம் பண்ணுவது என்பவற்றை விவரமாகவும், மஹாபாரத வசனம் என்ன என்பதையும் விரிவாக அறிய கீழே உள்ள காணொளியைப் பார்க்கவும்.
https://youtu.be/NYpkm1ZmQhU
சகுனம் பார்த்தல் என்றால் என்ன?
சகுனம் பார்த்தல் என்பது தொன்றுத்தொட்டே பெரியோர்களின் வழக்கத்தில் இருக்கிறது. உதாஹரணமாக நாம் வெளியே புறப்படும் சமயம் இரு ப்ராமணர்கள் வருகிறார்கள் என்றால் ,நல்ல சகுனம் என்பர். நம் கார்யம் நல்ல ரிதீயில் நடக்கும் என்று சொல்வார்கள்.
நிமித்தம் என்று ஒன்று உண்டு, ஒரு கார்யத்தை ஆரம்பிக்கப்போகிறேன் என்று பேசுகிற சமயம் மணியோசை கோட்டால், அக்கார்யம் நன்றாக நடக்கும் என்பர். அதே நேரம் வேறு யாரோ அமங்கலமான வார்த்தையைச் சொல்கிறார்கள் என்றால் அது நன்றாக நடைப்பெறாது என்பர்.
ஸ்வப்நம் என்று உண்டு, நாம் காணும் ஸ்வப்நத்திற்கு ஏற்றார் போலே பலன்களை எல்லாம் சாஸ்த்ரம் சொல்லியிருக்கு.
இப்படிச் சகுனங்கள் பற்றி ஸ்ரீமத் இராமாயணத்தில் நிரம்பி இருக்கு. மேலும் ஜோதிட சாஸ்த்ரத்திலும் இதைப்பற்றி இருக்கு. இதன் பின் இருக்கும் அறிவியல் விஞ்ஞானம் என்ன? விரிவாக அறிய கீழ் காணொளியைப் பார்க்கவும்.
https://youtu.be/gUOuKJXan8w
ஒரு தேங்காயின் ஒரு மூடியை மட்டும் உபயோகித்து இன்றைய தளிகை செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றோம் என்றால், அதன் மற்றொரு மூடியை மறுநாள் தளிகைக்கு உபயோகப்படுத்தலாமா? அப்படி உயோகித்த அந்தத் தளிகையை பெருமாளுக்கு நிவேதனம் செய்யலாமா? தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.
ஒரு தேங்காயை உடைத்து ஒரு மூடியை மட்டும் உபயோகப்படுத்தி விட்டு மறுநாள் அந்த மற்றொரு மூடியை உபயோகப்படுத்தி பெருமாளுக்கு அம்சை பண்ணுவது வழக்கமில்லை. ஒரு தேங்காயை உடைத்து விட்டோமேயானால் அன்றே அதைப் பூர்த்தியாக உபயோகப்படுத்த முடிந்தால் அந்தப் பதார்த்தங்களை எம்பெருமானுக்கு அம்சை பண்ணலாம்.
அப்படி முழுவதுமாக உபயோகப்படுத்த முடியாமல் மீந்துவிட்டால், அதை பகவானுக்கு அம்சைப்பண்ணிய பிறகு, வேறு பதார்த்தங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்புகள்:
ஒரு மூடி என்பது தனித்து இருக்கக்கூடியதுதான். அதனால் உபயோகப்படுத்தாத மற்றொரு மூடியை அடுத்த நாள் தளிகையில் சேர்த்து பெருமாளுக்கு அம்சை பண்ணுவது சில க்ரஹங்களில் வழக்கத்தில் உள்ளது. அதனால் அவரவருடைய க்ருஹ வழக்கத்தை கடைப்பிடிப்பதே உசிதம்.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யதேவதாந்த்ரங்களை வழிபடக்கூடாது என்று இருக்கின்றது, அப்படியிருக்க ஹனுமனை மட்டும் ஏன் வழிபடுகின்றோம்? ஹனுமான் ஒரு ப்ரபந்நரா? அல்லது பக்தி யோகியா? அல்லது முமுக்ஷூவா? என்ன என்று புரிந்துக்கொள்வது? அடியேன்.
ஹனுமான், அந்யதேவதாந்தரம் இல்லை. அவரைச் சிறியதிருவடி என்று அழைப்பர். அவர், சீதா, ராம, லக்ஷ்மணருடன் எப்பொழுதுமே சேர்ந்தே இருக்கின்றதினால், அவர்களைச்சேவிக்கும் பொழுது, அவரையும் சேவிக்க வேண்டும்.
ஹனுமான், ஒரு சீரஞ்ஜீவியாக இப்போதும் கந்தமாத பர்வதத்தில் இன்றும் இருக்கிறார்.
“ஸத்₂யம் ப்₃ரவி:மி மனுஜ:ஹ ஸ்வயமு:ர்த்₄வ ப₃ஹுஹு யோ: ம:ம் முகு:ந்த₃ நரஸிம்ஹ ஜன:ர்த₃னே:தி₂ | ஜி:வன் ஜபத்₂ய்னு தி₃னம் மரனே: ருனி:வ ப:ஶ:ந க:ஶ்த ஸத்₃ரு:ஸ:ய த₃த₃:மி முக்தி₂ம்” என்ற இந்த நரசிம்ம சரம ஸ்லோகம் எங்கு இருக்கின்றது? தெரிவிக்க ப்ரார்த்திக்கின்றேன். அடியேன்.
இக்கேள்வியின் விடையை பின் நாட்களில் பார்க்கலாம்.
ஸ்ரீ வங்கிபுரத்து நம்பி தமது விரோதி பரிஹாரம் என்ற க்ரந்தத்தில் “பிராட்டிக்கு “ஸர்வேஷ்வரத்வம்” மற்றும் “ப்ரம்மைக்க லக்ஷணமான கரணத்வம்” இருக்கு என்ற நினைப்பே மோக்ஷத்திற்கு தடையாக மாறும் என்கின்றார்.
[Here is Vangipurathu Nambi’s Virodhi Pariharangal in Telugu script: https://archive.org/details/in.ernet.dli.2015.396199 And here is the specific page: https://imgur.com/a/c0NUyY1″]
அப்படியானால் விஷ்ணுவும் பிராட்டியும் இருவேறு ஆத்மாக்களா? அல்லது ஒரு ஆத்மாவின் இரு உருவங்களா/ அவதாரங்களா? அதே போல் ஸ்ரீ, பூமி மற்றும் நீளா தேவிகளும் மூன்று வேறு ஆத்மாக்களா? அல்லது ஒரு ஆத்மாவின் மூன்று அவதாரங்களா? விளக்க ப்ரார்த்திக்கின்றேன். அடியேன் ராமானுஜ தாசன்.
ஸ்ரீ வங்கிபுரத்து நம்பி அருளியதாகச் சொல்லும் விரோதி பரிஹாரம், என்ற இந்த க்ரந்தத்தை ஸ்வாமி தேசிகன் முதலிய ஆசார்யர்கள் குறிப்பிடாததால் அதன் விவரம் தெரியவில்லை.
பிராட்டியும் பெருமாளும் இருவேறு ஆத்மாக்கள். ஸ்ரீ, பூமி, நீளா தேவிகள் மூன்று வேறு ஆத்மாக்கள். இதை ஸ்வாமி தேசிகன், சதுஶ் ஸ்லோகி பாஷ்யத்தில் விஸ்தாரமாக சாதித்துள்ளார். அதை ஆசார்யரிடம் இருந்து காலக்ஷேபத்தின் மூலம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளவும்.
குறிப்புகள்:
பல ப்ரமாணங்களை மேற்கோள் எடுத்துக்காட்டி ஸ்வாமி தேசிகன், தன்னுடைய க்ரந்தங்களில் பிராட்டிக்கு ஸர்வேஶ்வரத்துவம் சித்திக்கும் என்று கூறியிருக்கிறன்றார். மேலும், இந்த பிராட்டியின் விஷயத்திலேயே ஸ்வாமி தேசிகன், “தர்க்க பாண்டித்யத்தினாலே எதையும் சாதிக்க வல்லோமாய் இருக்க, நாம் ப்ரமாணஶரணராய்க் கோருகிறோம்” என்று சாதித்திருக்கிறபடியாலும், ஸ்வாமி தேசிகனே நமக்கு ப்ரமாணமான படியாலும் அவர் வழியே நாம் பின்பற்றுவோம், பிராட்டிக்கு ஸர்வேஶ்வர்த்வம் உண்டு எனத் தெளிவோம்.
“ஸ்ரீ மந்த்ரத்தின்” மந்த்ரோபதேசம் பஞ்ச சம்ஸ்காரம் சமயம் ஸ்ரீ அஹோபில மடத்தில் மட்டும் தான் உபதேசிப்பார்களா? அல்லது மற்ற வடகலை சம்ப்ரதாய மடங்களிலும் உபதேசிப்பரா? அடியேன்.
ஸ்ரீ மந்த்ரத்தை ஸமாஶ்ரயண சமயம் என்றில்லாது, எப்போது வேண்டுமானாலும், எந்த ஆசாரியரிடமும் ப்ரார்த்தித்து உபதேசம் பெற்றுக்கொள்ளலாம்.
க்ஷத்ரபந்து, முசுகுந்தன், விபீஷணன், கத்வங்க மஹாராஜா போன்றவர்களைத்தவிர, வேறு யாரேனும் ஸ்வநிஷ்டை செய்துள்ளார்களா? அவர்களைப்பற்றிய நம் இதிகாச புராணங்களில் ஏதேனும் குறிப்புள்ளதா? அடியேன்.
ஸ்வாமி தேசிகனே “காகம் இராகதன் மன்னர் காதலி கத்திரபந்து” என அடைக்கலபத்தில் ஸ்வநிஷ்டை செய்தவர்கள் பற்றி விவரிக்கிறார்.
நாகம் அதாவது, கஜேந்திரன், தேவர்கள், விபீஷணன் என்று பலரைப்பற்றி புராணங்களில் குறிப்புள்ளது.
இக்கேள்விக்கான விரிவான விடையறிய கீழேயுள்ள linkஐ click செய்து இவ்வுபன்யாசத்தைக் கேட்கவும்.
https://youtu.be/OJNnjuNgoOo
வேதங்கள் அபௌருஷ்யமானது என்றால் ரிக் வேதம் ஏன் இப்படிச் சொல்கின்றது “அஸ்மா இது³ ஸ்தோமம்ʼ ஸம்ʼ ஹிநோமி ரத²ம்ʼ ந தஷ்தேவ” – “ஒரு தச்சன் தேர் செய்வது போல் இதனை அவனுக்காக நான் உருவாக்கியிருக்கேன்”. இதனை எப்படிப் புரிந்துக்கொள்ள வேண்டும் அடியேன்.
வேதங்களை உருவாக்கியிருக்கிறேன் என்று வேதமே சில இடங்களில் சொல்கிறது. அதற்கு ஏற்கனவே இருக்கின்ற வேதத்தை, இப்போது ப்ரகாசப்படுத்தியிருக்கிறேன் என்று அர்த்தமாகும்.
ஒரு தச்சன் தேர் செய்கிறார் என்றால், மரத்தை அவர் சிருஷ்டிப்பதில்லை, ஏற்கனவே இருக்கும் மரத்தை தேய்த்து நல்ல அமைப்பில் ஒரு வஸ்துவாக கொடுத்துள்ளார் என்று பொருள். அதே போல் தான் இங்கும், ஏற்கனவே இருக்கும் வேத்ததை நல்ல அமைப்பில் பெருமாள் நமக்கு கொடுத்துள்ளார் என்பது தான் பொருள்.
குறிப்புகள்:
அதாவது, வேதங்கள் போன கல்பத்தில் எப்படி உண்டாகி இருந்ததோ, அக்ஷரங்கள் எந்த க்ரமத்தில் உண்டாகியிருந்ததோ, அதே போலே அடுத்த கல்பத்தில் பகவான் அதை உபதேசிக்கின்றான்.
ப்ரளய காலத்தில், பகவான் மாத்திரமே இருக்க, மற்றவையல்லாம் அழிந்திருக்கும். பூர்வ கல்பத்தில் இருந்த வேதத்தை, பகவான் அதே க்ரமத்தில் மறுபடியும் உபதேசிக்கிறான். அதனால் தான் வேதம் அபௌருஷ்யம் எனப்படுகிறது.
அமேரிக்கா என்பது ஜம்புத்வீபமா அல்லது க்ரௌஞ்சத்வீபமா? சங்கல்பம் செய்யும் போது என்ன என்று சொல்லி சங்கல்பிக்க வேண்டும் தெரிவிக்க ப்ராத்திக்கின்றேன். அடியேன்.
அமேரிக்கா என்பதை, புராணங்களைக்கொண்டு பார்த்தால் ஜம்புத்வீபமாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் பாரதவர்ஷமாக இருக்காது.
ஜம்புத்வீபே பாராதவர்ஷே பரதகண்டே என்பதில், இந்தப்பூமி முழுவதுக்கும், அதாவது, உப்புக்கடல் சூழ்ந்த ப்ரதேசம் முழுவதும் ஜம்புத்வீபம் என்று பெயர். ஆகையால், அமேரிக்கா ஜம்புத்வீபமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
அடியேனுக்கு ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் இரண்டும் ஆயிற்று. புருஷர்கள் போன்றே ஸ்த்ரீகளும் 12 திருமண் தரிக்க வேண்டுமா? அடியேன்.
சுமங்கலிகள் த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரிப்பது வழக்கமில்லை என்றாலும், ப்ராச்சின ரீதியில் இருக்கின்ற கைம்பெண்கள் சிறியளவில் த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரிப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இப்போதும் சிலர் அதை அனுஷ்டிக்கிறார்கள்.
குறிப்புகள்:
ஸமாஶ்ரயணம் செய்விக்கும் அன்று, ஆசார்யர் 12 ஊர்த்வ புண்ட்ரங்கள் அதற்குரிய திருநாம உபதேசத்துடன், தரித்து விடுவார். அதற்குப் பின் நித்யமாக ஸ்த்ரீகள் நெற்றியிலும், பின் கழுத்திலும் இடுவது தான் வழக்கில் உள்ளது.
அடியேன் நமஸ்காரம். எங்கள் ஆத்துப்பக்கத்திலே ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது. அங்கே அடியேன் எப்போதும் போவதுண்டு. ஆத்தில் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை பண்ணுவோம். பரந்யாஸம் பண்ணிக்கொண்ட பின் பிள்ளையார் கோயில் செல்லக்கூடாது என்கிறார்களே. அதை பற்றி விளக்கம் வேண்டும்.
பரந்யாஸம் ஆன பின் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லக்கூடாது.
பரந்யாஸம் ஆன பின்னர் கட்டாயம் தவிர்க்க வேண்டிய இரு விஷயங்கள்
இதர தேவதாந்தரங்களின் வழிபாடு
பாகவத அபச்சாரம்
முன்பு பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடிக் கொண்டிருந்தோம் இப்போது இல்லை தோஷமாகுமா என்ற வருத்தமோ, பயமோ வேண்டாம். எந்த தோஷமும் ஒட்டாது.
எம்பெருமான் தான் தேவாதிதேவன். அவன் நிச்சயம் காப்பாற்றுவான் என்ற மகாவிஶ்வாசத்துடன் பரந்யாஸம் செய்துக்கொண்டுள்ளோம். பரந்யாஸம் என்பது பதிவ்ரதா தர்மம் போலே எம்பெருமானைத் தவிர வேறு எந்த தேவதைகளையும் நிச்சயமாக சேவிக்க கூடாது.
நமது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் தாளிப்பதற்குச் சமமான சொல் என்ன?
நமது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் தாளிப்பதற்குச் சமமான சொல், திருமணம் மாற்றுதல் என்பதாகும்.
அதுவே காலப்போக்கில் மருவி திருமாரறது என்று ஆகிவிட்டது.
ஒரு கைம்பெண் தன் மகன் வெளிநாட்டில் இருக்கும் காரணத்தால், தானே தனியாக “கோ” தானம் செய்யலாமா? சாஸ்த்ரம் கூறுவது என்ன தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.
கோதானம் என்பது, சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட ஒரு விசேஷமான அனுஷ்டானமாகும்.
கோதானம் செய்வதில் இரு வகையுண்டு. அதில் ஒன்று சாஸ்த்ரப்படி சங்கல்பம் செய்து பண்ணுவது என்பது.
சாஸ்த்ரப்படி சங்கல்பம் செய்து கோதானம் பண்ணுவதாக இருந்தால், கைம்பெண்கள் அதை செய்ய இயலாது.
லௌகீகமான கோதானம் என்பதும் உண்டு, அதற்கும் விசேஷமான பலன்கள் உண்டு எந்தக் குறைவும் அதற்குக் கிடையாது. மேலும் சாஸ்த்ரப்படி விசேஷ சங்கல்பம் ஏதும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும், கைம்பெண்களும் பண்ணலாம்.
வேண்டுமென்றால், வேறு யார் மூலமாகவும் லௌகீக கோதானத்தைச் செய்யலாம்.
அடியேன் வடகலை சம்ப்ரதாயத்தைச் சேர்த்தவன். அடியேன் சிறு வயதில் இருந்தே நெற்றியில் ஸ்ரீசூர்ணம் சிவப்பு வண்ணத்தில் இட்டுக்கொள்கிறேன். அடியேனின் தகப்பனாரை பார்த்து அந்தப் பழக்கம். அடியேனின் தகப்பனார் மஞ்சள் இட்டுக்கொள்கிறார் சிலகாலமாக. அடியேனின் தகப்பனார் சொன்ன காரணம், வைதீகாள் மஞ்சள் நிறத்தில் இட்டுக்கொள்வார்கள் என்று. பெரியவர்கள் சிவப்பும் மஞ்சளும் இட்டுக்கொள்ளும் வித்யாசத்தை அடியேனுக்கு போதிக்க ப்ரார்த்திக்கிறேன். அடியேன் வேதாந்த தேசிகனின் படத்தில் சிவப்பு நிறத்தில் ஸ்ரீசூர்ணம் இட்டு இருப்பதை பார்த்திருக்கிறேன். பன்னிரு திருமண் இட்டுக்கொண்டாலும் சிவப்பு உகந்ததா?
சிவப்பு கலக்காத மஞ்சள் ஸ்ரீ சூர்ணம் இடுவது பெரியவர்கள் வழக்கம். மேலும் அதுதான் உசிதமானது.
குறிப்புகள்:
சிவப்பு ஸ்ரீ சூர்ணத்திலும், மஞ்சள் கலந்திருக்கும். அதனால் சிவப்பு ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்வதில் தவறொன்றுமில்லை.
அடியேன் ஆஹாரநியமத்தை அனுஷ்டிக்க முயன்று வருகிறேன். வெளியிடங்களில் உணவு உட்கொள்வதை தவிர்த்துவிட்டேன் (Work from home காரணமாக இது முடிந்தது). அடியேனுக்கு 36 அகவை ஆகிறது. ஆசார்யன் அனுக்ரஹத்தில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புத்தி வருவதுபோல் இருக்கிறது . அடியேனின் சிற்றறிவுக்கு ஆஹாரநியமத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. முயற்சித்து வருகிறேன். அடியேனுக்குப் பெரியவர்கள் எந்தெந்த காய்கறிகளை உண்ணலாம் என்று பரிந்துரைத்தால் மிகுந்த உதவியாய் இருக்கும். அடியேனுக்குத்தெரிந்த காய்கறிகளின் பட்டியல்:
-> கீரை வகைகள் (முருங்கை மற்றும் சிறு கீரை தவிர)
-> வெண்டைக்காய்
-> கொத்தவரங்காய்
-> செளசெள
-> சேனைக்கிழங்கு
-> சேப்பங்கிழங்கு
-> கருணைக்கிழங்கு
-> வாழைக்காய்
-> பூசணிக்காய்
-> பரங்கிக்காய்
-> வெள்ளரிக்காய்
-> தக்காளி
ஆஹாரநியமத்தைப் பற்றி ஏதேனும் உபன்யாசம் இருந்தால் அடியேனுக்குப் பரிந்துரைக்கும் படி பணிகிறேன்.
வாசக தோஷம் இருந்தால் மன்னிக்கவும். அடியேனின் அறியாமையைப் பொறுத்தருள ப்ரார்த்திக்கிறேன்.
இங்கே குறிப்பிட்ட எல்லாக் காய்களும், சாஸ்த்ரப்படி விருத்தம் என்று சொல்ல முடியாது.
சௌ சௌ, தக்காளி என இவை இரண்டை மட்டும் பெரியோர்கள் ஏற்பதில்லை. அவ்விரண்டை ஏற்பதனால் பெரிய தோஷமில்லை, உசிதப்படி செய்யவும்.
சென்ற கேள்வியின் தொடர்ச்சியாக, புழுங்கல் அரிசியால் செய்த உணவைப் பெருமாளுக்கு அம்சை செய்ய முடியாது. ஆதலால், புழுங்கல் அரிசியால் செய்த உணவைத் தவிர்க்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இட்லி, போன்ற உணவில் புழுங்கலரிசி உபயோகிப்பது சரியா?
புழுங்கல் அரிசியை, சாஸ்த்ரப்படி தவிர்ப்பது நல்லது. ஆமாம், இட்லி, தோசை, செய்யும் பொழுது அதைச் சேர்க்க முடியாது.
குறிப்புகள்:
புழுங்கல் அரிசியை, அகத்திலேயே புழுக்கினால் ஏற்கலாம். வெளியில் புழுக்கி வருவதைத்தான் தவிர்க்க வேண்டும்.
நான் ஸ்மார்த்த குடும்பத்தில் வாக்கப்படும் படியாயிற்று. இருப்பினும், பெருமாளின் அனுக்ரஹத்தால் நானும், என் பெண்களும் ப்ரந்யாஸம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. அடியேன் ஶ்ராத்த சமயம் மற்றும் அமாவாஸை நேரம் எந்த சம்ப்ரதாயத்தை பின்பற்ற வேண்டும் (எவ்வழியின் ஸ்வரூபத்தில் இருக்க வேண்டும்? அதாவது மடிசார்கட்டு தொடங்கி மற்றவை). [குறிப்பு : இதே போல் முன்பும் கேள்வி வந்தது]
இது சற்று லௌகீகமான கேள்வியாக இருக்கிறது. இருப்பினும், பெருமாளிடம் பக்தி இருக்கின்றபடியாலும், இந்த ஸத்சம்ப்ரதாயத்தின் பெருமை தெரிந்தபடியாலும், இச்சம்ப்ரதாயத்தின் படி மடிசார் கட்டிக்கொள்வது நல்லது.
ஆனால், ஒருகால் அங்கு ஆத்தில் இருப்பவர்களுக்கு அதில் உடன்பாடில்லை என்றால், அவர்கள் சொல்படி நடப்பதால் ஒரு தோஷமும் ஏற்படாது.
ப்ராயச்சித்த ப்ரபத்தி பற்றி விளக்க ப்ரார்த்திக்கின்றேன். அதை அனுஷ்டிக்கும் முறைப்பற்றியும் சாதிக்க வேண்டும், அடியேன்.
ப்ரபத்தி செய்த பிறகு, புத்தி பூர்வகமாக அதாவது, நாம் தெரிந்தே செய்த பாபத்திற்காக பகவானிடத்தில் க்ஷமை (செய்த தவறுக்காக வருந்தி ப்ரார்த்திக்க வேண்டும்) கொள்ள வேண்டும்.
செய்த தவறுக்காக க்ஷமை கொள்ளுதலே ப்ராயச்சித்த ப்ரபத்தி.
குறிப்புகள்:
இவ்வாறாக தவறு செய்து விட்டேன் என ஆசார்யனிடத்தில் விக்ஞாபனம் செய்து ப்ரார்த்திக்க, அவர் ப்ராயச்சித்த ப்ரபத்தி செய்விப்பார்.
சாளக்கிராம ஆராதனைக்கு பால்,மற்றும் ஜலம் சேர்த்து ஆராதனை செய்யலாமா? அல்லது வெறும் சுத்த ஜலம் மட்டும் போதுமா? எது சரியான முறை என்று கூறவும். அடியேன்.
சாளக்கிராம மூர்த்திக்கு, சுத்தமான பசும்பாலில் திருமஞ்சனம் செய்து பின் சுத்தமான ஜலத்தில் திருமஞ்சனம் செய்யலாம்.
பெருமாளுக்கு (சாளக்கிராம) ஆராதனத்தின் போது அமுது செய்யும் சமயம், எல்லா தளிகைகளையும் பெருமாள் சன்னிதிக்கு கொண்டு வைத்து செய்யவேண்டுமா அல்லது தளிகை அறையில் பெருமாளை ஏளச்செய்து அமுது செய்யலாமா? (பெருமாள் சன்னிதியும் தளிகை அறையும் தனியாக உள்ளன). தன்யோஸ்மி
சௌகர்யமிருந்தால், பெருமாள் சன்னிதியில் தளிகைகளை ஏளப்பண்ணி அமுது செய்விப்பதுதான் சரியான முறை.
அங்கு இடம் சிறியதாக இருந்தால், தளிகை அறையில் பெருமாளை ஏளச்செய்து அமுது செய்விக்கலாம்.
அமாவாஸை தர்ப்பணத்தில் தாயார் ஜீவிதராக இருந்தால், மாத்ருவர்கம் பாட்டி கொள்ளுபாட்டி இருவருக்கும் தர்ப்பணம் செய்தால் போதும் என்கின்றனர் சிலர். இது சரியா? தயைகூர்ந்து விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
தாயார் ஜீவிதராக இருந்தால் பிது: மாத்ரு, பிதாமஹி, ப்ரமிதாமஹி: இவா மூன்று பேருக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும். தன் தாயாருக்குப் பண்ண முடியாது தகப்பனாருடைய தாயார், தொடங்கி மூன்று பேருக்கு பண்ண வேண்டும்.
குறிப்புகள்:
பித்ரு வர்கத்தில் இருக்கும் புருஷர்களுடன், இந்த ஸ்த்ரீகளுக்குப் பொருந்தி சேராது. ஆனால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
ஆத்துப்புருஷர்கள், பெருமாள் திருவாராதனை செய்ய ஈடுபாடில்லாத பக்ஷத்தில், ஸ்த்ரீகள் பெருமாள் படங்கள், விக்ரஹங்கள் , சாளக்கிராமத்திற்கு என்ன மாதிரியான பூஜைகள் செய்யலாம்? மேலும் ஸ்த்ரீகள் பெருமாளுக்கு அபிஷேகம், மங்களார்த்தி, அர்ச்சனை போன்றவை செய்யலாமா? ஸ்ரீவைஷ்ணவம் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இப்பொழுது தான் அடியேனுக்கு ஆவல் ஏற்பட்டிருக்கின்றது.
ஆத்துப்புருஷர்கள், பெருமாள் திருவாராதனை செய்ய ஈடுபாடில்லாத பக்ஷத்தில், ஸ்த்ரீகள் பெருமாள் படங்கள், விக்ரஹங்களுக்கெல்லாம் புஷ்பம் சாற்றி வழிபடலாம்.
சாளக்கிராம பெருமாள் இருந்தால், கூடாரவல்லி பாசுரத்தைச் சொல்லி மானசீகமாக அம்சை பண்ணலாம். அப்படி அம்சை பண்ணி, பெருமாளே! உனக்குத் திருவாராதனை நடக்கும்படியாக நீரே சங்கல்பித்துக்கொண்டு, ஆத்துப்புருஷர்கள் திருவாராதனை செய்யும்படி அனுக்ரஹிக்கணும் என்கின்ற ப்ரார்த்தனையுடன் தினமும் பெருமாளை ஶ்ரத்தையுடன் வழிபட, நல்லது நடக்கும்.
ஏகாதசி வ்ரதம் எப்படி இருக்க வேண்டும். மேலும், துவாதசி பாரணை எப்படி உட்கொள்ள வேண்டும் (துவாதசி அன்று ஏகாதசி வ்ரதத்தை எப்படிப் பூர்த்தி செய்வது) என்பதை தெளியப்படுத்த ப்ரார்த்திக்கின்றேன்.
ஏகாதசி வ்ரதம் நிர்ஜலமாக இருப்பது உத்தமகல்பம். அப்படியிருக்க முடியாதவர்கள் ஏதேனும் நீராகாரமோ அல்லது பழங்களோ சாப்பிடலாம். அதுவும் முடியாதவர்கள், ஏதாவது பலகாரம் பண்ணலாம். ஆனால் நிச்சயமாக முழு அரிசி சாதம் சாப்பிடக்கூடாது.
மறுநாள் துவாதசி பாரணை செய்து ஏகாதசி வ்ரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். எம்பெருமானுக்கு திருவாராதனை செய்து, ப்ரசாதங்கள் அம்சை செய்வித்து, பாதுகா ஆராதனம் செய்து விட்டு பெருமாள் தீர்த்தம், ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீகரித்து விட்டு, துவாதசி பாரணை காலத்தில் பாரணை பண்ண வேண்டும்.
பாரணை என்றால், பரிசேஷம் செய்த பிறகு வெறும் சாதத்தில் நெய்யில் வறுத்த உப்பு சேர்க்காத சுண்டைக்காய், நெல்லிக்காய், அகத்திக்கீரை இவற்றை கலந்து இலையில் சாதித்து அவற்றை முதலில் சாப்பிட்டு ஏகாதசி வ்ரதத்தைப் பூர்த்தி செய்வதே பாரணை என்பது.
இவை மூன்றும் பச்சையாக கிடைத்தால் உசிதம். இல்லை என்றால் இவற்றை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ளலாம். பச்சையாக கிடைக்காத பக்ஷத்தில், இந்த உலர்ந்த பதார்த்தங்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
துவாதசி நாழிகையைப் பார்த்து, அந்தக்காலத்திற்குள் பாரணை முடிப்பது அவசியம்.
ஏகாதசி வ்ரதத்திற்கான சங்கல்பம் முதலியவற்றை பெரியோர்களிடம் உபதேசமாக கேட்டு தெரிந்துக்கொள்ளவும்.
(இந்தக் கேள்வி பரக்கால மடத்தைச் சேர்ந்த என்னுடைய ஒரு உறவினர் கேட்டது.)
நம் அகங்களில் மாலையில் பெருமாள் விளக்கு ஏற்றும் பொழுது, கொல்லைப்புறக் கதவை மூடி, முன் வாசற்கதவைத் திறந்து வைக்கின்றோம். காலையில் எந்தக் கதவை முதலில் திறக்க வேண்டும்? திருவாராதனம் செய்யும் பொழுது முன்வாசல் கதவை திறந்து வைக்க வேண்டுமா?
ஸ்நானம் பண்ணாமல் ப்ராத: சந்தியாவந்தனம் பண்ணலாமா? இச்சந்தேகங்களை நிவ்ருத்திக்க பார்த்திக்கின்றேன்.
காலையில் முதலில் பின்புறக்கதவைத் திறந்துவிட்டு, பின்பு வாசற்கதவைத் திறக்க வேண்டும்.
ஸ்நானம் பண்ணாமல் ப்ராத: சந்தியாவந்தனம் என்பது அஸக்தமா இருப்பவர்கள் (அதாவது சக்தி இல்லாமல் இருப்பவர்கள்) பண்ணலாம். பொதுவாக பெரியவர்கள் அப்படிச் செய்வதில்லை.
உற்றார் உறவினர்களில் யாரேனும் பெரியோர்கள் பரமபதம் அடைந்துவிட்டால், அவர்களின் ஸ்தூல சரீரத்தைக் கடைசியாக தரிசிக்க நேரும் பொழுது அவர்களுடைய நற்கதிக்கு நாம் ஏதேனும் ப்ரபந்த பாசுரங்கள் அல்லது ராமநாம கீர்த்தனைகள் சேவிக்கலாமா ? எப்பொழுது எந்த நேரத்தில் சேவிக்க வேண்டும்? விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.
ஒருவர் படுத்தப்படுக்கையாக இருக்கும் பக்ஷத்தில், அவரின் கடைசி சமயம் தெரிந்தால் வேதபாராயணம், ஸஹஸ்ரநாமம், திவ்ய ப்ரபந்தம் என எல்லாம் சொல்லலாம்.
ஒருவர் பரமபதம் அடைந்த பிறகு, ஸ்ரீ சூர்ண பரிபாலனம் என்று ஒன்று நடக்கும் அந்தச்சமயத்தில் பாசுரங்கள் போன்றவை சேவிக்க வேண்டும்.
தினமும் மாலையில் வாசலில் விளக்குகேற்றி வைக்கலாமா அல்லது கார்த்திகை, மார்கழி போன்ற மாதங்களில் தான் ஏற்றி வைக்கவேண்டுமா?
தினமும் மாலையில், வாசலில் விளக்கேற்றி வைக்கலாம். ஏற்ற வேண்டும் என்பதே நம் சம்ப்ரதாயம்.
முன் காலத்தில் விளக்கு தான் ஏற்றி வைப்பார்கள், இக்காலத்தில் அதற்குப் பதிலாக மின்விளக்கு போடுகிறார்கள்.
அஸ்தமன சமயத்தில் வாசலில் விளக்கோ அல்லது மின் விளக்கோ ஏற்றி வைத்து வாசற்கதவைத் திறந்து வைக்க வேண்டும்.
ப்ரம்மமுகூர்த்ததில் பெருமாள் சன்னதி மற்றும் துளசிமாடம் இவ்விரண்டு இடத்திலும் விளக்கேற்றி வைக்கலாமா?
ப்ரம்மமுகூர்த்ததில் பல் தேய்த்து, விழுப்போடு இருந்தால் கூட, பெருமாள் சன்னதி முன், அதாவது சன்னதியின் வெளியில் விளக்கேற்றி வைக்கலாம் தவறில்லை.
அடியேன் ஆத்துக்காரர் மூன்று மாதம் முன்பு ஆசாரியன் திருவடி சேர்ந்தார். அடியேனின் புத்ரர்கள் அமாவாஸை தர்ப்பணம் இப்போதே செய்ய வேண்டுமா அல்லது ஆப்தீகம் முடிந்ததும் செய்யலாமா?. அடியேனுக்கு தேவரீர் மூலம் விளக்கம் வேண்டும். க்ஷமிக்கவும்.
அமாவாஸை தர்ப்பணம் சபிண்டிகரணத்திலிருந்து ஆரம்பித்துச் செய்ய வேண்டும். ஆப்தீகம் முடியும் வரை காக்கவேண்டிய அவசியமில்லை. இப்போதிலிருந்தே செய்யலாம்.
சபிண்டிகரணம் முடிந்த பிறகு, தர்ப்பணம் செய்யும் நாள் எது முதலில் வருகிறதோ அதாவது, அமாவாஸையோ இல்லை மாசப்பிறப்போ எது வருகிறதோ அதில் ஆரம்பித்து, எல்லா தர்ப்பணங்களையும் கட்டாயம் செய்ய வேண்டும். மாசப்பிறப்பு தர்ப்பணம், சிலர் 4 மாதம் செய்வார்கள், சிலர் 12 மாதமும் தர்ப்பணங்கள் செய்வார்கள்.
ப்ரபத்தி செய்துகொண்டால், பரமபதம் அடைந்த பின் மோக்ஷம் உறுதி என்று நம் பெரியோர்கள் கூறுகிறார்கள். மேலும் அவர்கள் குழந்தைகளும் பாகவதாக்களே என்றும் அவர்களை காயப்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் ப்ரபத்திக்குப் பின்பு சிலர் நாம் மோக்ஷம் கண்டிப்பாக பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் நமது சாஸ்திரத்தை முழுவதுமாக அறிந்தும், கவனக்குறைவாகவோ அல்லது வேண்டுமென்றோ இளைய தலைமுறையினரையோ , மற்றவர்களையோ , நாட்டுப்பெண்களையோ காயப்படுத்துகிறார்கள் , அவமதிக்கிறார்கள். மேற்கண்ட செயல்களுக்கு ஒருவருக்கு மோக்ஷம் கிடைக்குமா? ப்ரபத்தி செய்து கொண்டபின் ஆசாரியனின் உபதேசத்தைப் பின்பற்றி ஒரு முன்மாதிரியாக இல்லாமல் , இம்மாதிரியான தவறான அணுகுமுறை காரணமாக ப்ரபத்தி மீது பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. தயவுசெய்து வழிகாட்டவும்.
ப்ரபத்திக்குப்பின் மோக்ஷம் உறுதி அதில் எந்த ஐயமும் வேண்டாம்.
சரணாகதி செய்துக்கொண்ட பின், பாகவதர்கள் ஒருவருக்கொருவர் அபச்சாரப்படாமல் நடந்துக்கொள்வது முக்கியம் என்று சாஸ்த்ரம் சொல்கிறது.
அதை மீறி அபச்சாரப்பட்டால் பகவான் சிறு தண்டனையையும் கொடுப்பார். அதிலும் எந்த ஐயமும் வேண்டாம்.
அதே சமயம் பெரியவர்கள் சிறியவர்களை, நல்வழிப்படுத்துவதற்காக சில வார்த்தைகள் சொன்னால் அதை ஏற்றுக்கொள்வது உசிதம்.
திருவாய்மொழி சந்தை கற்றுக்கொள்ள , ஸமாஶ்ரயணம் , பரந்யாஸம் அவசியம் என்று ஏதேனும் விதிமுறை உள்ளதா? குழந்தைகளுக்குச் சொல்லித்தரலாமா?” அடியேன்.
ஸமாஶ்ரயணம் , பரந்யாஸம் போன்றவைகள் ஆகாமலே, சிறுவர்களுக்கும் கூட திருவாய்மொழி சந்தை பெரியவர்களால் சொல்லிக்கொடுக்கப் பட்டிருப்பதாய் தெரிகிறது.பெரியவர்கள் வழியே நம் வழி.
குறிப்புகள்:
ஆனால், அதன் அர்த்தம் கற்க, ஸமாஶ்ரயணம் முதலியவை ஆகியிருக்க வேண்டும்.
“அடியேன். ஸ்வாமி நமஸ்காரங்கள். வ்ரத நாட்கள், பித்ரு கார்ய நாட்கள், அமாவாஸை, மாசப்பிறப்பு போன்ற நாட்களில் , புது வஸ்த்ரம் அணிந்து கொள்ளலாமா?
வ்ரத நாட்கள், பித்ருகார்ய நாட்கள், அமாவாஸை , மாசப்பிறப்பு போன்ற நாட்களில், புது வஸ்திரம் சாதாரணமாக தரித்துக்கொள்வதில்லை.
தீபாவளி, பொங்கல் அன்று மட்டும் விதிவிலக்கு. அந்த நாட்களில் அமாவாஸை, மாசப்பிறப்பு வந்தாலும், குறிப்பாக தீபாவளி அன்று கண்டிப்பாக புது வஸ்திரம் தரித்துக்கொள்ளவேண்டும். பொங்கல் அன்றும் புது வஸ்திரம் உடுத்திக்கொள்ளும் பழக்கம் சில க்ரஹங்களில் உண்டு.
பிரம்மசாரிகளுக்குத் தீட்டு கிடையாது என்றால், அவர்கள் பெருமாள் ஆராதனம் செய்யலாமா? அடியேன்.
ப்ரம்மச்சாரிகளுக்குத் தீட்டு கிடையாது. ஆகையால், அவர்கள் தாமே பெருமாளுக்கு ப்ரசாதம் செய்து நிவேதனம் செய்வதாக இருந்தால், திருவாராதனம் செய்யலாம்.
குறிப்புகள்:
ஆனால், தீட்டு உள்ளவர்கள் செய்யும் தளிகையை அவர்கள் சாப்பிடுவதாக இருந்தால், அவர்களுக்கும் அசுத்தி ஏற்படும்.
போதாயன அமாவாஸைக்கும், அமாவாஸைக்கும் வித்யாசம் என்ன? அமாவாஸை தர்பணத்தை ,போதாயன அமாவாஸை அன்று ஏன் செய்வதில்லை? மேலும், சில மாதங்களில் மட்டும் மாறி வருவதன் தாத்பர்யம் என்ன என்பதை தெளியப்படுத்த ப்ரார்த்திக்கின்றேன்.
யஜுர் வேதத்தில் போதாயன சூத்திரம், ஆபஸ்தம்ப சூத்திரம் என இரண்டு இருக்கின்றது, அவ்விரண்டையும் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள்.
அந்தந்த சூத்திரத்தைப் பின்பற்றுபவர்கள் அந்தந்த சூத்திரத்தில் சொன்னபடி அமாவாஸை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஒருவர் எந்தச் சூத்திரத்தைச் சேர்ந்தவர் என்பது, அவரின் பரம்பரையிலே வந்திருக்கும், கோத்திரம் போலே அபிவாத்யையில் இதையும் அதாவது “ஆபஸ்தம்ப சூத்ர:” “போதாயன சூத்ர”: என்று சொல்லுவார்கள்.
போதாயனர் சொன்ன அமாவாஸை சிறிது வித்தியாசமானது. சாயந்நத்தில் அமாவாஸை இருந்தால் கூட, அன்று அமாவாஸை என அதில் வரும். அதற்குப் பல கணக்களுண்டு பின் நாளில் விஸ்தாரமாக பார்க்கலாம்.
அக்கணக்கின் படி போதாயன சூத்திரத்தைப் பின்பற்றுபவர்கள், அவர்கள் சம்ப்ரதாயத்தின் படி போதாயன அமாவாஸை அன்று அமாவாஸை தர்ப்பணம் செய்ய வேண்டும். அதே போல், ஆபஸ்தம்ப சூத்திரத்தைப் பின்பற்றுபவர்கள், அவர்கள் கணக்கின்படி அமாவாஸை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
குறிப்புகள்:
அமாவாஸை தர்ப்பணமும் ஶ்ராத்தமே. அபராஹ்ன காலத்தில், என்று அமாவாஸை அதிகமாக இருக்கின்றதோ அன்று ஆபஸ்தம்பர்கள் அபராஹ்னத்தில் அமாவாஸை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
சந்திர தரிசனத்திற்கு முதல் நாளைக்கு முதல் நாள், போதாயன அமாவாஸை ஆகும்.
ஏன் ஸ்ரீ வைஷ்ணவத்தில் வடகலை, தென்கலை என ஸம்ப்ரதாய பேதம்? ஜகதாசாரியரான ஸ்ரீ இராமானுஜர் காலம் தொட்டே இந்த பேதம் இருந்ததா?
இந்த பேதம் ஸ்ரீ பாஷ்யகாரர் காலத்தில் இருந்ததில்லை.
குறிப்புகள்
முதல் விஷயம், சித்தாந்தத்தில் பேதம். ஆசார்யன் சொல்லும் அர்த்தங்களை ஒவ்வொருவரும் வேவ்வேறு விதத்தில் புரிந்து கொள்கிறார்கள். சித்தாந்த பேதம், காலக்ரமத்தில் அனுஷ்டான பேதம் வரை வந்துவிட்டது.
ஹிரண்ய ஶ்ராத்தம் என்பதில் ஹிரண்யம் என்பதின் அர்த்தம் என்ன?
ஹிரண்யம் என்றால் - வெள்ளி, தங்கம், அர்த்தம், பொருள், நாணயம் என்ற பொருள்.
குறிப்புகள்
அக்காலத்தில் ,கொடுக்கல் வாங்கல்களுக்கு நோட்டு (பைசா) கிடையாது, எல்லாம் நாணயமாக தான் இருந்திருக்கும்.
அந்த வெள்ளி/தங்க நாணயம் கொடுத்து ஶ்ராத்தம் செய்வதை ஹிரண்ய ஶ்ராத்தம் என்பர்.
எப்படியானால் ஶ்ராத்ததின் சமயம் அன்ன ஆஹாரம் தராமல், வெறும் ஹிரண்யம் மட்டும் (பைசா/தக்ஷிணை மாத்ரம்) தந்து ஶ்ராத்தம் பண்ணுவது என்பதைத்தான் ஹிரண்ய ஶ்ராத்தம் என்பர்.
பித்ரு காரியம் செய்யும் போது கொடுக்கும் தானத்தின் உயர்வு என்ன? பொதுவாக தானம் செய்வதற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதைச் சாதித்தருள வேண்டும்.
பித்ரு கைங்கர்யம் செய்யும் காலமே புண்யகாலம் தான். அதனால் அந்தக் காலத்தில் செய்யும் தானத்திற்கு விசேஷம் உண்டு.
குறிப்புகள்:
புண்யகாலத்தில் செய்யும் தானங்கள் எல்லாவற்றிற்கும் விசேஷம் உண்டு. கர்மப்படி நாம் அந்தக் காலத்தில் பித்ருகளுடன் சேர்த்து வைக்கிறோம், அவர்களுக்கு ஸத்கதி கிடைத்திருக்கிறது, அந்தப் புண்யகாலத்தில் செய்வதால் அந்தத் தானம் விசேஷம்.
க்ரஹண காலத்தில் செய்ய வேண்டியவை யாவை?
க்ரஹண காலத்தில் ஆறு காரியங்கள் செய்ய வேண்டும். இதில்,
உபவாஸம்
ஸ்நானம்
புண்ய கர்மம்
என்ற மேல் கூறிய மூன்றும் ஸ்த்ரீகள், பாலகர்களுட்பட எல்லாருக்குமானவை.
தர்ப்பணம் (ஆஶௌசம் வந்திருந்தால் கூட இந்த தர்ப்பணம் செய்தே ஆக வேண்டும்)
தானம்
ஆராதனம்
ஆகிய மூன்றும் யாருக்கெல்லாம் ப்ராப்தம் உண்டோ அவர்களுக்கானவை.
குறிப்புகள்:
சூர்ய/சந்திர என இரு க்ரஹணங்களுமே நமக்கு கிடைக்கும் அரிய புண்ணிய காலம். இதை நழுவ விடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
உபவாஸம்
சூர்ய க்ரஹணமென்றால், க்ரஹண காலம் ஆரம்பிக்கும் 12 மணி நேரம் முன்பும், சந்திர க்ரஹணமென்றால், க்ரஹண காலம் ஆரம்பிக்கும் 9 மணி நேரம் முன்பு பட்டினி இருக்க வேண்டும். க்ரஹண காலத்திற்கு முன் பண்ணிய அன்னம் முதலியவற்றை க்ரஹண காலம் பின்பு சாப்பிடக்கூடாது, ஊறுகாய், அப்பளம் போன்ற ஸ்திரகாலஸ்தாயியான வஸ்துக்கள் க்ரஹண காலத்திற்கு முன் தர்ப்பையிட்டால் அன்றி ஏற்க உகந்தவை அல்ல.
ஸ்நானம்
க்ரஹண புண்யகால ஸ்நானம் க்ரஹணம் ஆரம்பித்தவுடன் செய்யும் ஸ்னானம், இந்த ஸ்நானதிற்கு புண்ணியமதிகம், கங்கா ஸ்நான பலன் கிட்டும்.
க்ரஹணம் பின்பு பீடா நிவ்ருத்திக்காக இந்த ஸ்நானம் செய்ய வேண்டும்.
புண்ய கர்மம்
சாஸ்த்ரம் கூறுகிறது, இக்காலத்தில் செய்யும் ஜபங்களுக்குப் புண்ணியமதிகம், மந்திரோபதேசம் பெற்ற மந்திரங்களை ஜபித்து, சிறார்கள் ஸ்தோத்ர பாடம் முதலியவற்றை அனுஸந்தித்து அதிக பலன் பெறலாம்.
இப்படியாக என்னவெல்லாம் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதை முழுமையாக அறியவும், சாஸ்த்ரம் கூறும் எண்ணற்ற க்ரஹணகால பலன்களை மேலும் தெரிந்துக்கொள்ளவும் கீழே உள்ள காணொளியைப் பார்க்கவும்.
https://youtu.be/YMnUTXaQo34
சூர்யோதயம் ஆகும் சமயம்தான் எண்ணெய்க்குளியல் செய்ய வேண்டும் என்கிறார்கள், ஸ்தீரிகளுக்கும் இது பொருந்துமா?
சூர்யோதயம் ஆன பின்புதான், எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும் என்பது ஸ்தீரிகளுக்கும் பொருந்தும்.
அடியேன், அஹோபில மடம் வெளியிட்ட திருவாராதனம் சம்பந்தமான புத்தகத்தில், சந்தியாவந்தனாதிகள் முடித்த பின் தான் திருவாராதனம் செய்ய வேண்டும் என்ற குறிப்பு உள்ளது. இது ப்ராதஸ் மற்றும் மாத்யாநிகமும் சேர்த்தா? இல்லை ப்ராதஸ் சந்தியாவந்தனம் மட்டுமா என்பதை தெளியப்படுத்த ப்ரார்திக்கிறேன்.
சந்தியாவந்தனாதிகள் மாத்யானம் வரை முடித்துக்கொண்டு இஜ்யாராதனம் செய்ய வேண்டும் என்று அர்த்தம்.
குறைந்தபக்ஷம் திருவாராதனம் மற்றும் காலக்ஷேப சமயங்களிலாவது கட்டாயம் ஸ்வரூபத்தில் இருக்க வேண்டும் என்பதின் பொருள் என்ன? அதன் முக்கியத்துவத்தைத் தெரியப்படுத்த ப்ரார்திக்கிறேன். அடியேன்.
பகவானுக்கு தாஸன் என்பது நமது ஸ்வரூபம். அதற்கேற்றால் போல் சாஸ்த்ரம் சொன்ன ரீதியில் 12 திருமண் இட்டுக்கொள்ளுதல், வஸ்த்ரம் உடுத்திக் கொள்ளுதல், முதலியவை தேவை.
இவைதான் ஸ்வரூபத்துடன் இருத்தல் என்று சொல்கிறார்கள்.
பகவானுக்கு தாஸன் என்கிற நம் ஸ்வரூபத்திற்கேற்ற வேஷம் தரிக்க வேண்டும் அது இல்லாவிட்டால் நாம், நம் ஸ்வரூபத்தை உணரவில்லை என்று அர்த்தமாகிவிடும்.
குறிப்புகள்:
ஒருகாலத்தில் அனைவருமே சிகையுடன் இருந்தார்கள் இன்று காலதேச அர்த்தபாரங்களை அனுசரித்து பலபேர் அதை வைத்துக்கொள்வது இல்லை.
குறைந்தபக்ஷம் கச்சம் உடுத்திக்கொண்டு 12 திருமண் இட்டு கொண்டு ஸ்வரூபத்துடன் தான் திருவாராதனம், பித்ரு கர்மாக்கள், காலக்ஷேபம்கேட்பது போன்றவற்றைச் செய்ய வேண்டும்.
திருவாராதனத்தில், சாளக்கிராம பெருமாளுடன் வெள்ளிச் சடாரிக்கும் சேர்த்து திருமஞ்சனம் செய்யலாமா?
வெள்ளிச் சடாரி என்பவருக்கு ப்ரதிஷ்டை செய்திருந்தால் சாளக்கிராமத்துடன் சேர்த்து வைத்து திருமஞ்சனம் செய்யலாம்.
குறிப்புகள்
நாமே ஏளப்பண்ணியிருந்த சடாரியாக இருந்தால், தனியாகத் திருமஞ்சனம் செய்ய வேண்டும்.
பொதுவாக தர்ப்பணம் செய்யும் போது இரண்டு வர்கங்களுக்கும் தர்ப்பணம் செய்கிறோம். சந்தேகம் என்னவென்றால், சுமங்கலியாக பரமபதித்த பார்யாளுக்கு மகன் ப்ரத்யாப்திக ஶ்ராத்தம் மட்டும் செய்கிறான். மற்ற தர்ப்பணாதிகள் செய்வதில்லை. பரமபதித்த மனைவியாகிற அந்த ஜீவனுக்குப் பிதா இருக்கும்போது அமாவாஸை தர்ப்பணாதிகள் அந்த ஜீவனுக்குச் செய்வதில்லை. பிதா தன்னுடைய பித்ரு மற்றும் மாத்ரு வர்கத்தக்கு மட்டும் தர்ப்பணம் செய்கிறான். சுமங்கலியாகப் பரமபதித்த அந்த ஜீவன் தன்னுடைய வர்கத்துடன் சபிண்டிகரணத்தில் சேர்ந்தாலும் அந்த ஜீவன் தர்ப்பணாதிகள் செய்யும்போது தனித்து விடப்படுகிறதா தன்னுடைய கணவன் பரமபதம் அடையும் வரை அதன் நிலை என்ன? பெரியோர்கள் விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.
தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் எந்தெந்த சமயத்தில் எந்தெந்த ஆகாரம் என்று சாஸ்த்ரம் வகுத்துக்கொடுத்திருக்கிறது. அதில் அவர்களுக்கு எந்த குறைவும் வராது நாம் சாஸ்த்ரத்தில் கூறியிருப்பதைச் செய்தால் போதும்.
குறிப்புகள்:
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ப்ரபத்தி ஆகி சுமங்கலியாகப் போயிருந்தால் சாக்ஷாத் மோக்ஷத்திற்குப் போய் விடுவாள். அதன் பின் அவளுக்குப் பசி தாகம் எதுவும் கிடையாது. நாம் செய்யும் தர்ப்பணத்தை எதிர்பார்த்து அந்த ஜீவன் இல்லை. நாம் தர்ப்பணம் பண்ணுவது அந்த ஜீவனுக்குள் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மாவைக் குறித்து.
நாம் செய்யும் தர்ப்பணாதிகளில் நம் தகப்பனாரையோ பாட்டனாரையோ உத்தேசித்துச் செய்கிறோம். ஆனால் அது அவர்களுக்குச் செய்வது இல்லை அவர்களுக்குள் அந்தர்யாமியாகிய இருக்கும் பரமாத்மாவிற்குச் செய்கிறோம்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் குறிப்பாக, கடைபிடிக்க வேண்டிய ஆசார அனுஷ்டானங்கள் யாவை?
ஸ்ரீவைஷ்ணவர்கள் குறிப்பாக, திருமண் இட்டுக்கொள்ள வேண்டும் என்பதும், பெருமாள் திருவாராதனம் செய்ய வேண்டும் என்பதும் முக்கியம்.
பெருமாளைத் தவிர மற்ற தேவதாந்தரங்களைச் ஸேவிக்க கூடாது என்று ஸ்ரீவைஷ்ணவ சாஸ்த்ரங்கள் மற்றும் மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
குறிப்புகள்
பொதுவாக ஆசார அனுஷ்டானம் என்பது ஸ்நானம் முதலான ஆசாரங்களும் சந்தியாவந்தனம் முதலான அனுஷ்டானங்களுமாகும். அவற்றை ஸ்ரீவைஷ்ணவர்களும் செய்கிறார்கள்.
பரேஹனி தர்ப்பணம் அடுத்த நாள் தான் செய்ய வேண்டுமா? அப்படியென்றால் ஸ்நானம் செய்த பின்னா? அல்லது செய்யும் முன்பா? தர்ப்பணம் செய்யும் அந்த நாள் இரவு சாதம் தவிர்க்கப்பட வேண்டுமா?வேறு கடைபிடிக்க வேண்டிய நியமனங்கள் யாது? தெளியப் படுத்த ப்ரார்திக்கிறேன்.
ஶ்ராத்தத்திற்கு மறுநாள், அதற்கு அங்கமாக ஒரு தர்ப்பணம் செய்ய வேண்டும், அதற்குப் பெயர் பரேஹனி தர்ப்பணம்.
பரே அஹனி என்றால் அடுத்த நாளில் என்று அர்த்தம். அமாவாஸையாதிகள் தர்ப்பணத்திற்குச் செய்யும் அதே சுத்தியுடன் செய்ய வேண்டும்.
குறிப்புகள்
மறுநாள் சூர்யோதயம் முன் செய்யக்கூடாது. ஸ்நானம் செய்து திருமண் இட்டுக்கொண்டு சூர்யோதயம் சமயம் சந்தியாவந்தனம் செய்த பின்புதான் பரேஹனி தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அன்று இரவு வ்ரதம் இருக்க வேண்டும் சாதம் சாப்பிடக்கூடாது, இயலாதவர்கள் பலகாரம் செய்யலாம். பரேஹனி தர்ப்பணத்திற்கு வேறு தனிப்பட்ட நியமம் எதுவுமில்லை.
நாம் செய்யும் எந்த கைங்கர்யமெல்லாம் எம்பெருமானுக்கு ப்ரீதியை உண்டாக்கும்?
எந்த கைங்கர்யமானாலும், அதைக் கைங்கர்யமாக பண்ணோமேயானால் பெருமாளுக்குக் கட்டாயம் அது ப்ரீதியைக் கொடுக்கும்.
குறிப்புகள்
நித்ய கர்மானுஷ்டானத்திலிருந்து ஆரம்பித்து, தானமோ, தர்ம கார்யமோ என அனைத்து காரியங்களையுமே, ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் என்று சொல்லிச் செய்தோமேயானால் கட்டாயமாக எம்பெருமானுக்கு ப்ரீதியைக் கொடுக்கும்.
தர்மகார்யம் என்றாலே எம்பெருமானுக்கு ப்ரீதியைக் கொடுக்கும், அதுவும் அந்த எண்ணத்தில் செய்ய மேலும் மேலும் அவனுக்கு ப்ரீதி அதிகமாகும்.
நம் பூர்வாசார்யர்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்கும்படி காட்டிய அனுஷ்டானம் என்னென்ன?
நித்யகர்மானுஷ்டானங்கள் (சந்தியாவந்தனங்கள் பெருமாள் திருவாராதனம்) எல்லாவற்றையுமே கடைபிடிக்க வேண்டும் என பூர்வாசார்யர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
குறிப்புகள்
பெருமாள் திருவாராதனம் பொதுவாக யாராவது ஒருவர் செய்வார்கள், மற்றவர்கள் ஸேவிப்பார்கள். சந்தியாவந்தனம் கண்டிப்பாக எல்லாரும் பண்ண வேண்டும். அது மட்டுமல்லாமல் முடிந்தவரை கோயில் கைங்கர்யத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
பயத்தைப் போக்கவும், உணர்ச்சி வசப்படுதலைக் கட்டுப்படுத்தவும் ஏதேனும் ஶ்லோகம் உண்டா?
அபீதிஸ்தவம் பயத்தைப் போக்கடிக்கவே சொல்லப்பட்ட ஸ்தோத்ரம், அது போல் ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம் மற்றும் பல உள்ளன.
குறிப்புகள்
பயத்தைப் போக்க நிறைய ஶ்லோகங்கள் உள்ளன. ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் கட்டாயம் பயத்தைப் போக்கும் என்று பலனில் சொல்லப்பட்டிருக்கிறது. நமது கோபம், உணர்ச்சிக்கு அது ஒரு பரிஹாரமாய் இருக்கும்.
ஏதாவது ஒரு ஶ்லோகம் சொல்ல வேண்டுமென்றால்,
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
आपदामपहर्तारं दातारां सर्वसम्पदाम्।
लोकाभिरामं श्रीरामं भूयो-भूयो नामाम्यहम्॥
என்று சொல்லலாம்.
ஶ்ரவண விரதத்தின் மகிமை என்ன? எப்படிக் கடைபிடிக்க வேண்டும் (வ்ரத அனுஷ்டானம் யாது)?
திருவோணம் என்பது எம்பெருமானுடைய திருநக்ஷத்ரம். அவருக்கான வ்ரதம் என்று புராணங்களிலே சொல்லப்பட்டிருக்கிறது.
எம்பெருமானுக்காக இருக்கக்கூடிய வ்ரதமாகியபடியாலும், எம்பெருமானுடைய அனுக்ரஹத்தினால் சகல காரியங்களையும் சாதித்துக்கொடுக்க கூடியதனாலும், விசேஷமாக கருதப்படுகிறது.
எப்படி அனுஷ்டிப்பது:
அந்தத் தினத்தில், சுத்தியாக இருந்து எம்பெருமானுடைய ஸ்தோத்ரங்கள் தயா ஶதகம் பாராயணம், நாம கீர்த்தனைகள் பண்ண வேண்டும்.
வ்ரத தினத்தில் கேளிக்கைகள் மற்றும் போக்ய விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.
திருவேங்கடமுடையான் ஒப்பிலியப்பனுகாக இருப்பார்கள். ஒப்பிலியப்பனுக்காக அனுஷ்டிக்கும்போது ஆகாரத்தில் உப்பு சேர்க்கக்கூடாது.
வ்ரத தினத்தன்று ஒரு வேளை மட்டுமே ஆகாரம் உண்ண வேண்டும். சாயங்கால வேளையில் வேண்டுமென்றால் பலகாரம் செய்யலாம்.
ஏகாதசி வ்ரதம் போல் நிர்பந்தமாக கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை.
வெள்ளிக்கிழமை நாளில் த்வாதசி வந்தால் நெல்லிக்காய் உட்கொள்ளலாமா? நெல்லிக்காய் என்றெல்லாம் உட்கொள்ளக்கூடாது என்ற நியமம் இருக்கின்றதா?
வெள்ளிக்கிழமை நாளில் த்வாதசி வந்தால் நெல்லிக்காய் உட்கொள்ளலாம்.
குறிப்புகள்
பொதுவாக நெல்லிக்காயை இரவு வேளையில் சாப்பிடுவதில்லை, அதே போல் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லிக்காய் சாப்பிடுவதில்லை.
மேல் கூறிய நாட்களில் த்வாதசி வந்துவிட்டால் அவசியம் நெல்லிக்காய் உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் த்வாதசி என்பது இந்தக் கிழமைகளைவிட பலியஸானது (அதிகம் மகிமைவுடையது), மேலும் அன்று நெல்லிக்காய் விசேஷம் என்பதால் அவசியம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
ஒரு உபன்யாஸத்தில் சீதை சந்தியாவந்தனம் செய்ததாகவும் வேதம் கற்றதாகவும் கேட்டேன். மற்ற யுகங்களில் பெண்கள் இவ்வாறு செய்தார்கள் என்றால், ஏன் கலியுகத்தில் அது தொடராது மாறுபட்டுள்ளது? எதனால் இந்த தடை வந்தது? தெளியப்படுத்த ப்ரார்திக்கிறேன்
பிற யுகங்களை விட, பொதுவாக கலியுகத்தில் ஞானமும் சக்தியும் ஆசாரமும் ஶ்ரத்தையும் குறைவுபடும் என்பதால் சிலவற்றைக் குறைத்து சாஸ்த்ரம் சொல்லியிருக்கிறது.
உதாஹரணமாக தபஸ், யாகம் முதலியவை, கலியுகத்தில் குறையலாம். அதே போல், ஸ்த்ரீகளும் சந்தியாவந்தனம் முதலியவற்றைக் குறைத்து, ஜபம், ஸ்தோத்ரம் முதலியவற்றைச் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறது.
கோவில் திருவாராதனம் என்றால் என்ன என்பதை விளக்க ப்ரார்த்திக்கிறேன்
கோவில் திருவாராதனம் ஆகம சாஸ்த்ரங்களுக்கு உட்பட்டவை. வைகானஸ, பாஞ்சராத்ர என்று இரு ஆகமங்களைக் கொண்டது கோவில் திருவாராதனம்.
பகவத் அனுக்ரகத்தினால் மட்டுமே எக்காரியமும் செய்ய இயலும். அப்படியென்றால் நாம் செய்யும் தர்ம அதர்மாதிச் செயல்களுக்கு, பகவான் மறைமுகக் காரணமாக இருக்கின்றாரா? தெளியப்படுத்தவும் அடியேன்.
ஆமாம். கட்டாயம் பெருமாள்தான் காரணமாக இருக்கின்றார். பகவான் காரணமாக இல்லையென்றால் நம்மால் எந்த காரியமும் செய்ய முடியாது. பகவத் அனுக்ரஹத்தால் மட்டுமே எல்லாக் காரியங்களும் நடைபெறுகின்றன.
அவர் மறைமுகமான காரணமாக இருக்கிறார் என்பதுதான் சரி. ஏனென்றால் நேரடியாக நாம்தான் காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கிறோம். ஆனால் பகவான் இல்லையென்றால் நம்மால் அந்தக் காரியத்தைச் செய்ய முடியாது.
குறிப்புகள்:
உதாஹரணத்திற்கு, நமக்கு முன் ஒரு பெரிய பாறாங்கல் இருக்கின்றது. அதை நம்மால் தனியாக நகர்த்த முடியாது. மற்றொருவர் சகாயம் செய்தால்தான் அந்தக் கல்லை நகர்த்த முடியும். அதேபோல் பெருமாள் மறைமுகக் காரணமாக இருக்கின்றார்.
நாம் செய்யும் காரியங்களுக்கு அனுமந்தாவாக அதாவது அக்காரியங்களை அனுமதிப்பவனாகவும் மேன்மேலும் தொடரவும் பகவான் இருக்கிறார்.
ப்ரபந்நனின் மீதமுள்ள புண்ணிய பாபத்தினை, விரஜை கடக்கும் முன் பெருமாள் வேறு சிலருக்குப் பிரித்துக் கொடுக்கிறார் என்கிறார்கள். அப்படியிருக்க அவரை அறியாமல் சேர்கின்ற அந்த பாபத்தினை எப்படிக் கழிப்பார்? அதே போல் நம் புண்ணியம், வேறு ஒரு சேதனனுக்குச் சேர்கிறது என்றால், அது அவர் பெருமாளிடம் சேரும் நாளைத் தாமதிக்குமா?
புண்ணியமோ பாபமோ யாரிடம் சேர்கிறதோ இரண்டையுமே அவரவர் அனுபவித்துதான் கழிக்க வேண்டும்.
குறிப்புகள்:
ஒரு ப்ரபந்நன் செய்த புண்ணிய பாப காரியங்கள் பின்னால் வேறு ஒருவருக்கு போய்ச் சேரும், அவரிடம் அபசாரப்பட்டவரிடம் அந்தப் பாபங்கள் போய்ச் சேரும், அவரிடம் அனுகூலமானவரிடம் அந்தப் புண்ணியங்கள் வந்து சேரும்.
இவை இரண்டையுமே அவரவர் அனுபவித்துதான் கழிக்க வேண்டும். ஒருகால் யாருக்குச் சேர்கிறதோ அவரும் ப்ரபந்நராக இருந்தால் நிர்திஷ்டமான காலம் அதாவது “एतत् देहावसाने” காலத்திற்குள்ளேயே அந்தப் பலனை அனுபவித்து விடுவார் இதனால் மோக்ஷத்திற்கு விளம்பம் வராது.
எல்லாம் விதி/கர்மாவின் படி நடக்கிறது என்றால் புத்திசாலித்தனம் தேவையா?
புத்திசாலித்தனம் கண்டிப்பாகத் தேவை.
குறிப்புகள்:
விதியை மதியால் வெல்லலாம் என்று ஒரு சொற்றொடர். விதியை வெல்வதற்கு மதி தேவைதான். அந்தவகையில் தனக்கு ப்ரதிகூலமான விஷயங்களையும், பகவானுடைய அனுக்ரஹத்தினால், பிரார்த்தனையின் மூலம் நமக்கு அனுகூலமாக மாற்றிக் கொள்ள முடியும்.
நான் என்னும் அகங்காரத்திற்கும் சுயமரியாதைக்கும் இடையிலுள்ள வேறுபாடு காண்பது எப்படி?
மரியாதையை உடையவர், தான் செய்த தவற்றைப் பிறர் எடுத்துக் காட்டும் போது, தன் தவற்றை உணர்ந்து திருத்திக் கொள்ள முயல்வர்.
நான் என்ற அகங்காரம் உடையவர் தான் செய்த தவற்றைப் பிறர் எடுத்துக் காட்டும்போது தன் தவற்றைச் சமர்த்திக்க முயல்வர். இதனால் வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளலாம்.
அடியேன் ஸ்ரீமந் நாராயணா! நம் ஸம்ப்ரதாயத்தில் இதர தேவதாந்தரங்கள் குலதெய்வம் ஆகுமா? க்ரஹத்து குலதெய்வம் துக்கச்சி, ஐயப்பன் அப்படி சொல்றா. தயவுசெய்து சந்தேகத்தைத் தீர்த்து வைக்கவும். ஸ்ரீமந் நாராயணா.
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு குலதெய்வம் ஸ்ரீமந்நாராயணனே. ஆகையால் அவரையே கொண்டாட வேண்டும் . இதர தேவதாந்தரங்களைக் கொண்டாடுவது கூடாது.
ஸ்ரீவைகுண்டத்திற்கும் கோலோகத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? அடியேன்
ஸ்ரீவைகுண்டம் என்பது வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற ஒரு அப்ராக்ருதமான லோகம். அதுவே ஸாக்ஷாத் ஸம்ஸார மோக்ஷ ஸ்தானமாக இருக்கின்றது.
கோலோகத்தைப் பற்றி புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நம் ஸம்ஸார மண்டலத்தினுள் இருக்கக்கூடிய ஒரு உத்தமமான லோகம். நம் ஸம்ஸார மண்டலத்தினுள் விஷ்ணுலோகம் கூட உண்டு.
சங்க்ரமணம்(சித்திரை விஷு போன்றவை) மற்றும் அமாவாஸை நாட்களில் பண்டிகையும் வரும்போது (தீபாவளி போன்றவை) நாம் பண்டிகை கொண்டாடலாமா? பண்டிகை உணவு தயாரிக்கலாமா? இந்தக் கேள்விக்கு, தர்ப்பணம் பண்ணுபவர் பார்வையிலிருந்தும் மற்றும் மீதமுள்ள குடும்ப உறுப்பினர்கள் பார்வையிலிருந்தும் பதில் அளிக்கப் பிரார்த்திக்கிறேன்?
தர்ப்பண நாட்களில் பண்டிகை கலந்து வந்தால், பண்டிகை தளிகை செய்து எம்பெருமானுக்குச் சமர்பிக்க வேண்டும்.
குறிப்புகள்:
சங்க்ரமணத்தைப் பற்றி கூறும்போது சாதாரண சங்க்ரமணத்தைக் கூட ஒரு பண்டிகை போல் ப்ரதானமாக கொண்டாடுவது வழக்கம். தர்ப்பணம் செய்து மாதப்பிறப்பு நாட்களில் சாதாரணமாகப் பண்ணுவதே வழக்கம். அதனால் சங்க்ரமணத்துக்கு இந்தக் கேள்வி அவசியமில்லை.
பண்டிகை நாட்களும் அமாவாஸையும் சேர்ந்து வருகின்றபோது, பண்டிகை கொண்டாட வேண்டும். குறிப்பாக அமாவாஸை மற்றும் தீபாவளி சேர்ந்து வரும்போது இக்கேள்வி தோன்றும்.
தர்ப்பண நாட்களில் பிறந்தநாள் அல்லது வேறு பண்டிகை வரலாம். அப்படி அமையும்போது தர்ப்பணம் செய்தப்பின்பு, பண்டிகை ரீதியில் அதற்கான தளிகையைச் செய்து, பெருமாளுக்குத் திருவாராதனை செய்த பின் கொண்டாட வேண்டும்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் நாராயணீயம் ஸேவிக்கலாமா?
ஸ்ரீவைஷ்ணவர்கள் நாராயணீயம் ஸேவிக்கலாம்.
குறிப்புகள்:
பாகவதத்தின் விஷயங்களைச் சுருக்கி ஶ்லோக ரூபமாக சொல்வது நாராயண பட்டத்திரி இயற்றிய நாராயணீயம் என்ற காவியம். அது பகவத் விஷயம் தான். அதை ஸ்த்ரீகளோ புருஷர்களோ படிப்பதினால் ஒருவிதமான குற்றமுமில்லை.
நமது அனுஷ்டானத்தை விஞ்ஞானத்துடன் எப்படி ஒப்பிடுவது. உதாஹரணத்திற்கு சாஸ்த்ரங்களின் படி, க்ரஹண காலத்தில் சாப்பிடக்கூடாது. இந்த முறை மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்று பல நடைமுறைப் பழக்கங்களைக் குழந்தைகளுக்கு விளக்க முடியவில்லை. இப்படி சரியான விளக்கம் தர முடியாததால் நம் ஸம்ப்ரதாயத்தில் இருந்து நம் குழந்தைகளை இழக்க நேரிடும். தந்யோஸ்மி
சாஸ்த்ரமே ப்ரதானம். சாஸ்த்ரத்தை, விஞ்ஞானம் கொண்டு புரிந்துகொள்ள முயற்சிக்கக் கூடாது. விஞ்ஞான ரீதியாக அதற்கு விளக்கம் தேட நினைக்கவே கூடாது.
ப்ரமாதாக்கள் செய்யக்கூடிய ஹிதமே சாஸ்த்ரம்.
குறிப்புகள்:
சாஸ்த்ரம் சொல்வதை முழுமையாக நம்புவதே சர்வோசிதம் அதையே குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும்.
விஞ்ஞானமே சாஸ்த்ரத்தில் இருந்துதான் வந்திருக்கிறது என்று நாம் உணர்ந்து கொண்டு அதை இக்காலக் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
உதாஹரணமாக, க்ரஹண காலத்தில் உணவருந்தக் கூடாது என்பதை சாஸ்த்ரம் மட்டுமல்லாமல் விஞ்ஞானமும் ஒத்துக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் புறவூதா கதிர்கள்(ultraviolet rays) மற்றும் காந்தப்புலம்(magnetic field) இவையெல்லாம் மிகவும் தீவிரமாக இருக்கின்றபடியால் நமது ஜீரண சக்தி பாதிக்கப்படும், ஆகையால் உணவு உட்கொள்ளக்கூடாது என்று விஞ்ஞானமும் கூறுகின்றது.
புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிற புஷ்பக விமானத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் ஆகாச விமானமே உருவானது என்பர். ஆகையால் எல்லாவற்றிற்குமே சாஸ்த்ரம்தான் அடிப்படை.
வெளிநாடு செல்லும் போது சாளக்கிராம மூர்த்தியை என்ன செய்வது, நித்யாராதனத்தை எப்படித் தொடர்வது?
வெளிநாடு செல்லும் போது நித்யாராதனை தொடர வேண்டுமென்றால், சாளக்கிராம மூர்த்தியை ஏளப்பண்ணிக்கொண்டு தான் செல்ல வேண்டும்.
குறிப்புகள்:
சாளக்கிராம மூர்த்திக்கு ஏதாவது அசுத்தம் ஆகிவிட்டது என்று நினைத்தோமேயானால் அப்போது அங்கே எழுந்தருளப்பண்ணியவுடன் முதலில் பாலால் சாளக்கிராம மூர்த்திக்குத் திருமஞ்சனம் செய்ய வேண்டும். அதுவே அவருக்குச் செய்யும் சுத்தி. அதன் பிறகு, அங்கே தொடர்ந்து திருவாராதனம் செய்யலாம்.
விஶிஷ்டாத்வைதம் தத்வத்தின் அடிப்படைகள் என்ன என்பதை தெளியப்படுத்தவும்
விஶிஷ்டம் – எல்லா உலகங்களுக்கும் ஆத்மாவானவன் (ஜகத்துடன் கூடியவன்); அத்வைதம் – ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே.
குறிப்புகள்:
உலகம் முழுவதையும் படைப்பவன், காப்பவன், அழிப்பவன், அந்தர்யாமி, பர்மாத்மா, மோஷம் அளிப்பவன் எல்லாம் ஸ்ரீமந்நாராயணனே இது தான் விஶிஷ்டாத்வைத தத்வம்.
மேலும் க்ரந்தங்களில் இருக்கும் விஷயங்களைக் காலக்ஷேபம் மூலம் விஸ்தாரமாக அறிந்து கொள்ளலாம்.
ஸ்வாமி, அடியேன் ப்ராமண குடும்பத்திலிருந்து வரவில்லை. நான் என்ன ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்ற வேண்டும் என்று தயவுசெய்து விளக்கவும்.
திவ்ய ப்ரபந்தம், ஸ்தோத்ரம் முதலியவைகளைக் கற்றுக்கொண்டு, கோவிலில் உசிதமான கைங்கர்யம் செய்தும், திருமண் இட்டுக்கொள்ளுதல் முதலான ஸ்ரீ வைஷ்ணவ தர்மங்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கவும்.
குறிப்புகள்
சமாஶ்ரயணம், பரந்யாஸம் செய்து கொள்ள வேண்டும்.
அதாவது, எல்லோரிடத்திலும் சகஜ காரணத்தை உடையவர்களாய், நல்ல ஒழுக்கவழக்கம் உடையவர்களாய் மற்றும் தெய்வபக்தி உடையவர்களாய் ஸ்ரீவைஷணவர்களை மதிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
ஸம்ப்ரதாயத்தின் முக்கியத்துவமும் அதன் அர்த்தமும் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கு வழியை தெளியப்படுத்தவும்.
ஸம்ப்ரதாயம் என்பது கொடுத்து வருவது, அதாவது ஆசார்யர் நமக்குக் கொடுத்து வரக்கூடிய மத சித்தாந்த கருத்துக்கள். நாமாக ஒன்றைக் கல்பித்து/கண்டுபிடித்துச் சொன்னால் அது ஸம்ப்ரதாயமாகாது.
குறிப்புகள்:
நம் ஆசார்யர்கள் நமக்குச் சொல்லும் தத்வம் ஹிதம் புருஷார்த்தம் வேதத்தின் அர்த்தங்கள் என்ற எதுவுமே இவர்களாகக் கண்டுபிடித்துச் சொல்லவில்லை அவரவர்களுடைய ஆசார்யர்கள் சொன்னதைச் சொல்கிறார்கள்; அவை ஸம்ப்ரதாயமாக இருக்கிறது.
நாதமுனிகள், பகவத் இராமனுஜர், ஸ்வாமி தேசிகன் என அனைவரும் அவரவர் ஆசார்யர் சொல்லியதைத்தான் சொல்லுகிறார்கள். இப்படியாக இவை மொத்தமும் ஸம்ப்ரதாயத்தில் வந்த்திருக்கிறது, அதாவது தானே எதுவுமே சொல்லாது, ஒருவர் சொல்லிக்கொடுத்துச் சொன்னதாக வந்திருக்கிறது.
வேதம், தர்ம சாஸ்த்ரம், போன்றவற்றின் அர்த்தம் மிகவும் குழப்பமாக இருக்கும். தானாக அறிய முயன்றால் குழப்பம் ஏற்படும், விபரீதமான அர்த்தம் தோன்றக்கூட வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஸம்ப்ரதாய வழியில் இதை அறிய வேண்டும். அதாவது முன் இருந்த மஹாஞானிகள் அவர்கள் என்ன ரீதியில் அர்த்தம் சொல்லியிருக்கிறார்களோ அதை அந்த ரீதியில், ஸம்ப்ரதாய வழியில் கற்றுப் புரிந்துகொள்ள வேண்டும்.
106 திவ்யதேசங்களில் நாம் திருப்பிருதியை பார்க்க முடியுமா? அது எங்கே அமைந்துள்ளது? ஜோஷிமட்டும் திருப்பிருதியும் வேறு என்று நினைக்கிறேன். தயவு செய்து விளக்கவும்?
ஜோஷிமட்தான் திருப்பிருதி என்று பலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்
குறிப்புகள்:
அது இல்லை என்ற வாதம் சிலர் வைக்கிறார்கள். ஆனால் சரியான காரணத்தைக் காட்டி எது திருப்பிருதி என்று சொல்ல முடியவில்லை. ஆகையால், இதை பெரிதாக ஆராயாமல் ஜோஷிமட்தான் திருப்பிருதி என்றும் வைத்துக்கொள்ளலாம், அது இல்லை என்றும் வைத்துக்கொள்ளலாம்.
பாவ கர்மங்களினால் ஒரு ஜீவன் விலங்கு, தாவரம் போன்ற கீழான நிலையை அடைந்து விட்டால் அந்த ஆத்மா எப்படி புண்ணியம் செய்து ஒரு மேலான நிலை அடையும்? தாவரமானது தன்னைப் புசிக்கத்தந்ததை அடையலாம் எனக் கொண்டால், விலங்குகள்?
பாவ கர்மாக்களினால் ஒரு ஜீவன் விலங்கு, தாவரம் போன்ற கீழான நிலையை அடைந்து விட்டால் அந்த ஜீவன் புண்ணியம் செய்வது கஷ்டம்.
குறிப்புகள்:
புண்ணிய பாபம் செய்வது என்பது மனித ஜன்மாவில் தான் முடியும். மிருக, ஸ்தாவர ஜன்மத்தில் செய்ய முடியாது (தானாக அவைகளுக்குப் புண்ணிய பாபம் சம்பவித்தால் அந்த விஷயம் வேறு).
பக்ஷி மிருக ஸ்தாவர ஜன்மம் எடுக்க நேர்ந்தால் பாபம் கழியும் என்பது மட்டும் தான். அந்த ஜன்மமெடுத்து புண்ணிய பாபம் கழிந்தப்பின் நாம் மனித ஜன்மம் எடுப்போம். அதில் புண்ணியம் செய்ய, உயர் கதிக்குப்போகலாம். அப்போதும் பாபம் செய்தால் புழு, பூச்சி முதலிய ஜன்மம் எடுக்க நேரிடும். ஆக இந்த ஜன்மங்கள் புண்ணிய பாபம் கழிக்க வந்தவையே தவிர அதைச் செய்ய வந்தவை அல்ல.
பாரதத்தைக் கர்ம பூமி என்றும், கர்மத்தைத் தொலைக்க ஜீவன்கள் இங்கு உள்ள புண்ணிய க்ஷேத்ரங்களில் உள்ள நதிக்கரையில் நீராடி, தானம், தவம் செய்து முக்தி அடையவேண்டும் என்ற பக்ஷத்தில், போக பூமி எனப்படும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களின் நிலை என்ன?
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களும் ஆசார, அனுஷ்டானங்களையும், தர்மங்களையும் விடாமல் செய்ய வேண்டும். ஆனால் பாரத பூமியில் செய்வது ஶ்ரேஷ்டம் என சாஸ்த்ரம் சொல்கிறது.
குறிப்புகள்
சமாஶ்ரயணம், பரந்யாஸம், ஸ்ரீவைஷ்ணவ தர்மங்கள், கைங்கர்யம், பகவத் அனுக்ரஹம் மோக்ஷம் முதலியவை எந்த தேசத்தில், எந்த மூலையில் இருந்தாலும் எல்லாருக்கும் பொதுவானவை.
நமது ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில், நித்ய கர்மானுஷ்டானம் என்பது யாது? எவையெல்லாம் நித்ய கர்மானுஷ்டானம் என்று தெரியப்படுத்த ப்ரார்த்திக்கிறேன்.
தினமும் காலை எழுவது முதல் இரவு படுத்துக்கொள்வது வரை, தினமும் செய்ய வேண்டிய சந்தியாவந்தனம் முதலியவை நித்ய கர்மானுஷ்டானங்கள். இவற்றைப் பற்றி ஆஹ்நிக நூல்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
குறிப்புகள்
ஒரு நாளில் செய்ய வேண்டியதாகச் சொல்லப்பட்ட கர்மாக்கள் சுருக்கமாக:
விடியற்காலையில் ஹரி ஹரி என்று, ஹரி சிந்தனையுடனே எழுந்து, தேகசுத்தி, சரீரசுத்தி (ஸ்நானம்) செய்துவிட்டு, ஊர்த்வபுண்ட்ரங்கள் தரித்துக்கொண்டு சந்தியாவந்தனாதி கர்மாக்கள் செய்வது,
மேலும் உபநயனம் ஆன ப்ரம்மச்சாரியாக இருந்தால் ஸமிதாதானம், விவாஹிதராக இருந்தால் ஔபாசனம், அதேபோல் தேவரிஷி, காண்ட ரிஷி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். உபதேசம் ஆகியிருந்தால் ஆதாரசக்தி தர்பணம், பிரம்மயக்ஞம் , மாத்யானிகம், நித்யாராதனம், பின்பு அனுயாகம் (பகவத் ப்ரசாதத்தை ஸ்வீகரித்தல்) போன்றவையும்,
ஸ்வாத்யாய காலத்தில் பகவத் சிந்தனையுள்ள புத்தகங்களை வாசிப்பது. பகவானுடைய திருவாராதன கைங்கர்யத்திற்குத் தேவையான பொருட்களை ஈட்டுவது பகவத் சிந்தனையுடன் உறங்குவது இவை அனைத்துமே நித்யகர்மானுஷ்டானங்கள்.
அடியேன், எனது தந்தை கொரோனாவால் பரம்பதித்தபடியாலும், அதே சமயம் அடியேனும் அந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதனால் எந்த ஈமக்ரியைகளும் என்னால் செய்ய இயலவில்லை.எனது மூத்த சகோதரன் 13 நாள் காரியம் வரை அனைத்தும் செய்தார். சுமார் ஒரு மாதம் கழித்து ஆத்து வாத்யாரின் வழிகாட்டுதலின் படி, 10 நாள் தர்ப்பணம் மட்டுமே செய்தேன். தந்தையின் அந்திம காரியம் செய்ய முடியாமல் போனது வருத்தமளிக்கிறது, இதற்கு ஏதேனும் ப்ராயச்சித்தம் உண்டா?
பெரிய தமையனார் எல்லாம் செய்திருக்கிறார். அதற்குப் பிறகு ஆத்து வாத்தியாரின் வழிகாட்டுதல்படி செய்யவேண்டிய எல்லாக் கர்மாக்களையும் செய்தாகிவிட்டது. இதற்கு மேல் எந்த ஒரு ப்ராயச்சித்தமும் செய்யத் தேவையில்லை.
குறிப்புகள்
நம்மால் செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தியதே ஒரு ப்ராயச்சித்தம் தான். இளைய சகோதரராக இருக்கும் பக்ஷத்தில் உதகதானம் மட்டுமே செய்ய வேண்டும். அதுவும் செய்தாகிவிட்டபடியால் இனிச்செய்வதற்கு ஒன்றுமில்லை.
ஶ்ராத்தம் நாள் தவிர, அமாவாஸை போன்று நாம் தர்ப்பணம் செய்யும் இதர நாட்களில், காக்கைக்கு உணவு அளிக்கலாமா/அளிக்க வேண்டுமா?
தினமும் காக்கைக்கு உணவு அளிக்கலாம். சாஸ்த்ர நிர்பந்தம் கிடையாது.
குறிப்புகள்:
அன்ன வைஶ்வதேவம் செய்பவர்கள் அதில் ஒரு அம்சமாக காக்கைக்குச் சாதம் வைப்பார்கள்.
ஶ்ராத்தத்தில் அன்ன பிண்டத்தை வைக்க வேண்டும் என்று சாஸ்த்ரம் கூறுகிறது.
இலவம் பஞ்சு கொண்டு விளக்கேற்றலாமா?
இலவம் பஞ்சு கொண்டு விளக்கு ஏற்ற கூடாது.
குறிப்புகள்:
இலவம் பஞ்சானது பட்டு நூல் போல் இருக்கும், திரிக்குச் சரியாக வராது! அதை வைத்து ஏற்ற முடியாது அதனால் பொதுவாக இலவம் பஞ்சு திரி ஏற்றுவதில்லை.
அடியேனுக்குச் சிறு வயதிலே பரந்யாஸம் ஆகி விட்டது, மீண்டும் ஒரு முறை செய்யலாமா?
சிறு வயதிலே பரந்யாஸம் ஆகி விட்டது என்றால் மீண்டும் செய்யக்கூடாது. ஏனென்றால் பரந்யாஸம் ஒரு தடவைதான் பண்ண வேண்டும்.
அடியேன், பொதுவாக சிகப்பு மஞ்சள் என இரு வர்ண ஸ்ரீசூர்ணம் இருக்கிறது. இதில் புருஷர்கள் பரந்யாஸம் ஆன பின் சிகப்பு ஸ்ரீசூர்ணம் தரிக்கலாமா?
ஸ்ரீசூர்ணம் தரிப்பதற்கும் பரந்யாஸத்திற்கும் ஸம்பந்தமில்லை. மஞ்சள் (ஹரித்ரா) கலந்த ஸ்ரீ சூர்ணம் தரிப்பதே ஸ்ரேஷ்டம்(உயர்ந்தது). சிகப்பு தரிப்பதிலும் தோஷமில்லை.
குறிப்புகள்:
பொதுவாக ஹரித்ரா(மஞ்சள்) கலந்தது இட்டுக்கொள்ள வேண்டும் என உள்ளது.
மஞ்சள் ஸ்ரீ சூர்ணத்தினுடன் ஒரு கலவை கலப்பதால்தான் அது சிகப்பாகிறது.
ஆகையால் மஞ்சள் ஸ்ரீ சூர்ணம் தரிப்பது விசேஷம்.
ஸ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்கொள்ளலாமா?
திருமணுடன் ஸ்ரீ சூர்ணம் சேர்ந்து தரிப்பதே விசேஷம் அதுவே சிறந்தது.
பெருமாளுக்கு எந்த வகை புஷ்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்? எவையெல்லாம் உகந்தது எனத் தனிக்குறிப்புள்ளதா?
பெருமாளுக்கு எந்த வகை புஷ்பங்கள் சமர்ப்பிக்கலாம் என்று ஆஹ்நிக கிரந்தங்களில் உள்ளது. குறிப்பாக, திருக்குடந்தை தேசிகன் அருளிய நிக்ஷேப சிந்தாமணியில் விசேஷமாகவும் விஸ்தாரமாகவும் விளக்கப்பட்டுள்ளது. சமீப காலத்தில் ஸ்ரீவேதாந்த தேசிகனின் வைஷ்ணவ நெறிகள் என்னும் புத்தகத்தில் சுருக்கமாக விளக்கப்பட்டிருக்கிறது.
அமாவாஸை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் தர்ப்பணம் திருவாராதனம் முன் செய்ய வேண்டுமா அல்லது பின்னர் செய்ய வேண்டுமா?
தர்ப்பண நாட்களில் திருவாராதனம் செய்து முடித்தப்பின் தர்ப்பணம் பண்ணுவது உசிதம். ஏனென்றால் முதலில் தேவ கார்யம்; பின்பு பித்ரு கார்யம்.
குறிப்புகள்:
ஆனால் சில நாட்களில், மாதம் சீக்கிரம் பிறக்கலாம் அப்போது அதிகாலையில் எழுந்தவுடன் தர்ப்பணம் பண்ண வேண்டும் என்பதால் அந்நேரத்தில் திருவாராதனம் பண்ண முடியாது. மேல் குறிப்பிட்ட நாட்களில், மாதப்பிறப்பு தர்ப்பணம் முதலில் செய்துவிட்டுப் பிறகு திருவாராதன காலத்தில் திருவாராதனம் செய்வது உசிதமாக இருக்கும். பெரியோர்களுடைய அனுஷ்டானமும் இப்படி இருக்கின்றது.
ஆஶௌச காலத்தில் சந்தியாவந்தனம் செய்யலாமா?
ஆஶௌச காலத்திலும் கண்டிப்பாக சந்தியாவந்தனம் செய்தே ஆக வேண்டும்.
குறிப்புகள்:
ஆஶௌச காலத்திற்குச் சில குறைகள் (விதிகள்) உள்ளன;
1.வாயால் மந்திரங்களை உச்சரிக்கக் கூடாது
2.அங்கந்யாச/கரந்யாசங்கள் பண்ணக்கூடாது. சுருக்கமாகப் பண்ண வேண்டும்
ஸ்ரீபாத தீர்த்தம் வாங்கி அருந்தின பிறகு கை எச்சிலா? அலம்ப வேண்டுமா?
ஸ்ரீபாத தீர்த்தம் சாப்பிட்ட பிறகு கை எச்சில் ஆகாது. பெருமாள் தீர்த்தம், ஸ்ரீபாத தீர்த்தம் இவை இரண்டிற்கும் கை எச்சில் கிடையாது.
குறிப்புகள்:
ஆனால் ஸ்ரீபாத தீர்த்தம் சாப்பிட்டப்பிறகு பெருமாள் பாத்திரங்களையோ மற்றும் உள் பாத்திரங்களையோ தொடக்கூடாது. மேலும் வைதீகமான கர்ம (பெருமாளுக்கோ (அ) தேவர்களுக்கோ) அனுஷ்டானங்கள் உடனே செய்யவேண்டி வந்தால் கை அலம்பிவிட்டுத்தான் செய்ய வேண்டும்.
ஆசாரம் என்றால் என்ன? அனுஷ்டானம் என்றால் என்ன? என்பதைத் தெளியப்படுத்த ப்ரார்திக்கின்றேன்.
அனுஷ்டானம் என்றால் வைதீக கர்மங்கள். அதாவது நாம் செய்யக்கூடிய ப்ரம்ம யக்ஞம், திருவாராதனம் முதலான கர்மங்கள்.
ஆசாரம் என்பது அனுஷ்டானம் செய்வதற்கு, வேண்டிய தகுதியைக் கொடுப்பது.
குறிப்புகள்:
சுத்தியுடன் தான் அனுஷ்டானம் பண்ண வேண்டும்.
அதாகப்பட்டது, ஒருவர் மிகவும் ஆசாரமாக திருவாராதனம் பண்ணுகின்றார் என்றால் அவர் நன்கு தீர்த்தமாடி விட்டும், யார் மேலே படாமலும் சந்தியாவந்தனம் பண்ணிவிட்டும், கைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டும் பண்ணுகின்றார் என்று அர்த்தம். இவையே ஆசாரமாகும்.
அனுஷ்டானத்திற்குத் தேவையான ஒரு சுத்தியைக் கொடுப்பதுதான் ஆசாரம்.
ஆசாரத்துடன் கூடிய அனுஷ்டானம் தான் விசேஷம்.
வெறும் ஆசாரமாக மட்டுமே இருப்பது ப்ரயோஜனம் கிடையாது (உபயோகமில்லை) என்று ஸ்ரீபாஷ்யக்காரர் சாதித்திருக்கிறார்.
நாம் காலை மற்றும் இரவு செய்யும் பாபங்கள் சாயம் மற்றும் காலை சந்தியாவந்தனத்தில் போகிறது. ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் உள்ள அபராத பரிஹாரம் என்னும் அதிகாரத்தில், ப்ராயச்சித்தமானது நாம் அறிந்து செய்த பாபங்களுக்கு என்று ஸ்வாமி சாதித்துள்ளார் அதன் தாத்பர்யம் யாது? தயை கூர்ந்து விளக்கவும்.
சந்தியாவந்தனத்தில் பாபங்கள் போக சில மந்திரங்கள் இருக்கின்றன. நாம் தெரியாமல் செய்த பாபங்கள் மட்டுமே அதில் போகும்.
தெரிந்தே செய்த பாபங்களுக்குக் கண்டிப்பாக ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும். அதுவே உசிதம்.
குறிப்புகள்:
சந்தியாவந்தனம் பண்ணுவது, ஒரு பெரிய பலனைக் கொடுக்காது என்றாலும் சந்தியாவந்தனம் பண்ணாதிருந்தால் பாபம் வரும் என்று பெரியவர்கள் கூறியிருக்கின்றனர்.
ஆக சந்தியாவந்தனம் செய்ய, நம்மை அறியாமல் செய்த பாபங்கள் போகலாமே தவிர, தெரிந்தே செய்த பாபங்களுக்கு ப்ராயச்சித்தம் செய்தாக ப்ராயச்சித்தம் செய்தாக வேண்டும்.
ப்ரபத்திக்குப் பின் கடல் தாண்டி போகலாமா?
தர்ம ஶாஸ்த்ரத்தின் படி பார்த்தோமேயானால் ப்ரபத்திக்கு முன்பின் என்றெல்லாம் கணக்கு கிடையாது, பொதுவாகவே கடல் தாண்டி போகக்கூடாது என்று ஶாஸ்த்ரம் இருக்கின்றது.
அடியேனுக்கு அஶௌசம் 10 நாட்கள். பாராயண வகுப்பு மற்றும் பிற வகுப்புகளில் பிரபந்தம், பிற ஸ்லோகங்கள் ஸந்தை ஸேவிக்கலாமா?
அஶௌசம் காலத்தில் வேண்டும் என்றால் நமக்குள் சில ஶ்லோகங்களை அனுசந்தானம் பண்ணலாம். பாராயணம், சந்தை மற்றும் கோஷ்டியில் சேவிக்கக்கூடாது.
எனக்கு மூத்த தாயாதி பரமபதித்துவிட்டார். தசம தினம் வெள்ளிக்கிழமை வரும் பக்ஷத்தில் வியாழன் அல்லது வெள்ளி என்று ஸர்வாங்க வபனம் செய்யவேண்டும்?
தசம தினம் வெள்ளிக்கிழமையன்று வரும் பக்ஷத்தில் அதற்கு முன்தினமே அதாவது வியாழக்கிழமையே க்ஷௌரம் பண்ணிக்க கொள்ள வேண்டும்.
பிறந்தநாள் என்பதை நக்ஷத்திரப்படியும். ஒருவர் பரம்பதித்த தினத்தைத் திதிப்படியும் ஏன் அனுஷ்டிக்கின்றோம்?
பிறந்தநாள் என்பதை நக்ஷத்திரப்படி கொண்டாடவேண்டும் என்றும், ஶ்ராத்த தினத்தை ஒருவர் திதி வைத்து கொண்டாட வேண்டும் என்றும் தர்ம ஶாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கின்றது. யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி முதலானவைகளில் ஸ்பஷ்டமாகவே சொல்லி இருக்கிறது . அதனால் அந்த ரீதியில் கொண்டாடுகிறோம். நக்ஷத்திரம் என்பது குறையில்லாதது ந க்ஷரதி என்பதினால் நக்ஷத்திரம் என்கின்ற பெயர். குறை இல்லாமல் நாம் மேன்மேலும் வளரவேண்டும் என்பதற்காக வைத்திருக்கிறார்கள்.
மாதத்தில் திதி ஒன்றுதான். நக்ஷத்திரம் நிறைய குழப்பமாகலாம் என்கின்றதினாலும் இருக்கலாம். ஶ்ராத்த திதியை வைத்து பண்ணவேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்லி இருக்கிறது. அதனால் அனுஷ்டிக்கின்றோம்.
திருவாராதனத்தில் பண்ணும் ஶோஷனம், தாஹனம், ப்லாவனம் என்பதின் முக்கியத்துவம் என்ன?
திருவாராதனத்தில் எந்த வஸ்துவை சமர்ப்பித்தாலும் ஶோஷனம், தாஹனம், ப்லாவனம் பண்ணவேண்டும் என்று இருக்கின்றது. அந்த வஸ்துவிற்கு சுத்தி வரவேண்டும் என்பதற்காக அதை நாம் செய்கின்றோம். எந்த ஒரு வஸ்துவிற்கும் சுத்தி என்பது, வாயுவினால் அது உலர்கின்ற படியினால் சுத்தி, அக்னியில் அதை காய்ச்சுகின்ற படியினால் சுத்தி, ஜலத்தில் நனைக்கின்ற படியினால் சுத்தி, என்று மூன்று விதம் உண்டு. பொதுவாக பாத்திரங்கள், பழங்களை நாம் அலம்புகின்றோம் அல்லவா அது போலதான் இதுவும்.
அதனால் நாம் என்ன சமர்ப்பித்தாலுமே இந்த மந்த்ரங்களை கொண்டு, வாயுவைக் கொண்டு உலர்த்துகிறபடியாகவும், அக்னியை கொண்டு தஹிக்கிற படியாகவும், ஜலத்தை கொண்டு நனைக்கிற படியாகவும், எல்லாவற்றிற்கும் அந்தந்த மந்த்ரங்களைச் சொல்லியோ அல்லது திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தைச் சொல்லியோ பண்ணினால் அது சுத்தியாகி பெருமாளுக்குச் சமர்ப்பிப்பதற்கு யோக்யமாக ஆகும்.
அடியேன் அகத்தில் ஸ்ரீ சுந்தர காண்டம் பாராயணம் செய்து வருகிறேன். இஷ்டகாம்யமான பலன்களை பெற (எ.கா. வேலை கிடைக்க, ரோக நிவர்த்தி பெற, திருமணம் நடக்க) என்ன விதமாக ஸங்கல்பம் செய்துக் கொள்ள வேண்டும்?
சுந்தரகாண்டம் பாராயணம் ஆரம்பிக்கும் முன் விஷ்வக்ஸேன ஆராதனம் எல்லாம் பண்ணிவிட்டு மஹாசங்கல்பம் ஒன்று பண்ணிக்கொள்ள வேண்டும்.
பெருமாளுக்குத் திருவாராதனம் எல்லாம் பண்ணி, புஸ்தகத்திற்கு பூஜையெல்லாம் பண்ண வேண்டும். பின் மஹாசங்கல்பம் பண்ணிக்கொள்ள வேண்டும். அதில் எந்தப் பலனை உத்தேசிக்கிறோமோ அதைக் குறிப்பிட்டுச் சொல்லி, அதாவது இந்தப் பலனுக்காக இந்தச் சுந்தரகாண்ட பாராயணம் செய்கிறேன் என்று சங்கல்பம் பண்ணலாம். இதை அந்தந்த வாத்யார்கள் பண்ணி வைப்பார்கள். இவை எல்லாவற்றிற்குமே பகவத் ப்ரீத்யர்தம் அல்லது ஸ்ரீமன் நாராயண ப்ரீத்யர்தம் என்று முக்கியமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அப்படி இல்லாவிட்டால் எந்தப் பலனுக்கு என்பதை பெருமாளிடம் மனதுக்குள் ப்ரார்தித்துக் கொண்டு, வாக்கினால் சங்கல்பம் பண்ணும் பொழுது பகவத் ப்ரீத்யர்தம் அல்லது ஸ்ரீமன் நாராயண ப்ரீத்யர்தம் என்று சொல்லி பண்ணால்கூட போதும் என்று சில பெரியோர்கள் சொல்கிறார்கள்.
திருக்கோயில்களில் அங்கப்ரதக்ஷிணம் செய்ய ஸம்ப்ரதாயப்படி அனுமதி உண்டா? ஈரத்துடன் கோவிலுக்குள் சென்று அங்கப்ரதக்ஷிணம் செய்யலாமா (திருமலை போன்ற கோவிலில்)?
ஈரத்துடன் கோவிலுக்குள் சென்று அங்கப்ரதக்ஷிணம் செய்வது ப்ரார்த்தனை என்கின்ற ரீதியில் திருமலை முதலான கோயில்களில் வழக்கம் உண்டு. ஆகையால் அதைப் பண்ணலாம்.
1. “சகோதரர்கள் வெவ்வேறு இடங்களில் வசித்தால் ஶ்ராத்தம் ஒன்றாக செய்வது உசிதமா? தனியாகச் செய்வது சரியா?
2. ஒரு முறை தனியாகவோ அல்லது ஹிரண்ய ஶ்ராத்தம் (வெளிநாட்டில் இருக்கிறோம். கொரோனா சமயத்தில் இந்தியா வர முடியவில்லை) செய்தாலோ மறுமுறை ஒன்றாக செய்யலாமா?
ஒரே ஊரில் வெவ்வேறு இடத்தில் வசித்து வந்தால் சேர்த்துப் பண்ணலாம். ஆனால் வேறு ஊரில் வெவ்வேறு இடத்தில் இருந்தால் குடும்பம் பிரிந்துவிட்டதாக அர்த்தமாகும். அந்தச் சமயம் தனித்தனியாகப் பண்ணவேண்டும். தகப்பனாருடைய சொத்து விபாகம் ஆகி விட்டால் தனித்தனியாகத்தான் பண்ண வேண்டும்.
சேர்ந்தே பண்ணிக்கொண்டிருக்கும் போது ஒருமுறை தனியாகப் பண்ணும்படி நேர்ந்துவிட்டால் அதற்குப் பிறகு மீண்டும் சேர்ந்து பண்ணக்கூடாது தனியாகத்தான் பண்ணவேண்டும்.
குறிப்புகள்:
தனித்தனியாக பண்ணுவதில் இரண்டு விதம் உள்ளது. ஹோமம் தனித்தனியாகத்தான் பண்ணவேண்டும். ஆனால் தளிகை பண்ணும் பொழுது எல்லா தளிகையும் ஒன்றாகப் பண்ணிவிட்டு ப்ரசாதம், பாயாசம், பருப்பு மாத்திரம் தனித்தனியாகப் பண்ணவேண்டும். மற்றபடி கரியமுதுகள், பக்ஷணங்கள் எல்லாம் ஒன்றாகப் பண்ணலாம். மேல் சொன்ன மூன்றை மாத்திரம் தனியாகப் பண்ணி அந்தந்த ஸ்வாமிகளுக்குத் தனித்தனியாக அமுதுசெய்விக்க வேண்டும் என்று ஒரு வழக்கம்.அவரவர் அகத்து வாத்யார்களை கேட்டால் மேலும் விரிவாகச் சொல்லுவார்கள்.
ஸ்வாமி தேஶிகனின் ஸ்ரீ ஸூக்தியான ஸ்ரீ ந்யாஸ விம்ஶதி சரணாகதியைப் பற்றி மிக உயர்வாக கூறுகிறது. தென்கலை ஸம்ப்ரதாயத்தில் ஸமாஶ்ரயணம் மட்டும்தானே உள்ளது. பரந்யாஸம் வழக்கத்தில் இல்லையே. ஏன் இந்த வேறுபாடு? தென்கலை ஸம்ப்ரதாயத்தை சேர்ந்தவர்கள் பரந்யாஸம் வாங்கிக் கொள்ளலாமா? அடியேனின் சந்தேகத்தை தீர்க்குமாறு பிரார்த்திக்கிறேன்.
தென்னாசார்யர் ஸம்ப்ரதாயத்தில் அடியேனுக்குத் தெரிந்தவரை ஸமாஶ்ரயணம் நடக்கும் பொழுதே கூடவே பரந்யாஸமும் நடக்கிறது. அவர்கள் த்வய மந்த்ரத்தை உபதேசம் பண்ணுகிறார்கள். அதை உச்சாரணம் பண்ணச் சொல்லி சொல்லுகிறார்கள். எம்பெருமானே உபாயம் என்பதாகச் சொல்லுகிறார்கள். த்வய மந்த்ரம் என்பது ஶரணாகதி மந்திரம். ஸமாஶ்ரயணத்தில் முக்கியமாக அஷ்டாக்ஷர உபதேசமும், ஶரணாகதியில் த்வய மந்த்ர உபதேசம் என்பதாக ஒரு வழக்கம் முற்காலத்தில் இருந்திருப்பதாகத் தெரிகிறது. நாம் ஸமாஶ்ரயணத்தின் பொழுது எல்லாவற்றையும் பண்ணுகிறோம்.
அடியேன்கூட சில தென்னாசார்ய பெரியோர்களிடம் கேட்டபோது அவர்களும் அப்படியே சொன்னார்கள். அதாவது ஸமாஶ்ரயண காலத்திலேயே த்வய மந்த்ரத்தை உச்சாரணம் பண்ணுகின்ற படியினால் அது பரந்யாஸம் ஆகிவிட்டதாகத் தான் கணக்கு. ஆகையால் மீண்டும் பரந்யாஸம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்பதைச் சொல்வதற்காகதான் பரந்யாஸம் பண்ணவேண்டாம் என்று சொல்கிறார்கள். முதலியே ஆகிவிடுகிறப்படியால் அப்படிச் சொல்கிறார்கள் என்று அடியேன் புரிந்து கொண்டிருக்கிறேன்.
ஒரு மடத்தைச் சேர்ந்த சிஷ்யர் வேறொரு மடாதிபதியிடமிருந்து தீர்த்த ப்ரசாதம் ஸ்வீகரிக்கலாமா?
ஒரு மடத்தைச் சேர்ந்த சிஷ்யர் வேறொரு மடாதிபதியிடமிருந்து, அதாவது ஸ்ரீவைஷ்ணவ மடாதிபதியாக இருந்தால் தாராளமாக தீர்த்த ப்ரசாதம் ஸ்வீகரிக்கலாம்.
நம் பூர்வர்கள் வழிகாட்டியபடி ஸ்வதர்மானுஷ்டானம் மிகவும் முக்கியம் என்று புரிகிறது. ஒரு அத்வைதீ அல்லது மத்வ ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய ஸம்பந்தம் பெற்றபின் எப்படி அனுஷ்டிக்க வேண்டும்?
அவருக்கு ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்யனிடம் ஸமாஶ்ரயணம் ஆகியிருந்தால் அவர் ஸ்ரீவைஷ்ணவர் ஆகிவிடுகிறார் என்று அர்த்தம். அதன்பின் அவர் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்ற வேண்டும். ஸமாஶ்ரயணம் ஆகவில்லை என்றால் தன்னுடைய ஸம்ப்ரதாயப்படி அனைத்தையும் அனுஷ்டானம் பண்ண வேண்டும். ஒரு மரியாதைக்காகவும், ஆசார்யன் என்கின்ற முறையிலேயும் இவரைச் சேவிக்கலாம்.
நாம் ஏன் 4 முறை சேவிக்கின்றோம்? மற்றவர் ஏன் ஒரே ஒருமுறை சேவிக்கின்றனர்?
ஸம்ப்ரதாயத்தில் பேதம் இருப்பது நமக்கே தெரிந்த விஷயம். ஸ்வாமி தேஶிகன் சாதித்திருக்கிறார், ஆகமங்களில் நான்கு முறை சேவிக்க வேண்டும் என்று ஸ்பஷ்டமாக சொல்லப்பட்டிருக்கிறது. பெருமாளுக்கு எதுவானாலும் இரட்டைப்படையில் இருக்கவேண்டும். பழம், வெற்றிலை சமர்ப்பித்தால் இரண்டாகச் சமர்ப்பிக்கவேண்டும். அதனால் ப்ரதக்ஷிணம், ப்ரணாமம் இவையெல்லாம் கூட இரண்டு தடவையாகப் பண்ணவேண்டும்.
ஆகமங்களில் பெருமாளுக்கு சமத்வம் என்று ஒன்று இருக்கின்றது. அந்த ரீதியில் அவருக்கு வைஷம்யம் கூடாது, அவர் எல்லோரையும் சமமாக பார்க்கின்றபடியினாலே, எண்களில் சமம் என்றால் இரட்டைப்படை, வைஷம்யம் என்றால் ஒற்றைப்படை. ஆகவே அந்த ரீதியில்தான் நாம் இரட்டைப்படையில் சேவிக்க வேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்லியிருப்பது முதல் காரணம்.
ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் முதலான ஆசார்யர்கள் எல்லாம் அப்படி அனுஷ்டானம் பண்ணி இருப்பதினால் அந்த ரீதியில் நாம் அந்த ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றி பண்ணிக் கொண்டிருக்கிறோம்.
ஏகாதசியன்று ஏகாதசி விரதம் இல்லாதவர்களுக்கு உணவு பரிமாறுவது தவறாகுமா? உ.தா நம் அகத்திற்கு வரும் விருந்தினர்கள் ஏகாதசி விரதம் கடைபிக்கவில்லை என்றால் அவர்களுக்கு அன்னமிடலாமா?
ஏகாதசியன்று நாம் ஆஹாரம் சாப்பிடக்கூடாது என்பது மட்டுமில்லை. யாருக்கும் ஆஹாரம் போடவும் கூடாது. ஆஹாரம் போட்டாலே பாவம் என்று சொல்லி இருக்கிறது. அதனால் நமது அகத்திற்கு அதிதிகள் வந்தால்கூட அவர்களுக்குச் சாதம் ப்ரசாதம் போடக்கூடாது.
இன்றைய காலத்தில் மிக குறைந்த அளவே நித்ய ஔபாசனம் செய்கிறார்கள். இருப்பினும் அகத்தில் நடக்கும் உபநயனம், சீமந்தோன்னயனம் முதலிய மங்களகரமான விசேஷங்களுக்கு முன் ஔபாசனம் செய்கின்றார்கள். அந்தச் சமயம் இத்தனை நாட்கள் பண்ணாததற்கு ஏதேனும் ப்ராயஶ்சித்தம் செய்யவேண்டுமா?
ஆமாம் கண்டிப்பாக ப்ராயஶ்சித்தம் செய்யவேண்டும். ஔபாசனத்திற்கு முன் அக்னி சந்தானம் பண்ணும்பொழுது அதில் அந்த ப்ராயஶ்சித்தங்கள் எல்லாம் அடங்கி இருக்கின்றன. தக்ஷிணா தானம், அரிசி தானம், முதலான ப்ராயஶ்சித்தங்கள், அதற்கான ஹோமங்கள் எல்லாமே இருக்கின்றன. வாத்யார்கள் அதைப் பண்ணி வைப்பார்கள்.
ஸ்ரீ உ வே கண்ணன் ஸ்வாமி அவரது வேத வைபவம் உபந்யாஸத் தொடரில் ஒருவர் பேருந்து போன்ற போக்குவரத்தில் பயனித்துவிட்டுவந்தால் தீர்த்தமாடிவிட்டுதான் வேத கோஷ்டீக்குப் போகவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இன்றைய காலத்தில் வேத பாரயணத்திற்குச் செலவதற்கே பொது போக்குவரத்துகளில் பயணிக்கவேண்டியிருக்கிறது. அப்படியிருக்கும் சமயத்தில் என்ன செய்வது?
வேத கோஷ்டிக்கோ, பாராயண கோஷ்டிக்கோ, பெருமாள் சேவிக்கவோ ஆசார்யனை சேவிக்கவோ என எதற்கானாலும் சுத்தமாகதான் போகவேண்டும். தீட்டுடன் வந்து கலந்து கொள்ளக்கூடாது என்று இருக்கிறது. அதனால் அந்த ரீதியில் சொல்லியிருக்கிறார்.
பொது போக்குவரத்துகளில் பயணித்துவிட்டு செல்வதென்பது சரியில்லைதான். ஆனால் வேறு வழியில்லாதபோது, தீர்த்தமாடி விட்டாவது அல்லது மந்த்ர ஸ்நானம் அந்த மாதிரி ஏதாவது பண்ணி விட்டாவது போகலாம்.
1. ஸ்மார்த்த வைஷ்ணவ சம்பிரதாயம் எப்போது துவங்கின? ஆதிசங்கரர் தான் பிராமணர்களை இப்படி வகுத்தாரா?
2. அவரவர் கர்மாபடிதான் அனைத்தும் என்றால் அவன் சம்பிராதயம் விட்டு விலகி மணம் முடிப்பதும் அவனது விதியா? இதனை நம்மால் மாற்ற முடியுமா?
ஆதிசங்கரர் வகுத்தார் என்பது கிடையாது. ஏனென்றால் அவருக்கு முன்பே அத்வைத ஸம்ப்ரதாயம் என்று ஒன்று இருந்திருக்கிறது. அதேபோல் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயமும் முன்பே இருந்திருக்கிறது என்று தெரிகிறது. யுகாந்தரங்களில் கலியுகத்திற்கு முன்கூட இந்த ஸம்ப்ரதாயங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் ஆதிசங்கரர் இதை மிகப்பெரிய அளவில் பரப்பி, ஆங்காங்கே மடங்கள் ஸ்தாபனம் செய்து சாதாரண ஜனங்கள் கூட அந்த ஸம்ப்ரதாயத்தை ஆஶ்ரயிக்கும் படியாக பண்ணி இருக்கிறார்.
அதே போல் நமது பகவத் இராமானுஜரும் முன்பே ஸ்ரீ வைஷ்ணவம் இருந்தால்கூட பெரிய அளவில் நிறைய பேர் ஸ்ரீ வைஷ்ணவர்களாக வாழும் படியாக அனுக்ரஹம் பண்ணி உள்ளார்.
எல்லாமே ஒரு விதிப்படி நடக்கிறது என்கின்ற படியினாலே, அவரவர் தலை எழுத்தின்படி நடக்கிறது. இதை மாற்றமுடியும். ஆசார்ய அனுக்ரஹம், பகவத் சங்கல்பம் இதெல்லாம் இருந்தால் மாறும். மாற முடியாது என்பது கிடையாது. அதைப் பற்றி ஶாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. அப்படி மாறிப்போனால்கூட இது அக்ஞாதசுக்ருதம் என்று சிலதெல்லாம் சொல்கிறார்கள். பகவான் ஏதோ ஒரு வழியில் திருத்துவதற்கு ரீதி இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார். உதாஹரணமாக ஆசார்ய கடாக்ஷம் வந்தாலே திருந்துவதற்கான வழி எல்லாம் கிடைக்கலாம்.
எங்கள் அகத்துப் பெரியவர்காள் சாளக்கிராம பெருமாள் வைத்து திருவாராதனம் பண்ணியதில்லை. இன்று அடியேன் பண்ண ஆசைப்படுகிறேன். எங்கு சென்று சாளக்கிராம பெருமாளை பெறுவது? எப்படிப் பெருமாளை அகத்திற்கு ஏளப்பண்ணவேண்டும்?
சாளக்கிராம பெருமாள் வைத்து திருவாராதனம் பண்ணுவது ரொம்ப விசேஷமானதுதான். சாளக்கிராம க்ஷேத்ரத்தில் பெருமாள் நிறைய கிடைக்கிறார் என்று சொல்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால் பெரியவா யார்கிட்டேயாவது கேளுங்கோ. யாராவது அனுக்ரஹம் பண்ணால் நல்லது. கடைகளில் கிடைப்பதை வாங்கலாமா என்பதை பற்றி யோசித்து சொல்கிறேன்.
தினமும் அகத்தில் குளிப்பதற்கு முன் செய்ய வேண்டிய சங்கல்பம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன். அது போல குளங்களிலும், காவிரி போன்ற ஆறுகளிலும் குளிக்கும் சமயம் செய்யவேண்டிய சங்கல்பம் எது என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன். மேலும் ஸ்த்ரீகளுக்கு உண்டான சங்கல்பம் எது. என்பதையும் தெரிவிக்க பிரார்த்திக்கிறேன்.
அன்றைய திதி வார நக்ஷத்ரங்கள் எல்லாம் மஹா சங்கல்பப்படி எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு அன்றைய தினத்தில் அந்த க்ஷேத்திரத்தில் அந்தத் தீர்த்தத்தில் "கர்மண்ய கா சித்தர்த்தம் ப்ராத: ஸ்நானம் அஹம் கரிஷ்யே" என்று சங்கல்பம் பண்ணி ஸ்நானம் பண்ண வேண்டும். அதே மாதிரியாக காவிரி முதலான நதிகளில் குளிக்கும் போது அந்தந்த க்ஷேத்ரத்தின் பெயரைச் சொல்லி அந்தந்த நதி பெயரையும் சொல்லி "கர்மண்ய கா சித்யர்த்தம் ப்ராத: ஸ்நானம் அஹம் கரிஷ்யே" என்று சொல்லாம்.
சிலர் தீர்த்த ஸ்நானம் விசேஷமாக பண்ணவேண்டும் என்று இருக்கிறபடியினால் காவேரி முதலான நதிகளில் தீர்த்த ஸ்தானம் பண்ணும் பொழுது முதலில் "கர்மண்ய கா சித்யர்த்தம் ப்ராத: ஸ்நானம் அஹம் கரிஷ்யே" என்று சொல்லி தீர்த்தமாடி விட்டு, அதற்குப் பின் காவேரி மகாநதியில் நான் ஸ்நானம் பண்ணுகிறேன் என்று தனியாக சங்கல்பம் பண்ணி தீர்த்தமாடுவார்கள்.
ஸ்த்ரீகள் தனியாகச் சங்கல்பம் பண்ணிக்கவேண்டுமென்று அவசியம் இல்லை. ஆனால் விசேஷ தினங்களில் அவர்களுக்கும் இதே மாதிரிதான் சங்கல்பம்.
அடியேனுக்குத் திருமணமாகியவுடனே ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது. எங்கள் அகத்தில் அன்றெல்லாம் பெரிதாக ஸம்ப்ரதாய அனுஷ்டானங்கள் பின்பற்றியதில்லை. இன்று அடியேன் பரந்யாஸம் செய்ய ஆசைப்படுகிறேன். அச்சமயம் ஆசார்யன் மந்திரோபதேசம் செய்யமாட்டார் என்று கூறுகிறார்கள். அடியேன் எப்படி மந்திரோபதேசம் பெற்றுக்கொள்வது? எப்படி ஜபம் செய்யவேண்டும் என்பதை அறிய என்ன வழி?
ஸமாஶ்ரயண காலத்திலேயே மந்த்ர உபதேசம் எல்லாம் ஆகி இருக்கும். அதனால் வேறு யாராவது மகான்கள், நம் அகத்திலோ அல்லது பக்கத்து அகத்திலோ இருக்கும் பெரியவர்களிடம் கேட்டு அந்த மந்த்ரங்களை ஜபம் பண்ணலாம். அதற்குப் பின் ஆசார்யன் பரந்யாஸம் பண்ணி வைப்பார். அதுவே போதும்.
பரந்யாஸ காலத்தில் ஆசார்யன் மந்த்ர உபதேசம் பண்ணி வைக்க மாட்டார். ஆசார்யனிடமே இப்படி விஷயத்தை சொல்லி மந்த்ர உபதேசம் பண்ணி வைக்க விண்ணப்பிக்கலாம். அதில் ஒன்றும் தவறு கிடையாது. அவர் பண்ணி வைப்பார். அதனால் ஆசார்யனிடமோ, அல்லது யாராவது பெரியவாளிடமோ நீங்கள் மந்த்ரோபதேசம் பெற்றுக் கொள்ளலாம்.
ஜபம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் உபதேசம் பண்ணுவார்கள்.
பெருமாள் திருவாராதனம் செய்ய, தளிகை தயாராக இருக்க வேண்டுமா? தளிகை இன்னும் ஆகவில்லையென்றால் ஆராதனத்தை நடுவில் எங்கு நிறுத்திவிட்டு பின்னர் தொடர் வேண்டும் என்று விளக்கவும்.
தளிகை ஆகிக்கொண்டிருக்கிறது என்றால், அலங்கார ஆசனம் அதாவது தூப தீபங்கலெல்லாம் சமர்பித்துவிட்டபின் மந்திர புஷ்பம் சொல்லும் வழக்கம். மந்திர புஷ்பம் ஆனபின் நமக்குத் தெரிந்த ஶ்லோகங்கள்/பாசுரங்கள் எல்லாம் தளிகை ஆகும்வரை சொல்லிக்கொண்டிருக்கலாம். அதாவது வேறு கார்யங்களுக்குப் போகாமல் பெருமாளுக்குச் சம்பந்தப்பட்ட கார்யங்கள், கைங்கர்யங்கள் நாம் பண்ணிக்கொண்டு இருக்கலாம். தளிகை ஆனபின் தொடர்ந்து திருவாராதனம் பண்ணலாம்.
மாத்யாஹ்நிக ஸ்நானம் பற்றிய சில சந்தேகங்கள்:
1. பெருமாள் சேவிக்க கோவிலுக்குச் சென்று வந்தபின் மாத்யாஹ்நிக ஸ்நானம் பண்ணலாமா? (உ.தா தனுர் மாத காலத்தில் பிம்மாலையே பெருமாள் சேவிக்க போகும்படி இருக்கும்)
2. மார்கழி மாதத்தில் சாப மாச திருவாராதனம் பிம்மாலையே செய்கிறோம். அந்தத் திருவாராதனம் செய்தபின் மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்துவிட்டு இஜ்யாராதனம் பண்ணி பெருமாளுக்குத் தளிகை அம்சை பண்ணலாமா?
3. ஸங்க்ரமண புண்யகாலத்தில் பிம்மாலை தர்ப்பணம் பண்ணும்படி வந்தால், மாத்யாஹ்நிக ஸ்நானம் மற்றும் இஜ்யாராதனத்தை மத்யானம் பண்ணலாமா?
4. அப்யங்க ஸ்நானம் (எண்ணெய் தேய்த்து தீர்த்தமாடுதல்) என்பது ப்ராத ஸ்நானம் செய்தபிறகுதான் செய்யவேண்டும் என்று தர்மஶாஸ்த்ரம் சொல்கிறது. அப்படியென்றால், தீபாவளி பண்டிகையன்று ப்ராத ஸ்நானம் மற்றும் ப்ராத ஸந்தியாவந்தனம் (பிம்மாலையே)செய்துவிட்ட பின்னர்தான் தலைக்குத் தீர்த்தமாட வேண்டுமா?
5. தர்பபணம் மற்றும் மாத்யாஹ்நிகம்,பெருமாள் திருவாராதனம் செய்த பிறகுதான் செய்ய வேண்டுமா?
பெருமாள் சேவிக்க கோவிலுக்குச் சென்று வந்தபின் மாத்யாஹ்நிக ஸ்நானம் பண்ணலாம். பொதுவாக கோவிலுக்குச் சென்று வந்தபின் மேலே பட்டுவிட்டது என்று ஸ்நானம் பண்ணக்கூடாது அது அபசாரம். ஆனால் மாத்யாஹ்நிக ஸ்நானம் என்பது நித்யகர்மா என்பதாலும், அதற்கென்று தனியாகச் சங்கல்பம் (கர்மன்யதா சித்யர்த்தம் மாத்யாஹ்நிக ஸ்நானம் அஹம் கரிஷ்யே – என்ற சங்கல்பம்) உண்டு என்பதாலும், நித்யபடி மாத்யாஹ்நிகம் பண்ணுபவர்களாக இருந்தால் கோவிலுக்குச் சென்று வந்தபின் மாத்யாஹ்நிக ஸ்நானம் பண்ணலாம்.
மார்கழி மாதத்திலும் மேல் சொன்னதுபோல் தனுர்மாத திருவாராதனம் செய்துவிட்ட பின் மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்துவிட்டு அதன்பின் இஜ்யாராதனம் பண்ணி பெருமாளுக்குத் தளிகை அம்சை பண்ணலாம்.
ஸங்க்ரமண புண்யகாலத்தில் பிம்மாலை தர்ப்பணம் பண்ணும்படி வந்தால், தர்ப்பணம் பிம்மாலை பண்ணியபின் மத்யானம் மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்து மாத்யாஹ்நிகமும் இஜ்யாராதனமும் பண்ணலாம்.
அப்யங்க ஸ்நானம் என்பது ப்ராதஸ்நானம் செய்தபிறகு சந்தியாவந்தனமெல்லாம் பண்ணிவிட்டு 6 நாழிகைக்குப் பிறகுதான் பண்ணவேண்டும் என்று இருக்கிறது. அதற்கு முன் பண்ணக்கூடாது. ஆனால் தீபாவளியன்று விசேஷ விதி உண்டு, சூர்யோதயத்திற்கு முன்னர் அப்யங்க ஸ்நானம் பண்ணவேண்டும் என்றும், அப்படிச் செய்வது மிகவும் விசேஷம் என்று தர்மஸாஸ்திரங்களிலும் சொல்லியிருக்கிறது. மேலும் அது பகவான் க்ருஷ்ணனின் நியமனப்படி நடக்கக்கூடியது என்று யாதாவாப்யுதயத்தில் ஸ்வாமி சாதித்திருக்கிறார். ஆகையால் தீபாவளியன்று காலையிலே அப்யங்க ஸ்நானம் பண்ணிவிடனும் அதற்குப் பிறகுதான் சந்தியாவந்தனம் எல்லாம் பண்ணவேண்டும்.
தர்பபணம் மற்றும் மாத்யாஹ்நிகம்,பெருமாள் திருவாராதனம் செய்த பிறகுதான் செய்ய வேண்டுமா என்றால் இல்லை. முதலில் மாத்யாஹ்நிகம், பெருமாள் திருவாராதனம் அதன்பின் தர்ப்பணம் என்பதாக ஸம்ப்ரதாயம்.
குறிப்புகள்:
க்ருஹஸ்தர்களுக்கும், ஸந்யாசிகளுக்கும் நித்யபடி மாத்யாஹ்நிக சங்கல்ப ஸ்நானம் செய்து மாத்யாஹ்நிகம் பண்ணுவதென்பது விசேஷமாகும்.
சங்கோஷ்டீ 2022, T20 யில் பழவேரி ஸ்ரீ உ வே லக்ஷ்மீந்ருஸிம்ஹாசார்யார் (பாலாஜி) ஸ்வாமி, ஸ்ரீ கோழியாலம் ஸ்வாமியால் 8 நிமிடத்தில் திருவாராதனம் செய்வது எப்படி என்று குறிப்பு வெளியிட்டுள்ளார் என்று சாதித்தார். அதைப் பற்றி விரிவாக/அந்த நூல் எங்கு கிடைக்கும் எனத் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
லகு திருவாராதனம் பற்றிய நூல் எங்கே கிடைக்கும் என்று பார்த்து தெரியப்படுத்துகிறோம்.
ஏகாதசி அன்று ஒரு ப்ரபன்னன் ப்ரசாத உபயம் பண்ணலாமா?
ஏகாதசி அன்று ஒரு ப்ரபன்னன் ப்ரசாத உபயம் தாராளமாகப் பண்ணலாம் ஆனால் அதை நாம் சாப்பிடக்கூடாது. பெருமாளுக்கு ஏகாதசியானாலும் சரி எதுவானாலும் சரி தினமுமே ப்ரசாதம் இருந்தால்தான் விசேஷம். ஏகாதசி அன்று நாம் ஏதாவது உத்ஸவம் பண்ணுகிறோம் என்றால், அந்த உத்ஸவத்திற்காக விசேஷமான தளிகை பண்ணாலும் நித்யபடி தளிகையை விடக்கூடாது அதுவும் சேர்த்துதான் பண்ணவேண்டும். அதனால்தான் அதற்கு உபயம் என்று பெயர், நித்யபடி ப்ரசாதத்துடன் கூட விசேஷ ப்ரசாதம். இரண்டும் கலந்திருக்கின்றபடியால்தான் அதற்கு உபயம் என்று பெயர். இரண்டையும் தளிகை பண்ணலாம். ஆனால் ஏகாதசியன்று ப்ரசாதத்தை நாம் உட்கொள்ளக்கூடாது.
பர்த்தாவை இழந்த பத்னி வருஷாப்திகம் முடியும் வரை அந்த ஒரு வருஷ காலத்தில் ஸ்ரீரங்கம் முதலான திவ்ய தேசங்கள் சென்று பெருமாளையும் உத்ஸவங்களையும் சேவிக்கலாமா? ஆசார்யனனை நேரில் சென்று சேவிக்கலாமா என்ன வழக்கம் என்று சொல்ல ப்ரார்த்திக்கிறேன்.
பர்தாவை இழந்தவர் பொதுவாக அந்த ஒரு வருஷ காலத்திற்கு தீர்த்தயாத்திரை போகக்கூடாது என்றிருக்கிறது. ஆகையால் அந்தச் சமயம் திவ்யதேசங்கள் போய் உத்ஸவங்கள் சேவிக்கவேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது. அதேபோல் ஆசார்யனை நேரில் சென்று சேவிக்கவேண்டிய அவசியமில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு ஏதாவது ப்ரமேயம் வந்தால் அவரைச் சேவித்ததனால் தவறொன்றுமில்லை.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ரத ஸப்தமியன்று, ஸப்த அர்க ஸ்நானம் மற்றும் பீஷ்ம தர்ப்பணம் செய்ய வேண்டுமா? ஸ்த்ரீகள் தர்பைப்புல், பவித்ரம் மற்றும் பூணூலைத் தொடலாமா?
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ரத ஸப்தமியன்று, பீஷ்ம தர்ப்பணம் முதலான தர்ப்பணங்கள் எதுவும் பண்ணவேண்டிய அவசியமில்லை. ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் பெற்றுக்கொண்டவர்கள் காம்யகர்மாக்கள் எதுவும் பண்ணவேண்டிடாம்.
ஸ்த்ரீகள் தர்பைப்புல், பவித்ரம் மற்றும் பூணூலைத் தொடக்கூடாது.
இந்தக் கேள்வி ஜோதிடம் சம்பந்தமானது இல்லை என நினைக்கிறேன். நைத்ருவ காஶ்யப கோத்ரமும் காஶ்யப கோத்திரமும் ஒரே பிரிவா அல்லது வேறு வேறா. இரண்டு பேரும் சம்மந்தம் செய்து கொள்ளளாமா?
நைத்ருவ காஶ்யப கோத்ரம், காஷ்யப கோத்ரம் இவையிரண்டும் பெயரால் மட்டுமே வேறுபட்டவை. இவையிரண்டிற்கும் ப்ரவரம் ஒன்றுதான். காஶ்யப, ஆவத்ஸார, நைத்ருவ த்ரயார்ஷேய என்பதாகவே ப்ரவரம். காஶ்யபர், ஆவத்ஸாரர், நைத்ருவர் இந்த மூன்று ரிஷிகள். அதனால் இந்த இரண்டு கோக்த்ரத்தில் இருப்பவர்கள் பரஸ்பரம் விவாஹம் செய்வது கூடாதுதான்.
ஒருவர் எந்தெந்த மாதத்திலும், எந்தெந்த நாட்களிலும் வபனம் (க்ஷௌரம்) செய்துகொள்ளலாம் மற்றும் செய்துகொள்ளக்கூடாது என்று தெரியப்படுத்தவும். மேலும் க்ஷௌரம் செய்யும் நாளில் என்ன கர்மங்கள் செய்யவேண்டும் என்று விளக்க வேண்டுகிறேன்.
இக்கேள்வியின் முதல் பகுதிக்கான விடை “சுபக்ருது – சித்திரை மாத வெளியீட்டில்” காணவும் (கேள்வி எண்: Q28CHIT21006).
க்ஷௌரம் செய்யப்போகும் தினத்தில், காலையில் தீர்த்தமாடி சந்தியாவந்தனம் பண்ணிவிட்டு அதன்பின் க்ஷௌரம் பண்ணிவிட்டு. “க்ஷௌர சுத்யர்த்தம்” என்று சங்கல்பம் செய்து மீண்டும் ஸ்நானம் பண்ணவேண்டும். ஷௌரம் பண்ணும்சமயம் பூணூல் அசுத்தமாகியிருக்கும், ஆகையால் யக்ஞோபவீதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆஹாரத்திற்கு முன்னாடியே க்ஷௌரம் செய்யவேண்டும் என்பது நாம் அறிந்த ஒன்றே.
திருக்கோவிலின் வெளியில் இருக்கும் கடைகளிலிருந்து திருத்துழாய் வாங்கி பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கின்றோம். அந்தப் பெருமாளின் திருத்துழாயை ஆத்துப் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா? குறிப்பாக என்றெல்லாம் திருத்துழாய் பறிக்கக்கூடாது என்றிருக்கிறதோ அன்றைய தினத்தில் அவற்றைச் சாற்றலாமா?
திருத்துழாய் பறிக்கக்கூடாத நாட்களில்கூட நாம் கடைகளில் வாங்கி ஸமர்ப்பிப்பது என்பது அத்தனை ஸ்வாரஸ்யமில்லை. என்றைக்கெல்லாம் நாம் திருத்துழாயை க்ரஹிக்கலாமோ அன்றே க்ரஹித்து வைத்துக்கொண்டு இரண்டு மூன்று நாட்கள் உபயோகப்படுத்தலாம் என்றும், வாடிவிட்டாலும் பரவாயில்லை திருத்துழாய்க்கு வாசம் போகாது என்றும் சொல்லியிருக்கு. மேலும் கடையில் வாங்கி சமர்பிப்பது உத்தம கல்பமில்லை.
அந்தப் பெருமாளுக்குச் சமர்பித்ததை மீண்டும் அவருக்கே சமர்பிக்கலாம் ஆனால் வேறு பெருமாளுக்குச் சமர்பிப்பதைப் பற்றி தெளிவாகக் கூறப்படவில்லை. ஆகையால் கோவிலில் கொடுத்தது, கடையில் வாங்குவது என்பதைவிட முன்னமே நாம் க்ரஹித்துவைத்ததை சில நாட்கள் தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
துவாதசியன்று அகத்தில் இருக்கும் ஆசார்யன் பாதுகைக்கு என்ன செய்யவேண்டும்?
துவாதசியன்று அகத்தில் இருக்கும் ஆசார்யன் பாதுகைக்கு பாதுகாராதனம் பண்ணவேண்டும். அதாவது ப்ராணாயாமம் பண்ணி, இந்த ஆசார்யனுக்குப் பாதுகாராதனம் பண்ணுகிறேன் என்று சங்கல்பம் செய்துகொண்டு பாதுகைக்குத் திருமஞ்சனம் பண்ணவேண்டும். அந்த ஸ்ரீபாத தீர்த்தம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த ஸ்ரீபாதுகைக்கு அர்க்ய பாத்யங்கள் எல்லாம் சமர்பிக்கவேண்டும். புஷ்பம், சந்தனம், பழம் எல்லாம் சமர்பிக்கவேண்டும், தனியனைச் சேவிக்கவேண்டும். ஸ்ரீபாத தீர்த்தம் வாங்கிக்கொள்ள வேண்டும்.
பாகவத அபசாரம் என்பது ஸ்ரீ வைஷ்ணவரல்லாத பிற சந்யாசிகளுக்கும் பொருந்துமா?
பாகவத அபசாரம் என்றால் பகவத் பக்தர்களிடத்தில், பகவானுக்கு பக்தர்காளாக இருப்பவர்களிடத்தில் நாம் படும் அபசாரம்தான் பாகவத அபசாரமாகும். ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லாதவர்களிடத்தில் நாம் படும் அபசாரத்திற்கு பாகவத அபசாரம் என்ற பெயர் வராது. இருப்பினும் பொதுவாகவே நாம் எந்த மனிதர்களிடத்திலும் தோஷத்தையும் பண்ணக்கூடாது என்றிருக்கிறது. அந்த ரீதியில் யாரிடத்திலும் நாம் தவறிழைக்கக்கூடாது, யாருக்கும் கெடுதல் செய்யக்கூடாது ஒதுங்கி வருத்திக்கவேண்டும் என்று சொல்லுவதுண்டு.
மேலும் நமக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லாத படியினால் த்ருண காஷ்டாதிகளைக் கண்டதுபோலே இருக்கவேண்டும். அதாவது மரம், புல் போன்றவற்றைக் கண்டால் இருப்பதுபோல் ஒதுங்கி இருத்தல் வேண்டும்.
பித்ரு சேஷம் (தேவச சாப்பாடு) மீதியிருந்தால் என்ன செய்யவேண்டும்? பசுமாட்டிற்குக் கொடுக்கலாமா? அல்லது அடுத்தநாள் சாப்பிடலாமா?
பித்ரு சேஷம் மீதியிருந்தால், பக்ஷணங்கள் எல்லாம் மறுநாள் சாப்பிடலாம். சாதமெல்லாம் பசுமாட்டிற்கு கொடுக்கலாம்.
ஶ்ராத்தத்திற்கு முதல் நாள் பெருமாள் கோயில் பிரசாதம் ஸ்வீகரிகலமா?
ஶ்ராத்தத்திற்கு முதல் நாள் ஒருபொழுது ஆனபடியினாலே ஒருவேளை மட்டும்தான் சாப்பிடவேண்டும். மேலும் அகத்திலுள்ள பெருமாளுக்குத் திருவாராதனம் பண்ணி பரிசேஷணம் பண்ணி அந்த ப்ரசாதத்தை மட்டும்தான் சாப்பிடவேண்டும். அன்றைய தினம் தனியாக பெருமாள்ப்ரசாதம் வாங்கி சாப்பிடக்கூடாது. அகத்துப் பெருமாள் ப்ரசாதம் உட்கொள்ளும்போது அந்தச் சாதத்துடன் சேர்த்து சாபிட்டால் அதில் பெரிய தோஷமில்லை.
அன்றைய தினம் பரஅன்னம் கூடாது என்றிருக்கிற படியால், முடிந்த அளவு அகத்துப் பெருமாள் சாதம் சாப்பிட்டால் நல்லதென்று தோன்றுகிறது.
ப்ராஹ்மணர்கள் ஏன் ஆஹாரத்தில் பூண்டு வெங்காயம் சேர்த்து கொள்வதில்லை?
ப்ராஹ்மணர்கள் ஸாத்வீகமான ஆஹாரம்தான் சாப்பிடவேண்டும் என்ற நியமம் இருக்கிறது. இந்த நியமங்கள் எல்லாம் ஸ்ரீமத் பகவத் கீதையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. எவையெல்லாம் ஸாத்வீக ஆஹாரம் என்று, எது சாப்பிடவேண்டும் எவை நிஷேதிக்கவேண்டும் என்று ஶாஸ்த்ரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நம் மனதிற்கும், நம் ஆத்மாவிற்கும் பக்தியை, ஞானத்தை வளர்க்கக்கூடியதாகவும், பெருமாளுக்கு நிவேதனம் பண்ண உகந்ததாகவும், தோஷமில்லாததாகவும், அதிகமான கஷ்டம், அதிகமான மணம் (துர்நாற்றம்) இல்லாததாகவும் இருக்கவேண்டும் என்ற நியமங்கள் கூறப்பட்டுள்ளது. அந்த நியமங்களுக்கு உட்பட்டு பல வஸ்துக்கள் நிஷித்தமானவையாக இருக்கிறது அதில்தான் இவை இரண்டும் இருக்கிறது. குறிப்பாக வெங்காயம் சாப்பிடக்கூடாதென்று ஸ்பஷ்டமாகவே இருக்கிறது.
ஆசார்யன் அனுக்ரஹித்த மந்திராக்ஷதை ஒரு பை அளவு சேர்ந்துள்ளது. அவ்வக்ஷதையை கல்யாணம் போன்ற விசேஷத்திற்குப் பயன்படுத்தலாமா? பெருமாள் ப்ரசாதம் பண்ண உபயோகிக்கலாமா? என்று தெளிவிக்கவும்.
ஆசார்யன் கொடுத்த மந்த்ராக்ஷதையை தலையில் நித்யமே ஒருமுறை நாம் சேர்த்துக்கொள்ளலாம். மந்த்ராக்ஷதையில் சில மந்திரங்களெல்லாம் சேர்த்திருப்பார்கள் அதனுடன் ஆசார்யன் அனுக்ரஹமும் இருக்கும். ஆகையால் நித்யமே ஒருமுறை சிரசில் சேர்த்துக்கொள்ளலாம். கல்யாணம் போன்ற விசேஷத்தில் சிரசில் சேர்க்கலாம், ஆனால் அது காலில் படக்கூடாது, கால் படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். கல்யாணத்தில் பொதுவாக எல்லாரும் அக்ஷதை இரைப்பது போல் மந்த்ராக்ஷதையை இரைப்பது உசிதமாக இருக்காது. ஆகையால் கல்யாணம் போன்ற விசேஷத்தில் சிறிதளவு எடுத்து நம் சிரசில் சேர்த்துக்கொள்ளலாமே தவிர பெரிய தட்டில் வைத்து இரைப்பது உசிதமில்லை.
அதேபோல் மந்த்ராக்ஷதையைக் கொண்டு பெருமாள் ப்ரசாதம் பண்ணுவதும் உசிதமாக இருக்காது. வேறுவழியே இல்லையென்றால் மட்டும் கால்படாத இடத்தில் சேர்த்துவிடலாம்.
எங்கள் உறவினர் ஒருவர் அகத்தில் நம் பூர்வாசார்யர் (ஸ்ரீ ரங்கநாத யதி – தேம்பரை ஆண்டவன் என்று நினைக்கிறோம்) பாதுகை கிடைக்கப் பெற்றார்கள். வெகுநாட்கள் உபயோகிக்காமல் இருப்பதாகத் தெரிகிறது. அப்பாதுகையை என்ன செய்வது என்று வழிகாட்டவும்.
அப்பாதுகை சுத்தமாக இருப்பது மிகவும் முக்கியம். ஆகையால் அந்தப் பாதுகையை நன்றாக அலம்பி திருமஞ்சனம் செய்து, தொடர்ந்து உபயோகப்படுத்தலாம். அதற்கு மேல் மிகவும் சுத்தியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
ப்ரசாதம்/உணவு உட்கொள்ளும்போது அங்க வஸ்த்ரத்தை எப்படி உடுத்திக்கொள்ளவேண்டும்?
ப்ரஸாதம் அல்லது உணவு உட்கொள்ளும் பொழுது அங்க வஸ்த்ரத்தை இடுப்பில் தான் தரித்துக் கொள்ள வேண்டும்.
மார்கழி மற்றும் தை மாதத்தில் ஶ்ரீ நம்மாழ்வார் பிறந்த ஊரிலிருந்து புறப்பட்ட பிறகு நாலாயிர திவ்ய பிரபந்தம் கோவில் மற்றும் நம் அகத்தில் சேவிக்க கூடாது என்ற நியதி பற்றி விளக்கவும்.
அனத்யயன காலத்தில் ஏன் க்ருஹங்களில் ப்ரபந்தங்கள் சேவிப்பதில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லாம்.
ஒரு சமயம் கலியன் ஆழ்வார்திருநகரியிலிருந்து திருவரங்கத்திற்கு எழுந்தருளப்பண்ணி ஆழ்வார் ஸ்ரீஸூக்திகளை எம்பெருமான் முன்னர் சேவித்து அனுபவிக்கும்படியாக அத்யயன உத்ஸவம் என்று ஏற்படுத்தினார். அதை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். மேலும் அத்யயன உத்ஸவ காலத்தில் ஆழ்வார் அத்யக்ஷத்தில் ஆழ்வார் ஸ்ரீஸூக்திகளை எம்பெருமான் முன்னர் விண்ணப்பிப்பது என்பது ஒரு உயர்ந்த அனுபவமாகும். எல்லாரும் ஏகாக்ரசித்தமாய் அந்த அனுபவத்தைப் பெற ஒரு வாய்ப்பாக இருக்கவேண்டி, க்ருஹங்களில் சேவிக்காமல் கோஷ்டியாக கோயில்களில் அனுபவிக்க ஏற்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
திருக்கோயில்கள் மட்டுமல்லாது, சில விக்ரஹ ஆராதனம் நடந்த க்ருஹங்களிலும் அத்யயன உத்ஸவாதிகளைப் பெரியோர்கள் நடத்தி வைத்ததாகத் தெரிகிறது.
மற்றொரு காரணமானது, அனத்யயன காலத்தில் திவ்யப்ரபந்தம் சேவிக்க முடியாதது என்பதினால் நம் பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸூக்திகளைக் கற்றுக்கொள்ளவும் அனுசந்திக்கவும் இது ஒரு உபயுக்த்தக் காலமாக இருக்கிறது என்று தோன்றுகிறது.
மடி வஸ்த்ரம் பற்றிய கேள்விகள்
ஈர வஸ்த்ரம் என்பது மடியாகுமா? அல்லது நன்கு உலர்ந்திருக்க வேண்டுமா? அப்படி உலரவில்லையென்றால் 7 முறை வஸ்த்ரத்தை உதறிவிட்டு உடுத்திக்கொள்ளலாமா?
மடி வஸ்த்ரத்தைக் கொடியிலிருந்து ஒரு குச்சி கொண்டுதான் எடுக்கவேண்டுமா அல்லது கையால் எடுக்கலாமா? வஸ்த்ரங்களை ப்ளாஸ்டிக் கயிறு அல்லது கொடியில் உலர்த்தலாமா?
மரக்குச்சியினால் வஸ்த்ரத்தை எடுக்கும்போது ஒருகால் தவறி கீழே விழுந்த்து விட்டால் மடி போய்விடுமா?
மடி வஸ்த்ரம் இரண்டு சூரியன் சமயம் வரை கொடியில் உலர்ந்தால், அது மடி என்றாகுமா? அதை உடுத்திக்கொண்டு திருவாராதனம் செய்யலாமா?
காலை சந்தியாவந்தனம் மற்றும் திருவாராதனம் செய்யும்போது மடி வஸ்த்ரம் உடுத்திக்கொள்கிறோம். வேலைக்குச் செல்லும்போது வேறு ஆடை உடுத்திக்கொள்கிறோம். மீண்டும் அகத்திற்கு வந்தபின் தீர்த்தமாடி சாயம் சந்தியாவந்தனம் செய்யும்போது காலை உடுத்திக்களைந்த மடி வஸ்த்ரத்தையே உடுத்திக்கொள்ளலாமா?
1. ஈர வஸ்த்ரம் என்பது சில அபரகாரியங்களுக்கு மட்டும் மடியாகும். அதாவது சில அபர காரியங்கள் செய்யும்போது மட்டும்தான் ஈர வஸ்த்ரம் உடுத்திக்கொள்வது வழக்கமாகும். பொதுவாக நன்றாக உலர்ந்த வஸ்த்ரம்தான் மடியானது. அப்படி உலரவில்லை என்றால் ஏழு முறை உதறிவிட்டு உடுத்திக் கொள்வது என்பது ஆபத்தில் சிலர் செய்யும் வழக்கமாக இருக்கிறது.
2. மடிவஸ்த்ரத்தைக் கொடியிலிருந்து ஒரு குச்சியைக் கொண்டு எடுப்பதுதான் சரியாக இருக்கும். ப்ளாஸ்டிக் கொடியில் உலர்த்துவது என்பது உத்தமகல்பமில்லை. மரக் கொடியிலோ அல்லது மூங்கில் கொடியிலோ உலர்த்துவதே உத்தமகல்பம். அது கிடைக்காத பக்ஷத்தில் மேலே உலர்த்த வேண்டும் என்கின்ற எண்ணம் முக்கியம். அதனால் ப்ளாஸ்டிக் கொடி பரவாயில்லை என்று வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
3. கொடியிலிருந்து மரக்குச்சியினால் எடுக்கும்பொழுது வஸ்த்ரம் கீழே விழுந்து விட்டால் கீழே விழுந்த இடம் சுத்தமாக இருந்தால் அந்த வஸ்த்ரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
4. பொதுவாக இரண்டு சூரியன் பார்த்த வஸ்த்ரத்தை உடுத்திக்கொள்வது அத்தனை ஶ்லாக்யமில்லை. ஒரு சூர்யன் பார்த்த வஸ்த்ரம் உத்திக்கொள்வதுதான் வேண்டியது மிகவும் உத்தம கல்பமான ஆசாரம் என்று சொல்லலாம். குறிப்பாக ஶ்ராத்தம் முதலிய விசேஷதினங்களில் இரண்டு சூரியன் பார்க்காமல்தான் வைத்துக் கொள்ளவேண்டும் ஆகையால்தான் பெரியவர்கள் முதல்நாள் சூர்ய அஸ்தமனமான பின்னர் ஶ்ராத்ததிற்கான மடி வஸ்த்ரத்தை உலர்த்துவார்கள். ஒரு சூரியன் பார்த்த வஸ்த்ரத்தைதான் அன்று உடுத்திக்கொள்ள வேண்டும்.
அனுதினமும் ஒரு சூர்யன்பார்த்த வஸ்த்ரம் உடுத்திக்கொள்வது உத்தம கல்பம். தினமும் அப்படிச் செய்ய முடியவில்லை எனில் பரவாயில்லை என்று தோன்றுகிறது.
5. காலை சந்தியாவந்தனம் மற்றும் திருவாராதனம் எல்லாம் செய்யும் பொழுது உடுத்திக் கொண்ட வஸ்த்ரத்தை மீண்டும் வெளியில் போய்விட்டு வந்து தீர்த்தமாடி விட்டு உடுத்திக் கொள்ளலாமா என்று கேட்டால் அது உடுத்தி விழுத்த வஸ்த்ரமானதினால் உடுத்திக் கொள்வது அவ்வளவு ஶ்லாக்யம் அல்ல.
திருவோண விரதம் அனுஷ்டிக்கும்போது கோயில் பிரசாதம் (உப்பு போட்ட தயிர் சாதம், புளியோதரை போன்றவை ) ஸ்வீகரிக்கலாமா?
திருவோண விரதம் அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் உப்பு போட்ட கோயில் ப்ரசாதத்தை ஸ்வீகரிக்கும் வழக்கமில்லை.
சிலர் திருத்துழாயைக் காதில் சூடிக்கொள்வார்கள். அதன் காரணம் என்ன? அப்படிச் சூடிக்கொள்ளலாம் என்றால் காது மடலின் உட்பகுதியிலா அல்லது வெளிப்பகுதியிலா எங்கு சூடிக்கொள்ளவேண்டும்?
திருத்துழாயைக் காதில் சூடிக்கொள்ள வேண்டும் என்று ஶாஸ்தரம் கூறியுள்ளது. “கர்ணமூலே து தாம் த்ருத்வா” என்ற வரிகளின்படி புஷ்பத்தைத் தலையிலும், திருத்துழாயைக் காதிலும் சூடிக்கொள்ளவேண்டும் என்று இருக்கிறது.
“கர்ண மூலே” என்றிருப்பதினால் திருத்துழாயைக் காது மடலின் மேல் பகுதியில் சூடிக்கொள்ளவேண்டும் எனத் தெரிகிறது மேலும், நம் பெரியவர்கள் மடலின் உள்பகுதியில் வைத்துக்கொள்வதை அடியேன் பார்த்திருக்கிறேன். ஆகையால் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின்படி காதின் உள்மடலில் திருத்துழாயைச் சூடிக்கொள்ளவேண்டும் என்பதாகத் தெரிகிறது. காதின் வெளிப்பகுதியில் வைத்து அடியேன் பார்த்ததில்லை.
ஏன் தென்னிந்திய திருக்கோயில்களின் உள்ளே சங்க நாதம் எழுப்பக்கூடாது என்கிறார்கள்? சங்க நாதம் ஒலிப்பதுப்பற்றி ஆகமத்தில் ஏதேனும் குறிப்பிருக்கிறதா?
சங்கநாதம் என்பது விசேஷமான நாதம்தான். தென்னிந்திய திருக்கோயில்களில் ஒலிக்கக்கூடாது என்பதெல்லாம் இல்லை, சில கோயில்களில் இன்றும் சங்கநாதம் எழுப்புவது என்பது இருக்கிறது. குறிப்பாக கேரள திருக்கோயில்களில், பெருமாள் ஏளும்போதோ அல்லது பெருமாள் திருக்கோயில் திருக்கதவு திறக்கும்போதோ சங்கநாதம் எழுப்புவதுண்டு.
திருப்பாவையில் “தங்கள் திருக்கோவில் சங்கிடுவான் போதந்தார்”, “வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ” என்ற வரிகளுக்குச் சங்கநாதம் என்று ஓர் அர்த்தம் உண்டு. “சங்கிடுவான்” என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் கூறுகிறார்கள். அதில் சங்கம் என்று ஒரு அர்த்தமுண்டு, “புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ” என்பதன் மூலம் கோயில்களில் சங்கநாதம் எழுப்பலாம் தவறொன்றுமில்லை.
ஆனால் சில கோயில்களில் ஏன் எழுப்பக்கூடாது என்றால், ஒவ்வொரு கோயில்களுக்கும் ஒவ்வொரு ஸம்ப்ரதாயம் உண்டு. அப்படியிருக்க நாமாக சப்தங்கள் எல்லாம் எழுப்பக்கூடாது. சில கோயில்களில் சங்கநாதம் கூடாது என்று வைத்திருப்பார்கள். இப்படியாக அந்தந்தக் கோயில்களுக்கென்று ஒரு வழக்கமும் அதை செய்வதற்கேன்று சிலரும் இருப்பார்கள். ஆகையால் அந்தக் கோயில்களின் பழக்கவழக்கத்தை நாம் பின்பற்றி நடக்கவேண்டும்.
கல்யாணம் ஆகாத ஒருவர் பரமபதித்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. அவருடைய தாயார் கைப்புல் வாங்கி மாஸ்யம் முதலியன நடைபெறுகிறது . ஒரு வருடம் முடிவதற்கு முன் அவருக்காக கயா ஶ்ராத்தம் பண்ணலாமா? தாயார் போகவில்லை. கயா போகும் ஒரு பந்துவைக் கொண்டு செய்யலாமா?
பொதுவாக ஆப்தீகம் நடந்துமுடியும்வரை கயாஶ்ராத்தம் பண்ணும் வழக்கமில்லை. ஆப்தீகம் முடிந்தபின்புதான் கயாஶ்ராத்தம் பண்ணப் போகவேண்டும் என்று இருக்கிறது. ஒரு வருடம் ஆனபின் கயாவிற்குப் போகும்போது ஒரு பந்துவைக்கொண்டு அங்குச் செய்யலாம்.
கயா ஶ்ராத்தம் செய்யும்போது சில காய்கறிகள், பழங்களை நாம் விடுகிறோம். நாம் அங்கே விட்டுவிட்ட காய்கறியோ, பழமோ மடம் அல்லது கோவில்களில் ப்ரசாதமாகக் கொடுக்கும்போது நாம் அதை உட்கொள்ளலாமா? அல்லது ஏற்காமல் இருக்கலாமா? ஒருகால் அறியாமல் நாம் சாப்பிட்டிருந்தால் அதற்கு ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா?
கயா ஶ்ராத்தம் செய்யும்போது நாம் அங்கு விட்ட காய்கறிகளை, பழங்களை ப்ரசாதமாகக் கொடுத்தால்கூட அதை நாம் உட்கொள்ளக்கூடாது. தெரியாமல் உட்கொண்தடற்குத் தனியாக ப்ராயஶ்சித்தம் என்றெல்லாம் கிடையாது. தெரியாமல் உட்கொண்டுவிட்டோம் என்று புரிந்துகொண்டு நம்மனதளவில் அபராதக்ஷாபனம் பண்ணிக்கொண்டு இனிமேல் அவ்வாறு நடக்காமல் கவனமாக இருக்கவேண்டும்.
ஹனுமத் ஜெயந்தி என்று கொண்டாடப் படுகிறது. எந்த நாளில் என்ற குறிப்பு இருக்கிறதா? வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில், மாதத்தில் கொண்டாடுகிறார்கள். அதனால் எது சரியான தினம் என்ற குழப்பம் வருகிறது.
ஹனுமத் ஜயந்தி பற்றி கேள்வியில் கேட்டதுபோலேப் பல குறிப்புகள் இருக்கிறது. அதேபோல்தான் கருடஜயந்தியும் ஆடியில் என்று சொல்வதுபோல் தை/மாசியில் என்றும் சொல்லுவார்கள். ஆகையால் அந்தந்த இடங்களில் எப்படிக் கொண்டாடுகிறார்களோ அப்படியாக வைத்துக்கொள்வது. மேலும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின்படி பல ஊர்களில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆகையால் நாமும் அதையே பின்பற்றலாம். நம் பூர்வர்கள் இந்தத் தினம்தான் என்று ஒரு அனுஷ்டானத்தில் வைத்துக்கொள்ளாததினால் நம்மால் இதுதான் சரி என்று சொல்லமுடியவில்லை. பஞ்சாங்கத்தில் எப்படிப் போட்டிருக்கிறார்களோ வழக்கத்தில் எப்படியிருக்கோ அவ்வழக்கப்படி அதில் நம்பிக்கை வைத்து நாம் கட்டாயமாகச் செய்யலாம்.
ஹனுமத் ஜயந்திக்கோ, கருட ஜயந்திக்கோ வ்ரதம் என்றோ, விசேஷ திருவாராதனம் செய்வதென்று ஸம்ப்ரதாயத்தில் வரவில்லை. ஆனால் விசேஷ திருவாராதனம் செய்வதினால் தவறொன்றுமில்லை. மேலும் வ்ரதம் என்று கிடையாது அந்தந்த இடங்களில் எப்படிச் சொல்கிறார்களோ அதன்படி போய்ச் சேவிப்பதே விசேஷம்.
தர்ப்பண நாட்களில் பொங்கல் (பலகாரமாக) சாப்பிடலாமா?
பொங்கல் என்பது அன்னத்தினாலே செய்யப்படுவதால் அதைப் பலகாரமாக ஸ்வீகரிக்கும் வழக்கமில்லை.
ஏகாதசி விரதம் இருக்கும் தினம் பெருமாளின் திருத்துழாயை உட்கொள்ளலாமா?
ஏகாதசி விரத தினத்தில் திருத்துழாயை உட்கொள்ளும் வழக்கமில்லை.
காம க்ரோதங்களை வென்று எப்போதும் எம்பெருமான் சிந்தனையோடே இருக்க வழி என்ன?
காம க்ரோதங்ளை வெல்வதற்கு மனதை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும். மனதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாயிற்று என்று அர்ஜுனன் கேள்வி கேட்டதற்கு கிருஷ்ணன் கஷ்டமே, அப்யாசத்தினாலும் வைராக்கியத்தினாலும் அதைச் சாதிக்க முடியும் என்ற பதில் கூறியிருக்கிறார். அதனால் முயற்சித்துக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.
பெருமாளிடத்தில் நாம் ஈடுபாட்டை அதிகரித்து கொள்ளவேண்டும். அதாவது பெருமாள் கைங்கர்யம், காலக்ஷேபம், அனுஷ்டானம் போன்றவற்றில் ஈடுபடவேண்டும். இப்படி இது அதிகரிக்க அதிகரிக்க வெளி விஷயங்களில் உள்ள காம க்ரோதங்கள் குறையும். இதை ஸ்ரீமத் பகவத்கீதையில் கண்ணனே சொல்லியிருக்கிறான்.
அடியேனின் தாயார் 44ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் மூலம் பரஸமர்ப்பணம் செய்தவர். அவர் சில நாட்கள் முன்பு ஆசார்யன் திருவடி அடைந்துவிட்டார். அடியேன் ப்ரக்ருதம் ஸ்ரீமத் அழகியசிங்கரிடம் பரந்யாஸம் பெற்றுள்ளேன். அடியேனின் வருத்தம் மற்றும் கேள்வியானது, என் தாயாரிடம் தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த அபசாரங்களுக்கு என்ன ப்ராயஶ்சித்தம் செய்ய வேண்டும்? அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிவிக்க வேண்டுகிறேன். அவர்களுக்குக் கட்டாயம் பித்ரு கார்யங்களைச் சரியாக செய்வேன்.
எந்த ஒரு தாயாரும் என்ன ஒரு அபசாரப்பட்டாலும் கூட தன்னுடைய குழந்தை கஷ்டப்படட்டும், கெட்டுப் போக வேண்டும் என்று நினைக்கவே மாட்டாள். அதனால் பண்ணிய அபச்சாரங்களுக்கு அவர் இருக்கும் பொழுதே ப்ரார்த்தனை பண்ணிக் கொண்டிருக்கலாம். இப்பொழுது பண்ணவேண்டும் என்றால் சர்வ லோக மாதாவான தாயாருடைய சன்னதிக்குச் சென்று தான் பண்ணிய அபசாரங்களை ஸ்வயமே விஞ்ஞாபித்துக் கொண்டு சேவித்து அபராத க்ஷமாபணம் பண்ணிக் கொள்ளலாம்.
பெண்ணின் கல்யாணத்திற்கு எத்தனை நாள்களுக்கு முன்பு வரை பெண்ணின் தகப்பனார் ஶ்ராத்ததிற்குச் சுவாமிகள் ஆக இருக்கலாம்.
பொதுவாக எந்தச் சுபகார்யம் நடக்கும் பொழுதும் அந்தப் பத்திரிக்கை எழுதப்பட்டு விட்டால் அதன்பின் இதர நிமந்த்ரத்திற்கு இருக்கின்ற வழக்கம் இல்லை. பத்திரிக்கை எழுதுவதே கணக்கு என்று வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பத்து நாள் பங்காளிகள் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்? அதேபோல் 3 பங்காளிகள் யார் , தாயாதிகள் யார்? என்று விளக்கப்ரார்த்திக்கிறேன்.
தாயாதிகள் என்றால் சொத்தைப் பங்குகொள்பவர்கள் என்று அர்த்தம். அதாவது ஒரு அப்பாவிற்கு 2 அல்லது 4 புத்திரர்கள் இருந்தால், தந்தையாரின் சொத்தை புத்திரர்கள் அனைவரும் பங்கிட்டுக்கொள்வார்கள். தாயத்தை அதாவது சொத்தை பங்குப்பொட்டுக்கொள்வதால் பங்காளிகள் என்று தமிழில் சொல்கிறோம்.
இப்படியாக ஒரு அப்பா அவருக்கு இரண்டு புத்திரர்கள், இவர்கள் இரண்டாம் தலைமுறை. பின் இந்தப் புத்திரர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு இரண்டு புத்திரர்கள் என்றால், அவர்கள் மூன்றாம் தலைமுறை. இப்படியாக ஏழு தலைமுறை வரை உள்ளவர்கள் 10 நாள் பங்காளிகள், எட்டாம் தலைமுறையிலிருந்து 14 தலைமுறை வரை உள்ளவர்கள் 3 நாள் தாயாதிகள்.
சில க்ருஹங்களில் 12 மாதங்களும் தர்ப்பணம் செய்கிறார்கள்.அஷ்டகா.அன்வஷ்டகா தர்ப்பணமும் செய்கிறார்கள்.சில க்ரஹங்களில் 4மாத தர்ப்பணம் மட்டுமே கடைபிடிக்கிறார்கள்.கேட்டால் எங்காத்துப் பெரியவா அனுஷ்டித்து வந்தது என்கிறார்கள். குழப்பத்தைத் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
12 மாத ஸங்க்ரமணங்களிலும் தர்ப்பணம் அனுஷ்டிப்பது உத்தம கல்பம். நான்கு மாதங்களையாவது அனுஷ்டிப்பது மத்யம கல்பம். அவரவர் சௌகர்யப்படி அனுஷ்டிக்கிறார்கள் தவறொன்றுமில்லை.
தனுர் மாதம் தவிர மற்ற எந்த மாதத்தில் சூர்யோதயத்திற்கு முன் திருவாராதனைச் செய்யலாம்? சில சமயம் பிம்மாலையே கோவிலுக்கோ அல்லது வெளியூருக்கோ செல்ல நேர்ந்தால் எப்போது திருவாராதனம் செய்யவேண்டும்? அதேபோல் அந்தச் சந்தர்ப்பங்களில் எப்போது சந்தியாவந்தனம் செய்யவேண்டும்?
தனுர் மாதத்தில் மாத்திரமே சூர்யோதயத்திற்கு முன்பு திருவாராதனம் செய்ய வேண்டும். மற்ற மாதங்களில் க்ரஹண காலமாகயிருந்தால் திருவாராதனம் செய்யலாம். ஏனைய சமயங்களில் சூர்யோதயம் ஆகும் நேரம் சந்தியாவந்தனங்களைச் செய்துவிட்டுதான் திருவாராதனம் செய்யும் வழக்கம். ஒருவேளை வெளியே செல்லவேண்டுமானால் சூர்யோதயத்திற்கு முன் அர்க்யம் விட்டு உதயத்திற்கு உபஸ்தானம் பண்ணி, அதற்குப்பின் வேண்டுமானால் மாத்யானிகம் பண்ணி உடனே திருவாராதனம் பண்ணலாம். ரொம்ப அல்ப துவாதசியாக இருந்ததானால் சூர்யோதயத்திற்கு முன் திருவாராதனம் பண்ணலாம்.
“1.சாளக்கிராம திருவாராதனத்தின் பொழுது திதி,வாரம், நட்ச்சத்திரம் சொல்லி சங்கல்பம் செய்ய வேண்டுமா.?
2.தனுர் மாத ஆராதனத்திற்கு முன்பே ப்ராத சந்தியாவந்தனம் எப்போது செய்ய வேண்டும்?”
1.சாளக்கிராம திருவாராதனத்தின் பொழுது திதி,வாரம்,நக்ஷத்திரங்கள் சொல்லி சங்கல்பித்துக்கொள்ளும் வழக்கம் உண்டு.
2. சூர்யோதயத்திற்கு முன்பு தனுர்மாத ஆராதனம் செய்தபின் சந்த்யாவந்தனம் செய்யவேண்டும். சூர்யோதயம் ஆகிவிட்டால் சந்த்யாவந்தனம் செய்தபிறகு தனுர்மாத ஆராதனம் செய்யவேண்டும்.
ஏகாதசி அன்று 2 விரதங்கள் அனுஷ்டிக்குமாறு ப்ரமாணங்கள் கூறுகின்றன. ஒன்று, நிர்ஜலமாக இருப்பது. மற்றொன்று, ஜாகரண விரதம். ஜாக்ரண விரதம் நம் ஸம்பிரதாயத்தில் அனுஷ்டிப்பது உண்டா? இதைப் பற்றி நம் ஆசாரியார்கள் வித்வான்கள் கருத்து என்ன என்று சாதிக்குமாறு பிரார்த்திக்கிறேன்.
ஜாகரண விரதம் நம்முடைய ஸம்ப்ரதாயத்தில் அவசியம் வேண்டியதுதான், அனுஷ்டிப்பது உத்தமம். சக்தியிருந்தால் அவசியம் அனுஷ்டிக்கலாம்.
பாதுகா ஸஹஸ்ரநாமம் மாலை அல்லது இரவில் சேவிக்கலாமா? மாலையில் பாதுகா ஆராதனம் பண்ணலாமா?
பாதுகா ஸஹஸ்ரநாமம் ஸ்தோத்ரம் எப்போது வேண்டுமானாலும் சேவிக்கலாம். பாதுகா ஆராதனம் என்பது பெருமாள் திருவாராதனம் போல் சுத்தமாக இருந்து பண்ணவேண்டியது. பெருமாள் திருவாராதனம் காலையில் எப்படிச் சுத்தமாக இருந்து பண்ணவேண்டுமோ அப்படித்தான் பண்ண வேண்டும். மாலையில் அந்தச் சுத்தி இருக்காது. மேலும், பொதுவாக காலையில்தான் பண்ணுவார்கள் மாலையில் பண்ணும் வழக்கமில்லை.
கோயில்களில் கிடைக்கும் புளியோதரை, பொங்கல் (கலந்த சாதம்) போன்ற ப்ரசாதத்தை காலை, மதியம் அல்லது இரவு உணவாக உண்ணும் போது பரிசேஷனம் செய்ய வேண்டுமா?
கோயில்களில் கிடைக்கும் புளியோதரை, பொங்கல் (கலந்த சாதம்) போன்ற ப்ரசாதத்தில் உப்பு சேர்த்திருப்பார்கள். பொதுவாக உப்பு சேர்த்த வஸ்துவிற்கு பரிசேஷனம் பண்ணக்கூடாது.
பெருமாள் திருவாராதனம் மாத்யானிகம் செய்த பிறகுதான் செய்ய வேண்டுமா?
பெருமாள் திருவாராதனம் மாத்யானிகம் செய்த பிறகுதான் செய்ய வேண்டுமா என்றால் அதுதான் அதற்கு சமயம். அதாவது அனுஷ்டான க்ரமப்படியாக மாத்யானிகத்திற்குப் பிறகுதான் திருவாராதனம் பண்ணவேண்டும்.
வேறு காரணங்களால் ஒருவேளை திருவாராதனம் முன்னாடி பண்ணும்படி நேர்ந்தால், மாத்யானிகத்திற்கு முன் அபிகமன ஆராதனத்தை விசேஷனமாக பண்ணிவிட்டு, மாத்யானிகத்திற்குப் பின் சுருக்கிப் பண்ணலாம் என்று கூறுகிறார்கள்.
பொதுவாக க்ருஹஸ்தர்காள் அபிகமன ஆராதனத்தைச் சுருக்கமாக பண்ணுவார்கள், அதாவது பெருமாளுக்குச் சுப்ரபாதம், சில ஸ்தோத்ரங்கள் சொல்லி சுருக்கமாகப் பண்ணுவார்கள். பின் இஜ்யாராதனத்தைப் பெரியதாகப் பண்ணுவார்கள். ஸந்யாசிகள் அபிகமனத்தைச் விசேஷமாகப் பண்ணி, இஜ்யாராதனம் சுருங்கலாம்.
க்ருஹஸ்தர்களுக்கு சில காலவிசேஷத்தின் போது, அதாவது நேரமில்லாத போது (ஆபத்காலம் என்று சொல்வார்கள்) அபிகமனத்தைச் விசேஷமாகப் பண்ணிவிட்டு, இஜ்யாராதனத்தைச் சுருக்கிக்கொள்ளலாம்.
ஆழ்வார் ஆசார்யன் ப்ரதிஷ்டாபனம் இல்லாத மற்றும் ஶடாரி சாதிக்காத விஷ்ணு கோவில்களில் நாலாயிரம் சேவிக்கலாமா ?
எல்லா விஷ்ணு கோவில்களிலும் நாலாயிரம் சேவிக்கலாம் இதில் சந்தேகமே வேண்டாம். கோவில்காரர்கள் அனுமதித்தால் தாராளமாகச் சேவிக்கலாம்.
யஸ்யாபவத்…, அஹோபிலே….என்று அஹோபில மடத்தவர்கு இருப்பது போல், ஆண்டவன் ஆச்ரம சிஷ்யர்களுக்கு ஏதேனும் உண்டா?
ஶாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம் என இரண்டு இருக்கிறது. யஸ்யாபவத் சொல்வதென்பது ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தது. மற்ற ஸம்ப்ரதாயத்தில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
பொதுவாக நாமெல்லாம் ஸ்ரீமான் வேங்கட, யஸ்யத் விரத என்று வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா அது போலதான் யஸ்யாபவத் என்பதும். ஸ்ரீமத் ஆண்டவன் ஆஶ்ரமத்தில் தனியாக இருப்பதாகத் தெரியவில்லை.
மார்கழி மாதத்தில் ஒருவர் காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானம் என்ன? குறிப்பாக பெருமாள் திருவாராதனம் பண்ணாதவர்கள் , க்ருஹத்தில் இல்லாமல் விடுதிகளில் தங்கி இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.
மார்கழி மாதத்தில் காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானத்தில் முக்கியமானது காலையில் எழுந்து திருப்பாவை சொல்வது. ஸ்த்ரீகள் கார்த்தால எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும். மார்கழி மாதத்தில் பிம்மாலையில் விளக்கேற்றுவது விசேஷம். அதேபோல் திருப்பாவை அவசியம் அனுசந்தானம் பண்ணவேண்டும். திருவாராதனம் நடக்காத பக்ஷத்திலும் திருப்பாவை கட்டாயம் சேவிக்க வேண்டும். கோதாஸ்துதி தெரிந்தால் அதையும் சேவிக்கலாம்.
ஒருவர் உபன்யாசகர் ஆவதற்கு என்ன அளவுகோல், விதிமுறைகள் ? இந்தக் கேள்விக்கு க்ஷமிக்கப் ப்ரார்த்திக்கிறேன். கடந்த சில ஆண்டுகளில், க்றிஸ்தவர்கள், ப்ராமணர்கள் அல்லாதவர்கள், பெண்கள் என்று அனைவரும் உபன்யாசகர்களாக மாறி, அனைவருக்கும் ரஹஸ்யத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், இது சரியா என்று தேவரீர் விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
உபன்யாசகர் ஆக வேண்டும், பகவத் விஷயங்களைப் பேசவேண்டும் என்றால் முதலில் பகவத் விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஒரு ஸதாசார்யன் மூலமாக விஷயங்களை நன்கு க்ரஹித்துக் கொள்ளவேண்டும். காலக்ஷேபாதிகள் எல்லாம் பண்ணவேண்டும். அதற்கு பிறகு ஆசார்யன் நியமித்தால் மட்டுமே விஷயங்களை வெளியேபோய் சொல்லவேண்டும். அவருடைய அனுமதி பெற்றுதான் விஷயங்களை வெளியே போய் சொல்ல வேண்டும். ஆசார்யன் நியமித்தால்தான் அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்.
ஸத்ஸம்ப்ராயத்தில் வராதவர்கள் எல்லாம் விஷயங்களைச் சொல்லுவது என்பது சரியல்லதான். அதாவது அது ஸம்ப்ரதாய விஷயமாக ஆகாது. அவர்கள் பேசுவது வேறு பேச்சாக இருக்கலாம். ஆனால் அதை ஸம்ப்ரதாய விஷயமாக கருத முடியாது. அதை ஸ்ரீ வைஷ்ணவ ஸத்ஸம்ப்ரதாயத்தில் இருப்பவர்கள்போய் கேட்க வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது. இதே ஒரு ஸதாசார்யன் மூலமாக உபதேசங்களைப் பெற்று அந்த ஆசார்யன் நியமனத்தின் பேரில் ஒருவர் விஷயம் சொல்லுவரேயானால் அந்த விஷயங்களைக் கேட்பதில் தவறில்லை. அந்த விஷயங்களை ஸ்த்ரீகள் சொன்னாலும் சரி அல்லது ப்ராமணர்கள் அல்லாதவர் ஒருவர் விஷயத்தை ஸதாசார்யனிடத்தில் கேட்டுக் கொண்டு அதை அவர் சொல்ல வெளியே சென்று நான்கு பேருக்குச் சொன்னாலும் அது தவறல்ல. ஆனால் YouTubeல் இந்த மாதிரி ஹிந்து அல்லாதவர்கள், எந்த ஒரு ஸத் உபதேசங்களையும் பெறாதவர்கள் எல்லாம் சொல்லக்கூடிய விஷயங்களைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
அடியேன், ராமானுஜ சம்பந்தம் இல்லாத ப்ராமணர் அல்லாதவர்கள் கோவில்களில் பாதுகா ஸஹஸ்ரம் சேவிக்கலாமா என்று தேவரீர் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
இந்தக் கேள்வியில் ராமானுஜ சம்பந்தம் இல்லாத ப்ராமணர் அல்லாதவர்கள் என்று போட்டிருக்கிறது. இந்தக் கேள்வி கொஞ்சம் வேடிக்கையாகதான் படுகிறது. ஏனென்றால் தேசிகருடைய ஸ்ரீஸூக்திகளைச் சேவிக்கணும்னு ஒருவர் நினைத்தால் அவருக்கு ராமானுஜ சம்பந்தம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? அந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் பரம்பரையில் வரவில்லை என்றால் தேஶிகன் ஸ்ரீ ஸூக்தியை வாசிக்க ஆசை எப்படி ஏற்படும் என்று அடியேனுக்குப் புரியவில்லை. அதனால் பாதுகா ஸஹஸ்ரம் கற்றுக் கொள்கிறார்கள் சேவிக்கணும் என்று நினைக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தேசிகனிடத்தில் ஒரு ருசி இருக்கிறது என்று தெரிகிறது. தேஶிகனிடத்தில், தேஶிகன் விஷயத்தில் ஒரு ஈடுபாடு இருக்கிறது என்று தெரிகிறது. அதனால் ராமானுஜ ஸம்ப்ரதாயத்திலும் ஈடுபாடு இருக்கிறதாகதான் புரிகிறது. அதனால் இதைக் கற்றுக்கொண்டு அகத்தில் அவரவர் த்ருப்திக்குச் சேவிப்பது சரியாகத்தான் தோன்றுகிறது.
ஆனால் கோவில்களில் சேவிப்பதற்கு பல நியமங்கள் உண்டு. அந்த நியமங்களின் ப்ரகாரம் எந்தக் கோவில்களில் எப்படிச் சொல்கிறார்களோ அப்படித்தான் சேவிக்க முடியும். திவ்ய தேச கோவில்களில் கோஷ்டியினரை தவிர வேறு யாரும் சேவிப்பதற்கு அனுமதி கிடையாது. நவீனமாக ஏற்பட்ட கோவில்களில் எல்லாம் எல்லாரும் சேவிக்கலாம் என்று வந்து கொண்டிருக்கிறது. ஆனால் பொதுவாக ப்ராமணர் அல்லாதவரோ அல்லது ராமானுஜ சம்பந்தம் அல்லாதவரோ கோவில்களில் சேவிப்பது பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதாகத் தெரியவில்லை.
“ப்ரபன்னர் ராகவேந்த்ரர் ஶ்லோகம் சொல்லலாமா? மந்த்ராலயாத்திற்குப் போய்சேவிக்கலாமா? அவரை ஆசார்யனாக ஏற்கலாமா?
ப்ரபன்னர்கள் ராகவேந்த்ர ஸ்லோகம் சொல்லுவதோ , மந்த்ராலயம் போவதோ, ராகவேந்த்ரரை ஆசார்யனாக ஏற்றுக் கொள்வதோ, இவையெல்லாம் பண்ணக்கூடாது. ஓரான் வழியாக வந்த குருபரம்பரையில் இருக்கின்றவர்களே ஆசார்யர்கள். அந்தக் குருபரம்பரையில் இருக்கின்ற ஆசார்யன் ப்ரபத்தி செய்து வைத்தால்தான் அது ஸ்ரீமன் நாராயணனுடைய திருவடியில் நம்மைக் கொண்டு போய் சேர்க்கும். அதனால் அப்பேர்ப்பட்ட ஸதாசார்யனிடம் ப்ரபத்தி பண்ணிக் கொண்டவர்கள் அவரையும் அந்த ஆசார்யன் பரம்பரையில் வந்த எல்லா ஆசார்யாளை மட்டும்தான் ஆசார்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆத்தில் பெருமாளுக்கு ஏற்றும் சொக்கப்பானையில் எத்தனை, என்னென்ன தான்யங்கள் வைக்க வேண்டும்.
க்ருஹத்தில் பெருமாளுக்கு ஏற்றும் சொக்கப்பானையில் அவசியம் நெல் இருக்க வேண்டும். நெல்லை ஒரு புதிய வஸ்த்ரத்தில் மூட்டைகட்டி அதை நெய்யில் தோய்த்து வைக்க வேண்டும். சில க்ருஹங்களில் கோதுமை கொள்ளு போன்ற தானியங்களைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது.
க்ருஹத்தில் ஏளியிருக்கும் சாளக்கிராம மூர்த்தி பின்னமாகி விட்டால், அவருக்கு நித்ய திருவாராதனம் செய்யலாமா?இல்லையென்றால் திருவாராதனைக்குப் புதிய சாளக்கிராம மூர்த்தி ஏளப் பண்ணவேண்டுமா? சாளக்கிராம மூர்த்தியை எங்கே எப்படிப் பெறுவது என்பதையும் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன் ?
பொதுவாக பின்னமான மூர்த்தியை அகத்தில் ஏளப் பண்ணிக்கொண்டு திருவாராதனம் செய்வதில் சில பாதகங்கள் உண்டு என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் வேறு சாளக்கிராம மூர்த்தியை ஏளப் பண்ணிதான் திருவாராதனம் பண்ணவேண்டும். அதுவரை அப்படிப் பண்ணிக் கொண்டிருக்கலாம்.
பெருமாள் திருமஞ்சனத்தின் போது உபநிஷத் பாராயணம் செய்கிறார்கள்?
உபநிஷத் பாகம் என்பது சாக்ஷாத் எம்பெருமானைச் சொல்வது. மற்ற பாகங்கள் எல்லாம் ஒரு தேவதையைச் சொல்லி அந்தத் தேவதைக்கு அந்தர்யாமியாக ஒரு பகவானைச் சொல்லும். திருமஞ்சனத்தின் போது சேவிப்பவர்கள் எல்லாரும் ஏதாவது ஒரு பாராயணம் பண்ணவேண்டும் என்கின்றபோது, உபநிஷத் சாக்ஷாத்தாக எம்பெருமானைச் சொல்வதால் அதைச் சேவிப்பார்கள். அதைச் சொல்வது விசேஷம் என்று ஸ்வாமி தேஶிகனே சொல்லியிருக்கிறார். அதனால் அந்த ரீதியில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்
தனுர்மாசத்தில் அதிகாலை திருவாராதனத்திற்கான உபாதானம் அதாவது, மலர்கள், துளசி போன்றவை எப்போது பறிக்க வேண்டும்? அன்றைய தின சூர்யோதயத்திற்கு முன்னா அல்லது முந்தைய நாளா?
துளசியை முதல் நாள் காலையில் க்ரஹித்து வைத்துக்கொள்ளலாம். மதியத்திற்கு மேல் பண்ணக்கூடாது. சூர்யோதயத்திற்கு முன்னும் துளசியை க்ரஹிக்க முடியாது.
புஷ்பங்களை மலர்ந்தபின் க்ரஹித்துக் கொள்ளலாம். சூர்யோதயத்திற்கு முன் ஐந்து மணிக்குச் சில சமயங்களில் புஷ்பங்கள் மலர ஆரம்பித்து விடும். அப்படி மலர்ந்தால் அந்தச் சமயத்தில் நாம் புஷ்பங்களை க்ரஹித்துக் கொள்ளலாம்.
வேதங்களைப் போல திவ்ய பிரபந்தம் சேவிப்பதற்கு ஏதேனும் நிபந்தனைகள், வரைமுறைகள் இருக்கின்றனவா? (ஸ்ரீ உ வே Dr.V.கண்ணன் ஸ்வாமிகள் வேதம் பாராயணத்தின்போது மனதில் கொண்டு பின்பற்ற வேண்டிய பல விஷயங்களைக் குறிப்பிடுகிறார். ஸ்வரூபத்தில் இருப்பது, அனத்யயனம், சந்த்யாகாலம், அஶௌசகாலம் முதலியன போல் வேறு என்ன என்று தெளிவிக்கப் ப்ரார்த்திக்கிறேன்.
அனத்யயனம், சந்த்யாகாலம், அஶௌசகாலம் இந்தச் சமயங்களில் திவ்யப்ரபந்தம் சேவிக்கக்கூடாது என்று கேள்வியில் நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். இதைத் தவிர வேறொன்றும் விசேஷமாக இருப்பதாகத் தெரியவில்லை.
ஆசார்யனின் திருவத்யயனத்தை எவ்வாறு க்ரமமாக கொண்டாடுவது?
ஆசார்யனின் திருவத்யயனத்தை சிஷ்யன் விசேஷமாக கொண்டாட வேண்டும். அதாவது எப்படிப் புத்ரர்கள் தன் பிதாவிற்கு திருவத்யயனம் செய்கிறார்களோ, அதேபோல் நன்றாக விசேஷமாக கொண்டாடலாம். அப்படிக் கொண்டாடியே ஆக வேண்டும் என்கின்ற நிர்பந்தம் எதுவும் கிடையாது. அது இல்லாமல் நாம் சுருக்கமாக பண்ணுவதாக இருந்தால் சேவாகாலம், சாற்றுமுறை ஆசார்ய சம்பாவனை இவையெல்லாம் பண்ணி ஒரு ப்ராமண போஜனம் பண்ணி வைத்து தக்ஷிணை கொடுக்கலாம். இப்படிச் செய்வது வழக்கத்தில் உள்ளது நிறையபேர் இப்படிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் அணிந்த தங்க நகைகளை, துளசி நீரில் நங்கு சுத்தம் செய்தபிறகு அகத்தில் ஏளியிருக்கும் பெருமாளுக்குச் சாத்தலாமா? அவருக்குச் சேர்பித்தபின் நாங்கள் மீண்டும் அணியமாட்டோம் என்ற எண்ணத்தில் அவருக்குச் சாத்தி அனுபவிக்கலாமா?
நாம் அணிந்த தங்க நகைகளை, பெருமாளுக்குச் சாத்துவதற்கு முன் அதற்கென்று ஒரு தனி சுத்தி பண்ணுவது வழக்கம். நாம் அணிந்த தங்க நகையாக இருந்தால், புடம் போட்டு எடுப்பது போன்று ஒன்று செய்வார்கள், அக்னியில் காய்ச்சி எடுப்பது என்று சொல்வார்கள். அப்படிச் செய்துவிட்டு அதன் பின்னே பெருமாளுக்கு சாத்துவது என்று வழக்கம். ஏனென்றால் தங்கத்திற்கு அக்னியினாலே தான் சுத்தி. தங்கம் என்பது திரும்பத் திரும்ப அக்னியில் காய்ச்சப்பட்டு வேரொன்றாகச் செய்யப்பட்டுத்தான் நம் கைக்கு வருகிறது. அதனால் அந்த ரீதியில் அதைப் பண்ண வேண்டும். அதனால் கடைகளில் அப்படிப் பண்ணிக் கொடுச்சொல்லிக் கேட்டால் செய்து கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.
பெருமாளுக்குச் சாற்றிய துளசி மாலைப் பற்றிய சில கேள்விகள்
அவரின் துளசி மாலையை ப்ரசாதமாக ஸ்வீகரித்து ஜபம், தர்ப்பணம், திருவாராதனத்திற்கு உபயோகிக்கலாமா?
துளசி மாலையை தாமரை மணி மாலையோடுதான் அணிய வேண்டுமா? தனியாக அணியக்கூடாதா?
துளசி மாலையை ஒரு நாள் முழுதும் அணியலாமா? அல்பஶங்கை சமயமும் அணியலாமா?
தீட்டுச் சமயங்களில் அணியலாமா?
பெருமாளுக்குச் சாற்றிய துளசி மாலையை ப்ரசாதமாக ஏற்று ஜபம் தர்ப்பணம் திருவாதனத்திற்கு உபயோகப்படுத்தலாமா அதாவது நாம் போட்டுக் கொள்ளலாமா என்று கேட்கிறார் என்று நினைக்கிறேன். பெருமாளுக்குச் சாற்றிய துளசி மாலை நாம் கழுத்தில் அணிந்து கொண்டு பண்ணலாம், ஆனால் நாள் முழுவதும் அணிவது வழக்கம் கிடையாது.
அல்பஶங்கை மற்றும் தீட்டுச் சமயங்களிலும் அணியக்கூடாது.
தனியாக அணியலாம். துளசி மாலையில் ஒரு சின்ன விஷயம் அது என்னவென்று கேட்டால் அதை நிரந்தரமாக சாற்றிக் கொண்டிருக்க மாட்டார்கள். துளசி மாலையில் இரண்டு வகை இருக்கின்றது. ஒன்று துளசி இலையினால் செய்த மாலை மற்றொன்று துளசி மணியினால் செய்யப்பட்ட துளசி மணி மாலை அதாவது துளசி வடம். இந்தத் துளசி வடத்தை வைத்துக் கொண்டு ஜபம் தர்ப்பணம் திருவாராதனம் எல்லாம் பண்ணுவார்களே தவிர துளசி மாலை அதாவது துளசி ஜலத்தை வைத்து, துளசி இலை மாலையை வைத்துக்கொண்டு பண்ணுவது வழக்கம் கிடையாது. உங்கள் கேள்வி எதைப்பற்றி என்று தெரியவில்லை.
துளசி மணிமாலை(துளசி வடம்) என்று இருந்தால் அதைத் தாமரை மாலையுடனும் சேர்த்துக் கொள்ளலாம் இல்லை தனியாகவும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அதுவும் சுத்தமாக இருக்க வேண்டும் தீட்டுச் சமயங்களில் கூடாது, நாம் வெளியில் செல்கிறோம் பேருந்தில் செல்கிறோம் அப்பொழுதெல்லாம் தீட்டு கலக்கும் என்று இருந்தால் அந்தச் சமயங்களிலும் கூடாது.
பெருமாளுக்குப் புதியதாக மரப்பெட்டி வாங்கியுள்ளேன் அதில் பெருமாளை ஏளப்பண்ணுவதற்கு முன் எப்படிச் சுத்தி படுத்த வேண்டும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
பெருமாள் பெட்டியைச் சுத்தமாக அலம்பிவிட்டு புண்யாகவாசனம் செய்துவிட்டு ஏளப் பண்ணலாம்.
மகர ரவி தர்ப்பணம் பற்றிய கேள்வி
அடியேன் பஞ்சாங்கத்தில் சனிக்கிழமை மகர ரவி 43-52 என்று இருக்கிறது. அப்படியென்றால் மகரமாச தர்ப்பணம் என்று பண்ண வேண்டும்? சனிக்கிழமையா? அல்லது ஞாயிற்றுக்கிழமையா?
இந்த வருடம் சனிக்கிழமை இராத்திரி 43-52 ல் மாதம் பிறக்கிறது. ஆகையால் மறுநாள் காலையில் புண்யகாலம். அதாவது மறுநாள் ஞாயிற்றுக்கிழமை1(5 ஜனவரி) சூர்யோதயம் ஆனவுடன், அதாவது அவரவர் இருக்கும் இடத்தில் எப்போது சூர்யோதயம் ஆகிறதோ, ஆன நேரத்திலிருந்து 1 மணி நேரம் 32 நிமிடங்களுக்குள் மாசப்பிறப்பு தர்ப்பணம் பண்ணவேண்டும்.
குறிப்புகள்:
மகர ஸங்க்ரமணத்திற்குப் பிறகு 20 நாழிகை உத்தராயண புண்யகாலம்.
பகலில் மகரஸங்க்ரமணம் ஸம்பவித்தால் அன்றே புண்யகாலம். ஸூர்ய அஸ்தமனத்திற்குப் பிறகு மகரஸங்க்ரமணமானால் மறுநாள் புண்யகாலம்.
ப்ரதோஷ காலத்தில் சந்தியாவந்தனத்தின் போது எத்தனை காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்? 10 அல்லது 28?
ப்ரதோஷ காலத்தின்போது சந்தியாவந்தனத்தின் காயத்ரி ஜபம் 10 முறை செய்யவேண்டும்.
தீர்த்தவாரி உற்சவத்தின் போது நாம் முங்கி எழுவது ஸ்நானம் என்றாகுமா? அதை ஸ்நானஸாடி உடுத்திக் கொண்டு, ஸங்கல்பம் செய்துதான் செய்ய வேண்டுமா?
தீர்த்தவாரி உற்சவத்தின் போது நாம் மூழ்கி எழுவது ஸ்நானம்தான், அதற்கு ஸங்கல்பமும் உண்டு. ஸங்கல்பம் செய்து ஸ்நானம் செய்வதுதான் முறை, அதுதான் விசேஷமும் கூட. ஸ்நானஸாடி உடுத்திக்கொண்டு செய்வார்கள், சிலர் தான் உடுத்திருக்கும் வஸ்த்ரத்துடனேயே செய்வார்கள். ஆக ஸங்கல்பம் செய்துகொண்டு, ஸ்நானாங்க தர்ப்பணம் என எல்லாமே இதற்கு உண்டு.
ஆசாரம் என்றால் என்ன? அதைப் பற்றி விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.
ஆசாரம் என்றால் அனுஷ்டானத்திற்குத் தேவையான சுத்தி என்று சொல்லலாம்.
எந்தத் தர்மானுஷ்டானம் சந்தியாவந்தனம், திருவாராதனம் என அனைத்துக்கும் சுத்தி என்பது முக்கியம். அந்தச் சுத்தியைத்தான் ஆசாரம் என்று சொல்கிறோம்.
சுத்தி இல்லாத அனுஷ்டானம் சரியாக இருக்காது என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
எனது க்ருஹஸ்த வாழ்க்கையில் அடியேன் இதுவரை வைஶ்வதேவம் செய்ததில்லை, இந்த உபதேசத்தை யாரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அடியன் தெரிந்து கொள்ள முயற்சித்தேன். தேவரீர் தயவு செய்து வழிகாட்ட ப்ரார்த்திக்கிறேன்.
தம்பதிகாளாக இருந்துகொண்டு வைஶ்வதேவம் யார் செய்கிறார்களோ அவர்களிடமிருந்து வைஶ்வதேவ உபதேச்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தன்னை சேர்ந்தவர்கள், அல்லது தன்னுடைய பந்துக்கள், அல்லது க்ருஹஸ்தர்களில் வைஶ்வதேவம் செய்யக்கூடிய மஹான்கள் இருக்கிறார்கள் அவர்களிடமிருந்து உபதேசத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
YouTubeல் ஹிந்து மற்றும் ப்ராமணர்கள் அல்லாதவர்கள், சம்ப்ரதாய விஷயங்கள் பற்றி சாதிக்கும் உபன்யாஸங்கள் பார்க்கிறோம். அது சரியா? அவற்றை நாம் கேட்கலாமா?
ஹிந்து மற்றும் ப்ராமணர்கள் அல்லாதவர்கள், ஸம்ப்ரதாய விஷயங்களைப் பற்றி சொல்வதை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நமது ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரையில் ஸதாசார்யன் வழியாக வந்த விஷயங்களை, ஸ்ரீ வைஷ்ணவ பெரியோர்கள் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும். மற்ற எல்லாவற்றையும் தவிர்க்க வேண்டும்.
வேதங்களில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு தனி ஸ்வரம் இருப்பதாகவும், வேதத்தின் எல்லாப் பகுதிகளிலும் அந்த வார்த்தையின் நிகழ்வுகளுக்கு ஸ்வரம் ஒன்றுதான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் ஒரே அனுவாகத்தில் ஸ்வாஹா, பவதி போன்ற சில வார்த்தைகள் வெவ்வேறு ஸ்வரங்கள், எப்படி வருகின்றன? வேதங்கள் ஓர் வழிப் பரம்பரையில் வந்தனவை என்றால், பாடபேதம் எப்படி உருவானது? (அதாவது, ஆந்த்ர பாடம் திராவிடப் பாடம் போன்றவை)?
வேதங்களின் பதங்களுக்குத் தனி ஸ்வரம் உண்டு அது மாறாது, அப்படி மாறி வந்தாலும் அதற்குக் காரணம் இருக்கக்கூடும். அந்தக் காரணங்கள் எல்லாம் வ்யாகரணத்தில் “ஸ்வர ப்ரக்ரியா” என்ற இடத்திலும், “ப்ராதி சாக்யம்” என்ற க்ரந்தத்திலும் இருக்கிறது. பெரியவர்களிடம் கேட்டாலே அது நமக்குப் புரியும்.
வேதத்தில் பாடபேதம் என்பது கிடையாது, ஏனென்றால் அவர்கள் அன்றுமுதல் இன்று வரை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் நீங்கள் சொல்லக்கூடிய பாடபேதங்கள் ஆரண்யகத்தில் மட்டும் வந்திருக்கிறது, மற்றபடி ஸம்ஹிதா ப்ராஹ்மணாதி பாகங்களில் பாடபேதங்கள் கிடையாது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஸ்வரபேதமோ, பாடபேதமோ கிடையாது. சொல்லும் முறையில் வித்யாசங்கள் வரும், சிலர் நீட்டியோ உரக்கவோ சொல்வார்கள். மற்றபடி எவ்வித வித்யாசமும் இல்லை.
க்ருஹத்தில் நித்யபடி சேவாகாலத்தின் போதும், ப்ரபந்த பாராயணத்தின் போதும் திருவிருத்தம் ப்ரபந்தம் சேவிக்கலாமா என்பதை தேவரீர் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
ப்ரபந்த பாராயணத்தின் போது திருவிருத்தம் ப்ரபந்த பாராயணம் சேவிக்கும் வழக்கமுள்ளது. நித்யபடி க்ருஹத்தில் சேவாகாலம் என்பது நாமே வைத்துக்கொள்வதாகும், அதில் திருவிருத்தம் சேவித்தால் தவறில்லை. சேவிக்கக்கூடாது என்ற ஸம்ப்ரதாயமெல்லாம் கிடையாது.
அடியேன் இக்கேள்வியை சென்ற சுதர்சனத்திலும் கேட்டிருந்தேன், ஐயங்கார் பையன் ஒரு வட தேசத்துக்ஷத்ரிய பெண்ணை மணந்திருந்தால் அவனால் ப்ரபந்நர்களான தன் தாய் தந்தை ஆசார்யன் திருவடி அடைந்தபின் அவர்களுக்கு அந்திம ஸம்ஸ்காரம் பண்ணமுடியுமா?
வடதேசத்துக்ஷத்ரிய பெண்ணை மணந்திருந்தாலும் அந்தப் பையன் தன் தாய் தந்தையருக்கு அந்திம ஸம்ஸ்காரம் பண்ணிதான் ஆகவேண்டும், பண்ணாமல் இருக்க முடியாது.
வெளிநாட்டில் வசிப்பதனால் என் தாய் தந்தையற்கு ஶ்ராத்தம் பண்ண சரியான வசதி கிட்டாதனால் சிரமமாக இருக்கிறது. இந்தியா வரும் போது அவர்களின் ஶ்ராத்த திதியன்று எந்த மாதத்திலும் பண்ணலாமா அல்லது அந்த மாதம் அந்த திதியில்தான் பண்ணவேண்டுமா? என்னால் அவர்கள் பரமபதித்த திதியன்று இந்தியா வரஇயலவில்லை.
மாற்றிப் பண்ணுவதற்கான சலுகையை ஶாஸ்த்ரம் கொடுக்கவில்லை. ஶ்ராத்தம் என்பது ஶ்ரத்தையாகச் செய்யவேண்டும். அது என்றைக்கு வருகிறதோ அன்றுதான் செய்யவேண்டும்.
அன்று பண்ணமுடியாமல் தீட்டு வந்துவிட்டால், தீட்டு போகும் அன்று பண்ணவேண்டும். ஒருகால் மறந்துவிட்டால் பண்ணவேண்டும் என்று அதற்கும் ஒரு நாள் சொல்லியிருக்கு. இவை தவிர நாமே ஒருநாள் செய்வதற்கு ஶாஸ்த்ரம் அனுமதி கொடுக்கவில்லை.
கைசிக ஏகாதசி அன்று ப்ரபத்தி ஆனவர்களுக்கு ஷஷ்டியப்தபூர்த்தி வந்தால் என்ன செய்வது? அடியேனுடைய நாத்தனார் பேரன்களுக்குக் கைசிக ஏகாதசி அன்று யஜ்ஞோபவீதம் (பூணூல்) போடுகிறார்கள். அடியோங்கள் தாய்மாமா மாமி, ப்ரபத்தி ஆனபடியால் அன்று போஜனம் செய்ய இயலாது. பல வைஷ்ணவ கல்யாண விசேஷங்களில் அவா குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே போஜனம் செய்ய மடி தளிகைசெய்து சிலரை போஜனம் பண்ணச் சொல்லுகிறார்கள். மற்றவர்களை விட்டு விடுகிறார்கள். கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என்று பொதுப்பந்தியில் போஜனம் செய்ய நிர்பந்தம் ஏற்படுகிறது இதற்கு தீர்வு என்ன என்பதை ப்ரார்த்திக்கிறேன்.
ஏகாதசி அன்று பொதுப்பந்தியில் போஜனம் பண்ணாமல் இருப்பதுதான் சரி. எக்காரணமாகிலும் போஜனம் செய்யக்கூடாது. அவர்கள் நிர்பந்தமாக பண்ணால், ஏகாதசியன்று சாதம் சாப்பிடமுடியாது என்றும், எம்பெருமானுக்கு அம்சை பண்ணாததைச் சாப்பிடமுடியாது என்று, நாமும் அதைவிட நிர்பந்தமாக சொல்லவேண்டும். இவ்விஷயத்தில் அவர்களுக்காகத் தயங்கி ஒரு முடிவு எடுக்கவேண்டாம் என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கு. ஆகையால் தாராளமாக சாப்பிடமுடியாது என்று சொல்லி அன்று நாம் என்ன செய்யவேண்டுமோ அதற்கேற்றார் போல் செய்துகொள்ளலாம்.
சுபக்ருது ஐப்பசி மாதம் அடியேன் கேட்டகேள்வியின் தொடர்ச்சி. பஞ்சாங்கமே ப்ரதானம் ஆகையால் சந்திரனைப் பார்க்க முடியாவிட்டாலும் க்ரஹணகாலத்தை அனுசரித்து தர்ப்பணம் பண்ணவேண்டும் என்று வித்வான்கள் பதிலளித்திருந்தனர்.அடியேனின் கேள்வி, இது விமோசன ஸ்நானத்திற்கும் பொருந்துமா? அதாவது மேகமூட்டமாக இருந்து சந்திரனைப் பார்க்க முடியாமல் போனாலும் விமோசன ஸ்நானம் செய்யவேண்டுமா?
உ.தா: ஜூலை 28,2018 அன்றைய சந்திரக்ரஹண காலம் 3.49am தொடங்கி விமோசனம் 6.21am ஆனால் காலை சந்திரனை காணமுடியவில்லை. இப்படிப் பட்ட நேரத்தில் காலை விமோசன ஸ்நானம் செய்துவிட்டு நம் நித்யகர்மானுஷ்டானங்களைத் தொடரலாமா? அல்லது அன்று மாலை சந்திரன் தெரியும்வரை காத்திருந்துதான் மேலே நித்யகர்மாக்களைச் செய்யவேண்டுமா?
சூர்ய க்ரஹணமானாலும், சந்திர க்ரஹணமானாலும் க்ரஹணம் விட்டபின் சூர்யனையோ, சந்திரனையோ பார்த்துவிட்டுதான் விமோசன ஸ்நானம் பண்ணவேண்டும் என்பது பொதுவிதி.
சில சமயம் க்ரஹணம் விட்டபின் அல்லது விடும்சமயம் அவர்கள் அஸ்தமனித்து விடுவார்கள், அந்நேரத்தில் அவர்களைப் பார்ரக்கமுடியாது. இதுபோன்ற நேரத்தில் மறுபடியும் அவர்கள் உதிக்கும்வரை காத்திருந்து அவர்களைப் பார்த்துவிட்டுதான் சாப்பிட வேண்டும்.
வேறுசில சமயம் உதயசமயத்தில் மேகமூட்டம், மழைக்காரணமாக ஒருவேளை சூர்ய, சந்திரனைப் பார்க்கமுடியாமல் போனால் அவர்கள் உதயமாகியிருப்பார் என்று பஞ்சாங்கம் துணைக்கொண்டும், மேலும் அவர்களின் ப்ரகாசம் நமக்குத் தெரியுமல்லவா அதைக்கொண்டும் விமோசன ஸ்நானம் பண்ணலாம் என்று தோன்றுகிறது.
ஏன் வடகலையார் மணவாளமுனிகளின் திருநக்ஷத்ரம் கொண்டாடுவதில்லை? அதேபோல் அவர்கள் ஸ்வாமிதேஶிகனைக் கொண்டாடுவதில்லை? மணவாளமாமுனிகள், ஸ்வாமி தேஶிகன் பற்றி ஏதேனும் க்ரந்தத்தில் குறிப்பிட்டுள்ளாரா? மேலும் நம் ப்ரதமாசார்யன் ஸ்வாமிதேஶிகன் ஆனபடியால் அப்படிச் செய்வதில்லையா? அவர்களும் அதேபோல் ப்ரதமாசார்யன் மாமுனியானபடியால் ஸ்வாமிதேஶிகனின் திருநக்ஷத்ரத்தைக் கொண்டாடுவதில்லையா?
இருவரும் ஆசார்யர்கள்தான், ஆனால் கூட ஸம்ப்ரதாயத்தில் அபிப்ராய பேதம் என்பது நிறைய வந்து விட்டபடியால், தேஶிக ஸம்ப்ரதாயத்தில் ஸ்வாமிதேஶிகன் சொன்ன சில தர்மங்கள், சில அனுஷ்டானங்கள் மணவாளமாமுனிகள் ஏற்கவில்லை என்று இருக்கிறது. அதே போல் அவரின் பக்ஷம் நம் தேஶிக பக்ஷத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. இக்காரணத்தில் பொதுவாக ஆழ்வார் ஆசார்யர்கள் திருநக்ஷத்ரத்தின் போது இருக்கும் ஒரு ஶ்ரத்தை இங்கே குறைகிறதே தவிர, த்வேஷம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. கொண்டாடவே கூடாது என்றெல்லாம் இல்லை.
மணவாளமாமுனிகள் சில க்ரந்தத்தில் தூப்புல் பிள்ளை அருளிச்செய்வார் என்று ஸ்வாமி தேஶிகனைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஸ்வாமி தேஶிகன், மணவாளமாமுனிகள் பற்றி குறிப்பிட வாய்ப்பில்லை ஏனென்றால் அவர் மாமுனிக்கு முன்னரே இருந்தவர்.
புரட்டாசி மாதம் பால் காய்ச்சி, வீடு மாறலாமா?
பொதுவாக புரட்டாசி மாதம் பால் காய்ச்சி, வீடு மாறுவது கிடையாது.
எங்கள் க்ருஹத்தில் வழக்கம் இல்லை , தெரிந்து கொள்ளவதற்காக, காக்காக்கு சாதம் வைக்கறது பற்றி விளக்கம் வேண்டும், பெண்கள் அதை செய்வது சரியா?
பெண்கள் காக்கைக்குச் சாதம் வைப்பது வழக்கம்தான்.
நமஸ்காரம், பரந்யாஸத்திற்குப் பிறகு கட்டாயம் தவிர்க்க வேண்டியவை எவை?
பரந்யாஸத்திற்குப் பிறகு கட்டாயம் தவிர்க்க வேண்டியவை தேவதாந்தர ஸம்பந்தமும் பாகவத அபசாரமுமாகும்.
க்ரஹண காலத்தின் சமயம் வேத பாராயணம் செய்யலாமா?
க்ரஹண கால சமயத்தில் வேத பாராயணம் செய்யக் கூடாது. அதே சமயம் கோயில்கள் ஏதாவது விசேஷமான உற்சவம், புறப்பாடு அது போல் ஏதாவது இருந்தால் அப்போது கோஷ்டியாக கோயில்களில் செய்யலாம்.
ப்ரபத்திக்கு முன் சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதி பொம்மை வைத்து ஆராதனம் செய்து வந்தோம். ப்ரபத்திக்குப் பின் ஹயக்ரீவர் ஆராதனம் மட்டுமே. சரஸ்வதி பொம்மையை என்ன செய்வது? “
ஹயக்ரீவ ஆராதனத்தின் பொழுது கொலு வைக்கக்கூடிய பல க்ருஹங்களில் லக்ஷ்மீ சரஸ்வதி பொம்மைகளும் இருக்கும். அந்தப் பொம்மைகளுக்கும் சேர்த்து புஷ்பம் சமர்ப்பிப்பது, அக்ஷதை சமர்ப்பிப்பது போன்ற உபசாரங்கள் எல்லாம் பண்ணுவது வழக்கத்தில் தான் இருக்கின்றது. சரஸ்வதி தேவி என்பவள் ஹயக்ரீவருக்கு அடியவள்தான்.
" दाक्षिण्यरम्या गिरिशस्य मूर्तिः
देवी सरोजासनधर्मपत्नी I
व्यासादयोऽपि व्यपदेश्यवाचः
स्फुरन्ति सर्वे तव शक्तिलेशैः॥ "
என்று ஸ்வாமி தேஶிகன் சொல்லியிருப்பதனால் ,
சரஸ்வதியினுடைய சக்தி எல்லாம் ஹயக்ரீவருடைய சக்தியினுடைய லவலேஶத்திலிருந்துதான் வருகின்றது என்று ஸ்பஷ்டமாகவே இருக்கின்றது. அந்த ரீதியில் ஹயக்ரீவருடைய அடியவளாக அந்த உபசாரங்கள் எல்லாம் அவளுக்கு ஸமர்ப்பிப்பது தவறு இல்லை என்று தோன்றுகிறது. பல க்ருஹங்களில் இது வழக்கத்தில் இருப்பதும் தெரிகிறது.
திருஷ்டி போன்றவற்றை ஒரு ப்ரபந்நனின் நம்பிக்கை எவ்வாறு இருக்க வேண்டும். அவர்களின் கண்திருஷ்டி நம்மைப் பாதிக்காமல் இருக்க பெரியவர்கள் (கற்பூரம், உப்பு மிளகு) சுத்திபோடுவது என்ற வழக்கம் வைத்துள்ளார்கள், அதை ஒரு ப்ரபந்நன் பின்பற்றலாமா?
த்ருஷ்டி சுற்றிப் போடுவது என்பது கோவில்களில் பெருமாளுக்கு இருக்கின்ற ஒரு வழக்கம் தான். பெருமாள் புறப்பாடு முடிந்து திரும்பியபின் அவருக்கு த்ருஷ்டி கழித்தபின் உள்ளே ஏளப் பண்ணுவது வழக்கமாக இருக்கின்றது. இன்றும் பல கோவில்களில் சேவிக்கலாம். அதே போல் க்ருஹங்களில் பெரியோர்கள் எல்லாம் சின்னவார்களுக்கு த்ருஷ்டி கழிப்பது வழக்கத்தில் இருக்கிறது. கற்பூரம் சுற்றிப் போடுவது, உப்பு மிளகு சுற்றிப் போடுவது என்று பெரியோர்கள் வைத்துக் கொண்டுள்ளனர்.
ஒரு ப்ரபந்நனுக்கு த்ருஷ்டி தோஷம் வந்துவிடும் என்கின்ற பயம் தேவை இல்லை. எம்பெருமான் காப்பான் என்கின்ற மஹாவிஶ்வாசம் கட்டாயம் இருக்கவேண்டும். இப்படி த்ருஷ்டி கழிப்பது என்கின்ற விஷயத்தை எம்பெருமான் நம்மை காப்பான் என்று நமக்கு இருக்கும் விஶ்வாசத்தை ஞாபகப் படுத்திக் கொள்வதற்காகத்தான் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பெரியோர்கள் வழக்கத்தில் அதை த்ருஷ்டி கழிப்பதற்கு என்று வைத்துக்கொள்ளாமல் எம்பெருமான் நம்மைக் காத்தருள்வான் என்கின்ற நம்பிக்கையை கூட்டிக் கொள்வதற்கான ஒரு காரியமாக வைத்துக் கொண்டுள்ளார்கள் என்றே தோன்றுகிறது.
நமஸ்காரம், சில சமயங்களில் சிலருடைய தீய பார்வை மற்றும் எண்ணங்களிடம் இருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் காத்துக் கொள்ள எண்ண செய்வது?
எம்பெருமானுடைய அடியார்களை எந்தவிதமான தீய பார்வையோ, தோஷமோ எதுவுமே செய்யாது. அதிலிருந்து காத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமிருந்தால், ஸுதர்ஶனாழ்வாரை த்யானிக்கலாம், ஸுதர்ஶனாஷ்டகம் சேவிக்கலாம், மேலும் அவரை ப்ரதக்ஷிணம் செய்யலாம்.
அடியேன் பூனாவில் உள்ளேன்.அடியேனுக்கு ப்ரபத்தி ப்ரக்ருதம் அழகியசிங்கரிடம் ஆனது.இங்கே சந்த் ஞானேஸ்வர் மிக பிரபலம். ஜீவ சமாதி உள்ளது. அவர் விஷ்ணு பக்தர். அடியேன் அங்கே போகலாமா?
இக்காலத்தில் பல இடங்களுக்குச் சுற்றுலா போய்விட்டு வருவதென்பது வழக்கத்தில் இருக்கிறது. சந்த் ஞானேஶ்வர் என்பவர் மிகப்பெரிய விட்டல பக்தர், அவரின் சமாதிக்குப் போய் சேவிப்பதென்பதெல்லாம் உசிதமில்லை. அந்த ஆலந்தி என்கிற ஊரில் ஒரு விட்டலன் கோயில் இருக்கிறது அங்கு போவதோ, அந்த ஊரைச் சுற்றி பார்ப்பதோ தவறில்லை.
புரட்டாசி மாதத்தில் திருவிளக்கு (மாவிளக்கு) ஏற்றும் வழக்கம் உண்டு.ஆனால் ப்ரபத்தி ஆனவர்கள் விளக்குஏற்றி வைக்காமல் மாவை கலந்து பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணால் போதும், இல்லையென்றால் பிரார்த்தனையாக அது ஆகிவிடும் என்று சொல்கிறார்கள். குழப்பத்தை தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன் அடியேன். மேலும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஒன்று நவராத்திரி கொலு அல்லது மஹாளயபக்ஷம் அல்லது திருமலையில் பிரம்மோற்சவம் வரும் தினங்களில் சில பேர் ஏற்றக்கூடாது என்றும் ஐப்பசி ஶ்ரவணத்தில் ஏற்றலாம் என்று சொல்கிறார்கள்.தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன் அடியேன்.
புரட்டாசி சனிக்கிழமையில் ப்ரபந்னர்கள் விளக்கு அவசியம் ஏற்றலாம். அதில் எந்தவித தோஷமும் தவறும் கிடையாது. வெறும் மாவை கலந்து அம்சை பண்ணவேண்டும், ஏற்றக்கூடாது என்றெல்லாம் கிடையாது. நிறைய பெரியோர்கள் க்ருஹங்களில் விளக்கேற்றி நன்றாகக் கொண்டாடுகிறார்கள். அதனால் அப்படிச் செய்யலாம்.
அதைத் தவிர ப்ரஹ்மோற்சவம் நடக்கும் சமயங்களில் சில க்ருஹங்களில் விளக்கேற்றுவதில்லை. அது அவரவர் க்ருஹ வழக்கம். அப்படி வழக்கமில்லை என்றால் ப்ரஹ்மோற்சவம் நடக்கும் சனிக்கிழமையில் ஏற்ற வேண்டாம். நவராத்திரியின் போது ஏற்றுவது என்பது சில க்ருஹங்களில் வழக்கமாக இருக்கின்றது. அதுவும் தவறு கிடையாது. அதாவது சில க்ருஹங்களில் விளக்கேற்றுவதற்கு, புரட்டாசி சனிக்கிழமை நவராத்திரியில் வரும் சனிக்கிழமையாக இருக்கவேண்டும் என்கின்ற பழக்கமே இருக்கின்றது. அதனால் அதிலும் தவறு கிடையாது. மஹாளயபக்ஷத்தில் வரும் சனிக்கிழமையில் பொதுவாக ஏற்றுவது இல்லை ஆகையால் அதைத் தவிர்க்கலாம்.
இந்தக் காரணங்களால் ஐப்பசி சனிக்கிழமையில் விளக்கேற்ற வேண்டும் என்பது எந்த இடத்திலேயும் வழக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை .புரட்டாசி சனிக்கிழமையில் ஏற்றுவதுதான் திருவேங்கடமுடையானுக்கு உசத்தி . அப்பேர்ப்பட்ட சனிக்கிழமை கட்டாயம் நேரும். அந்தச் சமயத்தில் அவசியம் ஏற்றலாம்.
அடியேன் சமீபத்தில் ஒரு இராமானுஜ குலம் என்ற கோஷ்டி எம்பெருமான் கோயிலில் திவ்ய ப்ரபந்தம் சேவிப்பதையும், அதில் ஒருவர் எம்பெருமான் திருமஞ்சனம் சமயம் வேதவிண்ணப்பம் செய்வதையும் கண்டேன். இராமானுஜ சம்பந்தம் பெற்றபின் ஒருவரின் வர்ணாஶ்ரம தர்மமும் மாறிவிடுமா?
இராமானுஜ அடியார்களாக ஆனபிறகு வர்ணாஶ்ரம தர்மம் கட்டாயாமாக மாறாது. அவர்களுக்கு வைஷ்ணவத்வம்தான் வருமே தவிர, வர்ணமோ, ஆஶ்ரமோ மாறாது. அதன் தர்மத்தை மீறுவது தவறாகும்.
a. ப்ரம்ஹா மற்றும் சிவனுக்கு நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பாகவதர்கள்/ஸ்ரீவைஷ்ணவர்கள் என்ற ஸ்தானம் வழங்கப்பட்டுள்ளதா?
b. அவர்கள் நாராயணனுக்கு ஸ்தோத்திரம், கைங்கர்யம் செய்பவர்கள்/அடியவர்கள் என்று இதிஹாச புராணங்கள் மூலம் தெரிகிறதே. அவ்வாறு இருந்தால் ஸ்ரீவைஷ்ணவர்களாகிய நாம் அடியவர்க்கு அடியவர்கள் என்று எண்ணி அவர்களைத் துதிப்பதில்லையே ஏன்?
c. அவர்கள் நாராயணன் ஒருவன் தான் பரமாத்மா என்ற தத்துவத்தை உணர்ந்தவர்கள் போல் தெரிகிறதே, அவ்வாறு இருக்க அவர்கள் ஏன் அந்தத் தத்துவத்தை அவர்களின் பக்தர்களுக்குக் காட்டுவதில்லை?”
ஆம், ப்ரம்ஹா மற்றும் சிவனுக்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் என்ற ஸ்தானம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சொல்லியுள்ளது. ஸ்வாமி தேஶிகனும் ப்ரதம ஸ்ரீவைஷ்ணவன் என்பதாகக் குறிப்பிடுகிறார்.
அடியவர்க்கு அடியவர் என்று கேள்வியில் குறிப்பிட்டதுபோல் ஸ்தோத்ரம் இருந்தால் பண்ணலாம். வேதத்தில் சில மந்த்ரங்கள் இருக்கு, புராணத்திலும் அந்த மாதிரி சில ஸ்துதிகள் எல்லாம் இருக்கின்றது, நாம் அந்த மந்த்ரங்களையும், புராணத்தில் இருக்கின்ற ஸ்துதிகளையும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் அடியவர்களுக்கு அடியவர் என்று நினைத்து நாமாக ஸ்தோத்ரம் பண்ணுவதோ, நாமாக கோயில்களுக்குப் போய் சேவிக்கின்றதோ கூடாது. இதெல்லாம் ஒரு விதமான ஒரு பாதுகாப்புக்காக பண்ணியிருக்கிறார்கள். அதாவது புத்திமாறிப் போய்விடக் கூடாது. நாராயணனே பரதத்துவம் என்பதில் நமக்கு எந்த விதத்திலுமே கொஞ்சம்கூட சமரசமே இருக்கக்கூடாது. அதனால் இதிஹாச புராணங்களில் வேதங்களில் எந்த அளவு நமக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்களோ அதைமட்டும் நாம் செய்தால் போதும். மற்றது எதுவும் செய்யவேண்டியது இல்லை.
புராணத்தில் நாராயணன்தான் பரதத்துவம் என அவர்கள் காட்டுகிறார்கள் என்றுதான் இருக்கின்றது. கொஞ்சம் மெதுவாக காட்டுவார்கள். உடனே காட்டிக்கொடுக்க மாட்டார்கள். 7/8 ஜன்மம் அல்லது பல ஜன்மங்கள் எடுத்த பின்பு எம்பெருமானிடத்தில் சேர்த்து விட்டு விடுவார்கள் என்று இருக்கின்றது. பல புராணங்களில் இந்த விஷயம் இருக்கின்றது. எத்தனையோ ஜன்மத்தில் ருத்ரனுடைய பக்தனாக இருந்தவர், பிறகு பெருமாளுடைய பக்தனாக மாறியிருக்கிறார் என்றெல்லாம் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. அவரவரின் ஶ்ரத்தைக்கெல்லாம் ஏற்றார் போல், அததற்கான முறை என்று ஒன்று இருப்பதனால அவர்கள் உடனடியாக காட்டாமல் மெதுவாகத்தான் செய்வார்கள்.
அல்ப த்வாதசி காலங்களில் மாத்யாஹ்நிகம் செய்த பிறகுதான் பாரணை பண்ணவேண்டுமா? (காலம் அவசியம் இல்லையா)
ஆம் அல்ப த்வாதசி காலங்களில் மாத்யாஹ்நிகம் செய்த பிறகுதான் பாரணை பண்ணவேண்டும் என்று இருக்கிறது. அதனால் அன்று சூர்யோதயத்திற்குப் பின் சந்த்யாவந்தனம், மாத்யாஹ்நிகம் எல்லாம் பண்ண முடிந்தால் வேகமாக அவற்றைப் பண்ணிவிட்டு சாப்பிடலாம். அப்படி இல்லாவிட்டால் கூட மாத்யாஹ்நிகத்தை முன்னாடியே பண்ணிவிட்டுத்தான் சாப்பிட வேண்டும் என்று இருக்கின்றது.
ஒருவேளை காலம் தவறி சூர்யோதயத்திற்கு முன்னே மாத்யாஹ்நிகம் பண்ண வேண்டும்படி ஏற்பட்டுவிட்டால், மாத்யாஹ்நிகம் சமயத்தில் மறுபடியும் பண்ண வேண்டும் என்று ஒன்றும் உண்டு.
பொதுவாக வடகலையார்கள் ஸ்வாமி தேஶிகனைப் பின்பற்றும் போது, அஹோபில மடம், ஆண்டவன் ஆஶ்ரமம் என்ற ஸம்ப்ரதாயங்கள் இருக்கும் காரணம் என்ன? பொதுவாக வடகலையார்கள் ஸ்வாமி தேஶிகனைப் பின்பற்றும் போது, அஹோபில மடம், ஆண்டவன் ஆஶ்ரமம் என்ற ஸம்ப்ரதாயங்கள் இருக்கும் காரணம் என்ன?
ஸ்வாமி தேஶிகனுக்கு ஒரே சிஷ்யர் ஒரே ஸம்ப்ரதாயம் என்று இல்லை. நிறைய சிஷ்யர்கள் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக நிறைய பரவி இருக்கிறது.
இது தேஶிகருக்கு மட்டும் இல்லை, பகவத் இராமானுஜர் காலத்திலிருந்தே, இராமானுஜர் வரைக்கும் ஒரே ஸம்ப்ரதாயம். இராமானுஜருக்குப் பின் அவருக்கு அநேக சிஷ்யர்கள். அவர் 74 ஆசார்யர்களை நியமித்தார் என்று இருக்கின்றது. அதனால் 74 விதமாக அந்தப் பரம்பரை வருகிறது. அப்படி வரும்போது சின்னச்சின்ன விஷயங்களில், அனுஷ்டானம் முதலான விஷயங்களில் அபிப்ராய வித்யாசம் வரும். அது வந்ததால் அதுவே ஒரு ஸம்ப்ரதாயமாக மாறிப்போய் விடுகிறது. இதெல்லாம் ஶாஸ்த்ர அனுமதம். ஸ்வாமி தேஶிகனே இதைச் சொல்லியிருக்கிறார். அதாவது “தேச காலாதி பேதத்தினாலே ஆசார அனுஷ்டான பேதங்கள் எல்லாம் ஶாஸ்த்ர சம்மதம்” என்று.
அதனால் தேசத்திலேயோ, காலத்திலேயோ இதை அனுசரித்து ஸம்ப்ரதாயத்தில், ஆசாரத்தில், அனுஷ்டானத்தில் வித்யாசங்கள் எல்லாம் வரும். எல்லா தேசத்திலும் ஒரே மாதிரி ஆசாரம் இருக்காது என்று ஶாஸ்திரமே இதை ஒத்துக் கொண்டுள்ளது. அந்த ரீதியில் இது ஶாஸ்த்ர சம்மதம்தான். ப்ரதானமான விஷயம் என்னவென்றால் ஸ்ரீமன் நாராயணனே பரதத்துவம். அவனிடத்தில் ஶரணாகதி பண்ண வேண்டும். தேஶிகன் ஸம்ப்ரதாயத்தில் அதில் நமக்குள் எந்த ஒரு வித்யாசமும் கிடையாது.
தர்ப்பணதிற்கு முன் பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிக்கலமா?
தர்பணத்திற்கு முன் பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிக்கும் வழக்கமில்லை. பெருமாள் திருவாராதனம் எல்லாம் முடித்துவிட்டு, தர்ப்பணம் முடித்து விட்டுத்தான் பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிப்பது வழக்கம்.
ஶ்ரார்த்த தினம் அன்று திருவாராதனத்தில் சாளக்கிராமத்திற்குத் திருமஞ்சனம் செய்யக் கூடாது என்று ப்ருஹஸ்பதி கூறுகிறார். இது சரியா?
ஶ்ரார்த்த தினம் அன்று திருவாராதனத்தில் சாளக்கிராமத்திற்குத் திருமஞ்சனம் செய்யக்கூடாது என்று கிடையாது. ஸ்மார்த்த ஸம்ப்ரதாயத்தில் அவர்கள் செய்ய மாட்டார்கள் என்று கேள்வி. ஆனால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸம்ப்ரதாயத்தில் அவசியம் அன்று சாளக்ராமத்திற்குத் திருவாராதனமும், திருமஞ்சனமும் பண்ண வேண்டும்.
பித்ரு தோஷம் என்றால் என்ன? ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் ஆகி, தர்ப்பணம், ஶ்ராத்தம் தவறாமல் செய்யும் ஒரு ப்ரபந்நன் பித்ரு தோஷம் பற்றி கவலைப்பட வேண்டுமா?
பித்ரு தோஷம் என்று ஜாதகத்தில் காண்பித்துக் கொடுப்பதாக சொல்கிறார்கள். பித்ரு கார்யங்களை அதாவது ஶ்ரார்த்தம், தர்ப்பணம் முதலியவைகளை, நாமோ அல்லது நம் முன்னோர்கள் சரியாகப் பண்ணவில்லை என்றாலோ, துர்மரணம் முதலானது எல்லாம் வரும் போதோ, அந்தப் பித்ருக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விடுகிறது. எப்போதுமே நாம் செய்யும் ஶ்ரார்த்தாதிகளினால்தான் அவர்களுக்கு த்ருப்தி வரவேண்டும். அதனால் பித்ருக்களுடைய அதிருப்தியானது குடும்பத்தை நேராக பாதிக்கின்றது. அதனால் குழந்தைகள் பிறக்காமல் இருத்தலோ, குழந்தைகளுக்கு தோஷம் இருத்தலோ காண்பிக்கிறது. ஜாதகத்திலும் காண்பிக்ககிறது என்பதாகச் சொல்வார்கள். இப்படி ஒன்று ஶாஸ்த்ரத்தில் இருப்பது வாஸ்தவம்.
ஶரணாகதி பண்ணியவர்கள், அதிலும் குறிப்பாக தவறாமல் ஶ்ரார்த்தம் தர்ப்பணம் எல்லாம் சரியாகப் பண்ணுபவர்கள் இந்தப் பித்ரு தோஷத்தை பற்றி பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. பெருமாள் இருக்கின்றார், அவர் பார்த்துக் கொள்வார். அதனால் ப்ரச்சினை ஒன்றும் இருக்காது. குடும்பத்தில் இன்னும் பெரிய அளவில் பாதிப்பு என்று இருந்தால் நம் ஸ்ரீ வைஷ்ணவ பாதிக்காத ரீதியில் நாம் ஏதாவது பரிகாரம் பண்ணலாம். இராமேஸ்வரம் போய் தர்ப்பணம் செய்வது என்று சொல்வதெல்லாம் நம் பெரியோர்கள் யாரும் செய்வது கிடையாது. வேறு ரீதியில் நாம் ஏதாவது பண்ணலாம்.
க்ரஹணம் பற்றி சில கேள்விகள்
1) க்ரஹண காலத்தில் கொடுக்கும் தானத்திற்கு தோஷம் உண்டா? நாம் வேறு பாகவதர் தரும் தானத்தை ஸ்வீகரிக்கலாமா?
2) புண்யகாலம் திருமஞ்சனம் மிகவும் விசேஷம் என்று இருக்கும்போது திருக்கோயில்கள் மூடப்படுவதன் தாத்பர்யம் என்ன?
3) க்ரஹண காலத்தை புண்யகாலம் என்கிறோம் அப்படியிருக்க க்ரஹணம் விட்ட பின் சுத்தமண்டல ஸ்நானம் ஏன் செய்கிறோம். க்ரஹணகால தீட்டு என்று ஏன் கூறுகிறார்கள்?
4) பொதுவாக விமோசன ஸ்நானம் செய்தபின் நாம் கடைபிக்க வேண்டிய அனுஷ்டானங்கள் என்ன?
க்ரஹண காலத்தில் கொடுக்கும் தானத்திற்கு தோஷம் கிடையாது. க்ரஹண காலத்தில் தானம் கொடுக்கலாம், தானம் வாங்கலாம் ஒரு தோஷமும் (இருவருக்கும்) ஒட்டாது.
க்ரஹண காலத்தில் திருவாராதனம், திருமஞ்சனம் இதெல்லாம் விசேஷம் என்று இருக்கின்றது. கோயில்களில் எல்லாம் பல ஸம்ஹிதைகள் இருக்கிறது, அதில் பல ஸ்ம்ப்ரதாயங்கள் உண்டு. பாஞ்சராத்ர ஸம்ஹிதைகளே நிறையஉண்டு. அந்தந்த ஸம்ஹிதைகளை அனுசரித்து அந்தந்தக் கோயில் ஆசாரம் என்பதும் நிறைய உண்டு. ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் அதை அனுசரித்து அவர்கள் அந்த மாதிரி செய்கிறார்கள். பெருமாளுக்குட்பட சுத்தி செய்ய வேண்டும். இதெல்லாம் எத்தனையோ ஆகமங்கள், ஶாஸ்த்ரங்கள், ஸ்ம்ப்ரதாயங்கள். இவை எல்லாமே ஶாஸ்த்ர அனுமதம் என்று வைத்துக் கொள்ளலாம்.
புண்யகாலம் என்றால் மிகவும் விசேஷமான காலம் என்கின்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. அந்த க்ரஹண காலத்தில் ஸ்நானம், தர்ப்பணம் முதலானது எல்லாம் விசேஷம் என்று இருக்கின்றது. அந்த அடிப்படையில் அது புண்யகாலம் என்று சொல்லியிருக்கின்றது. அதைத்தவிர க்ரஹண கால தோஷம் என்று ஒன்று உண்டு. அந்தத் தோஷம் அதில் எப்போதுமே இருந்து கொண்டு இருக்கிறது. ஒரு விதத்தில் அது புண்யகாலம் என இருக்கிறது என்பதற்கு உதாரணமாக தானத்தை எடுத்துக் கொண்டால் சாதாரண காலத்தில் செய்யும் தானத்தை விட க்ரஹண காலத்தில் செய்யும் தானம் மிகவும் விசேஷமானது. அதனால் ஸ்நானம், தர்ப்பணம், திருவாராதனம், ஜபம், தானம் இவையெல்லாம் விசேஷமாக அதில் நடக்கின்றபடியாலும், விசேஷமான பலனைக் கொடுக்கும் என்று சாஸ்த்ரம் சொல்லியிருக்கும் படியினால் அதற்கு புண்யகாலம் என்று பெயர். அதே சமயத்தில் க்ரஹண காலத்திற்கு மற்ற விதத்தில் பார்க்கும் போது அதற்கு தோஷம் என்று ஒன்று உண்டு. அதனால் இது ஒரு விதத்திலும், அது ஒரு விதத்திலும் ஆகும். அதில் ஒரு விரோதமும் கிடையாது.
விமோசன ஸ்நானம் செய்த பின் ஒன்றும் கிடையாது. அன்றைய தின அனுஷ்டானங்களைத் தொடர்ந்து பண்ண வேண்டும்.
“வ்ருத்தி தீட்டு என்று வந்தால் ஶ்லோகம், பாசுரம் சேவிக்கலாமா? ‘கோயிலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வேறு எந்த மாதிரி வேண்டலாம்? அல்லது.வ்ருத்தி தீட்டில் சாதாரணமாக எப்பொழுதும் போல் ஶ்லோகங்களும் ,திருவாராதனம், தவிர, ஸேவிக்கலாமா?”
வ்ருத்தி தீட்டு வந்தால் தேஶிகர் ஸ்லோகங்கள் சொல்லலாம். பாசுரங்கள் எல்லாம் சேவிக்கலாம். வ்ருத்தி தீட்டில் சாதாரணமாக எப்பொழுதும் போல் திருவாராதனம் தவிர ஶ்லோகங்கள் ஸேவிக்கலாம்.
எங்கள் அகத்து வழக்கப்படி கட்டுமாவடி வீரன்னார் கோயிலில் குழந்தைக்கு முடிகொடுத்து விட்டு பின் திருமலைக்கு முடிகாணிக்கை செலுத்தும் வழக்கம். ஆனால் இன்று அனைவருமே ஸ்ரீமத 46ஆம் பட்டம் அழகிய சிங்கரிடன் பரந்யாஸம் பெற்றவர்கள் ஆகையால் திருவேங்கடமுடியானுக்கு கொடுத்தால் போதுமா என்ற அடியேனின் சந்தேகத்திற்கு முன்னரே வித்வான்கள் பதிலளித்தனர். ஆனால் எங்கள் அகத்து பெரியவர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் அகத்து வழக்கத்தை எப்படி மாற்றுவது என்று தயங்குகிறார்கள். அவர்களுக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது என்று தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
“ஸர்வ தேவ நமஸ்கார: கேஶவம் ப்ரதிகச்சதி” என்று சொல்லும் ரீதியில் தேவாதிதேவனான எம்பெருமான் இருக்கும்போது, அவருக்கு ஸமர்ப்பித்தால் இவர்களுக்கு திருப்திவரும். “அங்காந்நந்யா தேவதா:” என்று வேதம் சொல்கிறது. அதாவது நாம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்றால் பகவானுக்கு ஸமர்ப்பித்தால் மற்ற தேவர்களுக்கு ஸமர்ப்பிக்கவில்லையே என்ற கோபம் வரும் என்று. உண்மை என்வென்றால் எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்தால் எல்லாருக்கும் திருப்திவரும். எல்லா தேவர்களும் பகவானைச் சேர்ந்தவர்கள் என்று எல்லா ஶாஸ்த்ரங்களும் சொல்லியிருக்கிறது.
ஆகையால் பகவானுக்கு ஸமர்ப்பித்தால் பகவானுக்கு திருப்தி வரும். எம்பெருமான் திருப்தியடைந்தால் மற்றவர்களுக்கு கோபம் வராது, திருப்திதான் வரும் என்று இருக்கிறது. மேலும் அவர்கள் அனைவரும் எமெருமானுக்கு அங்கமாக இருக்கின்றபடியால் கோபிக்க மாட்டார்கள், சந்தோஷம் அடைவார்கள் என்று இருக்கிறது. இதை எடுத்துச் சொல்லலாம்.
பகவானுக்கு ஸமர்ப்பிப்பது வேரில் ஜலம் ஸமர்ப்பிப்து போலே என்று புராணங்கள் சொல்கிறது. வேரில் ஜலம் சேர்த்தால் மரத்தில் இருக்கும் புஷ்பம், இலை என்ற அனைத்துக்கும் போய் சேரும். அதுபோல்தான் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதும்.
நாம் அஸ்மத் குருப்யோ நம: , அஸ்மத் பரம குருப்யோ நம: என்று ப்ரார்த்திக்கும்போது எந்த ஆசார்யனை த்யானிக்க வேண்டும்? அடியேனுக்கு ஸ்மாஶ்ரயணம் ஸ்ரீமுஷ்ணம் பெரியாண்டவனிடமும் பரந்யாஸம் ப்ரக்ருத ஆண்டவன் ஸ்வாமிகளாலும் செய்விக்கப்பட்டது. ஆகையால் இக்கேள்வி.
இந்த இடத்தில் மூன்று ஆசார்யர்களையும் ஸ்மரிக்கலாம். அதாவது ப்ரக்ருதமாக ஏளியிருக்கும் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீவராஹ மஹாதேசிகன் அவரையும், அதற்கு முன் இருந்த ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்கராமானுஜ யதீந்த்ர மஹாதேசிகன் மற்றும், அவருக்கு முன் ஏளியிருந்த திருக்குடந்தை ஆண்டவன் என மூவரையுமே ஸ்மரிக்கணும்.
ஒருவர் பாகவத அபசாரம் பட்டிருந்தால் ப்ரயாஶ்சித்த ப்ரபத்தி செய்தால் அவ்வபசாரம் போய்விடுமா? மேலும் அவர் யாரிடம் பாகவத அபசாரம் பட்டிருந்தாரோ ஒருவேளை அந்தப் பாகவதர் ஆசார்யன் திருவடி அடைந்துவிட்டால், தான் அவரிடம் பட்ட அபசாரத்தை எப்படிப் போக்கிக்கொள்வது?
பாகவத அபசாரம் என்பது மிகவும் கொடியது. பாகவத அபசாரம் பட்டால் எம்பெருமான் திருவுள்ளம் சீறும். அதனால் அபசார பட்டுவிட்டோம் என்கின்ற மனவருத்தம் ஏற்படுவதே மிகவும் நல்ல விஷயம் தான். அது ஏற்பட்டால் உடனேயே அந்தப் பாகவதரிடத்தில் போய் க்ஷமாபணம் பண்ணிக்கொள்வது உசிதம். அந்தப் பாகவதர் இப்போது இல்லை, எம்பெருமான் திருவடி அடைந்துவிட்டார் என்றால் மானசீகமாக அந்த அபராதத்திற்கு வருந்தி எம்பெருமானிடத்தில் க்ஷமாபணம் பண்ணிக் கொள்ளவேண்டும்.
ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக்கொள்வது என்பது ஆசார்யன் திருவுள்ளபட்டால் அவர் பண்ணி வைப்பார். இப்படி நேர்ந்து விட்டது, ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக் கொள்ளவேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கிறது, அதைப் பண்ணிக்கொள்ளலாமா என்று அவரவர் ஆசார்யனிடத்தில் விண்ணப்பித்து ஆசார்யன் அதை ஆமோதித்தால் அந்தச் சமயத்தில் பண்ணிக்கொள்ளலாம்.
“GSPKவில் வேத மஹிமை உபன்யாசத் தொடரில் நாவல்பாக்கம் ஸ்ரீ உ.வே. கண்ணன் ஸ்வாமி சாதித்த விஷயங்களில் அடியேனுக்கு சில சந்தேகங்கள்.
1. ஸ்ரீவைஷ்ணவர்கள் வேறு ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த வேதவித்வானிடமோ அல்லது பாடசாலையிலோ வேதம் கற்றுக்கொள்ளலாமா?
2. ஸ்ரீவைஷ்ணவர்கள் வேறு ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த வேதவித்வான்களை, கீழேவிழுந்து சேவிக்க வேண்டுமா? இங்கே வேதவித்வான்கள் என்று எண்ணி கீழேவிழுந்து சேவிப்பது சரியான அனுஷ்டானமா அல்லது ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லர் என்று எண்ணி அஞ்சலி நமஸ்காரத்தோடு நிறுத்தி விடுவது சரியா? நம் ஆழ்வார் ஆசார்யர்கள் இதில் எந்த அனுஷ்டானத்தை ஆதரிக்கின்றனர்? “
காலத்தை அனுசரித்து பார்த்தால், முடிந்தவரை நம் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் அத்யயனம் செய்வது உத்தமமான கல்பம். முடியாவிட்டால், இக்காலத்தில் அத்யயனம் செய்தவர்களும் குறைவு அதை செய்விப்பவர்களும் (கற்றுக்கொடுப்பவர்கள்) குறைவு, ஆகையால் அத்யயனம் செய்வது முக்கியமானபடியினாலே அவர்களிடத்தில் அத்யயனம் செய்தால் தவறில்லை என்று தோன்றுகிறது.
வேதாத்யயனம் செய்த ப்ராஹ்மணரிடத்தில் எல்லா தேவதைகளும் குடியிருப்பதாக வேதமே சொல்லிகிறது. க்ருஷ்ணனும், அக்னிஹோத்ரியை நான் நமஸ்காரம் செய்கிறேன் என்று சொல்லுகிறான். ஆகையால், இதர ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வேதாத்யயனம் செய்திருந்தால் அவர்களைச் சேவிப்பதில் தவறில்லை.
குழந்தைகள் பிறக்காத தம்பதிகள் எப்படி ஷட்டியப்தபூர்த்தி செய்துகொள்ள முடியுமா?
குழந்தைகள் பிறக்காத தம்பதிகளின் ஷட்டியப்தபூர்த்தியை அவர்களின் உடன்பிறந்தவர்கள் நடத்தி வைக்கலாம்.
வெள்ளை சங்குப்பூ பூக்கிறது.பெருமாளுக்குச் சாத்தலாமா?
வெள்ளை சங்குப்பூ பெருமாளுக்குச் சேர்ப்பிப்பது உண்டு.
நாய் போன்ற செல்லப்ராணிகளை ஏன் நாம் வீட்டில் வைத்துக்கொள்ளக்கூடாது?
நாய் நம் மேல் பட்டாலே தீட்டு என்றிருப்பதனால், நாய் போன்ற செல்ல ப்ராணிகள் அகத்தில் வளர்க்கக்கூடாது.
பழைய உணவு சாப்பிட்டப்பின் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாமா? கோவிலுக்குச் செல்லலாமா?
பழைய உணவு சாப்பிட்டப்பின் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம். கோவிலுக்கும் செல்லலாம்.
ஊர்த்வ புண்ட்ரம் தரிப்பது ஸ்நானம் செய்வதற்குச் சமம் என்கிறார்கள். எந்த ஸ்நானம்? விரிவாக விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
முகத்தைஅலம்பி திருமண்காப்பு தரிப்பதற்கு, புண்ட்ரஸ்நானம் என்று பெயராகும்.
அடியோங்கள் ப்ரபத்தி ஆனவர்கள்.வடகலை. இங்கு தென்கலை ஸம்ப்ரதாய திவ்ய தேச பெருமாள் கோயிலில் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் மணவாள மாமுனிகள் உத்சவம் பத்து நாட்கள் நடைபெறும் போது அடியேன் சில கைங்கர்யம் செய்து கலந்து கொள்வேன். இது சரியா?
மணவாள மாமுனிகளும் இராமானுஜதாஸர்தான், ஆகையால் அவரின் திருநக்ஷத்ர கைங்கர்யத்தில் பங்கேற்பது தவறில்லை.
அடியோங்கள் ஆத்துப் பெருமாள் சாளக்கிராமம் மற்றும் நிறைய திவ்ய தேசங்களின் பெருமாள் படம் , அபிமான ஸ்தலப்பெருமாள் படங்கள் இருக்கிறது.ஆனால் சில பேர் பரன்யாஸம் ஆனவர்கள் சாளக்கிராம் மற்றும் ஆசார்யன் வைத்து கொள்.இந்த பெருமாள் படம் வேண்டாம் என்கிறார்கள்.அப்படியா? குழப்பம் தீர ப்ரார்த்திக்கிறேன்.
அகத்தினுள்ளே சுற்றி பெருமாள் படம் வைத்துக்கொள்வதில் எந்தத் தவறுமில்லை. திவ்யதேச பெருமாள்கள், அபிமான ஸ்தலப்பெருமாள்களின் படங்கள் அவசியம் வைத்துக்கொள்ளலாம். தேவதாந்திர படங்கள்தான் கூடாது.
மேலும், அகத்து திருக்கோயில் ஆழ்வாரின் உள்ளே படங்கள் வைத்துக்கொள்ளக்கூடாது. இதுவே பெரியோர்களின் வழக்கத்தில் உள்ளது.
அடியேனின் ஆசார்யன் ஸ்ரீமத் அழகியசிங்கர். அவர் மடாதிபதி ஆனபடியால் உத்தமமான கைங்கர்யபர்களைக் கொண்டுள்ளதால் அடியேனைப்போன்ற சாமானியர்களுக்கு பெரிதாக ஶரீரரூபமாக கைங்கர்யம் செய்யும் வாய்ப்போ அல்லது தகுதியோ இல்லை. இருப்பினும் ஆசார்யனுக்கு கைங்கர்யம் செய்ய இயலவில்லையே என்று மனம் வருந்துகிறது. அடியேனைப் போன்ற சாமானியன் அழகியசிங்கர் போன்ற மடாதிபதிக்கு அவர் மனமுகக்கும்படி வேறு எவ்விதங்களில் கைங்கர்யங்களைச் செய்யலாம்?
ஆசார்யன் திருவுள்ளம் உகக்கும்படி கைங்கர்யம் பண்ணவேண்டும். அவரின் ஆக்ஞையைக் கடைபிடிக்க வேண்டும், அதுவே அவர்களின் திருவுள்ள உகப்புக்குக் காரணமாய் அமைந்துவிடும்.
நேரே போய் ப்ரத்யக்ஷமாய், அதாவது அவருக்கு பிக்ஷை சாதித்தல் அல்லது பிஷை இலை எடுத்தல் போன்ற கைங்கர்யங்கள் செய்தால்தான் அவரின் திருவுள்ளம் உகக்கும் என்றில்லை. ஸ்ரீமதழகிய சிங்கர் ஸமாஶ்ரயணம் செய்து வைக்கும்போது தினமும் மந்திர ஜபம், திருவாராதனம் எல்லாம் பண்ணவேண்டி ஆக்ஞை இட்டிருப்பார் அவர் சொன்னபடி செய்தாலே போதும் அவரின் திருவுள்ளம் உகக்கும். நம் வர்ணாஶ்ரம தர்மம் பிசகாமலும், நித்ய கர்மானுஷ்டானம் விடாமலும் பண்ணினாலே ஆசார்யன் திருவுள்ளம் உகந்துவிடும்.
கடையில் வாங்கிய புது வஸ்த்ரத்தை, முதல் முறை துவைக்கும் வரை அதை மடிவஸ்த்ரமாகத் தரிக்கலாமா?
கடையில் வாங்கிய வஸ்த்ரம் பட்டு வஸ்த்ரமாக இருந்தால் அப்படியே தரித்துக்கொள்ளலாம். பஞ்சினால் (Cotton) நெய்ததாக இருந்தால், அதை மஞ்சள் தடவி நனைத்து ஆசாரமாக உலர்த்தியபின் தரிப்பது என்ற அனுஷ்டானத்தை ஆவணி அவிட்டத்தின் சமயம் பெரியோர்கள் செய்வதை நாம் காணலாம். ஆவணி அவிட்டத்திற்குப் புதுவஸ்த்ரம் தரிப்பது என்று அனுஷ்டிக்கும் பெரியோர்கள் இவ்வாறாகவே செய்வர்.
தீபாவளி முதலான மங்கள சமயங்களில் புது வஸ்த்ரத்தை (துவைப்பதற்கு முன்) உடுத்தலாம். ஆனால், அது சற்றே மடி குறைவு (தீட்டு அல்ல்); மேலும் அது திருவாராதனம் செய்வதற்கேற்ற மடி கிடையாது.
மஹாளய பக்ஷம் பற்றி:
மஹாளய பக்ஷம் முழுவதுமே ஶ்ராத்த தளிகை பண்ண வேண்டுமா? மஹாளய தர்ப்பணம் (மத்யாஷ்டமிக்குப் பின்) செய்தாயிற்று என்றால் அதன்பின் எப்போதும் போல் தளிகை பண்ணலாமா?
தம்பதிகள் இருவரும் 15 நாட்கள் முழுவதுமே தலைக்குத் தீர்த்தமாட வேண்டுமா?
மஹாளய பக்ஷம் முழுவதும் ஶ்ராத்த தளிகை பண்ணவேண்டாம். என்றைக்கு மாஹாளய தர்ப்பணம் பண்ணுகிறார்களோ அன்றும் மற்றும் மாஹாளய அமாவாஸை அன்றும் ஶ்ராத்த தளிகை பண்ணுவது வழக்கம்.
மஹாளயபக்ஷம் 15 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்களாக இருந்தால், தம்பதிகள் இருவருமே 15 நாட்களும் ஸ்நானம் (தலைக்குத் தீர்த்தமாடுதல்) செய்யவேண்டும். சக்ருத்மஹாளயம் (அதாவது ஒரே ஒருநாள் மட்டும் தர்ப்பணம்) செய்பவர்கள், அன்று ஒருநாள் மட்டும் தீர்த்தமாடினால் போதும்.
உப்பு போட்டு அடுப்பில் ஏற்றினால் அந்த உணவு பத்தாக கருதப்படுமா?
உப்பு போட்டு அடுப்பில் ஏற்றினால் அது பத்தாக ஆகிவிடாது. சாதம் கலந்ததாக ஆகும். பலகார நாட்களில் உப்பு போட்டுதான் பண்ணுகிறோம். அதே போல் இட்லி மாவில் உப்பு கலந்து தான் அடுப்பில் ஏற்றுகிறோம் அவையெல்லாம் பத்து கிடையாது.
பஞ்சஸம்ஸ்காரம் ஆன ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமாளை காம்யார்த்தமாக சேவிக்கின்றார்கள் என்றால் அவர்களை பாகவதர்கள் என்று கொள்ளலாமா?
பஞ்சஸம்ஸ்காரம் ஆன ஸ்ரீ வைஷ்ணவர்கள், எம்பெருமானை மட்டுமே சேவிக்கிறார்காள் என்றால், அவர்கள் பாகவதர்கள்தான். அது காம்யார்த்த விஷயமாகவோ, பரமைகாந்திகளோ எப்படியிருந்தாலும் எம்பெருமானை மட்டுமே வழிபடுபவர்களாகயிருந்தால் அவர்கள் பாகவதர்கள்தான்.
நமஸ்காரம், அடியேனுக்கு வேலை செய்யும் இடத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு உண்மையாக உழைத்தாலும், அது எடுபடுவது இல்லை, சில நாட்கள் கழித்து அவ்விடத்தில் வேலை செய்ய முடியாமல், திரும்ப வேலை தேட வேண்டி உள்ளது, வேலை கிடைக்கும் வரை வருமானத்திற்கு கஷ்டமாக உள்ளது, இதற்கு உபாயம் ஏதும் உண்டா.
இதற்கு உபாயமாக, ஶ்ரத்தையாக பிராட்டியை நினைத்து ஸ்ரீஸ்துதியை சேவிக்கலாம் என்று தோன்றுகிறது.
பாகவத அபசாரம் பட்டுவிட்டால் மோக்ஷத்திற்குத் தடை ஏற்படுமா? அல்லது எம்பெருமாள் சிக்ஷை கொடுத்து மோக்ஷம் அளிப்பாரா?
பாகவத அபசாரம் ஏற்பட்டால் மோக்ஷத்திற்குத் தடையும் ஏற்படலாம் என்று சொல்லியிருக்கு. அது அத்தனை தீவிரமானது ஆகையால் அவசியம் தவிர்க்க வேண்டியது.
பெருமாள் தாயர் படங்கள் தனித்தனியே இருந்தால் தாயர் படம் பெருமாளின் வலது புறம் அல்லது இடது புறம் வைக்க வேண்டுமா? இந்தப் பக்கம்தான் தாயர் படம் என்று ஏதேனும் முக்கியத்வம் இருக்கிறதா?
பெருமாள் தாயார் படங்கள் தனித்தனியே இருந்தால் ஒரு பாவத்தோடு, லக்ஷ்மீதேவியாக இருந்தால் வலது பக்கத்திலும், பூமாதேவியாக இருந்தால் இடது பக்கத்திலும் வைத்து அனுபவிக்கலாம். நியமம் என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. அவரவர் அனுபவத்தைக் கொண்டு ஒரு பக்திபாவத்தில் எப்படி வைக்கலாமோ அப்படி வைத்துக்கொள்ளலாம்.
வேலைக்குச் செல்வோர்கள் பணி முடிந்து திரும்பிய பின் சாயம் சந்தியாவனம் செய்யும் முன் தலைக்குத் தீர்த்தமாட வேண்டுமா அல்லது சந்தியாவனத்தில் வரும் ப்ரோக்ஷன மந்திரங்களே சுத்தியைத் தருமா? அஷ்டாக்ஷர ஜபம் அதில் செய்யவேண்டியிருப்பதால் இந்தச் சந்தேகம் எழுந்தது.
பொதுவாக முடிந்தவரை சந்தியாதிகர்மாக்களைச் சுத்தமாகச் செய்வது உசிதம்.
ஸ்நானம் செய்யமுடிந்தால், ஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் செய்யலாம்.
அப்படி முடியாதவர்கள், தலைக்குத் தீர்த்தமாடாமல் கண்ட ஸ்நானம் (அதாவது, தலைக்குத் தீர்த்தமாடாமல், கழுத்துவரை ஸ்நானம் செய்து) முகத்தை அலம்பிக்கொண்டு பண்ணலாம், அதுவும் முடியாதவர்கள் முகத்தை மட்டும் அலம்பிக்கொண்டு நெற்றியிட்டுக்கொண்டு மந்திரஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் செய்யலாம்.
இது ஶக்த,அஶக்த விஷயங்களாகும்.
பரந்யாஸம் செய்துகொண்ட ஐயங்கார் பையன் வடதேச க்ஷத்ரிய பெண்ணை மணக்கலாமா? அப்படி மணந்தால் அவன் தன் தந்தைக்கு அந்திம கார்யம் செய்ய முடியுமா?
விவாஹங்கள் பொதுவாகவே அவரவர்களுச் சமமான வர்ணத்திலும், ஜாதியிலும் செய்வதுதான் உசிதம்.
வடதேசத்தில் க்ஷத்ரயர்கள் என்பதில் பல கலப்புகள் கலந்திருக்கின்றன. ஆகையால் அது சரியான க்ஷத்ரிய ஜாதியா என்று சொல்லவும் தெரியாது. ஆகையால் அப்படி விவாஹம் செய்யாமல் இருப்பதே உசிதம்.
அடியேன் முந்தைய இதழில் கேட்ட ப்ரஹ்ம யஜ்ஞம் கேள்வியின் தொடர்ச்சி, இந்த ப்ரஹ்ம யஜ்ஞத்தின் ஆசமனத்தின் சிறப்பு என்ன? ஏன் மந்திர உச்சாடனம் இல்லாமல் செய்யவேண்டும்? அடியேன்.
தைத்திரீயஆரண்யகத்தில் இரண்டாவது ப்ரஶ்நத்தில் ப்ரஹ்ம யஜ்ஞம் பற்றி வருகிறது. அங்கு மூன்று முறை ஆசமனம் பண்ணவேண்டும் என்பதாகவே சொல்லியிருக்கிறது. அங்கு மந்திரங்கள் சொல்லப்படவில்லை என்பது முதல் விஷயம். இரண்டாவது இந்த ஆசமனம் செய்வதினாலே, ரிக்குகள் ப்ரீத்தி அடைவதாகச் சொல்லப்படுகின்றது. ஆகையால் அதை அப்படியே அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம்.
சந்தியாவந்தனம் என்பது நேரத்தின் சம்பந்தத்தோடு செய்யவேண்டிய ஒன்று என்றும் ஸ்நானம் செய்யும் முன்னரும் செய்யலாம் என்றும் புரிகிறது. ஸ்நானம் செய்யாமல் சந்தியாவந்தனம் செய்ய என்ன க்ரமம்? மேலும் அதற்கு எவற்றையெல்லாம் நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்?
சந்தியாவந்தனம் நேரத்துடன் சம்பந்தப்பட்டது, அதற்குரிய நேரத்திலேயே செய்யவேண்டும். முடிந்தவரை, ஶக்தியுள்ளவரை குளித்தே சந்தியாவந்தனம் செய்யவேண்டும். உடம்பு அசௌகர்யமாக இருந்தால் உ.தா: ஜுரம் இருந்தால், குளிக்காமலேயே சந்தியாவந்தனம் செய்யலாம்.
அதாவது தீர்த்தமாட ஶக்தியில்லாதவர்கள் முகத்தை அலம்பிக்கொண்டு, நெற்றியிட்டுக் கொண்டு மந்திர ஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் செய்யலாம்.
ஆனால், தீர்த்தமாடாமல் சந்தியாவந்தனம் செய்வதென்பது உடம்புக்கு உபாதையிருந்தால் மட்டுமே. உபாதைகள் இல்லாத பக்ஷத்தில், தீர்த்தமாடி விட்டுதான் சந்தியாவந்தனம் செய்வது பெரியவர்கள் வழக்கம்.
வர்ஷாப்தீக க்ரமத்தில் போக்தாக்கும் கர்த்தாவிற்கும் என்ன நியமங்கள்? அடியேன்
வர்ஷாப்தீகம் த்ரிபுருஷோதேஶ்யமாக பார்வணமாகவே செய்யவேண்டியது. கர்தாவிற்கு மறுநாள் பரேஹனி தர்ப்பணம் கிடையாது. ஆனால், ஒரு ததீயாராதனை செய்விக்கவேண்டும். ப்ராஹ்மண போஜனம் செய்விக்கவேண்டும்.
வர்ஷாப்தீகத்தில் போக்தாவாக இருந்தால், மூன்று நாட்களுக்கு ஶ்ராத்த போஜனம் கூடாது மேலும் 300 காயத்ரி ஜபமும் செய்யவேண்டும்.
துலா ரவி தர்ப்பணம் பற்றிய கேள்வி
அடியேன் பஞ்சாங்கத்தில் துலா ரவி 58-28 நாழிகையில் பிறக்கிறது என்றுள்ளது. அப்படியென்றால் தர்ப்பணம் என்று செய்ய வேண்டும்? திங்கட்கிழமையா அல்லது செவ்வாய் கிழமையா?
சந்தியாவந்தனம் பண்ணிவிட்டு தர்ப்பணம் பண்ண வேண்டுமா? அல்லது முன்பா? எப்போது தர்ப்பணம் பண்ண வேண்டும்?
செவ்வாய் கிழமை அன்றுதான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
துலா விஷுவிற்கு மாசம் பிறக்கும் முன் 10 நாழிகை, பின் 10 நாழிகை புண்யகாலமாகும். இதில் 58-28 க்கு மாசம் பிறக்கிறது என்றால், செவ்வாய் கிழமை விடியற்காலை மாசம் பிறக்கிறது. அதாவது சூர்யோதயத்திற்கு முன் சுமார் 5.30மணிக்கு மாசம் பிறக்கிறது. அதற்கு முன் தர்ப்பணம் பண்ண முடியாது.
சூர்யோதயம் ஆனவுடன் தீர்த்தமாடி, சந்தியாவந்தனம் பண்ணாமல் எந்தக் கார்யமும் பண்ணக்கூடாது. ஆகையால் தீர்த்தமாடி, சந்தியாவந்தனம் பண்ணிவிட்டு தர்ப்பணம் செவ்வாய் கிழமை காலையிலேயே பண்ண வேண்டும்.
அடியேனுக்கு அவ்வப்போது துர்ஸ்வபாவம் ஏற்படுகிறது, இதைத் தவிர்க்க என்ன செய்வது?
அவ்வப்போது துர்ஸ்வபாவம் ஏற்படுவது இயல்பு அது நீங்க நம்முள் உள்ள எதிரியை விரட்டவேண்டும். அதற்கு பிராட்டியை நாம் பற்ற வேண்டும். ஸ்ரீஸ்துதியின் 18ஆவது ஶ்லோகத்தை பலமுறை அனுசந்தானம் செய்தோமேயானால், மனது ஶாந்தியடையும் துர்ஸ்வபாவம் நீங்கும்.
முன்பெல்லாம் டிவி போன்ற கேளிக்கை விஷயங்களில் ஈடுப்பட்டு வந்தேன் ஆனால் ப்ரந்யாஸம் செய்தபின் காலத்தைக் கழிக்க சரியான வழி என்ற புரிதலால் அவையெல்லாவற்றையும் அறவே தவிர்த்து விட்டேன். ஆனால் அகத்தில் இருக்கும் பெரியவர்களோ, சொந்தங்களோ கேளிக்கைப் பற்றியே பேசுகிறார்கள். அவர்கள் அப்படிப் பேச நேரும்போது ஏதோ ஒரு பொய்ச்சொல்லி தவிர்க்கின்றேன்.இப்படிச் செய்வதால் பாகவத அபசாரம் ஏற்படுமா? அவர்களிடம் அபசாரப் படாமல் இக்கேளிக்கைப் பேச்சிலிருந்து மெல்ல விலகுவது எப்படி? அகத்தின் வேலைகளை முடித்துவிட்டு எம்பெருமான் விஷயமான உபந்யாஸங்கள், 108 திவ்ய தேச வைபவம், காலக்ஷேபம் போன்றவற்றில் ஈடுபடுவதையும், பேசுவதையுமே மிகவும் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் இச்சிறிய வயதில் இவ்விஷயங்களில் அடியேன் ஈடுபடுவதை விரும்பவில்லை. அவர்களிடம் எப்படி எடுத்துரைப்பது? சில நேரம் அவர்கள் இப்படிச் சொல்வது எனக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.
டிவி போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதைத் தவிர்த்திருக்க்கிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்வதில் ஐயம் வேண்டாம். அதை பெருமையாகவே கருதலாம். ஏனென்றால் ஆதுனிக காலத்தில் சத்விஷயத்தில் பொழுதைப் போக்க நினைக்காதவர்கள் கூட அனாவசியமாக காலைப்பொழுது போக்கை இந்த மீடியாவில் செலவழிக்க வேண்டாம் என்று நினைக்கின்ற ஒரு மனப்பான்மை இருக்குகின்றது. அதனால் எனக்கு இது பிடிக்கவில்லை , இதில் நான் நேரத்தை செலவழித்து வீணாக்க விரும்பவில்லை என்று சொன்னால் தப்பாக எடுத்துக்கொள்வார்கள் என்று நினைக்க வேண்டாம். அப்படி அவர்கள் தப்பாக எடுத்துக் கொண்டாலும் அதை பற்றி கவலைப் படவேண்டாம்.அவரிடத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதை நான் தவிர்க்கிறேன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். இது நல்லதல்ல. நல்லதல்லாததை தவிர்ப்பதை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லலாம், பாதகமில்லை. அவர்களுக்கு சத்புத்தி ஏற்பட்டு அவர்களும் சம்பிரதாயத்தில் ஈடுபடவேண்டும் என்று எம்பெருமானிடத்தில் ஶ்ரத்தையாக ப்ரார்த்தித்துக்கொள்ளலாம். எம்பெருமான் சீக்ரம் அந்த மனோரதத்தையும் நிறைவேற்றுவான்.
ஶ்ரவண துவாதசி எப்படி அனுஷ்டிக்க வேண்டும்.
ஶ்ரவண துவாதசி என்பது ஏகாதசி விரதம் போல். ஏகாதசியன்று என்ன நியமமோ அதேபோல் ஶ்ரவண துவாதசியன்று அனுஷ்டித்து மறுநாள் பாரணை பண்ண வேண்டும்.
க்ருஹத்தில் ஒரு நாள் முழுவதும் பெருமாள் சன்னதியில் தீபம் எரிந்துகொண்டு இருக்கலாமா?
க்ருஹத்தில் ஒரு நாள் முழுவதும் பெருமாள் சன்னதியில் விளக்கு எரிந்து கொண்டு இருக்கலாம்.
திருவாராதனை சமயங்களில் நாம் எத்தனை பில் பவித்ரம் அணிந்து கொள்ளணும், எத்தனை பில் வரை அணிந்துக் கொள்ளலாம்.
திருவாராதனை சமயங்களில் இரண்டு தர்பம் கொண்டு நாம் பவித்ரம் அணிந்து கொள்வதுதான் வழக்கம்.
சில vitamin குறைபாடுகளுக்காக நம் ஸம்ப்ரதாயத்தவர் சிலர் மஷ்ரூம், பூண்டு போன்ற நிஷித்த வஸ்துக்களை எடுத்துக்கொள்ள நேர்கிறது. இக்காய்களைத் தவிர்த்து நம் vitamin குறைபாடுகளை நீக்க வழி இருக்கிறதா?
இந்த நிஷித்தமான பதார்த்தங்களைக் கொண்டுதான் ஆரோக்யத்தை வளர்க்க வேண்டும் என்று இல்லை. புராதன காலத்தில், நம் பெரியோர்கள் எல்லாம் எந்த ஒரு நிஷித்த பதார்த்தங்களையும் சாப்பிடாமல் தீர்காயுஸாக, ஆரோக்யமாக இருந்திருக்கின்றனர். அதனால் அதெல்லாம் தேவை, அது இருந்தால்தான் இந்த வைட்டமின் குறைபாடெல்லாம் இல்லாமல் இருக்கும் என்பது கிடையாது. இதை முதலில் நம்பவேண்டும்.
ஶாஸ்த்ரத்தில் விதித்த காய்கறிகளை, விதித்த முறையில் எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்திவிட்டு சாப்பிட்டாலே எந்த விதமான குறைபாடும் ஏற்படாது. ஆகார நியமத்தில் சொல்லப்பட்ட காய்கறிகளைச் சேர்த்துக்கொண்டாலேயே எந்த விதமான வைட்டமின் பற்றாக்குறையும் இல்லாமல் வாழலாம். இது நிச்சயம். இதை சேர்த்துக் கொண்டால்தான் இந்தக் குறைபாடு நீங்கும் என்பதெல்லாம் புதிது புதிதாக தற்காலத்தில் அவரவர்கள் ஏற்படுத்தியதுதான். அதனால் அது உண்மை என்று நம்ப வேண்டாம்.
எந்த ஹோமமோ, பூஜையோ ஆரம்பிக்கும் முன் இதர ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் கணபதியை ஆவாஹணம் செய்கிறார்கள். அவ்வாறு நம் ஸம்ப்ரதாயத்தில் யாரை த்யானம்/ஆவாஹணம் செய்ய வேண்டும்?
நம் ஸம்ப்ரதாயத்தில் பொதுவாக ஹோமங்கள், உற்சவங்கள் செய்வதற்கு முன் விஷ்வக்சேன ஆராதனம் பண்ணுவதை வழக்கமாக வைத்து கொண்டுள்ளார்கள்.
ஶ்ரவண வ்ரதம் நிர்ணயம்
ஶ்ரவண நக்ஷத்ர தினமும், ஶ்ரவண வ்ரத தினமும் வேறுபடுவது சாத்தியமா? ஶ்ரவண நக்ஷத்ரம் சூர்யோதயத்தில் இருந்து 12 நாழிகை இருக்கும் தினம் போதுமானதா ?
அப்படியில்லாவிட்டால் முந்தைய தினத்தில் விரதம் அனுஷ்டிக்கலாமா ?
ஶ்ரவண விரதத்தில் இராண்டுவிதம் இருக்கிறது. ப்ரதானமாக ஒப்பிலியப்பனைக் குறித்து ஶ்ரவண விரதம் இருக்கிறவர்கள் அந்த ஸன்னிதி அனுஷ்டானத்தின்படி சூர்யோத்திலிருந்து 12 நாழிகை என்று திருவோண நக்ஷத்ரம் இருக்கிறதோ அன்று ஶ்ரவண விரதம்.
அப்படியில்லையென்றால் அதாவது 12 இல்லை 111/2 நாழிகைதான் இருக்கிறது என்றால் முன்னாள் ஶ்ரவண விரதம்.
சில பஞ்சாங்கங்களில் ஸாயங்காலம் ஶ்ரவண விரதம் என்று போட்டிருப்பார்கள். ஆகையால் அவரவர் வழக்கப்படி செய்யவேண்டும். நம் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த பலர் ஒப்பிலியப்பன் சன்னிதி வழக்கத்தைதான் பின்பற்றுகிறார்கள்.
ஶ்ரவண-துவாதசி வ்ரதம் ( ஸ்ரீஸந்நிதி நிர்வாஹம்)
வேதை – நக்ஷத்திரம், திதி – விலக்கப் பட வேண்டியது என்ன ?
நக்ஷத்திரம்-திதி (ஶ்ரவண-த்வாதஶி) ஸம்பந்தம் குறைந்தது எவ்வளவு நாழிகைகள் இருக்க வேண்டும்?
ஶ்ரவண துவாதசி வ்ரதத்தில் முனித்ரயம், அஹோபிலம் என்று இரண்டு ஸம்ப்ரதாயம் இருக்கிறது. இதில் முனித்ரய ஸம்ப்ரதாயத்தில் ஶ்ரவணமும், துவாதசியில் சிறிதளவு சேர்ந்திருந்தாலே போதும் அன்றையதினம் ஶ்ரவண துவாதசி வ்ரதம். அதாவது என்றாவது ஒருநாள் பகலிலேயோ, இல்லை சாயங்காலத்திலோ கொஞ்சம் சேர்ந்திருந்தாலே அன்று ஶ்ரவண துவாதசி.
ஸ்ரீஸந்நிதி ஸம்ப்ரதாயத்தில் ஸாயங்கால வ்யாப்தி வரை ஶ்ரவணமும் துவாதசியும் சேர்ந்திருந்தால்தான் ஶ்ரவண வ்ரதம். அதை அவர்கள் அறிவிப்பார்கள் அதன்படி செய்யலாம்.
17) ஶ்ரவண-துவாதசி அன்று
1) ஶ்ரவண வ்ரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் இல்லாதவர்கள், த்வாதஶி பாரணை பண்ணலாமா ?
2) அல்லது த்ரயோதசியில் தான் பாரணை என்று இருக்கும் போது, ஏகாதசியில் கௌணமாகவும் துவாதசி ப்ரதானமாகவும் கொண்டு உபவாஸ வ்ரத அனுஷ்டானம் செய்யலாமா ?
ஶ்ரவாண துவாதசிக்கும், ஶ்ரவண வ்ரதத்திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஶ்ரவண வ்ரதம் என்பது காம்ய வ்ரதம் வேண்டுமென்றால், ஒரு பலனுக்காகவோ, எம்பெருமானுக்காகவோ இருக்கலாம். வ்ரதம் இருக்க வேண்டிய கட்டாயமில்லை.
ஶ்ரவண துவாதசிக்கு நித்யம் என்று பெயர் அதாவது கட்டாயமாக வ்ரதம் இருக்கவேண்டும்.ஶ்ரவண வ்ரதத்திற்கும், ஶ்ரவண துவாதசிக்கும் எந்தவிதமான ஸம்பந்தமும் இல்லை.
ஏகாதசி, ஶ்ரவண துவாதசி இரண்டு தினமும் உபவாஸம் இருக்கவேண்டும். த்ரயோதசியில்தான் பாரணை. ஶரீர காரணமாக ஒருநாள் தான் இருக்க முடியும் என்றிருந்தால், ஏகாதசியன்று பலகாரம் போல பண்ணிவிட்டு. ஶ்ரவண துவாதசியில் உபவாஸத்தை ப்ரதானமாக வைத்துக்கொள்வது என்று பெரியோரகளின் வழக்கத்தில் உள்ளது.
ஆவணி (ஸிம்ஹ மாஸம்) ஶ்ரவணம் நக்ஷத்ரம் தினத்தில் தான் ஸ்ரீ ஹயக்ரீவ ஜயந்தியும் ஸ்ரீ வாமன ஜயந்தியும் கொண்டாடப் படுகிறதா ?
ஆவணி ஶ்ரவணம், திருவோணத்தில்தான் ஸ்ரீ ஹயக்ரீவ ஜயந்தியும், ஸ்ரீ வாமன ஜயந்தியும் கொண்டாடப்படுகிறது.
சிலர் ஹயக்ரீவ ஜயந்தியை பௌர்ணமி திதி ப்ரதானமாக வைத்துக்கொண்டாடுகிறார்கள். சந்த்ரமான கணக்கில், ஶ்ராவணத்தில் என்ற கணக்கின்படி கொண்டாடுகிறார்கள். சில நேரம் ஆடி மாதத்திலும் இது வரும்.
ஸ்ரீஜயந்தி, ஸ்ரீராம நவமி, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி போல் இதில் பெரியளவு வ்ரதங்கள் என்றெல்லாம் இல்லாதபடியினால், கோவிலுக்குச் சென்று பெருமாள் சேவிப்பது, விசேஷமாக திருவாராதனை என்பது மட்டும் என்கிறபடியாலும், மேலும் அகத்திலும் விசேஷ திருவாரதனை என்று சொல்லாதபடியினாலும் அந்தந்தக் கோவிலின்படி அவ்வழக்கத்தை நாம் பின்பற்றலாம்.
அடியேன் ஸ்வாமி வரப்போகும் சூரிய க்ரஹணம் பற்றிய சந்தேகம், மாலை 5 மணியளவில் ஸ்பர்ஸம் என்றும் அன்றைய தினம் போஜனம் இல்லை என்றும் பஞ்சாங்கத்தில் இருக்கிறது.
அப்படியென்றால் 25ஆம் தேதி அன்றைய நாள் முழுவதும் போஜனம் உட்கொள்ளக் கூடாதா அல்லது காலையில் போஜனம் செய்து பின்னர் மறுநாள் சூர்யோதயத்திற்குப் பின் போஜனம் செய்ய வேண்டுமோ. விளக்கப்ரார்த்திக்கிறேன்.
சூர்ய க்ரஹணத்திற்கு, க்ரஹணம் பிடிக்கின்ற ஜாமத்தைத் த்விர்த்துவிட்டு முன் நான்கு ஜாமம் சாப்பிடக்கூடாதென்று இருக்கிறது. இந்த க்ரஹணம் பிடிப்பது பகல் நான்காவது ஜாமம், ஆக முன்னாடி நான்கு ஜாமம் என்பது முதல் நாள் இரவு மூன்று மணிக்குப்பின் சாப்பிடக்கூடாது. க்ரஹணம் விட்ட பின்னர் சூர்யனை பார்த்துவிட்டுதான் சாப்பிட வேண்டும்.
இந்த முறை க்ரஹணகாலம் சாயங்காலமானபடியால், க்ரஹணகாலத்திலேயே சூர்யன் அஸ்தமனமாகுகிறது. க்ரஹணம் விட்டு சூர்யனைப் பார்க்க முடியாது, மேலும் சூர்யனைப் பார்த்துவிட்டுதான் சாப்பிடவேண்டும் என்றபடியால் மறுநாள் காலைதான் சாப்பிடவேண்டும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஶாஸ்த்ரப்படி அன்றையதினம் முழுவதும் சாப்பிடக்கூடாது.
நான் தென்கலையார். எங்களுக்கு ஸமாஶ்ரயணம் உண்டா? பரந்யாஸம் உண்டா? இவை உண்டு என்றால் நம் ஊரில் பக்கத்தில் உள்ள ஆசார்யன் இடம் ஸமாஶ்ரயணம் செய்து கொள்ளலாமா? அல்லது ஸ்ரீரங்கத்துக்குத்தான் செல்ல வேண்டுமா?”
உங்களுடைய ஆசார்யன் யாரோ அவரை அணுகி அவரிடத்தில் ஸமாஶ்ரயணம் செய்து கொள்ளலாம். பரந்யாஸம் நேரடியாக பண்ணுவதாகத் தெரியவில்லை. ஆனால் பரந்யாஸம் பண்ணிக்கொள்வது நல்லது. உங்கள் குல ஆசார்யான்னு யார் இருக்கிறார்களோ அவரிடத்தில் சென்று விண்ணப்பித்து கேட்டுக்கொள்ளலாம். ஸ்ரீரங்கத்தில்தான் பண்ணிக்கொள்ள வேண்டும் என்கின்ற அவசியமெல்லாம் கிடையாது.
ப்ரந்யாஸம் செய்யாதவர்களை ஒரு ப்ரபன்னன் சேவிக்கலாமா?
ப்ரந்யாஸம் செய்யாதவர்களைச் சேவிக்க வேண்டியது எப்போ அநிவார்யமாக ஆகிறது என்றால், அவர்கள் நமக்கு உறவுமுறையில் பெரியவர்களாக இருந்தால். இப்போது ஏதாவது ஒரு காரணத்தினால் க்ருஹத்தில் இருக்கும் பெரியோர்கள், உதாரணத்திற்கு அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி இவர்கள் எல்லாம் பரந்யாஸம் பண்ணிக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களைச் சேவிக்க வேண்டியது அவசியம்.
மஹாப்ரதோஷ சமயம் விஷ்ணு ஆராதனம் கூடாது – சரியா?
மஹாப்ரதோஷ சமயம் விஷ்ணு ஆராதனம் கூடாது.
பெருமாளுக்குக் கண்ணாடி பாத்திரத்தில் தயிர் தோய்த்து அம்சை பண்ணலாமா?
தயிரைக் கண்ணாடி பாத்திரத்தில் தோய்த்தாலும், அம்சை பண்ணும்போது வெள்ளிப் பாத்திரத்தில் பண்ணினால் நல்லது.
மஹாப்ரதோஷம் ப்ரதான காலம் – சூர்ய அஸ்தமனத்திற்கு
1.1) முன்பா அல்லது பின்னரா – ப்ரதானம் எது ?
1.2) எத்தனை நாழிகைகள் – முன்பும் பின்பும் (குறைந்த பக்ஷம், கட்டாயம்)
மஹாப்ரதோஷ காலம் சூர்ய அஸ்தமனத்திற்கு முன்பா பின்பா என்றால் இரண்டுமே உண்டு.
சூர்ய அஸ்தமனத்திற்கு முன் ஒன்றரை மணி காலம், பின் ஒன்றரை மணி காலம், ஆக மூன்றுமணி நேரம் மஹாப்ரதோஷ காலமாகும்.
3) மஹாப்ரதோஷம் சமயம் ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஆராதனம் விதி இருக்க & பொதுவாக மற்ற எல்லாம் (ஶ்லோகம்) நிஷேதமாய் இருக்க
விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லலாமா – இது விஷ்ணுபரமா? ந்ருஸிம்ஹபரமா?(முக்கூர் லக்ஷ்மீ நரஸிம்ஹாச்சார் சுவாமி வ்யாஸம்) ந்ருஸிம்ஹ பர அனுஸந்தாந்தனத்துடன் என்று கொண்டு, சொல்லலாமா ?
ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஸந்நிதியில் / ப்ரதோஷ ஆராதனம் போது ப்ரதோஷ கால விலக்கு என்றில்லாமல் (ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஶ்லோகம், பாசுரம் மட்டும் என்ற) எந்த அநுவாகம், ஶ்லோகம், பாசுரம் வேண்டுமானாலும் ஸேவிக்கலாமா ?
ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஆராதனம் விதி இருக்க விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லக்கூடாது. ந்ருஸிம்ஹபர அனுஸந்தாந்தனத்துடன் என்று கொண்டு, சொல்லலாமா என்றால் நாமாக க்ருஹத்திலிருந்து அப்படி அனுசந்தானம் பண்ணிக்கொண்டு சொல்லுவதுதென்பது பெரியோர்கள் வழக்கம் இல்லை. மாறாக ந்ருஸிம்ஹன் பெருமாள் சந்நிதியில் சில சமயம் திருமஞ்சனம், விசேஷ ஆராதனம், பாராயணம் இவையெல்லாம் நடக்கும். அதில் நாம் கலந்துகொள்ளலாம்.
ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஸந்நிதியில் ப்ரதோஷ ஆராதனம் போது பெருமாள் சந்நிதியில் அதற்கென்று வழக்கம் ஒன்றுயிருக்கும். அந்த வழக்கத்தில் என்னென்ன சொல்கிறார்களோ அவற்றையெல்லாம் நாம் அனுசந்தானம் பண்ணலாம் என்று ஆகமத்திலேயே இருக்கின்றது.
மஹாப்ரதோஷம் சமயம், மாஸிக ஶ்ரவண/ திருவோண நக்ஷத்ர ஸேவா காலம் கோஷ்டி
ஸாயம் கால வேளையில் அனுஷ்டிக்கலாமா ?
பாரணை/ ததீயாராதனை குறைந்தது எத்தனை நாழிகைக்கு மேல் (அஸ்தமன பின்பு) செய்யலாம் ?
மஹாப்ரதோஷ சமயம் நாம் இவையெல்லாம் சொல்லக்கூடாது. அதே சமயம் கோயில்களில் ஶ்ரவணம், விசேஷ ஆஸ்தானம், ஸேவா காலம், சாற்றுமுறை, இவையெல்லாம் இருந்தால், அப்போது பிரதோஷ சமயமாக இருந்தாலும் நாம் அதில் கலந்துகொள்ளலாம்.
அஸ்தமனத்திற்குப் பின் ஒன்றரை மணி மஹாப்ரதோஷ காலம் எப்படிப் பாராயணமெல்லாம் கூடாதோ, அதேபோல் சாப்பிடவும் கூடாது என்று இருக்கின்றது. அதனால் அதற்குப் பின் சாப்பிடலாம் என்பதாகத் தோன்றுகிறது.
புரட்டாசி ஶ்ரவணத்தையொட்டி தேசிக உத்சவம் பத்து நாட்கள் நடைபெறும்.அந்தச் சமயம் அத்யாபக கோஷ்டி பாகவதர்களுக்குத் தினமும் மதியம் ததீயாராதனை பிரசாதம் ஸாதிக்க 1-30-3-30 சென்று விடுவேன். காலையும் மாலையும் கோவிலில் ஆராதனை நடக்கும். தற்போது என்ன குழப்பம் என்றால் அந்த மதிய வேளையில் காலக்ஷேபம் , ஸ்தோத்ரம், திவ்ய ப்ரபந்தம் வகுப்பு இருக்கிறது.அடியேன் என்ன செய்வது?
இந்தச் சந்தர்ப்பத்தில் என்ன தோன்றுகிறது என்றால் காலக்ஷேபம், ஸ்தோத்ரம் திவ்ய ப்ரபந்த வகுப்புக்கள், எல்லாம் எப்பொழுதும் நடந்து கொண்டிருக்க கூடியவையாக இருக்கும். புரட்டாசி ஶ்ரவணோத்சவம் என்பது வருடத்தில் பத்து நாட்கள் ஏற்படுவது. அதில் பிரசாதம் சாதிக்கும் கைங்கர்யம் என்பது அந்தப் பத்து நாட்களுக்கே உரியதாக இருக்கின்றபடியால், அதை ஒரு விசேஷ கைங்கர்யமாக நினைத்துக் கொண்டு, அந்தச் சமயத்தில் அதற்கு ப்ராதான்யம் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.
குறிப்புகள்
இந்தக் கேள்வியில் சொல்லப்பட்ட கைங்கர்யங்கள் அதாவது பாகவதர்களுக்குத் ததீயாராதனை பிரசாதம் சாதிப்பதோ அல்லது காலக்ஷேபம், ஸ்தோத்ரம், திவ்யப்ரபந்தம் வகுப்புகளில் போய் கலந்து கொள்வதோ எல்லாமே அனுஞ்யா கைங்கர்யம் தான். விதிக்கப்பட்ட கைங்கர்யங்கள் இல்லை. அதனால் ஒரு கைங்கர்யம் உசத்தி ஒரு கைங்கர்யம் தாழ்த்தி என்பது கிடையாது.
இதுதான் செய்யவேண்டும், இது செய்யக்கூடாது என்கின்ற விதி எதுவுமே கிடையாது. ஏனென்றால் எல்லாமே நாமே விரும்பி ஏற்றுக்கொள்ளும் கைங்கர்யங்கள் தான். எதுவும் விதித்த கைங்கர்யங்கள் இல்லை. பண்ணுவது உசத்தி, பண்ணாமல் இருந்தால் தோஷம் எதுவும் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் அந்தப் பத்து நாட்கள் பிரசாதம் சாதிக்கப்போவது இன்னும் உசிதமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
அடியேன் தாஸன் , என் பையன் USAவில் இருக்கான் அவன் பெண் குழந்தைக்கு 2 வயதாகுகிறது, அவர்கள் இந்தியாவிற்கு வர மேலும் 2 வருடமாகும். அக்குழந்தைக்குக் காதுகுத்தி முடிஇறக்கனும். பெண் குழந்தையென்பதால் 5 வயதிற்கு மேல் செய்தால் சரியாக இருக்குமா எனத்தெரியவில்லை. ஆகையால் அங்கேயே முடியிறக்க, சிறிய முடியை எடுத்து மஞ்சள் துணியில் முடித்து எங்கள் குலதெய்வமான சோளிங்கர் நரசிம்மனுக்கு இங்கு வரும் சமயம் சேர்க்கலாமா? திருப்பதி மற்றும் திருவள்ளூர் எம்பெருமானுக்கும் முடியிறக்கும் வழக்கம் உண்டு. என்ன செய்யலாம் என்று ஆலோசனை வழங்க ப்ரார்த்திக்கிறேன்.
இக்கேள்விக்கான விடையை பின்னர் கூறுகிறோம்.
அடியேனுக்கு அவ்வப்போது துர்ஸ்வப்னம் வருகிறது, அவ்வாறு வந்தால் அதைத் தொடர்ந்து ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்கிறது, இதைத் தவிர்க்க என்ன செய்வது..
துர்ஸ்வப்னங்களைத் தவிர்க்க குலசேகராழ்வார் அருளிச்செய்த முகுந்த3மாலையின் 39 ஆவது ஸ்லோகத்தை, இரவு படுப்பதற்கு முன் நித்யமும் அனுசந்தானம் பண்ணலாம்.
க்ஷீரஸாக3ர தரங்க3க்ஷீகரா
ஸாரதாராகித சாருமூர்தயே ।
போ4கி3போ4க3 க ஶயநீயஶாயிநே
மாத4வாய மது4வித்3விஷே நம: ॥
அதே போல் அவசியம் மூன்று தடவை மாதவ திருநாமத்தை ஜபிக்க வேண்டும். படுப்பதற்கு முன் மாதவா,மாதவா, மாதவா என்று சொல்லிவிட்டுப் படுத்துக்க கொண்டால் எந்த விதமான துர்ஸ்வப்னமும் ஏற்படாமல் இருக்கும்.
தசாகத்திற்கு (10ம் நாள்) போய் விட்டு வந்தால் பூணூல் மாற்றிக் கொள்ள வேண்டுமா? (தீட்டு இல்லாதவர்கள்)
தீட்டு இல்லாதவர்கள், தசாகத்திற்கு (10ம் நாள்) போய் விட்டு வந்தால் பூணூல் மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.
அடியேன் வ்ராத்ய வர்ணத்தைச் சேர்ந்தவன்.
a.
எனக்கு இருக்கும் உபநயனம் மற்றும் வேதம் ஓதும் அதிகாரத்தை எப்படிப் பெறுவது? அவைகளைப் பெற ஏதேனும் ப்ராயஶ்சித்தம் செய்ய வேண்டுமா?
b.
மோக்ஷம் பெற ப்ரந்யாஸம் கட்டாயமா? தென்னாசார்யர் ஸம்ப்ரதாயகாரரகள் அது அவசியம் இல்லை என்கிறார்கள். ஆனால் எனக்கு வடகலை ஸம்ப்ரதாயப்படி செய்ய வேண்டும் என்ற ஆசை. அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏன் இந்த வேறுபாடு?
இக்கேள்வியின் உத்தேசம் புரியவில்லை.
யாரேனும் க்ருஹத்தில் தவறிவிட்டால் ஒரு வருடம் கோலம் போட கூடாது என்கிறார்கள் அதனுடைய வைதிக ரீதியான சமாதானம் என்னவென்று தெரியபடுத்த ப்ரார்த்திகிறேன்
கோலம் போடுவது என்பது மங்களகரமான காரியம்.
யாரேனும் க்ருஹத்தில் தவறிவிட்டால் ஒரு வருடம் நாம் துக்கம் அனுஷ்டிக்கிறோம்.அதனால் பண்டிகைகள் எல்லாம் எதுவும் கிடையாது, சுபமான சிலவற்றை நாம் தவிர்க்கிறோம் என்கிற ரீதியில் கோலம் போடக்கூடாது என்று வரும். வைதிக ரீதியான சமாதானம் இதுதான் என்று தோன்றுகிறது.
கயா ஶ்ராத்தம் செய்யும்போது நம் வைகுண்டவாசியான ஆசார்யனுக்கும் சேர்த்து ஶ்ராத்தம் செய்ய வேண்டுமா?
கயா ஶ்ராத்தம் பொதுவாக நமக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் செய்யலாம் என்று கேள்விபட்டிருக்கிறேன். எனவே அந்த ரீதியில் ஆசார்யனுக்கும் செய்யலாம் எனத் தோன்றுகிறது.
இந்த விஷயம் தெரிந்தவர்கள், அங்கே செய்துவைப்பவர்களிடன் கேட்டால் அவர்கள் செய்து வைப்பார்கள்.
அகத்தில் பள்ளிக்குச் செல்லும் பேரன் இருக்கிறான் அடியேனுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டத்து. விநாயகசதுர்த்தி கொண்டாடலாமா?
ஸ்ரீவைஷ்ணவர்கள் விநாயகர்சதுர்த்தி எப்பொழுதுமே கொண்டாடக்கூடாது. பரந்யாஸம் ஆனபடியினால் கட்டாயம் கொண்டாடக்கூடாது.
35.a. என் மாமனார் ஆகஸ்ட் 5 அன்று காலமானார்.எனது புத்திரனின் உபநயனம் ஜூலை மாதம் 6 அன்று நடந்தது.அவனுக்கு எப்பொழுது ஆவணி அவிட்டம் நடத்த வேண்டும்.கணவருக்கு அமாவாசை தர்ப்பணம் உண்டா ஒரு வருடத்திற்கு.
b. எனது மாமனார் ஆகஸ்ட் 5 அன்று காலமானார்.கணவருக்கு மஹாளயபக்ஷம் உண்டா
ஆவணி அவிட்டம் இந்த வருடம் ஆடி மாதம் வந்தது, அன்று பண்ண முடியாதவர்கள், ஆவணி மாதம் பௌர்ணமி அன்று அதைப் பண்ணவேண்டும். மேலும் அமாவாஸை தர்ப்பணம் ருக்மமாக பண்ணத்தான் வேண்டும்.
மஹாளய தர்ப்பணம் மாதா பிதாக்களின் மரண வருஷத்தில்கூட கட்டாயம் செய்ய வேண்டும் என்று ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது.
மஹாளயத்தை சிலர் தர்ப்பணமாகச் செய்யாமல் அன்ன ஶ்ராத்தமாக செய்வார்கள், அவர்களால் இதைப் பண்ண முடியாது.
ஆனால் நம் ஸம்ப்ரதாயத்தில் தர்ப்பணமாகத்தான் இதை செய்துகொண்டிருக்கிறோம். ஆகையால் மஹாளய தர்ப்பணம் அவசியம் செய்ய வேண்டியது.
34.
a.
புக்ககத்தில் எல்லோரும் வயதில் மூத்தவர்கள்.அடியோங்கள் இளயவர்களாக இருக்கும் பக்ஷத்தில், அவர்களைச் சேவிக்கும் சந்தர்ப்பம் வருகிறது.அவர்கள் ப்ரபத்தி பண்ணிக்கல.இதர தேவதா சம்பந்தம் இருக்கு.என்ன பண்ணலாம்?
b.
நவராத்திரி கொலு நாட்களில் இதர ஜாதியினர். வீட்டுக்கு வந்தால் வெற்றிலை பாக்கு கொடுக்கலாமா?கொலுவிற்கு அய்யர் வீட்டில் அடியேன் போய் வெற்றிலை பாக்கு எடுத்துக் கொள்ளலாமா?
c.
இதர ஜாதியினர் வீட்டு நல்லது கெட்டதுக்கு தலை காமிக்க போலாமா?
d.
ப்ரபத்தி ஆனவர்கள் (ஆத்து வழக்கம் ) சுமங்கலி ப்ரார்த்தனை செய்யலாமா?
e.
புக்ககத்தில் இருக்கும் வயது முதிந்தவர்கள், மற்றும் மாமனார், மாமியாரை பரந்யாஸம் ஆகவில்லை என்றாலும் சேவிக்கலாம். தேவதாந்தர சம்பந்தம் இருப்பது வருத்தமான விஷயம், அது சீக்கிரம் நீங்க எம்பெருமானை ஶ்ரத்தையுடன் ப்ரார்த்திக்கலாம். மாமனார், மாமியாரின் ஸ்தானத்திற்கு வைத்து சேவிக்க வேண்டியது அவசியம் ஆகையால் சேவிக்கனும்.
நவராத்திரி கொலுவிற்கு இதர ஜாதியினர் வந்தால் வெற்றிலை பாக்கு கொடுக்கலாம். அய்யர் அகத்துக்கும் போய் தாம்பூலம் எடுத்துக்கொள்ளலாம்.
இதர ஜாதியினர் வீட்டின் கல்யாணம், சீமந்தம் போன்ற விசேஷங்களுக்குப் போகலாம். வேறு மாதிரி காரியங்களுக்குப் போவதைத் தவிர்க்கலாம்.
ப்ரபத்தி ஆனவர்கள் அகத்து வழக்கப்படி சுமங்கலி ப்ரார்த்தனையிருந்தால் பண்ணலாம். லக்ஷ்மீதேவியை மனதில் நினைத்துக்கொண்டு பண்ணலாம்.
இதர ஜாதியினர் ஸமாஶ்ரயணம் ஆகியிருந்தால் அவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் என்பதை மனதில் கொண்டு அபசாரம் படாமல், மரியாதையுடன் பழக வேண்டும். சமபந்தியில் அமர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அந்த ஜாதிக்குரிய வரம்புகளை எங்கு மீறக்கூடாதோ அங்கே மீறக்கூடாது, அதே போல் நம் க்ருஹங்களில் சில இடங்களை அவர்கள் பார்க்கக்கூடாது என்று இருக்கு, அவ்விடத்தைப் பார்க்காமல் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அவர்களை எவ்விதத்திலும் குறைத்து நினைக்காமல், மிகவும் மரியாதையுடன் பழக வேண்டும். அவர்களிடம் அபச்சாரம் படாமல் இருக்கவேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
திருமஞ்சன கட்டியம் சேவிப்பதின் விசேஷம் என்ன?
திருமஞ்சன கட்டியம் சேவிப்பது எம்பெருமானுக்கு ஒரு உபசாரமும், பக்தர்களுக்கு ஒரு அனுபவமும் ஆகும்.
அடியேன் உக்தி நிஷ்டையில் பரந்யாஸம் செய்துகொண்டேன். சில சமயங்கள் நம் பரந்யாஸம் சரியாக நடந்ததா என்று பயத்தினாலும், அறியாமையினாலும் யோசித்திருக்கிறேன். பரந்யாஸத்திற்கு, ஆசார்யன் மற்றும் எம்பெருமான் மீது மஹாவிஶ்வாஸம் வேண்டும் என்று புரிந்துகொண்டேன். தவறுதலாக நினைத்ததை எண்ணி இன்று வருந்துகிறேன். அகத்தில் இருக்கும் சாளக்கிராம் எம்பெருமானிடமும் ஆசார்யன் பாதுகையிடமும் பலமுறை மன்னிப்பு கேட்டிருக்கிறேன். என் பயமே என்னை இவ்வாறு தவறுதலாக நினைக்கச் செய்ததென்று. இதற்கு ஏதேனும் ப்ராயஶ்சித்தம் உண்டா?
நீங்கள் எதுவும் செய்யவேண்டாம், பெருமாளிடமும் ஆசார்யனிடமும் மஹாவிஶ்வாஸத்தைக் குறைக்காமல் இப்போது இருந்தால் போதும். அதையும் ஸ்வாமி தேஶிகன் சொல்லியிருக்கிறார், பரந்யாஸ சமயத்தில் மஹாவிஶ்வாஸம் குறைந்திருந்தால் அதையும் பெருமாள் உண்டாக்கிவிடுவான்.
ஆகையால் இப்போது எதையும் நினைத்துக் குழம்பிக்கொள்ள வேண்டாம், கவலைப்பட வேண்டாம், ப்ராயாஶ்சித்தம் பயம் என்று எதுவும் வேண்டாம். ஆசார்யனிடமும் பெருமாளிடமும் உள்ள மஹாவிஶ்வாஸம் குறையாமல் பார்த்துக்கொண்டால் போதும்.
நாம் வெளிநாடு செல்லும் போது எத்தனை சாளக்கிராம மூர்த்திகள் எடுத்துச் செல்ல வேண்டும்? ஏதேனும் கணக்கு உண்டா?
நாம் வெளிநாடு செல்லும் போது இத்தனை சாளக்கிராம மூர்த்திகள் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கணக்கெல்லாம் இல்லை எத்தனை முடியுமோ அத்தனை எடுத்துச்செல்லலாம்.
ஒரு பெருமாள் மாத்திரம் ஏளப்பண்ணிக்கொண்டு சென்றால் சௌகர்யமாக இருக்குமென்றால் ஒரு பெருமாள் மட்டும் ஏளப்பண்ணிக்கொண்டு போகலாம்.
பெரிய திருமலை நம்பிகளின் திருநக்ஷத்ரம், புரட்டாசி அனுஷமா? அல்லது வைகாசி ஸ்வாதியா? இந்தக் கட்டுரையில் ஸ்ரீமத் பஞ்சமத பஞ்ஜநம் தாததேஶிகன் அவர்கள் திருமலைநம்பிகளின் திருநக்ஷத்ரத்தில் அவதரித்தார் என்று உள்ளது. மேலும் திருமலை திருப்பதியில் புரட்டாசி அனுஷத்தில்தான் திருமலை நம்பிகளின் திருநக்ஷத்ரம் கொண்டாடப்படுகிறது என்று கேள்விப்பட்டுள்ளேன்.
பெரிய திருமலை நம்பிகளின் திருநக்ஷத்ரம், புரட்டாசி அனுஷம் என்று நம் பெரியோர்கள் சொல்கிறார்கள்.
ஶாஸ்த்ரத்தின் படி ஒருவர் தானே க்ஷௌரம், முடிதிருத்தம் போன்றவை கூடாதென்று சொல்லுகிறது. ஆனால் இக்காலத்தில் வேலை இருக்கும் இடம் காரணமாக, அப்படிக் கடைபிடிக்க முடியவில்லை. இதற்கு ப்ராயஶ்சித்தம் உள்ளதா?
ஶாஸ்த்ரத்தின்படி ஒருவர் தானே க்ஷௌரம் (shelf shaving), முடிதிருத்தம் போன்றவை கூடாதென்று சொல்லுகிறது என்ற விடை கேள்வியிலே இருக்கிறது.
அப்படிக் கடைபிடிக்க முடியாதுபோனால் ப்ராயஶ்சித்தம் என்ற ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை.
எகல் முடிந்தபின் (13ஆம் நாள்) பரிவட்டங்களை என்ன செய்ய வேண்டும்?
அப்பரிவட்டங்கள் பெருமாளின் மரியாதையானபடியால் அகத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளலாம். பெருமாள் வஸ்திரமானபடியால் உத்திரயமாக அல்லது வேறு மரியாதையான ரீதியில் உபயோகிக்கலாம். இடுப்புக்குக் கீழ் கட்டாயம் உபயோகப்படுத்தக் கூடாது.
அடியேன் தஞ்சாவூரில் இருக்கும் ராஜ மடம் சந்தான ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் கைங்கர்யத்திற்காக இயன்றளவு பணம் அனுப்பிவந்தேன். அங்கே பிள்ளையார் இருப்பது சமீபமாகதான் அடியேனுக்குத் தெரியவந்தது அதன்பின் பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டேன். மேலும் அடியேனின் பணம் அப்பிள்ளையார் சந்நிதி கைங்கர்யத்திற்கும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். இதனால் அடியேனுக்குத் தேவதாந்தர சம்பந்தம் என்ற தோஷம் ஏற்பட்டிருக்குமா ஸ்வாமி?
தேவதாந்தர சம்பந்தம் என்ற தோஷம் இந்த இடத்தில் வராது. ஏனென்றால் மனசறிந்து தேவதாந்தரத்திற்கென்று கொடுக்கப்படவில்லை.
சென்ற சுதர்சன இதழ்களில் தேவதாந்தரங்களுக்கு என்று கோவில்கட்டுறோம் அதற்கு பண உதவி வேண்டும் என கேட்கும்போது, எத்தனையோ செலவுகள் நாம் செய்கிறோம் அது போல் பொது தர்ம காரியம் என்ற நினைப்போடு கொடுத்தால் தவறில்லை என்று.
இவ்விடத்தில் மனமறிந்து தேவதாந்தரத்திற்கு என்று, அவருடைய ப்ரீத்திக்கு, அவருடைய கைங்கர்யத்திற்கு எனக் கொடுக்கப்படாததால் எவ்வித தோஷத்தையும் தேவதாந்தர ஸம்பநதத்தையும் ஏற்படுத்தாது.
ப்ரஹ்ம யக்ஞத்தின்போது செய்யப்படும் ஆசமனம், மந்த்ரம் இல்லாமல் செய்யப்பட வேண்டுமா?
ப்ரஹ்ம யக்ஞத்தின்போது ஆரம்பத்திலும், கடைசியிலும் செய்யும் ஆசமனம் எப்போதும் செய்யும் ஆசமனம் போல்தான் ஆனால் ப்ரஹ்ம யக்ஞத்தின் நடுவில் ஒரு ஆசமனம் ஒன்றுள்ளது “ஶ்ரௌதாசமனம்” என்பது. அது மந்திரமில்லாமல் தான் இருக்கும். அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதை பெரியவர்களிடம் கேட்டு கற்றுக்கொள்ளவும்.
அடியேன் அகத்தில் சாளக்கிராம பெருமாளுடன், சிறிய க்ருஷ்ணர் போன்ற விக்ரஹ எம்பெருமான்கள் எழுந்தருளியிருக்கின்றனர். அவர்கள் பக்கத்தில் வேறுஒரு சிறிய விக்ரஹம் இருந்தது மிகச்சிறியளவில் இருந்ததால் என்ன விக்ரஹமென்று தெரியாமல் எம்பெருமானுக்குச் சமர்ப்பிப்பதுபோல் புஷ்பாதிகள் சமர்ப்பித்து சேவித்தும் வந்தேன். இப்போதுதான் அது சரஸ்வதி விக்ரஹம் என்று தெரிய வந்தது இதனால் பரந்யாஸம் ஆன அடியேனுக்குத் தேவதந்தர தோஷம் ஏற்பட்டிருக்குமா ஸ்வாமி? ஏதேனும் ப்ராயஶ்சித்தம் உண்டா?
இதுவரை தெரியாமல் புஷ்பார்ச்சனை செய்துவிட்டபடியால் ஒரு தோஷமும் கிடையாது.
அபுத்திபூர்வக உத்ராகங்கள் என்ற ஒன்று உண்டு, அதாவது பரந்யாஸத்திற்குப் பின், புத்திக்குத் தெரியாமல் நாம் செய்யக்கூடிய பாபங்கள் – அபுத்திபூர்வமான அகங்கள் – அகங்கள் என்றால் பாபங்கள். அப்படி அபுத்திபூர்வக உத்ராகங்களுக்கு தோஷங்கள் ஒட்டாது. இதுவரை தெரியாமல் செய்ததினால் தோஷம் ஒட்டாது, இனிமேல் தெரிந்தபின் அக்காரியத்தைச் செய்யாமல் இருக்கவும்.
கோயிலில் இருக்கும் த்வாரபாலகர்கள்,ஆஞ்சநேயர் போன்றவர்களை எப்படிச் சேவிக்க வேண்டும்.
கோயிலில் இருக்கும் த்வாரபாலகர்களை, கைக்கூப்பி வணங்கலாம்.
தனியாக இருக்கும் ஆஞ்சநேயரை சன்னதியை பெரியவர்கள் சென்று சேவிக்கும் வழக்கமில்லை. இருப்பினும் அஞ்சலி செலுத்துவதால் பாதகமில்லை.
இராமருடன் இருக்கும் ஆஞ்சநேயரை எப்படி இராமரைச் சேவிக்கின்றோமோ அப்படி சேவிக்கும் வழக்கும் உள்ளது.
சாளக்கிராம திருவாராதனை எப்படிச் செய்ய வேண்டும்? அடியேனின் ஆத்துக்காரர் தினமும் சாளக்கிராம மூர்த்திக்கு பால் தயிர் கொண்டு திருமஞ்சனம் மட்டும் செய்வார். முறையாக எப்படிச் செய்வது?
சாளக்கிராம திருவாராதனைக்கு நித்யம் பால் தயிர் இல்லாவிட்டால், வெறும் பால் மட்டும் வைத்துச் செய்யலாம் அல்லது வெறும் தீர்த்தத்தினால் மட்டும் நித்யம் திருவாராதனைச் செய்து, விசேஷ நாட்களில் மட்டும் பால் வைத்து திருமஞ்சனம் பண்ணுவது என்பது வழக்கம்.
பெரியவர்கள் வழக்கப்படி, நித்யமும் தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்து, வெள்ளிக்கிழமை போன்ற மற்ற விசேஷ நாட்களில் பாலால் திருமஞ்சனம் செய்வார்கள்.
மற்றபடி தயிர், தேன் இதெல்லாம் விசேஷமாக உபயோகிப்பது என்பது வழக்கத்தில் இல்லை.
“விருத்தி தீட்டு உள்ள நாட்களில் காலக்ஷேபங்களில் அன்வயிக்கக் கூடாது என்று கேள்வி பட்டிருக்கிறேன். உபந்யாஸங்கள் கேட்கலாமா? தெரிவிக்க பிரார்த்திக்கிறேன்.
"விருத்தி தீட்டு” உள்ள நாட்களில் காலக்ஷேபங்களில் அன்வயிக்கக் கூடாது, உபந்யாஸங்கள் கேட்கலாம்.
இங்கு USAல், தென்னாசார்யர் ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றும் கோயில்தான் அகத்துப் பக்கத்தில் உள்ளது. சாற்றுமுறை சமயம் நம் ஸம்ப்ரதாயத் தனியனைச் சேவிக்கலாமா? மேலும் தென்னாசார்யர்கள் சொல்லும் அவர்கள் ஆசார்யன் (ஸ்ரீபாஷ்யகார ஸம்ப்ரதாயத்தைப் பின் பற்றுபவர்கள் என்பதால் அவர்களின்) தனியனையும் சேவிக்கலாமா?
இராமானுஜ அடியார்கள் பற்றிய ஶ்லோகத்தைச் சேவிப்பதில் எந்த ஐயமுமில்லை. அவர்களுடைய சாற்றுமுறை க்ரமம் அங்கே சேவிக்கும்படி நிர்பந்தம் வந்தால் அதைச் சேவிப்பதில் எந்தத் தவறுமில்லை.
நம் தனியனை, அவர்கள் அனுமதித்தால் அக்கோயிலில் சேவிப்பது உசிதமாகும்.
அடியேன் USAல் இருப்பதால் ஸ்ரீரங்கம், காஞ்சி போன்ற திவ்யதேசங்களுக்கு போகமுடியாமல் இருக்கின்றோம். இங்கே இருக்கும் எம்பெருமானின் திவ்யமங்கள ரூபத்தில் ஈடுபட்டால், எங்கே திவ்யதேச எம்பெருமானைப் போய்ச் சேவிக்கும் பாக்கியம் கிட்டாதோ என்ற ஒரு ஐயம் எழுகிறது. இப்படி எம்பெருமானின் அர்ச்சாமூர்த்தியில் பேதம் பார்ப்பது சரியா ஸ்வாமி? ஏதேனும் தேஷமாகுமா?
எம்பெருமான் ஆங்காங்கே அர்ச்சாமூர்த்தியாய் சேவை சாதிப்பது எல்லாராலும் திவ்ய தேசங்கள் போய்ச் சேவிக்க முடியாது என்ற காரணத்தினால்தான். அப்படியிருக்க அவனே க்ருபையுடன் எங்கு இறங்கிவந்திருகிறானோ அவ்விடத்தில் ஈடுபடுவதென்பது நமக்கு ஏற்பட்ட பாக்கியமாகும்.
எங்கே இங்கிருக்கும் எம்பெருமானிடத்தில் ஈடுபாடு ஏற்பட்டால் திவ்யதேச எம்பெருமானைச் சேவிக்கும் ஆசை மாறிவிடுமோ என்று நினைக்கவேண்டிய அவசியமில்லை. திவ்ய தேசம் சேவிக்கும் ஆசையும் அவன் ஏற்படுத்தி வைப்பான், நமக்கென்று அவன் வந்திருக்கும் இடத்தில் அவன் மேல் ஈடுபாடு கொள்ளும்படி செய்ததும் அவனுடைய பரமானுக்ரஹம்தான்.
எல்லா அர்ச்சாமூர்த்தி எம்பெருமானித்திடலும் ஈடுபாடு கொள்வதென்பது ஸ்ரீவைஷ்ணவர்களின் ஸ்வரூபம்தான்.
வரப்போகும் சூர்ய க்ரஹணம் பற்றிய கேள்வி:
–
க்ரஹண காலத்தில் பொதுவாக அடியேன் மடியாய் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம், அஷ்டாக்ஷர ஜபம் பின் க்ரஹணகால முடிவில் தர்ப்பணம் பண்ணுவது வழக்கம்
a.
இந்தக் காலத்தில் சாளக்கிராம மூர்த்திக்கு (நித்யபடிச் செய்யும்) திருவாராதனை பண்ணலாம் என்று கேள்விபட்டேன். இது சரியா?
b.
க்ரஹணகால திருவாராதனை என்று ஏதேனும் விசேஷ திருவாராதனை இருக்கிறதா?
c.
க்ரஹணகால திருவாராதனையின் போது பால், பழம், கற்கண்டு மட்டும் பெருமாளுக்கு அம்சைபண்ணலாமா?
க்ரஹண காலத்தில் சாளக்கிராம மூர்த்திக்குத் (நித்யபடிச் செய்யும்) திருவாராதனை பண்ணலாம்.
ஆமாம் க்ரஹண கால திருவாராதனை என்று விசேஷ திருவாராதனை இருக்கிறது. எப்படி நித்யபடி திருவாராதனை சமயத்தில் “இஜ்யாக்னேன” என சங்கல்பிக்கிறோமோ அதேபோல் க்ரஹணகால திருவாராதனை சங்கல்பத்தில், “ஸோமோபராக புண்ய கால அல்லது ஸூர்யோபராக புண்ய கால ஆராதனா” என்று சொல்லிக்கொள்ள வேண்டும். மற்றபடி வேறொரு வித்யாசமும் இல்லை.
தளிகை பண்ணாமுடியாத காரணத்தினால், க்ரஹணகால திருவாராதனை போது பால், பழம், கற்கண்டு மட்டும்தான் அம்சைபண்ணமுடியும். குறிப்பாக பழம், கற்கண்டு இவை இரண்டும் தான் முக்கியமாக அம்சை பண்ணுவார்கள்.
நித்யபடி திருவாராதனை சமயம் பலா, அன்னாசி போன்ற பழங்கள் முழுவதாக இல்லாமல் உரித்த (சிறு துண்டுகளாக அரிந்து) பழங்களை வாங்கி ஸமர்ப்பிக்கலாமா? அதே போல் முழுப்பாக்குதான் வெற்றிலையோடு ஸமர்ப்பிக்க வேண்டுமா? அடியேன் உடைத்த பாக்குதான் வாங்கிக்கொண்டு இருக்கிறேன்.
நித்யபடி திருவாராதனைச் சமயம் பலா, அன்னாசி போன்ற பழங்களை பக்குவப்படுத்தி எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பது என்பது சிறந்த உபசாரமாகும். பழங்களையெல்லாம் நாம் முழுதுமாக (முழுப்பழமாக) வாங்கி, நம் அகத்திலே அரிந்துதான் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும். கடையில் பாதியாக அரிந்து வைத்துள்ள பழங்களை நாம் வாங்கி பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கும் வழக்கம் கிடையாது.
முழுப்பாக்கு உபயோகிப்பதுதான் வழக்கத்தில் இருக்கிறது. கொட்டைப்பாக்கு என்று ஒன்று கடைகளில் கிடைக்கும், அதை வாங்கி ஸமர்ப்பிப்பார்கள். அதுவே தூள் பாக்கு என்று ஒன்று கிடைக்கிறது அதை ஸமர்ப்பிக்கக்கூடாது.
முழுப்பாக்கு என கேரளா போன்ற இடங்களில் கிடைக்கும், நம்மூரில் அது கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஆகையால் அது ப்ரஸக்தியிருக்காது எனத் தோன்றுகிறது.
கோயிலில் கொடுக்கும் பவித்ர மாலைகளை என்ன செய்ய வேண்டும்? பழைய பவித்ரமாலைகள் இருந்தால் அதை என்ன செய்தல் வேண்டும்?
கோயிலில் கொடுக்கும் பவித்ர மாலைகளை அவற்றைத் தரித்துக்கொண்டு அனுஷ்டானம், திருவாராதனம், ஜபம் போன்றவற்றைச் செய்யலாம். சுத்தமாக இருக்கும் சமயங்களில் நாம் அதைத் தரித்துக்கொள்ளலாம்.
அந்தப் பவித்ர மாலைகள் பழையதாக ஆகிவிட்டால், அதைக் களையும்போது அசுத்தமான இடத்தில் சேர்க்காமல் சுத்தாமன இடத்தில் சேர்க்கலாம். அதாவது கால் படாத இடங்களில், அல்லது நதியில் சேர்த்து விடலாம்.
சென்ற சுதர்சன இதழில் அகத்திலிருப்பவர்களுக்குப் பெருமாள் தீர்த்தம் மூன்று முறை கொடுக்கலாம் என்று பதில் அளித்திருந்தீர்கள். அகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் மூன்று முறையா அல்லது ஸமாஶ்ரயணம் ஆனவர்களுக்குத்தான் மூன்று முறையா என்பதை தெளியப்படுத்தவும்.
பெருமாள் தீர்த்தம் மூன்று முறை கொடுக்கலாம் என்பதில் சில அகத்தில் ஸமாஶ்ரயணம் ஆனவர்களுக்கு மட்டும் மூன்று முறை, ஆகாதவர்களுக்கு ஒரு தடவை என்பதாக ஒரு வழக்கம் இருக்கிறது.
அவரவர்கள் அகத்து வழக்கப்படி பின்பற்றவும்.
இத்தனை மணிக்காலத்திற்குள் என்ற நேர நிர்ணயம் சந்தியாவந்தனம் செய்ய இருக்கின்றதா? உதா: இரவு 10மணிக்குள் என்பது போல். சில நேரம் பயணங்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பண்ண இயலாது, அந்தச் சமயம் என்ன செய்வது ஏதேனும் ப்ராயஶ்சித்தம் இருக்கிறதா?
சந்தியாவந்தனம் அதனுடைய காலத்திலே செய்யவேண்டும். அப்படிச் செய்யத் தவறிவிட்டால், அதாவது ஒரு ஒன்றரை மணிக்காலத்திற்குள் செய்யவேண்டும். சமயம் ஆக ஆக அதற்கு ப்ராணாயமம் முதலிய ப்ராயஶ்சித்தங்கள் எல்லாம் உண்டு.
இப்போதெல்லாம் இரவு 8, 9 மணிக்கெல்லாம் சந்தியாவந்தனம் செய்கிறார்கள். அதில் ஒன்றும் பெரிய வித்யாசம் இல்லை.
ஆனால் சில சமயம் ப்ராயணத்தின் போது குறிப்ப்பாக தூரமான ப்ரயாணம் செல்லும்போது, அன்றைய சந்தியாவந்தனம் மறுநாள் பிம்மாலையோ அல்லது காலையிலோ பண்ணும்படி ஆகிவிடுகிறது. அந்தச் சமயம் அதிகப்படி ப்ராணயாமம் செய்வது ப்ராயஶ்சித்தமாகுகிறது . அதாவது 3 தடவை அதிகப்படி ப்ராணயாமம் முதலியவை பண்ணவேண்டும்.
நமஸ்காரம், அடியேனுக்கு வேலை காரணமாக நிறைய ஶ்லோகங்கள் சேவிக்க முடியவில்லை, எளிமையான நித்தியபடி என்ன சேவிக்கலாம்
ஸ்தோத்ர பாடங்களில் “ந்யாஸ தஶகம்” சேவித்தால் நலம் 2-3 நிமிடங்களில் சேவித்துவிடலாம். அதேபோல், அவகாசம் இருக்கிறதோ இல்லையோ, திருப்பாவையின் சாற்றுமுறை பாசுரங்களை மட்டும் சேவிக்க வேண்டும். அவகாசம் இருக்கும் நேரம் திருப்பாவையைப் பூர்த்தியாகச் சேவித்தால் நலம்.
சமீபத்தில் அடியேன் கேட்டறிந்து கொண்டது பஞ்ச ஸம்ஸ்காரம் அல்லது பரந்யாஸம் ஆனவர்கள்தான் ரஹஸ்ய த்ரயத்தை அனுசந்திக்க வேண்டும் என்று. அடியேனுக்கு இவை இரண்டும் இன்னும் ஆகவில்லை.ஆனால் அடியேன் வேதமும், ஸ்ரீமத் பகவத் கீதையும் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதன் மூலம் அஷ்டாக்ஷரம் மற்றும் சரம ஶ்லோகம் கேட்டறிந்தேன். மேலும், அடியேன் புரிந்துகொண்டது த்வயம் ஸ்ரீமத் இராமாயணத்தில் ஒரு பகுதியாக வருகிறது என்று. அடியேன் கேள்வி பரந்யாஸம் அல்லது ஸமாஶ்ரயணம் ஆகாதவர்கள் ஸ்ரீமத் இராமாயணம், ஸ்ரீமத் பகவத் கீதா மற்றும் உபநிஷத்கள் சேவிக்கக்கூடாதா?
வேதம், உபநிஷத் ஆகியவற்றை உபநயனம் ஆனவுடனே ஆரம்பிக்கலாம்.
ஸ்ரீமத் இராமாயணம், ஸ்ரீமத் பகவத்கீதை, மந்த்ரார்த்த உபதேசங்கள் ஆகியவற்றை ஸமாஶ்ரயணம் ஆனவுடனே (புருஷர்கள்) ஆகலாம்.
எதையும் பரந்யாஸத்திற்குப் பின் என காத்துக்கொண்டிருக்க வேண்டாம்.
ஆனால் இன்றைய காலத்தில் ஸ்ரீமத் இராமாயணம், ஸ்ரீமத் பகவத்கீதை போன்றவையெல்லாம் சிறு வயதிலேயே சொல்லிக்கொடுக்கும் வழக்கம் வந்திருக்கிறது. ஆகையால் மஹான்கள்/ஆசார்யர்கள் சொல்லும்படிச் செய்யவும்.
குறிப்புகள்:
ஸ்ரீமத் இராமாயணம், பகவத்கீதை முதலியவற்றைக் கதையாகக் கேட்பது, சிறு குழந்தை வயதிலிருந்தே ஆரம்பிக்கலாம். ஆனால் மூலம் உபதேசம் பெறுவதற்குச் சில நியமங்கள் இருக்கின்றன.
பெருமாளுக்குத் தீர்த்தவாரி கண்டருளிய சமயம் எம்பெருமாள் உடுத்திக் களைந்த வஸ்த்ரத்தை அப்படியே உலர்த்தி மீண்டும் உபயோகிக்கலாமா அல்லது நன்கு சலவை செய்து தான் உபயோகிக்கவேண்டுமா?
பெருமாளுக்குத் தீர்த்தவாரி கண்டருளிய சமயம் எம்பெருமான் உடுத்திக் களைந்த வஸ்த்ரத்தை வெளியே சலவைக்குப் போடவேண்டுமென்ற அவசியமில்லை. தீர்த்தவாரி (திருமஞ்சனம்) வஸ்த்ரத்தை பால், தயிர் பட்டிருக்கும் என்றபடியால் நாமே நன்றாகக் கசக்கி உலர்த்தி உபயோகிக்கலாம்.
நித்யமும் பெருமாள் சன்னிதியில் ஊதுபத்தி ஏற்றி வைக்கலாமா?
நித்யமும் பெருமாள் சன்னிதியில் ஊதுபத்தி ஏற்றி வைக்கலாம்.
ஆசார்யன் தனியனை மடிசார் உடுத்திக்கொண்டுதான் சேவிக்க வேண்டுமா?
ஆசார்யன் தனியனை மடிசார் உடுத்திக்கொண்டு சேவித்தால் உத்தமம். பொதுவாக எப்பொழுதுமே க்ருஹணீகள் மடிசார் உடுத்திக்கொண்டு தான் இருக்கவேண்டும். அதனால் ஆசார்ய தனியன் சேவிக்கும் பொழுது மடிசாரில் இருக்கிறது என்பதுதான் ஏற்படும். அப்படி மடிசாரில் இல்லையென்றாலும் ஆசார்யன் தனியனைச் சேவிப்பது இன்னும் முக்கியம். அதனால் அவசியம் சேவிக்க வேண்டும்.
அகத்தில் இருக்கும் ஹயக்ரீவ பெருமாளுக்கு ஏலக்காய் மாலை அணிவிக்கலாமா. அவருக்கு அணிவித்த ஏலக்காய் மாலையை என்ன செய்வது?
அகத்தில் இருக்கும் ஹயக்ரீவ பெருமாளுக்கு ஏலக்காய் மாலை ஸமர்ப்பித்தால், ஸமர்ப்பித்த பிறகு அந்த ஏலக்காயைப் பொடிசெய்து பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
மடி வஸ்த்ரத்தைக் கையால் எடுத்து உலர்த்தலாமா அல்லது குச்சிகொண்டுதான் உலர்த்த வேண்டுமா? மேலும் தற்போது வந்துள்ள வயர் (போன்ற கயிறு) அல்லது ஸ்டீல் குச்சிகளில் மடி வஸ்த்ரம் உலர்த்தலாமா?
மடி வஸ்த்ரங்களைக் கொம்பால் உலர்த்துவதுதான் உசத்தி. ஏனென்றால் நாம் எவ்வளவு மடியாக இருக்கின்றோம் என்று நமக்கே தெரியாது. சிரோஸ்நானம் எல்லாம் செய்துவிட்டு பரம ஆசாரமாய் வந்திருந்தால் அது வேறு. ஆனால் அப்படியெல்லாம் அமைவது மிகவும் அரிது. அதனால் எப்பொழுதுமே மடி வஸ்த்ரங்களைக் கொம்பால் உலர்த்தி எடுத்தால் நல்லது.
வஸ்த்ரங்களை மூங்கில் கொம்பில் உலர்த்தினால் உத்தமம். அது கிடைக்கவில்லை என்றால் இரும்புக்கம்பியில் உலர்த்தினாலும் பாதகமில்லை.
“ஸ்தீரிகள் அஷ்டாக்ஷ்ர மந்த்ரம், த்வயம் மந்த்ரம், சரமஸ்லோகம், ஸ்ரீ மந்த்ரம் எவ்வளவு ஜபிக்க வேண்டும். 108,10,10,108 என்ற எண்ணிக்கை சரியானதா? மேலும் இவற்றிற்கு த்யான ஸ்லோகம் அவசியம் சொல்லணுமா”
ஸ்த்ரீகள் அஷ்டாக்ஷரம், த்வயம், சரமஸ்லோகம் இவையெல்லாம் குறைந்தது 10 தடவையாவது சேவிக்க வேண்டும். அதற்குமேல் எவ்வளவு முடிகிறதோ 28,108 என எவ்வளவு வேண்டுமானாலும் ஜபிக்கலாம்.
அடியேன் பரந்யாஸம் செய்துள்ளேன், அடியேன் கேள்விபட்டது பரஸமர்ப்பணம் செய்தவர்கள் தேவதாந்த்ர சம்பந்தம் கொண்டவர்களை நமஸ்கரிக்கக் கூடாதென்று. அடியேனின் மாமனார் மாமியார் இருவருக்கும் தேவதாந்த்ர ஸம்பந்தம் கொண்டவர்கள். அவர்களைச் சேவிக்க நேரும்போது என்ன செய்வது? எம்பெருமான் அனைத்திலும் அந்தர்யாமியாக இருக்கிறான் என்று எண்ணி அவர்களைச் சேவிக்கலாமா? இதனால் மோக்ஷம் தடையாகுமா?
மாமனார், மாமியார் பெற்றோர்கள் என்ற ஸ்தானத்தில் இருக்கின்ற படியினாலே அவர்களைச் சேவிப்பதில் தவறில்லை.
எத்தனை முறை ஒருவர் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்துகொள்வது? எப்போதெல்லாம் தவறிழைக்கிறோமோ உடனே செய்ய வேண்டுமா? அல்லது ஒருமுறைதான் செய்ய வேண்டுமா?
அனுதாபாத் உபரமாத்*
ப்ராயசித்தோந் முகத்வத:।*
ப்ராயசித்த கரந்நாஶ்ச
பாபம் கச்சதி பாதஶ: ||
என்று ஸம்ஸ்க்ருத ஶ்லோகம் இருக்கிறது. ஒரு பாபத்தைச் செய்துவிட்டால் அந்த பாபத்தைச் செய்துவிட்டோமே என்று ஒரு அனுதாபம் நமக்கு வரவேண்டும்.
அனுதாபம் என்றால் இப்படி இந்த பாபத்தைச் செய்துவிட்டோமே என்று நம்பெயரிலேயே நமக்கு கஷ்டம்(வருத்தம்) வரவேண்டும்.
அதன்பின் அந்த பாபத்தைச் செய்யாமல் இருக்கவேண்டும்.
பிறகு ப்ராயஶ்சித்தம் பண்ண முயற்சி எடுக்கவேண்டும்.
இறுதியாக ப்ராயஶ்சித்தம் பண்ணவேண்டும்.
இப்படி நாம் மேற்கூறிய நான்கும் செய்யும்போது ஒவ்வொரு அடியிலும் கால்கால் பாகம் பாபம்போகும் என்பதாக.
இப்படி பாபத்தைச் செய்விட்டு, அந்த பாபத்திற்காக ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்தபின்னர் நிச்சயம் அதே பாபத்தைச் செய்யக்கூடாது. அதே பாபத்தை மீண்டும் மீண்டும் செய்துவிட்டு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்துகொள்ளலாமா என்று கேள்விகேட்டால் அதற்கு என்ன பதிலளிப்பதென்று தெரியவில்லை. செய்யாமல் இருத்தல் வேண்டும்.
பாபம் வேறுவேறாக இருந்தால் மறுபடியும் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக்கொள்ளலாம்.
ப்ரபத்தி செய்துகொண்டபின்னும் பல காலம் தேவதாந்தரம் சம்பந்தத்துடன் ஒருவர் இருக்கிறார், பின் தன் கடைசிகாலத்தில் பெருமாள் மீது மஹாவிஶ்வாஸம் வந்து பரமைகாந்தியாக மாறினால் அவர் முன் செய்த ப்ரபத்தியை பெருமாள் ஏற்பாரா? அல்லது மீண்டும் ப்ராயசித்த ப்ரபத்தி செய்ய வேண்டுமா? இப்படிச் செய்வதால் அவரின் தேவதாந்தர ஸம்பந்தத்தால் ஏற்பட்ட பாபம் போகுமா? அல்லது பெருமாள் சிக்ஷை கொடுத்து தான் மோக்ஷம் கொடுப்பாரா? இதை எப்படிப் புரிந்துகொள்வது?
செய்த ப்ரபத்தி பலிக்காமல் போகாது. ஒன்று எம்பெருமான் அவரை சிக்ஷை கொடுத்து சரி பண்ணுவார். அல்லது அவரையே ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணவைப்பார். எப்படியிருந்தாலும் ப்ரபத்தி பலிக்கும்.
அடியேன் ஒரு ஸ்ரீவைஷ்ணவரல்லாதவர் கொடுத்த ஒப்பில்லியப்பனின் ப்ரசாதம்(சர்க்கரைப்பொங்கல்) மற்றும் திருப்பதி லட்டு ப்ரசாதமும் உட்கொண்டேன். பரந்யாஸம் செய்தவர் ஒரு ஸ்ரீவைஷ்ணவரல்லாதவர் கொடுக்கும் பெருமாள் ப்ரசாதத்தை ஏற்கலாமா? இல்லை தோஷமாகுமா?
ஸ்ரீவைஷ்ணவர்களாக இருப்பவர்கள், ஸ்ரீவைஷ்ணவரல்லாதவர்கள் கொடுக்கும் ப்ரசாதத்தை அது பெருமாள் ப்ரசாதமாக இருந்தாலும் ஏற்பது தவறே, அது தோஷமாகும்.
தக்ஷிணாயன புண்ய காலம் தர்ப்பணம் பற்றியதான சந்தேகம்.
ஸ்ரீமத் வில்லிவலம் அழகியசிங்கரின் ஆன்ஹிக க்ரந்த அனுபந்தம் பக்கம் 24லின்படி தக்ஷிணாயன புண்ணியகால தர்ப்பணம் உத்தராயணத்தில் பண்ணவேண்டும் என்று இருக்கிறது.ஆகிலும் சேவா ஸ்வாமி Diary மற்றும் ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியாவில் தர்ப்பணம் ஞாயிற்றுக்கிழமை என்று குறித்துள்ளது.வைதீக மித்ரனில் சனிக்கிழமை அன்று தர்ப்பணம் என்றுள்ளது.தயை கூர்ந்து தர்ப்பணம் என்று செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தவும்
ஆடி மாதம் ஸங்க்ரமண தர்ப்பணம்:
வாக்கிய பஞ்சாங்கம் ப்ரகாரம் சூர்யோதயமானதற்குப் பின் 45 விநாழிகை அதாவது முக்கால் நாழிகைக்கு மாசம்பிறக்கிறது, அன்றையதினம் தான் நமக்குத் தர்ப்பணம். உத்ராயணத்தில் தர்ப்பணம் பண்ணவேண்டும், அதாவது காலையில் சூர்யோதயம் ஆரம்பித்தவுடனே தர்ப்பணத்தை ஆரம்பித்துவிட வேண்டும். ஆரம்பிப்பதுதான் முக்கியம் கடைசிபக்ஷம் அதுதான் முடியும்.
த்ருக்கணித பஞ்சாங்கம் படி முதல்நாள் இராத்ரியே அதாவது சனிக்கிழமையே ஸங்க்ரமணம் ஆரம்பித்துவிடுகிறது. ஆகையால் அதற்கு முதல்நாளே பகலில் தர்ப்பணம் பண்ணவேண்டும் என்பதினால் சனிக்கிழமை தர்ப்பணம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஸ்ரீமத் வில்லிவலம் அழகியசிங்கரின் திருவுள்ளமும் தர்ப்பணம் உத்திராயணத்தில் பண்ணவேண்டும் என்பதே.
மேலும் ஞாயிற்றுக்கிழமைதான் பண்ணவேண்டும். அன்று சூர்யோதயம் ஆனவுடனே 45விநாழிகை என்றால் 18நிமிடங்கள் (மணிக்கணக்கில்) அதற்குள் தர்ப்பணம் பண்ணவேண்டும். உ.தா சூர்யோதயம் 6 மணி என்றால் 6.18 மணிக்குள் தர்ப்பணம் பண்ணவேண்டும்.
அவரவர் ஊரில் எப்போது சூர்யோதயமோ அதிலிருந்து 18நிமிடங்களுக்குள் தர்ப்பணத்தை சங்கல்பித்துக் கொள்ளவேண்டும்.
கைரேகை தெரிந்தாலே உபஸ்தானம் பண்ணலாம்.அதனால் சந்தியாவந்தனம் உபஸ்தானத்தை முன்னரே முடித்துக்கொண்டு, தர்பையெல்லாம் முன்னரே முடித்து வைத்துக்கொண்டு, சரியாக சூர்யோதயம் ஆனவுடன் சங்கல்பித்துக்கொண்டு பண்ணோமேயானால் நிச்சயமாக குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் பண்ணமுடியும்.
ஆக எல்லா ஏற்பாடுகளையும் முன்னமே செய்து வைத்திருந்தால் அந்த நாழிகைக்குள் தர்ப்பணம் மட்டும் பண்ணமுடியும்.
யதிகளின் ப்ருந்தாவனத்திற்குச் சென்று வந்தபின் தீர்த்தமாட வேண்டுமா?
முன்பு பெரியவர்கள் யதிகளின் ப்ருந்தாவனத்திற்குச் சென்றுவந்த பிறகு தீர்த்தமாடியதாக கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது இந்த ஆசாரம் நடைமுறையில் இல்லை.
ஜன்ம நக்ஷத்ரம் கொண்டாட என்று அந்த நக்ஷத்ரம் அதிகமாக இருக்கின்றதோ அன்று கொண்டாட வேண்டுமா அல்லது என்று சூர்யோதய சமயம் அந்த நக்ஷத்ரம் இருக்கின்றதோ அன்று கொண்டாட வேண்டுமா தெளியபடுத்தவும்.
ஜன்ம நக்ஷத்ரத்தை சூர்யோதயத்தில் இருந்து 12 நாழிகை என்றைக்கு அந்த நக்ஷத்ரம் இருக்கிறதோ அன்றைக்குக் கொண்டாடவேண்டும்.
முதல்நாள் வேறு ஒரு நக்ஷத்ரமாக இருந்து, மறுநாள் சூர்யோதயத்துக்குப் பிறகு 12 நாழிகைக்குள்ளாகவே(<12 நாழிகை) ஒரு நக்ஷத்ரம் இருக்குமாயின், அந்த ஜன்மநக்ஷத்ரம் முதல்நாளே கொண்டாட வேண்டும்.
பெருமாள் தீர்த்தம் எத்தனை தடவை ஸ்வீகரிக்கவேண்டும்.
பெருமாள் தீர்த்தம் கோவிலில் சாதிக்கும்போது ரொம்ப மரியாதைப்பட்டவர்கள், பெரியோர்களுக்கு மூன்றுமுறையும், மற்ற அனைவருக்கும் ஒருமுறையும் சாதிப்பார்கள்.
அகத்தில் திருவாராதனைக்குப் பின் அகத்து மனுஷாளுக்கு, பொதுவாகவே மூன்றுமுறை சாதிப்பதுண்டு.
வடகலை நித்யானுசந்தானங்கள் பற்றி தெரிவிக்க வேண்டுகிறேன்.
வடகலையார் நித்யானுசந்தானங்கள்
தனியன்கள்
இராமானுஜ தயா பாத்ரம் (பொது).
ஸ்ரீஸன்னிதி சிஷ்யர்களாக இருந்தால் “கேஶவார்ய க்ருபா பாத்ரம்” தனியன் சொல்லிவிட்டு, பின் இராமானுஜ தயா பாத்ரம் தனியன் சேவிப்பர்.
திவ்ய ப்ரபந்தம்
திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை
அதற்கு மேலுள்ள ப்ரபந்தங்கள் அவரவர் ஆசார்ய நியமன படி
தேசிக ப்ரபந்தம்
பிள்ளையந்தாதி
அடைக்கலப்பத்து, ப்ரபந்தஸாரம்(சில இடங்களில் இவை இரண்டையும் சேவிப்பதுண்டு)
விசேஷ தினங்களில் கோயில் திருவாய்மொழி மற்றும் இராமானுசநூற்றந்தாதி சேவிப்பது போன்ற அனுசந்தானங்கள் வழக்கத்தில் உள்ளது.
அடியேன் ஸ்வாமி திருவோண நக்ஷத்ரம் முதல்நாள் மதியம் 2 மணி முதல் மறுநாள் மதியம் வரை இருந்தால் திருவோண விரதம் என்று இருக்க வேண்டும்? முதல்நாள் என்றால் அன்று விரதம் மேற்கொள்ள முடியாத பட்சத்தில் மறுநாள் இருக்கலாமா? தெளிவுபடுத்த வேண்டுகிறேன். தன்யோஸ்மி.
பஞ்சாங்கங்களில் திருவோண நக்ஷத்ரம் என்றைக்கு (இரவு)இராத்ரி வேளையில் இருக்கிறதோ அன்றைக்கு ஶ்ரவண விரதம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால், ஒப்பிலியப்பன் கோவிலை உத்தேசித்து ஶ்ரவண விரதத்தை உப்பில்லாமல் அனுசரிப்பவர்கள், என்றைக்கு சூர்யோதயத்திலிருந்து 12 நாழிகை திருவோண நக்ஷத்ரம் இருக்கின்றதோ அன்றைக்குதான் ஒப்பிலியப்பன் கோவிலில் ஶ்ரவண தீபம் எடுப்பார்கள், அன்றுதான் ஶ்ரவண விரதத்தையும் அநுஷ்டிக்க வேண்டும். ஒப்பிலியப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஒரு அட்டவணை போடுவார்கள். கிடைத்தால் அதையும் பார்த்துக்கொள்ளலாம்.
நம் ஸ்ரீவைஷ்ணவ நித்யகர்மானுஷ்டானம் பற்றி அறிவது எப்படி?
நம் ஸ்ரீவைஷ்ணவ நித்யகர்மானுஷ்டானம் பற்றி அறிய முந்தைய சுதர்சன வெளியீடுகளுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இரண்டு காணொளியையும் பார்க்கவும்.
https://youtube.com/playlist?list=PLN8H4DA5K_KuZYnUwDikfa1lk1hwwx-lw
ஶ்ரீ வைஷ்ணவ ஸ்த்ரீ தினசர்யா
https://youtu.be/yEjCBOD8d7w
நாங்கள் இருவரும் ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் பெற்றுக்கொண்டவர்கள். என் அகவை 70, என் மனைவி வெளியூர் செல்லும் நேரங்களில் நான் கடைகளிலிருந்துதான் உணவு வாங்கும்படி நேர்கிறது. மேலும் நான் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்கிறேன். இப்படி வெளியே சாப்பிட நேரும்போது என்ன செய்ய வேண்டும். வழிகாட்டவும்.
வெளியில் சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்கின்ற சங்கல்பத்தைத் திடமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த தர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று எம்பெருமானிடம் ஶ்ரத்தையாக ப்ரார்த்திக்க வேண்டும். அப்படி ப்ரார்த்தித்தால் எம்பெருமான் கட்டாயம் அந்த தர்மத்தை ரக்ஷிப்பான்.
அதற்கு முதற்படியாக தாரணத்திற்கு வேண்டிய சில பதார்த்தங்களை நாமே பண்ணிக்கொள்ள அறிந்துகொண்டால் நல்லது. உயிர்தரிக்க என்ன உணவு வேண்டுமோ அதைப் பண்ணத்தெரிந்தால் உசிதம். கஞ்சி போடுவது, சாதம் வைப்பது இவை எல்லாம் சுலபமான காரியங்கள்தான். அதைப் பண்ண கற்றுக்கொள்ளலாம். தரிக்கவே முடியவில்லை, வேறுவழியே இல்லை, சாப்பிட்டே ஆகவேண்டும் என்கின்ற நேரத்தில்தான் வேறுவழியில்லாமல் வெளியில் சாப்பிட நேர்ந்தால் சாப்பிடலாம். அதுவும் முடிந்தவரை பால், மோர், பழங்கள் இவற்றுடன் சமாளிக்க முடிந்தால் நல்லது. அப்படி இல்லையென்றால் உப்பு போட்ட பதார்த்தங்களைச் சாப்பிடாமல் சமாளிக்க பார்க்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் நிஷித்தமான பதார்த்தங்களை வெளியிலிருந்தும் சாப்பிடவே கூடாது.
இந்த மாதிரி சில விஷயங்களைக் கடைபிடித்து எம்பெருமானை மனதில் த்யானித்து கோவிந்த திருநாமத்தைச் சொல்லி எம்பெருமானே இப்படி நேர்ந்து விட்டதே! இப்படி நேராமல் நீரே பார்த்துக்கொள்ள வேண்டும், இந்த ஆசாரம் பங்கம் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எம்பெருமானிடம் வேண்டிக்கொண்டு மனதில் பஶ்சாதாபத்துடன் தாரணத்திற்கு வேண்டியவரை மட்டும் சாப்பிட்டால் அதற்குப் பிறகு இந்த மாதிரி மேலும் நேராமல் இருப்பதற்கு வாய்ப்புக்கள் வரும்.
திருவாராதனத்தின் போது பெருமாளுக்குச் சாற்றிய புஷ்பங்கள், துளசியை என்ன செய்வது (அகத்தில் எல்லாருக்கும் கொடுத்தபின்). அப்படியே பெருமாள் பெட்டியிலே வைத்திருப்பதா அல்லது எங்கே ஸமர்பிப்பது?
திருவாராதனத்திற்குப் பிறகு எல்லோரும் உபயோகித்த சேஷமாய் இருக்கிற துளசி மற்றும் புஷ்பங்களை, கால் படாத இடத்தில் சேர்க்க வேண்டும்.உ.தா துளசிச் செடியின் அடியிலேயே சேர்க்கலாம்.
என் பேரன் 17 ஜூன் அதிகாலை 01.18am IST அப்போது பிறந்தான், அவனுக்கு புண்ணியாகவாசம் 27ஆம் அல்லது 28ஆம் செய்ய வேண்டுமா?
இராத்ரி நேரத்தை, அதாவது முதல்நாள் சூர்ய அஸ்தமனத்திலிருந்து மறுநாள் சூர்யோதயம் வரை இருக்கும் பாகத்தினை 8 சமபங்கு பாகங்களாக்கி, அதில் முதல் 5 பாகத்திற்குள் உட்பட்டால் முதல்நாள் என்றும் அதன்பிறகு கடைசி மூன்று பாகத்திற்குள் உட்பட்டால் மறுநாள் என்றும் கணக்கிட வேண்டும்.
இப்படித் தான் முதல்நாள் மறுநாள் என்ற கணக்கு, ஜனனத்திலோ, மரணத்திலோ, ரஜஸ்வலையிலோ எடுத்துக்கொள்வது வழக்கம்.
குறிப்புகள்:
இராத்ரி நேரமென்பது சூர்யோதய, சூர்ய அஸ்தமனத்தை வைத்துச்செய்வதால் ஒவ்வொரு ஊருக்கும் மாறுபடும். ஆகவே அந்தந்த ஊரின் சூர்யோதய, சூர்ய அஸ்தமன நேரத்தை வைத்து இராத்ரி நேரத்தை கண்க்கிட்டு, பின் மேற்சொன்னபடி 8 சம பாகங்களாக பிரித்து முதல்நாள்/மறுநாள் என்பதை கணக்கிடவும்.
” ஆசார்யன் திருநக்ஷத்ரம் நிர்ணயம்:
1. சூர்யோதயத்தில் ஜன்ம திருநக்ஷத்ரம் 1 விநாடி இருந்தாலும்கூட போதுமானதா ?
2. நக்ஷத்ரம் 2 நாட்களில் வந்தால் எந்த நாளைக் கொள்வது?
3. வேதை : திருநக்ஷத்ரத்தில் வேதை விலக்கு (முந்தைய நக்ஷத்ரம் நேரம்) உண்டா?
4.திருநக்ஷத்ரம் குறைந்தது 12 அல்லது 16 நாழிகைகள் போன்று இருக்க வேண்டுமென்றால், அது சூர்ய அஸ்தமனத்திற்குள் இருக்க வேண்டுமா?
அல்லது அடுத்த நாள் காலை சூர்யோதயம் வரைக்கும் இருந்தால் கூட போதுமானதா ?
5. மேற்கூறிய நிர்ணயத்தை ஶ்ரவண நக்ஷத்ரம் அல்லது நக்ஷத்ரம் ஆதாரமாகக் கொண்ட (வாமன, ஹயக்ரீவ) ஜயந்திக்கும் கொள்ளலாமா?
ஆசார்யன் திருநக்ஷத்ரம் நிர்ணயம்
சூர்யோதயத்தில் ஜன்ம திருநக்ஷத்ரம் 1 விநாடி இருப்பது போதாது.
அந்தத் திருநக்ஷத்ரம் சூர்யோதயத்திலிருந்து 12 நாழிகை எந்த நாளில் இருக்கிறதோ அந்த நாளில் கொண்டாடுவது.
ஆசார்ய திருநக்ஷத்ரத்தில் வேதை விலக்கு இல்லை.
அந்தத் திருநக்ஷத்ரம் குறைந்தபக்ஷம் சூர்யோதயத்திலிருந்து 12 நாழிகை இருத்தல் வேண்டும்.
வாமன, ஹயக்ரீவ ஜயந்தி போன்றவற்றிற்கு திருநக்ஷத்ரம் மாத்திரம் பார்த்து நிர்ணயம் செய்வதில்லை, சில விஷயங்களில் திதிகளும் கணக்கில் உண்டு.ஆனால் நாம் இப்போது திருநக்ஷத்ரம் மாத்திரம் பார்த்துதான் நிர்ணயிக்கின்றோம்.
அடியேன் கோயிலில் திருமஞ்ஜன கைங்கர்யம் ஏற்றக்கொள்ளும் பொழுதும் அகத்தில் ஸுதர்ஶந ஹோமம் செய்யும் பொழுதும் ப்ரபன்னர்கள் “பகவத் ப்ரீத்யர்த்தம்” என்று சங்கல்பம் செய்யவேண்டுமா அல்லது கோத்ரம் நக்ஷத்ரம் பெயர் சொல்லுவது சரியா?
ப்ரபந்நர்கள் பகவத் ப்ரீத்யர்த்தன் என்று சங்கல்பம் சொல்லவேண்டும். அதேசமயம் சில சங்கல்பத்தில் கோத்ரம், நக்ஷத்ரமெல்லாம் சொல்லவேண்டி வரும். ஶாஸ்த்ரத்திலே சில கர்மானுஷ்டங்களில் கோத்ரம் நக்ஷத்ரமெல்லாம் சொல்லி பண்ணவேண்டி வரும்.
அந்த ரிதீரியல் கோயிலில் திருமஞ்சனக் கைங்கர்யம் பண்ணும்போது கோத்ரம்,நக்ஷத்ரம்,பெயர் எல்லாம் சொல்லலாம் சொல்லாமலும் இருக்கலாம், பொதுவாக பகவத் ப்ரீத்யர்த்தம் என்று சொல்லலாம்.
அகத்தில் ஸுதர்ஶந ஹோமம் போன்றவைக்கு கோத்ரம், நக்ஷத்ரமெல்லாம் சொல்லுவது வழக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது, ஏனென்றால் க்ஷேமார்த்தம், ஆயுள், ஆரோக்ய, ஐஶ்வர்யத்திற்காக பண்ணுவதால். அங்கே பகவத் ப்ரீத்யர்த்தம் என்று சொல்லி, பெயர் கோத்ரம் போன்றவையெல்லாம் சொல்லலாம் எனத் தோன்றுகிறது.
நாம் வெளிநாட்டிற்கோ அல்லது வேறு ஊருக்கோ செல்வதானால் அமாவாஸை அன்று ப்ரயாணம் செய்யலாமா? எந்த ஒரு நல்ல காரியத்தையும் அமாவாஸை அன்று தொடங்கலாமா?
ஜோதிஷ ஶாஸ்த்ரம்படி பொதுவாக அமாவாஸை நல்ல தினமாகக் கணக்காகவில்லை, அததற்கான நாள் சொல்லும்போது அமாவாஸை தினம் தவிர்க்கப்பட்டுள்ளது தெரிகிறது.
அமாவாஸை நிறைந்த நாள் என்று சில வசனம் சொல்லுகிறார்கள். வேறுநாள் கிடைக்காத போது அமாவாஸை என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது இரண்டாம் பக்ஷம்தான்.
சென்ற சுதர்சனத்தில் அடியேனின் கேள்விக்கு ஸ்வாமி ஸாதித்தது ஒரு ஸ்ரீவைஷ்ணவர், ஸ்ரீவைஷ்ணவரல்லாதவர் கொடுத்த ப்ரசாதம் (பெருமாள் ப்ரசாதமாக இருந்தாலும்) உட்கொண்டால் அது தோஷம்தான் என்று தெளிவுபடுத்தினீர்கள். அடியேன் அன்று தெரியாமல் (ஒப்பிலியப்பனின் ப்ரசாதம்(சர்க்கரைப்பொங்கல்) மற்றும் திருப்பதி லட்டு ப்ரசாதமும்) உட்கொண்டேன் இதனால் ஏதேனும் பாபம் ஏற்பட்டிருக்குமா? அப்படியானால் ஏதேனும் ப்ராயச்சித்தம் செய்ய வேண்டுமா?
ஆகாரத்தில் தோஷம் என்பது இரண்டுவிதம். ஒன்று பெருமாள் ப்ரசாதம் அல்லாத ஒன்றை நாம் சாப்பிடுதல். மற்றொரு தோஷம், வேறு ஒருத்தர் கொடுப்பதைச் சாப்பிடுதல் அது அனாச்சாரத்தில் சேரும்.
இதில், அவர் பெருமாள் ப்ரசாதத்தைச் சாப்பிட்டுள்ளார். அதனால் முதல் தோஷம் இல்லை. நல்ல ஆச்சாரத்துடன் இருக்கின்றவராக இருந்தால், இதனால் ஆச்சாரக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்குச் சில பரிகாரங்கள் உள்ளது, பஞ்சகவ்யம் போன்றவை உட்கொள்ளுதல் என. இல்லை அவர்கள் பொதுவாகவே வெளியில் சாப்பிடுபவர்களாக இருந்தால், இதனால் பெரிய தோஷமில்லை என்று விடவேண்டியதுதான்.
குறிப்பு:
பொதுவாக என்ன சொல்லியிருக்கிறதோ அந்த விஷயத்தை மேலோட்டமாக பார்த்து புரிந்துகொள்ள வேண்டும். இது இப்படியானால், அப்படியானால் என்ன என்று அலசி ஆராயும்படியான கேள்விகளைத் தவிர்க்கவும்.
அடியேன் ஏதோ உபந்யாஸத்தில் கேட்ட விஷயம், ப்ரபத்தி செய்தபின்னும் தன் கடைசிகாலம் வரை ஒருவருக்கு தேவதாந்தரம் சம்பந்தம் இருந்ததென்றால் அவருக்கு ப்ரபத்தி சரியாகச் செய்யவில்லை என்று அர்த்தம் என்று சாதித்தார்கள். இது சரியா ஸ்வாமி? ஆசார்ய நிஷ்டை அல்லது உக்தி நிஷ்டையில் செய்யப்பட்ட ப்ரபத்தி தவறாகது அல்லவா ஸ்வாமி? அப்படியானால் அவர்காள் குறிப்பிடும் தவறு என்பது ஸ்வநிஷ்டை அல்லது ப்ரபத்தியை செய்து வைக்கும் தகுதி பெறாதவர் செய்திருந்தால் அப்படி நடக்கலாம். இதை எப்படிப் புரிந்துகொள்வது ஸ்வாமி. அடியேன்
இந்த விஷயத்தை ஸ்வாமி தேஶிகன் தான் ஸாதித்துள்ளார். அதாவது தேவதாந்தர ஸம்பந்தத்துடனே ஒருவன் எப்போதும் இருந்தானேயானால் அவனுடைய ப்ரபத்தி சரியாகச் செய்யவில்லை என்றால் செய்து வைத்தவர்கள் மேல் தவறில்லை.யார் செய்துகொண்டார்களோ அவருடைய தேவதாந்தர ஸம்பந்தத்தால் சரியாக ஆகவில்லை என்று அர்த்தமாகுகிறது.
ஸ்வநிஷ்டா, ஆசார்யநிஷ்டா என்ற கேள்வியின் அடுத்தபகுதிக்கான விடையை பின்னாளில் காணலாம்.
சந்த்ராஷ்டமம் என்றால் என்ன? சந்த்ராஷ்டமத்தின் போது செய்யத் தக்கன, மற்றும் செய்யத் தகாதன யாவை? ஸ்ரீவைஷ்ணவர்கள் இதற்கு முக்கியத்துவம் தரலாமா? எவ்வாறு இதை எதிர்கொள்வது?
சந்திராஷ்டமம் என்பது நம்முடைய ராசியில் இருந்து 8ஆவது ராசி, அது வரக்கூடிய நாட்கள் சந்திராஷ்டம நாள்கள் என்பதாக கணக்கு. இதற்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. நம்முடைய சந்த்ராஷ்ட தினத்தில் நமது காரியங்கள் ஒரளவு சரியாக நடக்காது என்று புரிந்துகொள்ள வேண்டும். மற்றபடி வேறு ஒன்றும் கிடையாது.
நம்முடைய நித்யபடி அனுஷ்டானங்கள் எல்லாம் பண்ணலாம். சந்த்ராஷ்டம தினத்தில் முகூர்த்தங்கள் வைக்க மாட்டார்கள். உதாஹரணமாக யாருக்கு விவாஹமோ அவருடைய சந்த்ராஷ்டம தினத்தில் விவாஹம் முதலானதெல்லாம் வைக்க மாட்டார்கள். இது ஜோதிஷ ஶாஸ்த்ரதில் இருக்கிறது. மற்றபடி நித்யப்படி அனுஷ்டானத்திற்கோ, உற்சவாதிகளுக்கோ இது பாதகமாக ஆகாது.
பூணூல் போட்ட பிராமச்சாரி பையன் 12 திருமண் இட்டு கொள்ளலாமா?
நம் சம்ப்ரதாயப்படி ஸமாஶ்ரயணம் ஆனபின் தான் 12 திருமண் இட்டுக்கொள்ளலாம். ஸமாஶ்ரயணம் ஆவதற்கு முன் 12 திருமண் இட்டுக்கொள்ளும் வழக்கம் இல்லை.
என்னுடைய தகப்பனாரின் ஶ்ராத்த திதி ஆவணி ஸப்தமி. இந்த வருட பஞ்சாங்கத்தில் ஆவணி ஸப்தமி என்று 3 தினம் கொடுத்திருக்கிறார்கள் (ஆவணி 2,17,32) இதில் எந்தத் தேதியில் ஶ்ராத்தம் செய்ய வேண்டும். மேலும் பொதுவாக கோகுலஷ்டமிக்கு ஒருநாள் முன்னதாக அவரின் திதி வரும். குழப்பத்தைத் தெளிவுபடுத்தவும்.
ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷம் சப்தமி திதி, ஆவணி 2 ஆம் தேதி ஆகஸ்ட் 18ஆம் தேதி, வியாழக்கிழமை அன்றைக்கு ஶ்ராத்தம் பண்ண வேண்டும்.
அடியேன், நித்யப்படி நம் ஆத்துப்பெருமாளுக்கு, சாளக்கிராம மற்றும் விக்ரஹம் இருப்பின் இரண்டுவேளை திருவாராதனம் செய்யலாமா அல்லது ஒருவேளை திருவாராதனம் மட்டுமா அடியேன்?
சாளக்கிராமம் மற்றும் விக்ரஹத்திற்கு, ஒருவேளை திருவாராதனம் செய்தால் போதும். இரண்டாவது வேளை, அதாவது ராத்திரிவேளையில் திருவாராதனம் பண்ணினால் விசேஷம், சுத்தமாக இருந்து பண்ண வேண்டும். பண்ணாவிட்டாலும் வெறும் பால் மட்டுமாவது நிவேதனம் செய்தால் போதும். நாம் அகத்தில் இருந்தோமேயானால் நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை நிவேதனம் பண்ண வேண்டும். இல்லயென்றால் பால் மட்டுமாவது நிவேதனம் பண்ண வேண்டும்.
சாளக்கிராமத்திற்குச் செய்ய முடியாது போனால் பெரிய தோஷம் ஒன்றும் கிடையாது. அதனால் நிர்ப்பந்தமாக பண்ண வேண்டும் என்பது கிடையாது.
ஶரணாகதி பற்றியது. அடியேன் ஶரணாகதி செய்துகொள்ள விழைகிறேன். அசௌகர்யம் என்னவென்றால், அடியேன் நரம்பு மண்டலம் பாதிப்பால் ஆசார்யார் வைபவத்தில் உட்காந்து எழுந்திருக்க /சேவிக்கமுடியாதவனாக இருக்கிறேன். எனக்கு ஶரணாகதி உபதேசம் பெறும் பாக்கியம் கிடைக்குமா?
ஶரணாகதி அவசியம் ஆசார்யனே பண்ணிவைக்க முடியும். நமக்கு ஶரீரத்தில் அஶக்தம் இருக்கிறதென்றால், நேரடியாகச் சென்று சேவிக்க முடியவில்லையெறாலும் ஆசார்யனிடம் ப்ரார்த்தித்துக் கொண்டால், ஆசார்யன் நமக்காக எம்பெருமானிடம் அவசியம் ஶரணாகதி பண்ணி வைப்பார்.
ஏகாதசி அன்று உளுத்தம்பருப்பைத் தளிகைக்குச் சேர்த்துக்கொள்ளலாமா? வயதானவர்களுக்காக ரவை உப்புமா மற்றும் குழம்பு அல்லது அரிசி உப்புமா, இட்லி போன்றவை செய்ய நேரிடும். இதில் உளுத்தம்பருப்பு உபயோகிக்கலாமா (தாளிப்பதற்கு)?
ஏகாதசியன்று எந்தவிதமான உணவையும் உட்கொள்வது ஶ்லாக்யமில்லை. உடல்நிலை காரணத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ ஆகாரம் உட்கொள்வதென்பது இரண்டாம் பக்ஷம்தான்.
முழு அரிசியைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மற்றபடி அனைத்தும் இரண்டாம் பக்ஷமே. ஆக உப்புமாவில் உளுத்தம்பருப்பைச் சேர்ப்பதும் இரண்டாம் பக்ஷம்தான்.
பரந்யாஸம் செய்துகொண்ட நாளை எந்த அடிப்படையில் கொண்டாட வேண்டும்? அதாவது நக்ஷத்ரம்/திதி/தேதி இதில் எதன் அடிப்படையில் கொண்டாட வேண்டும்.
பரந்யாஸம் எந்த நக்ஷத்ரத்திலே, எந்த மாதத்திலே, செய்துகொண்டோமோ அந்த நாளைக் கட்டாயம் கொண்டாடலாம். திதியையும் ஞாபகம் வைத்துக்கொண்டு கொண்டாடலாம். இந்நாளானது திருமணநாளைக் காட்டிலும் உசந்தது.
ஆக பரந்யாஸம் செய்துகொண்ட நாளை எவ்வளவு விதமாக கொண்டாட முடியுமோ அவ்விதங்களிலெல்லாம் கொண்டாடுவது சிறப்பு.
எங்கள் பூர்வர்கள் திருநெல்வேலி கீழ்ப்பாட்டத்தில் இருந்து நெடுந்தெருவிற்கும் அதன்பின் ஸ்ரீரங்கத்திற்கு வந்து குடியேறினார்கள். எங்களின் குலதெய்வம் யார் என்று சரியாகத் தெரியவில்லை. ஒருகாலத்தில் கீழ்ப்பாட்டத்தில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிக்கோவில் இருந்ததாகவும் தற்போது அந்தக் கோவில் இல்லை மேலும் சக்கரத்தாழ்வார் அருகில் இருக்கும் வேறு ஒரு கோவிலில் ஏளியிருக்கிறார். நாங்கள் சிலநாட்கள் முன்பு நெடுந்தெருவில் இருக்கும் ப்ரசன்ன ராஜகோபால ஸ்வாமிக்கு திருமஞ்சனம் செய்தோம். நாங்கள் யாரைக் குலதெய்வமென்று ஏற்பது?
குலதெய்வம் யார் என்று தெரியவில்லை என்பதற்கு எப்படிப் பதில் சொல்லுவது என்று தெரியவில்லை.
பொதுவாக நாம் எல்லோருக்கும் குலதெய்வம் என்பது பெருமாள்தான்.
“ஸ்தோஷ்யாமி ந: குலத4நம் குலதை3வதம் தத்” என்று ஆளவந்தார் சாதித்திருக்கிறார்.
அதனால் ஏதாவது ஒரு பெருமாளை நீங்கள் குலதெய்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
இக்கேள்விக்கான விடைய இங்கே உள்ள காணொளியில் விரிவாகக் கேட்டு அறியவும்
ஒருநாளில் எத்தனை முறை ஆசார்யன் தனியனைச் சேவிக்க வேண்டும்? அஸ்மத் தேஶிகம் அஸ்மதீய ஶ்லோகம் கற்க ஏதேனும் வழியுண்டா?
ஒருநாளில் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை ஆசார்யன் தனியனைச் சேவிக்கலாம். கட்டாயம் ஜபம் செய்வதற்கு முன் ஒருமுறையாவது சேவித்தல் வேண்டும்.
எப்போதெல்லாம் நமக்கு பாபங்கள் நேருகிறது அல்லது நாம் தவறிழைக்கிறோம் என்று தோன்றுகிறதோ அந்தச் சமயத்திலெல்லாம் சேவிக்க வேண்டும்.
அஸ்மத் தேஶிகம் அஸ்மதீய பரமாசார்யான் அஶேஷாந் குரூந்
ஸ்ரீமல்லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ணௌ முநிம்யாமுனம்|
ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் ஶடத்வேஷிணம்
ஸேனேஶம் ஶ்ரியம் இந்திரா ஸஹசரம் நாராயணம் ஸம்ஶ்ரயே||
சாயம் ஸந்தியாவில் (தற்போது உபயோகிக்கும் மணைக்குப் பதிலாக) தர்ப்பத்தினாலான பாய் மீது அமர்ந்து கொண்டு காயத்ரி மஹாமந்திரம் ஜபிக்கலாமா? தர்ப்பண காலத்திலும் ஆசனமாக பயன்படுத்தலாமா?
சாயம் ஸந்தியாவந்தனத்தில் தர்ப்பாசனம் என்பது கோரைப்புல் ஆசனம் என்று நினைக்கிறேன். அதைக் காட்டிலும் மணைதான் விசேஷம் என்று தோன்றுகிறது. Q32ADI22018
"மோக்ஷம் கிடைத்த பின் ஜீவாத்மாவின் (நம்) நிலை ஸ்ரீவைகுண்டத்தில் எவ்வாறு இருக்கும்?
1. நம் சரீரம் எவ்வாறு இருக்கும்? 2. நம் ஞானம் எவ்வாறு இருக்கும்? 3. அங்கே நம் பூலோக பெற்றோர் வழங்கிய நாமத்தை வைத்து அழைக்கப்படுவோமா? 4. எம்பெருமான் தாயார் மற்றும் நித்யஸூரிகள் மட்டுமல்லாமல் ஆழ்வார் ஆசார்யர்களையும் சேவிக்க இயலுமா? 5. அவர்களுடன் தமிழில் உரையாட இயலுமா? "
மோக்ஷம் கிடைத்தபின், இங்கு இருக்கும் சரீரம் அங்கு கிடையாது. அங்கு வேண்டுமானால் புதிய சரீரம் எடுத்துக்கொள்ளலாம். அது இந்த சரீரம் போல் தோஷத்துடன் இல்லாமல் திவ்யமான சரீரமாக இருக்கும் அதாவது அப்ராக்ருதம் என்று சொல்வார்கள்.
நாம் எல்லா விஷயங்களும் தெரிந்துகொள்ளும்படியான ஞானம், அதாவது சகலமும் நமக்குத் தெரியும்படியாக இருக்கும். நம் புண்யபாபத்தினால் ஞானம் குறைந்திருக்கிறது அங்கே இவை இரண்டும் போய்விடுகின்ற படியால் ஞானம் குறையாமல் இருக்கும்.
இங்கே இருக்கின்ற பெயர் அங்கே இருக்கவேண்டிய அவசியமில்லை. அது இருக்காது.
பெருமாள், தாயார், நித்யசூரிகள், ஆழ்வார், ஆசார்யர் என எல்லாரையும் சேவிக்கலாம். எல்லாருடனும் பேசலாம், தமிழில் பேசலாம். ஸ்ரீவைகுண்ட லோகத்தில் நாம் எல்லாரும் தமிழில் ஸ்தோத்ரங்கள் சொல்லலாம் என்று ஸ்வாமி தேஶிகன் “பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே” என ஸாதித்திருக்கிறார்.
ஆசாரம் பற்றி விரிவாக அறிய என்ன வழி? அதே போல் விஶிஷ்டாத்வைத தத்துவத்தின் அடிப்படை என்ன என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
ஆசாரம் பற்றி விரிவாக அறிந்துகொள்ள ஆந்ஹிக க்ரந்த காலக்ஷேபம் செய்து அறியலாம். GSPK யில் நடக்கின்ற ஆந்ஹிக க்ரந்த காலக்ஷேபத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதில் சேர்ந்துகொள்ளலாம்.
https://forms.gle/ob8JhquSN5BHRGBT6
விஶிஷ்டாத்வைத தத்துவத்தின் அடிப்படை பற்றி அறிந்துகொள்ள GSPK வழங்கிய “ஸ்ரீபாஷ்ய ஸாரம்” என்ற உபந்யாஸத் தொடரைக் கேட்கவும். இங்கே கொடுத்துள்ள படத்தை click செய்து அவ்வுபந்யாஸத் தொடரைக் கேட்டு அறியலாம்.
ஆஹார நியமப்படி பொதுவாக நிஷித்தமான காய்கறிகள், பழங்கள் எவையெவை என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன் (தர்பூசணி, தக்காளி, முருக்கை போன்றவை).
தர்பூசணி தக்காளி இவை இரண்டையும் சில பேர் சேர்த்துக்கொள்கிறார்கள். சில பேர் சேர்த்துக் கொள்வதில்லை. மிகவும் ஆசாரமாக இருக்கிறவர்கள் இவற்றையெல்லாம் சேர்த்துக் கொள்வதில்லை. அதைத் தவிர முருங்கை, வெங்காயம், முள்ளங்கி, முட்டைக்கோஸ் முதலானவையெல்லாம் அடியோடு கூடவே கூடாது என்பதாக எல்லாருமே விட்டிருக்கிறார்கள்.
பூண்டு போன்ற நிஷித்த வஸ்துவை மருந்தாக உட்கொள்ளலாமா? (இருமல், சளி போன்ற சமயம் பூண்டு பால் நல்லது என்பார்கள்)
மருந்து ரீதியாக சளி, இருமல் போவதற்கு பூண்டு எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் சளி, இருமல் போவதற்கு நிறைய மாற்று மருந்துகள் இருக்கின்றன.
திருத்துழாயைப் போல் சளி இருமலை நீக்கக்கூடிய மருந்தே கிடையாது. அதனால் அதனை க்ரஹித்தாலே நன்கு நிவாரணம் கிடைக்கும். இதைத்தவிர எத்தனையோ மருந்துகள் இருக்கின்றன. அவற்றை எடுத்துக்கொள்ளலாம். சளி இருமலுக்காக பூண்டுதான் சாப்பிடணும் என்று நிச்சயமாக கிடையாது. ஏனென்றால் இவையெல்லாம் நிஷேதிக்கப்பட்ட உணவுகள்.
எப்படி நமக்கு உடல் ஆரோக்கியம் முக்கியமோ அதே போல் மனதிலும் சத்புத்தி ஏற்படுவது மிகவும் முக்கியம். இந்தமாதிரி தாமஸமான ஆகாரங்களைச் சாப்பிட்டோமேயானால் அது நமது மனதை மிகவும் பாதிக்கும். மேலும் நமது ஶ்ரத்தையை மிகவும் குறைக்கும். அதனால் இவற்றையெல்லாம் தவிர்ப்பது நல்லது.
பரிசேஷனத்துக்கு நெய் சேர்க்கும்போது இரண்டு தடவை சேர்க்க வேண்டும் என்று கேள்விப்பட்டேன். சரியா என்று தெரிவிக்கப் பிரார்த்திக்கிறேன்.
பரிசேஷனத்தின் போது இரண்டு தடவை நெய் சேர்க்க வேண்டும் என்கின்ற நியமங்கள் கிடையாது. இது ஒரு உபசாரம் என்கின்ற ரீதியில் சில பேருக்கு இரண்டு தடவை சேர்ப்பார்கள், அவ்வளவே. நெய் சேர்க்க வேண்டும் என்பது மட்டுமே உண்டு.
ஶரணாகதி செய்து கொண்ட தம்பதியர் ஶஷ்டியப்தபூர்த்தி செய்து கொள்ளலாமா? எந்த முறையில் செய்தால் உசிதம்? அடியேன் திவ்ய தேசங்களில் வசிக்கிறோம். கிராமமாக இருப்பதால் இதர தேவதை கோயில்கள் உள்ளன. அதற்கு நிதி கேட்கிறார்கள்.பகவத் ஆராதனமாக குடுக்கலாமா? சிலபேர் புரிந்து கொள்வதில்லை. அடியேன் வடகலை. இங்கு தென்கலை கோயில் உள்ளது தினமும் பெருமாள் சேவிக்கிறேன். தென்கலை கோயில்களில் இதர தேவதைகள் இருக்கிறது. அதனால் அந்தக் கோயிலுக்குப் போலாமா?
ஶரணாகதி செய்து கொண்ட தம்பதிகள் ஶஷ்டியப்தபூர்த்தி தாராளமாகச் செய்து கொள்ளலாம். அது சூத்திரத்தில் சொல்லி இருக்கக்கூடிய விஷயம். எந்த முறையில் என்றால், வேத மந்திரங்கள் சொல்லி, கும்பம் வைத்து, செய்யவேண்டும். இதில் பெரிய நியமம் ஒன்றும் கிடையாது. ஸ்ரீ வைஷ்ணவ வாத்தியார்களைக் கேட்டால் அவர்கள் அழகாக செய்துவைப்பார்கள். அவர்களுடைய சௌகர்யத்துக்கு ஏத்த மாதிரியாக நாம் செய்யலாம். முக்கியமாக ஆசார்ய ஸம்பாவனை, அக்ஷதை ஆசீர்வாதம், திருமாங்கல்ய தாரணம், ஔபாசனம் இதெல்லாம் அதில் இருக்க வேண்டும்.
கிராமக் கோயில்களிலே இதர தேவதைகள் இருக்கின்றன. இதற்கு நிதி கொடுப்பதில் சங்கடங்கள் உண்டு. சில சமயம் வேறு வழியில்லாமல் ஊரோடு ஒத்துவாழ் என்கின்ற ரீதியிலே கொடுக்க வேண்டியிருக்கும். தவிர்க்க முடியாமல் இருந்தால் வேறு வழியில்லை. ஶாஸ்த்ரம் ஒற்றுக்கொள்ளுமா என்று பார்ப்பதைவிட, அந்த நிலைமைக்கு ஏற்ற மாதிரி செய்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஏனென்று கேட்டால், நாமே கேபிள்டிவி போன்று எத்தனையோ நியாயம் இல்லாத செலவுகள் செய்கின்றோம். அந்த ரீதியில் ஏதோ செலவோடு செலவாக இதுவும் போயிற்று என்பதாக வைத்துக் கொள்ளலாம். முடிந்தவரை தவிர்க்க பார்க்கலாம். அதேபோல் கோவில்களில் இதர தேவதைகள் இருந்தால்கூட, நம் பெருமாளை மட்டும் முடிந்தால் சேவிக்கலாம்.
1.பூஜை அறையில் ஸ்வாமி படங்களை எந்தத் திசை நோக்கி இருக்கக்கூடாது?
2.பித்ரு படங்கள் எந்தத் திசை நோக்கி இருக்க வேண்டும்?
பூஜை அறையில் பெருமாள் படங்களை எந்தத் திசையை நோக்கி வேண்டுமானாலும் மாட்டி வைக்கலாம்.
பித்ருக்களுடைய படங்களை பூஜை அறையில் வைக்க வேண்டுமானால் பெருமாள் படங்கள் இருக்கின்ற நிலையை விட, ஒரு நிலை கீழே அதாவது ஒரு நிலையோ அல்லது ஒரு படியோ கீழே இருக்கின்ற மாதிரி வைக்கலாம். பித்ருக்களுடைய படங்களைக் கிழக்கு நோக்கி வைக்கலாம்.
ஒருவர் தன் சிறுவயதிலேயே ப்ரபத்தி செய்துவிட்டார். அதன் பின் அறிந்தும் அறியாமலும் அவர் பல பாபங்கள் செய்கிறார். அப்படியிருக்க அடியேன் புரிந்துகொண்டவரை அறியாமல் செய்த பாபங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால் அவர் தெரிந்துச்செய்த பாபத்திற்கு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்தால் தான் மோக்ஷத்திற்குத் தடை ஏற்படாது. அடியேனின் இந்தப் புரிதல் சரியா ஸ்வாமி? மேலும் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்யாவிட்டால் என்ன ஆகும் ஸ்வாமி?
சிறு வயதிலேயே ப்ரபத்தி பண்ணிக்கொண்டு அதற்கு பிறகு நிறைய பாபங்கள் ஏற்பட்டு, அந்தப் பாபங்களில் தெரிந்து செய்கின்ற பாபங்களால் மோக்ஷம் தடைபடுமா என்றால் நிச்சயமாக தடைபடாது. ப்ரபத்தி பண்ணிக்கொண்டு விட்டால் அது அவசியம் மோக்ஷத்தை அளிக்கும்.
இரண்டே இரண்டு விஷயங்கள் தான் ஆபத்து தரக்கூடியது. ஒன்று தேவதாந்தர சம்பந்தம். மற்றொன்று பாகவத அபசாரம். இவை இரண்டையும் அவசியம் தவிர்க்கணும். இவை தவிர்த்தால் போதும் மீதி வேற பாபங்கள் என்ன ஏற்பட்டாலும் அது ப்ரபத்திக்கு பாதகமாக ஆகாது.
மேலும் தெரியாது செய்த பாபங்கள் ஒட்டாது. தெரிந்து செய்கின்ற பாபங்கள் அதாவது புத்திபூர்வ உத்ராகங்கள் எனச் சொல்லப்படும் பாபங்களுக்கெல்லாம் எம்பெருமான் லகு தண்டனை அளிப்பான். அந்தத் தண்டனை எல்லாம் அனுபவித்து முடித்த பிறகு ப்ரபத்தி நிச்சயம் பலிக்கும். இந்த லகு தண்டனை அனுபவிக்க வேண்டாம் என்று நினைத்தால் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக்கொள்ளலாம். அப்படி பண்ணிக்கொண்டால் இந்தப் பாபங்கள் எல்லாம் நீங்கி மோக்ஷத்தை அடையலாம். ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக்கொண்டு தான் ஆகவேண்டும் என்கின்ற நிச்சயம் கிடையாது. ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணவில்லை என்றாலும் மோக்ஷார்த்த ப்ரபத்தி பண்ணியதால் மோக்ஷம் நிச்சயமாக கிடைக்கும்.
காஞ்சி மற்றும் மேல்கோட்டையில் உற்சவப்பெருமாள் அருகில் இருக்கும் இரண்டு நாச்சியார்களும் ஒரே மாதிரி வடிவத்துடன் அதாவது இருவரும் வலக்கையில் தான் தாமரை ஏந்தியிருப்பார்கள். அதே மற்ற திவ்யதேசங்களில் ஸ்ரீதேவி நாச்சியார் வலக்கையிலும், பூதேவி நாச்சியார் இடக்கையிலும் வைத்திருப்பார்கள். மேற்சொன்ன இருக்ஷேத்ரத்தில் ஒரே கையில் புஷ்பம் இருப்பதற்கு ஏதேனும் குறிப்பிட்டக் காரணம் இருக்கிறதா?
நாச்சியார்கள் ஒரே கையிலே ஒரே மாதிரியாக புஷ்பம் வைத்துக் கொள்வதற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகமங்களில் இப்படி இரண்டு விதமாகவும் சொல்லி இருக்கலாம். அதனுடைய அடிப்படையில் தாயாரை இப்படி ஏளப்பண்ணி ப்ரதிஷ்டை பண்ணியிருக்கலாம்.
எம்பெருமான் திருமஞ்சனம் கண்டருளுவதை அனைவரும் சேவிக்கின்றோம். ஆனால் எம்பெருமான் அம்சை பண்ணும்போது திரையிடக்காரணம் என்ன?
திருமஞ்சத்தில் இரண்டு உண்டு.
லோகாந்த திருமஞ்சனம்
ஏகாந்த திருமஞ்சனம்.
லோகாந்த திருமஞ்சனம் நமது சேவைக்காகவே. அப்போது பெருமாள் வஸ்திரங்கள் எல்லாம் தரித்துக் கொண்டிருப்பார். அதனால் அந்தத் திருமஞ்சனத்தைச் சேவிப்பதில் ஒன்றும் தவறில்லை.
ஆனால் பெருமாள் அமுது உண்ணும்போது அவரைச் சேவிப்பது, பார்ப்பது என்பதெல்லாம் ஒரு அபசாரம். ஏனென்றால் அவர், ஒரு தொந்தரவும், குறுக்கீடும் இல்லாமல் ஏகாந்தமாக அமுதுண்ண வேண்டும். அதனால்தான் பெருமாள் அமுது உண்ணும் போது சேவாகாலம் பண்ணக்கூடாது என்று சொல்வார்கள். அப்படிப் பெருமாள் அமுது செய்யும் போது சேவாகாலம் பண்ணால் பெருமாளுக்கு அதில்தான் ஶ்ரத்தை போகும். அவர் அமுது செய்வது குறைந்து போய்விடும். நாம் சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிட்டால், எப்படிச் சாப்பாட்டில் ஶ்ரத்தை இல்லாது போய்விடுமோ அதேபோல் தான்.
அவர் நன்றாக அமுது செய்யவேண்டும், நன்றாக அமுது செய்யவிக்க வேண்டும். அதனால் மற்ற கார்யங்கள் எதிலும் அவருக்கு ஶ்ரத்தையோ, நோக்கமோ வராத ரீதியில் சேவார்த்திகள் சேவையைத் தவிர்க்க வேண்டும். கீழே விழுந்து சேவிப்பது, சேவாகாலம், பாராயணம் முதலானவைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் நாம் யாரும் பார்க்கவும் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள், பார்த்தால் பெருமாள் நம்மை பார்க்கவேண்டி இருக்கும். அவருடைய கவனக்குறைவு என்பதெல்லாம் ஏற்படக்கூடாது என்பதற்காக எம்பெருமான் அம்சை பண்ணும்போது திரையிடுகிறார்கள்.
தர்பணம் செய்த பிறகு மீதம் இருக்கும் எள்ளை என்ன செய்ய வேண்டும், நாம் எங்கு இருந்து எடுத்தோமோ அதே பெட்டியில் மீண்டும் சேர்த்துவிட்டு அடுத்த முறைக்கு உபயோகிக்கலாமா? சிலர் அது சேஷம் அப்படிச் செய்யக்கூடாது அதை புக்னத்தில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள்.
தர்ப்பணம் பண்ணி மீதமிருக்கும் எள்ளை வைத்துக்கொள்ளக் கூடாது.
தர்பணம் செய்த பிறகு மீதம் இருக்கும் எள்ளை என்ன செய்ய வேண்டுமென்று தர்ப்பண ப்ரயோகத்திலேயே இருக்கு, மீதமிருக்கும் எள்ளு, தர்பம் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து அதற்கு ஒரு ஶ்லோகம் இருக்கிறது அந்த ஶ்லோகத்தைச் சொல்லி மொத்ததையும் ஸமர்பித்துவிடவேண்டும்.
சேமியாவை உபயோகப்படுத்தி செய்யும் திருக்கண்ணமுதைப் பெருமாளுக்கு நைவேத்தியம் பண்ணலாமா?
சேமியாவை பெரியோர்கள் உபயோகப்படுத்துவதில்லை
நாம் எந்தெந்த ஸமயங்களில் பூணூலை மாற்றிக்கொள்ள வேண்டும். எந்தெந்த தீட்டுக்களுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். தெரியப்படுத்த ப்ரார்த்திக்கிறேன்
கீழ்க்கண்ட சமயங்களில் பூணூலை மாற்றிக்கொள்ள வேண்டும்:
பூணூல் அசுத்தமாகிவிட்டால்
பூணூல் அறுந்துவிட்டால்
தீட்டு காக்கும்போது அந்தத் தீட்டோடு நாம் சாப்பிடும்படி நேர்ந்தால்
திருவாராதனம் போன்ற வைதீக க்ரமங்களுக்கு “மடி” வஸ்த்ரம் மற்றும் “ஊர்த்வ புண்டரம்”அணிவதின் முக்கியத்துவம் என்ன என்பதை விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
திருவாராதனம் என்பது மற்ற அனுஷ்டானங்கள் போல் அல்லாது எம்பெருமானின் திருமேனியை நாம் தொட்டுச் செய்யக்கூடிய விசேஷமான அனுஷ்டானம்.
அச்சமயம் எம்பெருமான் திருமேனியைத் தொட்டு திருமஞ்சணம் போன்றவையெல்லம் செய்வதனால் நாம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.
இங்கே எம்பெருமான் திருமேனியைத் தொடுவதினால் அசுத்தமாகத் தொட்டால் அது அபசாரமாகிவிடும். ஆகையால்தான் மடி வஸ்த்ரம் அணிய வேண்டும். மேலும் ஊர்த்வபுண்டரம் என்பதும் ஒருவித சுத்தியைத் தரக்கூடியது.
எனவே மடியோடு ஊர்த்வபுண்டரம் தரித்து திருவாராதனம் செய்வதே விசேஷம்.
அடியேன், நமஸ்காரம். ஒரு ஆசார்யனிடம் ஸமாஶ்ரயணமும், அதே மடத்தைச் சேர்ந்த மற்றொரு ஆசார்யனிடம் பரந்யாஸமும் செய்து கொண்டால் , யாரை நம் ஆசார்யன் என்று சொல்ல வேண்டும்? மேலும் அதற்கான காரணத்தையும் விளக்க ப்ரார்த்திக்கிறேன். தன்யாஸ்மி .
ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் வேறுவேறு ஆசார்யனிடம் செய்துக்கொண்டால், இருவரையுமே ஆசார்யன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஒரு ஆசார்யன்தான் இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. பகவத் இராமானுஜருக்கு பஞ்ச ஆசார்யரர்கள் இருந்தனர்.
ஆகையால் எல்லா ஆசார்யனையும் சேவித்து, தனியன்களைச் சொல்லி எல்லாமே பண்ணவேண்டும்.
அடியேனுடைய தகப்பனார், தாயார் இருவருமே ஒரே வருடத்தில் அடுத்தடுத்து பரமபதித்துவிட்டனர். அண்ணாவுக்கு இருதய நோய் வந்து ஆபரேஷன் செய்யது கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது . இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான அண்ணாவின் போக்கு மிகவும் கவலையாக உள்ளது. ரொம்பவும் கோபப்படுவது, கண்டபடி பேசுவது என்று நடந்து கொள்கிறார். இதனால் மன்னி மிகவும் வேதனை படுகிறார். அண்ணாவின் இந்தப் போக்கு மாறுவதற்கு பரிகாரம் ஏதேனும் உண்டா? என்ன ஸ்லோகம் சொல்லவேண்டும். இதற்கு ஒருவழி சொல்லும்படி ப்ரார்த்திக்கிறேன் ஸ்வாமி. அடியேன் தன்யாஸ்மி.
அவரின் போக்கு மாறுவதற்கு காமாஸிகாஷ்டகம் சொல்லலாம் எனத் தோன்றுகிறது. சகலவிதமான கஷ்டங்களும் நிவ்ருத்தி ஆகி எம்பெருமானையே ஆஶ்ரயித்து இருப்பதாக அந்த ஸ்தோத்ரத்தில் வருகிறது.
நான் 45 ஆவது பட்ட ஸ்ரீமத் அழகிய சிங்கரிடம் ஸமாஶ்ரயணமும் சரணாகதியும் செய்துகொண்டேன். ஒரு தகுதியான குருவின் கீழ் ரஹஸ்ய த்ரயம் காலக்ஷேபம் செய்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. அது ஒரு தடையா? எனது பேரனைப் பார்த்துக்கொள்வதற்காக நான் அடிக்கடி அமெரிக்காவிற்குச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. 12 மணிநேரம் கால வித்தியாசம் இருப்பதால் என்னால் இணையவழி நிகழ்நிலை காலக்ஷேபத்தில் கலந்துகொள்ள முடிவதில்லை. நான் நித்ய மற்றும் நைமித்திக கர்மாக்களைத் தவறாமல் செய்து வருகிறேன். என்னால் முடிந்தவரை ஸ்லோகங்களை சொல்கின்றேன். காலக்ஷேபம் செய்வது கட்டாயமா? தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன். தன்யாஸ்மி
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் காலக்ஷேபம் பண்ணினால் நல்லது, எம்பெருமானை அனுபவிக்க முடியும். பண்ணமுடியாவிட்டால் என்பது தடையோ பாபமோ ஆகாது. கிட்டியவரையில் விசேஷம் என்பதுதான், இல்லாவிடில் அந்த வாய்ப்பை நாம் இழக்கிறோம் அவ்வளவே.
உ.தா: ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் காலக்ஷேபம் என்பது ஒருவர் 50 லக்ஷம் ரூபாய் நமக்குத் தருவது போலே, அவர் கொடுக்கும் ரூபாயை நான் வாங்கிக் கொள்ள வேண்டுமா? இல்லாவிட்டால் தப்பா? என்றால் தப்பேயில்லை ஆனால் 50 லக்ஷம் ரூபாய் நமக்குதான் நஷ்டமாகும்.
எப்படி அந்த ரூபாயை நாம் வேண்டும் என்று சொல்வதோ, வேண்டாம் என்று சொல்வதோ, நம் விருப்பமாகுமோ, அதே போல்தான் காலஷேபமும் அதைப் பண்ணாவிடில் நஷ்டமே தவிர பாபமில்லை.
மற்றபடி நித்யபடி கர்மாக்கள் செய்வது, ஸ்தோத்ரங்கள் சேவிப்பதெல்லாம் மிகவும் நல்ல விஷயம், பாராட்டப்படவேண்டிய விஷயங்கள்.
அடியேன் க்ருஹத்தில் பெருமாள் திருவராதனையை கோவிலுக்குச் சென்று திரும்பி வந்த பின் பண்ணலாமா அல்லது குளித்துவிட்டு பண்ணவேண்டுமா? இல்லை கோவிலுக்கு போவதற்க்கு முன்னே பெருமாள் திருவராதனையைப் பண்ணிவிட்டுதான் செல்ல வேண்டுமா? தவறாக இருந்தால் க்ஷமிக்கவும். தன்யாஸ்மி
கோவிலுக்குச் சென்றுவிட்டு வந்தபின் தீர்த்தாமாடினால் பாபம் என்று சொல்லியிருக்கு, ஆகையால் வந்தபின் குளிக்காமல் இருப்பதுதான் விசேஷம்.
அதேசமயம் சிலவற்றுக்கெல்லாம் அங்கமாக ஸ்நானம் உண்டு.
உ.தா: தர்பணாதிகளுக்கெல்லாம் அங்கமாக ஸ்நானம் பண்ணவேண்டும். இங்கே கோயிலுக்குச் சென்று வந்ததால் செய்யவில்லை, அங்கமாக ஸ்நானம் என்றாகும். நித்யபடி திருவாராதனைக்கு மாத்யானிகத்திற்கு முன் அங்கமாக ஸ்நானம் உண்டு. அப்படிப் பண்ணுவதாக இருந்தால் பண்ணலாம். இவையெல்லாம் பார்த்து ஜாக்ரதையாக செய்ய வேண்டும். சிலர் திருவாராதனை எல்லாம் முடித்த பிறகு கோவிலுக்குச் செல்வார்கள்.
நமஸ்காரம் ஸ்வாமி. ஒருவர் உபநயனமும், ஸமாஶ்ரயணமும் செய்து கொண்ட பின் த்ரிகால சந்தியாவந்தனம் செய்யாமல் இருக்கும் பக்ஷத்தில், ஆசார்யனிடம் ப்ரபத்தி செய்துகொண்டால் பலன் கிட்டுமா? ப்ரபத்திக்கு த்ரிகால சந்தியாவந்தனம் செய்வது அவசியமா? சந்தியாவந்தனம் செய்யாமல் இருப்பவர்களுக்கு எந்த வைதிக கர்மாவும் செய்யத் தகுதி இல்லை என்று சொல்வார்கள். ப்ரபத்தி செய்துகொள்வதற்கும் இந்த விதி பொருந்துமா? அடியேன் தவறாகக் கேட்டிருந்தால் க்ஷமிக்கணும்.
சந்தியாவந்தனம் செய்யாமல் இருப்பவர்களுக்கு ப்ரபத்தி பலன் கிடைக்குமா என்றால் கிடைக்கும், இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. ஸமாஶ்ரயணம், ஶரணாகதி போன்றவை பண்ணாலும் சரி பண்ணிக்காவிட்டாலும் சரி சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்பது பொது விதி.
ஶரணாகதி பண்ணாலும் இல்லாவிட்டாலும் சந்தியாவந்தனம் பண்ணவேண்டும், இல்லாவிட்டால் பாபம் உண்டாகும் மேலும் வேறு கர்மாநுஷ்டானங்கள் பண்ணும் தகுதியெல்லாம் கிடையாது என்றாகிவிடும்.
குறிப்புகள்:
உ.தா: ஒருவர் நான் தான் ஶரணாகதி பண்ணிவிட்டேனே அப்போ நான் பொய் சொன்னால் என்ன? பொய் சொன்னால் பாபமாகுமா? என்று கேட்டால், பொய் சொல்லக்கூடாது என்பது பொது விதி, சொன்னால் பாபமுண்டு என்பதில் சந்தேகமே கிடையாது.
அதேபோல் தான் சந்தியாவந்தனம் என்பது பொது விதி அது எந்த விதத்திலும் ஶரணாகதியைப் பாதிக்காது, சாதிக்கவும் சாதிக்காது. இரண்டும் வெவ்வேறு தடம்; ஒன்றையொன்று பாதிக்காது.
அஶௌச காலத்தில் நம் மனதுக்குள் ஆசார்ய தனியன் மற்றும் த்வய மந்திரங்களை சேவிக்கலாமா?
அஶௌச காலத்தில் ஆசார்ய தனியன் மற்றும் த்வய மந்திரங்களை மனதால் சொல்வதைவிட ஆசார்யனின் திருநாமத்தையும் பெருமாளின் திருநாமத்தையும் மனதாலும் சொல்லலாம், வாயாலும் சொல்லலாம். திருநாமத்தைச் சொல்ல எந்தவித தடையுமில்லை.
ஒரு ப்ராமணன் மணமகன் ஒரு ப்ராமணன் அல்லாத பெண்ணை மணந்தால், அவன் சந்தியாவந்தனம்கூட செய்யமுடியாத அளவுக்கு அவனது ப்ராமணத்வத்தை இழந்து விடுகிறான் என்று அடியேன் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் முந்தைய சுதர்சனம் வெளியீட்டில் பெண் பரந்யாஸம் செய்யலாம் என்று கூறப்பட்டருக்கிறது. அந்தச் சிறுவனுக்கு ஶாஸ்த்ரத்தின்படி சடங்குகளைச் செய்ய இன்னும் உரிமை இருக்கிறதா என்பதை தயவுசெய்து தெளிவுபடுத்தவும். தன்யாஸ்மி அடியேன்
ஒரு ப்ராமணன் மணமகன் ஒரு ப்ராமணன் அல்லாத பெண்ணை மணந்தால், கர்த்தா என்று வரும்போது சடங்குகளை இந்தச் சிறுவன்தான் செய்யவேண்டும். ஆனால், அவன் எந்த ரீதியில் செய்கிறான் என்பதிருக்கிறது அதாவது ப்ராமணனுக்குரிய ரீதியில் பண்ணமுடியாது வேறு எதாவது ரீதியில் பண்ணலாம் என்றாகிவிடும்.
பரந்யாஸம் என்பது ஜாதி சம்பந்தப்பட்ட விஷயமன்று, யாராக இருந்தாலும், எப்படி இருந்தாலும் பரந்யாஸம் பண்ணலாம்.
ஸ்தோத்ரஙகள் வேகமா சேவிக்கலாமா. ஸ்தோத்ரஙகளில் பலஸ்ருதி மட்டிலும் சேவித்து வரலாமா? பலன் ஒன்றுதானா? ஸ்தோத்ரஙகள் இரண்டுபேராக சேவிக்கும்பொழுது, முதல் பங்க்தியை வாய்விட்டு சத்தமாக சேவித்து அடுத்த பங்க்தியை மனதிற்குள் சந்தையில் சேவிப்பதைப்போல சேவிப்போம். அது சரியா? ஸ்தோத்ரம் பூர்ணம் ஆகுமா. அதற்கு பலன் உண்டா. பெரிய ஸ்லோகங்கள் சேவிக்கும்பொழுது ஒருபாதி ஸ்லோகத்தை சேவித்துவிட்டு அடுத்தபாதியை சேவிக்காமல் மௌனமாகவும் இருக்கலாமா? தேவரீர் அடியேனுக்கு தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன். தன்யாஸ்மி அடியேன்
ஸ்தோத்ரங்களில் பலஶ்ருதி மட்டும் சேவிப்பது அத்தனை உசிதமில்லை. பலஶ்ருதி என்பது மொத்த ஶ்லோகமும் சொன்னால் கிட்டக்கூடியதைச் சொல்வதே தவிர அந்த ஶ்லோகத்தை மட்டும் சொல்வதனால் கிட்டுவதல்ல, ஆகையால் பூர்ணமாக சேவிப்பதே நல்லது. முடியாவிட்டால் த்யான ஶ்லோகம் என்றிருக்கும் அதை சேவிப்பார்கள் ஆனாலும் அது பூர்ணமாக சேவிப்பதற்குச் சமமாகாது.
ஸ்தோத்ரம் சேவிப்பதில் இரண்டு வகையுண்டு, ஒன்று நாமாகவே ஸ்தோத்ரம் சொல்வது, மற்றொன்று கோஷ்டியாக பாராயணம் பண்ணுவது. நாமாக சொல்லும்போது பூர்ணமாக நாமாகவே சொல்ல முடியும். கோஷ்டியாக பாராயணம் பண்ணும்போது ஒரு வ்யவஸ்தைக்காக முன்பாதி பின்பாதி என்று பிரித்திருக்கிறார்கள். அப்போது பூர்த்தியாக சொன்ன கணக்கென்று வந்துவிடும். மற்றவர்கள் சேவிக்கும்போது நாம் கேட்டுகொண்டிருந்தால் போதும்.
நாமாகச் சொல்லும்போது பூர்த்தியாக வாய்விட்டுச் சொல்லவேண்டும்.
ஏதாவது பலனுக்காக நாம் சொல்வதாயிருந்தால், பாராயணத்தில் சேவித்ததைக் கணக்காக சொல்லமுடியாது, பூர்த்தியாக வாய்விட்டுச் சொல்லவேண்டும். மாறாக பகவதனுபவம், பகவத்ப்ரீத்யர்த்தம் எனும்போது பாராயணத்தில் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டால் போதும்.
தாங்கள் வெளியிட்ட ஆஶௌச விவரங்கள் நூல் ஆங்கிலத்தில் கிடைக்குமா? ஆங்கிலத்தில் வெளியிட வேண்டுகிறேன்?
ஆஶௌச விவரங்கள் நூல் ஆங்கிலத்தில் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம் மேலும் விவரங்கள் விரைவில்.
அடியேன் ஸாமவேதத்தைச் சேர்ந்தவன். யஜூர்வேத முறையில் அச்சித்ரம் மற்றும் காடகம் கற்றுக்கொண்டேன், இப்போது அருணம் கற்றுக்கொண்டு வருகிறேன். ஸாம வேதமும் கறக் ஆரம்பித்திருக்கிறேன், 62 அகவையானபடியால் ஸாமவேதம் கற்பது சற்று கடினமாக உள்ளது. அடியேனின் சந்தேகம் அடியேன் யஜுர்வேதத்தைத் தொடர்ந்து கற்கலாமா? 2. யஜுர்வேதத்தில் கற்றதைப் பாராயணம் செய்யலாமா?
வயதானபடியால் சாம் வேதம் அத்யயனம் பண்ணுவதற்கு கஷ்டமாக இருக்கிறது என்பதால் அதில் ஒன்றும் ப்ரச்சனை இல்லை. கற்றுக்கொண்டவரை யஜுர்வேதத்தைத் தொடர்ந்து சொல்லலாம்.
யஜுர் வேதத்தைப் பூர்ணமாக வேதாத்யயனம் பண்ணவேண்டுமானால் சாமவேதம் முடித்தால் தான் பண்ணமுடியும். அதனால் உபயுக்தமான பாகத்தைமட்டும் சொல்லலாம்.
“தீர்தாமாடியபின் வஸ்த்ரம் உடுத்தி நெற்றியிட்டுண்டு ஆசமனம் பண்ணனுமா அல்லது வஸ்த்ரம் உடுத்தியதும் ஆசமனம் பண்ணிவிட்டு நெற்றிக்கு இட்டுக்கொள்ள வேண்டுமா?(புருஷர்களுக்கு)
வஸ்த்ரம் உடுத்திக்கொள்ளும்பொழுது பூணூலை காதில் வைத்துக் கொள்ளவேண்டும். வஸ்த்ரம் உடுத்திக் கொண்டவுடன் கைகால் அலம்பி ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு திருமண் இட்டுக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால், பூணூல் காதில் இருக்கும் பொழுது திருமண் இட்டு கொள்ளக்கூடாது. பூணூலை கால் அலம்பிய பின் தான் மாற்றிக்கொள்ள முடியும். அதனால் வஸ்த்ரம் உடுத்தியவுடன் , கை கால் அலம்ப வேண்டும், பூணூலை நேரே போட்டுக்கொள்ள வேண்டும், ஆசமனம் பண்ண வேண்டும், அதன் பிறகு திருமண் இட்டுக்கொள்ள வேண்டும்.
ஏகாதசி தினத்தன்று துளசிச்செடிக்கு நீர் சேர்க்கலாமா? அடியேனின் தோழி ஒருவர் ஏகாதசியன்று துளசியும் ஏகாதசி வ்ரதம் இருப்பதாகவும், ஆகையால் நீர் சேர்க்கக்கூடாது என்று சொன்னார் அதனால் ஏற்பட்ட சந்தேகம் அடியேன்.
ஏகாதசி தினத்தன்று துளசிச்செடிக்கு நீர் சேர்க்கலாம்.
குறிப்புகள்:
ஏகாதசியன்று துளசியும் ஏகாதசி வ்ரதம் இருப்பதாகவும், ஆகையால் நீர் சேர்க்கக்கூடாது என்று சொல்வதெல்லாம் சில காம்யமான காரியங்கள். புராணங்களில் அங்கங்கு சொல்லப்பட்டிருக்கும்.
நம்மை பொறுத்தவரையில் துளசி, பெருமாளுடைய திருவாராதனைக்கு நித்யம் உபயோகப்படுத்த வேண்டி இருக்கிறது. அதனால் காம்யமான வ்ரதம் சிலது இருந்தால்கூட நாம் அதைப் பின்பற்ற வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை
ஒரு வருடத்தில் எந்தெந்த மாதத்திலும், ஒரு வாரத்தின் எந்தெந்தக் கிழமைகளிலும் வபனம் செய்யக்கூடாது என்று தெளிவுபடுத்தவும். அடியேன். தற்சமயம் அடியேன் யதாமதிக்கு எட்டியபடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், அமாவாஸை, பௌர்ணமி, ஏகாதசி,துவாதசி மற்றும் பெற்றோர்களுக்கு ஶ்ராத்தம் வரும் அந்த முழு பக்ஷத்திலும், மார்கழியிலும் பண்ணுவதில்லை.
அவரே சில தினங்களைச் சொல்லி இருக்கின்றார் அந்தத் தினங்கள், மேலும் மொத்தமாக பார்த்தால்
மாதங்களில் :
ஆடி, மார்கழி, மாசி, புரட்டாசி இந்த நான்கு மாதங்களும் பண்ணிக் கொள்ளக்கூடாது. புரட்டாசியில் பூர்த்தியாகவே பண்ணிக்கொள்ளக் கூடாது.
ஆடிமாதத்தில் முன்பாதியில் பண்ணிக்கொள்ளலாம்; பின்பாதியில் வபனம் செய்துகொள்ளக்கூடாது.
மார்கழியிலும் மாசியிலும் பின்பாதியில் பண்ணிக்கொள்ளலாம் முன்பாதியில் பண்ணிக்கொள்ள கூடாது என்பதாகச் சொல்லுவார்கள்.
கிழமைகளில்:
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை தினங்களில் வபனம் செய்து கொள்ளக்கூடாது.
வெள்ளிக்கிழமை மாத்ருவுக்கு ஆகாது என்ற படியால், சிலர் மாதா இல்லை என்று பண்ணிக் கொள்கின்றனர். அது இரண்டாம் பக்ஷம்.
திதியில்:
பித்ரு திதிகள் அதாவது கிருஷ்ண பக்ஷ அஷ்டமி, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி, அமாவாஸ்யை, பௌர்ணமி இவையெல்லாம் கூடாது. பொதுவாகவே சதுர்த்தி கூடாது. எந்த சஷ்டி திதியுமே அடியோடு கூடவேகூடாது என்பதாக நிஷித்தம்.
நட்சத்திரங்களில்:
பரணி க்ருத்திகையில் பண்ணிக்கொள்வதில்லை. ஏனென்றால் இது மங்களகார்யம் என்பதால். அவரவருடைய ஜன்ம நட்சத்திரத்திலும் சிலர் செய்துகொள்ள மாட்டார்கள்.
திங்கட்கிழமையும் புதன்கிழமையும் விசேஷமாக உள்ளது. அதனால் ஓரிரண்டு குறைவு இருந்தால் கூட அன்று வபனம் செய்து கொள்ளலாம் என்பதாக இருக்கிறது.
துவாதசி அன்று வாழைப்பழமோ அல்லது வாழைமரம் ஸம்பந்தமான எதையும் உபயோகிக்க மாட்டோம். அப்படியிருக்க மாசப்பிறப்போ/ தர்ப்பண தினமோ துவாதசியன்று வந்தால் வாழைக்காயை உபயோகிக்கலாமா? எது சரியான வழிமுறை தெளிவிக்கவும்.
துவாதசி அன்று வாழை ஸம்பந்தமான எதையும் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அன்று மாதப்பிறப்பு வந்தால்கூட வாழை சம்பந்தப்பட்ட எதையும் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நிறையபேரின் அனுஷ்டானத்தில் உள்ளது.
சிலர் மாத்திரம், மாசப்பிறபாய் இருந்தால் மட்டும் பரவாயில்லை சேர்த்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றனர்.
புருஷர்கள் எப்படி ஆசமனம் செய்ய வேண்டும்? என்ன நியமங்கள் கடைபிடிக்க வேண்டும் மேலும் எப்போதெல்லாம் செய்தல் வேண்டும் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
ஆசமனம் செய்யும் போது கைகால்களை அலம்பிக்கொண்டு குக்குடாசனம் என்று சொல்லக்கூடிய ஆசனமுறையில் உட்கார்ந்துகொண்டு கிழக்கோ, வடக்கோ பார்த்துக்கொண்டு செய்யணும். கொஞ்சமாக ஜலம் எடுத்துக்கொண்டு அச்சுதாய நம: அனந்தாய நம: என்பதாகச் சொல்லி ப்ராசனம் முதலானது எல்லாம் செய்ய வேண்டும். இவையே முக்கியமான நியமங்கள். மூன்று தடவை ப்ராசனம் செய்தவுடன் வாயை துடைத்துக்கொண்டு கையை அலம்பி சுத்தி செய்துகொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் ஆஹ்நிக க்ரந்தங்களில் பார்க்கலாம்.
எப்பொழுது செய்ய வேண்டும் என்றால் நிறைய சமயங்களில் செய்ய வேண்டி இருக்கின்றது. கர்மாவிற்கு அங்கமாக ஆரம்பத்தில் நடுவில் முடிவில் என்று செய்யவேண்டிவரும். அது தவிர நமக்கு ஆகாரத்திற்கு முன்னும் பின்னும் ஆசமனம் செய்ய வேண்டும். அது மாதிரியாக நாம் சங்கா நிவ்ருத்தி பண்ணிக் கொண்டோமானால் வாயை துடைத்து உடனே கைகால் அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும். மற்றபடி அந்தந்தக் கர்மாவிற்கு அங்கமாக அங்கங்கே சொல்லப்பட்டிருக்கிறது. சுத்தமாகக் கோவிலுக்குப் போகவேண்டும் என்றால் ஆசமனம் பண்ணிவிட்டுப் போகவேண்டும் என்பதாகச் சொல்வதுண்டு அதெல்லாம் முடியுமானால் செய்யலாம்.
ஒரு ப்ரபந்னன், ப்ரபத்தி பண்ணாத வேறுவொருவருக்காக காம்யார்த்தமாக எம்பெருமானிடம் ப்ரார்த்திக்கலாமா?
காம்யார்த்தமாக ப்ரார்த்திக்க மாட்டேன் எனும் அளவுக்கு ஸ்திர புத்தி இருந்தால் ப்ரார்த்திக்காமல் இருக்கலாம். ஆனால் ப்ரார்த்திக்க வேண்டும் என்று தோன்றி, ப்ரார்த்திப்பதினால் தோஷம் ஒன்றுமில்லை.
கோத்ரம் என்றால் என்ன? எல்லா வர்ணாஶ்ரம தர்மங்களுக்கும் உண்டா? அவரவர் கோத்ரம் மூலம் வர்ணாஶ்ரமத்தை அறிய முடியுமா? விளக்க வேண்டுகிறேன்.
கோத்ரம் என்றால் அந்தப் பரம்பரையில் வந்தவர்கள். அதாவது புத்திரன், பௌத்திரன், ப்ரபௌத்திரன் என்றெல்லாம் சொல்கின்றோம். அப்படி சொல்லும் பொழுது ஒரு குறிப்பிட்ட சந்ததிக்குமேல் மேற்கொண்டு சொல்ல முடியாது. அப்பொழுது கோத்ரம் என்று பெயர் வைத்துவிடுகின்றனர் . அந்த கோத்ரத்தில் வந்தவரென்றால் அந்தப் பரம்பரையில் வந்தவர் என்று அர்த்தம். இது வ்யாக்கியான சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பௌத்திரன் ஆகியாயிற்று என்றால், பின் கோத்ரத்தைச் சொல்லலாம். புத்திரன், பௌத்திரன், நத்தா என்று சொல்வார்கள், தொடர்ந்து கோத்திரம் என்று சொல்லலாம். அந்தந்த மஹரிஷியுனைடய கோத்திரத்தை நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அந்த வம்சத்தில் வந்தவர்கள் என்று அர்த்தம்.
எல்லா வர்ணாஶ்ரமகாரர்களுக்கும் கோத்ரம் இருக்கும். அவரவர் கோத்ரம் மூலம் வர்ணாஶ்ரமத்தை அறிய முடியாது. வர்ணம் என்றால் ஜாதி. ஆஶ்ரமம் என்றால் அவர் க்ருஹத்ராஶ்ரமத்தில் அல்லது வேறு என்று சிலவற்றைக் கண்டுபிடிக்கலாம் . ப்ராஹ்மண ஜாதிக்கு மட்டும் என்று சில கோத்ரங்கள் உண்டு. அதை வைத்துகொண்டு சிலவற்றை கண்டுபிடிக்க முடியும்.
பொதுவாக கோத்ரம் இருக்கின்றவர்கள், இல்லாதவர்கள் என்று சட்டென்று சொல்ல முடியாது. ஏனென்றால் நிறைய பேர் கோத்திரம் வைத்து கொண்டிருக்கின்றனர்.
ஆஶ்ரமம் என்பது அவரவர் இருக்கக்கூடிய நிலையைப் பொருத்தது. ப்ரஹ்மச்சாரி, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன், சந்யாசி என்று இருக்கின்றது.
“நித்யப்படி க்ருஹ திருவாராதன ஸேவா காலத்தில் கீழே உள்ள ப்ரபந்தம் / ஸ்லோகங்களை எந்த க்ரமத்தில் ஸேவிக்க வேண்டும்.
திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான், கண்ணினுன்சிறுத்தாம்பு, இராமானுஜ நூற்றந்தாதி, ந்யாஸ தஶகம், அடைக்கலப்பத்து, பிள்ளையந்தாதி, ஆசார்யர்கள் தனியன். தாஸன்.”
நித்யப்படி திருவாராதனை காலத்தில் திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான், கண்ணினுன்சிறுத்தாம்பு, இராமானுஜ நூற்றந்தாதி, ந்யாஸ தஶகம், அடைக்கலப்பத்து, பிள்ளையந்தாதி, ஆசார்யர்கள் தனியன் இவை எல்லாம் சேவிப்பதாகச் சொல்லி இருக்கிறார். இப்பொழுதெல்லாம் நித்யப்படி இத்தனையும் சேவிப்பவர் யாருமே கிடையாது.
ஆசார்யன் பொன்னடிசாற்றிக் கொடுத்த பாதுகைகளை ஏளப்பண்ணி வந்துள்ளேன். ஆத்தில் அந்தப் பாதுகைகளை எதில் ஏளப்பண்ண வேண்டும். தினமும் செய்ய வேண்டிய ஆராதனை (பாதுகைகளுக்கு) என்ன என்பதையும் விளக்க ப்ரார்த்திக்கிறேன் . ஊர்களுக்கு போகும்போது பாதுகைகளை ஏளப்பண்ணிக்கொண்டு போகவேண்டுமா? அடியேன்
சங்கல்பம் செய்து பாதுகைக்கு திருமஞ்சனம் பண்ணி, பழம் முதலானவைகளை சமர்ப்பித்து பாதுகா ஆராதனம் செய்யலாம். தினமும் செய்ய வேண்டும் என்கின்ற நிர்பந்தம் கிடையாது என்பதாகச் சொல்லப்படுகிறது. விசேஷ நாட்களில் செய்யலாம்.
தினமும் செய்தால் விசேஷம் என்று ஸ்ரீமத் ஆண்டவன் சம்பிரதாயத்தில் தினமும் செய்வதாக இருக்கின்றது. அப்படி இல்லாவிட்டால் விசேஷ நாட்களில் திருவாராதனம் செய்தால் போதும்.
ஊருக்குச் செல்லும் சமயங்களில் பாதுகைகளை ஏளப்பண்ணிக்கொண்டு போகவேண்டும் என்கின்ற நிர்பந்தம் கிடையாது. மிகவும் அத்யாவச்யம் எனும் போது, உ.தா திருநக்ஷத்ரங்கள் முதலானவை வந்தால் ஏளப்பண்ணிக்கொண்டு போகலாம். ஆனால் சுத்தமாக ஏளப்பண்ணிக்கொண்டு போகவேண்டும். பெருமாளுக்கு என்ன சுத்தியோ அதே போல் இவருக்கும் அதே சுத்தியோடு ஏளப்பண்ணக்கொண்டு போகவேண்டும்.
10 வருடங்களுக்கும் மேலாக எனது மாமனாரின் உடன்பிறந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், அவர்களது சந்ததியினரை ஒருவரை ஸ்மார்த்தர்களில் சிலர் பீஷ்மஅஷ்டமி அன்று பீஷ்மதர்ப்பணம் செய்கிறார்கள். ஸ்ரீவைஷ்ணவர்களும் அவ்வாறு செய்யலாமா?
ஸ்ரீவைஷ்ணவர்கள் பீஷ்மஅஷ்டமி அன்று பீஷ்மதர்ப்பணம் செய்யவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அது காம்யார்த்தமான விஷயம்.
அடியேன். ஜனனமரண தீட்டு விஷயத்தில் அடியேனுக்கு ஒரு சந்தேகம். தசராத்ரி ஞாதிகள் என்பவர்கள் தன்னுடைய தலைமுறையும் தனக்கு முன் உள்ள 6 தலைமுறைகளையும் (மொத்தம் 7 தலைமுறைகள்) சேர்ந்தவர்கள். த்ரிராத்ரி ஞாதிகள் என்பவர்கள் தனக்கு அடுத்த 7 தலைமுறைகளை சேர்ந்தவர்கள். தனக்கும் தன்னுடைய முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு (தசராத்ரி ஞாதிகள்) ஜனன மரண விஷயத்தில் 10 நாட்களும், தனக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களுடைய ஜனன மரண விஷயத்தில் 3 நாட்களும் தீட்டு. இது சரியா? தங்களின் விளக்கத்தைப் ப்ரார்த்திக்கிறேன். தன்யோஸ்மி.
ஏழு தலைமுறை வரை தசராத்ரி ஞாதிகள். மூன்று தலைமுறை வரை த்ரிராத்ரி ஞாதிகள். தசராத்ரி ஞாதிகளுக்கு 10 நாள் தீட்டு த்ரிராத்ரி ஞாதிகளுக்கு 3 நாள் தீட்டு என்று எல்லாம் சரியாக எழுதி இருக்கிறார். ஆனால் இவையெல்லாம் இறப்பு விஷயத்தில் பிறப்பு விஷயத்தில் ஓரிரண்டு வித்தியாசங்கள் உண்டு. அதை GSPK SUDARSANAM வெளியிட்ட “தீட்டு விவரங்கள்” எனும் புஸ்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
பெருமாள் திருவாராதனம் புத்தகத்தின் துணைகொண்டு செய்யலாமா, அல்லது ஒரு ஆச்சார்யனிடமோ அல்லது நன்கு கற்றறிந்தவர்களிடமிருந்தோ கற்றுக்கொண்ட பின்னரே செய்யவேண்டுமா?
பெருமாள் திருவாராதனம் புத்தகத்தின் துணைகொண்டு செய்வது சரி கிடையாது. ஏனெனில், திருவாரதனைக்கென்று சில மந்திரங்கள் உண்டு அதை ஆசார்யனிடமிருந்து உபதேசமாக பெற்றுக்கொண்டு, பெரியவர்களின் துணையோடுதான் முதலில் ஆரம்பிக்கவேண்டும்.
காலையில் திருவாராதனம் செய்வதற்கான சரியான நேரம் என்ன? காலையில் செய்ய முடியவில்லை என்றால் மாலையில் செய்யலாமா?
திருவாராதனம் செய்வதற்குப் பகலில் மூன்றாவது காலம் என்று சொல்லியிருக்கிறார்கள். அபிகமன காலம், உபாதான காலம் ஆனபின் மூன்றாவது பாகத்தில் செய்யவேண்டும். அதாவது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும் பகலை ஐந்தாகப் பிரித்துக்கொண்டு அதில் மூன்றாவது காலமான இஜ்யா காலத்தில் திருவாராதனம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அப்படிச் செய்யமுடியவில்லை என்றால் அந்தக்காலத்திற்கு முன்னர் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார்கள், அதுவும் முடியாதவர்கள் சாயங்காலத்திலும் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
தினமும் மாலை செய்வதென்பது கூடாது என்றைக்காவது ஒருநாள் உரிய நேரத்தில் செய்ய இயலாதபோது மாலை செய்யலாம்.
திருமலை திருப்பதியில் கவுண்டர்களில் கொடுக்கும் லட்டு பிரசாத்தை ப்ரபத்தி செய்தவர்கள் ஸ்வீகரிக்கலாமா?
திருமலையில் கொடுக்கும் லட்டு பெருமாளின் ப்ரசாதம் என்பதாகச் சொல்லும் வழக்கம், ஆகையால் ஸ்வீகரிக்கலாம். கவுண்டர்களில் வரும் போது ஆசாரம் குறைவாக இருக்கும் அதனால் ஆசாரத்தைக் கடைபிடிப்பவர்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை வரும். ஏனெனில், அது பெருமாளின் ப்ரசாதமாக நேராக வராமல், ப்ளாஸ்டிக் கவர், மேலும் பலர் தொட்டுத்தான் வரும் ஆகையால், ஆசாரம் கடைபிடிக்கவேண்டும் எனக் கொண்டு அதை ஸ்வீகரிக்காமல் இருக்கலாம்.
நமஸ்காரம் ஸ்வாமி. ப்ரபத்தி செய்து கொள்ளும்பொழுது (யாருக்கு ப்ரபத்தி செய்யப்படுகிறதோ) அந்த நபர் முழு மடியாகவும் ஆசாரமாகவும் இருப்பது அவசியமா? ப்ரபத்தியை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் செய்து கொள்ளலாம் என்பதை அடியேன் அறிவேன். மேலும் திரௌபதி வேறு ஒரு ஸ்திதியில் இருந்த போது ப்ரபத்தி செய்துகொண்டாள். ப்ரபத்திக்கு முழு ஆசாரம் தேவையில்லையா ஸ்வாமி. அடியேன் தவறாகக் கேட்டிருந்தால் க்ஷமிக்கணும்.
ப்ரபத்தி செய்வதற்கு மடி ஆசாரமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் அதற்கு அங்கம் கிடையாது என்றாலும் நான் விழுப்போடு, தீட்டோடு தான் பண்ணிக்கொள்வேன் என்று சொல்லமுடியாது. வேறு வழியில்லாது போனால் தான் அப்படி விழுப்போடு அல்லது தீட்டோடு பண்ணுவது வழக்கம்.
இதுவும் ஒரு நல்ல தர்மமானபடியால், முடிந்தவரை எந்தளவு ஆசாரமாக இருக்க முடியுமோ அப்படி இருந்து தீர்த்தாமாடி, 12 திருமண் இட்டுக்கொண்டு சுத்தமாக பண்ணிக்கொள்ள வேண்டும்.
தீட்டோடு பண்ணலாம் என்பதற்காக தீட்டுடன் பண்ணிக்கொள்ள கூடாது.
துவாதசி அன்று தளிகைக்கு எந்தப் பருப்பை உபயோகப்படுத்த வேண்டும். துவரம்பருப்பா அல்லது பயத்தம்பருப்பா?
துவாதசி அன்று பெரும்பாலும் விசேஷமாக பெருமாளுக்குத் துவரம்பருப்பு சேர்த்துக்கொள்வதுண்டு. பயத்தம்பருப்பும் சேர்த்துக்கொள்வதுண்டு.
சிலர் துவரம்பருப்பு கூடாது பயத்தம்பருப்புதான் சேர்க்கவேண்டும் என்று சொல்லி கேள்விபட்டதுண்டு. அடியேனுக்குத் தெரிந்து பெரியவர்கள் இரண்டும் சேர்த்துக்கொள்வது வழக்கம்.
ஶ்ரீவைஷ்ணவர்கள் அகத்தில் சங்கு வைத்துக்கொள்ளலாமா? ஆமெனில் எவ்வாறு ஆராதிப்பது? இல்லையெனில் அகத்தில் இருக்கும் சங்கை எவ்வாறு உபயோகிப்பது?
ஸ்ரீவைஷ்ணவர்கள் அகத்தில் சங்கு வைத்துக்கொள்ளலாம். சங்கத்திற்குத் தனியாக ஆராதனம் செய்யவேண்டிய அவசியமில்லை. நாம் சாதாரணமாக வாங்கியிருக்கக்கூடிய வலம்புரி சங்கு முதலானவையாக இருந்தால், அந்தச் சங்கத்தை சுத்தமாகவைத்து எம்பெருமானுக்குத் திருவாராதனம், திருமஞ்சனம் எல்லாம் செய்யலாம்.
சில சமயம் விசேஷமாக சங்கு சக்ரம் சுதர்ஶன பாஞ்சஜன்யம் ஏளப்பண்ணி ப்ரதிஷ்டை எல்லாம் செய்வார்கள். அது விசேஷ விதி. அவர்களுக்கு நித்யம் திருவாராதனை எல்லாம் உண்டு.
எங்கள் பெற்றோர்கள் இருவரும் பரமபதித்துவிட்டார்கள். எங்கள் தமையனார் தான் கார்யங்களைச் செய்து வந்தார். தற்போது அவரும் பரமபதித்துவிட்டதால், பெண்களாகிய நாங்கள் வருடாவருடம் பெற்றோர்களுக்கு ஶ்ராத்தம் செய்யலாமா? மேலும் பரமபதித்த எங்கள் தமையனார் ஒரு ப்ருஹ்மச்சாரி, உடன் பிறந்தவர்கள் என்ற முறையில் நாங்கள் அவருக்கு ஶ்ராத்தம் செய்யலாமா? பெற்றோர்கள் இல்லாத, ஒரு திருமணமாகாத ஸ்திரீக்கு யார் அந்திமகார்யம் செய்யலாம்?
தமையனார் பரமபதித்துவிட்டபடியால் பெற்றோர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டியது எதுவும் கிடையாது. ஏனென்றால் அவர்தான் கர்த்தா. அவருடன் அது முடிந்துவிடும். அதனால் ஶ்ராத்தம் செய்யவேண்டாம்.
மேலும் தமையனார் அவருக்கு வேறு யாரும் இல்லாதபடியினாலே, அவர்கள் உடன் பிறந்தவர்கள் என்கின்ற முறையில் நீங்கள் ஶ்ராத்தம் செய்யலாம். ஸ்த்ரீகளிடமிருந்து கைப்புல் வாங்கிக்கொண்டு மற்றவர்கள் செய்யவேண்டும்.
பெற்றோர்கள் இல்லாத, ஒரு திருமணமாகத ஸ்த்ரீக்கு அந்திம கார்யம் கூடபிறந்தவர் செய்யலாம். அப்படி இல்லாவிட்டால் வேறு யாராவது செய்யலாம்.
கொடியில் உலர்த்திய மடி வஸ்த்ரத்தை ப்ளாஸ்டிக்கவர் கொண்டு எடுக்கலாமா அல்லது மரக்குச்சியில் தான் எடுக்கவேண்டுமா? ப்ளாஸ்டிக்கவர் கொண்டு எடுத்தால் அது விழுப்பாகிவிடுமா? அறியாமல் கேட்கிறேன் தவறாக இருந்தால் க்ஷமிக்கவும்.
கொடியில் உலர்த்தியிருக்கும் மடி வஸ்த்ரத்தை ஒரு கோல் அல்லது மரக்குச்சியினால் தான் எடுக்கும் வழக்கமுள்ளது. ப்ளாஸ்டிக் என்பது நவீன வஸ்து, ஶ்ரார்த்தம் போன்ற சுத்தமாக இருக்கும் சமயங்களில் ப்ளாஸ்டிக்கை தொடுவதில்லை.
கம்பளி கொண்டு கூட வஸ்த்ரம் எடுப்பதுண்டு, ப்ளாஸ்டிக்கவர் கொண்டு வஸ்த்ரம் எடுப்பதென்பது பெரியவர்களின் ஆசாரத்திலும் இல்லை வழக்கத்திலும் இல்லை. அதனால் அது விழுப்பா என்ற கேள்விக்குமிடமில்லை.
அடியேனின் தந்தை அமாவாஸ்யை தர்ப்பணம் செய்கிறார், அன்றைய தினம் தலைக்கு தீர்த்தமாட கூடாதென்று என் அம்மா கூறுகிறார். அடியேன் லகுவாக பாதுகா திருவாராதனம் நித்யமும் செய்து வருகிறேன். அமாவாஸ்யை போன்ற தினங்களில் தலைக்கு தீர்த்தமாடாமல் எப்படிச் செய்வது என்று தெளியப்படுத்தவும்.
அமாவாஸை அன்று, அப்பா இருக்கிறவர்கள் தலைக்கு தீர்த்தமாடக்கூடாது என்று சிலரின் ஆசாரத்தில் உண்டு, குறிப்பாகத் தெற்கு பக்கத்தில் அவ்வாசாரம் இருக்கிறது.
நித்யபடி திருவாராதனம் பண்ணுபவர்கள், நித்யபடியே தலைக்கு தீர்த்தமாடுபவர்கள் அன்றும் தீர்த்தமாடுவதில் தப்பில்லை. மேலும், திருவாராதனம் பண்ணுவதாக இருந்தால் தீர்த்தமாடி பண்ணுவதுதான் நியாயம்.
சென்ற சுதர்சனம் இதழில் அடியேன் ப்ரபத்தி செய்யும்போது மடி ஆசாரம் கடைபிடிக்க வேண்டுமா என்ற அடியேனின் சந்தேகத்திற்கு ஸ்வாமியின் மூலம் பதிலை அறிந்துகொண்டேன். மேலும் அதில் நம்மால் இயன்றளவு மடியோடு இருக்கவேண்டுமென்றும் வேறுவழியில்லை என்றபோது விழுப்புடன் செய்வது பரவாயில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அடியேனுக்கு ப்ரக்ருதம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் மூலம் பரந்யாஸம் ஆனது. அன்றைய தினம் அடியேன் உடுத்திய கச்சம் மடியில்லை. இக்கேள்வியின் பதிலைக்கண்டு அன்று மடியின்றி பரஸ்மர்ப்பணம் செய்துகொண்டோம் என மிகவும் வருத்தமாகவுள்ளது. மேலும் இதனால் ஏதேனும் பாபம் உண்டாகுமா என்று தெளிவிக்க வேண்டுகிறேன்.
பரஸமர்ப்பணம் பண்ணிய சமயம் மடியில்லாத வஸ்த்ரத்தை தெரிந்தே உடுத்திக்கொண்டு போயிருந்தால் தவறுதான், தெரியாமல் செய்திருந்தால் தவறில்லை. இதற்கும் பண்ண பரஸமர்ப்பணத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
பொதுவாகவே பெரியவர்கள், முக்கியமாக ஆசார்யர்களைச் சேவிக்க போகும்போது சுத்தமாகதான் போக வேண்டும்.
தெரிந்தே பண்ணியிருந்தால் பாபந்தான். அதற்குப் பெருமாளிடமே மன்னிக்கும்படி ப்ரார்த்திப்பதுதான் ஒரே வழி.
அடியேனின் பரந்யாஸ ஆசார்யன் திருக்குடந்தை ஆண்டவன். நீண்டகாலமாக கிராமத்து கோவிலில் ப்ரதோஷம் உபயம் எங்கள் ஆத்து பெரியோர் செய்து வந்தனர். இப்போது சென்னைக்கு வந்துவிட்டோம். இப்போது அதைத் தொடரலாமா, பணம் அனுப்புவது தவறாகுமா. இல்லை ப்ரதோஷத்தன்று அந்தக் கோயிலில் நேரே போய்தான் செய்யவேண்டுமா?
ப்ரதோஷத்திற்கு ந்ருஸிம்ஹ உபயம் என்றால் அதை நிச்சயம் பண்ணலாம். நேரே போகமுடிந்தால் நல்லது இல்லையென்றால் ந்ருஸிம்ஹ திருமஞ்சனத்திற்குத் தேவையான த்ரவ்யத்தை ஸமர்பிக்கவும் செய்யலாம், இயன்ற ப்ரதோஷத்தின்போது நேரே சேவித்துவிட்டு வரலாம்.
வேறு இதர கோயில் உபயமாக இருந்தால் பண்ணவேண்டிய அவசியமில்லை, பண்ணாவிட்டால் தப்பில்லை.
நாங்கள் எங்கள் வீட்டை (flat) விற்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அது நல்லபடியாக நடந்துமுடிய வேண்டும் என்று ப்ரார்திக்க ஏதேனும் ஶ்லோகம் உண்டா? அடியேனுக்கு தெரியப்படுத்தவும் ஸ்வாமி. தன்யோஸ்மி.
மிகவும் கடினமான கார்யத்தையும் சாதித்துதருவது ஸுதர்ஶனாஷ்டகம் என்று அதன் பல ஶ்ருதியில் கூறப்பட்டுள்ளது.அதனால் ஸுதர்ஶனாஷ்டகம் பாராயணம் செய்து வாருங்கள்.
வெளிநாட்டில் வாழும் எங்களால், ஸ்ரீரங்கம் போன்ற பஞ்சாகங்களைப் பின்பற்ற முடியவில்லை நாங்கள் இணையதளத்திலுள்ள பஞ்சாங்கத்தைத் தான் பின்பற்றி வருகிறோம் ஆகையால் எங்களைப் போன்றோருக்காக ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி நிர்ணயம் அருள ப்ராத்திக்கிறேன்.a. ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி வைகாசி ஸுக்ல பக்ஷ – த்ரயோதசியா அல்லது சதுர்தசியா?b. அவதார கால திருவாரதனைக்கு சூர்யோதயம் அல்லது சூர்ய அஸ்தமன திதி பின்பற்ற வேண்டுமா?c. குறைந்த பக்ஷம் 6 நாழிகையாவது திதி (சூர்ய உதயமோ/அஸ்தமனமோ) இருக்க வேண்டும் என்று இருக்கிறது அப்படியில்லாவிட்டால் அடுத்த நாளில் செய்ய வேதை/தோஷத்தின் விவரங்கள் அளிக்க வேண்டுகிறேன்.
ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி என்பது வைசாக மாதத்தில் வரும். வைசாக மாதம் என்பது சித்திரை அமாவாஸைக்குப் பிறகு வைகாசி அமாவாஸை வரை 30 நாட்கள். ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி திதி என்பது சுக்ல பக்ஷ சதுர்தசி திதி ஆகும்.
அதில் த்ரயோதசியோடு வேதை(சம்பந்தம்) கூடாது. அதாவது 6 நாழிகை காலம் த்ரயோதசி சம்பந்தம் இருந்தால் அன்று ஆறு நாழிக்கு பின் சதுர்தசி இருந்தால்கூட அன்று ந்ருஸிம்ஹ ஜெயந்தி கொண்டாடக்கூடாது. மறுநாள் தான் ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி பண்ண வேண்டும். 6 நாழிகை த்ரயோதசி சம்பந்தமில்லாத சதுர்தசி என்பது ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்திக்கு காலம்.
மறுநாள் சதுர்தசி சூரியோதய காலத்திலாவது இருக்க வேண்டும், அப்படி இருந்தால்தான் அன்று ந்ருஸிம்ஹ ஜயந்தி. அப்படி சூரியோதய காலத்தில் சதுர்தசி இல்லாவிட்டால், முன்னாள் (முதல் நாளே) அந்த த்ரயோதசி சம்பந்தம் இருந்தால் கூட வேறு வழியே இல்லாமல் அன்றே ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் என்பதாக ஒரு நிர்ணயம்.
அடியேனுக்கு கேட்கும்திறன் குறைபாடு சரியாக, எம்பெருமாளிடம் ப்ரார்த்திக்க என்ன ஶ்லோகம் சேவிக்க வேண்டும்.
கேட்கும்திறன் குறைவாக இருந்தால் ஹயக்ரீவ ஸ்தோத்ரம் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் “வாக3ர்த2ஸித்3தி4ஹேதோ:” என்று வாக்கும் வாக்கைக்கேட்டு அதனுடைய அர்த்தமும் புரிய வேண்டுமானால் ஹயக்ரீவ ஸ்தோத்ரம் என்று ஸ்வாமி தேஶிகனே சொல்லியிருக்கின்றார்.
அடியேன் பணியில் இருக்கும் நேரம் அலுவலகத்தின் உணவகத்தில் தினசரி வெங்காயம் பூண்டு சேர்த்த உணவை உட்கொள்ள வேண்டி உள்ளது. அலுவலகம் சென்று திரும்ப மிகுதியான நேரம் ஆகிறது. மாலை ப்ரயாணத்தில் (வெங்காயம் பூண்டு சாப்பிட்ட பின்) கிடைக்கும் நேரத்தில் ஸஹஸ்ரநாமம் சொல்லலாமா? வீடு திரும்பியவுடன் கைகால் வாய் மட்டும் சுத்தம் செய்து சந்தியாவந்தனம் செய்யலாமா?
வெங்காயமும் பூண்டும் ஒருகாலும் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அவை நிஷித்தமான வஸ்துக்கள். எந்தக் காரணமோ சாக்கோ சொல்லி, அவற்றை சேர்த்துக்கொள்ளக் கூடாது. இவை இரண்டுமே மோசமான வஸ்துக்கள். அதனால் அவை இரண்டையும் தவிர்க்க வேண்டும் என்பதே இதனுடைய நேரான பதில்.
அடியேனின் வபனம் சம்பந்தமான கேள்விக்கான (Q28CHIT21006) விளக்கத்திற்கு நன்றி. அடியேனின் குழப்பம்: முதலில் ஆடி, மார்கழி, மாசியில் கூடாது என்றும் பிறகு ஆடி முன்பாதி மார்கழி, மாசியில் பின்பாதியில் செய்யலாம் என்றும் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை. அடியேன் குழப்பத்தை தெளிவிக்கவும்.
ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி, இந்த மாதங்களில் வபனம் கூடாது.
ஒரு வசனத்தில் என்ன இருக்கிறது என்றால், தனுஷ் கும்பௌ , அப்படியென்றால் மார்கழியிலும் மாசியிலும் பின் பாதியிலும் ஆடி மாதத்தில் முன்பாதியிலும் செய்துகொள்ளலாம் என்று இருக்கிறது.
புரட்டாசி மாதம் முழுவதும் செய்யக்கூடாது என்ற வசனமும் இருக்கின்றது.
வேறு வழி இல்லாவிட்டால் மேற்கூறிய வசனத்தை அனுஷ்டானம் செய்வது என்பது பெரியோர்கள் வழக்கத்தில் இருந்துகொண்டிருக்கிறது. எதுவும் குழப்பம் வேண்டாம். எப்பொழுதுமே ஶாஸ்த்ரம் என்பது இரண்டு கல்பம் சொல்லும். முதல் கல்பம் முடியாவிட்டால் அடுத்தது என்ற ரீதியில் வரும். இது எல்லா இடத்திலேயும் உண்டு.
ஞாயிற்றுக்கிழமையில் செய்துகொள்கின்ற வழக்கம் இருக்கின்றது. திதி மற்றும் நக்ஷத்ர தோஷங்கள் இல்லாவிட்டால் பண்ணிக்கொள்ளலாம்.
குறிப்புகள்:
அதனால் உங்களால் முடியுமானால் ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி இந்த மாதங்களில் வபனம் செய்துகொள்ளக்கூடாது என்பது முதல் பக்ஷம்.
சிலரால் அது முடியாமல் போகலாம். அப்படி முடியாமல் போனால் மார்கழி மாசி மாதங்களில் முன் பாதியிலும் ஆடி மாதத்தில் பின் பாதியிலும் வபனம் செய்துகொள்ளலாம். இது இரண்டாவது பக்ஷம்.
திருவாரதனம், தர்ப்பணம் அல்லது சந்தியாவந்தனம் செய்யும் சமயங்களில் அற்பசங்கை போன்றவை வந்தால் என்ன செய்யவேண்டும், மீண்டும் ஸ்நானம் செய்ய வேண்டுமா? எப்படித் தொடர வேண்டும். தெளிவுபடுத்தவும் அடியேன்.
திருவாரதனம், தர்ப்பணம் அல்லது சந்தியாவந்தனம் செய்யும் சமயங்களில் அற்பசங்கை வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று நமக்கே தெரியும் . முன்பே சங்காநிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். ரொம்ப வயதான பிறகு வந்துவிடும், அந்தச் சமயம் வேறு வழியில்லாமல் ஸ்நானம் பண்ணனும். அப்படிப் பண்ண முடியாவிட்டால் மந்த்ர ஸ்நானமாவது பண்ணவேண்டும், அதன் பின் சந்தியாவந்தனாதிகள் முதலிலிருந்து ஆரம்பித்துச் செய்ய வேண்டும்.
திருவாராதனம் செய்யும் பொழுது ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பார்கள். அற்பசங்கை போகும்படி நேர்ந்தால் மறுபடியும் ஸ்நானம் செய்து ஆரம்பத்திலிருந்து செய்வது உண்டு. இல்லாவிட்டால் வேறு ஒரு ரீதியில் அதாவது புத்திரனை வைத்து பண்ணுவதும் உண்டு. அதாவது முக்கியமான ஸ்நானம் பண்ண முடியாவிட்டால் மந்த்ர ஸ்நானம் பண்ணலாம்.
இதெல்லாம் ரொம்ப வயதானவர்கள் விஷயத்தில்தானே தவிர சக்தி உள்ளவர்கள் எல்லாம் சங்காநிவர்த்தி எல்லாம் செய்துவிட்டு தான், சந்தியாவந்தனம் திருவாராதனம் எல்லாம் ஆரம்பிக்க வேண்டும். அதில் எந்த விதமான தளர்வும் கூடாது.
திருவாரதன சமயம் ஸ்லோகங்கள், ராமாயணம், பாகவதம் சேவிக்கும் போது அலங்காரஸ்நானம் அல்லது பர்யங்கஸ்நானம் எது செய்யவேண்டும்? மேலும் பாகவதம் மூலம் பாராயணம் திருவாராதனத்திற்கு பின் செய்ய வேண்டுமா? தெரிவிக்க வேண்டுகிறேன்.
ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் சேவிக்கும் போது அலங்கார ஆசனமா அல்லது பர்யங்க ஆசனமா என்றால் அவரவர் சௌகர்யம்படிச் செய்யலாம்.
அலங்கார ஆசனத்தில் பெருமாளுக்குத் தூபதீபாதிகள் எல்லாம் சமர்ப்பித்து முடித்தபின் ஸ்தோத்ரங்கள் சொல்ல வேண்டிய சமயம் இருக்கிறது. இல்லையென்றால் பர்யங்க ஆசனத்தில் பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி செய்துவிட்டு பின் ஸ்தோத்ரங்கள் சொல்ல வேண்டிய சமயம் இருக்கிறது. இந்த இரண்டில் எது சௌகர்யமோ அதற்கேற்றார் போல் சேவிக்கலாம்.
அகத்தில் தளிகை எல்லாம் ஆகிவிட்டது என்றால், தளிகை ஸமர்ப்பித்துவிட்டு பர்யங்க ஆசனத்தில் கூட நாம் சேவிக்கலாம்.
பாகவதம் மூலம் பாராயணம் ஆராதனை திருவாராதனத்திற்குப் பிறகு கட்டாயம் செய்யவேண்டும் என்பது கிடையாது. அது நமது சௌகர்யத்தைப் பொறுத்தது.
குறிப்புகள்:
எந்தத் தாத்பர்யத்தில் கேட்கிறார் என்பது தெரியவில்லை. திருவாராதனத்திற்குப் பிறகு பாகவதம் மூலம் பாராயணம் செய்யலாம்.
அனுஷ்டானத்தின் படி ஸ்நானம் செய்யும் முன் ஸ்நானஸாடி உடுத்திக்கொண்டு ஸ்நான சங்கல்பம் செய்யவேண்டுமென்று இருக்கிறது. லௌகீக கார்யங்களை கருத்தில் கொண்டால் நித்யமும் விஸ்தாரமாக செய்ய சம்யமில்லை, ஆகையால் லகுவாக ஸ்நான சங்கல்ப முறையை தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன். மேலும், எந்த வஸ்திரத்தை ஸ்நானஸாடியாக உபயோகிக்கலாம் என்றும் தெரிவிக்க வேண்டுகிறேன். உ.தா ஒரு கிழிந்த வேஷ்டியின் அங்கவஸ்திரம் உபயோகிக்கும்படியிருந்தால் அதை ஸ்நானஸாடி உடுத்திக்கொள்ளலாமா?
லகுவாக ஸ்நான சங்கல்பம் அதாவது சுருக்கமாக என்று கேட்டால் "கர்மண்யதா சித்4யர்தம் ப்ராதஸ்நானம் அஹம் கரிஷ்யே" என்று சுருக்கமாக சொன்னால் போதும். ஆனால் பொதுவாக ஸ்நானத்தில் மஹா சங்கல்பம் சொல்வது வழக்கம். அன்றைய திதி , வாரங்கள் எல்லாம் சொல்லி, எந்த வருடம் , எந்த மாதம், “விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்3ய ப்4ரஹ்மண:” என்று ஆரம்பித்து , ஸ்நானம் பண்ண வேண்டும். சந்தியாவந்தனம் , திருவாராதனம், இவற்றுக்கெல்லாம் மஹா சங்கல்பம் கிடையாது. அதனால் நாளினுடைய தொடக்கத்தில் ஸ்நானத்தில் மஹாஸங்கல்பம் செய்து ஸ்நானம் செய்யலாம்.
நாம் குளிப்பதற்காக உபயோகப்படுத்துகிற வஸ்திரம் ஸ்நானஸாடி என்று பெயர். ஸ்நானஸாடி வஸ்திரம் என்று கடைகளில் விற்கப்படுகிறது. அதை வாங்கி உபயோகிக்கலாம். இல்லாவிட்டால், பழைய வேஷ்டி, அங்கவஸ்திரம் இவற்றை உபயோகிப்பதால் ஒன்றும் தப்புகிடையாது. ஆனால் ஸ்நானஸாடியாக உபயோகித்தபின் அது உத்திரியமாக உபயோகிக்க கூடாது. ஸ்நானஸாடி என்பது கீழ் துணி, உத்திரியம் என்பது ஜபத்திற்காக உபயோகிக்கப்படும் மேல் துணி. அதனால் பழைய உத்திரியத்தை ஸ்நானஸாடியாக உபயேகிக்கலாம். ஆனால், அதை மறுபடியும் உத்திரியமாக உபயோகிக்கக் கூடாது என்பதே பதில்.
கைவல்யார்த்திகளுக்கும் முமுக்ஷூக்களுக்கும் என்ன வேற்றுமை? கைவல்யார்த்திகள் எங்கே செல்வார்கள் என்று விரிவாக சாதித்தருள ப்ரார்த்திக்கிறேன்.
கைவல்யார்த்திகள் என்றால் இந்த ஜன்மம் முடிந்தபிறகு ஜீவாத்மா அனுபவம் வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள். அதற்கென்று தனி லோகம் இருக்கிறது அந்த லோகத்திற்குச் சென்று ஜீவாத்மா அனுபவம் பெறுவார்கள். ஆனால் அந்த லோகத்திற்கும் ப்ரளயகாலத்தில் முடிவு வந்துவிடும்.
முமுக்ஷூகள் என்றால் பரமாத்மா அனுபவத்திற்கு ஆசைப்படுபவர்கள்.மோக்ஷம் பெற்றவர்கள் ஸ்ரீ வைகுண்ட லோகத்திற்குச் செல்வார்கள். அங்கே பகவத் அனுபவத்தைப் பெற்று ஆனந்தமாக இருப்பார்கள்.
அடியேன் அஷ்டாக்ஷர ஜபம், காயத்ரிஜபம் போல் தினமும் மூன்று வேளையும் பண்ணவேண்டும் என்கிற விதி புரிகிறது. காயத்ரிஜபம் போல் எத்தனை எண்ணிக்கை வேண்டுமானாலும் பண்ணலாமா? ஸ்ரீ ஸ்ந்நிதி சிஷ்யர்கள் நித்யமும் ஆசார்ய தனியன், த்வயம், சரம ஶ்லோகம் அஷ்டாக்ஷ்ரம் சேவிக்கும் வழக்கமுள்ளது. சுதர்சனத்தின் சென்ற இதழில் அளிக்கப்பட்ட பதிலை அடியேன் சந்தியாவந்தனம் பண்ணும் சமயம் மட்டும் அஷ்டாக்ஷரம் செய்தால் போதும் என்று புரிந்துகொண்டேன் இது சரியா? அஷ்டாக்ஷரம் மற்ற நேரங்களில் பண்ணக்கூடாதா? ஆசார்யர்கள் வித்வான்கள் அஷ்டாக்ஷர ஜபம் பற்றி நிரம்ப பேசியிருக்கிறார்கள் மேலும் 45ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் பத்ரிநாத் எழுந்தருளியிருந்த போது அங்கே அஷ்டாக்ஷர ஜபம் செய்ததாக எப்போதோ ந்ருஸிம்ஹ ப்ரியாவில் படித்த ஞாபகம். ஸ்த்ரீகளுக்கு சந்தியாவந்தனம் செய்யும் விதியில்லை. அஷ்டாக்ஷரம் சந்தியாவந்தன காலத்தில் மட்டும் செய்தால் போதும் என்றால், ஸ்த்ரீகள் எப்படி பண்ணமுடியும்? ரிஷிகள் தபஸோ அல்லது ஜபமோ எந்த மந்திரம் கொண்டு செய்திருப்பார்கள் அஷ்டாக்ஷரம் தவிர. அடியேனின் புரிதலில் பிழையிருந்தால் க்ஷமிக்கவும்.
திருவஷ்டாக்ஷர ஜபம் என்பது சந்தியாவந்தனத்துடன் சேர்த்து பண்ணுவது தான் அதிகமாகவும் பண்ணலாம். அதனால் தான் பல இடங்களில் குறிப்பாக விசேஷமான சமயங்களில் திருவஷ்டாக்ஷர ஜபம் பண்ணும் வழக்கமுண்டு. ஸ்த்ரீகள் சந்தியாவந்தனத்திற்கு பதிலாகத்தான் திருவஷ்டாக்ஷர ஜபம் பண்ணுகிறார்கள். எப்படி என்பதை முன் சுதர்சன இதழ்களில் இருக்கிறது.
ரிஷிகள் தபஸ் ஜபம் போன்றவை பண்ண திருவஷ்டாக்ஷரம் தவிர வேறு பல மந்திரங்கள் உள்ளது வேத மந்திரங்களே இருக்கிறது. வேத பாராயணத்திற்கே ஜபம் என்று பெயர் உண்டு அதற்கு வேதவாக்யமே இருக்கிறது. ரிஷிகள் எல்லோரும் ஓயாமல் வேத பாராயணம் செய்து செய்து தான் நமக்கு வேதத்தைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். வேதத்திற்கென்று புத்தகம் கிடையாது அவர்களின் ஜபத்தின் மூலமாகதான் ரிக், யஜூர், சாம வேதங்கள் நமக்கு கிட்டியிருக்கிறது. அதாவது காட்டில் அவர்கள் சொல்லிக்கொண்டே போவார்களாம். அப்படிப் பாராயணம் மூலமாகதான் நமக்கு அவர்கள் காப்பாற்றி கொடுத்திருக்கிறார்கள்.
சாதாரணமாக சாளக்கிராம கல் கருப்பு நிறத்தில் இருக்கும். நான் அதற்கு தினமும் திருமஞ்சனம் செய்து வருகிறேன். என் அம்மா சில வருடங்கள் முன்பு வெள்ளைக் கல்லில் சாளக்கிராம கல் என்று சொல்லி, அது தன் தாயாருடைய கல் என்னும் சொல்லிக்கொடுத்தார். அதற்கு திருமஞ்சனம் செய்யக்கூடாது என்றும் கூறியிருந்தார். (இப்பொழுது என் அம்மா உயிருடன் இல்லை.)அதைப்பற்றி எனக்கு அதிகமாக தெரியவில்லை. விளக்கவும்.
வெள்ளைக் கல்லில் சாளக்கிராம மூர்த்தி என்று சொல்லுவதுண்டு சில க்ருஹங்களில் ஏளியிருக்கிறார். திருமஞ்சனம் பண்ணக்கூடாது என்பதற்கு என்ன காரணம் என்று அடியேனுக்கும் தெரியவில்லை. பொதுவாக அவருக்கும் திருமஞ்சனம் செய்யலாம் என்றே தோன்றுகிறது.
உபநயனம் மற்றும் சீமந்தோந்நயனத்தில் முஹூர்த்த காலம் முடியும்வரை போஜனம் கூடாதென்று இருக்கிறது இதன் தாத்பர்யம் என்ன என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
நாந்தி ஶ்ரார்த்தம் என்று உபநயனம் மற்றும் சீமந்தோந்நயனத்திற்கு உள் அங்கமாக ஒன்று உண்டு. அது ஒரு மங்கள கார்யம். நம் பித்ரு பிதாமஹர்களைக் குறித்து தக்ஷிணையாக சில ப்ராமணர்களுக்கு கொடுக்கும் வழக்கம். ஆத்து வாத்யார் பண்ணி வைப்பார்.
இப்படி விசேஷமான நாந்தி ஶ்ரார்த்தம் பண்ணுவதால் அதுவரை போஜனம் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம்.
இன்று இதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் போஜனம் கூடாது என்பதற்கு நிச்சயம் ஒரு அர்த்தமும் காரணமும் உண்டு என்பதை புரிந்துகொள்ளவும்.
அடியேனின் அகத்துக்காரரின் தமக்கை போன வாரம் பஞ்சமி திதி அன்று பரம பதித்து விட்டாள். விவாஹம் ஆகாதவள்.அடியேனுக்கும், அடியேனின் பசங்களுக்கும் எத்தனை நாள் தீட்டு. பெருமாள் விளக்கு ஏற்றுவது, திருவாராதனம் பண்ணுவதெல்லாம் தீட்டு முடிந்த பிற்பாடு தான் ஆரம்பிக்க வேண்டுமா?. அடியேன் அகத்துக்காரரும் 11 மாதங்கள் முன்பு பரம பதித்து விட்டார். அடியேன் விளக்கமாக பதில் எதிர்பார்க்கிறேன்.
கன்யா மரண விஷயத்தில் ஞாதிகளுக்கும் 10 நாள் தீட்டு என்று புத்தகங்களில் காணுகிறோம். ஆனால் கல்யாணமே ஆகாமல் இருக்கும் விஷயத்தில் கன்யா மரணமா என்று சொல்லத் தெரியவில்லை. ஒன்றிரண்டு கேள்விப்படுவதில் பெரியவர்கள் மூன்று நாள் தான் தீட்டு காத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. விவாஹம் ஆகாத ஸ்த்ரீ விஷயத்தில் பர்த்தாவிற்கு மூன்று நாள் தீட்டு ஆகின்றபடியினால், பாரியைக்கும் மூன்று நாள் தீட்டு.
விவாஹம் ஆன ஆண் பிள்ளையாக இருந்தால், அத்தை ஆகின்றபடியால் மூன்று நாள் தீட்டு. விவாஹிதையான பெண் பிள்ளையாக இருந்தால் ஒன்றரை நாள் தீட்டு. அவிவாஹிதையான ஆணுக்கோ, பெண்ணுக்கோ அத்தை போனால் ஸ்நானம் மட்டுந்தான்.
புருஷர்கள் (ஆண்கள்) திருமண் இட்டுக்கொள்ளும்போது ஸ்ரீ சூரணத்திற்குத் தாயார் குங்குமத்தை இட்டுக்கொள்ளலாமா?
மஞ்சள் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்வதுதான் விசேஷம். மஞ்சள் கிடைக்காவிட்டால் ஸ்ரீசூர்ணத்திற்கு பதில், தாயார் குங்குமம் இட்டுக்கொள்ளலாம்.
சாளக்கிராம மூர்த்தி மற்றும் ஆசார்யனின் பாதுகைக்கு மடி ஆசாரமாக திருமஞ்சனம் செய்தல் வேண்டுமா? இல்லாவிட்டால் அபச்சாரம் ஆகும் என்று கேள்விபட்டுள்ளேன். ஒரு ப்ரபந்னன் அப்படி மடி ஆசாரமாக செய்யாவிட்டால் அது அவனது மோக்ஷத்திற்கு தடையாகுமா? அல்லது பெருமாள் சிறு சிக்ஷை மட்டும் கொடுத்து மோக்ஷம் அளிப்பாரா? அடியேனால் மடி ஆசாரம் முழுமையாக கடைபிடிக்க முடியவில்லை என்பதால் இந்த சந்தேகம், இயன்ற அளவு முயற்சிக்கிறேன்.
சாளக்கிராம மூர்த்தி மற்றும் ஆசார்யனின் பாதுகைக்கு மடி ஆசாரமாக திருமஞ்சனம் செய்தல் வேண்டும் இல்லாவிட்டால் அபச்சாரம் ஆகும் என்பது சரிதான். பெருமாளைத் தொட்டு திருமஞ்சனம் செய்வதால் மடி ஆசாரமாக செய்யாவிடில் அது 32 அபச்சாரத்தில் ஒன்றாக ஆகிவிடும். ஆகையால் அதை முடிந்தளவு தவிர்த்தல் வேண்டும்.
அடியேனால் மடி ஆசாரம் முழுமையாக கடைபிடிக்க முடியவில்லை இயன்றளவு முயற்சிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் அதுவே ரொம்ப நல்ல விஷயம் முடிந்தளவு ஆசாரமாக செய்யுங்கள்.
வெளியில் இருந்து பூக்கள் வாங்கும் சமயம் அவர்கள் எந்த அளவு ஆசாரமாக இருக்கின்றார்கள் என்று தெரியாது. பெருமாளுக்கு ஸம்பர்பிக்கும் முன் வெளியில் இருந்து வாங்கிய புஷ்பங்களை சுத்தி செய்ய ஏதேனும் மந்திரம் உண்டா? அல்லது நீர் தெளித்தால் போதுமா?
புஷ்பங்கள் கடையிலிருந்து வாங்குவதைக் காட்டிலும், நாமே ஆத்திலிருந்து எடுத்து ஸமர்பிப்பது விசேஷம் அல்லது நாமாகவே எங்காவது போய் பூ பறித்து வந்து ஸமர்பிப்பதும் விசேஷம்.
கடையில் பைசா கொடுத்து வாங்குவது க்ரயக்ரீதம் என்று பெயர், அது சாதாரனமானது. அப்படி வாங்கினால் “பூ: புவ: ஸ்வ:” என்றோ அல்லது திருவஷ்டாக்ஷர மந்திரம் சொல்லியோ ஜலத்தால் ப்ரோக்ஷணம் பண்ணி எடுத்துக்கொள்ளலாம். ப்ரோக்ஷணம் செய்யும் போது நிறைய ஜலம் சேர்க்கக்கூடாது ஏனென்றால் புஷ்பத்தில் நிறைய ஜலம் சேர்க்கக்கூடாது என்றிருக்கிறது.
அடியேன், ப்ரம்மோத்ஸவத்தின்போது தீர்த்தவாரிக்கு முன் ருத்ரமும், சமகமும் ஏன் சேவிக்கிறார்கள்.
ப்ரம்மோத்ஸவத்தின்போது தீர்த்தவாரிக்கு முன் ருத்ரமும், சமகமும் சேவிப்பது என்று ப்ரத்யேகமாக கணக்கு கிடையாது. அந்தப் பாராயணத்தில் சில சமயம் அது வரும். அதாவது முதல்நாள் முதல் பிரஸ்தவம் ஆரம்பித்து வரும்பொழுது தீர்த்தவாரியில் ருத்ரம் சமகம் என்று வருமாக இருக்கும். அதைத் தவிர அவைகளைச் சொல்ல வேண்டுமென்று எதுவும் விசேஷமாக கிடையாது. ஸ்மார்த்தர்கள் சொல்லுவார்களாக இருக்கும்.
பொதுவாக திருமணத்திற்குப் பிறகு ஸ்த்ரீகள் ஸமாஶ்ரயணம் செய்வது வழக்கில் இருக்கிறது, ஆனால் திருமணத்திற்கு முன்பே ஆசையிருந்தால் ஒரு ஸ்த்ரீ ப்ரந்யாஸம் பண்ணிக்கொள்ளலாமா. மேலும், அப்படி பரந்யாஸம் செய்வித்த ஆசார்யனும் வரப்போகும் மாப்பிள்ளை வீட்டாரின் ஆசார்ய சம்பந்தமும் வெவ்வேறாக இருந்தால் செய்த பரந்யாஸம் பலிக்குமா/ஒத்துக்கொள்ளப்படுமா? அடியேனின் அறியாமைகயை க்ஷமிக்கவும்.
திருமணத்திற்குப் பிறகு ஸ்த்ரீகள் ஸமாஶ்ரயணம் செய்துகொள்ளலாம். திருமணத்திற்கு முன்பே தாராளமாக பரந்யாஸம் பண்ணிக்கொள்ளலாம். திருமணத்திற்குப் பின் ஆசார்ய சம்பந்தம் வேறுபாட்டால் பரவாயில்லை. பரந்யாஸம் பலிக்கும். அதை ஒத்துக்கொள்வார்கள். சாஸ்த்ரம் இல்லை என்பது கிடையாது. திருமணத்திற்கு முன் செய்து கொள்வதில் தவறொன்றும் இல்லை.
பொதுவாக ஒரு பெண்ணிற்குத் திருமணத்திற்குப் பின் அவர்களுடைய ஆசார்ய சம்பந்தம் இருந்தால் நல்லது என்கின்றபடியினாலும், பர்தாவினுடைய ஆசார்யன் பெண்ணிற்கும் இருக்கட்டும் என்பதற்காகவும், வேறு வேறு ஆசார்ய சம்பந்தம் வேண்டாம் என்பதற்காகவும், சங்கடத்தைத் தவிர்ப்பதற்காகவும், நம் வழக்கத்தில் திருமணத்திற்கு முன் பரந்யாஸம் பண்ணிக்கொள்வதில்லை.
பெருமாளுக்குச் சர்க்கரை சேர்த்த பாயசம் அம்சை பண்ணலாமா?
பொதுவாக முன் காலத்தில் பெரியவர்கள் சர்க்கரை எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
இக்காலத்தில் சக்கரையில் தோஷம் இல்லை என்கிறார்கள் அதனால் தற்காலத்தின் படி உபயோகப்படுத்தலாம்.
இந்தக் கலியுகத்தில் பக்தியோகம் சாத்தியப்படாததினால் ப்ரபத்தி ஒன்றே எம்பெருமானை அடையும் மார்கம் என்று புரிகிறது. ஸ்வாமி தேசிகன் “ஆக்ஞா மற்றும் அனுக்ஞா கைங்கர்யம்” பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆக்ஞா கைங்கர்யம் கட்டாயம் என்று எப்படி ஸ்ருதி ஸ்ம்ருதிகள் கூறுகிறதோ அதே போல் ஒரு ஜீவன் ப்ரபத்தி மார்கத்தில் செல்ல ஆக்ஞா கைங்கர்யம் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டுமா? மேலும் பகவான் க்ருஷ்ணன் கீதையில் “கர்ம யோகம்” என்று எதை உரைத்திருக்கிறானோ அவையும் ஆக்ஞா கைங்கர்யமும் (சத்யம் வத, தர்மம் சர,..போன்றவை) ஒன்றா அல்லது வெவ்வேறா?
ஆக்ஞா கைங்கர்யம் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டும். ஆக்ஞா கைங்கர்யத்திற்கும், மோக்ஷம் அடைவதற்கும் பெரிய சம்பந்தம் ஒன்றும் கிடையாது. ஏனென்றால் ஶரணாகதி செய்து கொண்டால் நமக்கு மோக்ஷம் கிடைக்கும். ஆனால் ஆக்ஞா கைங்கர்யம் அனுஷ்டிக்கவிட்டால் பாபம் என்று சொல்லியிருக்கிறது. அந்தப் பாபத்தினுடைய தண்டனைகளை அனுபவிக்க வேண்டி வரும். அதனால் அதனைக் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டும்.
பகவத் கீதையில் கிருஷ்ணன் சொன்ன கர்மயோகமும் ஆக்ஞா கைங்கர்யமம் ஒன்று இல்லை. இவை இரண்டும் வெவ்வேறு. கர்மயோகமாக இருக்கட்டும், ஞானயோகமாக இருக்கட்டும், பக்தியோகமாக இருக்கட்டும் எல்லாவற்றிற்கும் ஆக்ஞா கைங்கர்யம் தனியாக பண்ண வேண்டும். அதாவது நித்யகர்மாநுஷ்டானங்கள் ஆக்ஞா கைங்கர்யம் என்று வைத்து கொள்ளலாம் அது தனியாக கட்டாயம் பண்ணி ஆக வேண்டும்.
அடியேன் இருப்பது ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு. இங்கு ஒரு விநாயகர் கோவில் உருவாக்க குடியிருப்பு வாசிகள் முடிவு எடுத்துள்ளார்கள். அதற்கு எல்லா உரிமையாளர்களும் உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். எங்கள் ஆத்தில் அனைவருக்கும் பரஸமர்ப்பணம் ஆகி விட்டது. பிற கோவில்களுக்கு போவதில்லை. ஆனால் இந்தப் பணிக்கு உதவ வேண்டிய நிர்ப்பந்தம். மறுக்க முடியாது. நிர்மாணம் ஆன பிறகு வேறு எதுவும் செய்ய முடியாது வேண்டியதும் இல்லை.இது குறித்து அறிவுரை வழங்க வேண்டுகிறேன்.
விநாயகர் கோவிலுக்கு நாம் உதவி செய்யலாமா என்று கேட்டால், ஶாஸ்த்ரப்படி செய்யக்கூடாது. நீங்கள் கேள்வியில் குறிப்பிட்டிருப்பது போல் சில சங்கடங்கள் இருக்கின்றன. அதனால் நாம் நமது ஸ்ரீவைஷ்ணவத்துவத்தை குறைத்துக் கொள்ளாமல் , நீங்கள் சொல்லியிருப்பிப்பது போல் உறுதியான எண்ணம் இருக்கின்றபடியினால், அது நமக்கு பாதகமாக இருக்காது என்று தோன்றுகிறது.
பைசாவுடன் போய்விடட்டும் என்று சொல்லி அவர்கள் கேட்பதைக் கொடுத்துவிடலாம். ஶாஸ்த்ரம் இல்லை. வேறு வழி இல்லாமல் கொடுக்கின்றோம். எத்தனையோ கொடுக்கின்றோம். கேபிள் டிவி போன்று தேவையில்லாததற்கு எத்தனையோ செலவு செய்கின்றோம். அந்த மாதிரியாக இதை நினைத்துக்கொள்ள வேண்டும்.
அடியேன் ப்ராமணன் அல்லாத ஸ்ரீவைஷ்ணவன். சந்தியாவந்தனம் செய்வது ஒருவருடைய பாபங்களைப் போக்கும் என்று கேள்வியுற்றுள்ளேன். ஆனால் அடியேனால் சந்தியாவந்தனம் செய்ய இயலாது என்றிருக்க, அடியேன் அறியாது செய்த பாபங்களைப் போக்க ஏதேனும் வழி இருக்கிறதா?
சந்தியாவந்தனம் செய்ய முடியாதவர்களுக்கான நித்யகர்மங்களில் குறிப்பாக பகவான் நாமம் சொல்வது மிகவும் விசேஷம் என்று இருக்கிறது.
அதில் ஒரு முக்கியமான விஷயம் சந்தியாவந்தனம் செய்ய முடியாதவர்கள் நம்மால் செய்ய முடியவில்லையே என்று நினைத்து கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் ஶாஸ்த்ரத்தில் துல்ய பலம் என்று ஒன்று சொல்வார்கள், அதாவது அந்தந்த அதிகாரிகள் அவர்களுக்கு விதித்ததைச் செய்ய வேண்டும்.
அதைச் செய்யும் அதிகாரம் இல்லாவிட்டால் கூட பலனில் எந்தக் குறைவும் கிடையாது, பெருமையிலும் எந்தக் குறைவும் கிடையாது. உதாரணமாக புருஷர்கள் செய்கின்ற அனுஷ்டானங்களை ஸ்த்ரீகள் செய்ய மாட்டார்கள். கோவில்களில் அர்ச்சகர்கள் செய்கின்ற கைங்கர்யத்தை, பர்ஜாரகர்கள் செய்ய மாட்டார்கள். அவரவர்களுக்கு விதித்த அனுஷ்டானத்தை அவரவர்கள் செய்வதே விசேஷம். அதனால் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். பாபங்களைப் போக்கிக்கொள்ள நாமகீர்த்தனம், பெருமாளைச் சேவித்தல் முதலிய எத்தனையோ வழிகள் இருக்கின்றன.
பெருமாளுக்குத் திருவாராதனம் நின்றுகொண்டு அல்லது அமர்ந்துகொண்டு செய்ய வேண்டுமா?
பெருமாள் திருவாராதனம் நமது ஆஹ்நிக க்ரந்தங்களின்படி, பூத சுத்தி முதலானவை எல்லாம் மானச யாகம் வரை அமர்ந்துகொண்டு செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பின் தொடர்ந்து பாஹ்ய யாகம் என்று சொல்வார்கள், அதாவது பெருமாளுக்கு வெளியில் ஸமர்ப்பிக்க கூடிய அர்க்யம், பாத்யம் முதலானவைகளை நின்றுகொண்டு செய்ய வேண்டும்.
அடியேனுக்கு ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் செய்துகொள்ள ஆசை. ஆனால் அகத்தில் இருப்பவர்கள் ஏதோ காரணங்கள் கூறி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள். என் இருபது வயது மகளுக்கு அதன் முக்கியத்வத்தை கற்றுக்கொடுக்க முடியவில்லை ஏனென்றால் ஆத்தில் இருக்கும் பெரிய்வர்கள், என் அகத்துக்காரார் என அனைவரும் இந்த சம்ஸ்காரங்கள் முக்கியம் இல்லை என்று கூறுகிறார்கள். எங்கள் ஆசார்யன் இருக்கும் இடம் வெகு தொலைவில் இருப்பதால் அதையே பல முறை காரணம் காட்டி ஆசார்யன் தரிசனம் பெறவும் தடுக்கின்றனர். என் மகளாவது இந்த ஸம்ப்ரதாயத்தில் வர ஆசை கொண்டுள்ளேன். மாற்றம் ஏற்பட ஏதேனும் வழியுண்டா?
பரந்யாஸம் செய்துகொள்ள முடியாமல் ப்ரச்சனைகள் இருந்து வந்தால், ஸ்வாமி தேஶிகனுடைய ந்யாஸதஶகத்தை நித்ய அனுசந்தானம் பண்ணிக் கொண்டிருந்தால் பெருமாளே உங்களுக்கு வழி காட்டுவார்.
அடைக்கலப்பத்து சேவித்து கொண்டு இருக்கலாம். ஆசார்ய சம்பந்தம் , ஆசார்ய அனுக்ரஹம், பெருமாளுடைய அனுக்ரஹம் கட்டாயம் கிடைக்கும். அவரே வழி காட்டி, அவரே பரந்யாஸம் பண்ணி வைப்பார்.
எப்போதெல்லாம் அஷ்டாக்ஷரம் சொல்ல வேண்டும் உ.தா ஆசார்யன் தனியன் சேவிக்கும் சமயமா அல்லது சந்தியாவந்தனம் சமயமா? எத்தனை முறை ஜபிக்க வேண்டும்?? அதன் ப்ரபாவம் மற்றும் பலன், வித்வான்களின் திருவாக்கினால் அறியப்பெற்றேன் ஆனால் எப்பொது, எப்படி, எத்தனை முறை சொல்ல வேண்டும் என்ற தெளிவு மட்டும் இல்லை.
சந்த்யாவந்தனத்தில் மூன்று வேளையும் அஷ்டாக்ஷர ஜபம் பண்ண வேண்டும் என்று இருக்கின்றது. அதைத் தவிர தனியாகச் செய்ய வேண்டும் என்கின்ற அவசியமில்லை. சந்த்யாவந்தனத்துடன் சேர்த்து செய்தாலே போதும். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை ஆஹ்நிக க்ரந்தங்களிலிருந்தோ அல்லது ஆசார்யனிடம் கேட்டோ தெரிந்துகொள்ளலாம்.
துவாதசி அன்று உப்பு போடாமல் உட்கொள்ளும் பாரணையை பல்லில் படாமல் சாப்பிடவேண்டுமா? 3 கவளம் சாப்பிடனும் என்று சிறுவயதில் கேட்ட ஞாபகம் ஆனால் தெளிவாக தெரியவில்லை தெளிவிக்க வேண்டுகிறேன்.
பாரணை என்றால் அகத்திக்கீரை, சுண்டைக்காய் உப்பில்லாமல் இருக்க கூடியது. துவாதசியன்று பாரணையை பல்லில் படாமல் சாப்பிட வேண்டும் என்று கணக்கு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. அதே போல் மூன்று கவளம் என்று பெரிதாக நியமங்கள் கிடையாது. ஆகாரத்திற்கு முன் அதைச் சாப்பிட வேண்டும் என்பது மட்டும் தான் முக்கியம். சாப்பிட வேண்டும் என்பதற்காக சில பேர் ஒரே ஒரு இலையை மட்டும் சாப்பிட்டு விட்டுவிடுவார்கள். அப்படி இல்லாமல் நன்றாக சாப்பிட வேண்டும் என்கின்ற ரீதியில் மூன்று கவளம் என்று சொல்லியிருக்கலாம். மற்றபடி மூன்று கவளம் என்று கணக்கு எதுவும் கிடையாது.
ஏகாதசி அன்று பெருமாளுக்கு அன்னத்தை நிவேதனம் பண்ணலாமா? நித்யமுமே பெருமாளுக்குப் பால் அல்லது பழங்கள் மட்டும் அம்சை பண்ணலாமா?
ஏகாதசியன்று அன்னத்தை பெருமாளுக்கு தாராளமாக நிவேதனம் பண்ணலாம். ஆனால் அதை நாம் சாப்பிட முடியாது. நாம் சாப்பிடாத ஒன்றை பெருமாளுக்கு ஸமர்ப்பணம் பண்ண வேண்டும் என்று பெருமாளும் கேட்கவில்லை. நமக்கு என்னவோ அதுவே பெருமாளுக்கு, அவனுக்கு என்னவோ அதுவே நமக்கு. அதனால் ஏகாதசி அன்று அன்னத்தை நிவேதனம் பண்ண வேண்டிய அவசியமில்லை. கோவில்களில் சுத்த அன்னம் என்று விசேஷமாக பண்ணுவார்கள். கோவில்களில் அது பண்ணாமல் இருக்க கூடாது. ஆனால் நாம் அதைச் சாப்பிடக்கூடாது என்ற கணக்கு இருக்கின்றது.
நித்யமுமே ப்ரசாதம் நிவேதனம் பண்ண வேண்டும். அது முடியாத நாட்களில் பால் பழங்கள் அம்சை பண்ணலாம்.
குறிப்புகள்:
நித்யமுமே பால் பழங்கள் அம்சை பண்ணலாம். இவை மட்டுமே போதுமா என்றால் அது மட்டும் போறாது. ப்ரசாதம் ரொம்ப முக்கியம். சுத்த அன்னம் என்று பெயர். பால் பழமோடு சேர்த்து அம்சை பண்ண வேண்டும். ப்ரசாதம் பண்ண முடியாத பொழுது பால் பழமோ அல்லது தயிர் பழமோ மட்டும் பண்ணலாம் என்று வைத்து கொள்ளலாம்.
அமாவாஸை தினத்தன்று தர்ப்பணம் செய்யும் சமயம் அடுப்பு மேடை (GasStove) மற்றும் தரையை சுத்தம் செய்தபின் கோலம் போடலாமா?
அமாவாஸை தினத்தன்று தர்ப்பணம் செய்யும் சமயம் அடுப்பு மேடை மற்றும் தரையைச் சுத்தம் செய்தபின் கோலம் போடுகின்ற வழக்கம் பல க்ருஹங்களில் இருக்கின்றது.
என் தகப்பனார் ஜூன்2021 அன்று பரமபதித்துவிட்டார். வரும் ஜூன் ஒன்றாம் தேதி அவருக்கு வர்ஷாப்தீகம் வருகிறது. அம்மா என்னுடன் இருக்கிறாள்.
a. கயா ஶ்ரார்த்தம் எப்போது செய்தல் வேண்டும்? அதன் மகத்துவம் என்ன?
b. அக்ஷய வடம் என்றால் என்ன?
c. இராமமேஸ்வரம் சேது ஸ்நானமும் கயா ஶ்ரார்த்தத்துடன் செய்ய வேண்டுமா?
d. இவை அனைத்தும் செய்த பின் தான் க்ஷேத்ராடனம் செல்ல வேண்டுமா?
e. எனது தாயாருக்கு உடம்பு ரீதியான பிரச்சனைகள் இருப்பதால் கயா போன்ற ஸ்தலத்திற்கு அவரால் வர இயலாது. அடியேனும் என் மனைவியும் மட்டும் சென்று கயா ஶ்ரார்த்தம் சேது ஸ்நானம் செய்யலாமா?
வருஷாப்தீகம் முடிந்தபின் தான் கயா ஶ்ரார்த்தம் பண்ணவேண்டும். கயா ஶ்ராத்தம் பற்றி ஸ்ரீமத் இராமாயணத்திலே குறிப்பு இருக்கிறது "ஏஷ்ட வ்யா பஹவா புத்ரா: யத் ஏகோபி கயாம் வ்ரஜேத்" என்று. அதாவது பல புத்திரர்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் யாராவது ஒருத்தராவது கயா ஶ்ரார்த்தம் பண்ண மாட்டார்களா என்பதற்காக. ஆக கயா ஶ்ராத்தம் மிகவும் முக்கியமானது.
அக்ஷய வடம் என்பது அங்கு இருக்கும் புண்ணிய ஸ்தலம்
பொதுவாக வடதேச யாத்திரை போய்விட்டு வந்தால் தெற்கே ஒரு யாத்திரை போவது என்ற ஒரு வழக்கம் இருக்கிறது. நம் ஸம்ப்ரதாயத்தில் இராமேஶ்வரம் போகும் வழக்கில்லை, சேது ஸ்நானம் பண்ணுவது தான் இருக்கிறது. தனுஷ்கோடி போய் சேது ஸ்நானம் பண்ணும் வழக்கம் உண்டு அது அவசியம் பண்ண வேண்டும்.
இவை அனைத்தும் பண்ணிவிட்டு தான் க்ஷேத்ராடனம் போக வேண்டும் என்ற அவசியமில்லை.வருஷாப்தீகம் ஆன பின் க்ஷேத்ராடனம் போகலாம்.
தாயாரால் வர முடியாவிட்டாலும் பரவாயில்லை பிள்ளை போய் பண்ணிவிட்டு வரலாம்.
எவர்சில்வர் பாத்திரத்தில் பெருமாளுக்குத் தளிகை அம்சை செய்யலாமா? பொதுவாக எந்த மாதிரியான பாத்திரத்தில் அம்சை செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.
பொதுவாக இரும்பு பாத்திரத்தில் அமுது செய்விக்கக்கூடாது என்று இருக்கிறது. ஆகையால் இரும்பில் பண்ணுவதாக இருந்தால் அதை வேறு பாத்திரத்தில் மாற்றி தான் அம்சை பண்ண வேண்டும்.
மேலும், எவர்சில்வரும் ஒரு இரும்பு பாத்திரமாகிறபடியால் அதில் நேரே அம்சை பண்ணுவது உசிதமாக இருக்காது. அதை வேறு பாத்திரத்தில் மாற்றி அமுது செய்விக்க வேண்டும்.வெங்கலம், வெள்ளி, பித்தளை, மற்றும் ஈயம் பூசப்பட்ட பாத்திரங்களில் அம்சை பண்ணலாம்.
முக்கியமாக, பெருமாளுக்கு அம்சை பண்ணும் பாத்திரம் நாம் உபயோகப்படுத்தும் பாத்திரமாக இருத்தல் கூடாது. உள் பாத்திரம் என்று சொல்வார்கள் அது நம் உபயோகத்திற்கு வராது.
மறுமணம் என்பது சரியா தவறா? ஶாஸ்த்ரம் என்ன கூறுகிறது?
ஒரு பெண்ணுக்கு மறுமணம் என்பது கூடவே கூடாது என்று ஶாஸ்த்ரம் சொல்லுகிறது.
ஒரு ஆணுக்கு தர்மாநுஷ்டானம் பண்ணுவது முக்கியம் என்கிறபடியால், விவாஹம் இல்லாவிட்டால் தர்மாநுஷ்டானங்கள் பண்ண இயலாது என்பதினால் மறுமணம் செய்துக்கொள்ளலாம் என்று இருக்கிறது.
இதர சன்யாசிகள் நம் க்ருஹத்திற்கு அருகில் வந்தால் என்ன செய்ய வேண்டும்(அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கின்றோம்).
இதர சன்யாசிகள் அதாவது ஸ்ரீவைஷ்ணவர் அல்லாத சன்யாசிகள் நம் க்ருஹத்திற்கு அருகில் வந்தால் ஒன்றும் பண்ணாமல் இருப்பதே நல்லது.
அவர்களைப் பார்க்கபோகாமல் இருப்பதே நல்லது. நமக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது அதனால் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
அப்படிப் பார்க்க நேர்ந்தால் கூட பெரிய அளவில் ப்ரணாமங்கள் பண்ணாமல் இருப்பது நல்லது.
ஸ்ரீராமநவமி அன்று ஏகாதசி போல் அனுஷ்டித்து அடுத்தநாள் துவாதசி தளிகை பண்ணனுமா, ஸ்ரீராமநவமி அன்று பெருமாள் திருவாரதனத்திற்கு என்ன தளிகை ஸமர்பிக்கணும்.
ஸ்ரீராமநவமியன்று ஏகாதசி போல் அனுஷ்டித்து, அடுத்தநாள் துவாதசி தளிகை பண்ணுவது என இரண்டு ஸம்ப்ரதாயம் இருக்கிறது.
முனித்ரய ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீராமநவமியன்று ஏகாதசி போல் வ்ரதம் இருந்து மறுநாள் துவாதசி போல் பாரணை பண்ண வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. ஸ்ரீராமநவமியன்று வ்ரதம் அனுஷ்டிக்கின்றபடியால் சாதம் ஸமர்பிக்க முடியாது. ஆகையால் அன்று பெருமாள் திருவாரதனத்திற்கு, ஆத்தில் வ்ரதத்திற்கு என்ன சாப்பிடுவேமோ (பழங்கள் போன்றவை) அதை ஸமர்பிக்கலாம். மேலும், அன்று விசேஷமாக ஸ்ரீராமநவமிக்கு வடபருப்பு, பானகம் ஸமர்பிக்கும் வழக்கம் உண்டு. மறுநாள் துவாதசி போல் பாரணை தளிகை, அதில் பருப்பு திருக்கண்ணமுது என விசேஷமாக பண்ணி பெருமாளுக்கு அம்சை பண்ண வேண்டும்.
ஸ்ரீ ஸந்நிதி (அஹோபில மடம்) ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீராமநவமியன்றே பாரணை என்பது வழக்கம். அதாவது பெருமாள் திருவாராதனை எல்லாம் முடித்த பின்பு, மத்யானத்தில் பாரணை. ஆகையால் ஸ்ரீராமநவமியன்றே பாரணை போல் தளிகை பண்ணி, பருப்பு திருக்கண்ணமுது, வடபருப்பு, பானகம் என எல்லாம் விசேஷமாக ஸமர்பிக்க வேண்டும்.
என்னுடைய பெரியம்மா (என் பெரியப்பாவின் பத்னீ) ஆசார்யன் திருவடி தசமியன்று அடைந்துவிட்டார். அடுத்தநாள் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்கலாமா? சில மாதங்களாகவே நிர்ஜலமாய் வ்ரதம் அனுஷ்டித்து வருகிறேன்.
எந்தத் தீட்டாக இருந்தாலும் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும் அதில் மாறுதலே கிடையாது.
ஆசார்யனின் திருவத்யயன தினத்தன்று என்னென்ன அனுஷ்டானங்கள் கடைபிடிக்க வேணடும்? அவரின் திருநக்ஷத்ர தினம் போல் இதற்கும் நியமங்கள் இருக்கின்றதா என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
ஆசார்யன் திருநக்ஷத்ரதினம் போல் திருவத்யயன தினமும் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டும் என்று ஸ்ம்ருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. திருவத்யயனத்தை ஶ்ராத்தம் மாதிரியே ஒரு சிஷ்யன் பண்ணலாம். அது முடியாத போது அன்றைக்கு விசேஷமாக பெருமாள் திருவாராதனம் செய்து, ஆசார்யன் சம்பாவனை செய்து, ஆசார்யன் ஸ்ரீபாத தீர்த்தம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
GSPK குழுமத்தில் எப்படி இணைவது?
உங்கள் கைபேசியில் Telegram appஐ பதிவிறக்கம் செய்தபின் கீழே உள்ள இரண்டு Telegram groupல் சேரவும்.
https://t.me/dgspk
https://t.me/gspkstotras
மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள இணையதளத்தைக் காணவும்.
www.sampradayamanjari.org