நான் பர்த்தா (கணவர்) இல்லாதவள். நெற்றியில் ஸ்ரீ சூர்ணம் எந்த அளவு நீளமாக இட்டுக் கொள்ளலாம்? கீழே திருமண் (வி) போல் இட்டுக் கொள்ளலாமா?
கைம்பெண்கள் பொதுவாக மஞ்சள் நிறத்தில் ஶ்ரீ சூர்ணத்தை முக்கால் நெற்றிக்கு இட்டுக்கொள்வார்கள். கீழே U அல்லது V போலே அவரவர் அகத்து வழக்கப்படி இட்டுக்கொள்ளவும். (கேள்விகளும் – பதில்களும்)
ஸ்வாமி தேஶிகன் ஸ்தோத்திரங்களைச் சத்தமாக சேவிக்கலாமா? அல்லது மனதுக்குள் யார் காதிலுமே கேட்காதவாறு சேவிக்க வேண்டுமா?
ஸ்வாமி தேஶிகன் ஸ்தோத்ரங்களைச் சத்தமாக சேவிக்கமுடிந்தால், சத்தமாக சேவிக்காலாம். இல்லாவிட்டால் மனதிற்குள்ளே சேவிக்கலாம். அவரவர்கள் சௌகர்யப்படிச் செய்யலாம்.
ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் prapatti.com இணையதளத்தின்படி “வாஸநாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் தே ஜகத்ரயம்” என்ற பாடம் உள்ளது. ஆனால் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடியதில் “வாஸநாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் புவநத்ரயம்” என்று உள்ளது. ஒரு காலக்ஷேபத்தில், “வாஸநாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் தே ஜகத்ரயம்” என்ற பாடத்தையே நாம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்க நேர்ந்தது. அப்படியென்றால், எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கேட்பது ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உகந்தது அல்லவா? ஒரு ப்ரபந்நனாக அடியேன் இத்தனை வருடங்களாக எங்கள் இல்லத்தில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்சுமி அவர்களின் பதிப்பையே கேட்டு வருகிறேன். இதில் ஏதேனும் தவறு உள்ளதா? அகத்தில் பெரும்பாலோனோர் எம்.எஸ் .சுப்புலக்ஷ்மி பாடியதையே கேட்க விரும்புகின்றனர்.
ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “வாஸநாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் தே ஜகத்ரயம்” என்பது ஶ்ரீ வைஷ்ணவ பாடமாக இருக்கிறது. ஆகவே நம் ஆசார்யர்கள், பெரியோர்கள் ஆதரித்த அந்தப் பாடத்தையே சொல்லுவோம். நம் ஸம்ப்ரதாயத்தில் வராதவர்கள், நம் ஆசார்ய அனுக்ரஹத்துடன் இல்லாதவர்கள் சொல்வதைப் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை. ஸம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் தங்கள் சந்தேகங்களை, கீழே உள்ள Formல் பதிவுசெய்து அனுப்பினால் வரும் மாதங்களில் GSPKயின் வித்வான்கள் பதிலளிப்பர். இங்கே உள்ள QR Codeஐ Scan செய்தும் ASK IN SUDARSANAM Formல் கேள்விகளை பதியலாம். முந்தைய இதழ்களில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளும் அதன் விடைகளையும் அறிய மேலும் தங்களின் கேள்விகளின் விடையை அறிய, கீழே உள்ள “ஸுதர்ஶநம்” (sudarsanam) என்ற Telegram Channelல் இணையவும். சம்ப்ரதாய விஷயத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள எங்களின் இதர Telegram Channelகளில் சேர்ந்து பயன்பெறவும். தாஸன் Dhanyavada: Please subscribe to our channels by clicking the logos!
ஒரு வடகலை பாகவதர் முமுக்ஷுப்படி காலக்ஷேபம் கேட்கலாமா? இந்த அந்வயத்தில் ஏதேனும் தவறு உள்ளதா? அடியேன் முமுக்ஷுப்படி காலக்ஷேபம் கேட்டு வருகிறேன், தற்போது துவயம் வரை முடிந்துள்ளது. அதே நேரத்தில் ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய சார காலக்ஷேபமும் கேட்டு வருகிறேன். இருந்தாலும், அடியேன் முமுக்ஷுப்படியைத் தொடர்ந்து கேட்கலாமா என்பதை அறிய விரும்புகிறேன்.
இரண்டு ஸம்ப்ரதாய க்ரந்தங்களையும் சேவித்தால் குழம்பிப் போவதற்கு வாய்ப்புள்ளது. ஆகையால் அவரவர் ஸம்ப்ரதாய க்ரந்தங்களைச் சேவித்தாலே போதுமானது என்று தோன்றுகிறது. முந்தைய சுதர்சன கேள்விகளும் பதில்களும்
ஸ்த்ரீகளுக்கான ஆஜ்ஞா கைங்கர்யம் என்னென்ன என்று விளக்க வேண்டுகிறேன்.
ஸமாஶ்ரயணம் ஆகியிருந்தால் ஆசார்யன் உபதேசித்த மந்தரத்தை ஜபிப்பது. எம்பெருமான் திருவாராதன கைங்கர்யத்திற்காக அனைத்தையும் பண்ணவேண்டும். பெருமாள் மேடையைச் சுத்தம் செய்து கோலம் போடுவது, பெருமாள் பாத்திரம் சுத்தம் செய்வது. எம்பெருமானுக்குத் தளிகை பண்ணுவது. அகத்துக்காரருக்கு, குழந்தைகளுக்கு ஆகாரம் கொடுப்பது, மேலும் அகத்துப் பெரியவர்களுக்கு ஆகாரம் கொடுத்து அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து கொடுப்பது, அகத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது, குழந்தைகளுக்கு ஸத்விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பது , அகத்துக்காரருக்கு வேண்டியவற்றை செய்து உறுதுணையாக இருப்பது என்பதெல்லாம் ஸ்த்ரீகளுக்கு உண்டான ஆஜ்ஞா கைங்கர்யங்களாகும். ஏகாதசி விரதம் இருப்பதும் அதன் அங்கமாக தலைக்குத் தீர்த்தமாடுதலும் ஆஜ்ஞா கைங்கர்யம். ஜீவ பித்ருகள் இல்லையென்றால் அமாவாஸ்யை, மாசப்பிறப்பு, ஶ்ராத்தம் போன்ற நாட்களில் தலைக்குத் தீர்த்தமாடுதலும் அன்றையதினத்திற்கேற்றால் போல் தளிகை பண்ணுவதும் ஸ்த்ரீகளுக்கான ஆஜ்ஞா கைங்கர்யமாகும். ரஜஸ்வலை காலத்தில் தள்ளியிருப்பது. நான்காம் நாள் தலைக்குத் தீர்த்தமாடுதலும் மற்றும் ஐந்தாம் நாள் அந்யாதீட்டு குளித்தலும் விதித்த ஒன்று. மேலும் நான்காம் நாள் பெருமாள் சந்நிதியில் விளக்கேற்றுதல் நிஷித்தம். இவையெல்லாம் விதிமட்டுமல்ல பின்பற்றாவிட்டால் பாபம் என்பதால் இதுவும் ஸ்த்ரீகளுக்கான ஆஜ்ஞா கைங்கர்யமாகும். (கேள்விகளும் – பதில்களும்)
மகா விஷ்ணுவின் அம்சமாக நவகிரகங்களின் அவதாரப் பெயர்கள் எவை?
சூர்யனுக்கு இராமாவதாரம், சந்திரனுக்கு க்ருஷ்ணாவதாரம், செவ்வாய் க்ரஹத்திற்கு ந்ருஸிம்ஹன், புதனுக்குக் கல்கி, வியாழனுக்கு (குரு) வாமனன், சுக்ரனுக்குப் பரசுராமன், சனிக்குக் கூர்மாவதாரம், ராகுவிற்கு வராஹ அவதாரம், கேதுவிற்கு மத்ஸ்யாவதாரம் என்று அந்தந்த க்ரஹங்களுக்கு அதிதேவதையாக இந்த அவதாரமூர்திகள். கீழேயிருக்கும் ஶ்லோகம் மூலம் அறியலாம். रामावतारः सूर्यस्य चन्द्रस्य यदुनन्दनः| नृसिंहो भूमिपुत्रस्य सौम्यः सोमसुतस्य च || वामनो विबुधेन्द्रस्य भार्गवो भार्गवस्य च | कूर्मो भास्करपुत्रस्य सैंहिकेयस्य सूकरः केतोर्मीनावतारश्च ॥ ராமாவதார: ஸூர்யஸ்ய சந்த்₃ரஸ்ய யது₃நந்த₃ந:| ந்ருஸிம்ஹோ பூ₄மிபுத்ரஸ்ய ஸௌம்ய: ஸோமஸுதஸ்ய ச || வாமநோ விபு₃தே₄ந்த்₃ரஸ்ய பா₄ர்க₃வோ பா₄ர்க₃வஸ்ய ச | கூர்மோ பா₄ஸ்கரபுத்ரஸ்ய ஸைம்ஹிகேயஸ்ய ஸூகர:- - கேதோர்மீநாவதாரஶ்ச ॥ முக்கிய குறிப்புகள்: நவதிருப்பதியில் இருக்கும் ஒவ்வொரு திவ்யதேச எம்பெருமாளை சேவிக்க ஒவ்வொரு க்ரஹதோஷம் போகும் என்று ஒரு ஐதிகமும் இருக்கிறது. இதை ஸ்தலபுராணமும் கூறுகிறது. திருக்குருகூர் – குரு தோஷம் நீங்க இரட்டை திருப்பதி – திருத்தொலைவில்லி மங்கலம் – ராகு கேது தோஷம் நீங்க திருப்புளிங்குடி – புதன் தோஷம் நீங்க தெந்திருப்பேரை – சுக்ர தோஷம் நீங்க ஶ்ரீவைகுண்டம் – சூர்ய தோஷம் நீங்க திருவரகுணமங்கை – சந்திர தோஷம் நீங்க திருக்குளந்தை – சனி தோஷம் நீங்க திருக்கோளூர் – மங்கள க்ரஹ(செவ்வாய்) தோஷம் நீங்க
சந்தான ப்ராப்திக்காக பாராயணம் செய்யக்கூடிய ஸ்தோத்திரம் அல்லது பிரபந்தம் ஏதேனும் உள்ளதா? ஜோதிடர்கள் சனி மற்றும் குரு தோஷம் உள்ளதாகவும் அவர்களுக்கு ப்ரீத்தி செய்யவும் பரிந்துரைக்கிறார்கள்.
- வாரணமாயிரம் சேவிக்கலாம் . அதன் பலஶ்ருதியிலேயே “வாழும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே” என்று இருக்கிறது. - பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து பத்தாம் திருமொழி “வட்டநடுவே” பதிகத்தில் “எங்குட்டன்வந்துஎன்னைபுறம்புகுல்வான்” என்று ஆழ்வார் கூறியிருக்கிறார். இதைச் சேவிக்க நமக்கும் இவ்வனுபவம் வாய்க்கப்பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்விரண்டு பதிகங்களைச் சேவித்து பலனடைந்தவர்கள் பலர். பெரியவர்கள் அனுஷ்டானத்திலும் இருக்கிறது. தனிப்பட்ட விதமாக சனி-குரு ப்ரீத்தி என்று எதுவும் செய்யவேண்டிய அவசியமில்லை. தயாஶதகம் சேவித்தாலே போதுமானது, மேலும் பாதுகா ஸஹஸ்ரம் காஞ்சன பத்ததியில் வரும் இந்த ஶ்லோகம் சேவித்தாலே அனைத்து க்ரக தோஷங்களும் நீங்கும். கநகருசிரா காவ்யாக்₂யாதா ஶநைஶ்சரணோசிதா ஶ்ரிதகு₃ருபு₃தா₄ பா₄ஸ்வத்₃ரூபா த்₃விஜாதி₄பஸேவிதா । விஹிதவிப₄வா நித்யம் விஷ்ணோ: பதே₃ மணிபாது₃கே ! த்வமஸி மஹதீ விஶ்வேஷாம் ந: ஶுபா₄ க்₃ரஹமண்ட₃லீ ॥ (749) மேலும், சந்தான ப்ராப்திக்கு ஸ்வாமி தேஶிகனின் கோபால விம்ஶதியும், க்ரக தோஷங்கள் நீங்க ஸ்வாமி தேஶிகனின் தஶாவதார ஸ்தோத்ரமும் சேவிக்கலாம். குருவிற்கு வாமனவதார ஸ்தோத்ரமும்,சனிக்குக் கூர்மாவதார ஸ்தோத்ரமும் சேவிக்கலாம். ஸம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் தங்கள் சந்தேகங்களை, கீழே உள்ள Formல் பதிவுசெய்து அனுப்பினால் வரும் மாதங்களில் GSPKயின் வித்வான்கள் பதிலளிப்பர். இங்கே உள்ள QR Codeஐ Scan செய்தும் ASK IN SUDARSANAM Formல் கேள்விகளை பதியலாம். முந்தைய இதழ்களில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளும் அதன் விடைகளையும் அறிய மேலும் தங்களின் கேள்விகளின் விடையை அறிய, கீழே உள்ள “ஸுதர்ஶநம்” (sudarsanam) என்ற Telegram Channelல் இணையவும். சம்ப்ரதாய விஷயத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள எங்களின் இதர Telegram Channelகளில் சேர்ந்து பயன்பெறவும். தாஸன் Dhanyavada: Please subscribe to our channels by clicking the logos!
ப்ரபன்னன், தான் செய்யும் கைங்கர்யம் மோக்ஷத்திற்காக என்று எண்ணம் கொண்டு செய்தானேயாகில் அது மீண்டும் ப்ரபத்தி செய்வது போல் ஆகுமா? ப்ரபன்னன் எப்படிப்பட்ட எண்ணங்களோடு கைங்கர்யம் செய்ய வேண்டும்?
மோக்ஷத்திற்காக ஶரணாகதி மட்டுமே. பகவத் ப்ரீத்திக்காகதான் கைங்கர்யம். பகவத் ப்ரீத்யர்த்தம் என்ற எண்ணத்தோடு கைங்கர்யம் செய்யவேண்டும்.
(கேள்விகளும் – பதில்களும்)
_____
(கேள்விகளும் – பதில்களும்)
அடியேன் ஸ்ரீமத் அஹோபில மடத்தைச் சார்ந்த வடகலை ஸ்ரீவைஷ்ணவன். வடகலை ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்காக ஸ்ரீ மூன்றாம் பரகால சுவாமிகள் அருளிய வாழி திருநாமத்தைப் பற்றி அடியேன் அறிந்து கொண்டேன். ஆனால், அடியேன் பின்பற்றும் அஹோபில மடத்து குருபரம்பரை, மற்ற வடகலை ஸம்ப்ரதாயங்களான (பரகால மடம், ஆண்டவன் ஆஸ்ரமம்) போன்றவற்றிலிருந்து மாறுபட்டது. அஹோபில மடத்து குருபரம்பரை, எம்பெருமானார் ராமானுஜருக்குப் பின் ஸ்ரீ எம்பார், ஸ்ரீ பராசர பட்டர், ஸ்ரீ நஞ்சீயர், ஸ்ரீ நம்பிள்ளை, ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை என்று தென்னாச்சார்ய குருபரம்பரையை ஒட்டிச் செல்கிறது. எனது சந்தேகம் என்னவென்றால், அனைத்து வடகலை ஸ்ரீவைஷ்ணவர்களும் இந்த வாழி திருநாமத்தைச் சொல்லலாமா அல்லது அஹோபில மடத்து சிஷ்யர்கள் தென்னாச்சார்ய வாழி திருநாமத்தையே பின்பற்ற வேண்டுமா?
அவரவர்கள் ஸம்ப்ரதாய வாழித்திருநாமத்தைச் சொல்வது நல்லது. மற்ற ஸம்ப்ரதாய வாழித்திருநாமத்தைச் சொல்லக்கூடாது என்பதெல்லாம் கிடையாது. எதுவேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவரவர் ஸம்ப்ரதாயத்தையொட்டி இருக்கும் வாழித்திருநாமத்தைச் சொல்ல வேண்டும்.
தென்னாச்சார்ய வாழித்திருநாமம் என்று ஒன்று தனியாகக் கிடையாது. அவர்கள் மணவாளமாமுனிகளுடையதைதான் சொல்லுகிறார்கள். அது ஶ்ரீமத் அஹோபில மடத்தில் சொல்லுவதில்லை. தென்னாச்சார்ய ஸம்ப்ரதாயத்திலேயே நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை போன்றவர்களின் வாழித்திருநாமங்களை அவர்கள் சொல்வதில்லை. ஶ்ரீமத் அஹோபில மடத்தில் சொல்லுவது தென்னாச்சார்ய வாழித்திருநாமம் கிடையாது அது நம் ஆசார்யர் வாழித்திருநாமம்தான். இவர்கள் பொதுவான ஆசார்யர்கள் ஆகையால் தாராளமாகச் சொல்லலாம்.
I (Adiyen) have a sister who plans to reside in a Divya Desam for one year. Can she recite the Divya Prabandham before the deity in her home? Please clarify.
Yes, one can recite the Divya Prabandham before the household Perumal.
I belong to the Sama Veda tradition. We are currently learning the Rudram and Chamakam. Since I have undergone Bharanyasam, can I learn Rudram and Chamakam? Furthermore, can I learn other parts of the Vedas? What is the importance for Sri Vaishnavas to know these, and what mindset should we maintain while learning them?
One can learn the Rudram and Chamakam. It is sufficient to maintain the general thought that Perumal exists as the Inner Dweller (Antaryami) of Lord Shiva.
The significance for Sri Vaishnavas in knowing these lies is simply in the fact that they are portions of Vedic mantras.
அமாவாசை, பௌர்ணமி மற்றும் ப்ரதமை திதிகளில் ஏன் திவ்ய பிரபந்த சந்தை சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை?
அமாவாசை, பௌர்ணமி மற்றும் ப்ரதமை போன்ற திதிகள் அனத்யயனகாலமானபடியால் சந்தை சொல்லுவதில்லை.
அடியேன், எனது சகோதரி ஒரு வருட காலம் ஒரு திவ்ய தேசத்தில் தங்கி வசிக்கத் திட்டமிட்டுள்ளார். அவர் தனது வீட்டில் பெருமாளுக்கு திவ்ய ப்ரபந்தம் சேவிக்கலாமா? தேவரீர் தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.
அகத்துப்பெருமாளுக்கு திவ்ய ப்ரபந்தம் சேவிக்கலாம்.
அடியேன் ஸாம வேதத்தைச் சேர்ந்தவன். நாங்கள் இப்போது ருத்ரம் மற்றும் சமகம் கற்று வருகிறோம். அடியேனுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டபடியால் அடியேன் ருத்ரம் , சமகம் கற்றுக்கொள்ளலாமா? மேலும், வேதத்தின் பிற பகுதிகளையும் கற்க முடியுமா? ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவற்றைத் தெரிந்துகொள்வதன் முக்கியத்துவம் என்ன? இதைக் கற்கும்போது நாம் எத்தகைய சிந்தனையுடன் இருக்க வேண்டும்?
ருத்ரம், சமகம் கற்றுக்கொள்ளலாம். சிவனுக்கு அந்தர்யாமியாகப் பெருமாள் இருக்கிறார் என்ற சிந்தை பொதுவாக இருந்தால் போதுமானது. ஶ்ரீவைஷ்ணவர்கள் இதைத் தெரிந்துகொள்வதன் முக்யத்வம் என்பது இது வேத மந்த்ரத்தின் பகுதி என்பது மட்டும்தான்
ப்ரணதார்த்திஹரன்’ இதை எப்படி அழகான தமிழ்ப் பெயராக அழைக்கலாம்? உதாரணமாக ‘புண்டரீகாக்ஷன்’ என்பதை ‘செந்தாமரைக்கண்ணன்’ என்றும், ‘தாஸ ஸத்யன்’ என்பதை ‘அடியார்க்கு மெய்யன்’ என்றும் சொல்வது போல இதற்கு என்ன பெயர்?
ப்ரணதார்த்திஹரன் என்பதை தான் ஆழ்வார் துயரறுசுடரடி என்று பாடும்போது, துயரறுப்பவன் என்று கூறியிருக்கிறார். “ஆஶ்ரித ஸமஸ்த துக்க அபனோதன ஸ்வபாவம்” என்பதாகும். துயர் தீர்ப்பவன், துயரறுப்பவன் என்று சொல்லலாம்.
இயல் சாற்றுமுறை பற்றி அடியேன் அறிய விரும்புகிறேன். prapatti.com-இல் உள்ள வடகலை இயல் சாற்றுமுறை, தென்கலை முறையிலிருந்து (மணவாள மாமுனிகள் தொகுத்தது) மிகவும் மாறுபட்டிருக்கிறது. வடகலை முறையைத் தொகுத்தது யார்? இதில் உள்ள ஒவ்வொரு பாசுரத்தையும் இயற்றியவர்கள் யார் மற்றும் எந்த ஆசார்யரை பற்றியது?
வடகலை இயல் சாற்றுமுறை என்பது ஶ்ரீ தேஶிகனுக்குப் பின்னால், தேஶிகரின் திருக்குமாரரான குமாரவரதாசாரியார் காலத்தில்தான் ஶ்ரீ தேசிக ப்ரபந்த வ்யவஸ்தையெல்லாம் வந்தது. அப்போதுதான் அவர் இயல்சாற்றுமுறையைத் தொகுத்திருக்கிறார். இது மணவாளமாமுனிகள் காலத்திற்கும் முன்னமே வந்தது. ஆகையால் இதுதான் ப்ராசீனமானது என்று புரிந்துகொள்ளுங்கள்.
வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 25, ஸ்லோகம் 27 சேது பந்தனம் கட்டம். சமுத்ர ராஜன் ஸ்ரீ ராமர் முன் தோன்றி கைகூப்பி பாலம் கட்ட அனுமதி அளித்ததாகவும் அதனை பயத்தினால் செய்யவில்லை என்று கூறியதாகவும் கோரக்பூர் பப்ளிகேஷன் புத்தகத்தில் படிக்கிறேன். இது சரியா என்று தெளிவுபடுத்தவும்.
கோரக்பூர் புத்தகத்தில் யுத்த காண்டத்தில் 22வது ஸர்கத்தில் சேது பந்தன வர்ணனை இருக்கிறது. மேலும் இந்தக் கேள்வியில் கேட்கப்பட்டிருக்கும் 25 ஸர்கத்தில் 27வது ஶ்லோகமானது “ஆகம்ய நகரீம் லங்காம்” என்று இலங்கைக்குள் பெருமாளும் வானரர்களும் ப்ரவேசம் செய்ததைப் பற்றி இருக்கிறது.ஆகையால் கொடுத்துள்ள ஸர்கம் எண்ணைச் சரி பார்க்கவும்.
விபீஷணன் ஸமுத்ர ராஜனை சரணடையலாம் என்று யோசனை சொல்ல,அதன் படி ப்ராயோப்ரவேசமாய் இராம்பிரானும் ஸமுத்ர ராஜனைச் சரணடைந்தார். இதைக் கண்ட ஸமுத்ர ராஜன், ஸர்வேஶ்வரனான எம்பெருமான் முன், அதாவது அவர் சரணாகதி செய்திருக்கிறார் அதற்காக தாம் அவர் முன் எப்படிப்போய் நிற்பது என்று பயந்து வராமல் இருந்தார். அவர் வராததைக் கண்ட இராமபிரான் வில்லையும் அம்பையும் எடுத்துவர லக்ஷ்மணனைப் பணிக்க, வில்லின் அம்பு பூட்டி ஸமுத்ரத்தில் மேல் தொடுக்கும் சமயத்தில்,எம்பெருமானிடம் ஸமுத்ரராஜன் சரணடைந்தார். மேலும் இராமர் பூட்டிய அம்பை ஸமுத்ர ராஜன் தன் எதிரிகள் மேல் தொடுக்கும்படி வேண்ட பெருமானும் அவ்வாறே செய்தார்.
இதற்கு மேல் தன் மீது பாலம் கட்ட ஸமுத்ரராஜன் கூற, நளசேதுவை இராமபிரான் நிர்மாணித்தார். சேதுபந்தனம் பண்ணலாம் என்று சொல்லிய பின் சேதுபந்தனம் செய்யப்பட்டது, அதற்குப் பின் யாரும் பயப்படவுமில்லை. இங்கே பயந்தது ஸமுத்ர ராஜன் மட்டும்தான். ஒன்று எம்பெருமான் முன் வந்து நிற்பதற்கும், தன் மேல் இராமபாணம் பட்டுவிடுமோ என்றும் அஞ்சினான். இராமபிரான் எந்தச் சமயத்திலும் பயப்படவில்லை.
குறிப்பு:
தாங்கள் கேட்ட கேள்வியில் தெளிவுயில்லாத படியால், இராமாயணத்தில் சேதுபந்தன வர்ணனை மட்டும் இங்கே கொடுத்துள்ளோம்.
கைசிக மாஹாத்மியத்தில் சஷ்டி, அஷ்டமி, அமாவாசை மற்றும் சதுர்த்தசி தினங்களில் ஸ்நானம் செய்யாமல் சாப்பிடுவது பாவம் என்று கூறியுள்ளது. ஸ்ரீ வைஷ்ணவர்கள் சஷ்டி விரதம் அனுசரிக்கலாமா? ஐப்பசி சுக்ல பக்ஷ ஷஷ்டி ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஏதேனும் சிறப்பு தினமா ?
ஶ்ரீவைஷ்ணவர்கள் ஷஷ்டி வ்ரதம் அனுஷ்டிக்கும் வழக்கமில்லை. ஐப்பசி சுக்லபக்ஷ ஷஷ்டி ஸ்கந்த ஷஷ்டி என்று இதர ஸம்ப்ரதாயத்தவர்கள் அனுஷ்டித்து வருகிறார்கள், ஶ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இல்லை.
எம்பெருமானின் விஷ்ணு மற்றும் நாராயணன் இந்த இரண்டு திருநாமங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?
எம்பெருமானின் விஷ்ணு மற்றும் நாராயணன் இந்த இரண்டு திருநாமங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் இந்த நாமங்களின் அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நாராயண ஶப்தத்திற்குப் பல விதமான அர்த்தங்களை விஸ்தாரமாக திருமந்த்ராதிகாரத்தில் ஸ்வாமி தேஶிகன் ஸாதித்திருக்கிறார். அதில் முக்கியமாக இரண்டு விதமாக அர்த்தங்கள் கொள்ளலாம் என்பதை பார்க்கலாம். முதலில்
“நாராணாம் அயனம்; நாரா: அயனம் யஸ்ய ஸ:” என்பது.
அதாவது பெருமாள் நாரங்களுக்கு (அழியாதவைகளின் கூட்டங்களுக்கு) இருப்பிடமாக இருக்கின்றான். அதேபோல் அந்த அழியாதவைகளின் கூட்டங்களைத் தனக்கு இருப்பிடமாக வைத்துக் கொண்டிருக்கிறான். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ரம் அழியக கூடியது, நரம் என்றால் அழியாதது. நாரங்கள் என்பது அழியாதவைகளின் கூட்டம். அந்த அழியாதவைகளின் கூட்டங்களுக்கு தான் இருப்பிடமாக ஆகின்றான் நாராயணன். அது தான் “நாராணாம் அயனம்”.
இதே அழியாதவைகளின் கூட்டங்களை (நாரா:) தனக்கு இருப்பிடமாக வைத்துக் கொண்டிருக்கிறான். அது தான் “நாரா: அயனம் யஸ்ய ஸ:” . ஆக எம்பெருமான் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக ஆகின்றான் என்பது இந்த நாராயண ஶப்தத்தில் இருந்து கிடைக்கின்றது.
விஷ்ணு என்கின்ற ஶப்தத்ததைப் பார்க்கும் பொழுது “சராசர பூதேஷு வேஷணாத் விஷ்ணு ருச்யதே”என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த சராசரங்கள் அனைத்திற்கும் எம்பெருமான் வியாபித்திருப்பவனாக இருக்கின்றான் என்று சொல்லலாம், அதாவது எல்லாவற்றிற்குள்ளும் வியாபத்திருக்கிறான் எம்பெருமான் என்று பொருள். இரண்டையும் பார்க்கும் பொழுது எம்பெருமான் எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்று ஒரு பொதுவான அர்த்தம் கிடைக்கின்றது. ஆனால் இரண்டும் வெவ்வேறு குணங்களை காட்டுகின்றன என்பதை நம்மாழ்வார் திருவாய்மொழியின் இரண்டாம் பத்து ஏழாவது தசகத்தில் (கேஶவன் தமர்) சாதிக்கின்றார். எம்பெருமானுடைய த்வாதஶ நாமங்களைச் சொல்கின்றார். திருவாய்மொழியின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு குணத்தைக் குறிக்கின்றது. அந்த குணங்கள் அனைத்தையும் ஸ்வாமி தேஶிகன் த்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளியில் தொகுத்துத் தருகின்றார். ஒவ்வொரு பதிகத்தின் முடிவில் ஒவ்வொரு பாசுரமும் இந்த குணத்தைப் பாடுகின்றன என்று சொல்கின்றார். அப்படிச் சொல்லும் பொழுது இந்த நாராயண நாமத்தைச் சொல்லக்கூடிய பாசுரம் “நாரணன் மூவேழுலகுக்கும் நாதன் வேத மயம்” என்பதில் என்ன குணம் சொல்லப்பட்டிருக்கின்றது என்றால் ஸர்வ நாத: என்கின்ற குணம் சொல்லப்பட்டிருக்கிறது என்கின்றார். எம்பெருமான் எல்லோருக்கும் நாதனாக இருக்கிறார், ஏனென்றால் அவர் எல்லாவற்றிற்குள்ளும் , எல்லாவற்றையும் தனக்கு இருப்பிடமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
அதேபோல் விஷ்ணு என்ற திருநாமத்தைக் கொண்ட பாசுரம் விட்டிலங்குசெஞ்சோதி. அதில் என்ன குணம் காட்டி இருக்கிறார் என்றால் “விஶ்வக் வ்யாப்தாதி வித்த:”. இந்த விஶ்வம் முழுவதும் எம்பெருமான் வியாபித்து விளங்கக் கூடியவனாக இருக்கின்றான் என்று பொருள் ஆகிறது. இதில் முக்கியமாக அடியார்களை தனக்கு இருப்பிடமாக கொண்டு அடியார்களுக்குள் வியாபித்திருக்கின்றார் என்று வ்யாக்யானங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் இந்தத் திருநாமம் விசேஷித்திருக்கிறது.
திருமாலையின் எட்டாவது பாசுரத்தை தயவு செய்து விளக்கவும். “குறிப்பெனக்கு அடையும் ஆகில் கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமா நகருளானே” .இந்த வரிகளில் ஆழ்வார் எதற்காக அவர்கள் தலையை அறுக்க விரும்புகிறார்? ஆழ்வார் வன்முறையைப் போதிப்பதாக புரிந்து கொள்வது தவறு என்று இருப்பினும் இதனை எவ்வாறு விளக்குவது ?
"குறிப்பெனக்கு அடையும் ஆகில் கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய்” என்பது க்ஷத்ரியர்களாக இருப்பவர்கள் விரோதிகளின் தலையை அறுப்பர். அதுவே ப்ராஹ்மணர்களாக இருப்பவர்கள் விரோதிகளுடைய மதங்களை வேரறுப்பர் என்பதைதான் இங்கே குறிக்கிறது.
ராஜாவாக இருப்பவர் தன்னுடைய ராஜ்யத்தில் தர்ம ஸ்தாபனம் பண்ணுவதற்காக அசுரர்கள், அசுரவாதம் பண்ணுபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கலாம். அந்த ரீதியிலே க்ஷத்ரியர்கள் மூலமாக அவர்களைக் கொள்வதோ அல்லது அவர்களின் மதத்தை வேரறுப்பதோ சரியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
a) ஸ்ரீ ராமபிரான் தன் அவதார முடிவில் அயோத்தி வாழ் உயிரினங்களை ஸ்ரீவைகுண்டத்திற்கு ஏன் அழைத்துச் சென்றார்? அவைகள் பக்தி யோகம் செய்தனவா அல்லது ஶரணாகதி செய்தனவா?
b) ஒரு ப்ராமணனின் இறந்து போன குழந்தைகளை வைகுண்டலோகத்தில் இருந்து கிருஷ்ணரும் அர்ஜுனனும் மீட்டு வந்ததாக மஹாபாரதத்தில் கதை வருகிறது. வைகுண்ட லோகம் சென்றவர்கள் திரும்ப வரமாட்டார்கள் என்று இருக்க ( ந ச புநராவர்த்ததே) பெருமாள் எப்படி அந்தக் குழந்தைகளையும் அர்ஜுனனையும் வைகுண்டலோகத்தில் இருந்து அழைத்து வந்தார் ?
a.ஶ்ரீ பரதாழ்வார் சித்ரகூடத்தில் செய்த ஶரணாகதியில் அயோத்திவாழ் மக்களும் அடங்குவர். ஆகையால் அவர்களும் ஶராணாகதி செய்ததாகக் கணக்கு. இந்த ஶரணாகதியை பற்றியும், அபய ப்ரதாணம் பற்றியும் ஸ்வாமி தேஶிகன் அபய ப்ரதாணத்தில் சாதிக்கிறார். அபய ப்ரதாண காலக்ஷேபத்தில் தெரிந்துகொள்ளலாம்.
அக்காலக்ஷேபத்தின் பதிவுகளைக் கேட்க : https://www.sampradayamanjari.org/register/ என்ற linkல் பதிவு செய்து GSPK ID கிடைத்த பின், https://t.me/Mukunth_SR என்ற Telegram ID யை தொடர்பு கொள்ளவும்.
b.அர்ச்சிராதி கதி வாழியாக யார் ஶ்ரீவைகுண்டத்திற்குப் போகிறார்களோ அவர்கள்தான் திரும்பி வரமாட்டார். பகவானே ஸ்வதந்திரனாக இருந்து அவர்களை அழைத்துக்கொண்டு போய்வந்தார் என்பது மோக்ஷமாகாது, அதாவது மோஷம் பெற்றனர் என்ற அர்த்தம் ஆகாது. ஆகையால் பகவானே அழைத்துப்போய் வந்தார் என்பது சரியாகும்.
ஸ்வாமி தேஶிகன் சது:ஶ்லோகியின் வ்யாக்யானத்தில் அவதாரிகை ஶ்லோகத்தில் ப்ரம்ம சூத்ரத்தின் நான்கு அத்யாயங்களை மேற்கோள் காட்டி பெருமாளும் பிராட்டியும் சமம் என்று கூறுவதாக ஸ்ரீ கரப்பங்காடு சுவாமியின் youtube உபந்யாசத்தில் இருந்து அடியேன் புரிந்து கொண்டேன். இது தவறு எனில் சரியான விளக்கம் அளிக்கவும். மேலும் இந்த ஸ்லோகத்தை ஸ்வாமி தேசிகன் ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்திலோ அல்லது வேறு சில்லரை
க்ரந்தங்களிலோ கையாண்டு இருந்தால் அதனைத் தெளிவு படுத்தவும்.
நீங்கள் கேள்வியில் சொன்ன விளக்கம் சரிதான். மேலும் இதை ஸ்வாமி தேஶிகன் வேறெங்கும் எடுத்ததாகத் தெரியவில்லை.
மது கைடபர்கள் வேதத்தைக் கவர்ந்து சென்றதற்கும் மத்ஸ்ய அவதாரத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? ஹயக்ரீவ மற்றும் மத்ஸ்ய அவதாரதங்களுக்கு என்ன தொடர்பு? ஹயக்ரீவன் என்னும் அசுரன் யார் ?
ஹயக்ரீவ அவதாரம் என்பது ப்ராக்ருத ப்ரளயம் நடந்த பின் நடக்கும்
ஸ்ருஷ்டியின் போது நடந்தது. ப்ராக்ருத ப்ரளயம் என்பது எல்லா விதமான லோகங்களுமே அழிந்து மூலப்ரக்ருதி எம்பெருமானுக்குள்ளே போய் அசித்வத் ஜீவர்கள் எல்லாருமே எம்பெருமானுக்குள்ளே போகின்ற ஸ்திதி. அதற்குப் பின் பெருமாள் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் பொழுது ப்ரஹ்ம தேவனை ஸ்ருஷ்டி செய்து அவருக்கு வேதங்களை உபதேசிக்கின்றார் . அந்த வேதங்களை மதுகைடவர்கள் அபகரித்துவிடுகின்றனர். மதுகைடவர்களும் பெருமாளுடைய காது குரும்பையிலிருந்து தான் வருகிறார்கள். அதனால் அந்தச் சமயத்தில் வேறு ஸ்ருஷ்டி நடக்கவில்லை என்று தெரிகிறது. அந்த மாதிரி சமயத்தில் நடந்தது ஹயக்ரீவ அவதாரம்.
மற்றொரு விதமான ப்ரளயம், நைமித்திக்க ப்ரளயம் என்பதாகும். அதில் எல்லா லோகங்களும் அழியாது, சில லோகங்கள் பர்யந்த்ரம் தான் அந்த அழிவு நடக்கும். அதன் பின் அழிந்த லோகங்களின் சிருஷ்டி தொடரும். அந்த மாதிரி சமயங்களில் சதுர்யுகம் தோறும் நடக்கக்கூடிய தசாவதாரம் நடக்கும். அதில் ஒன்றுதான் மத்ஸ்ய அவதாரம். குறிப்பாக மத்ஸ்ய அவதாரம் என்பது பாகவதத்தில் எடுக்கும் பொழுது சாக்ஷஸ மன்வந்தரம் முடிந்து வைவஸ்வத மன்வந்தரம் ஆரம்பிக்கின்ற முன் என்று மஸ்த்ய அவதாரம் பற்றிய வர்ணனை இருக்கின்றது. அதில் அழிவு என்பது பூர்த்தியாக இருக்காது. சத்யவ்ரத பாண்டியன் ஏற்பாடு செய்த ஒரு பெரிய படகில் அந்த ப்ரளய காலம் முழுதும் ப்ரளய ஜலத்தில் நீந்தி அங்கு இருக்கும் ஔஷதிகள், ஸப்த ரிஷிகள் எல்லோரையும் காப்பாற்றி அடுத்த மன்வந்தரத்திற்கு வேண்டிய ஸாமகிரிகள் எல்லாவற்றையும் பாதுகாத்துக் கொடுக்கின்றார் பெருமாள். மேலும் அப்போது வேதங்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டு அடுத்த கால கட்டத்திற்கு போக வேண்டி எம்பெருமான் மத்ஸ்ய அவதாரம் எடுக்கிறார். அந்த வேதங்களை ஹயக்ரீவ அசுரன் திருடிக் கொண்டு போய்விடுகிறான். அவனை மத்ஸ்ய மூர்த்தி ஸம்ஹாரம் செய்து வேதங்களை மீட்டு கொடுக்கின்றார். இது தான் கதை. அதனால் ஹயக்ரீவ அசுரன் ஹயக்ரீவ அவதாரம் இவை இரண்டும் வேறு வேறு கால கட்டத்தில் நடந்தவை என்று புரிந்துகொள்ளவேண்டும்.
சங்க்ஷேப இராமாயண பாராயணத்தைச் சூர்ய அஸ்தமனத்திற்குப் பின் பண்ணலாமா?
சங்க்ஷேப இராமாயண பாராயணத்தைச் சூர்யாஸ்தமனத்திற்குப் பிறகு பண்ணும் வழக்கமில்லை.
திருமந்திர விளக்கம் –பரமாத்மாவுக்கு ஜீவன் அடிமை என்பது சரியா? தேஶிக ஸம்ப்ரதாயம் படியும் இப்புரிதல் சரியா?
திருமந்திரத்திற்கு நிறைய அர்த்தங்கள் இருக்கிறது, 108க்கும் மேல் அர்த்தங்கள் இருக்கிறது என்று ஆசார்யர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள். அதில் ப்ரதான அர்த்தம் பரமாத்மாவிற்கு ஜீவன் அடிமை என்பது, இது தேஶிக ஸம்ப்ரதாயம் படியும் நாம் கொள்ளும் அர்த்தம்தான்.
இராமானுச நூற்றந்தாதியில் கடைசி 3 பாசுரங்கள் முக்கியமாக நாம் சேவிக்கின்றோம் அது போல் பிள்ளையாந்தாதியில் எந்தெந்தப் பாசுரங்கள் நித்யமும் சேவிக்க வேண்டும்?
இராமானுச நூற்றந்தாதியில் கடைசி 3 பாசுரங்கள் போல் பிள்ளையந்தாதியில் கடைசி 2 பாசுரங்கள் சாற்றுமுறை பாசுரங்கள். இரண்டுமே நித்யானுசந்தானத்தில் இருக்கிறபடியால் நித்யமும் சேவித்தால் நல்லது.
ஹனுமான் சாலிசா நாம் சொல்லலாமா?
ஹனுமான் சாலிசா நாம் சொல்லலாம்.
ஆசார்ய பரம்பரையில் ஆழ்வார்கள், நாதமுனிகள் இருந்து இராமானுசர் வரை அறிந்து கொள்ள முடிகிறது. பிறகு 74 பீடாதிபதிகளை உடையவர் உண்டாக்கினார். இவர்கள் யார் யார்? உடையவரில் இருந்து ஸ்வாமி தேசிகர் வரை நம் ஆசார்யர் பரம்பரையை அறிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்? இதைப்பற்றிய உபன்யாசம்/ பதில்பதிவாக தந்தருள வேண்டும்
74 ஸிம்மாசனாதிகள் யார்யார் என்று குருபரம்பரையில் இருக்கிறது, நம் குருபரம்பரையிலும் தேஶிகன் வரை யார்யார், அவருக்குப் பின் யார் என்பெதல்லாம் இருக்கிறது, நீங்கள் எந்த ஸம்ப்ரதாயமோ அந்த ஸம்ப்ரதாயத்து குருபரம்பரையைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். முடிந்தால் உபந்யாஸம் வடிவில் பின்னர் சொல்கிறோம்.
கீதையில் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் அருளிய சரம ஸ்லோகம் மட்டுமே ரஹஸ்ய த்ரயத்தில் உள்ளது. ஆனால் இதற்கு முன் அருளப்பட்ட வராஹ மற்றும் ஸ்ரீ ராம சரம ஸ்லோகங்களுக்கு இந்த அங்கீகாரம் இல்லை?
ஶ்ரீராம சரம ஶ்லோகத்திற்கும் வராஹ சரம ஶ்லோகத்திற்கும் அங்கீகாரமில்லை என்பதில்லை. ஸ்வாமி தேஶிகன் அவை இரண்டிற்கும் ரஹஸ்ய க்ரந்தமே சாதித்திருக்கிறார். ஶ்ரீராம சரம ஶ்லோகத்திற்காக “அபய ப்ரதாந ஸாரமும்”, வராஹ சரம ஶ்லோகத்திற்காக “ரஹஸ்ய சிகாமணியும்” சாதித்திருக்கிறார்.
ரஹஸ்ய த்ரயத்தில் இது விதாயக மந்திரமாக இருப்பதினால், ஶ்ரீக்ருஷ்ண சரம ஶ்லோகமானது அவ்விடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி மீதி இரண்டு ஶ்லோகங்களுக்கும் அதே அங்கீகாரம் அதே முக்யத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை ரஹஸ்ய க்ரந்தங்களிலிருந்து பார்க்கமுடிகிறது.
இங்கு பூனாவில், துகாராம் தன் ஶரீரத்துடன் தங்க ரதத்தில் ஶ்ரீவைகுண்டம் சென்ற வைபவத்தை துகா பைஜி என்று பெரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். இது நம் ஸம்ப்ரதாய முறைபடி சரியா? நம்மாழ்வார் திருவாய்மொழி 10,7 ல் ஶ்ரீவைகுண்டத்திற்கு இந்த ஶரீரத்தோடு செல்ல விருப்பமில்லாமல் திரும்பி இங்கேயே வந்தார் என்று இருக்கிறது. தெளிவிக்கவும்.
துகாராம் ஶரீரத்துடன் ஶ்ரீவைகுண்டம் போனது அவர்கள் ஸம்ப்ரதாயப்படி இருக்கலாம். நாம் அதை விசாரிக்க அவசியமில்லை.
ராவணனைப் பெரிய சிவபக்தனாக திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் சித்தரிக்கின்றன. ஆனால் நான் அறிந்தவரை, வால்மீகி ராமாயணத்தின்படி ராவணன் பிரம்மாவிடம் இருந்துதான் வரங்கள் பெற்றான். ராவணன் சிவபக்தன் என்றோ, சிவனிடம் இருந்து வரங்கள் பெற்றான் என்றோ வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டு இருக்கிறதா?
ராவணன் சிவ பக்தன் என்பது புராணங்களிலேயே இருக்கிற விஷயம்தான். பலர் போல் அவனும் சிவபக்தன்தான். கைலாச மலையை அசைத்தான் என்பதெல்லாம் புராணங்களில் உண்டு.
அலுவலகத்தில் சந்திக்கும் இடர்களைப் போக்கவும், வேலையில் உயர்வு பெறவும் என்ன ஶ்லோகம் சேவிக்கலாம் என்று வழிகாட்டவும்.
என் மகன் தவறாமல் நித்யகர்மானுஷ்டானங்கள் செய்துவருகிறான். அவனுக்கு எவ்வித தடங்கலும் இன்றி நல்ல வரன் விரைவில் அமைய, எந்த ஶ்லோகம் / பாசுரம் சேவிக்க வேண்டும் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்
எவ்வித தடங்கலும் இன்றி நல்ல வரன் விரைவில் அமைய ஸ்ரீஸூக்தம், ஸ்ரீ ஸ்துதி போன்றவற்றைச் சேவிக்கலாம் எனத் தோன்றுகிறது.
அகத்தியர் போன்ற ரிஷிகள் தேவதாந்தரங்கள் மீது துதிகள் பாடியுள்ளனர். உ.தா ஸ்ரீசக்ர ராஜசிம்மாசனேஷ்வரி போன்ற பாடல்கள். அவரே தான் ஆதித்ய ஹ்ருதயத்தை ஸ்ரீராம பிரானுக்கு உபதேசித்தார் என்று இருக்கிறது. அப்படியென்றால் ரிஷிகள் ஆழ்வார்கள் போன்று வைணவர்கள் இல்லையா? எப்படி இதை புரிந்துகொள்வது.
ரிஷிகளைக் காட்டிலும் ஆழ்வார்கள் உயர்ந்தவர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை, பலரும் இதை சொல்லியிருக்கின்றனர். இவர்களுக்குள் முக்கியமான வித்தியாசமானது ரிஷிகள் தங்களின் தபஸ்ஸினாலே முயற்சி செய்து அபாரமான ஞானத்தைப் பெற்றுக் கொள்கின்றார்கள். ஆழ்வார்களுக்கு, பெருமாள் மயர்வற மதிநலம் அருளினன் என்றுரைப்பது போல் பெருமாளே அந்த ஞானத்தை கொடுத்திருக்கிறார். ஆகையால்தான் ஆழ்வார்கள், ரிஷிகளைக் காட்டிலும் ஶ்ரேஷ்டர்களாக இருக்கிறார்கள்.
ரிஷிகளிலும் ஸ்ரீவைஷ்ணவர்கள் உள்ளனர் அத்திரி, ப்ருகு போன்றோர் நல்ல ஸ்ரீவைஷ்ணவர்கள். அகத்தியரும் ஸ்ரீவைஷ்ணவர் தான். ஆனால் ரிஷிகளுக்கு சமுதாயப் பொறுப்பு இருப்பதினால் மற்ற தேவதாந்திர பக்தர்களுக்காக சில காரியங்கள் செய்வார்கள். வ்யாசர், சிவ புராணம் இயற்றியது போல் எல்லா புராணங்களை இயற்றிய பின் "வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்" என்று கூறியிருக்கிறார். ஆக ரிஷிகள் சமுதாயப் பொறுப்பினால் அவர்களுக்காக அதைச் செய்திருப்பார்கள் அது அவர்களின் சொந்த அபிப்ராயமாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
பெரும்பாலான ரிஷிகள் ஸ்ரீவைஷ்ணவர்களாக தான் இருந்திருக்கிறார்கள். வேதத்திலே சொல்லப்பட்ட சில ரிஷிகள் கூட வேறு மதத்தைச் சேர்ந்தவர்காளாக இருக்கிறார்கள். ஆக நாம் புராணங்களிலிருந்து ஸ்ரீவைஷ்ணவ பாகத்தைமட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் ரிஷிகளைக் காட்டிலும் பலமடங்கு பெருமையுள்ள ஆழ்வார்களை நாம் விசேஷமாக கௌரவிக்க வேண்டும்.
பெருமாள் சகல விஷயங்களையும் தன் ஆத்ம ஸ்வரூபத்தால் க்ரஹிக்கின்றாரா அல்லது நம் போன்றே தர்ம்பூதஞானத்தால் க்ரஹிக்கின்றாரா?
பெருமாள் சகல விஷயங்களையும் தன் ஸ்வரூபத்தாலேயும் தரிக்கிறான், சங்கல்பத்தாலேயும் தரிக்கிறான். சில விஷயங்களை நேரடியாக ஸ்வரூபத்தால் தரிப்பான். சில விஷயங்களை சங்கல்பத்தால் தரிப்பான்.
உதாஹரணத்திற்கு நக்ஷத்ரங்கள், க்ரஹங்கள் எல்லாம் அவ்வவ்விடத்திலே இருக்க வேண்டும், கடல் எல்லையை மீறாமல் இருக்க வேண்டும் . இவை எல்லாம் சங்கல்பேண தாரகத்வம். சங்கல்பத்தினால் தரிக்கிறான் எம்பெருமான். அதனால் இரண்டு விதமான தாரகங்களும் உண்டு என்று ஸ்வாமி தேஶிகன் ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயசாரத்தில் சொல்லியிருக்கிறார்.
1. அடியேன் ஸாம வேதம் (த்ரஹ்யாயன சூத்ரம்) பரத்வாஜ கோத்ரம், வடகலை, ஶ்ரீ சந்நிதி சிஷ்யன். நம் ஸம்ப்ரதாயத்தில் கிடாம்பி, நடாதூர், நல்லான் சக்ரவர்த்தி,சேட்லூர் என்று தங்கள் பெயருக்கு முன்னும் பின்னும் போட்டுக்கொள்கின்றனர். அடியேன் காரணம் கேட்டு அறிந்துகொண்டது இவை ஒருவரின் வேதம், கோத்ரம் சூத்ரம் பொருத்ததாகும். கிடாம்பி என்றால் ஆத்ரேய கோத்ரம் யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்ரம் என்றனர். அவ்வாறாக பரத்வாஜ கோத்ரம் சாமவேதம் த்ரஹ்யாயன சூத்ரத்திற்கு பெயருக்கு முன்னரோ/பின்னரோ என்ன சேர்க்கவேண்டும் என்று தெரிவிக்கவும் ஸ்வாமி.அடியேனின் பூர்வீகம் கும்பகோணம், அகத்து குலதெய்வம் ஒப்பில்லாப்பன்.
2.
எது என்று தெரியாத பக்ஷத்தில் அடியேனின் தாயார் வழி பெரியோர்கள் உபயோகிக்கும் சேட்லூர் என்ற பெயரை போட்டுக்கொள்ளலாமா?
கிடாம்பி, நல்லான் சக்க்ரவர்த்தி போன்றவையெல்லாம் கோத்ரம் சூத்ரம் மட்டுமல்லாமல் அவர்களுடைய பரம்பரை ஸம்பந்தப்பட்டதாக இருக்கும். இது போல் பிருதம் என்னயிருக்கும் என்று தெரிந்துகொள்ள முயற்சி பண்ணுங்கள். உங்கள் குடும்பத்தில் ஒரு 30 வருடம் முன் நடந்த கல்யாண பத்திரிக்கையைப் பாருங்கள், தங்களுடையதோ அல்லது தங்களின் அப்பா, பெரியப்பா, சித்தப்பா அவர்களுடைய பெரியவர்களின் பத்திரிக்கையில் நிச்சயம் இருக்கும். அதில் என்ன உள்ளதோ அதைப் போட்டுக்கொள்ளலாம்.
பொதுவாக தந்தை வழி பெயரைதான் போட்டுக்கொள்ளுவார்கள்.
தேஶிக ஸ்தோத்ரங்களுக்கு ஏதேனும் பாராயண க்ரமம் உள்ளதா? இந்த இந்த நக்ஷத்திர நாளில் இந்த இந்தப் பத்ததி என்று பாதுகா ஸஹஸ்ரத்திற்கு இருப்பது போல் ஸ்தோத்ர பாடங்களுக்கு ஏதேனும் உள்ளதா?
தேஶிக ஸ்தோத்ரங்களுக்கு நியதமாக இப்படியிப்படிப் பண்ணவேண்டும், இப்படிப் பண்ணக்கூடாது என்று க்ரமங்களெல்லாம் கிடையாது. அந்தந்தக் கோயில்களில் எப்படி வைத்திருக்கிறார்களோ அப்படிச் சொல்லவேண்டும்.
இந்தயிந்த நக்ஷத்திரங்களுக்கு இந்தயிந்த பத்ததி என்று சில சௌகர்யங்களுக்காக வைத்திருக்கிறாகள், விதி என்று கிடையாது. சில பலன்களுக்காக நாமே ஏறப்படுத்தியது. அது போல் ஸ்தோத்ர பாடங்களுக்கும் வெள்ளிக்கிழமை ஶ்ரீஸ்துதி, சனிக்கிழமை ஸுதர்ஶந அஷ்டகம் என்று சிலர் வைத்திருக்கிறார்கள். நியதமாக இல்லாததால் சொல்லப்படவில்லை.
உந்து மதகளிற்றன் பாசுரத்தன்று புளியோதரையும், கறவைகள் அன்று தயிர்சாதமும் எம்பெருமானுக்கு அம்சைப் பண்ணுவதன் காரணம் என்ன?
கறவைகள் பாசுரத்தில் “கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்” என்று பாசுரத்திலேயே இருக்கிறது. ஆயர்குலத்திலே மாடு மேய்க்கும் சிறுவர்கள் கண்ணனுடன் கூட மாடுமேய்ப்பதற்குப் போய் மத்யான வேளையில் தயிர் சாதம் உண்டார்கள் என்று புராணங்களில் இருக்கிறது. பாலும் தயிரும் கிடைக்குமிடம், அவர்களுக்கு தயிர் சாதம் விசேஷம். அதன் ஞாபகமாக தயிர் சாதம் வைத்திருக்கிறார்கள். உண்போம் என்பதற்கு, எங்களுக்கு சாப்பிடதான் தெரியும் மற்ற உபாயங்கள் தெரியாது அதனால் ஶரணாகதி பண்ணுகிறோம் என்ற அர்த்தம் இங்கே.
உந்து மதகளிற்றன் அன்று புளியோதரை என்பது ஸம்ப்ரதாயத்தில் பெரியளவில் வழக்கத்தில் கிடையாது. சில இடங்களில் மட்டும் பண்ணுவார்கள். இந்தப் பாசுரம் பகவத் இராமானுஜர் உகந்த பாசுரம், அதனால் அன்று ஒரு விசேஷமான தளிகைப் பண்ணலாம் என்பதற்காகப் பண்ணுகிறார்கள்.
ஶ்ரீதேவி, பூமாதேவி பற்றி பல கதைகள் கேட்டுள்ளோம். ஶ்ரீதேவியின் திருவவதாரம்தான் ஸீதாதேவி, ருக்மிணி பிராட்டி என்றும்; பூமாதேவியின் திருவவதாரம்தான் ஆண்டாள், பத்மாவதி தாயார் என்றும், வராஹ அவதாரத்தின் மூலமும் பூமாதேவி பற்றி அறிகிறோம். ஆனால் நீளா தேவி பற்றி பெரிதாக கதைகள் இல்லையே. அவரைப் பற்றி அறிய கதைகள் ஏதேனும் உண்டா? நீளா தேவியை எந்தெந்த திவ்ய தேசங்களில் சேவிக்க முடியும்?
பத்மாவதி தாயாரும் ஶ்ரீதேவியின் அம்சம்தான். மேலும், நீளாதேவி பற்றியதான சரித்திரங்கள் ஹரிவம்ச புராணத்தில் இருக்கின்றன. அவர் க்ருஷ்ணாவதாரத்தில் நப்பின்னை பிராட்டியாக அவதரித்தார் என்பதாக இருக்கிறது. அதை அனுசரித்து பல பாசுரங்கள் 4000 திவ்ய ப்ரபந்தத்தில் இருக்கிறது. திருப்பாவையிலேயே இருக்கிறது.
சில ஊர்களில் நீளாதேவியை சேவிக்கலாம். ஶ்ரீரங்கத்தில் சந்நிதி இருப்பதாகக் கேள்வி.
யுத்தகாண்டம் ஸர்க்கம் 120 இல் சீதாபிராட்டி அக்னி பிரவேசம் செய்யும்போது தேவர்கள் வரும் ஸ்லோகம் இது:
ததோவைஶ்ரவணோராஜாயமஶ்சபித்ருபிःஸஹ ।
ஸஹஸ்ராக்ஷஶ்சதேவேஶோவருணஶ்சஜலேஶ்வரः ।।6.120.2।।
ஷடர்தநயந்ஶ்ரீமாந்மஹாதேவோவ்ருஷத்வஜः ।
கர்தாஸர்வஸ்யலோகஸ்யப்ரஹ்மாப்ரஹ்மவிதாம்வரः ।।6.120.3।।
ஏதேஸர்வேஸமாகம்யவிமாநைஸ்ஸூர்யஸந்நிபைः ।
ஆகம்யநகரீம்லங்காமபிஜக்முஶ்சராகவம் ।।6.120.4।।
இதில், வருணனை “வருணஶ்சஜலேஶ்வர” என்றும் சிவனை “ஶ்ரீமாந்மஹாதேவோவ்ருஷத்வஜ” என்றும் அழைக்கிறார் வால்மீகி.
ஆனால் அதே யுத்தகாண்டம் ஸர்க்கம் 126 இல் பெருமாள் பிராட்டியிடம் சேதுவைக் காட்டும்போது:
ஏததத்குக்ஷௌஸமுத்ரஸ்யஸ்கந்தாவாரநிவேஶநம் ।।6.126.19।।
அத்ரபூர்வம்மஹாதேவःப்ரஸாதமகரோத்ப்ரபுः ।
“மஹாதேவ:ப்ரஸாத” என்று கூறுகிறார். இதில் மஹாதேவ சப்தத்தால் அழைக்கப்படுபபவர் சமுத்திர ராஜனான வருணன் என்று, கோவிந்தராஜர் போன்ற நம் சம்பிரதாயத்தைச் சேர்ந்த வியாக்கியானகர்த்தாக்கள் கூறி இருக்கின்றனர். மேலே குறிப்பிட்ட இரண்டு ஸ்லோகங்களைச் சேர்த்து பார்த்தால் சற்று முரணாக உள்ளது. இவற்றை விளக்க வேண்டுகிறேன்.கொடுக்கப்படவில்லை?
இந்த ஶ்லோகங்களைச் சேர்த்துப் பார்த்தால் என்ன முரண் என்று சொல்கிறார் எனத் தெரியவில்லை. மஹாதேவ: என்று வருணனை கோவிந்தராஜர் சொல்லியிருக்கிறார். மஹாதேவ: என்றால் சிவனுக்கு பெயர் என்று இராமாயணத்தில் முன் ஶ்லோகத்தில் இருக்கிறது.
மஹாதேவ: என்ற பதத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு. பெருமாளுக்கே இப்பெயர் உண்டு. ஶ்ரீ இராமன் சந்நிதியில் எழுந்தருளியிருந்த ஶ்ரீரங்கநாதருக்கு “மஹாதேவ:” என்று பெயர் என்று ஶ்ரீமத் இராமாயணத்திலேயே வரும். “மஹாதேவ:” என்றால் பெரிய தேவன் என்றும் சொல்லலாம்.
“அத்ரபூர்வம்மஹாதேவःப்ரஸாதமகரோத்ப்ரபுः” என்று சொல்லுமிடத்தில் – நான் இலங்கை வருவதற்கு முன்னர் மஹாதேவர் அனுக்ரஹம் பண்ணார் என்று சொல்லியிருக்கிறார். ஸமுத்ரராஜன்தானே உதவி செய்தது. ஆகையால் அவரைக் குறிப்பிட்டதாகவோ அல்லது வருணதேவனை குறிப்பிட்டதாகவோதான் இருக்கவேண்டும். என்னென்றால், சிவன் வந்து அனுக்ரஹம் செய்ததாக ஶ்ரீமத் இராமாயணத்திலும் இல்லை யாரும் அந்தக் கதையைச் சொல்லவில்லை. இங்கே வ்யாக்யாணத்திலும் மஹாதேவ: என்று வருணனைதான் சொன்னார் என்று தெளிவாக இருக்கிறது.
காமாஸிகாஷ்டகமோ, வேறு சில ந்ருஸிம்ம ஸ்தோத்ரங்களை மஹாப்ரதோஷ காலத்தில் சொல்லலாமா?
மஹாப்ரதோஷ காலத்தில் ந்ருஸிம்ம ஸ்தோத்ரங்களைச் சேவிக்கலாம்.
ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் எப்படிச் செய்தல் வேண்டும்? சிலர் வனமாலி வரை திருநாமங்களாக பல ஶ்ருதி நீங்கலாகச். சேவிக்கச் சொல்கிறார்கள்.
பலஶ்ருதியோடு சேர்ந்து ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வதுதான் பெரியவர்களின் வழக்கம்.
A. ஶ்ரீமத் இராமாயணம் மூலம் பாராயணம் எப்படிச் செய்தல் வேண்டும்? ஆஹாரம் ஆனபின், ஸ்வாத்யாய காலத்தில் சேவிக்கலாமா? அல்லது சந்தியாவந்தனம் செய்தவுடன் செய்யவேண்டுமா?
B. ஸப்தாகமாகவோ, நவாகமாகவோதான் சேவிக்கவேண்டுமா? அல்லது ஒரு வருடம் பூர்த்தியாக நாள் ஒன்றுக்கு ஒன்றிரண்டு அத்யாயங்கள் மட்டும் என்று சேவித்து வரலாமா?
C. அகத்திலிருக்கும் ஸ்த்ரீகளுக்கு ரஜஸ்வலை ஏறபட்டால் அந்தக் காலத்தில் சேவிக்கலாமா?
D. சீதாப்பிராட்டி அழுவது போல் வரும் ஸர்கங்களுடன் அன்றைய பாராயணம் முடிக்கலாமா அல்லது மேலும் சில ஸர்கங்கள் சேர்த்துச் சேவிக்கவேண்டுமா?
ஶ்ரீமத் இராமாயண பாராயணத்தை பகவத் ப்ரீத்யர்த்தமாக, ஏதாவது பலனை உத்தேசித்து ப்ரார்த்திப்பதாகயிருந்தால் சாப்பிடாமல் பண்ணவேண்டும். இல்லையென்றால் சாப்பிட்டபின் ஸ்வாத்யாய காலத்திலும் பண்ணலாம்.
ஸப்தாகம், நவாகமாகதான் பண்ணவேண்டுமென்ற அவசியமில்லை. நித்யம் ஒரு ஸர்கமென்றும் பாராயணம் பண்ணலாம்.
ஸ்த்ரீகளின் ரஜஸ்வலை காலத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அவர்களின் ரஜஸ்வலை காலத்தில் அவர்கள் இருக்கும் அறையை தவிர்த்து வேறு அறையில் சேவிக்கலாம்.
பொதுவாக சிலர் தஶரதனின் நிர்யாணம் ஆகி அவரின் ஸம்ஸ்காரம் வரை நடக்கும் கட்டத்தில் நிறுத்தமாட்டார்கள். இருந்தாலும் தினமும் 5 ஸர்க பாராயணம் என்று ஒன்று உண்டு அதில் அவ்வாறு நிறுத்தும்படிதான் வரும். ஆகையால் துக்க கட்டத்தில் நிறுத்துவதால் ஒரு பாதகமுமில்லை.
தேஶிக ஸம்ப்ரதாயத்தில் ஏன் நாராயணீயத்திற்கு அத்தனை முக்கியத்வம் கொடுக்கப்படவில்லை?
நாராயணீயம் என்பது ஶ்ரீமத் பாகவதத்தின் சுருக்கம்தான். ஆனால் நம் பூர்வர்கள் செய்த க்ரந்தமில்லாததால் அத்தனை முக்கியத்வம் கொடுக்கப்படவில்லை. சேவித்தால் தவறொன்றுமில்லை.
ஏன் பூ, நீளா தேவிகள் இருவரும் ஈஶ்வர கோஷ்டியில் சேர்க்கப்படவில்லை?
ஏன் என்னெறால் இவையெல்லாம் ஶாஸ்த்ரத்தில் ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதுதான்.
ஶ்ரீமத் இராமாயணத்தில் இரண்டு சந்தேகங்கள்
1. ஏன் அசோக வனத்தை இராவணன் சீதையை வைக்கத் தேர்ந்தெடுத்தான்?
2. இராவணன் சீதையை எவ்வாறு கடத்திச்சென்றான் (அவளை பலவந்தமாக இழுத்துச் சென்றனா?) ?
அசோக வனம் என்பது இராவணனின் அந்தப்புரத்தில் இருந்த ஒரு தோட்டம். இராவணன் சீதாபிராட்டியை ஒரு அறையில் வைக்கவில்லை, தோட்டத்தில் சுதந்திரமாக இருக்கும்படியாக அங்கே வைத்தான். மற்றபடி குறிப்பிட்டு ஏன் என்ற காரணங்கள் ஶ்ரீமத் இராமாயணத்தில் இல்லை. அவனின் ஒருவிதமான மனநிலை மட்டுமே என்று கொள்ளலாம்.
ஆமாம் பலவந்தமாக இழுத்துச் சென்றான் என்பதாக ஶ்ரீமத் இராமாயணத்தில் இருக்கிறது.
சமீபத்தில் ஶ்ரீ உ வே வேளுக்குடி ரங்கநாதன் ஸ்வாமி, ப்ரம்ம சூத்ரங்கள் வகுப்பு பற்றிய அறிவிப்பு வந்தது. ஸ்த்ரீகள் அவ்வகுப்பில் சேரலாமா? நம் ஸம்ப்ரதாய வழக்கத்தில் உண்டா?
ஶ்ரீபாஷ்ய வகுப்பில், ப்ரம்ம சூத்ரங்கள் வகுப்பில் ஸ்த்ரீகள் சேருவது ஸம்ப்ரதாயத்தில் வழக்கத்தில் இல்லை. ஆனால் இப்போது சிலர் ஶ்ரீகோசம் இல்லாமல் காதால் மட்டுமே கேட்கிறோம் என்று கேட்கிறார்கள். ஆகையால் அது எப்படி உதிசமோ பார்த்து பண்ணிக்கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட 13 திருவாய்மொழிகளுக்கு மட்டும் கோயில் திருவாய்மொழி என்று குறிப்பிட காரணத்தை விளக்க ப்ராத்திக்கிறேன்.
ஒவ்வொரு பத்திலிருந்து ஒரு திருவாய்மொழி, அது திவ்யதேச விஷயமாகவோ அல்லது ப்ரதானமாக அர்த்தத்தைச் சொல்லக்கூடிய விஷயமாகவோ இருப்பதை பெரியவர்கள் கோயில் திருவாய்மொழியாக வைத்திருக்கிறார்கள். இதற்கென்று தனிப்பட்ட காரணம் கிடையாது. பெரியவர்கள் தங்கள் அனுபவத்தை அவ்வாறு வைத்திருக்கிறார்கள் என்பது மட்டும்தான்.
தசரத சக்ரவர்திக்கு ஶ்ரவணின் பெற்றோர் கொடுத்த சாபத்தால் புத்ர சோகம் ஏற்பட்டது என்று புரிகிறது. ஆனால் ஒரு தவறும் செய்யாத இராம பிரான் ஏன் தன் புத்திரர்களைப் பிரிந்து வாழ நேரிட்டது? தன் புத்திரர்கள் இராமாயண கதையைப் பாடும்போதுதான் அவர்களைப் பார்க்கும் பாக்கியத்தையே பெற்றார். ஏதேனும் இதற்கு காரணம் உள்ளதா? கேள்வி தவறென்றால் மன்னிக்கவும்.
தசரதற்குச் சாபத்தால் புத்திர சோகம் வந்ததென்றால் எல்லோருக்கும் அவ்வாறாக வரவேண்டிய அவசியமில்லையே. எத்தனையோ பேருக்கு அவரவர்களின் கர்மவசத்தால் அவ்வாறு ஏற்படுகிறது. பெருமாள் ஶ்ரீராமனுக்கு கர்மா கிடையாது, கர்மவசத்தால் வந்ததும் அன்று. அவர் அபிநய ரூபமாக பண்ணுகிறார் என்பதுதான்.
ஸ்வாமி தேஶிகன், தேவதாந்த்ர ப்ரசாதங்கள் போல் எம்பெருமாள் ப்ரசாதம் நிர்மால்யம் அன்று என்றும் ஊர்த்வபுண்ட்ரம் ஶாஸ்த்ரீயமானது என்றும் விளக்கிய க்ரந்தங்கள் உள்ளதா?
ஸத் சரித ரக்ஷா, ஶ்ரீ பாஞ்சராத்ர ரக்ஷா போன்ற க்ரந்தங்களில் இருக்கிறது.
ஆண்டாளின் திருக்கையில் இருக்கும் கிளிக்கு என்ன தாத்பர்யம் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
ஆண்டாளே ஒரு கிளி வளர்த்தார் என்பதாகவும் அக்கிளிக்கு பகவானின் திருநாமங்களைச் சொல்லிக்கொடுத்தார் என்பதாக அவளுடைய பாசுரங்களில் இருக்கிறது. “கூட்டிலிருந்து கிளியெப்போதும் கோவிந்தா கோவிந்தாவென்றழைக்கும்”, “எடுத்த என் கோலக்கிளியே” என்றெல்லாம் சாதிக்கிறார். கிளி வளர்த்து பகவான் நாமங்களைச் சொல்லச்சொல்லியிருந்தார் என்பதாகத் தெரிகிறது. அதன் அடையாளமாக அவர் கையில் கிளி இருக்கிறது.
திருமங்கையாழ்வார் பற்றி ஏதேனும் தேஶிகம் அல்லது நம் பூர்வாசார்யர்களின் ஸ்தோத்ரம் (பெரிய திருமொழி தனியன் தவிர) உள்ளதா?
திருமங்கையாழ்வாரைப் பற்றி ஸ்தோத்ரம் இருப்பதாகத் தெரியவில்லை ஆனால் பாசுரங்கள் ஆங்காங்கே இருக்கிறது. ஸ்வாமி தேஶிகன் கூட “அறிவுதரும்” என்று ப்ரபந்த ஸாரத்தில் சாதித்திருக்கிறார்.
கோயில் கோஷ்டியில் திருவாய்மொழி சேவிக்கும் போது யாராவது ஒருவர் கோஷ்டி சேவிக்காமல் எழுந்து போகலாமா?
பொதுவாக கோஷ்டி நடக்கும்போது எழுந்து போகக்கூடாது. ஏதேனும் காராணதிற்காக எழுந்துபோவதாய் இருந்தால் சிறு அபசாரம் ஏற்படும்.
நாராயணனை அடைய அவனே உபாயமாக இருக்க, கண்ணனை அடைய ஆயர்பாடி கோபிகைகளும் அவர்களைப் பின்பற்றி ஆண்டாளும் பாவை/காத்யாயனி நோன்பு நோற்க காரணம் என்ன?
கோபிகைகள் காத்யாயனி விரதமிருந்தார்கள். அங்கு அவர்களுடைய வழக்கம் அப்படியிருந்தது.வேண்டிய வரனைப் பெறுவதற்கு அவர்கள் அதை உபாயகாக வைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரிந்த ரீதியில் அவ்வாறு செய்தார்கள்.
ஆண்டாள் காத்யாயனி விரதம் இருக்கவில்லை. காத்யாயனி விரதம் கோபிகைகள் செய்தார்கள் என்பதை பாவனா ப்ரகர்ஷனத்தில் ஏற்கொண்டு எம்பெருமானைக் குறித்து “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று சொல்லிதான் விரதமிருதாள்.
ஆண்டாளுக்கு உபாயமும் உபேயமும் எம்பெருமான்தான். அவள் கோபிகைகளை அனுகரித்து வேறு தேவதாந்தரத்தை அல்லாமல் எம்பெருமானைக் குறித்துதான் விரதமிருந்தாள். கோபிகைகள் அன்று அவர்கள் குல வழக்கப்படிச் செய்தார்கள் அவ்வளவே.
பாலகாண்டம் ஸர்க்கம் 45இல் சமுத்ர மதனத்தின் போது தோன்றிய ஸ்ரீமன் நாராயணன், சிவனிடம் விஷத்தை அருந்தச் சொல்லும்போது சொல்லும் ஸ்லோகம் பின்வருமாறு:
உவாசைநஂ ஸ்மிதஂ கரித்வா ருத்ரஂ ஷூலபரிதஂ ஹரி:.
தைவதைர்மத்யமாநே து யத்பூர்வஂ ஸமுபஸ்திதம் ৷৷1.45.23৷৷
த்வதீயஂஹி ஸுரஷ்ரேஷ்ட ஸுராணாமக்ரஜோஸி யத் .
அக்ரபூஜாமிமாஂ மத்வா கரிஹாணேதஂ விஷஂ ப்ரபோ৷৷1.45.24৷৷
இதில் பகவான் தன்னை விட தாழ்ந்த தேவதையான சிவனைப் ப்ரபோ என்று ஏன் அழைக்க வேண்டும்? இதற்கு நமது பூர்வாச்சாரியர்கள் ஏதேனும் விளக்கம் அளித்து உள்ளனரா?”
பிரபு என்று சொன்னால், தேவர்களுக்கு பிரபுவானவன். அவர்களுக்கு நீ கதியாக இருந்து, இந்த விஷத்தை சாப்பிட்டு அனுக்ரஹம் பண்ணவேண்டும் என்பதற்காக சொன்னது.
ஸ்ரீ வைஷ்ணவ முறைப்படி ஸ்ரீ ராமாயணத்திற்கு கோவிந்தராஜர் உரை எழுதியது போல் மஹாபாராதம், மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திற்கு யாரேனும் உரை எழுதி உள்ளனரா?
ஶ்ரீவைஷ்ணவ முறைப்படி ஶ்ரீமத் பாகவதம், மஹாபாரதம் முதலியவற்றிற்கு வ்யாக்யானம் எழுதியிருக்கிறார்கள். ஶ்ரீமத் பாகவதத்திற்கு ஶ்ரீவீரராகவீயம் என்று வ்யாக்யானம் இருக்கிறது. அதேபோல் சுகபக்ஷீயம் என்ற வ்யாக்யானமும் இருக்கிறது அதையெல்லாம் பார்த்துக்கொள்ளலாம்.
ஶ்ரீ பூ நீளா தேவிகள் மஹாலக்ஷ்மீ தாயாரின் அம்சமா? பொதுவாக அடியேன் அவர்களை தனியாக சேவிப்பதில்லை என்று வருத்தமாகவுள்ளது. மேலும் கோதாதேவி பூதேவியின் அம்சமா? விளக்கவும். அவர்களை எப்படிச் சேவிக்கவேண்டும்?
ஶ்ரீதேவி என்பவள் மஹாலக்ஷ்மீ, பிராட்டி. அந்த ஶ்ரீயுடன் கூடிய நாராயணன்தான் பரம்பொருள். அதனால் அவள் பரமாத்மா என்ற கோஷ்டியில் சேர்ந்தவள்.
பூ, நீளா தேவி என்பவர்கள் நித்யசூரிகள். எம்பெருமானின் திவ்ய மஹிஷீகள். அவர்கள் ஜீவாத்மாகள்தான். ஆனால் நமக்கெல்லாம் சேவ்யாள். எப்படி அனந்த கருட விஷ்வக்ஸேநர்களோ அவர்களை போல் பூதேவி, நீளா தேவிமார்களை நாம் சேவிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். பிராட்டியின் சம்பந்தம் இவர்களுக்கு ரொம்ப உண்டு. அவர்களுக்கு எப்படி ஶ்ரீதேவியின் சம்பந்தம் என்பதை ஸ்தோத்ரங்களில் ஆசார்யபுருஷர்கள் பாடியிருக்கிறார்கள்.
கோதாதேவி என்பவள், பூமாதேவியின் அம்சம்தான். அவள் ஆழ்வார்கள் கோஷ்டியில் இருப்பதால் ஆசார்யகோஷ்டியிலும் சேர்கிறாள். நமக்கு ஆசார்யர் ஸ்தானத்திலும் இருக்கிறார். நம்மாழ்வார்க்குள் அனைத்து ஆழ்வார்களும் அடக்கம். ஆகையால் ஆசார்ய கோஷ்டியிலும் அவள் இருக்கிறாள். எம்பெருமானின் திவ்யமஹிஷியாகவும் இருக்கிறாள். ஆகையால் அவர்களை நாம் மிகவும் ஶ்ரத்தையாக வழிபடவேண்டும்.
“ஸர்வத₄ர்மான்பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ ।
அஹம் த்வாம் ஸர்வபாபேப்₄யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:” என்ற சரம ஶ்லோகத்தில், “அஹம் த்வா” என்றும் “அஹம் த்வாம்” என்றும் இருவேறு பாடங்கள் இருக்கிறது, இதில் எது சரி?
த்வா, த்வாம் இரண்டிற்கும் “உன்னை” என்ற ஓரே அர்த்தம்தான். த்வா என்றுதான் சொல்லிக்கொண்டிருகிறார்கள். அதை சொன்னாலே போதும்.
உபநிஷத், புராணங்களில் கூறப்படும் ஶ்ரீலக்ஷ்மீ அஷ்டோத்ர ஶதநாம ஸ்தோத்ரம் ருத்ரன் பார்வதி தேவிக்கு கூறியதா?
உபநிஷத், புராணங்களில் கூறப்படும் ஶ்ரீலக்ஷ்மீ அஷ்டோத்ர ஶதநாம ஸ்தோத்ரம் ருத்ரன் பார்வதி தேவிக்குச் சொன்னதுதான்
திவ்ய ப்ரபந்தம் போன்றவைகள் சேவிக்கும்போது ற-காரத்தை ன -காரமாக ஏன் சொல்கிறார்கள்? அதன் காரணம் என்ன? இப்படி மாற்றிச் சேவிப்பதால் அதன் பொருள் மாறிவிடாதா? நம் ஸம்ப்ரதாயத்துப் பெரியவர்கள் எப்படிப் பின்பற்றுகிறார்கள்?
திவ்ய பிரபந்தம் இசையாக பாடுவது விசேஷம். அதனால் இனிமையாக இருக்க அப்படிச் சொல்வர்.
அந்தந்தப் பருவத்தில் ஏற்படும் காம க்ரோதாதிகளை எப்படிக் கட்டுப்படுத்துவது. உதாஹரணத்திற்கு: பிள்ளை பேறுகள் பெற்ற க்ருஹஸ்தர்களுக்கு அர்த்தத்தின் மீது அதிக காமம் இருக்கும், ப்ரஹ்மசாரிகளுக்கு ஏற்படும் ஆசை வேறு விதமாக இருக்கும். இப்படி பல்வேறுபட்ட காமங்களை அடக்குவது எப்படி?
அந்தந்தப் பருவத்திலே ஏற்படக்கூடிய காமக் க்ரோதங்களை ஜெயிக்க வைராக்ய பஞ்சகத்தைப் பாராயணம் செய்யலாம் என்று தோன்றுகிறது. வைராக்ய பஞ்சகம் என்பது ஒருவனுக்கு ஐஶ்வர்யம் க்யாதி இவற்றின் மேல் இருக்கக்கூடிய மோகத்தைப் போக்கும். ஸ்வாமி தேஶிகன் ஸ்தோத்ரம் எப்படி இதையெல்லாம் த்ருணமாக மதித்தார் என்று இந்த ஸ்தோத்ரம் சொல்லுகிறது அதனால் இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்தோமேயானால் நமக்கும் வைராக்யம் ஏற்படும்.
இராமாயணத்தில் கைகேயி 14 வருடங்கள் என்று குறிப்பாக கேட்க என்ன காரணம்? 12, 20, 25 வருடங்கள் என்று ஏன் இல்லை? 14 என்பதற்கு ஏதேனும் மகத்துவம் இருக்கிறதா?
ஸ்ரீமத் இராமாயணத்திலேயே அதற்கு சமாதானம் இருக்கின்றது. 14 வருடங்கள் ஆனால் ஒரு தலைமுறை ஆகிவிடும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. பெருமாள் ஸ்ரீ ராமருடன் பழகிய ஜனங்கள் வேறு ஒருவர் வருவதை ஒற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் 14 வருடங்கள் ஆயிற்றேயானால் அந்தத் தலைமுறைக்கு அடுத்த தலைமுறை வர ஆரம்பித்து விடும். அதில் எல்லோரும் பரதனுடன் பழகியவர்களாகதான் இருப்பார்கள். அவர்கள் இராமன் வந்தாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். 14 வருடங்கள் பரதன் ஆண்டு விட்டால் தொடர்ந்து பரதனே இருக்க முடியும் என்கின்ற ஒரு கணக்கில் சொல்கிறார். வேறு ஒரு காரணமும் இல்லை. 12, 20 என்பதற்கெல்லாம் அதில் ஒன்றும் சொல்லவில்லை.
குமார வரதாசார்யாரின் கோகில சந்தேஶம், ஶ்ரீ லக்ஷ்மீ ஶதகம், போன்ற கரந்தங்கள் எங்கே கிடைக்கும். குறிப்பாக ஶ்ரீ லக்ஷ்மீ ஶதகம் புத்தக வடிவிலோ, SoftCopyயாகவோ எங்கே கிடைக்கும்? ஸ்ரீமதி ப்ரபாசேனேஷ் அவர்களின் லக்ஷ்மீ அஷ்டோத்ர உபந்யாஸத்தில் இந்த க்ரந்தம் பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். சடகோபன் ஸ்வாமி (Sadagopan. Org) அவர்களும் ஶ்ரீஸ்தவத்தின் வ்யாக்யான முன்னுரையில் இந்த க்ரந்தம் பற்றி குறிப்பிட்டிருப்பார்.அதனால் இதை வாசிக்க ஆவலாக உள்ளது.
குமார வரதாசார்யாரின் க்ரந்தங்கள் எங்குக்கிடைக்கும் என்பது தெரியவில்லை.
ஶ்ரீவைஷ்ணவர்கள் நாத்திக வாதங்களை எப்படி வென்றார்கள்? யாரெல்லாம் அவ்வாறு வென்றது?
அக்காலத்தில் வாதம் என்று ஒன்று நடக்கும், ஶ்ரீவைஷ்ணவர்கள் அவர்களை வாதத்தில் வென்றார்கள். குறிப்பாக பௌதமதம், ஜெயின மதம் இவர்களையெல்லாம் ஜயித்திருக்கிறார்கள். ஸ்ரீபாஷ்யகாரர் ஜெயினர்களையும், ஸ்வாமி தேஶிகன் பௌதர்கள், ஜெயினர்கள் என அனைவரையும் வாதங்களினால் ஜயித்தார் என்பதாக இருக்கின்றது.
1) ஸ்ரீ வைஷ்ணவ முறைப்படி எழுதப்பட்ட ஸ்ரீ ராமாயணம், மஹாபாராதம், ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை, நாலாயிர திவ்யபிரபந்த பாசுரங்கள்/ உரை புத்தகங்களின் பெயர்கள் சிலவற்றைச் சொல்ல முடியுமா?
2) நம் வீட்டில் வளரும் துளஸீச் செடியில் இருந்து தரையில் விழுந்த இலைகளைத் திருவாராதனத்திற்குப் பயன்படுத்தலாமா?
3) ஸ்ரீமத் பாகவதத்தில் சுகபிரம்ம மகரிஷி பரிக்ஷித் மஹாராஜாவின் ராசலீலை பற்றிய கேள்விக்கு விடை அளிக்கும் போது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் செய்ததைப் போல் நாமும் செய்ய முடியாது என்று கூறுகிறார். அதற்கு உதாரணமாக சிவனைப் போல் நாமும் விஷம் அருந்த முடியாது என்று கூறுகிறார். பகவான் ஸ்ரீமன் நாராயணனே, ஏன் ஸ்ரீ கிருஷ்ணனே பல செயற்கரிய செயல்கள் செய்திருக்க, அவற்றில் ஏதாவது ஒன்றை உதாரணமாகக் கூறாமல், சிவன் விஷத்தை அருந்தியதை ஏன் கூறவேண்டும்? இது தாமஸ தெய்வமான சிவனை உயர்த்திச் சொல்வது போல் உள்ளதே. இதைச் சற்று விளக்க வேண்டுகிறேன்.
4) துளஸீ மாலையை எப்போழுதும் கழுத்தோடு அணிந்து கொள்ளலாமா?
5) பரசுராமர் ஸ்ரீமன் நாராயணனின் ஆவேச அவதாரம். அப்படி இருக்க, அவர் தாரதம்யத்தின் மிகவும் குறைந்த தேவதையான அஷ்ட வசுக்களின் அம்சமான பீஷ்மரிடம் எப்படித் தோற்றார்?
ஸ்ரீவிஷ்ணு புராணம், மஹாபாரதம் இவையெல்லாம் ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரியா டிரஸ்டில் போட்டிருக்கிறார்கள் அவர்களை அணுகவும். ஸ்ரீமத் ராமாயணம் போட்டு இருக்கிறார்கள் ரொம்ப மிகவும் பழைய பதிவு இருக்கின்றது இப்பொழுது கிடைக்குமா என்று தெரியவில்லை.அதைப் பார்த்து சொல்கிறேன். பகவத் கீதை இப்பொழுது APN ஸ்வாமி போட்டிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். திவ்ய ப்ரபந்தம் எல்லாம் ஸ்ரீ வைஷ்ணவ முறைப்படிதான். அதனால் எங்கே கிடைக்குமோ வாங்கிக் கொள்ளலாம். நமது ஸம்ப்ரதாயக்காரர்கள் போட்டிருப்பதை வாங்கிக் கொள்ளலாம்.
துளஸீச் செடியிலிருந்து விழுந்த இலைகளை திருவாதாரனத்திற்குப் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் துளஸீயை சுத்தமாக இருந்து மந்த்ரம் சொல்லி க்ரஹித்துதான் உபயோகப் படுத்தவேண்டும்.
பரிக்ஷித்மஹாராஜாவிற்கு விடை அளிக்கும் பொழுது சிவனைப் போல் நாமும் விஷம் அருந்த முடியாது என்று ஸ்ரீமத் பாகவதத்தில் சுகபிரம்ம மகரிஷி கூறுகிறார். ஏன் பெருமானை உதாஹரணமாக சொல்லாமல் சிவனைச் சொல்லி இருக்கிறார் என்றால் சிவன் பண்ணுவதையே நம்மால் பண்ண முடியாது என்னும் பொழுது பெருமாள் பண்ணுவதை நாம் எப்படிப் பண்ண முடியும் என்பதற்காகத்தான். அந்தப் பாவத்தில் சொல்லியிருக்கிறார். இதை எல்லோருமே அப்படித்தான் வ்யாக்யானம் பண்ணியிருக்கிறார்கள். பகவானுடைய லீலைகள் எல்லாம் இருக்கட்டும் சிவனுடைய லீலைகளையே நம்மால் பண்ண முடியாது என்கின்ற அர்த்தத்தில் சொல்லி இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம்.
துளஸீ மாலையைச் சுத்தமாக இருக்கும் பொழுது கழுத்தில் அணிந்து கொள்ளலாம். அதனால் சுத்தமாக பகலில் மட்டுமே அணிந்து கொள்வார்கள் மற்ற சமயங்களில் தீட்டுப் படாமல் இருக்க வேண்டும். அந்த மாதிரி இருந்தால் தரித்துக் கொள்ளலாம்
பரசுராமர் பெருமாளுடைய அம்சமாக இருந்தாலும் ஜீவாத்மா என்று ஒருவர் அவருள் இருக்கின்றார் இல்லையா அவர்தான் பீஷ்மரிடம் தோற்றார். பெருமாள் அம்சத்தின் மூலமாக அவர் க்ஷத்ரியர்களை வதம் செய்தார். அப்படிப்பட்ட சக்தி அவருக்கு வந்தது என்று தெரிகிறது. ஆனால் பீஷ்மரிடம் தோற்கும் பொழுது அந்தப் பகவதம்சம் வேலை செய்யவில்லை, ஏனென்றால் பரசுராமர் ஜீவர் என்பதனால். அந்த மாதிரியான ஆவேச அவதாரங்கள் எல்லாம் அப்படித்தான். ஜீவன் என்கின்ற அம்சத்தில் சிலது நடக்கும் பெருமாளுடைய ஆவேசம் என்கின்ற அர்த்தத்தில் சிலது நடக்கும். பெருமாளுடைய ஆவேச அவதாரம் முடிந்தது என்று வைத்துக் கொண்டால் அவர் ஜீவன் என்கின்ற கணக்கில் ஆகிவிடுவார்.
வராஹ கவசத்தில் பார்வதி உவாச, ஶங்கர உவாச என்று வருகிறதே பரந்யாஸம் ஆனவர்கள் சேவிக்கலாமா?
பார்வதி உவாச ஶங்கர உவாச என்று பரந்யாஸம் ஆனவர்கள் சேவிக்கலாம். ஏனென்றால் சிவனும் பார்வதியும் எம்பெருமான் பெருமையைச் சொல்வதாகதான் அதில் வரும். அதனால் அவர்கள் பெருமாள் பெருமையைச் சொல்கிறார்கள் என்கின்ற படியினால் நாம் தாராளமாகச் சொல்லலாம்.
உளன் கண்டாய் நன்னெஞ்சே என்ற முன்னடி வரிகள் 3 ஆழ்வார்கள் தங்கள் ப்ரபந்தங்களில் (முதல் திருவந்தாதி 99, மூன்றாம் திருவந்தாதி 40, நான்முகன் திருவந்தாதி 86) பாடியுள்ளனர். இதில் ஏதேனும் சிறப்புள்ளதா?
“உளன் கண்டாய் நன்னெஞ்சே” என்ற வரிகள் இயற்பாவில் பலமுறை வந்திருக்கின்றது. இது ஆச்சரியமான ஒரு அனுபவம். பாசுரத்தைப் பார்த்தால் நமக்கே புரியும். “உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமனென்றும் உளன் கண்டாய் உள்ளுவாருள்ளத்து உளன்கண்டாய்” என்று பெருமாளை யார் நினைக்கிறார்களோ அவர்கள் மனதில் பெருமாள் இருக்கின்றார். இருக்கிறாரா இல்லையா என்றால் நினைத்து பார்த்தால்தானே தெரியும். அதனால் பகவானை யார் நினைத்து பார்க்கிறார்களோ அவர்கள் மனத்தில் பகவான் கட்டாயமாக இருக்கின்றார். அவர்களைக் கேட்டால் தெரியும். பகவானை நினைத்துப் பார்க்காமல் இருக்கின்றவர்கள், அவன் இருக்கிறானா இல்லையா என்று வெளியில் கேட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். அதனால் நினைக்கிறவனைப் பொறுத்த வரைக்கும் அவன் மனத்தில் பகவான் நித்யமாக இருந்து கொண்டிருக்கிறார். அந்த அனுபவத்தின் மூலம் அவரை நன்றாக உணர முடியும்.
அது மட்டுமல்லாமல், அதே பகவான் தான் "வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்துமேயானும்" என்று சொல்வது போல் வெளியில் பல இடங்களிலும் நம் ஹ்ருதயத்திலும் பகவான் இருக்கின்றார் என்று அழகாகச் சொல்லக்கூடிய பாசுரம் என்பதுதான் அதனுடைய விசேஷம். "விபவம் அர்சா அந்தர்யாமி" என்று பகவான் இப்படி பல ரூபங்களில் இருக்கின்றதே நமக்குப் பலவிதமாக சேவை சாதிப்பதற்கு தான். அந்தர்யாமியாக பகவான் உள்ளுக்குள் இருக்கின்றான், அர்சா ரூபத்தில் பகவான் வெளியில் இருக்கின்றான், விபவ ரூபத்தில் பகவான் அவதாரம் எடுத்து இருக்கின்றான். அப்படி எல்லாவிதமாகவும் பகவான் இருக்கும் பொழுது அவனை இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். நமக்குப் புரிய வைப்பதற்காக பல ரூபங்களில் பகவான் இருக்கின்றான் என்று சொல்லக்கூடிய பாசுரம் அது.
திவ்ய ப்ரபந்தம், ஸ்வாமி தேஶிகனின் ஸ்தோத்ர பாடங்கள் மற்றும் ப்ரபந்தங்கள், பாதுகா ஸஹஸ்ரம் போன்றவைகளை எப்படிச் சேவிக்க வேண்டும், இந்த ஶ்லோகம் இந்த நேரத்தில் சேவிக்கலாம் (காலை/மாலை), இந்த இந்த நக்ஷத்திரம் , திதி, நாள் அன்று என்னென்ன சேவிக்கலாம் அல்லது இவையிவை எப்போது சேவிக்கக்கூடாது என்று ஒரு குறிப்பை GSPK புத்தக வடிவில் கொடுத்தால் உபயுக்தமாக இருக்கும்.
பொதுவாக ஸ்தோத்திரங்கள் மற்றும் ப்ரபந்தங்களை எப்பொழுது வேண்டுமானாலும் சேவிக்கலாம். இதில் பெரிய நியமங்கள் எதுவும் கிடையாது. வேதபாராயணத்திற்கு நிறைய நியமங்கள் உண்டு. இந்த நேரத்தில்தான் சேவிக்க வேண்டும் அனத்யயனத்தில் சேவிக்கக்கூடாது முதலானதெல்லாம் உண்டு. சில வேத பாகங்களை இரவில் சேவிக்கக்கூடாது என்று உண்டு. தீட்டுச் சமயத்தில் செல்லக்கூடாது, இதுபோல் எத்தனையோ நியமங்கள் உண்டு.
ஆனால் திவ்ய ப்ரபந்தத்திற்கோ, ஸ்தோத்ரங்களுக்கோ அந்த மாதிரி பெரிய அளவில் நியமங்கள் எல்லாம் கிடையாது. தாராளமாக எப்பொழுது வேண்டுமானாலும் சேவிக்கலாம். காலை, மாலை சேவிக்கலாம். சிலதில் சேவித்தால் விசேஷ பலன் உண்டு என்று சொல்லுவார்களே தவிர மற்றபடி கூடாது என்று எதுவும் கிடையாது. ஒன்று மட்டும்தான் மார்கழி மாதம் திருப்பாவை மாதம் அந்தச் சமயங்களில் திவ்ய ப்ரபந்தத்திற்கு அனத்யயனம் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பாவைத் தவிர வேறு எதுவும் சொல்ல மாட்டார்கள். அந்தச் சமயத்தில் அந்த ஊர் பெரியவர்களைக் கேட்டால் சொல்லுவார்கள். அது பெரிய விஷயம் கிடையாது. அது தவிர மற்றபடி எந்தப் பாதகமும் கிடையாது. வேதத்திற்கு இருப்பது போல் அத்தனை நியமங்களும் இவற்றிற்குக் கிடையாது.
சாதாரணமாக புழக்கத்தில் நாம் கருடாழ்வார் ஸந்நிதி என்று சொல்வதுண்டு. பழவேரி ஸ்ரீ.உ.வே.லஷ்மி நரஸிம்ஹாசார்யார் (பாலாஜி) ஸ்வாமி உபன்யாசத்தில் நம் சம்ப்ரதாயத்தில் கருடாழ்வார் என்று சொல்வதில்லை, பெரிய திருவடி என்று சொல்கிறோம் என்று கூறக்கேட்டேன். இதற்கு ஏதேனும் காரணங்கள் உண்டா? சற்று விளக்கவும். அப்படியானால் நாம் கருடாழ்வார் என்று சொல்வது தவறா?
நம் ஆசார்யர்களுடைய வ்யாக்யான க்ரந்தங்களிலே ஆழ்வார்கள் என்று குறிப்பிட்டால் ஸ்ரீ சக்ரத்தாழ்வாரும், ஸ்ரீ பாஞ்சசன்யமான சங்கத்தாழ்வாரும் என்று அர்த்தம்.
அனுமனுக்குத் திருவடி என்றும், கருத்மானுக்குப் பெரியதிருவடி என்று ஸ்ரீகோசங்களிலே ஆசார்யர்களுடைய வ்யவகாரம். அதை வைத்துதான் ஸ்ரீ உ வே பாலாஜி ஸ்வாமி ஸாதித்திருக்கிறார்.
நாம் கருடாழ்வார் என்று சொல்வதில் விரோதமில்லை, சொல்லலாம். ஆனால் பெரியதிருவடி என்று ஆசார்யர்களுடைய வ்யவகாரம் என்பது ஸ்ரீகோசங்களிலே தெரிகிறது.
ஸ்ரீஸ்துதியை நித்தியம் கேடக்லாமா? அதைச் சொன்னால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் கேட்பதினாலும் கிடைக்குமா?
ஸ்ரீஸ்துதியை நித்யம் தாராளமாகக் கேட்கலாம்.
கேட்டாலும் நல்ல பலன்கள் உண்டாகுமா என்றால் யாரால் எல்லாம் சொல்ல முடியுமோ அவர்கள் சொன்னால்தான் அந்தப் பலன் கிடைக்கும். சிலருக்கு வாய் திறந்த சொல்லமுடியாமல் அடியோடு அசக்த நிலையில் இருப்பவர்களுக்குக் கேட்டாலும் பலன் கிடைக்கும்.
மத்ஸ்ய, கூர்ம, வராஹ அவதாரங்களை ந்ருஸிம்ஹ அவதாரம் போல் ஏன் காட்டுகிறோம்? அவ்வதாரங்கள் ஸ்ரீ ந்ருஸிம்ஹ அவதாரம் போல் நரங்கலந்த ரூபம் அல்லவே? இல்லை அவ்வதாரங்களும் நரங்கலந்த ரூபத்துடனேதான் எம்பெருமான் அவதரித்தாரா?
மத்ஸ்ய, கூர்ம, வராஹ அவதாரங்கள் பூரணமாகவே மத்ஸ்ய, கூர்ம, வராஹங்கள் தான். மேலே பெருமாள் திருமேனி காட்டுவது இவை எம்பெருமானின் அவதாரம் என்பதற்காக மட்டுமே, ந்ருஸிம்ஹ அவதாரம்போல் நரங்கலந்த பாதி நரம் பாதி ஸிம்மம் என்பது போன்ற அவதாரங்கள் இல்லை.
ஸ்ரீமத் இராமாயணத்தில் ஸ்ரீராமபிரான் கணையாழியை அடையாளமாக அனுமனிடம் கொடுத்தார் என்றால், அவர் அயோத்தியில் இருந்து அனைத்தையும் ஆபரணாதிகள் உட்பட அனைத்தையும் துறந்தல்லவா ஆரண்யம் சென்றார்? இல்லை இந்த ஒரு ஆபரணத்தை மட்டும் தன்னுடன் எடுத்துச்சென்றாரா?
பெருமாள் கொண்டு சென்ற கணையாழி என்பது மற்றவை போல் ஒரு ராஜா அணியும் கிரீடம், மாலை, கைவளைகள் போன்ற ராஜாபரணங்கள் கிடையாது. இது பெருமாளுக்கும் தாயாரும் விவாஹ காலத்தில் அவர்கள் இருவருக்கும் தனிப்பட்டமுறையில் பரஸ்பரம் அணிந்த ஒரு ஆபரணம் என்று கொள்வது உசிதமாக இருக்கும்.
எம்பெருமான் இராஜாவின் ஆபரணங்களை எல்லாம் துறந்து, தனக்கேன்றுள்ள விசேஷ ஆபரணத்தை மட்டும், எப்படி பவித்திரம் போன்றவைகளோ அது போல் இதை பெருமாளும் பிராட்டியும் எடுத்துக்கொண்டு போனார்கள் என்று எடுத்துக்கொள்வதுதான் உசிதம்.
கண்ணன் எம்பெருமான் ததிபாண்டனின் பானைக்கும் மோக்ஷம் கொடுத்தார் என்றால், ஒருச்சித்தான பானைக்குள்ளும் ஆத்மா இருக்கிறதா? எப்படிப் புரிந்துகொள்வது?
ஆமாம் பானைக்குள்ளும் ஆத்மா இருக்கிறது. எல்லா வஸ்துகளுக்கு உள்ளும் ஜீவாத்மா இருக்கிறது. ஜீவாத்மா இல்லாத எந்த வஸ்துவும் இல்லை என்று ஸ்ரீபாஷ்யகாரர் சாதித்திருக்கிறார். அதன் ஞானம் என்பது மிகமிகக் குறைவாக இருக்கின்றபடியால் நமக்குத் தெரியாது. ஆகையால் எல்லா வஸ்துக்குள்ளும் ஆத்மா உண்டு அதற்கு மோக்ஷம் கொடுத்தது சரியே.
நீராட்டம் பதிகத்தில் எம்பெருமானை ஸ்நானம் செய்ய அழைக்கும்படி இருக்க அதை திருமஞ்சனம் ஆரம்பிக்கும் முன் இல்லாது முடிந்தபின் ஏன் சேவிக்கின்றோம்?
பல கோவில்களில் நீராட்டமென்பது திருவாராதனம் முடிந்தபிறகும், சில கோவில்களில் முதலிலும் சேவிப்பதென்பது ஒரு வழக்கமாக வந்திருக்கிறது அவ்வளவே.
பொதுவாக ஸ்ரீவைஷ்ணவர்கள் சனி (குறிப்பாக 71/2 சனி) திசை நடக்கும்போது சேவிக்க ஏதேனும் ஸ்தோத்ரம்/ப்ரபந்தம் உள்ளதா?
சாதாரணமாக ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு பெருமாள் விஷயமாக எந்த ஸ்தோத்ரதைச் சொன்னாலுமே இந்தத் திசைகளெல்லாம் மாறித்தரும் அதன் வீர்யங்களெல்லாம் குறையும். வேண்டுமென்றால், அபாமார்ஜந ஸ்தோத்ரம் என்பதை சனி திசையின்போது பெரியவர்கள் சேவிக்கச் சொல்வார்கள். தசாவதார ஸ்தோத்ரம் என்பது எல்லா க்ரஹங்களுக்கும் உள்ள ஸ்தோத்ரம். ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு க்ரஹத்திற்கு அதிபதியான நாராயணனைச் சொல்வதாகும். குறிப்பாக சனி திசைக்கு தசாவதார ஸ்தோத்ரத்தில் இருக்கும் கூர்மாவதார ஶ்லோகத்தைப் பல ஆவ்ருத்தி சொல்லலாம்.
1) பூக்கும் செடிகளில், எங்கள் வீட்டில் செம்பருத்திச் செடி மட்டுமே உள்ளது. செம்பருத்திப் பூவை பூச்சூட்டலின் போது பெருமாளுக்குச் ஸமர்ப்பிக்கலாமா?
2) “தாழ் சடையும் நீள் முடியும்” என்ற பேயாழ்வாரின் பாசுரத்தின் உண்மையான பொருள் என்ன?
3) “தாள தாமரையான் உனது உந்தியான்” என்னும் திருவாய்மொழி பாசுரத்தில் ஆழ்வார் “வாள் கொள் நீள் மழு ஆளி உன் ஆகத்தான்”, என்று சிவன் ஸ்ரீமன் நாராயணனின் திருமேனியின் ஒரு பகுதியில் இருப்பவன் என்று கூறுகிறார். இந்தக் கருத்து, சைவர்கள் கூறும் சங்கர நாராயண வடிவத்துடன் ஒத்துப் போவது போல் உள்ளதே. இதற்கு நம் ஆச்சரியார்கள் ஏதாவது விளக்கங்கள் அளித்துள்ளார்களா?
4) பகவானைப் போலவே சக்கரத்தாழ்வாரும் நித்யமானவர் என்பது இருக்க, ஸுதர்சன ஜெயந்தி என்பது எந்த நாளைக் குறிக்கிறது?
செம்பருத்திப்பூவைப் பொதுவாகச் ஸமர்ப்பிப்பதில்லை.
இந்தப் பாசுரத்தின் பொருளைப் பிறகு விரிவாகச் சொல்கிறோம். அவன் அந்தர்யாமியாக இருக்கிறான் என்றர்த்தத்தில்தான் வரும்.
எல்லாவிடங்களிலும் ப்ரம்மாம்சம் இருக்கிறப்படியினால் “உன் ஆகத்தான்” என்றால், பெருமாளின் ஒரு பகுதியில் சிவன் இருக்கிறார் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளவேண்டும். இதையும் விரிவாகப் பிறகு சொல்கிறோம்.
இவர்கள் நித்யசூரிகள்தான் என்றாலும், ஸ்ரீராம க்ருஷ்ண ஜயந்தி போல் திருவாழியாழ்வானும் ஒரு கல்பதில் அவதாரம் பண்ணியிருக்கிறார் அதை ஸ்ரீஸுதர்சன ஜயந்தியாகக் கொண்டாடுகிறோம்.
எனது 4.5 வயது சிறுமி கேட்கும் இக்கேள்விகளுக்கு எப்படிப் பதில் அளிப்பது. ஏன் எம்பெருமானுக்குப் பெற்றோர்கள் இல்லை, அவர் எப்படித் தனியாக இருப்பார்? நாம் அவரை நம் அகத்திற்கு அழைத்துக்கொண்டு வரலாமா?
பெருமாள் எல்லாரையும் படைக்கின்றபடியால், அவனுக்கு அப்பா, அம்மா இல்லை.ஸ்ரீ ராம க்ருஷ்ணாதி அவதாரங்களில் பெருமாளுக்கு அப்பா, அம்மா இருக்கிறார்கள்.
அவர் தனியாக இல்லை, எப்போதும் நம்முடனே இருக்கிறார், அந்தர்யாமியாக இருக்கிறார் நம் கண்களுக்குத் தெரியாமலே நம்முடனே இருப்பதினால் தனியாக அகத்திற்கு அழைத்து வரவேண்டுமென்றில்லை என்று குழந்தைக்கேற்றவாறு சொல்லவேண்டும்.
குறிப்புகள்:
மேலும், பெருமாளுக்கு நாம் பெற்றோராக இருக்க ஆசைப்பட்டால், யசோதா போல் அந்த பாவத்துடன் இருக்கலாம். அக்குழந்தையின் பெற்றோர்கள் க்ருஷ்ணரை (பொம்மை) அகத்திற்கு அழைத்துவந்து அவருக்கு யசோதாபோல் பாவத்துடனும் அல்லது ஒரு சகோதரத்துவத்துடனும் அக்குழந்தையின் பாவத்திற்கு ஏற்றார்போல் எம்பெருமான் இருப்பான் / விளையாடுவான் என்று சொல்லலாம். எம்பெருமான் எல்லாவிதத்திலும் இருப்பான் என்றும், அவன் எல்லாருக்கும் அவர்கள் எண்ணம்போல் பந்துவாகவும் ஆவான் என்று சொல்லிப் புரியவைக்கலாம்.
ப்ரபந்தம் அல்லது வேத வகுப்புகளை வெளிநாட்டில் இருந்து கற்றலோ அல்லது கற்பித்தாலோ விடியற்காலை அல்லது இரவு பொழுதில் பங்கேற்க வேண்டியிருக்கிறது. இந்தச் சமயத்தில் எழுந்தவுடனே இணைந்துகொள்ள வேண்டியிருப்பதால் ஸ்நானத்திற்கு முன்பு ப்ரபந்தம்/வேதம் சொல்லிக் கொள்வதிலோ அல்லது சொல்வதிலோ தோஷம் உண்டா? அதே போல இரவில் (9 மணி அளவில்) சொல்லிக் கொண்டால் மடியாக இல்லாமல் இருக்கும் நிலை ஏற்படுகிறது. சந்தைக்கு மடி நியமம் உண்டா?
ப்ரபந்தம் மற்றும் வேதங்களை விடியற்காலையில்தான் கற்றுக்கொள்ளவேண்டும். அப்படியிருக்க குளித்துவிட்டுதான் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிர்பந்தமில்லை. தூக்கம் நன்றாகப் போக பல் தேய்த்து விட்டு, . கை, கால் அலம்பி சொல்லிக்கொள்ளலாம். அந்தக் காலத்தில் பிம்மாலைப்பொழுதில்தான் சொல்லிக்கொடுப்பார்கள். இரவு வேளையில் என்று கேட்டால் கற்றுக்கொள்வதற்கு மடி நியமமில்லை. ஒரளவு பார்க்கமுடிந்தால் பார்ப்பது நல்லது. சுத்தமாக இருந்து கற்றுக்கொள்வதே முக்கியம்.
பகவான் ஸ்ரீமன் நாராயணன் கிருஷ்ணனாக அவதாரம் செய்யும் போதும் தன் அப்ராக்ருத திருமேனியோடுதான் அவதாரம் செய்தார் என்று உபன்யாசங்களில் கேட்டிருக்கிறேன். அப்படி இருக்க அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனின் திருமேனிக்குக் காரியம் செய்தான் என்று மஹாபாரத மௌசல்ய பர்வத்தில் சொல்லப்பட்டு உள்ளதாகப் படித்தேன். இதற்கு ஏதாவது விளக்கங்கள் உள்ளனவா?
பெருமாள் எங்கேயும் தம் அப்ராக்ருத ஸ்வபாவத்தை விடுவதில்லை. அப்ராக்ருத திருமேனியோடு என்றால் சங்கு, சக்ர, கதாதாரியாக தான் எம்பெருமான் திருவவதாரம் பண்ணுகிறான். மஹாபாரத மௌசல்ய பர்வாவில் உள்ளது என்றால், ப்ராக்ருதமான ஶரீரத்தை விட்டு, தன் அப்ராக்ருதமான திருமேனியோடு தன்னடிச்சோதிக்கு ஏளிவிட்டார் என்றர்த்தமாகும். அர்ஜுனன் அந்த ப்ராக்ருதமான திருமேனிக்குச் செய்திருக்கலாம்.
உத்தராயண தக்ஷிணாயனம் சற்று விவரிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன். அயன புண்ய காலம் பற்றி ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளதா? ஆழ்வார்கள் ஆசார்யர்கள் தச்களுடைய் ஸ்ரீஸூக்திகளில் ப்ரஸ்தாபித்துள்ளார்களா?
நம் பாரதீயமான ஜ்யோதிஷ ஶாஸ்த்ரத்தில் நாம் நம்புவது பூமி நிலையானது , சூர்யன்தான் சுற்றுகிறது. அயனம் என்றால் மார்கம். சூர்யன் வடக்கு நோக்கி நகரும்போது உத்தராயனம் என்றும், தெற்கு நோக்கி போகும்போது தக்ஷிணாயனம் என்றும் சொல்வார்கள். இக்காலங்கள் இரண்டும் புண்யகாலங்கள், அந்தப் புண்யகாலங்களில் தர்ப்பணம், திருவாராதனம் அவசியம் பண்ணவேண்டும். ஆகமங்களில் அவசியம் சொல்லப்பட்டிருக்கும். ஆழ்வார், ஆசார்யகள் ஸ்ரீஸூக்திகளில் இது பற்றி இருப்பதாகத் தெரியவில்லை. இருக்குமாயின் தெரிவிக்கிறோம்.
இதிகாச புராணங்களில் பகவத் கீதை மட்டும ஒருவர் படித்தால் போதுமா? அதில் கர்ம யோகம், ராஜாங்கம், பக்தி யோகம், ஞானயோகம் அடங்கியிருப்பாதல் அது முக்தி வழி கொடுக்குமா?
பகவத் கீதையில் பல்வேறு வேதாந்த ஞானங்கள், ஶரணாகதி பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறது. ஆகையால் பகவத் கீதை அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.மோக்ஷத்திற்கு வழி கொடுக்குமா என்றால், இந்த ஞானம் பெற்றபிறகு பகவான் நமக்கு ஶரணாகதி செய்யவேண்டும் என்கிற புத்திகொடுத்து, ஆசார்யரிடம் ஶரணாகதி செய்வித்து பின் மோக்ஷம்கிடைக்கும். ஶரணாகதி செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றவைப்பதினால் இது ஒருவிதமான முக்திக்கு வழிகொடுக்கும்.
மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரம் தினமும் சொல்லலாமா? சொல்வதற்கு ஏதேனும் விதி உள்ளதா?
மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரம் தினமும் சொல்லலாம். சுத்தமான தேகம், மனதோடு தினமும் சொல்லலாம்.
கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையோடு வாழவும், ஸத்சந்தான ப்ராப்தி கிடைக்கவும் எந்த ஸ்தோத்ரம்/ப்ரபந்தம் சொல்லலாம்?
கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையோடு வாழ, கீழேயுள்ள பூஸ்துதி ஶ்லோகத்தையும்,
பத்யுர்த₃க்ஷிணபாணிபங்கஜபுடே வின்யஸ்தபாதா₃ம்பு₃ஜா
வாமம்ʼ பன்னக₃ஸார்வபௌ₄மஸத்₃ருʼஶம்ʼ பர்யங்கயந்தீ பு₄ஜம் . போத்ரஸ்பர்ஶலஸத்கபோலப₂லகா பு₂ல்லாரவிந்தே₃க்ஷணா
ஸா மே புஷ்யது மங்க₃ளான்யனுதி₃னம்ʼ ஸர்வாணி ஸர்வம்ʼஸஹா .. (32)
லக்ஷ்மீ ஸஹஸ்ரம் - ஶ்ருங்கார ஸ்தபகம் முதல் ஶ்லோகத்தையும்
து3ர்ஜ்ஞேயமஹிமா ஸா மாம் க்ஷீராப்3தி4 து3ஹிதாவதாத் |
ஶ்ருங்கா3ரரஸஸர்வஸ்வம் ஶேஷஶைலேஶ்வரஸ்ய யா ||9.1||
- சொல்லலாம்.
ஸத்சந்தான ப்ராப்திக்கு “வாரணமாயிரம்” பதிகத்தை அனுசந்திக்கலாம். அதன் பலஶ்ருதியில் “வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே” என்று இருக்கிறது.
ஸ்ரீவைஷ்ணவத்தில் ஈசன் என்பதும் ஈஶ்வரன் என்பதும் ஸ்ரீமன் நாராயணனையே குறிக்கும். அப்படி இருக்க ஆழ்வார்கள் தங்கள் பாடல்களில் சிவனை ஏன் ஈசன் என்று சொல்லி இருக்கிறார்கள்?
சைவர்கள் மொழியில் ஈசன் என்கிறார். அவர்களுக்கு அவர் தெய்வமாக இருப்பதால் அவர்களைப் பொறுத்தவரை அப்படிச் சொல்லலாம். முழுமையான ஈசன் என்பவர் பெருமாள். மேலும், ஈசன் என்ற சொல் சிவனை ரூடியாக அதாவது பெயர்ச்சொல்லாக குறிப்பிடுவதால் ஆழ்வார்கள் பரமசிவனை ஈசன் என்கின்றனர்.
பலராமர் ஸ்ரீமன் நாராயணனின் ஆவேச அவதாரம். அப்படி இருக்க அவர் சுரா பானத்தில் நாட்டம் உள்ளவர் என்று ஸ்ரீமத் பாகவதம் மற்றும் விஷ்ணு புராணங்களில் சொல்லப்பட்டு உள்ளன. இதற்கு ஏதாவது விளக்கம் உள்ளதா?
அவர் ஒரு ஜீவாத்மா, அவரிடம் பெருமாள் ஆவேச அவதாரம் செய்துள்ளார். எனவே, ஜீவனாகவும் அவர் நடந்து கொள்வார். மனித பாவனையில் அரசர்களுக்கு அனுமதித்த முறையில் சுரா பானம் செய்து அபிநயம் செய்தார் என்பர்.
காசி இன்றைய தேதியில் சிவஸ்தலமாக உள்ளது. அப்படியிருக்க ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு காசியின் முக்கியத்துவம் என்ன?
காசியில் பிந்துமாதவப் பெருமாள் கோயில் என்பவர் இன்றும் ஏளியிருக்கிறார். ஒரு காலத்தில் அந்தக் கோயில் பெரிதாகக் கொண்டாடும்படியான திருக்கோயிலாக இருந்தது என்று வரலாறுகள் மூலம் தெரிகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சில சமூக வலைதளங்களில் சமீப காலமாக பரவி வருகிறது.ஸ்வாமி, இதற்கு ஸமாதானம் அருள பிரார்த்திக்கிறேன். தவறான விஷயமெனில் எப்படி கண்டிப்பது? அல்லது யாரோ விஷயம் தெரியாதவர் ஏதோ சொல்கிறார் என்று விட்டு விலகி (ignore) இருக்க வேண்டுமா?
சமூக வலைதளங்களில் வந்துள்ள விஷயம்:
விஷ்ணுவின் ஒரு அவதாரமாகவும் 26ஆவது மகாயுகத்தில் வாழ்ந்தவரும் ஆன ராமரும் விபூதியை அணிந்தவர் தான்.அதற்கு ஆதாரமாக – “ராமம்…பஸ்மோத் தூளித சர்வாங்கம் ” -ராம ரஹஸ்ய உபநிஷத் கூறுகிறது. இதன் பொருள்,”இராமர் சர்வ அங்கங்களிலும் விபூதி தாரணமுடையார் ” என்பதாகும்.
மேலும், “க்ருதாபிஷகஸ் ஸரராஜராமஸ் ஸீதாத்விதீயஸ் ஸஹலக்ஷ்மணேந க்ருதாபிஷேகஸ்த் வகராஜ புத்ர்யா ருத்ரஸ்ஸ விஷ்ணுர் பகவாநி வேச : “
என்று கூறுகிறது வால்மீகி ராமாயணம்.
இந்த ஶ்லோகத்தின் பொருள் :
“பகவானும் ஈஸ்வருமான ருத்திரர் பார்வதியாரோடு ஸ்நாநம் பண்ணி விஷ்ணு தேவருடன் விளங்கினதுபோல, இராமர் சீதையோடு கோதாவரியில் மூழ்கி இலக்குமணருடன் விளங்கினார்”
இராமர் நீராடியபின் நீறும் பூசியிருந்தால் தான் சிவன் போல் விளங்கியிருப்பார்,ஆதலால்,இராமர் திரு நீற்றைச் சின்னமாக தரித்த சிவ பக்தர் என்பது உண்மையே.
அதர்வண வேதத்திலுள்ள பஸ்மஜாபால உபநிஷத்,
“பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷா பரணா :தக்ஷிணாயாந் திகி விஷ்ணு “ என்று கூறுகிறது. “திருமால் ஸ்ரீ காசி ஷேத்திரத்திலே தென்திசைக்கணிருந்து ,விபூதி ருத்திராக்ஷதாரணமுடியவராய் உபாசிக்கின்றனர்” என்பது பொருள்.
“ஸ்வர்ண வர்ண ஜடாபாரம் ஸாஷாத் ருத்ர மிவாபரணம் பஸ்மோத் தூளித ஸ்ர்வாங்கம் த்ருஷ்டுவா காம வசங்கதா “
என்று அத்தியாத்ம ராமாயணம் கூறுவதால்,ராமர் விபூதி அணிந்தார் என்பது புலனாகிறது.
தாமஸ புராணங்களில் இதுபோல் விஷயங்கள் வரும். அவை அந்தப் புராணம் படிப்பவர்களை மோகிப்பதற்கு அல்லது அவர்கள் திருப்திக்காக எழுதப்பட்டவை. நாம் படிக்கக் கூடாது. ஶ்ரீமத் இராமாயணத்தில் சிவன் போல, இந்திரன் போல என்றெல்லாம் வரும். இது ஒரு எடுத்துக் காட்டாக சிறப்பைச் சொல்ல வந்தது. மனிதர்களான நமக்கு விசேஷமாக புரிய வைப்பதற்காக இந்த எடுத்துக் காட்டு. விஷ்ணு போல இருந்தார் என்றும் குறிப்பு உண்டு.
சிவன் போல விபூதி அணிந்தார் என்று அங்குச் சொல்லவே இல்லை. விபூதி பற்றிய குறிப்புகள் பல புராண வசனங்களில் உண்டு. வேதத்திலும் இருக்கலாம். அவை சிவ பக்தர்களுக்கு வந்தவை. ஸாத்விகனுக்கு பஸ்மம் கூடாது என்று தெளிவாகச் சொல்லி இருப்பதால் நாம் அதை படிக்கக் கூடாது.
அத்யாத்ம ராமாயணமும் மொத்தமும் அப்படியே கொள்வது கூடாது. பூர்வாசார்யர் சொன்ன விஷயம் மட்டுமே ஏற்பது. மற்றவை சொல்லி இருந்தாலும் நமக்கு அல்ல
வேத புராணங்கள் பலருக்காக பலதும் சொல்லும்.
எந்த உபநிஷத்தெல்லாம் நாம் ப்ரமாணமாக எடுத்துக்கொள்ளவேண்டும்? 108 உபநிஷத்துகளில் தச உபநிஷத் என்பது மட்டுமே நமக்கு ப்ரதானமானதா? கோபாலதாபிந்யுபநிஷத், இராம ரஹஸ்ய உபநிஷத் இவையெல்லாம் ப்ரமாணமாகக் கொண்டு இராம, க்ருஷணன் அவதாரங்களை ப்ரதானமாகக் கொண்ட ஸம்ப்ரதாயத்தவர்கள் பின்பற்றுகிறார்கள். இந்த உபநிஷத் நாம் எடுத்துக்கொள்ளலாமா?
நம் பூர்வாசாரியர்கள் ஆதரித்த உபநிஷத்துகளை ஏற்கலாம். மற்றவை பற்றி விசாரம் தேவையில்லை.
அடியேன் பாஞ்சராத்ர ஸம்ஹிதை ஒன்றில் கண்ட விஷ்யம், இராம நாமமே உயர்ந்த ஒன்று, இராம நாமத்தைச் சரணடைந்தவன் எம்பெருமானின் இதர நாமங்களைச் சொல்ல நரகம் செல்வான் என்று குறிப்பிட்டுருந்தது. இது சரியா?
ராம நாமத்தின் பெருமையை அதிகமாகச் சொல்வதற்காக இப்படிப் பிறவற்றைக் குறைத்துச் சொல்லும். அவ்வளவுதான். உண்மையில் எம்பெருமானின் இதர திருநாமங்களுக்குக் குறைவு இல்லை.
ஸ்ரீமத பாகவத புராணத்தில் வரும் ஶ்லோகம் ஒன்றில்“ஏதே சமஸ்த கால: பும்ச: க்ருஷ்ணாஸ்து பகவான் ஸ்வயம்” என்றும், ஆதி புருஷன் இராமன் என்றும் வருகிறது. இந்த ஶ்லோகத்தை ப்ரதானமாகக் கொண்டு க்ருஷ்ணபக்தர்கள் (கௌடியர்கள், வல்லபர்கள், நிம்பிகாரர்கள்) கண்ணன் எம்பெருமானே ஆதி என்றும், ஸ்ரீமந் நாராயணன் மற்றும் விஷ்ணு என்பது கண்ணன் எம்பெருமான் எடுத்த அவதாரங்கள் என்று கூறுகிறார்கள்.நம் ஸம்ப்ரதாய பூர்வகள் இந்த ஶ்லோகத்திற்கு எவ்வாறு வ்யாக்யானம் செய்துள்ளனர்?
.விஷ்ணுவிற்கும் நாராயணனுக்கும் என்ன வித்தியாசம்? விஷ்ணு என்பவர் ஜகத் ரக்ஷணம் பண்ணுவதற்காய் எடுத்த அவதார ரூபம் என்றும், ஸ்ரீமந் நாராயணன்தான் ஆதிமூலம் என்றும் அடியேன் ஒரு உபந்யாஸத்தில் கேட்டேன்
ஸ்வாமி நாராயணன் என்பவர் நம் ஸம்ப்ரதாய ஆசார்யரா? அவரின் நூல்களில் பகவத் இராமானுஜர் அருளிய ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யமே பக்தி மார்கத்தில் ஶாஸ்திரங்கள் என்று மேற்கோள்காட்டியுள்ளார். மேலும் அவரின் ஶிக்ஷாபத்ரீ-யில் “மதம் விசிஷ்டாத்வைதம் மே” என்றும் கூறியுள்ளார்.
பகவானுடைய அவதாரங்களில் மொத்த அம்சமும் வெளிப்படுத்தாமல் மிருக மனித பாவனையில் இருப்பான். ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் முழு அம்சமும் வெளிப்படுத்தும் வைபவங்கள் இருக்கும்.
விஷ்ணுவும் நாராயணனும் ஒருவரே. பிரம்மா சிவனுக்கு இடையில் விஷ்ணு என்பதாக ஒரு அவதாரமும் உண்டு.
ஸ்வாமி நாராயண எனபவரின் ஸம்ப்ரதாயம் விசிஷ்டாத்வைதம் மதத்தில் பிரிந்த ஒரு கிளை ஆகலாம். ஆனால் ஸம்ப்ரதாயம் வேறு. சில கருத்துகளும் வேறு. நாம் பின் பற்ற வேண்டியதில்லை.
.தர்ப்பண புண்ய காலம் மற்றும் ஶ்ராத்த திதி நிர்ணயம் விதிமுறைகள் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள ஏதாவது புத்தகம் கிடைக்குமா ?
ஸ்ரீமத் வில்லிவலம் அழகிய சிங்கர் அருளிய ஆஹ்நிக க்ரந்தத்தின் அனுபந்தத்தில் இதைப் பற்றிய பல விஷயங்களை அறியலாம்.
பத்மாவதி தாயார் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அவதாரமா அல்லது மலையாள, சேரகுலவல்லி போல் ஒரு நாச்சியாரா?
ஸ்ரீதேவியும் ஸ்ரீமஹாலக்ஷ்மியும் ஒருவரா ?
பத்மாவதி தாயார் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அவதாரம் ஆவார்.
மேலும் ஸ்ரீதேவியும், ஸ்ரீமஹாலக்ஷ்மியும் ஒருவரே. வேதத்தில் இரண்டு பெயரும் சொல்லப்பட்டுள்ளது.
ஸ்ரீ வராஹ அவதாரம், வராஹம் தண்ணீரில் நீஞ்சுமே அல்லாது மூழ்க முடியாது, ஸ்ரீ வராஹ அவதாரத்தால் முடியும் என்று வைத்துக் கொண்டாலும் ஸ்ரீ வராஹப் பெருமானுக்கு ஏன் கோரைக்கிழங்கு நைவேத்யம் ஆகிறது, இராவணன், கும்பகர்ணன், சிசுபாலன், தந்தவக்ரன் ஆகிய சகோதரர்களை ஒரே அவதாரத்தில் வென்றுகொன்றபோது ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு ஆகிய சகோதர்களைக் கொல்ல மட்டும் இரண்டு அவதாரம் ஏன்? அவர்கள் சகோதரர்கள் இல்லாமல் இருந்தாலும் இருவர் பெயரிலும் ஹிரண்ய என்ற சொல் வருவதேன்?
முதலில் அவர் சாதாரண வராஹம் கிடையாது, அவர் பெருமாள், மஹாவராஹன். “குஹனா போத்ரி” என்று ஸ்வாமி தேஶிகன் சாதிக்கிறார். சாதாரண வராஹன் போல் அல்லாமல் இவருடைய ஸாமர்த்யமே தனி.
ஸ்வாமி தேஶிகனே பூ ஸ்துதியில்
“வ்யோமாதிலங்கி4நி விபோ4: ப்ரளயாம்பு3ராஶௌ
வேஶந்தலேஶ இவ மாதுமஶக்யமூர்தே: |” என்று சாதிக்கிறார்.
அதாவது மஹாவராஹத்தின் பரிமாணம் எவ்வளவு பெரிது என்றால், அந்த ப்ரளய ஜலமானது ஒரு குட்டைபோல் ஆகிவிட்டது. ஆகையால் அவர் மூழ்க வேண்டும் என்ற அவசியமும் ஏற்பட்டிருக்குமோ என்றே தெரியவில்லை. அவர் மிகப்பெரிதான மூர்த்தியாய் இருந்தால் அநாயாஸமாய் பூமி தேவியைக் காப்பாற்றினார்.
ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு இருவரும் திதியின் பிள்ளைகள். அவ்விருவரும் சகோதரர்களே. ஏன் இரண்டு அவதாரம் என்றால், இவ்வுலகத்திற்கு இரண்டு விதமான அனுபவங்களைத் தரவேண்டியே. வராஹ அவதாரம் எடுத்து பிராட்டி மூலம் வராஹ புராணத்தையும், பல உபாயங்களையும், வராஹ சரம ஶ்லோத்தையும் சொல்வதற்காக ஒன்றும். அடுத்து பக்தர்களின் கூக்குரலுக்கு உடனே இரங்கி வந்து பக்த வாத்ஸல்யத்தைக் காட்ட ஒன்றும் என இரண்டு ரசமான லீலைகள் செய்து இரண்டு ப்ரதான குணங்களைப் பக்தர்களுக்குக் காட்ட எம்பெருமான் இரண்டு அவதாரங்களை எடுத்தார் என்று தோன்றுகிறது.
எட்டு ஸ்வயம் வக்த க்ஷேத்ரங்கள் பற்றிய ஶ்லோகம் இதோ:
ஆத்யம் ரங்கமிதி ப்ரோக்தம்
விமானம் ரங்கஸம்ஞிதம்
ஸ்ரீமுஷ்ணம் வேங்கடாத்ரிம் ச
ஸாளக்ராமம் ச நைமிஶம் ।
தோயாத்ரிம் புஷ்கரம் சைவ
நரநாராயணாஶ்ரமம்
அஷ்டௌ மே மூர்தய: ஸந்தி
ஸ்வயம்வக்தா மஹீதலே
எட்டு ஸ்வயம் வக்த க்ஷேத்ரங்களுக்கும், திருவஷ்டாக்ஷர மந்த்ரத்திற்கும் என்ன சம்பந்தம்?
பத்ரிகாஶ்ரமத்தில்தான் திருவஷ்டாக்ஷர மந்த்ர உபதேசம் நடந்த இடம். அதனால் அது விசேஷம். மற்றபடி வேறு எந்தச் சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.
Q1. விசிஷ்டாத்வைத சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மத்வாசார்யரின் ஸர்வமூல க்ரந்தங்களைச் சேவிக்கலாமா?
Q2. நான் என்பது ஶரீரமல்ல, ஜீவாத்மா என்று எப்படி உணர்வது? அந்தச் சிந்தனையுடன் அனைத்து கார்யங்களையும் ஆற்றுவது எவ்வாறு?
Q3. நம்முடைய ஆன்மிக முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள கோபம், பொறாமை, மோஹம் முதலான தவறான பழக்கங்களை களைவது எப்படி?
Q1. சேவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் ஸம்ப்ரதாயத்தில் சேவிப்பதற்கு நிறைய க்ரந்தங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் சேவிக்கலாம். எதனால் இந்தக் கேள்வி வருகிறது என்று தெரியவில்லை?
Q2. ஸ்வாமி தேஶிகன் சுலபமாக சாதிக்கிறார், என்னுடைய ஶரீரம் என்னுடைய கை, என்னுடைய கால் என்றெல்லாம் சொல்வதாலேயே ஶரீரம் வேறு நான் வேறு என்று தெரிகிறது. குறிப்பாக உறக்கத்தில் ஶரீரத்தைப் பற்றிய சிந்தனையில்லை ஆனால் ஆத்மாவைப் பற்றியதான சிந்தனை உண்டு. அந்த மாதிரி ரீதியில் புரிந்துகொள்ளலாம்.
அந்தச் சிந்தனையுடன் அனைத்து காரியங்களையும் ஆற்றுவது எவ்வாறு என்றால், மொத்தத்தையும் அப்படியே வைத்துக் கொண்டு அப்படியே செய்ய முடியாது. ஏன்னெறால் ஶரீரத்தோடு இருந்தால்தான் நாம் எதுவுமே செய்ய முடியும். ஶரீரம் இல்லாமல் நாம் எதுவுமே செய்ய முடியாது. அதனால் நாம் அந்த ஒரு ப்ரமத்தை தவிர்த்தால் போதும். நானும் ஶரீரமும் வேறு என்கிற ஒரு எண்ணத்தை நாம் வைத்துக்கொண்டால் போதும். அந்த ப்ரமத்தினாலே வரக்கூடிய தோஷங்களை எல்லாம் நாம் களைந்தால் போதும்.
அதையும் ஸ்வாமி தேஶிகன் சொல்லி இருக்கின்றார். உதாரணமாக யாராவது ஶரீரத்தைப் பற்றி தூஷணம் பண்ணினாலோ, கருப்பாக இருக்கின்றார் என்று சொன்னாலோ அதெல்லாம் ஆத்மாவில ஒட்டாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் அவர்கள் மேல் நான் கோபித்துக் கொள்ளாமல் இருக்கலாம், என்பது போல்.
Q3. இதற்காகத்தான் ஸ்வாமி தேஶிகன் சங்கல்ப சூர்யோதயம் என்கின்ற நாடகத்தைச் சாதித்திருக்கிறார். அதில் நல்ல ஞானம், வைராக்கியம், விஷ்ணு பக்தி, முதலான குணங்களை எல்லாம் வளர்த்துக் கொள்வதன் மூலம் மோசமான குணங்களை எல்லாம் குறைக்கலாம் என்றும். மேலும், பகவத் சந்நிதானம், பாகவதர்களுடன் நெருங்கிய தொடர்பு, காலக்ஷேபங்கள், இவை எல்லாம் முக்கியம் என்றும் சாதிக்கிறார். கோபம் வரும் பொழுது தேஶிகன் சாதிக்கிறார், கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் யார் மேல் கோபம் வருகிறன்தோ, அதற்கு உண்மையில் அவர்கள் நேர் காரணம் இல்லை. நாம்தான் காரணம். அவர்கள் மறைமுகக் காரணம் என்பது தெரியும். அதேபோல் பொறாமை என்று வரும் பொழுதும் நம்மிடம் இருக்கும் தோஷத்தை நாம் மறக்கும் பொழுது தான் பொறாமை வரும். நம்மிடம் இருக்கும் தோஷத்தை நாம் யோசித்துப் பார்த்தால் வராது.
1. ஸ்திரீகள் ஶ்ரீமத் பாகவதம் மூலம் படிக்கலாமா? அல்லது உரை மட்டும் படிக்கலாமா?
2. ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீமத் பாகவதம் படிக்க வேண்டுமெனில் எந்தப் பதிப்பகம் வெளியீட்டை படிக்கலாம்? (மொழிபெயர்ப்பு மற்றும் உரை)
ஸ்திரீகள் ஸ்ரீமத் பாகவதம் மூலம் படிக்கும் வழக்கமில்லை. தமிழ், ஆங்கிலம் என எந்த மொழியிலும் ஸ்ரீமத் பாகவத உரையைப் படிக்கலாம்.
சமீபகாலத்தில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கென்று தனியாக பதிப்பகம் இன்னும் வரவில்லை. திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பாக பல பாடங்களொடு ஸ்ரீமத் பாகவதம் வெளியிட்டுள்ளனர். ஆனால் அது சற்றே பெரிய புத்தகமாகும். இப்போதைக்கு ஆங்காங்கே கிடைக்கும் கீதா ப்ரஸ் முதலிய பதிப்பகங்களின் வெளியீட்டைப் பாராயணத்திற்கு உபயோகிக்கின்றோம் அதில் பெரியளவில் வித்யாசங்கள் இல்லை. மொழிபெயர்ப்பு, உரை பொருத்தவரையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் பௌண்டரீகபுரம் ஆஶ்ரமத்தில் இரண்டு ஸ்கந்தம் வரை வெளியிட்டுள்ளனர். பழைய புத்தகங்கள் உண்டு ஆனால் அவையெல்லாம் இப்போது கிடைக்காது.
ராதா ராணி உண்மையா? எனில் அவள் மஹாலஷ்மி அவதாரமா? சாதாரண கோபிகையா? தென்னாசார்ய மற்றும் தேசிக சம்ப்ரதாயத்தவர்கள் ஶாஸ்த்ர ரீதியாக ராதாராணியை எப்படிப் பார்க்கிறார்கள்?
ஸ்வாமி தேஶிகன் ராதா ராணி பற்றியான ஒரு விஷயத்தை “யாதவாப்யுதயத்தில்” சாதித்துள்ளார். ஆகையால் நம் ஆசார்யர்கள் எல்லோரும் ஒத்துக்கொண்டுள்ளனர். அவர் லக்ஷ்மீ பிராட்டியின் அம்சமாக இருப்பவர் என்பதையும் சாதித்துள்ளனர்.
அடியேன் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் சேவிக்கலாமா? எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?
பகவத் ராமானுஜாசார்யரின் வேதார்த்த ஸங்க்ரஹம் ஆரம்ப பாடம் படிப்பவர்களுக்கா? முறையாக ஸ்ரீ பாஷ்யத்தை கற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
அடியேன் வைஷ்ணவ ஆசார அனுஷ்டானங்களை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன். ஸ்வாமி வேதாந்த தேஶிகரின் அதிகரண ஸாராவளி என்றால் என்ன?
1. நாலாயிர திவ்ய ப்ரபந்தம் தாராளமாகச் சேவிக்கலாம். யாரிடமாவது திவ்ய ப்ரபந்தம் சந்தை சொல்லிக் கொள்ளவேண்டும். நம் GSPKவிலே இரண்டு வகுப்புகளாக திவ்ய ப்ரப்ந்தம் சந்தை முறையாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். மேலும் விவரங்களுக்குக் கீழேயுள்ள Telegram groupல் சேரவும்.
https://t.me/gspkstotras
2. பகவத் இராமானுஜரின் வேதாந்த ஸங்க்ரஹம் ஆரம்பப் பாடம் படிப்பவர்களுகென்று இல்லை. அதிலும் கடினமான விஷயங்கள் இருக்கின்றன. ஆகையால் அது எல்லாருக்கும் ஏற்றதானது. முறையாக ஸ்ரீபாஷ்யம் கற்றுக்கொள்ள குருமுகமாகக் காலக்ஷேபம் செய்யவேண்டும். அதற்கு முன் அடிப்படையான ஸம்ஸ்க்ருத ஞானம், வ்யாகரணம், காவ்யங்காள் முதலானவைகள் வாசித்திருக்க வேண்டும். அதன் பின்னர் ஸ்ரீ பாஷ்யத்தை ஆசார்யன் மூலமாகக் கேட்கவேண்டும்.
3. ஸ்ரீவைஷ்ணவம் பற்றி நிறைய க்ரந்தங்கள் இருக்கிறது. வேதாந்த தேஶிகன், ஸ்ரீவைஷ்ணவ நெறிகள் என்று புத்தகம் அருளியுள்ளார். அதில் ஸ்ரீவைஷ்ணவம் பற்றி நிறைய இருக்கிறது. அப்புத்தகம் எல்லாவிடங்களிலும் கிடைக்கும். அதிகரண ஸாராவளி என்பது பகவத் இராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யம், வேதாந்த ஶாஸ்த்ரத்தின் சுருக்கமாக ஶ்லோக வடிவில் இருக்கும். அதைப் புத்தகம் பார்த்து தெரிந்துகொள்ள முடியாது. காலக்ஷேபமாக கேட்டல் வேண்டும்.
பாதுகா ஸஹஸ்ரம் நித்யம் சேவிக்க ஏதேனும் விதிமுறைகள் இருக்கா? காலையில் சேவிக்க முடியவில்லையென்றால் சாயங்காலம் சேவிக்கலாமா?
பாதுகா ஸஹஸ்ரம் நித்யம் சேவிப்பதற்கு தனியான விதிமுறைகள் எல்லாம் கிடையாது. இது ஸ்தோத்ரமானபடியினால் எப்பொழுது வேண்டுமானாலும் சேவிக்கலாம். காலையிலோ சாயங்காலமோ ராத்திரியோ எப்பொழுது வேண்டுமானாலும் சேவிக்கலாம்.
ஒரு பலனைக் குறித்து விசேஷ பாராயணமாக சங்கல்பம் செய்து கொண்டு சொல்வதாக இருந்தால் அப்பொழுது காலையில் ஆகாரத்திற்கு முன் சேவிப்பது நல்லது. மற்றபடி பொதுவான ஸ்தோத்ரபாட பாராயணம் என்பதை எப்பொழுது வேண்டுமானாலும் பண்ணலாம்.
கோவிந்தராஜீயம் என்ற க்ரந்தத்தின் ஆசிரியர் யார்? அவரது வம்சம், ஆசார்யன், வாழ்க்கை வரலாறு இவற்றைப் பற்றி விளக்க பிரார்த்திக்கிறேன்.
கோவிந்தராஜீயம் என்பது ஸ்ரீமத் இராமாயணத்தின் வ்யாக்யானம். பகவத் இராமானுஜர் திருவுள்ளப்படி அந்த ஸம்ப்ரதாயத்தில் வந்த கோவிந்தராஜன் என்பவர் வ்யாக்யாணம் பண்ணியிருக்கிறார். கோவிந்தராஜர் என்பவரால் இயற்றப்பட்டதால் கோவிந்தராஜீயம் என்ற பெயர். அவரது வம்சம்,ஆசாரம், வாழ்க்கை வரலாறு போன்றதெல்லாம் இந்த வ்யாக்யானத்தின் முன்னுரையில் இருக்கிறது. அதை முடிந்தால் அனுப்புகிறோம்.
1A. ஸ்ரீவல்லபாசார்யாரை பற்றிய ஒரு நூலில், அவர் விசிஷ்டாத்வைதத்தின் பெரும்பாலான கொள்கைகளை (சிலவற்றைத் தவிர) ஒப்புக்கொண்டதாக உள்ளது. ஸ்ரீவல்லபாசார்யாரின் சுத்த அத்வைதத்திற்கும், ஸ்வாமி ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
1B. ஆதிசங்கரர் இந்த உலகம் பொய் என்றும், ஸ்வாமி ராமானுஜர் இந்த உலகம் நிஜம் ஆனால் நிரந்தரம் இல்லை என்றும் கூறியுள்ளனர். இந்த உலகம் நிஜம் என்பதற்கான வேதத்தில் உள்ள ப்ரமாணங்களை அடியேனுக்குத் தெளிவுபடுத்த முடியுமா?
1C. விசிஷ்டாத்வைதத்தில் சித்தும் அசித்தும் எம்பெருமானுக்கு ஶரீரம் என்றும் எம்பெருமான் சரீரி என்றும் உள்ளது. அப்படி நாம் எம்பெருமானுடன் ஒன்றிணைந்து இருந்தால் நமக்கு ஏன் அவனைப் போல் எங்கும் வியாபித்திருக்கும் தன்மை இல்லை?
1D. பகவத் ராமானுஜர் தன்னுடைய கீதாபாஷ்யத்தில் கர்மயோகம் ஞான யோகத்தை விட சிறந்தது. ஏனெனில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதை விட ஏதேனும் வேலை செய்வது மனிதர்களின் ஸ்வபாவம். மேலும் அது இளைய தலைமுறைக்கு எந்த தவறான வழிகாட்டுதலும் செய்யாது என்று கூறியுள்ளார்.
1E. ப்ரபத்தி மற்றும் எம்பெருமான்தான் உபாயம் மற்றும் உபேயம் என்ற போதிலும், கர்ம யோகத்தை எவ்வாறு செய்வது என்று அடியேனுக்குத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
1A. வல்லபாசார்யார் சுத்த அத்வைதம். ஶங்கரரின் அத்வைதத்தில் ப்ரம்மத்திற்கு அவித்யா என்ற தோஷம் இருக்கிறது என்கிறார். அத்வைதம் என்றால் ஒன்று என்று அர்த்தம்.ப்ரம்மம் ஒன்றுதான் இருக்கிறது ஆனால் அதற்கு அவித்யா என்ற தோஷம் உண்டு என்கிறார்கள். ப்ரம்மத்திற்குத் தோஷமே கிடையாது என்றும் சுத்தமான ப்ரம்மம் ஒன்றுதான் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக வந்தது சுத்த அத்வைதம். விசிஷ்டாத்வைதம் என்றால், ப்ரம்மம், சேதனாசேதன விசிஷ்டமாக இருக்கிறது. சேதன அசேதனம்கூட இருக்கிறது என்பதாகும். ப்ரம்மம், சேதன, அசேதனம் என எல்லாம் வெவ்வேறு. ஆனால், ப்ரம்மமான பகவான், சேதன அசேதனத்திற்குள் அந்தர்யாமியாக இருக்கிறான். இதைச் சுத்த அத்வைதத்தில் ஒற்றுக்கொள்ளவில்லை. அத்வைதம் என்றால் ப்ரம்மம் ஒன்றுதான் இருக்கிறது. மற்றவையெல்லாம் ப்ரம்மத்தின் தோற்றம்தான். ஜீவனோ, அசேதனமோ, உலகமோ எல்லாமே ப்ரம்மம் என்கிறார்கள். நாம் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமி ப்ரம்மம் என்கிறோம். பக்தி மார்கம் என்பது சுத்த அத்வைதத்திலும் ஒன்றாகத்தான் சொல்லுகிறார்கள்.
1B. இந்த லோகத்தையெல்லாம் பகவான் சிருஷ்டித்தான் என்றும், லோகத்திற்குள்ளே அந்தர்யாமியாக இருக்கிறான் என்று, இந்த லோகதை ஆள்கிறான் என்றும் வேதங்களில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. உலகங்கள் முழுவதும் பகவானுடைய செல்வங்கள். அதாவது நமக்கு வீடு வாசற்கள் இருப்பது போல் இந்த பூலோகம், மேல்லோகங்கள், ஸ்ரீவைகுண்டம் உட்பட எல்லாம் பகவானுடைய செல்வங்கள், விபூதிகள் என்று வேதத்தில் சொல்லப்பட்டுக்கிறது. சிருஷ்டிக்கிறான், ரக்ஷிக்கிறான் என அனைத்தும் சொல்லப்பட்டிருக்கிறது. இதுவேதான் லோகம் சத்யம் என்பதற்கு முக்கியமான ப்ரமாணமாகும்.
1C. சித்தும் அசித்தும் எம்பெருமானுக்கு ஶரீரம் என்றிருக்கிறது. பகவான் இந்த ஶரீரத்தின் உள்ளேயும் வெளியேயும் இருக்கிறான். இந்த மாதிரி ஶரீரம் இருக்குமிடமெல்லாம் பகவான் இருப்பான் என்று அர்த்தமே தவிர மாற்றி இல்லை அதாவது பகவான் இருக்குமிடமெல்லாம் ஶரீரம் இருக்கும் என்று இல்லை.
உ.தா: ஆகாஶம் எல்லா இடத்திலும் பரவி இருக்கிறது. நாம் ஆகாஶத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறோம்.இதற்கு ஆகாஶம் இருக்குமிடமெல்லாம் நாம் இருக்கிறோம் என்ற அர்த்தம் அன்று. நாம் இருக்குமிடமெல்லாம் ஆகாஶம் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதாகும்.
விபுவாகப் பரவியிருக்கும்போது, ஒன்று வ்யாபித்திருக்கும் மற்றொன்று ஒட்டிக்கொண்டிருக்கும். இதுதான் விபுவின் நியமமாகும்.
1D. இதில் கேள்வியே இல்லை. தங்கள் கேள்வி என்ன என்பதைத் தெரிவிக்கவும்.
1E. கர்மயோகத்தை உபாயமாகச் செய்யாமல், நம்மளுடைய கர்மாகங்களை பகவத் அர்ப்பணமாகச் செய்தால் அது கர்மயோகமாகும். உபாயமாக இல்லையென்றால் கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்ற மார்கத்தில் நாம் போகவில்லை. கர்மயோகம் என்பது நல்ல ஒரு கருத்தாகும். அதனால் நாம் செய்யக்கூடிய கடமைகளை பகவத் அர்ப்பண புத்தியோடும் நான்தான் செய்கிறேன் என்கிற அகம்பாவத்தைத் தவிர்த்தால் கர்மயோகம் போல் ஆகிவிடும். ஸாத்விக தயாகம், பலத்யாகத்தோடு செய்யவேண்டும்.
ஸ்ரீ. உ. வே. வாசுதேவாசார்யார் ஸ்வாமி கைசிக புராண படனம் ஸாதிக்கும்பொழுது, ராமாயணத்தில் ஸ்ரீராமபிரான் விபீஷணஶரணாகதியை உடனே ஏற்றுக் கொண்டது போல் நம்பாடுவான் ப்ரம்ஹராக்ஷஸ் ஶரணாகதியை உடனே ஏற்றுக் கொண்டார் என்று ஸாதித்தார். ஆனால் ஸ்வாமி தேஶிகன் அபய ப்ரதான ஸாரத்தில் இந்த ஶரணாகதியைப் பற்றி குறிப்பிடவில்லையே? இதற்கு ஏதேனும் காரணம் உண்டா?
அபயப்ரதான ஸாரத்தில் என்னென்ன ஶரணாகதி இருக்கிறதோ அதையெல்லாம் குறிப்பிடுவதாக ஒரு நிர்ணயம் ஸ்வாமி தேஶிகன் செய்துகொள்ளவில்லை. உதாஹரணத்திற்குச் சில ஶரணாகதியெல்லாம் சாதித்திருக்கிறார். அவர் குறிப்பிடாததால் அது இல்லை என்றாகிவிடாது.
பெருமாள் ஶரணாகதி ப்ரதானமாகக் காட்டிருக்கிறார். மேலும் இதிஹாஸங்களில் பூர்வர்கள் எடுத்திருக்கக்கூடிய ஶரணாகதியெல்லாம் காட்டிருக்கிறார்.
நம்பாடுவான் ப்ரம்மராக்ஷஸ் பற்றிய ஶரணாகதியும் உண்டு. இவையும் ஒன்று என்று சொன்னால் மற்றவை எல்லாம் ஒரு உபலக்ஷணமாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
வெளி இடங்களில் சுலபமாக ஜபிக்க பெருமாள் தாயார் தனியன், ஸ்லோகம் ஏதேனும் இருக்கிறதா?
ஶ்ரீஸ்துதி போன்ற ஶ்லோகங்கள் தாராளமாகச் சொல்லலாம். முழுவதாகச் சொல்ல முடியாவிட்டாலும் ஆத்யந்தமாகச் சொல்லலாம், அதாவது முதல் ஶ்லோகம் மற்றும் கடைசி ஶ்லோகம் மட்டும் சொல்லலாம்.
பெரிய திருமொழியில் ஒரே ஒரு திருமொழியில் மட்டும் 14 பாசுரங்கள் இருப்பதன் தாத்பர்யம் என்ன?
பெரிய திருமொழியில் மானமுடைத்து என்ற திருமொழியில் 14 பாசுரங்கள் இருக்கிறது. அது ஒரு தனிப்பட்ட க்ருஷ்ணானுபவம். யசோதா பிராட்டி கண்ணனிடம் பேசுகிறார். கண்ணன் செய்யக்கூடிய குறும்புத்தனத்தைப் பார்த்து கவலைப்பட்டு அவனிடம் அப்படியெல்லாம் நீ செய்யலாமா என்று சொல்லக்கூடிய ஒரு ஆச்சர்யமான அனுபவம். அந்த அனுபவத்தினால் பாசுரங்கள் அதிகம். ஆழ்வாரே இதை இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவருக்கு ஏதும் இடரில்லையே என்பதாக சாதிக்கிறார். அனுபவத்தின் வெளிப்பாடுதான் பாசுரங்கள் என்று நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அடியேன் வேலைக்கு செல்கிறேன் . எனக்கு ஸ்வாமி தேசிகன் ஸ்லோகம் கற்றுக்கொள்ள வேண்டும். வார இறுதி நாட்களில் மட்டுமே எனக்கு தேவையான நேரம் கிடைக்கின்றது . GSPK இல் சான் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புகள் உள்ளதா? இல்லையென்றால் ஒன்றைத் தொடங்க முடியுமா?
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் குழந்தைகளுக்கு வகுப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. Week end batches என்று மதியம் 3 அல்லது 4 மணிக்கு ஸ்தோத்திரங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.
இதற்கான விவரங்கள் அறிய : https://t.me/sampradayamanjari மற்றும் https://t.me/gspkstotras என்ற Telegram Channel ல் இணையவும்.
அப்படி அதற்கு வரமுடியவில்லை என்றால் GSPKவின்
https://www.youtube.com/@SampradayaManjari அல்லது https://youtube.com/@DesikaStotras
என்ற YOUTUBE Channelகளில் தேஶிக ஸ்தோத்திரங்களுக்கும் திவ்ய ப்ரபந்தங்களுக்கும் stepwise சந்தை வீடியோ இருக்கின்றது.
Step 0 விலிருந்து ஆரம்பித்து வார்த்தை வார்த்தையாகப் பிரித்து சொல்லிக் கொடுப்பதில் இருந்து ஆரம்பித்து பூர்த்தியாக(step4) ஶ்லோகத்தை சொல்லிக் கொடுக்கும் வரை step wise சந்தை இருக்கின்றது. அதை வைத்துக்கொண்டு எந்தச் சமயத்தில் நமக்கு ஒழிகிறதோ அப்போது அதைப் போட்டுக் கேட்டு கற்றுக் கொள்ளலாம். சனி ஞாயிறு இரவு பகல் எந்த நேரமாக இருந்தாலும் நமக்கு சௌகரியமான பொழுதில் அந்தச் சந்தை வீடியோக்களை வைத்துக் கொண்டு சுலபமாக தேசிக ஸ்தோத்ரங்களை கற்றுக் கொள்ளலாம்.
ஸ்ரீவிஷ்ணுவிஜய ஸ்தோத்திரத்தில் 3வது ஸ்லோகத்தில் நமோஸ்து புத்தாய ச தைத்யமோஹிநே,இதில் புத்தாய என்பதில் யாரை குறிப்பிடுகிறார்?
லோகத்தை மோஹிப்பதற்காக பகவானே புத்தனாக அவதாரம் பண்ணி, ஒரு தர்சனமும் இல்லாமல் நாத்திகம் பேசுபவர்களை ஏதோ ஒரு சின்னவழியில் கொண்டுவருவதற்கு எம்பெருமான் முயற்சிக்கிறார். அதனால் அவனே புத்தனாக அவதாரம் பண்ணி இவ்வழியில் கொண்டுவந்து பின் வந்தவன் அம்மதத்தில் உள்ள தவறை உணர்ந்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் வருவான் என்பதாக எம்பெருமானின் எண்ணம். இவையெல்லாம் பகவானின் லீலைகள். புத்தன் என்பவன் எம்பெருமான்தான். ஆனால் அதற்காக நாம் புத்தனைச் சேவிக்கமுடியாது.
திவ்ய ப்ரபந்தம் வ்யாக்யானம் பற்றி சில சந்தேகங்கள்
1. 4000 படி 6000 படி என்றால் என்ன?
2. எதை வைத்து இப்படி பிரித்துள்ளார்கள்?
3. இவைகளுக்குள் இருக்கும் வேறுபாடு என்ன?
4. முதலில் எதைப் படிக்கவேண்டும். ஏதேனும் வரிசை இருக்கிறதா?
5. இதன் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்?
6. இவை ஒவ்வொன்றும் திவ்யப்ரபந்தத்திற்கு வேறு வேறு விளக்கமா? அல்லது அதன் அர்த்ததின் விரிவாக்கமா?
32 அக்ஷரம் கொண்டது ஒரு க்ரந்தம் என்று பெயர். அந்த மாதிரி 4000 க்ரந்தங்களுடையது 4000படி என்றும், 6000 க்ரந்தங்களுடையது 6000படி என்றும் பெயர்.
அக்ஷர கணக்கை வைத்து உத்தேசமாகப் பிரித்துள்ளனர்.
4000 படி என்பது சுருக்கம். 6000படி என்பது சற்று விரிவாக இருக்கும்
க்ரமம் என்றில்லை. அவரவர்களுக்கு எந்த வ்யாக்யானத்தில் ஈடுபாடு இருக்கிறதோ அதைப்படிக்கலாம். நம் ஸம்ப்ரதாயத்தில் 6000படி தான் முதலில் சேவிப்பது வழக்கம்.
திவ்யப்ரபந்தத்திற்கு பலவித வ்யாக்யான புஸ்தகங்கள் பல இடத்தில் போட்டுள்ளார்கள். திருவாய்மொழிக்கு திருவாராயிரப்படி வ்யாக்யானம் ஆண்டவன் ஆஶ்ரமத்தில் வெளியிடப்பட்டிருந்தது. ஸ்ரீரங்கத்தில் ரெங்கவிலாஸ மண்டபத்தில் பெரியாச்சான் பிள்ளை வ்யாக்யானமும் கிடைக்கிறது. 4000 த்திற்கும் உத்தமூர் ஸ்வாமியினுடைய வ்யாக்யானம் இருக்கிறது. இவ்வொவ்வொன்றிக்கும் இடத்தைப் பொருத்து சின்னச்சின்ன வித்யாசம் இருக்கலாம் இல்லாமலும் போலாம்.
ஸ்த்ரீகள் எனென்ன காலக்ஷேபங்கள் அந்வயிக்கலாம் என்று தெரியப்படுத்தவும்.
ஸ்த்ரீகள் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம், சில்லரை ரஹஸ்யங்கள், பகவத் விஷயம் ஆகிய காலக்ஷேபங்களில் அந்வயிக்கலாம்.
ஸ்த்ரீகள் அகத்தில் நித்யானுசந்தானத்தின் ஒரு அவ்யமாக கத்ய த்ரயத்தைச் சேவிக்கலாமா? அல்லது அது புருஷாளுக்கு மட்டும்தானா? அப்படி சேவிக்க கூடாது என்றால், ஸ்த்ரீகள் அர்த்தம் புரிந்து கொள்வதற்காக கத்ய த்ரய உபன்யாசத்தை கேட்கலாமா?
கத்யத்ரயம் ஒரு ஸ்தோத்ரமாக இருக்கின்றபடியால் ஸ்த்ரீகள் சேவிக்கலாம் என்று சிலர் சொல்வதுண்டு.அதேச்சமயம் அது சாதாரண ஸ்தோத்ரமாக இல்லாமல் ஶரணாகதி போன்ற வேதாந்த விஷயங்களையும் உள்ளடக்கி இருப்பதால் அதைச் சேவிக்கவேண்டுமா என்று சிலர் யோசிப்பதுண்டு. ஸ்தோத்ரம் என்று நினைத்து சேவிப்பதானால் சேவிக்கலாம்.
மாங்கல்ய ஸ்தவம் ஶ்லோகத்தைச் சுமங்கலிகள் மட்டும்தான் சேவிக்கலாமா அல்லது கணவரை இழந்த கைம்பெண்களும் சேவிக்கலாமா?
மாங்கல்ய ஸ்தவம் ஶ்லோகத்தில் மாங்கல்யம் என்ற பதம் பொதுவாக அனைத்து மங்கல விஷயங்களையும் குறிக்கும்படி அமைந்துள்ளது. க்ருஹத்தில் இருக்கக்கூடிய சுமங்கலி ஸ்த்ரீ என்ற அர்த்தத்தில் மட்டும் வரவில்லை. அதாவது அனைத்து மங்கல விஷயங்களுக்கும் என்ற ஒரு பரந்த நோக்கத்தோடு கூறப்பட்டுள்ளது.ஆகையால் அனைவரும் (கைம்பெண்களும்) சேவிக்கலாம் என்று தோன்றுகிறது.
திவ்ய ப்ரபந்தத்தில் “ராமா” என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா? ராமர் என்ற பெயர் தமிழில் எப்படி வரும்?
“கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்று நம்மாழ்வார் ஸ்பஷ்டமாக “ராமர்” என்ற திருநாமத்தை கூறி பாடியுள்ளார்.
ராமன் என்ற பெயருக்கு தமிழில் மனத்துக்கு இனிமையானவன் என்று அர்த்தம். ரமயதி -எல்லாருக்கும் இனிமையாக இருக்கக்கூடியவன். இதை தூய தமிழில் மனத்துக்கினியான் என்பர். அதையே ஆண்டாளும் பாடியுள்ளார். மேலும் சில பாசுரங்கள்:
சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம்
–3-10-6- (பெரியாழ்வார் திருமொழி)
சிற்றவை தன் சொல் கொண்ட
சீராமா தாலேலோ! பெருமாள் திருமொழி 8-6 (குலசேகராழ்வார்)
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!
பெருமாள் திருமொழி 8-6 (குலசேகராழ்வார்)
எங்களுக்குத் தெரிந்த திருக்கோயிலில் க்ருஷ்ணபக்ஷ ப்ரம்மோற்சவம் சமயம் திருத்தேர் மற்றும் பூர்ணாஹுதி அமாவாஸை அன்று வந்தால் அச்சமயம் வேதபாராயணம் பண்ணலாமா?
திருக்கோயில்களில் வேதபாராயணம் செய்வதற்கு அனத்யயனகாலக் கணக்கெல்லாம் கிடையாது. உத்ஸவம் அமாவாஸையோ, மஹாப்ரதோஷ காலத்திலோ வந்தால் அப்போதும் செய்யலாம்.
ப்ரம்மோற்சவம் சமயம் நம் முன்னோர்கள் இங்கே வருவர் என்று சொல்கின்றனர். அப்படியிருக்க ஸ்ரீவைஷ்ணவரல்லாத ஒருவர் திவ்ய ப்ரபந்தம் கோஷ்டியோடு சேர்ந்து சேவிக்கலாமா? அதனால் ஏதேனும் பாபம் ஏற்படுமா?
ஸ்ரீவைஷ்ணவரல்லாத ஒருவர் திவ்ய ப்ரபந்தம் கோஷ்டியோடு சேர்ந்து சேவிக்கலாம். அதனால் பாபம் ஏற்படாது. ஆனால் அந்தந்தக் கோயில் வழக்கத்திற்கு ஏற்றவாறு கேட்டுச் செய்யவேண்டும்.
வேதம் அனாதி என்றால் பரத்வாஜர் மற்றும் இந்திரன் இருவருக்கும் நடந்த கதைப் பற்றி எதில் குறிப்பிட்டுள்ளது? அதுவும் வேதம் பற்றிய கதைதானே அப்படியென்றால் எப்போது நடந்திருக்கும்?
வேதத்தில் நிறைய கதைகள் உண்டு. அந்தக் கதைகள் நடப்பதற்கு முன் அந்த வேதபாகம் எப்படியிருக்க முடியும் என்ற பொதுவான கேள்வி உண்டு. இதற்கு மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தில் பதிலளித்துள்ளார்கள்.
சில சம்பவங்களெல்லாம் ஒவ்வொரு கல்பத்திலும் நடக்கும். எப்படியென்றால் ஒவ்வொரு கல்பத்திலும் ப்ரளயம், மீண்டும் கல்பம் ஆரம்பம் அதில் மீண்டும் வேதாரம்பம் என்று இருக்கும். அந்த மாதிரி வேதத்தில் சொல்லப்பட்ட கதைகள் எல்லாமே ஒவ்வொரு கல்பமும் நடக்கும். உதாஹரணமாக இராமாவதாரம், க்ருஷ்ணாவதாரம், ந்ருஸிம்ஹ அவதாரம் என்று ஒவ்வொரு கல்பத்திலும் நடந்துகொண்டே இருக்கும்.
வேதம் போல்தான் அதன் கதைகளும் ஒவ்வொரு கல்பத்திலும் வந்துகொண்டிருக்கும். அதனால் முன் கல்பத்தில் நடந்தது பின் கல்பத்தில் சொல்லுவதாக அது ஆகலாம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
ப்ரபன்னர்கள் ஸ்ரீராம் சரித்ரமானஸ் சேவிக்கலாமா?
ஸ்ரீ ராம சரித்ரமானஸ் ஸ்ரீ ராமன் விஷயம் ஆனபடியினாலே ப்ரபன்னர்கள் சேவிப்பதனால் தவறில்லை.
திருவாய்மொழியில் முதல் பாசுரத்தில் முதல் மூன்று அடிகளின் முதல் எழுத்து ப்ரணவத்தைக் குறிக்கும் என்றும் ஆனால் அதன் வரிசை மாறியிருக்கும் என்றும் சொல்வர். சிலர் ஆழ்வார் வேதம் ஓதும் குலத்தில் பிறக்காததனால் இவ்வாறு இயற்றியுள்ளார் என்கின்றனர். இந்தக் காரணம் சரியா? அப்படியென்றால் இதே காரணத்தினால்தான் அமலனாதிபிரானிலும் திருப்பாணாழ்வார் இதேபோல் ப்ரணவத்தை பாசுரத்தில் முதல் எழுத்தாக குறிப்பிட்டுள்ளாரா?.
ஆழ்வார்கள் விஷயத்தில் அவர்கள் தாழ்ந்த பிறப்பில் பிறந்தவர்கள் என்று நினைப்பதே பாபம்.
அவர்களெல்லாம் நித்யஸூரிகளின் அம்சமாக அவதரித்தவர்கள். ஆகையால் அவர்களை தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என நினைப்பது மஹாபாபமாகும். அவர்களின் ப்ரபந்தங்களில் அ கார,உ கார, ம காரங்கள் மாறியிருப்பது என்பதெல்லாம் வ்யாக்யானங்களில் வரும் விசேஷம் அதாவது வ்யாக்யான வைகரிகள்.
திருமங்கையாழ்வார் அருளிய கடைசி ப்ரபந்தம் எது? திருநெடுந்தாண்டகமா அல்லது பெரிய திருமடலா? எது என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருக்கிறதா?
ஸ்வாமி தேஶிகனின் ப்ரபந்த ஸாரப்பாசுரப்படி, பெரியதிருமடல் திருமங்கையாழ்வார் அருளிய கடைசி ப்ரபந்தமாகும்.
கத்ய த்ரயம் எப்போது வேண்டுமானாலும் (காலை,மாலை அல்லது இரவு) சேவிக்கலாமா? சேவிக்க விதிமுறைகள் இருக்கின்றதா?
கத்ய த்ரயம் எப்போது வேண்டுமானாலும் சேவிக்கலாம்.
சில ஶ்லோகங்கள் , பாசுரங்களுக்கு பலஸ்ருதியாக மறுபிறவி கிடையாது என்றும், ஸ்ரீவைகுண்டம் செல்வர் என்றெல்லாம் இருக்கிறது. ஆனால் நம் ஸம்ப்ரதாயத்தில் மோக்ஷத்திற்கு ஶரணாகதிதான் உபாயம் என்று இருக்கிறது. அப்படியென்றால் இந்தப் பலஸ்ருதியை எப்படிப் புரிந்துகொள்வது?
சில ஸ்தோத்ரங்கள், ப்ரபந்தங்களின் பலஸ்ருதி மோக்ஷத்தைக் கொடுக்கும் என்று கூறுவதின் கருத்து என்னவென்றால், அந்த ஸ்தோத்ரத்தையோ ப்ரபந்தத்தையோ அனுசந்தானம் செய்தால் நமக்கு நிச்சயம் ஒரு சதாசார்யர் சம்பந்தம் ஏற்பட்டு அவர் மூலமாக ஶரணாகதி ஆகி நாம் மோக்ஷத்தைப் பெறுவோம். படிப்படியாக நமக்கு மோக்ஷம் கிட்டும் என்பதே இதன் கருத்து.
தேசிகர் நாள்பாட்டில் வரும் அடியானது “தீதாகிய மாயக்கலைகளை” அல்லது “தீதாகிய மாயக் களைகளை” இதில் எது சரி?
இக்கேள்விக்கான விடையை பிறகு தெரிவிக்கின்றோம்.
நம் ஸம்ப்ரதாயத்தில் சந்தைமுறைப்படி ஸ்ரீமத் இராமாயணம், மஹாபாரதம் மற்றும் பாகவதம் கற்கும் வழக்கமுண்டா? இல்லையென்றால் ஏன் அப்படி ஒரு முறையில்லை. இவையெல்லாம் காலக்ஷேப க்ரந்தங்களா?
இக்கேள்வியில் கற்பது என்று என்ன அர்த்தத்தில் கேட்டுள்ளீர்கள் என்று புரியவில்லை.
ஸ்ரீமத் இராமாயண காலக்ஷேபம் என்பது எல்லாவிடங்களிலும் நடந்திருக்கிறது இன்றளவும் நடந்துகொண்டிருக்கிறது. பூர்த்தியாக இல்லாவிட்டாலும் சங்க்ரஹமாக நடக்கும்.
ஸ்ரீமத் இராமாயணம் 24000 ஶ்லோகங்கள், மஹாபாரதம் லக்ஷம் ஶ்லோகங்கள். இவை அனைத்தையும் கற்கவேண்டுமானால் வாழ்நாள் முழுவதும் இதிலேயே சரியாகிவிடும். ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொடுக்க மாட்டார்கள், அப்படி அவசியமுமில்லை. ஏனென்றால் இவை அனைத்துமே மிகவும் சுலபமான ஶ்லோகங்கள். ஆனால்கூட ஆசார்யனிடத்தில் முறைப்படியாக ஸ்ரீமத் இராமாயணம் கேட்பது வழக்கம். ப்ராமாண்யளவில் மஹாபாரதமும், ஸ்ரீமத் இராமாயணமும் ஒன்றுதான், ஆனால் ஸம்ப்ரதாயத்தில் காலக்ஷேபம் என்று வரும்போது மஹாபாரதத்தைப் பொறுத்தவரை தேவையான இடங்களை மட்டும் காலக்ஷேபமாக கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதுமட்டும்தான். ஸ்ரீமத் இராமாயணம் போல் காலக்ஷேபமாக கேட்பதில்லை. மற்றபடி ஆதியில் மட்டும் ஆசார்யனிடமிருந்து உபதேசம் வாங்கிக்கொண்டு நாமே அதைப்பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
யாராவது நமக்கு மருந்து மாயம் வைத்ததாக இருந்தால் அது நமக்கு பாதிக்காமல் இருக்க என்ன தேசிக ஶ்லோகம் பாராயணம் பண்ணணும்”
யாராவது நமக்கு மந்திரம் மாயம் வைத்திருந்தால் அது நீங்க கருட பஞ்சாஶத்தைப் பாராயணம் பண்ணலாம்
ப்ரளயகாலத்தில் எல்லா ஜீவராசிகளும் பெருமாள் வயிற்றில் ஜடமாக இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஸ்ருஷ்டிக்கு முன் அந்தக் காலத்தில் ப்ரக்ருதியின் நிலை என்ன? ப்ரளயத்தின் பொழுது ஆலிலை கிருஷ்ணணின் வடிவத்தை நாம் நினைத்துப் பார்த்தால், இலையில் பாலகிருஷ்ணர் இருப்பதற்கு இந்தத் தண்ணீரும் ப்ரபஞ்சமும் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், மூல ப்ரக்ருதி இந்த வடிவங்களாக வேறுபடுவது ஸ்ருஷ்டியின் போதுதான் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறன். ப்ரளய காலம் ஆலிலை க்ருஷ்ணர் இதை எப்படி புரிந்துகொள்வது?
ப்ரளயகாலத்தில் எல்லாமே அழிந்து போயிருந்தாலும்கூட, பகவான் தான் சயனிப்பதற்காக புதிதாக ஜலத்தையும், மரத்தையும் ஸ்ருஷ்டித்து அதில் இருக்க முடியும் என்கின்ற சமாதானத்தை ஸ்வாமி தேஶிகன் சாதித்திருக்கிறார்.
சிலர் சொல்லுகிறார்கள், ஆலிலைக்கண்ணன் என்பது மொத்த ப்ரளயம் ஆகும்சமயம் நடந்தது இல்லை. இது ஒரு அவாந்த்ர ப்ரளயம். அதாவது உள்ளுக்குள் ஒரு சின்ன ப்ரளயம் இது. அப்போது லோகமெல்லாம் அழிந்து விட்டது. அப்போது சிலர் மட்டும் இருக்கின்றனர். உதாஹரணத்திற்கு மார்க்கண்டேயர் போல் சிலர் இருக்கின்றனர். அப்போது அவர் சேவித்தார் என்று இருக்கின்றது. மகா ப்ரளயம் என்பது மொத்தமும் அழிந்து போகும் சமயம், அப்போது நடந்தது இல்லை இது என்பதாகச் சொல்வதுண்டு.
ஜீவர்கள் மோக்ஷம் அடையும் போது ஸ்ரீவைகுண்டத்தை அடைவதாகக் கூறப்படுகிறது, மேலும் அது ஸுத்த ஸத்வத்தால் ஆன நித்ய லோகத்தைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது. திருப்பாற்கடல் எங்கே இருக்கிறது, அதுவும் நித்யலோகமா? அது எதனால் ஆனது? ஆதிசேஷன் நித்ய சூரியாக இருந்தாலும், பெருமாளை போல் விபுவாக இருக்க முடியாது, அப்படியிருக்க, இரண்டு இடங்களிலும் பெருமாளுக்கு படுக்கையாகவும், இருக்கையாகவும் ஒரே நேரத்தில் எப்படி இருக்கிறார்? தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிறேன்.
முக்தி அடையும் ஜீவர்களே நித்யவிபூதியைச் செல்லும் போது அவர்கள் இச்சையை அனுசரித்து பல விதமான திருமேனியைப் பெறமுடியும் என்றிருக்கும் போது, நித்யர்களுக்குச் அது சாத்யமே. அதனால் ஆதிசேஷன் ஒரே சமயத்தில் பெருமாளுக்கு பல கைங்கர்யங்களைச் செய்ய முடியும், பல இடங்களில் இருக்க முடியும்.
க்ஷீராப்தி என்பது, ஸ்ரீ வைகுண்டத்திற்கு வெளியே இருப்பது, தேவாதிகள், ப்ரம்ம ருத்ராதிகள் சென்று சேவிக்கக்கூடிய இடம். இதுவும் பகவத் ஸங்கல்பத்தினாலே உருவாக்கப்பட்ட இடம், சதுர்முக ப்ரம்மாவால் உருவாக்கப்பட்டது அல்ல.
ஆஞ்சநேயர் ருத்ரனின் அம்சம் என்று நம் பூர்வாசார்யர்கள் ஒப்புக்கொள்கிறார்களா? அக்காரணத்தினால் தான் ஸ்வாமி தேசிகன் சிறிய திருவடி மீது ப்ரத்யேகமாக ஸ்தோத்திரம் ஏதும் இயற்றவில்லையா ? பரந்யாஸம் செய்து கொண்ட ஶ்ரீவைஷ்ணவர்கள் பெரிய திருவடியைப்போல் சிறிய திருவடியையும் உபாசிக்கலாமா ?
ஆஞ்சநேயர் ருத்ரனின் அம்சம் என்று நமது பூர்வாசார்யர்கள் எங்கும் எழுதவில்லை. ஸ்வாமி தேஶிகன் ப்ரத்யேகமாக ஏன் ஸ்தோத்ரங்கள் எழுதவில்லை என்பதற்கு இதென்று குறிப்பாக காரணம் சொல்ல முடியாது. ஏன் என்று கேட்டால் ஸ்வாமி இயற்றிய ஶ்லோகங்கள் அனைத்தும், ஒவ்வொரு இடமாக சென்று எல்லாரையும் குறித்துப் பண்ணிக்கொண்டு போகவேண்டும் என்று சங்கல்பித்து எழுதியதில்லை, அவரவர்கள் நியமித்து எழுதியது தான். அந்தந்தப் பெருமாள் தேஶிகன் மூலமாக உண்டாக்கினார் என்பது தான்.
ஸ்வாமி தேஶிகன் ஆஞ்சநேயரைக் குறித்து ஶ்லோகங்கள் சாதித்திருக்கிறார். சங்கல்ப சூர்யோதயத்தில் ஶ்லோகங்கள் இருக்கின்றன. அதேபோல் கந்தமாதன பர்வதத்தில் ஆஞ்சநேயர் இருப்பதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய திருவடியை போலே சிறிய திருவடியையும் தாராளமாகச் சேவிக்கலாம். அதில் ஆஞ்சநேயருக்கு ப்ரதிஷ்டை எப்படி நடந்திருக்கின்றது என்பது தான் முக்கியமான விஷயம். ஆஞ்சநேயரின் த்யானம், ஶ்லோகங்களைச் சொல்வது எல்லாம் இராமாயணத்தின் போது நமக்கு உண்டு. ப்ரதிஷ்டையின் போது பாஞ்சராத்ர ஆகமத்திலோ அல்லது வைகானச ஆகமத்திலோ ப்ரதிஷ்டை பண்ணப்பட்டிருந்தால் அது பக்த ப்ரதிஷ்டை என்கின்ற ரீதியில் வரும். அதாவது ஸ்ரீராமனுடைய பக்தன் என்கின்ற முறையில் ப்ரதிஷ்டை பண்ணியிருந்தால் சேவிக்கலாம். ருத்ரனுடைய அம்சமாக ப்ரதிஷ்டை பண்ணியிருந்தால் அங்கு சேவிக்க முடியாது.
அதனால் பெரியோர்கள் பெருமாள் கோவில்களில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர், ராமருடன் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் இவர்களை தான் சேவிப்பது வழக்கம். மற்றபடி தனியாக இருக்கும் ஆஞ்சநேயர் எந்த ரீதியில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் என்பது தெரியாததனால் சேவிப்பதை அவர்கள் ஆதரிப்பது கிடையாது. மற்றபடி அவரிடம் பக்தியோடு இருந்துகொண்டு அவரின் ஶ்லோகங்களை அவசியம் சேவிக்க வேண்டும்.
நாவலப்பாக்கம் ஸ்ரீ உ வே வாஸுதேவ தாத்தாசார்யர் ஸ்வாமிகள் எழுதிய “வைணவக் கொள்கையில் வேதாந்த தேசிகன்” (Vedanta Desikan on the Principles of Vaishnavism- ஆங்கில மொழிபெயர்ப்பின் பக்கம் 232) என்கின்ற நூலில், அத்வைத தத்துவஞானி வித்யாரண்யர் சததூஷணியை விமர்சித்தபோது, ஸ்வாமி தேசிகன் ஸம்ஸ்க்ருத “ச” என்ற ஒற்றை எழுத்தை வைத்துக் கொண்டு “ச கார ஸமர்த்தணத்தில்” எதிர் விமர்சித்திருக்கிறார். ”வித்யாரண்யரை ஸ்வாமி தேஶிகன் “ச” என்ற ஒற்றை அக்ஷரத்தைப் பயன்படுத்தி எவ்வாறு எதிர் விமர்சித்திருகிறார்? மேலும் சக்கர சமர்த்தனம் இன்றும் இருக்கின்றதா?
விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
ச கார ஸமர்த்தணம் என்ற நூல் உண்டு இப்போது கிடைப்பதில்லை. ச என்றால் – அதுவும் (and என்ற ஆங்கில வார்த்தை போன்றது). ச என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு.
உ.தா: இராமனும் போனான் என்றால், இராமனுடன் மற்றொருவரும் சென்றுள்ளார் என்ற அர்த்தம் கிடைக்கும். அப்படிச் ச என்று சேர்த்தால் வேறு ஒருவரும் சென்றுள்ளார் என்பது போன்ற அர்த்தம் கிடைக்கும். அவ்வர்த்தம் சரியா இல்லையா போன்ற சர்ச்சைகள் உண்டாகும். அவசியமில்லாமல் ச சொல்லக்கூடாது.
இப்படி ச காரத்தில் சர்ச்சை வரும்போது, ச என்பது சரியாக தான் சொல்லப்பட்டிருக்கிறது என்று அந்தப் புத்தகத்தில் சாதித்திருக்கிறார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், திரௌபதி மகா விஶ்வாஸத்துடன் வஸ்த்ராபஹரணத்தின் சமயம் உதவிக்காக கூக்குரலிட்டு அழுதபோது அவளுக்கு வேண்டிய உதவியை தான் செய்யவில்லை என்னும் மன பாரத்துடன் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டதாக உத்தவனிடம் கூறியதை பெரியோர்களிடமும் உபன்யாஸங்களிலும் அடியேன் பலமுறை கேட்டிருக்கிறேன்.
அடியேனின் மிகப்பெரிய மற்றும் அதிருப்தியான சந்தேகம் என்னவென்றால், பெருமாள் அவளுக்குப் போதுமானதைச் செய்யவில்லை என்று மிகவும் அத்ருப்தியாக உணரும்போது, அவள் உதவிக்காக அழும் வரை அவன் ஏன் காத்திருக்க வேண்டும்? ஏன் காத்திருந்தார்?. பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தை பூங்காவில் விளையாடும்பொழுது கீழே விழுந்து அல்லது காயமடைவதைப் பார்க்கும்போது, விழுந்துவிடாமல் அல்லது காயமடையாமல் பாதுகாக்க அவர்களை நோக்கி விரைந்து செல்கிறோம் இல்லையா? “அம்மா, நான் கீழே விழுந்துவிட்டேன் ரத்தம் வருகிறது, தயவு செய்து என்னைக் காப்பாற்று?” என்று குழந்தைகள் கேட்பதற்காக நாம் காத்திருப்பதில்லையே. லௌகீக வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் நாமே நமது குழந்தைகள் மீது எந்த ஒரு எதிர்ப்பார்பும் இல்லாத அளவற்ற பாசம் வைத்திருக்கும்போது, ஜகன்மாதா மற்றும் ஜகத் பிதாவாக தாயாரும் பெருமாளும் ஏன் ஶரணாகதி செய்து கொள்ளவோ அல்லது உதவி கேட்கவோ காத்திருக்கிறார்கள்? பெருமாள் தாயாரையம், பெரியவர்ளையும் அவமதிக்கும்படியாக என்னுடைய இந்தக் கேள்வி இருந்தால் க்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன்.
உலகத்தை சிருஷ்டித்து, ரக்ஷித்து மாதா பிதாக்களாக இருப்பது பெருமாளும், தாயாரும். சாதாரண மாதா பிதாக்கள் போல் அல்ல, அதில் அவர்கள் சில வ்யவஸ்தைகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. உதாஹரணமாக, கர்மாதீனமாக தான் அவரவர்களுக்குப் பிறப்பும், சுகதுக்கங்களைக் கொடுப்பது என்று. ஒரே மாதா பிதாவாக ஆயினும் எல்லாரையும் ஒரே மாதிரி சுகமாகவே பிறக்க வைப்பதில்லை. ஒவ்வொருவரின் பிறப்பில், போகத்தில் எத்தனையோ வித்யாசங்கள் இருக்கின்றன. சிலர் பணக்காரனாக, ஏழையாக, ஆரோக்யமாக, புத்திசாலியாக பிறப்பதென அவரவர் கர்மாவிற்குயேற்றார் போல் பிறப்பு கொடுப்பது என்று ஒரு வ்யவஸ்த்தை வைத்துள்ளார்கள்.
அதே போல் தான் ரக்ஷணத்திலும் ஒரு வ்யவஸ்த்தை உண்டு, அவரவர் கர்மாவிற்கேற்றார் போல் ரக்ஷணம். ஶரணாகதி முதலான ரிதீயில் ப்ரார்தித்தால் ரக்ஷணம் அது இல்லாவிட்டால் ரக்ஷணம் இல்லையென்று “அப்ரார்தித்தோ ந கோபாயேத்” என சொல்கிறார்கள்.
இந்த வ்யவஸ்த்தை இல்லாவிட்டால் ஒரு ஜந்துவிற்கும் ஒரு ஆபத்தும் வரக்கூடாது என்று ஆகிவிடும். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது, அவரவர் கர்மாதீனமாக என்னவெல்லாம் உண்டோ அவையெல்லம் வரத்தான் வரும். அந்தக் கர்மத்தை மீறி பிழைத்துக்கொள்வதற்கு, செயல்படுவதற்கு சில ஶாஸ்த்ரங்கள் உண்டு. நம் அது மூலமாக தெரிந்துக்கொண்டு, கெட்டகார்யங்களைத் த்வரித்து, நல்ல கார்யங்களைச் செய்வது போன்றவை பண்ணலாம், ஶரணாகதி பண்ணலாம்.இவை செய்வதால் பகவான் ரக்ஷிகின்றான். அதை வைத்துக்கொண்டே அவன் ரக்ஷிப்பதினால் அவனை கருணாவான் என்கிறோம்.
இவையெல்லாம் சிருஷ்டி, ரக்ஷணம், மோக்ஷம் போன்றவற்றில் பகவான் செய்துகொண்ட வ்யவஸ்த்தை. இதை ஶாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது, மேலும் விஸ்தாரமாக அறிய தத்வமுக்தாகலாபம் முதலிய கர்ந்தங்களில் ஸேவிக்கலாம்.
அடியேன் விசிஷ்டாத்வைதத்தை உதாரணங்களுடன் மிக எளிமையாக விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.
விசிஷ்டம் என்றால் கூடியது, சேர்ந்தது என்று அர்த்தம். அத்வைதம் என்றால் ஒன்று என்று அர்த்தம்.
சகல ப்ரபஞ்சத்தோடும் சகல ஜீவர்களோடும் கூடிய பரமாத்மா நாராயணன் ஒருவனே என்பதே விசிஷ்டாத்வைதத்தின் பொருள்.
பெருமாள் தனியாகவும், ப்ரபஞ்சம் தனியாகவும் இருக்கின்றது என்று அர்த்தம் கிடையாது.
எல்லாப்பொருட்களிலும், எல்லா ஜீவன்களிலும் பெருமாள் இருக்கின்றார். பெருமாள் விசிஷ்டமாக இருக்கின்றார். பெருமாளைத் தனித்து எந்த வஸ்துவும் இருக்கவே முடியாது. அப்படி விசிஷ்டமாக சேர்த்துவைத்து பார்த்தோமேயானால் எல்லாவற்றோடும் சேர்ந்திருக்கக்கூடிய பரமாத்மா ஒருவனே.
லௌகீக உதாஹரணத்திற்கு ஒரு மரத்தை எடுத்துக்கொண்டால் மரத்தில் இலை, பூ, காய், பழம் இருக்கும் . இதைத்தவிர மரத்தின் குணங்களான வாசனை, ரஸம் , பல த்ரவ்யங்கள், எல்லாம் கலந்திருக்கும். இவை அனைத்தையும் சேர்த்தே ஒரு மரம் என்கின்றோம். அதேபோல் சகல சேதனாசேதன ப்ரபஞ்சங்கள் எல்லாவற்றுடனும் சேர்ந்த பரமாத்மா ஸ்ரீமன் நாராயணன் ஒருவன் என்பது தான் விசிஷ்ட அத்வைதம் .
இதைப்பற்றி விஸ்தாரமாக காலக்ஷேபங்களில் கேட்கலாம் அல்லது க்ரந்தங்களில் பார்க்கலாம்.
அடியேனுக்கு சமீபத்தில் ஸமாஶ்ரயணம் கிடைத்தது. அதற்கு முன்னர் நான் தென்கலை ஸம்ப்ரதாய தனியன்களையும், உபதேச ரத்தினமாலை போன்ற க்ரந்தங்களையும் புத்தகம் மற்றும் ஒலி மூலம் கேட்டு சேவித்து வந்தேன்.
1. தற்சமயம் வடகலை ஸம்ப்ரதாய ஸமாஶ்ரயணம் கிடைத்த பின்னர் உபதேச ரத்தினமாலையைச் சேவிக்கலாமா?
2. அது வழக்கமில்லை என்றால் வடகலை ஸம்ப்ரதாய குருபரம்பரையைப் பின்பற்ற தமிழில் உள்ள க்ரந்தங்களை அடியேனுக்கு தெரிவிக்க வேணுமாய் விண்ணப்பிக்கிறேன்.
உபதேச ரத்தினமாலை போன்ற க்ரந்தங்களை புத்தகம் மற்றும் ஒலி மூலம் கேட்டு நன்றாக சேவிக்கலாம் . அதில் ஆசாரியர்களைப்பற்றி இருப்பதினால் அதைச் சேவிப்பதில் ஒன்றும் தோஷம் கிடையாது.
வடகலை ஸம்ப்ரதாய க்ரந்தங்கள் என்று எடுத்துக்கொண்டால் தேஶிக ஸ்தோத்ரங்கள், தேஶிக ப்ரபந்தம் குறிப்பாக ப்ரபந்த ஸாரம், பிள்ளையந்தாதி ,தேஶிக மங்களம் போன்றவற்றைச் சேவிக்கலாம்.
www.sadagopan.org இன் e- புத்தகங்களில் ஒன்றான ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தின் உத்திர ஶதகத்தில் உள்ள ஸ்லோகம் 56க்கான தமிழ் மற்றும் ஆங்கில வியாக்கியானம் / விளக்கம குழப்பமாக உள்ளது. கீழ் வரும் ஸ்லோகத்தின் இரண்டாம் பாதியில்
देवीहस्ताम्भुजेभ्यश्चरअणकिसलये समवहद्भयोऽपहृत्य
प्रत्यस्यानन्तभोगं झटिति जलपुटे चक्षुषी विस्तृणानः।
“अक्षिप्योरश्च लक्षम्याः स्तनकलशकनत्कुङ्कुमस्तोमपङ्कात्
देवः श्रीरङ्गधामा गजपतिघुषिते व्याकुलः स्तात् पुरो नः”॥
அதில் “மஹாலக்ஷ்மியின் அழகான திருமார்பில் பூசப்பட்டிருக்கும் குங்குமக் குழம்பிலிருந்து அவர் தனது திருமார்பை விடுவித்துக் கொண்டார்” என்று விளக்கம் இருக்கின்றது. தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
“மஹாலக்ஷ்மியின் அழகான திருமார்பில் பூசப்பட்டிருக்கும் குங்குமக் குழம்பிலிருந்து அவர் தனது திருமார்பை விடுவித்துக் கொண்டார்” என்பதிற்கான தாத்பர்யம் என்னவென்றால் ப்ராட்டியுடன் பெருமாள் ஏகாந்தத்தில் இருக்கும்பொழுதுகூட கஜேந்திரன் ஆதிமூலமே என்று கூக்குரல் இட்டவுடன் எல்லாவற்றையும் மறந்து பக்தர்களை ரக்ஷிப்பதே ப்ரதானமாக கொண்டு, மற்றது எதுவானாலும் அது அப்ரதானம் என்பதை காண்பிப்பதற்கு ரஸமாகச் சொல்லப்பட்ட வார்த்தையாகும்.
ப்ராட்டியுடன் பெருமாள் ஆலிங்கனத்தில் இருக்கும்பொழுதுகூட அதை பட்டென்று உதறிதள்ளிவிட்டு கஜேந்திரனை ரக்ஷிப்பதற்காக உடனே போனார் என்பதாக, அதாவது ரஸமான வார்த்தை என்கின்ற ரீதியில் அந்த அர்த்தத்தை எடுத்துகொள்ள வேண்டும்.
தென்னாசார்ய உபந்யாஸகர் ஒருவர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ‘சுக்லாம் பரதரம்’ என்பதை மேற்கோள் காட்டி விஷ்வக்சேனரும் கணபதியும் ஒருவரே என்று கூறினார். இது சரியா?
சுக்லாம் பரதரம் என்பது கணபதியைப்பற்றி என்று ஸ்மார்த்தர்கள் சொல்கின்றனர். விஷ்வக்ஸேனருடைய பரிவாரத்தில் ஒருவர் கஜ முகத்துடன் இருக்கின்றார். கஜானன் என்றே அவருக்கு பெயர். அதனால் அவரை சொல்கிறது என்று சில பேர் சொல்வார்கள்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்பதினால் சாக்ஷாத் எம்பெருமான் விஷ்ணுவைப் பற்றியே சொல்கின்றது என்று நாம் அனைத்து கர்மத்திலும், அனுஷ்டானத்திலும் இதைச் சொல்லி ஆரம்பிக்கின்றோம்.
ஸ்வாமி ஸாதித்த திருக்குருகைப் பிரான் உபன்யாசத்தில் அவர் ஸ்ரீமந் நாதமுனிகள் வம்சம் என்று அறிந்தேன். எனில் இராமானுஜரும் ஸ்ரீமந்நாதமுனிகளின் உறவினரா? பிறகு ஏன் ஆளவந்தார் வரதன் ஆலயத்தில் இராமனுஜரைப் பற்றி திருக்கச்சி நம்பிகளிடம் கேட்டு அறிந்தார்? தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன் ஸ்வாமி.
பகவத் இராமானுஜர் ஆளவந்தாருடைய தௌஹித்ரன் ஆகவேண்டும். அதாவது பெண் வயிற்று பிள்ளையாக இருக்க வேண்டும். முதலாவதாக ஆளவந்தார் ஒரு ஸந்யாசியாதலால் அவருக்கு அவருடைய வம்சத்தைப் பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம். இரண்டாவதாக முற்காலத்தில் பெண் வயிற்றுச் சந்ததிகளுக்கு இப்பொழுது நமக்கு இருப்பது போல் நெருக்கமோ, பழக்கமோ,பரிச்சயமோ இருப்பது கொஞ்சம் கடினமான விஷயம்.நமக்கு இப்பொழுது எல்லா வசதிகளும் உண்டு. பெண்ணைத்திருமணம் செய்துகொடுத்த பின் அவர்களை போய் பார்க்கலாம், அவர்களுடன் தொலைபேசியில் உரையாடலாம். மேலும் பகவத் இராமானுஜர் குருகுலத்தில் இருந்து கொண்டு வித்யாப்யாஸம் பண்ணிக்கொண்டு இருந்தார். இது போல் பல காரணங்கள் இருந்ததாக பெரியோர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
துளசி , விஷ்ணுவுக்கு சாபம் அளித்ததால் சாளக்கிராமமாக அவர் ஆனதாகவும், ஜலந்திரன் எனும் அசுரன் மனைவியாக துளசி இருந்தாகவும் கூறப்படும் விஷயங்கள், புராணத்தில் உள்ளதா? இதில் விஷ்ணுவின் பெருமைக்குக் குறை போல் இருக்கின்றது தெளிவிக்க வேண்டுகிறேன்.
புராணத்தில் பலவித புராணங்கள் உண்டு. அந்தப் புராணங்களில் இருக்கும் கதைகள் எல்லாம் அப்படியே முழுவதும் சத்தியமாக இருக்க வேண்டும் என்பது கிடையாது. சில வேறுவிதமாக இருந்தாலும், பெருமாளுடைய ஒரு அபிநயம் என்பதாகவும் உண்டு. கிருஷ்ணாவதாரத்தில், சிவனுடைய அனுக்ரஹத்தால் தான் கிருஷ்ணனுக்குக் குழந்தை பிறந்தது என்று இருக்கின்றது. இவையெல்லாம் பெருமாளுடைய அபிநயம் என்று பூர்வாசார்யர்கள் வ்யாக்யானம் பண்ணி இருக்கிறார்கள். அதேபோல் பெருமாள் சிவனுக்குப் பயந்து யக்ஞத்திலிருந்து ஓடினார் என்று இருக்கின்றது. அதுவும் ஒரு அபிநயமே. பெருமாள் அவதாரம் பண்ணும் பொழுது தன் பெருமைகளைச் சுருக்கிக்கொண்டு சில அபிநயங்கள் செய்வதுண்டு. அந்த ரீதியில் பெருமாளுடைய பெருமைக்குக் குறைவு இல்லாமல் நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வராஹ அவதாரத்தில், எம்பெருமான் பூமாதேவியை ஜலப்ரளயத்திலிருந்து வெளியே கொண்டு வந்து ஹிரண்யாக்ஷனை சம்ஹாரம் செய்கின்றார். ப்ரளயத்தின் போது, எம்பெருமானின் நாபியில் அனைத்தும் (எல்லா உலகங்களும்) வைக்கப்படுகின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு பூமி, ஹிரண்யாக்ஷன் இருப்பதைக் காண்கிறோம். இந்த நிகழ்வுகள் எப்பொழுது நடந்தன? சிருஷ்டிக்கு முன்பா அல்லது பின்பா? இதை தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்?
ஸ்ருஷ்டியில் ஆதிகாலத்தில் அதாவது ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் பொழுது நடக்கின்ற ஸ்ருஷ்டிக்கு “ஸமஸ்த” ஸ்ருஷ்டி என்று பெயர்.
அதில் ஒவ்வொரு தத்துவத்தையும் பெருமாள் தனித்தனியாக ஸ்ருஷ்டித்து, அதிலிருந்து தான் இந்தப் பூமி முதலானவைகளைப் பெருமாள் ஸ்ருஷ்டிக்கிறார். அப்படி பண்ணும்பொழுது ப்ரம்மாண்டம் என்பதை ஸ்ருஷ்டித்து , அதில் ப்ரம்மாவை ஸ்ருஷ்டிக்கிறார். ப்ரம்மாவைக்கொண்டு பெருமான் மேலே ஸ்ருஷ்டிகளை நடத்துகிறார்.
இந்த இரண்டு ஸ்ருஷ்டிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தவை இவை. ப்ரம்மாவைக் கொண்டு பூமியில் இன்னும் ஜீவராசிகளை ஸ்ருஷ்டிக்கும் பொழுது அது முடியாமல் போகின்றது. அப்பொழுதுதான் இந்த பூமியை ஜலப்ரளயத்திலிருந்து வெளியில் கொண்டு வர இரண்யாக்ஷனை சம்ஹாரம் பண்ணி ப்ரம்மாவுக்கு பெருமாள் சகாயம் பண்ணுகிறார் என்பதாக இருக்கின்றது.
சில இராமாயணப் பதிப்புகளில் தாரா (வாலியின் மனைவி) க்ஷீர சாகரத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. இது உண்மையா? அதற்கான உண்மையான குறிப்பப எதிலாவது கூறப்பட்டுள்ளதா? பொய் என்றால், அவள் எப்படி வந்தாள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?
இது வால்மிகீ இராமாயணத்தில் இல்லாத விஷயமாக இருக்கிறது. இதைப் பற்றி வேறு எங்காவது குறிப்பிருக்கிறதா என்று பார்த்துச் சொல்கிறோம்.
உங்கள் யூடியூப் சேனல்களிலிருந்து ஸ்தோத்ரங்கள் மற்றும் பிரபந்தங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டிய வரிசையைக் கொண்ட அட்டவணையை இடுகையிட முடியுமா? சில காரணங்களால் என்னால் குறிப்பிட்ட நேர இடைவெளியில் கலந்துகொள்ள முடிவதில்லை.ஒவ்வொரு பதிப்பிற்கும் டெலிகிராம் சேனலைப் பின்தொடர முடிவதில்லை. நமது சம்ப்ரதாயத்தை ஆஃப்லைனிலும் கற்க என்னைப் போன்ற பாகவதர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அடியேன் தன்யாஸ்மி.
இது தான் வரிசை என்று குறிப்பாக இல்லை. இருப்பினும், ஸுதர்ஶனாஷ்டகம், காமாஸிகாஷ்டகம், பரமார்த்த ஸ்துதி, தசாவதார ஸ்தோத்ரம் என சிறு ஸ்தோத்ரங்கள் தொடங்கி பின் தயா ஶதகம் போன்ற பெரிய ஸ்தோத்ரங்களைத் தங்களுக்கு முடிந்த நேரத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்கள் சந்தை வீடியோ தொகுப்பிலிருந்து Stepwise ஆக சுலபமாய் கற்கலாம்.
https://youtube.com/playlist?list=PLN8H4DA5K_KuBprotBvvlCZodfSOWic8b
பூமா தேவி மற்றும் நீளா தேவி என்பவர்கள் யார்? அவர்களும் ஸ்ரீ தேவியை போல் விபுவா? அவர்கள் ஈஶ்வர கோடியையா அல்லது ஜீவ கோடியைச் சேர்ந்தவர்களா?
ஸ்ரீதேவி, பூமா தேவி, நீளா தேவி என இவர்கள் மூவரும் எம்பெருமானின் தேவிகள் என்று ப்ரமாணங்கள் இருக்கின்றது.
அதில் பெரிய ப்ராட்டியார் ஸ்ரீதேவியானவர் ஈஶ்வரியாக விபுவாக இருக்கிறார்.
பூமா தேவியும், நீளா தேவியும் அப்படி விபுவாக இருப்பதாக ப்ரமாணமில்லை. ஆகையால் அவர்கள் ஜீவர்கள், நித்யசூரிகள் என்பதாக கூறுவர்கள்.
த்ரோணாச்சார்யர் (அப்போதைய சேனாதிபதி) மிகச்சிறந்த ஆசானாக இருந்தபோதிலும் மற்ற மஹாரதிகளின் வழியில் தானும் சேர்ந்து ஏன் அபிமன்யுவை கொல்ல துணைநின்றார்? அதில் க்ருப்பாச்சார்யரும் ஏன் பங்குக்கொண்டார்? ப்ராமணர்களாக இருந்ததும் த்ரோணாச்சார்யர் மற்றும் க்ருப்பாச்சார் மஹாபாரத யுத்தத்தில் ஏன் கலந்துக்கொண்டனர்?
த்ரோணாச்சார்யார், க்ருபாச்சார்யார் இவர்கள் எல்லாரும் சேர்ந்து அபிமன்யுவை வதம் செய்தது ந்யாயமில்லை என அனைவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒன்று தான். ஆனால் யுத்த சமயத்தில், அவனை அப்படியே விட்டு விட்டால் ஆபத்து என்றும், சைன்யத்தை நாசம் செய்து விடுவான், இன்னும் சிலரை சகாயத்திற்கு கூட்டிக்கொண்டு வர இயலுவான் என்று யுத்தகளத்தில் அவர்கள் மனதில் எழுந்திருக்கும் ஆகையால் அதர்ம யுத்தம் செய்தாவது இவனை கொல்ல வேண்டும் வேறு வழியில்லை என்று நினைத்திருப்பர். இது போல் தான் பாண்டவர்களும் பல யுக்த்திகளைக் கையாண்டிருக்கிறார்கள்.
யுத்தத்தில் வேறு வழியில்லை எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென வரும் போது நிலைத்தவறி நடப்பது மஹாபாரத யுத்தத்தில் நாம் பார்க்கின்றோம்.
த்ரோணாச்சார்யார், க்ருபாச்சார்யார் இருவரும் ப்ராமணர்கள் என்ற கேள்விக்கு, ப்ராமணர்கள் சில சமயம் வேறு வழியில்லாது போனால் க்ஷத்ரிய தர்மத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றிருக்கிறது. அந்த ரிதீயில் தேசத்தைக் காக்க வேறு வழியில்லாமல் க்ஷத்ரிய தர்மத்தை எடுத்திருப்பார்கள் என்பதாக, சாமாதனத்திற்காக நாம் கொள்ளலாம்.
அடியேன், பெருமாளின் பரசுராம அவதாரத்தின் முக்கியத்துவம் என்ன என்று விளக்க ப்ரார்த்திக்கின்றேன்?
துஷ்ட க்ஷத்ரியர்களைக் கொல்லுவதற்காக பரசுராம அவதாரம்.
அவர் காலத்தில் ஏகப்பட்ட ஏகப்பட்ட ராஜாக்கள், ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ராஜா இருந்தார்காள். 10 ஊருக்கு ஒரு ராஜா என்பது போலெல்லாம் நிறைய ராஜாக்கள் இருந்தனர். அவர்கள் இஷ்டம் போல் க்ஷத்ரிய தர்மமெல்லாம் பின்பற்றாது தான் வைத்தது தான் சட்டம் என்று சொல்லி துஷ்டர்களாக பல பேர் பரவி இருந்தபோது அவர்களை எல்லாம் ஒழிக்க வேண்டிய நிலை இருந்தது.
உண்மையான நல்ல சூர்ய வம்சம், சந்திர வம்சத்தில் வந்த க்ஷத்ரியர்கள் எல்லாரும் தர்ம வழியில் பரிபாலனம் செய்து வந்தனர்.அவர்களை பரசுராமர் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் க்ஷத்ரியர்கள் எனச் சொல்லிக்கொண்டு துஷ்டர்களாக கொடுங்கொல் ஆட்சி செய்து தர்மத்தைத் தழைக்கவிடாது செய்தவர்களை அழித்தார்.
இதற்கு விஸ்தாரமாக தயா ஶதகம் ஸ்லோகத்தில் இருக்கிறது, அந்த ஸ்லோகத்தின் அனுபவம் பெற கீழே உள்ள linkஐ click செய்யவும்.
https://youtu.be/c9xqtwbVUDo
ஸ்வாமி தேசிகன் அருளிய “பரமத பங்கம்” என்னும் ரஹஸ்ய க்ரந்தத்தில் பின் வரும் இந்த பங்க்தி எந்த பகுதி (chapter)யில் வரும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன் அடியேன்.
“சில மனிதர்களின் இயலாமையால் காலப்போக்கில் வேதங்களும், வேதாந்தங்களும் மறைந்தும், நலிவடைந்தும் போயின. இருப்பினும் இன்றளவும் அகஸ்தியர்ம் பரசுராமர், ஆபஸ்தம்பர், வ்யாஸர் முதலிய மகரிஷிகள் அவ்வேதங்களை மலய, மஹேந்த்ர, விந்திய , ஹிமாசலம் போன்ற அறிதான இடங்களில் அநுசந்தித்து வருகின்றனர். ஊழி காலம் முடிந்து மீண்டும் க்ருத யுகத்தில் மறைந்த வேதங்களை அவர்கள் மீண்டும் எடுத்துரைப்பர் என்பதாலும், வேதங்கள் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது” என்று சாதித்திருப்பார்.
பரமதபங்கம் என்கின்ற நூலில் வேத நித்யத்வம் பற்றியான விசாரம் ஒன்று இருக்கின்றது. அந்த நூலிலே, சமுதாய தோஷாதிகாரத்திலே, வேத நித்யத்வம் எனும் சொல்லுமிடத்தில் குறிப்புள்ளது. வ்யாக்யானங்களில் விஸ்தாரமாக இருக்கலாம்.
திருவாய்மொழி இரண்டாம் பத்தில் ஆழ்வார் ஆணல்லன் பெணல்லன் அல்லா அலியுமல்லன் என்று குறிப்பிடுகிறார். இதன் அர்த்தத்தை விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.
பெருமாளைப் பற்றி புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், நமக்குத் தெரிந்த யாரோ ஒருவரைப் போல் இருப்பார் என்று தானே சொல்ல வேண்டும். அப்படி லோகத்தில் இருக்கும் புருஷர்கள், ஸ்த்ரீகள், இவர்களை காண்பித்து இவர்களைப்போல் இருப்பாரா என்றால், இவர்களைப் போலே இருக்க மாட்டார். ஆணும் இல்லாமல் பெண்ணுமில்லாமல் இருக்கும் வஸ்துக்களைக் காண்பித்து கேட்டால், அப்படியும் இருக்க மாட்டார் என்று கூறுகிறார்.
அவர் இந்த ஜாதியைச் சேர்ந்தவர் இல்லை என கூறுகிறார். பெருமாள் விஜாதியன், விலக்ஷணன் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இதனுடைய அர்த்தம்.
நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் : திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருமொழி, பெரியாழ்வார் திருமொழி என அனைத்துப் பதிகங்களுக்கு தலைப்புள்ளது. இத்தலைப்பின் தாத்பர்யம் என்ன என்பதை சாதித்தருள வேண்டுகிறேன். எதைக்கொண்டு இத்தலைப்புகள் வகைப்படுத்தப்பட்டன?
நாலாயிர திவ்ய ப்ரபந்தம் என்பது புத்தகம் அல்ல அது ஒரு தொகுப்பு.
24 ப்ரபந்தங்களைச் சேர்த்து, தொகுத்தது நாலாயிர திவ்ய ப்ரபந்தம் என ப்ரபந்த சாரத்தில் ஸ்வாமி தேசிகன் சாதித்திருக்கிறார். மேலும் நம் சம்ப்ரதாயத்தில் ஆசாரியர்கள் அப்படி ஏற்படுத்தியுள்ளனர்.
12 ஆழ்வார்கள் அருளிய ப்ரபந்தங்களை, 24 தலைப்புகள் கீழ், 24 ப்ர்பந்தங்களாக தொகுத்துள்ளனர். பெரியாழ்வார் அருளியதை பெரியாழ்வார் திருமொழி என்றும், ஆண்டாள் அருளியதை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்றும் வகுத்துள்ளனர்.
திருவாய்மொழி, திருவிருத்தம் என்பெதெல்லாம் அந்தந்த ப்ரபந்தத்தின் தலைப்புகள்.
அடியேன், நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் காமதேவனை ப்ரார்த்திக்கின்றாள். இதற்கு உத்தமூர் ஸ்வாமியின் வ்யாக்யானத்தில், “ஸ்வாமி தேசிகன், ஆண்டாள் நைமித்திக கர்மா செய்கிறாள் என்றும் மேலும் அவள் காமதேவனின் அந்தர்யாமியாக இருக்கும் எம்பெருமானைத்தான் ப்ராத்திக்கின்றாள் என்று கூறுகிறார்” என இருக்கின்றது. மேலும் , ஸ்வாமி தேசிகனின் “நாச்சியார் க்ருஷ்ணணைப் பெறுகைக்காகப் பண்ணின காமதேவார்சனம் ஶ்ருங்கார சமாத்யனுகுண க்ருஷ்ண ரூபாந்தர விஷயம்” என்ற வரிகளும் அந்த வ்யாக்யானத்தில் உத்தமூர் ஸ்வாமி குறிப்பிட்டுள்ளார். இவ்வரிகள் ஸ்வாமி தேசிகனின் எந்த க்ரந்தத்தில் வருகின்றது என்பதையும் தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.
ஆண்டாள் செய்த காமதேவ அர்ச்சனை பற்றி ஸ்வாமி தேசிகன் “பரமத பங்கம்” என்ற க்ரந்தத்தில் சாதித்திருக்கிறார்.
பகவானின் பூர்ண, சக்தி மற்றும் ஆவேச அவதாரங்களைப் பற்றி விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன். சக்தி மற்றும் ஆவேச அவதாரங்களில் ஜீவனைத் தேர்ந்தெடுத்து அவர்களுள் எம்பெருமான் ப்ரவேசிக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
ஸ்வாமி தேசிகன், பகவானின் பூர்ண, சக்தி மற்றும் ஆவேச அவதாரங்களைப் பற்றி தத்வத்ரயத்தில் சாதித்திருக்கிறார்.
எம்பெருமானின் பூர்ண அவதாரமென்பது இராம க்ருஷ்ணாதி அவதாரங்கள்.
அவரின் பல அவதாரங்கள் ஆவேச அவதாரம் தான், ஒரு ஜீவனுக்குள்ளே தானோ அல்லது தனது சக்தியை ஆவேசம் செய்து அவதார காரியங்களை நடத்திக் கொள்கிறான். அதற்கு ஆவேசவதாரங்கள் என்று பெயர். அந்த ஜீவனைப் பெருமாளே தேர்ந்தெடுக்கின்றார்.
உதாஹரணமாக பரசுராமர், இன்றளவும் இருக்கின்றார். ஆனால், அவரின் அவதாரமென்பது முடிந்து விட்டது. இங்கே, பெருமாள் தனது சக்தியை அவரின் உள் ஆவேசம் செய்து அவதார காரியத்தை நடத்திக்கொண்டார். அவரைப் போல்தான், வ்யாசர் முதலியவர்களும். இதைப்பற்றி விஸ்தாரமாக ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் சேவிக்கலாம்.
அடியேனின் ஏழு வயது பெண் இக்கேள்விகளைக் கேட்கிறாள், பெருமாளும் ஆதிசேஷனும் எப்பொழுது சந்தித்தார்கள். ஆதிசேஷன் பெருமாளுக்குப் படுக்கையாக எப்படி ஆனார்? எப்பொழுதிலிருந்து பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்துக்கொண்டிருக்கிறார்? விளக்க வேண்டுகின்றேன்.
பெருமாளும் ஆதிசேஷனும் அனாதி காலமாக சேர்ந்திருக்கிறார்கள்.
குறிப்புகள்:
பெருமாளும் அனாதி, ஆதிசேஷன் நித்யசூரியானபடியால் அவரும் அனாதி. ஆகையால் இருவரும் எப்போதும் சேர்ந்துதான் இருக்கின்றார்கள்.
எனது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டதால், எனக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைக்கின்றது , நான் என்னென்ன ஸ்லோகங்களைச் சொல்ல முடியும்? மேலும், பெண்கள் வீட்டில் ஸ்ரீமத் இராமாயணம் மூலம், படிக்கலாமா என்று தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கின்றேன்.
தேசிக ஸ்தோத்ரங்கள், பூர்வாசார்ய ஸ்தோத்ரங்கள், ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தம் , தேசிகப்ரபந்தம் என ரசமான விஷயங்கள் நாம் தெரிந்துக்கொள்ள நிறைய இருக்கின்றது.
அதே வரிசையில், எத்தனையோ புத்தகங்கள், ஸ்ரீ ந்ருஸிம்ம ப்ரியா, ஸ்ரீ ரங்கநாத பாதுகா என இவ்விதழ்களில் நல்ல ஸ்வாரஸ்யமான, பல கட்டுரைகள் வந்துக்கொண்டிருக்கிறது.
இவை தவிர புராணக்கதைகள் ஸ்ரீமத் இராமாயணம், மகாபாரதம் எனத் தமிழ், ஆங்கிலம் என்று பல மொழிகளில் புத்தகங்கள் கிடைக்கின்றது.
இத்தனை சாமக்ரியைகள் நிரம்பி இருக்கின்றபடியால், இதைச்சேவிக்க நல்ல படியாக நம் வாழ்க்கை கழியும். மேலும், உபன்யாசங்களும் பல கேட்கலாம்.
ஆனால், ஸ்ரீமத் இராமாயணம் மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதை மூலத்தை ஸ்த்ரீகள் சேவிக்க சாஸ்த்ரம் அனுமதிக்கவில்லை. அர்த்தங்களைப் படித்து கட்டாயமாகத் தெரிந்துகொள்ளலாம்.
பாசுரம்/ ஸ்தோத்ரம் சேவித்தல் மற்றும் பாசுரம்/ஸ்தோத்ரம் பாராயணம் செய்தல் என்பதின் வித்யாசம் என்ன என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன் அடியேன்.
பாசுரம்/ஸ்தோத்ரம் முதலியவற்றைப் படிக்கிறேன் என்று சொல்லக்கூடாது, சேவிக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.
அவற்றைப் பெருமாளை உத்தேசித்து செய்வதானால், அதற்குப் பாராயணம் என்று பெயர்.
சந்தை, திருவை முதலியவைகளில் சேவித்தல் என்றுதான் சொல்லவேண்டும்.
பூர்வர்களின் ஸ்ரீஸூக்திகள் என்றால் என்ன? அடியேன்.
இக்கேள்வியின் விடையை, முந்தைய சுதர்சனம் இதழில் காணவும்.
அடியேன் கேள்விப்பட்ட வரை, தாயார் கூர்மாவதாரத்தின் பொழுது மந்தர மலையிலிருந்து ஆவிர்பவிக்கிறாள். அப்படியென்றால் தாயாரும் உயர்ந்த ஜீவாத்மாவா? மற்றும் பெருமாளின் முன் அவதாரங்களில் தாயார் இல்லையா? என் மனதும் இதை ஏற்க மறுக்கிறது. தாங்கள் என்னை மன்னித்து எனது ஐயத்தைப் போக்க ப்ராத்திக்கிறேன்.
பெருமாள் எப்படி இராம, க்ருஷ்ணன், கூர்மாதி அவதாரங்கள் செய்கின்றாரோ, அதே போலே பிராட்டியும் அவதாரம்செய்கின்றாள்.
புதியதாக உண்டாவதில்லை. ஆகையால், பிராட்டி ஜீவகோட்டியில் சேர்ந்தவள் அல்லள்.
பிராட்டி, ஈஶ்வரகோட்டியில் பெருமாளோடேச் சேர்ந்தவள்.
அடியேன் ஸ்ரீமத் அஹோபில மடத்தைச் சேர்ந்தவள், அடியேனின் ஆசார்யன் பற்றி அறிய விரும்புகின்றேன்.
ஸ்ரீமத் அஹோபில மடத்தின் ஆசார்யர்கள், சம்ப்ரதாயம் குறித்து பல புத்தகங்கள் இருக்கின்றன.
அதேபோலே GSPKயிலும் ஆசார்யர்களின் திருநக்ஷத்ர வைபவமும், உபன்யாசங்களும் நடக்கின்றது அதில் அந்வயித்துக்கொள்ளலாம். மேலும் பல வலை தளங்களும் இருக்கின்றது.
அடியேன் சம்ப்ரதாயம் மற்றும் அனுஷ்டானங்கள் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். எப்படி அறிவது என்ற வழியை தயை கூர்ந்து தெரிவிக்கவும்.
சம்ப்ரதாயம் பற்றி தெரிந்துக்கொள்ள எங்களின் கீழ் கண்ட Telegram குழுக்களில் சேர்ந்து பயனடையவும்.
https://t.me/dgspk
https://t.me/gspkstotras
https://t.me/sampradayamanjari
மேலும் பல மாஹான்களின் உபன்யாசத்தை கேட்டு அனுபவிக்கவும், ஸ்தோத்ர பாடம், ப்ரபந்தங்கள் கற்றுக்கொள்ளவும் கீழே உள்ள எங்கள் YouTube Channelஐ subscribe செய்யவும்
https://youtube.com/c/GlobalStotraParayanaKainkaryamGSPK
https://www.youtube.com/c/SampradayaManjari/
ராமானுஜாய நம: அடியேன். அடைக்கலம் நான் புகுந்தேனே என்பதையும் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே என்பதையும் எப்படிப் புரிந்து கொள்வது ஸ்வாமி. நீயே கதி வேறு புகல் இல்லை என்றும் ப்ரத்யக்ஷமாய் கச்சியிலும் திருமலையிலும் பெருமாள் சேவை சாதிக்கிறார் என புரிந்து கொள்வது சரியா? தந்யவாதங்கள் ஸ்வாமி 🙏🙏🙇♀️🙇♀️அடியேன்.
“அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே”, “அடைக்கலம் நான் புகுந்தேனே” – இவ்வரிகள் குறிப்பது யாதெனில்: எம்பெருமானே ஶரண்யன், அந்த ஶரண்யனை வேறு புகல் இல்லாமல் அகிஞ்சனனாக நான் சரண் புகுந்தேன்.
குறிப்புகள்:
மேலும் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே: அந்தத் திருமலையப்பனிடம் நம்மாழ்வாரும், அடைக்கலம் நான் புகுந்தேனே : என்று வேழமலையில் இருக்கும் தேவாதிராஜனிடம் ஸ்வாமி தேசிகனும் ஶரணாகதி செய்கின்றனர் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
அபய ப்ரதாந சாரத்தில் – விபீஷண ஶரணாகதியில் ஶரணாகதியின் 6 அங்கங்கள் உள்ளது அதே போல் த்ரிஜடை தன்னைக் காக்கச் செய்த ஶரணாகதியை மோக்ஷார்த்தமாக செய்த ஶரணாகதி எனக் கொள்ளலாமா?
த்ரிஜடை செய்த ஶரணாகதி மோக்ஷார்த்தமல்ல. அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பலனுக்காகச் செய்ததே அன்றி மோக்ஷார்த்தமாக அல்ல.
குறிப்புகள்:
அவளுடைய ஶரணாகதியில் அங்கங்கள் எல்லாம் ரொம்ப சரியாக இருந்தது என்று சுவாமி தேசிகன் ரஹஸ்ய த்ரய சாரத்தின் பரிகர விபாக அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார். ஆனால் அவள் பண்ணியது மோக்ஷார்த்தமாக அல்ல.
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் வ்யாக்யானத்தில் ஸ்ரீ பராசர பட்டர் “ஏக பாத” என்ற ஶ்லோகத்திற்க்கு க்ருஷ்ணன் ஸ்ரீமந்நாராயணனின் பாதி அம்சம் என்கிறார். அதற்கு முந்தைய ஶ்லோகத்தில் நான்கு திருக்கைகளுடன் பர வாஸுதேவரே கண்ணனாக திருவவதாரம் செய்தார் என்கிறார். கீதையில் கண்ணன், தான் பரப்ரம்மம் என்பதையும் இந்த முழு உலகமும் தன் படைப்பு என்று கூறியதையும் வ்யாக்யானத்தில் சாதிக்கிறார். கண்ணன் யாரின் திருவவதாரம்?
கண்ணன் பரப்ரம்மமான ஸ்ரீமந் நாராயணனுடைய திருவவதாரம். அவர் பரவாசுதேவர்; மற்றும் அவரின் அவதாரம்தான்.
குறிப்புகள்:
அவதாரங்களைச் சொல்லும்போது ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் எல்லாம் பெருமாளுடைய அம்சம் என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் இருக்கின்றது.
அதற்கு வ்யாக்யானத்தில் அழகாக ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது, அதாவது அம்சம் என்றால் அவரின் எண்ணற்ற அம்சங்களில் ஒரு பகுதி மட்டுமே (ஒரு சக்தி தான்) வெளிப்படுகிறது எனும் அர்த்தமில்லை.
அவதாரத்தின் போது எம்பெருமான், சில சக்திகளை மட்டுமே ப்ரகாசப்படுத்துகிறார் (வெளிப்படுத்துகிறார்) அதைத்தான் அம்சம் என்கிறோமே தவிர மற்றபடி பெருமாள் எப்பொதும், தன் குணங்கள் மற்றும் சக்திகளுடன் பூரணத்துவமாக இருக்கிறார்.
மமதா த்யாகம் மற்றும் கர்த்ருத்வ த்யாகம் விரிவான விளக்கம் வேண்டுகிறேன். தன்யோஸ்மி அடியேன்.
மமதா என்றால் என்னுடையது என்கின்ற எண்ணம். மமதா த்யாகம் என்றால் என்னுடையது என்கின்ற எண்ணத்தை விடுதல்.
கர்த்ருத்வ த்யாகம் என்றால் நான் செய்கிறேன் என்கின்ற எண்ணத்தை விடுதல்.
குறிப்புகள்:
சில க்ரியைகளுக்கெல்லாம் என்னுடையது என்கின்ற எண்ணம் இருக்கும்.
நானே என் காரியத்தை செய்து கொள்கிறேன் என்றோ அல்லது மற்றவர்கள் என் காரியத்தைச் செய்து கொடுக்கிறார்கள் என்றோ இருக்கும் எண்ணம், தான் மமதா.
இதில் என்னுடைய காரியம் என்பதும், நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற இரண்டு எண்ணமுமே தவறு. ஏனென்றால், பகவானுடைய காரியத்தை, பகவான் தான் நம்மைக் கொண்டு பார்த்துக் கொள்கிறார் இதுவே மமதா த்யாகம் மற்றும் கர்த்ருத்வ த்யாகம்.
ஸ்ரீரங்கத்தில் மூலவர் சுதர்சன ஆழ்வாருடன் 32மூர்த்திகள் (சங்கர்ஷண அனிருத்தாதிகள்…) இருப்பர். இவர்கள் யார்?
ஸ்வாமி தேசிகன் 32 என்ற எண் கணக்கின் படியே ஜய ஜய ஸ்ரீ ஸுதர்ஶந என்ற கோஷத்தை ஸ்ரீ சுதர்சன அஷ்டகத்தில் அமைத்திருக்கிறார். இந்த 32 என்ற எண்ணிற்கும் சுதர்சன ஆழ்வாரும் தனித் தொடர்பு உண்டா? தெளியப்படுத்த ப்ரார்திக்கிறேன்.
சுதர்சனாழ்வார் – ஹேதீஶ்வரர் – எல்லா அயுதங்களுக்கும் ராஜா அவர். 8,16,32 என்ற எண் வரிசையில் காட்சி அளிக்கிறார்.
சில ஆகமங்களில் 8,16,32 ஆயுதங்களுடன் சக்க்ரத்தாழ்வாரை ப்ரதிஷ்டை செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரங்கத்தில் 32 என்ற எண் கணக்கில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கலாம்.
அங்கு இருக்கும் 32 பேர் சக்கரத்தாழ்வாரின் 32 ஆயுத மூர்த்திகளாக இருக்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் நித்ய ஸூரிகள், அவர்கள் சுதர்சனாழ்வார் போல் ஆயுத ரூபம் தரித்துப் பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணுகிறார்கள்.
ஆக, ஸ்ரீரங்கத்தில் உள்ள சுதர்சனாழ்வார் மூலவரைச் சுற்றி ஆயுத மூர்த்திகள் உள்ளனர் எனத் தெரிகிறது.
குறிப்புகள்:
சுதர்சன ஆழ்வார் 8 பூஜங்களுடனும் 8 ஆயுதங்களுடனும் இருக்கின்றார். எல்லா ஆயுதங்களுக்கும் ராஜாவாக இருக்கிறார். அதை காண்பிக்கும் படியாக 8 பூஜங்களில் 8 ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றார். 8 என்பது உபலக்ஷணம் தான்.
32 என்பது ஸம்ப்ரதாயத்தில் விசேஷமானது. வேதம், இதிஹாச புராணங்களில் இதன் சிறப்புக் காணப்படுகிறது.
நடாதூர் அம்மாள் இயற்றிய ஹேதி புங்கவஸ்தவத்தில் 32 வரிகள். ஒவ்வொரு வரியும் ஜய என்கின்ற சப்தத்தில் ஆரம்பமாகின்றது.
இதைப் பின்பற்றி ஸ்வாமி தேசிகனும் சுதர்ஶனாஷ்டகத்தில் 32 முறை உபயோகப்படுத்தி இருக்கின்றார். ஒரு ஶ்லோகத்தின் உடைய கடைசியில் நான்கு முறை ஜய வருகின்றது. 8 ஶ்லோகம் என்பதால் 32 கணக்காகின்றது என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.
பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகள் என்றால் எதை குறிப்பிடுகின்றது?
ஆசார்யர்கள் அருளிய க்ரந்தங்கள் அதில் இருக்கக்கூடிய வசனங்கள் இவற்றிற்கு ஸ்ரீஸூக்தி என்று பெயர்.
உதாரணம் : தேசிகன் அருளிய ஸ்தோத்ர பாடங்கள், அதிலுள்ள வசனங்கள்
குறிப்புகள்:
பூர்வாசார்யர்கள் என்றால், இப்பொழுது இருக்கும் ஆசார்யர்கள் அல்லாது இதற்கு முன் இருந்த ஆசார்யர்களைக் குறிக்கின்றது.
அந்த ரீதியில் ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த க்ரந்தங்கள் அதிலுள்ள வசனங்கள் இவற்றிற்கெல்லாம் பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகள் என்று பெயர்.
உக்தி என்றால் வார்த்தை, ஸூக்தி என்றாள் நல்ல வார்த்தை. அதை ஆசார்யர்கள் அருளியபடியினால் ஸ்ரீஸூக்தி என்று சொல்லுகிறோம்.
ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில், விஷ்ணு மற்றும் வாஸுதேவர் போன்ற வ்யாபக மந்திரங்களில் நாராயணனின் ஏகாதச விஷயார்த்தம் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது. அப்படியிருக்க, ஸஹஸ்ரநாமத்தை ஏன் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்று சொல்கின்றோம்?
ஸஹஸ்ரநாமத்தை அருளிச்செய்தவர் ஸ்ரீபீஷ்மர். அவர் விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் என்று பெயர் வைத்திருந்ததால் அதைப் பின்பற்றி எல்லோரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்று சொல்லுகிறோம்.
குறிப்புகள்:
விஷ்ணு என்கிற திருநாமம் பெருமாளுக்கு வேதத்தில் மிகவும் ப்ரசித்தம். குறிப்பாக வேதத்தின் பூர்வ பாகத்தில் யாகங்களைப் பற்றி சொல்லும் பொழுது எம்பெருமானுடைய திருநாமங்களில் விஷ்ணு என்கின்ற நாமம் தான் மிகவும் உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது மற்றத் திருநாமங்கள் குறைவாகவே வருகின்றது. வேத ரீதியில் ப்ரசித்தமான திருநாமம் அதனால் அதைச் சொல்லுகின்றோம்.
“நாமம் ஆயிரமேத்த நின்ற நாராயணா” என்று ஆண்டாள் சாதித்திருக்கின்றபடியால் மற்ற திருநாமங்களைச் சொல்வதில் ஒன்றும் தவறில்லை.
ஸ்வாமி தேசிகனின் ஸ்தோத்ர பாடம் மற்றும் ப்ரபந்தம் கற்க ஆசையாக உள்ளது. இணையவழியில், கற்க முடியுமா ஏதேனும் குழுமம் உள்ளதா?
சந்தையாக தேசிக ஸ்தோத்ர பாடம் கற்பது தான் சிறந்தது, இணையதளத்தில் பல வழி இருக்கின்றது.
குறிப்புகள்:
குறிப்பாக ஸ்வாமி தேசிகரின் ஸ்தோத்ர பாடம் தான் GSPK என்கிற இந்த குழுமத்தில் சந்தை முறையில் கற்றுத்தருகிறார்கள்.
இக்குழுமத்தில் நடக்கும் வகுப்பில் சேர்ந்து கற்க Telegram app install செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த linkஐ click செய்து இணைய, அவற்றின் விவரங்களை அறியலாம்.
https://t.me/dgspk - Link for main group
https://t.me/gspkstotras - Stotras Group
https://t.me/sampradayamanjari - Sampradaya Manjari group
மேலும் சந்தை முறையில் தங்கள் சௌகர்யம் போல் கற்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள் இக்குழுமத்தின் YouTube மூலமும் கற்கலாம்.
https://youtu.be/xV0H8o-YvTc
https://www.youtube.com/c/SampradayaManjari/playlists
பெரியாழ்வார் திருமொழி 4-6-8ல் “நம்பி பிம்பியென்று” என்ற சொல் யாரைக் குறிப்பிட்டு ஆழ்வார் பாடியுள்ளார்? நம்பி என்பது இங்கே பெருமாளின் திருநாமத்தைக் குறிக்கிறதா? அடியேன்
இங்கே, நம்பி என்பது பெருமாளைக் குறிப்பதில்லை.
குறிப்புகள்:
நம்பி என்ற சொல்லுக்குப் பரிபூர்ணன் என்றப் பொருளும், திருக்குடந்தை என்பெருமானுக்கும் இந்தப் பெயர் என்பது ப்ரசித்தம்.
நம்பி என்று ஒருவர் இருந்தார், குறைவற்றவராக இருந்தார் அவருடைய பெயரை என் பிள்ளைக்கிட்டால், இவனும் குறைவற்றவனாக என்று நினைத்து அவனுடைய பெயரை இவனுக்கிட்டால் அது சரியில்லை என்பது ஆழ்வாரின் திருவுள்ளமாக இருக்கிறது என்று தெரிகிறது.
பிம்பி என்ற சொல் நம்பிக்கு எதிர்தட்டுச் சொல் தானே தவிர அதற்கு அர்த்தமில்லை. பிம்பி என்பதற்கு எப்படி அர்த்தமில்லையோ அதேப் போல் நம்பிக்கும் அர்த்தமில்லை, அதாவது யாரோ நம்பி என்ற மனிதனின் பெயரை என பிள்ளைக்கு வைத்தால் அதற்கு அர்த்தமில்லை,அது ப்ரயோஜனப்படாது என்பது தான் ஆழ்வாரின் திருவுள்ளமாக இருக்க வேண்டும்.
ஏன் பீஷ்மர், த்ரோனர், க்ருபாசாரியர் போன்ற பெரியவர்கள் சூழ்ச்சியாய் சொக்கட்டான் விளையாடுவதை கண்டு அமைதியாய் இருந்தனர். மேலும் த்ரௌபதி அவமானப்பட்ட போதும் மௌனம் காத்தனர். அவர்களே, அதர்மம் என்று அறிந்தே இரண்டாம் முறை பகடையாட அனுமதித்தனர், அதோடு அல்லாது அதர்மம் பக்கம் நின்று போர் புரிந்தனர்? இதன் காரணம் யாது?
இதற்கு பெயர் தான் தர்ம சங்கடம்.
குறிப்புகள்:
அதாவது, பீஷ்மர் துரோணர் முதலானோர்கள் ஒரு பெரிய அளவு தர்மசங்கடத்தில் சிக்கிக் கொண்டு இருந்தார்கள். ஒரு பக்கம் அவர்களுக்கு அதர்மம் நடக்கின்றது என்று ஒரு ரீதியில் தெரிகின்றது. ஆனால் அதே சமயம் அதைத் தடுக்க முடியாத ஒருநிலை அவர்களுக்கு இருந்தது. அந்தத் தேசத்து ராஜாவாக இருந்த த்ருதராஷ்டிரர்க்குக் கட்டுப்பட்டு, அந்த மந்திரி சபையில் இருந்தவர்கள். மந்திரி சபையில் இருப்பவர்கள் ராஜாவுக்குத் தக்க சந்தர்ப்பத்தில் தங்கள் அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்வார்கள்.
சபையின் நடுவில் ராஜாவை அவமதித்துப் பேசி சபை காரியங்களைத் தடுத்து நிறுத்துவது அந்தக் காலத்தில் நடந்ததில்லை. தர்மபுத்திரர் பீஷ்மரிடம், அவர் அமைதியாக இருந்ததன் காரணத்தைக் கேட்கும்பொழுது பீஷ்மர் கூறுவதாவது, தர்மபுத்திரர் தர்மம் தெரிந்தவர் அவன் ஒருநாளும் தப்புக் காரியம் செய்ய மாட்டான் அவன் எது செய்தாலும் அதற்குப் பின்னால் ஒரு நியாயமான அர்த்தம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் என்கிறார்.
தர்மபுத்திரர் ஏன் ஒத்துக் கொண்டார் என்பதுதான் ப்ரதானமான கேள்வி. தர்மபுத்திரர், தவறு செய்ய மாட்டார் என்று எல்லோருக்கும் அவரிடம் ஒரு விஶ்வாசம். ஒரு காலக்கட்டத்தில் குடும்பத்திற்குள் பிரச்சனை சண்டை அதிகமாக ஆன பக்ஷத்தில் தர்மபுத்திரர், த்ருதராஷ்டிரன் (பெரியப்பா) எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் அதைச்செய்யும் முடிவிற்கு வந்துவிட்டார். ஏனென்றால் பெரியப்பாவிடம் அவருக்கு மிகுந்த கௌரவம், மரியாதை.
பீஷ்மர் போன்றவர்க்குச், செஞ்சோற்று கடன், தேசப்பற்று, க்ருதக்ஞதா, இப்படி பலவிதமான தர்மங்கள் இருக்கின்றன இதை நாம் புரிந்து கொள்வதுக் கஷ்டம். மகாபராதத்தை ஆராய்ந்து பார்த்து மெதுவாகத்தான் புரிந்துக்கொள்ள முடியும்.
முகுந்தமாலாவை குலசேகராழ்வார்தான் அருளினார் என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருக்கிறதா?
முகுந்தமாலாவை குலசேகராழ்வார்தான் அருளினார் என்பது நம் பெரியோர்கள் எல்லாம் சொல்லியிருப்பதுதான். அதற்கு தனிப்பட்ட குறிப்பு என்று எதுவும் கிடையாது. மேலும் ஆழ்வார் அருளியது முகுந்தமாலையிலிருந்து என்றாக நம் ஆசார்யர்கள் எடுக்கவில்லை. அதில் கடைசியில் “ராக்ஞா குலசேகரே” என்று சொல்லியிருப்பார் ஆகையால் குலசேகர ராஜாதான் பண்ணியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. சிலருக்கு என்ன சந்தேகமென்றால், குலசேகர ராஜா என்ற பெயரில் நிறைய ராஜா இருந்திருக்கிறார்கள். அந்தப் பரம்பரையில் நிறைய பேருக்கு குலசேகர: என்ற பெயருண்டு. நாம் குறிப்பிடும் குலசேகர ஆழ்வாரும் அவரும் ஒன்றா என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் அந்த ஶ்லோகத்தின் பாவங்களும் ஆழ்வாரின் பாவங்கள் போலே இருப்பதினால் இருவரும் ஒன்றுதான் என்று நிறையபேர் சமாதானமாகக் கூறுகிறார்கள்.
திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் அர்ச்சா அவதாரங்கள் பற்றிய கேள்விகள். திவ்ய தேசத்து எம்பெருமானின் திருநக்ஷத்ரங்களை, ஒரு பட்டியல் போல் வெளியிட முடியுமா அந்தத் தினத்தில் அத்திவ்ய தேசத்து எம்பெருமான் பற்றிய பாசுரங்களைச் சேவிக்க உதவியாக இருக்கும்.
ஒவ்வொரு திவ்யதேசத்து எம்பெருமானுக்கு ஒவ்வொரு அவதார திருநக்ஷத்ரம் உண்டு. அவை அனைத்தையும் சேகரித்து பட்டியல் போல் வெளியிடலாம், அதற்கு சிறிதுகாலமாகும்.
ஒரு ப்ரபன்னன் ஜயதேவரின் கீத கோவிந்தத்தைச் சேவிக்கலாமா? ISKCON முறைப்படி பெண்கள் துளசிமாலை அணிந்து “ஹரே க்ருஷ்ணா” ஜபம் செய்யலாமா?
ஒரு ப்ரபன்னன் ஜயதேவரின் கீத கோவிந்தத்தைத் தாராளமாச் சேவிக்கலாம். ஹரே க்ருஷ்ணா ஜபம் செய்யலாம். ஆனால் துளசிமாலை அணிவதற்கு சில நியமங்கள் உண்டு அந்த ரீதியில் பார்த்தால் அதை அணிவது நம் சம்ப்ரதாயத்தில் வழக்கமில்லை. துளசிமாலை ப்ரதிஷ்டை பண்ணியிருந்தால் அதை ஸ்த்ரீகள் தரிக்கக்கூடாது. புருஷர்களுக்கும் எப்போது தரிக்கலாம், எப்போது கூடாது என்று சில நிபந்தனையெல்லாம் இருக்கிறது. இன்று ப்ரதிஷ்டை பண்ணாததை சிலர் தரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது நம் பெரியவர்கள் வழக்கத்தில் இல்லை. நம் பெரியவர்கள் வழக்கத்தில் இல்லாததைச் செய்யாது அவர்கள் வழக்கத்தில் இருப்பதை பின்பற்றினாலே போதுமானதாகும்.
இல்லத்தில் நாச்சியார் திருமொழி பாசுரங்களைச் சேவிக்கலாமா?
இல்லங்களில் நாச்சியார் திருமொழி பாசுரங்களை நன்றாகச் சேவிக்கலாம் தவறொன்றுமில்லை.
கருடதண்டகம் போல் ஹனுமனுக்கு நம் பூர்வாசார்யர்கள் அருளிய ஸ்துதி ஏதேனும் இருக்கின்றதா?
கருடதண்டகம் போல் ஹனுமனுக்கு நம் பூர்வாசார்யர்கள் அருளிய ஸ்துதிகள் இருப்பதாகத் தெரியவில்லை.
திருவாசிரியம் இயற்பாவில் கடைசி ப்ரபந்தமாகவும் இல்லை,மேலும் சேவாகாலத்தில் கடைசியாக சேவிக்கும் ப்ரபந்தமாகவும் இல்லாதபோது, பெரிய சாற்றுமுறையில் ஏன் சேவிக்கின்றார்கள்?
திருவாசிரியத்தை, பெரிய சாற்றுமுறையில் சேவிக்கும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஹனுமான் திருவடி என்று நம் ஸம்ப்ரதாயத்தில் குறிப்பிடப்படுகிறார். ஏன் அப்பயெரிட்டுக் குறிப்பிடுகிறோம்? ப்ரபன்னர்கள் ஹனுமன் சாலிசா சொல்லலாமா? ஏனென்றால் அதில் “और देवता चित्त ना धरई| हनुमत सेई सर्व सुख करई” என்று வருகிறது. இவ்வரி சற்று முரண்பாடாக இருக்கின்றதால் அடியேன் இதைச் சேவிக்கலாமா என்ற சந்தேகம்.
நம் ஸம்ப்ரதாயத்தில் சொல்வதற்குப் பல ஸ்தோத்ரங்கள் இருக்கும்போது மனது சங்கடத்துடன் பிற ஸ்தோத்ரங்கள் சொல்லவேண்டிய அவசியமில்லை.
நம்மாழ்வார் திருவடி தொழல் திருவாய்மொழியின் கடைசி இரண்டு பதிகங்களை அடியொற்றி, எப்படி இரு ஜீவாத்மா எம்பெருமானை அடைகின்றது என்பதைக் காட்டும்படி நடக்கின்றது என்று புரிகிறது. திருமங்கையாழ்வாருக்கும் அவ்வாறு திருவடி தொழல் உத்சவம் நடப்பதின் தாத்பர்யம் என்ன?
நம்மாழ்வார் திருவடி தொழல் மாதிரியே திருமங்கையாழ்வார் திருவடி தொழலும் அதே பாவத்தில்தான் செய்யப்படுகிறது. அதாவது ஆழ்வார் பரமபதம் அடைந்த வைபவத்தைக் கொண்டாடும் படியான உற்சவம்தான் திருவடி தொழல் என்கின்ற உற்சவம்.
திருமங்கையாழ்வார் திருவடி தொழல் என்பது பெரும்பாலும் அதாவது சில தெற்கத்திய திவ்ய தேசங்களில்தான் காணக்கிடைக்கின்றது. முக்கியமாக திருக்குடந்தையில் நாம் இதைச் சேவிக்கலாம். திருக்குடந்தையில் அது எப்படி ஏற்படுகிறது என்றால், திருவடி தொழல் நடந்து முடிந்து எம்பெருமானுக்கு ஆழ்வார் திருவாராதனம் பண்ணுவது போல் ஒரு சேவையை, பக்தர்கள் சேவிக்கும்படியாக ஏற்பாடு பண்ணி வைத்திருக்கிறார்கள். இதை எந்த ப்ரபந்தத்திற்குப் பின் சேவிக்கிறார்கள் (பண்ணுகிறார்கள்) என்று பார்த்தால் “மாற்றமுளா பதிகத்தை” சேவித்து பின் ஆழ்வார் திருவடித்தொழல் ஆகி, அதன்பின் திருக்குருந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் சேவிப்பது திருக்குடந்தையில் வழக்கமாக இருக்கின்றது. ஆனால், மற்ற சில கோயில்களில் திருநெடுந்தாண்டகம் முடிந்து அதற்குப் பிறகு ஆழ்வார் திருவடி தொழல் என்கின்ற ரீதியும் இருக்கின்றது. ஏனென்றால் திருநெடுந்தாண்டகத்தினுடைய சாற்றுமுறை பாசுரத்தில் "தன்குடந்தை கிடந்த மாலை நெடியானை அடினாயேன் நினைந்திட்டேனே" என்று முடிவதனால், எம்பெருமானை போய் அடைவது போன்ற ஸப்தங்களாக இருப்பதினால், அந்தத் திருவடி தொழலுக்கு அது ஏற்றதாக இருக்கின்றது என்று தெரிகிறது.
மொத்தத்தில் பாவம் என்பது ஒன்றுதான். நம்மாழ்வார் திருவடி தொழலில் எப்படி நம்மாழ்வார் பரமபதம் அடைந்ததை கொண்டாடுகிறோமோ அதேபோல் திருமங்கையாழ்வார் எம்பெருமானைப் பரமபதத்தில் அடைந்ததைக் கொண்டாடுவதே திருமங்கையாழ்வார் திருவடி தொழல். திருக்குடந்தையில் திருமழிசைப்பிரானுக்கும் திருவடி தொழல் உற்சவம் நடக்கிறது என்பது தெரிகிறது. அதனால் ஆழ்வார்களுடைய திருவடி தொழல் உற்சவங்கள் எல்லாம் பக்தாளுக்கு ஆழ்வார் எம்பெருமானுடன் போய் கலந்ததைக் கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
“ஸ்வாமி தேஶிகன் பிரபந்த ஸாரத்தில் “”வையகமொண் பொய்கை பூதம் பேயாழ்வார் ..””….என்ற பாசுரத்தில் 12 ஆழ்வார்களையும் பின்னர் “”ஐய்யன் அருள் கலியன் யதிராசர் தம்மோடு”” என்று கடைசியாக யதிராசர் பெயரைச் சேர்த்துள்ளார்.ஆனால் இராமானுச நூற்றந்தாதி திருவரங்கத்தமுதனார் அவரால் இயற்றப்பட்டது. ஸ்வாமி தேஶிகன் எதனால் அமுதனார் பெயரை விட்டுவிட்டு யதிராசர் பெயரைச் சேர்த்தார்.
ஆழ்வார்கள் கோஷ்டியில் முதலில் இராமனுசரைச் சேர்த்தது திருக்குருகைப்பிரான் பிள்ளான்.
பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய-பட்டநாத-
ஸ்ரீபக்திஸார-குலஸேகர-யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு-பரகால-யதீந்த்ர மிஸ்ராந்
என்பதாக இராமானுசரைச் சேர்த்திருக்கிறார். நம் ஸம்ப்ரதாயம் பிள்ளான் வழி வந்த ஸம்ப்ரதாயம் ஆகையால் தேஶிகனும் ஆழ்வார்கோஷ்டியில் இராமானுசரைச் சேர்த்துள்ளார். இராமானுச நூற்றந்தாதியும் 4000 திவ்ய ப்ரதந்தத்தில் சேரும் என்பது பிள்ளான் வழிவந்த ஸம்ப்ரதாயம். ஆகையால் அதையும் சேர்த்துதான் 4000 கணக்கிடவேண்டும் என்பதும் பிள்ளான் வழிவந்த ஸம்ப்ரதாயமாகும். பிள்ளான் வழியில் வராத ஸம்ப்ரதாயத்தில் அவர்கள் 4000த்தில் இராமானுச நூற்றந்தாதியைச் சேர்ப்பதில்லை, சேர்க்காமல்தான் அவர்கள் 4000 என்ற கணக்குச் சொல்வார்கள். ஆகையால் நம் ஸம்ப்ரதாயத்தின்படி இராமானுச திருநாமத்தை ஆழ்வார்களுடன் சேர்க்கவேண்டும்.
மேலும் ப்ரபந்தஸாரத்தில் இராமானுச நூற்றந்தாதியைப் பற்றி சொல்லும்போது “காசினிமேல் வாதியரை வென்று அரங்கர் கதியாக வாழ்தருளும் எதிராசா!* முன் பூசுரர்கோன் திருவரங்கத்தமுதனார் உன் பொன்னடிமேல் அந்தாதியாகப் போற்றிப் பேசிய*” என்று இங்கு திருவரங்கத்தமுதனார் பற்றி சொல்கிறார். மேலும், பட்டியலிட்டு பூர்த்தியாகப் பாசுரக்கணக்கு சொல்லும்போது அங்கும் அமுதர் திருநாமும் வருகிறது, அர்த்தங்களும் வருகிறது. ப்ரபந்த ஸாரத்தில் தனித்த பாசுரத்திலும், கணக்கிட்ட பாசுரத்திலும் அமுதனார் பற்றி வருகிறது.
அஷ்டகா, அன்வஷ்டகா தர்ப்பணம் பண்ணும் ஒருவர், அந்த நாட்களில் அதே தர்ப்பணம் பண்ணும் மற்றொருவர் அகத்தில் அமுதுசெய்யலாமா?
அஷ்டகா, அன்வஷ்டகா தர்ப்பணம் பண்ணும் ஒருவர் அன்றைய தினத்தில் அதே தர்ப்பணம் பண்ணும் மற்றொருவரின் அகத்தில் அமுதுசெய்யலாம்.
அஷ்டகா ஶ்ராத்தம் பற்றிய குறிப்பு.
வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 13 அன்று மாசி மாசப்பிறப்பும் அஷ்டகா ஶ்ராத்தமும் ஒரே நாளில் செய்யும்படி வருகிறது.
முதலில் மாசப்பிறப்பு ஸங்க்ரமண தர்ப்பணத்தைப் பண்ணிவிட்டு பின் அஷ்டகா ஶ்ராத்ததைப் (அஷ்டகா தர்ப்பணத்தை) பண்ணவேண்டும்.
இவ்விரண்டையும் சேர்த்து ஒரே தர்ப்பணமாக பண்ணலாமா?
பொதுவாக இவ்விரண்டு தர்ப்பணத்தையும் சேர்த்து பண்ணமுடியாது. ஏனென்றால் இவ்விரண்டிற்கும் சிறிய வித்தியாசம் உண்டு.
மாசப்பிறப்பு தர்ப்பணம் என்பது அமாவாஸ்யை தர்ப்பணம் போல் பித்ரு வர்கம், மாத்ரு வர்கம் என இரண்டையும் உத்தேசித்து செய்வதுண்டு.
மாசப்பிறப்பு தர்ப்பணத்தில் நம்முடைய மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹி என இவர்களுக்கும் சேர்த்து தர்ப்பணம் செய்வதாக சங்கல்பம் செய்வது கிடையாது.
ஆனால் அஷ்டகா ஶ்ராத்தத்திலே அல்லது அஷ்டகா தர்ப்பணத்திலே அவர்களுடைய பெயரையும் சொல்லிச் சங்கல்பம் செய்யவேண்டும்.
உதாஹரணமாக, கோத்ரானாம் ஷர்மனாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் என்றும், மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் என்றும் கூறி சங்கல்பத்தில் செய்யவேண்டும். அஷ்டகா ஶ்ராத்தத்தில் இப்படி ஒரு அதிகப்படி உண்டு.
மேலும் அவர்களுக்கென்று தனியாக புக்னம் போட்டு, அதாவது மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிக்குத் தனியாக புக்னம் போட்டு தனியாகத் தர்ப்பணம் செய்பவர்கள் உண்டு. சிலர் பித்ருபிதாமஹ ப்ரபிதாமஹர்க்கு இருக்கும் புக்னத்திலேயே இதையும் சேர்த்துப் பண்ணிவிடுவார்கள். இப்படி அதிலேயே பண்ணுவதானால், அமாவாஸ்யை தர்ப்பணத்திற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் வராது ஆனால் சங்கல்பத்தில் வித்தியாசம் இருக்கிறது. அதாவது அவர்கள் பெயரைச் சொல்லி மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் என்று சேர்த்துச்சொல்லி சங்கல்பம் பண்ணவேண்டும்.
ஆகையால் இந்த அஷ்டகா ஶ்ராத்தத்தைத் தனியாகப் பண்ணவேண்டும்.
சிலர் அஷ்டகா ஶ்ராத்தத்தில் ஒரு வர்கத்திற்கு மட்டும்தான் (அதாவது பித்ரு வர்கத்திற்கு மட்டும்) தர்ப்பணம் பண்ணுகிறார்கள் மற்றொரு வர்கத்திற்குப் பண்ணுவதில்லை. அவர்களும் மாசப்பிறப்பு தர்ப்பணம் மற்றும் அஷ்டகா தர்ப்பணத்தைத் தனித்தனியாகத்தான் பண்ணவேண்டும்.
குறிப்பு:
சிறிதும் வித்தியாசமே இல்லாமல் மாசப்பிறப்பு தர்ப்பணத்தைப் போலவே அஷ்டகா தர்ப்பணத்தைச் செய்கிறார்கள் என்றால் அவர்கள் இரண்டு தர்ப்பணத்தில் ஏதாவது ஒன்றை பண்ணால் போதும். ஆனால் அவ்வாறு செய்பவர்கள் இருப்பதாக அடியேனுக்குத் தெரியவில்லை. ஒருவேளை அப்படிச் செய்வார்களேயானால் ஒரே ஒரு தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும்.
அஷ்டகா, அன்வஷ்டகா எல்லா வேதங்களுக்கும் ஒரே நாளில்தான் வருமா இல்லை சாம வேதக்காரர்களுக்கு ஏதாவது வித்தியாசம் உண்டா?
அஷ்டகா, அன்வஷ்டகா எல்லா வேதங்களுக்கும் ஒரே நாள்தான். வேதங்களின் அடிப்படையில் வெவ்வேறு நாள் என்றெல்லாம் இதற்குக் கிடையாது.
ஸ்ரீநிவாஸ கத்யம் மற்றும் பத்மாவதி கத்யம் ஆகிய இரண்டும் வேதங்களின் பகுதியா? அவற்றை ஸ்த்ரீகள் சேவிக்கலாமா?
ஸ்ரீநிவாஸ கத்யம் மற்றும் பத்மாவதி கத்யம் ஆகிய இரண்டையுமே ஸ்த்ரீகள் சேவிக்கலாம்.
தென்னாச்சாயர் ஸம்ப்ரதாயத்தில் “ஸ்ரீ ஶைலேச தயா பாத்ரம்” என்ற தனியன் நம்பெருமாளால் மாமுனிக்குக் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். இது உண்மை என்றால், நாம் தேஶிகன் மற்றும் மாமுனி ஆகிய இருவரின் தனியன்களையும் தினமும் சேவிக்கலாமா?
தென்கலை வடகலை ஸம்ப்ரதாயத்தில் எத்தனையோ அபிப்ராய பேதங்கள் உண்டு. ஆசார அனுஷ்டான பேதங்கள், சித்தாந்த பேதங்கள் என்றெல்லாம் உண்டு, ஆகையாலே அவரவர் அவரவருடைய ஆசார்ய தனியனைச் சொன்னாலே போதும். சில கால விசேஷத்தில் மற்றொரு தனியனைச் சொன்னால் தவறொன்றுமில்லை.
குறிப்புகள்:
எந்த ஒரு தனியனுக்கும் அந்தத் தனியனின் சொல்லப்படுகின்ற ஆசார்யனால் தான் ஏற்றம். யார் அந்தத் தனியனை எழுதினார், சொன்னார் என்பதில் ஏற்றம் இல்லை. அதனால் அவரவர்களுடய ஆசார்யன் தனியனைச் சேவிப்பதுதான் உத்தமமான கார்யம். நாம் தேஶிக ஸம்ப்ரதாயஸ்தர்கள், அதனால் தேஶிகன் தனியனைச் சேவித்தால் மட்டும் போதும்.
தேசிகன் தனியனை, தேசிகனின் ஸ்தோத்ரம் சேவிக்கும்போது மட்டும் சேவிக்கணுமா? மற்ற ஶ்லோகத்திற்கும் சேவிக்கலமா?
ஸ்வாமி தேஶிகனுடைய ஸ்தோத்ரங்களை அனுசந்தானம் பண்ணும்பொழுது அவசியம் ஸ்வாமி தேஶிகனுடைய தனியனைச் சேவிக்க வேண்டும். இதர ஆசார்யர்களுடைய ஸ்தோத்திரங்களை அனுசந்திக்கும் பொழுது முதலில் ஸ்வாமி தேஶிகனுடைய தனியனைச் சேவித்துவிட்டு பின் அந்த ஆசார்யருடைய தனியனை சேவித்துவிட்டு அந்த ஸ்தோத்ரத்தைச் சேவிக்கலாம். அதில் தவறொன்றும் இல்லை. ஏனென்றால் ஸம்ப்ரதாயத்தை ஸ்தோத்திரங்கள் மூலமாக நமக்கு கொடுத்ததில் ஸ்வாமி தேஶிகனின் பங்கு மிகவும் அதிகம்.
இராமானுஜ குலத்தைச் சேர்ந்தவர்கள் தேஶிகன் ஸ்தோத்ரங்கள்,பாதுகா ஸஹஸ்ரம் மற்றும் தேஶிக ப்ரபந்தங்களைச் சேவிக்கலாமா?
இராமானுஜர் குலம் என்று குறிப்பிடப்படுவது வைஷ்ணவர்கள் என்று தோன்றுகிறது. எல்லா வைஷ்ணவர்களுக்கும் தேஶிகன் ஸ்தோத்ரங்கள், பாதுகா ஸஹஸ்ரம், தேஶிக ப்ரபந்தம் இவைகளை சொல்லலாம். தவறொன்றும் இல்லை.
ஸ்ரீரங்கநாதனே மாமுனிகளை தம் ஆசார்யனாக ஏற்றுக்கொண்டான் என்று கூறுகிறார்கள். அப்படியென்றால் நாம் ஏன் மாமுனியின் திருநக்ஷத்ர தினத்தைக் கொண்டாடுவதில்லை? அடியேன் வடகலை ஐயங்கார், பல வித்வான்களிடம் கேட்டு சரியான பதில் கிடைக்காததாலும்,
மேலும் ஏன் இந்த ஸம்ப்ரதாய பேதங்கள் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டியும் இங்கே கேட்டிருக்கிறேன்.
மணவாளமாமுனிகளும் ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்யர் என்கின்ற ரீதியில் அவருடைய திருநக்ஷத்ரத்தைக் கொண்டாடுவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அவரவருடைய ஸம்ப்ரதாயத்தில் அவரவர்களுடைய ஆசார்யன் திருநட்சத்திரத்தை அவசியம் கொண்டாடவேண்டும். அதைச் செய்தாலே போதுமானது.
பெருமாளுக்கு ஆசார்யன் என்று ஒருவர் உண்டா?
பீதகவாடை பிரானால் பிரமகுருவாயிருந்து (பிரமகுரு என்றால் ப்ரதம குரு என்று அர்த்தம்). பெருமாள் தான் ப்ரதமாசார்யார். அதனால் பெருமாளுக்கு ஆசார்யார் ஒருவர் உண்டா என்பதையும் யோசிக்க வேண்டும்.
பெருமாளுக்கு ஆசார்யன் என்று சொல்வது ஒரு உபசார வார்த்தையே ஆகும். நம் குருபரம்பரையில் பெருமாள்தான் முதல் ஆசார்யன். பெருமாளைப் பற்ரி ஆசார்யன் சொல்லும்போது ஸ்வாமி தேஶிகன் “இவர் ஒருவனே ஆசார்யன் இல்லாத ப்ரதமாசார்யன்” என்பதாக ஸாதித்திருக்கிறார். மேலும் ஞானமில்லாத சிஷ்யனுக்கு ஞானத்தைக் கொடுப்பவர்தான் ஆசார்யன். பெருமாளோ ஸர்வக்ஞன், அவன் ஞானமில்லாத சிஷ்யனும் இல்லை அப்படியிருக்கும்போது ஆசார்யன் என்று ஏன் சொல்கிறார்கள் என்றால், பெருமாள் தன் அவதாரங்களில் அபிநயம் செய்வதுண்டு. அதாவது ஸ்ரீராமாவதாரம், ஸ்ரீக்ருஷ்ணாவதாரங்களில் சிஷ்யனாக அபிநயம் செய்வதுபோல்தான் இதுவும். அதை வைத்துக்கொண்டு ஆசார்யன் என்று சொல்லுவதெல்லாம் ஒரு உபசார வழக்கே. மேலும் பெருமாளே இறங்கிவந்து இவர் எனக்கு ஆசார்யன் என்றெல்லாம் சொல்லவில்லை.. நாம் மட்டும் அல்ல ஸம்ப்ரதாயத்தில் எல்லோருமே இது ஒரு உபசார வழக்கு என்றுதான் சொல்லுகிறார்கள்.
இதை வைத்துக்கொண்டுப் பார்த்தால் பெரியபெருமாள் ஸ்வாமி தேஶிகனைத்தான் “ஸ்ரீவேதாந்த ஆசார்யன்” என்று சாதித்தார். ஆகையால் ஸம்ப்ரதாய பேதமில்லாமல் எல்லா மனிதர்களுக்குமே, வேதாந்தத்திற்கு ஆசார்யன் ஸ்வாமி தேஶிகன் என்பது ஸ்ரீரங்கநாதனுடைய திருவுள்ளமாகும்.
வ்யாக்யானங்களில் உள்ள பேதங்களினாலே ஸம்ப்ரதாய பேதங்கள் வருகின்றன. ஒவ்வொரு ஆசார்யரும் ஒவ்வொரு ரீதியில் வ்யாக்யானிக்கின்றார்கள். அவரவர்களுக்கு அவரவருடைய ஆசார்யன் செய்த வ்யாக்யானமே சரி என்று தோன்றுகிறது. அதனால் சித்தாந்த பேதம் காலக்ரமேன ஸம்ப்ரதாய பேதமாக மாறி இருக்கின்றது.
குறிப்புகள்:
பெருமாளுக்கு ஆசார்யன் என்று சொல்லப்படுவதினால் அவருடைய திருநக்ஷத்ரத்தைக் கொண்டாட வேண்டும் என்று சொல்லுவது சரியா என்று தெரியவில்லை. ஏனென்றால் இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் ப்ரசித்தமான அதாவது இராமாயணத்தில் இராமனுக்கு ஆசார்யனான வசிஷ்டருடைய திருநக்ஷத்ரத்தையோ மகாபாரதத்தில் ப்ரமாணபூர்வமாக அறியப்படுகின்ற கிருஷ்ணனுக்கு ஆசார்யனான சாந்திபினினுடைய திருநக்ஷத்திரத்தையோ நாம் கொண்டாடுவதில்லையே. அதனால் பெருமாளுக்கு ஆசார்யன் என்பதனால் கொண்டாடப்பட வேண்டும் என்றில்லை.
கோவில்களில் வேங்கடாத்வரி கவியின் லக்ஷ்மி சஹஸ்ரம் சேவிக்கலாமா?
கோவில்களில் வேங்கடாத்வரி கவியின் லக்ஷ்மி சஹஸ்ரம் அவசியம் சேவிக்கலாம்.
“1. தேசிகப் ப்ரபந்தத்தில் (மும்மணி கோவையிலும், நவமணி மாலையிலும் உள்ள தசாவதார பாசுரங்கள் தவிர) நரசிம்மருக்கென்று வேறு பாசுரம் உண்டா?
2. தன்வந்த்ரியின் மேல் ஸ்வாமி தேசிகன் ஏதேனும் பாசுரம்/ஸ்லோகம் இயற்றி உள்ளாரா? ஆம் எனில் என்ன பாசுரம்/ஸ்லோகம் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
3. பெருமாள் கோவிலில் தூப்புல் தேசிகன் மங்களாசாசனத்தின் போது “பரிணாத பலக்ராசா” என்று தொடங்கும் ஆஞ்சநேயர் பற்றிய ஸ்லோகத்தை ஸ்வாமி தேசிகன் பாராயணம் செய்தார். ஸ்வாமி தேசிகனின் எந்தப் படைப்பு இது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
நரசிம்மருக்கென்று ஸ்வாமி தேசிக ப்ரபந்தங்களில் தனிப் பாசுரம் இருப்பதாகத் தெரியவில்லை.
தன்வந்த்ரி மேல் ஸ்வாமி தேஶிகன் பாசுரம்/ஶ்லோகம் இயற்றியிருப்பதாகத் தெரியவில்லை.
“பரிணாத பலக்ராசா” என்ற ஆஞ்சநேயர் ஶ்லோகம் சங்கல்ப ஸூர்யோதயத்தில் இருக்கிறது.
நாச்சியார் திருமொழி பாசுரம் பாராயண நாளுக்குப் பதிலாக கூடாரை வெல்லும் நாளில் பல கோவில்களில் நூறு தடா உற்சவம் ஏன் கொண்டாடப்படுகிறது? மேலும் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளபடி அக்காரவடிசில் மற்றும் வெண்ணெய்க்குப் பதிலாக அன்றைய தினம் சர்க்கரைப் பொங்கல் ஏன் அம்சை பண்ணப்படுகிறது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
நூறு தடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன் என்று நாச்சியார் ஆசைப்பட்டார். கூடாரவல்லி பாசுரத்திலும் “பால்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார கூடியிருந்து குளிர்ந்து” என்று இருப்பதினால் பால்சோறு அதாவது அக்காரவடிசில் சமர்ப்பித்ததாக இருக்கின்றது. அதனால் நாச்சியார் ஆசைப்பட்டபடிதான் நாம் சமர்ப்பிக்கிறோம். ஸ்ரீ பாஷ்யக்காரர் திருமாலிருஞ்சோலையில் சமர்ப்பித்ததாக ஐதிஹ்யம் இருக்கிறது. அதனால் அந்த ஒரு பாவத்தில் நாமும் சமர்ப்பிக்கிறோம்.
அக்கார வடிசலும் சர்க்கரைப் பொங்கலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். நாம் செய்யும் விதத்தில் தான் வித்யாசம் இருக்கிறது. அக்காரம் என்றால் கரும்பிலிருந்து வரக்கூடிய சர்க்கரை அல்லது வெல்லம், வெல்லத்திற்குதான் முன்காலத்தில் சர்க்கரை என்று பெயர். அடிசில் என்றால் சாதம் என்று அர்த்தம். இதனால் வெல்லம் சேர்த்து செய்யும் சாதம், அக்காரவடிசில், அதுவே சர்க்கரைப் பொங்கல். இரண்டும் ஒன்றுதான்.
ஒரு உபந்யாஸத்தின் மூலம் கார்யவைகுண்டம் என்று ஒன்று இருப்பதாக அறிந்துகொண்டேன். அப்படியென்றால் என்ன? முமுக்ஷூக்கள் அங்கே செல்வார்களா?
கார்ய வைகுண்டம் என்பது ஸ்ரீவைகுண்டம் போலவே ஒரு கார்யத்திற்காக அப்படியொரு இடத்தை எம்பெருமான் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். அது லீலா விபூதியில் இருக்கிறது, நித்ய விபூதியில் அல்ல. சில விசேஷ சக்தியுடைய தேவர்களோ, பக்தர்களோ அங்குப்போய் எம்பெருமானைச் சேவிக்கும்படியான அனுக்ரஹத்தைக் கிடைப்பத்தற்காக ஏற்படுத்தி வைத்திருக்கிறான்.
குறிப்புகள்:
இதை எவ்வாறு புரிந்துகொள்வதென்றால், திருமலையில் திருவேங்கடமுடையான் சேவைசாதிக்கிறான். ஆனால் அவரைப் போலவே பல ஊர்களில் TTD மூலமாக ஏற்படுத்தப்பட்ட திருக்கோயில்களில் அவன் சேவைசாதிக்கிறான். இவையெல்லாம் TTD Office என்பதில் சேவைசாதிக்கும் திருவேங்கடமுடையானாவான். ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் எம்பெருமான் திருமலையில் எழுந்தருளியிருப்பவர் போல், அதே கார்யவைகுண்டத்தில் இருக்கும் எம்பெருமானோ TTD கார்யாலயத்தில் சேவைசாதிக்கும் திருவேங்கடவன் போலேயாகும்.
இக்கார்ய வைகுண்டம் என்பது ஸ்ரீவைகுண்டம் போலவே ஒரு ப்ரதிபிம்பமாகும், அங்கு இருப்பது போலேயே எம்பெருமான் அமைத்துக்காட்டுவார். ஆனால் அது ஶுத்தஸத்வ மயமானதல்ல, த்ரிகுணாத்மகமானது, ப்ரக்ருதி மண்டலத்தைச் சேர்ந்ததுதான். மும்மூக்ஷூக்கள் கார்ய வைகுண்டத்திற்குச் செல்லவேண்டும் என்ற ஆசை படமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் மோக்ஷத்தில் ஆசை கொண்டவர்கள். மோக்ஷம் என்பது ஸ்ரீ வைகுண்ட ப்ராப்திதான்.ஆகையால் கார்யவைகுண்டத்தில் அவர்களுக்குக் கார்யமில்லை.
யாரால் ஸ்ரீவைகுண்டம் போகயிலவில்லையோ அவர்கள் போவார்கள். லீலா நிமித்தமாக யாராவது அங்கு வந்து கைங்கர்யம் பண்ணும்படியாக இருந்தால் அவர்கள் அங்கு பண்ணுவார்கள்.
ஸ்வாமி தேஶிகன் அருளிய பாதுகா ஸஹஸ்ரத்தில் ஶ்வேத தீபம் என்று ஒன்று வருகிறது. அது எங்கே இருக்கிறது? அந்த ஶ்லோகத்தின் அர்த்தவிசேஷம் என்ன?
ஶ்வேத தீபம் என்பது திருபாற்கடல் அதாவது க்ஷீராப்தியின் நடுவே இருக்கின்றது. இங்கே இருக்கின்றவர்கள் அனைவருமே ஸ்ரீ வைஷ்ணவர்கள், எப்போதும் எம்பெருமானையே சேவித்துக்கொண்டிருப்பவர்கள் அப்படிப்பட்ட அத்புதமான தீபம். அந்த ஶ்லோகத்தின் அர்த்தவிசேஷம் என்னவென்றால், ஸ்ரீரங்கத்தை ஶ்வேத தீபம் என்று ஸ்வாமி தேஶிகன் குறிப்பிட்டிருப்பார். அதாவது நான்கு பக்கமும் காவேரி, நடுவே ஸ்ரீரங்கம் என்ற தீபம், திருப்பாற்கடலில் இருப்பது போலே சயனத்திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். மேலும் இங்கே நிறைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் வசித்து வருகின்றபடியாலும் ஸ்ரீரங்கம் ஶ்வேத தீபம் போல் இருக்கிறது என்று வர்ணிக்கிறார்.
18 புராணங்கள் இருக்க ஏன் 6 மட்டும் ஸாத்வீக புராணமாகுகிறது. மற்ற புராணங்களை எம்பெருமான் நினைத்தால் மறையச் செய்திருக்க முடியும் அல்லவா? அப்படி ஒரு நிலை இருந்தால் அனைவரும் விஷ்ணு பக்தர்களாகி ஸத்கதி அடையும் வழியும் கிட்டியிருக்குமே. ஏன் அப்படிச் செய்யவில்லை?தவறாக இருந்தால் க்ஷமிக்கவும்.
18 புராணங்களில் 6 மட்டும் ஸாத்வீக புராணம் என்பதைப் புராணமே சொல்லுகிறது. மற்ற புராணங்களை ஏன் மறையச் செய்யவில்லை என்றால், ஜனங்கள் பலருக்கு பலவிதமான் ருசியிருக்கும், அவரவருக்கு எது பிடித்ததோ அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும் என்பதால். மேலும் ஒன்று பெருமாளைச் சேவிக்கட்டும் இல்லாவிட்டால் நாஸ்தீகனாக போகட்டும் என்று எம்பெருமான் அவர்களை விடாமல், எந்தத் தெய்வத்தை பிடித்திருக்கிறதோ அந்தத் தெய்வத்தைச் சேவித்து அவர்கள் தரும் பலனை அனுபவிக்கவும், அதாவது வேதத்திலேயே அனேக தெய்வங்கள் பற்றியும் பல யாகங்கள் பற்றியும் சொல்லியிருக்கிறது. மேலும் அனைவரும் பர தத்துவத்தைப் பற்றி உணர்வார்கள் என்று சொல்லமுடியாத காரணத்தினாலும், அவர்கள் நாஸ்தீகர்களாகப் போய்விடாமல் இருக்கவும், அவர்கள் பிற்காலத்தில் பர தத்துவத்தை உணரும்படி மாறாலம் என்பதாலும், அவர்களின் ஆஸ்தீக எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பல தெய்வங்களை நம் ஸம்ப்ரதாயத்தில், ஶாஸ்த்ரங்களில் எம்பெருமான் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்.
ஏன் திருவாறாயிரப் படி ப்ரதானமாக வடகலையார் ஸம்ப்ரதாயத்திற்கு இருக்கிறது. ஸ்வாமி தேஶிகன் ஏனைய வ்யாக்யானத்தை அவரின் க்ரந்தங்களில் குறிப்பிட்டுள்ளாரா?
திருவாறாயிரப்படி என்பது பகவத் இராமானுஜர், பிள்ளானைக் கொண்டு சாதித்த க்ரந்தம். அந்தப் பிள்ளான் பரம்பரை என்பது வடகலையார் பரம்பரை. காலக்ஷேபத்தில் பார்த்தால் பிள்ளான் சிஷ்யர் என்பவர் எங்களாழ்வான், நடாதூர் அம்மாள் என்று வரும். தென்னாசார் ஸம்ப்ரதாயத்தில் பிள்ளான் பரம்பரை வராது, அவர்களுக்கு எம்பார், பட்டர் பரம்பரை, முதலியாண்டான் பரம்பரை என்று அவர்களிடம் இருக்கு.
அந்தத் திருவாறாயிரப்படிக்கு ஒரேயொரு ஓலைதான் இருந்தது (பிள்ளான் எழுதியது). அதை பகவத் இராமானுஜர் அவரிடமே கொடுத்துவிட்டு சிம்மாசனாதிபதியாக நியமித்திருக்கிறார். ஆகையால் அந்தப் பரம்பரையில் வந்த ஸ்வாமிதேஶிகனுக்கு அது ப்ராப்தமாகியிருக்கிறது. அதே சமயம் ஒரேயொரு ஓலை மட்டுமே இருந்தபடியாலும் அது தென்னாசார் ஸம்ப்ரதாயத்தாருக்குக் கிட்டாதபடியாலும் 9000 படி போன்றவற்றைப் பண்ணவேண்டி வந்தது.
ஸ்வாமிதேஶிகன் 9000படி, 24000படி ஆகியவற்றை விசேஷமாக நிர்தேசம் பண்ணியதாகத் தெரியவில்லை. அவர் சாதித்த நிகமபரிமளம் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் வேறு சில இடங்களில் திருமாலை வ்யாக்யானம் போன்றவற்றில் பெரியவாச்சான் பிள்ளை இப்படிச் சாதித்திருக்கிறார் என்று அவரின் வ்யாக்யானத்தை எடுத்திருக்கிறார்.
ஸ்வாமி தேசிகனின் நவமணிமாலையில், “பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல், பரவு நவமணிமாலை….” என்று குறிப்பிட்டுள்ளார். அதில் கூறியிருக்கும், அம்மாணை, ஊசல் ஏசல் பரவு என்பது என்ன அடியேன்?
ஸ்வாமி தேசிகன் சாதித்த நவமணிமாலையில் கடைசியில் வரும் “பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல், பரவு நவமணிமாலை....”வரியில் உள்ள “பரவு” என்ற சொல்லுக்கு, அனைவராலும் கொண்டாடப்படக்குடிய (பரவுகின்ற) நவமணிமாலை என்று வ்யாக்யானத்தில் இருக்கிறது.
பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல் என்ற 5 ப்ரபந்தங்களும் லுப்தம்; நவமணிமாலை மட்டும் நமக்கு இன்றளவும் கிடைக்கின்றது.
வேதம் பற்றிய சந்தேகம்.
1. வேதங்கள் ஏன் மறைந்து எம்பெருமானைப் பற்றி கூறுகின்றன? ஏன் வெளிப்படையாகவே எல்லா இடங்களிலும் கூறவில்லை?
2. எம்பெருமான் ஏன் பல சிறு தெய்வங்களையும், பல ஸம்ப்ரதாயங்களையும் படைத்து மக்களை அவரவர் அறிவிற்கேற்ப பின்பற்ற வைத்திருக்கிறார்? தான் ஒருவனே பர தெய்வம் என்று ஶரணாகதி மார்க்கத்தை அனைவரும் பின்பற்றும்படி செய்திருக்கலாமே?
எப்படி ஒரு அபூர்வமான ரத்தினத்தை நாம் காண்ட இடங்களில் வைக்காது பெட்டிக்குள்ளே பத்திரமாய் பூட்டி வைக்கின்றோமோ, அதுபோலே எம்பெருமானின் தத்துவ ஞானமானது மிகவும் அபூர்வமான விஷயம். ஆகையால் அதை வேதங்கள் மறைத்தே சொல்லுகின்றன. ஏனெனில் அவ்விஷயங்களை ஒரு குருமுகமாய் மட்டுமே அறியவேண்டும் என்பதற்காகவும் மறைத்துக் கூறப்பட்டுள்ளது.
எம்பெருமான் லீலையாக பல தெய்வங்களைப் படைக்கிறான். இவையெல்லாம் எம்பெருமானின் “லோகவத்து லீலா கைவல்யம்” என்பதாக ப்ரம்ம சூத்ரம் சொல்லுகிறது. இந்த லோகத்தை லீலையாக பகவான் படைத்திருக்கிறான், அவனுடைய லீலைகளில் இதெல்லாம் காரணம். மேலும் அந்தந்த ஜீவராசிகளின் கர்மவினையை அனுசரித்து லோகத்தை நடத்துகிறான், அக்காரணத்திற்காகவும் பகவான் இதர தேவதைகளைப் படைத்திருக்கிறான்.
மனிதர்களில் பலருக்கு பல தேவர்களைப் பிடித்திருக்கும். அவர்களும் பலன் பெறட்டுமே என்ற நல்ல எண்ணமும் காரணமாகும்.
வேத மஹிமை உபந்யாஸத் தொடரின் முதல் பாகத்தில் ப்ரதான ஶதகம் மற்றும் காஞ்சி பேரருளாளன் பத்திரிகையில் ஸ்வாமி எழுதிய விளக்கவுரைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இவ்விரண்டும் எங்கு கிடைக்கும் என்று தெரிவிக்கவும். ebook ஆக இருந்தாலும் பரவாயில்லை. அடியேன்.
ப்ரதான ஶதகம் என்பது ரஹஸ்யங்களில் ஒன்று. “சில்லரை ரஹஸ்யங்கள்” என்ற புத்தகத்தில் இந்த ரஹஸ்யமிருக்கும். அந்தப் புத்தகம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் பௌண்டரீகபுரம் ஆஶ்ரமத்தில் கிடைக்கும்.
காஞ்சி பேரருளாளப் புத்தகம், தரமணியில் உள்ள பேரருளாள அலுவலகத்தில் (“ஹயக்ரீவ வித்யாபீடம்”, தரமணி) கிடைக்கும்.
நமஸ்காரம் ஸ்வாமின் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அர்ச்சா மூர்த்தியின் பின் புறம் நரசிம்ம பெருமாள் எழுந்தருளியிருக்கும் தாத்பரியம் என்ன ?
சக்ரத்தாழ்வார் என்பவர் நித்யஸூரி. அவருக்கு அந்தர்யாமியாக இருந்துகொண்டு எம்பெருமானே எல்லாப் பலன்களையும் அளிக்கிறான் என்பதைக் குறிக்கவும், மேலும் சக்ரத்தாழ்வார் உக்ரமூர்த்தியானபடியால் உக்ரமூர்த்தியான ந்ருஸிம்ஹரை பின்புறம் ஏளப்பண்ணுகிறார்கள்.
பொதுவாக உபநிஷத் பாராயணம் சூர்யாஸ்தமனத்திற்குப் பின் செய்வதில்லை. திருவாய்மொழி என்பது உபநிஷத்தின் ஸாரம் என்கிறோம், ஆனால் உபநிஷத் பாராயணம் போல் திருவாய்மொழி பாராயணத்திற்கு ஏன் அந்தக் கட்டுப்பாடு இல்லை?
உபநிஷத் பாராயணம் இராத்திரியில் செய்வதில்லை. உபநிஷத்தின் ஸாரமான திருவாய்மொழியை இராத்திரியில் சொல்லலாமா என்றால் பெரியவர்களின் ஆசாரத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதாவது இரவில் தயிர் சாப்பிடக்கூடாது என்றிருக்கிறது, ஆனால் தயிரின் ஸாரமான நெய்யைச் சாப்பிடுகிறோம் அல்லவா! அதுபோலேதான் இதுவும்.
அடியேன் நவராத்ரி என்பது துர்கா தேவியை 9 நாளும் பூஜிக்கும் வழக்கம் என்றும் சிவன் உரைத்ததோ அல்லது ஶாகேத்ய சம்ப்ரதாயத்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டுள்ளேன். நம் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இருக்கும் பாசுரங்களிலோ, இதிஹாச புராணங்களிலோ நவராத்ரியின் குறிப்பு எங்கேயும் உள்ளதா என அறிய ஆவலாக இருக்கிறது? நம் பூர்வாசார்யர்கள் கொண்டாடியிருக்கின்றனரா? என்று தெளிவிக்கவும்.
நவராத்ரி வழிபாடு பற்றி ஸ்ரீ லக்ஷ்மீதந்திரத்தில் சொல்லப்பட்டிருகிறது. மேலும் இது பூர்த்தியாக ஸ்ரீவைஷ்ணவ வழிபாடு என்று நிர்தாரணம் பண்ணி நம் GSPKவில் நவராத்ரியின் சிறப்பு என்ற ஒரு உபந்யாஸத்தின் விளக்கப்பட்டிருக்கிறது அதை கேட்கவும்.
https://youtu.be/Ml_HoQAEXdo
நவராத்ரி என்பது லக்ஷ்மீதேவி விஷயமான வழிபாடுதான். லக்ஷ்மீதேவியின் எந்தெந்த ஸ்தோத்ரங்கள், ப்ரபந்தங்கள், ரூபங்கள் எந்தெந்த நாள் என்பதை விஸ்தாரமாக ஒரு pdf தொகுப்பாய் கீழேயுள்ள பக்கத்தில் காணலாம்.
https://www.sampradayamanjari.org/sudarsanam-guide-to-upcoming-events/
பிள்ளை பிறந்து ஓர் வருடத்திற்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து செய்து 17 வருடம் ஆகிறது.புக்ககத்தில் மாமியார் ஶ்ராத்தம், இதர தர்ப்பணாதி கர்மானுஷ்டாத்தை விவாகரத்து ஆன ஸ்திரீ எந்த முறையிலாவது கடைபிடிக்க வேண்டுமா?அல்லது தேவையில்லையா? புக்காத்திலிருந்து எந்த ஜீவனாம்சமும் சொத்தும் பெறவில்லை.மேற்படி விஷயத்திற்கு அருள் கூர்ந்து பதில் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.
விவாஹரத்து என்பது சட்ட ரீதியாகதான் உண்டே தவிர சாஸ்த்ர ரீதியாக கிடையாது. ஒரு ஸ்த்ரீ ஒரு புருஷனைக் கல்யாணம் பண்ணிக்கொண்ட பின் ஆயுசுக்கும் அவள் அவனுடைய தர்மபத்னி தான். அது ஶாஸ்த்ர ரீதியாக மாற்ற முடியாது. சட்ட ரீதியாக விவாஹரத்து என்று இருந்தாலும் ஶாஸ்த்ர ரீதியாக அதை மாற்ற முடியாது. அதனால் விவாஹரத்தானவர்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன என்கின்ற விதிமுறை எல்லாம் சாஸ்திரத்தில் கிடையாது.
ஒரு ஸ்த்ரீயானவள் பர்த்தாவுடன் சேர்ந்து செய்யவேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும். அதுதான் சாஸ்த்ரம். அதையொட்டி இருக்கின்ற புக்ககத்து உறவுகளுக்கு ஏற்பட்ட கடமைகளையும் செய்ய வேண்டும். எப்போது அவள் தன் பர்த்தாவுடன் இல்லையோ, அப்பொழுதே அந்தச் சமயத்தில் மற்ற கடமைகள் , மற்ற கர்தவ்யங்கள் எல்லாம் அவள் பண்ண முடியாமல் போய் விடுகிறது. அது சரியா தவறான்னு கேட்டால், தவறுதான். விவாஹரத்து என்ற ஒன்று நடக்கிறதே தவறுதான். அது ஏற்பட்ட பக்ஷத்தில் அதுக்கு மேல வேற சிந்தனை பண்ண வேண்டிய அவசியம் இல்லை. அதுவே நடந்திருக்க கூடாது. அது நடந்துவிட்டது. அதனால் மற்றதைப் பற்றி யோசித்து என்ன பயன் என்று பதில் சொல்லலாம் என்று தோன்றுகிறது.
ஸ்தோத்ரம், ஶ்லோகம், பாசுரம் என்றால் என்ன? ஏன் தனித்தனி பெயர்களிட்டு குறிப்பிடுகிறோம்.
ஸ்தோத்ரம் என்பது ஸம்ஸ்க்ருத பாஷையில் ஏற்பட்ட எம்பெருமான் விஷயமான அல்லது பாகவதர்கள் விஷயமான துதியாக ஆகும். பொதுவாக இது கவிதை ரூபத்தில் அமைந்திருக்கும். ஒரு ஸ்தோத்ரத்தில் பல ஶ்லோகங்கள் அமைந்திருக்கும். ஶ்லோகம் என்பது ஸ்தோத்ரத்தினுடைய ஒரு பாகம். பிரிவு என்று புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்ரத்தில் 33 ஶ்லோகங்கள் இருக்கின்றன.
ஜ்ஞாநாநந்த3மயம் தே3வம்
நிர்மலஸ்ப2டிகாக்ருதிம் ।
ஆதா4ரம் ஸர்வவித்3யாநாம்
ஹயக்3ரீவமுபாஸ்மஹே ॥
என்பது ஒரு ஶ்லோகம். இதே போல் 33 ஶ்லோகங்களை கொண்டது ஸ்ரீஹயக்ரீவஸ்தோத்ரம்.
ப்ரபந்தங்கள் என்பது தமிழில் ஏற்பட்ட எம்பெருமான் அல்லது ஆழவார்கள் விஷயமான துதி ஆகும். அந்த ப்ரபந்தத்தினுடைய ஒரு பாகம், பிரிவு தான் பாசுரம். தமிழில் அமைந்த கவிதை ரூபமான துதி பாசுரம் என்று கருதலாம்.
திருவள்ளூர் எம்பெருமான் மேல் பாடிய ஸ்ரீ கிங்க்ருஹேஶஸ்துதி இயற்றியது ஸ்வாமி தேஶிகன் என்று கேள்விப்பட்டேன். இது சரியா? இந்த ஸ்துதி தேஶிக ஸ்தோத்ரமாலாவில் இல்லாததால் இந்தச் சந்தேகம். அடியேன்
திருவள்ளூர் எம்பெருமான் மேல் பாடிய ஸ்ரீ கிங்க்ருஹேஶஸ்துதி இயற்றியது ஸ்வாமி தேஶிகன் என்று சில மஹான்கள் சொல்லுகிறார்கள். இந்த ஸ்துதி ஸ்ரீ தேஶிக ஸ்தோத்ரமாலா மட்டுமல்ல, தேஶிக வைபவத்தில் எந்த ஒரு தேஶிக க்ரந்தத்திலும் இல்லை.
ஸ்ரீ கிங்க்ருஹேஶஸ்துதி அனைவரும் அனுசந்தானம் பண்ணலாம்.
குறிப்புகள்:
ஸ்வாமி தேஶிகன் அருளிச்செய்த எத்தனையோ க்ரந்தங்கள் நமக்கு கிடைக்காமல் இருக்கிறது, மேலும் நம் சிற்றறிவுக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது, எத்தனையோ விஷயங்களில் சந்தேகங்கள் இருக்கிறது அப்படி இது சந்தேகமாக இருப்பதில் தவறில்லை. சந்தேகமாகவே இருக்கட்டும்.
த்யாகராஜ ஸ்வாமி ஸ்ரீராம பக்தர் மற்றும் ஸ்ரீராமனை ஆராத்ய தெய்வமாகக் கொண்டவர் என்று அவரின் கீர்த்தனைகள் மூலம் அறியலாம். இருப்பினும் “மோக்ஷமு கலதா” எனும் கீர்த்தனையில் சரணத்தில் “வீணா கான லோலுடௌ சிவ மனோ” என்று சிவனிடம் மோக்ஷம் கேட்பது போல் தெரிகிறதே? ஸ்ரீராமனிடம் பக்தி கொண்டவர் சிவனிடம் எதற்காக மோக்ஷம் கேட்கவேண்டும்? ஒரு வேளை ஸ்ரீராமனை சிவனாக பாவித்து பாடியுள்ளார் என்று புரிந்து கொள்வதா? விளக்க ப்ரார்த்திக்கிரேன். கேள்வியில் தோஷம் இருந்தால் அடியேனை க்ஷமிக்கவும்.
த்யாகராஜ ஸ்வாமி அவசியம் ஸ்ரீராம பக்தர் தான். இந்த இடத்தில் சிவனிடத்தில் மோக்ஷம் கேட்கிறார் என்று நினைக்க வேண்டாம். "வீணா கான லோலுடௌ சிவ மனோ" என்ற சரணத்தில் வரும் சிவன் என்ற திருநாமம், இராமனை, ஸ்ரீமந் நாராயணனைதான் குறிக்கும் என்று புரிந்துகொள்ளலாம். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலே “சிவ” என்ற திருநாமம் உண்டு, அதாவது மங்களத்தை அளிக்கக்கூடியவர் என்பதாகும். மேலும் எம்பெருமானின் ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தன் தலையில் தரித்ததனால் அவருக்கு மங்களம் ஏற்பட்டு பிக்ஷாடனன் என்ற பெயர் மாறி சிவன் என்ற பெயர் ரூடியாக வந்துவிட்டது.
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலே “சிவ” என்ற திருநாமம் வருகின்றபடியால் இங்கே இந்தப் பெயர் இராமனையே குறிக்கும் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.
ஆண்டாளின் திருக்கல்யாணம் (நாச்சியார் திருமொழிப்படி) என்று நடந்தது? திருப்பாவைக்குப் பின் தையொரு திங்கள் என்று பாடுகிறாள் அப்படியானால் ஏன் நாம் போகியன்று ஆண்டாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் கொண்டாடுகிறோம்.
ஆண்டாளின் திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்தன்றுதான் நடந்ததாகப் பெரியோர்கள் சொல்லுவார்கள். ஆனாலும் நாம் போகியென்று ஏன் திருக்கல்யாண மஹோத்ஸவம் கொண்டாடுகின்றோம் என்றால், திருப்பாவையின் பூர்த்தி என்பது மங்களகரமான முடிவு, அதாவது “எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்” என்று ஆண்டாள் பாடினார். அவள் பெற்ற திருவருள் எம்பெருமானுடன் திருக்கல்யாணம் புரிந்தது. அந்தத் திருவருளை நாம் அனுபவிக்கும்படியாக திருப்பாவையின் பலஶ்ருதியாக ஆண்டாள் திருக்கல்யாணம் போகியன்று நடக்கிறது.
எம்பெருமாளின் ஹம்ச அவதாரமும், ஹயக்ரீவ அவதாரமும் ஒன்றா? ஹயக்ரீவ காயத்ரியில் ஹம்சம் என்ற பெயர் வருகிறதால் எழுந்த சந்தேகம்.
எம்பெருமாளின் ஹம்ச அவதாரமும், ஹயக்ரீவ அவதாரமும் வெவ்வேறுதான். ஹயக்ரீவ அவதாரத்தில் வேதங்களை மீட்டுக்கொடுத்தார். ஹம்ச அவதாரத்திலே வேதார்த்தங்களை உபதேசம் செய்தார் என்று இருக்கிறது.
ஹயக்ரீவ காயத்ரியில் ஹம்சம் என்ற பெயர் இருக்கலாம் பரவாயில்லை.
அடியேன் சில தினங்களாக எதிர்மறை எண்ணங்கள் (negative thoughts) மற்றும் பழைய மிகவும் கசப்பான நினைவுகள் தோன்றி என்னை பகவான் நாமா சொல்லவோ அல்லது சந்தை பாடம் கற்கவோ, ஸ்தோத்ரம் சேவிக்கவோ மற்றும் நித்யானுஸந்தானம் செய்யவோ விடாமல் மிகவும் வருத்துகிறது. அடியேனும் எம்பெருமான் திருநாமங்களை உச்சரித்து அவ்வெதிர்மறை எண்ணத்திலிருந்து விடுபட முயற்சிக்கிறேன் ஆனால் என்ன செய்தாலும் அதிலிருந்து வெளியே வர இயலவில்லை. எதிலும் புத்தியை செலுத்தவும் முடியவில்லை. இவற்றிலிருந்து மீண்டு எம்பெருமான் ஸ்மரணையில் புத்தியைச் செலுத்த என்ன வழி என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.
பெரியதொரு ஆபத்து நேரிட்டசமயம் எம்பெருமான் திருவாழியாழ்வானைக் கொண்டு கர்பத்தில் புகுந்து ப்ரஹ்மாஸ்திரத்தையே ஓட்டி பரிக்ஷித்தைக் காப்பாற்றினார். இதிலிருந்து நாம் அறிவது எவ்வித ஆபத்தாகிலும் சக்ரத்தாழ்வாரால் அதைப் போக்கடிக்க முடியும். அது மானசீக தீங்காகயிருந்தாலும் சரி.
ஆகையால், ஸுதர்ஶநாஷ்டகம் சேவிக்கலாம். பூர்த்தியாகச் சொல்லமுடியாவிட்டால் “ஜய ஜய ஸ்ரீ ஸுதர்ஶந” என்றாவது சொல்ல பழகவேண்டும். 32 முறை சொல்வது நலம். எத்தனை தடவை முடிகின்றதோ அத்தனை முறை சொல்லலாம்
இந்த பலஶ்ருதியில் ஸ்வாமி ஸாதித்திருப்பது, அடையவதற்கு அரிதாக இருக்கும் பலனைக்கூட அடைவிப்பான் சக்ரத்தாழ்வான்.
அந்த வகையில் ஒரு கார்யத்தை தேகத்தால் கூட செய்துவிடலாம், ஆனால் மிகவும் அரிதான செயல் என்பது மனதைச்செலுத்தி ஒரு கார்யத்தை வெல்வதே. அப்படி மனதைச்செலுத்தும் அரிதான பலனை நமக்கு கிட்டச்செய்வது சக்ரத்தாழ்வார்தான்.
ஆகவே மனதை ஒழுங்குபடுத்த சக்ரத்தாழ்வாரை நாடுவது தான் நல்வழியாகும்.
ஸம்ஸ்கிருதத்தை வடமொழி என்று பரவலாக சொல்கிறார்கள்.அது மனதிற்கு நெருடலாக உள்ளது. அது தெய்வமொழி அல்லவா. தெய்வம் அனைத்து திசையிலும் வியாபித்திருக்கும் அல்லவா .வடமொழி என்பது வடநாட்டு மொழி என்று அரத்தமா அல்லது வேறு ஏதாவது அர்த்தம் உள்ளதா.
ஸம்ஸ்கிருதத்திற்கு வடமொழி என்று பொதுவாகவே பெயர்.
தமிழ்மொழி தெற்கே உண்டாகி வளர்ந்த மொழி. பொதிகை மலையில் அகஸ்தியரினால் உண்டாதனால் தென்மொழி என்கின்ற பெயர்.
ப்ராசீனமாகயிருந்த ஸமஸ்கிருதத்தை வடமொழி என்று சொல்கிறார்கள் எனத் தோன்றுகிறது. இது எல்லார்க்கும் சேர்ந்த மொழி. தேவர்கள் வடக்கே இருப்பதாகவும் ஒரு ஐதீஹ்யம். அதனால் தேவர்களுடைய பாஷையை வடமொழி என்றும் சொல்லலாம்.
சர்வதேச யோகா தினத்தன்று sudarsanam GSPK groupஇல் ‘மன அழுத்தத்திற்கு ஸ்வாமி தேசிகன் தெரிவிக்கும் அரிய மருந்துகளில் ஒன்று யோகா ‘ என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டது. அதில் முன்பு வெளியிடப்பட்ட சுதர்சனத்தின் கேள்வி பதில்(Q16JUL21003) ஒன்றும் பகிரப்பட்டது. இதை ஸ்வாமி தேஶிகன் எந்த க்ரந்தத்தில் சாதித்துள்ளார் என்பதை கூற ப்ரார்த்திக்கிறேன். தாஸன்
“ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷா” என்ற க்ரந்தத்தில் நித்யமே யோகா என்று, அதாவது இராத்ரி வேளையில் யோகம் பண்ணுவது பற்றி ஸ்வாமி தேஶிகன் ஸாதித்திருக்கிறார்.
தாத்பர்ய சந்த்ரிகையிலும் யோகம் பற்றிய குறிப்புகள் இருக்கிறது.
கருடபஞ்சாஶத் சந்தை வகுப்புக்கு ஏதேனும் தகுதி வேண்டுமா? அப்படியில்லை என்றால் தங்கள் SampradayaManjari YouTube Channelலில் santhai videoவாக பதிவிடவும், முடிந்தால் சந்தை வகுப்பு ஆரம்பிக்கவும்.
கருடபஞ்சாஶத் ஸ்தோத்ரம் ஆனபடியால் சந்தை கற்க பெரியளவில் தகுதியெல்லாம் வேண்டாம். சற்று கடினமானபடியால் சிறிது கவனத்துடன் சந்தை வகுப்பில் கற்கவேண்டும்.
GSPKயில் முன்னமே இதை சந்தையாகக் கற்றுக்கொடுக்கப்பட்டது. அந்த சந்தை பாடத்தின் சந்தை recording link கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தாங்கள் கற்றுக்கொள்ளலாம்.
https://drive.google.com/drive/folders/1xSz2Szw9sNXuz6bZniKteHRsbfb8n14v?usp=sharing
நமது ஸம்ப்ரதாயத்தில் பெண்கள் கேசத்தை மற்றும் புருவங்களைத் திருத்திக் கொள்வது அனுமதிக்கப்படுகிறதா என்று அடியேன் புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
நமது ஸம்ப்ரதாயத்தில் பெண்கள் கேசத்தை மற்றும் புருவங்களைத் திருத்திக் கொள்ளக்கூடாது. அதற்கு மேல் இந்தக் கால வழக்கத்தில் அப்படி எல்லாம் பண்ணிக்கொண்டிருக்கிறார்களே என்று கேள்விகேட்டால் அவரவருடைய கர்மவினைப்பயன் என்றுதான் சொல்லணும்.
ஸ்ருஷ்டியின் போது 5 ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்கள் என அனைத்தும் படைக்கப்பட்டது என பாகவதத்தில் உள்ளது. ஸ்ருஷ்டிக்கு முன் இந்திரன் என்பவன் இருந்தாரா? அல்லது அவரின் கர்மாவால் இந்திரன் என்று வேறுபடுகிறாரா? இதை எப்படிப் புரிந்துக்கொள்வது.
இந்தக் கேள்வியில் இரண்டு விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திரியங்கள் என்றால் என்ன, இந்திரன் என்பவர் யார் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திரியங்கள் என்பது அசேதனங்கள். எம்பெருமான் ஸ்ருஷ்டி பண்ணும்பொழுது இந்த மூலப்ரக்ருதி என்பது, பல விதமான விகாசங்களை அடைகின்றது. அதிலிருந்து உண்டாவதுதான் இந்திரியங்கள். அதில் 5 ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள் என்று உண்டு.
கர்மேந்திரியங்கள் நமக்கு கர்மாக்களைச் செய்ய உதவக்கூடியவைகள். பாத, பாணி, பாயு, வாக், உபஸ்தம் என்று 5 கர்மேந்திரியங்கள்.
அதே போலே ஞானேந்திரியங்கள் நமக்கு உணர்த்தக்கூடிய இந்திரியங்கள். எதனால் நாம் ஒருவிதமான ஞானத்தை அறிகின்றோமோ அவைகள் ஞானேந்திரியங்கள். கண், காது, மூக்கு, நாக்கு, த்வக்கு என்று 5 ஞானேந்திரியங்கள். இந்த இந்திரியங்கள் எல்லாம் அசேதன கோஷ்டியை சேர்ந்தவைகள்.
இவற்றை எல்லாம் ஸ்ருஷ்டி பண்ணி முடித்தபின் எம்பெருமான் ஜீவர்களுக்கு ஶரீரத்தை கொடுக்க ஆரம்பிக்கின்றான். ஒரு ஜீவனுடைய ஶரீரமானது அசேதனத்தால் செய்யப்படுகிறது. அந்த ஜீவகோடியை சேர்ந்த ஒருவன் தான் இந்திரன். அவன் பிற்காலத்தில் ப்ரம்மாவால் ஸ்ருஷ்டிக்கப்படுகிறான். எம்பெருமான் அசேதனாதி ஸ்ருஷ்டிகளை ஓரளவுக்குச் செய்த பின் ப்ரம்மதேவனை ஸ்ருஷ்டித்து அதற்குமேல் ஸ்ருஷ்டியைத் தொடர்ந்து பண்ணச் சொல்கிறார். அந்த ஸ்ருஷ்டியில் வரும் ஒருவன் தான் இந்திரனாக ஆகின்றான். இந்திரப்பதவிக்கு ஒருவன் வருவதற்கு அவன் செய்த புண்ணியங்கள் என்பனபோல் பல காரணங்கள் இருக்கின்றன என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்திரியங்கள் என்பது அசேதனம், இந்திரன் என்பவன் ஒரு ஜீவன்.
பங்குனி உத்திரம் திருநாள் அன்று எம்பெருமானார் கத்யத்ரயம் சேவித்து பெரிய பெருமாளிடம் ப்ரபத்தி செய்துகொண்டார் என்று நம் பெரியோர்கள் கூறி அடியேன் கேட்டுள்ளேன். ஆனால் ஒரு ஆசார்யனின் சம்பந்தத்துடன்தானே இக்காலத்தில் நாம் ப்ரபத்தி செய்துகொள்கிறோம். அவ்வாறு இருப்பின் எம்பெருமானார் எவ்வாறு தன் ஆசார்யன் அருகில் இல்லாதபோது தானாகவே ஶரணாகதி செய்து கொண்டார்? இதை எவ்வாறு சரியாக புரிந்துகொள்வது? கேள்வியில் தோஷம் இருந்தால் க்ஷமிக்கவும்.
கத்ய த்ரயம் சேவிக்கும் போது எம்பெருமானார் ஶரணாகதி பண்ணவில்லை. கத்ய த்ரயம் சேவிக்கும்போது தான் முன்பே செய்த ஶரணாகதியை அனுசந்தித்துக் காட்டுகிறார் என்பது மட்டும்தான். இதை ஸ்வாமி தேஶிகன் கத்ய பாஷ்யத்தில் காட்டியுள்ளார்.
யாதவாப்யுதயம் என்பது பாராயண க்ரந்தமா? ஒரு காவியம் என்பதால் அதை கோஷ்டியாக சேவிக்கலாமா? அதன் அர்த்தத்தை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாமா?
யாதவாப்யுதயம் ஒரு காவியம் பாராயணத்திற்காக வந்த ஸ்தோத்ரம் இல்லை. சில புராணங்கள் பாராயணத்தில் வைத்துள்ளது போல் இதை பாராயணமாக சேவித்தால் தவறில்லை. அதன் அர்தத்தை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்பதற்காகவே ஸ்வாமி தேஶிகனும் இயற்றியிருக்கிறார்.
உப ப்ரம்மணம் என்றால் என்ன? அதில் எந்தெந்த புராணங்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது ? தன்யாஸ்மி
உப ப்ரம்மணம் என்றால் வேதத்தின் விளக்கம் என்று அர்த்தம். வேதத்தைப் பற்றி விள்க்குவதற்காக வந்த ஸ்ம்ருதிகள், ஶ்ருதிகள், இதிஹாச-புராணங்கள் எல்லாம் உப ப்ரம்மணங்கள். அதில் 6 புராணங்கள் ஸாத்வீக புராணங்கள் அது தான் முக்கியமான உப ப்ரம்மணம் அந்த உபப்ரம்மணத்தை தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவும் புராணங்களில் தான் இருக்கிறது.