ஸ்த்ரீகள் வராஹ கவசமும் மாங்கள்யஸ்தவமும் சேவிக்கலாமா?
ஸ்த்ரீகள் பொதுவாக மந்த்ரம் கவச ஸ்தோத்ரங்கள் சொல்லும் வழக்கமில்லை. சிலர் அங்கந்யாஸ, கரந்யாஸங்களை விட்டுவிட்டு அந்தப் பெருமாளை ப்ரார்த்திக்கிற ஶ்லோகங்களை மட்டும் சொல்லுகிறார்கள்.
ஸ்த்ரீகளுக்கும் குழந்தைகளுக்கும் நித்ய ஸ்நான சங்கல்பம் உண்டா?
ஸ்த்ரீகளுக்கும் குழந்தைகளுக்கும் நித்ய ஸ்நான சங்கல்பம் இல்லை. எம்பெருமானை நினைத்துக்கொண்டு ஸ்நானம் செய்தால் போதுமானது.
அகத்தில் புருஷர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் ஸ்த்ரீகள் ஆசார்ய பாதுகைக்கும் சாளக்கிராம மூர்த்திக்கும் அல்லது விக்ரஹத்திற்கும் திருவாராதனை பண்ணலாமா?
ஸ்த்ரீகள் ஆசார்ய பாதுகைக்கும் சாளக்கிராம மூர்த்திக்கும் மனதார திருவாராதனை பண்ணலாம் ஆனால் வெளியில் கைகளால் பண்ணும் வழக்கமில்லை.
ஶ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஸ்திரீகள் ஏன் சிகப்பு ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்கின்றனர்?
ஸ்திரீகள் ஏன் சிகப்பு ஶ்ரீசூர்ணம் இட்டுக்கொள்கின்றனர் என்றால், அதைப் பற்றி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளையில்லாமல் பல வண்ணங்களில் வஸ்த்ரங்கள் தரிக்கவேண்டும் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. அழகாகவும், மங்களகரமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டிருக்கிறது. குங்குமும் மஞ்சளிலிருந்து வந்தபடியால் அது விசேஷ மங்களமாக இருக்கிறது.
சுமங்கலி ஸ்த்ரீகள் ஶ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்கொள்ளலாமா? அல்லது திருமண்ணுடன்தான் இட்டுக்கொள்ளவேண்டுமா?
திருமண்ணுடன் ஶ்ரீசூர்ணம் இட்டுக்கொள்வது உத்தமம். ஶ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்கொண்டாலும் தவறில்லை.
ரஜஸ்வலை காலத்தில் ஸ்தோத்ர பாடங்கள் சேவிக்கலாமா?
ஸ்த்ரீகள் ரஜஸ்வலை காலத்தில் ஸ்தோத்ர பாடங்கள் சேவிக்கக்கூடாது
ஸ்த்ரீகள் ப்ரணவம் சொல்லக்கூடாது என்கிறார்கள். ஆனால் ஸமாஶ்ரயணம் பண்ணும்பொழுது அஷ்டாக்ஷரம் உபதேசம் ஆகிறது. அதில் உள்ள ப்ரணவத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்? தயவு செய்து தெளிவு படுத்தவும்.
ஸ்த்ரீகளுக்கு ப்ரணவத்திற்குப் பதிலாக “அம்” என்று உபதேசமாகும். அதை வைத்துக்கொண்டு ப்ரணவத்தை உச்சாடனம் பண்ணாமல் “அம்” என்று சொல்லி மேலே மந்திரத்தைச் சொல்லவேண்டும்.
அடியேன் தேஶிக ஸம்ப்ரதாயத்தில் ஸ்திரீகள் ஸ்ரீசூர்ணம் மட்டும் தான் இட்டுக்கணும் திருமண் கிடையாது என்று சொல்றாளே.
ஸ்த்ரீகள் ஶ்ரீசூர்ணம் மட்டும்தான் இட்டுக்கணும் திருமண் கிடையாது என்று யாரும் சொல்லவில்லை.
ஸ்த்ரீகள் குங்குமத்தால் ஶ்ரீசூர்ணம் தரிக்கலாமா?
ஸ்த்ரீகள் குங்குமத்தால் ஶ்ரீசூர்ணம் தரிக்கலாம்.
பர்த்தா இல்லாத ஸ்தீரீகள் வாரம் ஒரு முறை எண்ணெய் ஸ்நானம் பண்ணலாமா?
கிழமைகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தவிர, பண்டிகையில்லாத நாட்களில் பண்ணலாம்.
ஸ்த்ரீகள் திருமணம் ஆகும் முன் ஸமாஶ்ரயணமும் பரந்யாஸமும் பண்ணிக்கொள்ளலாமா?
ஸ்த்ரீகள் திருமணமாகும் முன் ஸமாஶ்ரயணமும் பரந்யாஸமும் பண்ணிக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் அப்படிப் பண்ணிக்கொள்வது பல குடும்பங்களில் வழக்கத்தில் இல்லை.
பெண்களுக்கு விவாஹத்திற்குப் பிறகுதான் வாழ்க்கை என்பது ஆரம்பமாகுகிறது. விவாஹத்திற்கு முன் பிறந்த க்ருஹம் என்பது அவள் பிறந்து வளர்ந்த இடம் என்பது மட்டும்தான். ஆனால் அவளின் புக்ககம் என்பதுதான் அவள் வாழப்போகும் குடும்பம். அதாவது தனது கணவன், இவளின் புத்ரர்கள் என்று அவர்களுடன் வாழப்போகிறாள் என்கிற படியாலே அப்புக்கக ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றுவது நல்லது என்பதற்காக, அதாவது வாழப்போகிற இடத்திற்கு அனுசரணையாக இருக்கவேண்டி விவாஹத்திற்கு முன் ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் பண்ணி வைக்க மாட்டார்கள்.
புருஷர்களைப் போல் ஏன் ஸ்த்ரீகளும் ஊர்த்வ புண்ட்ரம் தரிக்கக்கூடாது? மேலும் அவர்கள் ஏன் மஞ்சள் ஶ்ரீசூர்ணம் இடக்கூடாது?
ஊர்த்வ புண்ட்ரம் சொல்லும் ஶாஸ்த்ரமானது ஸ்த்ரீகளுக்கு ஊர்த்வ புண்ட்ரம் என்பது மூக்கில் ஒரு வளைவு மட்டும் என்று சொல்லியிருக்கிறது. மேலும் அவர்களுக்கு மஞ்சள் இல்லை சிகப்பு இடணும் என்றும் சொல்லியிருக்கிறது. இதைப் பற்றி வேதத்திலே சொல்லியிருக்கிறது. அதனால் ஶாஸ்த்ரம் சொல்லியபடி செய்யவேண்டும்.
அடியேன் USA வில் வசிக்கிறேன். இங்கே இருக்கும் ஸ்த்ரீகள் ஒரு குழுவாக ஶ்ரீமத் சுந்தர காண்டத்தின் ஶ்லோகங்கள் கற்றுக்கொள்கிறார்கள். அடியேன் அகத்துப் பெரியவர்கள் ஸ்த்ரீகாள் ஶ்லோகம் சேவிக்கக்கூடாது என்றும் ஆனால் கதையை பாராயணம் செய்யலாம் என்று சொன்னதாக நினைவு. மேலும் ஆழ்வார்களின் ஈரச்சொற்களை சேவிக்கலாம் ஆனால் ரிஷிகளின் ஶ்லோகங்களை ஸ்த்ரீகள் சொல்லக்கூடாது என்றும் சொன்னதாக நினைவு, ஸ்த்ரீகள் சுந்தரகாண்ட ஶ்லோகங்களை கற்கலாமா? பாராயணம் செய்யலாமா?
தாங்களே கேள்வியில் குறிப்பிட்டதுபோல் ஸ்த்ரீகள் சுந்தர காண்டம் பாராயணம் செய்யும் வழக்கம் நம் ஸம்ப்ரதாயத்தில் இல்லை.
ஸ்த்ரீகள் ஒற்றை திருமண்தான் தரிக்கலாமா? அல்லது ஒற்றை திருமணுடன், கூடுதலாக அவர்கள் நெற்றி வகுடுக்கு கீழ் குட்டி திருமண், மற்றும் கழுத்து, கைகளிலும் ஸாற்றிக் கொள்ளலாமா? சில பெரியோர்கள் கழுத்தில் குங்குமம் வைத்துக்கொண்டால் பிறந்த வீட்டு சுபிக்ஷம் குறைந்து விடும் என்று குறிப்பிடுகிறார்கள். ஸ்வாமி தேஶிகர், ஆசாரியர்கள் கூறியுள்ள ஸ்த்ரீகளளுக்கான திருமண் காப்பு நியமங்களை உபதேஸித்து அருளவும்.
ஸ்த்ரீகளுக்கு ஸமாஶ்ரயணம் ஆகும்போது 12 திருமண் இட்டுக்கும்படியாக ஆசார்யன் நியமித்து, அதன் திருநாமங்களையும் சொல்லிக்கொடுப்பார்.
தினந்தோறும் அப்படியிட்டுக்கொள்வது சற்று ஶ்ரமஸாத்யமாக (கஷ்டப்பட்டு செய்யவேண்டி) இருக்கும் என்பதாலும், காலை வேளையில் ஸ்த்ரீகளுக்கு வேறு காரியங்கள் இன்னும் ப்ரதானமாக இருக்கும் என்பதாலும் அதை தினந்தோறும் தரித்துக்கொள்ளும் வழக்கமில்லை. கூடாதென்பது இல்லை, பெரியவர்கள் வழக்கத்தில் இல்லை.ஒரு திருமண் இட்டுக்கொள்வதென்பதுதான் வழக்கத்தில் இருக்கிறது.
ஸ்த்ரீகள் ஸப்தாஹ, நவாஹ ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், சுந்தர காண்டம் பாராயணங்கள் சேவிக்கலாமா? நம் ஸம்பிரதாயத்தில் இந்த வழக்கம் உண்டா? பகவத் கீதை பாராயணம் புருஷர்கள், ஸ்த்ரீகள் செய்யும் வழக்கம் நம் ஸம்பிரதாயத்தில் உண்டா? உண்டெனில், க்ரமமாக எப்படி சேவிக்க வேண்டும்?
ஸ்த்ரீகள் ஸப்தாஹம், நவாஹம் போன்ற முறைகளில் ஸ்ரீமத் ராமாயணுமும், ஸ்ரீமத் பாகவதமும் சேவிக்கும் வழக்கமில்லை. அதாவது ஶ்ரீகோசத்தில் எம்பெருமானை ஆவாஹம் செய்து , ஸ்த்ரீகள் பாராயணம் செய்யும் வழக்கம் நம் ஸம்ப்ரதாயத்தில்லை. அதேபோல் ஸ்ரீமத் பகவத் கீதையும் சேவிப்பதில்லை.
ஸ்த்ரீகள் எந்த ரீதியில் திருமண் இட்டுக்கொள்ளவேண்டுமோ அதே ரீதியில் தினமும் இட்டுக்கொள்வேன் ஆனால் பஹிஷ்டை காலத்தில் Sticker பொட்டு இட்டுக்கொள்கிறேன்.
பஹிஷ்டை காலத்தில் திருமண் ஶ்ரீ சூர்ணம், புஷ்பம் ஸ்த்ரீகள் வைத்துக்கொள்ளலாமா? சுமங்கலிகள் என்ன செய்யவேண்டும்?
பஹிஷ்டை காலத்தில் திருமண் ஶ்ரீசூர்ணமும், புஷ்பமும் ஸ்த்ரீகள் தரித்துக்கொள்ளக்கூடாது.
ஶ்ரீமத் பாகவதம் ஸ்த்ரீகள் சேவிக்கலமா?
ஶ்ரீமத் பாகவதத்தை ஸ்த்ரீகள் சேவிக்கும் வழக்கமில்லை.
ஸ்த்ரீகள் எந்தெந்த நாட்கள் கட்டாயமாக தலைக்குத் தீர்த்தமாட வேண்டும்? எந்தெந்த நாட்கள் கட்டாயம் கூடாது என்று தெரிவிக்கவும். திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகதவர்கள், என்று தனியாக நியமம் உள்ளதா?
தீர்த்தமாடக்கூடிய விஷயங்கள்:
முதலில் ஏகாதசி அன்று அனைத்து ஸ்த்ரீகளும் தலைக்குத் தீர்த்தமாட வேண்டும்.
ரஜஸ்வலா காலம் முடிந்த பிறகு அதாவது மூன்று ராத்திரிகள் முடிந்த பிறகு நான்காம் நாள் காலையில் எல்லா ஸ்த்ரீகளும் அவசியம் தீர்த்தாமாட வேண்டும். திருமணமான ஸ்த்ரீகள் ஐந்தாம் நாள் காலையிலும் தீர்த்தாமாட வேண்டும். அதை அந்யா தீட்டுக் கழிப்பது என்று சொல்வார்கள். அதனால் ரஜஸ்வலா காலம் முடிந்த பிறகு நான்காம் மற்றும் ஐந்தாம் நாள் திருமணம் ஆன பெண்கள் அவசியம் தலைக்குத் தீர்த்தமாட வேண்டும்.
பர்தா தர்ப்பணம் செய்வாராகில் அன்றைய தினம் அவருடைய பார்யையானவள் கட்டாயம் தீர்த்தமாட வேண்டும். அமாவாஸை, மாசப்பிறப்பு, ஶ்ராத்தம் முதலிய தினங்களில் பர்தாவிற்குக் கைங்கர்யம் இருந்தால் அவருடைய மனைவி அவசியம் தலைக்குத் தீர்த்தமாட வேண்டும்.
க்ரஹண புண்ய காலங்களில் தீர்த்தமாடுதல் அவசியம் . புண்ய கால ஸ்நானம், சுத்த மண்டல ஸ்நானம் இவையெல்லாம் செய்ய வேண்டும். இவையெல்லாம் தீர்த்தமாடக்கூடிய விஷயங்கள்.
இதற்கு மேலே எண்ணெய் தேய்த்துக் குளித்தல், மங்கள ஸ்நானம் என்று ஒன்று இருக்கிறது. கன்னிகைகளும் சுமங்கலிகளும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் மிகவும் விசேஷம். அதேபோல் பண்டிகை நாட்களில், உதாஹரணத்திற்கு திருக்கார்த்திகை, கனு, காரடையான்நோன்பு, ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமை, இந்த மாதிரி நாட்களிலெல்லாம் மங்கள ஸ்நானம் செய்தால் மிகவும் விசேஷம்.
தீர்த்தமாடக்கூடாத விஷயங்கள் :
இதில் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் தீர்த்தமாடுவது என்பது எண்ணெய் தேய்த்துக் கொள்ளாமல் ஶிரோ ஸ்நானம் செய்து கொள்வது. அந்த மாதிரி வர்ஜிதமான நாட்கள் என்று ஒன்றும் தெரியவில்லை.
ஆனால் பித்ரு கார்யங்கள் செய்யக் கூடிய தினங்கள் அதாவது அமாவாஸை, மாசப்பிறப்பு, ஶ்ராத்தம் இது போன்ற தினங்களிலெல்லாம் தப்பித் தவறி கூட எண்ணெய் தேய்த்துக் கொள்ளக் கூடாது. பித்ரு கார்யங்கள் செய்ய நேர்ந்தால் அதாவது சில சமயங்களில் என்ன ஆகிவிடலாம் என்றால் ஒரு ஸ்த்ரீயிற்கு மாமனார் மாமியார் நன்றாக இருக்கலாம், அந்த ஸ்த்ரீயினுடைய பர்த்தா பித்ரு கார்யங்கள் அதாவது ஶ்ராத்தம் எல்லாம் பண்ணவில்லை, ஆனால் இந்த ஸ்த்ரீ மாமியாருக்கு ஒத்தாசையாக ஶ்ராத்த கார்யங்கள் பார்க்கிறாள் என்றால் அந்த ஶ்ராத்த தினத்தன்று அவள் தலைக்கு தீர்த்தமாடலாம். அதில் ஒன்றும் பாதகமில்லை. அதனால் பித்ரு தினங்களில் பித்ரு கார்யங்களில் கைங்கர்யம் பண்ண நேர்ந்ததேயானால் அவசியம் தலைக்குத் தீர்த்தமாடவேண்டும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் எண்ணெய் தேய்த்து தீர்த்தாமாடக் கூடாது.
பகிஷ்டா காலத்தில் அஷ்டாத்யாயி மற்றும் அமரகோஶம் படிக்கலாமா? மேலும் சாஹித்யங்கள் வாசிக்கலாமா?
அஷ்டாத்யாயி என்பது வேதத்தின் அங்கமான வ்யாகரணத்தின் ஸூத்ரங்கள். அதை ஸ்த்ரீகள் படிப்பதே தவறாகும்.ஆனால் இக்காலத்தில் ஸம்ஸ்க்ருதம் படிக்கும் ஸ்த்ரீகள் சாமான்ய ஶாஸ்த்ரங்களைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அக்காலத்தில் ரிஷி பத்னிகள் படித்திருக்கலாம். பகிஷ்டா காலத்தில் படிக்காமல் இருக்கலாம். ஆனால் பரிக்ஷை வந்தால் என்னசெய்வது உபாயத்தில் பண்ணவேண்டியதுதான் தவறில்லை. அமரகோஶம் ஶ்லோகங்கள்தான் படிக்கலாம் தப்பில்லை. அதேபோல் சாஹித்யங்கள் வாசிக்கலாம் தப்பில்லை.
ஸ்த்ரீகள் வராஹ கவச ஸ்தோத்ரம் சொல்லலாமா?
இந்தக் கவச ஸ்தோத்ரங்கள் எல்லோமே அந்தந்த மந்த்ரங்களைப் பிரித்து அர்த்தம் சொல்வதுதான். அதில் அங்கந்யாஸ கரந்யாஸ மந்த்ரங்களைப் பிரித்து அர்த்தங்களைச் சொல்வதுபோல் வரும் அதனால் கவச ஶ்லோகங்களை ஸ்த்ரீகள் சொல்லாமல் இருப்பதுதான் உத்தமம்.
பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்
(கேள்விகளும் – பதில்களும்)
அகத்தில் பார்யாள் ரஜஸ்வலையாக இருக்கும் போது அவர்களுக்கு என்று தனியாக சமைக்க வேண்டுமா. அல்லது திருவாராதனத்தில் கண்டருளிய அன்னத்தைப் புருஷர்கள் உண்ட பின்பு அவர்களுக்கு சாதிக்கலாமா. ரஜஸ்வலை காலத்தில் மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைத் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
ரஜஸ்வலையின் போது முக்கியமாகக் கடைபிடிக்கவேண்டியது, ரஜஸ்வலையாக இருப்பவர்கள் தனியாக இருக்கவேண்டும். தனியறை, தனி Washroom போன்றவைகளுக்கு வசதி இருந்தால் அவர்கள் அங்கே இருக்கலாம். ஒருவேளை தனி Washroom இல்லையென்றால் அவர்கள் உபயோகித்தபின் சாண ஜலம் தெளித்தப் பின் உபயோகிக்கலாம். அதேபோல் உள் தனியாக இல்லை என்றால் அதாவது ஒரு அறை, ஒரு தளிகையறைதான் இருக்கிறது என்றால் ஒரு 5 , 6 அடியாவது அவர்கள் தள்ளியிருக்கலாம். அந்தச் சமயத்தில் அவர்கள் உபயோகித்த போர்வை, தலையணை போன்றவற்றை, அதற்குப்பின் நிச்சயமாக நனைத்து உலர்த்திதான் உபயோகப்படுத்த வேண்டும். அதேபோல் தான் மிதியடியும், திரைச்சீலையும்.
பொதுவாக தளிகை அவர்களுக்குத் தனியாகப் பண்ணிப்போடுவார்கள், ஏனென்றால் பெருமாள் திருவாரதனம் வரை அவர்கள் காத்திருக்கவேண்டியதில்லை. இது உத்தமமான கல்பம். இன்று இரண்டுபேர்தான் இருக்கிறார்கள், அவர் வேலைக்குச் செல்பவர்கள் என்றால் தனியாகத் தளிகை பண்ணுவது கடினம்தான். தளிகை பண்ணிவிட்டு அகத்தில் இருப்பவர்கள் எல்லோரும் ஸ்த்ரீ, புருஷர்காள், உபநயனமான குழந்தைகள் உட்பட சாப்பிட்டபின் அதற்குப் பிறகு அந்தத் தளிகையை முகர்ந்து பார்த்துவிட்டபின் அவர்களுக்குப் போடுவது என்றிருக்கிறது. அவர்களுக்குப் போட்டபின் மீதியிருப்பதைச் சேஷம் என்று சொல்வார்கள், மேலும் அதை உள்ளே சேர்க்கக்கூடாது. அந்தப் பாத்திரங்களைத் தேய்த்துச் சுத்தபடுத்திய பிறகே உபயோகிக்கவேண்டும்.
பொதுவான வழக்கம் அவர்களைப் பார்க்கக்கூடாது, பேசக்கூடாது என்பதாக இருந்தாலும் இருவர் மட்டும் இருக்கும் பக்ஷத்தில் இது சற்று கடினம்தான் ஆகையால் தேவையானளவு அவர்களுடன் பேசலாம், மற்றபடி இதர நாட்கள் போல் அவர்களுடன் அமர்ந்து பேசுவதென்பது கூடாது. இன்றும் கட்டாயம் அவர்கள் தனியாக தள்ளியிருத்தல் வேண்டும். அவர்கள் உபயோகித்த வஸ்த்ரங்களும், பாத்திரங்களும் அவர்கள் குளித்தபின் கட்டாயம் நனைத்துதான் அவர்களாலேயே உபயோகிக்க முடியும்.
10நாள் ஜனன,மரண தீட்டு வரும்போது பெண்களுக்கு ஆசமனம் மற்றும் ஜபம் உண்டா? ஸ்தோத்ர பாடங்கள் அனுசந்திக்கலாமா?
ஆசமனம் செய்யலாம். ஜபம் செய்யக் கூடாது. ஸ்தோத்ரம் சொல்லலாம்.
ஸ்திரீகள் பஞ்சஸூக்தம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், ஸ்ரீமத் பகவத் கீதை முதலியவற்றைச் சேவிக்கலாமா?
ஸ்திரீகள் பஞ்சஸூக்தம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், ஸ்ரீமத் பகவத் கீதை முதலியவற்றைச் சேவிக்கும் வழக்கமில்லை.
ரஜஸ்வலை (தீட்டு) சமயத்தில் ஸ்திரீகள் இணையதளம் வழியாக உபந்யாசம் மற்றும் சந்தை வகுப்புகளை கேட்கலாமா? (தாம் சேவிக்காமல்)
ரஜஸ்வலை (தீட்டு) சமயத்தில் ஸ்திரீகள் இணையதளம் வழியாக உபந்யாசம் மற்றும் சந்தை வகுப்புகள் கேட்பது என்பதும் வழக்கமில்லை.
ஸ்த்ரீகள் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் எந்த ஶ்லோகம் வரை சேவிக்கலாம்? எனக்கு வெகு நாட்களாக இந்தச் சந்தேகம் இருக்கிறது. அதனால் நான் இதுவரை பல ஶ்ருதி மட்டுமே சேவித்து வருகிறேன். தயவுசெய்து விளக்கவும்.
பொதுவாகவே ஸ்த்ரீகள் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சேவிப்பதென்பது ப்ராசீன ஸம்ப்ரதாயத்தில் கிடையாது. ஆதலால் இக்கேள்வி இங்கு ப்ரஸக்தி கிடையாது.
பலஶ்ருதி மட்டும் என்பது எந்த அடிப்படையில் கேட்டுள்ளார் என்று தெளிவாக புரியவில்லை. ஏனென்றால் பலஶ்ருதி என்பது பாராயணம் பண்ணியதன் பலனைச் சொல்வது. பாராயணம் பண்ணாமல் பலஶ்ருதி இருப்பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.
நம் ஸ்ரீ வைஷ்ணவ மணப்பெண் கல்யாணத்தின் பொழுது எந்தப் பக்கம் ஆண்டாள் கொண்டை அணிய வேண்டும்? இடது பக்கமா? வலது பக்கமா? எது சரி ?
விவாஹத்தின் போது ஆண்டாள் கொண்டை இடது பக்கம் அணிய வேண்டும்.
அகத்தில் ரஜஸ்வலை காலத்தில் இருக்கும் பெண் பாத்திரம் தேய்த்துக் கொடுக்கலாமா? (வேலைக்கு ஆள் இல்லை என்பதால்) அவ்வாறு தேய்த்துக் கொடுக்கலாம் என்றால் எப்படிச் சுத்தி செய்து எடுத்துக்கொள்வது?
ரஜஸ்வலை காலத்தில் பெண்கள் பாத்திரம் தேய்த்துக் கொடுக்கக் கூடாது. அது தவறு. அந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. வேறு வழியே இல்லாமல் எடுத்துக் கொள்வதாக இருந்தால் அதை லேசாக தணலில் காட்டி பின்பு முறைப்படி சாணியால் சுத்தி பண்ணி எடுத்துக் கொள்ளலாம். அதுவும் இரண்டாம் பக்ஷம் தான். ஆனால் எந்தக் காரணத்தினாலும் பெருமாளுக்குத் தளிகை பண்ணும் பாத்திரங்களுடன் அதைச் சேர்க்கவே கூடாது. அதனால் அதைக் காட்டிலும் அதை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது.
எனக்கு 40 வயது ஆகிறது. ரஜஸ்வலை சமயத்தில் quilt மெத்தை பயன்படுத்தலாமா? அல்லது பாயுடன் சேர்ந்த மெத்தை பயன்படுத்தலாமா? எனக்கு முதுகு வலி பிரச்சனை இருக்கிறது. பயன்படுத்தலாம் என்றால் எப்படிச் சுத்தி செய்வது என்பதையும் சொல்லவும்.
Quilt மெத்தையை ஜலத்தில் நனைத்துப் போட முடியுமா என்று தெரியவில்லை. நாம் படுத்துக் கொண்டு உடுத்திக்கொண்ட துணிகளையெல்லாம் நனைக்க வேண்டும் என்று இருக்கிறது. அதனால் நனைக்க முடியாத பக்ஷத்தில் அதை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.
உங்களுக்கு முதுகு வலி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறீர்கள். அதற்காக ஒன்று செய்யலாம். ரஜஸ்வலை காலத்திற்கு மட்டும் ஒரு தனிப்பட்ட மெத்தையை வைத்துக் கொள்ளலாம். மற்ற சாதாரண நாட்களில் வேறு ஒன்று என்பதாக வைத்துக் கொள்ளலாம். அந்தச் சமயத்தில் அதை ப்ரோக்ஷணம் பண்ணி வைத்துக்கொண்டு மற்ற நாட்களில் அதை உபயோகப்படுத்தாமல் இருப்பது என்று செய்யலாம் என்று தோன்றுகிறது.
பெண்கள் லக்ஷ்மி அஷ்டோத்ர நாமாவளி சொல்லும் பொழுது ப்ரணவாகாரத்தைத் தவிர்க்க வேண்டுமா?
ஆம் பெண்கள் லக்ஷ்மி அஷ்டோத்ர நாமாவளி சொல்லும் பொழுது ப்ரணவாகாரத்தைத் தவிர்க்க வேண்டும்.
பெண்கள் ரஜஸ்வலை காலத்தில் (மாதவிலக்கு சமயத்தில்) தேஶிக ஸ்தோத்ரம், தேசிகப்ரபந்தம், மற்றும் நாலாயிர திவ்யப்ரபந்தம் ஆகியவற்றைச் சேவிக்கலாமா?
பெண்கள் ரஜஸ்வலை காலத்தில் தேஶிக ஸ்தோத்ரம், தேசிகப்ரபந்தம், மற்றும் நாலாயிர திவ்யப்ரபந்தம் ஆகியவற்றைச் சேவிக்கும் வழக்கமில்லை.
கர்பமாய் இருக்கும் பெண் மனையில் அமர்ந்து க்ரஹப்ரவேசம் பண்ணலாமா?
கர்பவதியாக இருக்கும் பெண் க்ரஹப்ரவேசம் பண்ணும் வழக்கமில்லை.
ஸ்த்ரீகள் பகிஷ்டை சமயத்தில் (ஆத்ல வேறு யாருக்கும் புஷ்பம் தொடுக்கத் தெரியாத பக்ஷத்தில்)புஷ்பம் (வாழை நார்)தொடுத்துக் கொடுத்து அதை புருஷா ஜலம் தெளித்து பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா?
ஸ்த்ரீகள் பகிஷ்டை சமயத்தில் பூத் தொடுக்கக்கூடாது என்பது ஶாஸ்திரம். புருஷர்கள் பூத் தொடுக்க கற்றுக் கொள்ளலாம்.
ஸ்த்ரீகள் புராணத்தில் இருக்கும் குந்தி ஸ்துதி, கோபிகா கீதம், இந்திரன் செய்த ஸ்ரீஸ்துதி போன்ற புராண ஸ்துதிகளைச் சேவிக்கலாமா?
ஸ்த்ரீகள் புராணத்தில் இருக்கும் ஸ்துதிகளைப் பொதுவாகச் சேவிக்கவேண்டிய அவசியமில்லை என்பதாக ஸம்ப்ரதாயம். ஸ்த்ரீகளுக்கு பெரியவர்கள் சந்தை சொல்லிக்கொடுத்து சொல்லும் வழக்கமில்லை. ஆனால் இந்தக் காலத்தில் ஸ்தோத்ரம் என்கிற முறையில் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
நவராத்திரியில் தாயாருக்காக வைக்கப்படும் கலசம் மரப்பாச்சி பொம்மைக்கு முன் வைக்கவேண்டுமா? அந்தக் கலசத்தை ஸ்த்ரீகள்தான் வைக்கவேண்டுமா? கைம்பெண்கள் மட்டும் இருக்கும்போது அவர்கள் வைக்கலாமா?
நவராத்திரியில் கலசம் வைப்பது, மரப்பாச்சி பொம்மை வைப்பது என்பது சில க்ருஹங்களில் வழக்கமிருக்கிறது. சில க்ருஹங்களில் அவை வைக்காமலே கொலு வைக்கும் வழக்கமுண்டு. இதுதான் ஸம்ப்ரதாயம் என்று இதில் கிடையாது. அவை வைப்பதும், எது முதலில் வைக்கவேண்டும் என்பதும் அவரவர்கள் க்ருஹ வழக்கப்படி பின்பற்றவும்.
பொம்மை வைப்பது என்பதில் முதலில் சுமங்கலி ஸ்த்ரீகள் அல்லது கன்யா பெண்கள் பொம்மை வைப்பதுதான் வழக்கம். யாரும் க்ருஹத்தில் இல்லையென்றால் கொலு வைத்துவிட்டு வெற்றிலை பாக்கு கொடுப்பதற்கும் வாய்ப்பிருக்காது. சுமங்கலியோ கன்யா பெண்ணோ அகத்தில் இல்லையென்றால் அந்த அகத்து புருஷ குழந்தைகளை முதல் பொம்மை வைக்கச்சொல்லலாம் அப்படி இல்லையென்றால் பக்கத்தில் யாரேனும் கன்யா பெண்கள் இருந்தால் அவர்களைக் கொண்டும் பொம்மை வைக்கச் சொல்லலாம்.
அடியேன் கேட்ட கேள்விக்கு ஆடி மாத சுதர்சனத்தில் பதில் கிடைத்தது. மேலும் சில ரஜஸ்வலை கால சந்தேகங்கள் :
1. எம்பெருமான் நம் அகத்தில் இருப்பதால் தீட்டு காக்கவேண்டும் நம் அகத்தில் அசுத்தி ஏற்படாமல் இருத்தல் வேண்டும் என்ற காரணம் புரிகிறது அந்தர்யாமியாக நம் ஹ்ருதயத்தில் இருக்கும் எம்பெருமான் ரஜஸ்வலை காலத்தில் நம் ஹ்ருதயகுகையிலிருந்து வெளியேறிவிடுவானா? என்று என் மகள் கேட்கிறாள்.
2. அடியேனின் கேள்வியானது : எங்கள் அகத்தில் கடந்த 22 வருடங்களாக ரஜஸ்வலை காலத்தில் நானேதான் தளிகை பண்ணும்படியாக இருக்கிறது. என் அகத்துக்காரர் அலுவல்வேலைக்காகப் பயணம் செய்ய நேரிடும் . 3/4 நாட்களும் வெளியில் வாங்கிச் சாப்பிட முடியாது ஆகையால் நானேதான் தளிகை செய்யும்படி உள்ளது. 4ஆம்நாள் குளித்துவிட்டு அனைத்தையும் சுத்தம்செய்து மீண்டும் பெருமாளுக்குத் தளிகைச்செய்கிறேன்.இது தவறு என்றால் இதற்கு வேறு வழி இருக்கிறதா?
மேலும் என் அகத்துக்காரர் அத்தனை உறுதுணையாக இல்லாததாலும் நானே அவர்க்கும் சேர்த்து அந்த3/4 நாட்களிலும் தளிகைப்பண்ணுகிறபடி உள்ளது. தெரிந்தே பல வருடங்களாக வேறு வழியின்றி பாபம் செய்கிறேன். இதற்கு பலமுறை எனக்குள்ளே அழுதும்கொண்டிருக்கிறேன்.
3. எனக்கு ரஜஸ்வலை காலம் மட்டுமல்லாது இதர நாட்களும் எதிர்மறையான் எண்ணங்கள் இருக்கத்தான் செய்கிறது.அதையும் மீறி எப்படியோ பெருமாள் திருநாமங்களைச் சொல்கிறேன். இதற்கு என்னதான் வழி?
ஶரீரத்தில் இருக்கும் தோஷம் ஆத்மாவிற்கு கிடையாது. நம் ஶரீரத்தில் ஏதாவது அழுக்குபட்டால் உ.தா: கையில் பட்டால் கை அழுக்காயிற்று என்றுதான் சொல்லுவோமே தவிர நானே அழுக்காயிட்டேன் என்று சொல்லமாட்டோம். ஶரீரத்தில் இருக்கும் தோஷம் அலம்பிவிட்டால் சரியாகப் போய்விடும் அத்தோடு சரி. அதே மாதிரி நாம் அனைவரும் பகவானுக்கு ஶரீரமானபடியால் ஶரீரத்தில் தோஷமிருந்தாலும் அந்தத் தோஷம் பகவானுக்குயில்லை. ஶரீரத்தில் அவன் இருக்கிறதால் அவனுக்கு ஒரு குறைவும் கிடையாது அதனால் அப்போதும் அங்கேதான் இருப்பான்.
ரஜஸ்வலை காலத்தில் முடிந்தவரை நாம் தளிகைபண்ணாமல் இருப்பதுதான் நல்லது. வெளியில் வாங்கி சாப்பிடாமல் அக்கம்பக்கம் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அகத்திலாவது வாங்கிச் சாப்பிடலாம். இல்லாவிடில் முன்னமே ரொட்டி போன்றவை பண்ணிவைத்துக்கொண்டு அதை யாராவது இருந்தால் அவர்களைப் போடச்சொல்லி சாப்பிடலாம். தானே எடுத்துவைத்துக்கொண்டு சாப்பிடுவதென்பது சற்று கௌநம்தான் ஆனால் தளிகைபண்ணி சாப்பிடுவதைக்காட்டிலும் இது பரவாயில்லை.
வேறு வழியில்லாமல் தளிகைபண்ணுகிறேன் இது சரியா என்றால் சரி என்று சொல்லிவிட முடியாது ஏனென்றால் தளிகைபண்ணுவதே தவறு என்பதினால். வேறு வழியில்லை அதனால் பண்ணுகிறேன் எனலாம். ஆனால் முடிந்தவரை சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றை 3 நாட்களுக்கும் சேர்த்து பண்ணிவைத்துக்கொண்டு சாப்பிடுவதுதான் பரவாயில்லை என்று தோன்றுகிறது
தனக்குத்தானே தளிகைப்பண்ணி சாப்பிடுவதே தவறென்று இருக்கும்போது, வேறொருவருக்கு தளிகைப்பண்ணுவது என்பது நிஷித்தமான ஒன்றாகும். வேறுவழியில்லாமல் பண்ணுகிறோம் என்றாலும் அது சரியில்லை. இந்த நாட்களில் நான் பண்ணமாட்டேன் என்று உறுதியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. அவருக்கு ஈடுகொடுத்து அந்தத் தவறான கார்யத்தைப் பண்ணவேண்டிய அவசியமில்லை. பத்னீ என்பவள் சஹ தர்ம சார்ணீ. தர்மத்தில் கூட நடக்கவேண்டியவள். ஒருகால் பர்தா அதர்மம் செய்கிறார் என்றால் அது தவறு அப்படி நடக்கக்கூடாது என்று எடுத்துக்கூறி, அதர்மமான கார்யத்தில் துணைபோகாமல் அவரையும் நல்வழிப்படுத்தும் உபாயத்தை யோசித்து செய்யவேண்டும்.
எதிர்மறையான எண்ணங்கள் வரக்கூடாது என்ற எண்ணத்துடன் ஒரு ஈடுபாட்டுடன் பகவன் நாமங்களைச் சொல்லவேண்டும். எதிர்மறையான எண்ணங்கள் வரமால் இருப்பதற்கு மறுபடியும் மறுபடியும் அப்யாஸம் பண்ணவேண்டும். எம்பெருமான் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தால் எதிர்மறையான எண்ணங்கள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு
குறிப்புகள்:
சிறுபெண்களுக்கு ரஜஸ்வலை காலத்தில் தனியாக இருப்பது ஏன் முக்கியம் என்று உணர்த்தவேண்டும். எம்பெருமான் யாரிடமும் இருந்து எப்போதும் நீங்குவதில்லை “உள்ளுவார் உள்ளிற்றெல்லாம்” என்று அனைவரிடமும் ரஜஸ்வலை காலத்திலும் எம்பெருமான் கூடவேஇருந்து கொண்டுதான் இருக்கிறான் என்று சொல்லிப் புரியவைக்கலாம்.
அந்த எம்பெருமான் உள்ளேயிருப்பதனால்தான் அந்தச் சமயத்தில் ஶரீரத்தில் ஏற்படுக் கஷ்டங்கள், மானசீகமான கஷ்டங்கள் (mood swings) போன்றவற்றை எம்பெருமான் பார்த்துக்கொண்டிருப்பதினால்தான் நமக்கு ஓரளவு ஸௌக்கியம் இருக்கிறது என்றும், சிரமங்கள் தெரியாமல் இருக்கிறது என்றும், அவனின் ஏற்பாடுதான் இந்த மாதிரி தனியாக இருந்து ஓய்வு எடுப்பதெனும் என்று சொல்லி நம் பழக்கவழக்கங்களின் மேன்மையை (positivity)நேர்மறையாகச் சொல்லி புரியவைக்கலாம்.
ரஜஸ்வலை காலத்தில் ஏகாதசி வ்ரதம் கடைபிடிக்கலாமா? அக்காலத்தில் துவாதசி பாரணை எப்படிச் செய்வது?
ரஜஸ்வலை காலத்திலும் ஏகாதசி வ்ரதம் கடைபிடிக்கவேண்டும். அன்று சாதம் சாப்பிடாமல் ஏதாவது பலகாரம் சாப்பிடலாம். துவாதசி பாரணை என்பது காலையிலே சாப்பிடவேண்டும் என்பதில்லை. அவர்கள் அன்று புளியில்லாமல் சாப்பிடலாம். அது பாரணையில் சேராது என்றாலும் ஏகாதசி வ்ரதம் நித்யம் அதை விடுதல் கூடாது.
புது வஸ்திரம் மடி இல்லை என சுதர்சனத்தில் படித்து இருக்கிறேன்.எனக்கு இரண்டு சிறு வயது பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
ரஜஸ்வலை(மாதம் தீட்டு) காலத்தில் அடியேன் தனியாக ஓய்வு எடுக்கிறேன். என் குழந்தைகளை நான்தான் குளிக்க வைத்து சாதம் கொடுக்கிறேன்.
சிறு குழந்தைகள் என்பதால் அகத்தில் எல்லாம் இடத்திற்கும் செல்கிறார்கள்.அவர்களுக்குக்கு ஒவ்வொரு மாதமும் புது வஸ்திரம் தான் போடுகிறேன். இது சரியா.
ரஜஸ்வலை காலத்தில் மிகவும் சிறு குழந்தைகளாக இருந்தாலும் வஸ்திரத்தை மாற்றிக்கொள்வதுதான் சௌகர்யம். ஓரளவு பெரிய குழந்தைகளாக இருந்தால் அவர்களே மாற்றிக்கொள்ள முடியும். அம்மாவிடம் இருக்கும்போது ஒரு வாஸ்திரமும் தாத்தாபாட்டியிடம் போகும்போது ஒரு வஸ்திரம் என்று வைத்துக்கொள்ளமுடியும். மனம் இருந்தால் மார்கமுண்டு!
ஸ்த்ரீகள் கருட காயத்ரி மந்திரத்தைக் குழந்தைகளின் ஆரோக்யத்திற்காக சேவிக்கலாமா? சேவிக்கலாம் என்றால் எப்படிச் சேவிக்கணும்?
ஸ்த்ரீகள் எந்த காயத்ரி மந்திரத்தையும் உச்சாடனம் செய்யும் வழக்கமில்லை. அதற்குப் பதிலாக கருட தண்டகம் சொல்லலாம்.
பால்கொடுக்கும் தாய்மார்கள் எப்படி ஏகாதசி வ்ரதம் கடைபிடிக்கவேண்டும்?
பொதுவாக சுமங்கலிகள் ஏகாதசி அன்று முழுப் பட்னியிருக்கும் வழக்கம் கிடையாது. அன்று அவர்கள் அரிசி சாதம் சாப்பிடாமல் ஏதாவது சாப்பிடவேண்டும். மேலும் குழந்தைக்குப் பால்கொடுக்கும் தாய்மார்கள் குழ்ந்தைக்குப் பால் கொடுக்கவேண்டும் அதுதான் முக்கியம். ஆகையால் அவர்கள் அரிசி, சாதம் தவிர்த்து வேறு ஏதாவது சாப்பிடலாம்.
மாதவிடாய் காலத்தில் ஸ்த்ரீகள் விலகி இருப்பதின் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன? இன்று இருக்கும் வசதிகள் அன்று இல்லை. நாம் ஏன் தொடர வேண்டும். எனது அகத்தில் இருக்கும் ஸ்த்ரீகள் இதை விரிவாக அறிந்து கொண்டு தொடர விளக்குமாறு ப்ரார்த்திக்கின்றேன்.
மாதவிடாய் காலத்தில் ஶரீர ரீதியில் ஒரு நிம்மதியின்மை, கஷ்டங்கள், மனதளவிலும் துக்கங்கள், வேதனைகள் இருக்கின்றபடியினால் ஒரு ஓய்வு கொடுப்பதற்காக விலகி இருப்பதற்காகச் சொல்லி இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் முன்புபோல் அத்தகைய வேலைப்பளு கிடையாது என்பது வாஸ்தவம் தான். இப்பொழுது போல் முன்பு இத்தனை கருவிகள் கிடையாது. அதனால் வேலைப்பளு அதிகமாக இருந்ததனால் ஓய்வு தேவையாக இருந்தது. இப்பொழுதும் அலுவலகத்திற்கு வேலைக்கு, மற்றும் வெளியில் செல்வது போன்ற காரியங்களை எல்லோரும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை.
அகத்துக்குள் வரும்பொழுது அந்த ஓய்வை கடைபிடிப்பது மாத்திரம் அல்லாமல், மனதளவிலும், உடலளவிலும் ஒரு அசுத்தி இருக்கின்றது. சிலருக்கு மனதளவிலும் ஒரு பாதிப்பு அதாவது எதிர்மறையான எண்ணங்கள் இவை எல்லாம் இருக்கும். நம் அகம் என்பது பெருமாள் ஏளியிருக்கும் இடம், பெருமாள் திருவாராதனம் நடக்கும் இடம், எம்பெருமானுக்குத் தளிகை பண்ணும் இடம், சாப்பிடும் இடம் என்று எல்லாமே பெருமாளுடன் சம்பந்தப்பட்டதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தானே நித்யமும் வாசல்தெளித்து கோலம் போடுவது எல்லாம் செய்கின்றோம். அதனால் பெருமாளவில் சம்பந்தப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லி இருக்கிறார்கள்.பெருமாள் இருக்கும் இடம் சுத்தியாக இருக்க வேண்டும் என்று ஒரு சுத்திக்காகவும் மற்றும் ஓய்வுக்காகவும் இரண்டிற்காகவும் சொல்லி இருக்கிறார்கள்.
மாஸிகம், ஶ்ராத்தம், அமாவாஸை நாட்களில் சுமங்கலிப் பெண்கள் சாதாரமான நூல் புடவை 9 கஜம் தான் உடுத்திக் கொள்ள வேண்டுமா? அல்லது பட்டு ஜரி வைத்த புடவை அல்லது கல்யாணி காட்டன் புடவைகள் உடுத்தலாமா? 6 கஜ புடவையை 9 கஜமாக உடுத்திக் கொள்ளலாமா?
மாஸிகம், ஶ்ராத்தம், அமாவாஸை நாட்களில் கர்தாவினுடைய பாரியாள் முதல்நாள் சூர்யாஸ்தமனத்திற்குப் பிறகு உலர்த்திய சுத்தமான வஸ்திரத்தைதான் கட்டாயம் தரித்துக்கொள்ளவேண்டும். மேலும் 6 கஜத்தை 9 ஆக உடுத்திக்கொள்ளும் வழக்கமில்லை. 9 கஜத்தைத்தான் உடுத்திக்கொள்ளவேண்டும்.
குறிப்புகள்:
மாஸிகம், ஶ்ராத்தம், அமாவாஸை நாட்களில் பொதுவாகப் பட்டு உடுத்திக்கொள்ளும் வழக்கம் கிடையாது. ஏனென்றால் சில பட்டுப்புடவைகளில் ஜரிகையெல்லாம் இருக்கும் அது நல்ல ஜரியாக இருக்காது. சாதாரண ஜரிகையாக இருந்தால் அவை உள்பாத்திரங்கள் மேல் படக்கூடாது. நூல் புடவைக்கு இந்தத் தோஷம் கிடையாது. ஆகையால் பொதுவாக நூல் புடவையையே உடுத்திக்கொள்கிறார்கள்.
சில க்ருஹங்களில் மாஸிகம், ஶ்ராத்தம், அமாவாஸை நாட்களில் பட்டுப்புடவை உடுத்திக்கொள்ளும் வழக்கமுண்டு. அந்தப் புடவையையும் முதல் நாள் சூர்யாஸ்தமனத்திற்குப் பிறகு நனைத்து உலர்த்தி உடுத்திக்கொள்வார்கள்.
ஆகையால் அவரவர் அகத்து வழக்கத்தைப் பின்பற்றவும்.
ஸ்த்ரீகள் லக்ஷ்மீ காயத்ரி மந்திரம் சேவிக்கலாமா?
ஸ்த்ரீகள் லக்ஷ்மீ காயத்ரி மந்திரம் சேவிக்கும் வழக்கமில்லை.
நாவல்பாக்கம் ஶ்ரீ உ வே வாஸுதேவாசார்யார் ஸ்வாமி ஸ்ரீ சுதர்ஶனாஷ்டக உபந்யாஸத் தொடரில் குறிப்பிட சுதர்ஶன ஷட்கோண கோலம் எப்படி போடுவது?
சுதர்ஶன ஷடரசக்ர கோலமானது கீழே இருக்கும்படி போடுகிறார்கள்.
அடியேன் நமஸ்காரம். நான் கணவரை இழந்தவள். நெற்றியில் ஸ்ரீ சூர்ணம் சிறியதாக இட்டுக்கொண்டு கீழே திருமண் v போல இட்டுக்கொள்கிறேன். இது சரியா? எப்படி இட்டுக்கொள்ள வேண்டும் என்பதை தெளிவு படுத்தவும். என் போன்ற பர்த்தா இல்லாதவர்கள் (கைம்பெண்கள்) நெற்றியில் குங்குமமோ, மஞ்சள் காப்போ இட்டுக்கொள்ள கூடாதா?
இக்கேள்வியில் குறிப்பிட்டிருப்பது போல் ஸ்ரீசூர்ணம் தரித்துக்கொள்ளவது சரியே. கைம்பெண்கள் மஞ்சள், குங்குமம் நெற்றியில் தரிக்கும் வழக்கமில்லை.
கல்யாணமான ஸ்த்ரீ தனது தாயாரின் ஆப்தீகத்திற்கு கலந்துகொள்ளலாமா? அதன் ப்ரசாதம் ஸ்வீகரிக்கலாமா?
கல்யாணமான ஸ்த்ரீ தனது தாயாரின் ஆப்தீகத்தில் கலந்து கொள்ளலாம். பித்ருசேஷமும் ஸ்வீகரிக்கலாம்
நம் ஸம்ப்ரதாயத்தில் ஜபம் செய்யும்போது துளசி, வேப்ப அல்லது தாமரை மாலைகளை ஸ்த்ரீகள் மற்றும் புருஷர்கள் ஏன் உபயோகிப்பதில்லை? ஸ்த்ரீகள் ஜபம் செய்ய என்ன மாலையைப் பயன்படுத்தவேண்டும்?
இக்கேள்விக்கு ஸ்த்ரீ தர்ம ரீதியாக மட்டும் இங்கே பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்த்ரீகள் ஜபம் செய்ய மாலை தேவையில்லை. கை விரலின் எண்ணிக்கை வைத்துக்கொண்டே சுலபமாக ஜபம் செய்யலாம்.
ஜபம் செய்யும் முறையை பொதுவாக மந்திரோபதேசம் ஆகும் போதே ஆசார்யன் சொல்லிக்கொடுத்திருப்பார். கட்டைவிரலை விட்டு மீதி நான்கு விரல்களைக்கொண்டு ப்ரதக்ஷிணமாக எண்ணிக்கை செய்தால் 10 வரை எண்ணிக்கைகள் வரும். அதாவது ஆள்காட்டி விரலுடைய கீழ்ப்பகுதியில் ஆரம்பித்து வரிசையாக ப்ரதக்ஷிணமாக எண்ணிக்கொண்டுப்போனால் நடுவிரலின் கடைசிபாகத்தில் (கீழே) 10 என்ற எண்ணிக்கையில் முடியும். இப்படியாக 10 என்ற கணக்கில் பண்ணலாம். மானசீகமாக எத்தனைப் பத்து என்பதை நினைவில் வைத்துக்கொண்டு ஜபிக்கலாம். ஸ்த்ரீகள் பொதுவாக 108க்கு மேல் ஜபிப்பது என்பது ஏற்பட்டதில்லை. ஆகையால் கையாலே சுலபமாக எண்ணிக்கொண்டு பண்ணிவிடலாம். நம் பெரியவர்களும் அப்படியே பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஸ்த்ரீகள் ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் வரும் அபாமார்ஜந ஸ்தோத்ரம் சேவிக்கலாமா?
ஸ்த்ரீகள் ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் வரும் அபாமார்ஜந ஸ்தோத்ரம் சேவிப்பது பொதுவாக வழக்கத்தில் இல்லை. ஆனால் சில க்ருஹங்களில் பெரியோர்கள் சொல்லி அந்த வழக்கம் இருந்தால் அதைக் கடைபிடிக்கலாம்.
ரஜஸ்வலை காலம் முடிந்த நான்காம் நாள் சில க்ருஹங்களில் அரிசி மற்றும் உப்பு / புளி மற்றும் உப்பு எடுத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது. இதற்குப் பின்னால் ஏதேனும் விஞ்ஞான ரிதீயாக காரணம் இருக்கிறதா என்று விளக்கவேண்டுகிறேன்.
ரஜஸ்வலை காலம் முடிந்த நான்காம் நாள் ஏதாவது ஒன்றை சாப்பிட்டுவிட்டுதான் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்ற வழக்கம் உலகத்தில் இருக்கிறது. இதற்கு விஞ்ஞான ரீதியாகவும் காரணம் இருக்கின்றது. பொதுவாக நான்காவது நாள் ஸ்நானம் செய்த அன்று ஸ்த்ரீகளுக்கு துணியை எல்லாம் நனைத்து உலர்த்தி என்று நிறைய காரியங்கள் இருக்கும். அந்தக் காரியங்களில் ஈடுபட்டு வயிற்றைப் பட்டினிபோட்டு விடக்கூடாது. ஏனென்றால் அந்தச் சமயத்தில் acidity நிறைய இருக்கும். அதனால் அது பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒரு ஸம்ப்ரதாயமாக ஏதாவது ஒன்றை சாப்பிட்டுவிட்டு, அதன் பின்னே உள்ளே செல்லவேண்டும் என்ற வழக்கம் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்றுதான் கருத்து.
ஆனால் ஒரு வசதிக்காக உப்பு மற்றும் அரிசி சாப்பிடுவது என்ற ஒரு வழக்கம் ஏற்பட்டு விட்டது. அதாவது உப்பான ஏதாவது ஒரு பதார்த்தம் சாப்பிட்டுவிட்டு மேலே வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் கருத்து. உப்பான பதார்த்தத்தைத் தளிகை பண்ணிச் சாப்பிடுவது என்பது காலை வேளையில் சிரமமாக இருக்கலாம். வேறு ஒருவர் பண்ணிக்கொடுத்து சாப்பிடும் படியாக இருந்திருக்கும். ஆனால் நடைமுறை வழக்கத்தில் கஷ்டமாக இருந்திருக்கலாம். அதனால் பச்சைப் பதார்த்தங்களான உப்பு மற்றும் அரிசியை சாப்பிடுவது என்று வழக்கம் ஏற்பட்டு இருக்கலாம். உப்பு மற்றும் அரிசிதான் சாப்பிட வேண்டும், அல்லது அரிசி மற்றும் புளிதான் சாப்பிட வேண்டும் என்கின்றதில்லை. அதனால் எந்தப் பச்சை ஆஹாரமாக இருந்தாலும் அதைச் சாப்பிட்டுவிட்டு காரியங்களைப் பார்க்கலாம். இன்று விஞ்ஞான ரீதியாக நாம் புரிந்து கொள்ளலாம். ஸம்ப்ரதாய ரீதியாக உப்பு மற்றும் அரிசியை சௌக்கியமாக வாயில் போட்டுக் கொண்டு வேலைகளை ஆரம்பிக்கலாம் என்பதனால் ஒரு வழக்கம் ஏற்பட்டுள்ளது.
புருஷர்கள் இல்லாதபோது ஆத்துப் பெருமாளுக்குத் தளிகை கண்டருளப் பண்ணும்போது ஸ்தீர்கள் திருமணி சேவிக்கலாமா?
புருக்ஷர்கள் இல்லாதபோது அகத்துப் பெருமாளுக்குத் தளிகை கண்டருளப் பண்ணும்போது ஸ்தீர்கள் திருமணி சேவிப்பது வழக்கமில்லை.
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயப்படி ஸ்த்ரீகள் நாராயணீயம் மற்றும் சங்க்ஷேப இராமாயணம் சேவிக்கலாமா?
நாராயணபட்டத்திரி பண்ண நாராயணீயம் என்று ஒரு ஸ்தோத்ரம் இருக்கின்றது. அந்த ஸ்தோத்ரத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அது ஸ்தோத்ர பாடம் என்கின்ற ரீதியில் வரும்.
மஹாபாரதத்தில் நாராயணீயம் என்று ஒன்று இருக்கிறது அதுவும் மேலும் சங்க்ஷேப இராமாயணம் இவையெல்லாம் இதிஹாசங்களில் இருக்கின்றபடியினால், இதை ஸ்த்ரீகள் சேவிப்பது ப்ராசீனத்தில் வழக்கமில்லை. ஆனால் நவீனத்தில் இந்த வழக்கம் வந்து கொண்டிருக்கின்றது.
ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம்,ஸ்ரீமத் பகவத்கீதை மூலம் கற்றுக்கொள்ளலாமா? பாராயணம் செய்யலாமா? ஏதேனும் விதிமுறை உள்ளதா?
ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம்,ஸ்ரீமத் பகவத்கீதை மூலம் கற்றுக்கொள்ளவதென்பது ப்ராசீனமான ஸம்ப்ரதாய வழக்கத்தில் இல்லை. நம் பெரியவர்களின் வழக்கத்திலும் இல்லை. அதாவது ஸம்ப்ரதாயத்தில் என்ன வந்திருக்கிறதோ அதை நாம் செய்துகொண்டிருக்கிறோம்.அந்த ரீதியில் பாராயணம் செய்யும் வழக்கமில்லை. ஆனால் நவீன ரீதியில் சில இடங்களில் செய்கிறார்கள். அதை அவரவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டியது.
ஒரு ஸ்த்ரீ கர்பமாக இருக்கும்போது ஏன் வீடு மாற்றிப்போகக்கூடாது?
க்ருஹப்ரவேசம் பண்ணுவதில் ப்ரதானமே ஸ்த்ரீகளுக்குதான், அவர்களுக்கு அனுகூலமாகத்தான் நாள் பார்க்கனும். ஒரு க்ருஹத்தினுடைய முக்கியமான அதிபத்னி(தி) என்ற நிலையில் இருப்பவள் ஸ்த்ரீதான். அவள் கர்பகாலத்தில் இருக்கிறப்படியால் பெரியளவில் அலைச்சல் வேண்டாம் என்ற ரீதியிலும், மேலும் அவளும் வ்ரதகாலத்தில் இருக்கின்றபடியாலும் அந்தச் சமயத்தில் வீடுமாறக்கூடாது என்று வைத்திருக்கிறார்கள்.
பதியை இழந்த பத்னி ஒரு வருஷ காலத்தில் தீர்த்த யாத்திரை போவது கிடையாது என்று சொல்லியிருந்தீர்கள்.திவ்ய க்ஷேத்ரம் இல்லாத மற்ற கோயில்களுக்கு ஆத்துக்குப் பக்கத்தில் இருக்கிற கோவில்களுக்குப் போகலாமா?செய்யத் தகுந்தது செய்யத் தகாதது சொல்ல வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன்.
பதியை இழந்த பத்னி ஒரு வருட காலத்திற்குள் திவ்யக்ஷேத்ரமல்லாத இதர கோவில்களுக்கு, அவர்கள் மனதிற்குப் போகலாம் என்று தோன்றினால் போலாம் அதனால் தவறு கிடையாது, போகவேண்டாம் என்று தோன்றினால் போகவேண்டாம்.
ஸ்த்ரீகள் ஸ்ரீ ஸூக்தம் சேவிக்கலாமா?
ஸ்த்ரீகள் ஸ்ரீ ஸூக்தம் சேவிக்கும் வழக்கமில்லை.
“தீர்தாமாடியபின் வஸ்த்ரம் உடுத்தி நெற்றியிட்டுண்டு ஆசமனம் பண்ணனுமா அல்லது வஸ்த்ரம் உடுத்தியதும் ஆசமனம் பண்ணிவிட்டு நெற்றிக்கு இட்டுக்கொள்ள வேண்டுமா? (For Sthree)
ஸ்த்ரீகள்: தீர்தாமாடியபின் வஸ்த்ரம் உடுத்தி நெற்றியிட்டு கொண்டு தான் ஆசமனம் பண்ண வேண்டும்.
அஷ்டாக்ஷர ஜபம் செய்ய ஆசமனம், சங்கல்பம், பின் ஜபம் இந்த க்ரமம் சரியா? ஸ்திரீகள் ஜபம் செய்ய சங்கல்பம் பண்ண வேண்டுமா? த்வயம் மற்றும் ஶரம ஸ்லோகம் ஜபிக்க ஸ்திரீகள் பின்பற்ற வேண்டிய க்ரமத்தை தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
அஷ்டாக்ஷர ஜபம் செய்வதற்கு முன் கட்டாயம் ஆசமனம் பண்ண வேண்டும். அஷ்டாக்ஷரம் த்வயம் ஶரம ஶ்லோகம் இவையெல்லாம் ஜபம் செய்வதற்கு முன் அதற்கென்று ஒரு த்யான ஶ்லோகம் இருக்கின்றது. அதை ஆசாரியன் உபதேசித்திருப்பார். அந்தந்த த்யான ஶ்லோகங்கள் சொல்லிவிட்டு ஜபம் பண்ணவது ஸ்த்ரீகளுக்கு வழக்கம். அதைத் தவிர சங்கல்பம் எதுவும் தனியாக பண்ணுவது வழக்கம் இல்லை.
ஸ்ரீவைஷ்ணவ வடகலை ஸம்ப்ரதாயத்தின் படி ஒரு ஸ்திரீ எப்படி நெற்றியிட்டுக்கொள்ள வேண்டும். சிலர் ஸ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்கொள்கிறார்கள், சிலர் சிறிய திருமணுடன் (ஆசார்யன் ஸம்பந்தம் கிடைக்கப்பெற்ற பின்) ஆசார்யன் காட்டிய படி இட்டுக்கொள்கிறார்கள், வேறு சிலர் வட்டமாக குங்குமம் இட்டுக்கொள்கிறார்கள் எது சரியான ஸ்வரூபம்.
ஸ்ரீவைஷ்ணவ வடகலை ஸம்ப்ரதாயத்தின் படி ஒரு ஸ்திரீ புருவத்திற்கு கொஞ்சம் கீழே திருமண்காப்பை சிறியதாக வலைந்த v இச்சின்னம் போல் இட்டுக்கொள்ள வேண்டும். அதன் பின் சிகப்புஸ்ரீசூர்ணத்தை நெற்றி முழுவது வகுடு வரை நேர் கோடுபோல் இட்டுக்கொள்ள வேண்டும்
அமாவாஸை அன்று தளிகைக்கு மஞ்சள் சேர்க்கக்கூடாது என்கிறார்கள். அப்படியானால், நாம் ஸ்நானம் செய்யும்போது முகத்திற்கோ , சரடிற்கோ மஞ்சள் சேர்க்கக்கூடாதா? மேலும் அன்று எண்ணெய் குளியல் பண்ண வேண்டுமா?
அமாவாஸை அன்று தளிகைக்கு மட்டும் தான் மஞ்சள் சேர்க்கக்கூடாது. எப்போதும் சுமங்கலிகள் ஸ்நானம் செய்யும்போது மஞ்சள் சேர்ந்துக்கொண்டு தான் ஸ்நானம் செய்ய வேண்டும்.. அது எந்தநாளாக இருந்தாலும் சரி மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சுமங்கலி ப்ரார்த்தனைக்குத் தவிர்க்க வேண்டிய நாட்கள் எவை?”
சுமங்கலி ப்ரார்த்தனை என்பது நிறைய பரமைகாந்திகள் க்ருஹங்களில் பண்ணுவதில்லை. இருந்தாலும் பெரியவர்கள் வழக்கமென்று சில க்ருஹங்களில் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு சுபகார்யத்திற்கு எப்படி நாள் பார்ப்போமோ அது போல் தான் நாள் பார்ப்பா, அஷ்டமி, நவமி , பரணி, க்ருத்திகை இல்லாமல் என்று திதி நக்ஷத்ர யோகம் நன்றாக இருக்கின்றதோ அன்று பண்ணலாம்.
நம் ஸம்ப்ரதாயத்தின் படி ஸ்திரீகள் கண்ணாடி வளையல் அணியலாமா?
நம் ஸம்ப்ரதாயத்தின் படி ஸ்திரீகள் கண்ணாடி வளையல் அணியும் வழக்கமில்லை அது ஆசாரம் கிடையாது.
பூச்சூட்டல், ஸீமந்தம் பண்ணும் சமயம் ஆசைக்காக போட்டுவிடறார்கள். ஆசார க்ருஹங்களில் கண்ணாடி வளையல் அணிந்து உள்தொட்டு கார்யங்கள் பண்ணமாட்டார்கள்.
ரஜஸ்வலையின் 4வது நாளில் பண்டிகைகள் வந்தால் எப்படிக் கொண்டாடுவது?
ரஜஸ்வலையின் 4வது நாளில் பண்டிகைகள் வந்தால் பெருமாளுக்கு தளிகைசெய்து அம்சை பாண்ணக்கூடாது. பண்டிகைக்கான புத்தாடை உடுத்துதல் தீபாவளியாக இருந்தால் எல்லோருடன் கூடி பட்டாசு வெடித்தல் இனிப்புகள் உண்ணுதல் என அனைத்தும் பண்ணலாம், ஆனால் அன்று தளிகைசெய்து பெருமாளுக்கு அதை அம்சை பண்ணக்கூடாது.
அந்யா தீட்டு ஏகாதசி, துவாதசி, அமாவாசை போன்ற நாட்களில் வந்தால் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா?
பொதுவாக அந்யாதீட்டு குளிக்குமன்று எந்நாளாக இருந்தாலும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது.
சில க்ருஹங்களில் அந்யாதீட்டு குளிக்குமன்று எண்ணெய் குளியல் என்று வைத்துக்கொண்டிருக்கிறார்கள், அவரவர் ஆத்து வழக்கத்தை கேட்டு பின்பற்றவும்.
பாஞ்சாராத்ர க்ரந்தங்களை ஸ்த்ரீகள் சேவிக்கலாமா?
பாஞ்சாராத்ர க்ரந்தங்களை ஸ்த்ரீகள் சேவிக்கும் வழக்கமில்லை.
க்ருஹங்களில் பெருமாளுக்கு ஸ்த்ரீகள் கற்பூரஆரத்தி காண்பிக்கலாமா? பெருமாளுக்கு செய்யும் கற்பூர ஆரத்தியை நாம் கண்களில் ஒற்றிக்கொள்ளலாமா?
ஸ்த்ரீகள் பெருமாளுக்கு கற்பூரஆரத்தி காண்பிப்பதோ, கற்பூரஆரத்தியைக் கண்களில் ஒற்றிக்கொள்வதோ ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் வழக்கமில்லை.
நமஸ்காரம். திருமணமான ஸ்த்ரீகள் தினமும் துளசி மாடத்தை எப்படி அலங்கரித்து வழிபட வேண்டும்? பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் அதற்கான குறிப்பிட்ட ஏதேனும் ஸ்லோகங்கள் இருக்கின்றதா என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
திருமணமான ஸ்த்ரீகள் தினமும் துளசி மாடத்தை அலங்கரித்து வழிபட வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் இல்லை. துளசி மாடம் இருக்கின்றது என்றால் அதில் சாதாரணமாக ஒரு பொந்துப்போலே மாடம் இருக்கும். அதில் ஒரு மரியாதைக்காக விளக்கேற்றி வைக்கலாம். ஆனால் விதிமுறை என்று ஒன்றும் கிடையாது. மனதிற்குள் மஹாலக்ஷ்மியை த்யானித்துக்கொண்டு லக்ஷ்மி ஸ்லோகங்களைச் சொல்லலாம்.
ஒரு பெண் முதன் முதலில் ருது பருவம் அடையும் போதுச் செய்ய வேண்டிய சம்ஸ்காரங்கள் என்ன?
முதன் முதலில் ருது பருவம் ஒரு பெண் அடைந்தவுடன், அந்த பெண்ணை உட்கார வைத்து அவளுக்கு பாலும் பழமும் தரவேண்டும்.
எப்படித் தர வேண்டும் என்றால் , வாழைப்பழத்தை சிறு சிறு துண்டங்களாக நறுக்கி வைத்துக்கொண்டு அந்தத் துண்டங்களை முதலில் வாயில் போட்டு பின்பு பாலை வாயில் விட வேண்டும். இதை க்ருஹத்தில் இருக்கும் சிறுவர்களை விட்டு அவளக்குப் பக்கத்தில் போய் கொடுக்கச் சொல்லலாம். பெரியவர்கள் அவளிடம் போய்க் கொடுத்து விட்டு வந்தால் தீர்த்தாமாடவேண்டும். ஏனென்றால் அந்தப் பெண் மூன்று நாட்கள் தனியாக உட்கார வேண்டும். வேறு யாரும் க்ருஹத்தில் இல்லை அம்மாவும் பெண்ணும் மட்டுமே இருந்தால், அவளுக்குப் பக்கத்தில் அந்த பால் பழத்தை வைத்து விட்டு அவளையே எடுத்துச் சாப்பிட சொல்லலாம்.
அன்று மஞ்சள்பொங்கல் செய்து தருவது வழக்கம். மஞ்சள் பொங்கல் என்பது அரிசியையும் துவரம் பருப்பையும் சேர்த்துப் பண்ணக்கூடிய பொங்கல். அரிசியுடன் பயத்தம்பருப்புக்கு பதிலாக துவரம்பருப்பைச் சேர்த்து மஞ்சள்பொடி சேர்த்து பொங்கல் மாதிரி அதை குழைத்து இஞ்சி, மிளகு சீரகம் கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து செய்து அந்த பெண்ணிற்கு கொடுக்க வேண்டும்.
அடுத்தநாள் உளுந்து வடையோ, உளுந்து சாதமோ அல்லது உளுந்தை வைத்து ஏதாவது ஒரு பதார்த்தமோ பண்ணி கொடுக்கலாம்.
மூன்றாவது நாள் குணுக்கு, மற்றும் அப்பம் குத்தி தருவது வழக்கம். குணுக்கு என்பது அரிசியை ஊறவைத்து அதை அரைத்து அதை எண்ணெயில் போட்டு செய்வது. அப்பம் என்பது சாதாரணமாக ஸ்ரீ ஜெயந்திக்கு செய்வது போல் செய்து கொடுக்கலாம்.
இவையெல்லாம் மூன்று நாட்கள் அந்த பெண்ணிற்கு கொடுக்க வேண்டிய ஆகாரங்கள்.
நான்காவது நாள் அவளே தலையில் எண்ணை வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்து விட்டு வர வேண்டும். அவளுக்கு தானே தீர்த்தமாட தெரியவில்லை என்றால் யார் தீர்த்தாமாடி விடுகிறார்களோ(திருமணமான ஸ்த்ரீகளாக இருந்தால்) அவர்களும் ஸ்நானம் செய்து விட்டு வர வேண்டும். அதன்பிறகு அவளை மணையில் உட்காரவைத்து நலங்கிட்டு, நெற்றியில் பொட்டு வைத்து, தலையில் பூ வைத்து, புதிதாக வாங்கி வைத்திருக்கும் வஸ்திரம் (பாவாடை- தாவணி) நகைகளை கொடுக்கலாம். . பின் அந்த புது வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு வரச்சொல்லி திரும்பவும் மணையில் உட்கார வைக்க வேண்டும். சில க்ருஹங்களில் த்ருஷ்ட்டி கழிப்பதற்காக எத்தி இறக்குவது என்று ஒரு ஸம்ஸ்காரம் உண்டு. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் ஒரு விளக்கை வைத்து அந்த குழந்தையின் தலையிலிருந்து கால் வரை ஏத்தி இறக்க வேண்டும். எல்லா க்ருஹங்களிலும் அது வழக்கமாக இருக்காது. அவரவர் ஆத்து வழக்கப்படி செய்து கொள்ளலாம்.
அதன் பிறகு அம்மான் சீர் கொடுப்பது வழக்கம். அதாவது அந்தக் குழந்தையுடைய அம்மாவினுடைய பிறந்தகத்திலிருந்து என்ன சீர் கொடுக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்களோ அதை முதலில் கொடுத்திவிட்டு பின் வந்திருக்கும் மற்ற உறவினர்கள் ஏதாவது கொடுக்க ஆசைப்பட்டால் அவர்கள் ஓதியிடலாம்.
முக்கியமாக அந்தக் குழந்தைக்குப் புட்டு செய்து சாப்பிட கொடுப்பது வழக்கம். இதிலும் சில வேறுபாடுகள் உண்டு, சில க்ருஹங்களில் ஸ்நானம் செய்வதற்கு முன் அதாவது மூன்றாம் நாளே புட்டு செய்து கொடுத்து விடுவார்கள். சிலர் நான்காம் நாள் ஸ்நானம் செய்த பின் மணையில் உட்கார்த்தி வைத்து புட்டு கொடுப்பது வழக்கம்.
இவை எல்லாம் முடிந்த பின் மஞ்சநீர் சேர்த்து மங்களம் பாடி பூர்த்தி செய்து கொள்ளலாம்.
ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம் சந்தை சேவிக்கலாமா? க்ருஹத்தில் பாராயணம் பண்ணலாமா? தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம் சந்தையாக சொல்வதோ பாராயணம் செய்வதோ ப்ராசீன வழக்கத்தில் இல்லை. சுந்தரகாண்டம் கதைகளைச் சேவிக்கவோ, அர்த்தங்களை நன்கு அறியவோ எந்தவித பாதகமும் இல்லை.
ஆனா ஸ்ரீமத் இராமாயணத்தை பாராயணம் பண்ண ஒரு விதிமுறை இருக்கிறது, அதாவது அந்த ஸ்ரீ கோசத்தில் எம்பெருமானை ஏளப்பண்ணி, ஆவாஹநம் பண்ணி, அம்சை பண்ணி, சிக்கு பலகையில் வைத்து மரியாதையாக சேவிப்பது எனும் வழக்கம் உண்டு. இப்படிப்பட்ட பாராயணம் ப்ராசீன காலத்தில் ஸ்த்ரீகளுக்காக ஏற்பட்ட வழியல்ல. இக்காலத்தில் மாற்றம் இருக்கிறது ஆனால் வழிவழியாக வந்த நடைமுறையில்லை.
ரஜஸ்வலை காலத்தின் ஐந்தாவது நாள் ஸ்த்ரீகள் ஶ்ராத்த காரியங்களில் அந்நியா தீட்டு ஸ்நானம் செய்தபிறகு பங்கு எடுத்துக்கொள்ளலாமா?
ரஜஸ்வலை காலத்தின் ஐந்தாவது நாள் ஸ்த்ரீகள் ஶ்ராத்த காரியங்களில் அந்நியா தீட்டு ஸ்நானம் செய்தபிறகு பங்கு எடுத்துக்கொள்ளலாம்.
க்ருஹத்தில் புருஷர்கள் இல்லாத நாட்களில், ஸ்த்ரீகள் பெருமாள் பெட்டியை திறந்து (பெருமாளைத் தொடாமல்) தளிகை அம்சை பண்ணலாமா அல்லது பெருமாள் பெட்டியைத் தொடாமல் தளிகை அம்சை பண்ண வேண்டுமா?
ஸ்த்ரீகள் பெருமாள் பெட்டியைத் திறந்து தளிகை ஸமர்பிப்பது என்பது வழக்கத்திலில்லை.
பெருமாள் பெட்டி மரத்தில் இருக்கும், பெருமாள் தான் உள்ளே ஏளியிருக்கிறார், பெருமாளைத் தொடவில்லை என்று இருக்கு அதனால் என்ன தோஷம் வரும் என்று தெரியவில்லை. பெருமாள் ஏளியிருக்கும் பெட்டிக்கு கோவிலாழ்வார் எனும்படியால், அவருக்கே விசேஷமாக ஸந்நிதி முதலானவை இருக்கின்றபடியால் திறந்து ஸமர்பிப்பதை வழக்கத்தில் வைத்துக்கொள்ளவில்லை.
உடல் நிலை காரணமாக ரஜஸ்வலை காலம் நீடித்தால் என்னென்ன ஆசாரத்தை பின்பற்ற வேண்டும்.
சாஸ்த்ரப்படி ஐந்தாம் நாள் அந்யா தீட்டு ஸ்நானம் செய்துவிட்டு உள்ளே வந்து காரியங்கள் எல்லாம் பார்க்கலாம். ஆனால் மனசு ஆப்யாயத்திற்கு எது உசிதமோ அப்படிச் செய்வதில் ஒன்றும் தவறு இல்லை.
உதாஹரணத்திற்கு பெருமாள் சன்னதியை சுத்தி செய்வது, கோலம் போடுவது, விளக்கேற்றி வைப்பது இதையெல்லாம் செய்வதற்கு மனது ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அந்த காரியங்களைச் செய்வதற்கு வேறு யாராவது இருந்தால் அவர்களிடம் விண்ணப்பித்துக்கொண்டு செய்யச் சொல்லலாம். அதில் ஒன்றும் பாதகமில்லை.
15 நாள் வரை சாஸ்த்ரப்படி அவர்கள் விலகி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் 15 நாட்களுக்கு மேல் இருக்கிறது என்றால் 18 நாட்கள் வரை விழுப்பு போன்று கணக்கு. 18 நாட்களுக்கு மேல் மூன்று நாட்கள் மறுபடியும் விலகி இருக்க வேண்டும். சாஸ்த்ரப்படி இதுதான் வழக்கம்.
அதற்கு மேல் அவரவர்களுடைய குடும்ப சூழ்நிலை, ஒத்தாசைக்கு யாரேனும் இருக்கிறார்களா, இவற்றை எல்லாம் பொருத்து அவரவர்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம்.
மஞ்சள் சரடிற்கு பதிலாக தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிவது பரிந்துரைக்கப்படுகிறதா? இப்போது சமீபத்தில் திருமணமான பெண்கள் அப்படி அணிவதையே விரும்புகின்றனர். இதை தயவு செய்து விளக்க ப்ரார்த்திக்கிறேன். இளம் பெண்களுக்கு மட்டுமல்ல அவர்களின் தாய்மார்களுக்கும் கூட அவ்வாறே அணிவதை காணமுடிகிறது.
மஞ்சள் சரடு மிகவும் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது. மாங்கல்ய சூத்திரம் என்று பெயர். “மாங்கல்ய தந்து” என்று கல்யாணங்களில் சொல்லும் ஸ்லோகங்களில் வரும். ஸ்வாமி தேஶிகனும் “மாங்கல்ய சூத்திரம் இவ” என்று சொல்லியிருக்கிறார்.
எப்படி மஞ்சள் சரடு மங்களகரமானது அதேபோல் ஸ்வர்ணமும் மிகவும் மங்களகரமானது தான். அதனால் சரடிற்கு பதிலாக ஸ்வர்ணம் ஏன் கூடாது என்று சமீப காலமாக கேள்வி எழுந்துள்ளது.
இது சாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கும் ஒரு ப்ராசீனமான பழக்கம். அதனால் அதை நம் இஷ்டத்திற்கு மாற்ற முடியாது. எப்படி புருஷர்களுக்கு யக்ஞோபவீதமோ கிட்ட தட்ட அதே போல் ஸ்த்ரீகளுக்கு மாங்கல்ய சூத்திரம், பிப்ரதி என்று ஸ்வாமி தேஶிகனும் கூறியுள்ளார். இதை எப்போதுமே தரித்திருக்க வேண்டும். அதனால் அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனத் தோன்றுகிறது.
அடியேன், ஸ்த்ரீகள் ஆளவந்தாருடைய ஜிதந்தே ஸ்தோத்ரம் சேவிக்கலாமா?
ஆளவந்தார் பண்ண ஸ்தோத்ரத்திற்கு “ஸ்தோத்ர ரத்னம்” என்று பெயர். ஜிதந்தே ஸ்தோத்ரம் அவர் பண்ணியது இல்லை. ஆளவந்தாருடைய ஸ்தோத்ரங்களை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஜிதந்தே ஸ்தோத்ரம் வேத புராணங்களுக்குச் சமம் என்று சொல்வார்கள். அதனால் அதில் சில நியமனங்கள் இருக்கலாம். ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் போல் அதுவும் ஸ்தோத்ரம் தானே என்று சிலர் சொல்வதுண்டு. சாஸ்த்ரங்களின் படி நியமமாக கடைபிடிக்கும் போது ஸ்த்ரீகள் இதைச் சொல்லக்கூடாது.
அடியேன் ஆத்து விக்ரஹங்களை ஸ்த்ரீகள் தொட்டு சுத்தி செய்யலாமா? புது வஸ்த்ரங்கள் அணிவிக்கலாமா?
ஆத்து விக்ரஹங்களில் இரண்டு விதம் உண்டு. ப்ரதிஷ்டை ஆன விக்ரஹம். ப்ரதிஷ்டை ஆகாத விக்ரஹம்.
ப்ரதிஷ்டை ஆன விக்ரஹத்தை ஸ்த்ரீகள் தொடக்கூடாது. புருஷர்களும் ரொம்ப நியமத்துடன் தொட வேண்டும்.
வெளியில் போய் விட்டு வந்த தீட்டுடன் தொடக்கூடாது. சாப்பிடாமல் தொடவேண்டும். காலையில் சுத்தமாக ஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் பண்ணி சாப்பிடாமல் தொடவேண்டும் என்று நியமனங்கள் உண்டு.
ப்ரதிஷ்டை ஆகாத விக்ரஹங்களாக இருந்தால் அவற்றை யார் வேண்டுமானாலும் திருமஞ்சனமோ, புது வஸ்த்ரங்கள் அணிவித்து அலங்காரமோ பண்ணலாம்.
மஹாளய பக்ஷத்தில் சுமங்கலிப் பெண்கள் வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டுமா?
மஹாளய பக்ஷத்தில் சுமங்கலிகள் ப்ரத்யேகமாக அநுஷ்டிக்க வேண்டிய வ்ரதம் எதுவும் கிடையாது. அந்த க்ருஹத்தில் மகாளய தர்ப்பணம் யாராவது பெரியோர்கள் பண்ணிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு சகாயம் பண்ண வேண்டும். மஹாளயம் என்பது ஶ்ராத்தம் என்கின்றபடியினால் அப்படி சகாயம் பண்ணும் தினத்தில் ஶ்ராத்தத்திற்கு எப்படி சுத்தியோடு இருப்போமோ அப்படி இருக்க வேண்டும்.
த்வய மந்த்ர உபதேசத்தின் போது ஸ்த்ரீகள், ப்ரணவத்திற்கு பதிலாக உம் என்று உச்சரிக்க வேண்டும் என்று உபதேசிக்கப்பட்டேன். பல இடங்களில் ஸஹஸ்ரநாமத்தில் ப்ரணவம் வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
ப்ரணவம் மந்திரத்தில் இருந்தால் ஸ்த்ரீகள் சொல்லுவதில்லை என்று நியமனம் சாஸ்த்ரத்தில் வைத்துள்ளார்கள்.
ஸஹஸ்ரநாமத்தில் ப்ரணவம் நடுவில் அதாவது ஆயிரம் நாமாவில் கிடையாது. சில இடங்களில் சேர்த்துச் சொல்கிறார்கள் அது நாமே சேர்த்து சொல்வது என்பது மட்டும் தான். ஆகையால் அப்படிச் சொல்ல வேண்டுமென்ற நிர்பந்தமில்லை சொல்லாமலும் இருக்கலாம்.
பெண்கள் ஏன் ஆசமனம் செய்ய வேண்டும்? அதை எப்படிச் சரியாக முறைப்படி செய்வது? மற்றும் ஆசமனம் செய்யும் பொழுது எந்தத் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும்?ஆசமனம் செய்வதற்கு நியமம் ஏதேனும் இருக்கின்றதா? ரஜஸ்வலா காலத்திலும் ஆசமனம் செய்யலாமா?
ஸ்நானம் செய்து மடி வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, பின்பு கை கால்களைச் சுத்தி செய்து கொண்டு ஆசமனம் செய்தல் வேண்டும் என்பது பொது விதி. இது ஸ்த்ரீகளுக்கும் பொருதும்.
ஸ்த்ரீகளுக்கு திருமணமென்பது உபநயனஸ்தானத்தில் ஆகின்றபடியால், திருமணத்திற்க்குப் பின்பு அவர்கள் அவசியம் செய்தல் வேண்டும்.
புருஷர்கள் போல் உட்கார்ந்து கொண்டு ஆசமனம் செய்ய வேண்டுமென்கிற அவசியம் இல்லை. செய்யும் வழக்கமும் இல்லை. ஸ்த்ரீகள் ஆசமனம் செய்யும் பொழுது அச்யுதா, அனந்தா, கோவிந்தா என்று பிரணவம் இல்லாமலும், நம: சப்தம் இல்லாமலும் திருநாமங்களை மட்டும் உச்சரித்து மூன்று தடவை தீர்த்தத்தை உட்கொள்ளவேண்டும்.
ஸ்த்ரீகள் பாகவதம், வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டம் மற்றும் பகவத் கீதையின் மூலம் சேவிக்கலாமா?
ஸ்த்ரீகள் பாகவதம், வால்மீகி ராமாயணம் (சுந்தர காண்டம் உட்பட) மற்றும் பகவத் கீதையின் மூலம் சேவிக்கும் வழக்கம் இல்லை. ஶிஷ்டாசாரத்தில் இல்லை.
ஸ்த்ரீகள் ஸ்ரீசூர்ணம் மற்றும் திருமண் இட்டுக்கொள்ளும்பொழுது பெருமாளுடையத் திருநாமங்கள் ஏதாவது சொல்லி இட்டுக்கொள்ள வேண்டுமா? தன்யாஸ்மி
ஸ்த்ரீகள் திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்ளும் பொழுது பெருமாளுடைய த்வாதச நாமங்கள் மற்றும் பிராட்டியினுடைய துவாதச நாமங்கள் அவசியம் சொல்ல வேண்டும். அடியேனுடைய ஆசார்யன் சொல்லிக் கொடுத்தது என்னவென்றால் எந்த இடத்தில் திருமண் காப்பு ஸ்ரீ சூர்ணம் தரிக்கின்றோமோ அந்த இடத்தில் கை கூப்பிக் கொண்டு அந்த திருநாமத்தைச் சொல்ல வேண்டும். உதாஹரணத்திற்கு நெற்றியில் திருமண் இட்டுக் கொள்ளும் பொழுது இந்த இடத்தில் கையைக் கூப்பிக் கொண்டு கேசவாய நம: , ஸ்ரீயை நம: என்று சொல்லவேண்டும்.
த்வாதச நாமங்கள் எப்படி புருஷர்கள் தரித்துக் கொண்டிருக்கிறார்களோ அதேபோல் ஸ்த்ரீகளும் அதே ஸ்தானங்களில் இட்டுக் கொள்ள வேண்டும் என்று இருக்கின்றது, ஆனால் அது வழக்கத்தில் இல்லை.
ஆகையால் எந்த இடத்தில் புருஷர்கள் திருமண் ஸ்ரீசூர்ணம் தரித்துக்கொள்கிறாகளோ, பொதுவாக ஸ்திரீகளால் அவ்விடங்களில்(உதாஹரணமாக, வலது கை, வலது தோளில் இடது கை இடது தோளில் மார்பில் கழுத்தில் போன்ற இடங்களில்) தரித்துக் கொள்வது என்பது சாத்தியமாக இருப்பதில்லை ஆகையால் அவ்விடங்களில் கையைக் கூப்பிக் கொண்டு எம்பெருமான் பிராட்டியின் அந்தந்த திருநாமங்களை அவசியம் சொல்ல வேண்டும்.
ஸ்த்ரீகள் ப்ரபந்தம் சேவிக்கலாமா?
ஸ்த்ரீகள் நன்றாக ப்ரபந்தம் சேவிக்கலாம்.
அடியேனின் தாயார் கடந்த மாதம் மதுரை திருமோகூர் கோயில்களுக்குச் சென்று சேவித்து விட்டு திரும்ப வரும்பொழுது விபத்தில் இறந்து விட்டார். காரியங்களைத் தம்பி செய்தான். பெண் என்ற முறையில் அடியேன் அம்மாவின் ஆத்ம சாந்திக்கு என்னச் செய்ய வேண்டும்? தயவு செய்து பதில் அளிக்கவும்.
தாயார் தகப்பனார் பரமபதித்து விட்டால் ஸ்த்ரீகளுக்கு மூன்று நாட்கள் மட்டுமே தீட்டு. அதற்கு மேல் ஸ்த்ரீகளால் நேரடியாக எதுவும் பண்ண முடியாது. ஆனால், கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருக்கின்ற தன்னுடைய ப்ராதாவிற்கு அதாவது அவர் பெரியவர்களுக்குச் செய்யும் மாசியம், ஶ்ராத்த நாட்களில் அன்றைய தளிகையில், சாமான்கள் வாங்கி கொடுப்பதிலும், சுற்று காரியங்கள் செய்து கொடுப்பதிலும் ஒத்தாசையாக இருப்பதே ஸ்த்ரீகள் செய்யக்கூடிய கார்யம்.
அடியேன், ஜன்மாஷ்டமி மற்றும் திருவாடிப்பூரம் போன்ற பண்டிகை நாட்களில் பெருமாள் மற்றும் தாயார் சித்திரத்தை கோலமாக இடலாமா?
பெருமாள் திருவுருவங்களைக் கோலமாகயிட்டால், அதைக் கலைக்கும்போது போது சங்கடமாக இருக்கும். மேலும், தரையில் நம் கால் படும் இடங்களில் இட்டாலோ அல்லது அதில் தவறாக நம் கால் பட்டாலோ சங்கடமாக இருக்கும். ஆகையால், அதைத் தவிர்ப்பதே நலம்.
என் மகள் இப்போது கல்லூரியில் இருக்கிறாள். ரஜஸ்வலா காலத்தில் பெருமாள் சந்நிதியை சேவிக்கவோ அல்லது கோவிலுக்குச் செல்லவோ கூடாது என்று சொன்னால் ஏற்க மறுக்கிறாள். ஏன் என்று விளக்கம் கேட்க்கிறாள். எங்களால் விளக்கம் கூற முடியவில்லை. இது சம்பந்தமாக நாங்கள் எதைச் சொன்னாலும் அவள் காதில் வாங்காமல் இருக்கிறாள். அவள் ஈடுபாடு இல்லாமல் எங்கள் வற்புறுத்தலின் பேரில் ஆத்து பெருமாளைச் நித்யமும் சேவித்து மாதம் ஒரு முறை கோவிலுக்கு வருகின்றாள்.தங்களின் விளக்கம் அவளை த்ருப்த்திப்படுத்தும் என்கின்ற நம்பிக்கையில் இதற்கான காரணத்தை விளக்க ப்ரார்த்திக்கிறேன்.ஆசார்யன் திருவடிகளே சரணம்”
நமக்கு உடம்பு சரியில்லாத காலத்திலோ அல்லது நாம் சோர்வாக இருந்தாலோ, நமது ஆற்றல் நிலை(energy level) மிகவும் குறைவாக இருக்கும், சில சமயம் எதிர்மறைச் சிந்தனைகள் (Negative thoughts) கூட இருக்கும். அப்படி இருக்கின்ற பக்ஷத்தில் நாம் நமது எதிர்மறை ஆற்றலை மற்றவர்களுக்கு பரப்பாமல் இருப்பது நல்லது.
உடல் ரீதியாக மிகப்பெரிய பாதகம் இருந்து, மனதில் எதிர்மறை எண்ணங்கள் இருக்கும் சமயம் கோயிலுக்குப் போவது சரியில்லை, அதாவது பெருமாளைச் சேவிக்க கூடாது என்றும், திருவாராதனம் செய்வது சரியில்லை என்றும் அது அபச்சாரத்தில் போய் முடியும் என ஆகமங்கள் சொல்லியிருக்கின்றன.ஆண் ஆனாலும் பெணானாலும் இது பொருந்தும்.
விஞ்ஞான ரீதியாக ரஜஸ்வலை காலம் என்பது எதிர்மறை ஆற்றல்(negative energy) நிறைந்து இருக்கக்கூடிய காலம். உடலும் மனதும் தளர்ந்து இருக்கும் சமயத்தில் தேவையான ஓய்வை கொடுக்க வேண்டி இப்படிச் செய்திருக்கிறார்கள். ஓய்வெடுத்தாலே போதுமானது, சிரமப்பட வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் சொல்லியிருக்கிறார்கள்.தற்காலத்தில் பல சௌகர்யங்கள் வந்தாலும், ஶாஸ்த்ரம் நமக்கு கொடுத்திருக்கும் சலுகையை ஏற்று, பெருமாளைச் சேவிப்பது உசிதமாகும்.
முதலில் தற்கால ரீதியாக அணுகி, பின்பு மெதுவாக நமது சம்ப்ரதாயத்தைப் பற்றி விளக்கலாம். அதாவது, கோவிலுக்கு வரமாட்டேன் என்று சொல்பவளிடம் பொதுவாகவே வரமாட்டாய் என்பாய், நாங்கள் ஒரு சில சமயம் மட்டும் நீ வரவேண்டாம் என்று சொன்னால் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாய் எனத் தர்க்க ரிதீயாகப் பேசி பார்க்கலாம்.
அதுவும் நேர்மறை ஆற்றல்(positive energy) நிரம்பி இருக்கக்கூடிய இடங்களுக்கு நாம் சென்று, நம்மால் அந்த இடங்களுக்கு ஹானி ஏற்படுத்தக்கூடாது (In their words We must not pollute/litter the environment, we have to save our environment. These are socially/morally accepted claims by kids of today.) எனச்சொல்லி புரிய வைக்கலாம்.
எல்லாவற்றிற்கும் மேல் பெற்றோர்கள் குழந்தையை நல்வழிப்படுத்த வேண்டும் என்று பெருமாளிடம் ஶ்ரத்தையுடன் எப்படி முடியுமோ அப்படி ப்ரார்த்திக்கலாம்.குழந்தைக்கு ஸத்புத்தி வரவேண்டும் என்பதற்காக தகப்பனார் நித்யம் ஸஹஸ்ரநாமம் சேவிக்கலாம்.
தாயாரானவள் தாயாருக்குரிய ஸ்தோத்ரங்களான ஸ்ரீஸ்துதி, பூஸ்துதி, கோதாஸ்துதி சேவித்து குழந்தைக்கு அனுக்ரஹம் பண்ணி நல்வழியில் கொண்டு வரவேண்டும் என்று ப்ரார்த்திக்கலாம். பெற்றோர்கள் ஶ்ரத்தையாக ப்ரார்த்திப்பதே எல்லாவற்றையும் விட பயன் கொடுக்கக்கூடியதாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
ஸ்த்ரீகள் அஷ்டாக்ஷர மந்திரத்தை ஸமாஶ்ரயணம் ஆகியிருந்தால் உச்சரிக்கலாமா அல்லது பரந்யாஸமும் ஆகியிருக்க வேண்டுமா?
ஸ்த்ரீகள் ஸமாஶ்ரயணம் ஆன பின்பு, நன்றாக அஷ்டாக்ஷர மந்திரத்தை உச்சரிக்கலாம்.
ஸமாஶ்ரயணத்தின் சமயம்தான் மந்திர உபதேசம் பண்ணுவார்கள். அந்த மந்திர உபதேசத்தை ஆசாரியன் மூலமாக பெற்றிருந்தால், அவசியம் ஜபிக்க வேண்டும். இது நித்ய கர்மானுஷ்டானத்தில் ஒன்று.
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்த்ரீகள் துளசி மாலை (காந்தி மாலை) அணிந்துக்கொள்ளலாமா ? ISKCONல், துளசி மாலை அணிபவர்கள் மட்டுமே கைங்கர்யம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அடியேன் கைங்கர்யத்திற்கு அங்கு செல்வதால், நான் துளசி மாலை அணியலாமா? தயவுசெய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன். தன்யாஸ்மி அடியேன்.
ஸ்த்ரீகள், துளசி மாலையை தரித்துக் கொள்ளும் வழக்கமில்லை.
நமது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில், துளசி மாலையை ப்ரதிஷ்டை செய்த பிறகே தரித்துக்கொள்ள வேண்டும். அப்படி ப்ரதிஷ்டை பண்ணிய துளசிமாலைக்கு, நிறைய நியமங்கள் உண்டு. பூணூலை எப்படிச் சுத்தமாக வைத்துக் கொள்கின்றோமோ, அதேபோல் அசுத்தம் கலக்காமல் வைத்துக்கொள்ள வேண்டும்.
பெரியோர்கள், ஆசார்யர்கள் எல்லோரும் ப்ரதிஷ்டை செய்த துளசி மாலையை அனுஷ்டானம் மற்றும் காலக்ஷேபம் சமயங்களில் தரித்துக் கொள்வார்கள்.
ஸ்த்ரீகள் ஸமாஶ்ரயணத்திற்கு பிறகு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபிக்கலாமா? அல்லது பரந்யாஸத்திற்கு பிறகு தான் ஜபிக்க வேண்டுமா?
ஸ்த்ரீகள் ஸமாஶ்ரயணத்திற்குப் பிறகு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபிக்கலாம்.
ரஜஸ்வலா காலத்தில் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்கலாமா? அப்படி அனுஷ்டிப்பது பாபமா? மேலும் ராம கிருஷ்ண நாம ஜெபமோ அல்லது த்வய மந்திரமோ அந்தச் சமயத்தில் சொல்லலாமா? அடியேன்.
ரஜஸ்வலா காலத்திலும் ஏகாதசி வ்ரத அனுஷ்டானம் உண்டு.
குறிப்புகள்:
பகவன் நாமாக்களைச் சொல்வதினால் தவறொன்றுமில்லை.
ப்ரபந்நஸ்த்ரீகளுக்கு ஏகாதசி வ்ரதம் தவிர நடைமுறையில் சிலர் அனுஷ்டிக்கும் இதர வ்ரதங்களை சாஸ்த்ரம் அனுமதிக்கின்றதா? அடியேன்.
ஏகாதசி தவிர, பெருமாளைக்குறித்து பிற வ்ரதங்கள் இருந்தால் அதை செய்யலாம்.
உதாஹரணமாக திருவோண வ்ரதம், சனிக்கிழமை, மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் வ்ரதம் என நிறைய பேர் செய்வதுண்டு. பெருமாளைக்குறித்து, பெருமாளின் திருநாமத்தில் வ்ரதமிருப்பதில் தவறில்லை.
குறிப்புகள்:
சில க்ரஹங்களில், பங்குனி மாசப்பிறப்பு காலத்தில் மாசி சரடு கட்டிக்கொள்வது அதாவது நோன்பு நூற்கும், அனுஷ்டானம் வழக்கமாக இருக்கும். நோன்பு நூற்று வ்ரதம் மேற்க்கொண்டு, சரடு கட்டிக்கொள்ளும் வழக்கம் இருக்கின்றது. அதுவும் நிர்ஜலமாக அனுஷ்டிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஏதாவது பலகாரம் பண்ணி விட்டு அனுஷ்டிக்கலாம். ஆத்துப்பெரியோர்கள் சொன்னால் அந்த வ்ரதம் இருக்கலாம். ப்ரபந்ந ஸ்த்ரீகள் இருக்கக்கூடிய சில க்ருஹங்களில் இந்த வழக்கமும் கிடையாது.
ஸ்த்ரீ தர்மம் பற்றிய சில கேள்விகள்: குறிப்பாக ரஜஸ்வலா காலம் பற்றியது அடியேனுக்கு உடல் ரிதீயாக சில பிரச்சனைகாள் இருப்பதால் என் ரஜஸ்வலா காலம் 4 முதல் 30 நாட்கள் கூட நீள்கின்றது.
அப்படியிருக்க அடியேன் அக்காலம் முழுவதும் ஒதுங்க வேண்டுமா? இல்லை 4 நாட்கள் மட்டும் ஒதுங்கி இருந்தால் போதுமா?
அடியேன் 5 நாட்களுக்குப் பின் தளிகை செய்யலாமா?
அடியேன் 5 நாட்களுக்குப் பின் பெருமாள் திருவாராதனை பாத்திரங்களை சுத்தம் செய்யலாமா?
இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் எது சரியான முறை என்று வழிக்காட்டவும். அடியேன்.
ரஜஸ்வலா காலம் 4 நாட்களிலிருந்து 30 நாட்கள் வரை நீடிக்கும்பொழுது, சாஸ்த்ரப்படி முதல் மூன்று இரவுகள் ஒதுங்கி இருந்து, நான்காவது நாள் ஸ்நானம் செய்து விட்டு உள்ளே வருகின்றோம். அந்த நான்காவது நாளே விழுப்புக்குச்சமானம் தான். அந்த நான்கு நாட்களுக்குப்பிறகு, சரீரத்தில் சிரமம் இருந்தாலும் ஒதுங்க வேண்டிய அவசியமில்லை.
15 நாட்கள் வரை ஒதுங்க வேண்டிய அவசியமில்லை. 16 மற்றும் 17வது நாளில், நான்காவது நாள் போல் விழுப்புக் கணக்கில் இருக்கவேண்டும்.
17 நாட்களுக்கு மேலும் சரீர சிரமம் இருந்தால், விலகி இருத்தல் வேண்டும். இந்த க்ரமத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
பெருமாள் பாத்திரங்களைச் சுத்தம் செய்வது, பெருமாள் சந்நிதியில் விளக்கு ஏற்றுவது இவையெல்லாம் நம் மனதுக்கு ஒப்பவில்லையென்றால் அவற்றைச் செய்யாமல் இருப்பதில் ஒன்றும் தவறில்லை. சாஸ்த்ரப்படி தடையில்லை என்றாலும், அது அவரவர் மனதைப் பொருத்தது.
ஸ்த்ரீகள் துளசிச்செடிக்கு நீர் சேர்த்து, ஸ்லோகங்கள் சொல்லி, கோலம் போட்டு சேவிக்கின்றோம். அதே போல், க்ருஷ்ணபகவானை த்யானித்துக்கொண்டு ஸ்த்ரீகள் துளசியைப்பறித்து பெருமாளுக்குச் சமர்ப்பிக்கலாமா?
துளசியைப் பறிப்பதற்கு மந்திரம் உண்டு. அதை உபதேசமாக பெற வேண்டும். அதனால் ஸ்திரீகள் துளசியைப் பறிப்பது வழக்கத்திலில்லை.
ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யலாமா? அல்லது சுந்தரகாண்டத்தின் வ்யாக்யானம் மட்டுமே சேவிக்க முடியுமா?
மேலும், ஸ்த்ரீகள் காரியசித்திக்காக சுந்தரகாண்டத்தின் வ்யாக்யானத்தை வாசித்தால் மூலம் பாராயணம் செய்யும் அதே பலன் கிட்டுமா? தெளியப்படுத்த ப்ரார்த்திக்கின்றேன்.
நம் சம்ப்ரதாயத்தில் சுந்தரகாண்டத்தின் மூலம் பாராயணம் செய்யும் வழக்கமில்லை. ஆனால் அதைக்கதையாகப் படித்தால் தவறில்லை.
ஸ்த்ரீகள் பகவத் கீதை இதிஹாச புராணம் ஸேவிக்கலாமா?
ஸ்திரீகள் இதிஹாச புராணங்கள் ஸேவிப்பது உசிதம் இல்லை என்று சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பிறர் ஸேவிப்பதை நிறைய கேட்க வேண்டும்.
ஸ்த்ரீகள் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் பண்ணலாமா?
ஸ்த்ரீகள் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் பண்ணக்கூடாது.
பெண்களின் ரஜஸ்வலா காலத்தில் அவர்களுக்குப் பதில் வேறொருவர் தளிகை செய்து ஆத்து பெருமாளுக்கு அமுது செய்வர். அந்த காலத்தில் பெருமாள் அமுதுண்ட தளிகையை ஸ்த்ரீகள் க்ரஹிக்கலாமா? இல்லை தனியாக அவர்களுக்கென்று தளிகை செய்ய வேண்டுமா?
பெண்களுடைய ரஜஸ்வலா காலத்தில் ஆத்துப் பெருமாளுக்கு அம்சை பண்ணிய ப்ரசாதத்தை, பெரியவர்கள் எல்லோரும் உட்கொண்ட பின் அவர்களுக்குக் கொடுக்கலாம் அதில் ஒன்றும் தவறில்லை.
குறிப்புகள்:
அவர்கள் உண்ட ப்ரசாதத்தின் மீதியை மறுபடியும் உள்ளே கொண்டு வந்து பரிஷேசனம் பண்ணவோ அல்லது சாப்பிடவோ, கூடாது. அது சேஷம் எனப்படும்.
முடிந்தவர்கள் அவர்களுக்கென்று தனித் தளிகை செய்வது உசிதம்.
பெண்கள் அடியேன், தாஸன் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியா? சம்பந்தப்பட்ட இடங்களில் பயன்படுத்த வேறு ஏதேனும் சொற்றொடர்கள்
உள்ளனவா? நீண்ட காலமாக, இதை யாரிடம் கேட்பது என்று தடுமாறிக் கொண்டிருந்தேன். எனவே எனது சந்தேகத்தைத் தீர்ப்பதற்கு இந்தத் தளத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். தன்யோஸ்மி
நான் என்று சொல்வதைப் போல, அடியேனும் இருபாலருக்கும் பொதுவானதாகும்.
ஆண்பால் பெண்பால் இருவருமே அடியேன் என்று சொல்லுவது உசிதமாக இருக்கும். அடியேன், என்பது தன்னைக் குறிக்கக்கூடிய ஒரு வார்த்தை. மற்றவரைக் குறிப்பிடும்போது அடியாள் அல்லது அடியான் என்று சொல்ல வேண்டும்.
குறிப்புகள்:
தாஸன் என்றச் சொல்லுக்குப் பெண்பால் சொல் தாசியாகும். ஆனால் தற்காலத்தில் வேறொரு அர்த்தத்தை குறிப்பதால் அது உபயோகப் படுத்துவதில்லை.
திருமங்கையாழ்வார் அடிச்சி என்றும் சொல்லியிருக்கிறார். அதுவும் தற்காலத்தில் வழக்கில் இல்லை.
ஸம்ஸ்க்ருதத்தில் தாஸ: என்ற சொல் இருபாலரையும் சேர்த்துக் குறிக்கும், அதனால் வைதீக வ்யவஹாரங்களில் இதைப் பயன்படுத்துவதுண்டு.
கோவில்களில் ஆண்டாள் கோஷ்டி மட்டுமே திவ்ய ப்ரபந்தம் மற்றும் பாதுகாஸஹஸ்ரம் ஸேவிக்க முடியுமா?
ப்ராசீன பெரிய கோவில்களில் ஆண்டாள் கோஷ்டி மட்டுமே திவ்ய ப்ரபந்தம் மற்றும் பாதுகாஸஹஸ்ரம் ஸேவிப்பது வழக்கத்தில் இல்லை.
குறிப்புகள்:
கோஷ்டியாக பல இடங்களில் ப்ரபந்தங்கள் மற்றும் பாதுகாஸஹஸ்ரம் ஸேவிப்பதற்கான வாய்ப்பை எந்த சாஸ்த்ரமும் தடுப்பதில்லை. கோவில்களில் கோஷ்டி பாராயணங்களில் அந்தந்தக் கோவில் வழக்கப்படியான சில கட்டுப்பாடுகள் உள்ளன, அதைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
ஸ்த்ரீகள் ஸ்வாமி தேசிகன் அருளிய அதிகரண ஸாராவளீ மற்றும் தத்வமுக்தாவளீ ஸேவிக்கலாமா?
ஸ்த்ரீகள் தாத்பர்ய ரத்நாவளீ முதலியவை ஸேவிக்கலாம்.
குறிப்புகள்:
ஸ்வாமி தேசிகன் அருளிய அதிகரண ஸாராவளீ மற்றும் தத்வமுக்தாவளீ இவை இரண்டும் தத்வவிசாரங்கள் பண்ணக் கூடியவை. ஆனால் இவற்றைக்கொண்டு காலக்ஷேபம் செய்வது உசிதம் இல்லை என்பது கருத்து.
அடியேன் நமஸ்காரம். ரஜஸ்வலா காலத்தில் பூர்வாசார்ய ஶ்லோகங்களையும் திவ்ய ப்ரபந்தத்தையும் ஸேவிக்கலாமா? தன்யோஸ்மி ஸ்வாமி. தயவுசெய்து தெளிவுபடுத்தவும். அந்தக் குறிப்பிட்டக்காலத்தில் ஶ்லோகங்களைச் சொல்லமுடியாமல் தவிக்கிறேன்.
ரஜஸ்வலா காலத்தில் பூர்வாசார்ய ஶ்லோகங்களையும் திவ்ய ப்ரபந்தத்தையும் ஸேவிக்கக்கூடாது.
குறிப்புகள்:
நாம் பால்ய காலத்திலிருந்தே ஸ்தோத்ரங்களை நித்யாநுஸந்தானம் பண்ணி ஸதா ஸர்வகாலமும் எம்பெருமானையே த்யானித்துக் கொண்டிருந்தால் பகவானுடைய ஸ்தோத்ரங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். அதுவே நமக்கு மனச்சாந்தியைத் தரும். அதை நம்மால் கட்டுப்படுத்துவது கடினம்.
அதற்காக ரஜஸ்வலா காலத்தில், வாயால் முணுமுணுத்துக்கொண்டோ அல்லது சத்தமாகவோ, ஶ்லோகங்களைச் சொல்லக்கூடாது.
அடியேன் விஞ்ஞாபனம் சுவாமின். நித்ய அர்தாநுஸந்தானமாக : திருவஷ்டாக்ஷரம் த்வயம் சரம ஸ்லோகம் க்ரமமாக ஸேவிக்க விருப்பம். எப்படிச் ஸேவிப்பது? தன்யோஸ்மி
திருவஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் அர்தாநுஸந்தானமாக சொல்ல விசேஷம் என ஸ்வாமி தேசிகன் முதலிய ஆசார்யர்கள் சாதித்திருக்கிறார்கள்.
குறிப்புகள்:
அதனை ஆசார்யர்களிடமிருந்து, ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயம் முதலான காலக்ஷேபம் மூலமாக அர்த்தம் என்ன என்றுத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அர்தாநுஸந்தானம் செய்ய ஏற்றதாகத் திருவஷ்டாக்ஷரச் சுருக்கு, த்வயச் சுருக்கு, சரம ஸ்லோக சுருக்கு என மூன்று ப்ரபந்தம் ஸ்வாமி தேசிகன் அருளியிருக்கிறார். அதே போல் அஷ்டஶ்லோகி என்று ஸ்ரீ ப்ராசர பட்டர் சாதித்திருக்கிறார்.
இப்படி ஆங்காங்கே அர்தாநுஸந்தானம் செய்ய ஆசார்யர்கள் அருளியிருக்கின்றனர், ஆனால் அதற்கு முன் காலக்ஷேபம் மூலம் தெரிந்துக் கொள்வது நலம்.
மடி, பத்து என்பது யாது? அதை எவ்வாறு இக்காலத் தலைமுறையினருக்கு விளக்குவது? அடியேன்.
மடி என்பது ஆசாரமான வஸ்த்ரங்களைக் குறிக்கும்.
அரிசியில் செய்த சாதத்தின் பெயர் பத்தாகும், கையில் ஒட்டிக்கொண்டு விடுவிதால், பற்றிக்கொள்வது என்ற அர்தத்தில் அது பற்றாகும் அதுவே பத்து என ஆனது. அதனுடன் சேர்த்து எதை வைத்தாலும் அவை எல்லாம் பத்து. அப்படி அல்லாது தனியாக வைத்தால் அது பத்தாகாது, சாதம் மட்டுமே பத்தாகும்.
பலகார சமயத்தில் பத்து, கூடாது என்றுள்ளது, அதனால் எந்த வஸ்துவானாலும் சாதத்துடன் சேர்ந்து வைத்திருந்தால் அதைச் சாப்பிடக்கூடாது.
குறிப்புகள்:
மடி
இரவு வேளையிலே படுக்கையிலே பட்டுக் கொண்டோமேயானால் நாமும் நாம் தரித்திருக்கக்கூடிய வஸ்த்ரங்களும் விழுப்பாக ஆகும்.
அந்த விழுப்புக் கழிய நாம் தீர்த்தமாட வேண்டும். நம் வஸ்த்ரங்களை ஜலத்திலே நனைத்து நன்றாகத் தோய்த்து, கொடியிலே வஸ்த்ரங்களைக் காய வைக்கவேண்டும்.
கொடியில் உலர்த்திய வஸ்த்ரங்களைக் தொடக்கூடாது. நம் கையோ இல்லை சரீரத்தினுடைய எந்த ஒரு பாகமும் அந்த வஸ்த்ரத்தின் மேல் படக்கூடாது. நாம் சுத்தமாய் இருக்கக்கூடிய நிலையில் அதை எடுத்து உடுத்திக் கொண்டோமேயானால் மடியாக, ஆசாரமாக வஸ்த்ரம் உடுத்திக் கொண்டுள்ளோம் என்றாகும்.
பத்து
நெய் பால் தயிர் போன்ற வஸ்துக்களுக்குப் பத்து கிடையாது.
பத்தையும் பத்தில்லாததையும் எப்பொழுதுமே கலக்கக்கூடாது. தனித்தனி இடங்களில் வைத்திருக்க வேண்டும். தனித்தனியாக தான் அவைகளை உபயோகப்படுத்தவும் வேண்டும்.
உதாஹரணத்திற்கு: சாப்பிடும் பொழுது சாதம் சாதித்துவிட்டு மேலே நெய் விடுவதற்கு முன் கையை அலம்பிய பின்புதான் நெய் பாத்திரத்தை தொட வேண்டும்.
அதேபோல உணவைத் தயாரிக்கும் பொழுது பத்தும், பத்தில்லாத இடத்தையும் தனித் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். சாதம் பண்ணக்கூடிய அடுப்பும் பால் காய்ச்சக்கூடிய அடுப்பும் வெவ்வேறாக இருந்தால் உத்தமம். ஒருகால் அந்த மாதிரி ஒரே அடுப்பை பயன்படுத்தும் படியாய் இருக்கும் பக்ஷத்தில் சாதம் பண்ணிய பிறகு அந்த இடத்தையும் அடுப்பையும் சுத்தி செய்துவிட்டு அதன் பின் பால் காய்ச்சலாம்.
சில உணவு வகைகள் நாம் நீண்டகால பயன்படுத்தும் படியாக இருக்கும். உதாஹரணத்திற்கு ஊறுகாய்கள் , இட்லி மாவு தோசை மாவு போன்ற பதார்த்தங்கள். இவைகளையும் பத்து சாமான்களோடு கலக்காமல் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பத்து சாமான்கள் தொட்ட கையை அலம்பிவிட்டு தான் பத்தல்லாதவற்றைத் தொடவேண்டும்.
ஸ்த்ரீகள்/ கைம்பெண்கள் சாளக்கிராம ஆராதனை செய்யலாமா? இன்றைய கால நடைமுறையில் ஶரணாகதி ஆன ஸ்தீரிகள், திருவாராதன சமயத்தில் மனோவாக்காயத்தினால் செய்ய வேண்டிய கர்மங்களை, தயை கூர்ந்து சாதிக்கவேண்டும்.
பெண்கள் சாளக்கிராமத்தைத் தொட்டு ஆராதனம் செய்யும் வழக்கமில்லை. ஆனால் திருவாராதன காலத்திற்கு உரிய ஒத்தாசைகள் அனைத்தும் கட்டாயம் செய்யலாம்.
குறிப்புகள்
அதாவது திருவாராதன சந்நிதியை நன்றாகப் பெருக்கி சுத்தம் செய்து கோலமிடுவதும், அதே போல் திருவாராதன மேடையையும் சுத்தம் செய்து கோலமிடுவதும், திருவாராதன பாத்திரங்களைச் சுத்தம் செய்வதும், விளக்கேற்றி வைப்பதும், புஷ்பம் (முடிந்தால் புஷ்பத்தை நாரில் தொடுப்பது) பழம் முதலியவற்றைச் சேகரித்து வைப்பதும், பெருமாள் தீர்த்தத்தில் சேர்க்க வேண்டிய பரிமளங்களைத் தயாரித்து வைப்பதும் (பரிமளங்கள் என்றால் ஏலக்காய் பச்சை கற்பூரம் முதலியவற்றை அரைத்து வைப்பது குங்குமப்பூவை இழைத்து வைப்பது என்பவையே.), தூபங்கள் ஏற்பாடு செய்வதும் போன்ற கைங்கர்யங்கள் செய்யலாம்.
இதை விட மிக முக்கியமானதாக எம்பெருமானுக்கு போஜ்யாசனத்தில் சமர்பிக்கப்பட வேண்டியத் தளிகையை மிகவும் சுத்தமாகவும், சாஸ்த்ரோக்தமாகவும் (சரீர சுத்தி, இட சுத்தியுடன்), ஆழ்வார் பாசுரங்கள், பூர்வாசார்யர்கள் ஶ்லோகங்கள், சொல்லிக்கொண்டு ஶ்ரத்தையாக கைங்கர்ய பாவத்துடன் தயாரித்து, தளிகை சமர்பிக்கும் சமயத்தில் கொடுக்க வேண்டியது ஸ்த்ரீகளின் முக்கிய கடமையாகும்.
பூர்வாச்சார்ய ஸ்ரீ ஸூக்திகள்
(கேள்விகளும் – பதில்களும்)
பெண்கள் ஸ்ரீ காமாஸிகாஷ்டகம் பாராயணம் செய்யலாமா?
ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்ரீ காமாஸிகாஷ்டகம் ஸ்தோத்ரம், ஸ்த்ரீகள் நன்றாக படிக்கலாம்.
ஆத்துப் புருஷர்கள் ஊரில் இல்லாத சமயம் ஸ்த்ரீகள் ஆத்து சாளக்கிராம பெருமாளுக்கத் தளிகை சமர்பிக்கலாமா?
ஸ்த்ரீகள் ஆத்துப் பெருமாளுக்கு தளிகை சமர்பிக்கலாம், கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்புகள்:
புருஷர்கள் போல் மணி ஸேவித்து தளிகை சமர்பிக்ககூடாது.; ஆனால் பெருமாளுக்குத் தளிகை சமர்ப்பிக்காது க்ரஹிக்கவும் கூடாது
ஆகையால் ஸ்த்ரீகள் ஆத்துப் பெருமாள் ஸந்நிதியில் தளிகை ஸமர்ப்பணம் செய்வித்து, ஸேவித்து விட்டு - பெருமாள் அம்சையாவதாக மனதார நினைக்க வேண்டும். இதுவே அனுஷ்டானத்தில் இருக்கும் வழக்கம்.
ஆத்தில் என்ன தளிகைப் பண்ணுகின்றோமோ அதை, ஆண்டாளின் “கூடாரை வெல்லும் சீர்” பாசுரம் சொல்லி மானசீகமாய் பெருமாளுக்கு அம்சை பண்ணிவிட்டு ஸ்வீகரிக்கலாம்.
ஆஶௌசம் மற்றும் ரஜஸ்வலா காலத்தில் ஸ்த்ரீகள் மானஸீக ஆராதனம் செய்யலாமா? அப்படிச் செய்தல் அபசாரமாகுமா?
மானஸீக ஆராதனம் என்று ஒரு தனிப்பட்ட அனுஷ்டானம் உள்ளது. அது பெருமாள் திருவாரதனத்திற்கு அங்கமாகிறது அதை ஆஶௌசம் மற்றும் ரஜஸ்வலா காலத்தில் மட்டுமல்ல, ஸ்த்ரீகள் ஒரு பொழுதுமே செய்யக்கூடாது. கற்பனையான மானச ஆராதனம் என்பது தவறில்லை.
சுமங்கலிகள், ஏகாதசி வ்ரதம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும்?
ஏகாதசி வ்ரத அனுஷ்டானம் - சுமங்கலி ஸ்த்ரீகள், பர்தாவினுடைய அனுமதியுடன் பூர்ண உபவாசம் இருக்க முடியுமானால் அவற்றைக் கடைப்பிடிக்கலாம்.
குறிப்புகள்:
பூர்ண உபவாசம் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் ஒரு குறைவுமில்லை, மறுநாள் அவர்களுக்குப் பல காரியங்களும் இருக்கும். ஆகையால் அவர்கள் பலகாரம் பண்ணலாம்.
ஸ்த்ரீகள் ஸ்ரீ கிருஷ்ணன் டாலர் மஹாலக்ஷ்மி டாலர் செயினில் போட்டுக் கொள்ளலாமா. எப்பொழுது எல்லாம் போட்டுக் கொள்ள கூடாது.பெரியவர்களைச் சேவிக்கும் போது போட்டு கொள்ளலாமா சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி ப்ரார்த்திக்கிறேன்.
ஸ்த்ரீகள் பொதுவாக ஸ்ரீ கிருஷ்ணன் டாலர் மஹாலக்ஷ்மி டாலர் செயினில் போட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறது.
க்ஷௌரம் செய்யும் நாளில் என்ன கர்மங்கள் செய்யவேண்டும் என்று விளக்க வேண்டுகிறேன்.
இக்கேள்வியில் இருக்கும் ஸ்த்ரீதர்மம் பற்றிமட்டும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் அகத்தில் க்ஷௌரம் பண்ணிக் கொண்டார்களானால் அந்த அகத்தில் அன்று துவரம் பருப்பு போட்டு ஸ்த்ரீகள் தளிகை பண்ணுவார்கள்.
எங்கள் அகத்தில் குமார ஷஷ்டி (அன்றைய தினம் ப்ரஹ்மச்சாரிகளுக்கு போஜனம் இடுவது)பல வருடங்களாகச் செய்து வருகிறோம். அடியோங்களுக்குப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பரந்யாஸமும் ஆகிவிட்டது, இதற்குப் பின் அவ்வழக்கத்தைத் தொடரலாமா?
பொதுவாகவே ப்ராஹ்மணபோஜனம், ப்ரஹ்மச்சாரிகளுக்கு பிக்ஷை இடுவது இவையெல்லாம் க்ருஹஸ்த தர்மத்தில் உயர்ந்த காரியங்கள். தினமும் யாராவது அதிதிகள் போஜனம் செய்ய வருகிறார்களா என்று பார்த்து விட்டுத்தான் உண்ண வேண்டும் என்று க்ருஹஸ்த தர்மங்கள் எல்லாம் சொல்லுகின்றன. அப்படி இருக்கும்பொழுது ஒரு நாள் ப்ரஹ்மச்சாரிகளை கூப்பிட்டு போஜனம் இடுவது நல்ல காரியமாகத்தான் தெரிகிறது. அதில் ஒன்றும் தவறில்லை.
பரந்யாஸம் ஸமாஶ்ரயணமானவர்கள் இந்தக் காரியத்தைப் பண்ணலாம். ஆனால், குமார ஷஷ்டிக்காகச் செய்கிறேன். அதாவது ஒரு தேவதாந்தரத்திற்காகச் செய்கிறேன் என்கின்ற எண்ணமெல்லாம் கூடாது. எந்தக் காரியம் செய்தாலும் அது பகவத் ப்ரீத்யர்த்தமாக இருக்கவேண்டும் என்கின்ற எண்ணத்துடன் செய்தால் அதில் எதுவும் தவறில்லை.
ஸ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீகள் நித்யம் கடைபிடிக்க வேண்டிய ஆசாரங்கள் எவை? மேலும் கோவில்களுக்கு அல்லது ஆசார்யனைச் சேவிக்க செல்லும்போது எப்படிப் போகவேண்டும்? அதாவது எப்படி தலைவாரிக் கொள்ளவேண்டும், நெற்றி இட்டுக்கொள்ளவேண்டும், குங்குமம் வைத்துக்கொள்ளலாமா போன்றவற்றை விரிவாகத் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் நித்யம் கடைபிடிக்க வேண்டிய ஆசாரங்கள் என்ன என்பதைப்பற்றி சுதர்சத்தினுடைய முந்தைய பல இதழ்களைப் பார்த்து அறிந்துகொள்ளவும். குறிப்பாக ஸ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீ தினசர்யா என்ற காணொளியை SudaranamGSPK YouTube channelல் வெளியிட்டுள்ளோம் அதன் link இங்கே கொடுத்துள்ளோம்.
கோவில்களுக்கு அல்லது ஆசார்யனைச் சேவிக்க செல்லும்போது வெறும் கையுடன் போகக்கூடாது. நம்மால் என்ன முடியுமோ அந்த உபகாரத்தை அவசியம் எடுத்துக்கொண்டு போய் சமர்ப்பித்து சேவிக்கவேண்டும்.
நன்றாகத் தலையைவாரி முடிந்துகொண்டுதான் போகவேண்டும். கோவிலுக்குப் போகும் பொழுதும் ஆசார்யனை சேவிக்கப் போகும் பொழுதும் தலையை விரித்துவிட்டு கொள்ளக்கூடாது. நன்றாகத் தலையை முடிந்துகொண்டு நெற்றிக்கு இட்டுக் கொண்டுதான் போகவேண்டும்.
நெற்றிக்கு எப்படி இட்டுக்கொள்ள வேண்டும் என்றால் திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு போவது உசந்தகல்பம்.
குங்குமத்தைக் கரைத்து ஸ்ரீசூர்ணமாக இட்டுக்கொள்ளலாம் அல்லது ஸ்த்ரீகளுக்கு என்று கிடைக்கின்ற சிகப்பு ஸ்ரீசூர்ணம் அதையும் இட்டுக்கொள்ளலாம்.
திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு வாரிமுடிந்த தலையுடன் போவது மிகவும் உசத்தியாக ஆகும். அவசியம் ஒரு உபகாரத்துடன் (என்ன முடிகிறதோ பழமோ புஷ்பமோ எதுவும் முடியவில்லையென்றால் இரண்டு காசையாவது எடுத்துக்கொண்டு) எம்பெருமானிடத்தில் ஸமர்ப்பிக்க வேண்டும்.
தயாஶதகத்தில் ஸ்வாமி தேஶிகன் சாதித்த மாதிரி ஏதும் இல்லையே ஸமர்பிப்பதற்கு என்று மிகுந்த ஆகிஞ்சன்யத்துடன் இருக்கும் சமயத்தில் போகும்பொழுது கூட ஸமர்ப்பிக்கவேண்டும் என்கின்ற எண்ணத்துடன் போக வேண்டும். எம்பெருமானே உனக்கு என் பாபத்தையே ஸமர்ப்பிக்கிறேன் என்று ஸ்வாமி தேஶிகன் சொல்கின்ற ஸ்ரீஸூக்திகளெல்லாம் இருக்கிறது.
அதைப்போல அவர்களுக்கு ஏதாவது ஸமர்ப்பிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்துடன் எவ்வளவு முடிகின்றதோ அந்த உபகாரத்துடன் போய்ச் சேவிக்கவேண்டியது அவசியம்.
ஸ்த்ரீகள் யாரேனும் நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர்களாக இருந்தனரா? ஆம் என்றால், அவர்களைப் பற்றி தெரிவிக்க வேண்டுகிறேன்.
நம் ஸம்பிரதாயத்தில் ஸ்த்ரீகள் ஆசார்யகம் பண்ணதாக ஒரு ப்ரமாணமும் இல்லை.
அடியேன் தினமும் ஆத்துப் பெருமாளுக்குத் திருவாராதனை செய்கின்றேன் அதன் அருளிச்செயலில் என் பாரியாளும் பங்கேற்பார். இது சரியா?
ஆத்துப்பெருமாளுக்குச் சேவிக்கும் அருளிச்செயலில் பாரியாள் பங்கேற்பதென்பது அவரவர்கள் அகத்து சௌர்யம். அவர்கள் பங்குக்கொள்வதில் தவறொன்றுமில்லை என்று தோன்றுகிறது. அவர்களுக்கு ஒருகால் புருஷர்கள் முன் சொல்ல வேண்டாம் என்று எண்ணமிருந்தால் அவர்கள் தனியாகவும் சேவிக்கலாம்.
ஆத்துக்காரர் பரமபதித்து சுபம் முடிந்த பிறகு ஆழ்வார் ஆசார்யர் ஸ்ரீஸுக்திகள் கற்றுக்கொண்டிருக்கிறவர்கள், மீண்டும் அந்த வகுப்புகளில் தொடர்ந்து ஸேவிக்கலாமா/கற்கலாமா?
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் ஸ்ரீஸுக்திகளைத் தொடர்ந்து கற்கலாம். கற்கவேண்டும். அவ்வாறு கற்பதினால் மட்டுமே கஷ்டத்தையும் மனதையும் மாற்றும்.
பொதுவாக எத்தனை நாட்கள் மாசி நோன்பு சரடை (கன்யா பெண்கள் மற்றும் சுமங்கலி ஸ்த்ரீகள் என இருவரும்) நாம் அணிந்துகொள்ளலாம்?
பொதுவாக மாசிசரடை, கன்யா பெண்களும் மற்றும் சுமங்கலி ஸ்த்ரீகளும் பங்குனி மாதம் முழுவதும் அணிந்துகொள்ள வேண்டும். அதற்கு மேல் முடியுமானால் வைத்துக்கொள்ளலாம்.
ஸ்த்ரீகள், யாகம் நடக்காத போது யாகசாலைக்குச் சென்று ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் திவ்ய ப்ரபந்தம் ஆகியவற்றை அங்கு சேவிக்கலாமா?
யாகசாலைக்குச் சென்றுதான் பாராயணம் பண்ண வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது என்பது முக்கியமான விஷயம். அதாவது ஸ்திரீகளுக்கு திவ்ய பிரபந்தம் சேவிக்க கூடிய அதிகாரம் இருக்கிறது. நன்றாக பல தடவை அனுபவித்துச் சேவிக்கலாம். அதைக் கோவிலுக்கு சென்றுதான் சேவிக்க வேண்டும், யாகசாலைக்குச் சென்று தான் சேவிக்க வேண்டும் என்கின்ற நிர்பந்தம் கிடையாது. அதனால் யாகம் நடக்காத போது அங்குச் சென்று சேவிக்கலாமா என்றால் அப்படிச் சேவித்தே ஆகவேண்டும் என்று நினைக்க வேண்டாம் என்றுதான் பதில் சொல்லத் தோன்றுகிறது. அப்படியே சேவிக்கவேண்டும் என்றாலும் அங்கே இருக்கக்கூடிய அந்த நிர்வாகிகளிடம் அனுமதி வாங்கிக் கொள்ளவேண்டும். அது முக்கியம். ஆனால் இந்தக் காரியம் அங்குதான் சென்று செய்யவேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. ஆத்திலேயே அனுபவக்ரமமாக எத்தனை முறை வேண்டுமானாலும் ஸ்த்ரீகள் திவ்ய ப்ரபந்தத்தை பாராயணம் பண்ணிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்த்ரீகள் சொல்வதைப் பற்றி நிறைய விளக்கங்கள் சுதர்சனத்தில் முன்பே சொல்லப்பட்டிருக்கிறது.
க்ருஹங்களில் புருஷர்கள் திருவாராதனம் செய்துவிட்டு அலுவலகத்திற்குச் சீக்கிரம் கிளம்பிச் சென்றுவிட்டால், அகத்தில் இருக்கும் ஸ்த்ரீகள், குழந்தைகள் மற்றும் அகத்தில் இருக்கும் பெரியோர்களுக்கும் பெருமாள் தீர்த்தம் சாதிக்கலாமா?
க்ருஹத்தில் இருக்கின்ற புருஷர்கள் திருவாராதனம் பண்ணிவிட்டு சீக்கிரம் கிளம்பிவிட்டால், ஆத்தில் இருக்கின்ற குழந்தைகளுக்கு அந்த க்ருஹணியானவள் அவசியம் பெருமாள் தீர்த்தம் கொடுக்கலாம். பெரியோர்களுக்கும் கொடுக்கலாம் என்றுதான் தோன்றது. ஏனென்றால் பொதுவாகப் புருஷர்கள் பரிசேஷனம் பண்ணுவதற்க்கு முன் பெருமாள் தீர்த்தம் சாதிக்கிறது வழக்கம். சாதம் சாதிக்கும் பொழுது ஸ்த்ரீகள்தான் அந்தப் பெருமாள் தீர்த்தத்தைச் சாதிக்கிறார்கள். அதனால் இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்படும்போது, அதாவது அகத்துப் புருஷன் அலுவலகத்திற்குச் சீக்கிரம் கிளம்பிப் போய்விட்டால், பெரியோர்களுக்கும் அந்த ஸ்த்ரீயானவள் பெருமாள் தீர்த்தம் சாதிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
நமஸ்காரம் அடியேன். நம் வைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் ஸ்திரீகள் கருகமணி கோர்த்த செயின் அணிந்து கொள்ளலாமா? அடியேனுக்குத் தெளிவு படுத்தவும்.
ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பெரியோர்கள் அனுஷ்டானத்தைப் பார்த்தால் ஸ்த்ரீகள் கருகமணி சேர்த்துக் கொள்வது கூடாது என்றில்லை என்பது தெரிகிறது . பெரிய பெரிய சுமங்கலிகள் எல்லாம் ஆபரணங்களில் கருகமணி சேர்த்து போட்டுக்கொண்டுள்ளதை அடியேன் பார்த்ததுண்டு, சேவித்ததுண்டு. பெரியோர்கள் கருகமணி தரித்துக் கொள்கின்றனர். மங்கள சூத்திரத்தில் பொதுவாக தமிழ்நாட்டு ஸ்த்ரீகள் தரித்து கொள்வதில்லை. அது வழக்கத்திலும் இல்லை. ஆனால் கருகமணி நிஷேதம் அப்படி என்று இல்லை என்று தான் தெரிகிறது.
பரிசேஷணத்திற்கு இணையான ஒன்று ஸ்த்ரீகளுக்கு உண்டா?
ஸ்த்ரீகளுக்கு, பரிசேஷணத்திற்கு இணையாக ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நாம் உட்கொள்ளும் எதுவாக இருந்தாலும் அது நம் அந்தர்யாமிக்கு ஒரு நிவேதனமாக நினைத்துக்கொண்டு உண்ணும் பாவம் இருக்கவேண்டும். அதனால் கோவிந்த திருநாமத்தைச் சொல்லிவிட்டு சாப்பிடுவது நல்லது. ஸ்த்ரீகள், குழந்தைகள் எல்லாருமே முதல் பிடியை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் போது கோவிந்த கோவிந்த கோவிந்தா என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.
ஸ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீ ஹனுமான் சாலிசா சேவிக்கலாமா?
ஸ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீ ஹனுமான் சாலிசா சேவிப்பதில் நிஷித்தமில்லை. நம் ஆசார்யர்கள் அருளிய பல விசேஷமான ஸ்தோத்ரங்கள் இருக்கிறது அதைச் சேவித்தால் மிகவும் உசிதமாகும்.
ஸ்த்ரீகள் பொதுவாக நெற்றியிலும் பின்கழுத்திலும் திருமண்காப்பு தரிக்கும்போது துவாதச மந்திரம் கூறி இடவேண்டுமா? அல்லது கேசவாய நம:/ஸ்ரீயை நம: என்றும் தாமோதராய நம:/சுரசுந்தர்யை நம: என்று மட்டும் கூறி இட்டுக்கொள்ளலாமா?
ஸ்த்ரீகள் நெற்றியிலும் பின் கழுத்திலும் மட்டும் திருமணம்காப்பு இட்டுக்கொண்டாலும், 12 திருநாமங்களையும் அவசியம் சொல்லவேண்டும். பெருமாள் திருநாமங்கள், தாயார் திருநாமங்கள் எல்லாவற்றையும் நித்யப்படி அவசியம் சொல்லவாவது செய்யணும்.
பொதுவாக ஸ்த்ரீகள் பின்பற்ற வேண்டிய தினசர்யாவைம் மாசப்பிறப்பு போன்ற நாட்களில் என்ன தளிகை செய்யவேண்டும் என்பதையும் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
பொதுவான ஸ்த்ரீ அநுஷ்டானங்கள் பற்றி சுதர்சனம் YouTube Channelல் “ஸ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீயின் நித்யகர்மானுஷ்டானம்” என்று ஒரு வீடியோஇருக்கின்றது. அதைப் பார்த்துக்கொள்ளலாம்.
மாசப்பிறப்பு தளிகைக்கு, ஶ்ராத்தத்திற்கு என்னென்ன பதார்த்தங்கள் உபயோகிப்போமோ அதைக் கொண்டே மாசப்பிறப்பு தளிகை செய்யவேண்டும். அதாவது முக்கியமாக தவிர்க்க வேண்டியது என்பது துவரம் பருப்பு, மஞ்சள் பொடி இவயெல்லாம் உபயோகிக்கக்கூடாது என்று சில குடும்பத்து வழக்கம்.
இன்னும் சில குடும்பங்களில் மாசப்பிறப்பு என்பது கல்யாணதினம் போல் இருப்பதினால் நல்ல மங்களகராமாகத் தளிகைப் பண்ணுவது என்று வழக்கமாக உள்ளது. ஆகையால் அவரவர் அகத்து வழக்கப்படி கேட்டுச்செய்யவும்.
குறிப்புகள்:
மாசப்பிறப்பன்று நிஷித்தமான காய்கறிகள் எதையுமே பயன்படுத்தக்கூடாது. பொதுவாகவே பயன்படுத்தக்கூடாது, கட்டாயமாக மாசப்பிறப்பு அன்று பயன்படுத்தக் கூடாது.
மாசப்பிறப்பன்று ஶ்ராத்தத் தளிகைப்போல் பண்ணும் வழக்கம் இருந்தால், என்னென்ன சேர்த்துக் கொள்ளலாம் என்று கேட்டால் பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை, இஞ்சி, தேங்காய், வெல்லம். இதெல்லாம் பயன்படுத்தலாம். இதைக் கொண்டு தளிகை பண்ணவேண்டும் என்றால், பயத்தம்பருப்பை தனி பருப்பாக வைத்து விட்டு, பொரித்த குழம்பு பண்ணுவது வழக்கம். பொரித்த குழம்பு என்பது, உளுத்தம்பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, இதெல்லாம் வறுத்து அரைத்து வாழைக்காயோ, சேப்பங்கிழங்கோ, சுண்டைக்காயோதான் போட்டுப்பண்ணும். அரைக்கும் பொது தேங்காயும் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் இதே பதார்த்தங்களை வறுத்து அரைத்து சாற்றமுது பண்ணலாம். கறியமுது என்பது பொதுவாக ஶ்ராத்தத்திற்கு எது உசிதமோ அதெல்லாம் மாசப்பிறப்பிற்குச் சேர்த்துக்கொள்ளலாம். வாழைக்காய், சேப்பங்கிழங்கு, பாகற்காய், இவை எல்லாம் மிகவும் உசிதமானவை. மஞ்சள் பொடி சேர்க்காமல் பண்ணுவது முக்கியம். திருக்கண்ணமுது அவசியம் பண்ணவேண்டும். வெல்லம் சேர்த்து திருக்கண்ணமுது செய்து எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கலாம்.
a. கல்யாணம் ஆகாத ஸ்ரீவைஷ்ணவ பெண்பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய தினசர்யா என்ன என்று தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன். ஒருவேளை அந்தப் பெண்பிள்ளை ஸ்மாஶ்ரயணம் ஆகவில்லை என்றால் அவள் பின்பற்ற வேண்டிய நித்யகர்மா அனுஷ்டானம் (காலையும் மாலையும்) என்ன என்றும் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.
b. அடியேன் திருமணமாகாத ஒரு ஸ்ரீவைஷ்ணவ பெண்பிள்ளை எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்வி அடியேன் கேட்டதின் காரணம் அடியேன் ஸ்ரீவைஷ்ணவர் அல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவள், மேலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் வெளிநாட்டில்தான். சில காரணங்களால் தற்போது இந்தியா வந்து ஸமாஶ்ரயணம் செய்துக்கொள்ள முடியாத சூழலில் உள்ளேன். அதுவரை ஒரு ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட விதிகளுக்குட்பட்டு ஸ்ரீவைஷ்ணவ நெறிகளைப் பின்பற்ற ஆசையாக உள்ளது என்று தெரிவிக்க வேண்டுகிறேன். மேலும், எங்கள் அகத்து புருஷர்கள் பூஜை போன்றவை செய்வதில்லை. அடியேன் மட்டும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ஈர்க்கப்பட்டு இயன்றளவு கடைபிடிக்கவேண்டும் என்ற ஆசையால் இக்கேள்வியை பதிவிட்டுள்ளேன்.
கல்யாணம் ஆகாத ஸ்ரீவைஷ்ணவ பெண்கள் காலையில் எழுந்தவுடன் ஹரிநாம ஸ்மரணை செய்யவேண்டும். அதன்பின் ஶரீர சுத்தி செய்துவிட்டு, தலைவாரிப்பின்னி, நெற்றியிட்டு, வளையெல்லாம் போட்டுக்கொண்டு, பெருமாள் சந்நிதியில் சேவித்துவிட்டு ஆசார்யன் தனியன்களைச் சொல்லி, தெரிந்த ஸ்தோத்ர பாடங்கள், ப்ரபந்தங்கள் முதலியவற்றைச் சேவிக்கலாம். இதே போல் சாயங்காலம் விளக்கேற்றிய பின்னரும் செய்யலாம்
புதியதாக இயன்றளவு ஸ்தோத்ர பாடங்கள் கற்றுக்கொள்வது, உபந்யாஸங்கள் கேட்பது என்று சத்விஷ்யங்களில் ருசியை வளர்த்துக்கொள்ளலாம்.
பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதென்பது கல்யாணமாகாத பெண்கள் கட்டாயம் கடைபிடிக்கவேண்டிய ஒன்று. அகத்து பெரியவர்கள் என்ன ஒத்தாசை கேட்டாலும் அதை அவர்களுக்கு அனுகுணமாகச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமான குணம். இக்குணத்தை வளர்த்துக் கொண்டால்தான் கல்யாணமான பிறகு புக்கத்திலும் அனுசரனையாக நடந்து, க்ருஹஸ்த தர்மங்களையெல்லாம் பரிபாலித்துக் கொண்டும், ஸம்ப்ரதாயத்தை வளர்ப்பதற்கும் உபயுக்தமாக இருக்கும்.
கல்யாணம் ஆன பிறகு ஆசார்யன் மாறக்கூடும் என்பதால், திருமணத்திற்கு முன்னர் ஸமாஶ்ரயணம் செய்யும் வழக்கமில்லை என்று சிலர் வைத்துக்கொண்டுள்ளனர்.
ஒருகால் ஸமாஶ்ரயணம் ஆகியிருந்தால் ஆசார்யன் உபதேசித்த மந்திரத்தை தினமும் ஜபிக்கவேண்டும்.
ஸ்ரீவைஷ்ணவராக ஆகவேண்டும் என்ற எண்ணம் வந்ததே எம்பெருமானின் பேரனுக்ரஹம். ஒரு சதாசார்யன் கிடைக்கும்வரை, பொதுவாக எம்பெருமானின் திருநாமங்களையே அண்டி வாழலாம். எழும்போது ஹரி நாமம், குளிக்கும்போது புண்டரிகாக்ஷ திருநாமம், உண்ணும்போது கோவிந்த திருநாமம், வெளியில் செல்லும்போது கேசவ திருநாமம், உறங்கும்போது மாதவ திருநாமம் என்று ஸ்மரித்துக்கொண்டு இருந்தாலே எம்பெருமான் மேல் ஈடுபாடு குறையாமல் இருக்கும். பாடத்தெரிந்தால் எம்பெருமானின் பாடல்களைக் கற்றுக்கொண்டு பாடலாம். ஸ்தோத்ர பாடங்கள், ப்ரபந்தங்கள் போன்றவற்றைக் கற்கலாம். எம்பெருமானின் படத்தின் கீழ் கோலமிட்டு, விளக்கேற்றி, புஷ்பம் சாற்றி எம்பெருமானை நினைத்து வழிபடலாம். எம்பெருமான் விஷயமான உபந்யாஸங்கள் கேட்கலாம். விரைவில் சதாசார்யன் ஸம்பந்தம் கிட்டவேண்டும் என்ற ப்ரார்த்தனையை ஶ்ரத்தையாக எம்பெருமான் திருவடிகளில் வைத்து வழிபட அவன் வழிகாட்டுவான்.
பெண்கள் ஆசமனம் செய்வது பற்றி வேதத்திலோ, அல்லது இதிஹாஸ புராணங்களிலோ ஏதேனும் குறிப்புள்ளதா?
பெண்கள் ஆசமனம் செய்வது பற்றி பெரியோர்கள் அனுஷ்டானத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். அதற்கு ப்ரமானம் வேதத்தில், இதிஹாஸ புராணங்களில் இருக்கிறதா என்பதை நினைத்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. சிஷ்டாசாரமே ப்ரமாணம். மேலும் எப்படிச் செய்யவேண்டும் என்பதை https://www.sudarsanam.sampradayamanjari.org/qa/subhakrit-karthigai-Q36KAR22029T கேள்வியின் பதில்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள காணொளியை மூலம் அறியலாம்.
மஞ்சள்காப்பை சுமங்கலி ஸ்த்ரீகள் நெற்றியில் இட்டுக்கொள்ளலாமா? முக்கியமாக திருமண் ஸ்ரீசூர்ணத்தின் மேல் குங்குமம் மற்றும் மஞசள் காப்பை இட்டுக்கொள்ளலாம? ப்ரணாமஙகள்
மஞ்சள்காப்பை சுமங்கலி ஸ்த்ரீகள் அவசியம் நெற்றியில் இட்டுக்கொள்ளலாம். திருமண் ஸ்ரீசூர்ணத்தின் மேல் மஞ்சள் காப்பையோ, குங்குமத்தையோ நிச்சயம் இட்டுக்கொள்ளலாம்.
ஆண்டாள் கோஷ்டி மட்டும் கத்ய த்ரயம் கோயிலில் சேவிக்கலாமா?
ஆண்டாள் கோஷ்டி மட்டுமே தனியாகச் சேவாகாலம் செய்வதோ, அவர்கள் சேவாகாலம் செய்வதென்பதே எந்தக் கோவிலிலும் வழக்கத்தில் இல்லை. பிற்காலத்தில் நூதனமாக ஏற்பட்டக் கோவில்களில் அவர்களும் சேர்ந்து ஸ்தோத்ர பாடங்களை சேவாகாலம் செய்வதென்பது ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் மட்டுமே கத்ய த்ரயம், ஸ்தோத்ரபாடங்கள், ப்ரபந்தங்கள் சேவிப்பதென்பது வழக்கத்தில் இல்லை.
ஸ்த்ரீகள் ஸுதர்ஶன ஶதகம் சேவிக்கலாமா?
ஸ்த்ரீகள் ஸுதர்ஶன ஶதகம் அவசியம் சேவிக்கலாம்.
பெண்களும் பிள்ளைகளும் தாயாரோடு இல்லை. தாயார் கைம்பெண். அவள் ஆகத்தில் கொலு வைத்து வெத்தலை பாக்கு வரவாளுக்குக் கொடுக்கலாமா?
இவர்கள் கொலு வைக்கலாம், ஆனால் வெற்றிலைபாக்கு நேரடியாகக் கொடுக்க முடியாது.
ரஜஸ்வலை காலத்தில் ஸ்த்ரீகள் எத்தனை நாடகள் ஸ்தோத்ரம்.ப்ரபந்தம் சேவிக்காமல் இருக்க வேண்டும்? ரஜஸ்வலையின் சமயம் பெண்கள் பின்பற்ற வேண்டிய அனுஷ்டானங்கள் பற்றி தனித் தலைப்பாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ரஜஸ்வலை ஆகிவிட்டோம் என்று தெரிந்த சமயம்முதல், மூன்று ராத்ரி கழிந்து நான்காவது நாள் தலைக்குத் தீர்த்தமாடி விட்டு உள்ளே வரும்வரை ஸ்தோத்ர, ப்ரபந்த பாடங்கள் சேவிக்கும் வழக்கமில்லை.
ரஜஸ்வலை காலத்தில் பல விஷயங்கள் கடைபிடிக்கவும், தவிர்க்கவும் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதில் முக்கியமான சிலவற்றை மட்டும் இதில் காணலாம்.
ரஜஸ்வலை கண்டக்ஷணம் முதல் விலகவேண்டும் என்பது ஶாஸ்த்ரம். அப்படி விலகி மூன்று ராத்ரி வெளியில் இருக்கவேண்டும். நான்காவது நாள் காலை தலைக்குத் தீர்த்தமாடிவிட்டு உள்ளே வரவேண்டும்.
இந்த மூன்றுநாள் தனியே என்பது, குறைந்தபக்ஷம் ஆறடி தூரத்தில் அகத்தில் இருப்பவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்.
அந்த மூன்றுநாளும், அந்த ஸ்த்ரீ உபயோகிக்கும் பாத்திரங்களும், தூணிகளும் தனியே வைத்துக்கொள்ள வேண்டும். அவைகளை நான்காவது நாள் குளிக்கும்போது நனைத்து உலர்த்த வேண்டும். அடுத்தமுறை உபயோகிக்கத் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கல்யாணம் ஆன பெண்மனி நான்காவது நாள் எல்லா கார்யம் பண்ண யோக்யதை உடையவளாய் இருக்கமாட்டாள். அன்றைக்கும் விழுப்பு போலேதான் அவள் நடந்துகொள்ள வேண்டும். பெருமாள் விளக்கேற்றுவது, உள்தொடுவது வழக்கமில்லை. அகத்து பெரியவர்கள் அன்று அவள் தொட்டுச் சாப்பிட மாட்டார்கள்.
ஒருவேளை குழந்தைகள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்றால்,அவர்களுக்குப் பண்ணி போடலாம், பாதகமில்லை.
ஐந்தாவது நாள் அந்யாதீட்டு குளித்தபின் எல்லாக் கார்யம் பண்ணும் யோகியதையை அவள் பெற்றுவிடுகிறாள்.
ரஜஸ்வலை ஒருகால் 5நாளுக்கு மேலும் நீடித்தால், விலகவேண்டிய அவசியமில்லை. 15 நாள் வரை பொதுவாக விலக அவசியமில்லை. 15நாளுக்கு மேல் விழுப்புக் கணக்கு, 18 நாளுக்கு மேல் வெளியே உட்கார வேண்டும்.
இதுவே பெரியவர்கள் நிர்வகித்த ஶாஸ்த்ரமாகும்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லாதவர்கள் (ஸ்மார்த்தர்கள்/ தேவதாந்தர சம்பந்தம் உடையவர்கள்) நவராத்ரி நேரம் தாம்பூலத்துடன் தரும் முழுத் தேங்காயை (ப்ரந்யாஸம் ஆனவர்கள்) தளிகைக்கு உபயோகிக்கலாமா? மேலும் அவர்கள் அளித்த மஞ்சள், பாக்கு போன்றவற்றை பெருமாள் சந்நிதியில் வைக்கலாமா?
தேவதாந்தரத்திற்கு ஸமர்பிக்கப்பட்ட வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் போன்றவற்றை நாம் உபயோகிப்பதில்லை.
தாம்பூலத்துடன் கொடுக்கும் முழுத்தேங்காயைத் தளிகைக்கு உபயோகிக்கலாம்.
குறிப்புகள்:
பொதுவாகவே பெருமாள் திருவாராதனத்திற்கு நாமே சம்பாதித்தை உபயோகிப்பதுதான் உசிதம்.
சுமங்கலித்தன்மையுடன் இருக்க வேண்டி ப்ரார்த்திக்க ஏதேனும் ஶ்லோகம் உண்டா?
சுமங்கலித்தன்மை நிலைத்து நிற்க ஸ்ரீகோ3தா3ஸ்துதினுடைய 22ஆவது ஶ்லோகம்
தூ3ர்வாத3ள ப்ரதிமயா தவ தே3ஹ காந்த்யா
கோ3ரோசநாருசிரயா ச ருசேந்தி3ராயா:।
ஆஸீத3நுஜ்ஜி2த ஶிகா2வள கண்ட2 ஶோப4ம்
மாங்க3ள்யத3ம் ப்ரணமதாம் மது4வைரிகா3த்ரம் ॥
மற்றும் லக்ஷ்மீஸஹஸ்ரத்தின் மங்க3லாக்2யஸ்தப3க த்தில் 12ஆவது ஶ்லோகம்
கந்யே து3க்3தோ4த3ந்வஸ்தாவகீநம்
மந்யே ரூபம் மங்க3லம் மங்க3லாநாம் ।
யத்ஸாவரண்யப்ராப்தபத்3ரா ஹரித்3ரா
ஸௌமங்க3ல்யம் ஸம்வித4த்தே வதூ4நாம் ॥
இந்த இரண்டு ஸ்லோகங்களையும் சேவிக்கலாம்.
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ஸ்த்ரீகள் சேவிக்கக்கூடாது என்று புரிகிறது. அதில் வனமாலி கதீ சார்ங்கி மற்றும் ஸ்ரீ ராம ராம ராமேதி போன்ற இரண்டு ஶ்லோகம் மட்டும் சேவிக்கலாமா?
ஸ்த்ரீகள், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும் வனமாலி கதீ சார்ங்கி மற்றும் ஸ்ரீ ராம ராம ராமேதி ஆகிய இரண்டு ஶ்லோகங்களும் சேவிக்கலாம்.
அடியேன் ஆத்தில் ப்ரத்யாப்திக ஶ்ராத்தத்திற்குத் தளிகை கைங்கர்யம் செய்கிறேன். அதற்கு ஸ்த்ரீகள் முதல்நாள் மற்றும் ஶராத்த நாளன்று கடைபிடிக்கவேண்டிய ஆசாரங்களை விளக்கவும்.
ஶ்ராத்தத்திற்குத் தளிகை பண்ண முதல்நாளிலிருந்தே சுத்தமாக இருத்தல் வேண்டும். முதல்நாளுக்கு ஒருபொழுது என்று பெயர். அன்று கொடியிலிருந்து மடி வஸ்த்ரம் உடுத்திக்கொண்டு, எம்பெருமானுக்கு பலவித போஜ்ய பதார்த்தங்களோடு தளிகை ஸமர்ப்பணம் செய்யவேண்டும்.
அதன்பின் அந்த ஸ்த்ரீயானவள் தான் சாப்பிடும் முன், மறுநாளுக்கு வேண்டிய பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, புளி-சாணம் போன்றவையின் கரைசலில் அப்பாத்திரங்களை எம்பெருமானின் த்வாதச திருநாமங்கள் சொல்லிக்கொண்டுச் சுத்தப்படுத்த வேண்டும். பின் அவற்றைச் சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும்.
பின்னர் வேண்டிய மளிகை சாமான்களைத் தனியாக வைத்தல் வேண்டும். மேலும் அவற்றைக் கொட்டாங்குச்சி அல்லது தொன்னையில் வைத்தல் நலம். ப்ளாஸ்டிக் போன்றவற்றைத் தவிர்த்தல் வேண்டும். எண்ணெய் போன்றவற்றைத் தனியாக பாத்திரங்களில் எடுத்து வைத்தலும் நலம். ஶ்ராத்தத்திற்கென்று அனுமதிக்கப்பட்ட காய்கறிகளை முதல்நாளே வாங்கி வைக்கவேண்டும் ஆனால் நறுக்கி வைத்தல் கூடாது. முக்கியமாக பாகற்காய், சேப்பங்கிழங்கு, வாழைக்காய் இருக்கவேண்டும். பலாமுசு, விளாம்பழம் இருந்தால் விசேஷம். சர்க்கரைவள்ளிக்கிழங்கு, புடலங்காய், கொத்தவரங்காய் என அனுமதிக்கப்பட்ட காய்கள் எத்தனை முடியுமோ அத்தனை சேர்த்துக்கொள்ளலாம். பலாமுசு ஒன்று செய்தால் 16 காய்கள் சேர்த்துக்கொண்டதிற்குச் சமம் என்பார்கள். இப்படியாக காய்கறிகளை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மாலை சூர்ய அஸ்தமனத்திற்குப் பின் மறுநாள் உடுத்திக்கவேண்டிய வஸ்த்ரத்தை ஆசாரமாகத் துவைத்துக் கொடியில் சுத்தமாக தனக்கும் பர்தாவிற்கும் சேர்த்து உலர்த்த வேண்டும். அதேபோல் போக்தாக்களுக்கும் ஆசாரமாகத் துவைத்து சுத்தமாக உலர்த்தி வைத்தல் வேண்டும்.
மறுநாள் ஶ்ராத்தத்தன்று சூர்யோதயத்திற்குப் பின் தலைக்குத் தீர்த்தமாடிய பின் ஶ்ராத்த கார்யங்கள் ஆரம்பிக்க வேண்டும். மிகவும் சுத்தியோடு, பட்டினியாகத் தீர்த்தம் கூட அருந்தாமல் செய்தல் வேண்டும். கறிகாய்களைச் சுத்தமாக புது ஜலத்தில் அலம்பி, தேங்காய் போன்றவற்றைத் துருவி, காய்கறிகளை நறுக்கி சுத்தமான இடத்தில் வைக்கவேண்டும்.
முதல்நாள் சுத்திசெய்த பாத்திரங்களை மீண்டும் புது ஜலத்தில் அலம்பிவிட்டு அப்பாத்திரங்களை உபயோகப்படுத்தலாம். ஶ்ராத்தத் தளிகையைப்பற்றி ஆத்துப் பெரியவர்கள் பொதுவாக சொல்லிக்கொடுப்பார்கள். பயத்தம்பருப்பை தான் உபயோகிக்க வேண்டும். பாகற்காய் குழம்பு அல்லது சுண்டைக்காய் குழம்பு, பிரண்டை துவையல் (மிகவும் முக்கியம்), ஐந்து அல்லது ஏழு வகை காய்கறிகள் பண்ணலாம். அப்பம், வடை, எள்ளுப்பொடியோ/எள்ளுருண்டையோ அவசியம் இருத்தல் வேண்டும். இதைத்தவிர அவரவர் க்ருஹ வழக்கப்படி தேங்குழல், சீயம், சொஜ்ஜியப்பம் என பல போஜ்யபதார்த்தங்கள் பண்ணலாம். திருக்கண்ணமுது அவசியம் இருத்தல் வேண்டும். பச்சடிகளும் சேர்க்கும் வழக்கம் உண்டு.
இப்படியாக ஶ்ரத்தையுடன் தளிகைபண்ணி முடித்தபின் பர்தாவிற்கும் ஒத்தாசையாக இருக்க வேண்டும். அக்னி சேர்க்கவும், ஔபாசனத்திற்கும் கூப்பிடும்போது போகவேண்டும். பெருமாள் திருவாராதன பாத்திரங்கள் எல்லாம் சுத்திசெய்து வைத்தல் வேண்டும். பெருமாளுக்கு அம்சை பண்ண பதார்த்தங்களை, பாத்திரங்களை மாற்றி வைத்தல்வேண்டும். அதற்குப்பின் ஶ்ராத்தத்தின் போது என்ன கேட்கிறார்களோ அதைக் கொடுத்தல் வேண்டும்.
போக்தாக்களுக்குச் சாப்பிட சாதிப்பதென்பது மிகவும் பாக்யமான மற்றும் அவசியமான கார்யம். சாப்பிட சாதிக்கும்போது போக்தாக்களுக்கு இரண்டு இலைகளாகச் சேர்க்க வேண்டும், பக்கத்தில் தொன்னை வைக்கவேண்டும். எப்படிப் பரிமாறுவது என்பதை ஆத்துப் பெரியவர்கள் சொல்லிக்கொடுப்பார்கள். முதலில் இலையின் குறுக்கே நெய் சாதிக்க வேண்டும். பின் அன்னத்தை ஒரு பிடியாக உடையாமல் சாதிக்க வேண்டும். அன்னம், பாயசம், பக்ஷ்யம் என்ற வரிசையில் சாதிக்க வேண்டும். அதன் பின் நெய், பின் பருப்பு (ஶுபம்) அதன் பின் மேலே சில கார்யங்களுக்குப் பின் மற்ற பதார்த்தங்களை ஒவ்வொன்றாக சாதிக்க வேண்டும். போக்தாகளுக்கு சாற்றமுது, திருக்கண்ணமுது போன்ற இரண்டும் அவசியம் சூடாக சாதிக்க வேண்டும். வெந்நீர் பதப்படுத்தி வைத்து அதைப் பருக கொடுத்தல் ரொம்ப உசத்தி (உஷ்ணோதகம்). வேண்டுமா வேண்டுமா என்று கேட்டு கவனித்து சாதிக்க வேண்டும், போக்தாக்கள் சாப்பிடும்போது பேச மாட்டார்கள்.
போக்தாக்கள் அமுதுசெய்து முடித்தபின் சில ப்ரக்ரியைகள் இருக்கும். அதன் பின் அந்த இலையை பத்திரமாக எடுத்து மண்ணில் புதைக்கவேண்டும். நாய்போன்ற எந்தவிதமான ஜந்துக்களும் தீண்டாமல் இருக்க இலையை புதைக்க வேண்டியது மிகவும் முக்கியம் அப்போதுதான் ஶ்ராத்தம் பூர்த்தியாகும். எப்போது பெரியவர்கள் சொல்கிறார்களோ அப்போதுதான் எச்சல்பிரட்ட வேண்டும்.
அதேபோல் அவர்கள் சேவிக்கச் சொல்லும்போது சேவிக்க வேண்டும்.
பாயச பிண்டம், ஷட்பிண்டம் என அதாவது பெரிய உருண்டை, ஆறு உருண்டைகள் என சிலது கேட்பார்கள். அவற்றைச் சாதத்தால் பிடிக்கவேண்டும் அதையும் பெரியவர்கள் சொல்லிக்கொடுப்பார்கள்.
இப்படியாக எந்த கார்யம் சொன்னாலும் முகம் சுழிக்காமல்,மிகவும் ஆசையுடன் செய்தல் வேண்டும். ஶ்ராத்த கார்யம் என்பது கஷ்டமான கார்யம்தான் இருப்பினும் மிகவும் ஶ்ரத்தையுடன், ஆசையுடன் செய்தல் வேண்டும் , அதில் நமக்கும் ஒரு மனநிறைவு ஏற்படும்.
நமஸ்காரம், சூரிய உதயத்திற்கு முன் சிரோஸ்நானம் பண்ணக்கூடாதா? அப்போ வேலைக்குச் சீக்கிரம் போகும் ஸ்த்ரீகள் என்ன செய்வது.
தீபாவளியைத் தவிர மற்றைய தினங்களில் சூர்யோதயத்திற்கு முன் சிரோஸ்நானம் செய்தல் (எண்ணெய் தேய்த்து குளிக்க) கூடாது.
வேலைக்குப்போகும் ஸ்த்ரீகள், என்று விடுமுறை தினம் இருக்கின்றதோ அன்று சூர்யோதயத்திற்குப் பின் சிரோஸ்நானம் பண்ணலாம்.
வேறுவழியில்லாத சமயம் ஏதேனும் விசேஷ தினம் அல்லது வெள்ளிக்கிழமையாக இருக்கின்றது என்றால், சூர்யமண்டலத்தில் இருக்கும் எம்பெருமானை த்யானித்து “பெருமாள் திருமொழி 2.2 பாசுரத்தை”, இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பாசுரத்தைச் சொல்லி, புண்டரீகாக்ஷன் என்ற திருநாமத்தையும் சொல்லி, எம்பெருமான் சூர்யனில் இருக்கிறார் என்று நினைத்து ஸ்நானம் பண்ணலாம். ஆனால் இது இரண்டாம் பக்ஷம்தான்.
பெண்களுக்கு மாதம் வரும் தீட்டு இரவு எத்தனை மணிக்கு மேல் வந்தால் அடுத்த நாள் கணக்காக கொள்ளவேண்டும்?
இரவு ஒருமணி வரை அன்றைய தின கணக்கு அதன் பின் ஆனால் அடுத்தநாள் கணக்கு.
திருமாங்கல்ய சரடை பொதுவாக நாள் பார்த்து மாற்றிக்கொள்ளலாமா? இது சரியா?
திருமாங்கல்ய சரடை நாள் பார்த்து மாற்றிக்கொள்ளலாம் என்பது சரிதான்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் தவிர்த்து, மற்றைய நாட்களில் ராகுகாலம் எமகண்டம் இல்லாத நேரமாகப் பார்த்து மாற்றிக்கொள்ளலாம்
இரவு நேரங்களில் தினமும் சுமங்கலிகள் குழந்தைகள் கண்டிப்பாக சாதம் சாப்பிடவேண்டுமா?
இரவு நேரங்களில் தினமும் சுமங்கலிகள் குழந்தைகள் கண்டிப்பாக சாதம் சாப்பிடவேண்டும் என்ற நியமங்கள் கிடையாது. ஆனால், சில பேருக்கு சில தினங்களில் (அமாவாஸை போன்ற தினங்களில்) பலகாரம் உண்டு. அந்த நியமங்கள் குறிப்பாக சுமங்கலி ஸ்த்ரீகளுக்குக் கிடையாது.
அதனால் இரவில் கண்டிப்பாக சாதம் சாப்பிட வேண்டும் என்று கிடையாது. பலகாரம் பண்ணவேண்டிய அவசியமில்லை என்பதாலும், பலகாரம் என்று ஆகிவிடுமே என்ற பயத்தினாலும் சாதம் சாப்பிட வேண்டும் என்பதாகச் சொல்வதுண்டு. இன்றும் சில க்ருஹங்களில் கண்டிப்பாக சாதம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள், அதில் தவறில்லை. இது ஶாஸ்த்ரம் இல்லையென்றாலும் ஒருவிதமான ஜாக்கிரதை உணர்வு என்று சொல்லலாம்.
ஆடிப்பண்டிகையின் போது ஸ்த்ரிகள், குழந்தைகள் எண்ணெய் ஸ்நானம் பண்ணலாமா?
ஆடிப்பண்டிகையின் போது குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து விடலாம்., தக்ஷிணாயன புண்யகாலம் பிறப்பதினால் ஸ்த்ரீகள் தீர்த்தமாடுதல் (தலைக்கு) வழக்கம் என்று சிலர் சொல்லுவர்கள். சில க்ருஹங்களில் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்யலாம் என்று சில பெரியவர்கள் சொல்லுவார்கள்.
அவரவர் க்ருஹ வழக்கத்தைப் பின்பற்றவும்.
நமஸ்காரம், வேலைக்குச் செல்லும் ஸ்த்ரீகள் தவிர்க்காமல் அனுஷ்டிக்க வேண்டியவை என்று ஏதேனும் உள்ளதா?
வேலைக்குச் செல்லும் ஸ்த்ரீகளுக்கு, செல்லாத ஸ்த்ரீகளுக்கென்று தனித்தனி தர்மங்கள் கிடையாது. பொதுவான ஸ்த்ரீ தர்மத்தை எல்லா ஸ்த்ரீகளும் அனுஷ்டிக்க வேண்டியது. அதை வேலைக்குச் செல்லும் ஸ்த்ரீகளும் அனுஷ்டிக்க வேண்டும்.
வேலைக்குச் செல்லும் எத்தனையோ ஸ்த்ரீகள் அதை அனுஷ்டித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் அதனால் பெரிய பாதகம் ஒன்றும் இருக்காது.
ஸ்திரீகள் சாளக்கிராமத்தைத் தொடக்கூடாது என்கிறார்கள். அடியேனின் தாயார் கூறியதாவது, என் பாட்டி பெருமாள் ஏளியிருக்கும் பெட்டியைச் சுத்தம் செய்யும் சமயம் பெருமாளைத் தொடுவார் என்றார். பாட்டி அப்படிச் செய்ததால் பெருமாளின் சாநித்யம் குறைந்து போய்விடுமா? என்பது அடியேனின் சந்தேகம். மேலும் அடியேன் தொடர்ந்து அந்தப் பெருமாளுக்கு திருவாராதனை செய்யலாமா?
ஸ்த்ரீகள் சாளக்கிராமத்தைத் தொடக்கூடாது. கேள்வி கேட்டிருப்பவருடைய பாட்டி சாளக்கிராமத்தைத் தொடநேர்ந்ததாகச் சொல்கிறார், அதனால் சாளக்கிராமத்திற்கு சாநித்யம் குறையாது. ஆனால் ஸ்த்ரீகள் தொடும் வழக்கமில்லை. மேலும் பெரியோர்கள் சாளக்கிராமத்திற்குத் திருவாராதனை பண்ணுவதற்காக கையில் ஏளப்பண்ணிக்கொள்ளும் பொழுது ஸம்ஸ்காரங்களைச் செய்துவிட்டு எடுத்துக்கொள்வார்கள். பாலால் திருமஞ்சனம், மற்றும் என்னென்ன செய்ய வேண்டுமோ அதைப் பண்ணி விட்டு எடுத்துக்கொள்வார்கள்.
அன்று பாட்டி பண்ணினாளே என்று, அதை ஒரு முன்னோடியா வைத்துக்கொண்டு அதே மாதிரி தொட்டுத் திருவாராதனை பண்ணுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளக் கூடாது. சாளக்ராமத்தை ஸ்த்ரீகள் மானசீகமாக அம்சை பண்ணி பூஜை பண்ணலாம். சாளக்கிராம மூர்த்தி இருக்கக்கூடிய பெட்டியைச் சுற்றி துடைத்து, கோலம் போட்டு, சுற்றிவர புஷ்பத்தால் அலங்காரம் பண்ணி , விளக்கு ஏற்றி வைக்கலாம். மற்றபடி அதைத் தொட்டு திருவாராதனம் பண்னுவது என்பது ஸ்த்ரீகள் பண்ணக்கூடாது.
ரஜஸ்வலை காலங்களில் உபன்யாசங்கள், நாமசங்கீர்த்தனங்கள் கேட்கலாமா? டிஜிட்டல் க்ரந்தங்களை வாசிக்கலாமா?
ரஜஸ்வலை காலங்களில் உபன்யாசங்கள், நாமசங்கீர்த்தனங்கள், டிஜிட்டல் க்ரந்தங்கள் இவற்றை எல்லாம் பார்க்கவோ, கேட்கவோ, வாசிக்கவோ கூடாது. அது வழக்கத்தில் இல்லை. பாக்கி எல்லாக் காலங்களும் இருக்கும் பொழுது அந்தச் சமயங்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த மூன்று நாட்களில்தான் அதை வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற அவசியமில்லை. அதனால் அந்தச் சமயத்தை தவிர்த்து மற்றச் சமயங்களில் எல்லா விஷயங்களிலும் ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.
ஸ்த்ரீகள் ரஜஸ்வலை காலத்தில் ஸ்லோகங்களைச் சொல்லலாமா? அப்படிச் சொல்வதாக இருப்பின் எந்தெந்த ஸ்லோகங்களை சேவிக்கலாம்? நன்றி தாஸன்
ரஜஸ்வலை காலத்தில் ஸ்லோகங்கள் சொல்லக்கூடாது. அது வழக்கத்தில் இல்லை. த்வய மந்த்ரத்தை எப்பொழுது வேண்டுமானாலும் அனுஸந்தானம் பண்ணலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது நிஷித்தம் இல்லையே தவிர அதற்காக அதை உட்கார்ந்து கொண்டு அனுஸந்தானம் பண்ணுவது என்பது உத்தம கல்பம் இல்லை.
ஆபத்து காலத்தில் சொல்லலாம் , அதைப் பற்றி ஒன்றும் இல்லை. அதற்காக அந்தச் சமயத்தில் தான் த்வயம் சொல்ல வேண்டும் என்பது கிடையாது. அந்தச் சமயத்தில் நிஷேதிக்கப்படவில்லை என்றாலும் சொல்வது உத்தமகல்பம் இல்லை.
ஸ்த்ரீகள் பொதுவாக அனுஷ்டிக்க வேண்டிய நியமங்கள்/தர்மங்கள் என்னென்ன? தீர்த்தாமாடுதல், ஆஹாரம், பெருமாள் விள்ளக்கேற்றுதல் போன்றவை தொடங்கி நித்யமும் என்னென்ன கடைபிடிக்க வேண்டும் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
ஸ்த்ரீகள் பொதுவாக அனுஷ்டிக்க வேண்டிய தர்மங்கள் பற்றி விரிவான காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ள SUDARSANAM YouTube Channelலில் வெளியிடவுள்ளோம் அதை பார்க்கவும்.
https://www.youtube.com/c/SudarsanamGSPK
பெண்கள் கம்பராமாயணம் சேவிக்கலாமா? அடியேன்
ஸ்த்ரீகள் கம்பராமாயணம் சேவிக்கலாம்.
பெண்கள் ரஜஸ்வலை 5ம் நாளிலிருந்து ரஜஸ்வலை நீடித்தாலும் கோயிலுக்கு செல்லலாமா? அடியேன்
ரஜஸ்வலை காலம் ஐந்து நாட்களுக்குப் பின் நீடித்தாலும் எல்லாக் காரியங்களும் பண்ணலாம் என்று தான் ஶாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கின்றது. ஆனாலும் அவரவர் மனதிற்கு எப்படிப் படுகின்றதோ அப்படிப் பண்ணலாம். கோவிலுக்குப் போகவேண்டாம் என்று தோன்றினால் போகாமல் தவிர்க்கலாம். அதில் ஒன்றும் தப்பு கிடையாது. போகக்கூடாது என்று விதி கிடையாது.
பண்டிகை, ஶ்ரார்த்தம் போன்ற நாட்களில் சுமங்கலி ஸ்த்ரீகள் குங்குமத்தினால் திலகம் இட்டுக்கொள்ள வேண்டுமா, ஸ்ரீசூர்ணத்தில் இட்டுக்கொள்ள வேண்டுமா, நெற்றிவகுடு துவக்கத்தில் குங்குமம் இட்டு கொள்வது ஸம்ப்ரதாயபடிச் செய்யலாமா.
பண்டிகை, ஶ்ராத்தம் போன்ற நாட்களில் சுமங்கலிகள் திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ளவது உத்தமம். அந்த ஸ்ரீசூர்ணம் என்பது பொதுவாக சிகப்பு ஸ்ரீசூர்ணமாக இருக்கும். குங்குமத்தைக் குழைத்து இட்டுக்கொள்வதும் சிலர் வழக்கத்தில் உள்ளது.
திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ளவது என்பது என்றைக்கு ஸமாஶ்ரயணம் ஆகின்றதோ அன்றைக்கு புண்ட்ர சம்ஸ்காரம் பண்ணும்பொழுது ஆசார்யாள் மஞ்சள் ஸ்ரீசூர்ணத்தையே இட்டு விடுவார்கள், அது அன்றைக்கு மட்டுமே என்று சொல்வார்கள். அதற்கு மேல் சிகப்பு ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ள சொல்வது வழக்கம்.
அதையே ஸ்த்ரீகள் கடைபிடிக்கலாம். சிகப்பு ஸ்ரீசூர்ணமோ அல்லது குங்குமமோ தினமும் இட்டுக்கொள்ளலாம்.
பண்டிகை, ஶ்ராத்தம் நாட்களில் அவசியம் இட்டுக்கொள்ள வேண்டும்.
அதே போல் வகிட்டில் துவக்கத்தில் குங்குமம் வைத்து கொள்ளவது தவறு கிடையாது. ஶாஸ்த்ரப்படி அதில் ஒன்றும் விரோதமில்லை. நேரடியாக வகிட்டு வரை ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டுவிட்டால் அந்தக் கவலையே கிடையாது. அப்படி ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ளாமல் திலகம், பொட்டு வைத்துக்கொள்ளும் பக்ஷத்தில் வகிட்டில் குங்குமம் இட்டுக்கொல்வது வழக்கத்தில் இருக்கின்றது.
மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் ஆசார்ய உபதேசம் பெற்று தான் சேவிக்க வேண்டுமா? ஸ்த்ரீகள் சேவிக்கலாமா?
சிலர் சேவிக்கலாம் என்றும், சிலர் சேவிக்கக்கூடாது என்கின்ற பக்ஷத்திலும் இருக்கின்றனர். அதனால் அவரவர் ஸதாசார்யர்கள் என்ன சொல்கின்றாரோ அதன்படி கேட்டு நடந்துகொள்வது உசிதம்.
எந்த ஒரு ஸ்தோத்ரத்தையோ அல்லது ப்ரபந்தத்தையோ சேவிப்பதாக இருந்தால் சந்தை சொல்லிக் கொண்டு சேவிப்பது சரியான முறையாக இருக்கும்.
என் மகளுக்கு ஹார்மோன் சார்ந்த பிரச்சனை இருக்கிறது, இது குணமடைய வேண்டி எம்பெருமானிடம் ப்ரார்த்திக்க ஏதேனும் ஶ்லோகம் இருக்கிறதா?
ஹார்மோன் ப்ரச்சனைகள் தீர்வடைய கருட பஞ்சாஶத்தை சேவிக்கலாம். கருட பஞ்சாஶத்தினுடைய பலஶ்ருதியில் எல்லா விதமான வியாதிகள், வியாதிகளுக்கு காரணமான மனசளவில் இருக்கின்ற பாதிப்புகள், இதனை ஆதி என்று சொல்வார்கள், இவை அனைத்தையுமே குணப்படுத்தக்கூடிய திறன் இந்த ஸ்தோத்ரத்திற்கு உண்டு என்று ஸ்வாமியே சாதித்திருக்கிறார். அதனால் கருட பஞ்சாஶத்தை சேவித்தால் அவசியம் நிவர்த்தி கிடைக்கும்.
ஸ்த்ரீகள் சாளக்கிராம மூர்த்தியைத் தொட்டு திருவாராதனம் பண்ணக்கூடாது என்று சுதர்சனம் மூலம் அறிந்துகொண்டேன். ஆனால் ஆண்டவன் ஆஶ்ரமம் வெளியிட்டுள்ள ஸ்த்ரீ திருவாராதனம் செய்யும் முறையில் அனைத்து குறிப்பும் அதாவது ஸ்த்ரீகள் பெருமாளை தொட மந்திரம் உட்பட எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எதை பின்பற்றுவது என்று குழப்பமாக உள்ளது.
ஸ்த்ரீகள் சாளக்கிராம மூர்த்தியைத் தொட்டு திருவாராதனம் பண்ணுவது என்பது வழக்கத்தில் இல்லை. புருஷர்களே தொட்டு ஆராதனம் பண்ணுவது வழக்கம்.
புருஷர்கள் அகத்தில் இல்லாத சமயங்களில் ஸ்த்ரீகள் சாளக்கிராமத்திற்குத் தளிகை பண்ணி அம்சை பண்ணலாம். சாளக்ராமத்தைச் சுற்றி இருக்கும் இடத்தை துடைத்து சுத்தம் செய்து, கோலம் போட்டு, விளக்கேற்றி வைக்கலாம். இதுவே விதிக்கப்பட்ட விஷயங்கள். வேறு புஸ்தகங்களில் வேற மாதிரி எழுதி இருக்கு என்றால் அது எந்த யுக தர்மத்தை எப்படி எழுதி இருக்கின்றனர் என்பதை எல்லாம் பார்த்து ஆராய்ந்து சரியாக புரிந்துகொள்ள வேண்டும். என்ன எழுதபட்டிருக்கிறது என்பதை விட என்ன அனுஷ்டானத்தில் இருக்கின்றது என்பதை முன்னிட்டு தான் பல ஸம்ப்ரதாய வழக்கங்கள் இருந்து கொண்டு வருகின்றன.
வழக்கத்தில் ஸ்த்ரீகள் சாளக்கிராமத்தை தொடுவது என்பது கிடையாது.
எங்கள் அகத்தில் எப்போதும் படுக்கையில் படுக்கும் வயதானவர்கள் இருக்கா. சிறு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு அல்பசங்கை போக உதவ வேண்டி இருக்கும். இதுபோன்றவைகளால் ஏற்படும் விழுப்புடன் மாலை பெருமாள் விளக்கு ஏற்றலாமா? இல்லை குளித்துவிட்டு தான் விளக்கேற்ற வேண்டுமென்றால் சாயங்காலம் (சூர்யாஸ்தமனத்திற்கு பின்) பெண்கள் குளிக்கலாமா?
விழுப்பாக நேர்ந்து விட்டது என்றால் சாயங்காலம் விளக்கேற்றுவதற்காக நேரடியாக தீர்த்தமாட வேண்டிய அவசியமில்லை. ஸ்நானத்தில் பல விதங்கள் உண்டு என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் மந்த்ரஸ்நானம் என்று ஒரு வகை. ஸ்திரீகளுக்கு அதை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்று இருக்கின்றது.
அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், சுமங்கலி ஸ்த்ரீகள் மஞ்சள் பொடியை ஜலத்தில் கரைத்து கொண்டு அதை தாடை, கைகள், கால்கள், திருமாங்கல்யத்தில் தடவிக் கொண்டு , பின் ப்ரோக்ஷித்து கொண்டு புண்டரீகாக்ஷய நம: என்று உச்சரிக்க வேண்டும். கூடவே பெருமாள் திருமொழியில் இரண்டாவது பதிகத்தில்
" தோடுலாமலர்மங்கைதோளிணைதோய்ந்ததும் சுடர்வாளியால் *
நீடுமாமரம்செற்றதும்நிரைமேய்த்ததும் இவையேநினைந்து*
ஆடிப்பாடிஅரங்கவோ!என்றழைக்கும் தொண்டரிப்பொடி
ஆடநாம்பெறில் * கங்கைநீர்குடைந்தாடும் வேட்கைஎன்னாவதே? "
என்று வரும் இரண்டாவது பாசுரத்தையும் அனுசந்தானம் பண்ணலாம். இது ஸ்திரீகளுக்கு சொல்லப்பட்ட மந்த்ரஸ்நானமாகும். இதை பண்ணிவிட்டு விளக்கேற்றலாம். எந்தச் சமயத்திலும் வெளியில் சென்று விட்டு வந்தபின் தீர்த்தமாடுவதற்கு பூர்த்தியாக நேரமில்லை அகாலமாக இருக்கின்றது என்றால் இந்த மாதிரி ஒரு அனுஷ்டானத்தை பண்ணுவது பெரியோர்கள் வழக்கத்தில் இருக்கின்றது.
பார்த்தாவை இழந்த ஸ்த்ரீகள் நெற்றிக்கு (திருமண் ஸ்ரீ சூரணம்) எவ்வாறு இட்டுக்கொள்ள வேண்டும்?
பர்த்தாவை இழந்த ஸ்த்ரீகள் நெற்றிக்கு மஞ்சள் ஸ்ரீசூர்ணத்தையும் , வெள்ளை திருமண்ணையும் தரிப்பது அந்த காலத்தில் வழக்கமாக இருந்திருக்கின்றது.