சுபகிருது – ஆடி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்


ஆஹார நியமப்படி பொதுவாக நிஷித்தமான காய்கறிகள், பழங்கள் எவையெவை என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன் (தர்பூசணி, தக்காளி, முருக்கை போன்றவை).

Vidwan’s reply:

தர்பூசணி தக்காளி இவை இரண்டையும் சில பேர் சேர்த்துக்கொள்கிறார்கள். சில பேர் சேர்த்துக் கொள்வதில்லை. மிகவும் ஆசாரமாக இருக்கிறவர்கள் இவற்றையெல்லாம் சேர்த்துக் கொள்வதில்லை. அதைத் தவிர முருங்கை, வெங்காயம், முள்ளங்கி, முட்டைக்கோஸ் முதலானவையெல்லாம் அடியோடு கூடவே கூடாது என்பதாக எல்லாருமே விட்டிருக்கிறார்கள்.


பூண்டு போன்ற நிஷித்த வஸ்துவை மருந்தாக உட்கொள்ளலாமா? (இருமல், சளி போன்ற சமயம் பூண்டு பால் நல்லது என்பார்கள்)

Vidwan’s reply:

மருந்து ரீதியாக சளி, இருமல் போவதற்கு பூண்டு எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் சளி, இருமல் போவதற்கு நிறைய மாற்று மருந்துகள் இருக்கின்றன.

திருத்துழாயைப் போல் சளி இருமலை நீக்கக்கூடிய மருந்தே கிடையாது. அதனால் அதனை க்ரஹித்தாலே நன்கு நிவாரணம் கிடைக்கும். இதைத்தவிர எத்தனையோ மருந்துகள் இருக்கின்றன. அவற்றை எடுத்துக்கொள்ளலாம். சளி இருமலுக்காக பூண்டுதான் சாப்பிடணும் என்று நிச்சயமாக கிடையாது. ஏனென்றால் இவையெல்லாம் நிஷேதிக்கப்பட்ட உணவுகள்.

எப்படி நமக்கு உடல் ஆரோக்கியம் முக்கியமோ அதே போல் மனதிலும் சத்புத்தி ஏற்படுவது மிகவும் முக்கியம். இந்தமாதிரி தாமஸமான ஆகாரங்களைச் சாப்பிட்டோமேயானால் அது நமது மனதை மிகவும் பாதிக்கும். மேலும் நமது ஶ்ரத்தையை மிகவும் குறைக்கும். அதனால் இவற்றையெல்லாம் தவிர்ப்பது நல்லது.


ஶரணாகதி செய்து கொண்ட தம்பதியர் ஶஷ்டியப்தபூர்த்தி செய்து கொள்ளலாமா? எந்த முறையில் செய்தால் உசிதம்? அடியேன் திவ்ய தேசங்களில் வசிக்கிறோம். கிராமமாக இருப்பதால் இதர தேவதை கோயில்கள் உள்ளன. அதற்கு நிதி கேட்கிறார்கள்.பகவத் ஆராதனமாக குடுக்கலாமா? சிலபேர் புரிந்து கொள்வதில்லை. அடியேன் வடகலை. இங்கு தென்கலை கோயில் உள்ளது தினமும் பெருமாள் சேவிக்கிறேன். தென்கலை கோயில்களில் இதர தேவதைகள் இருக்கிறது. அதனால் அந்தக் கோயிலுக்குப் போலாமா?

Vidwan’s reply:

ஶரணாகதி செய்து கொண்ட தம்பதிகள் ஶஷ்டியப்தபூர்த்தி தாராளமாகச் செய்து கொள்ளலாம். அது சூத்திரத்தில் சொல்லி இருக்கக்கூடிய விஷயம். எந்த முறையில் என்றால், வேத மந்திரங்கள் சொல்லி, கும்பம் வைத்து, செய்யவேண்டும். இதில் பெரிய நியமம் ஒன்றும் கிடையாது. ஸ்ரீ வைஷ்ணவ வாத்தியார்களைக் கேட்டால் அவர்கள் அழகாக செய்துவைப்பார்கள். அவர்களுடைய சௌகர்யத்துக்கு ஏத்த மாதிரியாக நாம் செய்யலாம். முக்கியமாக ஆசார்ய ஸம்பாவனை, அக்ஷதை ஆசீர்வாதம், திருமாங்கல்ய தாரணம், ஔபாசனம் இதெல்லாம் அதில் இருக்க வேண்டும்.

கிராமக் கோயில்களிலே இதர தேவதைகள் இருக்கின்றன. இதற்கு நிதி கொடுப்பதில் சங்கடங்கள் உண்டு. சில சமயம் வேறு வழியில்லாமல் ஊரோடு ஒத்துவாழ் என்கின்ற ரீதியிலே கொடுக்க வேண்டியிருக்கும். தவிர்க்க முடியாமல் இருந்தால் வேறு வழியில்லை. ஶாஸ்த்ரம் ஒற்றுக்கொள்ளுமா என்று பார்ப்பதைவிட, அந்த நிலைமைக்கு ஏற்ற மாதிரி செய்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஏனென்று கேட்டால், நாமே கேபிள்டிவி போன்று எத்தனையோ நியாயம் இல்லாத செலவுகள் செய்கின்றோம். அந்த ரீதியில் ஏதோ செலவோடு செலவாக இதுவும் போயிற்று என்பதாக வைத்துக் கொள்ளலாம். முடிந்தவரை தவிர்க்க பார்க்கலாம். அதேபோல் கோவில்களில் இதர தேவதைகள் இருந்தால்கூட, நம் பெருமாளை மட்டும் முடிந்தால் சேவிக்கலாம்.


ஒருவர் தன் சிறுவயதிலேயே ப்ரபத்தி செய்துவிட்டார். அதன் பின் அறிந்தும் அறியாமலும் அவர் பல பாபங்கள் செய்கிறார். அப்படியிருக்க அடியேன் புரிந்துகொண்டவரை அறியாமல் செய்த பாபங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால் அவர் தெரிந்துச்செய்த பாபத்திற்கு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்தால் தான் மோக்ஷத்திற்குத் தடை ஏற்படாது. அடியேனின் இந்தப் புரிதல் சரியா ஸ்வாமி? மேலும் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்யாவிட்டால் என்ன ஆகும் ஸ்வாமி?

Vidwan’s reply:

சிறு வயதிலேயே ப்ரபத்தி பண்ணிக்கொண்டு அதற்கு பிறகு நிறைய பாபங்கள் ஏற்பட்டு, அந்தப் பாபங்களில் தெரிந்து செய்கின்ற பாபங்களால் மோக்ஷம் தடைபடுமா என்றால் நிச்சயமாக தடைபடாது. ப்ரபத்தி பண்ணிக்கொண்டு விட்டால் அது அவசியம் மோக்ஷத்தை அளிக்கும்.

இரண்டே இரண்டு விஷயங்கள் தான் ஆபத்து தரக்கூடியது. ஒன்று தேவதாந்தர சம்பந்தம். மற்றொன்று பாகவத அபசாரம். இவை இரண்டையும் அவசியம் தவிர்க்கணும். இவை தவிர்த்தால் போதும் மீதி வேற பாபங்கள் என்ன ஏற்பட்டாலும் அது ப்ரபத்திக்கு பாதகமாக ஆகாது.

மேலும் தெரியாது செய்த பாபங்கள் ஒட்டாது. தெரிந்து செய்கின்ற பாபங்கள் அதாவது புத்திபூர்வ உத்ராகங்கள் எனச் சொல்லப்படும் பாபங்களுக்கெல்லாம் எம்பெருமான் லகு தண்டனை அளிப்பான். அந்தத் தண்டனை எல்லாம் அனுபவித்து முடித்த பிறகு ப்ரபத்தி நிச்சயம் பலிக்கும். இந்த லகு தண்டனை அனுபவிக்க வேண்டாம் என்று நினைத்தால் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக்கொள்ளலாம். அப்படி பண்ணிக்கொண்டால் இந்தப் பாபங்கள் எல்லாம் நீங்கி மோக்ஷத்தை அடையலாம். ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக்கொண்டு தான் ஆகவேண்டும் என்கின்ற நிச்சயம் கிடையாது. ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணவில்லை என்றாலும் மோக்ஷார்த்த ப்ரபத்தி பண்ணியதால் மோக்ஷம் நிச்சயமாக கிடைக்கும்.


பரிசேஷனத்துக்கு நெய் சேர்க்கும்போது இரண்டு தடவை சேர்க்க வேண்டும் என்று கேள்விப்பட்டேன். சரியா என்று தெரிவிக்கப் பிரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

பரிசேஷனத்தின் போது இரண்டு தடவை நெய் சேர்க்க வேண்டும் என்கின்ற நியமங்கள் கிடையாது. இது ஒரு உபசாரம் என்கின்ற ரீதியில் சில பேருக்கு இரண்டு தடவை சேர்ப்பார்கள், அவ்வளவே. நெய் சேர்க்க வேண்டும் என்பது மட்டுமே உண்டு.


1.பூஜை அறையில் ஸ்வாமி படங்களை எந்தத் திசை நோக்கி இருக்கக்கூடாது?

2.பித்ரு படங்கள் எந்தத் திசை நோக்கி இருக்க வேண்டும்?

Vidwan’s reply:

பூஜை அறையில் பெருமாள் படங்களை எந்தத் திசையை நோக்கி வேண்டுமானாலும் மாட்டி வைக்கலாம்.

பித்ருக்களுடைய படங்களை பூஜை அறையில் வைக்க வேண்டுமானால் பெருமாள் படங்கள் இருக்கின்ற நிலையை விட, ஒரு நிலை கீழே அதாவது ஒரு நிலையோ அல்லது ஒரு படியோ கீழே இருக்கின்ற மாதிரி வைக்கலாம். பித்ருக்களுடைய படங்களைக் கிழக்கு நோக்கி வைக்கலாம்.


காஞ்சி மற்றும் மேல்கோட்டையில் உற்சவப்பெருமாள் அருகில் இருக்கும் இரண்டு நாச்சியார்களும் ஒரே மாதிரி வடிவத்துடன் அதாவது இருவரும் வலக்கையில் தான் தாமரை ஏந்தியிருப்பார்கள். அதே மற்ற திவ்யதேசங்களில் ஸ்ரீதேவி நாச்சியார் வலக்கையிலும், பூதேவி நாச்சியார் இடக்கையிலும் வைத்திருப்பார்கள். மேற்சொன்ன இருக்ஷேத்ரத்தில் ஒரே கையில் புஷ்பம் இருப்பதற்கு ஏதேனும் குறிப்பிட்டக் காரணம் இருக்கிறதா?

Vidwan’s reply:

நாச்சியார்கள் ஒரே கையிலே ஒரே மாதிரியாக புஷ்பம் வைத்துக் கொள்வதற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகமங்களில் இப்படி இரண்டு விதமாகவும் சொல்லி இருக்கலாம். அதனுடைய அடிப்படையில் தாயாரை இப்படி ஏளப்பண்ணி ப்ரதிஷ்டை பண்ணியிருக்கலாம்.


எம்பெருமான் திருமஞ்சனம் கண்டருளுவதை அனைவரும் சேவிக்கின்றோம். ஆனால் எம்பெருமான் அம்சை பண்ணும்போது திரையிடக்காரணம் என்ன?

Vidwan’s reply:

திருமஞ்சத்தில் இரண்டு உண்டு.

லோகாந்த திருமஞ்சனம்

ஏகாந்த திருமஞ்சனம்.

லோகாந்த திருமஞ்சனம் நமது சேவைக்காகவே. அப்போது பெருமாள் வஸ்திரங்கள் எல்லாம் தரித்துக் கொண்டிருப்பார். அதனால் அந்தத் திருமஞ்சனத்தைச் சேவிப்பதில் ஒன்றும் தவறில்லை.

ஆனால் பெருமாள் அமுது உண்ணும்போது அவரைச் சேவிப்பது, பார்ப்பது என்பதெல்லாம் ஒரு அபசாரம். ஏனென்றால் அவர், ஒரு தொந்தரவும், குறுக்கீடும் இல்லாமல் ஏகாந்தமாக அமுதுண்ண வேண்டும். அதனால்தான் பெருமாள் அமுது உண்ணும் போது சேவாகாலம் பண்ணக்கூடாது என்று சொல்வார்கள். அப்படிப் பெருமாள் அமுது செய்யும் போது சேவாகாலம் பண்ணால் பெருமாளுக்கு அதில்தான் ஶ்ரத்தை போகும். அவர் அமுது செய்வது குறைந்து போய்விடும். நாம் சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிட்டால், எப்படிச் சாப்பாட்டில் ஶ்ரத்தை இல்லாது போய்விடுமோ அதேபோல் தான்.

அவர் நன்றாக அமுது செய்யவேண்டும், நன்றாக அமுது செய்யவிக்க வேண்டும். அதனால் மற்ற கார்யங்கள் எதிலும் அவருக்கு ஶ்ரத்தையோ, நோக்கமோ வராத ரீதியில் சேவார்த்திகள் சேவையைத் தவிர்க்க வேண்டும். கீழே விழுந்து சேவிப்பது, சேவாகாலம், பாராயணம் முதலானவைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் நாம் யாரும் பார்க்கவும் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள், பார்த்தால் பெருமாள் நம்மை பார்க்கவேண்டி இருக்கும். அவருடைய கவனக்குறைவு என்பதெல்லாம் ஏற்படக்கூடாது என்பதற்காக எம்பெருமான் அம்சை பண்ணும்போது திரையிடுகிறார்கள்.


பூணூல் போட்ட பிராமச்சாரி பையன் 12 திருமண் இட்டு கொள்ளலாமா?

Vidwan’s reply:

நம் சம்ப்ரதாயப்படி ஸமாஶ்ரயணம் ஆனபின் தான் 12 திருமண் இட்டுக்கொள்ளலாம். ஸமாஶ்ரயணம் ஆவதற்கு முன் 12 திருமண் இட்டுக்கொள்ளும் வழக்கம் இல்லை.


என்னுடைய தகப்பனாரின் ஶ்ராத்த திதி ஆவணி ஸப்தமி. இந்த வருட பஞ்சாங்கத்தில் ஆவணி ஸப்தமி என்று 3 தினம் கொடுத்திருக்கிறார்கள் (ஆவணி 2,17,32) இதில் எந்தத் தேதியில் ஶ்ராத்தம் செய்ய வேண்டும். மேலும் பொதுவாக கோகுலஷ்டமிக்கு ஒருநாள் முன்னதாக அவரின் திதி வரும். குழப்பத்தைத் தெளிவுபடுத்தவும்.

Vidwan’s reply:

ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷம் சப்தமி திதி, ஆவணி 2 ஆம் தேதி ஆகஸ்ட் 18ஆம் தேதி, வியாழக்கிழமை அன்றைக்கு ஶ்ராத்தம் பண்ண வேண்டும்.


அடியேன், நித்யப்படி நம் ஆத்துப்பெருமாளுக்கு, சாளக்கிராம மற்றும் விக்ரஹம் இருப்பின் இரண்டுவேளை திருவாராதனம் செய்யலாமா அல்லது ஒருவேளை திருவாராதனம் மட்டுமா அடியேன்?

Vidwan’s reply:

சாளக்கிராமம் மற்றும் விக்ரஹத்திற்கு, ஒருவேளை திருவாராதனம் செய்தால் போதும். இரண்டாவது வேளை, அதாவது ராத்திரிவேளையில் திருவாராதனம் பண்ணினால் விசேஷம், சுத்தமாக இருந்து பண்ண வேண்டும். பண்ணாவிட்டாலும் வெறும் பால் மட்டுமாவது நிவேதனம் செய்தால் போதும். நாம் அகத்தில் இருந்தோமேயானால் நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை நிவேதனம் பண்ண வேண்டும். இல்லயென்றால் பால் மட்டுமாவது நிவேதனம் பண்ண வேண்டும்.

சாளக்கிராமத்திற்குச் செய்ய முடியாது போனால் பெரிய தோஷம் ஒன்றும் கிடையாது. அதனால் நிர்ப்பந்தமாக பண்ண வேண்டும் என்பது கிடையாது.


ஶரணாகதி பற்றியது. அடியேன் ஶரணாகதி செய்துகொள்ள விழைகிறேன். அசௌகர்யம் என்னவென்றால், அடியேன் நரம்பு மண்டலம் பாதிப்பால் ஆசார்யார் வைபவத்தில் உட்காந்து எழுந்திருக்க /சேவிக்கமுடியாதவனாக இருக்கிறேன். எனக்கு ஶரணாகதி உபதேசம் பெறும் பாக்கியம் கிடைக்குமா?

Vidwan’s reply:

ஶரணாகதி அவசியம் ஆசார்யனே பண்ணிவைக்க முடியும். நமக்கு ஶரீரத்தில் அஶக்தம் இருக்கிறதென்றால், நேரடியாகச் சென்று சேவிக்க முடியவில்லையெறாலும் ஆசார்யனிடம் ப்ரார்த்தித்துக் கொண்டால், ஆசார்யன் நமக்காக எம்பெருமானிடம் அவசியம் ஶரணாகதி பண்ணி வைப்பார்.


ஏகாதசி அன்று உளுத்தம்பருப்பைத் தளிகைக்குச் சேர்த்துக்கொள்ளலாமா? வயதானவர்களுக்காக ரவை உப்புமா மற்றும் குழம்பு அல்லது அரிசி உப்புமா, இட்லி போன்றவை செய்ய நேரிடும். இதில் உளுத்தம்பருப்பு உபயோகிக்கலாமா (தாளிப்பதற்கு)?

Vidwan’s reply:

ஏகாதசியன்று எந்தவிதமான உணவையும் உட்கொள்வது ஶ்லாக்யமில்லை. உடல்நிலை காரணத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ ஆகாரம் உட்கொள்வதென்பது இரண்டாம் பக்ஷம்தான்.

முழு அரிசியைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மற்றபடி அனைத்தும் இரண்டாம் பக்ஷமே. ஆக உப்புமாவில் உளுத்தம்பருப்பைச் சேர்ப்பதும் இரண்டாம் பக்ஷம்தான்.


பரந்யாஸம் செய்துகொண்ட நாளை எந்த அடிப்படையில் கொண்டாட வேண்டும்? அதாவது நக்ஷத்ரம்/திதி/தேதி இதில் எதன் அடிப்படையில் கொண்டாட வேண்டும்.

Vidwan’s reply:

பரந்யாஸம் எந்த நக்ஷத்ரத்திலே, எந்த மாதத்திலே, செய்துகொண்டோமோ அந்த நாளைக் கட்டாயம் கொண்டாடலாம். திதியையும் ஞாபகம் வைத்துக்கொண்டு கொண்டாடலாம். இந்நாளானது திருமணநாளைக் காட்டிலும் உசந்தது.

ஆக பரந்யாஸம் செய்துகொண்ட நாளை எவ்வளவு விதமாக கொண்டாட முடியுமோ அவ்விதங்களிலெல்லாம் கொண்டாடுவது சிறப்பு.


எங்கள் பூர்வர்கள் திருநெல்வேலி கீழ்ப்பாட்டத்தில் இருந்து நெடுந்தெருவிற்கும் அதன்பின் ஸ்ரீரங்கத்திற்கு வந்து குடியேறினார்கள். எங்களின் குலதெய்வம் யார் என்று சரியாகத் தெரியவில்லை. ஒருகாலத்தில் கீழ்ப்பாட்டத்தில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிக்கோவில் இருந்ததாகவும் தற்போது அந்தக் கோவில் இல்லை மேலும் சக்கரத்தாழ்வார் அருகில் இருக்கும் வேறு ஒரு கோவிலில் ஏளியிருக்கிறார். நாங்கள் சிலநாட்கள் முன்பு நெடுந்தெருவில் இருக்கும் ப்ரசன்ன ராஜகோபால ஸ்வாமிக்கு திருமஞ்சனம் செய்தோம். நாங்கள் யாரைக் குலதெய்வமென்று ஏற்பது?

Vidwan’s reply:

குலதெய்வம் யார் என்று தெரியவில்லை என்பதற்கு எப்படிப் பதில் சொல்லுவது என்று தெரியவில்லை.

பொதுவாக நாம் எல்லோருக்கும் குலதெய்வம் என்பது பெருமாள்தான்.

“ஸ்தோஷ்யாமி ந‌‌: குலத4நம் குலதை3வதம் தத்” என்று ஆளவந்தார் சாதித்திருக்கிறார்.

அதனால் ஏதாவது ஒரு பெருமாளை நீங்கள் குலதெய்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

இக்கேள்விக்கான விடைய இங்கே உள்ள காணொளியில் விரிவாகக் கேட்டு அறியவும்


ஒருநாளில் எத்தனை முறை ஆசார்யன் தனியனைச் சேவிக்க வேண்டும்? அஸ்மத் தேஶிகம் அஸ்மதீய ஶ்லோகம் கற்க ஏதேனும் வழியுண்டா?

Vidwan’s reply:

ஒருநாளில் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை ஆசார்யன் தனியனைச் சேவிக்கலாம். கட்டாயம் ஜபம் செய்வதற்கு முன் ஒருமுறையாவது சேவித்தல் வேண்டும்.

எப்போதெல்லாம் நமக்கு பாபங்கள் நேருகிறது அல்லது நாம் தவறிழைக்கிறோம் என்று தோன்றுகிறதோ அந்தச் சமயத்திலெல்லாம் சேவிக்க வேண்டும்.

அஸ்மத் தேஶிகம் அஸ்மதீய பரமாசார்யான் அஶேஷாந் குரூந்

ஸ்ரீமல்லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ணௌ முநிம்யாமுனம்|

ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் ஶடத்வேஷிணம்

ஸேனேஶம் ஶ்ரியம் இந்திரா ஸஹசரம் நாராயணம் ஸம்ஶ்ரயே||


சாயம் ஸந்தியாவில் (தற்போது உபயோகிக்கும் மணைக்குப் பதிலாக) தர்ப்பத்தினாலான பாய் மீது அமர்ந்து கொண்டு காயத்ரி மஹாமந்திரம் ஜபிக்கலாமா? தர்ப்பண காலத்திலும் ஆசனமாக பயன்படுத்தலாமா?

Vidwan’s reply:

சாயம் ஸந்தியாவந்தனத்தில் தர்ப்பாசனம் என்பது கோரைப்புல் ஆசனம் என்று நினைக்கிறேன். அதைக் காட்டிலும் மணைதான் விசேஷம் என்று தோன்றுகிறது. Q32ADI22018

“மோக்ஷம் கிடைத்த பின் ஜீவாத்மாவின் (நம்) நிலை ‌ஸ்ரீவைகுண்டத்தில் எவ்வாறு இருக்கும்?

1. நம் சரீரம் எவ்வாறு இருக்கும்? 2. நம் ஞானம் எவ்வாறு இருக்கும்? 3. அங்கே நம் பூலோக பெற்றோர் வழங்கிய நாமத்தை வைத்து அழைக்கப்படுவோமா? 4. எம்பெருமான் தாயார் மற்றும் நித்யஸூரிகள் மட்டுமல்லாமல் ஆழ்வார் ஆசார்யர்களையும் சேவிக்க இயலுமா? 5. அவர்களுடன் தமிழில் உரையாட இயலுமா? ”

Vidwan’s reply:

மோக்ஷம் கிடைத்தபின், இங்கு இருக்கும் சரீரம் அங்கு கிடையாது. அங்கு வேண்டுமானால் புதிய சரீரம் எடுத்துக்கொள்ளலாம். அது இந்த சரீரம் போல் தோஷத்துடன் இல்லாமல் திவ்யமான சரீரமாக இருக்கும் அதாவது அப்ராக்ருதம் என்று சொல்வார்கள்.

நாம் எல்லா விஷயங்களும் தெரிந்துகொள்ளும்படியான ஞானம், அதாவது சகலமும் நமக்குத் தெரியும்படியாக இருக்கும். நம் புண்யபாபத்தினால் ஞானம் குறைந்திருக்கிறது அங்கே இவை இரண்டும் போய்விடுகின்ற படியால் ஞானம் குறையாமல் இருக்கும்.

இங்கே இருக்கின்ற பெயர் அங்கே இருக்கவேண்டிய அவசியமில்லை. அது இருக்காது.

பெருமாள், தாயார், நித்யசூரிகள், ஆழ்வார், ஆசார்யர் என எல்லாரையும் சேவிக்கலாம். எல்லாருடனும் பேசலாம், தமிழில் பேசலாம். ஸ்ரீவைகுண்ட லோகத்தில் நாம் எல்லாரும் தமிழில் ஸ்தோத்ரங்கள் சொல்லலாம் என்று ஸ்வாமி தேஶிகன் “பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே” என ஸாதித்திருக்கிறார்.


ஆசாரம் பற்றி விரிவாக அறிய என்ன வழி? அதே போல் விஶிஷ்டாத்வைத தத்துவத்தின் அடிப்படை என்ன என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

ஆசாரம் பற்றி விரிவாக அறிந்துகொள்ள ஆந்ஹிக க்ரந்த காலக்ஷேபம் செய்து அறியலாம். GSPK யில் நடக்கின்ற ஆந்ஹிக க்ரந்த காலக்ஷேபத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதில் சேர்ந்துகொள்ளலாம்.

https://forms.gle/ob8JhquSN5BHRGBT6

விஶிஷ்டாத்வைத தத்துவத்தின் அடிப்படை பற்றி அறிந்துகொள்ள GSPK வழங்கிய “ஸ்ரீபாஷ்ய ஸாரம்” என்ற உபந்யாஸத் தொடரைக் கேட்கவும். இங்கே கொடுத்துள்ள படத்தை click செய்து அவ்வுபந்யாஸத் தொடரைக் கேட்டு அறியலாம்.


அடியேன் ஏதோ உபந்யாஸத்தில் கேட்ட விஷயம், ப்ரபத்தி செய்தபின்னும் தன் கடைசிகாலம் வரை ஒருவருக்கு தேவதாந்தரம் சம்பந்தம் இருந்ததென்றால் அவருக்கு ப்ரபத்தி சரியாகச் செய்யவில்லை என்று அர்த்தம் என்று சாதித்தார்கள். இது சரியா ஸ்வாமி? ஆசார்ய நிஷ்டை அல்லது உக்தி நிஷ்டையில் செய்யப்பட்ட ப்ரபத்தி தவறாகது அல்லவா ஸ்வாமி? அப்படியானால் அவர்காள் குறிப்பிடும் தவறு என்பது ஸ்வநிஷ்டை அல்லது ப்ரபத்தியை செய்து வைக்கும் தகுதி பெறாதவர் செய்திருந்தால் அப்படி நடக்கலாம். இதை எப்படிப் புரிந்துகொள்வது ஸ்வாமி. அடியேன்

Vidwan’s reply:

இந்த விஷயத்தை ஸ்வாமி தேஶிகன் தான் ஸாதித்துள்ளார். அதாவது தேவதாந்தர ஸம்பந்தத்துடனே ஒருவன் எப்போதும் இருந்தானேயானால் அவனுடைய ப்ரபத்தி சரியாகச் செய்யவில்லை என்றால் செய்து வைத்தவர்கள் மேல் தவறில்லை.யார் செய்துகொண்டார்களோ அவருடைய தேவதாந்தர ஸம்பந்தத்தால் சரியாக ஆகவில்லை என்று அர்த்தமாகுகிறது.

ஸ்வநிஷ்டா, ஆசார்யநிஷ்டா என்ற கேள்வியின் அடுத்தபகுதிக்கான விடையை பின்னாளில் காணலாம்.


சந்த்ராஷ்டமம் என்றால் என்ன? சந்த்ராஷ்டமத்தின் போது செய்யத் தக்கன, மற்றும் செய்யத் தகாதன யாவை? ஸ்ரீவைஷ்ணவர்கள் இதற்கு முக்கியத்துவம் தரலாமா? எவ்வாறு இதை எதிர்கொள்வது?

Vidwan’s reply:

சந்திராஷ்டமம் என்பது நம்முடைய ராசியில் இருந்து 8ஆவது ராசி, அது வரக்கூடிய நாட்கள் சந்திராஷ்டம நாள்கள் என்பதாக கணக்கு. இதற்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. நம்முடைய சந்த்ராஷ்ட தினத்தில் நமது காரியங்கள் ஒரளவு சரியாக நடக்காது என்று புரிந்துகொள்ள வேண்டும். மற்றபடி வேறு ஒன்றும் கிடையாது.

நம்முடைய நித்யபடி அனுஷ்டானங்கள் எல்லாம் பண்ணலாம். சந்த்ராஷ்டம தினத்தில் முகூர்த்தங்கள் வைக்க மாட்டார்கள். உதாஹரணமாக யாருக்கு விவாஹமோ அவருடைய சந்த்ராஷ்டம தினத்தில் விவாஹம் முதலானதெல்லாம் வைக்க மாட்டார்கள். இது ஜோதிஷ ஶாஸ்த்ரதில் இருக்கிறது. மற்றபடி நித்யப்படி அனுஷ்டானத்திற்கோ, உற்சவாதிகளுக்கோ இது பாதகமாக ஆகாது.


அடியேன் கோயிலில் திருமஞ்ஜன கைங்கர்யம் ஏற்றக்கொள்ளும் பொழுதும் அகத்தில் ஸுதர்ஶந ஹோமம் செய்யும் பொழுதும் ப்ரபன்னர்கள் “பகவத் ப்ரீத்யர்த்தம்” என்று சங்கல்பம் செய்யவேண்டுமா அல்லது கோத்ரம் நக்ஷத்ரம் பெயர் சொல்லுவது சரியா?

Vidwan’s reply:

ப்ரபந்நர்கள் பகவத் ப்ரீத்யர்த்தன் என்று சங்கல்பம் சொல்லவேண்டும். அதேசமயம் சில சங்கல்பத்தில் கோத்ரம், நக்ஷத்ரமெல்லாம் சொல்லவேண்டி வரும். ஶாஸ்த்ரத்திலே சில கர்மானுஷ்டங்களில் கோத்ரம் நக்ஷத்ரமெல்லாம் சொல்லி பண்ணவேண்டி வரும்.

அந்த ரிதீரியல் கோயிலில் திருமஞ்சனக் கைங்கர்யம் பண்ணும்போது கோத்ரம்,நக்ஷத்ரம்,பெயர் எல்லாம் சொல்லலாம் சொல்லாமலும் இருக்கலாம், பொதுவாக பகவத் ப்ரீத்யர்த்தம் என்று சொல்லலாம்.

அகத்தில் ஸுதர்ஶந ஹோமம் போன்றவைக்கு கோத்ரம், நக்ஷத்ரமெல்லாம் சொல்லுவது வழக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது, ஏனென்றால் க்ஷேமார்த்தம், ஆயுள், ஆரோக்ய, ஐஶ்வர்யத்திற்காக பண்ணுவதால். அங்கே பகவத் ப்ரீத்யர்த்தம் என்று சொல்லி, பெயர் கோத்ரம் போன்றவையெல்லாம் சொல்லலாம் எனத் தோன்றுகிறது.


நாம் வெளிநாட்டிற்கோ அல்லது வேறு ஊருக்கோ செல்வதானால் அமாவாஸை அன்று ப்ரயாணம் செய்யலாமா? எந்த ஒரு நல்ல காரியத்தையும் அமாவாஸை அன்று தொடங்கலாமா?

Vidwan’s reply:

ஜோதிஷ ஶாஸ்த்ரம்படி பொதுவாக அமாவாஸை நல்ல தினமாகக் கணக்காகவில்லை, அததற்கான நாள் சொல்லும்போது அமாவாஸை தினம் தவிர்க்கப்பட்டுள்ளது தெரிகிறது.

அமாவாஸை நிறைந்த நாள் என்று சில வசனம் சொல்லுகிறார்கள். வேறுநாள் கிடைக்காத போது அமாவாஸை என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது இரண்டாம் பக்ஷம்தான்.


சென்ற சுதர்சனத்தில் அடியேனின் கேள்விக்கு ஸ்வாமி ஸாதித்தது ஒரு ஸ்ரீவைஷ்ணவர், ஸ்ரீவைஷ்ணவரல்லாதவர் கொடுத்த ப்ரசாதம் (பெருமாள் ப்ரசாதமாக இருந்தாலும்) உட்கொண்டால் அது தோஷம்தான் என்று தெளிவுபடுத்தினீர்கள். அடியேன் அன்று தெரியாமல் (ஒப்பிலியப்பனின் ப்ரசாதம்(சர்க்கரைப்பொங்கல்) மற்றும் திருப்பதி லட்டு ப்ரசாதமும்) உட்கொண்டேன் இதனால் ஏதேனும் பாபம் ஏற்பட்டிருக்குமா? அப்படியானால் ஏதேனும் ப்ராயச்சித்தம் செய்ய வேண்டுமா?

Vidwan’s reply:

ஆகாரத்தில் தோஷம் என்பது இரண்டுவிதம். ஒன்று பெருமாள் ப்ரசாதம் அல்லாத ஒன்றை நாம் சாப்பிடுதல். மற்றொரு தோஷம், வேறு ஒருத்தர் கொடுப்பதைச் சாப்பிடுதல் அது அனாச்சாரத்தில் சேரும்.

இதில், அவர் பெருமாள் ப்ரசாதத்தைச் சாப்பிட்டுள்ளார். அதனால் முதல் தோஷம் இல்லை. நல்ல ஆச்சாரத்துடன் இருக்கின்றவராக இருந்தால், இதனால் ஆச்சாரக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்குச் சில பரிகாரங்கள் உள்ளது, பஞ்சகவ்யம் போன்றவை உட்கொள்ளுதல் என. இல்லை அவர்கள் பொதுவாகவே வெளியில் சாப்பிடுபவர்களாக இருந்தால், இதனால் பெரிய தோஷமில்லை என்று விடவேண்டியதுதான்.

குறிப்பு:

பொதுவாக என்ன சொல்லியிருக்கிறதோ அந்த விஷயத்தை மேலோட்டமாக பார்த்து புரிந்துகொள்ள வேண்டும். இது இப்படியானால், அப்படியானால் என்ன என்று அலசி ஆராயும்படியான கேள்விகளைத் தவிர்க்கவும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top