சுபகிருது – ஆனி(2) – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்


ஜன்ம நக்ஷத்ரம் கொண்டாட என்று அந்த நக்ஷத்ரம் அதிகமாக இருக்கின்றதோ அன்று கொண்டாட வேண்டுமா அல்லது என்று சூர்யோதய சமயம் அந்த நக்ஷத்ரம் இருக்கின்றதோ அன்று கொண்டாட வேண்டுமா தெளியபடுத்தவும்.

Vidwan’s reply:

ஜன்ம நக்ஷத்ரத்தை சூர்யோதயத்தில் இருந்து 12 நாழிகை என்றைக்கு அந்த நக்ஷத்ரம் இருக்கிறதோ அன்றைக்குக் கொண்டாடவேண்டும்.

முதல்நாள் வேறு ஒரு நக்ஷத்ரமாக இருந்து, மறுநாள் சூர்யோதயத்துக்குப் பிறகு 12 நாழிகைக்குள்ளாகவே(<12 நாழிகை) ஒரு நக்ஷத்ரம் இருக்குமாயின், அந்த ஜன்மநக்ஷத்ரம் முதல்நாளே கொண்டாட வேண்டும்.


பெருமாள் தீர்த்தம் எத்தனை தடவை ஸ்வீகரிக்கவேண்டும்.

Vidwan’s reply:

பெருமாள் தீர்த்தம் கோவிலில் சாதிக்கும்போது ரொம்ப மரியாதைப்பட்டவர்கள், பெரியோர்களுக்கு மூன்றுமுறையும், மற்ற அனைவருக்கும் ஒருமுறையும் சாதிப்பார்கள்.

அகத்தில் திருவாராதனைக்குப் பின் அகத்து மனுஷாளுக்கு, பொதுவாகவே மூன்றுமுறை சாதிப்பதுண்டு.


வடகலை நித்யானுசந்தானங்கள் பற்றி தெரிவிக்க வேண்டுகிறேன்.

Vidwan’s reply:

வடகலையார் நித்யானுசந்தானங்கள்

தனியன்கள்

இராமானுஜ தயா பாத்ரம் (பொது).

ஸ்ரீஸன்னிதி சிஷ்யர்களாக இருந்தால் “கேஶவார்ய க்ருபா பாத்ரம்” தனியன் சொல்லிவிட்டு, பின் இராமானுஜ தயா பாத்ரம் தனியன் சேவிப்பர்.

திவ்ய ப்ரபந்தம்

திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை

அதற்கு மேலுள்ள ப்ரபந்தங்கள் அவரவர் ஆசார்ய நியமன படி

தேசிக ப்ரபந்தம்

பிள்ளையந்தாதி

அடைக்கலப்பத்து, ப்ரபந்தஸாரம்(சில இடங்களில் இவை இரண்டையும் சேவிப்பதுண்டு)

விசேஷ தினங்களில் கோயில் திருவாய்மொழி மற்றும் இராமானுசநூற்றந்தாதி சேவிப்பது போன்ற அனுசந்தானங்கள் வழக்கத்தில் உள்ளது.


அடியேன் ஸ்வாமி திருவோண நக்ஷத்ரம் முதல்நாள் மதியம் 2 மணி முதல் மறுநாள் மதியம் வரை இருந்தால் திருவோண விரதம் என்று இருக்க வேண்டும்? முதல்நாள் என்றால் அன்று விரதம் மேற்கொள்ள முடியாத பட்சத்தில் மறுநாள் இருக்கலாமா? தெளிவுபடுத்த வேண்டுகிறேன். தன்யோஸ்மி.

Vidwan’s reply:

பஞ்சாங்கங்களில் திருவோண நக்ஷத்ரம் என்றைக்கு (இரவு)இராத்ரி வேளையில் இருக்கிறதோ அன்றைக்கு ஶ்ரவண விரதம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், ஒப்பிலியப்பன் கோவிலை உத்தேசித்து ஶ்ரவண விரதத்தை உப்பில்லாமல் அனுசரிப்பவர்கள், என்றைக்கு சூர்யோதயத்திலிருந்து 12 நாழிகை திருவோண நக்ஷத்ரம் இருக்கின்றதோ அன்றைக்குதான் ஒப்பிலியப்பன் கோவிலில் ஶ்ரவண தீபம் எடுப்பார்கள், அன்றுதான் ஶ்ரவண விரதத்தையும் அநுஷ்டிக்க வேண்டும். ஒப்பிலியப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஒரு அட்டவணை போடுவார்கள். கிடைத்தால் அதையும் பார்த்துக்கொள்ளலாம்.


நம் ஸ்ரீவைஷ்ணவ நித்யகர்மானுஷ்டானம் பற்றி அறிவது எப்படி?

Vidwan’s reply:

நம் ஸ்ரீவைஷ்ணவ நித்யகர்மானுஷ்டானம் பற்றி அறிய முந்தைய சுதர்சன வெளியீடுகளுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இரண்டு காணொளியையும் பார்க்கவும்.

ஶ்ரீ வைஷ்ணவ ஸ்த்ரீ தினசர்யா


நாங்கள் இருவரும் ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் பெற்றுக்கொண்டவர்கள். என் அகவை 70, என் மனைவி வெளியூர் செல்லும் நேரங்களில் நான் கடைகளிலிருந்துதான் உணவு வாங்கும்படி நேர்கிறது. மேலும் நான் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்கிறேன். இப்படி வெளியே சாப்பிட நேரும்போது என்ன செய்ய வேண்டும். வழிகாட்டவும்.

Vidwan’s reply:

வெளியில் சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்கின்ற சங்கல்பத்தைத் திடமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த தர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று எம்பெருமானிடம் ஶ்ரத்தையாக ப்ரார்த்திக்க வேண்டும். அப்படி ப்ரார்த்தித்தால் எம்பெருமான் கட்டாயம் அந்த தர்மத்தை ரக்ஷிப்பான்.

அதற்கு முதற்படியாக தாரணத்திற்கு வேண்டிய சில பதார்த்தங்களை நாமே பண்ணிக்கொள்ள அறிந்துகொண்டால் நல்லது. உயிர்தரிக்க என்ன உணவு வேண்டுமோ அதைப் பண்ணத்தெரிந்தால் உசிதம். கஞ்சி போடுவது, சாதம் வைப்பது இவை எல்லாம் சுலபமான காரியங்கள்தான். அதைப் பண்ண கற்றுக்கொள்ளலாம். தரிக்கவே முடியவில்லை, வேறுவழியே இல்லை, சாப்பிட்டே ஆகவேண்டும் என்கின்ற நேரத்தில்தான் வேறுவழியில்லாமல் வெளியில் சாப்பிட நேர்ந்தால் சாப்பிடலாம். அதுவும் முடிந்தவரை பால், மோர், பழங்கள் இவற்றுடன் சமாளிக்க முடிந்தால் நல்லது. அப்படி இல்லையென்றால் உப்பு போட்ட பதார்த்தங்களைச் சாப்பிடாமல் சமாளிக்க பார்க்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் நிஷித்தமான பதார்த்தங்களை வெளியிலிருந்தும் சாப்பிடவே கூடாது.

இந்த மாதிரி சில விஷயங்களைக் கடைபிடித்து எம்பெருமானை மனதில் த்யானித்து கோவிந்த திருநாமத்தைச் சொல்லி எம்பெருமானே இப்படி நேர்ந்து விட்டதே! இப்படி நேராமல் நீரே பார்த்துக்கொள்ள வேண்டும், இந்த ஆசாரம் பங்கம் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எம்பெருமானிடம் வேண்டிக்கொண்டு மனதில் பஶ்சாதாபத்துடன் தாரணத்திற்கு வேண்டியவரை மட்டும் சாப்பிட்டால் அதற்குப் பிறகு இந்த மாதிரி மேலும் நேராமல் இருப்பதற்கு வாய்ப்புக்கள் வரும்.


தர்பையைக் கொண்டு செய்த பவித்ரத்தை பலமுறை உபயோகப்படுத்தலாமா? உ.தா முதல்நாள் திருவாராதனத்திற்கு உபயோகித்ததை மீண்டும் அடுத்தநாள் உபயோகிக்கலாமா? ஆம் என்றால் எத்தனை முறை மீண்டும் உபயோகிக்கலாம். Vidwan’s reply:

தர்பையைக் கொண்டு உண்டாக்கிய பவித்ரம், ப்ரம்மக்ரந்தி அதாவது 2½ சுற்று பவித்ரம் என்றால் அதை ஒரே தர்மத்திற்கு, அதாவது திருவாராதனத்திற்கு என்றால் அதற்கு மட்டும் உபயோகிக்கலாம். ஏகாதசி, மாசப்பிறப்பு, ஶ்ரவணம் போன்ற முக்கிய நாட்களில் பெரியோர்கள் புது தர்பத்தை போட்டுக்கொள்வார்கள். அதனால் அதுவரை அதை உபயோகிக்கலாம்.

2½ சுற்றாக இருந்தால் மேற்கூறியபடி உபயோகிக்கலாம். 1½ சுற்று பவித்ரமாக இருந்தால் அந்தக் கர்மத்துடன் அதை கழற்றிப்போட்டுவிடவேண்டும்.


எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தபின் பூணுலை மாற்றிக்கொள்ள வேண்டுமா? Vidwan’s reply:

எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தபின் பூணுலை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றிருப்பதாக கேள்விப்ட்டிருக்கிறேன் ஆனால் சிஷ்டாசாரத்தில் அப்படியில்லை. பெரியவர்கள் யாரும் மாற்றிக்கொள்வதாகத் தெரியவில்லை.


வேத அத்யயனம் செய்ய ஏதேனும் வயதுவரம்பு உள்ளதா? ஒருவர் 12 வருடத்திற்குள் ஒரு வேதத்தின் ஒரு ஶாகையை அத்யயனம் செய்து முடித்திருக்க வேண்டும் என்றும், அதன் பின் மற்ற 3 வேதங்களின் ஒரு ஶாகையை அடுத்தடுத்த 12 வருடத்திற்குள் அத்யயனம் செய்திருக்க வேண்டும், அதாவது 56 வயதுக்குள் 4 வேதத்தின் ஒரு ஶாகையாவது அத்யயனம் முடித்திருக்க வேண்டும் என்றும் (8+ 12*4) கேள்விப்பட்டுள்ளேன். இது சரியான தகவலா என்று விளக்க வேண்டுகிறேன். Vidwan’s reply:

இன்றைய நடைமுறையில் ஒருவர் ஒரு ஶாகையை அத்யயனம் செய்வதே ஶ்ரமமாக இருக்கிறது. அத்யயனம் பண்ணிவிட்டு அப்படியே விட்டுவிடக்கூடாது, மறக்காமல் வைத்துக்கொள்ள வேண்டும். வேதத்தை அத்யயனம் பண்ணி மறப்பது மகாபாபம்.

அதனால் சிறுவயதில் தாரணசக்தி அதிகம் இருக்கும் அத்யயனம் பண்ணினால் நன்றாக தரிக்கும். வயதான பிறகு அத்யயனம் பண்ணக்கூடாது என்பதில்லை. அவர்களுக்கு தரிப்பது கஷ்டமாக இருக்கும். புஸ்தகத்தை வைத்துப் படிக்கலாம் ஆனால் ஸ்வரம் தப்பாமல் சொல்ல வேண்டும் என்பதே முக்கியம்.

வேத அத்யயனம் செய்ய வயதுவரம்பு இல்லை என்பதுதான் பொதுவான கருத்து.

குறிப்புகள்:

56 வயதிற்குள் நான்கு வேதத்தினுடைய ஒவ்வொரு ஶாகையையாவது அத்யயனம் பண்ணி இருக்கவேண்டும் என்று கேள்விப்பட்டதாகச் சொல்லி இருக்கிறீர்கள். அதற்கு ஏதாவது ப்ரமாணம் இருந்தால் தெரியபடுத்தவும்.


திருவாராதனத்தின் போது பெருமாளுக்குச் சாற்றிய புஷ்பங்கள், துளசியை என்ன செய்வது (அகத்தில் எல்லாருக்கும் கொடுத்தபின்). அப்படியே பெருமாள் பெட்டியிலே வைத்திருப்பதா அல்லது எங்கே ஸமர்பிப்பது?

Vidwan’s reply:

திருவாராதனத்திற்குப் பிறகு எல்லோரும் உபயோகித்த சேஷமாய் இருக்கிற துளசி மற்றும் புஷ்பங்களை, கால் படாத இடத்தில் சேர்க்க வேண்டும்.உ.தா துளசிச் செடியின் அடியிலேயே சேர்க்கலாம்.


யதிகளின் ப்ருந்தாவனத்திற்குச் சென்று வந்தபின் தீர்த்தமாட வேண்டுமா?

Vidwan’s reply:

முன்பு பெரியவர்கள் யதிகளின் ப்ருந்தாவனத்திற்குச் சென்றுவந்த பிறகு தீர்த்தமாடியதாக கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது இந்த ஆசாரம் நடைமுறையில் இல்லை.


என் பேரன் 17 ஜூன் அதிகாலை 01.18am IST அப்போது பிறந்தான், அவனுக்கு புண்ணியாகவாசம் 27ஆம் அல்லது 28ஆம் செய்ய வேண்டுமா?

Vidwan’s reply:

இராத்ரி நேரத்தை, அதாவது முதல்நாள் சூர்ய அஸ்தமனத்திலிருந்து மறுநாள் சூர்யோதயம் வரை இருக்கும் பாகத்தினை 8 சமபங்கு பாகங்களாக்கி, அதில் முதல் 5 பாகத்திற்குள் உட்பட்டால் முதல்நாள் என்றும் அதன்பிறகு கடைசி மூன்று பாகத்திற்குள் உட்பட்டால் மறுநாள் என்றும் கணக்கிட வேண்டும்.

இப்படித் தான் முதல்நாள் மறுநாள் என்ற கணக்கு, ஜனனத்திலோ, மரணத்திலோ, ரஜஸ்வலையிலோ எடுத்துக்கொள்வது வழக்கம்.

குறிப்புகள்:

இராத்ரி நேரமென்பது சூர்யோதய, சூர்ய அஸ்தமனத்தை வைத்துச்செய்வதால் ஒவ்வொரு ஊருக்கும் மாறுபடும். ஆகவே அந்தந்த ஊரின் சூர்யோதய, சூர்ய அஸ்தமன நேரத்தை வைத்து இராத்ரி நேரத்தை கண்க்கிட்டு, பின் மேற்சொன்னபடி 8 சம பாகங்களாக பிரித்து முதல்நாள்/மறுநாள் என்பதை கணக்கிடவும்.


” ஆசார்யன் திருநக்ஷத்ரம் நிர்ணயம்:

1. சூர்யோதயத்தில் ஜன்ம திருநக்ஷத்ரம் 1 விநாடி இருந்தாலும்கூட போதுமானதா ?

2. நக்ஷத்ரம் 2 நாட்களில் வந்தால் எந்த நாளைக் கொள்வது?

3. வேதை : திருநக்ஷத்ரத்தில் வேதை விலக்கு (முந்தைய நக்ஷத்ரம் நேரம்) உண்டா?

4.திருநக்ஷத்ரம் குறைந்தது 12 அல்லது 16 நாழிகைகள் போன்று இருக்க வேண்டுமென்றால், அது சூர்ய அஸ்தமனத்திற்குள் இருக்க வேண்டுமா?

அல்லது அடுத்த நாள் காலை சூர்யோதயம் வரைக்கும் இருந்தால் கூட போதுமானதா ?

5. மேற்கூறிய நிர்ணயத்தை ஶ்ரவண நக்ஷத்ரம் அல்லது நக்ஷத்ரம் ஆதாரமாகக் கொண்ட (வாமன, ஹயக்ரீவ) ஜயந்திக்கும் கொள்ளலாமா?

Vidwan’s reply:

ஆசார்யன் திருநக்ஷத்ரம் நிர்ணயம்

சூர்யோதயத்தில் ஜன்ம திருநக்ஷத்ரம் 1 விநாடி இருப்பது போதாது.

அந்தத் திருநக்ஷத்ரம் சூர்யோதயத்திலிருந்து 12 நாழிகை எந்த நாளில் இருக்கிறதோ அந்த நாளில் கொண்டாடுவது.

ஆசார்ய திருநக்ஷத்ரத்தில் வேதை விலக்கு இல்லை.

அந்தத் திருநக்ஷத்ரம் குறைந்தபக்ஷம் சூர்யோதயத்திலிருந்து 12 நாழிகை இருத்தல் வேண்டும்.

வாமன, ஹயக்ரீவ ஜயந்தி போன்றவற்றிற்கு திருநக்ஷத்ரம் மாத்திரம் பார்த்து நிர்ணயம் செய்வதில்லை, சில விஷயங்களில் திதிகளும் கணக்கில் உண்டு.ஆனால் நாம் இப்போது திருநக்ஷத்ரம் மாத்திரம் பார்த்துதான் நிர்ணயிக்கின்றோம்.


ஆசார்யன் தனியனை மடிசார் உடுத்திக்கொண்டுதான் சேவிக்க வேண்டுமா?

Vidwan’s reply:

ஆசார்யன் தனியனை மடிசார் உடுத்திக்கொண்டு சேவித்தால் உத்தமம். பொதுவாக எப்பொழுதுமே க்ருஹணீகள் மடிசார் உடுத்திக்கொண்டு தான் இருக்கவேண்டும். அதனால் ஆசார்ய தனியன் சேவிக்கும் பொழுது மடிசாரில் இருக்கிறது என்பதுதான் ஏற்படும். அப்படி மடிசாரில் இல்லையென்றாலும் ஆசார்யன் தனியனைச் சேவிப்பது இன்னும் முக்கியம். அதனால் அவசியம் சேவிக்க வேண்டும்.


அகத்தில் இருக்கும் ஹயக்ரீவ பெருமாளுக்கு ஏலக்காய் மாலை அணிவிக்கலாமா. அவருக்கு அணிவித்த ஏலக்காய் மாலையை என்ன செய்வது?

Vidwan’s reply:

அகத்தில் இருக்கும் ஹயக்ரீவ பெருமாளுக்கு ஏலக்காய் மாலை ஸமர்ப்பித்தால், ஸமர்ப்பித்த பிறகு அந்த ஏலக்காயைப் பொடிசெய்து பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.


மடி வஸ்த்ரத்தைக் கையால் எடுத்து உலர்த்தலாமா அல்லது குச்சிகொண்டுதான் உலர்த்த வேண்டுமா? மேலும் தற்போது வந்துள்ள வயர் (போன்ற கயிறு) அல்லது ஸ்டீல் குச்சிகளில் மடி வஸ்த்ரம் உலர்த்தலாமா?

Vidwan’s reply:

மடி வஸ்த்ரங்களைக் கொம்பால் உலர்த்துவதுதான் உசத்தி. ஏனென்றால் நாம் எவ்வளவு மடியாக இருக்கின்றோம் என்று நமக்கே தெரியாது. சிரோஸ்நானம் எல்லாம் செய்துவிட்டு பரம ஆசாரமாய் வந்திருந்தால் அது வேறு. ஆனால் அப்படியெல்லாம் அமைவது மிகவும் அரிது. அதனால் எப்பொழுதுமே மடி வஸ்த்ரங்களைக் கொம்பால் உலர்த்தி எடுத்தால் நல்லது.

வஸ்த்ரங்களை மூங்கில் கொம்பில் உலர்த்தினால் உத்தமம். அது கிடைக்கவில்லை என்றால் இரும்புக்கம்பியில் உலர்த்தினாலும் பாதகமில்லை.


“ஸ்தீரிகள் அஷ்டாக்ஷ்ர மந்த்ரம், த்வயம் மந்த்ரம், சரமஸ்லோகம், ஸ்ரீ மந்த்ரம் எவ்வளவு ஜபிக்க வேண்டும். 108,10,10,108 என்ற எண்ணிக்கை சரியானதா? மேலும் இவற்றிற்கு த்யான ஸ்லோகம் அவசியம் சொல்லணுமா”

Vidwan’s reply:

ஸ்த்ரீகள் அஷ்டாக்ஷரம், த்வயம், சரமஸ்லோகம் இவையெல்லாம் குறைந்தது 10 தடவையாவது சேவிக்க வேண்டும். அதற்குமேல் எவ்வளவு முடிகிறதோ 28,108 என எவ்வளவு வேண்டுமானாலும் ஜபிக்கலாம்.


அடியேன் பரந்யாஸம் செய்துள்ளேன், அடியேன் கேள்விபட்டது பரஸமர்ப்பணம் செய்தவர்கள் தேவதாந்த்ர சம்பந்தம் கொண்டவர்களை நமஸ்கரிக்கக் கூடாதென்று. அடியேனின் மாமனார் மாமியார் இருவருக்கும் தேவதாந்த்ர ஸம்பந்தம் கொண்டவர்கள். அவர்களைச் சேவிக்க நேரும்போது என்ன செய்வது? எம்பெருமான் அனைத்திலும் அந்தர்யாமியாக இருக்கிறான் என்று எண்ணி அவர்களைச் சேவிக்கலாமா? இதனால் மோக்ஷம் தடையாகுமா?

Vidwan’s reply:

மாமனார், மாமியார் பெற்றோர்கள் என்ற ஸ்தானத்தில் இருக்கின்ற படியினாலே அவர்களைச் சேவிப்பதில் தவறில்லை.


நித்யமும் பெருமாள் சன்னிதியில் ஊதுபத்தி ஏற்றி வைக்கலாமா?

Vidwan’s reply:

நித்யமும் பெருமாள் சன்னிதியில் ஊதுபத்தி ஏற்றி வைக்கலாம்.


எத்தனை முறை ஒருவர் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்துகொள்வது? எப்போதெல்லாம் தவறிழைக்கிறோமோ உடனே செய்ய வேண்டுமா? அல்லது ஒருமுறைதான் செய்ய வேண்டுமா?

Vidwan’s reply:

அனுதாபாத் உபரமாத்*
        ப்ராயசித்தோந் முகத்வத:।*

ப்ராயசித்த கரந்நாஶ்ச

பாபம் கச்சதி பாதஶ: ||

என்று ஸம்ஸ்க்ருத ஶ்லோகம் இருக்கிறது. ஒரு பாபத்தைச் செய்துவிட்டால் அந்த பாபத்தைச் செய்துவிட்டோமே என்று ஒரு அனுதாபம் நமக்கு வரவேண்டும்.

அனுதாபம் என்றால் இப்படி இந்த பாபத்தைச் செய்துவிட்டோமே என்று நம்பெயரிலேயே நமக்கு கஷ்டம்(வருத்தம்) வரவேண்டும்.

அதன்பின் அந்த பாபத்தைச் செய்யாமல் இருக்கவேண்டும்.

பிறகு ப்ராயஶ்சித்தம் பண்ண முயற்சி எடுக்கவேண்டும்.

இறுதியாக ப்ராயஶ்சித்தம் பண்ணவேண்டும்.

இப்படி நாம் மேற்கூறிய நான்கும் செய்யும்போது ஒவ்வொரு அடியிலும் கால்கால் பாகம் பாபம்போகும் என்பதாக.

இப்படி பாபத்தைச் செய்விட்டு, அந்த பாபத்திற்காக ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்தபின்னர் நிச்சயம் அதே பாபத்தைச் செய்யக்கூடாது. அதே பாபத்தை மீண்டும் மீண்டும் செய்துவிட்டு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்துகொள்ளலாமா என்று கேள்விகேட்டால் அதற்கு என்ன பதிலளிப்பதென்று தெரியவில்லை. செய்யாமல் இருத்தல் வேண்டும்.

பாபம் வேறுவேறாக இருந்தால் மறுபடியும் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக்கொள்ளலாம்.


ப்ரபத்தி செய்துகொண்டபின்னும் பல காலம் தேவதாந்தரம் சம்பந்தத்துடன் ஒருவர் இருக்கிறார், பின் தன் கடைசிகாலத்தில் பெருமாள் மீது மஹாவிஶ்வாஸம் வந்து பரமைகாந்தியாக மாறினால் அவர் முன் செய்த ப்ரபத்தியை பெருமாள் ஏற்பாரா? அல்லது மீண்டும் ப்ராயசித்த ப்ரபத்தி செய்ய வேண்டுமா? இப்படிச் செய்வதால் அவரின் தேவதாந்தர ஸம்பந்தத்தால் ஏற்பட்ட பாபம் போகுமா? அல்லது பெருமாள் சிக்ஷை கொடுத்து தான் மோக்ஷம் கொடுப்பாரா? இதை எப்படிப் புரிந்துகொள்வது?

Vidwan’s reply:

செய்த ப்ரபத்தி பலிக்காமல் போகாது. ஒன்று எம்பெருமான் அவரை சிக்ஷை கொடுத்து சரி பண்ணுவார். அல்லது அவரையே ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணவைப்பார். எப்படியிருந்தாலும் ப்ரபத்தி பலிக்கும்.


அடியேன் ஒரு ஸ்ரீவைஷ்ணவரல்லாதவர் கொடுத்த ஒப்பில்லியப்பனின் ப்ரசாதம்(சர்க்கரைப்பொங்கல்) மற்றும் திருப்பதி லட்டு ப்ரசாதமும் உட்கொண்டேன். பரந்யாஸம் செய்தவர் ஒரு ஸ்ரீவைஷ்ணவரல்லாதவர் கொடுக்கும் பெருமாள் ப்ரசாதத்தை ஏற்கலாமா? இல்லை தோஷமாகுமா?

Vidwan’s reply:

ஸ்ரீவைஷ்ணவர்களாக இருப்பவர்கள், ஸ்ரீவைஷ்ணவரல்லாதவர்கள் கொடுக்கும் ப்ரசாதத்தை அது பெருமாள் ப்ரசாதமாக இருந்தாலும் ஏற்பது தவறே, அது தோஷமாகும்.


தக்ஷிணாயன புண்ய காலம் தர்ப்பணம் பற்றியதான சந்தேகம்.

ஸ்ரீமத் வில்லிவலம் அழகியசிங்கரின் ஆன்ஹிக க்ரந்த அனுபந்தம் பக்கம் 24லின்படி தக்ஷிணாயன புண்ணியகால தர்ப்பணம் உத்தராயணத்தில் பண்ணவேண்டும் என்று இருக்கிறது.ஆகிலும் சேவா ஸ்வாமி Diary மற்றும் ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியாவில் தர்ப்பணம் ஞாயிற்றுக்கிழமை என்று குறித்துள்ளது.வைதீக மித்ரனில் சனிக்கிழமை அன்று தர்ப்பணம் என்றுள்ளது.தயை கூர்ந்து தர்ப்பணம் என்று செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தவும்

Vidwan’s reply:

ஆடி மாதம் ஸங்க்ரமண தர்ப்பணம்:

வாக்கிய பஞ்சாங்கம் ப்ரகாரம் சூர்யோதயமானதற்குப் பின் 45 விநாழிகை அதாவது முக்கால் நாழிகைக்கு மாசம்பிறக்கிறது, அன்றையதினம் தான் நமக்குத் தர்ப்பணம். உத்ராயணத்தில் தர்ப்பணம் பண்ணவேண்டும், அதாவது காலையில் சூர்யோதயம் ஆரம்பித்தவுடனே தர்ப்பணத்தை ஆரம்பித்துவிட வேண்டும். ஆரம்பிப்பதுதான் முக்கியம் கடைசிபக்ஷம் அதுதான் முடியும்.

த்ருக்கணித பஞ்சாங்கம் படி முதல்நாள் இராத்ரியே அதாவது சனிக்கிழமையே ஸங்க்ரமணம் ஆரம்பித்துவிடுகிறது. ஆகையால் அதற்கு முதல்நாளே பகலில் தர்ப்பணம் பண்ணவேண்டும் என்பதினால் சனிக்கிழமை தர்ப்பணம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஸ்ரீமத் வில்லிவலம் அழகியசிங்கரின் திருவுள்ளமும் தர்ப்பணம் உத்திராயணத்தில் பண்ணவேண்டும் என்பதே.

மேலும் ஞாயிற்றுக்கிழமைதான் பண்ணவேண்டும். அன்று சூர்யோதயம் ஆனவுடனே 45விநாழிகை என்றால் 18நிமிடங்கள் (மணிக்கணக்கில்) அதற்குள் தர்ப்பணம் பண்ணவேண்டும். உ.தா சூர்யோதயம் 6 மணி என்றால் 6.18 மணிக்குள் தர்ப்பணம் பண்ணவேண்டும்.

அவரவர் ஊரில் எப்போது சூர்யோதயமோ அதிலிருந்து 18நிமிடங்களுக்குள் தர்ப்பணத்தை சங்கல்பித்துக் கொள்ளவேண்டும்.

கைரேகை தெரிந்தாலே உபஸ்தானம் பண்ணலாம்.அதனால் சந்தியாவந்தனம் உபஸ்தானத்தை முன்னரே முடித்துக்கொண்டு, தர்பையெல்லாம் முன்னரே முடித்து வைத்துக்கொண்டு, சரியாக சூர்யோதயம் ஆனவுடன் சங்கல்பித்துக்கொண்டு பண்ணோமேயானால் நிச்சயமாக குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் பண்ணமுடியும்.

ஆக எல்லா ஏற்பாடுகளையும் முன்னமே செய்து வைத்திருந்தால் அந்த நாழிகைக்குள் தர்ப்பணம் மட்டும் பண்ணமுடியும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top