சுபகிருது – கார்த்திகை- ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்


நாம் அஸ்மத் குருப்யோ நம: , அஸ்மத் பரம குருப்யோ நம: என்று ப்ரார்த்திக்கும்போது எந்த ஆசார்யனை த்யானிக்க வேண்டும்? அடியேனுக்கு ஸ்மாஶ்ரயணம் ஸ்ரீமுஷ்ணம் பெரியாண்டவனிடமும் பரந்யாஸம் ப்ரக்ருத ஆண்டவன் ஸ்வாமிகளாலும் செய்விக்கப்பட்டது. ஆகையால் இக்கேள்வி.

Vidwan’s reply:

இந்த இடத்தில் மூன்று ஆசார்யர்களையும் ஸ்மரிக்கலாம். அதாவது ப்ரக்ருதமாக ஏளியிருக்கும் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீவராஹ மஹாதேசிகன் அவரையும், அதற்கு முன் இருந்த ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்கராமானுஜ யதீந்த்ர மஹாதேசிகன் மற்றும், அவருக்கு முன் ஏளியிருந்த திருக்குடந்தை ஆண்டவன் என மூவரையுமே ஸ்மரிக்கணும்.


ஒருவர் பாகவத அபசாரம் பட்டிருந்தால் ப்ரயாஶ்சித்த ப்ரபத்தி செய்தால் அவ்வபசாரம் போய்விடுமா? மேலும் அவர் யாரிடம் பாகவத அபசாரம் பட்டிருந்தாரோ ஒருவேளை அந்தப் பாகவதர் ஆசார்யன் திருவடி அடைந்துவிட்டால், தான் அவரிடம் பட்ட அபசாரத்தை எப்படிப் போக்கிக்கொள்வது?

Vidwan’s reply:

பாகவத அபசாரம் என்பது மிகவும் கொடியது. பாகவத அபசாரம் பட்டால் எம்பெருமான் திருவுள்ளம் சீறும். அதனால் அபசார பட்டுவிட்டோம் என்கின்ற மனவருத்தம் ஏற்படுவதே மிகவும் நல்ல விஷயம் தான். அது ஏற்பட்டால் உடனேயே அந்தப் பாகவதரிடத்தில் போய் க்ஷமாபணம் பண்ணிக்கொள்வது உசிதம். அந்தப் பாகவதர் இப்போது இல்லை, எம்பெருமான் திருவடி அடைந்துவிட்டார் என்றால் மானசீகமாக அந்த அபராதத்திற்கு வருந்தி எம்பெருமானிடத்தில் க்ஷமாபணம் பண்ணிக் கொள்ளவேண்டும்.

ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக்கொள்வது என்பது ஆசார்யன் திருவுள்ளபட்டால் அவர் பண்ணி வைப்பார். இப்படி நேர்ந்து விட்டது, ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக் கொள்ளவேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கிறது, அதைப் பண்ணிக்கொள்ளலாமா என்று அவரவர் ஆசார்யனிடத்தில் விண்ணப்பித்து ஆசார்யன் அதை ஆமோதித்தால் அந்தச் சமயத்தில் பண்ணிக்கொள்ளலாம்.


புரட்டாசி மாதம் பால் காய்ச்சி, வீடு மாறலாமா?

Vidwan’s reply:

பொதுவாக புரட்டாசி மாதம் பால் காய்ச்சி, வீடு மாறுவது கிடையாது.


திருஷ்டி போன்றவற்றை ஒரு ப்ரபந்நனின் நம்பிக்கை எவ்வாறு இருக்க வேண்டும். அவர்களின் கண்திருஷ்டி நம்மைப் பாதிக்காமல் இருக்க பெரியவர்கள் (கற்பூரம், உப்பு மிளகு) சுத்திபோடுவது என்ற வழக்கம் வைத்துள்ளார்கள், அதை ஒரு ப்ரபந்நன் பின்பற்றலாமா?

Vidwan’s reply:

த்ருஷ்டி சுற்றிப் போடுவது என்பது கோவில்களில் பெருமாளுக்கு இருக்கின்ற ஒரு வழக்கம் தான். பெருமாள் புறப்பாடு முடிந்து திரும்பியபின் அவருக்கு த்ருஷ்டி கழித்தபின் உள்ளே ஏளப் பண்ணுவது வழக்கமாக இருக்கின்றது. இன்றும் பல கோவில்களில் சேவிக்கலாம். அதே போல் க்ருஹங்களில் பெரியோர்கள் எல்லாம் சின்னவார்களுக்கு த்ருஷ்டி கழிப்பது வழக்கத்தில் இருக்கிறது. கற்பூரம் சுற்றிப் போடுவது, உப்பு மிளகு சுற்றிப் போடுவது என்று பெரியோர்கள் வைத்துக் கொண்டுள்ளனர்.

ஒரு ப்ரபந்நனுக்கு த்ருஷ்டி தோஷம் வந்துவிடும் என்கின்ற பயம் தேவை இல்லை. எம்பெருமான் காப்பான் என்கின்ற மஹாவிஶ்வாசம் கட்டாயம் இருக்கவேண்டும். இப்படி த்ருஷ்டி கழிப்பது என்கின்ற விஷயத்தை எம்பெருமான் நம்மை காப்பான் என்று நமக்கு இருக்கும் விஶ்வாசத்தை ஞாபகப் படுத்திக் கொள்வதற்காகத்தான் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பெரியோர்கள் வழக்கத்தில் அதை த்ருஷ்டி கழிப்பதற்கு என்று வைத்துக்கொள்ளாமல் எம்பெருமான் நம்மைக் காத்தருள்வான் என்கின்ற நம்பிக்கையை கூட்டிக் கொள்வதற்கான ஒரு காரியமாக வைத்துக் கொண்டுள்ளார்கள் என்றே தோன்றுகிறது.


ப்ரபத்திக்கு முன் சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதி பொம்மை வைத்து ஆராதனம் செய்து வந்தோம். ப்ரபத்திக்குப் பின் ஹயக்ரீவர் ஆராதனம் மட்டுமே. சரஸ்வதி பொம்மையை என்ன செய்வது? “

Vidwan’s reply:

ஹயக்ரீவ ஆராதனத்தின் பொழுது கொலு வைக்கக்கூடிய பல க்ருஹங்களில் லக்ஷ்மீ சரஸ்வதி பொம்மைகளும் இருக்கும். அந்தப் பொம்மைகளுக்கும் சேர்த்து புஷ்பம் சமர்ப்பிப்பது, அக்ஷதை சமர்ப்பிப்பது போன்ற உபசாரங்கள் எல்லாம் பண்ணுவது வழக்கத்தில் தான் இருக்கின்றது. சரஸ்வதி தேவி என்பவள் ஹயக்ரீவருக்கு அடியவள்தான்.

” दाक्षिण्यरम्या गिरिशस्य मूर्तिः

देवी सरोजासनधर्मपत्नी I

व्यासादयोऽपि व्यपदेश्यवाचः

स्फुरन्ति सर्वे तव शक्तिलेशैः॥ ”

என்று ஸ்வாமி தேஶிகன் சொல்லியிருப்பதனால் ,

சரஸ்வதியினுடைய சக்தி எல்லாம் ஹயக்ரீவருடைய சக்தியினுடைய லவலேஶத்திலிருந்துதான் வருகின்றது என்று ஸ்பஷ்டமாகவே இருக்கின்றது. அந்த ரீதியில் ஹயக்ரீவருடைய அடியவளாக அந்த உபசாரங்கள் எல்லாம் அவளுக்கு ஸமர்ப்பிப்பது தவறு இல்லை என்று தோன்றுகிறது. பல க்ருஹங்களில் இது வழக்கத்தில் இருப்பதும் தெரிகிறது.


எங்கள் க்ருஹத்தில் வழக்கம் இல்லை , தெரிந்து கொள்ளவதற்காக, காக்காக்கு சாதம் வைக்கறது பற்றி விளக்கம் வேண்டும், பெண்கள் அதை செய்வது சரியா?

Vidwan’s reply:

பெண்கள் காக்கைக்குச் சாதம் வைப்பது வழக்கம்தான்.


புரட்டாசி மாதத்தில் திருவிளக்கு (மாவிளக்கு) ஏற்றும் வழக்கம் உண்டு.ஆனால் ப்ரபத்தி ஆனவர்கள் விளக்குஏற்றி வைக்காமல் மாவை கலந்து பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணால் போதும், இல்லையென்றால் பிரார்த்தனையாக அது ஆகிவிடும் என்று சொல்கிறார்கள். குழப்பத்தை தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன் அடியேன். மேலும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஒன்று நவராத்திரி கொலு அல்லது மஹாளயபக்ஷம் அல்லது திருமலையில் பிரம்மோற்சவம் வரும் தினங்களில் சில பேர் ஏற்றக்கூடாது என்றும் ஐப்பசி ஶ்ரவணத்தில் ஏற்றலாம் என்று சொல்கிறார்கள்.தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன் அடியேன். Vidwan’s reply:

புரட்டாசி சனிக்கிழமையில் ப்ரபந்னர்கள் விளக்கு அவசியம் ஏற்றலாம். அதில் எந்தவித தோஷமும் தவறும் கிடையாது. வெறும் மாவை கலந்து அம்சை பண்ணவேண்டும், ஏற்றக்கூடாது என்றெல்லாம் கிடையாது. நிறைய பெரியோர்கள் க்ருஹங்களில் விளக்கேற்றி நன்றாகக் கொண்டாடுகிறார்கள். அதனால் அப்படிச் செய்யலாம்.

அதைத் தவிர ப்ரஹ்மோற்சவம் நடக்கும் சமயங்களில் சில க்ருஹங்களில் விளக்கேற்றுவதில்லை. அது அவரவர் க்ருஹ வழக்கம். அப்படி வழக்கமில்லை என்றால் ப்ரஹ்மோற்சவம் நடக்கும் சனிக்கிழமையில் ஏற்ற வேண்டாம். நவராத்திரியின் போது ஏற்றுவது என்பது சில க்ருஹங்களில் வழக்கமாக இருக்கின்றது. அதுவும் தவறு கிடையாது. அதாவது சில க்ருஹங்களில் விளக்கேற்றுவதற்கு, புரட்டாசி சனிக்கிழமை நவராத்திரியில் வரும் சனிக்கிழமையாக இருக்கவேண்டும் என்கின்ற பழக்கமே இருக்கின்றது. அதனால் அதிலும் தவறு கிடையாது. மஹாளயபக்ஷத்தில் வரும் சனிக்கிழமையில் பொதுவாக ஏற்றுவது இல்லை ஆகையால் அதைத் தவிர்க்கலாம்.

இந்தக் காரணங்களால் ஐப்பசி சனிக்கிழமையில் விளக்கேற்ற வேண்டும் என்பது எந்த இடத்திலேயும் வழக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை .புரட்டாசி சனிக்கிழமையில் ஏற்றுவதுதான் திருவேங்கடமுடையானுக்கு உசத்தி . அப்பேர்ப்பட்ட சனிக்கிழமை கட்டாயம் நேரும். அந்தச் சமயத்தில் அவசியம் ஏற்றலாம்.


நமஸ்காரம், பரந்யாஸத்திற்குப் பிறகு கட்டாயம் தவிர்க்க வேண்டியவை எவை?

Vidwan’s reply:

பரந்யாஸத்திற்குப் பிறகு கட்டாயம் தவிர்க்க வேண்டியவை தேவதாந்தர ஸம்பந்தமும் பாகவத அபசாரமுமாகும்.


நமஸ்காரம், சில சமயங்களில் சிலருடைய தீய பார்வை மற்றும் எண்ணங்களிடம் இருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் காத்துக் கொள்ள எண்ண செய்வது?

Vidwan’s reply:

எம்பெருமானுடைய அடியார்களை எந்தவிதமான தீய பார்வையோ, தோஷமோ எதுவுமே செய்யாது. அதிலிருந்து காத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமிருந்தால், ஸுதர்ஶனாழ்வாரை த்யானிக்கலாம், ஸுதர்ஶனாஷ்டகம் சேவிக்கலாம், மேலும் அவரை ப்ரதக்ஷிணம் செய்யலாம்.


அடியேன் பூனாவில் உள்ளேன்.அடியேனுக்கு ப்ரபத்தி ப்ரக்ருதம் அழகியசிங்கரிடம் ஆனது.இங்கே சந்த் ஞானேஸ்வர் மிக பிரபலம். ஜீவ சமாதி உள்ளது. அவர் விஷ்ணு பக்தர். அடியேன் அங்கே போகலாமா?

Vidwan’s reply:

இக்காலத்தில் பல இடங்களுக்குச் சுற்றுலா போய்விட்டு வருவதென்பது வழக்கத்தில் இருக்கிறது. சந்த் ஞானேஶ்வர் என்பவர் மிகப்பெரிய விட்டல பக்தர், அவரின் சமாதிக்குப் போய் சேவிப்பதென்பதெல்லாம் உசிதமில்லை. அந்த ஆலந்தி என்கிற ஊரில் ஒரு விட்டலன் கோயில் இருக்கிறது அங்கு போவதோ, அந்த ஊரைச் சுற்றி பார்ப்பதோ தவறில்லை.


பாகவத அபசாரம் பட்டுவிட்டால் மோக்ஷத்திற்குத் தடை ஏற்படுமா? அல்லது எம்பெருமாள் சிக்ஷை கொடுத்து மோக்ஷம் அளிப்பாரா?

Vidwan’s reply:

பாகவத அபசாரம் ஏற்பட்டால் மோக்ஷத்திற்குத் தடையும் ஏற்படலாம் என்று சொல்லியிருக்கு. அது அத்தனை தீவிரமானது ஆகையால் அவசியம் தவிர்க்க வேண்டியது.


அடியேன் சமீபத்தில் ஒரு இராமானுஜ குலம் என்ற கோஷ்டி எம்பெருமான் கோயிலில் திவ்ய ப்ரபந்தம் சேவிப்பதையும், அதில் ஒருவர் எம்பெருமான் திருமஞ்சனம் சமயம் வேதவிண்ணப்பம் செய்வதையும் கண்டேன். இராமானுஜ சம்பந்தம் பெற்றபின் ஒருவரின் வர்ணாஶ்ரம தர்மமும் மாறிவிடுமா?

Vidwan’s reply:

இராமானுஜ அடியார்களாக ஆனபிறகு வர்ணாஶ்ரம தர்மம் கட்டாயாமாக மாறாது. அவர்களுக்கு வைஷ்ணவத்வம்தான் வருமே தவிர, வர்ணமோ, ஆஶ்ரமோ மாறாது. அதன் தர்மத்தை மீறுவது தவறாகும்.


a. ப்ரம்ஹா மற்றும் சிவனுக்கு நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பாகவதர்கள்/ஸ்ரீவைஷ்ணவர்கள் என்ற ஸ்தானம் வழங்கப்பட்டுள்ளதா?

b. அவர்கள் நாராயணனுக்கு ஸ்தோத்திரம், கைங்கர்யம் செய்பவர்கள்/அடியவர்கள் என்று இதிஹாச புராணங்கள் மூலம் தெரிகிறதே. அவ்வாறு இருந்தால் ஸ்ரீவைஷ்ணவர்களாகிய நாம் அடியவர்க்கு அடியவர்கள் என்று எண்ணி அவர்களைத் துதிப்பதில்லையே ஏன்?

c. அவர்கள் நாராயணன் ஒருவன் தான் பரமாத்மா என்ற தத்துவத்தை உணர்ந்தவர்கள் போல் தெரிகிறதே, அவ்வாறு இருக்க அவர்கள் ஏன் அந்தத் தத்துவத்தை அவர்களின் பக்தர்களுக்குக் காட்டுவதில்லை?”

Vidwan’s reply:

ஆம், ப்ரம்ஹா மற்றும் சிவனுக்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் என்ற ஸ்தானம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சொல்லியுள்ளது. ஸ்வாமி தேஶிகனும் ப்ரதம ஸ்ரீவைஷ்ணவன் என்பதாகக் குறிப்பிடுகிறார்.

அடியவர்க்கு அடியவர் என்று கேள்வியில் குறிப்பிட்டதுபோல் ஸ்தோத்ரம் இருந்தால் பண்ணலாம். வேதத்தில் சில மந்த்ரங்கள் இருக்கு, புராணத்திலும் அந்த மாதிரி சில ஸ்துதிகள் எல்லாம் இருக்கின்றது, நாம் அந்த மந்த்ரங்களையும், புராணத்தில் இருக்கின்ற ஸ்துதிகளையும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் அடியவர்களுக்கு அடியவர் என்று நினைத்து நாமாக ஸ்தோத்ரம் பண்ணுவதோ, நாமாக கோயில்களுக்குப் போய் சேவிக்கின்றதோ கூடாது. இதெல்லாம் ஒரு விதமான ஒரு பாதுகாப்புக்காக பண்ணியிருக்கிறார்கள். அதாவது புத்திமாறிப் போய்விடக் கூடாது. நாராயணனே பரதத்துவம் என்பதில் நமக்கு எந்த விதத்திலுமே கொஞ்சம்கூட சமரசமே இருக்கக்கூடாது. அதனால் இதிஹாச புராணங்களில் வேதங்களில் எந்த அளவு நமக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்களோ அதைமட்டும் நாம் செய்தால் போதும். மற்றது எதுவும் செய்யவேண்டியது இல்லை.

புராணத்தில் நாராயணன்தான் பரதத்துவம் என அவர்கள் காட்டுகிறார்கள் என்றுதான் இருக்கின்றது. கொஞ்சம் மெதுவாக காட்டுவார்கள். உடனே காட்டிக்கொடுக்க மாட்டார்கள். 7/8 ஜன்மம் அல்லது பல ஜன்மங்கள் எடுத்த பின்பு எம்பெருமானிடத்தில் சேர்த்து விட்டு விடுவார்கள் என்று இருக்கின்றது. பல புராணங்களில் இந்த விஷயம் இருக்கின்றது. எத்தனையோ ஜன்மத்தில் ருத்ரனுடைய பக்தனாக இருந்தவர், பிறகு பெருமாளுடைய பக்தனாக மாறியிருக்கிறார் என்றெல்லாம் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. அவரவரின் ஶ்ரத்தைக்கெல்லாம் ஏற்றார் போல், அததற்கான முறை என்று ஒன்று இருப்பதனால அவர்கள் உடனடியாக காட்டாமல் மெதுவாகத்தான் செய்வார்கள்.


அல்ப த்வாதசி காலங்களில் மாத்யாஹ்நிகம் செய்த பிறகுதான் பாரணை பண்ணவேண்டுமா? (காலம் அவசியம் இல்லையா)

Vidwan’s reply:

ஆம் அல்ப த்வாதசி காலங்களில் மாத்யாஹ்நிகம் செய்த பிறகுதான் பாரணை பண்ணவேண்டும் என்று இருக்கிறது. அதனால் அன்று சூர்யோதயத்திற்குப் பின் சந்த்யாவந்தனம், மாத்யாஹ்நிகம் எல்லாம் பண்ண முடிந்தால் வேகமாக அவற்றைப் பண்ணிவிட்டு சாப்பிடலாம். அப்படி இல்லாவிட்டால் கூட மாத்யாஹ்நிகத்தை முன்னாடியே பண்ணிவிட்டுத்தான் சாப்பிட வேண்டும் என்று இருக்கின்றது.

ஒருவேளை காலம் தவறி சூர்யோதயத்திற்கு முன்னே மாத்யாஹ்நிகம் பண்ண வேண்டும்படி ஏற்பட்டுவிட்டால், மாத்யாஹ்நிகம் சமயத்தில் மறுபடியும் பண்ண வேண்டும் என்று ஒன்றும் உண்டு.


பொதுவாக வடகலையார்கள் ஸ்வாமி தேஶிகனைப் பின்பற்றும் போது, அஹோபில மடம், ஆண்டவன் ஆஶ்ரமம் என்ற ஸம்ப்ரதாயங்கள் இருக்கும் காரணம் என்ன? பொதுவாக வடகலையார்கள் ஸ்வாமி தேஶிகனைப் பின்பற்றும் போது, அஹோபில மடம், ஆண்டவன் ஆஶ்ரமம் என்ற ஸம்ப்ரதாயங்கள் இருக்கும் காரணம் என்ன?

Vidwan’s reply:

ஸ்வாமி தேஶிகனுக்கு ஒரே சிஷ்யர் ஒரே ஸம்ப்ரதாயம் என்று இல்லை. நிறைய சிஷ்யர்கள் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக நிறைய பரவி இருக்கிறது.

இது தேஶிகருக்கு மட்டும் இல்லை, பகவத் இராமானுஜர் காலத்திலிருந்தே, இராமானுஜர் வரைக்கும் ஒரே ஸம்ப்ரதாயம். இராமானுஜருக்குப் பின் அவருக்கு அநேக சிஷ்யர்கள். அவர் 74 ஆசார்யர்களை நியமித்தார் என்று இருக்கின்றது. அதனால் 74 விதமாக அந்தப் பரம்பரை வருகிறது. அப்படி வரும்போது சின்னச்சின்ன விஷயங்களில், அனுஷ்டானம் முதலான விஷயங்களில் அபிப்ராய வித்யாசம் வரும். அது வந்ததால் அதுவே ஒரு ஸம்ப்ரதாயமாக மாறிப்போய் விடுகிறது. இதெல்லாம் ஶாஸ்த்ர அனுமதம். ஸ்வாமி தேஶிகனே இதைச் சொல்லியிருக்கிறார். அதாவது “தேச காலாதி பேதத்தினாலே ஆசார‌ அனுஷ்டான பேதங்கள் எல்லாம் ஶாஸ்த்ர சம்மதம்” என்று.

அதனால் தேசத்திலேயோ, காலத்திலேயோ இதை அனுசரித்து ஸம்ப்ரதாயத்தில், ஆசாரத்தில், அனுஷ்டானத்தில் வித்யாசங்கள் எல்லாம் வரும். எல்லா தேசத்திலும் ஒரே மாதிரி ஆசாரம் இருக்காது என்று ஶாஸ்திரமே இதை ஒத்துக் கொண்டுள்ளது. அந்த ரீதியில் இது ஶாஸ்த்ர சம்மதம்தான். ப்ரதானமான விஷயம் என்னவென்றால் ஸ்ரீமன் நாராயணனே பரதத்துவம். அவனிடத்தில் ஶரணாகதி பண்ண வேண்டும். தேஶிகன் ஸம்ப்ரதாயத்தில் அதில் நமக்குள் எந்த ஒரு வித்யாசமும் கிடையாது.


க்ரஹண காலத்தின் சமயம் வேத பாராயணம் செய்யலாமா?

Vidwan’s reply:

க்ரஹண கால சமயத்தில் வேத பாராயணம் செய்யக் கூடாது. அதே சமயம் கோயில்கள் ஏதாவது விசேஷமான உற்சவம், புறப்பாடு அது போல் ஏதாவது இருந்தால் அப்போது கோஷ்டியாக கோயில்களில் செய்யலாம்.


தர்ப்பணதிற்கு முன் பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிக்கலமா?

Vidwan’s reply:

தர்பணத்திற்கு முன் பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிக்கும் வழக்கமில்லை. பெருமாள் திருவாராதனம் எல்லாம் முடித்துவிட்டு, தர்ப்பணம் முடித்து விட்டுத்தான் பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிப்பது வழக்கம்.


க்ரஹணம் பற்றி சில கேள்விகள்

1) க்ரஹண காலத்தில் கொடுக்கும் தானத்திற்கு தோஷம் உண்டா? நாம் வேறு பாகவதர் தரும் தானத்தை ஸ்வீகரிக்கலாமா?

2) புண்யகாலம் திருமஞ்சனம் மிகவும் விசேஷம் என்று இருக்கும்போது திருக்கோயில்கள் மூடப்படுவதன் தாத்பர்யம் என்ன?

3) க்ரஹண காலத்தை புண்யகாலம் என்கிறோம் அப்படியிருக்க க்ரஹணம் விட்ட பின் சுத்தமண்டல ஸ்நானம் ஏன் செய்கிறோம். க்ரஹணகால தீட்டு என்று ஏன் கூறுகிறார்கள்?

4) பொதுவாக விமோசன ஸ்நானம் செய்தபின் நாம் கடைபிக்க வேண்டிய அனுஷ்டானங்கள் என்ன?

Vidwan’s reply:

க்ரஹண காலத்தில் கொடுக்கும் தானத்திற்கு தோஷம் கிடையாது. க்ரஹண காலத்தில் தானம் கொடுக்கலாம், தானம் வாங்கலாம் ஒரு தோஷமும் (இருவருக்கும்) ஒட்டாது.

க்ரஹண காலத்தில் திருவாராதனம், திருமஞ்சனம் இதெல்லாம் விசேஷம் என்று இருக்கின்றது. கோயில்களில் எல்லாம் பல ஸம்ஹிதைகள் இருக்கிறது, அதில் பல ஸ்ம்ப்ரதாயங்கள் உண்டு. பாஞ்சராத்ர ஸம்ஹிதைகளே நிறைய‌உண்டு. அந்தந்த ஸம்ஹிதைகளை அனுசரித்து அந்தந்தக் கோயில் ஆசாரம் என்பதும் நிறைய உண்டு. ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் அதை அனுசரித்து அவர்கள் அந்த மாதிரி செய்கிறார்கள். பெருமாளுக்குட்பட சுத்தி செய்ய வேண்டும். இதெல்லாம் எத்தனையோ ஆகமங்கள், ஶாஸ்த்ரங்கள், ஸ்ம்ப்ரதாயங்கள். இவை எல்லாமே ஶாஸ்த்ர அனுமதம் என்று வைத்துக் கொள்ளலாம்.

புண்யகாலம் என்றால் மிகவும் விசேஷமான காலம் என்கின்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. அந்த க்ரஹண காலத்தில் ஸ்நானம், தர்ப்பணம் முதலானது எல்லாம் விசேஷம் என்று இருக்கின்றது. அந்த அடிப்படையில் அது புண்யகாலம் என்று சொல்லியிருக்கின்றது. அதைத்தவிர க்ரஹண கால தோஷம் என்று ஒன்று உண்டு. அந்தத் தோஷம் அதில் எப்போதுமே இருந்து கொண்டு இருக்கிறது. ஒரு விதத்தில் அது புண்யகாலம் என இருக்கிறது என்பதற்கு உதாரணமாக தானத்தை எடுத்துக் கொண்டால் சாதாரண காலத்தில் செய்யும் தானத்தை விட க்ரஹண காலத்தில் செய்யும் தானம் மிகவும் விசேஷமானது. அதனால் ஸ்நானம், தர்ப்பணம், திருவாராதனம், ஜபம், தானம் இவையெல்லாம் விசேஷமாக அதில் நடக்கின்றபடியாலும், விசேஷமான பலனைக் கொடுக்கும் என்று சாஸ்த்ரம் சொல்லியிருக்கும் படியினால் அதற்கு புண்யகாலம் என்று பெயர். அதே சமயத்தில் க்ரஹண காலத்திற்கு மற்ற விதத்தில் பார்க்கும் போது அதற்கு தோஷம் என்று ஒன்று உண்டு. அதனால் இது ஒரு விதத்திலும், அது ஒரு விதத்திலும் ஆகும். அதில் ஒரு விரோதமும் கிடையாது.

விமோசன ஸ்நானம் செய்த பின் ஒன்றும் கிடையாது. அன்றைய தின அனுஷ்டானங்களைத் தொடர்ந்து பண்ண வேண்டும்.


ஶ்ரார்த்த தினம் அன்று திருவாராதனத்தில் சாளக்கிராமத்திற்குத் திருமஞ்சனம் செய்யக் கூடாது என்று ப்ருஹஸ்பதி கூறுகிறார். இது சரியா?

Vidwan’s reply:

ஶ்ரார்த்த தினம் அன்று திருவாராதனத்தில் சாளக்கிராமத்திற்குத் திருமஞ்சனம் செய்யக்கூடாது என்று கிடையாது. ஸ்மார்த்த ஸம்ப்ரதாயத்தில் அவர்கள் செய்ய மாட்டார்கள் என்று கேள்வி. ஆனால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸம்ப்ரதாயத்தில் அவசியம் அன்று சாளக்ராமத்திற்குத் திருவாராதனமும், திருமஞ்சனமும் பண்ண வேண்டும்.


பித்ரு தோஷம் என்றால் என்ன? ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் ஆகி, தர்ப்பணம், ஶ்ராத்தம் தவறாமல் செய்யும் ஒரு ப்ரபந்நன் பித்ரு தோஷம் பற்றி கவலைப்பட வேண்டுமா?

Vidwan’s reply:

பித்ரு தோஷம் என்று ஜாதகத்தில் காண்பித்துக் கொடுப்பதாக சொல்கிறார்கள். பித்ரு கார்யங்களை அதாவது ஶ்ரார்த்தம், தர்ப்பணம் முதலியவைகளை, நாமோ அல்லது நம் முன்னோர்கள் சரியாகப் பண்ணவில்லை என்றாலோ, துர்மரணம் முதலானது எல்லாம் வரும் போதோ, அந்தப் பித்ருக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விடுகிறது. எப்போதுமே நாம் செய்யும் ஶ்ரார்த்தாதிகளினால்தான் அவர்களுக்கு த்ருப்தி வரவேண்டும். அதனால் பித்ருக்களுடைய அதிருப்தியானது குடும்பத்தை நேராக பாதிக்கின்றது. அதனால் குழந்தைகள் பிறக்காமல் இருத்தலோ, குழந்தைகளுக்கு தோஷம் இருத்தலோ காண்பிக்கிறது. ஜாதகத்திலும் காண்பிக்ககிறது என்பதாகச் சொல்வார்கள். இப்படி ஒன்று ஶாஸ்த்ரத்தில் இருப்பது வாஸ்தவம்.

ஶரணாகதி பண்ணியவர்கள், அதிலும் குறிப்பாக தவறாமல் ஶ்ரார்த்தம் தர்ப்பணம் எல்லாம் சரியாகப் பண்ணுபவர்கள் இந்தப் பித்ரு தோஷத்தை பற்றி பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. பெருமாள் இருக்கின்றார், அவர் பார்த்துக் கொள்வார். அதனால் ப்ரச்சினை ஒன்றும் இருக்காது. குடும்பத்தில் இன்னும் பெரிய அளவில் பாதிப்பு என்று இருந்தால் நம் ஸ்ரீ வைஷ்ணவ பாதிக்காத ரீதியில் நாம் ஏதாவது பரிகாரம் பண்ணலாம். இராமேஸ்வரம் போய் தர்ப்பணம் செய்வது என்று சொல்வதெல்லாம் நம் பெரியோர்கள் யாரும் செய்வது கிடையாது. வேறு ரீதியில் நாம் ஏதாவது பண்ணலாம்.


“வ்ருத்தி தீட்டு என்று வந்தால் ஶ்லோகம், பாசுரம் சேவிக்கலாமா? ‘கோயிலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வேறு எந்த மாதிரி வேண்டலாம்? அல்லது.வ்ருத்தி தீட்டில் சாதாரணமாக எப்பொழுதும் போல் ஶ்லோகங்களும் ,திருவாராதனம், தவிர, ஸேவிக்கலாமா?”

Vidwan’s reply:

வ்ருத்தி தீட்டு வந்தால் தேஶிகர் ஸ்லோகங்கள் சொல்லலாம். பாசுரங்கள் எல்லாம் சேவிக்கலாம். வ்ருத்தி தீட்டில் சாதாரணமாக எப்பொழுதும் போல் திருவாராதனம் தவிர ஶ்லோகங்கள் ஸேவிக்கலாம்.


எங்கள் அகத்து வழக்கப்படி கட்டுமாவடி வீரன்னார் கோயிலில் குழந்தைக்கு முடிகொடுத்து விட்டு பின் திருமலைக்கு முடிகாணிக்கை செலுத்தும் வழக்கம். ஆனால் இன்று அனைவருமே ஸ்ரீமத 46ஆம் பட்டம் அழகிய சிங்கரிடன் பரந்யாஸம் பெற்றவர்கள் ஆகையால் திருவேங்கடமுடியானுக்கு கொடுத்தால் போதுமா என்ற அடியேனின் சந்தேகத்திற்கு முன்னரே வித்வான்கள் பதிலளித்தனர். ஆனால் எங்கள் அகத்து பெரியவர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் அகத்து வழக்கத்தை எப்படி மாற்றுவது என்று தயங்குகிறார்கள். அவர்களுக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது என்று தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

“ஸர்வ தேவ நமஸ்கார: கேஶவம் ப்ரதிகச்சதி” என்று சொல்லும் ரீதியில் தேவாதிதேவனான எம்பெருமான் இருக்கும்போது, அவருக்கு ஸமர்ப்பித்தால் இவர்களுக்கு திருப்திவரும். “அங்காந்நந்யா தேவதா:” என்று வேதம் சொல்கிறது. அதாவது நாம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்றால் பகவானுக்கு ஸமர்ப்பித்தால் மற்ற தேவர்களுக்கு ஸமர்ப்பிக்கவில்லையே என்ற கோபம் வரும் என்று. உண்மை என்வென்றால் எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்தால் எல்லாருக்கும் திருப்திவரும். எல்லா தேவர்களும் பகவானைச் சேர்ந்தவர்கள் என்று எல்லா ஶாஸ்த்ரங்களும் சொல்லியிருக்கிறது.

ஆகையால் பகவானுக்கு ஸமர்ப்பித்தால் பகவானுக்கு திருப்தி வரும். எம்பெருமான் திருப்தியடைந்தால் மற்றவர்களுக்கு கோபம் வராது, திருப்திதான் வரும் என்று இருக்கிறது. மேலும் அவர்கள் அனைவரும் எமெருமானுக்கு அங்கமாக இருக்கின்றபடியால் கோபிக்க மாட்டார்கள், சந்தோஷம் அடைவார்கள் என்று இருக்கிறது. இதை எடுத்துச் சொல்லலாம்.

பகவானுக்கு ஸமர்ப்பிப்பது வேரில் ஜலம் ஸமர்ப்பிப்து போலே என்று புராணங்கள் சொல்கிறது. வேரில் ஜலம் சேர்த்தால் மரத்தில் இருக்கும் புஷ்பம், இலை என்ற அனைத்துக்கும் போய் சேரும். அதுபோல்தான் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதும்.


அடியேன் இக்கேள்வியை சென்ற சுதர்சனத்திலும் கேட்டிருந்தேன், ஐயங்கார் பையன் ஒரு வட தேசத்துக்ஷத்ரிய பெண்ணை மணந்திருந்தால் அவனால் ப்ரபந்நர்களான தன் தாய் தந்தை ஆசார்யன் திருவடி அடைந்தபின் அவர்களுக்கு அந்திம ஸம்ஸ்காரம் பண்ணமுடியுமா?

Vidwan’s reply:

வடதேசத்துக்ஷத்ரிய பெண்ணை மணந்திருந்தாலும் அந்தப் பையன் தன் தாய் தந்தையருக்கு அந்திம ஸம்ஸ்காரம் பண்ணிதான் ஆகவேண்டும், பண்ணாமல் இருக்க முடியாது.


வெளிநாட்டில் வசிப்பதனால் என் தாய் தந்தையற்கு ஶ்ராத்தம் பண்ண சரியான வசதி கிட்டாதனால் சிரமமாக இருக்கிறது. இந்தியா வரும் போது அவர்களின் ஶ்ராத்த திதியன்று எந்த மாதத்திலும் பண்ணலாமா அல்லது அந்த மாதம் அந்த திதியில்தான் பண்ணவேண்டுமா? என்னால் அவர்கள் பரமபதித்த திதியன்று இந்தியா வரஇயலவில்லை.

Vidwan’s reply:

மாற்றிப் பண்ணுவதற்கான சலுகையை ஶாஸ்த்ரம் கொடுக்கவில்லை. ஶ்ராத்தம் என்பது ஶ்ரத்தையாகச் செய்யவேண்டும். அது என்றைக்கு வருகிறதோ அன்றுதான் செய்யவேண்டும்.

அன்று பண்ணமுடியாமல் தீட்டு வந்துவிட்டால், தீட்டு போகும் அன்று பண்ணவேண்டும். ஒருகால் மறந்துவிட்டால் பண்ணவேண்டும் என்று அதற்கும் ஒரு நாள் சொல்லியிருக்கு. இவை தவிர நாமே ஒருநாள் செய்வதற்கு ஶாஸ்த்ரம் அனுமதி கொடுக்கவில்லை.


கைசிக ஏகாதசி அன்று ப்ரபத்தி ஆனவர்களுக்கு ஷஷ்டியப்தபூர்த்தி வந்தால் என்ன செய்வது? அடியேனுடைய நாத்தனார் பேரன்களுக்குக் கைசிக ஏகாதசி அன்று யஜ்ஞோபவீதம் (பூணூல்) போடுகிறார்கள். அடியோங்கள் தாய்மாமா மாமி, ப்ரபத்தி ஆனபடியால் அன்று போஜனம் செய்ய இயலாது. பல வைஷ்ணவ கல்யாண விசேஷங்களில் அவா குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே போஜனம் செய்ய மடி தளிகை‌செய்து சிலரை போஜனம் பண்ணச் சொல்லுகிறார்கள். மற்றவர்களை விட்டு விடுகிறார்கள். கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என்று பொதுப்பந்தியில் போஜனம் செய்ய நிர்பந்தம் ஏற்படுகிறது இதற்கு தீர்வு என்ன என்பதை ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

ஏகாதசி அன்று பொதுப்பந்தியில் போஜனம் பண்ணாமல் இருப்பதுதான் சரி. எக்காரணமாகிலும் போஜனம் செய்யக்கூடாது. அவர்கள் நிர்பந்தமாக பண்ணால், ஏகாதசியன்று சாதம் சாப்பிடமுடியாது என்றும், எம்பெருமானுக்கு அம்சை பண்ணாததைச் சாப்பிடமுடியாது என்று, நாமும் அதைவிட நிர்பந்தமாக சொல்லவேண்டும். இவ்விஷயத்தில் அவர்களுக்காகத் தயங்கி ஒரு முடிவு எடுக்கவேண்டாம் என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கு. ஆகையால் தாராளமாக சாப்பிடமுடியாது என்று சொல்லி அன்று நாம் என்ன செய்யவேண்டுமோ அதற்கேற்றார் போல் செய்துகொள்ளலாம்.


சுபக்ருது ஐப்பசி மாதம் அடியேன் கேட்டகேள்வியின் தொடர்ச்சி. பஞ்சாங்கமே ப்ரதானம் ஆகையால் சந்திரனைப் பார்க்க முடியாவிட்டாலும் க்ரஹணகாலத்தை அனுசரித்து தர்ப்பணம் பண்ணவேண்டும் என்று வித்வான்கள் பதிலளித்திருந்தனர்.அடியேனின் கேள்வி, இது விமோசன ஸ்நானத்திற்கும் பொருந்துமா? அதாவது மேகமூட்டமாக இருந்து சந்திரனைப் பார்க்க முடியாமல் போனாலும் விமோசன ஸ்நானம் செய்யவேண்டுமா?

உ.தா: ஜூலை 28,2018 அன்றைய சந்திரக்ரஹண காலம் 3.49am தொடங்கி விமோசனம் 6.21am ஆனால் காலை சந்திரனை காணமுடியவில்லை. இப்படிப் பட்ட நேரத்தில் காலை விமோசன ஸ்நானம் செய்துவிட்டு நம் நித்யகர்மானுஷ்டானங்களைத் தொடரலாமா? அல்லது அன்று மாலை சந்திரன் தெரியும்வரை காத்திருந்துதான் மேலே நித்யகர்மாக்களைச் செய்யவேண்டுமா?

Vidwan’s reply:

சூர்ய க்ரஹணமானாலும், சந்திர க்ரஹணமானாலும் க்ரஹணம் விட்டபின் சூர்யனையோ, சந்திரனையோ பார்த்துவிட்டுதான் விமோசன ஸ்நானம் பண்ணவேண்டும் என்பது பொதுவிதி.

சில சமயம் க்ரஹணம் விட்டபின் அல்லது விடும்சமயம் அவர்கள் அஸ்தமனித்து விடுவார்கள், அந்நேரத்தில் அவர்களைப் பார்ரக்கமுடியாது. இதுபோன்ற நேரத்தில் மறுபடியும் அவர்கள் உதிக்கும்வரை காத்திருந்து அவர்களைப் பார்த்துவிட்டுதான் சாப்பிட வேண்டும்.

வேறுசில சமயம் உதயசமயத்தில் மேகமூட்டம், மழைக்காரணமாக ஒருவேளை சூர்ய, சந்திரனைப் பார்க்கமுடியாமல் போனால் அவர்கள் உதயமாகியிருப்பார் என்று பஞ்சாங்கம் துணைக்கொண்டும், மேலும் அவர்களின் ப்ரகாசம் நமக்குத் தெரியுமல்லவா அதைக்கொண்டும் விமோசன ஸ்நானம் பண்ணலாம் என்று தோன்றுகிறது.


ஏன் வடகலையார் மணவாளமுனிகளின் திருநக்ஷத்ரம் கொண்டாடுவதில்லை? அதேபோல் அவர்கள் ஸ்வாமிதேஶிகனைக் கொண்டாடுவதில்லை? மணவாளமாமுனிகள், ஸ்வாமி தேஶிகன் பற்றி ஏதேனும் க்ரந்தத்தில் குறிப்பிட்டுள்ளாரா? மேலும் நம் ப்ரதமாசார்யன் ஸ்வாமிதேஶிகன் ஆனபடியால் அப்படிச் செய்வதில்லையா? அவர்களும் அதேபோல் ப்ரதமாசார்யன் மாமுனியானபடியால் ஸ்வாமிதேஶிகனின் திருநக்ஷத்ரத்தைக் கொண்டாடுவதில்லையா?

Vidwan’s reply:

இருவரும் ஆசார்யர்கள்தான், ஆனால் கூட ஸம்ப்ரதாயத்தில் அபிப்ராய பேதம் என்பது நிறைய வந்து விட்டபடியால், தேஶிக ஸம்ப்ரதாயத்தில் ஸ்வாமிதேஶிகன் சொன்ன சில தர்மங்கள், சில அனுஷ்டானங்கள் மணவாளமாமுனிகள் ஏற்கவில்லை என்று இருக்கிறது. அதே போல் அவரின் பக்ஷம் நம் தேஶிக பக்ஷத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. இக்காரணத்தில் பொதுவாக ஆழ்வார் ஆசார்யர்கள் திருநக்ஷத்ரத்தின் போது இருக்கும் ஒரு ஶ்ரத்தை இங்கே குறைகிறதே தவிர, த்வேஷம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. கொண்டாடவே கூடாது என்றெல்லாம் இல்லை.

மணவாளமாமுனிகள் சில க்ரந்தத்தில் தூப்புல் பிள்ளை அருளிச்செய்வார் என்று ஸ்வாமி தேஶிகனைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஸ்வாமி தேஶிகன், மணவாளமாமுனிகள் பற்றி குறிப்பிட வாய்ப்பில்லை ஏனென்றால் அவர் மாமுனிக்கு முன்னரே இருந்தவர்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top