சுபகிருது – சித்திரை – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்


ஶ்ரீவைஷ்ணவர்கள் அகத்தில் சங்கு வைத்துக்கொள்ளலாமா? ஆமெனில் எவ்வாறு ஆராதிப்பது? இல்லையெனில் அகத்தில் இருக்கும் சங்கை எவ்வாறு உபயோகிப்பது?

Vidwan’s reply:
ஸ்ரீவைஷ்ணவர்கள் அகத்தில் சங்கு வைத்துக்கொள்ளலாம். சங்கத்திற்குத் தனியாக ஆராதனம் செய்யவேண்டிய அவசியமில்லை. நாம் சாதாரணமாக வாங்கியிருக்கக்கூடிய வலம்புரி சங்கு முதலானவையாக இருந்தால், அந்தச் சங்கத்தை சுத்தமாகவைத்து எம்பெருமானுக்குத் திருவாராதனம், திருமஞ்சனம் எல்லாம் செய்யலாம்.

சில சமயம் விசேஷமாக சங்கு சக்ரம் சுதர்ஶன பாஞ்சஜன்யம் ஏளப்பண்ணி ப்ரதிஷ்டை எல்லாம் செய்வார்கள். அது விசேஷ விதி. அவர்களுக்கு நித்யம் திருவாராதனை எல்லாம் உண்டு.


எங்கள் பெற்றோர்கள் இருவரும் பரமபதித்துவிட்டார்கள். எங்கள் தமையனார் தான் கார்யங்களைச் செய்து வந்தார். தற்போது அவரும் பரமபதித்துவிட்டதால், பெண்களாகிய நாங்கள் வருடாவருடம் பெற்றோர்களுக்கு ஶ்ராத்தம் செய்யலாமா? மேலும் பரமபதித்த எங்கள் தமையனார் ஒரு ப்ருஹ்மச்சாரி, உடன் பிறந்தவர்கள் என்ற முறையில் நாங்கள் அவருக்கு ஶ்ராத்தம் செய்யலாமா? பெற்றோர்கள் இல்லாத, ஒரு திருமணமாகாத ஸ்திரீக்கு யார் அந்திமகார்யம் செய்யலாம்?

Vidwan’s reply:
தமையனார் பரமபதித்துவிட்டபடியால் பெற்றோர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டியது எதுவும் கிடையாது. ஏனென்றால் அவர்தான் கர்த்தா. அவருடன் அது முடிந்துவிடும். அதனால் ஶ்ராத்தம் செய்யவேண்டாம்.

மேலும் தமையனார் அவருக்கு வேறு யாரும் இல்லாதபடியினாலே, அவர்கள் உடன் பிறந்தவர்கள் என்கின்ற முறையில் நீங்கள் ஶ்ராத்தம் செய்யலாம். ஸ்த்ரீகளிடமிருந்து கைப்புல் வாங்கிக்கொண்டு மற்றவர்கள் செய்யவேண்டும்.

பெற்றோர்கள் இல்லாத, ஒரு திருமணமாகத ஸ்த்ரீக்கு அந்திம கார்யம் கூடபிறந்தவர் செய்யலாம். அப்படி இல்லாவிட்டால் வேறு யாராவது செய்யலாம்.


அடியேன் ஸாமவேதத்தைச் சேர்ந்தவன். யஜூர்வேத முறையில் அச்சித்ரம் மற்றும் காடகம் கற்றுக்கொண்டேன், இப்போது அருணம் கற்றுக்கொண்டு வருகிறேன். ஸாம வேதமும் கறக் ஆரம்பித்திருக்கிறேன், 62 அகவையானபடியால் ஸாமவேதம் கற்பது சற்று கடினமாக உள்ளது. அடியேனின் சந்தேகம் அடியேன் யஜுர்வேதத்தைத் தொடர்ந்து கற்கலாமா? 2. யஜுர்வேதத்தில் கற்றதைப் பாராயணம் செய்யலாமா?

Vidwan’s reply:
வயதானபடியால் சாம் வேதம் அத்யயனம் பண்ணுவதற்கு கஷ்டமாக இருக்கிறது என்பதால் அதில் ஒன்றும் ப்ரச்சனை இல்லை. கற்றுக்கொண்டவரை யஜுர்வேதத்தைத் தொடர்ந்து சொல்லலாம்.

யஜுர் வேதத்தைப் பூர்ணமாக வேதாத்யயனம் பண்ணவேண்டுமானால் சாமவேதம் முடித்தால் தான் பண்ணமுடியும். அதனால் உபயுக்தமான பாகத்தைமட்டும் சொல்லலாம்.


“தீர்தாமாடியபின் வஸ்த்ரம் உடுத்தி நெற்றியிட்டுண்டு ஆசமனம் பண்ணனுமா அல்லது வஸ்த்ரம் உடுத்தியதும் ஆசமனம் பண்ணிவிட்டு நெற்றிக்கு இட்டுக்கொள்ள வேண்டுமா?(புருஷர்களுக்கு)

Vidwan’s reply:
வஸ்த்ரம் உடுத்திக்கொள்ளும்பொழுது பூணூலை காதில் வைத்துக் கொள்ளவேண்டும். வஸ்த்ரம் உடுத்திக் கொண்டவுடன் கைகால் அலம்பி ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு திருமண் இட்டுக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால், பூணூல் காதில் இருக்கும் பொழுது திருமண் இட்டு கொள்ளக்கூடாது. பூணூலை கால் அலம்பிய பின் தான் மாற்றிக்கொள்ள முடியும். அதனால் வஸ்த்ரம் உடுத்தியவுடன் , கை கால் அலம்ப வேண்டும், பூணூலை நேரே போட்டுக்கொள்ள வேண்டும், ஆசமனம் பண்ண வேண்டும், அதன் பிறகு திருமண் இட்டுக்கொள்ள வேண்டும்.


ஏகாதசி தினத்தன்று துளசிச்செடிக்கு நீர் சேர்க்கலாமா? அடியேனின் தோழி ஒருவர் ஏகாதசியன்று துளசியும் ஏகாதசி வ்ரதம் இருப்பதாகவும், ஆகையால் நீர் சேர்க்கக்கூடாது என்று சொன்னார் அதனால் ஏற்பட்ட சந்தேகம் அடியேன்.

Vidwan’s reply:

ஏகாதசி தினத்தன்று துளசிச்செடிக்கு நீர் சேர்க்கலாம்.

குறிப்புகள்:

ஏகாதசியன்று துளசியும் ஏகாதசி வ்ரதம் இருப்பதாகவும், ஆகையால் நீர் சேர்க்கக்கூடாது என்று சொல்வதெல்லாம் சில காம்யமான காரியங்கள். புராணங்களில் அங்கங்கு சொல்லப்பட்டிருக்கும்.

நம்மை பொறுத்தவரையில் துளசி, பெருமாளுடைய திருவாராதனைக்கு நித்யம் உபயோகப்படுத்த வேண்டி இருக்கிறது. அதனால் காம்யமான வ்ரதம் சிலது இருந்தால்கூட நாம் அதைப் பின்பற்ற வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை


ஒரு வருடத்தில் எந்தெந்த மாதத்திலும், ஒரு வாரத்தின் எந்தெந்தக் கிழமைகளிலும் வபனம் செய்யக்கூடாது என்று தெளிவுபடுத்தவும். அடியேன். தற்சமயம் அடியேன் யதாமதிக்கு எட்டியபடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், அமாவாஸை, பௌர்ணமி, ஏகாதசி,துவாதசி மற்றும் பெற்றோர்களுக்கு ஶ்ராத்தம் வரும் அந்த முழு பக்ஷத்திலும், மார்கழியிலும் பண்ணுவதில்லை.

Vidwan’s reply:
அவரே சில தினங்களைச் சொல்லி இருக்கின்றார் அந்தத் தினங்கள், மேலும் மொத்தமாக பார்த்தால்

மாதங்களில் :

ஆடி, மார்கழி, மாசி, புரட்டாசி இந்த நான்கு மாதங்களும் பண்ணிக் கொள்ளக்கூடாது. புரட்டாசியில் பூர்த்தியாகவே பண்ணிக்கொள்ளக் கூடாது.

ஆடிமாதத்தில் முன்பாதியில் பண்ணிக்கொள்ளலாம்; பின்பாதியில் வபனம் செய்துகொள்ளக்கூடாது.

மார்கழியிலும் மாசியிலும் பின்பாதியில் பண்ணிக்கொள்ளலாம் முன்பாதியில் பண்ணிக்கொள்ள கூடாது என்பதாகச் சொல்லுவார்கள்.

கிழமைகளில்:

செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை தினங்களில் வபனம் செய்து கொள்ளக்கூடாது.

வெள்ளிக்கிழமை மாத்ருவுக்கு ஆகாது என்ற படியால், சிலர் மாதா இல்லை என்று பண்ணிக் கொள்கின்றனர். அது இரண்டாம் பக்ஷம்.

திதியில்:

பித்ரு திதிகள் அதாவது கிருஷ்ண பக்ஷ அஷ்டமி, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி, அமாவாஸ்யை, பௌர்ணமி இவையெல்லாம் கூடாது. பொதுவாகவே சதுர்த்தி கூடாது. எந்த சஷ்டி திதியுமே அடியோடு கூடவேகூடாது என்பதாக நிஷித்தம்.

நட்சத்திரங்களில்:

பரணி க்ருத்திகையில் பண்ணிக்கொள்வதில்லை. ஏனென்றால் இது மங்களகார்யம் என்பதால். அவரவருடைய ஜன்ம நட்சத்திரத்திலும் சிலர் செய்துகொள்ள மாட்டார்கள்.

திங்கட்கிழமையும் புதன்கிழமையும் விசேஷமாக உள்ளது. அதனால் ஓரிரண்டு குறைவு இருந்தால் கூட அன்று வபனம் செய்து கொள்ளலாம் என்பதாக இருக்கிறது.


துவாதசி அன்று வாழைப்பழமோ அல்லது வாழைமரம் ஸம்பந்தமான எதையும் உபயோகிக்க மாட்டோம். அப்படியிருக்க மாசப்பிறப்போ/ தர்ப்பண தினமோ துவாதசியன்று வந்தால் வாழைக்காயை உபயோகிக்கலாமா? எது சரியான வழிமுறை தெளிவிக்கவும்.

Vidwan’s reply:
துவாதசி அன்று வாழை ஸம்பந்தமான எதையும் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அன்று மாதப்பிறப்பு வந்தால்கூட வாழை சம்பந்தப்பட்ட எதையும் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நிறையபேரின் அனுஷ்டானத்தில் உள்ளது.

சிலர் மாத்திரம், மாசப்பிறபாய் இருந்தால் மட்டும் பரவாயில்லை சேர்த்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றனர்.


புருஷர்கள் எப்படி ஆசமனம் செய்ய வேண்டும்? என்ன நியமங்கள் கடைபிடிக்க வேண்டும் மேலும் எப்போதெல்லாம் செய்தல் வேண்டும் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
ஆசமனம் செய்யும் போது கைகால்களை அலம்பிக்கொண்டு குக்குடாசனம் என்று சொல்லக்கூடிய ஆசனமுறையில் உட்கார்ந்துகொண்டு கிழக்கோ, வடக்கோ பார்த்துக்கொண்டு செய்யணும். கொஞ்சமாக ஜலம் எடுத்துக்கொண்டு அச்சுதாய நம: அனந்தாய நம: என்பதாகச் சொல்லி ப்ராசனம் முதலானது எல்லாம் செய்ய வேண்டும். இவையே முக்கியமான நியமங்கள். மூன்று தடவை ப்ராசனம் செய்தவுடன் வாயை துடைத்துக்கொண்டு கையை அலம்பி சுத்தி செய்துகொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் ஆஹ்நிக க்ரந்தங்களில் பார்க்கலாம்.

எப்பொழுது செய்ய வேண்டும் என்றால் நிறைய சமயங்களில் செய்ய வேண்டி இருக்கின்றது. கர்மாவிற்கு அங்கமாக ஆரம்பத்தில் நடுவில் முடிவில் என்று செய்யவேண்டிவரும். அது தவிர நமக்கு ஆகாரத்திற்கு முன்னும் பின்னும் ஆசமனம் செய்ய வேண்டும். அது மாதிரியாக நாம் சங்கா நிவ்ருத்தி பண்ணிக் கொண்டோமானால் வாயை துடைத்து உடனே கைகால் அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும். மற்றபடி அந்தந்தக் கர்மாவிற்கு அங்கமாக அங்கங்கே சொல்லப்பட்டிருக்கிறது. சுத்தமாகக் கோவிலுக்குப் போகவேண்டும் என்றால் ஆசமனம் பண்ணிவிட்டுப் போகவேண்டும் என்பதாகச் சொல்வதுண்டு அதெல்லாம் முடியுமானால் செய்யலாம்.


ஒரு ப்ரபந்னன், ப்ரபத்தி பண்ணாத வேறுவொருவருக்காக காம்யார்த்தமாக எம்பெருமானிடம் ப்ரார்த்திக்கலாமா?

Vidwan’s reply:

காம்யார்த்தமாக ப்ரார்த்திக்க மாட்டேன் எனும் அளவுக்கு ஸ்திர புத்தி இருந்தால் ப்ரார்த்திக்காமல் இருக்கலாம். ஆனால் ப்ரார்த்திக்க வேண்டும் என்று தோன்றி, ப்ரார்த்திப்பதினால் தோஷம் ஒன்றுமில்லை.


கோத்ரம் என்றால் என்ன? எல்லா வர்ணாஶ்ரம தர்மங்களுக்கும் உண்டா? அவரவர் கோத்ரம் மூலம் வர்ணாஶ்ரமத்தை அறிய முடியுமா? விளக்க வேண்டுகிறேன்.

Vidwan’s reply:
கோத்ரம் என்றால் அந்தப் பரம்பரையில் வந்தவர்கள். அதாவது புத்திரன், பௌத்திரன், ப்ரபௌத்திரன் என்றெல்லாம் சொல்கின்றோம். அப்படி சொல்லும் பொழுது ஒரு குறிப்பிட்ட சந்ததிக்குமேல் மேற்கொண்டு சொல்ல முடியாது. அப்பொழுது கோத்ரம் என்று பெயர் வைத்துவிடுகின்றனர் . அந்த கோத்ரத்தில் வந்தவரென்றால் அந்தப் பரம்பரையில் வந்தவர் என்று அர்த்தம். இது வ்யாக்கியான சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பௌத்திரன் ஆகியாயிற்று என்றால், பின் கோத்ரத்தைச் சொல்லலாம். புத்திரன், பௌத்திரன், நத்தா என்று சொல்வார்கள், தொடர்ந்து கோத்திரம் என்று சொல்லலாம். அந்தந்த மஹரிஷியுனைடய கோத்திரத்தை நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அந்த வம்சத்தில் வந்தவர்கள் என்று அர்த்தம்.

எல்லா வர்ணாஶ்ரமகாரர்களுக்கும் கோத்ரம் இருக்கும். அவரவர் கோத்ரம் மூலம் வர்ணாஶ்ரமத்தை அறிய முடியாது. வர்ணம் என்றால் ஜாதி. ஆஶ்ரமம் என்றால் அவர் க்ருஹத்ராஶ்ரமத்தில் அல்லது வேறு என்று சிலவற்றைக் கண்டுபிடிக்கலாம் . ப்ராஹ்மண ஜாதிக்கு மட்டும் என்று சில கோத்ரங்கள் உண்டு. அதை வைத்துகொண்டு சிலவற்றை கண்டுபிடிக்க முடியும்.

பொதுவாக கோத்ரம் இருக்கின்றவர்கள், இல்லாதவர்கள் என்று சட்டென்று சொல்ல முடியாது. ஏனென்றால் நிறைய பேர் கோத்திரம் வைத்து கொண்டிருக்கின்றனர்.

ஆஶ்ரமம் என்பது அவரவர் இருக்கக்கூடிய நிலையைப் பொருத்தது. ப்ரஹ்மச்சாரி, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன், சந்யாசி என்று இருக்கின்றது.


தாங்கள் வெளியிட்ட ஆஶௌச விவரங்கள் நூல் ஆங்கிலத்தில் கிடைக்குமா? ஆங்கிலத்தில் வெளியிட வேண்டுகிறேன்?

Vidwan’s reply:
ஆஶௌச விவரங்கள் நூல் ஆங்கிலத்தில் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம் மேலும் விவரங்கள் விரைவில்.


“நித்யப்படி க்ருஹ திருவாராதன ஸேவா காலத்தில் கீழே உள்ள ப்ரபந்தம் / ஸ்லோகங்களை எந்த க்ரமத்தில் ஸேவிக்க வேண்டும்.

திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான், கண்ணினுன்சிறுத்தாம்பு, இராமானுஜ நூற்றந்தாதி, ந்யாஸ தஶகம், அடைக்கலப்பத்து, பிள்ளையந்தாதி, ஆசார்யர்கள் தனியன். தாஸன்.”

Vidwan’s reply:
நித்யப்படி திருவாராதனை காலத்தில் திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான், கண்ணினுன்சிறுத்தாம்பு, இராமானுஜ நூற்றந்தாதி, ந்யாஸ தஶகம், அடைக்கலப்பத்து, பிள்ளையந்தாதி, ஆசார்யர்கள் தனியன் இவை எல்லாம் சேவிப்பதாகச் சொல்லி இருக்கிறார். இப்பொழுதெல்லாம் நித்யப்படி இத்தனையும் சேவிப்பவர் யாருமே கிடையாது.


ஆசார்யன் பொன்னடிசாற்றிக் கொடுத்த பாதுகைகளை ஏளப்பண்ணி வந்துள்ளேன். ஆத்தில் அந்தப் பாதுகைகளை எதில் ஏளப்பண்ண வேண்டும். தினமும் செய்ய வேண்டிய ஆராதனை (பாதுகைகளுக்கு) என்ன என்பதையும் விளக்க ப்ரார்த்திக்கிறேன் . ஊர்களுக்கு போகும்போது பாதுகைகளை ஏளப்பண்ணிக்கொண்டு போகவேண்டுமா? அடியேன்

Vidwan’s reply:
சங்கல்பம் செய்து பாதுகைக்கு திருமஞ்சனம் பண்ணி, பழம் முதலானவைகளை சமர்ப்பித்து பாதுகா ஆராதனம் செய்யலாம். தினமும் செய்ய வேண்டும் என்கின்ற நிர்பந்தம் கிடையாது என்பதாகச் சொல்லப்படுகிறது. விசேஷ நாட்களில் செய்யலாம்.

தினமும் செய்தால் விசேஷம் என்று ஸ்ரீமத் ஆண்டவன் சம்பிரதாயத்தில் தினமும் செய்வதாக இருக்கின்றது. அப்படி இல்லாவிட்டால் விசேஷ நாட்களில் திருவாராதனம் செய்தால் போதும்.

ஊருக்குச் செல்லும் சமயங்களில் பாதுகைகளை ஏளப்பண்ணிக்கொண்டு போகவேண்டும் என்கின்ற நிர்பந்தம் கிடையாது. மிகவும் அத்யாவச்யம் எனும் போது, உ.தா திருநக்ஷத்ரங்கள் முதலானவை வந்தால் ஏளப்பண்ணிக்கொண்டு போகலாம். ஆனால் சுத்தமாக ஏள‌ப்பண்ணிக்கொண்டு போகவேண்டும். பெருமாளுக்கு என்ன சுத்தியோ அதே போல் இவருக்கும் அதே சுத்தியோடு ஏளப்பண்ணக்கொண்டு போகவேண்டும்.


10 வருடங்களுக்கும் மேலாக எனது மாமனாரின் உடன்பிறந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், அவர்களது சந்ததியினரை ஒருவரை ஸ்மார்த்தர்களில் சிலர் பீஷ்மஅஷ்டமி அன்று பீஷ்மதர்ப்பணம் செய்கிறார்கள். ஸ்ரீவைஷ்ணவர்களும் அவ்வாறு செய்யலாமா?

Vidwan’s reply:
ஸ்ரீவைஷ்ணவர்கள் பீஷ்மஅஷ்டமி அன்று பீஷ்மதர்ப்பணம் செய்யவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அது காம்யார்த்தமான விஷயம்.


அடியேன். ஜனனமரண தீட்டு விஷயத்தில் அடியேனுக்கு ஒரு சந்தேகம். தசராத்ரி ஞாதிகள் என்பவர்கள் தன்னுடைய தலைமுறையும் தனக்கு முன் உள்ள 6 தலைமுறைகளையும் (மொத்தம் 7 தலைமுறைகள்) சேர்ந்தவர்கள். த்ரிராத்ரி ஞாதிகள் என்பவர்கள் தனக்கு அடுத்த 7 தலைமுறைகளை சேர்ந்தவர்கள். தனக்கும் தன்னுடைய முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு (தசராத்ரி ஞாதிகள்) ஜனன மரண விஷயத்தில் 10 நாட்களும், தனக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களுடைய ஜனன மரண விஷயத்தில் 3 நாட்களும் தீட்டு. இது சரியா? தங்களின் விளக்கத்தைப் ப்ரார்த்திக்கிறேன். தன்யோஸ்மி.

Vidwan’s reply:
ஏழு தலைமுறை வரை தசராத்ரி ஞாதிகள். மூன்று தலைமுறை வரை த்ரிராத்ரி ஞாதிகள். தசராத்ரி ஞாதிகளுக்கு 10 நாள் தீட்டு த்ரிராத்ரி ஞாதிகளுக்கு 3 நாள் தீட்டு என்று எல்லாம் சரியாக எழுதி இருக்கிறார். ஆனால் இவையெல்லாம் இறப்பு விஷயத்தில் பிறப்பு விஷயத்தில் ஓரிரண்டு வித்தியாசங்கள் உண்டு. அதை GSPK SUDARSANAM வெளியிட்ட “தீட்டு விவரங்கள்” எனும் புஸ்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.


பெருமாள் திருவாராதனம் புத்தகத்தின் துணைகொண்டு செய்யலாமா, அல்லது ஒரு ஆச்சார்யனிடமோ அல்லது நன்கு கற்றறிந்தவர்களிடமிருந்தோ கற்றுக்கொண்ட பின்னரே செய்யவேண்டுமா?

Vidwan’s reply:
பெருமாள் திருவாராதனம் புத்தகத்தின் துணைகொண்டு செய்வது சரி கிடையாது. ஏனெனில், திருவாரதனைக்கென்று சில மந்திரங்கள் உண்டு அதை ஆசார்யனிடமிருந்து உபதேசமாக பெற்றுக்கொண்டு, பெரியவர்களின் துணையோடுதான் முதலில் ஆரம்பிக்கவேண்டும்.


காலையில் திருவாராதனம் செய்வதற்கான சரியான நேரம் என்ன? காலையில் செய்ய முடியவில்லை என்றால் மாலையில் செய்யலாமா?

Vidwan’s reply:
திருவாராதனம் செய்வதற்குப் பகலில் மூன்றாவது காலம் என்று சொல்லியிருக்கிறார்கள். அபிகமன காலம், உபாதான காலம் ஆனபின் மூன்றாவது பாகத்தில் செய்யவேண்டும். அதாவது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும் பகலை ஐந்தாகப் பிரித்துக்கொண்டு அதில் மூன்றாவது காலமான இஜ்யா காலத்தில் திருவாராதனம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்படிச் செய்யமுடியவில்லை என்றால் அந்தக்காலத்திற்கு முன்னர் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார்கள், அதுவும் முடியாதவர்கள் சாயங்காலத்திலும் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

தினமும் மாலை செய்வதென்பது கூடாது என்றைக்காவது ஒருநாள் உரிய நேரத்தில் செய்ய இயலாதபோது மாலை செய்யலாம்.


திருமலை திருப்பதியில் கவுண்டர்களில் கொடுக்கும் லட்டு பிரசாத்தை ப்ரபத்தி செய்தவர்கள் ஸ்வீகரிக்கலாமா?

Vidwan’s reply:
திருமலையில் கொடுக்கும் லட்டு பெருமாளின் ப்ரசாதம் என்பதாகச் சொல்லும் வழக்கம், ஆகையால் ஸ்வீகரிக்கலாம். கவுண்டர்களில் வரும் போது ஆசாரம் குறைவாக இருக்கும் அதனால் ஆசாரத்தைக் கடைபிடிப்பவர்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை வரும். ஏனெனில், அது பெருமாளின் ப்ரசாதமாக நேராக வராமல், ப்ளாஸ்டிக் கவர், மேலும் பலர் தொட்டுத்தான் வரும் ஆகையால், ஆசாரம் கடைபிடிக்கவேண்டும் எனக் கொண்டு அதை ஸ்வீகரிக்காமல் இருக்கலாம்.


நமஸ்காரம் ஸ்வாமி. ப்ரபத்தி செய்து கொள்ளும்பொழுது (யாருக்கு ப்ரபத்தி செய்யப்படுகிறதோ) அந்த நபர் முழு மடியாகவும் ஆசாரமாகவும் இருப்பது அவசியமா? ப்ரபத்தியை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் செய்து கொள்ளலாம் என்பதை அடியேன் அறிவேன். மேலும் திரௌபதி வேறு ஒரு ஸ்திதியில் இருந்த போது ப்ரபத்தி செய்துகொண்டாள். ப்ரபத்திக்கு முழு ஆசாரம் தேவையில்லையா ஸ்வாமி. அடியேன் தவறாகக் கேட்டிருந்தால் க்ஷமிக்கணும்.

Vidwan’s reply:

ப்ரபத்தி செய்வதற்கு மடி ஆசாரமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் அதற்கு அங்கம் கிடையாது என்றாலும் நான் விழுப்போடு, தீட்டோடு தான் பண்ணிக்கொள்வேன் என்று சொல்லமுடியாது. வேறு வழியில்லாது போனால் தான் அப்படி விழுப்போடு அல்லது தீட்டோடு பண்ணுவது வழக்கம்.

இதுவும் ஒரு நல்ல தர்மமானபடியால், முடிந்தவரை எந்தளவு ஆசாரமாக இருக்க முடியுமோ அப்படி இருந்து தீர்த்தாமாடி, 12 திருமண் இட்டுக்கொண்டு சுத்தமாக பண்ணிக்கொள்ள வேண்டும்.

தீட்டோடு பண்ணலாம் என்பதற்காக தீட்டுடன் பண்ணிக்கொள்ள கூடாது.


துவாதசி அன்று தளிகைக்கு எந்தப் பருப்பை உபயோகப்படுத்த வேண்டும். துவரம்பருப்பா அல்லது பயத்தம்பருப்பா?

Vidwan’s reply:
துவாதசி அன்று பெரும்பாலும் விசேஷமாக பெருமாளுக்குத் துவரம்பருப்பு சேர்த்துக்கொள்வதுண்டு. பயத்தம்பருப்பும் சேர்த்துக்கொள்வதுண்டு.

சிலர் துவரம்பருப்பு கூடாது பயத்தம்பருப்புதான் சேர்க்கவேண்டும் என்று சொல்லி கேள்விபட்டதுண்டு. அடியேனுக்குத் தெரிந்து பெரியவர்கள் இரண்டும் சேர்த்துக்கொள்வது வழக்கம்.


நாம் எந்தெந்த ஸமயங்களில் பூணூலை மாற்றிக்கொள்ள வேண்டும். எந்தெந்த தீட்டுக்களுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். தெரியப்படுத்த ப்ரார்த்திக்கிறேன்

Vidwan’s reply:
கீழ்க்கண்ட சமயங்களில் பூணூலை மாற்றிக்கொள்ள வேண்டும்:

பூணூல் அசுத்தமாகிவிட்டால்

பூணூல் அறுந்துவிட்டால்

தீட்டு காக்கும்போது அந்தத் தீட்டோடு நாம் சாப்பிடும்படி நேர்ந்தால்


திருவாராதனம் போன்ற வைதீக க்ரமங்களுக்கு “மடி” வஸ்த்ரம் மற்றும் “ஊர்த்வ புண்டரம்”அணிவதின் முக்கியத்துவம் என்ன என்பதை விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
திருவாராதனம் என்பது மற்ற அனுஷ்டானங்கள் போல் அல்லாது எம்பெருமானின் திருமேனியை நாம் தொட்டுச் செய்யக்கூடிய விசேஷமான அனுஷ்டானம்.

அச்சமயம் எம்பெருமான் திருமேனியைத் தொட்டு திருமஞ்சணம் போன்றவையெல்லம் செய்வதனால் நாம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.

இங்கே எம்பெருமான் திருமேனியைத் தொடுவதினால் அசுத்தமாகத் தொட்டால் அது அபசாரமாகிவிடும். ஆகையால்தான் மடி வஸ்த்ரம் அணிய வேண்டும். மேலும் ஊர்த்வபுண்டரம் என்பதும் ஒருவித சுத்தியைத் தரக்கூடியது.

எனவே மடியோடு ஊர்த்வபுண்டரம் தரித்து திருவாராதனம் செய்வதே விசேஷம்.


அடியேன், நமஸ்காரம். ஒரு ஆசார்யனிடம் ஸமாஶ்ரயணமும், அதே மடத்தைச் சேர்ந்த மற்றொரு ஆசார்யனிடம் பரந்யாஸமும் செய்து கொண்டால் , யாரை நம் ஆசார்யன் என்று சொல்ல வேண்டும்? மேலும் அதற்கான காரணத்தையும் விளக்க ப்ரார்த்திக்கிறேன். தன்யாஸ்மி .

Vidwan’s reply:
ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் வேறுவேறு ஆசார்யனிடம் செய்துக்கொண்டால், இருவரையுமே ஆசார்யன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஒரு ஆசார்யன்தான் இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. பகவத் இராமானுஜருக்கு பஞ்ச ஆசார்யரர்கள் இருந்தனர்.

ஆகையால் எல்லா ஆசார்யனையும் சேவித்து, தனியன்களைச் சொல்லி எல்லாமே பண்ணவேண்டும்.


அடியேனுடைய தகப்பனார், தாயார் இருவருமே ஒரே வருடத்தில் அடுத்தடுத்து பரமபதித்துவிட்டனர். அண்ணாவுக்கு இருதய நோய் வந்து ஆபரேஷன் செய்யது கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது . இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான அண்ணாவின் போக்கு மிகவும் கவலையாக உள்ளது. ரொம்பவும் கோபப்படுவது, கண்டபடி பேசுவது என்று நடந்து கொள்கிறார். இதனால் மன்னி மிகவும் வேதனை படுகிறார். அண்ணாவின் இந்தப் போக்கு மாறுவதற்கு பரிகாரம் ஏதேனும் உண்டா? என்ன ஸ்லோகம் சொல்லவேண்டும். இதற்கு ஒருவழி சொல்லும்படி ப்ரார்த்திக்கிறேன் ஸ்வாமி. அடியேன் தன்யாஸ்மி.

Vidwan’s reply:
அவரின் போக்கு மாறுவதற்கு காமாஸிகாஷ்டகம் சொல்லலாம் எனத் தோன்றுகிறது. சகலவிதமான கஷ்டங்களும் நிவ்ருத்தி ஆகி எம்பெருமானையே ஆஶ்ரயித்து இருப்பதாக அந்த ஸ்தோத்ரத்தில் வருகிறது.


நான் 45 ஆவது பட்ட ஸ்ரீமத் அழகிய சிங்கரிடம் ஸமாஶ்ரயணமும் சரணாகதியும் செய்துகொண்டேன். ஒரு தகுதியான குருவின் கீழ் ரஹஸ்ய த்ரயம் காலக்ஷேபம் செய்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. அது ஒரு தடையா? எனது பேரனைப் பார்த்துக்கொள்வதற்காக நான் அடிக்கடி அமெரிக்காவிற்குச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. 12 மணிநேரம் கால வித்தியாசம் இருப்பதால் என்னால் இணையவழி நிகழ்நிலை காலக்ஷேபத்தில் கலந்துகொள்ள முடிவதில்லை. நான் நித்ய மற்றும் நைமித்திக கர்மாக்களைத் தவறாமல் செய்து வருகிறேன். என்னால் முடிந்தவரை ஸ்லோகங்களை சொல்கின்றேன். காலக்ஷேபம் செய்வது கட்டாயமா? தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன். தன்யாஸ்மி

Vidwan’s reply:
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் காலக்ஷேபம் பண்ணினால் நல்லது, எம்பெருமானை அனுபவிக்க முடியும். பண்ணமுடியாவிட்டால் என்பது தடையோ பாபமோ ஆகாது. கிட்டியவரையில் விசேஷம் என்பதுதான், இல்லாவிடில் அந்த வாய்ப்பை நாம் இழக்கிறோம் அவ்வளவே.

உ.தா: ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் காலக்ஷேபம் என்பது ஒருவர் 50 லக்ஷம் ரூபாய் நமக்குத் தருவது போலே, அவர் கொடுக்கும் ரூபாயை நான் வாங்கிக் கொள்ள வேண்டுமா? இல்லாவிட்டால் தப்பா? என்றால் தப்பேயில்லை ஆனால் 50 லக்ஷம் ரூபாய் நமக்குதான் நஷ்டமாகும்.

எப்படி அந்த ரூபாயை நாம் வேண்டும் என்று சொல்வதோ, வேண்டாம் என்று சொல்வதோ, நம் விருப்பமாகுமோ, அதே போல்தான் காலஷேபமும் அதைப் பண்ணாவிடில் நஷ்டமே தவிர பாபமில்லை.

மற்றபடி நித்யபடி கர்மாக்கள் செய்வது, ஸ்தோத்ரங்கள் சேவிப்பதெல்லாம் மிகவும் நல்ல விஷயம், பாராட்டப்படவேண்டிய விஷயங்கள்.


நமஸ்காரம் ஸ்வாமி. ஒருவர் உபநயனமும், ஸமாஶ்ரயணமும் செய்து கொண்ட பின் த்ரிகால சந்தியாவந்தனம் செய்யாமல் இருக்கும் பக்ஷத்தில், ஆசார்யனிடம் ப்ரபத்தி செய்துகொண்டால் பலன் கிட்டுமா? ப்ரபத்திக்கு த்ரிகால சந்தியாவந்தனம் செய்வது அவசியமா? சந்தியாவந்தனம் செய்யாமல் இருப்பவர்களுக்கு எந்த வைதிக கர்மாவும் செய்யத் தகுதி இல்லை என்று சொல்வார்கள். ப்ரபத்தி செய்துகொள்வதற்கும் இந்த விதி பொருந்துமா? அடியேன் தவறாகக் கேட்டிருந்தால் க்ஷமிக்கணும்.

Vidwan’s reply:
சந்தியாவந்தனம் செய்யாமல் இருப்பவர்களுக்கு ப்ரபத்தி பலன் கிடைக்குமா என்றால் கிடைக்கும், இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. ஸமாஶ்ரயணம், ஶரணாகதி போன்றவை பண்ணாலும் சரி பண்ணிக்காவிட்டாலும் சரி சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்பது பொது விதி.

ஶரணாகதி பண்ணாலும் இல்லாவிட்டாலும் சந்தியாவந்தனம் பண்ணவேண்டும், இல்லாவிட்டால் பாபம் உண்டாகும் மேலும் வேறு கர்மாநுஷ்டானங்கள் பண்ணும் தகுதியெல்லாம் கிடையாது என்றாகிவிடும்.

குறிப்புகள்:

உ.தா: ஒருவர் நான் தான் ஶரணாகதி பண்ணிவிட்டேனே அப்போ நான் பொய் சொன்னால் என்ன? பொய் சொன்னால் பாபமாகுமா? என்று கேட்டால், பொய் சொல்லக்கூடாது என்பது பொது விதி, சொன்னால் பாபமுண்டு என்பதில் சந்தேகமே கிடையாது.

அதேபோல் தான் சந்தியாவந்தனம் என்பது பொது விதி அது எந்த விதத்திலும் ஶரணாகதியைப் பாதிக்காது, சாதிக்கவும் சாதிக்காது. இரண்டும் வெவ்வேறு தடம்; ஒன்றையொன்று பாதிக்காது.


சேமியாவை உபயோகப்படுத்தி செய்யும் திருக்கண்ணமுதைப் பெருமாளுக்கு நைவேத்தியம் பண்ணலாமா?

Vidwan’s reply:
சேமியாவை பெரியோர்கள் உபயோகப்படுத்துவதில்லை


அடியேன் க்ருஹத்தில் பெருமாள் திருவராதனையை கோவிலுக்குச் சென்று திரும்பி வந்த பின் பண்ணலாமா அல்லது குளித்துவிட்டு பண்ணவேண்டுமா? இல்லை கோவிலுக்கு போவதற்க்கு முன்னே பெருமாள் திருவராதனையைப் பண்ணிவிட்டுதான் செல்ல வேண்டுமா? தவறாக இருந்தால் க்ஷமிக்கவும். தன்யாஸ்மி

Vidwan’s reply:
கோவிலுக்குச் சென்றுவிட்டு வந்தபின் தீர்த்தாமாடினால் பாபம் என்று சொல்லியிருக்கு, ஆகையால் வந்தபின் குளிக்காமல் இருப்பதுதான் விசேஷம்.

அதேசமயம் சிலவற்றுக்கெல்லாம் அங்கமாக ஸ்நானம் உண்டு.

உ.தா: தர்பணாதிகளுக்கெல்லாம் அங்கமாக ஸ்நானம் பண்ணவேண்டும். இங்கே கோயிலுக்குச் சென்று வந்ததால் செய்யவில்லை, அங்கமாக ஸ்நானம் என்றாகும். நித்யபடி திருவாராதனைக்கு மாத்யானிகத்திற்கு முன் அங்கமாக ஸ்நானம் உண்டு. அப்படிப் பண்ணுவதாக இருந்தால் பண்ணலாம். இவையெல்லாம் பார்த்து ஜாக்ரதையாக செய்ய வேண்டும். சிலர் திருவாராதனை எல்லாம் முடித்த பிறகு கோவிலுக்குச் செல்வார்கள்.


அஶௌச காலத்தில் நம் மனதுக்குள் ஆசார்ய தனியன் மற்றும் த்வய மந்திரங்களை சேவிக்கலாமா?

Vidwan’s reply:
அஶௌச காலத்தில் ஆசார்ய தனியன் மற்றும் த்வய மந்திரங்களை மனதால் சொல்வதைவிட ஆசார்யனின் திருநாமத்தையும் பெருமாளின் திருநாமத்தையும் மனதாலும் சொல்லலாம், வாயாலும் சொல்லலாம். திருநாமத்தைச் சொல்ல எந்தவித தடையுமில்லை.


ஒரு ப்ராமணன் மணமகன் ஒரு ப்ராமணன் அல்லாத பெண்ணை மணந்தால், அவன் சந்தியாவந்தனம்கூட செய்யமுடியாத அளவுக்கு அவனது ப்ராமணத்வத்தை இழந்து விடுகிறான் என்று அடியேன் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் முந்தைய சுதர்சனம் வெளியீட்டில் பெண் பரந்யாஸம் செய்யலாம் என்று கூறப்பட்டருக்கிறது. அந்தச் சிறுவனுக்கு ஶாஸ்த்ரத்தின்படி சடங்குகளைச் செய்ய இன்னும் உரிமை இருக்கிறதா என்பதை தயவுசெய்து தெளிவுபடுத்தவும். தன்யாஸ்மி அடியேன்

Vidwan’s reply:
ஒரு ப்ராமணன் மணமகன் ஒரு ப்ராமணன் அல்லாத பெண்ணை மணந்தால், கர்த்தா என்று வரும்போது சடங்குகளை இந்தச் சிறுவன்தான் செய்யவேண்டும். ஆனால், அவன் எந்த ரீதியில் செய்கிறான் என்பதிருக்கிறது அதாவது ப்ராமணனுக்குரிய ரீதியில் பண்ணமுடியாது வேறு எதாவது ரீதியில் பண்ணலாம் என்றாகிவிடும்.

பரந்யாஸம் என்பது ஜாதி சம்பந்தப்பட்ட விஷயமன்று, யாராக இருந்தாலும், எப்படி இருந்தாலும் பரந்யாஸம் பண்ணலாம்.


ஸ்தோத்ரஙகள் வேகமா சேவிக்கலாமா. ஸ்தோத்ரஙகளில் பலஸ்ருதி மட்டிலும் சேவித்து வரலாமா? பலன் ஒன்றுதானா? ஸ்தோத்ரஙகள் இரண்டுபேராக சேவிக்கும்பொழுது, முதல் பங்க்தியை வாய்விட்டு சத்தமாக சேவித்து அடுத்த பங்க்தியை மனதிற்குள் சந்தையில் சேவிப்பதைப்போல சேவிப்போம். அது சரியா? ஸ்தோத்ரம் பூர்ணம் ஆகுமா. அதற்கு பலன் உண்டா. பெரிய ஸ்லோகங்கள் சேவிக்கும்பொழுது ஒருபாதி ஸ்லோகத்தை சேவித்துவிட்டு அடுத்தபாதியை சேவிக்காமல் மௌனமாகவும் இருக்கலாமா? தேவரீர் அடியேனுக்கு தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன். தன்யாஸ்மி அடியேன்

Vidwan’s reply:
ஸ்தோத்ரங்களில் பலஶ்ருதி மட்டும் சேவிப்பது அத்தனை உசிதமில்லை. பலஶ்ருதி என்பது மொத்த ஶ்லோகமும் சொன்னால் கிட்டக்கூடியதைச் சொல்வதே தவிர அந்த ஶ்லோகத்தை மட்டும் சொல்வதனால் கிட்டுவதல்ல, ஆகையால் பூர்ணமாக சேவிப்பதே நல்லது. முடியாவிட்டால் த்யான ஶ்லோகம் என்றிருக்கும் அதை சேவிப்பார்கள் ஆனாலும் அது பூர்ணமாக சேவிப்பதற்குச் சமமாகாது.

ஸ்தோத்ரம் சேவிப்பதில் இரண்டு வகையுண்டு, ஒன்று நாமாகவே ஸ்தோத்ரம் சொல்வது, மற்றொன்று கோஷ்டியாக பாராயணம் பண்ணுவது. நாமாக சொல்லும்போது பூர்ணமாக நாமாகவே சொல்ல முடியும். கோஷ்டியாக பாராயணம் பண்ணும்போது ஒரு வ்யவஸ்தைக்காக முன்பாதி பின்பாதி என்று பிரித்திருக்கிறார்கள். அப்போது பூர்த்தியாக சொன்ன கணக்கென்று வந்துவிடும். மற்றவர்கள் சேவிக்கும்போது நாம் கேட்டுகொண்டிருந்தால் போதும்.

நாமாகச் சொல்லும்போது பூர்த்தியாக வாய்விட்டுச் சொல்லவேண்டும்.

ஏதாவது பலனுக்காக நாம் சொல்வதாயிருந்தால், பாராயணத்தில் சேவித்ததைக் கணக்காக சொல்லமுடியாது, பூர்த்தியாக வாய்விட்டுச் சொல்லவேண்டும். மாறாக பகவதனுபவம், பகவத்ப்ரீத்யர்த்தம் எனும்போது பாராயணத்தில் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டால் போதும்.


தர்பணம் செய்த பிறகு மீதம் இருக்கும் எள்ளை என்ன செய்ய வேண்டும், நாம் எங்கு இருந்து எடுத்தோமோ அதே பெட்டியில் மீண்டும் சேர்த்துவிட்டு அடுத்த முறைக்கு உபயோகிக்கலாமா? சிலர் அது சேஷம் அப்படிச் செய்யக்கூடாது அதை புக்னத்தில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள்.

Vidwan’s reply:
தர்ப்பணம் பண்ணி மீதமிருக்கும் எள்ளை வைத்துக்கொள்ளக் கூடாது.

தர்பணம் செய்த பிறகு மீதம் இருக்கும் எள்ளை என்ன செய்ய வேண்டுமென்று தர்ப்பண ப்ரயோகத்திலேயே இருக்கு, மீதமிருக்கும் எள்ளு, தர்பம் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து அதற்கு ஒரு ஶ்லோகம் இருக்கிறது அந்த ஶ்லோகத்தைச் சொல்லி மொத்ததையும் ஸமர்பித்துவிடவேண்டும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top