சுபகிருது – மார்கழி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்


தீர்த்தவாரி உற்சவத்தின் போது நாம் முங்கி எழுவது ஸ்நானம் என்றாகுமா? அதை ஸ்நானஸாடி உடுத்திக் கொண்டு, ஸங்கல்பம் செய்துதான் செய்ய வேண்டுமா?

Vidwan’s reply:

தீர்த்தவாரி உற்சவத்தின் போது நாம் மூழ்கி எழுவது ஸ்நானம்தான், அதற்கு ஸங்கல்பமும் உண்டு. ஸங்கல்பம் செய்து ஸ்நானம் செய்வதுதான் முறை, அதுதான் விசேஷமும் கூட. ஸ்நானஸாடி உடுத்திக்கொண்டு செய்வார்கள், சிலர் தான் உடுத்திருக்கும் வஸ்த்ரத்துடனேயே செய்வார்கள். ஆக ஸங்கல்பம் செய்துகொண்டு, ஸ்நானாங்க தர்ப்பணம் என எல்லாமே இதற்கு உண்டு.


ஆசாரம் என்றால் என்ன? அதைப் பற்றி விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

ஆசாரம் என்றால் அனுஷ்டானத்திற்குத் தேவையான சுத்தி என்று சொல்லலாம்.

எந்தத் தர்மானுஷ்டானம் சந்தியாவந்தனம், திருவாராதனம் என அனைத்துக்கும் சுத்தி என்பது முக்கியம். அந்தச் சுத்தியைத்தான் ஆசாரம் என்று சொல்கிறோம்.

சுத்தி இல்லாத அனுஷ்டானம் சரியாக இருக்காது என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறார்கள்.


எனது க்ருஹஸ்த வாழ்க்கையில் அடியேன் இதுவரை வைஶ்வதேவம் செய்ததில்லை, இந்த உபதேசத்தை யாரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அடியன் தெரிந்து கொள்ள முயற்சித்தேன். தேவரீர் தயவு செய்து வழிகாட்ட ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

தம்பதிகாளாக இருந்துகொண்டு வைஶ்வதேவம் யார் செய்கிறார்களோ அவர்களிடமிருந்து வைஶ்வதேவ உபதேச்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தன்னை சேர்ந்தவர்கள், அல்லது தன்னுடைய பந்துக்கள், அல்லது க்ருஹஸ்தர்களில் வைஶ்வதேவம் செய்யக்கூடிய மஹான்கள் இருக்கிறார்கள் அவர்களிடமிருந்து உபதேசத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.


YouTubeல் ஹிந்து மற்றும் ப்ராமணர்கள் அல்லாதவர்கள், சம்ப்ரதாய விஷயங்கள் பற்றி சாதிக்கும் உபன்யாஸங்கள் பார்க்கிறோம். அது சரியா? அவற்றை நாம் கேட்கலாமா?

Vidwan’s reply:

ஹிந்து மற்றும் ப்ராமணர்கள் அல்லாதவர்கள், ஸம்ப்ரதாய விஷயங்களைப் பற்றி சொல்வதை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நமது ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரையில் ஸதாசார்யன் வழியாக வந்த விஷயங்களை, ஸ்ரீ வைஷ்ணவ பெரியோர்கள் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும். மற்ற எல்லாவற்றையும் தவிர்க்க வேண்டும்.


ப்ரதோஷ காலத்தில் சந்தியாவந்தனத்தின் போது எத்தனை காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்? 10 அல்லது 28?

Vidwan’s reply:

ப்ரதோஷ காலத்தின்போது சந்தியாவந்தனத்தின் காயத்ரி ஜபம் 10 முறை செய்யவேண்டும்.


வேதங்களில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு தனி ஸ்வரம் இருப்பதாகவும், வேதத்தின் எல்லாப் பகுதிகளிலும் அந்த வார்த்தையின் நிகழ்வுகளுக்கு ஸ்வரம் ஒன்றுதான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் ஒரே அனுவாகத்தில் ஸ்வாஹா, பவதி போன்ற சில வார்த்தைகள் வெவ்வேறு ஸ்வரங்கள், எப்படி வருகின்றன? வேதங்கள் ஓர் வழிப் பரம்பரையில் வந்தனவை என்றால், பாடபேதம் எப்படி உருவானது? (அதாவது, ஆந்த்ர பாடம் திராவிடப் பாடம் போன்றவை)?

Vidwan’s reply:

வேதங்களின் பதங்களுக்குத் தனி ஸ்வரம் உண்டு அது மாறாது, அப்படி மாறி வந்தாலும் அதற்குக் காரணம் இருக்கக்கூடும். அந்தக் காரணங்கள் எல்லாம் வ்யாகரணத்தில் “ஸ்வர ப்ரக்ரியா” என்ற இடத்திலும், “ப்ராதி சாக்யம்” என்ற க்ரந்தத்திலும் இருக்கிறது. பெரியவர்களிடம் கேட்டாலே அது நமக்குப் புரியும்.

வேதத்தில் பாடபேதம் என்பது கிடையாது, ஏனென்றால் அவர்கள் அன்றுமுதல் இன்று வரை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் நீங்கள் சொல்லக்கூடிய பாடபேதங்கள் ஆரண்யகத்தில் மட்டும் வந்திருக்கிறது, மற்றபடி ஸம்ஹிதா ப்ராஹ்மணாதி பாகங்களில் பாடபேதங்கள் கிடையாது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஸ்வரபேதமோ, பாடபேதமோ கிடையாது. சொல்லும் முறையில் வித்யாசங்கள் வரும், சிலர் நீட்டியோ உரக்கவோ சொல்வார்கள். மற்றபடி எவ்வித வித்யாசமும் இல்லை.


க்ருஹத்தில் நித்யபடி சேவாகாலத்தின் போதும், ப்ரபந்த பாராயணத்தின் போதும் திருவிருத்தம் ப்ரபந்தம் சேவிக்கலாமா என்பதை தேவரீர் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

ப்ரபந்த பாராயணத்தின் போது திருவிருத்தம் ப்ரபந்த பாராயணம் சேவிக்கும் வழக்கமுள்ளது. நித்யபடி க்ருஹத்தில் சேவாகாலம் என்பது நாமே வைத்துக்கொள்வதாகும், அதில் திருவிருத்தம் சேவித்தால் தவறில்லை. சேவிக்கக்கூடாது என்ற ஸம்ப்ரதாயமெல்லாம் கிடையாது.


பாதுகா ஸஹஸ்ரநாமம் மாலை அல்லது இரவில் சேவிக்கலாமா? மாலையில் பாதுகா ஆராதனம் பண்ணலாமா?

Vidwan’s reply:

பாதுகா ஸஹஸ்ரநாமம் ஸ்தோத்ரம் எப்போது வேண்டுமானாலும் சேவிக்கலாம். பாதுகா ஆராதனம் என்பது பெருமாள் திருவாராதனம் போல் சுத்தமாக இருந்து பண்ணவேண்டியது. பெருமாள் திருவாராதனம் காலையில் எப்படிச் சுத்தமாக இருந்து பண்ணவேண்டுமோ அப்படித்தான் பண்ண வேண்டும். மாலையில் அந்தச் சுத்தி இருக்காது. மேலும், பொதுவாக காலையில்தான் பண்ணுவார்கள் மாலையில் பண்ணும் வழக்கமில்லை.


கோயில்களில் கிடைக்கும் புளியோதரை, பொங்கல் (கலந்த சாதம்) போன்ற ப்ரசாதத்தை காலை, மதியம் அல்லது இரவு உணவாக உண்ணும் போது பரிசேஷனம் செய்ய வேண்டுமா? Vidwan’s reply:

கோயில்களில் கிடைக்கும் புளியோதரை, பொங்கல் (கலந்த சாதம்) போன்ற ப்ரசாதத்தில் உப்பு சேர்த்திருப்பார்கள். பொதுவாக உப்பு சேர்த்த வஸ்துவிற்கு பரிசேஷனம் பண்ணக்கூடாது.


பெருமாள் திருவாராதனம் மாத்யானிகம் செய்த பிறகுதான் செய்ய வேண்டுமா?

Vidwan’s reply:

பெருமாள் திருவாராதனம் மாத்யானிகம் செய்த பிறகுதான் செய்ய வேண்டுமா என்றால் அதுதான் அதற்கு சமயம். அதாவது அனுஷ்டான க்ரமப்படியாக மாத்யானிகத்திற்குப் பிறகுதான் திருவாராதனம் பண்ணவேண்டும்.

வேறு காரணங்களால் ஒருவேளை திருவாராதனம் முன்னாடி பண்ணும்படி நேர்ந்தால், மாத்யானிகத்திற்கு முன் அபிகமன ஆராதனத்தை விசேஷனமாக பண்ணிவிட்டு, மாத்யானிகத்திற்குப் பின் சுருக்கிப் பண்ணலாம் என்று கூறுகிறார்கள்.

பொதுவாக க்ருஹஸ்தர்காள் அபிகமன ஆராதனத்தைச் சுருக்கமாக பண்ணுவார்கள், அதாவது பெருமாளுக்குச் சுப்ரபாதம், சில ஸ்தோத்ரங்கள் சொல்லி சுருக்கமாகப் பண்ணுவார்கள். பின் இஜ்யாராதனத்தைப் பெரியதாகப் பண்ணுவார்கள். ஸந்யாசிகள் அபிகமனத்தைச் விசேஷமாகப் பண்ணி, இஜ்யாராதனம் சுருங்கலாம்.

க்ருஹஸ்தர்களுக்கு சில காலவிசேஷத்தின் போது, அதாவது நேரமில்லாத போது (ஆபத்காலம் என்று சொல்வார்கள்) அபிகமனத்தைச் விசேஷமாகப் பண்ணிவிட்டு, இஜ்யாராதனத்தைச் சுருக்கிக்கொள்ளலாம்.


ஆழ்வார் ஆசார்யன் ப்ரதிஷ்டாபனம் இல்லாத மற்றும் ஶடாரி சாதிக்காத விஷ்ணு கோவில்களில் நாலாயிரம் சேவிக்கலாமா ?

Vidwan’s reply:

எல்லா விஷ்ணு கோவில்களிலும் நாலாயிரம் சேவிக்கலாம் இதில் சந்தேகமே வேண்டாம். கோவில்காரர்கள் அனுமதித்தால் தாராளமாகச் சேவிக்கலாம்.


யஸ்யாபவத்…, அஹோபிலே….என்று அஹோபில மடத்தவர்கு இருப்பது போல், ஆண்டவன் ஆச்ரம சிஷ்யர்களுக்கு ஏதேனும் உண்டா?

Vidwan’s reply:

ஶாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம் என இரண்டு இருக்கிறது. யஸ்யாபவத் சொல்வதென்பது ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தது. மற்ற ஸம்ப்ரதாயத்தில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

பொதுவாக நாமெல்லாம் ஸ்ரீமான் வேங்கட, யஸ்யத் விரத என்று வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா அது போலதான் யஸ்யாபவத் என்பதும். ஸ்ரீமத் ஆண்டவன் ஆஶ்ரமத்தில் தனியாக இருப்பதாகத் தெரியவில்லை.


மார்கழி மாதத்தில் ஒருவர் காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானம் என்ன? குறிப்பாக பெருமாள் திருவாராதனம் பண்ணாதவர்கள் , க்ருஹத்தில் இல்லாமல் விடுதிகளில் தங்கி இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

மார்கழி மாதத்தில் காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானத்தில் முக்கியமானது காலையில் எழுந்து திருப்பாவை சொல்வது. ஸ்த்ரீகள் கார்த்தால எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும். மார்கழி மாதத்தில் பிம்மாலையில் விளக்கேற்றுவது விசேஷம். அதேபோல் திருப்பாவை அவசியம் அனுசந்தானம் பண்ணவேண்டும். திருவாராதனம் நடக்காத பக்ஷத்திலும் திருப்பாவை கட்டாயம் சேவிக்க வேண்டும். கோதாஸ்துதி தெரிந்தால் அதையும் சேவிக்கலாம்.


ஒருவர் உபன்யாசகர் ஆவதற்கு என்ன அளவுகோல், விதிமுறைகள் ? இந்தக் கேள்விக்கு க்ஷமிக்கப் ப்ரார்த்திக்கிறேன். கடந்த சில ஆண்டுகளில், க்றிஸ்தவர்கள், ப்ராமணர்கள் அல்லாதவர்கள், பெண்கள் என்று அனைவரும் உபன்யாசகர்களாக மாறி, அனைவருக்கும் ரஹஸ்யத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், இது சரியா என்று தேவரீர் விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

உபன்யாசகர் ஆக வேண்டும், பகவத் விஷயங்களைப் பேசவேண்டும் என்றால் முதலில் பகவத் விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஒரு ஸதாசார்யன் மூலமாக விஷயங்களை நன்கு க்ரஹித்துக் கொள்ளவேண்டும். காலக்ஷேபாதிகள் எல்லாம் பண்ணவேண்டும். அதற்கு பிறகு ஆசார்யன் நியமித்தால் மட்டுமே விஷயங்களை வெளியேபோய் சொல்லவேண்டும். அவருடைய அனுமதி பெற்றுதான் விஷயங்களை வெளியே போய் சொல்ல வேண்டும். ஆசார்யன் நியமித்தால்தான் அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்.

ஸத்ஸம்ப்ராயத்தில் வராதவர்கள் எல்லாம் விஷயங்களைச் சொல்லுவது என்பது சரியல்லதான். அதாவது அது ஸம்ப்ரதாய விஷயமாக ஆகாது. அவர்கள் பேசுவது வேறு பேச்சாக இருக்கலாம். ஆனால் அதை ஸம்ப்ரதாய விஷயமாக கருத முடியாது. அதை ஸ்ரீ வைஷ்ணவ ஸத்ஸம்ப்ரதாயத்தில் இருப்பவர்கள்போய் கேட்க வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது. இதே ஒரு ஸதாசார்யன் மூலமாக உபதேசங்களைப் பெற்று அந்த ஆசார்யன் நியமனத்தின் பேரில் ஒருவர் விஷயம் சொல்லுவரேயானால் அந்த விஷயங்களைக் கேட்பதில் தவறில்லை. அந்த விஷயங்களை ஸ்த்ரீகள் சொன்னாலும் சரி அல்லது ப்ராமணர்கள் அல்லாதவர் ஒருவர் விஷயத்தை ஸதாசார்யனிடத்தில் கேட்டுக் கொண்டு அதை அவர் சொல்ல வெளியே சென்று நான்கு பேருக்குச் சொன்னாலும் அது தவறல்ல. ஆனால் YouTubeல் இந்த மாதிரி ஹிந்து அல்லாதவர்கள், எந்த ஒரு ஸத் உபதேசங்களையும் பெறாதவர்கள் எல்லாம் சொல்லக்கூடிய விஷயங்களைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.


அடியேன், ராமானுஜ சம்பந்தம் இல்லாத ப்ராமணர் அல்லாதவர்கள் கோவில்களில் பாதுகா ஸஹஸ்ரம் சேவிக்கலாமா என்று தேவரீர் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

இந்தக் கேள்வியில் ராமானுஜ சம்பந்தம் இல்லாத ப்ராமணர் அல்லாதவர்கள் என்று போட்டிருக்கிறது. இந்தக் கேள்வி கொஞ்சம் வேடிக்கையாகதான் படுகிறது. ஏனென்றால் தேசிகருடைய ஸ்ரீஸூக்திகளைச் சேவிக்கணும்னு ஒருவர் நினைத்தால் அவருக்கு ராமானுஜ சம்பந்தம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? அந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் பரம்பரையில் வரவில்லை என்றால் தேஶிகன் ஸ்ரீ ஸூக்தியை வாசிக்க ஆசை எப்படி ஏற்படும் என்று அடியேனுக்குப் புரியவில்லை. அதனால் பாதுகா ஸஹஸ்ரம் கற்றுக் கொள்கிறார்கள் சேவிக்கணும் என்று நினைக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தேசிகனிடத்தில் ஒரு ருசி இருக்கிறது என்று தெரிகிறது. தேஶிகனிடத்தில், தேஶிகன் விஷயத்தில் ஒரு ஈடுபாடு இருக்கிறது என்று தெரிகிறது. அதனால் ராமானுஜ ஸம்ப்ரதாயத்திலும் ஈடுபாடு இருக்கிறதாகதான் புரிகிறது. அதனால் இதைக் கற்றுக்கொண்டு அகத்தில் அவரவர் த்ருப்திக்குச் சேவிப்பது சரியாகத்தான் தோன்றுகிறது.

ஆனால் கோவில்களில் சேவிப்பதற்கு பல நியமங்கள் உண்டு. அந்த நியமங்களின் ப்ரகாரம் எந்தக் கோவில்களில் எப்படிச் சொல்கிறார்களோ அப்படித்தான் சேவிக்க முடியும். திவ்ய தேச கோவில்களில் கோஷ்டியினரை தவிர வேறு யாரும் சேவிப்பதற்கு அனுமதி கிடையாது. நவீனமாக ஏற்பட்ட கோவில்களில் எல்லாம் எல்லாரும் சேவிக்கலாம் என்று வந்து கொண்டிருக்கிறது. ஆனால் பொதுவாக ப்ராமணர் அல்லாதவரோ அல்லது ராமானுஜ சம்பந்தம் அல்லாதவரோ கோவில்களில் சேவிப்பது பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதாகத் தெரியவில்லை.


“ப்ரபன்னர் ராகவேந்த்ரர் ஶ்லோகம் சொல்லலாமா? மந்த்ராலயாத்திற்குப் போய்சேவிக்கலாமா? அவரை ஆசார்யனாக ஏற்கலாமா?

Vidwan’s reply:

ப்ரபன்னர்கள் ராகவேந்த்ர ஸ்லோகம் சொல்லுவதோ , மந்த்ராலயம் போவதோ, ராகவேந்த்ரரை ஆசார்யனாக ஏற்றுக் கொள்வதோ, இவையெல்லாம் பண்ணக்கூடாது. ஓரான் வழியாக வந்த குருபரம்பரையில் இருக்கின்றவர்களே ஆசார்யர்கள். அந்தக் குருபரம்பரையில் இருக்கின்ற ஆசார்யன் ப்ரபத்தி செய்து வைத்தால்தான் அது ஸ்ரீமன் நாராயணனுடைய திருவடியில் நம்மைக் கொண்டு போய் சேர்க்கும். அதனால் அப்பேர்ப்பட்ட ஸதாசார்யனிடம் ப்ரபத்தி பண்ணிக் கொண்டவர்கள் அவரையும் அந்த ஆசார்யன் பரம்பரையில் வந்த எல்லா ஆசார்யாளை மட்டும்தான் ஆசார்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.


ஆத்தில் பெருமாளுக்கு ஏற்றும் சொக்கப்பானையில் எத்தனை, என்னென்ன தான்யங்கள் வைக்க வேண்டும்.

Vidwan’s reply:

க்ருஹத்தில் பெருமாளுக்கு ஏற்றும் சொக்கப்பானையில் அவசியம் நெல் இருக்க வேண்டும். நெல்லை ஒரு புதிய வஸ்த்ரத்தில் மூட்டைகட்டி அதை நெய்யில் தோய்த்து வைக்க வேண்டும். சில க்ருஹங்களில் கோதுமை கொள்ளு போன்ற தானியங்களைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது.


க்ருஹத்தில் ஏளியிருக்கும் சாளக்கிராம மூர்த்தி பின்னமாகி விட்டால், அவருக்கு நித்ய திருவாராதனம் செய்யலாமா?இல்லையென்றால் திருவாராதனைக்குப் புதிய சாளக்கிராம மூர்த்தி ஏளப் பண்ணவேண்டுமா? சாளக்கிராம மூர்த்தியை எங்கே எப்படிப் பெறுவது என்பதையும் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன் ?

Vidwan’s reply:

பொதுவாக பின்னமான மூர்த்தியை அகத்தில் ஏளப் பண்ணிக்கொண்டு திருவாராதனம் செய்வதில் சில பாதகங்கள் உண்டு என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் வேறு சாளக்கிராம மூர்த்தியை ஏளப் பண்ணிதான் திருவாராதனம் பண்ணவேண்டும். அதுவரை அப்படிப் பண்ணிக் கொண்டிருக்கலாம்.


பெருமாள் திருமஞ்சனத்தின் போது உபநிஷத் பாராயணம் செய்கிறார்கள்?

Vidwan’s reply:

உபநிஷத் பாகம் என்பது சாக்ஷாத் எம்பெருமானைச் சொல்வது. மற்ற பாகங்கள் எல்லாம் ஒரு தேவதையைச் சொல்லி அந்தத் தேவதைக்கு அந்தர்யாமியாக ஒரு பகவானைச் சொல்லும். திருமஞ்சனத்தின் போது சேவிப்பவர்கள் எல்லாரும் ஏதாவது ஒரு பாராயணம் பண்ணவேண்டும் என்கின்றபோது, உபநிஷத் சாக்ஷாத்தாக எம்பெருமானைச் சொல்வதால் அதைச் சேவிப்பார்கள். அதைச் சொல்வது விசேஷம் என்று ஸ்வாமி தேஶிகனே சொல்லியிருக்கிறார். அதனால் அந்த ரீதியில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்


தனுர்மாசத்தில் அதிகாலை திருவாராதனத்திற்கான உபாதானம் அதாவது, மலர்கள், துளசி போன்றவை எப்போது பறிக்க வேண்டும்? அன்றைய‌ தின சூர்யோதயத்திற்கு முன்னா அல்லது முந்தைய நாளா?

Vidwan’s reply:

துளசியை முதல் நாள் காலையில் க்ரஹித்து வைத்துக்கொள்ளலாம். மதியத்திற்கு மேல் பண்ணக்கூடாது. சூர்யோதயத்திற்கு முன்னும் துளசியை க்ரஹிக்க முடியாது.

புஷ்பங்களை மலர்ந்தபின் க்ரஹித்துக் கொள்ளலாம். சூர்யோதயத்திற்கு முன் ஐந்து மணிக்குச் சில சமயங்களில் புஷ்பங்கள் மலர ஆரம்பித்து விடும். அப்படி மலர்ந்தால் அந்தச் சமயத்தில் நாம் புஷ்பங்களை க்ரஹித்துக் கொள்ளலாம்.


வேதங்களைப் போல திவ்ய பிரபந்தம் சேவிப்பதற்கு ஏதேனும் நிபந்தனைகள், வரைமுறைகள் இருக்கின்றனவா? (ஸ்ரீ உ வே Dr.V.கண்ணன் ஸ்வாமிகள் வேதம் பாராயணத்தின்போது மனதில் கொண்டு பின்பற்ற வேண்டிய பல விஷயங்களைக் குறிப்பிடுகிறார். ஸ்வரூபத்தில் இருப்பது, அனத்யயனம், சந்த்யாகாலம், அஶௌசகாலம் முதலியன போல் வேறு என்ன என்று தெளிவிக்கப் ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

அனத்யயனம், சந்த்யாகாலம், அஶௌசகாலம் இந்தச் சமயங்களில் திவ்யப்ரபந்தம் சேவிக்கக்கூடாது என்று கேள்வியில் நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். இதைத் தவிர வேறொன்றும் விசேஷமாக இருப்பதாகத் தெரியவில்லை.


ஆசார்யனின் திருவத்யயனத்தை எவ்வாறு க்ரமமாக கொண்டாடுவது?

Vidwan’s reply:

ஆசார்யனின் திருவத்யயனத்தை சிஷ்யன் விசேஷமாக கொண்டாட வேண்டும். அதாவது எப்படிப் புத்ரர்கள் தன் பிதாவிற்கு திருவத்யயனம் செய்கிறார்களோ, அதேபோல் நன்றாக விசேஷமாக கொண்டாடலாம். அப்படிக் கொண்டாடியே ஆக வேண்டும் என்கின்ற நிர்பந்தம் எதுவும் கிடையாது. அது இல்லாமல் நாம் சுருக்கமாக பண்ணுவதாக இருந்தால் சேவாகாலம், சாற்றுமுறை ஆசார்ய சம்பாவனை இவையெல்லாம் பண்ணி ஒரு ப்ராமண போஜனம் பண்ணி வைத்து தக்ஷிணை கொடுக்கலாம். இப்படிச் செய்வது வழக்கத்தில் உள்ளது நிறையபேர் இப்படிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.


நாம் அணிந்த தங்க நகைகளை, துளசி நீரில் நங்கு சுத்தம் செய்தபிறகு அகத்தில் ஏளியிருக்கும் பெருமாளுக்குச் சாத்தலாமா? அவருக்குச் சேர்பித்தபின் நாங்கள் மீண்டும் அணியமாட்டோம் என்ற எண்ணத்தில் அவருக்குச் சாத்தி அனுபவிக்கலாமா?

Vidwan’s reply:

நாம் அணிந்த தங்க நகைகளை, பெருமாளுக்குச் சாத்துவதற்கு முன் அதற்கென்று ஒரு தனி சுத்தி பண்ணுவது வழக்கம். நாம் அணிந்த தங்க நகையாக இருந்தால், புடம் போட்டு எடுப்பது போன்று ஒன்று செய்வார்கள், அக்னியில் காய்ச்சி எடுப்பது என்று சொல்வார்கள். அப்படிச் செய்துவிட்டு அதன் பின்னே பெருமாளுக்கு சாத்துவது என்று வழக்கம். ஏனென்றால் தங்கத்திற்கு அக்னியினாலே தான் சுத்தி. தங்கம் என்பது திரும்பத் திரும்ப அக்னியில் காய்ச்சப்பட்டு வேரொன்றாகச் செய்யப்பட்டுத்தான் நம் கைக்கு வருகிறது. அதனால் அந்த ரீதியில் அதைப் பண்ண வேண்டும். அதனால் கடைகளில் அப்படிப் ‌ பண்ணிக் கொடுச்சொல்லிக் கேட்டால் செய்து கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.


பெருமாளுக்குச் சாற்றிய துளசி மாலைப் பற்றிய சில கேள்விகள்

அவரின் துளசி மாலையை ப்ரசாதமாக ஸ்வீகரித்து ஜபம், தர்ப்பணம், திருவாராதனத்திற்கு உபயோகிக்கலாமா?

துளசி மாலையை தாமரை மணி மாலையோடுதான் அணிய வேண்டுமா? தனியாக அணியக்கூடாதா?

துளசி மாலையை ஒரு நாள் முழுதும் அணியலாமா? அல்பஶங்கை சமயமும் அணியலாமா?

தீட்டுச் சமயங்களில் அணியலாமா?

Vidwan’s reply:

பெருமாளுக்குச் சாற்றிய துளசி மாலையை ப்ரசாதமாக ஏற்று ஜபம் தர்ப்பணம் திருவாதனத்திற்கு உபயோகப்படுத்தலாமா அதாவது நாம் போட்டுக் கொள்ளலாமா என்று கேட்கிறார் என்று நினைக்கிறேன். பெருமாளுக்குச் சாற்றிய துளசி மாலை நாம் கழுத்தில் அணிந்து கொண்டு பண்ணலாம், ஆனால் நாள் முழுவதும் அணிவது வழக்கம் கிடையாது.

அல்பஶங்கை மற்றும் தீட்டுச் சமயங்களிலும் அணியக்கூடாது.

தனியாக அணியலாம். துளசி மாலையில் ஒரு சின்ன விஷயம் அது என்னவென்று கேட்டால் அதை நிரந்தரமாக சாற்றிக் கொண்டிருக்க மாட்டார்கள். துளசி மாலையில் இரண்டு வகை இருக்கின்றது. ஒன்று துளசி இலையினால் செய்த மாலை மற்றொன்று துளசி மணியினால் செய்யப்பட்ட துளசி மணி மாலை அதாவது துளசி வடம். இந்தத் துளசி வடத்தை வைத்துக் கொண்டு ஜபம் தர்ப்பணம் திருவாராதனம் எல்லாம் பண்ணுவார்களே தவிர துளசி மாலை அதாவது துளசி ஜலத்தை வைத்து, துளசி இலை மாலையை வைத்துக்கொண்டு பண்ணுவது வழக்கம் கிடையாது. உங்கள் கேள்வி எதைப்பற்றி என்று தெரியவில்லை.

துளசி மணிமாலை(துளசி வடம்) என்று இருந்தால் அதைத் தாமரை மாலையுடனும் சேர்த்துக் கொள்ளலாம் இல்லை தனியாகவும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அதுவும் சுத்தமாக இருக்க வேண்டும் தீட்டுச் சமயங்களில் கூடாது, நாம் வெளியில் செல்கிறோம் பேருந்தில் செல்கிறோம் அப்பொழுதெல்லாம் தீட்டு கலக்கும் என்று இருந்தால் அந்தச் சமயங்களிலும் கூடாது.


பெருமாளுக்குப் புதியதாக மரப்பெட்டி வாங்கியுள்ளேன் அதில் பெருமாளை ஏளப்பண்ணுவதற்கு முன் எப்படிச் சுத்தி படுத்த வேண்டும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

பெருமாள் பெட்டியைச் சுத்தமாக அலம்பிவிட்டு புண்யாகவாசனம் செய்துவிட்டு ஏளப் பண்ணலாம்.


மகர ரவி தர்ப்பணம் பற்றிய கேள்வி

அடியேன் பஞ்சாங்கத்தில் சனிக்கிழமை மகர ரவி 43-52 என்று இருக்கிறது. அப்படியென்றால் மகரமாச தர்ப்பணம் என்று பண்ண வேண்டும்? சனிக்கிழமையா? அல்லது ஞாயிற்றுக்கிழமையா?

Vidwan’s reply:

இந்த வருடம் சனிக்கிழமை இராத்திரி 43-52 ல் மாதம் பிறக்கிறது. ஆகையால் மறுநாள் காலையில் புண்யகாலம். அதாவது மறுநாள் ஞாயிற்றுக்கிழமை1(5 ஜனவரி) சூர்யோதயம் ஆனவுடன், அதாவது அவரவர் இருக்கும் இடத்தில் எப்போது சூர்யோதயம் ஆகிறதோ, ஆன நேரத்திலிருந்து 1 மணி நேரம் 32 நிமிடங்களுக்குள் மாசப்பிறப்பு தர்ப்பணம் பண்ணவேண்டும்.

குறிப்புகள்:

மகர ஸங்க்ரமணத்திற்குப் பிறகு 20 நாழிகை உத்தராயண புண்யகாலம்.

பகலில் மகரஸங்க்ரமணம் ஸம்பவித்தால் அன்றே புண்யகாலம். ஸூர்ய அஸ்தமனத்திற்குப் பிறகு மகரஸங்க்ரமணமானால் மறுநாள் புண்யகாலம்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top