சுபகிருது – வைகாசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்


ஆசார்யனின் திருவத்யயன தினத்தன்று என்னென்ன அனுஷ்டானங்கள் கடைபிடிக்க வேணடும்? அவரின் திருநக்ஷத்ர தினம் போல் இதற்கும் நியமங்கள் இருக்கின்றதா என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
ஆசார்யன் திருநக்ஷத்ரதினம் போல் திருவத்யயன தினமும் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டும் என்று ஸ்ம்ருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. திருவத்யயனத்தை ஶ்ராத்தம் மாதிரியே ஒரு சிஷ்யன் பண்ணலாம். அது முடியாத போது அன்றைக்கு விசேஷமாக பெருமாள் திருவாராதனம் செய்து, ஆசார்யன் சம்பாவனை செய்து, ஆசார்யன் ஸ்ரீபாத தீர்த்தம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


GSPK குழுமத்தில் எப்படி இணைவது?

Vidwan’s reply:
உங்கள் கைபேசியில் Telegram appaஐ பதிவிறக்கம் செய்தபின் கீழே உள்ள இரண்டு Telegram groupல் சேரவும்.

https://t.me/dgspk

https://t.me/gspkstotras

மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள இணையதளத்தைக் காணவும்.

www.sampradayamanjari.org


அடியேன், ப்ரம்மோத்ஸவத்தின்போது தீர்த்தவாரிக்கு முன் ருத்ரமும், சமகமும் ஏன் சேவிக்கிறார்கள்.

Vidwan’s reply:
ப்ரம்மோத்ஸவத்தின்போது தீர்த்தவாரிக்கு முன் ருத்ரமும், சமகமும் சேவிப்பது என்று ப்ரத்யேகமாக கணக்கு கிடையாது. அந்தப் பாராயணத்தில் சில சமயம் அது வரும். அதாவது முதல்நாள் முதல் பிரஸ்தவம் ஆரம்பித்து வரும்பொழுது தீர்த்தவாரியில் ருத்ரம் சமகம் என்று வருமாக இருக்கும். அதைத் தவிர அவைகளைச் சொல்ல வேண்டுமென்று எதுவும் விசேஷமாக கிடையாது. ஸ்மார்த்தர்கள் சொல்லுவார்களாக இருக்கும்.


பொதுவாக திருமணத்திற்குப் பிறகு ஸ்த்ரீகள் ஸமாஶ்ரயணம் செய்வது வழக்கில் இருக்கிறது, ஆனால் திருமணத்திற்கு முன்பே ஆசையிருந்தால் ஒரு ஸ்த்ரீ ப்ரந்யாஸம் பண்ணிக்கொள்ளலாமா. மேலும், அப்படி பரந்யாஸம் செய்வித்த ஆசார்யனும் வரப்போகும் மாப்பிள்ளை வீட்டாரின் ஆசார்ய சம்பந்தமும் வெவ்வேறாக இருந்தால் செய்த பரந்யாஸம் பலிக்குமா/ஒத்துக்கொள்ளப்படுமா? அடியேனின் அறியாமைகயை க்ஷமிக்கவும்.

Vidwan’s reply:
திருமணத்திற்குப் பிறகு ஸ்த்ரீகள் ஸமாஶ்ரயணம் செய்துகொள்ளலாம். திருமணத்திற்கு முன்பே தாராளமாக பரந்யாஸம் பண்ணிக்கொள்ளலாம். திருமணத்திற்குப் பின் ஆசார்ய சம்பந்தம் வேறுபாட்டால் பரவாயில்லை. பரந்யாஸம் பலிக்கும். அதை ஒத்துக்கொள்வார்கள். சாஸ்த்ரம் இல்லை என்பது கிடையாது. திருமணத்திற்கு முன் செய்து கொள்வதில் தவறொன்றும் இல்லை.

பொதுவாக ஒரு பெண்ணிற்குத் திருமணத்திற்குப் பின் அவர்களுடைய ஆசார்ய சம்பந்தம் இருந்தால் நல்லது என்கின்றபடியினாலும், பர்தாவினுடைய ஆசார்யன் பெண்ணிற்கும் இருக்கட்டும் என்பதற்காகவும், வேறு வேறு ஆசார்ய சம்பந்தம் வேண்டாம் என்பதற்காகவும், சங்கடத்தைத் தவிர்ப்பதற்காகவும், நம் வழக்கத்தில் திருமணத்திற்கு முன் பரந்யாஸம் பண்ணிக்கொள்வதில்லை.


இந்தக் கலியுகத்தில் பக்தியோகம் சாத்தியப்படாததினால் ப்ரபத்தி ஒன்றே எம்பெருமானை அடையும் மார்கம் என்று புரிகிறது. ஸ்வாமி தேசிகன் “ஆக்ஞா மற்றும் அனுக்ஞா கைங்கர்யம்” பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆக்ஞா கைங்கர்யம் கட்டாயம் என்று எப்படி ஸ்ருதி ஸ்ம்ருதிகள் கூறுகிறதோ அதே போல் ஒரு ஜீவன் ப்ரபத்தி மார்கத்தில் செல்ல ஆக்ஞா கைங்கர்யம் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டுமா? மேலும் பகவான் க்ருஷ்ணன் கீதையில் “கர்ம யோகம்” என்று எதை உரைத்திருக்கிறானோ அவையும் ஆக்ஞா கைங்கர்யமும் (சத்யம் வத, தர்மம் சர,..போன்றவை) ஒன்றா அல்லது வெவ்வேறா?

Vidwan’s reply:

ஆக்ஞா கைங்கர்யம் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டும். ஆக்ஞா கைங்கர்யத்திற்கும், மோக்ஷம் அடைவதற்கும் பெரிய சம்பந்தம் ஒன்றும் கிடையாது. ஏனென்றால் ஶரணாகதி செய்து கொண்டால் நமக்கு மோக்ஷம் கிடைக்கும். ஆனால் ஆக்ஞா கைங்கர்யம் அனுஷ்டிக்கவிட்டால் பாபம் என்று சொல்லியிருக்கிறது. அந்தப் பாபத்தினுடைய தண்டனைகளை அனுபவிக்க வேண்டி வரும். அதனால் அதனைக் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டும்.

பகவத் கீதையில் கிருஷ்ணன் சொன்ன கர்மயோகமும் ஆக்ஞா கைங்கர்யமம் ஒன்று இல்லை. இவை இரண்டும் வெவ்வேறு. கர்மயோகமாக இருக்கட்டும், ஞானயோகமாக இருக்கட்டும், பக்தியோகமாக இருக்கட்டும் எல்லாவற்றிற்கும் ஆக்ஞா கைங்கர்யம் தனியாக பண்ண வேண்டும். அதாவது நித்யகர்மாநுஷ்டானங்கள் ஆக்ஞா கைங்கர்யம் என்று வைத்து கொள்ளலாம் அது தனியாக கட்டாயம் பண்ணி ஆக வேண்டும்.


அடியேன் இருப்பது ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு. இங்கு ஒரு விநாயகர் கோவில் உருவாக்க குடியிருப்பு வாசிகள் முடிவு எடுத்துள்ளார்கள். அதற்கு எல்லா உரிமையாளர்களும் உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். எங்கள் ஆத்தில் அனைவருக்கும் பரஸமர்ப்பணம் ஆகி விட்டது. பிற கோவில்களுக்கு போவதில்லை. ஆனால் இந்தப் பணிக்கு உதவ வேண்டிய நிர்ப்பந்தம். மறுக்க முடியாது. நிர்மாணம் ஆன பிறகு வேறு எதுவும் செய்ய முடியாது வேண்டியதும் இல்லை.இது குறித்து அறிவுரை வழங்க வேண்டுகிறேன்.

Vidwan’s reply:
விநாயகர் கோவிலுக்கு நாம் உதவி செய்யலாமா என்று கேட்டால், ஶாஸ்த்ரப்படி செய்யக்கூடாது. நீங்கள் கேள்வியில் குறிப்பிட்டிருப்பது போல் சில சங்கடங்கள் இருக்கின்றன. அதனால் நாம் நமது ஸ்ரீவைஷ்ணவத்துவத்தை குறைத்துக் கொள்ளாமல் , நீங்கள் சொல்லியிருப்பிப்பது போல் உறுதியான எண்ணம் இருக்கின்றபடியினால், அது நமக்கு பாதகமாக இருக்காது என்று தோன்றுகிறது.

பைசாவுடன் போய்விடட்டும் என்று சொல்லி அவர்கள் கேட்பதைக் கொடுத்துவிடலாம். ஶாஸ்த்ரம் இல்லை. வேறு வழி இல்லாமல் கொடுக்கின்றோம். எத்தனையோ கொடுக்கின்றோம். கேபிள் டிவி போன்று தேவையில்லாததற்கு எத்தனையோ செலவு செய்கின்றோம். அந்த மாதிரியாக இதை நினைத்துக்கொள்ள வேண்டும்.


அடியேன் ப்ராமணன் அல்லாத ஸ்ரீவைஷ்ணவன். சந்தியாவந்தனம் செய்வது ஒருவருடைய பாபங்களைப் போக்கும் என்று கேள்வியுற்றுள்ளேன். ஆனால் அடியேனால் சந்தியாவந்தனம் செய்ய இயலாது என்றிருக்க, அடியேன் அறியாது செய்த பாபங்களைப் போக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

Vidwan’s reply:
சந்தியாவந்தனம் செய்ய முடியாதவர்களுக்கான நித்யகர்மங்களில் குறிப்பாக பகவான் நாமம் சொல்வது மிகவும் விசேஷம் என்று இருக்கிறது.

அதில் ஒரு முக்கியமான விஷயம் சந்தியாவந்தனம் செய்ய முடியாதவர்கள் நம்மால் செய்ய முடியவில்லையே என்று நினைத்து கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் ஶாஸ்த்ரத்தில் துல்ய பலம் என்று ஒன்று சொல்வார்கள், அதாவது அந்தந்த அதிகாரிகள் அவர்களுக்கு விதித்ததைச் செய்ய வேண்டும்.

அதைச் செய்யும் அதிகாரம் இல்லாவிட்டால் கூட பலனில் எந்தக் குறைவும் கிடையாது, பெருமையிலும் எந்தக் குறைவும் கிடையாது. உதாரணமாக புருஷர்கள் செய்கின்ற அனுஷ்டானங்களை ஸ்த்ரீகள் செய்ய மாட்டார்கள். கோவில்களில் அர்ச்சகர்கள் செய்கின்ற கைங்கர்யத்தை, பர்ஜாரகர்கள் செய்ய மாட்டார்கள். அவரவர்களுக்கு விதித்த அனுஷ்டானத்தை அவரவர்கள் செய்வதே விசேஷம். அதனால் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். பாபங்களைப் போக்கிக்கொள்ள நாமகீர்த்தனம், பெருமாளைச் சேவித்தல் முதலிய எத்தனையோ வழிகள் இருக்கின்றன.


பெருமாளுக்குத் திருவாராதனம் நின்றுகொண்டு அல்லது அமர்ந்துகொண்டு செய்ய வேண்டுமா?

Vidwan’s reply:
பெருமாள் திருவாராதனம் நமது ஆஹ்நிக க்ரந்தங்களின்படி, பூத சுத்தி முதலானவை எல்லாம் மானச யாகம் வரை அமர்ந்துகொண்டு செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பின் தொடர்ந்து பாஹ்ய யாகம் என்று சொல்வார்கள், அதாவது பெருமாளுக்கு வெளியில் ஸமர்ப்பிக்க கூடிய அர்க்யம், பாத்யம் முதலானவைகளை நின்றுகொண்டு செய்ய வேண்டும்.


அடியேனுக்கு ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் செய்துகொள்ள ஆசை. ஆனால் அகத்தில் இருப்பவர்கள் ஏதோ காரணங்கள் கூறி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள். என் இருபது வயது மகளுக்கு அதன் முக்கியத்வத்தை கற்றுக்கொடுக்க முடியவில்லை ஏனென்றால் ஆத்தில் இருக்கும் பெரிய்வர்கள், என் அகத்துக்காரார் என அனைவரும் இந்த சம்ஸ்காரங்கள் முக்கியம் இல்லை என்று கூறுகிறார்கள். எங்கள் ஆசார்யன் இருக்கும் இடம் வெகு தொலைவில் இருப்பதால் அதையே பல முறை காரணம் காட்டி ஆசார்யன் தரிசனம் பெறவும் தடுக்கின்றனர். என் மகளாவது இந்த ஸம்ப்ரதாயத்தில் வர ஆசை கொண்டுள்ளேன். மாற்றம் ஏற்பட ஏதேனும் வழியுண்டா?

Vidwan’s reply:

பரந்யாஸம் செய்துகொள்ள முடியாமல் ப்ரச்சனைகள் இருந்து வந்தால், ஸ்வாமி தேஶிகனுடைய ந்யாஸதஶகத்தை நித்ய அனுசந்தானம் பண்ணிக் கொண்டிருந்தால் பெருமாளே உங்களுக்கு வழி காட்டுவார்.

அடைக்கலப்பத்து சேவித்து கொண்டு இருக்கலாம். ஆசார்ய சம்பந்தம் , ஆசார்ய அனுக்ரஹம், பெருமாளுடைய அனுக்ரஹம் கட்டாயம் கிடைக்கும். அவரே வழி காட்டி, அவரே பரந்யாஸம் பண்ணி வைப்பார்.


எப்போதெல்லாம் அஷ்டாக்ஷரம் சொல்ல வேண்டும் உ.தா ஆசார்யன் தனியன் சேவிக்கும் சமயமா அல்லது சந்தியாவந்தனம் சமயமா? எத்தனை முறை ஜபிக்க வேண்டும்?? அதன் ப்ரபாவம் மற்றும் பலன், வித்வான்களின் திருவாக்கினால் அறியப்பெற்றேன் ஆனால் எப்பொது, எப்படி, எத்தனை முறை சொல்ல வேண்டும் என்ற தெளிவு மட்டும் இல்லை.

Vidwan’s reply:
சந்த்யாவந்தனத்தில் மூன்று வேளையும் அஷ்டாக்ஷர ஜபம் பண்ண வேண்டும் என்று இருக்கின்றது. அதைத் தவிர தனியாகச் செய்ய வேண்டும் என்கின்ற அவசியமில்லை. சந்த்யாவந்தனத்துடன் சேர்த்து செய்தாலே போதும். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை ஆஹ்நிக க்ரந்தங்களிலிருந்தோ அல்லது ஆசார்யனிடம் கேட்டோ தெரிந்துகொள்ளலாம்.


துவாதசி அன்று உப்பு போடாமல் உட்கொள்ளும் பாரணையை பல்லில் படாமல் சாப்பிடவேண்டுமா? 3 கவளம் சாப்பிடனும் என்று சிறுவயதில் கேட்ட ஞாபகம் ஆனால் தெளிவாக தெரியவில்லை தெளிவிக்க வேண்டுகிறேன்.

Vidwan’s reply:
பாரணை என்றால் அகத்திக்கீரை, சுண்டைக்காய் உப்பில்லாமல் இருக்க கூடியது. துவாதசியன்று பாரணையை பல்லில் படாமல் சாப்பிட வேண்டும் என்று கணக்கு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. அதே போல் மூன்று கவளம் என்று பெரிதாக நியமங்கள் கிடையாது. ஆகாரத்திற்கு முன் அதைச் சாப்பிட வேண்டும் என்பது மட்டும் தான் முக்கியம். சாப்பிட வேண்டும் என்பதற்காக சில பேர் ஒரே ஒரு இலையை மட்டும் சாப்பிட்டு விட்டுவிடுவார்கள். அப்படி இல்லாமல் நன்றாக சாப்பிட வேண்டும் என்கின்ற ரீதியில் மூன்று கவளம் என்று சொல்லியிருக்கலாம். மற்றபடி மூன்று கவளம் என்று கணக்கு எதுவும் கிடையாது.


ஏகாதசி அன்று பெருமாளுக்கு அன்னத்தை நிவேதனம் பண்ணலாமா? நித்யமுமே பெருமாளுக்குப் பால் அல்லது பழங்கள் மட்டும் அம்சை பண்ணலாமா?

Vidwan’s reply:
ஏகாதசியன்று அன்னத்தை பெருமாளுக்கு தாராளமாக நிவேதனம் பண்ணலாம். ஆனால் அதை நாம் சாப்பிட முடியாது. நாம் சாப்பிடாத ஒன்றை பெருமாளுக்கு ஸமர்ப்பணம் பண்ண வேண்டும் என்று பெருமாளும் கேட்கவில்லை. நமக்கு என்னவோ அதுவே பெருமாளுக்கு, அவனுக்கு என்னவோ அதுவே நமக்கு. அதனால் ஏகாதசி அன்று அன்னத்தை நிவேதனம் பண்ண வேண்டிய அவசியமில்லை. கோவில்களில் சுத்த அன்னம் என்று விசேஷமாக பண்ணுவார்கள். கோவில்களில் அது பண்ணாமல் இருக்க கூடாது. ஆனால் நாம் அதைச் சாப்பிடக்கூடாது என்ற கணக்கு இருக்கின்றது.

நித்யமுமே ப்ரசாதம் நிவேதனம் பண்ண வேண்டும். அது முடியாத நாட்களில் பால் பழங்கள் அம்சை பண்ணலாம்.

குறிப்புகள்:

நித்யமுமே பால் பழங்கள் அம்சை பண்ணலாம். இவை மட்டுமே போதுமா என்றால் அது மட்டும் போறாது. ப்ரசாதம் ரொம்ப முக்கியம். சுத்த அன்னம் என்று பெயர். பால் பழமோடு சேர்த்து அம்சை பண்ண வேண்டும். ப்ரசாதம் பண்ண முடியாத பொழுது பால் பழமோ அல்லது தயிர் பழமோ மட்டும் பண்ணலாம் என்று வைத்து கொள்ளலாம்.


அமாவாஸை தினத்தன்று தர்ப்பணம் செய்யும் சமயம் அடுப்பு மேடை (GasStove) மற்றும் தரையை சுத்தம் செய்தபின் கோலம் போடலாமா?

Vidwan’s reply:
அமாவாஸை தினத்தன்று தர்ப்பணம் செய்யும் சமயம் அடுப்பு மேடை மற்றும் தரையைச் சுத்தம் செய்தபின் கோலம் போடுகின்ற வழக்கம் பல க்ருஹங்களில் இருக்கின்றது.


என் தகப்பனார் ஜூன்2021 அன்று பரமபதித்துவிட்டார். வரும் ஜூன் ஒன்றாம் தேதி அவருக்கு வர்ஷாப்தீகம் வருகிறது. அம்மா என்னுடன் இருக்கிறாள்.

a. கயா ஶ்ரார்த்தம் எப்போது செய்தல் வேண்டும்? அதன் மகத்துவம் என்ன?

b. அக்ஷய வடம் என்றால் என்ன?

c. இராமமேஸ்வரம் சேது ஸ்நானமும் கயா ஶ்ரார்த்தத்துடன் செய்ய வேண்டுமா?

d. இவை அனைத்தும் செய்த பின் தான் க்ஷேத்ராடனம் செல்ல வேண்டுமா?

e. எனது தாயாருக்கு உடம்பு ரீதியான பிரச்சனைகள் இருப்பதால் கயா போன்ற ஸ்தலத்திற்கு அவரால் வர இயலாது. அடியேனும் என் மனைவியும் மட்டும் சென்று கயா ஶ்ரார்த்தம் சேது ஸ்நானம் செய்யலாமா?

Vidwan’s reply:
வருஷாப்தீகம் முடிந்தபின் தான் கயா ஶ்ரார்த்தம் பண்ணவேண்டும். கயா ஶ்ராத்தம் பற்றி ஸ்ரீமத் இராமாயணத்திலே குறிப்பு இருக்கிறது “ஏஷ்ட வ்யா பஹவா புத்ரா: யத் ஏகோபி கயாம் வ்ரஜேத்” என்று. அதாவது பல புத்திரர்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் யாராவது ஒருத்தராவது கயா ஶ்ரார்த்தம் பண்ண மாட்டார்களா என்பதற்காக. ஆக கயா ஶ்ராத்தம் மிகவும் முக்கியமானது.

அக்ஷய வடம் என்பது அங்கு இருக்கும் புண்ணிய ஸ்தலம்

பொதுவாக வடதேச யாத்திரை போய்விட்டு வந்தால் தெற்கே ஒரு யாத்திரை போவது என்ற ஒரு வழக்கம் இருக்கிறது. நம் ஸம்ப்ரதாயத்தில் இராமேஶ்வரம் போகும் வழக்கில்லை, சேது ஸ்நானம் பண்ணுவது தான் இருக்கிறது. தனுஷ்கோடி போய் சேது ஸ்நானம் பண்ணும் வழக்கம் உண்டு அது அவசியம் பண்ண வேண்டும்.

இவை அனைத்தும் பண்ணிவிட்டு தான் க்ஷேத்ராடனம் போக வேண்டும் என்ற அவசியமில்லை.வருஷாப்தீகம் ஆன பின் க்ஷேத்ராடனம் போகலாம்.

தாயாரால் வர முடியாவிட்டாலும் பரவாயில்லை பிள்ளை போய் பண்ணிவிட்டு வரலாம்.


எவர்சில்வர் பாத்திரத்தில் பெருமாளுக்குத் தளிகை அம்சை செய்யலாமா? பொதுவாக எந்த மாதிரியான பாத்திரத்தில் அம்சை செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.

Vidwan’s reply:
பொதுவாக இரும்பு பாத்திரத்தில் அமுது செய்விக்கக்கூடாது என்று இருக்கிறது. ஆகையால் இரும்பில் பண்ணுவதாக இருந்தால் அதை வேறு பாத்திரத்தில் மாற்றி தான் அம்சை பண்ண வேண்டும்.

மேலும், எவர்சில்வரும் ஒரு இரும்பு பாத்திரமாகிறபடியால் அதில் நேரே அம்சை பண்ணுவது உசிதமாக இருக்காது. அதை வேறு பாத்திரத்தில் மாற்றி அமுது செய்விக்க வேண்டும்.வெங்கலம், வெள்ளி, பித்தளை, மற்றும் ஈயம் பூசப்பட்ட பாத்திரங்களில் அம்சை பண்ணலாம்.

முக்கியமாக, பெருமாளுக்கு அம்சை பண்ணும் பாத்திரம் நாம் உபயோகப்படுத்தும் பாத்திரமாக இருத்தல் கூடாது. உள் பாத்திரம் என்று சொல்வார்கள் அது நம் உபயோகத்திற்கு வராது.


பெருமாளுக்குச் சர்க்கரை சேர்த்த பாயசம் அம்சை பண்ணலாமா?

Vidwan’s reply:
பொதுவாக முன் காலத்தில் பெரியவர்கள் சர்க்கரை எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

இக்காலத்தில் சக்கரையில் தோஷம் இல்லை என்கிறார்கள் அதனால் தற்காலத்தின் படி உபயோகப்படுத்தலாம்.


மறுமணம் என்பது சரியா தவறா? ஶாஸ்த்ரம் என்ன கூறுகிறது?

Vidwan’s reply:
ஒரு பெண்ணுக்கு மறுமணம் என்பது கூடவே கூடாது என்று ஶாஸ்த்ரம் சொல்லுகிறது.

ஒரு ஆணுக்கு தர்மாநுஷ்டானம் பண்ணுவது முக்கியம் என்கிறபடியால், விவாஹம் இல்லாவிட்டால் தர்மாநுஷ்டானங்கள் பண்ண இயலாது என்பதினால் மறுமணம் செய்துக்கொள்ளலாம் என்று இருக்கிறது.


இதர சன்யாசிகள் நம் க்ருஹத்திற்கு அருகில் வந்தால் என்ன செய்ய வேண்டும்(அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கின்றோம்).

Vidwan’s reply:
இதர சன்யாசிகள் அதாவது ஸ்ரீவைஷ்ணவர் அல்லாத சன்யாசிகள் நம் க்ருஹத்திற்கு அருகில் வந்தால் ஒன்றும் பண்ணாமல் இருப்பதே நல்லது.

அவர்களைப் பார்க்கபோகாமல் இருப்பதே நல்லது. நமக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது அதனால் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

அப்படிப் பார்க்க நேர்ந்தால் கூட பெரிய அளவில் ப்ரணாமங்கள் பண்ணாமல் இருப்பது நல்லது.


ஸ்ரீராமநவமி அன்று ஏகாதசி போல் அனுஷ்டித்து அடுத்தநாள் துவாதசி தளிகை பண்ணனுமா, ஸ்ரீராமநவமி அன்று பெருமாள் திருவாரதனத்திற்கு என்ன தளிகை ஸமர்பிக்கணும்.

Vidwan’s reply:

ஸ்ரீராமநவமியன்று ஏகாதசி போல் அனுஷ்டித்து, அடுத்தநாள் துவாதசி தளிகை பண்ணுவது என இரண்டு ஸம்ப்ரதாயம் இருக்கிறது.

முனித்ரய ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீராமநவமியன்று ஏகாதசி போல் வ்ரதம் இருந்து மறுநாள் துவாதசி போல் பாரணை பண்ண வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. ஸ்ரீராமநவமியன்று வ்ரதம் அனுஷ்டிக்கின்றபடியால் சாதம் ஸமர்பிக்க முடியாது. ஆகையால் அன்று பெருமாள் திருவாரதனத்திற்கு, ஆத்தில் வ்ரதத்திற்கு என்ன சாப்பிடுவேமோ (பழங்கள் போன்றவை) அதை ஸமர்பிக்கலாம். மேலும், அன்று விசேஷமாக ஸ்ரீராமநவமிக்கு வடபருப்பு, பானகம் ஸமர்பிக்கும் வழக்கம் உண்டு. மறுநாள் துவாதசி போல் பாரணை தளிகை, அதில் பருப்பு திருக்கண்ணமுது என விசேஷமாக பண்ணி பெருமாளுக்கு அம்சை பண்ண வேண்டும்.

ஸ்ரீ ஸந்நிதி (அஹோபில மடம்) ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீராமநவமியன்றே பாரணை என்பது வழக்கம். அதாவது பெருமாள் திருவாராதனை எல்லாம் முடித்த பின்பு, மத்யானத்தில் பாரணை. ஆகையால் ஸ்ரீராமநவமியன்றே பாரணை போல் தளிகை பண்ணி, பருப்பு திருக்கண்ணமுது, வடபருப்பு, பானகம் என எல்லாம் விசேஷமாக ஸமர்பிக்க வேண்டும்.


என்னுடைய பெரியம்மா (என் பெரியப்பாவின் பத்னீ) ஆசார்யன் திருவடி தசமியன்று அடைந்துவிட்டார். அடுத்தநாள் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்கலாமா? சில மாதங்களாகவே நிர்ஜலமாய் வ்ரதம் அனுஷ்டித்து வருகிறேன்.

Vidwan’s reply:
எந்தத் தீட்டாக இருந்தாலும் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும் அதில் மாறுதலே கிடையாது.


அடியேனின் அகத்துக்காரரின் தமக்கை போன வாரம் பஞ்சமி திதி அன்று பரம பதித்து விட்டாள். விவாஹம் ஆகாதவள்.அடியேனுக்கும், அடியேனின் பசங்களுக்கும் எத்தனை நாள் தீட்டு. பெருமாள் விளக்கு ஏற்றுவது, திருவாராதனம் பண்ணுவதெல்லாம் தீட்டு முடிந்த பிற்பாடு தான் ஆரம்பிக்க வேண்டுமா?. அடியேன் அகத்துக்காரரும் 11 மாதங்கள் முன்பு பரம பதித்து விட்டார். அடியேன் விளக்கமாக பதில் எதிர்பார்க்கிறேன்.

Vidwan’s reply:
கன்யா மரண விஷயத்தில் ஞாதிகளுக்கும் 10 நாள் தீட்டு என்று புத்தகங்களில் காணுகிறோம். ஆனால் கல்யாணமே ஆகாமல் இருக்கும் விஷயத்தில் கன்யா மரணமா என்று சொல்லத் தெரியவில்லை. ஒன்றிரண்டு கேள்விப்படுவதில் பெரியவர்கள் மூன்று நாள் தான் தீட்டு காத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. விவாஹம் ஆகாத ஸ்த்ரீ விஷயத்தில் பர்த்தாவிற்கு மூன்று நாள் தீட்டு ஆகின்றபடியினால், பாரியைக்கும் மூன்று நாள் தீட்டு.

விவாஹம் ஆன ஆண் பிள்ளையாக இருந்தால், அத்தை ஆகின்றபடியால் மூன்று நாள் தீட்டு. விவாஹிதையான பெண் பிள்ளையாக இருந்தால் ஒன்றரை நாள் தீட்டு. அவிவாஹிதையான ஆணுக்கோ, பெண்ணுக்கோ அத்தை போனால் ஸ்நானம் மட்டுந்தான்.


புருஷர்கள் (ஆண்கள்) திருமண் இட்டுக்கொள்ளும்போது ஸ்ரீ சூரணத்திற்குத் தாயார் குங்குமத்தை இட்டுக்கொள்ளலாமா?

Vidwan’s reply:
மஞ்சள் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்வதுதான் விசேஷம். மஞ்சள் கிடைக்காவிட்டால் ஸ்ரீசூர்ணத்திற்கு பதில், தாயார் குங்குமம் இட்டுக்கொள்ளலாம்.


சாளக்கிராம மூர்த்தி மற்றும் ஆசார்யனின் பாதுகைக்கு மடி ஆசாரமாக திருமஞ்சனம் செய்தல் வேண்டுமா? இல்லாவிட்டால் அபச்சாரம் ஆகும் என்று கேள்விபட்டுள்ளேன். ஒரு ப்ரபந்னன் அப்படி மடி ஆசாரமாக செய்யாவிட்டால் அது அவனது மோக்ஷத்திற்கு தடையாகுமா? அல்லது பெருமாள் சிறு சிக்ஷை மட்டும் கொடுத்து மோக்ஷம் அளிப்பாரா? அடியேனால் மடி ஆசாரம் முழுமையாக கடைபிடிக்க முடியவில்லை என்பதால் இந்த சந்தேகம், இயன்ற அளவு முயற்சிக்கிறேன்.

Vidwan’s reply:
சாளக்கிராம மூர்த்தி மற்றும் ஆசார்யனின் பாதுகைக்கு மடி ஆசாரமாக திருமஞ்சனம் செய்தல் வேண்டும் இல்லாவிட்டால் அபச்சாரம் ஆகும் என்பது சரிதான். பெருமாளைத் தொட்டு திருமஞ்சனம் செய்வதால் மடி ஆசாரமாக செய்யாவிடில் அது 32 அபச்சாரத்தில் ஒன்றாக ஆகிவிடும். ஆகையால் அதை முடிந்தளவு தவிர்த்தல் வேண்டும்.

அடியேனால் மடி ஆசாரம் முழுமையாக கடைபிடிக்க முடியவில்லை இயன்றளவு முயற்சிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் அதுவே ரொம்ப நல்ல விஷயம் முடிந்தளவு ஆசாரமாக செய்யுங்கள்.


வெளியில் இருந்து பூக்கள் வாங்கும் சமயம் அவர்கள் எந்த அளவு ஆசாரமாக இருக்கின்றார்கள் என்று தெரியாது. பெருமாளுக்கு ஸம்பர்பிக்கும் முன் வெளியில் இருந்து வாங்கிய புஷ்பங்களை சுத்தி செய்ய ஏதேனும் மந்திரம் உண்டா? அல்லது நீர் தெளித்தால் போதுமா?

Vidwan’s reply:
புஷ்பங்கள் கடையிலிருந்து வாங்குவதைக் காட்டிலும், நாமே ஆத்திலிருந்து எடுத்து ஸமர்பிப்பது விசேஷம் அல்லது நாமாகவே எங்காவது போய் பூ பறித்து வந்து ஸமர்பிப்பதும் விசேஷம்.

கடையில் பைசா கொடுத்து வாங்குவது க்ரயக்ரீதம் என்று பெயர், அது சாதாரனமானது. அப்படி வாங்கினால் “பூ: புவ: ஸ்வ:” என்றோ அல்லது திருவஷ்டாக்ஷர மந்திரம் சொல்லியோ ஜலத்தால் ப்ரோக்ஷணம் பண்ணி எடுத்துக்கொள்ளலாம். ப்ரோக்ஷணம் செய்யும் போது நிறைய ஜலம் சேர்க்கக்கூடாது ஏனென்றால் புஷ்பத்தில் நிறைய ஜலம் சேர்க்கக்கூடாது என்றிருக்கிறது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top