சோபகிருது – கார்த்திகை – ஆசாரஅனுஷ்டானம்


க்ரஹண காலத்தில் சில நக்ஷத்ரங்களுக்கு ஏற்படும் தோஷத்திற்குப் பரிகாரம்/ஶாந்தி ஹோமம் செய்கிறார்கள். நம் ஸம்ப்ரதாயத்தின்படி அவைகளை எவ்வாறு செய்யவேண்டும்? பெரியவர்களின் வழக்கம் என்ன?

Vidwan’s reply:

க்ரஹண காலத்தில் நம் நக்ஷத்ரங்களுக்குத் தோஷம் என்று பரிகாரம் செய்யவேண்டி வந்தால் நம் ஸம்ப்ரதாயத்தில் பரிகாரம் என்பது அகத்தில் பெருமாள் நித்யம் ஏற்றும் விளக்கு பக்கத்தில் மற்றொரு விளக்கு ஏற்றி பெருமாளைச் சேவிப்பது என்று வைத்துள்ளோம். வேண்டுமென்றால் க்ரஹணம் முடிந்த பிறகு , இரவு நேரமாக இருந்தால் மறுநாள் கோவிலுக்குச் சென்று எம்பெருமானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வரலாம்.


வயதில் சிறியவர்கள் பரமபதித்தால் அந்தப் பித்ருசேஷத்தை பெரியவர்கள் ஸ்வீகரிப்பதில்லை என்று இருக்கிறது.எல்லாமே ஆத்மா எனறிருக்கும்போது சின்னவர்கள் பெரியவர்கள் என்ற பேதம் ஏன் ஏற்படுகிறது. என்னிடம் சிலர் கேட்டார்கள்.அவர்களுக்காக கேட்கிறேன்.

Vidwan’s reply:

வயதில் சிறியவர்கள் பரமபதித்தால் பெரியவர்கள் பித்ரு சேஷம் ஸ்வீகரிப்பதில்லை. ஆத்மா என்று பார்த்தால் எல்லாம் ஒன்றுதான் இருப்பினும் அப்பா அப்பாதான் பிள்ளை பிள்ளைதான், சிறியவர்கள் சிறியவர்கள்தான் பெரியவர்கள் பெரியவர்கள்தான். ஆகையால் பெரியவர்கள் ஸ்வீகரிக்கும் வழக்க்கமுமில்லை, ஸ்வீகரிக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை.


ஏகாதசி துவாதசி அமாவாஸை ஆகிய நாட்களில் அரிசிக்குப் பதிலாக சிறு தானியங்கள்- Millets (இதில் பலவகை உள்ளது)) சேர்த்துக் கொள்ளலாமா? ஏகாதசியன்று இந்த சிறு தான்யங்களை எப்படி உடைப்பது? மேலும் எந்தெந்தச் சிறு தான்யங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

Vidwan’s reply:
ஏகாதசி அன்று சிறுதானியங்களை உபயோகப் படுத்தி ஏதாவது பதார்த்தங்கள் செய்தால் அதை உடைக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அதை அப்படியே உபயோகிக்கலாம். அதாவது உடைத்து உபயோகப்படுத்த வேண்டும் என்பது அரிசியைப் பொருத்த மட்டும் தான். பாக்கி சிறுதானியங்களுக்கு உடைக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.

துவாதசி அமாவாசை அன்று சிறு தானியங்கள் சேர்த்துக் கொள்ளலாமா என்றால் , ப்ரதானமான ப்ரசாதமாக சிறுதானியம் பண்ணலாமா என்று கேட்டால் அப்படிப் பண்ண வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. சாதம் என்பதுதான் முக்கியமாக அன்றைக்குப் பண்ண வேண்டும். சிறுதானியம் தான் சாப்பிட முடிகிறது, சர்க்கரை நோய், அன்னம் சாப்பிட முடியவில்லை என்று இருந்தாலும் கொஞ்சமாக பரிசேஷனத்திற்கு தேவைப்படுகிற அளவு துளி அன்னம் சேர்த்துக்கொண்டு அதற்குமேல் சிறுதானியங்களைச் சாப்பிடலாம் என்று தோன்றுகிறது.

சிறுதானியங்களில் கேழ்வரகு திணை, குதிரைவாளி இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.


க்ரஹண கால தர்ப்பணத்தில் ஆசமனம் பண்ணவேண்டுமா?

Vidwan’s reply:

க்ரஹண காலங்களில் தர்ப்பணம் பண்ணுவதற்கு முன் ஆசமனம் பண்ணவேண்டும். அப்படிச் செய்வதால் தீர்த்தம் உட்கொண்டதுபோல் ஆகாது. மேலும் எந்தக் கர்மா செய்தாலும் அதற்கு முன்பும், அக்கர்மா செய்தபின்பும் ஆசமனம் பண்ணவேண்டும். இவையெல்லாம் தீர்த்தம் உட்கொண்டது என்ற கணக்கில் சேராது தோஷமும் ஆகாது. நன்றாக கர்மா செய்வதற்கு முன்னும் பின்னும் ஆசமனம் செய்யவேண்டும்.


க்ரஹண காலத்தில் ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும்? முக்யத்வம் விளக்கவும்.

Vidwan’s reply:

க்ரஹண காலம் புண்யகாலம் ஆனபடியாலும் மேலும் க்ரஹண கால தர்ப்பணம் என்பது நிமித்த காரணமானபடியாலும் சாதாரண காலத்தில் செய்யும் தர்ப்பணத்தை விட க்ரஹண கால தர்ப்பணம் கூடுதல் பலன் தரும் என்கிறபடியால் அவசியம் பண்ணவேண்டும்.


க்ரஹணம் சம்பவிக்கும் நாளில் புண்ய காலத்திற்குப் பிறகு குளித்தபின் தர்ப்பணம் செய்பவர் மற்றும் தர்பணம் செய்யாதவர் முக க்ஷௌரம் (முடி திருத்தம்) செய்து கொள்ளலாமா? தர்ப்பணம் செய்தவர்கள் இரவில் பலகாரம் செய்ய வேண்டுமா? உதாஹரணத்திற்கு சமீபத்தில் முடிந்த சந்திர க்ரஹணம் சம்பவம்.

Vidwan’s reply:

க்ரஹணம் தர்ப்பணத்திற்கு பலகாரமில்லை ஆகையால் பலகாரம் பண்ணவேண்டிய அவசியமில்லை. க்ரஹணத்திற்குப் பிறகு அன்றைய தினமே தர்ப்பண தினமாக இருக்கின்றபடியாலே சாதாரணமாக புண்யகாலமாக இருக்கிறபடியால் க்ஷௌரம் பண்ணக்கூடாது. மறுநாள் என்றால் ஒருநாள் விட்டு மறுநாள் பண்ணுவதென்றால் பண்ணிக்கொள்ளலாம் அதுவே எப்போதும் பிரதமையாக இருக்கும் பிரதமை நாளில் க்ஷௌரம் பண்ணும் வழக்கமில்லை.

முக க்ஷௌரம் என்று ஶாஸ்த்ரத்தில் இல்லை அப்படி பண்ணிக்கொள்ளகூடாது என்பதுதான் ஶாஸ்த்ரம்.


நான் 43 வயது ப்ரம்ஹச்சாரி. எனக்கு ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது, பரந்யாஸம் ஆகவில்லை. நான் பரமபதித்த பிற்கு அந்திம க்ரியைகள், ஶ்ராத்தம் செய்ய யாருமில்லை. நான் இப்போதே எனக்கு ஶ்ராத்தம் செய்யலாமா? செய்யலாம் என்றால் ஒருமுறை செய்தால் போதுமா அல்லது என் ஆயுட்காலம் வரை செய்யவேண்டுமா?

Vidwan’s reply:

சீக்கிரம் பரந்யாஸம் பண்ணிக்கொள்ளவேண்டியதுதான். நீங்கள் பரமபதித்தற்குப் பின் அந்திம ஸம்ஸ்காரம் உங்கள் நெருங்கிய பந்துக்கள் இல்லையென்றால் யாராவது தூரபந்துக்கள் பண்ணுவார்கள். தனக்குத்தானே ஶ்ராத்தம் பண்ணும் வழக்கமும் கிடையாது அப்படிச் செய்யவும் கூடாது


1. திருவாராதனம் முடித்தபின் கொடுக்கப்படும் பெருமாள் தீர்த்தம் என்பது என்ன?”

A) அது தப்ரதிக்ரஹ பத்ரம் என்று ஒவ்வொரு ஆசனத்திலு(அதாவது அர்க்யம், பாத்யம்) நாம் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கும் ஸ்நானாசன தீர்த்தமா? திருமஞ்சன தீர்த்தமல்லாத ஸ்நானாசன தீர்த்தமா? அல்லது இரண்டும் கலந்த தீர்த்தமா? அப்படித் தரும் தீர்த்தத்தை என்ன செய்ய வேண்டும்?

B) பெருமாளுக்குப் பாலால் திருமஞ்சனம் செய்தால் அந்தப் பாலை என்ன செய்யவேண்டும்?

2. எங்கள் அகத்தில் குழந்தைகள் பள்ளி/கல்லூரிக்குச் செய்வதால் தளிகை சீக்கிரம் பண்ணிவிடுவார்கள். அதனால் நாங்கள் திருவாராதனத்திற்கு என்று தனியாக அமுது தயார்செய்கிறோம். இப்படிப்பட்ட சமயங்களில் போஜ்யாசனத்திற்குத் தளிகை எப்ப்டி ஸமர்ப்பிப்பது என்று தெளிவிக்கவும்.

Vidwan’s reply:

A. திருவாராதனத்திற்குப் பிறகு கொடுக்கப்படும் தீர்த்தம் ஸ்நானாசன தீர்த்தம்தான். அதாவது பெருமாளுக்குத் திருமஞ்சனம் கண்டருளிய தீர்த்தம்தான். அதில் அர்க்ய, பாத்ய என்று இதர தீர்த்தங்கள் கலந்திருந்தாலும் தவறில்லை. அந்தத் தீர்த்ததை என்ன செய்வது என்று கேட்டால் அதை ஸ்வீகரிக்க வேண்டியதுதான்.

B. பெருமாளுக்குப் பால் திருமஞ்சனம் செய்தால் அந்தப் பாலை நாம் ஸ்வீகரிக்கலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் அது விசேஷமாகும்.

சீக்கிரமாக முதலில் குழந்தைகளுக்காகத் தளிகை செய்துவிட்டால் கூட, இரண்டாவது தளிகைக்கு ப்ரசாதம் மட்டும் செய்து பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணினாலும் தவறில்லை. ப்ரசாதத்துடன் தயிரும் சேர்த்து கண்டருளப்பண்ணலாம். அப்படிச் செய்வது பெரியவர்கள் ஆசாரத்திலும் இருக்கிறது.


அடியேனின் பையனுக்கு சமீபத்தில்தான் உபநயனம் ஆனது. அவனுக்கு அடியேன் சந்தியாவந்தனம் கற்றுக்கொடுத்துள்ளேன். அவனுக்கு ஒரு Reference போல் கொடுக்க சந்தியாவந்தன மந்திரங்கள் எங்கே கிடைக்கும்? எப்படிச் செய்யவேண்டும் எந்த திசை என்ற விளக்கங்களுடன் ஏதேனும் புத்தகம் உள்ளதா? நாங்கள் ஸ்ரீஸந்நிதி சிஷ்யர்கள்.

Vidwan’s reply:

சந்தியாவந்தனம் விளக்கங்களோடு கூடிய புஸ்தகம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் பௌண்டரீகபுரம் ஆஶ்ரமத்தில் கிடைக்கிறது அதை வாங்கிக்கொடுக்கலாம்.


அடியேன் கணவர் சமீபத்தில் பரமபதித்து விட்டார்.அவருக்கு வருஷாப்திகம் வரை என் மச்சினர் பிள்ளை காரியம் செய்கிறான் என்றும் அதன்பின் வரும் ஶ்ராத்தம் யார் செய்யலாம் என்ற என் கேள்விக்கு அடியேனுக்கு பேரன் இருக்கிறானா என்று கேட்டிருந்தீர்கள். எனக்கு இரண்டு பெண்கள்.சிறிய பெண் மூலமாக ஒரு பேரன் இருக்கிறான்.அந்த என் பேரனுக்கு வயது 12. உபநயனம் ஆகிவிட்டது.

Vidwan’s reply:

ஒருவருக்கு (அது ஸ்த்ரீயானாலும், புருஷனானாலும்) அவர்கள் இறந்த பிறகு கைங்கர்யங்கள் பண்ணவேண்டியது அவர்களுக்குப் பிறந்த ஆண் பிள்ளைகள். பிள்ளையில்லை என்றால் பெண்ணின் பிள்ளைகள் முக்கியமாக மூத்த பிள்ளை பண்ணவேண்டும்.

இந்த விஷயத்தில் உங்கள் கணவரின் கைங்கர்யத்தை உங்கள் மச்சினர் பிள்ளை பண்ணுகிறார் என்று சொல்லியிருக்கிறீர்கள் அவர் நேரே செய்திருக்க மாட்டார் உங்களிடம் கைப்புல் வாங்கிதான் செய்திருப்பார். இதை அப்படியே தொடர்ந்து பண்ணுவது தான் ந்யாயம்.


அகத்துப் பெருமாளுக்கு அகர்பத்தியை ஏற்றலாமா?

Vidwan’s reply:

அகத்துப் பெருமாளுக்கு அகர்பத்தி ஏற்றி வைக்கலாம்.


அமாவாஸை அன்று கோலம் போடலாமா?

Vidwan’s reply:

அமாவாஸை அன்று கோலம் போடலாம்.


ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் இவை இரண்டும் வேவ்வேறு ஆசார்யர்களிடம்/மடங்களில் பண்ணிக்கொள்ளலாமா? யாரை ஆசார்யனாக கொள்ளவேண்டும்? அப்படிச் செய்தால் பண்டிகை போன்ற காலங்களில் யாருடைய ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்ற வேண்டும்?

Vidwan’s reply:

ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் இரண்டும் வெவ்வேரிடத்தில் ஏற்பட்டால் இரண்டு ஆசார்யர்களையும் அவசியம் ஆசார்யனாக கொண்டாட வேண்டும். இது ஒரு ஸ்த்ரீக்கு நேர்ந்திருந்தால் அவள் எந்த அகத்தில் கல்யாணம் பண்ணிக் கொண்டு போயிருக்கிறாளோ அங்கு என்ன சம்ப்ரதாயத்தை பின்பற்றுகிறார்களோ அதையே அவளும் பின்பற்ற வேண்டும். உதாரணத்திற்கு ஒரு ஸ்த்ரீக்கு திருமணத்திற்கு முன்பு ஆபத் பரந்யாஸம் ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம், அதற்குப் பின் அவளுக்கு வேறு ஒரு சம்பிரதாயத்தில் இருக்கின்ற குடும்பத்தில் திருமணம் ஆகிறது, அந்தக் குடும்பத்து ஆசார்யனிடம் ஸமாஶ்ரயணம் ஆகிறது என்றால், அந்தக் குடும்பத்தில் அந்த சம்ப்ரதாயத்தில் எந்த மாதிரி ரீதிகள் பண்டிகைகள் இருக்கின்றதோ அப்படித்தான் கொண்டாட வேண்டும்.


1. அகத்தில் பெருமாள் சந்நிதியில் எத்தனை விளக்கு ஏற்றவேண்டும்? 2 விளக்குகளா அல்லது ஒற்றை விளக்கு ஏற்றாலாமா?

2. நம் முன்னோர்களின் படங்களை பெருமாள் சந்நிதியில் வைக்கலாமா?

Vidwan’s reply:

அகங்களில் பெருமாள் சன்னதியில் ஒரு விளக்கு ஏற்றி வைத்தால் போதும். ஆசையாக இருந்தால் இன்னொரு விளக்கும் ஏற்றி வைக்கலாம் அதில் தப்பு ஒன்றும் கிடையாது. நித்தியம் ஏற்றும் விளக்கு எண்ணெய் குத்தி ஏற்றும் விளக்காகவும் விசேஷ காலங்களில் இன்னொரு நெய் விளக்கை ஏற்றுவதும் சில க்ருஹங்களில் வழக்கத்தில் உள்ளது.

முன்னோர்கள் படங்களைப் பெருமாள் சன்னதியில் வைப்பது என்பது சன்னதி பெரிய இடமாக இருந்தால், பெருமாள் படங்கள் எல்லாம் மாட்டியிருந்தால் அதற்குக் கீழ் இருக்கின்ற இடத்தில் இந்தப் படங்களை மாட்டலாம். முன்னோர்கள் படம் ஆசார்யர்கள் படம் இவையெல்லாம் பெருமாள் படங்களுக்குக் கீழே மாட்டலாம்.


1. கார்த்திகை மாதம் முழுவதுமே இரண்டு விளக்கேற்றி சாயங்காலம் வேளையில் வாசலில் வைக்கவேண்டுமா?

2. பாஞ்சராத்ர தீபத்திற்கு முதல் நாள் நித்யம் ஏற்றும் இரண்டு விளக்குகளைத் தவிர கூடுதலாக விளக்கேற்ற வேண்டுமா? ஶாஸ்த்ரப்படி இது சரியா? அன்றைய தினம் தானே அண்ணாமலையார் தீபமும் வருகிறது? கார்த்திகை தீபத்திற்கு மறுநாளும் திருக்கார்த்திகை போல் நிறைய விளக்கேற்ற வேண்டுமா?

Vidwan’s reply:

காத்திகை மாதம் முழுவதும் சாயங்கால வேளையில் இரண்டு விளக்கேற்றி வாசலில் வைப்பதென்பது வழக்கத்தில் உள்ள ஒன்றாகும்.

பாஞ்சராத்ர தீபத்திற்கு முதல் நாள் பரணி தீபம் என்று கூறுவர். அன்றைய தினமும், பாஞ்சராத்ர தீபத்தின் அடுத்தநாளும் இரண்டுக்கு மேற்பட்ட தீபங்களை ஏற்றுவர். இவையெல்லாமே வழக்கத்தில் இருப்பதுதான் ஏற்றுவதால் தவறொன்றுமில்லை.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top