சோபகிருது – மாசி – ஆசாரஅனுஷ்டானம்


துவாதிசி, சூரிய உதயத்திற்கு முன் முடிந்து விட்டால் பாரணை எப்போது செய்ய வேண்டும்? சூரிய உதயத்திற்கு முன்னதாகவா அல்லது சாதாரண துவாதசி போலா?

Vidwan’s reply:

சூரிய உதயத்திற்கு முன் என்னவானாலும் எந்த ஒரு ஆகாரத்தையும் பண்ணக்கூடாது. அதனால் சூரிய உதயத்திற்கு முன் துவாதசி முடிந்தால் கூட உதயத்திற்குப் பின்தான் பாரணை என்று வரும். அப்பொழுது அந்தத் துவாதசி திதி இல்லாத படியினால் எல்லா பாரணைகளையும் போல் ஒரு ஆறு நாழிகைக்குள் பண்ணால் போதும். உதயத்திற்கு முன் பாரணை என்பது வரவே வராது.


ஆழ்வார், ஆசார்யார் உற்சவ திருமேனிகளுக்கு வர்ண வஸ்த்ரங்கள் சாற்றலாமா?

Vidwan’s reply:

ஆழ்வார், ஆசார்யார் உற்சவ திருமேனிகளுக்குப் பட்டு வஸ்த்ரங்கள் வர்ணத்தில் சாற்றலாம்.


கோவிலில் பெருமாளுக்குத் திருமஞ்சனம் நடைபெறும் பொழுது, பட்டாச்சார் ஸ்வாமி இளநீரை ஒரு வட்டிலுக்கு மாற்றாமல் அப்படியே பெருமாள் திருமேனியில் சேர்க்கிறாரே? இதற்கு ஏதும் காரணம் உண்டா?

Vidwan’s reply:

ஆம். காரணம் இருக்கின்றது. இளநீரை ஒரு பாத்திரத்தில் மாற்றினால் அது அசுத்தம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் பெருமாளுக்குப் பாத்திரத்தில் மாற்றாமல் அப்படியே சேர்க்கிறார்கள்.


பெருமாளுக்குத் திருமஞ்சனத்தின் பொழுது ஒரே ஒரு மஞ்சள் அல்லது வெள்ளை வஸ்திரம் மட்டுமே சாற்ற வேண்டும் என்று ஆகம ஶாஸ்திரத்தில் ஏதேனும் உள்ளதா ?

Vidwan’s reply:

ஆகம ஶாஸ்திரத்தில் ஒரே ஒரு வஸ்த்ரம்தான் சாற்றவேண்டும் என்று இல்லை. ஆனால் இது சௌகர்யத்திற்காக வந்தது. பெருமாள் திருமேனிக்கு நன்றாகத் திருமஞ்சனம் பண்ண வேண்டும் என்றால், ஏகப்பட்ட வஸ்த்ரங்கள் சாற்றி இருந்தால் பெருமாள் திருமேனிக்கு எப்படி நன்றாகத் திருமஞ்சனம் பண்ண முடியும். அதேபோல் ஒரே வஸ்த்ரத்துடன் ஸ்நானம் செய்யக்கூடாது என்கின்ற நியமங்கள் நமக்குத் தான். ஶாஸ்திரங்கள் எல்லாம் நமக்குத்தான். ஶாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டவர் இல்லையே பெருமாள். அதனால் ஏதோ பெயருக்கு ஒரு வஸ்திரம் நனையக்கூடியதாக ஒரு வஸ்திரம் ஒன்று சாத்திவிட்டு திருமஞ்சனம் செய்வார்கள்.


க்ருஹத்தில் நடைபெறும் விழா அல்லது சடங்குகளின் பொழுது அதை நடத்தி வைக்கும் ப்ருஹஸ்பதி கர்த்தாவை விட வயதில் இளையவராக இருந்தாலும் கர்த்தா சம்பாவனையின் பொழுது அவரை தரையில் விழுந்து சேவிக்கலாமா?

Vidwan’s reply:

ப்ருஹஸ்பதி கர்த்தாவை விட வயதில் இளையவராக இருந்தாலும் கர்த்தா சம்பாவனையின் பொழுது அவரை தரையில் விழுந்து சேவிக்கலாம்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் மற்றொரு ஸ்ரீவைஷ்ணவரை இளையவராக இருந்தால் கூட சேவிக்கலாம். ஆனால் அவர் வயதில் சின்னவராக இருந்தால் அபிவாதனம் பண்ண வேண்டாம். அவரும் ப்ரத்யபிவாதனம் பண்ண மாட்டார். ப்ரத்யபிவாதனம் என்றால் ஆசீர்வாதம். ஆனால் சேவிப்பது நியாயம்.


1) திருவாராதனத்தில் சாளக்கிராம பெருமாளுக்குச் சந்தனத்தோடு சேர்த்து குங்குமத்தையும் ஸமர்ப்பிக்கலாமா?

2) திருவாராதனத்தில் உள்ள ஸேவாகாலம் (திருப்பாவை, திருப்பல்லாண்டு போன்ற ஆழ்வார் பாசுரங்களை அனுசந்தித்தல்) வடகலை ஸம்பிரதாயத்தில் உள்ளதா?

3) திருமலையிலும் திருச்சானூரிலும் உள்ள கோயில் மதில் சுவர்களில் கருடனோடு சேரந்தோ அல்லது தனியாகவோ சிங்கத்தின் சிலைகள் உள்ளன.

Vidwan’s reply:

1. குங்குமம் ஸமர்ப்பிக்க வேண்டும் என்பதாக எங்கேயும் சொல்லவில்லை. அதனால் அதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சந்தனம் மட்டுமே சொல்லி இருக்கிறது. முன்பே நாம் ஒரு விஷயம் பார்த்து இருக்கிறோம். குங்குமம் என்பது அசல் கிடையாது. அதனால் சந்தனம் ஸமர்ப்பித்தால் போதும். குங்குமம் என்பது நீங்கள் குங்குமப் பூவை சொல்கிறீர்களா என்று ஒரு சந்தேகம் இருக்கிறது. குங்குமப்பூவாக இருந்தால் அதை இழைத்து சந்தனத்துடன் சேர்த்து தாராளமாக ஸமர்ப்பிக்கலாம். இல்லை கடையில் விற்கும் குங்குமமாக இருந்தால் அதைப் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

2. திருவாராதனத்தில் உள்ள ஸேவாகாலம் (திருப்பாவை, திருப்பல்லாண்டு போன்ற ஆழ்வார் பாசுரங்களை அனுசந்தித்தல்) வடகலை ஸம்பிரதாயத்தில் உள்ளது. எல்லா இடத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. எல்லோர் அகத்திலும் திருப்பாவை இல்லாமல் திருவாராதனை கிடையாது.

உங்களுக்கு ஏன் இந்தச் சந்தேகம் வந்தது என்று தெரியவில்லை. ஏனென்று கேட்டால் எல்லா ஸம்ப்ரதாயத்திலும் திருவாராதனத்தின் போது இப்படிதான் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா அகங்களிலும் திருப்பல்லாண்டு திருப்பாவை அதேபோல் சிற்றஞ்சிறுகாலே சாற்றுமுறை இல்லாமல் திருவாராதனமே கிடையாது.

3. சிம்மம் என்பது ஶ்ரேஷ்டம் என்று பொருள் கொடுக்கக்கூடிய சொல். சிம்மாசனம், புருஷசிம்மம் என்றெல்லாம் சொல்லுவது போல். மிருகங்களிலே ஶ்ரேஷ்டமான ஒரு மிருகம், ராஜாவாக இருக்கக்கூடிய ஒரு மிருகம், சிம்மம். பெருமாள் என்பவர் உயர்ந்தவர் ஶ்ரேஷ்டமானவர், ராகவசிம்மம் என்று பெருமாளுக்குத் திருநாமம் இருக்கின்றது. அவருடைய பரிவாரங்கள் எல்லாமே மிக உயர்ந்தது.

கருத்மான் நமக்குத் தெரியும். மிருகங்களை வாகனமாகக் கொண்ட சிம்ம வாகனம் ஶ்ரேஷ்டம். அந்த அர்த்தத்தில்தான் இருக்கின்றதே தவிர வேறு தேவதாந்த்ர பரமாக இல்லை. தேவதாந்த்ரங்களுக்குச் சிம்மம் இருந்தால் அதை இங்கு உபயோகிக்கக் கூடாது என்று கிடையாது. ஶ்ரேஷ்டமான வஸ்து வைக்க வேண்டும் என்ற ரீதியில் வைத்திருக்கிறார்கள். அவ்வளவே. அதேசமயம் கருத்மானை மற்ற கோவில்களில் வைக்கக் கூடாது. ஏனென்றால் கருத்மான் என்பவர் ஒரு நித்யசூரி. வேதத்திலே சொல்லப்பட்டவர். பகவானுக்கு வாகனமாக புராணங்களிலே சொல்லப்பட்டவர். மஹாபாரதம் , அவருடைய திவ்ய சரித்ரம் முதலானவற்றில் அவர் பகவானுக்கு மட்டுமே தாசனாக, வாகனமாக இருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றார் என்றெல்லாம் இருக்கின்றது. அதனால் அதை மற்றவர்கள் வைக்கக் கூடாது. அதேசமயம் சிம்மம் அது ஶ்ரேஷ்டமானது என்கின்ற அர்த்தத்தில் அதை கோவில்களிலே வைக்கலாம்.


அந்தர்யாமி பெருமாளுக்கும், ஆவேச அவதார பெருமாளுக்கும் என்ன வித்தியாசம்? எங்கு, எப்படிப் பெருமாளின் ஆவேசம் நிகழ்கிறது?

Vidwan’s reply:

அந்தர்யாமி பெருமாள் என்றால் எல்லோருக்கும் உள்ளே அதாவது மனுஷ்யர்கள் என எல்லாவற்றிலும் உள்ளே பகவான் ஒரு திவ்ய ரூபத்தை எடுத்துக்கொண்டுள்ளார். யோகம் பண்ணுவதாக இருந்தால் இந்த அந்தர்யாமி பெருமாளை த்யானம் பண்ணலாம். பொதுவாகவே பெருமாள் எல்லோருக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறான்.

ஆவேச அவதாரம் என்பது பெருமாள் ஒன்றன் உள்ளே தன் சக்தியையோ, ஸ்வரூபத்தையோ விசேஷமாக ஆவேசம் பண்ணுவார் என்பதாகும். அந்தர்யாமி என்பது பொதுவானது. ஆவேசம் என்பது சில விசேஷ வ்யக்திகளிடம் எம்பெருமானானவன் தன் சக்தியை ஆவேசம் பண்ணி அதன்மூலமாக விசேஷமான காரியங்களைச் சாதிப்பார்.உ.தா பரசுராம அவதாரம். எல்லோருக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார் ஆனால் பரசுராமரின் உள்ளே பெருமாள் ஆவேசம் பண்ணப்படியால்தான் இத்தனை அபூர்வமான காரியங்களைச் செய்யமுடிந்தது. அதேபோல் வ்யாஸர் அவதாரம். எல்லோரும் ஞானி ஆனால் வ்யாஸர் வேதங்களைத் தொகுத்து,மஹாபாரதத்தை அமைத்து, வேதாந்த சூத்ரங்களைப் பண்ணி, பூராணங்களைத் தொகுத்து என அநேகங்களைப் பண்ணியிருக்கிறார். இவைகளை மனிதர்களால் பண்ணமுடியாது. இவை சாத்தியப்பட்டது பகவத் ஆவேசத்தினால். அப்படியென்றால் எம்பெருமான் தன் அம்சத்தைக் கொண்டு விசேஷமான சக்திகளையெல்லாம் உபயோகித்து அவர் மூலமாக பல காரியங்களை நடத்துகின்றார் என்று அர்த்தமாகும். இதற்குப் பெயர்தான் ஆவேச அவதாரமாகும்.


12. 1.அப்பா பரமபதித்தபின் பிள்ளை அமாவாசை/மாதப்பிறப்பு தர்ப்பணம் எப்போது தொடங்கவேண்டும்.
2.பெண் மட்டும் இருந்தால் அப்பா அம்மாவுக்கு மாஸுகம், ஶ்ராத்தம் செய்ய வேண்டாம் என்று ஒரு பிரபல உபந்யாஸகர் சொல்கிறார். சரியான விளக்கம் அனுக்ரஹிக்கவும்.

Vidwan’s reply:

1. ஒருவர் பரமபதித்தபின் சபிண்டிகரணத்திற்குப் பின் மாசப்பிறப்போ, அமாவாசையோ எது வந்தாலும் தொடங்கலாம். மேலும் சபிண்டிகரணம் தர்ப்பண தினத்தில் வந்தால், சபிண்டிகரணம் பண்ணிவிடு, சோதகும்பம் பண்ணிவிட்டு தர்ப்பணமும் அன்றையே தினமே ஆரம்பிக்க வேண்டும்.

2. பெண் மட்டும் இருந்தால் அப்பெண்ணின் பிள்ளை, அதாவது தௌஹித்ரன் (பேரன்) அவன் கட்டாயம் எல்லாக் காரியங்களைச் செய்யவேண்டும்.


பித்ரு தர்ப்பணத்தின்போது முதலில் எள்ளைக் கையில் எடுத்து பிறகு அதில் தீர்த்தம் சேர்த்து விடுவதுதான் சரியான முறையா? அல்லது தீர்த்தத்தோடு எள்ளை முதலிலேயே கலந்து, பிறகு அந்த எள் சேர்த்த தீர்த்தத்தையே புக்னத்தின் மேல் விடலாமா?

Vidwan’s reply:

தர்ப்பணத்தின் போது முதலில் எள்ளை கையில் எடுத்து, அதில் தீர்த்தம் சேர்த்து, மந்திரத்தைச் சொல்லி அதை அந்தப் புக்னத்தில் ஸமர்ப்பிப்பார்கள்.


திருவேங்கடமுடையான் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு, பாலாஜி என்ற பெயர் உள்ளது. அந்தப் பெயரின் உண்மையான அர்த்தம்/காரணம் என்ன? இந்தப் பெயரை வைத்து இன்னும் சிலர் அவரை முருகன் என்றும் சக்தி என்றும் சொல்வதைக் கேட்பதற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

Vidwan’s reply:

க்ருஷ்ணாவதாரத்தில் குழந்தையாக இருந்த கண்ணனே திருமலையிலே திருவேங்கடமுடையானாக வந்திருக்கிறான் என்று சொல்வதுண்டு. அந்தக் கண்ணனுக்கு பாலாஜி என்று பெயர். வடக்கில் பாலா என்றால் சின்னக்குழந்தை என்று அர்த்தம். ஜி என்பது மரியாதைக்கான சொல். இரண்டையும் சேர்த்து க்ருஷ்ணாவதாரத்தில் கண்ணனை பாலாஜி என்று அழைத்தார்கள். அந்தக் கண்ணனே திருவேங்கடவனாக வந்திருக்கிறான் என்பதை”கண்ணன் அடியினை நமக்குக் காட்டும் வெற்பு” என்று ஸ்வாமி தேஶிகனும் அனுசந்தானம் பண்ணியிருக்கிறார்.

மேலும், க்ருஷ்ணாவதாரத்திற்கும் திருவேங்கடமுடையானுக்கும் உள்ள சம்பந்தம் பற்றி வேங்கடாசல மஹாத்ம்யம் கதையிலும் ஸ்பஷ்டமாக இருக்கிறது. அதில் அந்த யசோதையே மீண்டும் அவதாரம் பண்ணினார் என்றெல்லாம் வரும். ஆகையால்தான் அந்தத் திருநாமம்.

இவர் முருகன், சக்தி என்று சொல்வதற்க்கெல்லாம் ப்ரஸக்தியே இல்லை. வேறு யாருக்கும் பாலாஜி என்ற பெயர் கிடையாது.


பரஸமர்ப்பணத்திற்குப் பிறகு க்ருஹ சாந்தி, ஸர்ப்ப சாந்தி போன்ற பரிஹாரங்களைக் குடும்பத்திற்காக செய்யலாமா? தயவு செய்து விளக்கவும்.

Vidwan’s reply:

பரஸமர்ப்பணம் பண்ணிய பிறகு சாந்தி ஹோமங்கள் பண்ணும் வழக்கமில்லை. பரஸமர்ப்பணம் என்றால் எம்பெருமானுக்கு ஆத்மாவை ஸமர்ப்பணம் பண்ணிவிட்டோம் என்றாகும். அதனால் க்ருஹ சாந்தி, சர்ப சாந்தி, பரிஹாரங்களெல்லாம் செய்யவேண்டாம். பெருமாளைக் குறித்து ஸஹஸ்ரநாம பாராயணம் என்பதெல்லாம் செய்யலாம்.


தாயாருக்குக் குங்கும அர்ச்சனை செய்வது போல, பெருமாளுக்கும் ஸஹஸ்ரநாம அர்ச்சனை குங்குமத்தில் செய்யலாமா? (புஷ்பம் தவிர வேறு எதில் செய்யலாம்?)

Vidwan’s reply:

பெருமாளுக்குக் குங்கும அர்ச்சனை பண்ணுகிறாரார்களா என்று தெரியாது. பண்ணினால் என்ன என்றும் தெரியாது. குங்குமம் என்பது தாயாருக்கு ஏற்றது என்றும் பெருமாளுக்கு புஷ்பம், துளசி ஏற்றது என்று நாம் அறிந்ததே. ஸ்த்ரீ, புருஷன் என்ற வித்யாசம் என்பதினால் கூட இருக்கும்.


திருவாராதன சமயத்தில் திவ்ய பிரபந்தம், தேசிக ஸ்தோத்ரம் போன்றவற்றை சேவிக்கும் பொழுதும், கோவிலில் பெருமாளை ஸேவிக்கும் பொழுதும் நமக்கு கண்களில் கண்ணீர் வருகிறது. குறிப்பாக திருவாராதனத்தின் பொழுது இவ்வாறு கண்களில் கண்ணீர் வருவது சரியா? ஸ்லோகங்கள் ஸேவிக்கும் பொழுது, வார்த்தைகள் வராமல் கண்ணீர் வருகிறதே. ஏதேனும் தவறு செய்கிறோமா?

Vidwan’s reply:

பெருமாளிடம் பக்தி பாவத்தோடு இருப்பதினால் கண்ணில் ஜலம் வந்தால் அதுவும் பக்தியின் ஒரு ஸமர்ப்பணம் என்றே சொல்லியிருக்கிறது.”ஸ்வர நேத்ராங்க விக்ரியா” பேசும்போது குரல் தழுதழுத்தல், ஸ்தோத்ரம் சொல்லும்போது குரல் தழுதழுத்துச் சொல்ல முடியாமல் போவது. கண்களில் கண்ணீர் வருவது என்பதெல்லாம் பகவத் பக்தியினால் வருபவை. இவையெல்லாம் தோஷம் கிடையாது. இதற்கெல்லாம் பயந்து கொண்டு சொல்வதை நிறுத்திக் கொள்ளவேண்டாம். அந்த பாவத்தோடு தொடர்ந்து சேவிப்பது பெருமாளுக்கும் திருவுள்ளம் உக்கக்கும். அதைப்பற்றி ஸ்வாமி தேஶிகனே”பிப்ரதோ பாஷ்பபிந்தூந்” முதலான ரீதியில் சொல்லியிருக்கிறார்.


தஸாசு ஏகாதசி அன்று வந்தால், முதலில் உப்புமா சாப்பிட்டுவிட்டு, பலி பார்த்துவிட்டு பின் சொஜ்ஜி சாப்பிடலாமா?

அடியேனின் பெரியம்மா ஆசார்யன் திருவடி அடைந்து விட்டார்கள். சபண்டிகரணத்தன்று பெரியம்மாவின் சகோதர சகோதரிகள் மற்றும் அடுத்த தலைமுறையினர் அங்கு சாப்பிடலாமா?

Vidwan’s reply:

1. கேள்வியில் சொல்லியப்படிச் செய்யலாம். ஆனால் புருஷர்கள் ஏதேனும் உட்கொண்டுவிட்டுதான் பலி பார்க்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.

2. பொதுவாக சாப்பிடும் வழக்கமில்லை.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top