ப்லவ – தை – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்


அபராஹ்னம் என்றால் என்ன. அபராஹ்னம் காலத்தில் தான் தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். அடியேன் தர்ப்பணாதிகள் செய்ய மதியம் 1 மணிக்கு மேல் ஆகிறது. அது சரியான சமயமா என்று தெரியவில்லை. தயவு செய்து விளக்க ப்ரார்த்திக்கின்றேன்.

Vidwan’s reply:
ஒரு நாளின் பகல் பொழுதை 5 ஆக பிரித்துக்கொண்டு, அதில் வரும் 4வது காலம் அபராஹ்ன காலம் என்று பெயர். ஆங்கிலத்தில் Afternoon சொல்லும் காலம்.

பகல் பொழுதென்பது சராசரியாக 30 நழிகை வரும். அதை 5 ஆக பிரித்தால் ஒவ்வொரு காலமும் 6 நாழிகை என வரும், முதல் மூன்று 6 நாழிகை கழிந்த பின். அதாவது 18 நாழிகைக்குப் பின் 24 வரை இருக்கக்கூடிய நாழிகைகள் அபராஹ்னம் என்பதாகும், சுமார் மதியம் 1 மணிக்கு மேல் வரும். ஆகையால் மதியம் 1 மணிக்கு மேல் தர்ப்பணம் செய்வது சரியான சமயம் தான்.


அனைவரும் ஸ்வீகரித்த பின் எஞ்சியிருக்கும், பெருமாள் தீர்த்தம் மற்றும் திருவாராதனத்திற்காக திருக்காவேரியிலிருந்து கொணர்ந்துவந்த தீர்த்தங்களைத் மீண்டும் உபயோகப்படுத்தலாமா அதவாது தளிகைக்கு பயன்படுத்தலாமா? இல்லையெனில் எஞ்சியிருக்கும் அந்தத் தீர்த்தத்தை என்ன செய்ய வேண்டும்?

Vidwan’s reply:
எஞ்சியிருக்கும் பெருமாள்தீர்தத்தை, தளிகைக்கு உபயோகப்படுத்தும் வழக்கமில்லை. அதை நம் கால்படாத ஒரு நல்ல இடத்தில் சேர்க்க வேண்டும். அதாவது மரத்தடி அல்லது துளசிச்செடி என நல்ல இடமாக பார்த்து பத்ரமாக சேர்த்துவிட வேண்டும்.


நம் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த மணமகன், இச்சம்ப்ரதாயத்தைச் சாராத ஒரு ஸ்த்ரீயை மணக்கும்போது, அவனுக்கு பித்ரு காரியம் செய்யும் தகுதி உண்டா?? மேலும் மணமகள் நமது அனுஷ்டானங்களுக்குத் தகுதி பெறுவதற்கு நாம் ஸமாஶ்ரயணம் செய்து வைக்கலாமா?

Vidwan’s reply:
நம் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த மணமகன், இச்சம்ப்ரதாயத்தைச் சாராத ஒரு ஸ்த்ரீயை மணக்கும்போது, அவனுக்கு பித்ரு காரியம் செய்யும் தகுதி உண்டு.

மணமகள் நமது அனுஷ்டானங்களைச் செய்யும் தகுதி பெறுவதற்கு ஸமாஶ்ரயணம் தாராளமாகச் செய்து வைக்கலாம்.

அப்படிச் செய்வதினால் அவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்களாகி விடுகிறார்கள், பின் எந்தச் சங்கடமும் இல்லாமல் ஶ்ராத்தம் முதலிய கார்யங்கள் செய்யலாம்.


பொதுவாக ஶ்ரவண வ்ரதம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும்? திருவேங்கடமுடையானுக்கு, ஒப்பிலியப்பனுக்கு சுமங்கலிகள் எவ்வாறு ஶ்ரவண வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும்?

Vidwan’s reply:
பொதுவாக ஶ்ரவண வ்ரதத்திற்கான நியமங்கனங்கள்

அன்று காலை சுத்தமாக ஸ்நானம் செய்வது

ஒப்பிலியப்பனுக்காக உப்பு சேர்க்காமல் அன்றைய தினம் சாப்பிடுவது

ஒருவேளை தான் சாப்பிடனும், இரண்டாம் வேளை உபவாஸம் அல்லது பலகாரம்

கோவிலுக்குச் சென்று பெருமாள் சேவிப்பது

ஸ்தோத்ரங்கள் சொல்வது

மேலும் வ்ரதத்திற்கான பொது நியமங்களுடன் அதாவது

 அன்றைய தினம் கேளிக்கைகளைத் தவிர்ப்பது

 புது வஸ்த்ரம் அணிவதைத் தவிர்த்தல்

இப்படி மேற்ச்சொன்ன நியமங்களுடன் வ்ரதம் கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக பெருமாள் நினைவு இருக்க வேண்டும்.


சரும நோய் பிரச்சனைகள் தீர என்ன தேஶிக ஸ்தோத்ரங்கள் சொல்லலாம்?

Vidwan’s reply:
சரும நோய் பிரச்சனைகள் தீர பல ஸ்தோத்ரங்கள் இருக்கு குறிப்பாக கருட பஞ்சாஶத் சொல்லலாம். அதைச் சொல்வது கஷ்டமாக இருந்தால் கூட யாராவது பெரியவர்கள் சொல்வதைப் போட்டு கேட்டுச் சொல்லலாம்.


ஏன் குழந்தைக்கு முதன்முதலில் முடிஇறக்கும்போது அதை பகவானுக்கு ஸமர்பிக்கிறோம்? இதன் தாத்பர்யம் என்ன?

Vidwan’s reply:
குழந்தைக்கு முதன்முதலில் முடிஇறக்கும்போது அதை பகவானுக்கு ஸமர்பிக்கிறோம் என்பதன் தாத்பர்யமானது, தலையே ஸமர்பிக்கின்றோம் என்பது போலாகும். தலை சிரைத்து என்று தான் அதைக் குறிப்பிடுவார்கள். “காம்பறத் தலை சிரைத்து” என்று ஆழ்வாரும் குறிப்பிடுகின்றார்.

நம் தலையையே அதாவது குழந்தையையே பெருமாளுக்கு ஸமர்பிக்கின்றோம் என்பதற்கு அடையாளமாக முடியை ஸமர்பிக்கிறார்கள். முடி என்பது மீண்டும் வளரக்கூடியது என்பதால் அப்படிச் செய்வது பாதகமில்லை எனத் தெரிகிறது.


அடியேன் ஆசார்யனிடம் ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் செய்துகொண்டுள்ளேன். எனக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் விருப்பமில்லை. ஆனால் வீட்டில் உள்ள அனைவரும் மோதகம் செய்து கொண்டாடி மகிழ வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் பரந்யாஸம் செய்து கொண்டுள்ளனர்.இதை எப்படி அவர்களுக்குச் சொல்லி புரியவைப்பது?

Vidwan’s reply:
விநாயகர் என்பவர் ப்ரசித்தமாக இப்போது இருந்து வருகிறார். புரியாதவர்களுக்கு நாம் மெதுவாக இப்படி எடுத்துச் சொல்லலாம்.

விநாயகர் என்பவர் வேதத்தில் சொல்லப்பட்ட தெய்வமே கிடையாது. யாகத்தின் தேவதைகள் என பல தேவதைகளைச் சொல்லியிருக்கிறார்கள், அதில் விநாயகர் குறிப்பிடப்படவில்லை. விநாயகர் என்பவர் தெய்வம் என்பதில் சந்தேகமில்லை ஆனால் வைதீகமான தெய்வமில்லை.

விநாயகர் மட்டுமல்ல ஒருகாலத்தில் வைதீகமானவர்கள், ஸ்மார்த்தர்களுட்பட ஐயப்பன் முதலியவர்களைச் சேவிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் வேதத்தில் சொல்லப்பட்ட தெய்வங்கள் அல்ல.

வேதம் பல தேவதைகளைச் சொல்லி “விஷ்ணு பரம:” என்று விஷ்ணு தான் உயர்ந்த தெய்வம் என்றாகச் சொல்லியிருக்கிறது.ஆகையால் எம்பெருமான் விஷ்ணுவை சேவித்து விட்டால் மற்ற தேவதைகளைச் சேவிக்காவிட்டால் கூட அவர்கள் கோபிக்க மாட்டார்கள் ஏனென்றால் மற்ற தேவர்களுக்குத் தெரியும் விஷ்ணு தான் உயர்ந்தவர் என்று.

ஆக விநாயகருக்கும் திருப்த்தி வரவேண்டும் என்றால் விஷ்ணுவை சேவிக்க வேண்டும் என்பதே வேதத்தின் பரம தாத்பர்யம்.


மன்வந்தரம் என்று எது சொல்லப்படுகிறது. இவர்களுக்கு என்று தனியாக உலகம் இருக்கிறதா. இப்போது இருக்கிற வைவஸ்தவ மனு எங்கிருந்து ஆட்சி செய்கிறார்?

Vidwan’s reply:


அடியேன், சமீபத்தில் எங்கள் மகளும் மருமகனும் 2 வருடங்கள் மேற்படிப்புக்காக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல நேர்ந்தது, சமுத்திரத்தைக் கடந்ததற்கு சாஸ்திர விதிமீறல் ஏதேனும் உள்ளதா? அதற்கு பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா?

Vidwan’s reply:
பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றால் கடல் தாண்டின தோஷம் கண்டிப்பாக உண்டு. அதற்குரிய ப்ராயச்சித்தங்களை பெரியோர்களைக் கேட்டு தெரிந்து கொண்டு பண்ணலாம்.

பொதுவாக சேது ஸ்நானமோ, கூஷ்மாண்ட ஹோமமோ செய்யும் படி நியமிப்பார்கள். அவரவர் ஆத்து பெரியோர்களைக் கேட்டுச் செய்யவும்.


கயா பித்ரு ஶ்ராத்தம் ஸ்ரேஷ்ட புத்திரன் தான் செய்ய வேண்டுமா? ஏனென்றால் அடியேனுடைய கணவர் இளைய மகன். மேலும் அடியேன் உறவினருக்கு ஒரே மகள், ஆகையால் மருமகன் மாமனாருக்கு கயா ஶ்ராத்தம் செய்யலாமா.

Vidwan’s reply:


அடியேன் தாய்வழி அத்தை சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்தில் நியமிக்கப்பட்ட மடத்தின் அதிகாரியிடத்தில் இருந்து பஞ்சசம்ஸ்காரம் பெற்றுள்ளார், ஆனால் எந்த மந்திரமும் நினைவில் இல்லை, அவர் மீண்டும் வேறு ஆசார்யனை அணுகி ஸ்மாஶ்ரயணம் மற்றும் பரந்யாஸம் செய்துக்கொண்டு தான் மந்திரோபதேசம் பெற வேண்டுமா?

Vidwan’s reply:
மந்திரங்களை ஞாபகப் படுத்திக்கொள்ள சுலபமான உபாயம் உண்டு. ஸமாஶ்ரயணம் திரும்பவும் பண்ணிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம் காலக்ஷேபம் பண்ணலாம். அதைச் செய்தாலேயே மந்திரங்கள் எல்லாம் ஞாபகம் வந்துவிடும். அதனால் ஒரு ஸதாசார்யனை நாடி ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தை காலக்ஷேபம் பண்ணலாம். ஸமாஶ்ரயணத்தில் சங்கு சக்கர லாஞ்சனத்தை மீண்டும் பொருத்திக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. அதில் தோஷம் ஒன்றும் இல்லை.

ஆனால் பரந்யாஸம் கண்டிப்பாக திரும்பவும் பண்ணிக் கொள்ள கூடாது. ப்ரம்மாஸ்த்ர ந்யாயப்படியினால் மீண்டும் பண்ணிக் கொண்டால் பலிக்காமல் போய்விடும்.


ஒரு கோவிலில் பிரசாதம் ப்ராமணரால் தயாரிக்கப்படுகிறது, ஆனால் அவர் ஸ்ரீவைஷ்ணவர் அல்ல. ஸ்ரீவைஷ்ணவராகிய நாம் அந்த ப்ரசாதத்தை உட்கொள்ளலாமா?

Vidwan’s reply:
கோவிலில் பொதுவாக ஸ்ரீவைஷ்ணவர்கள் தான் தளிகைச் செய்தல் வேண்டும். ஆகையால் அவரை ஸ்ரீவைஷ்ணவராக்கி விட்டால் பரவாலையாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

இது ஒரு சங்கடமான கேள்வி, பெருமாள் ப்ரசாதம் என்று பார்த்தால் நல்லது, ஆனால் ஸ்ரீவைஷ்ணவரால் செய்யப்படவில்லை எனும் போது என்ன செய்தல் என்று யோசிக்க வேண்டும்.


ஒரு ப்ரபந்நன், பஞ்சசம்ஸ்காரம் செய்துக்கொள்ளாத ஒரு ஸ்ரீவைஷ்ணவருடைய அகத்தில் உணவு உட்கொள்ளலாமா?

Vidwan’s reply:
ஆசார ரிதீயில் பார்த்தால் ஒரு ப்ரபந்நன், பஞ்சசம்ஸ்காரம் செய்துக்கொள்ளாத ஒரு ஸ்ரீவைஷ்ணவருடைய அகத்தில் உணவு உட்கொள்ளக்கூடாது.

குறிப்புகள்:

சம்ஸ்காரம் என்றால் தகுதியைக் கொடுப்பது என்று அர்த்தம். பஞ்சசம்ஸ்காரம் ஆகவில்லை என்றால் அவருக்கு அந்தத் தகுதி கிடையாது. ஆகையால் ஆசார ரிதீயில் அவருடைய அகத்தில் அவர் கொடுக்கும் உபகாரங்களைச் சாப்பிடாமல் இருப்பதே நலம்.


அடியேன் அடுத்த மாதம் ஆக்லாந்து நாட்டிற்குப் பயணம் செய்ய உள்ளேன். அங்கே 6 மாதங்கள் தங்கபோகின்றேன்.சாளக்கிராம மூர்த்திகளை எவ்வாறு எடுத்துச்செல்ல வேண்டும், மேலும் என்னென்ன ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்ற வேண்டும் என்று தெளிவு படுத்த ப்ராத்திக்கின்றேன்.

Vidwan’s reply:
சாளக்கிராமங்களை நாம் வெளியில் ஏளச்செய்து செல்லும் போது, ஒரு மரப்பெட்டி என எதில் ஏளியிருக்கிறாரோ அதை ஒரு சால்வையாலோ அல்லது பட்டுத்துணியினாலோ நன்றாக சுத்தி 3, 4, 7 என்று வரும்படியாக சுற்றி ஓலைப்பெட்டியிலோ அல்லது அது போன்ற பெட்டியில் நாம் ஏளப்பண்ணிக்கொண்டு போகலாம்.

பின் அங்கு போய் பெருமாளுக்கு பாலில் திருமஞ்சனம் செய்துவிட்ட பிறகு நித்யபடியான திருவாராதனத்தை தொடரலாம்.

குறிப்புகள்:

சில நேரங்களில் பெட்டியைச்சோதனை செய்யும் போது அந்த நபர் இதனுள் என்ன இருக்கின்றது என்றும் அதை எடுத்துக்காட்டச் சொல்லியும் கேட்பார்கள். அவர்களுக்கு அது என்ன என்று அறியும் உரிமை இருக்கிறது எனவும் கூறுவார்கள் வேறு வழியில்லாமல் நாம் அவர்களிடம் கொடுக்கும் படி நேரலாம், அதன் பின்னர் பெருமாளுக்கு பாலில் திருமஞ்சனம் செய்ய வேண்டியது.

இதற்குச் சிலர் கூறும் சாமாதானம்/வேறு வழி என்னவென்றால், சிலர் checkin luggage ஆக போடுகிறார்கள், ஆனால் அது அவ்வளவு ஸ்வாரஸ்யமாக இல்லை. சிலர் metal ஆக இருந்தால் தெரிகிறது ஆகையால் மரப்பெட்டியில் பெருமாளை ஏளச்செய்து நிறைய துணிகள் கொண்டு சுற்றிவிட்டால் தெரிவதில்லை என்கிறார்கள். முடிந்தவரை பெருமாளைச் சுத்தமாக ஏளப்பண்ணிக்கொண்டுச் செல்ல பார்க்கவேண்டும்.


பித்ரு பக்ஷ காலத்தில் தர்ப்பணம் திருவாராதனத்திற்கு முன் செய்ய வேண்டுமா? மற்றும் அந்தச்சமயத்தில் கோவில் அல்லது மடத்திலோ பெருமாளுக்கு வாச கைங்கர்யம்(பாராயணம்) செய்யலாமா?

Vidwan’s reply:
ஶாரத்தம் முதலானவை பொருத்தமட்டில், முதலில் திருவாராதனம் பிறகு தர்ப்பணம் என்று வரும். மாச பிறப்பு நாட்களில் மட்டும், மாசம் சீக்கிரம் பிறந்தால் முதலில் தர்ப்பணம், அதன் பின்னர் திருவாராதனம் என்று வரும்.


அடியேனின் தாயார் 2 மாதங்களுக்கு முன்பு திருமோகூர், அழகர் கோயில், பெரியாழ்வார் திருவரசு கோயில்களுக்கு சென்று சேவித்து விட்டு திரும்பும் வழியில் ஒரு கார் விபத்தில் பரமபதித்து விட்டார். அடியேனின் சகோதரன் காரியங்கள் செய்து கொண்டு இருக்கிறார்.பெண் என்ற முறையில் அடியேன் பரமபதித்த அவர்களுக்காக என்னென்ன அனுஷ்டானங்கள் கடைப்பிடிக்க வேண்டும், எந்தெந்த ஸ்தோத்திரங்கள் சேவிக்கலாம்?

Vidwan’s reply:
ஒரு பெண்ணுக்கு, பெரிதாகச் செய்வதற்கு ஒன்றும் கிடையாது. சகோதரனானவர் அவர் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார். அக்கார்யத்திற்கு போக முடியுமானால், அவர் உடன் இருந்து அவருக்கு சகாயம் பண்ணலாம். தனிப்பட்ட முறையில் பெண்களுக்கென்று எந்த அனுஷ்டானமும் செய்வதற்கு இல்லை.

வருடாந்திர ஶ்ராத்த திதி வரும் நேரத்தில் அங்கு போய் கலந்துக்கொள்ளலாம். அப்படி முடியாமல் போனால் அந்த திதி தினத்தன்று அவரை நினைத்துக் கொண்டிருக்கலாம்.

எல்லா ஸ்தோத்ரங்களையும் சேவிக்கலாம்.

தகப்பனார் ஒரு விபத்தில் பரமபதித்து விட்டபடியால் மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். அந்த கஷ்டம் போவதற்காக தயாஶதகம் முதலான ஸ்தோத்ரங்களைச் சேவிக்கலாம்.


அடியேனுக்கு ஒரு சிறு சந்தேகம். நாம் பஞ்சசம்ஸ்காரம் ஶரணாகதி பற்றிய உண்மையான அர்த்தமும் மகத்துவமும் தெரியாமல், ஸ்ரீவைகுண்ட ப்ராப்த்தியைப் பற்றிய நம்பிக்கையும், ஞானமும் இல்லாமல், நமது ஆசார்யரிடத்தில் பஞ்சசம்ஸ்காரம் சரணாகதி செய்வதை ஒரு சடங்காகச் செய்து வந்தாலும், ஸ்ரீய:பதியான எம்பெருமான் நமக்கு மோக்ஷம் கொடுப்பாரா? எனது கேள்வியில் ஏதேனும் தவறு இருந்தால் க்ஷமிக்கவும்.

Vidwan’s reply:
பஞ்சசம்ஸ்காரம் ஶரணாகதி இதைப்பற்றி தெரியாமல் நடந்திருந்தாலும், அதை நாமாக செய்து கொள்ளவில்லை. ஆசார்யனே செய்து வைக்கிறார் என்கின்றபடியினால் , அந்த ஆசார்யனுடைய விஶ்வாஸத்தின் பேரில் நமக்கு அதனுடைய பலன் கிட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனாலும் நாம் அதைப் பற்றி தெரிந்துக்கொண்டு அதற்கேற்றார் போல் நடந்துக் கொள்ள வேண்டும். ஆசார்யன் நமக்காக பண்ணியிருந்தாலும் கூட, நாம் எம்பெருமானிடம் ஆத்மாவை ஸமர்ப்பித்தவர்கள் என்கின்ற முறையில் நமது நிலைமையை நாம் புரிந்துக்கொண்டு, அதற்கேற்ற ஆசார அனுஷ்டான நியமங்களைக் கடைபிடிப்பதற்காக அவற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


வரும் கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ த்ரியோதசியில் என் அக்கா திருமதி சரோஜாவிற்கு வருஷாப்தீகம் நடக்க இருக்கிறது. இதுவரை அனைத்து மாசியம், ஊனம் நடந்து வருகிறது. ஆனால் கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி பஞ்சாங்கத்தில் இல்லை. எப்படி வருஷாப்தீகம், ஊனாப்தீகம், சோதகும்பம் போன்றவைகளை நடத்துவது? எந்த நாட்களில் நடத்துவது? ஒன்றும் புரியவில்லை. தயவுசெய்து விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
பொதுவான சாஸ்த்ரம் என்னவென்றால் கார்த்திகை மாதத்தில் ஶ்ராத்த திதி இல்லை என்றால் அதற்கு முன் மாசம் பண்ண வேண்டும். பொதுவாக கார்த்திகை, மார்கழி, மாதங்களில் 29 நாட்களே இருக்கும். அதனால் ஸ்வாபாவிகமாக ஒரு திதி இல்லாமல் விட்டுப் போகும். கார்த்திகை மார்கழி தை இந்த மூன்று மாதங்களில் ஶ்ராத்த திதி இல்லை என்றால் பூர்வ மாதங்களில் அதாவது அதற்குமுன் மாதத்தில் ஶ்ராத்த பண்ணவேண்டும் என்று சாஸ்த்ரப்படி விதி இருக்கிறது.

அதனால் அதை முன்பே பார்த்து தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.


அடியேன் பர்த்தாவினுடைய குடும்பத்தில் தாயாதிகள் (மாமனாரின் 4 சகோதரர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள்) உள்ளனர். மேலும் எங்களில் பெரும்பாலோர் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வசிக்கிறோம். சமீபத்தில் மாமனாரின் மூத்த சகோதரர் மற்றும் மூத்த சகோதரரின் மகன் பரமபதம் அடைந்தனர். நாங்கள் 10 நாட்கள் தாயாதிகள் தீட்டு அனுசரித்தோம். இருப்பினும் நம் தாயாதிகள் திருவடி அடையும் போது சில மரபுகளைக் கடைப்பிடிப்பதில் எனக்கு சில க்லேஷம் இருக்கின்றன. வித்வான்கள் எனது சந்தேகங்களை தீர்த்து வைக்க ப்ரார்த்திக்கிறேன். அது எங்களுக்கும் எங்கள் வருங்கால சந்ததியினருக்கும் முறையான அனுஷ்டானத்தை பின்பற்றி வழிநடக்க உதவும்.

a) எங்கு இருந்தாலும் 10 ஆம் நாள் என் கணவர் குழி தர்ப்பணம் பண்ண வேண்டுமா (என் மாமனார் உயிருடன் இருக்கிறார்)?

b) பெருமாள் கோவில்களுக்கு சென்று கைங்கர்யம் செய்யலாமா?

c) டோலோத்ஸவத்தில் பெருமாளை ஆத்தில் ஏள பண்ணலாமா?

d) புரட்டாசி மாவிளக்கு மற்றும் பிற பெருமாள் மற்றும் ஆசார்யன் திருநக்ஷத்திரம் கொண்டாடலாமா?

e) இதர பண்டிகைகள் – வருஷ பிறப்பு, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, கணு கொண்டாடலாமா?

நீண்ட கேள்விக்கு க்ஷமிக்கணும் .தயவு செய்து விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
ஒருவருடைய தகப்பனார் ஜீவித்து இருக்கும்பொழுது அவர் குழித்தர்ப்பணம் பண்ண வேண்டிய அவசியமில்லை. தகப்பனார் இல்லாவர்கள் தான் குழித்தர்ப்பணம் பண்ண வேண்டும்.

பத்து நாள் தீட்டு சமயத்தில்

பெருமாள் கோவில்களுக்குச் சென்று கைங்கர்யம் செய்யக்கூடாது.

டோலோத்ஸவத்தில் ஆத்தில் பெருமாளை ஏள பண்ணக்கூடாது.

புரட்டாசி மாவிளக்கு, பெருமாள், ஆசார்யன் திருநக்ஷத்ரம் எதுவும் பண்ணக்கூடாது.

தீட்டு உள்ளவர் அகத்தில் ப்ரதானமவராக இருந்தால் அந்த ஆத்துக்கே தீட்டு என்கின்ற மாதிரி ஆகும். அதனால் பெருமாள் திருநக்ஷத்ரத்தை விடாமல் பண்ண வேண்டும் என்றால் தீட்டு இல்லாத வேறு ஒருத்தரைக் கொண்டு வேறு ஒரு இடத்தில் பண்ணி வைக்கலாம். புத்திரர்கள் இருந்தால் புத்திரர்கள் தனியாகப் பண்ணலாம். வைபவம் எதுவுமே பண்ணாமல் இருப்பதே நல்லது என்று சொல்வார்கள்.

வருடப்பிறப்பு, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, கணு இந்த பண்டிகைகள் எதுவுமே 10 நாள் தீட்டுக்குள் வந்தால் அடிபட்டுப் போய்விடும். எதுவும் கொண்டாட முடியாது.


அடியேனின் மூத்த மைத்துனர் மாமனாருக்கு மஹாளய திதியில் தர்ப்பணம் செய்கிறார். அதே நாளில் என் மகளின் நக்ஷத்ரம் வருகிறது. இதில் ஏதாவது தவறு இருக்கிறதா? அப்படி செய்யலாமா?

Vidwan’s reply:
ஒருவர் தன்னுடைய தகப்பனார் திதியிலேயே மஹாளய ஶ்ராத்தம் பண்ணுகின்றார் என்றால் அதில் வேறு ஒன்றும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. தாராளமாக பண்ணலாம்.

ஆனால் அப்பொழுது மகளுடைய நக்ஷத்ரம் வருகின்றதே என்று மனதில் உறுத்தலாக இருந்தால் அப்பொழுது வேறு ஒரு நாளில் பண்ணலாம். 15 நாளில் ஏதாவது ஒரு நாளில் பண்ணலாம் என்று இருக்கிறது.

மத்யாஷ்டமி முதலான நல்ல நாட்கள் எல்லாம் இருக்கும். அந்த நாட்களில் தாராளமாகப் பண்ணலாம். தகப்பனாருடைய திதியில் தான் பண்ண வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் இல்லை. அதே சமயம் தகப்பனாருடைய திதியில் பண்ணும்போது இன்னொருவருடைய பிறந்தநாள் வந்தால் பார்க்க வேண்டியதில்லை. இது விசேஷம் என்று வைத்துக் கொண்டால் இது பண்ணலாம், இல்லை என மனதுக்கு உறுத்தலாக இருந்தால் வேறு ஒரு நாளிலும் பண்ணலாம்.


க்ருஹங்களில் பெருமாள் சன்னிதியில் அந்தந்த கிழமைக்கான கோலங்களை போடலாமா?

Vidwan’s reply:
க்ருஹங்களிலே அந்தந்தக் கிழமைக்கான கோலங்களைப் போடலாம் என்றுதான் தோன்றுகிறது.


அடியேனுக்கு ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது. உபந்யாஸங்கள் நிறைய கேட்க கேட்க ப்ரபத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. அடியேனுடைய க்ருஹத்தில் பெரியவர்கள் இதர தேவதாந்திரர்களை வழிபடுவதுடன், பெருமாள் சந்நிதியில் அவர்களின் படங்களை வைத்தும், அவர்களுக்காக சில பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறார்கள். அப்படி இருக்கின்ற பக்ஷத்தில் நான் ப்ரபத்தி செய்து கொள்ளலாமா? ப்ரபத்திக்குப் பிறகு அடியேன் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் என்னவென்று தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
அகத்திலே இருக்கும் பெரியவர்கள் மற்ற தேவதாந்திரங்களைக் கொண்டாடினால் கூட நீங்கள் கொண்டாடாமல் இருக்க முடியும். நாம் ஒன்றும் தேவதாந்திரங்களுக்கு எதிரியில்லை. எம்பெருமானைச் சேவிக்கின்ற படியினால் மற்ற தேவதாந்திரங்களைக் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என்கின்ற நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

அதனால் நீங்கள் ஶரணாகதி பண்ணிக்கொண்டு ஆசார்யன் சொல்வதுபோல் மற்ற தேவதாந்திரங்களைச் சேவிக்காமல் இருக்க வேண்டும். தேவதாந்திரங்ளுடைய ப்ரசாதங்களைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

தேவதாந்திரங்ளுடைய ப்ரசாதங்களைச் சாப்பிடக்கூடாது என்று அவர்களுடைய ஆகமத்தில் இருக்கின்றது. சைவ ஆகமங்களில் இருக்கின்றது. அவர்கள் இப்போது அதை மாற்றி விட்டார்கள். ரொம்ப விஷயம் தெரிந்த வைதீகரர்கள் சாப்பிட மாட்டார்கள். உண்மையில் நாம் எதுவும் புதியதாகச் சொல்லவில்லை. அவர்களும் நாளடைவில் அதை சரி செய்வார்கள் என்று நினைக்கிறேன். அதனால் மனசாட்சியில் எந்த ஒரு குற்ற போதமும் இல்லாமல் பகவானை மட்டும் சேவித்துக்கொண்டு இருக்கலாம்.


அடியேனுக்கு பத்து நாட்கள் பங்காளி தீட்டு. இதன் நடுவே மறுபடியும் மற்றொரு 10 நாள் தீட்டு வந்துவிட்டது. இப்பொழுது தீட்டு எப்படி அனுஷ்டிக்க வேண்டும்? குழித் தர்ப்பணம் எப்படி பண்ணவேண்டும்? தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்

Vidwan’s reply:
பத்து நாட்கள் பங்காளி தீட்டின் நடுவே மறுபடியும் மற்றொரு 10 நாள் தீட்டு வந்துவிட்டால் முதல் தீட்டு கழியும் போதே இந்த தீட்டும் போய்விடும்.

இது பற்றி விவராமாக அறிய GSPK`s சுதர்சனம் சார்பாக வெளியிட்ட “தீட்டு கணக்கு” என்ற புத்தகத்தை பார்க்கவும்.


அடியேனுக்கு ஸமாஶ்ரயணமும் பாரண்யாஸமும் ஆகிவிட்டது. சரஸ்வதி பூஜையை எப்படி கொண்டாடுவது? முன்பு சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்வோம். இப்பொழுது ஹயக்ரீவப் பெருமாளை சேவிக்க வேண்டுமா?

Vidwan’s reply:
ஸமாஶ்ரயணமும் பாரண்யாஸமும் ஆகிவிட்டது சரஸ்வதி பூஜைக்கு பதில் நீங்கள் சொல்லியது போல் ஹயக்ரீவ பெருமாளைச் சேவிக்கலாம். ஹயக்ரீவ பெருமாளைச் சேவித்தாலே சரஸ்வதி தேவியைச் சேவித்ததாக அர்த்தமாகும்.

ஹயக்ரீவ பூஜை தான் சரஸ்வதி பூஜை. சரஸ்வதி பூஜை என்று தனியாக பண்ண வேண்டாம். ஸ்வாமி தேஶிகனும் “தேவி சரோஜா ஸந தர்ம பத்னீ” என்று ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தில் ஸாதித்திருக்கிறார்.


ஒரு வருடத் தீட்டு இருக்கும் போது புண்ணிய நதிகளில் நீராடலாமா? அடியேனின் ஆத்துக்காரர் தான் கர்த்தா. எல்லா மாசியங்களும் செய்கிறார். நாங்கள் இருவரும் கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடலாமா? தன்யோஸ்மி

Vidwan’s reply:
ஒரு வருடத் தீட்டு என்று கிடையாது, பத்து நாள் தீட்டு மட்டும் தான். ஒரு வருஷ தீக்ஷா என்று அதற்கு பெயர். அந்த தீக்ஷா காலத்தில் கர்தாவாக இருக்கக்கூடிய தம்பதிகள் இருவருமே தீர்த்தயாத்திரை பண்ணக்கூடாது. அதாவது வெளியில் தீர்த்தயாத்திரை செய்து அங்கங்கு இருக்கும் புண்ய நதிகளில் நீராடக் கூடாது. ஆனா நாம் போகும் இடத்தில் புண்ய நதி இருந்தால் அதில் நீராடலாம்.

உதாஹரணமாக நாம் ஒரு கார்யமாக ஸ்ரீரங்கம் போகின்றோம் என்றால் அப்போது காவேரியில் தீர்த்தாமாடினால் விசேஷம். அதே போல் வடக்கே கங்கையில் தீர்த்தாமாடினால் விசேஷம்.

தீர்த்தயாத்திரை என்றால் புண்ய க்ஷேத்ரங்கள் போகனும், புண்ய ஸ்நானங்கள் பண்ணனும் என்றே சங்கல்பமெல்லாம் செய்துக்கொண்டு பத்ரிகாஶ்ரமம் போன்ற யாத்திரைகள் செய்வார்கள். அது போன்ற யாத்திரைகள் பண்ணக்கூடாது என்று தான் இருக்கிறது.

மற்றப்படி நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது புண்ய நதிகளில் ஸ்நானம் செய்யலாம் அது விசேஷம்.


தர்ப்பணம் மற்றும் ஶ்ராத்த தினங்களில் தாம்பூலம் பெற்றுக் கொள்ளலாமா?

Vidwan’s reply:
தர்ப்பணம் ஶ்ராத்த தினங்களில் தாம்பூலம் கூடாது என்று சொல்லியிருக்கிறது. அதற்கு அர்த்தமானது வெற்றிலை பாக்கு போட்டு கொள்ளக்கூடாது என்பதாகும். இன்னொருவர் ஆத்தில் வெற்றிலை பாக்கு தாம்பூலம் வாங்கிக் கொள்ளக்கூடாது என்ற அர்த்தம் வராது.

தர்ப்பண தினத்தில் கல்யாண வீட்டிற்கு போகிறோமானால் அங்கு அவர்கள் கொடுக்கும் வெற்றிலை பாக்கு தாம்பூலம் சுபமானதாகும் அதை நாம் வாங்கிக்கொள்ளலாம். அதில் தோஷம் கிடையாது.

ஶ்ராத்த தினத்தை நாம் விசேஷமாக பார்க்க வேண்டும். வெளியில் பொதுவாக போகாத படி இருக்கலாம் போக நேர்ந்தால் தாம்பூலம் வாங்கலாம் தவறில்லை. ஆனால் தானமாக எதையும் அன்றைய தினம் வாங்கக் கூடாது என்று இருக்கிறது. ஆகையால் மங்கலகரமான வெற்றிலை பாக்கு அவர்கள் கொடுத்தால் வாங்கிக்கொள்ளலாம் சிறிது ஜாக்ரதையாக தானங்களை தவிர்த்தல் நலம்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top